குருஜி - வைரவாக்கியம்

சந்திரனைப்போல் உங்கள் அருகிலிருக்கும் உயிர்களை அன்பு மழையில் நீராட்டுங்கள்.

குருஜி

செவ்வாய்க்கிழமை, 23 January 2018 20:21

சதுரகிரி அதிசயம்!

சதுரகிரி அதிசயம்!


நோய் தீர்க்கும் மலை:
சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
சதுரகிரி தல வரலாறு :
சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.
சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.
தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை சஞ்சீவி மலை' என்பர்.
சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்
பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பணசாமி' கோயில் உள்ளது.
சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.
இருப்பிடம்
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள். திறக்கும் நேரம்: காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.
மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.
சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.
கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.
இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
இரட்டை லிங்கம்
ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.
""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும், 'என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.
பிலாவடி கருப்பு
வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.
வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பண்ணசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.
பெரிய மகாலிங்கம்
நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
தவசிப்பாறை
மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது. தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக்கிரககல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.
சுந்தரமூர்த்தி
கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.
பார்வதி பூஜித்த லிங்கம்
சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.
லிங்க வடிவ அம்பிகை
சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.
சந்திர தீர்த்தம்
சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.
கெளண்டின்னிய தீர்த்தம்.
சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம். கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு.
சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.
இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும். இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.
'திருமஞ்சனப் பொய்கை'
இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.
பிரம்மதீர்த்தம்'
காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது.
இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.
பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.
அபூர்வ மூலிகைகள் :
இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.
பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
உதகநீர்
தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்களின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும். சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில்
சுணங்க விருட்சம்
என்னும் மரம் உள்ளது.இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
'ஏர் அழிஞ்ச மரம்
'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு. இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும். இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.
கனையெருமை விருட்சம்
சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.
மதி மயக்கி வனம்.
எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.
இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும். உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் - நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருக்கின்றனர். சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சதுரகிரி சித்தர்களின் பூமியாக உள்ளது.
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து 15 கிலோ மீட்டர் பயணித்தால் தாணிப்பாறை என்ற மலையடிவாரப்பகுதி உள்ளது. இதுதான் சதுரகிரியின் நுழைவாசல். இங்கிருந்து 5 மைல்கள் தூரம் அடர்ந்த காட்டுப்பாதையில்(சாலை வசதி கிடையாது. பாதை கரடு முரடானது) பயணித்தால் சதுரகிரியை அடையலாம்.
சதுரகிரி உச்சிக்கு செல்ல மூன்று பாதைகள் இருந்தாலும் தாணிப்பாறை பாதையே பக்தர்களுக்கு உகந்தது. எனினும் இவ்வழியே பயணப்படுவோர் பருவகாலச் சூழ்நிலையை அறிந்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்வது நல்லது. மலைப்பாதையின் குறுக்கே சில ஆறுகளில் மழைக் காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். எனவே மிகவும் கவனமாக செல்ல வேண்டும். கோடை காலம் தவிர மற்ற சூழ்நிலைகளில் மலைப்பகுதியில் குடிநீருக்கு அதிகம் சிரமம் இருக்காது எனினும் குடிநீர் கொண்டு செல்வது நல்லது. நான்கு அல்லது ஐந்து மலைகளை கடந்தே சதுரகிரியை அடையமுடியும். எனவே பாதையில் ஏற்ற இறக்கம் இருக்கும். நாவல் மரம், பலா மரம், நெல்லி மரம், ஒரு யானையே ஒளிந்துகொள்ளலாம் போன்ற உடல் பருத்த பெருமரங்கள், வகைவகையான மூலிகைச் செடிகொடிகள், சித்தர்கள் வசித்த குகைகள், ஆங்காங்கே சலசலத்து ஓடும் ஓடைகள் இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்கள் நிறைந்த இடம். சதுரகிரியில் எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை அமைதியாக்கலாம்

$$$$$

செவ்வாய்க்கிழமை, 23 January 2018 09:10

கோயில் கருவறை அதிசயம்...!

கோயில் கருவறை அதிசயம்!


மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது.
இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது.
இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள்.
நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன. வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர்.
பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க விரவிபரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது.
இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தை கடைபிடித்தனர். எல்லா ஆலயங்களிலும் கருவறையானது, வாசல் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும். கருவறை அமைப்பை 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை
1.அதிஷ்டானம்,
2. பாதம்,
3. மஞ்சம்,
4. கண்டம்,
5. பண்டிகை,
6. ஸ்தூபி எனப்படும்.
இதில் மூலவர் சிலை நிறுவப்படும் பகுதியை அதிஷ்டானம் என்பார்கள். பீடம் என்றும் சொல்வதுண்டு. கருவறையின் வெளிப்புறச்சுவரை கோஷ்டம் என்பார்கள். அவற்றில் பல்வேறு கடவுள் உருவங்கள் இடம் பெற்றிருக்கும். ஒரு கோவில் எந்த மூர்த்திக்கு உரியதோ, அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.
கருவறை பகுதி சதுரம், வட்டம், முக்கோணம் எனும் 3 வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன. இதில் சதுர அமைப்பு தேவ உலகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் மண்ணுலகத்துடனும் தொடர்புடையதாக கருதப்படுகின்றன. தமிழ்நாட்டில் முக்கோண அமைப்புடன் ஆலய கருவறை அமைப்பதில்லை. வட்ட வடிவ கருவறைகளை புத்த ஸ்தூபிகளிலும் பள்ளிப்படை கோயில்களிலும் மட்டுமே காணமுடியும்.
என்றாலும் மதுரை அழகர்கோவிலில் உள்ள ஆலயக் கருவறை வட்ட வடிவில் இருப்பது ஆச்சரியமானது. மற்றபடி தமிழக ஆலயங்களில் கருவறை சமசதுர வடிவில்தான் இருக்கும். கருவறை சுற்றுப்பகுதி ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும். தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் கருவறை வெளிப்பகுதி ‘‘கஜப்ருஷ்டம்’’ வடிவில் இருக்கும்.
கஜம் என்றால் யானை, ப்ருஷ்டம் என்றால் பின்பகுதி என்று பொருள். ஆக கருவறை வெளிப்புற சுவர் யானையின் பின் பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்று அர்த்தம். இத்தகைய அமைப்பை ‘‘தூங்கானை மாடக்கோவில்’’ என்பார்கள். அதாவது ஒரு யானை முன்னங்கால்களை முன்புறம் நீட்டியும், பின்னங்கால்களை பின்புறம் மடித்தும் படுத்திருப்பதைப் போன்று காணப்படும்.
இத்தகைய கருவறையை நம் முன்னோர்கள் சாதாரணமாக அமைத்து விடவில்லை. கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் தானியங்களை விதைப்பார்கள். அந்த தானியங்கள் மூன்று நாட்களில் முளைத்து விட்டால் உத்தமமான இடம். 5 நாட்களில் முளைத்தால் மத்திமம். 5 நாட்களுக்கு பிறகு அதமம். மத்திமம், அதமமான இடங்களில் கருவறை கட்ட மாட்டார்கள். உத்தமமான இடத்தில் மட்டுமே கருவறையை அமைப்பார்கள்.
இது பிரபஞ்ச சக்திகளை ஒன்று திரட்டி தரும் தலமாக மாறும் என்று நம் மூதாதையர்கள் கணித்துதான் கோவில்களையும் கருவறைகளையும் கட்டினார்கள். கருவறைக்குள் வைரம், வைடூரியம், தகடுகள், கருங்கற்கள், சுட்ட கற்கள், ஆற்று மணல் போன்றவற்றை போட்டு நிரப்பும் வழக்கமும் இருந்தது.
சுண்ணாம்பு, கடுக்காய், தானிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து அரைத்து பூசி கருவறையை உருவாக்குவதை கர்ப்பக கிரக லட்சணம் என்றனர். கர்ப்பக்கிரக சதுர அளவு 1 தண்டம் எனப்படும். இதன் அடிப்படையில்தான் ஆலயத்தின் மற்ற பகுதி அமைப்புகள் இருக்கும். உள்பிரகாரம் ஒரு தண்ட அளவு விஸ்தாரத்துடனும், இரண்டாம் பிரகாரம் இரண்டு தண்ட விஸ்தாரத்துடனும், மூன்றாம் பிரகாரம் 4 தண்ட விஸ்தார அளவுடனும், நான்காம் பிரகாரம் 7 தண்ட விஸ்தார அளவுடனும் இருத்தல் வேண்டும்.
வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் ஆலய கருவறை ஓங்கார வடிவத்துடன் இருக்கிறது. இதயம் போன்றது.
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய கருவறை அமைப்பு ஆச்சரியப்படத்தக்கது. சந்திரகாந்த கல்லால் உருவான இந்த கருவறை வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்கும். இப்படி பல சூட்சமங்கள் கொண்ட கருவறையை நமது முன்னோர்கள் சற்று இருட்டாக வைத்தனர்.
அதிலும் ஒரு அறிவியல் பின்னணி உள்ளது. கருவறை விமான கலசம் மூலம் சூரிய கதிர்களின் அலை, மூலவர் சிலைக்கு கடத்தப்படும். அதே சமயம் சிலைக்கு அடியில் உள்ள யந்திரம் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களை மூலவர் சிலைக்கு கடத்தும். இதனால் கருவறையில் இறை ஆற்றல்கள் அனைத்தும் ஒன்று திரண்டு நிரம்பியிருக்கும்.
கருவறை சற்று இருட்டாக இருந்தால்தான் அந்த இறை ஆற்றல்கள் ஆலயத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவும். இந்த விஞ்ஞான உண்மையை நம் முன்னோர்கள் அறிந்திருந்ததால்தான் அவர்கள் ஆலய கருவறையை சற்று இருளாக இருக்கும்படி செய்தனர். அது மட்டுமின்றி அந்த இறை ஆற்றல்களைப் பெற தினமும் ஆலயங்களுக்கு செல்ல வற்புறுத்தினார்கள். கருவறையில் ஒரே ஒரு விளக்கு தொங்க விட்டிருப்பார்கள். அல்லது விக்கிரகத்துக்கு பின்னால் ஒரு செயற்கை ஒளி வட்டத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். இவை தான் கருவறையில் உள்ள இறை ஆற்றல்களை வெளிப்பக்கத்துக்கு எகிற செய்கிறது.
தினம், தினம் இந்த இறை ஆற்றல்கள் திரண்டு வெளி வருகிறது. அதனால்தான் கருவறையில் பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம், குங்குமம், விபூதி, எண்ணை என எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தாலும் அவை நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. அதற்கு பதில் கருவறையில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக மாறுகிறது.
கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும். திரை விலக்கப்பட்டு தீபம் காட்டப்பட்டதும், அந்த ஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும். இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.
கருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கண்டுபிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர். ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.
பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம். இந்த காந்த அலைகள்தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன் ‘‘வயர்லஸ்’’ தொடர்பு போல இணைக்கின்றன. எனவே ‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’ பெற கருவறை வழிபாடு மிக, மிக முக்கியமானது.

