gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
திங்கட்கிழமை, 06 April 2015 00:00

ஓம் (எ) பிரணவம்

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

&&&&&

ஓம் (எ) பிரணவம்:

அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையே ஓம் ஆகும். ஏகாட்சரமான ஓம் என்பதை பிரித்தால் வரும் எழுத்தை ‘அ’கரம், ‘உ’கரம், ‘ம’கரம் என்றும் அதுவே ஓங்கார அடிப்படை ஒலிகள் எனக் கூறப்படும். ஓம் என்பது ஆத்மாவுக்குரிய ஓசை. பிரமத்தையே தனக்குப் பொருளாகக் கொண்ட ஓசை. ஓம் என்ற மகா மந்திர ஓசை உயிர்களை பரமாத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்யும் சமர்த்தியம் கொண்டது. அதுவே பிரணவ மந்திரம் ஆகும். பிரணவம் பழுத்த இடம் ஒளி பிறக்கும் படியான இடம். அதாவது அகரம் பிறக்குமிடம். ஒளி பிறக்குமிடத்தில் மந்திரங்கள் பிறக்கும். எனவே பிரணவ மந்திரம் ஆகிய ஒம் தன் ஒலியால் அசைவுகளை உண்டாக்கி அதன் ஒளியால் சக்தியை உண்டாக்குகின்றது. இந்த சக்தியே ஜீவராசிகளின் பிண்டத்திலும் (உடலில்), அண்டத்திலும் (பிரபஞ்சம்) பரவியுள்ளது. இஃது உச்சரிக்கப் படாததால் மனதால் உணரத் தக்கது. மந்திரங்களுக்கு ஆதாரமாய் முதல்வரைக் குறித்து நிற்கும்.

ஓம் என்பதில் உள்ள முதல் எழுத்தான அ என்ற எழுத்தால் உலகம் எங்கும் பரவி பல் உயிர்களாக விளங்கி, இரண்டாம் எழுத்தான உ என்பதால் உடலில் பரவி சிவசத்தியாய், மூன்றாம் எழுத்தான ம என்பதால் தோன்றும் ஒளிப் பொருளை மாயையால் மயக்கத்தால் பொருந்தியது ஆகும்.

தானே ஒப்பில்லாத பேரொளிப் பிழம்பாகும் எக்காலத்தும் அழிவு இன்றி ஒன்று போல் எங்கும் பரந்து நிற்கும் பெய்ப்பொருளும் தானே ஆகும். தானே அகர உகர பிரணவத்தின் உறுப்புகளாகும் த்த்துவங்களை இயக்குவதற்கு தானே ஒளியை தருவது ஆகும். பிற ஆதாரமின்றி தனக்குத் தானே ஆதாரமாய் திகழும்.

உலகம் தோன்றியபோது எழுந்த முதல் பேரொலி ஓம். அதாவது உலகம் ஓம் என்ற பேரொலியிலிருந்துதான் பிறந்தது. பிராணன்கள் யாவும் இதிலிருந்துதான் தோன்றின. அதனால்தான் ஓம் பிரணவம் என போற்றப்படுகின்றது. வேதங்களில் உள்ள எல்லா மந்திரங்களும் ஓம் என்றே தொடங்குகின்றன. வேள்விகளில் துதிக்கப்படும் இறைநாமங்களும் மந்திரங்களும் ஓம் என்று கூறியே சொல்லப்படுகின்றன. யாகத்தில் இடும் பொருட்கள் அனைத்தும் ஓம் எனக்கூறியே அக்னியில் சமர்பிக்கப்படுகின்றது. ஓம் என்பது குணமுள்ளது, குணமற்றது, உருவமுள்ளது, உருவமில்லாதது. அழிவற்ற ஞானம் உடையது. ஓம் உலகிற்கும் உலக உயிர்களுக்கும் பொதுவானது.

பிரணவத்தில் பருமை நுண்மை என இருவகை உண்டு. அ, உ, ம என்பனவற்றால் ஆனது பருமை. விந்து நாதமாய் உணர்வது நுண்மை.

