குருஜி - வைரவாக்கியம்

உலகில் எந்த ஒரு விஷயமும் காரணமின்றி நடைபெறுவதில்லை, என்ன காரணம் எனத் தெரியாமலும், புரியாமலும் நாம் இருப்பதுண்டு.
ஞாயிற்றுக்கிழமை, 03 September 2017 10:12

சிவ வழிபாடு

Written by
Rate this item
(0 votes)

ஓம் நமசிவய!

சிவவழிபாடு!
முதல்வனாக பரம்பெருள் இருந்தாலும் ஆனைமுகத்தானை முதலில் வழிபட்டு ஆரம்பிக்க வேண்டும் என்கிறது நமது வேதம். ஒற்றைக் கொம்பன், இரு செவியன், முக்கண்ணன், சதுர்புஜன், ஐங்கரன், ஆறாதாரத்துள்ளான் அவனை வணங்கி ஏழுபிறவி நீங்கி, எண்திசை போற்ற, நவமணிகளும் சம்பத்தும் பெற்று அனைவரும் வாழ்க! வாழ்கவே பல்லாண்டு!
வேதங்கள், சாஸ்திரம், புராணங்கள், இதிகாசங்கள், சம்பிரதாயம், பண்பாடு எல்லாம் ஆத்மவின் உடல் உள்ளம் இரண்டையும் தூய்மையாக்கும் நல்லுரைகளை வழங்குபவை. எத்தனை உயிர்கள் அவற்றை சரியாகப் பின்பற்றுகின்றோம். கலியுகத்தில் உயிர்கள் அவைகளை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றன. விஞ்ஞானத்தால் ஆடம்பர வாழ்கை முறைகளை தன் வாழ்க்கையில் புகுத்திக் கொண்டாலும் துன்பம் நேரிடும்போது ஆத்மா வேதங்களின் பாதையில் செல்ல விழைகின்றது. -குருஜி

சிவ வழிபாடு என்பது சில வழிமுறைகளைக் கொண்டது.அவை

நீராடல்!
சிவச் சின்னங்கள்!
திருமுழுக்கு- அபிஷேகம்!
அர்ச்சனை!
ஆகமங்கள்!
பஞ்சாக்கரம்! வேதத்தின் இதயம் ஸ்ரீ ருத்திரம்! தாரகமந்திரம்!
பிரதோஷம்!
லிங்கோத்பவக்காலம்!
முக்குணத்தோன்! நிர்குணத்தோன்! எண்குணத்தான்!
ஜோதிலிங்கம்!
சகஸ்ரலிங்கம்!
ஜோதிர்லிங்கங்கள்!
பஞ்சமுக தரிசனம்!
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன! முயலகன் யார்!
சிவராத்திரி!
ஆலயங்கள் உடல் அமைப்பில்!
வணங்கும் முறை!
கோவிலுக்கு எந்த காலத்தில் (நேரம்) போக உத்தமம்!
இறைவன் ஏன் சின்முத்திரையுடன் காட்சி!
யோகம்!
ஞானம்!
உயர்வானவன்!
இன்பக்காத்தல் துன்பக்காத்தல்!
மார்கழியில் பள்ளியெழுச்சி! ஆனியில் திருமஞ்சனத் திருநாள்!
சிவன் ஏன் அபிஷேகத்தை விரும்புகின்றார்!
உலகம் பலவிதம்!
சிவமயம்!
இறையருள் அறிவு!
இசையால் இறையருள் வசமாகும்!
மீண்டும் பிறவி! ஆவுடையார் என்றால் என்ன!
சிவனுக்குரிய விரதங்கள்!
லிங்க பூஜை பலன்கள்!
வேதங்களில் சொல்லப்பட்ட தவங்கள் 3 வகை!
சிவலிங்க வழிபாடு செய்பவர்கள் அறிய வேண்டியது!
தண்டம் சமர்ப்பித்தல்!
ஒரே நிகழ்வுகள் எப்படி வேறுவேறு தலங்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது! மன்வந்திரம் என்றால் என்ன!
#####

நீராடல்!
ஆலய குளம்- வருண தடாகம்
குளங்கள், கோவில் கிணறுகள் ஆகியன் நிர்மானிப்பதற்கு முன் கணேசர் முதலான தேவ பூஜைகள் செய்ய வேண்டும்.
குளத்தை வெட்டினால் மட்டும் போதாது. வருண ஆராதனை செய்து நீர் புனிதமாகவேண்டும்.
ஆலயக் குளங்கள் வருண சாந்நித்யத்தைப் பெற்றிருக்க வேண்டும். அதற்காக வருணனின் திருவுருவை அமைப்பது வழக்கம். கலசத்தில் வருணனை ஆவாஹணம் செய்து பூஜிக்க வேண்டும். வேத முறைகளின்படி அந்தணர்களைக் கொண்டு ஹோம குண்டங்கள் அமைத்து ஹோமங்கள் செய்து புனித கலசங்களில் புனித நீரை ஆவாஹனம் செய்ய வேண்டும்.
கிழக்கு கடல் நீர், தென்கிழக்கு கங்கை நீர்,
தெற்கு மழை நீர், தென்மேற்கு ஊற்று நீர்,
மேற்கு திசை ஆற்று நீர், வடமேற்கு நதி நீர்,
வடக்குதிசை காய்கனிகளைப் பிழிந்த அமுத நீர், வடகிழக்கு புனித நீர்
ஆகியவற்றுடன் பஞ்சகவ்யத்தை மந்திரம் சொல்லி கலந்து கலசங்களில் நிரப்பி விதிப்படி பூஜை முடித்து ஆராதனை செய்து மந்திர உச்சாடனம் செய்து கொண்டே நீரைக் கிழக்கிலிருந்து தொடங்கி வருணபகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். வருணன் விஷ்ணுவின் அம்சம். பதினாறு வகை உபகாரங்கள் செய்து அச்சிலையை எடுத்துப்போய் தடாகத்தின் நடுவே பூமியில் புதைக்க வேண்டும்.
இப்படிப்பட்ட குளமே பலர் புனித நீராட உதவும். ஒரு நல்ல முகூர்த்த நாளில் உரிய பூஜைகள் செய்து சுத்தம் செய்து மக்கள் உபயோகத்திற்கு பயன்படும்படி செய்ய வேண்டும். இது தானத்திலே சிறந்த தானம். குளம் வெட்டுபவர்களுக்கு பல அசுவமேத யாகம் செய்த பலன். குளத்தைச் சுற்றி நந்தவனம், மண்டபங்கள் அமைக்கப் படவேண்டும். கரையைச் சுற்றி சால், கடம்பு, பலாசம்-பலாமரம், சந்தனம், தேவதாரு, வில்வம் மா, வேம்பு, ரத்த சந்தனம்-குங்குலியம் போன்ற மரங்களை முறைப்படி பூஜை செய்து நல்ல நேரத்தில் நடவேண்டும்.
தினசரிக் கடமைகளில் ஒன்றான குளியல் –நித்தியம் எனப்படும்.
தீட்டுகளால் ஏற்படும் அசுத்தியைப் போக்க நீராடுவது நைமித்திகம்.
விழாக்களுக்காக நீராடுவது காமியம்.
சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றிற்காக நீராடுவது கிரியாங்கம்.
உடல் சுத்திக்காக நீராடுவது மலாபகர்ஷ்ணம்.
புண்ணிய நதிகளில் நீராடுவது க்ரியா ஸ்நானம்.
நீராடுமுன் சிறுநீர் கழிக்க அதற்கென்றிருக்கும் இடத்தில் சிறுநீர் கழித்துவிட்டு வந்து நீராடல் வேண்டும். நீராடும்போது எல்லா உறுப்புகளும் நீரில் நனைய குளிக்கவேண்டும்.
நதிகளில் நீராடினால் நீரில் உடல் அமுங்கி மறையும்வரை நீராடல் சிறப்பு. ஆற்றுக்குப் போனோம் இரண்டு முங்கு முங்கி எழுந்தால் போதும் என்றவாறு குளியல் இருக்கக் கூடாது. பொதுவாக சூரிய உதயத்திற்குமுன் அருணோதய வேளையில் நதிகளில், தீர்த்தங்களில் குளிப்பது சிறப்பு. நீராடும்போது பிரவாகங்களுக்கு எதிராகவும், குளங்களில் நீராடும்போது சூரியன் இருக்கும் திசை நோக்கி நின்று நீராடல் வேண்டும். நீராடி முடிந்ததும் நீரைக் கைகளில் நிரப்பிக் கொண்டு என் உடலிலுள்ள அழுக்குகளை இந்நீரில் கழுவி தோஷம் செய்திருக்கின்றேன். அந்த தோஷங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் எனச் சொல்லி கையில் உள்ள நீரை விட்டுக் கரை ஏறவும்.
புண்ணிய நதிகளில் நீராடும்போது தியானம் செய்தல் கூடுதல் நலன். நதிகளிலும் குளங்களிலும் நீராடிய பின் அந்தக் கரையினிலேயே கிழக்கு நோக்கி அமர்ந்து ஆசமனம், பிராணாயாமம் செய்து தியானம், ஜபம் செய்யலாம். முறைப்படி கர நியாசம், அங்க நியாச முறைகளால் இறைவனை ஆராதித்து வணங்கி பின் முத்திரைகளைக் காட்டி உபசாரம் செய்ய வேண்டும்.
மழை நீரில் நீராடும்போது இரண்டு கைகளை உயரத்தூக்கி மழைவரும் திசை நோக்கி மழைச்சாரல் மேனியில் படும் வண்ணம் கண்களை மூடியபடி இருக்கும்போது மழைச்சாரல் ஸ்பரிசம் மேனியில் படுவது தேகத்திற்கு சில சக்திகளைத் தரவல்லது. இந்த மழை ஸ்நானத்தை ‘அக்னைக’ ஸ்நானம் என்கிறது சாஸ்திரம்.
உடம்மை மண்ணைக் கொண்டு தூய்மை செய்வது ‘மலஸ்நானம்’ எனப்படும். இதற்குப்பின் நீரில் நீராடவேண்டும். இது ‘விதிஸ்நானம்’ எனப்படும். கோதூளி கொண்டு ஸ்நானம் செய்வது மிகப்புனிதமாதாகும். இது ‘மகேந்திரஸ்நானம்’ எனப்படும்.
குளம், குட்டை, ஆறுகளில் சிறுநீர் மலம் கழித்தல் தவறு, ஆடையில்லாமல் நீர் நிலைகளில் நீராடாதே. இது வேதம் சொல்வது. நீர் வாழ் இனங்கள் நச்சுப் பிராணிகள் நமது உடல் உறுப்புகளை தீண்ட வாய்ப்புண்டு. அது அந்த உயிர்க்கு ஊறு விளைவிக்கும்.
ஊனக் கண்களினால் ஊனத்தை பார்க்கும் நாம் அறிவுக் கண்ணால் ஞானத்தைப் பார்க்க வேண்டும்.

சிவச் சின்னங்கள் (சிவஅடையாளங்களாகக் கருதப்படுவது) இரண்டு.
1.திருநீறு- பஸ்மம்- விபூதி- நம் பாவங்களை அழித்து இறைவனை நினைவூட்டும் ஒன்று (ப -பர்த்ஸ்னம்- அழித்தல், ஸ்ம- ஸ்மரணம்- நினைத்தல்.) பஸ்மம்- ரக்ஷை- அணிபவரை நோயிலிருந்தும், தீயனவற்றிலிருந்தும் காத்தல். திருநீறு அணிபவரின் அருகில் துஷ்ட சக்திகள் நெருங்காது. பகை, தீராத நோய், தீவினை, மனநோய் நீங்கும். திரு என்றால் மகாலட்சுமி என அர்த்தம். விபூதி என்றால் ஐஸ்வர்யம் என ஓர் அர்த்தம் உண்டு. நெற்றியில் திருநீறோ, திருமண்ணோ, குங்கும்மோ, சந்தனமோ இட்டுக் கொள்வது உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியமானது ஆகும்.
திருநீறு வகைகள்
1.கல்பம்-ஆரோக்கியத்துடன் கன்றுக் குட்டியுடன் கூடிய பசுவின் சானத்தை பஞ்ச, பிரம்ம மந்திரங்கள் ஓதி அக்னியில் எரிப்பதன் மூலம் கிடைப்பது.
சத்யோஜாதம்- பிருதிவித் தத்துவம் அதிலிருந்து தோன்றிய நந்தினி என்ற பெயருள்ள கபிலவர்ணமுள்ள கோவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- விபூதி
வாமதேவம்- நீர்த் தத்துவம் அதிலிருந்து தோன்றிய பத்ரை என்ற பெயருள்ள கருப்பு நிறமுள்ள பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- பஸிதம்
அகோரம்- தேஜஸ் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுரபி என்ற பெயருள்ள சிவப்பு நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- பஸ்மா
தத்புருஷம்- வாயுத் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுசீலா என்ற பெயருள்ள வெளுப்பு நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- க்ஷாரம்
ஈசானம்- ஆகாசத் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுமனா என்ற பெயருள்ள பல நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- ரக்ஷா
2.அனுகல்பம்-தோட்டம், காடுகளில் மேயும் பசுக்களின் சானத்திலிருந்து தயாரிப்பது.
3.உபகல்பம்-பசுக்கள் தங்கியிருக்கும் தொழுவத்திலிருந்து கிடைக்கும் சானத்திலிருந்து தயாரிப்பது.
4.அகல்பம்-பல பசுக்களின் சானத்தை ஒன்றாக்கி முறையான மந்திரம் ஓதாமல் தயாரிப்பது.

2.ருத்திரம்- ருத்ரா என்ற சொல் ‘ருத்’ என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்தது. அழுது கண்ணீர் விடுவது என்று பொருள். அட்சம் என்றால் கண் என்று அர்த்தம். தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களின் முப்புரங்களை தனது நெற்றிக் கண்ணால் சிவன் எரித்தபோது அவருடைய மனம் இளகி கண்களிலிருந்து நீர் முத்து முத்தாக உதிர்ந்தது.
சிவனாரின் மூன்று கண்களிலிருந்து பனித்துளிகள் போன்ற நீர்த்துளிகள் முத்திட்டு கீழே விழுந்து அவை ருத்ராக்ஷ விருக்ஷங்களாக மாறின. பெருமானின் வலதுகண்-சூரியன்- அதிலிருந்து தோன்றிய கபிலநிற நீர்த்துளிகள் பன்னிரண்டு வகையான பேதங்களோடு கூடிய ருத்திராக்ஷங்களாகவும், இடதுகண்- சந்திரன்- அதிலிருந்து தோன்றிய வெண்ணிற நீர்த்துளிகள் பதினாறு வகையான பேதங்களோடு கூடிய ருத்திராக்ஷங்களாகவும், நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நீர்த்துளிகள் பத்து வகை பேதங்களுடனும் தோன்றி மொத்தம் ,38 வகையாகயாக இருந்தாலும் 14முகம் வரைதான் சொல்லப்பட்டிருக்கின்றது. சிறந்த ருத்திராக்ஷத்தை நீரில் போட்டால் மூழ்க வேண்டும். அதற்கு பத்ராக்ஷம் என்று பெயர்.
மேலும் ருத்திராக்ஷத்திற்கு தெள்தொளி, சிவமணி, கண்டிகை, அக்கமணி, கண்மணி, நாயகன் விழிமணி என்றும் பெயர்களுண்டு. அளவில் நெல்லிகனி அளவுள்ள ருத்திராக்ஷம் உத்தமம். இலந்தை அளவு மத்தியமம். கடலை அளவு அதமம். உலகின் உள்ள கொட்டைகளில் ருத்திராக்ஷம் மட்டுமே துளையுடன் மனிதர்கள் அணிவற்காக இயற்கையாக இறையால் படைக்கப்பட்டுள்ளது. ருத்திரன் சக்தி வாய்ந்த மின்காந்தப் பண்புகளையும், காந்த முனைகளால் ஈர்க்கும் மற்றும் தூண்டும் தன்மை உடையது ஆததால் அணிபவர்களுக்கு பலன் உண்டு.
1 முகம்- சிவ சொரூபம்
2 முகம்- அர்த்தநாரீஸ்வர சொரூபம்.
3 முகம்- திரேதாக்கினி சொரூபம்.
4 முகம்- பிரம்ம சொரூபம்.
5 முகம்- ருத்ர சொரூபம்
6 முகம்- சுப்ரமண்ய சொரூபத்துடன் கணபதி அருள்.
7 முகம்- ஆதிசேஷ சொரூபம்.
8 முகம்- மகா கணபதி சொரூபம்.
9 முகம்- கால பைரவ சொரூபத்துடன் அம்பிகை அருள்.
10 முகம்- மகாவிஷ்ணு சொரூபம்.
11 முகம்- ஏகாதச சொரூபம்
12 முகம்- துவாதசாதித்தியர் சொரூபம்
13 முகம்- இந்திர சொரூபம், சதாசிவரூபம்., ஷண்முக சொரூபம்.
14 முகம்- ருத்ர மூர்த்தி சொரூபம். இது யாரிடம் இருக்கின்றதோ அவர்கள் சிவனுக்கு சமமாக வணங்கப்படுவர். இதை சிரசில் அணியவேண்டும்.

திருமுழுக்கு- அபிஷேகம்!
பண்டைக்காலத்தில் 26 திரவியங்கள் பயன்படுத்தப்பட்டு தற்போது18 ஆகி அதுவும் குறைந்து 12 ஆகிவிட்டது. முக்கியமாக எள் எண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், சுத்த ஜலம் என்ற முறைப்படி அபிஷேகம் செய்தால் அந்த விக்ரகத்தின் ஆற்றல் மந்திர யந்திரங்கள் சிலாரூபத்தில் இருத்திடும்போது அந்த ஆற்றலை நிலைக்கச் செய்யும். அபிஷேகங்களில் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் மூன்றும் மிகச் சிறந்ததாகும். எந்த அபிஷேகம் செய்தாலும் குறைந்தது ஒரு நாழிகை அளவிற்கு செய்வது சிறப்பு. ஆகம விதிப்படி மூலவிக்ரகத்திற்கு நடத்தப்படும் அபிஷேகங்களில் சந்தனம், விபூதி, கலச அபிஷேகம் ஆகியவற்றை மட்டும்தான் பக்தர்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும். கற்சிலையாக இருக்கும் விக்ரகங்கள் அபிஷேகம் செய்யப்படுவதால் பிரபஞ்ச சக்திகளை ஒருங்கே ஈர்த்து ஒரு குறிப்பிட்ட எல்லை வரை பரவச் செய்கின்றது. அந்த ஆற்றலை நாம் அடைந்து புத்துணர்ச்சி பெறுதல் வேண்டும் என்பதற்காகவே இறைக்கு அபிஷேகம் நடத்தப்படுகின்றது.

