Print this page
புதன்கிழமை, 06 May 2015 05:05

ஓர் ஆன்மாவின் குரல்!

Written by
Rate this item
(1 Vote)

ஓர் ஆன்மாவின் குரல்!


நான் அமரன்! எனக்குச் சாவு கிடையாது!
நாழிகைகள் கழிந்தாலும் நாட்கள் ஒழிந்தாலும் பருவங்கள் மாறினாலும்
ஆண்டுகள் சென்றாலும் எப்போதும் நான் மாறுபடமாட்டேன்!
நான் எக்காலமும் உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பேன்!
என்றும் உயிர் வாழ்வேன்!
எப்போதும் சத்யமாவேன்!
எப்போதும் ஆனந்தித்திருப்பேன்.
இதையெல்லாம் நான் உறுதியாகத் தெரிந்து கொண்டேன்!
இஃதெல்லாம் உண்மையென்று அறிவேன்!
ஏனெனில் என்னுள் நான் நிரம்பிக்கிடக்கின்றேன்!

நான் கடவுளின் அணு!
ஆதலால் சாக மாட்டேன்!
தெய்வம் என்னுள் எப்போதும்
வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி
என்னைத் திறந்து வைத்திருக்கின்றேன்!
அதாவது, நான் என்னுள் வீழும்படி
எப்போதும் திறந்து நிற்கிறேன்!
என்னுள்ளே கடவுள் நிரம்பியிருக்கிறான்!
அதாவது, என்னுள் யான் நிரம்பிக் கிடக்கின்றேன்!
உடல் நாடிகளில் அமிர்தம் ததும்பிப் பாய்கிறது!.

அதனால் உடலின் ரத்தம் வேகமும்
தூய்மையும் உடையதாய் இருக்கின்றது!
அதனால் என்னுள்ளே வீர்யம்
பொங்கிக் கொண்டிருக்கிறது!
நான் எப்போதும் வீர்யம் உடையேன்! ஜாக்ரதையுடையேன்!
எப்போதும் தொழில் செய்வேன்!
எப்போதும் அன்பு செய்வேன்!
அதனால் சாதல் இல்லாதவன்!
நான் இத்தனை ஆனந்தத்துள் மூழ்கிக் கிடப்பது ஏன்!
நான் தேவன் ஆதலால்!

நான் தீராத இளமை சார்ந்தேன்!
என்றும், எப்போதும், நித்யமான கால முழுமையிலும்,
தீராத மாறாத இளமையுடையோன்!
மூட மனிதர் தீர்க்காயுள் வேண்டுகின்றனர்!
நான் அதனை வேண்டேன்!
ஏனென்றால் வேண்டும் நீண்ட வயது
துன்பமாகிறதேயன்றி வேறில்லை!
நான் சதாகாலமும் துன்பமின்றி
வாழும் வாழ்க்கையை விரும்புகின்றேன்!
அதனை நான் எய்திவிட்டேன்.

தீராத கவலை பொதிந்த சாதாரண மனித வாழ்க்கை
சற்று நீடிப்பினால் என்ன பயன் தரும்!
ஞானம்பெறும் எண்ணம் குறையும்!
நான் கவலையை ஒழித்தேன்!
ஆதலால் எப்போதும் வாழ்வேன்!
ஆதலால் கவலையை விட்டேன்!
கவலையாலும் பயத்தாலும் மரணமுண்டாகிறது!
கவலையும் பயமும் பகைவர்கள்!
நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன்!
ஆதலால் மரணத்தை வென்றேன்.

நான் அமரன். நான் அமரன்.
நான் அமரன். என்றும் நான் அமரன்.
நீங்களும் அமரனாகலாம்! முயற்சி
திருவினையாக்கும்.
இது ஓர் ஆன்மாவின் இனியகுரல் --குருஸ்ரீ பகோரா

Login to post comments