அ, உ, ம என்ற மூன்றால் ஆகியது ஓம். இது தூலப் பிரணவம். இது பருவுடலுக்கு இன்பத்தைத் தரும். மறைகளால் பாதுகாக்கப்பட்ட விந்து நாதமான நுண்மைப் பிரணவம் மேலான பராசத்தியின் வடிவம். களிப்பைத் தரும் நேரத்தில் செய்யப்படும் செயலே நுண்பிரணவத்துக்குக் காரணமாகும். இந்தச் சூக்கும பிரணவத்தை அறிவதே வேதாந்த நெறியாகும்.

ஓம் என்ற பிரணவ மொழிக்குள்ளேயே உபதேசத்துக்குரிய ஒரு மொழி தோன்றும். அஃது உருவையும் அருளையும் தனக்குள் கொண்டது. அதில் பல வேறுபாடுகள் உள்ளன. இத்தகைய ஓம் என்னும் பிரணவத்தை அறிவதில் மேலான சித்தியும் முத்தியும் உண்டாகும்.

அகண்டமான பிரணவத்துள் மண் முதலிய ஐந்து பூதங்கள் உண்டாயின. இதனின்றும் ஐந்து பூத மாற்றத்தால் அசையும் உயிர்களும் அசையாத உயிர்களும் உண்டாயின. பிரணவத்தைக் கடந்த அதிதீதத்தில் சகலர், பிரளயகலர், விஞ்ஜானகலர் என்னும் மூவகை உயிர் இனமும் உள்ளன. அதனால் பிரணவம் உயிர் வாழ்பவையான சீவர்களுக்கும் மற்ற ஆன்மாவின் தொகுதிக்கும் சிவனுக்கும் உரிய நிலையாகும்.

அ, உ, ம, என்ற எழுத்துட்ன் கூடிய ஓங்கார இறுதியில் உள்ள நாதப் பிரமம் இன்ப வடிவனதும் வியாபகமானதுமாகும். அதனுடைய சுருங்கிய நிலையே சரமாகவும் அசரமாகவும் உலகில் உள்ளன. பெரியதான் உலகம் எல்லாம் நாதப் பிரமத்தின் படிவம் ஆகும்.

அ என்றால் சூரியன், உ என்றால் இந்திரன், ம் என்றால் அக்னி. எனவே ஓம் என்பது எல்லாப் பிரகாசங்களும் உள்ள பொருட்களின் சுய வடிவு. ஓம் என்ற காந்த ஒலி அதிர்வு மின் அலைகளுடன் தொடர்புடையது. ஒரு தொடர் சுழற்சியிலிருந்து ஓம் என்ற ஒலியை கேட்கலாம். பூமி மற்றும் அண்டங்களின் சுழற்சியால் பிரபஞ்சத்தில் காந்த அலைகள் ஏற்படுத்தப்படுகின்றன. சூரிய, சந்திர, நட்சத்திரங்களின் ஒளியின் அசைவுகளால் மின் அலைகள் பரவுகின்றன. இந்த அலைகள் நம் உடலிலும் பிரபஞ்ச பொருள்களிலும் பதிந்து மின் காந்த சக்தியைத் தோற்றுவிக்கின்றன. உயிர்களுக்குத் தேவையான ஆதாரப் பொருள்களும் அடிப்படைச் செயல்களுக்குரிய திரவங்களும் தாதுக்களும் இந்த சக்திகளால் உண்டாக்கப்பட்டு பிரபஞ்சத்தில் இயக்கங்கள் நடைபெறுகின்றது.

ஓங்காரத்தின் ஒளி முதலிய நிறம், சக்தியாவும் நம் மவுன முயற்சியால் மிகப் பெரிய பலன்கள் அந்த உயிரின் உடலுக்கு கிடைக்கச் செய்கின்றது.

நாபியில் ‘அ’ எனத்தொடங்கி ‘உ’ ஆக வளர்ந்து ‘ம்’ என முடியும் ஓம் என்ற அந்த ஓசையுடன் காலம், இடம், காரணம், காரியம் எல்லாம் நம் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

காலத்தை- விநாடி, நிமிஷம்,மணி, நாள், மாதம், அண்டு ஆகிய அருவ அளவைகளால் உணரலாம்.

இடத்தை- தொடங்கும் இடத்தின் எல்லை, முடியும் இடத்தின் எல்லைக்குட்பட்ட நீட்டல் அளவை முதலிய உருவ அளவைகளால் உணரலாம்.

காரணம், காரியம்- ஓர் சிறிய ஆலம் விதையில் பெரிய ஆலமரம் உண்டாகிறது என்ற காரண காரியத்தை புரியலாம்.