அர்ச்சனை!
தூல மலர்கள் அர்ச்சனை
மலர்களில் மாலதி பூஜைக்கு மிகவும் ஏற்றது.
இறையை மரிக்கொழுந்தால் அர்ச்சித்தல் ஆனந்த வாழ்விற்கு அடிகோலும்.
மல்லிகையால் அர்ச்சித்தால் பாவங்களிலிருந்து விடுபடலாம்.
சண்பகம், ஜாதிப்பூ, மலைஅத்தி, குருக்கத்தி, அலரி, செவ்வந்தி ஆகிய மலர்களின் அர்ச்சனை முக்தி கிட்டும்.
புங்க மலர் அர்ச்சனை புனிதம் பெறுவர். தாமரை, கேட்டகி, குந்தம், அசோகம் ஆகியவை அமோக பலன்களைத் தரும்.
கணபதியை அருகம் புல்லால் அர்சித்தல் பலன். துளசியால் அர்ச்சிக்கக்கூடாது.
திருமாலை துளசி கொண்டு அர்ச்சித்தால் அவர் அருகில் இருக்கும் பாக்கியம். காஞ்சனம், ஊமத்தம், மலைக்கர்ணிகை ஆகிய மலர்களால் அர்ச்சிக்கக்கூடாது.
அருக்கம், மந்தாரம், தும்பை, வில்வ இலைகள், கொன்றைப்பூ இவைகள் சிவனுக்கும் மிகவும் பிடித்தது. கேதகி, கர்கடி, நிம்பம் ஆகிய மலர்களால் சிவனை அர்சிக்கக்கூடாது.
பொதுவாக கசங்கிய மலர்கள், அசுத்தமான மலர்கள், காய்ந்த மலர்கள் ஆகியவற்றால் இறையை அர்சிக்கக்கூடாது.
சொந்த தோட்டத்திலிருந்தோ அல்லது மாற்றான் தோட்டத்திலிருந்தோ பறித்த பூக்களைவிட வனப்பகுதியிலிருந்து பறித்த மலர்களே இறையின் விருப்பம்.
தங்கத்தால் அர்ச்சிப்பதைவிட மலர்கள் அர்ச்சனையே நூறு மடங்கு பலன் தர வல்லது.
மானஸ மலர்கள் அர்ச்சனை
பலவித வண்ண மலர்களால் அர்ச்சிப்பதைவிட எட்டுவித மானஸ மலர்களால் அர்ச்சிப்பது மகோன்னத பலன்களைத் தர வல்லது.
முதல்மலர்- ஜீவஹிம்சை செய்யாமல் அஹிம்சையை கடைப்பிடிப்பது
இரண்டாம்மலர்- சுயக்கட்டுப்பாடு
மூன்றாம்மலர்- எல்லப்பிராணிகளிடமும் அன்பு பூண்டிருப்பது.
நான்காம்மலர்- பேராசையின்றி உள்ளதைக் கொண்டு திருப்தி அடைதல்
ஐந்தாம்மலர்- இறைவனிடம் மாறாத தெய்வ பக்தி.
ஆறாம்மலர்- சதா இறைவனை நினைத்து தியானம்
ஏழாம்மலர்- வாய்மை
எட்டாம்மலர்- பற்றற்று இருப்பது
இந்த எட்டு மலர்களால் தினமும் இறையை பக்தியுடன் ஆராதிப்பவர்கள் எல்லாவிதமான நற்பலன்களையும் அடைந்து முடிவில் இறையின் அடியை அடைவர்.

ஆகமங்கள்!
28 ஆகமங்களையும் சிவலிங்க வடிவில் அமைத்து முருகன் பூஜை செய்த ஆகமக்கேயில் பழமலைநாதர் என்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ளது.
ஆகமங்களின் பெயரிலான சிவனின் பெயர்கள் மற்றும் அவயவங்கள்
1. காமிகேசுவரர்- திருவடிகள்
2. யோகேசுவரர்- கணுக்கால்கள்
3. சிந்தியேசுவரர்- கால் விரல்கள்
4. காரணேசுவரர்- கெண்டைக்கால்கள்
5. அஜிதேசுவரர்- முழந்தாள்கள்
6. தீபதேசுவரர்- தாடைகள்
7. சூட்சுமேஸ்வரர்- குய்யம்
8. சகஸ்ரேசுவரர்- இடுப்பு
9. அம்சுமானேசுவரர்- முதுகு
10. சுப்பிரதேசுவரர்- தொப்புள்
11. விஜயேசுவரர்- வயிறு
12. விசுவாசேசுவரர்- மூக்கு
13. சுவாயம்பேசுவரர்- தனங்கள்
14. அகலேசுவரர்- கண்கள்
15. வீரேசுவரர்- கழுத்து
16. ரௌரவேசுவரர்- காதுகள்
17. மகுடேசுவரர்- திருமுடி
18. விமலேசுவரர்- கைகள்
19. சந்திரஞானேசுவரர்- மார்பு
20. முகப்பிபேசுவரர்- முகம்
21. புரோத்கீதேசுவரர்- நாக்கு
22. லளிதேசுவரர்- கன்னங்கள்
23. சித்தேசுவரர்- நெற்றி
24. சந்தானேசுவரர்- குண்டலம்
25. சர்வோத்தமேசுவரர்- உபவீதம்
26. பரமேசுவரர்- மாலை
27. கிரணேசுவரர்- ரத்தின ஆபரணம்
28. வாதுளேசுவரர்- ஆடை

பஞ்சாக்கரம்!
உருவானத் தலம்! இப்பூ உலகில் தவம் பெருக சிறந்த தலம் என்று விஷ்ணுவால் வழி காட்டப்பட்டத் தலம் திருவட்டபுரி- வசிஷ்டபுரி என்ற ஓர் இடமே தவம் செய்ய சிறந்தது என பிரம்மாவும் அவர் மகன் வசிஷ்டரும் அறிந்தனர். அவர்கள் அங்கு வந்த போது ஆயிரக்கனக்கான முனிவர்கள் தவ நிலையில் இருந்தனர். பிரம்மன் முன்னால் சொல்லப்பட்ட ஒரு மன்வந்திர காலம் தவமிருந்தான்.
பின் முனிவர்களுடன் சேர்ந்து 10 அசுவமேத யாகம் செய்தான். மகிழ்வுற்ற வைத்தியநாதர் அவர்முன் தோன்றி பிரம்மனே என்னை நோக்கித் தவம் இருந்ததன் காரணம் என்ன என்றார்! பிரம்மன் தன் மனைவி சரஸ்வதி மற்றும் மகன் வசிஷ்டருடன் ஈசனை சரீர சுத்தியுடன் தங்களின் அங்கங்கள் நிலத்தில் படுமாறு வீழ்ந்து வணங்கி ஐயனே! எல்லா உயிர்களும் முக்தியடைய உரிய வழி செய்ய நினைக்கின்றான் என்மகன் வசிஷ்டன். அவனுக்கு தேவரீர் ஞானப் பிரசாதமாகிய பஞ்சாட்சார குருமந்திரத்தை உபதேசிக்க வேண்டும் என பணிந்து வேண்டினார். “ஓம் நமசிவய” என்ற குருபிரசாத நமச்சிவய மந்திரத்தை அருள்மிகு வைத்தியநாத சுவாமி வசிஷ்டருக்கு குருவாக இருந்து உபதேசித்தார். இந்த உபதேசம் நடைபெற்ற தலம் வசிஷ்டபுரி- திருவட்டபுரி- தற்போது திருவட்டக்குடி ஆகும். பஞ்சாக்கரம் உருவானத் தலம்.
சனி, செவ்வாய் தவமிருந்து வழிபட்டு சாபம் தீர்ந்த தலம்!
சூரியன் மற்றும் சந்திரனுக்குச் சொந்தமானது ராசிகளுக்குரிய 12 வீடுகள். செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐவரும் தங்களுக்குச் சொந்தமாக வீடு வேண்டும் என விண்ணப்பித்து சந்திர, சூரியரிடம் பெற்றனர். இதை அறிந்த ராகுவும் கேதுவும் தங்களுக்கும் அதுபோல் சொந்தமாக வீடு வேண்டும் எனக் கேட்க அவர்கள் நண்பர்கள் அல்ல என மறுத்துவிட்டனர் சூரியனும், சந்திரனும். எப்படியும் வீடு பெற்று விடவேண்டும் என முயற்சித்த ராகுவிற்கும் கேதுவிற்கும் சனியும் செவ்வாயும் தங்களுக்களிப்பட்ட வீடுகளில் இடம் அளித்தனர். இதனால் கோபம் கொண்ட சூரியனும் சந்திரனும் சனியையும் செவ்வாயையும் சபித்தனர். சனியை தொழுநோயும், செவ்வாயை எழும்புருக்கி நோயும் பீடித்தது. அவர்கள் இருவரும் வைத்தியநாத சுவாமியிடம் தஞ்சமடைந்து தவமிருந்து பஞ்சாக்கரம் ஓதி வழிபட்டு சாபம் தீர்த்து மீண்டும் தங்கள் நிலையை அடைந்தனர். அந்த தலம் திட்டக்குடி என அழைக்கப்படும் வசிஷ்டபுரியாகும்.
ஓர் நிகழ்வில் இராவணன் சிறுவனாக இருந்த விநாயகருக்குச் சொன்ன “நமச்சிவய” என்பது பஞ்சாட்சார மந்திரம். எல்லோரும் நினைக்கலாம். சொல்லலாம். அந்த ஆத்மலிங்கத்தின் கணத்தை குறைப்பதற்கு தாங்குவதற்கு விநாயகப்பெருமானே ‘ஓம்நமசிவய’ எனச் சொல்லியே லிங்கத்தைப் பெற்றார் என்றால் அந்த ஐந்தெழுத்து மந்திரத்தின் சக்தியைப் புரிந்து கொள்வீர். ஆனால் முறைப்படி அதை ஒருவர் குருஸ்தானத்திலிருந்து உபதேசித்து சொல்லும்போது பலன் அதிகம்.
எங்கும் நிறைந்ததாயும், சகல தந்திரங்களும், சகல எந்திரங்களும், சகல மகாமந்திரங்களும், சகல அலங்காரங்களும், சகல யோகங்களும், சகல ஆசைகளும், சகலத்தையும் தாங்கி ரட்சிக்கும் ஆதிசேஷ ரூபமும், நஞ்சைக் கண்டத்திலே வைத்திருக்கின்ற ஈஸ்வரத் தத்துவமும், ஒன்றாவதும் பலவாவதும், ஒன்றுமில்லாததுவும், சுப்ரஹாசமாகிய ஞானமும், நீலகண்டபிரகாசமும், அதன் துளியும், அதன் வாசமுமாய், எல்லாமுமாய், எல்லையுமாய், எல்லையில்லாதுமாய் விளங்குவதுமானது ‘”நமசிவய” என்கிற பஞ்சாக்கரம்.
நமசிவய பஞ்சாட்சர மந்திரத்தால் நம்மை நாமே சிவமயமக்கிக் கொள்ளல் வேண்டும். இதயத்தில் சிவனின் சொரூபத்தை நிலை நிறுத்தி தியானிக்க வேண்டும். பஞ்சாட்சரம் சொல்லும்போது ஏக மனத்துடன் சொல்லி வில்வமும் தும்பை மலரும் சாத்தி வழிபடல் சிறப்பு.
தீர்த்தக் கரையினில் அமர்ந்தும், சமுத்திரத்தின் கரையில் அமர்ந்தும், மலைச் சாரல்களிலும், வீட்டில் பூஜை அறைகளிலும், ஏகாந்தமாக இருக்கும் எந்த இடத்திலும் ஜபிக்கலாம். விரல் ரேகைகளை எண்ணிக்கொண்டோ அல்லது ருத்திரங்களை கொண்டே ஜபிக்கலாம். பவளம், முத்து, ஸ்படிகம், ஸ்வர்ண மணிமாலைகளைக் கொண்டு ஜபிக்கலாம், பட்டுத்துணிமீதோ, பலகை மீதோ அமர்ந்து செய்யலாம். மனதை அலையவிடாமல் ஒரு நிலைப் படுத்தி மகிழ்வுடன் செய்ய வேண்டும்.
5 கோடிமுறை சிவாலயம் நிர்மாணம் செய்த பலன்.
9 கோடிமுறை மனது தூய்மையடையும்.
18 கோடிமுறை நீரில் நடக்கலாம்.
27 கோடிமுறை அக்னி தத்துவம் வெல்லலாம்.
36 கோடிமுறை வாயு தத்துவம் வெல்லலாம்.
45 கோடிமுறை ஆகாய தத்துவம் வெல்லலாம்.
54 கோடிமுறை ஐந்து குணங்களை வெல்லலாம்
63 கோடிமுறை காரியத்தில் ஜெயம்.
72 கோடிமுறை கோபத்தை வெற்றி கொள்ளலாம்
81 கோடிமுறை மோகத்தை வெல்லலாம்.
90 கோடிமுறை லோபத்தை வெல்லலாம்.
99 கோடிமுறை மதத்தை வெல்லலாம்.
108கோடிமுறை மோட்சம் செல்லலாம் எனச் சாஸ்திரங்கள் பகர்கின்றன.
பஞ்சாக்கரம் ஐந்து வகை!
பஞ்சாட்சரத்தில் நமசிவய என்பது ஸ்தூல பஞ்சாக்கரம்,
சிவயநம என்பது சூக்ம பஞ்சாக்கரம்,
சிவய சிவ என்பது அதிசூக்ம பஞ்சாக்கரம்,
சிவசிவ என்பது காரண பஞ்சாக்கரம்,
சி என்பது மகாகாரண பஞ்சாக்கரம். இதைச் சொல்ல நாள் கிழமை நேரம் பார்க்க வேண்டியதில்லை. எப்போது வேண்டுமானாலும் யார்வேண்டுமானாலும் குரு அருள் பெற்று ஜபித்து பயன் பெறலாம்.
சி- பேசா எழுத்து
வ- பேசும் எழுத்து
சூட்சமம்-காணமுடியாதது. -சிவயநம என மனதுக்குள் சொல்லி தியானித்தால் மனதில் உறைவார்.
ஸ்தூல-கண்ணால் காணக்கூடியது. -நமசிவய என சொல்லி உச்சரித்தால் ஈசன் கண்களுக்கு புலப்படுவார்.
நமசிவய என்கிற பஞ்சாக்கரத்துடன் முன்பு ஓங்காரத்தை சேர்த்து சொல்லும்போது அதன் சக்தி அதிகரிக்கப் படுகின்றது. அப்படி பஞ்சாக்கரத்துடன் ஓம் சேர்த்து ஓம்நமசிவய எனச் சொல்வது சிவஷடாக்ஷரி மந்திரம் எனப்படும்.
எல்லோரும் சொல்லுங்கள்.
ஓம் நமசிவய! ஓம் நமசிவய! ஓம் நமசிவய! ஓம் நமசிவய! ஓம் நமசிவய!
ஓம் நமசிவய என்றுதான் சொல்ல வேண்டும். ஓம் நமசிவாய எனச் சொல்லக் கூடாது. எல்லோரும் சொல்லுகின்றார்களே என நீங்களும் சொல்லலாம். அதில் பயன் ஏதுமில்லை. சரி. அப்படியென்றால் அந்த பஞ்சாக்கரத்தை எப்படி பயனுள்ளதாக மாற்றுவது என்றால் அதை ஒரு மந்திரமாக பாவித்து குருவின் அருளாசியுடன் செவியில் வாங்கி மனதில் பதியவைத்து பின் ஆத்மார்த்தமாக உச்சரிக்க வேண்டும். உள்ளத்தின் உள்ளிருந்து அடிவயிற்றிலிருந்து உச்சரிக்கவேண்டும் அப்போதுதான் அதன் அதிர்வுகளை நீங்கள் உணரமுடியும். அந்த அதிர்வுகளே உடலுக்கு உள்ளத்திற்கு ஆன்மாவிற்குப் பயன் தரக்கூடியவை
தீக்ஷை-தீட்சை என்பது ஒரு பிறப்பாகும். ஒரு உடலும் அதனுள் இருக்கும் ஆத்மாவும் ஒரு புதிய சங்கல்பத்துடன் இதுவரை இருந்த நிலையிலிருந்து புதிய நிலையைத் தேர்ந்தெடுத்து அதில் வாசம் செய்யப் போவதற்கு உடலுக்கும் அதனுள் இருக்கும் ஆத்மாவுற்கும் ஓர் அனுமதி. அது புனிதத்தின் அடையாளம். ஆன்மாவின் மேனிலைக்கு ஆரம்ப நிலை.
கர்ப்பத்திலிருந்து வெளியே வரும்பொழுது முதல் பிறப்பு- மாதா பிதா
யக்ஞோப வீதத்தின்போது இரண்டாம் பிறவி- காயத்திரி மாதாவாகவும்
தீட்சையின்போது மூன்றாம் பிறவி- ஆச்சாரியர் பிதாவாகவும் சொல்லப்படும்.
யக்ஞோப வீதம் இல்லாநிலையில் தீட்சை இரண்டாம் பிறப்பாக கருதப்படும்.
திருமால் கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனாக மானுட அவதாரம் செய்து ஜாம்பவதியை மணந்து புத்திர பாக்கியம் இல்லாததால் உபமன்யு முனிவரை அனுகி தனக்கு சிவ தீட்சை அளித்து பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்கும்படி கேட்டார். வியாக்ரபாதர் என்ற மாபெரும் தபஸ்வியின் புதல்வர்தான் உபமன்யு. அருட்செல்வம் பெற்றிருந்த வியாக்ரபாதர் பொருட்செல்வம் இல்லாததால் வீட்டின் வறுமயை உணராத சிறுவன் உபமன்யு பாலுக்காக அழுதான். போன ஜென்மத்தில் சிவனையும் அவன் நாமத்தையும் மறந்ததால்தான் இந்த நிலை எனத் தாய் சொல்லக் கேட்ட சிறுவன் காட்டிற்குச் சென்று தவமிருக்க ஈசன் தேவேந்திரனாக காட்சி. வரத்தைக் கேள். சிவனைப் போலவே வேண்டியதை தரவல்லவன் என்பதைக் கேட்ட பாலகன் வெகுண்டு சிவ நிந்தனை செய்தாய் அதற்கு தண்டனையாக தங்களை சாம்பலாக்குகின்றேன் என திருநீற்றை எடுத்து சிவ நாமத்தை ஜபிக்க தேவேந்திரன் போல் வந்த சிவன் மாயமானார். அந்த யோகாக்கினியிலேயே தன் உயிரை மாய்த்துக் கொள்ளச் சென்ற பாலகனைச் சங்கரன் சங்கரியுடன் காட்சி அருள். அப்படிப்பட்ட உத்தமமுனியான உபமன்யு வந்திருப்பது கண்ணன் என்று தெரிந்து மானசீகமாக நமஸ்கரித்தார். பின்னர் அவருக்கு குருவாக இருந்து தீட்சையளித்து பஞ்சாட்சார மந்திரத்தை உபதேசித்தார்.
உண்மையில் அந்த மந்திரத்தை ஜபிக்க நினைப்பவர்கள் இறைவனை மனதில் நிறுத்தி உள்ளத் தூய்மையுடன் உரிய தட்சணையை கோவிலின் உண்டியலில் செலுத்திவிட்டு வந்தீர்களானால் அதையே அடியேன் குருவின் தட்சினையாக ஏற்று உங்களுக்கு அந்த குரு மந்திரத்தை உபதேசிக்கின்றேன். இப்போது கைவசம் பொருள் இல்லை யென்றாலும் மனதால் இறையை நினைத்து குருவாக அடியேனை ஏற்று மனதில் வாங்கிக் கொள்ளுங்கள் பின் உங்களால் முடிந்த அன்று உண்டியலில் காணிக்கை செலுத்தி பின் மனதில் நினைத்து ஜபியுங்கள். பஞ்சாக்கார மந்திர பலனை அடைவீர்.
வேதத்தின் இதயம் ஸ்ரீ ருத்திரம்! வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் உண்மையாக நடந்த நிகழ்வுகளின் பின்னனியே. அவை மனித ஆன்மாக்களுக்கு வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துபவை. யாரையும் உயர்த்தவோ தாழ்த்தவோ பாகுபாடுகளைப் பார்க்கவோ சொல்லப்பட்டவை அன்று. ஒன்றாக இருந்த யஜுர் வேதம் துவாபர யுகத்தில் தான் ரிக், யஜுர், சாம, அதர்வன என நான்காகப் பிரிக்கப்பட்டது. வேதம் என்றால் அறிவு. ரிக் யஜுர் சாமம் அதர்வன என்ற நான்கில் அதர்வன மற்ற மூன்றின் தொகுப்பு. அதனால் வேதம் ‘த்ரயா’ என்பர். மூன்றினுள் நடுவனவாய் இருப்பது யஜுர் வேதமாகும். அந்த யஜுர் வேதத்தின் மையத்தில் இருக்கும் தைத்ரீய ஸம்ஹிதையின் ஏழு காண்டங்களுள் நான்காவது காண்டத்தின் நடு நாயகமாக அதன் மையத்துள் உள்ள காண்டத்துள் 11 அனுவாகங்களை உடையது திரு உருத்திரம் என்பது. அது 101 வரிகளை உடையது. இருதய ஸ்தானமாகிய 51 வரியில் ‘நமசிவய’ “சிவதரய” என்று திரு ஐந்தெழுத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பாகும். அதன் மத்தியில் சிவ என்ற இரண்டு அக்ஷரம் அடங்கியிருப்பதால் சிவ பஞ்சாட்சரம் வேதத்தின் இதயம் எனப்படும்
சகல கலைகளுக்கும் அன்னை சாவித்திரி. அவர் இதய கமலத்தில் தோன்றும் மகா புருஷர்கள் மூவர்.. அவர் மனதில் தோன்றும் மகாபுருஷர்- ரிக்வேதம். அவர் (ரிக்வேதம்) மனத்தில் தோன்றுவது யஜூர் வேதம். அவர் (யஜூர் வேதம்) மனதில் காண்பவர் சாம வேதம். சாமவேதமே சிவனின் பெருமையைக் கூறுவது.
மகாவிஷ்ணு ரிக் வேதத்தை ஓதி எல்லாப் பாவங்களையும் நீக்குவார்.
பிரம்மா யஜுர் வேதத்தை ஓதி எல்லாக் கர்மாக்களையும் செய்கிறார்.
பரம சிவனார் சாம வேதத்தை ஓதி எல்லாப் பாவங்களையும் அழிப்பார்.
எல்லாவற்றிற்குமுள்ளே வேதத்தினுள்ளே வேதமாய் ஜோதியாய் இருப்பது சிவனே!
திருமுறைகளில் தேவாரத்துள் நடுவான அப்பர் தேவாரத்தில் உள்ள குறுந்தொகையில் நடுப்பதிகமான 51வது பதிகம் பாலத்துறை பதிகமாகும். இப்பதிகத்தின் நடுப்பாடலாக உள்ள ‘விண்ணினார் பணிந்து’ என்று தொடங்கும் பாடலின் நடுவில் சூட்சும பஞ்சாரம் ஆன ‘சிவய’ என்று இயற்றியுள்ளார்.
மூலாதாரம், ஸ்வதிட்டாணாம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சகஸ்ரராம் என்ற ஏழும் மனித உடம்பின் ஆதாரங்கள். மூலாதாரத்தில் கணபதியும், ஸ்வதிட்டாணாத்தில் பிரம்மாவும் சரஸ்வதியும், மணிப்பூரகத்தில் மகாவிஷ்ணுவும், ஸ்ரீமகாலட்சுமியும், அநாகதத்தில் ருத்திரனும், பார்வதியும், விசுக்தியில் மகேஸ்வரரும் மகேஸ்வரியும், ஆக்ஞையில் சாம்பசிவரும் மனோன்மணியும், சகஸ்ரராமில் பராசக்தியும் பரமேஸ்வரனும் இருந்து அருள்புரிந்து உடலை இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
மூலாதாரத்தில் ஓம் மும், ஸ்வதிட்டாணாத்தில் ந என்ற அட்சரமும், மணிப்பூரகத்தில் ம என்ற அட்சரமும், அநாகதத்தில் சி என்ற அட்சரமும், விசுக்தியில் வ என்ற அட்சரமும், ஆக்ஞையில் ய என்ற அட்சரமும் கொண்டு அந்தந்த இடத்திற்குரிய கடவுள்கள் அருள்புரிந்து உடலை இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
சி-சிவம்;
-திருவருள்,
-ஆன்மா,
-திரோதமலம்,
-ஆணவமலம்.
திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து, திருவருளால் சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள்.
சுருக்கமாகச் சொன்னால், "சிவயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' பிறவிப்பிணியில் இருந்து விடுபட "சிவயநம' என்போம்.
சிவயநம –சிவநாமம் எப்படிச் சிறந்தது - நாரதர் அறிந்தது!
ஒருமுறை எப்போதும் ஒம் நமோ நாராயணாய எனும் நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.
பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள வண்டு பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார்.
நாரதரும் அப்படியே கேட்டார். இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, "தந்தையே! சிவயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.
பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையினமான ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, ஆந்தையும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.
பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள விலங்கினமான அந்த கன்றுக் குட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
தந்தையே! “கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார். நீ போ! என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.
நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை.
\இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை.
"இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் மனிதப்பிறப்பான குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.
நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.
அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையாகப் பிறந்தேன். பிறகு கன்றாகப் பிறந்தேன். இப்போது மனிதனாகப் பிறந்துள்ளேன் பிறவியில் உயரிய மானிடப் பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும் என்றது. இதை அனைத்து ஆன்மாக்களும் உணரல் வேண்டும். முக்தி தரும் ஒப்பற்ற மந்திரம் ‘நமசிவய’
பிராயச்சித்தம்!- கோகர்ண சித்தர் தனது தாயார் காளை மாட்டை அடித்து துன்புறுத்தியதையும், தன் மனைவி ஒர் நாயைக் கொன்றதையும் கண்டு உள்ளம் உடைந்து அனைத்தையும் வெறுத்து ஊர் ஊராக சுற்றி இறுதில் தேப்பெருமா நல்லூர் வந்து தவம். தாயும் மனைவியும் இறந்து விட்டார்கள் என்ற செய்தி கிடைத்ததும் அவர்கள் செய்த பாவத்திற்கு நரகத்தின் துன்புறுவார்கள் என்பதால் அவர்களுக்காக பிரயசித்தம் செய்ய விரும்பினார். அந்த நினைவில் ஒரு சுலோகம் எழுத நினைத்தவர், 'தெரிந்தோ தெரியாமலோ செய்த பாபங்கள் பெரும்பாவமாக இருப்பினும்... என்று எழுதி விட்டு அடுத்த வரியை எப்படி எழுதுவது எனப் புரியாமல் அப்படியே வீட்டின் கூரையில் சொருகிவிட்டு நீராடி வந்து பார்க்கும்போது அதில்.. ஏகாந்தத்திலிருந்து சிவநாமத்தை உச்சரிப்பதே பிராயச்சித்தமாம். என்று முடிக்கப் பெற்றிருந்தது. ருத்ராட்சேஸ்வரரின் திருவருளே அது என ஆனந்தமுற்று தனித்திருந்து சிவநாமம் உச்சரித்து அந்த பலனை தன் தாய்க்கும் மனைவிக்கும் நீர்வார்த்து தர்ப்பணம் செய்து அவர்கள் பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்தார்.நாகேஸ்வரத்திலிருந்து-1கி.மீ – தேப்பெருமா நல்லூர்
ஐந்தெழுத்து பஞ்சாக்கரம் ஓதுவது மட்டும் புண்ணியமல்ல! அறியாமல் செய்த நல்ல செயல்களினாலும் புண்ணியமே!
கம்சபுரத்தில் வாழ்திருந்த வேடர்களின் தலைவன் காளகண்டன். அஞ்ஞானமுடையவன். ஒருநாள் வேட்டையாடிவிட்டு காட்டிலிருந்து கம்சபுரம் நோக்கி வரும் வேளையில் உச்சிக்காலம் ஆனதால் வெய்யிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க அருகிலிருந்த கோவிலுக்குள் புகுந்து இளைப்பாறினான். அந்த மண்டபம் பராசரமுனிவருக்கு இறைவன் தாண்டவ தரிசனம் தந்து அருளிய முக்தி மண்டபம். அந்த மண்டபத்தின் அருமை தெரியாதவன் சாவகாசமாக தாம்பூலம் தரித்தான். கையில் இருந்த சுண்ணாம்பை சுவரில் தடவினான். அங்கு இருந்த சிறிய விரிசலின் சந்தில் அந்த சுண்ணாம்பு பதிந்தது. இந்த கோவில் சுண்ணாம்பு மணலும் கலந்த கலவையால் கட்டப்பட்டது. வெயில் தாழ்ந்ததும் புறப்பட்டுச் சென்றான். சில காலம் கழித்து அவன் இறந்தான். அப்போது கைலாசத்திலிருந்து விமானம் வந்து அவனை அழைத்துப் போனது. அதைக் கண்ட தேவர்கள் ஆச்சரியப்பட, காளகண்டன் துஷ்டன், துர்நடத்தை உடையவன். பாவ புண்ணியங்களைப் பற்றி ஒன்றும் அறியாதவன். அறியாமலேயே பாவச் செயல்களைச் செய்துள்ளான். அறியாமல் அவன் செய்த பாவங்கள் அவன் செய்த ஒரு புண்ணியச் செயலினால் கழிந்தது. அது கோவில் சுவரில் சுண்ணாம்பு தடவியதே. அந்த காரியம் அணுவளவு இருந்தாலும் அது கோவில் திருப்பணி செய்த சிவ புண்ணியம். அதன் விளைவாக அவனுக்கு கைலாச வாசம்-.கம்சபுரம்-கபிலேஸ்வரர்-சௌந்தரநாயகி விஜயபுரம்-திருவாரூர்
பஞ்சாக்கரம்- பஞ்ச எழுத்து- நமசிவய அதுபோல அந்த பஞ்ச எழுத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவைகள்.
பஞ்ச பூதங்கள்- நீர், நிலம், அக்னி, வாயு, ஆகாயம்
பஞ்ச தன்மாத்திரை- சப்தம், ஸ்பரிஸம், ரூபம், ரசம், கந்தம்
பஞ்ச கர்மேந்திரியம்- வாக்கு, கை, கால், குதம், உபஸ்தம்
பஞ்ச ஞானேந்திரியம்- கண், காது, மூக்கு, வாய், மெய்
அந்தக்கண பஞ்சகம்- புத்தி, அகங்காரம், சித்தம், மனம், உள்ளம்
பஞ்ச கலைகள்- நிவர்த்தி, பிரதிஷ்சை, வித்யை, சாந்தி, சாந்தியாதீதம்
பஞ்ச சாதாக்யம்- கன்மம், கர்த்துரு, மூர்த்தி, அமூர்த்தி, சிவம்
பஞ்ச சக்தி- பராசக்தி, ஆதிசக்தி. இச்சா சக்தி, ஞானசக்தி, க்ரியா சக்தி
பஞ்ச பிரும்மம்- ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம்
பஞ்ச கர்த்தாக்கள்- பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன்
பஞ்ச கிருத்தியங்கள்- சிருஷ்டி, ஸ்திதி, ஸம்காரம், திரோதானம், அனுக்கிரகம்,
பஞ்ச வர்ணங்கள்- அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம்
நமசிவய என்பதில் ந-சத்யஜோதிவடிவம். ம-விஷ்னுரூபமானது. சி-தேயு- ருத்ர சொரூபம், வ- வாயு- மகேஸ்வர வடிவம், ய- ஆகாய வடிவானது- சிவ ரூபம். இதில் ந-க்குள் ம-வும், நம-க்குள் வ-வும், நமவ- குள் ய-வும், நமவய-க்குள் சி அடங்கும். இந்த 5 அட்சரங்களும் பஞ்சபூத பிரதிநிதிகள். நமசிவய, மசிவயந, சிவயநம, வயநமசி, யநமசிவ என்றும் வழங்கப்பெறும்.
சிவனும் ஹரியும் அந்தகனுடன் போர்புரிந்தபோது சிவனே உங்களால்தான் அந்தகனைக் கொல்ல முடியும் என்று ஹரி சொல்லக்கேட்ட சிவன் தன் சூலத்தால் அந்தகனைக் குத்தி தாண்டவம் புரிய, சிவசூலத்தால் குத்தப்பட்டதும் மனத் தூய்மையடைந்து அந்தகன் சிவஸ்துதி சொல்ல அவனை சூலத்திலிருந்து கீழே இறக்கி தன் சிவகணங்களுடன் ஒருவராக வைத்தார். எந்த நிலையிலும் இறைவனை வழிபாடு செய்தால் நற்பலன் கிடைக்கும்!
ஆண்டவனுடைய நாமமாகிய வாக்கை நாக்கில் கொண்டால் அது எங்கும் செல்லக்கூடிய வாக்காகும். அதுவே செல்வாக்கு. அன்பினால் அனைவரிடமும் ஆசி வார்த்தை கூற வேண்டும் ஆசை வார்த்தை கூறக்கூடாது. அப்போது நல்ல மனமும் மாமலரான் நோக்காகிய மனநிறைவு ஏற்படும்.
மனதில் தியானிப்பதை மானஸம் என்றும், தான் மட்டும் கேட்கும்படியாக மூலமந்திரத்தை ஜபிப்பது வாசிகம் என்றும், விக்ரஹ, யந்திர வடிவமாக பூஜிப்பது காயிகம் எனப்படும். இது என்னவென்றால் நாம் மானசீகமாக தகவல் சொல்வது. இறைவன் உன் உள்ளே இருப்பதனால் மானசீகமாக மனதில் தியானிப்பதே போதுமானது. தனக்கு மட்டும் கேட்கும்படியாக மந்திரங்களை ஜபித்து நல்ல பலன் பெறுவீர்களாக!
தாரகமந்திரம்!
சுத்தியுடன் பஞ்சாக்கரத்தை ஓதினால் ஜபித்தல் ஓர் ஆனந்தம் உங்களுக்குள் ஏற்படுவதை உணர்வீர். ஐந்தெழுத்து பஞ்சாக்கரம் தாரகம் எனப்படும். தாரகம் என்றால் ஒரு உச்சவிசை, ஆதாரமானது எனப் பொருள்படும். மந்திரங்களுக்கெல்லாம் ஆதாரனமானது.