$$$$$

செவ்வாய்க்கிழமை, 23 January 2018 04:43

பெரிய கோவில்- அதிசயம் !

 பெரிய கோவில்- அதிசயம் !

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.
தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..
பெரிய கோயில் அளவுகோல்...
எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.
தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.
இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்
1.2 மீ * 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ * 0.6 * 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ * 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.
சாரங்களின் அமைப்பு
கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம்  அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள், நேர்ச்சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.
மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதது. !!

&&&&&

வியாழக்கிழமை, 11 January 2018 11:19

இறைவனை உணர்வது எப்படி!

இறைவனை உணர்வது எப்படி!

கடவுள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருப்பவர். உன்னுள்ளேயும் இருக்கின்றார் என்று தான் சொன்னதை புரிந்து கொள்ள இயலாத சீடனுக்கு விளக்கங்கள் எதைச் சொல்லியும் புரியவைக்க முடியவில்லை ஆதலால் தன் ஞானக் குருவிடம் அந்த சீடனை அனுப்பி வைத்தார் குரு. குருவின் குருவிடம் சென்ற சீடன் கடவுளைப் பற்றிய சந்தேகங்களை அறிந்து கொள்ள என்னை என் குருநாதர் அனுப்பிவைத்தார் என்றான்.
குருவின் குரு அவனிடம் தண்ணீரில் இருக்கும் மீனுக்கு பல நாட்களாக தாகம் தீரவில்லை ஏன் என்பதுபற்றி உனக்குத் தெரியுமா என்றார்.
மீன் தன்னைச் சுற்றி இருக்கும் நீரைக் குடிக்க வேண்டியதுதானே என்றான். சீடன்.
குருவின் குரு சொன்னார். உன்னை சுற்றியுள்ள எல்லாவற்றிலும் இறைவன் இருக்கின்றார். ஏன் உன்னுள்ளேயும் இருக்கின்றார். தண்ணீரிலே உள்ள மீனுக்கு தன்னைச் சுற்றி நீர் இருப்பது தெரியாததுபோல உன்னைச் சுற்றியிருக்கும் இறைவனை அறிந்து கொள்ள முடியவில்லை உன்னால். கடவுளை உணர நீ முயற்சிக்க வேண்டும். உலக ஆசைகளைத் திசை திருப்பி கடவுளின்மேல் செலுத்து. உலக விஷயங்கள்மேல் இருக்கும் எண்ணத்தை இறைவன்மேல் திருப்பு நீ கடவுளை உணர்வாய் என்று கூறி ஆசி புரிந்தார்.