ஓம் என்ற அருவமான ஓர் ஓசை சக்தியின் வளர்ச்சியை இயக்கத்தை காலம், இடம், காரண காரியம் ஆகிய அடையாளங்களால் உடம்பினுள்ளும் பிரபஞ்சத்திற்குள்ளும் உருவாக்க முடியும்.

பிரபஞ்சத்தின்(அண்டம்) சிறிய பகுதி உடல்(பிண்டம்). பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உடலில் இருப்பதால் பிரபஞ்ச ஓங்கார ஓசையை உடலினுள் சொல்வதால் பிரபஞ்ச பயனை அடையலாம்.

நாதம் என்பது பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆகாயத்தின் அடிப்படை ஒலித் தத்துவமாகும். பிரபஞ்சத்தின் எல்லா நாத ஓசைகளும் தன்னிலிருந்து சில பொருட்களை உண்டாக்கும்.

குரலின் இனிய ஓசை, காற்றின் ஓசை, நெருப்பின் எரியும் ஓசை, மண்ணின் சரியும் ஓசை, நீரின் பாயும் ஓசை மற்றும் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு ஓசை எடுத்துச் செல்வது போன்றவைகள் எல்லாம் நாதத்தின் வகைகளாகும்.

செயற்கை கருவிகளால் உண்டாகும் செயற்கை ஓசைகள் ஏற்றத்தாழ்வு கொண்டிருந்தாலும் நாத அளவில் அது இயற்கையானது.

இந்த இயற்கையான நாதங்களை ஒருங்கினைத்து தோன்றுவிப்பதே ‘ஓம்’ எனும் பிரணவ ஒலி மந்திரமாகும். இந்த நாதத்தை நாபியின்(தொப்புள்) பகுதியில் எழுப்பும்போது உடலில் உள்ள வேதியல் பொருள்களில் பலவித வடிவம், நிறம், ஒளி, சக்தி, அலை ஆகியன உண்டாகும்.

உடம்பின் உள்ளே தோன்றும் தச வாயுக்களாலும் உடலில் உள்ள அக்னியின் மேல் செல்லும் போக்காலும் இந்த பிரணவ ‘ஓம்’ உடம்பின் கீழிருந்து மேல் நோக்கி உச்சித் தலைக்கும் அதற்கு மேலும் தடையின்றி போகும்.

அப்படிப் போகும்போது பெயர், எல்லை, ஒளி, நிறம், தெய்வம், அளவு, வடிவம், சூனியம் ஆகிய பகுதிகளை வரையறை செய்து உணர்ந்தால் ஓங்காரம் பிரபஞ்சத்துடன் ஒன்றி உடலில் பரவுவதை அனுபவிக்கலாம். இப்போது இந்த ஞான ஒளி உள் ஒளியாகி குண்டலி சக்தியாக வெளிப்படும். எனவே ஓம், பிரணவம், குண்டலி யாவும் ஒன்றை ஒன்று சார்ந்தது என்பது புரியும்.

பிரபஞ்சத்தில் உருவாக்கப்படும் எல்லாப் பொருள்களுக்கும் உரிய தேவர்கள் உண்டு. ஓம் எனும் பிரணவத்தில் ‘அ’ என்பது முதலில் தோன்றுவதால் ‘அ’காரமாவது உலக உற்பத்தியை குறிக்கும், அதற்குரிய தேவர் படைப்புக் கடவுள் என்றும், ‘உ’ என்பது வளர்வதற்குத் துணை செய்வதால் ‘உ’காரம் வியாபித்தல் என்பதைக் குறிக்கும், அதற்குரிய தேவர் காவல் கடவுள் என்றும், ‘ம்’ என்பது முடித்து வைப்பதால் ‘ம’காரமாவது அழித்தலைக் குறிக்கும், அதற்குரிய தேவர் சம்ஹாரக் கடவுள் என்றும் உணர்த்தப்படும்.

எனவே ‘ஓம்’ என்பது படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் தம்மகத்தே கொண்டதால் முத்தொழிலுக்குரிய கடவுள்களும் அதில் அடங்குவர்.