பிரதோஷம்!
உதயகால பிரதோஷ வேளையில் சிருஷ்டியும், சந்தியா கால பிரதோஷத்தில் சம்ஹாரமும் நடக்கும் என்கின்றன வேதங்கள். அதாவது ஒவ்வொரு உயிரும் காலையில் விழித்து எழுவதை ஒரு சிருஷ்டிக்குச் சமம் என்றும், உறங்கச் செல்வதை பிரளயத்திற்குப்பின் வரும் ஒடுக்கத்திற்கு நிகராகவும் கருதப்படும்.
அதிகாலை 0430 மணி முதல் 0600வரையில் உள்ள காலத்தை பிரம்ம முகூர்த்தம் என்றும் அதுவே உதயகால பிரதோஷம் அல்லது உக்ஷத் காலம் எனப்படும். மாலை 0430 மணி முதல் 0600வரையில் உள்ள காலம் சந்தியா கால பிரதோஷம் ஆகும் இதையே நாம் பிரதோஷகாலம் எனப் பொதுவாகச் சொல்கின்றோம்.
பிரதோஷம் என்பதில் பிர என்பது அளவற்ற என்றும் தோஷம் என்றால் தீமைகள் என்றும் அர்த்தம். அதாவது அளவுகடந்த தீமைகள் தோன்றும் காலம். அப்படியென்றால் தோஷங்கள் தாக்கி தீமைகள் வரக்கூடும் என்பதால் அந்த வேளையில் ஏற்படும் தீமைகளை அழிந்து அவற்றிலிருந்து நம்மைக் காக்கும் இறைவனை அந்த நேரத்திலே வழிபடுதலே சிறப்பு என்பதாலேயே பிரதோஷ வழிபாடு முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது.
தீமைகள் தோன்றும் அந்த பிரதோஷகாலத்தில் மற்ற தெய்வங்களை விட்டு ஏன் நந்திதேவரையும் சிவபெருமானையும் மட்டும் வழிபடவேண்டும்.
காஸ்யப முனியின் மனைவி அதிதி- இவரின் குழந்தைகள் இந்திரன் உள்பட தேவர்கள் மற்றும் பன்னிரண்டு ஆதித்தியர்கள். இன்னொரு மனைவி திதி- இவரின் குழந்தைகள் இரணியாட்சகன், இரணியகசிபு மற்றும் நிறைய அசுரர்கள். தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் அடிதடித் தகராறுகள் நடந்து கொண்டேயிருந்தன. சகோதர்களான அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் தோன்றிய பிரச்சனைகளே அடிக்கடி அசுரர்- தேவர் யுத்தம் நடைபெறக் காரணமானது. அசுரர்களின் ஆதிக்கத்தால் முதலில் பாதிக்கப்படுபவன் இந்திரன். ஹிரண்யாட்சசன், ஹிரண்யகசிபு, முதல் இராவணன், இந்திரஜித் போன்ற அசுரர்களால் ஆக்கிரமகிக்கப்பட்டு சிறைப்பட்டு அல்லல்களுக்கு ஆளாகி பிரம்மா, விஷ்ணு, சிவனின் அனுக்கிரகத்தால் மீண்டும் போராடி தேவருலகத்தை அடைந்துள்ளான்.
தொடரும் பிரச்சனைகளுக்கு சுகுமமான முடிவிற்கு வர பிரம்மா கூறிய ஆலோசனையே பாற்கடல் கடையக் காரணம். எல்லோரும் உணவு ஏதும் உண்னாமல் உபவாசமிருந்து ஏகாதசி அன்று மந்தார மலையை மத்தாகக் கொண்டு வாசுகி நாகத்தை கயிறாக்கி பாற்கடலைக் கடைய திட்டம் தீட்டப்பட்டது திருமாலும் தேவந்திரனுக்காக இதற்கு ஒப்புக்கொண்டார். மந்தாரமலை சம நிலையில் இல்லாமல் கீழும் மேலும் சென்றுவர அதை ஒர் நிலையில் நிறுத்த திருமால் கூர்ம உருவெடுத்து கடலின் அடியில் சென்று மந்தாரமலையைத் தாங்கி ஓர் நிலையில் இருக்கச் செய்தார். பாற்கடல் கடைய ஆரம்பித்து நீண்ட நேரம் ஆகியும் ஒன்றும் வரவில்லை.
பிரம்மா ஜாம்பவானை அழைத்து இவ்வளவு நேரம் கடைந்தும் பலன் ஒன்றுமில்லை. நீங்கள் சில ஒளஷதிகளை கடலில் கலக்குங்கள் என்றார். தயிரைக் கடைந்தால் அதனுள்ளிருந்து வெண்ணெய் வருவதும் அதைக் காய்ச்ச நெய் வருவதும் எல்லோருக்கும் தெரியும் அதைப் போலவே தொடர்ந்து பாற்கடலை கடைய அதிலிருந்து சிறிது நேரத்தில் வெள்ளையான ரசம் வர பிரம்மா அதை ஓர் கலசத்தில் பிடித்துவைத்தார். ஐராவதம் யாணை, மிகுந்த நாற்றத்துடன்-மதுரசம், குளுமையான-சந்திரன், மூத்ததேவி-ஜேஸ்டாதேவி, லட்சுமி, பின்னர் ரம்பை, மேனகா, கிருதாசி, ஸ்கேசி, மஞ்சுகேஷி, சித்திரலேகை ஆகிய நடன மாதர்கள், பின்னர் நிதிகள், தினமும் இரத்தினங்களை சிந்தும் இரண்டு திவ்ய புருஷர்கள் சங்க பத்ம நிதிகள் (குபேரனுக்கு நவநிதி அளிப்பவர்கள்) இருவரையும் லஷ்மியுடன் இருக்கச் செய்தார் பிரம்மா,
பின்னர் உச்சைசிரவஸ் என்ற வெள்ளைக்குதிரை, பின் கல்பதரு, காமதேனு, சூரியமணி, ஸ்யமந்தக மணி, கௌஸ்துப மணி, தேவதந்த சங்கு, புஷ்பக விமானம், நந்திகோஷ ரதம் தோன்றியது. வெளிப்பட்ட பொருள்கள் ஒவ்வொன்றும் தனக்கு என உரிமை கொண்டாடி ஒரே கூச்சல் குழப்பம். சிவன் வந்தார். இவற்றை பத்திரப்படுத்திவிட்டு எதற்காக ஆரம்பித்தீர்களோ அதற்காக மேலும் கடையுங்கள் இறுதியில் முடிவு செய்யலாம் எனச் சொல்லிச் சென்றார்..
கடையலைத் தொடர, மேலும் மேலும் கடைய வெப்பம் பரவியது. ஆலமாகிய நஞ்சு உற்பத்தியாகி கடலில் கருநிறம் சூழ்ந்து அனைவரும் அதன் பாதிப்பை உணரும் முன்பாக, கயிறாக உபயோகிகப்பட்ட பாம்பு வாசுகி உடல் உபாதை தாங்காமல் காலம் எனும் விஷம் கக்க மொத்தமாக ஆலகால விஷமாகி உயிர்களை அழிக்கத் தொடங்க உணர்ந்த தேவர்கள் கயிலைநாதரிடம் முறையிடச் செல்ல, காவலில் இருந்த நந்தி உயிர்கள் படும் அவஸ்தையைக் கண்டு ஈசனிடம் தெரிவிக்க அந்த ஆலகாலத்தைத் திரட்டி எடுத்த சுந்தரர் சிவனிடம் கொடுக்க அவர் உலக நலன் கருதி விழுங்க உமை அவர் கண்டத்தைப் பிடிக்க ஆலகால விஷத்தினால் சிவன் ஒரு நிமிடம் நிலைதடுமாறி பின் நீலகண்டனாக பரிமளித்தார்.
ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஓர் பெண்ணிருப்பாள்!
கணவனுடைய செயல்களுக்கு மனைவி உடந்தையாக இருந்து செயலாற்றினால்தான் அது வெற்றிகரமாக இருக்கும். என்ன புரியவில்லையா! சிவன் விஷத்தை விழுங்குகின்றார் என்று பதறி பார்வதி கணவரைக் காப்பாற்ற அதை தடுக்கின்றார் என்றுதான் நினைப்பீர்கள். உண்மை அதுவல்ல!
அம்பிகை பரமேஸ்வரன் ஆலகாலத்தை விழுங்கினதை தடுக்க அவர் கண்டத்தைப் பிடிக்கவில்லை. அதாவது தன் கணவரின் நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி தடுத்துள்ளார்! புரியவில்லையா!
ஈசன் ஆதியும் அந்தமும் இல்லாதவர். அதாவது அவருக்கு பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. பிறப்பும் இறப்பும் இல்லா அநாதியானவர். எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்த அந்த எண் குணத்தானை எல்லாம் வல்லவனை எல்லாமுமாய் இருப்பவனை அந்த ஆலகால நஞ்சு என்ன செய்யும் பக்தர்களே சற்று யோசியுங்கள்! பின் அவர் எந்த நோக்கத்திற்காக நஞ்சை விழுங்கினார். கீழே கடலில் கலந்தால் கடல்வாழ் உயிரினங்களும், காற்றில் கலந்தால் மற்ற உயிர்களுக்கும் உலகத்திற்கும் எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என விழுங்கினார்.
சரி அப்படியென்றால் பார்வதி ஏன் அதைத் தடுத்தார். அங்கும் ஓர் உண்மை ஒளிந்திருக்கின்றது. அதாவது சகல உலக உயிர்களும் ஈசனுடைய அம்சம். சர்வமும் அவருக்குள்ளே அடக்கம். அதனால் அவர் ஆடினால் உலகம் ஆடும். அவர் இயக்கம் சகலத்தின் இயக்கம். நீங்கள் அறிந்திருப்பீர்கள் உமை ஈசனின் கண்களை மூட உலகம் ஸ்பித்ததை. இப்படி எல்லாமும் ஆன இறைவனின் உடலுக்குள் நஞ்சு சென்றால் தோற்றமோ அழிவோ இல்லாத ஈசனுக்கு ஒன்றும் ஆகாது. அவருக்குள்ளே இருக்கின்ற மற்றெல்லாவற்றிற்கும் அழிவு ஏற்படக்கூடாது மேலும் எல்லாம் காப்பவன் ஈசன் அவனது செயல்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மனைவியான பார்வதி தன் கடமையாக ஈசனின் கண்டத்தைப் பிடித்து கணவன் நோக்கத்திற்கு உதவி செய்தாள். இதைக்கொண்டே ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஓர் பெண்ணிருப்பாள் என்பது வழக்கமானது.
கடைசியில் எதிர்பார்த்த அமுதம் திரண்டது
அமுதம் பெற்றதும் ஈசனைக் காண அனைவரும் சென்றனர். ஆலகாலம் தன் ஆரோக்கியத்தை பாதிக்கவில்லை, பாதிக்காது என்பதை உணர்த்த ஈசன் ஆனந்த தாண்டவம் நிகழ்த்தினார். மக்கள் உயிர் இன்னலை அடைந்தபோது நெஞ்சு பதறி தன்னிடம் வந்து தகவல் சொல்லிய நந்தியை பெருமைப் படுத்த எண்ணம் கொண்டு தன் ஆடலை நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையில் ஆட அந்த அற்புதமான ஆட்டத்தால் உலகம் ஆனந்தமடைந்தது. எல்லா உயிர்களும் அவரிடம் ஒன்றி இருந்ததால் பிரதோஷங்கள் எதுவும் எந்த உயிரையும் தீண்டாமல் விலகின. எல்லா உயிர்களையும் சிவபெருமான் தம்மிடம் ஒன்றியிருக்கச் செய்த காலமே பிரதோஷகாலம்.
அன்றைய தினம் சனிக்கிழமை திரயோதசி என்பதால் தினமும் பிரதோஷவேளை வந்தாலும், திரயோதசி தினத்தன்று வரும் பிரதோஷவேளையே சிறப்பானதாகும். மேலும் பிரதோஷம் ஐந்து வகைப்படும்.
தின பிரதோஷம்-தினமும் மாலை 0430-0600 வரை
பட்சப் பிரதோஷாம்-பௌர்ணமிக்கு முன்பாக சுக்லபட்ச பிரதோஷம்
மாதப் பிரதோஷம்- கிருஷ்ணபட்ச திரதோதசி தின மாலை வேளை.
மகா பிரதோஷம்-மாதம் தோறும் வரும் கிருஷ்ணபட்ச திரயோதசி தினம்
சனிக்கிழமையாயிருந்தால். பிரளயப் பிரதோஷம்-உலக உயிர்கள் அனைத்தும் தன்னுள் ஒடுங்கியிருக்க ஈசன் ஊழித்தாண்டவம் ஆடும் காலம்.
பௌர்ணமிக்குபின் வரும் கிருஷ்ணபட்ச திரயோதசி திதி, அமாவாசைக்குபின் வரும் சுக்லபட்ச திரயோதசி திதி ஆகிய இரண்டுமே மாதம் இருமுறை வரும் பிரதோஷ வழிபாட்டிற்குரிய நாட்கள்.