######

திங்கட்கிழமை, 08 January 2018 04:13

இறைமீது குற்றம்!

இறைமீது குற்றம்!

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை பூர்வ ஜென்ம பலனால் பார்த்து களித்த ஓர் உயிர் உடல் இறைவனிடம் ஓர் சந்தேகத்தை கேட்டது. உலக படைப்பில் ஏழை. பணக்காரன் இல்லை என்று சொல்லிவிட்டு உன்னை தரிசிப்பதற்கு கட்டணத்தை வைத்திருப்பது நியாமா என்றான்!
புன்னகைத்த இறைவன், தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று சொல்லியும் உலக உயிர்கள் அதன் படி நடப்பது இல்லை. மேலும் அவர்களை பாதுகாக்காமல் தனி இடத்தில் விட்டு விடுகின்றீர்கள். தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன் என்றேன். அதையும் நம்பவில்லை. உலக உயிர்களை நேசித்து பசியாற்றுங்கள் என்றேன். உற்றாருக்குகூட உதவ மறுக்கின்றீகள் அன்பே சிவம் என்றேன். அன்பையே மறந்து விட்டீர்கள். என்னை தரிசிப்பதற்கு கட்டணத்தை ஏற்படுத்திய நீங்கள் உங்கள் தவறை மறைக்க எல்லாவற்றிற்கும் கர்ம பலன் என்று சொல்லி என்னை குறை சொல்வதை பழக்கமாக்கிக் கொண்டீர்கள் என்றார்.
உணர்வு பெற்று இறையை வணங்கினான் காட்சி கண்டவன். மற்ற உயிர்கள்மேல் குற்றம் குறை காண்பதைவிட்டு எல்லா உயிர்களிடமும் அன்புடன் நேசம்காட்டி மூத்தோர்களை மதித்து எழியோருக்கு உதவி செய்து நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை வழிபடுதல் சிறப்பு என்பதை புரிந்து செயல் பட உறுதி கொண்டான்.

######

வியாழக்கிழமை, 21 December 2017 16:11

அவர் சொன்னார்! இவர் சொன்னர்!

அவர் சொன்னார்! இவர் சொன்னர்!

சிற்பி ஒருவர் தன் சீடனிடம் களி மண்னால் ஆன சிலை ஒன்றைச் செய்து வரச் சொன்னார். சிலை செய்வதற்கான களிமண்ணைத் தேடி இறுதியில் ஒரு தோட்டத்தில் கண்டு பிடித்தான். அந்த விவசயிடம் சிலை செய்ய களிமண் வேண்டுமென்று கேட்க விவசாயி சிலையை என் தோட்டத்திலேயே நீ செய்வதானால் நான் தர சம்மதிக்கின்றேன் என்றான். குருவின் அனுமதி வாங்கி அந்த தோட்டத்திலேயே சிலை செய்ய முயற்சித்தான்.
களிமண்ணை எடுத்து நன்கு பிசைய ஆரம்பித்தான். அதைப் பர்த்துக் கொண்டிருந்த விவசாயி இவ்வளவு இறுக்கமாக இல்லாமல் கொஞ்சம் நீர்விட்டு இளக்கமாகப் பிணைந்து எப்படி மிதிக்க வேண்டும் என்றும் ஆலோசனை சொன்னான். பின்னர் மண்ணைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிலை செய்ய முயற்சித்தான். விவசயி கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எப்போது செய்து முடிப்பது நிறைய எடுத்து அப்பி பின் சரி செய் என்றார். அதன் படி செய்தபோது நிறைய இளகிய மண் பாரம் தாங்காமல் சரிந்து சரிந்து விழ்ந்தது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து முடியாமல் போகவே களைப்படைந்தான்.
சீடன் எவ்வாறு சிலை செய்கின்றான் என்பதைப் பார்க்க வந்த சிற்பி தன் சீடனுக்கு விவசாயி ஆலோசனைகள் வழங்குவதால் சீடன் தன் செயல் முறைகளை அடிக்கடி விவசாயின் ஆலோசனைக்கேற்ப மாற்றிக் கொண்டிருப்பது கண்டார். விவசாயிடம் நீங்கள் களிமண் சிற்பங்களைச் செய்து இருக்கின்றீர்களா என்றார். நான் சிலைகளைச் செய்ததில்லை. ஆனால் களிமண்ணை எப்படிப் பக்குவப் படுத்துவது என்பது தெரியும் என்றார்.
சிற்பி சீடனிடம் நீ சிலை செய்ய வந்தயா! விவசாயம் கற்றுக் கொள்ள வந்தாயா என்றார். சிற்பக் கலையைக் கற்கவே விரும்புகின்றேன் என்றான், சீடன். அப்படியானால் நான் சொல்லிக் கொடுத்தபடி செய்யாமல் ஏன் இவர்சொல்லியபடி செய்து கொண்டிருக்கின்றாய் என்றார். இவருக்கு களிமண்ணைப் பற்றி பல விபரங்கள் தெரிந்திருப்பதால் அவர் சொன்னபடி செய்தேன் என்றான். அவருக்கு களிமண்ணைப் பற்றிய விஷயங்கள் தெரிந்திருக்கலாம். அவைகள் விவசாயம் பண்ண உதவியாய் இருக்கும். அந்த விஷயங்களை வைத்து சிற்பம் செய்ய முடியாது. களிமண்ணில் சிற்பம் செய்யும் முறைவேறு. உனக்கு கற்பித்தபடி செய்து சிலையை முடி என்றார் சிற்பி.
அவர் சொன்னார்! இவர் சொன்னர் என்று சிலர் சொல்வதையெல்லாம் கேட்டு உங்கள் முறைகளை தேவையின்றி மாற்றி அவதியுறாதிர்கள். எல்லா விஷயங்களுக்கும் வழிகாட்ட ஆலோசனை சொல்ல பலர் இருப்பர். உங்கள் செயலுக்கு யார் சரியான வழிகாட்டி என்று அறிந்து அதன்படி செயல் படுங்கள்.

