குருஜி - வைரவாக்கியம்

பாலில் தயிர் இருப்பது கண்ணுக்குத் தெரியாத உண்மை. அதே தயிரில் வெண்ணெய்யும், வெண்ணெய்யில் நெய்யும் இருப்பதும் கண்ணுக்குப் புலப்படதா உண்மைகள். பாவத்தினுள்ளே புலப்படாத பலன்களும் உண்டு.

கட்டுரைகள் (4)

திங்கட்கிழமை, 06 April 2015 00:00

நீயே நவரத்தினம்!

Written by

நீயே நவரத்தினம் !

ஒவ்வொரு மனித ஆன்மாவின் உடலும் சிறப்பான தன்மைகளைக் கொண்டது. பஞ்ச பூதங்கள் எனக் கூறப்படும், நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய அனைத்தின் தன்மைகளை உள்ளடக்கியது ஆன்மாவின் உடல். அந்த ஆன்மாவின் மூளை பலசிறப்புக்களைக் கொண்டது.

ஒரு வெற்றிக்குத் தேவையான சிந்தனை, செயலாக்கத் திட்டம், மேற்பார்வைத்திறன் ஆகிய மெச்சத்தக்க, ஒரு தலைவனுக்கு வேண்டிய அனைத்தையும் கொண்டுள்ளது.

ஒரு தொடர்ச்சியான வெற்றிகூடிய ஆன்மாவாக இருக்கவிரும்பினால் அதன் செயல்பாடுகள் சிறப்பாக இருத்தல் வேண்டும். நேர்மறை எண்ணங்களை கொண்டிருத்தல் அவசியம்.

காலம் கனிந்துவரக் காத்திருந்து அந்தச் சந்தர்ப்பத்தில் தனது நினைவு திறனைத் தீட்டி செயல் வெளிப்பாடுகளை கவனமாக, நேர்மையாக வெளியிட்டு வெற்றிகாண முயலவேண்டும். வெற்றிக்காண வழிகளைக் கையாண்டு, தொடர்ந்து முயற்சி செய்தல் நன்று. படிப்படியாக திட்டம் நன்கு செயல்பட்டால் வெற்றியின் கனியை விரைவில் ருசித்து ஆனந்தம் அடையலாம்.

சந்தர்பங்களை குறிவைத்து. திட்டங்களை வரிசைபடுத்தி, செயல் துரிதமாக, கடின உழைப்புடன், சூழ்நிலையின் மாற்றங்களுக்கு ஏற்றவாறு, திறந்த மனதுடன் நேர்மையாக செயல்பட்டால் பாதை, வெற்றியின்பாதை தெளிவாக புலப்படும். கடுமையான உழைப்பிலும் தடைகள் தாண்டி பெற்ற வெற்றியே ஆனந்தமானதாகும்.

இந்த வெற்றியை நாம் பெற்று ஆனந்திக்க நம் மூளையின் பல பகுதிகள் நமக்கு ஒன்பது வகை குணாதிசயங்களாக இயங்கி செயலாற்றம் காண்கிறது. இந்த ஒன்பதுவகையான குணங்கள் நவரத்தினங்களின் தன்மைகளை ஒத்துள்ளது. இந்த ஒன்பது நவரத்தினங்களின் குணாதிசயங்கள் செயல்பாடுகள் ஒன்பது நவகோள்களுடன் ஒத்த கருத்துடையவையாகும். எனவே நவகிரக தாக்கம் உள்ளவர்கள் அந்தந்த கிரகத்திற்குரிய ரத்தினங்களை தேர்ந்து பயன்படுத்தினால் அதன் சீரிய தன்மையினால் உடலில் ஓர் உந்துதல் ஏற்பட்டு மூளை சிறப்பாக செயல்பட வாய்ப்பாக அமையும். அந்த ஒன்பதுவகை மூளையின் செயல்கள்

1. ஒரு செயலுக்காண உரிய, நல்ல தருணத்தை கண்டுபிடிக்க உதவும் திறமை. அந்த தருணம் எது என்பதை பகுத்து ஆராயும் பகுதி. இது ‘முத்து’ -ன் தன்மையைக் கொண்டது. முத்து- சந்திரன்- கிரகபலன் கொண்டது. நல்முத்துக்கள் ஒளிதாக்கி மின்னும். ஊடுறுவாது. பால் அல்லது மங்கிய நிறம். உடல் ஆரோக்கியமாய் இருக்கும். முகம் வசீகரம் ஏற்படும். திருமணம் கைகூடும். தூய்மையான உள்ளத்தையும் பணிவையும் ஏற்படுத்தும். கணவன், மனைவி நெருக்கம் அதிகமாகும்.

2. வாழ்வின் போட்டிக் களத்தை சீர்படுத்தி சுறுசுறுப்பாகக் குவியும் மையப்புள்ளியாக உறுதியாக தீர்மாணிக்கும் இந்தப்பகுதி ‘மரகதம்’ -ன் தன்மையைக் கொண்டது. மரகதம்- சுக்கிரன்- கிரகபலன் கொண்டது. பச்சை நிறத்துடன் ஒளிவிட்டுப்பிரகாசிக்கும். அணிந்தால் வழ்வில் ஒரு குறையுமின்றி புகழும் உயர்பதவியும் அடைவர். ஆரோக்யம் கெடாது. மணவாழ்க்கை மகிழ்வுடன் இருக்கும்.

3. தொழிலின் நிலைகளை முதன்மையாக வரிசைப்படுத்தி சரியாக தயார் நிலையில் கண்ணுக்குப் புலப்படும் பார்வையில் வைப்பது. இது ‘புஷ்பராகம்’ -ன் தன்மையாகும். புஷ்பராகம்-குரு-கிரகபலன் கொண்டது. பல நிறங்களில் பிரகாசிக்கும். வெள்ளையாக இருக்கும். ஒளி ஊடுருவிச் செல்லக்கூடியதாக சிறிது மஞ்சள் கலந்து இருக்கும். சற்று கடினமானது. அணிந்தால் சத்ருக்களை வெல்வர். கோபதாங்கள் குறையும். சந்தான பாக்யம் ஏற்படும்.பதவி உயரும். விபத்துக்களிருந்து பாதுகாப்பு கிடைக்கும். தாம்பத்திய உறவில் மகிழ்ச்சி.

4. சமர்த்தியமான ஒழுங்கான விழிப்புணர்வுடன் அருகில் நெருங்கி நடை முறைப்படுத்தி விருத்தி செய்தல். இது ‘கோமேதகம்’ -ன் தன்மையாகும். கோமேதகம்- இராகு- கிரகபலன் கொண்டது. பழுப்பு கலந்த சிவந்த நிறத்துடனும், மஞ்சள் பொன்னிறத்துடனும் ஒளி ஊடுருவிச் செல்லக்கூடியதாக இருக்கும். பிரகாசமான ஒளியுடையது. அணிந்தால் மனமகிழ்ச்சியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்கும். வருமானம் பெருகும். கணவன் மனைவி உறவு மேம்படும். நோய்களுக்கு பாதுகாப்பாகும்.

5. தீவிர உணர்ச்சியுடன் வெற்றியடைய ஆவல்கொண்டு, பெருவிருப்பத்துடன் பண்படுத்தி விருத்தி செய்தல். இது ‘வைடுரியம்’ -ன் தன்மையாகும். வைடூரியம்- கேது, சனீஸ்வரன்- கிரகபலன் கொண்டது. கருஞ்சிவப்பு வைடூரியம் ஒளி ஊடுருவிச் செல்லக்கூடியது. பிரகாசமாகவும், கடினமாகவும், கணமாகவும் இருக்கும். அணிபவர் பரிசுத்தமாக இருக்க வேண்டும். கெட்டகாரியங்களைச் செய்யக்கூடாது. அதையும் மீறி செயல்பட்டால் கடும் நாசம் ஏற்படும். பரிசுத்தமானவர்களுக்கு எல்லா நன்மைகளையும் பெறுவர். ஆரோக்யம் பெறுவர். பணம் தட்டுப்பாடு இருக்காது. ஆயுள் நீடிக்கும். அடங்காத மனைவியும் அடங்கி நடப்பர். மகிழ்வு அடைவர்.

6. தீர்க்கதரிசிபோல உந்துசக்தியை இயங்கவைத்தல். இது ‘நீலம்’ -ன் தன்மையுடையது. நீலம்- சனி- கிரகபலன் கொண்டது. வாழ்க்கையை மேம்படையச் செய்யும் அல்லது அடியோடு நாசமாக்கிவிடும். சுத்தமானதாகவும் குற்றமில்லாததாகவும் இருக்க வேண்டும். பரிசோதித்து வாங்கவும். கெட்ட கண்பார்வையிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். சபைகளில் மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். தனலாபம் ஏற்படும். கண்டங்கல் நீங்கி தீர்க்காயுள் கிட்டும். சனித்தோஷம் நீங்கும். இது அணிந்துகொண்டு தாம்பத்திய உறவில் ஈடுபடக்கூடாது. நேர்மையான வழியில் சென்றால் உலகப் புகழ் அடையலாம்.

7. எவ்வளவு தடைகள் வந்தாலும் தொடர்ந்து உறுதியாக முன்னேற்றம் காண மீண்டும் மீண்டும் முயற்சித்தல். இது ‘பவளம்’ -ன் தன்மையாகும். பவழம்- செவ்வாய்- கிரகபலன் கொண்டது வெண்மை கலந்த சிவப்பு நிறமே நல்ல பவழம். ஒளி ஊடுருவாது. கணமாகவும் குண்டாக சற்று நீண்டிருக்கும். எளிதில் உடைக்க முடியாது. கடன் தொல்லைகள் நீங்கும். கோபக்காரரை சாந்தமானவராக மாற்றிவிடும். முகத்தில் ஒளியையும் கவர்ச்சியையும் உண்டு பண்ணும். ஆரோக்கியம் அபிவிருத்தியடையும். போலி கல்லினால் சீரழிவு ஏற்படுமாதலால் பரிசோதித்து வாங்கவும்.

8. முழு வெற்றிக்காக தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொள்வது. தலைமையேற்று உறுதி எடுத்துக்கொள்வது. இது ‘வைரம்’ -ன் தன்மையாகும். வைரம்- புதன்- கிரகபலன் கொண்டது. நவரத்தினங்களில் தனி மதிப்புடையது. நீரோட்டமுள்ள நல்ல வைரத்தில் ஜீவ சக்தி உண்டு. ஆயுள் விருத்து உண்டு. சத்துருக்களை பணிய வைக்கும். வைரக்கல்லில் நீர் பட்டு உடம்பில் பட்டு வந்தால் ஆரோக்யத்துடன் இருப்பார்கள். செல்வம், செல்வாக்கு, புகழ் அனைத்தும் ஏற்படும். குடும்பத்தில் அமைதி ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவும். ஒத்துவராத ராசிகளும் உண்டு அவை அழிவை ஏற்படுத்தும் பார்த்து சோதித்து அணியவும்.

9. மேற்கூரிய எல்லா செயல்களையும் முன்னின்று நடத்தி வெற்றிகொள்ளும் தன்மை. இது ‘மாணிக்கம்’ -ன் தன்மை. மனிதனை, மனித ஆன்மாவை மனிதருள் மாணிக்கம் எனக்கூறும் வண்ணம் இந்தப் பகுதியின் செயல் இருக்கும். மாணிக்கம்- சூரியன்- கிரகபலன் கொண்டது. இது நான்கு வகைப்படும். 1.பத்மராஜம்- தாமரைநிறம், 2.குருவிந்தம்- நல்ல சிவப்புநிறம், 3.சௌகாந்தம்- மஞ்சள் கலந்த சிவப்பு, 4. நீலகாந்தி- நீலவான நிறம். பதவிகள் உயரும். மனவலிமை அற்றவர்கள் மனோவலிமை அடைவர்.

இப்படி ஒன்பது நவரத்தினங்களின் தன்மைகளை உள்ளடக்கிய, ஒன்பது ஒப்புயர்வற்ற செயலாற்றல்களால் ஆன்மா தனித்தன்மை பெறக்கூடியப் பகுதிகளை நம்முள்ளே, நம் மூளை கொண்டு செயல்படுவதால் அதை ஏன் நவரத்தினம் எனக் கூறக்கூடாது. இந்த ஒன்பது குணாதிசயங்களை ஒன்றுகூட்டி செயல் பட்டால் மனித ஆன்மாவின் உடலே நீயும் ஓர் நவரத்தினம் ஆவாய்!

எந்த மரத்திலோ, செடியிலோ தோன்றிய விதை காற்றால், நீரினால் எங்கோ கொண்டு செல்லப்பட்டு, பலநாட்கள் புதையுண்டு, காத்திருந்து, முளைவிட்டு கிளர்த்தெழுகின்றது போல மனித ஆன்மாவே! நீ எங்கு தோன்றினாலும், எங்கு இருந்தாலும் உன்னுள் ஓர் அபரிதமானசக்தி இருக்கின்றது. அதை உணர், புரிந்துகொள். அதை வெளிக்கொணர முயற்சிசெய். மேன்மையடைவாய். வெற்றிகொள்வாய் வாழ்வில்.
888888

திங்கட்கிழமை, 06 April 2015 00:00

ஓம் (எ) பிரணவம்

Written by

ஓம் (எ) பிரணவம்:

அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையே ஓம் ஆகும். ஏகாட்சரமான ஓம் என்பதை பிரித்தால் வரும் எழுத்தை ‘அ’கரம், ‘உ’கரம், ‘ம’கரம் என்றும் அதுவே ஓங்கார அடிப்படை ஒலிகள் எனக் கூறப்படும். ஓம் என்பது ஆத்மாவுக்குரிய ஓசை. பிரமத்தையே தனக்குப் பொருளாகக் கொண்ட ஓசை. ஓம் என்ற மகா மந்திர ஓசை உயிர்களை பரமாத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்யும் சமர்த்தியம் கொண்டது. அதுவே பிரணவ மந்திரம் ஆகும். பிரணவம் பழுத்த இடம் ஒளி பிறக்கும் படியான இடம். அதாவது அகரம் பிறக்குமிடம். ஒளி பிறக்குமிடத்தில் மந்திரங்கள் பிறக்கும். எனவே பிரணவ மந்திரம் ஆகிய ஒம் தன் ஒலியால் அசைவுகளை உண்டாக்கி அதன் ஒளியால் சக்தியை உண்டாக்குகின்றது. இந்த சக்தியே ஜீவராசிகளின் பிண்டத்திலும் (உடலில்), அண்டத்திலும் (பிரபஞ்சம்) பரவியுள்ளது.

அ என்றால் சூரியன், உ என்றால் இந்திரன், ம் என்றால் அக்னி. எனவே ஓம் என்பது எல்லாப் பிரகாசங்களும் உள்ள பொருட்களின் சுய வடிவு. ஓம் என்ற காந்த ஒலி அதிர்வு மின் அலைகளுடன் தொடர்புடையது. ஒரு தொடர் சுழற்சியிலிருந்து ஓம் என்ற ஒலியை கேட்கலாம். பூமி மற்றும் அண்டங்களின் சுழற்சியால் பிரபஞ்சத்தில் காந்த அலைகள் ஏற்படுத்தப்படுகின்றன. சூரிய, சந்திர, நட்சத்திரங்களின் ஒளியின் அசைவுகளால் மின் அலைகள் பரவுகின்றன. இந்த அலைகள் நம் உடலிலும் பிரபஞ்ச பொருள்களிலும் பதிந்து மின் காந்த சக்தியைத் தோற்றுவிக்கின்றன. உயிர்களுக்குத் தேவையான ஆதாரப் பொருள்களும் அடிப்படைச் செயல்களுக்குரிய திரவங்களும் தாதுக்களும் இந்த சக்திகளால் உண்டாக்கப்பட்டு பிரபஞ்சத்தில் இயக்கங்கள் நடைபெறுகின்றது.

ஓங்காரத்தின் ஒளி முதலிய நிறம், சக்தியாவும் நம் மவுன முயற்சியால் மிகப் பெரிய பலன்கள் அந்த உயிரின் உடலுக்கு கிடைக்கச் செய்கின்றது.

நாபியில் ‘அ’ எனத்தொடங்கி ‘உ’ ஆக வளர்ந்து ‘ம்’ என முடியும் ஓம் என்ற அந்த ஓசையுடன் காலம், இடம், காரணம், காரியம் எல்லாம் நம் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

காலத்தை- விநாடி, நிமிஷம்,மணி, நாள், மாதம், அண்டு ஆகிய அருவ அளவைகளால் உணரலாம்.

இடத்தை- தொடங்கும் இடத்தின் எல்லை, முடியும் இடத்தின் எல்லைக்குட்பட்ட நீட்டல் அளவை முதலிய உருவ அளவைகளால் உணரலாம்.

காரணம், காரியம்- ஓர் சிறிய ஆலம் விதையில் பெரிய ஆலமரம் உண்டாகிறது என்ற காரண காரியத்தை புரியலாம்.

ஓம் என்ற அருவமான ஓர் ஓசை சக்தியின் வளர்ச்சியை இயக்கத்தை காலம், இடம், காரண காரியம் ஆகிய அடையாளங்களால் உடம்பினுள்ளும் பிரபஞ்சத்திற்குள்ளும் உருவாக்க முடியும்.

பிரபஞ்சத்தின்(அண்டம்) சிறிய பகுதி உடல்(பிண்டம்). பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உடலில் இருப்பதால் பிரபஞ்ச ஓங்கார ஓசையை உடலினுள் சொல்வதால் பிரபஞ்ச பயனை அடையலாம்.

நாதம் என்பது பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆகாயத்தின் அடிப்படை ஒலித் தத்துவமாகும். பிரபஞ்சத்தின் எல்லா நாத ஓசைகளும் தன்னிலிருந்து சில பொருட்களை உண்டாக்கும்.

குரலின் இனிய ஓசை, காற்றின் ஓசை, நெருப்பின் எரியும் ஓசை, மண்ணின் சரியும் ஓசை, நீரின் பாயும் ஓசை மற்றும் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு ஓசை எடுத்துச் செல்வது போன்றவைகள் எல்லாம் நாதத்தின் வகைகளாகும்.

செயற்கை கருவிகளால் உண்டாகும் செயற்கை ஓசைகள் ஏற்றத்தாழ்வு கொண்டிருந்தாலும் நாத அளவில் அது இயற்கையானது.

இந்த இயற்கையான நாதங்களை ஒருங்கினைத்து தோன்றுவிப்பதே ‘ஓம்’ எனும் பிரணவ ஒலி மந்திரமாகும். இந்த நாதத்தை நாபியின்(தொப்புள்) பகுதியில் எழுப்பும்போது உடலில் உள்ள வேதியல் பொருள்களில் பலவித வடிவம், நிறம், ஒளி, சக்தி, அலை ஆகியன உண்டாகும்.

உடம்பின் உள்ளே தோன்றும் தச வாயுக்களாலும் உடலில் உள்ள அக்னியின் மேல் செல்லும் போக்காலும் இந்த பிரணவ ‘ஓம்’ உடம்பின் கீழிருந்து மேல் நோக்கி உச்சித் தலைக்கும் அதற்கு மேலும் தடையின்றி போகும்.

அப்படிப் போகும்போது பெயர், எல்லை, ஒளி, நிறம், தெய்வம், அளவு, வடிவம், சூனியம் ஆகிய பகுதிகளை வரையறை செய்து உணர்ந்தால் ஓங்காரம் பிரபஞ்சத்துடன் ஒன்றி உடலில் பரவுவதை அனுபவிக்கலாம். இப்போது இந்த ஞான ஒளி உள் ஒளியாகி குண்டலி சக்தியாக வெளிப்படும். எனவே ஓம், பிரணவம், குண்டலி யாவும் ஒன்றை ஒன்று சார்ந்தது என்பது புரியும்.

பிரபஞ்சத்தில் உருவாக்கப்படும் எல்லாப் பொருள்களுக்கும் உரிய தேவர்கள் உண்டு. ஓம் எனும் பிரணவத்தில் ‘அ’ என்பது முதலில் தோன்றுவதால் ‘அ’காரமாவது உலக உற்பத்தியை குறிக்கும், அதற்குரிய தேவர் படைப்புக் கடவுள் என்றும், ‘உ’ என்பது வளர்வதற்குத் துணை செய்வதால் ‘உ’காரம் வியாபித்தல் என்பதைக் குறிக்கும், அதற்குரிய தேவர் காவல் கடவுள் என்றும், ‘ம்’ என்பது முடித்து வைப்பதால் ‘ம’காரமாவது அழித்தலைக் குறிக்கும், அதற்குரிய தேவர் சம்ஹாரக் கடவுள் என்றும் உணர்த்தப்படும்.

எனவே ‘ஓம்’ என்பது படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் தம்மகத்தே கொண்டதால் முத்தொழிலுக்குரிய கடவுள்களும் அதில் அடங்குவர்.

பிரணவப் பொருளே சிவனின் சொரூபம். எல்லா விதைகளுக்கும் விதை போன்றது. மிக சூட்சமம் ஆனது. உலகின் எல்லா ரூபங்களிலும் காணப்படும் அதுவே பரப்பிரம்மம் ஆகும். ஏகாட்சரம் என்றும் ஆதி மந்திரம் என்றும் சொல்லலாம். ‘அ’ கர, ’உ’ கார, ’ம’ காரங்களாகிய மூன்றும் சேர்ந்து உச்சரிக்கப்படுவது பிரணவம். அதிலிருந்து வேதங்கள் தோன்றின. ‘அ’காரம் ரஜோகுணத்துடன் நான்முகனாக உற்பத்தியைச் செய்யும். ‘உ’காரம் சத்துவ குணத்துடன் விஷ்ணு ரூபமாகி உலகத்தைக் காக்கும். ‘ம’காரம் தமோ குணத்துடன் ருத்திரனாகிய புருஷ்னாக உலகத்தை சங்கரிக்கும். பிந்து (விந்து) மகேசுவர சொரூபமாக திரோபாவத்தை-மறைத்தலைச் செய்யும். நாதம் சதாசிவ ரூபமாக எல்லாவற்றையும் அருளும். சதாசிவ மூர்த்தியாக விளங்கும் மந்திரம், யந்திரம், தேவதை, பிரபஞ்சம், குரு, சீடன் எனும் ஆறுவகைச் சாதனங்களால் சிவனை அறிந்து ஐக்கியமாக வேண்டும் அதற்காண மந்திரம், தியானம் ஆகியவற்றை உமைக்கு விளக்கினார் சிவன். இதய கமலத்தில் ஆதார சக்தி முதல் அந்தராகாசத்தில் ‘ஓம்’ எனும் ஏகாட்சர சொரூபியாக பிரம்மத்தையே தியானிப்பவர்கள் சிவ ஞானத்தை உணர்ந்து சிவகதியடைவர். குருவைத் தியானித்து வணங்கி அவர்மூலம் உபதேசம் பெற்று தூய்மையாக பிரணவத்தை உச்சரித்து பஞ்சாட்சரம் செபித்து முறைப்படி பஞ்சாவரண பூசை செய்ய வேண்டும் என உபதேசித்தார். சிவன் உபதேசித்த வேதசிவாகமப் பொருளை தன் அருள் முகத்தால் பிற ஆன்மாக்களுக்கு அம்பிகை உணர்த்தினாள்

‘அ’காரம், ‘உ’காரம், ‘ம’காரம் ஆகிய மூன்றையும் மூன்று உடல்களாக கருதப்படும். அவை முறையே ஸ்தூலம் (பருஉடல்) கண்ணுக்குப் புலனாகும் மாமிச உடல், மண்ணியல்பாய் உருவானது என்றும், சூட்சமம் (நுண்ணுடல்) கண்ணுக்குப் புலப்படாமல் அமைந்திருப்பது (ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5, அந்தகாரணங்கள்-4, பிராணவாயு-1 இதை லிங்க சரீரம் எனக் கூறப்படும்) என்றும், காரணம் (லிங்க உடல்) பரு உடல் நுண்ணுடல் இரண்டிற்கும் காரண வித்தாக இருக்கும் இதை சஞ்சீத கன்மம், தொகைவினை எனக்கூறப்படும்.

‘அ’காரம், ‘உ’காரம், ‘ம’காரம் மூன்றும் மூன்று உடல்களாக மட்டுமல்லாமல்
பெண், ஆண், அலி என மூன்றுமாகவும்,
ருக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம் என மூன்று வேதங்களாகவும்,
கார்ஹபத்யாக்னி, தக்ஷிணாக்னி, ஆஹவனீயாக்னி என மூன்று அக்னியாகவும்,
ஹ்ரஸ்வம், தீர்க்கம், ப்லுதம் என்ற மூன்று ஸ்வரங்களாகவும்,
பாதம், நாபி, சிரசு என மூன்று சர்வ அவயவங்களாகவும்,
புத்தி, மனம், அஹங்காரம் என மூன்று சர்வ அந்தக்கரண ஸமஷ்டியாகவும்,
ரஜோகுணம், ஸத்வகுணம், தமோகுணம் என மூன்று குணபேதங்களாகவும்,
சிவப்பு, கபிலம், கறுப்பு என மூன்று வர்ணங்களாகவும்,
பூரகம், கும்பகம், ரேசகம் என மூன்று ப்ராணாயாம அப்பியாசமாகவும்,
நாதம், பிந்து, களை என மூன்றுமாகவும்,
கிரியாசக்தி,பிந்து, ஞானசக்தி என மூன்றுமாகவும்,
ப்ராஹ்மணீ, வைஷ்ணவீ, ரௌத்ரி என மூன்றுமாகவும்,
பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் என திரிமூர்த்திகளாகவும்,
சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலங்களாகவும்,
ஜீவாத்மா, அந்தராத்மா, கூடஸ்தன் என மூன்றுமாகவும்,
விராட் புருஷன், ஹிரண்யகர்ப்பன், ஈஸ்வரன் என மூன்றுமாக இருந்தும்

செயல்புரிய வல்லது. எனவே ‘ஓம்’ என்ற பிரணவத்தில் எல்லாம் அடங்கும்.

உலக உற்பத்திக்கு காரணம் பரம்பொருளே. ‘அ’ கார உயிர் எழுத்து அனைத்துமாகி வேறாய் அமர்ந்து, ஓங்காரத்தால் ஐந்தெழுத்தால் புவனத்தை உண்டு பண்ணும் பரம்பொருள் என்றார் தாயுமானவர்.

நாதவடிவமான பிராணவம் மூன்றாகப் பிரிந்து அதிலிருந்து ஐந்து எழுத்தான பஞ்சாட்சாரம் பிறந்தது. அந்த 5 லிருந்து 51 அக்ஷரங்கள் தோன்றின.

எழுத்துக்கள் ஒற்றும் உயிரும் என இருவகைப்படும்.

உயிருடைய பொருள், உயிரில்லாப் பொருள் என உலகத்தில் இருவகைப்படும்.

‘அ’ காரம் எல்லா எழுத்துக்களிலும் கலந்து அவைகளை இயக்கும் தன்மை கொண்டது. தானும் தனித்து இயங்கவல்லது. இறைவன் தானும் இயங்கி எல்லாப் பொருளிலும் கலந்து அவைகளை இயக்குவதுபோல் ‘அ’ காரம் இயங்காமல் எந்த எழுத்தும் இயங்காது.

வாயை திறந்தவுடன் உண்டாவது ‘அ’ கார ஒலியே! ஒலி வேறுபாட்டில் உதிக்காமல் வாய்திறந்து எழும் ஒலிமாத்திரமான இயற்கையாகப் பிறப்பது ‘அ’ காரம். ‘அ’ காரம் எல்லா பொருள்களிலும் கலந்து இருப்பதுபோல் கடவுள் எல்லாப் பொருள்களிலும் கலந்து இருக்கின்றார். இதுவே “மெய்யின் இயக்கம். ‘அ’கரமொடு சிவனும்” என்று தொல்காப்பியத்தில் குறிபிடப்பட்டுள்ளதாகும்.

மேலும் ‘அ’ காரத்தில் தொடங்கும் சொற்கள் (அரன், அரி, அயன், அரசன், அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், அண்ணி, அத்தை, அண்டம், அன்பு, அறிவு, அறம், அடக்கம், அமைதி, அகம், அழகு, அறிஞர், அண்ணல் எல்லாம் மிகமிக உயர்ந்தவற்றை குறிப்பிடுபவையாக அமந்துள்ளது அறிக.

அருணகிரிநாதர், தொல்காப்பியர், திருவள்ளுவர், ஒளவையார், குமரகுருபரர், உய்யவந்த நாயனார் ஆகிய அருளாளர்கள் ‘அ’காரத்திற்கு முதலிடம் தந்து இறைவனுக்கு நிகராக்கி சிகரமாக சிறப்பித்துள்ளதே ‘அ’காரத்தின் சிறப்பை வழிவழியாக நம் முன்னோர்கள் அறிந்துள்ளது அறியலாம்.

ஓம் (எ) பிரணவம் பற்றி அடியேன் தெளிந்த கருத்துக்களை முன் வைத்துள்ளேன். குறையிருப்பின் நீக்கி பொருள்கொண்டு நிறைகாண்பீர். அன்புடன்--குருஜி  

திங்கட்கிழமை, 06 April 2015 00:00

இயற்கையின் நிகழ்வு

Written by

இயற்கையின் நிகழ்வு - சமுதாய ஆர்வலர்களின் சிந்தனைக்கு!

 தந்தை தன் மகளை மூன்றுவருடமாக கற்பழித்தார்.
 ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவி ஒரு கும்பலால் கற்பழிப்பு.
 ஆதிவாசிபெண்கள் அதிகாரிகளால் கற்பழிப்பு
 பள்ளி மாணவியிடம் ஆசிரியர் முறைதவறி நடந்தார்
 சிறுமியை காமவெறியுடன் சிதைத்து கொலை
 கல்லூரி மாணவன் காதலிமேல் ஆசிட் வீச்சு ……… இன்னும் எத்தனையோ நிகழ்வுகள்!

இப்படி நாளும் எங்கோயோ ஓரிடத்தில் ஏதாவது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. பல நிகழ்வுகளில் ஒரிரண்டு மட்டும் செய்திகளாக வருகின்றது. பல தெரியாமல் போய்விடுகின்றது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் வெளியில் தெரிவிப்பதில்லை. அப்படித் தெரிந்த செய்திகள் சம்பந்தப் பட்டவர்களுக்கு பல சிக்கல்களை உருவாக்குகின்றது. சட்டங்களும் சமுதாயமும் ஒன்றும் செய்யமுடியாமல் திணறுகின்றது. நீதி துறையும், பாதுகாப்பும் கேள்விக் குறியாகிறது. சமுக ஆர்வலர்கள் தங்கள் உணர்வுகளை தங்கள் அனுபவத்திற்கேற்ப கட்டுரைகளாகவும் கருத்துக்களாகவும் தெரிவிக்கின்றனர். பத்திரிக்கைகள் விமர்சனம் செய்கின்றன. மக்கள் சிந்தனை வயப்படுகின்றனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து அந்த நிகழ்வுகளை ஒவ்வொருவிதமாக கணித்து நியாப்படுத்தியும், கண்டித்தும் மற்றவர்களிடம் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டு அந்த நிகழ்வை மறந்து விட்டு அடுத்த செய்திக்கு தாவுகின்றனர். மறுபடியும் எங்கேயாவது ஏதாவது நிகழ்ந்தால் அப்போது பழையதை எல்லாம் சொல்லி நினைவு கூறி பட்டி மன்றம் நடத்துபவர்களாக மாறி விடுகிறார்கள். செய்திகளை செய்தித்தாள்களிலோ, தொலைக் காட்சியிலோ பார்க்கும் சிலர் அழுத்தம் காரணமாக உடல் சூடேறி உணர்ச்சி வயப்பட்டு கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி தங்கள் கோபத்தை ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கின்றனர். சற்று மாறுபட்ட வடிவில் நாங்கள் இவர்களுக்கு பாதுகாவலர்கள் என தன்னை முன்னிலப்படுத்தும் ஆர்வலர்களும் அமைப்புகளும் தொலைக்காட்சி மூலம் விவாதம் நடத்தி தங்கள் பங்கை முடித்துக் கொள்கின்றனர். சிலர் கட்டுரைகள் எழுதிவிட்டு அமைதியாகி விடுகின்றனர். தொடர்ந்து என்ன நடவடிக்கை என்பதற்கு நமது சமுதாய அமைப்பில் உள்ள வழிமுறைகளை அதிகாரத்தில் உள்ளவர்களிடம் எடுத்துச்சென்று வென்றிட முனையுமாறு சமூக அமைப்பில் ஆர்வமாக உள்ள அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

சிறுவயதினில் தன் வளரும் அங்கங்களை, இன உறுப்புகளை தொட்டுப் பார்க்கும் தன் உறவினர்களால், நண்பர்களால் அவர்களின் செயல் புரியாமலும் தடுக்கும் நிலையில் இல்லாமலும் இருக்கும் நிலையில் உள்ளனர் நாளைய சமுதாய அங்கத்தினர்கள். தாய் தந்தை முன்னிலையிலும் இது நடப்பதாலும் அவர்களில்லாதபோது நடப்பதை அவர்களிடம் சொல்ல வேண்டுமென்றுகூட தோன்றுவதில்லை. மீண்டும் மீண்டும் அப்படி தொடும் போது அது தவறல்ல என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்பாகின்றது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களில் பலர் சிறார்களை கொஞ்சும்போது இனக்குறிகளைத் தொட்டு முத்தமிடல், இது யாருக்கு என சொல்லி கேலி பேசுவதுமான நிகழ்ச்சிகள் இன்றும் பல இடத்தில் நடந்து கொண்டுதானிருக்கின்றது. புரிந்தோ, புரியாமலோ இவைகள் குழைந்தைகளின் மனதில் பதிந்து விடுகின்றது.

வளரும் பருவத்தில் கேட்கும், படிக்கும் கதைகளும், பார்க்கும் சினிமா காட்சிகளும், எதிர்பாரமல் நேரில் பார்க்கும் காட்சிகளும் அவர்களுக்கு புரியாத நிலையில் தன் நட்புகளுடன் பரிமாரிக் கொள்ளும்போதும் இனம்தெரியா மயக்க உணர்வினை அடைகின்றனர். சிலருக்கு அது பிடிப்பதில்லை. தவறு என நினைத்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். சிலர் மேலும் அறிந்துகொள்ள முயன்று முன்னெச்சரிக்கையும் அடைகின்றனர். சிலர் தடம்மாறியும் விடுகின்றனர். தவறு பாவம் என்பவர்கள் மற்றவர்களிடமிருந்து பிரித்து நிற்பதால் இது போன்ற தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

பருவமடைந்து பலவருடங்கள் ஆகியும் திருமணமாகாமல் உணர்வுகளுடன் அடங்கியிருக்கும் ஆண் அல்லது பெண், பருவமடைந்தபின் எதிர்பாராமல் ஆண், பெண் உறவை தங்கள் வீட்டிலோ வேறு எங்கேயோ பார்த்த ஆண் அல்லது பெண், ஒளிவுமறைவு இல்லாமல் வரும் கதைகள் மற்றும் வண்ணப்படங்கள் பார்த்த ஆண் அல்லது பெண், வாழ்நாள் முழுவது துணை என்று மணந்தபின் ஆசை அறுபது மோகம் முப்பது என்றபடி ஒதுங்கும் ஆண் அல்லது பெண், கணவன் கைவிட்ட மனைவி அல்லது மனைவியால் கைவிடப்பட்ட கணவன், வாழ்வில் பணம் அல்லது வேரொன்று குறிக்கோள் என நினைக்கும் ஆண் அல்லது பெண், திருமணத்திற்கு பின் முற்றிலும் மாறிய ஆண் அல்லது பெண், நாற்பது வயதிற்குமேல் என்ன வேண்டியிருக்கின்றது என நினைக்கும் ஆண் அல்லது பெண் ஆகிய இவர்களே இந்த சமுதாயத்தில் இதுபோன்று நடக்கும் நிகழ்வுகளுக்கு காரணகர்த்தாக்கள்.

உலகில் பலதரப்பட்ட பெண்கள் / ஆண்கள் இருந்தாலும் எல்லோருக்கும் பொதுவான உணர்வு ஆண்/பெண் என்ற பாலியல் உணர்வுகள். ஒருவர்மீது ஒருவருக்கு வசீகரமிருக்கும். அது இயற்கை நியதி. அது இயற்கையின் இரகசியம். அதை எந்த ஒரு பாலரும் கேவலமாகவோ, அநாவசியமானது என்று நினைத்தல் மற்ற பாலருக்கு துன்பம் தருவதாகும். வாழ்வு பயணத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வின் பயணத்தை ஆனந்தத்துடன் பயணிப்பதற்காக ஏற்பட்ட இயற்கையின் நியதி. ஆண்பெண் வாழ்வுமுறை இரகசியம். வாழ்வில் வெற்றி கொள்ள புன்னகைதவழும் முகத்துடன் இருபாலரும் வலம் வர ஏற்பட்ட உறவு தாம்பத்தியம். இயற்கையின் அமைப்பே பெண் வசீகரமிக்கதாகவும் ஆண் வசீகரிக்கப்படும் இனமாகத்தான் படைக்கப்பட்டுள்ளது. பெண் மென்மையான உறுதியுடனும், ஆண் வலிமைமிக்க உறுதியுடனும் படைக்கப்பட்டது பொதுவான இயற்கையின் நியதி. இந்த இயற்கை நியதியில் வக்ரமில்லை. வக்ர உணர்சியுமில்லை. பெண்ணுக்கு ஆண் அவசியம், ஆணுக்கு பெண் அவசியம். ஒன்றில்லாமல் ஒன்றில்லை. சமுதாய மேம்பாட்டிற்கு இந்த உணர்வுகள் ஒன்றுவது அவசியமாகிறது. சுதந்திரம் இரு பாலருக்கும் பொதுவானது. சுதந்திரம் என்ற பெயரால் ஒன்றை ஒன்று மீறக்கூடாது. ஒற்றுமையைக் கட்டக்கூடிய அளவில் இருபாலரின் சுதந்திரம் இருந்தால் அங்கு மனிதநேயம் பிரகாசமாகும். மற்ற பாலரின் விருப்பு வெறுப்புகள் பாதுகாக்கப்படும் ஒற்றுமையான சுதந்திரம் இல்லையென்றால் கட்டுப்பாடில்லை. அங்கு எல்லாம் தீர்க்க முடியாத துயரங்களே நிறையும்.

திருமணமான ஒரு ஆணோ பெண்ணோ தன் மறுபாலினரின் விறுப்பு வெறுப்புகளை மதித்து விட்டுக்கொடுத்து மனிதநேயத்துடன் அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுவது தம் வாழ்வியல் கடமை எனநினைத்து நடந்துகொண்டால் திருமணமான ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ அதீத உணர்வுகள் எப்போதும் ஏற்படாது. தினமும் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு அவர்கள் விரும்புவது கிடைத்தால் வேறு மாற்று எண்ணங்கள் தோன்றாது. கால சுழற்சியில் சுரப்பிகள் செயல்பட்டு உணர்ச்சிகள் தூண்டப்பட போதிய அவகாசம் வேண்டும். இதுவே அடிப்படை. அப்படி வேண்டியது கிடைக்காதவர்கள்தான் திருட்டுப்பாலில் சுவைகாண விரும்புவர். அது பூனை குணம். அவர்களின் பார்வையில் ஓர் கள்ளத்தனம் குடியிருக்கும். தொடர்ந்து அவர்களுக்கு அது கிடைக்காத நிலையில், நாளடைவில் அது அதீதத் தன்மையுடையதாகிவிடும். ஆணோ பெண்ணோ இப்படி தீர்க்கப்படாத அதீத உணர்வுகளால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகள் அமைதி அடைய முற்போக்கு சமுதாய திட்டமிடல் வேண்டும். மேலே சொல்லப்பட்ட நிகழ்வுகள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆழ்ந்தவர்களால்தன் நிகழ்த்தப் படுகின்றது என்பதை புரிதல் வேண்டும்.

இந்த ஆண் அல்லது பெண் நமது சமுதாய அமைப்பிற்குப் பயந்து பெறும்பாலும் அதீத உணர்வுகளுடன் அமைதியாகவே இருக்கின்றார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அந்த உணர்வுகள் கூடிய உணர்ச்சிகள் பல காலமாக அவர்களிடையே நீறு பூத்த நெருப்பாக தனலாக எரிந்து கொண்டுதானிருக்கின்றது சாம்பலின் அடியில் கனல் இருப்பது போன்று. அவர்கள் எல்லோரும் சாம்பலைப் போன்று நல்லவர்களே நல்ல சந்தர்ப்பம் வரும்வரை. உணர்வுகள் அமைதியாய் இருக்கும்வரை. ஏதோ ஓர் சூழலில் பூத்த சாம்பலில் இருக்கும் கனல் பூத்து அவர்களை தன் நிலை மறக்க வைக்கும். அதுவே அவர்களின் உடன் செயல்களும் அதைத் தொடர்ந்த திட்டங்களும். செயலாக்கமும். இது அவர்களுக்குள் இருக்கும் யாருக்கும் தெரியாத ஒரு உணர்வு. அவர்களுக்குகூடத் தெரியாமலிருக்கலாம். இதை விரக்தி வேகம் கொண்டு அமைதியாக இருக்கும் வியாதி எனக்கூட கூறலாம். ஓர் செயலைக் கண்டதும் அல்லது கேட்டதும் அழுத்த நோயுள்ளவர்களின் செயல்பாடு எப்படி வீறு கொண்டிருக்குமோ அது போன்ற தன்மையுடையது இவர்களின் உணர்வு. பல சூழ்நிலைக் காரணங்களால் இந்தவித உணர்வுகளை அவர்கள் செயல் படுத்தும்போது பலர் தப்பிவிடுகின்றனர். சிலர் மாட்டிக்கொள்கின்றனர். செயல் படுத்தும்போது அதை செய்பவர்கள் எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். பின் விளைவுகளை யோசிக்கும் நிலையில் அவர்களது மனம் இருப்பதில்லை.

உணர்வுகள் என்பது சாதாரணமான விஷயமில்லை. எவ்வளவு காலமானாலும் உள்ளத்திலிருக்கும். எந்த சூழலிலும் மீண்டும் அது தோன்றும். உங்களுக்கு சிறுநீர் பையில் அடைப்பு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் சிரமங்களும் சிக்கல்களும் அதை அனுபவிக்கும் போதுதான் தெரியும். அந்தப் பை முழுவதும் நிரம்பினால் மருத்துவர் உதவியுடன் அதை சரி செய்தவுடன் ஓர் நிம்மதி ஏற்படும். மலம் கழித்தலிலும் சிறுநீர் கழித்தலிலும் வெளியேற்றத்திற்குப்பின் ஏற்படும் ஆனந்தம் அளவிடமுடியாதது. இதைப் போன்றதே இந்த பாலியல் உணர்ச்சிகள் நிறைந்த ஒருவன் அல்லது ஒருத்தி அதனை நீண்ட நாள் அடக்கிவைத்தலும் ஆரோக்கியமானது அன்று. அவ்வாறு அடக்கிவைத்தலின் முடிவே அதீத எண்ணங்களின் வெளிப்பாடு. எனவே இயற்கையான இந்த உணர்வுகளின் அடிப்படியில் இந்த சமுதாயம் இந்த நிகழ்வுகளுக்கு ஓர் நிரந்தர மாற்று வழி காணவேண்டியது அவசியம். உணர்வுகளை அடக்கிவைத்த இருபாலருமே முகம் களையிழந்து கண்கள் ஒளியிழந்து சொற்களில் சுவராசியமில்லாமல் செயல்களில் ஓர் உந்துத்தல் இல்லா சலிப்பான நிலையில் இருப்பார்கள்.

இதிலிருந்து விடுபட எத்தனையோ வாய்ப்புகளும் வழிமுறைகளும் இருக்கின்றது. ஆனால் அதை எல்லாம் நமது சமுதாயம் அங்கீகரிக்கின்றதா என்பதைப் பார்க்க வேண்டும். சிலர் மற்றவர்களுக்குத் தெரியாமல் தங்களுடன் பழகும் ஆண் அல்லது பெண் உதவியை நாடுகின்றனர். சிலர் வேறு சிலரின் பழக்கத்திற்கு உடன்பட்டு போதை வஸ்துகளை உபயோகிக்கின்றனர். சிலர் ஆன்மீக மார்க்கத்தில் ஈடுபாடு கொள்கின்றனர். சிலர் எல்லாவற்றையும் மறந்து தொழிலில் கவனம் செலுத்துகின்றனர். எப்படியிருப்பினும் உணர்ச்சிகள் அமைதியடையா நிலையில் இருந்து வரும் ஆண் அல்லது பெண் ஓர் நாள் ஓர் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களின் உணர்வுகளில் கிளர்ச்சி தோன்றி கட்டுக்கடங்கா நிலையில் தன்நிலை அறியாமலே தவறு செய்யத் தூண்டப்படுவர். நீண்டநாள் அடக்கிவைத்த உணர்வுகள் கிளர்ந்தெழும் அந்நிலையில் அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அவர்களின் உணர்ச்சிக்குத் தீர்வு என்ற ஒன்றோயாகும். அதுவே அவர்களின் குறிக்கோளாக இருக்கும். அது ஒருவித வெறிகொண்ட செயலாகத்தான் இருக்கும். அந்த உணர்விற்கு தீர்வுகாண முயற்சி செய்து வென்றாலும் தோற்றாலும் நாம் இப்படிச் செய்துவிட்டோமே என பின் வருந்துவர். செயல் நடந்தபின் வருந்தி என்ன செய்ய! காலம்தாழ்ந்த எண்ணம்! இந்த உணர்வுகளால் தோன்றும் கொடிய நோயின் தாக்கத்தில் இருக்கும் அந்த சகோதர சகோதரிகளுக்கு நம்மிடையே என்னென்ன வழிமுறை கொண்டு அவர்களை அந்த தாக்கத்திலிருந்து காக்க முடியும் என்பதை மக்கள் சமூக நல சிந்தனையாளர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.

இப்படி இயற்கை உணர்ச்சிகளின் அடிப்படையில் நிகழ்வுகள் நடப்பதை, ஏன் நடக்கின்றது என விவாதிக்க வேண்டியதில்லை. ஆனால் அந்த உணர்வுகளின் தாக்கத்தை புரிந்துகொள்ள நாம் அந்த நிகழ்வுகளை ஆராய வேண்டும். அப்படியின்றி ஒரு நிகழ்வைக் கண்டு அது தவறு அவர்களை அடி, உதை, தூக்கிலிடு என்பதாலாயோ அல்லது சட்டதிட்டங்கள் போட்டதாலோ இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமலிருக்கும் என்பதற்கு யார் பொறுப்பு!. உண்மைதனை அலசி ஆராயவேண்டும். ஒர் நிகழ்வு வெளியான அடுத்த நாளே மற்றொன்று நடப்பதே இதற்கு சாட்சி. இயற்கையான பால் உணர்வுகளை மதிக்க வேண்டும். சட்டங்கள் எல்லோருக்கும் பொது. அது இந்த சமுதாயத்தில் பாதுகாப்பும் தவறு செய்பவர்களை தண்டிக்கவும் இதுபோன்று இனி நடக்கக்கூடாது என்பதற்காக மட்டுமே.

ஒர் சிறு பெண்ணுக்கு என்னவென்று அறியாத புரியாத நிலையில் நிகழ்வுகள் நடப்பது கொடுமையிலும் கொடுமை. இதுபோன்று சமுதாய கொடுமைகள் நடக்காமலிருக்க ஆரம்ப அடிப்படை உண்மைகளை தெளிந்து வளரும் சமுதாயம் ஆரோக்கியமாக வளர உரிய நடவடிக்கையாக இருக்க முடிவு எடுக்க வேண்டும். ஏதோ சமூக ஆர்வலர்கள் சொல்கின்றார்கள் என்பதற்காக ஏனோதானோவென்று அரசின் முடிவுகள் இருக்கக்கூடாது. இந்த வேகம் விவாத மேடைகளுடன் நின்று விடக்கூடாது. இயற்கையான பால் உணர்வுகளுக்கு தீர்வாக திட்டங்கள் அமைந்தால்தான் குற்றங்களின் போக்குகள் குறையும். காலப்போக்கில் அது மறைந்து குற்றங்களில்லா நிலை ஏற்பட வழிவகுக்கும்.

பாலியல் பலாத்காரம் என்பது இருபாலருக்குமே உரியது, வெளியில் தெரியாத நிலையில் எத்தனை பேர் என்ன நிலையில் இருக்கின்றார்கள் தெரியுமா! சொல்ல முடியா நிலையில் உணர்வுகளை அடக்கிவைத்த நிலையில் பலர். எந்த இனத்தவருக்கும் யாருக்கும் யாரும் ஆமோதிக்க வேண்டியதில்லை. ஆதரவு காட்ட சார்ந்திருக்க வேண்டியதில்லை. ஆண் ஆணாலும் பெண் ஆணாலும் அவர்களும் ஓர் ஆத்மா. இவ்வுலகின் வாழ்வியல் இன்பங்களை நுகர்ந்து அனுபவித்து ஆரோக்கியமுடன் சந்தோஷமாக வாழ உரிமையுள்ளவர்கள். இருபாலருக்கும் அந்த ஆனந்த சந்தோஷம் சரியாக குறைபாடியின்றி கிடைக்கின்றதா! என்பதை புரிந்த சமுதாய சீர்திருத்தம் ஏற்படவேண்டும். இந்த குறைபாடுகளின் வெளிப்பாடே நடக்கும் நிகழ்வுகளுக்கு காரிய காரணம்.
சட்டங்கள் அனைவருக்கும் பொது. சட்டங்கள் நிறைவேற்றினாலும் அது பயனுள்ளதாகவும் மீண்டும் உபயோகமின்றி போகாததாகவும் மாற்றமில்லாத நிலையானதாகவும் இருக்க வேண்டும். சிந்திக்க சிந்தனையாளர்களும் அறிஞர்களும் ஆன்மீகவாதிகளும் நிறைந்த புண்ணிய பூமி இது. எல்லா சமூக அமைப்புகளும் ஆர்வலர்களும் இந்நிலையை ஆய்ந்து நம் வரும்கால சமுதாயத்திற்கு ஓர் நல்ல வழியை தெரிவு செய்து முறைப்படுத்தி வழங்கி அந்த வருங்கால சமுதாயம் சந்தோஷமுடன் இயங்கிட உதவிடுங்கள் என அன்புடன் அழைக்கும்- குருஜி.

திங்கட்கிழமை, 06 April 2015 00:00

ஆனந்தபூக்கள்

Written by

ஆனந்தப் பூக்கள்!

வாழ்க்கையின் முழு சாரத்தையும் அப்படியே அனுபவிக்க நினைப்பது இளமை. அந்த ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதற்குறிய செயல்பாடுகள் வேண்டும். இளமையுடன் செயல்பாடுகள் இனைந்திருக்க வேண்டும். எண்ணங்கள் இளமையாக இருக்க வேண்டும். இளமை இனிமையானது. அதை பலர் தவறவிட்டு விடுகின்றனர். அது இளநீர் போன்றது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குமேல் இளநீர் தேங்காய் நீராகிவிடும். இளநீரின் சுவைவேறு. பயன்வேறு. தேங்காயின் நீர்வேறு சுவை. இளநீர் தேங்காய் நீராகும். தேங்காய் நீர் எப்போதும் இளநீராக முடியாது. இதைப்போன்றதே இளமையும். காலங்கடந்தபின் இளமையின் சுவையை அனுபவிக்காமல்விட்டு பின்னால் வருத்தமடைகின்றனர்.

எல்லா உயிர்களுக்கும் ஆசை உண்டு. ஆசை இனிமையானது. அது தேங்காயின் உள்ளே உள்ள இளநீர் போன்று சுவையானது. உலகின் ஆசைகளின் அடையாளம் இளநீர். அந்த நீர் தேங்காயின் மேல் உள்ள ஓடு உடையாது என நம்பிக் கொண்டிருக்கின்றது. ஆனால் காலப்போக்கில் அந்த ஓடு உடைபடும். காலம் அதிகமானால் நீர் வற்றி தேங்காய் கொப்பரையாக மாறி முதிர்ந்த நிலையை அடைந்துவிடும். அன்புள்ள ஆன்மாக்களே! இளநீர் போன்ற ஆசைகளால் நம் உடல் கொப்பரைத் தேங்காயைப்போல் உறுதியாகும் நிலையானதாகும் என எண்ணி மேலும் மேலும் ஆசைகளை வளர்த்துக் கொள்கின்றோம்!

எந்த நோக்கிலும் அந்த இளமை அவர்களுக்கு மீண்டும் கிடைக்காது. இழந்தது இழந்ததுதான். காலம் கடவுளின் ராகம். அவை வீணடிக்கப்பட்டால் திரும்பவும் கிடைக்காது. சமூகத்தின் மேல் பழி சொல்லி, அதனால் என்னால் முடிவு எடுக்க முடியவில்லை என கொள்ளக்கூடாது. உனக்கு, உன் ஆன்மாவிற்கு சரியென்று தோன்றினால் செயல்படு. இளமையின் ஆனந்தத்தை ருசிக்க முடியும் போதெல்லாம் ருசித்துவிடு.

ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று கழியும். வயதுக்கு ஏறுகிற சக்தியுண்டு. இறங்குகிற சக்தி கிடையாது. கழிந்தபின் வருத்தப்பட்டு ஒன்றும் பயனில்லை. எத்தனை வயது வாழ்ந்தான் என்பதில் பயனில்லை. என்ன செய்தான் என்பதுதான் கேள்வியாக வரும்.

அரசாங்கத்தில் வேலை செய்ய வயது வரம்பு வைத்துள்ளனர். அதை தாண்டிய ஒருவருக்கு அங்கு வேலை கிடைக்காது. அதைப் போன்றே இளமையில் அடைய வேண்டியதை அடைய வேண்டும்.

இளமையின் பருவங்களை அனுபவியாமல் விட்டு, மீதி பயணத்தில் யந்திரகணமாக அவசர அவசரமாக இழந்ததை அடைய வேண்டும் என்ற நினைப்பில், வாழ்வின் ருசியை அறியாமல், எதையும் புரியாமல் கண்டும், கேட்டும், உடுத்தும், உண்டும் நாட்களை கழித்து விட்டீர்களானால் எப்படி ஆனந்த வாழ்வு வாழமுடியும்.

நீங்கள் அழகாக இருந்தால் அதனால் இளமையாக இருக்கின்றீர்கள் என அர்த்தமில்லை. கண்களில் ஓர் பிரகாசம் இருக்க வேண்டும். பார்வையில் ஓர் துடிப்பு இருக்க வேண்டும். புண்ணகை முறுவல்ஒளி தவழவேண்டும். அகத்தின் அழகு முகத்தில் என்பது போன்றே இளமையின் மினுமினுப்பு முகத்தில் இருக்க வேண்டும்.

இளங்கன்று பயம் அறியாது என்பதற்கேற்ப முகத்தின் தோற்றம் கவலை, துக்கம், துயரம் போன்றவைகள் பற்றிய எண்ணங்களை பிரதிபலிப்பனவாக இருக்கக்கூடாது. ஒரு பந்தை வீசி எறிந்தால் அது எப்படி துள்ளிக் குதிக்கின்றதோ அதுபோன்ற துள்ளிக் குதிக்கும் எண்ண உணர்வுகள் வேண்டும் மனதிற்கு, அதுவே இளமையின் அடையாளம். ஆடி மகிழும் காலம். இப்போது என்ன வேண்டும் என்று இளமையைக் கேட்டால் எல்லாம் வேண்டும் என்று பதில் வரவேண்டும். அதுவே இளமை. இளமையான எண்ணங்களை உடையவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சுறுசுறுப்பிற்கு நீங்களும் இயங்கவேண்டும். மனம் சோர்வு அடையக்கூடாது.

வேதங்கள் சொல்லும் அறிவுரைகளை மனதில் வாங்கி புத்தி கெடாமல் காப்பாற்றிகொள்ளும் திறமையுடையது இளமை. பின்னாளில் அந்த திறமை உபயோகமாகும்.

இசைக்கருவியின் கம்பிகள் அதிக இறுக்கத்துடன் இருந்தால் கம்பிகள் அறுந்து விடும். தளர்வாக இருந்தாலும் இசை பிறவா. விறைப்புமின்றி தளர்வுமின்றி நடுநிலையில் இருந்தால் மட்டுமே இசை பிறக்கும். அது இளமையின் தன்மைகொண்டது. அதற்குத்தக்க நம் உடம்பும், உறுப்புகளும் ஒத்துழைக்க வேண்டும். எல்லோருடனும் அன்பு, நட்புடன் பழகவேண்டும். நீங்கள் பூவாகவோ, நாராகவோ, அல்லது நீங்கள் பழகும் நபர் பூவாகவோ, நாராகவோ இருக்கலாம். எப்படியிருப்பினும் பூவும் நாரும் சேர்ந்தால்தான் பூச்சரம், மாலை. ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மணம்-அது இயற்கை.

உங்களைவிட திறமைசாலிகளை சந்திக்கும்போது நமக்கு புத்திசாலித்தனம் இல்லை என வருத்தப்படாதீர்கள். அவர்களுடன் நட்புக்கரம் நீட்டி பழகுங்கள். ஓர்நாள் நீங்கள் பூவோடு சேர்ந்த நார்போல் மணம் பெறுவீர். ஏன் மணக்கும் மலராகக்கூட மாறிவிட வாய்ப்புண்டு. புதிய சிந்தனைகள் ஏற்பட்டு உங்கள் இளமை தூண்டப்பட்டு செயலாக்கம் நடைபெற்று வெற்றி காண்பீர்கள்.

எப்போதும் மலர்ந்தமுகம், இனியசொல், தெளிந்த சிந்தனை இவற்றோடு துடிப்புடன் இருப்பதே இளமையின் அடையாளங்களாகும். அதற்கு ஆத்மார்ந்த சந்தோஷத்தில் திகழ வேண்டும் அந்த இளமை.

அன்பை பெருக்குவதே வாழ்க்கை. அன்புகொள்வீர்! அனைவரிடமும் அன்பு கொள்வீர்! எல்ல உயிர்களிடத்திலும் அன்பு கொள்வீர்! தோன்றிய, பிறந்த எல்லா உயிர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமையுள்ளது, ஆகவே வாழ்விற்கு தேவையானவற்றைத் தேடும் உரிமையும், அடையும் உரிமையும் உள்ளது. இதைத் தடுப்பதும், மறுப்பதும் பாவமாகும். தடுத்து பாவச் செயல்களை செய்ய எந்த ஒர் ஆன்மாவும் விழையக்கூடாது. நிறம் கண்டு அன்பு வருவதில்லை. அழகு கண்டும் அன்பு வரக்கூடாது. சிகப்பாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும் எந்நிறத்தையுடையதாக இருந்தாலும், அழகாயிருந்தாலும், அழகின்றி இருந்தாலும் அது ஓர் உயிர். ஓர் ஆன்மா வாழும் உடம்பு. அதற்கு உரிய காலத்திற்கு வாழும் உரிமை உள்ளது அதில் தலையிட மற்ற ஆன்மாக்களுக்கு உரிமையில்லை. அதை அதன் போக்கில் செயல் படவிடுங்கள். அதன்மீது அன்பைக் காட்டுங்கள்.

நாம் செய்யும் செயலுக்கு அவர் என்ன சொல்வாரோ, இவர் என்ன சொல்வாரோ என்ற எண்ணங்களால், வெளி மனித உலக ஆக்கிரமிப்பால் நம்மால் விரைவில் முடிவு எடுத்து செயல்பட முடிவதில்லை. வெளிமனிதர்கள் எதையும் சொல்லலாம். ஆனால் செயல்பாடு, பாதிப்பு என வந்தால் அவர்கள் ஒதுங்குவர். அப்படியிருக்கும்போது நாம் ஏன் அவர்களை நினைத்து நம்மை குழப்பிக்கொள்ள வேண்டும்.

நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு நாமே எஜமான். அதனால் அடையும் பலாபலன் நம்முடையதே! ஒருமனித ஆன்மாவிற்கு உட்புற நிகழ்வுகள் நிகழ்ந்தால்தான் உண்மையான ஆனந்தம் உணரமுடியும்.

அது எல்லையற்ற உணர்வுகளுடையது. சூழ்நிலைக்கேற்ப நம்மை பதப்படுத்திக் கொள்வது உண்மையான ஆனந்தம். உலகத்தின் இன்பங்களை எல்லாம் நுகர்ந்து அனுபவித்து ஆனந்தப்பட நினைக்கும் ஆன்மாக்களே! தனு என்ற உடல், கரணம் என்ற உடற்கருவிகள், புவனம் என்ற அந்தந்த ஆத்மாக்கள் வாழும் உலகம், போகம் என்ற அனுபவம் என இந்த நான்கும் குறைவின்றி ஓர் ஆன்மாவின் உடலின் உயிருக்கு கிடைத்தால்தான் அந்த ஆன்மா ஆனந்தப் படமுடியும்.

இந்த உடல் மாயையானது, என்றும் சாசுவதமானது அல்ல. கொப்பரை போலாகாது. உண்மையை உணர்ந்துகொள். எள்ளின் உள்ளே எண்ணெய்யும், பசுவின் மடியில் பாலும் உண்டு எனச் சொல்வதால் எண்ணெய்யும், பாலும் கிடைத்துவிடாது. அதற்கான முயற்சி வேண்டும். வெறும் முயற்சி மட்டும் போதாது. மனம் உடல் இரண்டும் இனைந்து முயற்சிக்க வேண்டும். மனதில் எண்ணி உடல் ஒத்துழைக்காவிடில் அது உபயோகமில்லை. வாழ்வில் கிடைப்பதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் பழக்கம் வேண்டும். உங்களுக்கு கிடைத்ததை நீங்கள் அதிருப்தியடைந்து ஒதுக்கிவிட்டு வேறுஒன்றை நாடினால், இதன் சுவை, இனிமை தெரியாமல் போய்விடும். ஒருவேளை அடுத்தமுறை இதுகூட உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். எனவே கிடைத்ததை நுகர்ந்து அனுபவியுங்கள். பின் வேண்டுவனவற்றிற்காக முயற்சியுங்கள். வாழ்க்கை வளம் பெறும்.

இந்த உலகை எட்டிப்பார்க்கும் எல்லா உயிர்களும், தங்கள் கருவிலிருந்து, கூட்டிலிருந்து முயற்சி செய்து உந்திதான் வெளிவருகின்றது. வெளிவரும்பாதை சிறியது என்றாலும் அங்கிருந்து வெளிஉலகைக்காண முயற்சி செய்து உந்தி வெளியே வருவதால்தான் அதனிடம் தன்னம்பிக்கை ஏற்படுகின்றது. முயற்சித்தால் தன்னால் எதுவும் முடியும் என நம்புகின்றது. அவ்வாறு முயற்சிக்காத உயிர்கள் அப்படியே இறந்து விடுகின்றது. முழு வளர்ச்சி, முதிர்வு அடைந்த பூரண வளர்ச்சிக்குப்பின் எந்த உயிருடன் கூடிய உடலும் தான் வளர்ந்த கருவுக்குள் முடங்கி கிடப்பதில்லை. முட்டை ஓட்டை முட்டி குஞ்சுகளும், கூட்டை கிழித்து பட்டாம் பூச்சிகளும், ஏன் நாமும், கரு முழு உருவானதும் உந்தி முயற்சி செய்துதான் வெளிப்படுகிறோமோ அன்றி உள்ளேயே அடங்கி கிடப்பதில்லை. இந்த உந்துதல் முயற்சிதான் நமக்கு வாழ்நாள் பயணத்தில் அதிகம் தேவைப்படுகின்றது. பலர் அதை மறந்துவிடுகின்றனர். எனவே எதற்கும் முயற்சி தேவை. சில விஷயங்கள் நமக்கு அதிசயமாயிருக்கும். நமதுவாழ்வின் நோக்கம் என்ன! நாம் ஏன் இங்கு வந்தோம்! பிறந்தோம்! நமது வாழ்வின் லட்சியம், குறிக்கோள் என்ன! நாம் காலத்தை விரயம் செய்யக்கூடாது. மற்றவர்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள் என ஒவ்வொன்றிற்கும் பார்த்து பார்த்து நம் செயல்பாடுகள் இருக்கக் கூடாது, நாமே முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

நாம் கேள்விப் படுவதையெல்லாம் ஒருகாதின் வழிவாங்கி மற்றொரு காதின்வழி விட்டும் விடும் பழக்கத்தை மேற்கொள்ளும் மந்த புத்திக்காரராக இருக்கக்கூடாது. நாம் கேட்டவைகளைப் பற்றி தொடர்ந்து அளவில்லாமல் பேசும் மத்திம புத்திக்காரராகவும் இருக்கக்கூடாது. நாம் கண்டவை கேட்டவைகளை மனதில் இருத்தி தூய்மையுடன் ஜீரணித்து உங்களுக்கு பயன்கள் தருமாறு ஆக்கும் ஞானமுடன்கூடிய உத்தமபுத்திக்காரராக இருத்தல் வேண்டும்.

வாழ்க்கையில் ஆனந்தமாக வாழத்தெரிந்து கொள்ளவேண்டும். வாழ எப்போதும் முயற்சி செய்யவேண்டும். அனுபவத்தால் எதுஎது ஆனந்தம் அளிக்கக்கூடியது, எது துயரம் அளிக்கக்கூடியது என கண்டு கொள்ளலாம். “முயற்சி திருவினையாக்கும்” முயற்சிக்காவிடில் ஏதும் நிகழாது. முயற்சியின்றி வாழ்வது மனிதனின் மிகப்பெரிய குற்றமாகும். தானே நடக்கும், விதிப்படி நடக்கும் என்று சும்மா இருப்பது வீண். உனக்கு கிடைத்திருக்கும் வாழ்நாளை சுவைக்காமல், அனுபவிக்காமல் சோம்பேறியாய் இருந்து வாழ்நாளை வீணடிப்பதில் என்ன பயன்? ‘காலம் பொன் போன்றது’ என்ற பழமொழிக்கு ஏற்ப கிடைக்கும் சிறிய நேரத்தைக்கூட வீணடிக்காமல் பயன் படுத்துங்கள்.

அதிர்ஷ்டம் என்பது நம்மை நோக்கி வரும் காலத்தை சரியான முறையில் பயன் படுத்துதலே!. ஒரு கண்ணாடி ஜாடியில் கொஞ்சம் மணலைவிட்டு, பின் கற்களைப் போட்டு பின் நீர் ஊற்றினால் அது நிரம்பிவிடும். ஆனால் கொஞ்சம் யோசனை செய்து செயல்பட்டால் இன்னும் கொஞ்சம் மணல், கற்கள், நீர் ஆகியவைகளை அந்த ஜாடி ஏற்றுக்கொள்ளும் என்பதுதான் சிறப்பு. இது எப்படி சாத்தியமாகும்.

முதலில் பெரியகற்களையும் பின் சிறியகற்களையும் அதன்பின் மணலைபோட்டு குலுக்கினால் குறுகிய இடைவெளிகளில் மணல் நிரம்பும். பின் நீர் ஊற்றினால் மணலும் கற்களும் முடிந்த அளவு நீர்கொள்ளும். இப்போது அளவிட்டால் முதலில் செய்ததைவிட இரண்டாம் முறையில் மணல், நீர், கற்கள் அதிகம் பிடித்திருக்கும். இதன்மூலம் ஓர் உண்மையை புரிந்து கொள்ளவேண்டும்.

நம் உள்ளே தோன்றும் எண்ணங்களை வரிசைப்படுத்தி அதில் முதலில் எதை செய்வது என முறைப்படுத்தி தீர்மானத்துடன் செயல்பட்டால், நம் எண்ணங்கள் செயலாக்கத்தில் சிறப்பான வெற்றியை காணும். அது நமக்கு மனநிறைவு தந்து மகிழ்ச்சிதரும். மகிழ்ச்சியை அடைவதுதான் நம் வாழ்வின் குறிக்கோள். ஆகவே கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தி நன்முறையில் செயல்பட்டு வெற்றி கொண்டு மகிழ்வது உங்களின் செயல்களில்.

கடந்த இரவு மீண்டும் திரும்புவதில்லை. வேறு இரவு வரும், ஆனால் அது கடந்த இரவாக இருக்காது, அமையாது. ஓடும் நதிகள் உற்பத்தியான இடத்தை சேர்வதேயில்லை. எங்கு புறப்பட்டாலும், எப்படிச் சென்றாலும் அது சேருமிடம் கடல்! நதியின்பயணம் வாழ்க்கை பயணத்திற்கு உதாரணமாகும். கடந்த இரவு, கடலில் சேர்ந்த நீர் இவை பற்றி சிந்தியாதே! எங்கு எதை நோக்கி பயணம் செய்கின்றாய்! அதன் பலனை அடைய முயற்சி செய். நீ முயற்சிக்காவிடினும் காலத்தின் முடிவு பதில் ஒன்றுதான். சூரிய உதயம் கண்டால் இன்னொருநாள் குதூகலமாக இருக்கலாம் என்றும், சூரிய அஸ்தமனத்தில் இன்று ஒருநாள் போய்விட்டது, நாளைப் பார்க்கலாம் என்றும் கணக்குப் போட்டு நாட்களைத் தள்ளாதே! இருக்கும் நாட்கள் உனக்குடையது. காலம் பொன் போன்றது. நீ இழந்த நாட்களும் நேரமும் திருப்ப கிடைக்காது. இழந்தது இழந்ததுதான். இது தான் கீதையில் சொல்லப் படுகின்றது. செயலை செய், பலனை கர்மத்திடம் விட்டுவிடு.

எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு. செய்வது என தீர்மானித்து விட்டால், அதை செய்துவிடு. யாருக்கு, எதற்கு, ஏன் என்றெல்லாம் சிந்திக்காதே! அதேசமயம் எப்படிப் பட்டவனுக்கு செய்கிறாய் என்று கவனிக்கவும். அதாவது உன் உதவி உண்மையாக வேண்டுபவனுக்கு, தேவைப் படுகிறவனுக்கு செய்யப்பட வேண்டும். நீ செய்யும் நன்மை ஓர் நிலையில் ஒரு காலத்தில் உனக்கு மிகுந்த பலனோடு உன்னை வந்தடையும். அல்லது அது உன் சந்ததிக்கு பயனாகும்.செய்ய முடிந்த ஒன்றை செய்ய விரும்பாதவன் சமூகத்துரோகி. செய்ய விரும்பியும் செய்ய முடியாதவர்கள் பரிதாபத்திற்கு உறியவர்கள். இப்படி முடியாதவனாகவும், விரும்பாதவனாகவும் இருந்து உனது கர்மத்தை மேலும் மேலும் அதிகப்படுத்திக் கொள்ளாதே! இல்லாத ஒன்றை செய்யவில்லை, முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்கள் பயணத்தில் உங்களால் முடியக் கூடிய ஒன்றை செய்யாமல் விட்டு விடாதீர்கள். அது துயரமான மிகமிக துயரமான ஒன்று!

உற்பத்தியாகி காய்க்கும்போது ஓர் சுவை, கனியாயிருக்கும் போது ஓர் சுவை. சுவை கண்டவர் சுவைக்காவிட்டாலும் காலத்தின் கனிவால் கனி கனிந்து பருவம் கடந்து அழுகியநிலை ஏற்பட்டாலும் அதுவும் பல உயிர்களுக்கு உணவாகி தான் தேன்றிய காரண கர்மத்தை பூர்த்தி செய்கின்றது. ஒருவர் கைபிடித்து நடந்த நீ, ஓர்நாள் தனியாய் நடக்கின்றாய்! தனியாய் நடக்கும் நீ வேறொருவர் கைபிடித்து அழைத்து செல்கின்றாய்! ஆனல் மீண்டும் உன்னை ஒருவர் கைத்தாங்கலாக அழைத்து செல்லும் நிலை உருவாகின்றது. இது காலத்தின் சூழ்ச்சி! கட்டாய மற்றங்கள்! இது இயற்கையின் நியதி! புரிந்து கொள்வீர்! அந்தந்த காலத்திற்கேற்ப உங்கள் கடமைதனை செய்யுங்கள்! பலனை எதிர்பாராதீர்கள்! செடிகள், மரங்கள் நடுகின்றோம். இதில் எத்தனை நட்டவர்களுக்கு பயன் தருகின்றது. வாரிசுகளுக்கு, உறவினர்களுக்கு என்ன பயன் தருகின்றது. ஓர் சூழலில் முற்றிலும் சம்பந்தப்படாத வேறு நபர்கள் அதை ருசித்து பலன்களை அனுபவிக்கின்றனர். இது நியதி. சிந்தனை கொள்ளுங்கள்.

இவ்வுலகில் உள்ள எல்லாம், உனக்குத் தரப்பட்ட எல்லாம் உன்னுடையது அல்ல! வாழ்க்கைப் பயணத்தில் நீ சந்தோஷத்தைக்காண உன் உபயோகத்திற்கு கொடுக்கப்பட்ட ஒன்று. வாழ்வின் முடிவில் அதை உன்னுடன் சேர்த்து எடுத்து செல்ல முடியாது. உன் பயணத்தின் இடையில் கிடைத்த அதை நீ முழுமையாக அன்பு காட்டி ஆனந்தப்பட்டு, சந்தோஷிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. வாழ்க்கையை சுவைத்து மகிழுங்கள். உங்கள் கர்மத்தின் பலன்படி, நடக்கும் நிகழ்வுகளுக்கேற்ப உங்களுக்கு வரவேண்டியது வந்து சேரும். நீங்கள் அடைவது என நிர்ணயக்கப்பட்டதை அடைந்தே தீருவீர்கள்.

ஏ மானிடமே! உன் விருப்பத்திற்கு ஆண் அல்லது பெண் ஆக பிறக்க வில்லை. நீ இறப்பதும் உன் எண்ணத்திற்கு இல்லை. எதுவும் உன் முடிவில் இல்லை. இடைப்பட்ட காலத்தில் வாழ இயற்கை தோற்றுவித்தது இன்ப துன்பங்களுடன் கூடிய பாலின வாழ்க்கை. அதில் கவர்ச்சியுண்டு. எங்கே! எது! எப்படி! எப்போது! யார், யாருக்குக் கிடைக்க வேண்டுமோ! அங்கே! அது! அப்படி! அவரவருக்கு கிடைக்கும்! அது மட்டுமே கிடைக்கும்! ஆனால் கண்டிப்பாகக் கிடைக்கும்! இது கர்ம செயல் பலன்! ஒரு மரம் பூ பூத்து, காய்த்து, கனியாகுமுன்பே அந்த தன்மைகள் மரத்தில், செடியில் ஒளிந்திருப்பது போலவே, மனிதன் பிறக்கும்போதே அவன் அனுபவிப்பதற்கு, முன்பு செய்த முற்பிறப்பு வினைகள் மறைந்து கிடக்கின்றன. அதை வாழ்நாளில் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது நியதி. உணர்ந்து புரிந்து நடந்தால் ஆனந்தம் உள்ளத்தில் பூத்து ஆனந்த பூக்களாய் வலம் வரும் ஆனந்தம்!!-அன்புடன் குருஜி
@#@#@#@#@#@

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3461189
All
3461189
Your IP: 54.227.6.156
2018-01-18 07:45

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...