லிங்கோத்பவக்காலம்!
எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியம் லிங்கோத் பவ காலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்து பிறவா பயனை அடைய முயற்சிப்பது. அந்நேரம் சிவபெருமான் அருவுருவமாக இருந்து பக்தர்களுக்கு அருள் புரிவதாக ஐதீகம்.. திரியோதசியும் சதுர்தசியும் சந்திக்கும் காலம் லிங்கோத்பவ காலம். அதாவுது 13 நாள் முடிந்து 14 வது நாள் தொடங்கும் காலம். இந்த இரு வேளையும் சந்திக்கும் காலம் தமிழில் சதுர்தசி என்பதை சிவராத்திரி (இரவு) என்பார். இது ஒவ்வொரு வளர்பிறை தேய்பிறை அன்றும் வரும். லிங்கோத்பவ காலம் எப்பொழுது தோன்றும் என்று எந்த பஞ்சாங்கத்திலும் குறிப்பிடுவது இல்லை. நாம் கவனித்து அந்த வேளையில் லிங்க தரிசனம் செய்தால் சிவபெருமானை அடைய வாய்ப்பு பிரகாசம். மகா சிவராத்திரி மூன்றாம் காலம் லிங்கோத்பவ காலம் எனப்படும். மாசி மதம் மஹா சிவ ராத்திரி இரவு முழுவதும் உயிர்கள் அனைத்தும் கண்விழித்து பெருமானை வழிபட்டால் சிவனிடத்தில் செல்லலாம் என்று வேதங்கள் சொல்கின்றது. லிங்கோத்பவ வேலையில் லிங்க தரிசனம் செய்ய முடியாவிட்டாலும் நம்முடைய மனதால் எண்ணத்தால் நாவால் அஷ்ட சிம்மாசன நாமம் சொல்லலாம்..
ஸ்ரீ பவாய நம
ஸ்ரீ சர்வாய நம
ஸ்ரீ ருத்ராய நம
ஸ்ரீ பசுபதே நம
ஸ்ரீ உக்ராய நம
ஸ்ரீ மகாதேவாய நம
ஸ்ரீ பீமாய நம
ஸ்ரீ ஈசானாய நம
இந்த நாமங்களைச் சொல்ல முடியாவிட்டால்
நமசிவய நம
மசிவயந நம
சிவயநம நம
வயநமசி நம
யநமசிவ நம
என்று சொல்ல சொல்ல சிவ கதியினை அடையலாம்.

முக்குணத்தோன்! நிர்குணத்தோன்! எண்குணத்தான்!
அரி-பெருமாளிடம் சத்வ குணமும், அயன்-பிரம்மாவிடம் சத்வ, ராஜச குணங்களும், அரன்-சிவனிடம் சத்வ, ராஜச, தாமஸ ஆகிய குணங்களும் உள்ளன.. மூன்று குணங்கள் உள்ளதால் சிவனை முக்குணத்தோன் என்று சொல்லலாம், சகுன பிரம்மம்-உருவமாகப் பார்க்கமுடிகின்ற தெய்வீகம் நிர்குண பிரம்மம்- உருவமாகப் பார்க்க முடியாத தெய்வீகம். ஆதலால் சகுன பிரம்மம்/ நிர்குண பிரம்மம் இரண்டில் சிவனை நிர்குணத்தோன் என்றும் சொல்வார்கள். அது மட்டுமல்ல சிவனாரை
நித்தியர்- என்றும் உள்ளவர்,
சருவ வியாபகர்- எங்கும் நிறைந்தவர்,
அநாதிமல முத்தர்- இயல்பாகவே பாசங்களின்று நீங்கினவர்,
சருவஞ்ஞர்- எல்லாம் அறிபவர்,
சருவ கர்த்தா- எல்லாம் செய்பவர்,
நித்தியானந்தர்- என்றும் ஆனந்தமயமானவர்,
சுவதந்திரர்- தன்வயமுள்ளவர் என்பார்.
நிர்குண பிரம்மானது காலம், பிரதேசம், வர்த்தமானம் வாஸ்து இவைகளைத் தாண்டிய நிலையில் உருவம் எடுத்த பின்னர் அவதாரங்கள் நிகழும். அவதாரங்கள் காலத்திற்கு கட்டுப்பட்டவை. வரம்புக்குள் குறுகியிருக்கும் மனத்திற்கு நிர்க்குணம் ஆனந்தமளிக்காது. அப்படி தவறிப் போகும் ஆனந்தத்தை அளிக்கவே உருவ வர்ணனைகள் தோன்றியது. பிரம்மம் வரம்பற்றது. மனதாலும் உடலாலும் சொற்களினாலுமெழும் விவாதங்கள் எட்டமுடியாத உருவம் அடையக் கூடியது. பிரம்மம் எல்லாவற்றிலும் இருப்பதால் எல்லாவற்றிலும் என்பதில் உருவமும் அடங்கும். பிரமத்தின் எந்த பாவமும் பாகமும் பிரம்மமே. அதனால் பிரமத்தை எந்த உருவத்தில் வழிபட்டாலும் மனதிற்கு இனிமையான வழியில் இறையின் சாயுஜ்ய நிலையை அடைவது எளிது.
இதெல்லாம் சரி! இத்தனைக் கடவுள் உருவங்கள் ஏன்!
ஒரே ஓரு ஆன்மாவின் உடல் அன்னைக்கும் தந்தைக்கும் பிள்ளையாகவும், பிள்ளைக்குத் தந்தையாகவும், பேரன் பேத்திகளுக்கு பாட்டனாகவும், அண்ணன், அக்காவிற்கு தம்பியாகவும், தம்பி, தங்கைக்கு அண்ணாகவும், மாமியார், மாமனாருக்கு மருமகனாகவும், மனைவிக்கு கணவனாகவும், உற்றாருக்கு உறவினராகவும் நண்பனுக்கு நண்பனாகவும் இருக்கும்போது எல்லாம் உடையவன் எல்லா உலகங்களையும் உருவாக்கி நிர்வகிக்கும் இறைவன் ஒருவனுக்கு எத்தனை எத்தனை உருவங்கள் இருப்பதில் தவறு ஏதுமில்லை.
ராஜசிக, சாத்விக, தாமசிக புராணங்கள்
புராணங்கள் 18. இவையே மகாபுராணங்கள் எனப்படும் புராணங்களில். புனிதமானதாகச் சொல்லப்படும் எல்ல புராணங்களும் மேலே சொன்ன மூன்று வகையிலேயே சொல்லப்பட்டுள்ளது. படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவை உயர்த்தி சிருஷ்டி பற்றி பெரிய அளவில் கூறுபவை- ராஜசிக புராணங்கள். விஷ்ணு வின் அவதாரங்களைப் புகழ்பவை சாத்விக புராணங்கள். சமயச் சடங்குகளை விவரித்து சிவபெருமானின் புகழை சொல்பவை தாமசிக புராணங்கள் எனப்படும்.
ஒரு உயிருக்கு ஆனந்தம் வேண்டுமென்றால் உடலின் இருக்கும் சத்தும் சித்தும் சேர்ந்தால்தான் ஆனந்தம் ஏற்படும். சத்- சிவனையும் சித்-சக்தியையும் குறிக்கும் சிவனும் சக்தியும் சேர்ந்தால் அதுவே ஆனந்தம். ஆனந்தம் சாதாரணமாக நீடித்து நிலைக்காது. அது அழியாமல் இருக்க சத் தேவைப்படும். சாஸ்வதம்-நிரந்தரம் என்றாலும் அறிவுடன் கூடியிராவிடில் அது பயன்படாது. அதனாலேயே சத் சேர்க்கப் பட்டுள்ளது. ஆத்மா சச்சிதானந்தத்தோடு இருப்பதால் ஆனந்தம் ஏற்படும். அப்படி ஆனந்தத்தை தரும் சத்- சிவனை என்றும் எப்போதும் நினைந்து போற்றுவோம்.
எண்குணத்தான்!
எண்குணத்தான் என்று சிவனைச் சொல்வதுமுண்டு. 1.முக்கண்ணன், 2.அம்பலத்தாடுபவன், 3.நீலகண்டன், 4.சுடலைகாத்தான், 5.அருகன், 6.நெற்றிக்கண்ணன், 7.நீறுபூசியோன், 8.மாறியாடும் பெருமான் என எட்டு நிலைகளைக் கொண்டிருப்பவன்..
அதனால் அவருக்கு ருத்திரன், பவன், சிவன், பசுபதி, ஈசன், பீமன், உக்கிரன், மகாதேவன் என்று எட்டு பெயர்களை பிரம்மன் வைத்தான்.
சகல சராச்சரங்களுக்கும் ஆத்ம சொரூபனாகிய சூரியனில் ருத்திரனாக,
சிருஷ்டி ரகசியத்தை அறிந்தவனாக சிருஷ்டி அனைத்தும் நிற்கும் நீரில் பவனாக,
உயிர்கள் வசிப்பதற்கு ஆதாரமாகிய பூமியில் சிவனாக,
அனைவரின் உடலிலுள்ள ஜடராக்கினி வடிவான தீயில் பசுபதியாக,
உயிர் உடலில் பிராண, அபான, விதான, உதான, சமான வடிவில் காற்றில் ஈசனாக,
உடலின் துவாரங்களில் பரவி வின்னில் பீமனாக,
யாக தீட்சை கொண்டு வேதியர் உடலில் உக்கிரனாக,
ஔடதங்களுக்கு அதிபதியாகி உயிர்களுக்கு தாதாவாக சந்திரனில் மகாதேவனாக
வசிக்கும் சிவனுக்குகந்த நாட்களில் புராணங்களில் வாழ்வு முறைக்கு எடுத்துக் காட்டாக உள்ள நிகழ்வுகளைப் நினைவு கூர்ந்து அனைவரும் பெருமானை வழிபடுங்கள்!

ஜோதிலிங்கம்!
பேரொளியாய் ஒளிப்பிழம்பாய் விளங்கும் ஜோதியிலிருந்து அனைத்து உலகிற்கும் ஆதாரமானதும் வேதங்கள் பூஜித்து கொண்டாடும் ஜோதிலிங்கத்தே தோன்றிய வடிவம் லிங்கம்,
பிரமனும் விஷ்ணுவும் சந்தித்தனர். நான்முகனுக்கும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அண்டங்களைப் படைப்பவர் என்பதால் பிரம்மா கர்வம் கொண்டிருந்தார். அதைச் சோதித்துப் பார்க்க எண்ணிய விஷ்ணு பிரம்மனின் வாய்வழியாக உடம்பிற்குள் போய் உலகங்களைக் கண்டு வெளியில் வந்தார். அனைத்தையும் கண்டீரா என அகங்காரத்துடன் கேட்டார் பிரம்மன். இப்போழுது அனைத்து உலகங்களையும் படைப்பவன் நான் என ஒப்புக் கொள்கின்றீர்களா எனக் கேட்டார். பிரம்மதேவரே அனைத்தையும் கண்டேன் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஆதியும் அந்தமும் காணப்படவில்லையே என்றார். அப்படியானல் உங்களிடம் ஆதியும் அந்தமும் உள்ளதா எனக் கேட்டு விஷ்ணுவின் வாய்வழி உள்சென்ற பிரம்மன் விஷ்ணு வாயை மூடியதால் வெளியில் வரமுடியாமல் உடம்பைச் சுருக்கி விஷ்ணுவின் நாபி வழி வெளியே வந்து தாமரையில் அமர்ந்தார். விஷ்ணுவின் நாபியிலிருந்து தோன்றியதால் விஷ்ணுவின் புத்திரனாக பிரம்மா கருதப்பட்டார்.
இருவரும் சிவனைக் கண்டனர். சிவனைத் தங்களுக்குச் சமமாக ஏற்கலாமா என்று பிரம்மா விஷ்ணுவிடம் கேட்க, சிவன் நம் இருவரையும்விட பலம் பொருந்தியவர் என்று விஷ்ணு சொன்னார். வேதங்கள் உயிர்பெற்றெழுந்து திருமால், பிரம்மா இருவரையும் விட சிவனே உயர்ந்தவர் என்பதை தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியதை விஷ்ணு ஒப்புகொள்ள பிரம்மன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது இருவருக்குமிடையில் பேரொளிப் பிழம்பாய் சோதித்தம்பம் எழுந்தது. அத்தம்பத்தின் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என விண்ணிலிருந்து அசரீரி ஒலித்தது. நான்முகன் அன்னப்பறவை வடிவம் கொண்டு மேலே பறந்து சென்று முடியைக் கண்டு வருவது என்றும் திருமால் வராக வடிவம் கொண்டு அடியை கண்டு வருவது என்று இருவரும் ஓர் உடன் பாட்டிற்கு வந்தனர்,.
பலகாலம் இருவரும் முயற்சித்தும் பலனில்லை. மேலே சென்று கொண்டிருந்த பிரமன் மேலிருந்து கீழ்நோக்கி வந்து கொண்டிருந்த தாழம்பூவை நீ எங்கிருந்து வருகின்றாய்? எனக் கேட்க அது நான் சோதித் தம்பத்தின் உச்சியிலிருந்து பலகாலமாய் வந்து கொண்டிருக்கின்றேன் என்றது. தான் முடியைக் கண்டதற்கு தாழம்பூ சாட்சி சொல்ல வேண்டும் என நான்முகன் வேண்ட தாழம்பூ ஒப்புக் கொள்ள இருவரும் கீழே வந்தனர்.
தன் முயற்சியில் தோல்வியுற்று நிலத்தை அடைந்த திருமாலிடம் நான்முகன் சோதித்தம்பத்தின் முடியைத் தான் கண்டதாகக் கூற தாழம்பூ அதற்கு சான்று அளித்தது. முத்தொழில் புரியும் மூவரில் ஒருவனாக நான்முகன் இருப்பினும் பொய் சொன்னமையால் அவனுக்கு உலகில் எங்கும் தனியாக கோவில் இல்லாமல் போனது.. பொய்ச்சான்று பகர்ந்ததால் தாழம்பூவும் சிவ பூசையிலிருந்து நீக்கப்பட்டது.
நான்முகன் அறிவு வடிவானவன். திருமால் செல்வத்தின் நாயகன். அறிவினாலும் செல்வத்தினாலும் இறைவனைக் காணமுடியாது என்பதை உணர்த்தும் தத்துமே இந்த நிகழ்வு. காட்சி: பொதுவாக எல்லா சிவத்தலங்களிலும் கருவறைக்குப் பின்னாலுள்ள தேவக்கோட்டத்தில் காணலாம்.
கார்த்திகைத் தீபம்: இந்த நிகழ்வு நடந்த தலம் திருவண்ணாமலை. அந்த நாளே கார்த்திகைத் தீபத்திருநாள்.. இறைவன் இங்கு தீயாக சோதிப் பிளம்பாக வெளிப்பட்டமையால் திருவண்ணாமலை ஐம்பூதத்தலங்களுள் அக்னி(தீ)த் தலமாக வணங்கப் பெறுகின்றது. இறைவன் ஒளி ரூபமானவன் என்பதை தத்துவார்த்தமாக விளக்கும் பொருட்டே வீட்டை விளக்குகளால் அலங்கரித்து கார்த்திகைத் தீபத் திருநாளில் இறைவனை வணங்கும் பழக்கம் பல யுகங்களாக மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
பரணி தீபம்: பரணி நட்சத்திரம் கார்த்திகை மாதம் எமனுக்குரியது. ஒரு உடலிலிருந்து விடுபட்ட ஆன்மா இரு வழிகளில் தன் பயணத்தை மேற்கொள்கின்றது. புண்ணியம் செய்த ஆன்மாக்கள் ஒளியும் நறுமணமும் மிகுந்த நல்ல வழியில் பயணிக்கும். பாவம் செய்தவர்கள் இருள் நிறைந்த பாதையில் பயணம் செய்வர். பரணி தீபம் ஏற்றுவதால் அந்த இருள் சூழ்ந்த பாதையில் பயணம் செய்யும் ஆன்மாக்களுக்கு சிறிது வெளிச்சம் கிடைக்கும் அது அந்த பரணி தீபம் ஏற்றியவர்களுக்கு புண்ணியமாகும். அதனால் பரணி தீபம் ஏற்றி அதை வான் நோக்கி காண்பிப்பது வழக்கமானது. திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றி அதன் சுடரிலிருந்துதான் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
சொக்கப்பனை: தீபத்திருநாளன்று கோவில் வாயிலில் பனை மற்றும் தென்னை ஓலைகளை குவித்து அதனைக் கொளுத்துவர். இந்தச் சுடரிலிருந்து நெருப்பு பெறப்பட்டு வீட்டின் விளக்குகளில் ஏற்றப்படும். இந்த நிகழ்வே சொக்கப்பனை எனப்படும். இதன் தத்துவம் என்ன வென்றால் சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லா ஒளிவடிவானவராக நெருப்புப் பிழம்பாக காட்சியளித்த கார்த்திகைத் திருநாளன்று அந்நிகழ்வை நினைவுகூற செக்கப்பனை ஏற்றப்படுவதால், பிரம்மனின் ஆணவம் அன்று அழிந்ததுபோல்; ஒவ்வொரு ஆன்மாவின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் அந்த தீபஒளியின் நெருப்பில் சாம்பலாகும் என்பதாகும். மேலும் இறைவனின் அருள் எனும் ஒளி இருந்தால் வீட்டில் தீய வினை, தீயசக்திகள் அகன்று நல்ல வெளிச்சம் பிறக்கும் என்பதையும் விளக்குகின்றது..

சகஸ்ரலிங்கம்!
உத்திரகோசமங்கை திருத்தலத்தில் தவம் புரிந்த ஆயிரம் முனிவர்களுக்கு காட்சியளித்து தன்னிடமிருந்த சிவ ஆகமங்களை தந்து தான் திரும்பி வரும் வரை பாதுகாக்கும்படி சொல்லி மறைந்தார் ஈசன். குழந்தை வடிவில் தன்னை தரிசிக்க விரும்பி தவமிருந்த மண்டோதரிக்கு அருள்புரிய இலங்கை சென்று காட்சி அருளியபோது வந்திருப்பது யார் என்பதை அறிந்த மண்டோதரி ஆனந்தப்பட்டு சிவ குழந்தையை எடுத்துக் கொஞ்ச அங்கு வந்த சிவநேசனான இராவணன் உண்மையறிந்து - குழந்தையை எடுக்க முற்படும்போது இறைவன் மேனியை இலங்கேஸ்வரன் தீண்டிய உடன் மறைந்து இங்குத் தீர்த்தக் குளத்தில் தீப்பிழம்பாக தோன்ற ஒரு முனிவர் நீங்கலாக 1000 முனிவர்கள் பரவசமடைந்து குளத்தில் குதிக்க, அந்த முனிவர் இறைவனின் ஆகமங்களைக் காப்பது தன் கடமை என அப்படியே அமர்திருந்தார். அவர்க்கு ரிஷிபாரூடராக காட்சி. அவரை பாண்டிய நாட்டில் மீண்டும் பிறந்து சைவமும் தமிழும் தழைத்தோங்க தொண்டு செய்ய அருள் - அவரே மாணிக்கவாசகர். குளத்தில் குதித்த முனிவர்கள் லிங்கங்களாய் மாற அவர்களின் நடுவே தானும் லிங்கமாய் வீற்று சகஸ்ரலிங்கமாய் காட்சி அருள்.

ஜோதிர்லிங்கங்கள்!
குணமும் குறியும் கடந்த பேரொளியாகிய இறைவனைக் குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்டு திகழ்ந்திருப்பது சிவலிங்கமாகும். சிவம் என்ற சொல்லுக்கு நன்மை, முக்தி, மங்களம், செம்மை, உயர்வு, களிப்பு, அருவுருவ நிலை எனப் பலப்பொருள் கூறலாம். செம்மையும், நன்மையும், மங்கலமும் உடையான் என்பதற்காகச் சிவனைச் சிவம் என அழைத்தனர். எண் குணத்தானாகிய சிவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன் ஆவான். நான்முகனும் திருமாலும் அடிமுடி காணாதவாறு அனைத்து அண்ட உலகங்களையும் அளந்து நின்ற அரும் பெரும் ஜோதிதான் லிங்கம்! சோதி வடிவினனாகச் பரஞ்சோதியாய் சிவன் தோன்றிக் காட்சி கொடுத்த தலங்களே ஜோதிர்லிங்கத் தலங்கள். அவை திரியம்பகம், குசுமேசுவரம், நாகேசுவரம், வைத்தியநாதம், பீம்சங்கரம், மகாகாளம், ஓங்காரேசுவரம், கேதாரம், விசுவேசம், சோமநாதம், ஸ்ரீசைலம், இராமேஸ்வரம் ஆகும்.

பஞ்சமுக தரிசனம்!
‘திகட சக்கரச் செம்முகம் ஐந்துள்ளான்’ என்பது காஞ்சியில் பிறந்த கச்சியப்ப சிவாசாரியரின் கந்தபுரணத்தின் காப்புச் செய்யுளின் முதல் அடியாகும். திகழ், தசக்கரம் என்ற சொற்களின் இனைப்பே திகடசக்கரம் என்றானது. அதாவது ஒளி பொருந்திய பத்துக் கரங்களுடன் செந்நிற முகங்கள் ஐந்தும் உள்ளவன் என்று சிவனைக் குறிப்பிடுகின்றார். அந்த முகங்களே பஞ்சமுகம்.
சிவ அடியவர் ஒவ்வொருவருக்கும் சிவனின் பஞ்சமூர்த்த தரிசனம் கிடைக்க வேண்டும். பஞ்சமூர்த்தம் என்பது சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், அகோரரூபம், ஈசானம் ஆகும். பிரம்மன் ஒவ்வொரு கற்ப யுகத்திலும் சிவனை நினைந்து தவமிருந்து ஒவ்வொரு முகமாக தரிசனம் கண்டு இன்புற்றார்.
சுவேதலோகித கற்பத்தில் பிரம்மன் தவமிருக்க, சிவன் காலை இளம் சூரியனைப் போன்ற பேரேழில் பொங்கும் பச்சிளம் பாலகனாய் காட்சி தந்து அருளினார். இந்த தோற்றப் பொலிவே சத்யோஜாதம் எனப்படும். சத்யோஜாதம் தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை இலிங்கோத்பவர், சுகாசனர்-நல்லிருக்கை நாதர், ஹரிஹரர்- கேசவார்த்தமூர்த்தி- மாலொருபாகர், அர்த்தநாரீஸ்வரர்- உமைபங்கன், உமாமகேசர்- உமேசர்,சத்யோஜாதம்- பிருதிவித் தத்துவம் அதிலிருந்து தோன்றிய நந்தினி என்ற பெயருள்ள கபிலவர்ணமுள்ள கோவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- விபூதி
ரத கற்பத்தில் பிரம்மன் தவமிருக்க, சிவன் மானும் மழுவுடன் காட்சி அருள். இந்த வாமதேவ திருத் தோற்றத்தை தரிசித்து வழிபடுவோர் பிறப்பு இறப்பு இன்றி இறைவனின் பாத கமலங்களை அடையும் பேரின்ப வாழ்வுதனை அடைவர். வாமதேவ தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை கங்காளர், சக்ரதானர், கஜாந்திகர்-கஜாந்திக மூர்த்தி, சண்டேசானுக்ரஹர், ஏகபாதர்- ஏகபாத மூர்த்தி, வாமதேவம்- நீர்த் தத்துவம் அதிலிருந்து தோன்றிய பத்ரை என்ற பெயருள்ள கருப்பு நிறமுள்ள பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- பஸிதம்
பீதகற்பத்தில் ஈசனைப் பணிந்து தியானம் செய்ய, சிவன் கொன்றைப்பூ அணிந்த திருச்சடையில் இளஞ்சந்திரனை தரித்தவராகக் காட்சி- இதுவே தத்புருஷ தோற்றம் ஆகும். இந்த தோற்றத்தில் காயத்திரி தேவியை சிருஷ்டித்து நான்முகனுக்கு அளித்தார். இந்த தத்புருஷ தோற்றத்தையோ, காயத்திரி தேவியையோ சிவமந்திரம் சொல்லி வழிபட்டால் பிறவிக் கடலை கடந்து சிவபதவி கைகூடும் என்றார். தத்புருஷ தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை பிட்சாடனர்-பலிதிரி /பலிகொள் செல்வர், காமாந்தகர்-காமதகனமூர்த்தி, காலசம்ஹாரர்-காலனைக் காய்ந்த பொம்மான்-காலாரி, சலந்தராரி-சலந்திரவத மூர்த்தி, திரிபுராந்தகர்.தத்புருஷம்- வாயுத் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுசீலா என்ற பெயருள்ள வெளுப்பு நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- க்ஷாரம்
நீலகற்பத்தில் கடும் தவமிருந்து பிரம்மன், தீச்சுடரும், வாளும் ஏந்திய திருக்கரத்துடன் கருமை நிற மேனியுடன் காட்சி பெற்றார். இது அகோர தோற்றம். பஞ்சமாபாதங்கள் புரிந்தோரும் தங்கள் தவறை உணர்ந்து சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை மீண்டும் மீண்டும் ஜபித்து வந்தால் அவர்களைப் பற்றிய தோஷம் விலகும். அகோர தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை கஜசம்ஹாரர்-கஜயுக்தமூர்த்தி, வீரபத்திரர், தட்சினாமூர்த்தி-ஆலமர்செல்வர், நீலகண்டர்-நீலகண்ட மூர்த்தி, கிராதகர்-கிராத மூர்த்தி.அகோரம்- தேஜஸ் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுரபி என்ற பெயருள்ள சிவப்பு நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- பஸ்மா
விசுவரூப கற்பத்தில் தவமிருந்து கங்கையும் திங்களும் தாங்கிய திரிசடை, கோரப்பற்கள், நெற்றிக்கண்ணும் கொண்டு இருபக்கமும் இரு மாதர்களுடன் காட்சி தந்து அருள். இது ஈசான தோற்றம். சிந்தையில் இறைவனை வைத்து தவம் புரிந்து பிறவா வரம் அடையலாம். உச்சிமுக ஈசான தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை சோமாஸ்கந்தர், நடராஜர், இடபாரூடர்-ரிஷபாரூடர்-விருஷபவாகனன், கல்யாணசுந்தரர்-மணவழகர், சந்திரசேகரர்-பிறை சூடிய பொம்மன்.ஈசானம்- ஆகாசத் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுமனா என்ற பெயருள்ள பல நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- ரக்ஷா

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன! முயலகன் யார்!
வேத ஞானமிக்க முனிவர்கள் தாருகா வனத்தில் வாழ்ந்திருந்தனர். நால்வகை வேதம் சாஸ்திரம் எல்லாம் கற்றதனால் கர்வம் மிகக் கொண்டிருந்தனர். அந்தக் கர்வத்தினால் தங்களால் எல்லாம் செய்ய முடியும் தங்களால் செய்ய முடியாததையா சிவன் செய்யப் போகின்றார் என்றிருந்தனர். அவர்களின் கர்வத்தை ஒடுக்க பெருமான் பிட்சாடனார் கோலத்தில் விஷ்ணுவை மோகினி வடிவில் கூட்டிக் கொண்டு தாருகாவனம் வந்தார். பெண்கள் பிட்சாட்னர் அழகில் மயங்கி அவர் பின் செல்ல பல முனிவர்கள் மோகினியின் அழகில் மயங்கினர்.. இதனால் யாகங்கள் பாதிக்க மற்ற முனிவர்கள் இந்நிலையை சரிசெய்ய அபிசார வேள்வி நடத்தினர். அதிலிருந்து புலி ஒன்று தோன்ற அதை பிட்சாடனர் மேல் ஏவினர். பெருமான் அந்தப் புலியைக் கொன்று அதன் தோலை இடையில் உடுத்திக் கொண்டார். அடுத்து வேள்வியிலிருந்து மான், நெருப்பு என்று அனுப்ப அவற்றின் வீரியத்தைக் குறைத்து அவைகளைக் தன் கைகளில் தாங்கிக் கொண்டார். மீண்டும் யாகத்தில் தோன்றிய யாணையை ஏவ அதன் தோலை உரித்து மேலாடையாகப் போர்த்திக் கொள்ள இதைக் கண்ட முனிவர்கள் தங்களின் முழு ஞானத்தையும் பிரயோகித்து வேள்வியிலிருந்து அரக்கன் முயலகனை உருவாக்கி பிட்சாடனர்மேல் ஏவினர். அவர் அவனை தன் காலடியில் போட்டு அமுக்கிவிட, செய்வது அறியாது விழித்த முனிவர்கள் வந்திருப்பது தங்களை மீறிய சக்தியான ஈசன் என்றுணர்ந்து மன்னிக்க வேண்டினர்.. அங்கு வந்த நந்தி மத்தளம் வாசிக்க மோகினியான விஷ்ணு புல்லாங்குழல் வாசிக்க சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடினார். இதைக் கண்ணுற்ற தாருகாவனத்து முனிவர்கள் மற்றும் அனைவரும் புண்ணியம் அடைந்தனர்.
ஒருநாள் இந்த நிகழ்வை நினைத்து பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரந்தாமன் தன்னை மறந்து ஆனந்தித்து இருப்பதைகண்ட ஆதிசேஷடன் அது பற்றி விசாரிக்க தாருகாவனத்தில் நடந்த நிகழ்வுகளையும் அங்கு சிவபெருமானின் அற்புத நடனம் பற்றியும் திருமால் சொல்லக்கேட்ட ஆதிசேஷனுக்கு அந்த அற்புத நடனத்தைக் காண ஆவல் ஏற்பட்டது. பாதி உடல் மனிதனாகவும் மீதி பாம்பாகவும் தோன்றி பூவுலகில் தவம் புரியத்தொடங்கினார். அந்த தவத்தின் பயனாக அவர்முன் தோன்றிய ஈசன் பதஞ்சலி உன்னைப் போன்றே வியாக்ரபாதனும் என் ஆடலைக் காண ஆவல் கொண்டுள்ளான். நீங்கள் இருவரும் தில்லைவனம் என்ற சிதம்பரத்திற்கு வாருங்கள் அங்கே உங்கள் ஆவல் நிறைவேறும் என்றார்.
மார்கழிமாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நான்னாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார். அந்த ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை முனிவர்கள் சிலையாக வடித்தெடுத்தனர்.
திருவாதிரை நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆருத்ரா எனப்பெயர். மேலும் திருவாதிரை நட்சத்திரம் ருத்ர அம்சம். திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவபெருமானின் நடன தரிசனக் காட்சி கிடைத்ததால் அது ஆருத்ரா தரிசனம் என்றானது. விரத நோம்பிருந்து வழிபட்டு ஆருத்ரா தரிசனம் கிடைக்கப் பெற்றவர்கள் சகலவிதமான மங்களங்கள் பெற்று பிறவிப் பிணி நீங்கப் பெறுவர் என்கிறது புராணங்கள்.
இறைவன் திருவுருவச் சிலைகளின் கீழே காலில் மிதிபட்டவாறு இருக்கும் அசுரன் முயலகன் என்பது அனைவரும் அறிந்ததே. முயலகன் இறைவனை தாக்க தருகாவனத்து முனிவர்களால் அபிசார வேள்வி செய்து அனுப்பப்பட்டவனை அடக்கி அவன் முதுகின்மீது நின்று நடன மாடிய தலம்- தலையாலங்காடு.தி.த-210+அ-76. சிமிலி, நடனேஸ்வரர் நர்த்தனபுரீஸ்வர்(சு), ஆடவல்லநாதர்-உமாதேவி. திருமடந்தையம்மை. திருவாரூர்-18, குடவாசல்-8,

சிவராத்திரி!
புனித நீராடி பக்தி சிரத்தையுடன் உபவாசமிருந்து மனதில் இறைவனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டு சிவராத்திரி கண்விழித்தல் என்பது, நான் அழிவற்ற ஆன்மா, பரமாத்மாவின் குழந்தை, எந்த ஒரு பாவமும் செய்யாமல் புண்ணிய செயல்களையே செய்வேன் என்ற உறுதியான உணர்வுகளோடு இருக்கும் உணர்விலிருத்தல் நிகழ்வாகும். மனதிற்கு தீய வீணான விகாரமான எண்ணங்களை அளிக்காமல் இருக்கவே விரதம் இருப்பதாகும். எக்கணமும் இறைவன் நினைவில் அவர் துணையிலேயே இருப்பதே உபவாசம் ஆகும்.
சிவராத்திரி சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனை அர்ச்சிக்கும் ராத்திரி ஆகும். மாசி மாத தேய்பிறைச் சதுர்தசி- மகாசிவராத்திரி. தினமும் ஈசனைப் பணிந்து மாலை நேரத்தில் வழிபடுதல் நித்ய சிவராத்திரி. அமாவாசையும் பௌர்ணமியும் மாறிமாறி வரும்போது பிரதோஷமும் வரும் அப்போது நடத்தப்படும் மாலைநேர அபிஷேக ஆராதனைகள் பட்ச சிவராத்திரி. மாதந்தோறும் கிருஷ்ணபட்ச பிரதோஷம் முடிந்த உடன் அன்றைய இரவு தேய்பிறை சதுர்தசி-மாத சிவராத்திரி. அமாவாசையும், சோமவாரமும் கூடிய தினம்- யோக சிவராத்திரி.
சிவராத்திரி நாளில் 1.பார்வதி ஆகம உபதேசம் பெற்றது, 2.என்றும் நீங்காமல் இருக்கும் வரத்தைப் பெற்றது, 3.மார்க்கண்டேயனுக்காக ஈசன் எமனை உதைத்தது, 4.வேடன் தனது கண்ணை லிங்கத்திற்கு அப்பி கண்னப்பநாயனார் ஆனது,

ஆலயங்கள் உடல் அமைப்பில்!
சிவ சின்னங்கள். திருநீறு, ருத்திராட்சம், பஞ்சாட்சாரம். வில்வம், லிங்கம், என்பதை அனைவரும் அறிவீர். திருநீறு, ருத்திரம் அணிந்து பஞ்சாட்சாரம் ஓதி, வில்வம் சார்த்தி, ஸ்தூல / மானஸ மலர்களால் லிங்கவடிவ பெருமானை வழிபடல் வேண்டும்.
கோவிலின் அமைப்பு இறைவன் சயனித்து இருக்கும் நிலையை வைத்து கட்டப்படுவதாகும். ஒவ்வொரு பகுதியையும் அது இறைவனின் பகுதியாக நினைந்து முன்னோர்கள் வகுத்தபடி வழிபடுதல் சிறப்பு. ராஜகோபுரம்- பாதம், பலிபீடம்- முழங்கால், கொடிமரம்- இனக்குறி, மண்டபம்- வயிறு, உதரம், பிரகாரம்- கைகள், கருவரை- திருமுகம்,கழுத்து, விமானம்-சிகரம்,தலை, கலசம்-சிகை. என உடல் அமைப்பில் இறை ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளது
1.மூலாதாரம்-32முதுகுதண்டு-கொடிமரம்-32வளயங்கள்,
2.தொப்புள்ஸ்தானம்-நந்திபிரதிஷ்டை-எண்ணங்களை அடக்கி மனதை தூய்மைப் படுத்த சிந்தனை,
3.இதயம்-பலிபீடம்-காமம், பொறாமை, ஆணவம் நீங்க,
4.பிரம்மகபாலம்-கர்ப்பகிரகம்-மூலஸ்தானம்,
5.புருவமத்தி-லிங்கம்-ஆண்மஒளி,
6.1000இதழ்கொண்டமூளை-1000கால்மண்டபம்,
7.மூளையின்நீர்நிலை-தீர்த்தம்,
8.தலை-கர்பகிரகம்,
9.முகம்-அர்த்தமண்டபம்,
10.கழுத்து-அந்தராணமண்டபம்,
11.மார்பு-மகாமண்டபம்,
12.வயிறு-மணிமண்டபம்,
13.தோள்கள்-உள்சுற்று,
14.கைகள்-வெளிசுற்று,
15.ஆன்மா-மூர்த்தங்கள்,
16.கண்-கருவறைத்தூண்,
17.விலாஎழும்புகள்-சுவர்கற்கள்,
18.எழும்புகள்-தூண்கள்.

வணங்கும் முறை!
1.கோபுரம்-நீ உடம்பு அல்ல ஆண்மா என உணர்ந்து வணங்கவும்.
2.பலிபீடம்-நீ இச்சையல்ல என உணர்ந்து இச்சைகளை பலிகொடுத்ததாக பாவித்து அஷ்டாங்கங்களும் நிலத்தில் படும்படி விழுந்து வணங்கவும்.
3.கொடிமரம்-நீ மனமல்ல தத்துவங்களுமில்லை என புரிந்து வணங்கவும்.
4.வாகனம்-இறைவனை வழிபட அனுமதி கேட்டு வணங்கவும்.
5.கர்ப்பகிரகம்-நீ ஜீவாத்மா என்பதை உணர்ந்து நான் எனது என்ற உணர்வுகளை நீக்கி இறைநினைவோடு இரண்டறக்கலந்து வணங்கவும்.
6.மூர்த்தங்கள்-வலம்வந்து வணங்கும்போது இயற்கைநிலை இன்னதென அறியவும். வடிவங்கள் மாறுபடுவதுபோல் மாறிடும் மனிதனின் குணமும் மாறுவதை மாற்றவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். எண்ணங்கள் மாறுபட்டலும் தெய்வீகநிலை மாறக்கூடாது.
7.அமர்ந்துநிலை-உன்மிருகத் தன்மையை ஒதுக்கி தெய்வீக சிந்தனையுடன் சிந்தித்து அவசரமின்றி அமைதியுடன் நல்வழியில் செல்ல.

கோவிலுக்கு எந்த காலத்தில் (நேரம்) போக உத்தமம். எந்த காலத்தில் தியானம் செய்ய பலன் தரும்!
கோவிலுக்கு போக இந்த நேரத்தில் பலன் உண்டு என்றில்லை. எல்லா காலங்களிலும் வழிபாடு செய்யலாம்.
குறிப்பாக பக்தர்கள் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றுவது .வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது என்ற பழக்கம் சிறப்பு.
திங்களில் வரும் அம்மாவசை ராகு காலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் மன வியாதிகள் மற்றும் குழப்பமான சூழ்நிலைகள் மாறும்.
செவ்வாய் கிழமை எமகண்ட நேரத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் கடன் தொல்லைகளில் இருந்து விடு பட முடியும் .
புதன் கிழமை சிவ பெருமானை முதல் தரிசனம் செய்ய அல்லது அபிஷேகம் செய்ய தொழில் உத்யோகம் வளர்ச்சி உயர் பதவி கிடைக்கும் .
வியாழன் இரவு கடைசி தரிசனம் (பள்ளியறைக்கு பெருமானை அனுப்புதல்) செய்தால் இணையில்லா செல்வம் கிடைக்கும் .
வெள்ளியும் பௌர்ணமியும் சேரும் காலத்தில் மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் சிவ பெருமானை தரிசனம் செய்தால் மஹா லக்ஷ்மி அருள் கிடைக்கும்.
சனி கிழமை ராகு காலத்தில் கர்மங்கள் களைந்து விடும்.
ஞாயிறு அன்று ராகு காலத்தில் எதிரிகள் விலகி தைரியம் ஏற்படும்

இறைவன் ஏன் சின்முத்திரையுடன் காட்சி!
கட்டைவிரல்- இறைவன்
சுட்டுவிரல்- ஆன்மா
நடுவிரல்- ஆணவம்
மோதிரவிரல்- கன்மம்
சுண்டுவிரல்- மாயை
ஆணவம், கன்மம், மாயை என்ற இந்த மூன்றையும் கடந்தால் ஆன்மா இறைவனை அடையும் என்பதன் சுருக்கம் சின் முத்திரை.

யோகம்!
பொதுவாக யோகம் 1.மந்திரயோகம், 2.பரிசயோகம், 3.பாவயோகம், 4.ஞானயோகம், 5.மகாயோகம் என ஐந்து வகைப்படும்.
1.மந்திரயோகம்- பரமேஸ்வரனை அருமறை மந்திர ஜபத்தால் தியானம் செய்வது மந்திர யோகமாகும்.
2.பரிசயோகம்- தூய மாசு மருவற்ற உள்ளத்துடன் இரேசகம், பூரகம் இவற்றை யோகத்தில் செய்து கும்பக யோகத்தில் ஆத்மாவை நிறுத்துவது பரிசயோகம்.
3.பாவயோகம்- இரேசகம் என்பது மூச்சை மூக்கினால் புறத்தே விடுதல். பூரகம் என்பது பிராணாயாமம் செய்யும் முறையில் மூச்சை உள்ளுக்குள் இழுத்தல் ஆகும். உலக இச்சையானது மனதை அலைக்கழிக்கும். அதில் மனதை அலையவிடாமல் ஒருநிலைப்படுத்தி ஈசனைக் காணும்படி பயிலும் யோகம் பாவயோகம்.
4.ஞானயோகம்- தன்னையும் உலகத்தையும் பிரித்துப் பாராமல் ஒன்றான ஐக்கியத்தில் உள்ளும் புறமும் தன்னைக் காண்பது ஞானயோகம்.
5.மகாயோகம்- ஆதியாய் உறையும் பொருளை ஜோதியாய், நிர்மலமாய், ஆனந்தமயமாகி அப்பழுக்கற்ற தூயநெறியில் உணர்வது மகாயோகம்.
யோகத்தின் இந்த ஐந்து நிலைகளையும் உணர்ந்தால் அஷ்டமா சித்திகளை அறிந்த நிலையை அடையமுடியும். இத்தகைய யோக மார்க்கத்தை தெரிந்து கொள்வதற்கு தியான நிலையில் இருப்பவர்கள் முதலில் நான்முகனையும் நாராயணனையும் மனதில் தியானித்து பின்னர் ஈசனை உள்ளத்தில் இருத்தி தியானம் செய்ய வேண்டும்.

ஞானம்!
1.பக்தி ஞானம் என்பது சரியை –தேடுவது என்றாகும்,
2.கர்ம ஞானம் என்பது -கிரியை-தேடியதை அடைவது,
3.தியான ஞானம் என்பது – ஞானம் தேடி அடைந்ததை உபயோகிப்பது,
4.ஞான ஞானம் என்பது - ஞானத்தை உபயோகித்ததால் ஏற்படும் தெளிவு. சத்குருவை தேடுவது சரியை, அவரிடம் உபதேசம் பெறுவது கிரியை, அதன்படி நடப்பது யோகம். அதனில் கிடைப்பது ஞானம். எரியும் விளக்கினை உற்றுப் பார்த்தால் திரிக்கும் எரியும் ஜோதிக்கும் இடையே கொஞ்சம் இருள் அதாவது கருமை ஒளிந்திருப்பது தெரியும். சிறியதாக இருக்கும் அந்த இருட்டு தீபஒளி அனைந்தால் முழுவதுமாக வளர்ந்து அந்த இடத்தை ஆக்கிரமித்துக் சூழ்ந்து கொள்ளும். ஞானமாகிய தீ எறியும்வரைதான் அஞ்ஞானம் ஒளிந்திருக்கும். ஞானம் நீங்கினால் அங்கே இருள் சூழும். அது அஞ்ஞானமாகும். ஞானஒளி என்பது அஞ்ஞான இருளைப் போக்கி அந்த இடத்தைப் பிரகாசிக்கச்செய்யும். உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருக்கும் இருட்டாகிய அஞ்ஞானத்தினைப் போக்க அந்த இடத்தில் அதாவது மனதில் ஞானவிளக்கு ஏற்ற வேண்டும். பக்தி எனும் நெய்யினை ஊற்றி உயிர்கள் மீது அன்பு என்ற திரியை அதில் இட்டால் இறைவன் தீபமாகத் தோன்றி சுடர்விடுவான். இந்த ஞானவிளக்கு மனதில் உள்ள அஞ்ஞான இருளை அகற்றும். அந்த ஞானஒளியானது அந்த முகத்தில் பொலிவையும் அகத்தில் நித்தம் நித்தம் சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் தரும். பார்பவை எல்லாம் உயர்வாகவும் நடப்பன எல்லாம் நல்லவையாக இருக்கும். இருளாகிய வினைகள் சூழாமல் நிம்மதி நிறைந்த வாழ்வாக மலரும்.
முக்திபெற: நான்கு வழிகளை சொல்கின்றது வேதங்கள்.
1.சரியை (தாசமார்க்கம்) பலதொண்டுகள் செய்து இறைவன் அருளை பெறுதல்.
2.கிரியை (சத்புத்ரமார்க்கம்) இறைவனை அகமும் புறமும் பூஜித்து அருளைப் பெருதல்.
3.யோகம் (சகமார்க்கம்) தியானத்தின் மூலம் வீடுபேற்றை அடைவது.தகாது என்று வகுப்பது யமம், தகும் என்பது நியமம் என்ற விதிக்களுக்குட்பட்டது.
4.ஞானம் (சன்மார்க்கம்) குருவிடம் உபதேசம் பெற்று ஞானத்தால் ஆராதனை செய்து அருள். குருவின் மூலம் கற்பது-சிரவணம், கற்றவற்றை நினைவில் கொண்டுவருவது மனனம், அவற்றை தியானத்திருப்பது நிதித்தியாசனம் என 3 வித ஞான மார்க்கங்கள்.


உயர்வானவன்!
ஒரு மரம் ஒரு வித்திலிருந்து முளைவிட்டு தோன்றுகின்றது. மரத்தை நாம் காண்பதற்கு முன்பாக அது வித்தாக ரூபாருபமாக வித்து வடிவத்தில் இருந்தது. வித்தில்லாமல் எந்தப் பயிர்வகைகளும் இல்லை. சக்தியை உள்ளடக்கி நின்ற சிவம் வித்தாய் விளங்கும். விதைத்த வித்து முளைத்தெழும்போது சக்தி சிவத்தை வளர்க்கும். கடைசியில் வளர்ந்தபின் சக்தி அடங்கும் இடம் சிவம் என்ற வித்தேயாகும். அம்மரமே வித்தாக தோன்றுவதற்கு முன் எவ்வித ரூபமில்லாமல் இருக்கின்றது. ஒரு விதை இவ்வாறு அரூபமாயிருந்து ரூபாருபமாகிய ரூபத்தை பெறுகின்றது.
இது போன்றே ஒரு குட்டியும் ஒரு பிள்ளையும் ஒரு பிண்டத்தில் தோன்றும். பிண்டமும் எவ்வித ரூபமற்ற ஒன்றிலிருந்து உண்டாகும். இவ்வாறு எல்லாவற்றையும் நோக்குங்கால் இப்பூவுலகில் அண்ட சராசரங்கள் எல்லாம் உருவங்கள் பெறுமாறு இயக்கும் இறைவனும் இவ்வகையிலே திருவுருவம் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பது புலனாகும். அருவுருவான இறைவனே தன்னை உணர்த்த பல திரு வுருவங்கள் மேற்கொண்டுள்ளான்.
சங்கரன்= சம்+ கரன், சம்- மங்களம் / ஆனந்தம். சிவம் / சம்பு என்றாலும் மங்களம். தன்னிடம் இருக்கும் மங்களத்தை பிறருக்கு அளிப்பவர் சிவம். ஆனால் சிவபெருமான் சம்ஹார மூர்த்தி என்பதால் அவரால் எப்படி மங்களத்தை தரமுடியும் என கேள்விகள் எழலாம். உலகத்து உயிர்களுக்கு மரணம் என்பது துக்கம். உயிர்க்கு ஞானம் ஏற்பட்டால் பிறவியிலிருந்து விடுதலை செய்வது மங்களகரமான செயல்தானே. அதை அருள்பவன் சிவசங்கரனே ஆகும். எல்லாவற்றிற்கும் ஆரம்பம் முடிவு இருக்கும். அதுபோல் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்பது கட்டாயமானது. சிவத்திடம் மனதை வைத்து ஞானம் பெற்றால் மறு ஜென்மம் கிடையாது. அதாவது இனி பிறப்பில்லா நிலை ஏற்படும். வேதங்களில் சிவனே எல்லா கடவுள்களுக்கும் மேலான பரமேஸ்வரன் எனச் சொல்லப்பட்டிருக்கின்றது.
விஸ்தீரண அளவில் பூமியைவிட நீர்பரப்பு அதிகம். ஒளி நீரைப் போன்றல்லாமல் எங்கும் வியாபித்துள்ளதால் நீரைவிட உயர்ந்ததாகின்றது. வாயு இல்லாத இடமே இல்லையாதலால் ஒளியைவிடக் காற்றும், காற்றை தன்னுள் அடக்கிய ஆகாயமே அதவிட உயர்ந்ததாகவும், ஆகாயத்தைக் கடந்து செல்லும் வலிமை பெற்ற மனமே உயர்ந்தது என்றானாலும் மனம் லயிக்கும் விஷயங்களில் உள்ள தத்துவத்தை புரிந்து கொள்ளும் வலிமை கொண்ட அறிவு உயர்ந்தது என்ற நிலையில் காலம் காட்டும் வழியில் அறிவு செல்ல வேண்டியிருப்பதால் அறிவுக்கு மேம்பட்டது காலம், இந்த காலத்தை வெல்லும் பிரபஞ்சமே தன்னுள் எல்லாவற்றையும் அடக்கி வைத்திருப்பதால் அதுவே உயர்ந்தது. அந்த பிரபஞ்சத்தை இயக்கும் வல்லமை பெற்ற ஈசுவரனே எல்லாவற்றையும் விட உயர்வானவன்.
முதல், நடு, முடிவு என்ற மூன்று நிலைகளும் அற்றதனால் ஆதிமத்யாந்தம் எனப்படுபவன்.

இன்பக்காத்தல் துன்பக்காத்தல்!
இறைவனது ஐந்து தொழில்களில் காத்தல் என்பது இருவகைப்படும். இன்பக்காத்தல், துன்பக்காத்தல் எனப்படும். உயிர்கள் செய்த தன்வினைக்கு ஏற்ப இன்பப் பயன்களைக் கொடுத்து அவ்வுயிர்களுக்கு அருளுதல் அறக்கருணையாகிய இன்பக்காத்தல் எனப்படும். இன்பக்காத்தல் தொழிலைக் குறிக்கும் நடனம் புஜங்கலளித நடனம் எனப்படும். ஆன்மாவைக் குறிக்கும் குறியீட்டுப் பொருளான பாம்பினைக் கையில் ஏந்தி அதனை மகிழ்வுறச்செய்யும் வகையில் ஆடும் நடனமே புஜங்கலளித நடனமாகும்.
இவ்வாறே உயிர்கள் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப துன்பங்களைக் கொடுத்து அவற்றின் வினைகளை அழித்து காத்தல் துன்பக்காத்தல் எனப்படும். சிவனின் மறக்கருனையாகிய துன்பக் காத்தல் செயலைக் குறிக்கும் நடனம் புஜங்கத்திராச நடனம் எனப்படும்.

மார்கழியில் பள்ளியெழுச்சி! ஆனியில் திருமஞ்சனத் திருநாள்!
சூரியனின் தென்திசை நோக்கிய பயணத்தை ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான காலத்தை தட்சிணாயணக் காலம் என்றும், வடதிசை நோக்கிய பயணமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலான காலத்தை உத்ராயணக் காலமென்றும், என்பர். இந்த இரு காலங்களும் சேர்ந்த சித்திரை முதல் பங்குனி வரையிலான ஒரு வருட காலமே தேவர்களுக்கு ஒரு நாள் என்பதால் தட்சிணாயணத்தின் இறுதி மாதமான மார்கழி அவர்களின் அன்றைய அதிகாலைப்பொழுதாகவும், உத்ராயணத்தின் இறுதி மாதமான ஆனி தேவர்களின் பகல் பொழுதின் இறுதிப் பகுதியாகவும் உள்ளது. தேவர்களின் ஒருதினப் பொழுதின் சந்தியா காலங்கலாக விளங்கும் ஆனிமாதமும் மார்கழியும் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதங்கள்.
பதஞ்சலி முனிவர் ஆதிசேஷனின் அம்சம். வானியல் சாஸ்திரம் நன்கு அறிந்தவர். ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் சிதம்பரம் கோவிலில் இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து பார்த்தால் தெளிவாக தெரிவதை தம் ஞானதிருஷ்டியால் கண்டு அந்த வேலையில் தேவர்கள் சிவனுக்கு திருமஞ்சனம் செய்வதையும் அறிந்து அதேபோல் பூமியில் வழிபடும் பக்தர்களும் உயிர்களும் அதன் பலன்களைப் பெற நினைத்து ஆனி உத்திரத் திருமஞ்சன வழிபாட்டை ஏற்படுத்தினார். உத்திர நட்சத்திரம் துருவ நட்சத்திற்கு இனையானது. இது நைமித்திக பூஜை எனப்படும். நித்ய பூஜையில் அறியாமல் ஏற்பட்ட குறைகள் நைமித்திக பூஜையில் நீங்கும்.
மார்கழி அதிகாலைப்பொழுதான தேவர்களின் சந்தியா கலாத்தில்தான் தான் திருவெம்பாவாய், திருபூம்பாவாய் என சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பள்ளி எழுச்சி நடைபெறும்
தமிழ் மாதங்களில் ஆனி மாதம் நீண்ட பகல் பொழுதைக் கொண்ட மாதம். சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆனிமாதத்தை மிதுனமாதம் / ஜேஷ்டமாதம் என்பர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய எனப் பொருள். ஜேஷ்டம் என்றால் கேட்டை நட்சத்திரம். அந்நாளில் பெருமாளுக்கு நடைபெறுவதால் ஜேஷ்டாபிஷேகம், பஞ்சாங்கத்தை நிர்ணயிக்கும் இருகோள்களான சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் அதாவது சந்திரன் கன்னி ராசியிலும் சஞ்சரிக்கும் நேரமே ஆனித்திருமஞ்சனத் திருநாள். ஆனி உத்திரத் திருநாளே ஆனித் திருமஞ்சனம் என சிறப்பிக்கப்படும். சிவபெருமானின் 64 திருவுருவங்களில் அற்புதமான ஆடலரசனுக்கு நடைபெறும் திருமஞ்சனமமே ஆனித்திருமஞ்சனத் திருநாளாகும். கல்விக்கு அதிபதியாகிய புதன் கிரகத்தின் ஆளுமை பெற்ற ராசிகளான மிதுனம், கன்னி இரண்டும் உள்ள ஆனிமாதத்தில் நடக்கும் ஆனித்திருமஞ்சனத்தைக் காணும் பேறுபெற்றவர்கள் இறையருளால் அறிவில் சிறந்து விளங்குவர்.
ஆனித் திருமஞ்சனம் சிவனுக்கு உரியதானாலும் நடராஜருக்கே முக்யத்துவம். நடராஜர் உள்ள எல்லா சிவாலாயங்களிலும் ஆனித்திருமஞ்சனம் நடைபெற்றாலும் சிதம்பரத்தில் ந்டைபெறும் ஆனித் திருமஞ்சனமே சிறப்பானதாகும். திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள். நடராஜரும் சிவகாமியும் தங்களது தாண்டவ கோலத்தை பக்தர்களுக்கு காட்டி அருள்கின்றனர். அணுவில் இருக்கும் நுன் துகல்களைக்கூட ஆட்டுவிப்பது இறையின் திருநடனம். நுண் துகல்களின் இயக்கம் ஒரு நடனத்தை ஒத்திருப்பதாக அறிவியலார் கண்டறிந்திருக்கின்றனர்.
அதேபோன்று மார்கழியில் திருவாதிரை விழா நடைபெறும். பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனியும் நடரஜர் நடனம் ஆடும்போது அவரது இடது பாத தரிசனத்தை மார்கழி திருவாதிரைத் திருநாளில் சிதம்பரத்திலும், வலது பாத தரிசனத்தை பங்குனி உத்திரத்தில் திருவாரூரிலும் தரிசித்துள்ளனர்.

சிவன் ஏன் அபிஷேகத்தை விரும்புகின்றார்!
சிவனுக்குரிய திருவாதிரை நட்சத்திரம் மிகவும் வெம்மை உடையது. அவரது கண்டத்தில் உள்ள ஆலகால விஷத்தின் வெம்மை அவ்வப்போது தாக்கும். மாயனத்தில் உள்ள சுடலைச் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொள்வதால் அதன் வெப்பமும் சேர்ந்த நிலையில் குளிர்ந்த அபிஷேகம் சிவனுக்கு பிரியமானதாகும். வில்வமும் குளிர்சியை உண்டு பண்ணும் என்பதலே வில்வத்தால் அர்சிக்கப்படுகிறது.
மாலை நேரம் வெம்மை தகித்தபின் எங்கும் குளுமை பரவத் தொடங்கும் நேரம் அந்தச் சமயத்தில் குளிர்ச்சியை உண்டு பண்ணும் வில்வம் கலந்த தீர்த்தம் அல்லது வில்வத்தை உட்கொள்வது குளுமையால் பரவும் தொற்றுக் கிருமிகளிடமிருந்து உயிர்களைக் காத்துக் கொள்ள உதவும் என்பதே சிவ விருப்பம். இதை அறிந்தே நம் முன்னோர்கள் வில்வதீர்த்தம் அல்லது வில்வத்தை சிவ வழிபாட்டில் இணைத்து உயிர்கள் வளமாக வாழ வழி செய்திருக்கின்றனர்.

உலகம் பலவிதம்!
அம்பலத்தில் ஆடும் நடராஜரின் இயக்கத்தினால் உலகம் இயங்குகின்றது. அந்த ஆட்டத்தை நிறுத்தினால் உலக இயக்கம் நின்று விடும் என்ற தத்துவத்தை விளக்க முன்னோர்கள் ‘உலகு அம்பல விதம்’ எனக் கூறியது மருவி ‘உலகம் பலவிதம் என்றானது.
உலகை இயக்கும் அந்த இறைவனை வழிபடும் முறை மூன்று வகைப்படும். புறத்தேயிருந்து வழிபடுவது அபரம் எனப்படும். தெய்வம் வேறு தான் வேறு என நினையாமல் வழிபடுவது பரம் எனப்படும். அகத்திலிருந்தும் புறத்திலிருந்தும் வழிபடுவது பராபரம் எனப்படும்.
இந்த மெய்ப்பொருள் அறிவாகிய ஞானம் அபரஞானம் என்றும் பரஞானம் என்றும் இருவகைப்படும். அபரம்- ஆரம்ப படிநிலை. பரம்- முடிவான உயர்நிலை. மெய்ப்பொருளை ஒருவன் உண்மையாக உணர்ந்து அதனைக் கண்டு அதன் தன்மையில் தான் அழுந்தி நிற்றலேயாகும். அதாவது மெய்ப்பொருளை அனுபவமாக உணர்ந்து அதன் இன்பத்தில் திளைத்திருத்தலே ‘பரஞானம்’. அனுபவ ஞானம் எளிதல் எவருக்கும் முதலிலேயே வந்துவிடாது என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும்.
பரஞானம், அபரஞானம் இரண்டும் அஞ்ஞானத்தை போக்குபவையாயினும், அபரஞானம் அஞ்ஞானத்தைப் போக்குதல் என்பது ஒரு விளக்கு இருளைப் போக்குவது போன்றதாகும். அதேசமயம் பரஞானம் அஞ்ஞானத்தைப் போக்குவது என்பது சூரியன் இருளைப் போக்குவதற்கு ஒப்பானதாகும். எனவே அபர ஞானம் அஞ்ஞானத்தை முழுவதும் நீக்காமல் இருக்க, பரஞானமே அஞ்ஞானத்தை முற்றிலும் நீக்க வல்லது.
அந்த இறைவனை ஈசர், ஈஸ்வரன், ஈசானன் என்று சொல்வதுண்டு. ஈசர்- என்றால் ஆளுகின்றவர், ஈஸ்வரன்- என்றால் எல்லாம் உடையவன், ஈசானன்- என்றால் உலகங்களை உண்டாக்கி ஆளுபவன் என அர்த்தமாகும்.
என்றால் உச்சி என்பதாகும். அதாவது எல்லாவற்றிற்கும் உயரத்தில் இருப்பவன் மேலானவன். நம்மை வாழ்க்கையின் உயரத்திற்கு அழைத்துச் செல்பவன்.
சித்தர்களின் இஷ்ட தெய்வம் சிவனே! லிங்க வழிபாடு நடந்தாலும் ரூபமாக நோக்கின் நடராஜர் தோற்றமே புலனாகும். இந்த தோற்றம் உலகின் இயக்கத்தினை உணர்த்துவதாகும். நடராஜரின் ஒவ்வொரு நெளிவு சுளிவுக்குப் பின்னால் ஒரு பெரும் பொருள் இருக்கின்றது. அவரின் நாட்டியத்தின் முத்திரை ஒவ்வொன்றும் பூவுலகில் பலவித மாற்றங்களை குறிக்கும். அதில் வளர்ச்சியும் உண்டு. வீழ்ச்சியும் உண்டு. நடராஜர் உருவம் இருக்குமிடத்தில் இயகக்கதி சுறுசுறுப்பாக இருக்கும். சுறுசுறுப்பும் விறு விறுப்பும் இல்லாத மந்தகதியில் இயங்கும் ஓர் வீட்டினுள் நடராஜர் சிலாரூபம் நுழைந்தால் அந்த இல்லத்தில் ஒர் விசைப்பாடு தோன்றி பல் வினைகளாக செயலாக்கம் தொடங்கும்.
3000 ஆண்டுகள் பழமையான ரிக்வேதம் லிங்க வழிபாட்டை வலியுறுத்துகின்றது. கிருத, திரேதா, துவாபர யுகங்கள் முடிந்து கலியில் 5115 ஆண்டுகளை கழித்து விட்டோம். மூன்று யுகங்களின் கணக்கோடு கலியுகக் கணக்கைச் சேர்த்தால் இதுவரை இந்த பூமி நான்கு யுககாலமான 43,20,000 ஆண்டுகளில் 30லட்சம் ஆண்டுகளை கடந்து விட்டிருக்கின்றது. பூமி தோன்றும்போதே வேதங்கள் தோன்றியுள்ளன. அப்படியென்றால் ரிக்வேதம் தோன்றியதற்கு முன்பிருந்தே லிங்க வழிபாடு நடைபெற்றிருக்கின்றது என்றால் 30லட்சம் ஆண்டுகளுக்கு மேலாக இப்புவியில் லிங்க வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என அர்த்தம்.
சிவன் எங்கும் நிறைந்திருக்கின்றான். அவன் இல்லாத இடமில்லை. விறகில் தீயாக, பாலில் நெய்யாக, எள்ளில் எண்ணெய்யாக ஒன்றில் ஒன்றாக இருப்பது எல்லாம் அவனே. இந்த உண்மை ஞானம் பெற்றல்தால்தான் அறியமுடியும். முதலில் அறிவது. இரண்டாவது உணர்வது. பாவ புண்ணிய சுழற்சிகளுக்குள் இருந்து விடுபடாமல் பிறந்தும் இறந்தும், இறந்தும் பிறந்துமாய் இருந்தால் உயிர்களை மீட்டெடுக்க வழிகாட்டவே சிவன் பூவுலகில் எண்ணற்ற தலங்களில் குடிகொண்டு லிங்க வடிவில் அருள் பாலிக்கின்றான்.
லிங்க ரூபத்தில் சக்தி பீடமாய் இருக்கின்றது. லிங்க ரூபத்தினை வழிபடுபவர்களை சிவன் முதலில் ஆட்கொள்கின்றான். அக்னியாஸ்திரத்தை மிஞ்சும் அஸ்திரம் இல்லை என்பதால் அர்ச்சுனனைக் கொல்ல சிவவிக்கிரக ஆரதனை செய்துவந்த அஸ்வத்தாமா அந்த அஸ்திரத்தை ஏவுகின்றான். அந்த அஸ்திரத்திற்குப் பதிலாக சிவலிங்க ரூபத்தை தியானித்து தவம் செய்து பெற்ற பாசுபதாஸ்திரத்தை அர்ச்சுனன் ஏவ அது அக்னியாஸ்திரத்தை அடக்கி விடுகின்றது. வழிபாட்டுக்குரியது லிங்க வடிவமே. உயிர்களை மீட்டெடுக்க உதவுவது லிங்கவடிவ வழிபாடேயாகும்.
லிங்கம் என்பது மணியாகும். மந்திரம் என்பது பஞ்சாட்சரமாகிய ‘நமசிவய”. விபூதியே மருந்து-ஒளஷதம். சித்தர்கள் மணி-மந்திர-ஒளஷதம் என்று லிங்கத்தை, பஞ்சாட்சரத்தை, விபூதியை கொண்டிருந்தார்கள். அன்பு நிறைந்த ஆத்மாக்களே நீங்களும் மணி-மந்திர-ஒளஷதம் என்றிருங்கள்.
லிங்கம் ஏழு வகைப்படும். சுயம்பு, தேவி, திவ்ய, ஆர்ஷக, மானுஷ, ராட்ஸச, ஆசுர எனப்படும். 12 ஜோதிர்லிங்கங்கள் சுயம்பு வகை. லிங்கங்களை வணங்கியே தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், அஷ்டதிக்பாலகர்களும், கிரகங்கள், சப்தரிஷிகள், அசுரர்கள், யட்சர்கள், கின்னரர்கள் கிம்புருடர்கள் ஆகியோருடன் சித்தர்களும் வழிபட்டு வரங்களைப் பெற்றுள்ளனர்.
ஆனால் சித்தர்கள் தாங்கள் உணர்ந்ததையும் அறிந்ததையும் கொண்டு ஆத்மாக்களுக்கு வழிகாட்ட நினைத்தனர். சிவலிங்கத்தை வழிபாடு செய்த தேவர் முதலியவர்களால் லிங்கத்தின் மகாத்மியம் பக்தி பணிவு தெரிய வந்தது. சித்தர்களால் உடல், உள்ளம், ஆன்மா முதல் அண்டம், பிண்டம், பேரண்டம், மூச்சுக்காற்று, பிராணாயமம், மூலிகை, அஷ்டமாசித்தி முதலியன தெரிய வந்துள்ளது. சிவனே சித்தனாக வந்து சாகசம் புரிந்துள்ளான்.

சிவமயம்!
எல்லா தேவதைகளும் ஒரே பரமாத்மாதான். சிவனும் விஷ்ணுவும் ஒன்றே. சிவனையும் விஷ்னுவையும் பிரித்து வழிபட்டாலும் ஒற்றுமையுடன் இருப்பதுதான் (UNITY IN DIVERSITY) நம் மதத்தின் சிறப்பு. சிவன், விஷ்ணு என்று இரு மூர்த்திகளை வழிபடும்போது சாராம்சத்தில் அவை ஒன்றே என்ற உணர்ச்சி இருந்தாலும் ஒவ்வொரு மூர்த்தியையும் ஒரு தத்துவ ரூபமாக வைத்து பக்தி செய்வதால் ஒரு ஞானம் கிடைக்கிறது.
சிவனை எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஏகவஸ்துவான ஞானமாக பாவித்தால், அந்த ஏகவஸ்துவை நானவிதமாக அதாவது பலவகையாகக் காட்டி ஜகத்தை நடத்தும் சக்தியாக விஷ்ணுவைக் காணலாம். அதாவது சிவத்தை பரப்பிரம்மாகவும் விஷ்ணுவைப் பராசக்தியாகவும் வைத்துக் கொள்ளலாம். அம்பிகையும் விஷ்ணும் சகோதரர்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்கள் இரண்டும் ஒன்றே என்பதுதான் பரம ஞானிகளின் அனுபவம்.
சங்கர நாரயண வடிவத்தில் வலப்பக்கம் பரமேஸ்வரனும் இடப்பக்கம் விஷ்ணு இருப்பது அனைவரும் அறிந்ததே! அதேபோல் அர்த்தநாரீஸ்வர வடிவத்தில் வலப்பக்கம் பரமேஸ்வரனும் இடப்பக்கம் சக்தி இருப்பது அனைவரும் அறிந்ததே! இருக்கின்ற ஒன்றே ஒன்றை இல்லாத பலவாகக் காட்டுகிற சக்தியே அம்பாள் அல்லது விஷ்ணு என்று கருதவேண்டும்.
‘விச்வம் விஷ்ணு’ ‘ஸ்ர்வம் விஷ்னு மயம் ஜகத்’ என்று சொல்லப்படுவதிலிருந்து உலக பரிபாலனம் விஷ்ணுவிற்குரியது என்கின்றோம். உலகத்தில் ஆனந்தங்களை உணர்ச்சிகளை எல்லாம் தெய்வமாக்குகின்ற பக்தி மார்க்கம் விஷ்ணு சம்பந்தமாக தோன்றும். ஆனால் இந்த பிரபஞ்சத்தை விட்டு இதற்கு ஆதாரமான சாந்தத்தில் திளைக்கும்போது சிவசம்பந்தம் அதிகம் தோன்றும். சிவ ஞானம், சிவ யோகம் என்று சொல்கின்றபடி விஷ்ணு ஞானம், விஷ்ணு யோகம் என்றெல்லாம் சொல்லப்படவில்லை.
மேலே சொன்னபடி பலவாக இருக்கின்ற உலகனைத்யும் விஷ்ணுவாக இருக்கின்றபடியால் ஸர்வம் விஷ்ணு மயம் என்று சொல்லியுள்ளனர். பலவாக காண்பது இல்லாமல் போனால் ஸர்வம் இல்லாமல் போய்விடும். அப்போது ஏகம்தான் இருக்கும். ஏகம் இருக்கும்போது சர்வம் என்ற வார்த்தைக்கு இடமில்லை! அங்கே அந்த ஏகத்தை அனுபவிக்கின்றவனைத் தவிர ஜகம் என்கிற ஒன்றும் தனியாக இல்லை. ஜகம் என்கிற ஒன்றும் இல்லாமல் போனால் எஞ்சி இருப்பது சிவம் ஒன்றே. இதனால்தான் சிவமயம் என்று சொல்லப்படுகின்றது.
ஏழு நிறங்களில் (VIBGYOR) வெளுப்பும் கறுப்பும் இல்லை. உண்மையில் வெண்மை சிவனையும் கரிய நிறம் திருமாலைக் குறிக்கும் இந்த இரண்டு வர்ணங்களும் பிரபஞ்சத்தின் வர்ணங்களில் –லௌகிதத்தில் சேராதது. எதை எரித்தாலும் எரியும் வஸ்து கறுப்பு ஆகும். ஆனால் எரிபட்டவஸ்து நிறம் மாறினாலும் ரூபம் அப்படியே இருக்கும் முழுக்க முழுக்க எரிந்துபோய் உருவம் இழப்பதற்கு முந்தைய நிலை இதுவாகும். ஒரு பேப்பரையோ அல்லது துணியையோ எரித்து அணைத்து விட்டால் அது முதலில் கறுப்பாகத் தெரியும் பேப்பரில் உள்ள எழுத்துகளும்கூட கறுப்பாகத் தெரியும். துணியின் மடிப்புகள் அப்படியே இருக்கும். முழுக்க எரிந்தால் கருமை மாறி வெண்மையாகும்.
இது ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்பதாகும் இந்த நிலையில் ஜகத் இருப்பது போல் இருந்தாலும் இந்திரிய சேஷ்டைகள் எரிந்ததும் உணர்ச்சி ஆனந்தம் இருப்பதுபோல் தோன்றினாலும் லௌகிதமாக இல்லாமல் தெய்வீகமான பக்தி ரூபத்தில் இருக்கின்றது. எனவே யோகத்திலும் ஞானத்திலும் மேலும் ஆன்மாவைப் புடம் போட்டால் அதுவும் நீற்றுப் போய் பஸ்பமாகிவிடும். அதாவது வெண்மையாகும்.
எரிகின்ற வஸ்துகள் எல்லாம் முதலில் கறுப்பானாலும் கடைசிவரை எரிந்தால் எல்லாமே நீற்றுப்போய் வெள்ளை வெளேரென்று ஆகிவிடும். இந்த நிலைதான் சிவமயம் எனப்படும்.
நீங்கள் இன்னும் முழுமையாக உங்களை உங்கள் மனதின் எண்ண விருத்திகளை நீற்றுப் போகச் செய்து வெண்மையான சிவமயமாக மேலும் மேலும் உங்கள் ஆன்மாவை புடம் போடுங்கள்.

இறையருள் அறிவு!
ஐம்புலன்களையும் அடக்கும் தேவர்களும் இல்லை என்பதால் அவைகளை அடக்குக என்பவர் அறிவில்லாதவர்கள். ஐம்புலன்களும் அடங்கிவிட்டால் உடல் அறிவற்ற சடப் பொருளாகிவிடும் என்பதால் ஐம்புலன்களையும் அடக்காத அறிவை அறிந்தேன் என்கின்றார் திருமூலர். அதாவது அடக்க நினைத்தால் அடங்காமல் அலையும் ஐம்புலன்களும் மனமும், அவைகளை அன்பே சிவமாம் இறையருள் அறிவைக் கொண்டு அறிய முயன்றால் அவ்வறிவுக்கு ஐம்புலன்களும் மனமும் அடங்கிப் பணி செய்யும் என்கிறார்.

இசையால் இறையருள் வசமாகும்!
நந்தி தேவர் மத்தளம் வாசிப்பதில் வல்லவர். அவரின் மத்தள ஓசைக்கு ஏற்ப சிவனாரின் நடனம் ஆனந்த தாண்டவமாக இருக்கும். அப்போது நான்முகன் தாளமிடுவார். நடராஜர் ஆடும்போது அவர் கரத்திலிருக்கும் உடுக்கை ஓசை உலகையே இயங்கச் செய்கின்றது. கயிலையை பெயர்தெடுக்க இலங்கேஸ்வரன் முயற்சித்தபோது தன் கால் விரலால் அழுத்தம் கொடுக்க கைகள் சிக்குண்டிருக்க நாரதர் மகதி யாழினால் சாமகாணம் வாசிக்க மயங்கிய ஈசன் தன் கால் விரலை அகற்ற விடுதலை பெற்றன இராவணனின் கைகள். கையிலைநாதரை நோக்கித் தவமிருந்த இலங்கேஸ்வரன் தன் தலைகளை அறுத்து யாகத்தில் போட்டு தன் உடலில் உள்ள நரம்புகளை கம்பிகளாக்கி மீட்டு நாதத்தை எழுப்பி இறையருள் பெற்றான். பொதுவாகவே இறைவன் இசை வடிவானவன். அந்த இசைக்கு அவன் மயங்குவதில் என்ன தவறு! அதனால் தான் அடியார்களும், நாயன்மார்களும் ஈசனை பாடல்கள் பாடி துதித்து மகிழ்வித்துள்ளனர்.


மீண்டும் பிறவி! ஆவுடையார் என்றால் என்ன!
ஆத்மா ஈசனுக்குச் சொந்தமானது. ஆதனால்தான் ஆ என்ற ஆத்மாவை உடையவர் என்பதால்தான் ஈசனை ஆவுடையார் என்கின்றோம். ஈசனை அடைய வேண்டுமானால் அந்த உயிர் ஆத்மா மாசு மருவற்றிருக்க தூய்மையானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் ஈசனை சேரமுடியாது. ஆத்மாவை ஆணவம் என்ற மலம் பீடித்தால் அது மாசு அடைந்து விடும். அந்த மலம் நீங்கும் வரை அது மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துத்தான் ஆகவேண்டும். இதுவே மீண்டும் பிறப்பதின் ரகசியம். எனவே எல்லா உயிர்களும் ஆணவம் நீங்க முயன்று பிறவி பொருங்கடல் நீந்தி கரை சேர்வீர்.
இறைவன் உயிர்களைப் படைத்து அவை உடம்பு வழியாக வினைப் பயன்களை அனுபவிக்கச் செய்கின்றான். உலகத்தில் உழன்று தளர்ச்சியடையும் உயிர்களுக்கு சற்று ஓய்வு கொடுக்க உயிரை உடம்பிலிருந்து பிரித்து மீண்டும் புதியதாய் பிறக்க வைக்கின்றான். பிறவி பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்குட்பட்டது. பாவம் செய்தவர்கள் ஒன்று முதல் ஐந்தறிவு பிறவிகளாகவும், பாவம் செய்யாதவர்கள் சொர்க்கத்திற்கும், பாவம் புண்ணியம் சமமாக செய்தவர்கள் மானிடமாக ஆறறிவுள்ளவராகப் பிறப்பர். தேவர்கள் தங்கள் புண்ணியங்கள் தீர்ந்ததும் மீண்டும் மானிடராய்ப் பிறப்பர். செய்த வினைக்கு ஏற்ப வினைவட்டத்திலிருந்து தப்பிப் பிழைக்க புண்ணியங்கள் செய்திடல் வேண்டும்.

சிவனுக்குரிய விரதங்கள்!
1.சோமவார விரதம்- திங்கள்,
2.உமாமகேஸ்வரர் விரதம்- கார்த்திகை பவுர்ணமி,
3.திருவாதிரை விரதம்- மார்கழி,
4.சிவராத்திரி விரதம்- மாசி,
5.கல்யாணவிரதம்- பங்குனி உத்திரம்,
6.பாசுபத விரதம்-தைப்பூசம்,
7.அஷ்டமி விரதம்-வைகாசி பூர்வபட்ச அஷ்டமி,
8.கேதார விரதம்-தீபாவளி அமாவாசை.

லிங்க பூஜை பலன்கள்!
மண்லிங்கம் -பூஜை விருப்பங்கள் நிறைவேறும்.மலர்களால் அர்சினை-சித்தி
ரத்தினலிங்கம் -பூஜை லட்சுமிகடாட்சம்.
பவழலிங்கம் -பூஜை நிலையான செல்வங்கள்.
உலோகலிங்கம்-பூஜை தர்மம் செய்தபலன்கள்.
சிவலிங்க பிரதிஷ்டை செய்தவர்கள் முக்தி
சிவலிங்க பிரதிஷ்டையைப் பார்த்து தானும் அவ்வாறு சிவலிங்க பிரதிஷ்டை செய்ய நினைத்தால் அவர்களின் பாவங்கள் அக்கணமே மறையும்.

வேதங்களில் சொல்லப்பட்ட தவங்கள் 3 வகை!
1.மானத தவம்- மனதில் செய்யப்பட்ட பெரும் தவம் மானத தவமாகும் தவம் செய்வதில் விருப்பம் கொண்டு சிரத்தையாகச் செய்தல், உண்மையை பேசுதல், மௌனமாக மஹேஸ்வரனை தியானித்தல், ஐம்பொறிகளை அடக்குதல் ஆகும்.
2.வாசிக தவம்- இது வாக்கால் செய்யப்படும் தவம் வாசிகம். ஐந்தெழுத்தை ஜபிப்பது, ஈசானம், பஞ்ச பிரம்ம உருத்திர மந்திரங்கள், உபநிஷதப் பகுதிகளை ஓதுதல், ஸ்தோத்திரப்பாடல்களைப் பாடுதல், தர்மங்களைச் செய்தல் ஆகியனவாகும்.
3.காயிக தவம்-இது உடலால் செய்யப்படுபவை. சிவபெருமானைப் பூஜித்தல், திருக்கோவில் வலம் வருதல், அண்ணல் முன்பு அடி தொழுதல், திருப்பதிகள் தோறும் சென்று தரிசித்தல், திருப்பணி புரிதல், உடல் வருந்த புனித நதிகளில் நீராடுதல் ஆகியவையாம்.
எல்லாவற்றிலும் சிறப்பானது காயிக தவம். சிவ தீர்த்தங்களுக்குச் சென்று நீராடுவது சிறந்தது. அதைவிட சிறந்தது கங்கையில் நீராடுவதும் மற்ற நதிகளில் நீராடுவதும் ஆகும். நதிகள் எல்லாம் கடலில் சங்கமிப்பதால் கடலில் நீராடுவது எல்லாவற்றையும்விட சிறப்பு. அப்படி கடலில் நீராடும்போது கணவனுடைய கை, மகனுடைய கை அல்லது பசுங்கன்றின் வால் என்ற ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கொண்டு நீராடுவதே சரியான முறை.

சிவலிங்க வழிபாடு செய்பவர்கள் அறிய வேண்டியது!
சிவலிங்கத்தில் ஆவுடை சக்தியையும், லிங்கம் உண்மைச் சொரூபமாகிய பரவெளியையும் குறிக்கும் பரவெளி 36 தத்துவங்களையும் கடந்தது. பரவெளியில் தான் சிவன் நடராஜராக நடனம் புரிந்து ஐந்தொழில்களை இயக்கி எல்லா சராசரங்களையும் இயக்குகின்றார். இந்த பரவெளி நடராஜ நடனத்தத்துவமே சிதம்பரத்தின் இரகசிய தரிசனம். பரவெளி என்பது ஆகாயம் அது ஆனந்தம். அப்பரவெளியில் ஆடும் கூத்து ஆனந்தக்கூத்து. அனைத்துப் பொருள்களும் ஆகாயத்திலிருந்தே தோன்றி லயமாகின்றது.
லிங்கம் ஆவுடையாரை ஊடுருவி இருப்பது பரவெளியாகிய சிவம் என்ற நாதம். சக்தி அதாவது விந்துவை ஊடுருவி வியாபித்து ஒன்று மற்றொன்றை பிரியாமல் சேர்ந்திருக்கின்றது என்பதை உணர்த்தும்.
ஆவுடை லிங்கத்தின் கீழ் அடங்கி யிருப்பது சக்தி சிவத்திற்குள் அடங்கித் தொழில் செய்வதைக் குறிக்கும்.
ஆவுடையாரின் மேல் பாகத்தில் வெளியே நீண்டிருக்கும் கோமுகி உயிர்களுக்கு செய்யும் தண்ணொளியாகிய இரக்கம் / கிருபை யைக் குறிக்கும். ஆலய வழிபாடு செய்யும் அடியார்கள் கோமுகி வழியாகப் பாயும் அபிஷேக தீர்த்தங்களில் இறைவனின் திருவருள் சுரப்பதாக மதித்து கையால் ஏந்தி தலையில் விட்டு சிவனருள் பெற்றதாக மகிழ்கின்றனர்.
ரிஷபம்-விடை-காளை மாடு என்பது சாஸ்திரங்களின்படி தர்ம தேவதையைக் குறிக்கும். சிவலிங்கத்தின் முன்பாக காணப்படும் நந்தி என்பதற்கு ஆனந்திப்பது என்று பொருள். வெண்மையான மாடாதலால் சாத்வீகத்தையும் பரம் பொருளாகிய இறைவனிடம் கொண்டு சேர்க்கும் சாத்வீக குணங்களாகிய சமம், விசாரம்/ஆலோசனை, சந்தோஷம், சாதுசங்கம்/சத்வகுணம் ஆகிய குணங்களை உணர்த்துவதாகும்.
நந்தியின் அனுமதி பெற்றுதான் சிவதரிசனம் பெற வேண்டும் என்பது மேற்கூறிய சமம், விசாரம்/ஆலோசனை, சந்தோஷம், சாதுசங்கம்/சத்வகுணம் ஆகிய நான்கு ஆத்ம குணங்களைக் கொண்டிருக்காவிடில் ஒரு ஆத்மா உடலுடையவன் கடவுளை சச்சிதானந்த அறிகுறி ரூபமாக உணர்தல் முடியாது என்ற வேதம் கூறும் இரகசியத்தைக் சொல்வதாகும்.
நந்திக்கும் லிங்கத்திற்கும் இடையே செல்லக்கூடாது என்பது ஆத்மா சச்சிதானந்த அனுபவத்திலிருந்து வெளிப்பட்டு பிரபஞ்ச விவகாரத்திற்குள் வரும்போது மேற்கூறிய ஆத்ம குணங்கள் வழியாக அனுபவம் சேரும்போது அந்த வழிக்கு எதிரான குணங்களைக் கொள்ளாமல் அந்த ஆத்ம குணங்களிலேயே நிற்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.
சிவநேயர்கள் இந்த லிங்க தத்துவத்தை உணர்ந்து வழிபட்டால் சிறப்பான நன்மை பெறக்கூடும்.
சிவன் கோவில்களில் வரவு செலவுகள் சண்டேசுவரர் பெயரில் எழுதுவது பண்டைய வழக்கம். இது அறங்களைச் செய்யும் போது நான் செய்தேன் என்னும் தன் சிறப்பு இன்றி இறைவனது திருவருளே அறத்தைச் செய்வித்தது என எண்ணிச் செய்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் தத்துவம்.
சிவாலய தெய்வங்களில் தென்முகக் கடவுள், ஆடல் வல்லான், சண்டேசுவரர் ஆகியோர் தெற்கு நோக்கி காட்சியளிப்பார்கள். சண்டேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பார். சிவவழிபாட்டின்போது சிவனுக்கு அணிவித்து பெறும் பூமாலை, பரிவட்டம் முதலிய பொருட்களை சண்டேசர் சந்நிதியில் சேர்த்து சிவதரிசனப் பலனைத் தரவேண்டும் என பிராத்தனை செய்து அங்கு விபூதி பெற்று அணிய வேண்டும் என்பதே முறை. இடையறாத தியானத்தில் இருக்கும் சண்டேசருக்கு நமது வருகையை தெரிவிக்கவே அவரது சந்நிதியில் நின்று மெள்ளத் தட்டுதல் வேண்டும். அவரது சன்னதியை முழுமையாக வலம் வராமல் வலப்புறமாக சென்று தரிசித்து வந்த வழியே அரைவட்டமாக திரும்ப வேண்டும். சிவ புண்னிய பலனை பக்தர்களுக்கு அளிக்கும் அதிகாரம் கொண்டவர் சண்டேசுவரர். முதலில் விநாயகரையும் இறுதியில் சண்டேசுவரரையும் வழிபடுதல் வேண்டும் அப்போதுதான் சிவ வழிபாடு முழுமை பெறும். பஞ்சமூர்த்திகள் புறப்பாடு என்பது- விநாயகர், முருகன், சிவன், அம்பிகை, சண்டேசுவரர் என்பதாகும். சண்டேசர் மானிடராய் பிறந்து இந்நிலைக்கு உயர்ந்தவர்.

தண்டம் சமர்ப்பித்தல்!
தண்டம் என்றால் கோல் அல்லது கழி எனலாம். கையில் பிடித்திருக்கின்ற கோலை விட்டு விட்டால் அது அப்படியே தடாலென்று கீழே விழுந்துவிடும். ஒன்றுக்கும் உதவாத பொருளையும் தண்டம் என்பர். ஒரு உடலில் உள்ள ஆத்மா நீங்கிவிட்டால் அது வெறும் பிண்டம். அது தண்டம். இந்த தண்டத்தை தூக்கிப் பிடித்து ஆட்டுகின்ற சக்தி இறைவன் அளித்தது ஆகும். நாம் தூக்கி நடத்துகின்றோம் என்ற அகந்தையை விட்டு விட்டதற்கு அடையாளமாக ஈசன்முன் சரீரத்தை கீழே போடவேண்டும் என்பதையே தண்டம் சமர்ப்பித்தல் ஆகும். இந்த உடம்பை பாதுகாக்கும் பொறுப்பை பூரணமாக உன்னிடம் போட்டேன் என்பதற்கு அடையாளம்தான் சரீரத்தை தரையில் போடுவதாகும். அதாவது அஷ்டாங்கமும் நிலத்தில் படுமாறு வழிபடுதல்..

ஒரே நிகழ்வுகள் எப்படி வேறுவேறு தலங்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது! மன்வந்திரம் என்றால் என்ன!
கிருத, திரேதா, துவாபாரா, கலி ஆகிய நான்கு யுகங்களும் சேர்ந்து ஓரு சதுர்யுகம் (மகாயுகம்). இப்படி 18 மகாயுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்திரம்(4x18)-72. 72 மன்வந்திரங்கள் இந்திரன் ஆயுள் காலம். 270 இந்திர ஆயுள் சேர்ந்த காலம் பிரமனுக்கு ஒருநாள். இப்படி 365 நாட்கள் சேர்ந்தது பிரம்மனுக்கு ஒரு வருடம். இதில் 100 வருடம் பிரம்மனின் ஆயுட் காலம். அப்படி 360 வருடங்கள் சென்றால் ஆதி பிரமனுக்கு பிரளய காலம். இந்த பிரளயம் 100 சென்றால் ஒரு விஷ்ணு கல்பம். இது போன்று பல கல்பங்கள் உண்டு. எனவே ஒவ்வொரு மகாயுகமும் ஒவ்வொரு மன்வந்திரத்திலும் சுழன்று வருவதால் அதே நிகழ்வுகள் ஒரு யுகத்தில் ஒரு தலத்திலும் அடுத்த யுகத்தில் வேறொரு தலத்திலும் நிகழ்ந்திருக்கும் என்பது ஆன்மீக பெரியவர்களின் கருத்து. ஒரே நிகழ்வுகள் இப்படித்தான் வேறு வேறு தலங்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது! மனத் தெளிவுடன் ஆன்மீகத்தில் ஈடுபட்டு மேன் நிலை அடைய முயலுங்கள்-குருஜி

சகல உயிர்களையும் எரித்து அழித்திடும் திருபாற்கடலில் உற்பத்தியான ஆலகால நஞ்சினை உண்டு 33முக்கோடி தேவர்கள், முனிவர்கள் மற்றுமுள்ள உலக உயிர்களை ரட்சித்து காத்து அருளிய நீலகண்டனே, சதாசிவ பிரம்மமே, பிரணவ ஸ்வரூபியே, சகலத்தையும் ரஷிக்கும் ஆனந்த சித்தனே, ஒலிவடிவானவனே, நாத ஸ்வரூபனே, வேத வடிவானவனே, பரமேஸ்வரனே உன் திருபாதார விந்தங்களுக்கு வந்தனம்-குருஜி.
#####

Read 49 times Last modified on புதன்கிழமை, 20 September 2017 09:38
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2792722
All
2792722
Your IP: 54.158.21.176
2017-09-20 11:15

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...