பிரணவப் பொருளே சிவனின் சொரூபம். எல்லா விதைகளுக்கும் விதை போன்றது. மிக சூட்சமம் ஆனது. உலகின் எல்லா ரூபங்களிலும் காணப்படும் அதுவே பரப்பிரம்மம் ஆகும். ஏகாட்சரம் என்றும் ஆதி மந்திரம் என்றும் சொல்லலாம். ‘அ’ கர, ’உ’ கார, ’ம’ காரங்களாகிய மூன்றும் சேர்ந்து உச்சரிக்கப்படுவது பிரணவம். அதிலிருந்து வேதங்கள் தோன்றின. ‘அ’காரம் ரஜோகுணத்துடன் நான்முகனாக உற்பத்தியைச் செய்யும். ‘உ’காரம் சத்துவ குணத்துடன் விஷ்ணு ரூபமாகி உலகத்தைக் காக்கும். ‘ம’காரம் தமோ குணத்துடன் ருத்திரனாகிய புருஷ்னாக உலகத்தை சங்கரிக்கும். பிந்து (விந்து) மகேசுவர சொரூபமாக திரோபாவத்தை-மறைத்தலைச் செய்யும். நாதம் சதாசிவ ரூபமாக எல்லாவற்றையும் அருளும். சதாசிவ மூர்த்தியாக விளங்கும் மந்திரம், யந்திரம், தேவதை, பிரபஞ்சம், குரு, சீடன் எனும் ஆறுவகைச் சாதனங்களால் சிவனை அறிந்து ஐக்கியமாக வேண்டும் அதற்காண மந்திரம், தியானம் ஆகியவற்றை உமைக்கு விளக்கினார் சிவன். இதய கமலத்தில் ஆதார சக்தி முதல் அந்தராகாசத்தில் ‘ஓம்’ எனும் ஏகாட்சர சொரூபியாக பிரம்மத்தையே தியானிப்பவர்கள் சிவ ஞானத்தை உணர்ந்து சிவகதியடைவர். குருவைத் தியானித்து வணங்கி அவர்மூலம் உபதேசம் பெற்று தூய்மையாக பிரணவத்தை உச்சரித்து பஞ்சாட்சரம் செபித்து முறைப்படி பஞ்சாவரண பூசை செய்ய வேண்டும் என உபதேசித்தார். சிவன் உபதேசித்த வேதசிவாகமப் பொருளை தன் அருள் முகத்தால் பிற ஆன்மாக்களுக்கு அம்பிகை உணர்த்தினாள்

‘அ’காரம், ‘உ’காரம், ‘ம’காரம் ஆகிய மூன்றையும் மூன்று உடல்களாக கருதப்படும். அவை முறையே ஸ்தூலம் (பருஉடல்) கண்ணுக்குப் புலனாகும் மாமிச உடல், மண்ணியல்பாய் உருவானது என்றும், சூட்சமம் (நுண்ணுடல்) கண்ணுக்குப் புலப்படாமல் அமைந்திருப்பது (ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5, அந்தகாரணங்கள்-4, பிராணவாயு-1 இதை லிங்க சரீரம் எனக் கூறப்படும்) என்றும், காரணம் (லிங்க உடல்) பரு உடல் நுண்ணுடல் இரண்டிற்கும் காரண வித்தாக இருக்கும் இதை சஞ்சீத கன்மம், தொகைவினை எனக்கூறப்படும்.

‘அ’காரம், ‘உ’காரம், ‘ம’காரம் மூன்றும் மூன்று உடல்களாக மட்டுமல்லாமல்
பெண், ஆண், அலி என மூன்றுமாகவும்,
ருக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம் என மூன்று வேதங்களாகவும்,
கார்ஹபத்யாக்னி, தக்ஷிணாக்னி, ஆஹவனீயாக்னி என மூன்று அக்னியாகவும்,
ஹ்ரஸ்வம், தீர்க்கம், ப்லுதம் என்ற மூன்று ஸ்வரங்களாகவும்,
பாதம், நாபி, சிரசு என மூன்று சர்வ அவயவங்களாகவும்,
புத்தி, மனம், அஹங்காரம் என மூன்று சர்வ அந்தக்கரண ஸமஷ்டியாகவும்,
ரஜோகுணம், ஸத்வகுணம், தமோகுணம் என மூன்று குணபேதங்களாகவும்,
சிவப்பு, கபிலம், கறுப்பு என மூன்று வர்ணங்களாகவும்,
பூரகம், கும்பகம், ரேசகம் என மூன்று ப்ராணாயாம அப்பியாசமாகவும்,
நாதம், பிந்து, களை என மூன்றுமாகவும்,
கிரியாசக்தி,பிந்து, ஞானசக்தி என மூன்றுமாகவும்,
ப்ராஹ்மணீ, வைஷ்ணவீ, ரௌத்ரி என மூன்றுமாகவும்,
பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் என திரிமூர்த்திகளாகவும்,
சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலங்களாகவும்,
ஜீவாத்மா, அந்தராத்மா, கூடஸ்தன் என மூன்றுமாகவும்,
விராட் புருஷன், ஹிரண்யகர்ப்பன், ஈஸ்வரன் என மூன்றுமாக இருந்தும்