######

வியாழக்கிழமை, 21 December 2017 05:40

சேருமிடம்சேர்! நல்லோர் நட்பு!

சேருமிடம்சேர்! நல்லோர் நட்பு!

காட்டில் கிளி ஒன்று மரப்பொந்தில் கூடு அமைத்திருந்தது. அதில் முட்டையிட்டு பாதுகாத்து வந்தது. வளர்ச்சியடைந்த முட்டையை உடைத்துக் கொண்டு வெளியே வந்த குஞ்சு மரத்திலிருந்து கீழே விழுந்தது. அந்தப் பகுதிக்கு வந்த வேட்டைக்காரன் அந்த கிளிக்குஞ்சைப் பார்த்து அதை தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்று வளர்த்து வந்தான். காட்டில் பர்ணசாலை அமைத்து தவம் புரிந்தவந்த முனிவர் வரும் வழியில் அந்த மரத்திலிருந்து இன்னொரு கிளிக்குஞ்சு ஓட்டை உடைத்து வெளிவந்திருந்தது. மரத்தின் கீழ் இருக்கும் கிளிக்குஞ்சை பார்த்து அதை எடுத்துச் என்று வளர்த்து வந்தார். வேடனும் முனிவரும் அந்த கிளிக் குஞ்சுகளுக்குப் பேசவும் கற்றுக் கொடுத்தனர்..
அந்தப் பகுதிக்கு வேட்டைக்கு வந்த அரசன் வரும்வழியில் வேட்டைக்காரன் குடில் அருகில் கிளி இருக்க கண்டார்.. குடிலுக்கு அருகில் வந்தவுடன், டேய்! யார் நீ என்று அதிகாரமாகப் பேசியது கிளி. அதன் ஆரம்ப பேச்சு அரசனுக்கு எரிச்சலைத் தந்தது. அதனால் அங்கிருந்து விரைவில் கிளம்பி விட்டார். தொடர்ந்து காட்டிற்குள் சென்றவர் பர்ணசாலையைக் கண்டு அங்கே சென்றார். அங்கு இருந்த கிளி வணக்கம். யார் நீங்கள் .என்று அன்புடன் வரவேற்றது. அந்தச் சூழலில் மனம் ஆனந்தம் அடைய மன்னன் மகிழ்ந்தான்.
இரண்டு கிளிகளும் ஒரே கிளியின் குஞ்சுகள்தாம். ஆனால் அவற்றின் வளர்ப்பில் சுற்றுச் சூழலில் வித்தியாசம் தென்படுவதால் அதன் குணாதிசயங்கள் மாறுபட்டிருக்கின்றன.
கரு மேகங்கள் தரும் நீர் சுத்தமானதாக இருந்தாலும் அது சேரும் இடத்தைபோல் நிறம் கொள்கின்றது. சுவையை அடைகின்றது.
பிறப்பில் அரக்கனாய் இருந்தாலும் இராமருடன் செர்ந்ததால் விபீஷணன் நல்ல மனம், குணமடைந்தான். தர்மவானாகிய கர்ணன் துஷ்டன் துரியோதனுடன் நட்பு கொண்டமையால் அவப் பெயர் அடைந்தான்.
எனவே உயிர்களே சேருமிடம் சேருங்கள்! நலமடையுங்கள்!

######

செவ்வாய்க்கிழமை, 19 December 2017 10:46

ஆனந்தமாக இருக்க வழி!

ஆனந்தமாக இருக்க வழி!

அன்பையும் பாசத்தையும் விலக்காதீர்கள்1

அந்த தோட்ட வீட்டின் அருகில் ஒரு பெரிய ஆலமரம் கிளைத்து தழைத்திருந்தது. விடுமுறைக் காலங்களில் அந்த தோட்டத்து உரிமையாளரின் நண்பர்களும் சுற்றத்தினரும் வந்து அந்த ஆலமரத் தடியில் கூடி குலவி பொழுதை இனிமையாக கழிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். எந்த விடுமுறையாக இருந்தாலும் யாராவது வந்த வண்ணம் இருந்து ஆனந்தித்து செல்வர். அங்கு வருபவர்கள் பலவிதமான பறைவகளின் கூடாரமாக இருந்த அந்த இடத்தில் பறவைகளின் ஒலியைக் கேட்டு இன்புறுவர்.
ஒரு விடுமுறை நாளில் அந்த உரிமையாளரின் பேரன் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான். ஒரு பறவையின் எச்சம் அவன் மேல் விழுந்தது. அதனால் கோபம் கொண்ட உரிமையாளர் அந்த பறவைகளையெல்லாம் விரட்டச் சொன்னார். வேலையாட்கள் விரட்ட பறவைகள் தோட்டத்தில் உள்ள மற்ற இடத்தில் தங்கின. அங்கிருந்தும் விரட்டப்பட்ட பறைவைகள் புதிய இடம் தேடித் தங்கின. அடுத்த சில நாட்களில் பறவைகளின் ஒலியின்றி அமைதியாக இருந்தது அந்த தோட்டத்தில். உள்ள ஆலமரம் பழுத்து இலைகளை உதிர்த்தது. நாளடைவில் அந்த தோட்டத்தில் மாயன அமைதி தென்பட்டது. நண்பர்களே சுற்றத்தினரோ அங்கு வருவதில்லை. ஒர் ஒதுக்கப் பட்ட இடமாக மாறியிருந்தது அந்த தோட்டம்.
பசுமையாக அழகாக, ஆரவாரமாக ஆனந்தமாக இருந்த நம் தோட்டம் இப்படி ஆனதற்கான காரணத்தை யோசித்த உரிமையாளர், பறவைகளை விரட்டச் செய்தற்கு வருந்தினார். கூண்டுகள் செய்து அணில் ,முயல் ஆகியவற்றை வாங்கி வந்து வளர்த்தார். அவைகளத் தொடர்ந்து சிட்டுக் குருவிகளுக்கு தீனி அளித்தார். கொஞ்சம் கொஞ்சமாய் அங்கு பறவைகளின் ஒலி அதிகரிக்க சோகமாய் இருந்த மரங்கள் எல்லாம் துளிர்விட்டு மீண்டும் பசுமையை பரப்ப அந்த தோட்டம் மீண்டும் ஆனந்தத்திற்கு திரும்பியது.
வாழ்வில் பறவை எச்சத்தை போன்ற நிகழ்வுகள் தொல்லையாய் தோல்வியாய் வரக்கூடும். அவற்றைத் துடைத்துவிட்டு எதிர்மறையாக சிந்திக்கமல் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற ஆக்க பூர்வமாக எண்ண வேண்டும்.

ஆனந்தமாக இருக்க வழி!அன்பையும் பாசத்தையும் விலக்காதீர்கள்1

######

ஞாயிற்றுக்கிழமை, 10 December 2017 11:33

மனிதனாக மாறுவாய்!

மனிதனாக மாறுவாய்!

கடன் பெற்றவர் வீட்டிற்குச் சென்று எப்படியாவது கடனை வசூலிப்பதில் கெட்டிக்காரர். வீடு தேடிவந்து வசூலித்ததால் தன் செருப்பு தேய்ந்துவிட்டது எனக் கூறி அதற்கும் காசு வாங்கும் கந்து வட்டிக்காரர் அவர். சாலையில் அவர் செல்வதை பார்த்தால் கடன் பெற்றவர்கள் பயந்து ஒளிந்து கொள்வர். விளையாடும் சிறுவர்கள் கூட வட்டிக்காரர் வருகின்றார் என்று தங்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு ஓரமாக நிற்பார்கள்.
கெட்டியான வட்டிக்காரர் கடனை வசூலிக்க ஒரு வறியவர் வீட்டை அடைந்து கதவைத் தட்டினார். திறக்கவில்லை. எனவே மீண்டும் கதவை கோபத்துடன் தட்டினார். இவரிடம் கடன் பெற்றவரின் மனைவி வந்து கதவைத் திறந்தாள். இறை வழிபாடு செய்து கொண்டிருந்ததால் உடன் கதவைத் திறக்கவில்லை என்று மன்னிப்பு கோரினாள். அதை கவனியாமல் எங்கே உன் கணவன் என்றார். உடல் நலமில்லா தன் தாயைப் பார்த்துவர சென்றுள்ளார் என்றாள். வட்டிப்பணம் கொடுத்துள்ளாரா! என்று அதை எடுத்துவரச் சொல்லி அதிகார தோரணையில் சொன்னார். வீட்டில் இருந்த பணத்தை தாயின் மருத்துவ செலவிற்கு எடுத்துச் சென்றுள்ளார் நாளை உங்களை வந்து பார்ப்பதகாச் சென்னார் என்றாள்,
கோபமடைந்தவர் உன் வீட்டிற்கு பணம் வாங்க வந்த என் செருப்பு தேய்ந்ததற்கான கூலியை கொடு என்றார். அவர் வாங்கி வைத்துவிட்டுப்போன காய் கறிகளைத் தவிர வீட்டில் ஒன்றுமில்லை, வேண்டுமென்றால் அதை எடுத்துப் போங்கள் என்று சொன்னவளிடம் பச்சைக் காய்கறிகளை வைத்து பிரமச்சாரி நான் என்ன செய்வது அவற்றைச் சமைத்துக் கொடு என்றார். அடுப்பைப் பற்ற வைக்க விறகும் சமைப்பதற்கு மற்றப் பொருட்களும் ஏதுமில்லை. நீங்கள் அவற்றை வாங்கி தந்தீர்களானால் நான் சமைத்து தருவேன் என்றாள். சரி வாங்கித் தருகின்றேன் அந்த செலவை வட்டியுடன் தரவேண்டும் என்பதற்கான உறுதிமொழியைப் பெற்று கடைக்குச் சென்று வாங்கி வந்து அப்பெண்ணிடம் கொடுக்க அவள் சமைக்க ஆரம்பித்தாள். கந்துவட்டிக்காரர் இன்று மதிய உணவிற்கு கடைக்குச் செல்ல வேண்டியதில்லை. குறைந்த செலவில் வீட்டுச் சாப்பாடு கிடைத்து விட்டது என எண்ணங்களை.வழிநடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வீட்டின்முன் தள்ளாடியபடி வந்த முதிய யாசகர் உணவுப்பிச்சை வேண்டினார். காதில் பிச்சை கேட்ட குரல் ஒலித்ததும் வீட்டுப் பெண்மணி வெளியில் வந்து சிறிது நேரம் கழித்து வா! சமையல் ஆகிக்கொண்டிருக்கின்றது என்றாள். இதைக் கேட்ட வட்டிக்காரர் யாருடைய பணத்தை யாருக்கு பிச்சை போடுவது என்று அப்பெண்ணை நோக்கி சப்தமிட்டுவிட்டு பிச்சைக் காரனை நோக்கி, இப்படி பிச்சை எடுப்பவருக்கெல்லாம் வாரி வழங்கினால் நானும் உன்போல் பிச்சைக்காரன் ஆகவேண்டியதுதான் என்று கூறி அவனை அங்கிருந்து போகச் சொல்லி விரட்டினார். மகராசி கொடுக்க நினைத்தாலும் உன்னை போன்றவர்கள் அதை கெடுப்பதற்கே இருக்கின்றீகள் என்று சொல்லி விட்டு என்னைப் போன்றவர்களுக்கு பிச்சை இடுவதால் நீ ஒன்றும் பிச்சைக்காரன் ஆகமாட்டாய். மனிதனாக மாறுவாய் என சொல்லிச் சென்றான்.
அது போன்ற வார்த்தைகளை இதுகாறும் கேட்டிராத வட்டிக்காரர் உறைந்து போனார். வீட்டுப் பெண்மணி சமைத்த உணவை கொண்டுவந்து வட்டிக்காரரிடம் கொடுக்க, அதை வாங்காமல் கண்ணில் நீர்மல்க தன் இருப்பிடம் நோக்கிச் சென்றார். வழியில் தன்னைப் பார்த்து பயந்தவர்களையும் ஒளிந்தவர்களையும் பார்த்து ஒளியவேண்டிய மனிதன் நான்தான் எனத் தனக்குள் சொல்லிக்கொண்டார். அன்று முதன் முதலாக கோவிலுக்குச் சென்றார். அங்கு நடந்து கொண்டிருந்த ஞானியின் சத்சங்கத்தைக் கேட்டார். தெளிவடைந்தார். அவரின் நிலைப்பாடுகள் அன்றிலிருந்து மாறத் தொடங்கின.
தன்னிடமிருப்பதைக் கொண்டு தான தர்மங்கள் செய்தார். மன நிறைவு அடைந்தார். ஞானியின் சொற்பொழிவுகளை மீண்டும் மீண்டும் கேட்டார். தான தர்மங்கள் செய்வதால் தான் ஒருபோதும் பிச்சைக்காரன் ஆகமாட்டோம் என நம்பினார். மனதில் ஏழ்மையின்றி செல்வந்தனாக மனித நேயத்துடன் மனிதனாக வலம் வந்தார்.

$$$$$$

சனிக்கிழமை, 09 December 2017 05:28

உண்மை நேரில் வந்தால்!

உண்மை நேரில் வந்தால்!

தன் தொழில் நிமித்தம் வெளியூர் சென்றிருந்தவன் திரும்பி வந்தபோது திருடர்களால் வீடு கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்படிருந்தது. வீட்டில் எரிந்த நிலையில் பிணங்களே தென்பட்டது. அருகில் கிடந்த ஒரு சிறுவனின் பிரேதத்தை தன் மகன் பிரேதம் என நினைத்து அதைக் கட்டியழுது அதை எரியூட்டி அந்த சாம்பலை எடுத்து ஓர் பையில் பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டார். எரிந்த வீட்டை செம்மைப் படுத்தி வழ்ந்திருந்தார். அந்த சாம்பல் பையைப் பார்த்து பார்த்து தன் மகனை நினைவு கூர்ந்து அடிக்கடி வேதனை அடைந்திருந்தார்.
ஒருநாள் தன் மகனின் நினைவில் கரைந்து அந்த சாம்பல் பையைப் பார்த்து கண்ணீர் சிந்திக்கொண்டிருந்த நேரம் கதவு தட்டப்பட்டது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு யார் என்றார். அப்பா நான்தான் உங்கள் மகன் வந்திருக்கின்றேன் என்ற குரலைக் கேட்டு நம்பவில்லை. கதவைத் திறக்கவும் இல்லை. மீண்டும் கதவு தட்டப்பட்டது. அதே குரல் அப்பா உங்கள் பையன் வந்திருக்கின்ரேன் என்றது. பையன் இறந்து விட்டான் என்ற கலக்கமான மன நிலையில் கேட்ட குரலை அடையாளம் காண முடியாத நிலையில் தன் மகன் இறந்துவிட்டான் என்று நம்பிக்கை கொண்டிருந்ததனாலும் மீண்டும் மீண்டும் கதவு தட்டப்பட்டு குரல் ஒலித்தும் கதவை திறக்கவில்லை. தட்டுவது யார் என்றும் நேரில் பார்க்க முயற்சிக்கவில்லை. இப்படி பலமுறை கதவு தட்டப்பட்டு ஒலித்த குரல் நின்றது. கதவு தட்டப்படுவதும் நின்றது. கதவைத் தட்டிய சிறுவன் போய்விட்டான். மகனும் தந்தையும் சந்திக்கும் சூழல் மீண்டும் ஏற்படவே இல்லை.
இப்படித்தான் உயிர்கள் சில நேரங்களில் பொய்யான் ஒன்றை உண்மை என நம்பிக்கொண்டு அதையே தொடர்ந்து பற்றிக் கொண்டு இருக்கின்றது.. உண்மையே நேரில் வந்தாலும் அந்த உயிரால் அதைக் கண்டு கொள்ள இயலாமல் போய்விடுகின்றது. ஓர் ஏணியில் ஏறும்போது பாதியில் நின்று கொண்டு அவ்வளவுதான் உயரம். உச்சிக்கு ஏறிவிட்டோம் என்று தவறாக கணக்குப் போட்டு நம்பிக்கை கொண்டால் உயிர்களால் அடுத்த படிகளைக் கடந்து உச்சிக்கு செல்ல முடியது. உயிர்களே! தவறான பார்வைகளை அது பற்றிய முடிவான முடிவுகளை மேற்கொள்ளுதல் நலன் பயக்காது! என்பதைப் புரிதல் வேண்டும்!

$$$$$$

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3648638
All
3648638
Your IP: 172.68.65.76
2018-02-21 12:46

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

சந்தோஷப்பூக்கள்

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...