செயல்புரிய வல்லது. எனவே ‘ஓம்’ என்ற பிரணவத்தில் எல்லாம் அடங்கும்.

உலக உற்பத்திக்கு காரணம் பரம்பொருளே. ‘அ’ கார உயிர் எழுத்து அனைத்துமாகி வேறாய் அமர்ந்து, ஓங்காரத்தால் ஐந்தெழுத்தால் புவனத்தை உண்டு பண்ணும் பரம்பொருள் என்றார் தாயுமானவர்.

நாதவடிவமான பிராணவம் மூன்றாகப் பிரிந்து அதிலிருந்து ஐந்து எழுத்தான பஞ்சாட்சாரம் பிறந்தது. அந்த 5 லிருந்து 51 அக்ஷரங்கள் தோன்றின.

எழுத்துக்கள் ஒற்றும் உயிரும் என இருவகைப்படும்.

உயிருடைய பொருள், உயிரில்லாப் பொருள் என உலகத்தில் இருவகைப்படும்.

‘அ’ காரம் எல்லா எழுத்துக்களிலும் கலந்து அவைகளை இயக்கும் தன்மை கொண்டது. தானும் தனித்து இயங்கவல்லது. இறைவன் தானும் இயங்கி எல்லாப் பொருளிலும் கலந்து அவைகளை இயக்குவதுபோல் ‘அ’ காரம் இயங்காமல் எந்த எழுத்தும் இயங்காது.

வாயை திறந்தவுடன் உண்டாவது ‘அ’ கார ஒலியே! ஒலி வேறுபாட்டில் உதிக்காமல் வாய்திறந்து எழும் ஒலிமாத்திரமான இயற்கையாகப் பிறப்பது ‘அ’ காரம். ‘அ’ காரம் எல்லா பொருள்களிலும் கலந்து இருப்பதுபோல் கடவுள் எல்லாப் பொருள்களிலும் கலந்து இருக்கின்றார். இதுவே “மெய்யின் இயக்கம். ‘அ’கரமொடு சிவனும்” என்று தொல்காப்பியத்தில் குறிபிடப்பட்டுள்ளதாகும்.

மேலும் ‘அ’ காரத்தில் தொடங்கும் சொற்கள் (அரன், அரி, அயன், அரசன், அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், அண்ணி, அத்தை, அண்டம், அன்பு, அறிவு, அறம், அடக்கம், அமைதி, அகம், அழகு, அறிஞர், அண்ணல் எல்லாம் மிகமிக உயர்ந்தவற்றை குறிப்பிடுபவையாக அமந்துள்ளது அறிக.

அருணகிரிநாதர், தொல்காப்பியர், திருவள்ளுவர், ஒளவையார், குமரகுருபரர், உய்யவந்த நாயனார் ஆகிய அருளாளர்கள் ‘அ’காரத்திற்கு முதலிடம் தந்து இறைவனுக்கு நிகராக்கி சிகரமாக சிறப்பித்துள்ளதே ‘அ’காரத்தின் சிறப்பை வழிவழியாக நம் முன்னோர்கள் அறிந்துள்ளது அறியலாம்.

ஓம் (எ) பிரணவம் பற்றி அடியேன் தெளிந்த கருத்துக்களை முன் வைத்துள்ளேன். குறையிருப்பின் நீக்கி பொருள்கொண்டு நிறைகாண்பீர். அன்புடன்--குருஸ்ரீ பகோரா  

Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

20077774
All
20077774
Your IP: 173.245.54.141
2021-01-21 19:40

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg