Print this page
திங்கட்கிழமை, 06 April 2015 00:00

தெய்வீகம்!

Written by
Rate this item
(2 votes)

தெய்வீகம்-தெய்வீகத்தன்மை-தெய்வீகவழிபாடு!

எல்லா உயிர்களும் ஓர் நிலையில் கோபம் கொள்கின்றன. மனிதன் தான் கோபத்தை தன்னைச் சார்ந்தவர்கள், உறவுகள், பணியாளர்கள், நணபர்கள் என்றில்லாமல் கடவுளிடமும் சிலசமயங்களில் வெளிப்படுத்துகின்றனர். எவ்வளவு பிரார்த்தனை செலுத்திருக்கின்றேன். காலை மாலை வணங்குகின்றேன். கோபுரங்கண்ட இடத்தில் கும்பிடுகின்றேன். விடுமுறை என்றால் ஊர் ஊராக கோவில் கோவிலாக சுற்றுகிறேன். இருந்தும் எனக்கு என் ஒரு சிறு செயல்கூட செய்யவில்லை. என் நினைவுகள் பலிக்க வில்லை. அவை நிறைவேற ஒரு துணையும் புரியவில்லை. என மனம் வெதும்பி ஓர் அசாதாரன கோபம் கொண்டு பிதற்றுகின்றோம். புலம்புகின்றோம். 

இறை வணக்கத்தில் நாம் கடைபிடிக்கும் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து அது வேண்டும் இது வேண்டும் என நினைக்கின்றோமோ தவிர மனம் ஒன்றி வணங்கியிருக்கின்றோமா என நினைத்துப்பாருங்கள். உணர்வுகளால் தாக்கப்பட்டு வருத்தத்தினால் புலம்பி கோரிக்கைகள் வைப்பதற்குத்தான் அதிகமான நேரங்கள் செல்விடப் பட்டிருக்குமோயன்றி முழுமனதுடன் வணங்கியது என்பதை கணக்கெடுத்தால் மிகக் குறைவாக இருக்கும். எனெனில் மனதின் அசுர சக்தியான வேதாளம் நம் பிரச்சனைகளை முன்வைத்து நம்மனதைக் குழப்பி இறை வணக்கத்தை தடை செய்யும் நோக்குடன் நம்பிரச்சனைகளை சொல்ல வைக்கின்றது. அதனால் நம் கவனம் இறைவணக்கத்தில் முழுமை யடைவதில்லை. நம் துயரங்களை துன்பங்களை மனவேதாளத்தின் தூண்டுதலால் புலம்பிவிட்டு வருகின்றோம். இது எவ்வாறு இறைவணக்கம் ஆகும். எந்த தெய்வீகத்தன்மையையும் நாம் அருகில் நாட வாய்ப்பில்லை.

நாம் ஜெபம், தியானம், துதிப்பது மற்றும் மனம் ஒன்றி பூஜை செய்து வணங்குவது மூலமாகவே நம் பிரச்சனைகள் அவரிடம் சென்று விடுகின்றன. அவ்வாறிருக்க நீங்கள் ஏதும் சொல்ல வேண்டியது இல்லை. எல்லாம் தெரிந்தவர், புரிந்தவர் அவர். உங்களுக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை நன்கு உணர்ந்திருப்பவர். மனமொன்றி வழிபடுதல் மட்டும் போதும். நம்மை படைத்தவர் நமக்கு உணவளிப்பவர் நமக்கு என்ன எப்போது தரவேண்டும் என அவருக்குத் தெரியும்.

நம் எண்ணங்கள் தெய்வீகத் தன்மை உடையனவா புனிதத் தன்மை உடையனவா அன்பானதா என அறிந்து அவர் நம்மை ஆசீர்வதிப்பதும் அல்லது சபிப்பதும் இல்லை. படைத்தவர் என்ற முறையில் நம்முள் நல்ல எண்ணங்களைத் தோற்றுவித்து அதன் மூலம் நீங்கள் பயன் பெற வைப்பவர். அதற்கான ஆசீர்வாதங்கள் அவரிடம் எப்போதும் உண்டு. உங்களிடம் தர்ம சிந்தனையுடன் கூடிய உணர்வுகள் மேலோங்கும்படி செய்வார். அன்புடன் கூடிய தர்ம சிந்தனைகள் இல்லாதவரை நீங்கள் ஓர் சதைப் பிண்டமாகவே கருதப்படுவீர்கள். 

ஆகவே இந்த நிமிடத்திலிருந்தாவது இறையை வணங்கும்போது நல்ல தர்ம சிந்தனையுடன் வழிபாடு நடத்துங்கள். உங்கள் உள்ளே உள்ள தீய வேதாள சக்திகள் பிரிக்கப்பட்டு நீங்கள் புதிய சிந்தனைகளுடன் தெய்வீக வளையத்துள் அடியெடுத்து வைக்கமுடியும். இறைவா இதைச்செய். நான் உனக்கு இதைத் தருகிறேன் என்பது பேரமாகும். இறைவன் ஒன்றும் ஊக்கத்தொகைப் பெறும் இடைத் தரகர் இல்லை. இறையை நீங்கள் வணங்கி வழிபடுவது உங்கள் மன நிம்மதிக்கு… தானங்கள் செய்வது செய்த பாபங்களின் தீவினைகளை குறைக்க… நீங்கள் தெய்வ வழிபாடு செய்யுமுன்னே அவர் உம்மை அறிந்துள்ளார். ஏனெனில் நீ அவரின் அணு. இந்த அடிப்படைப் புரியாமல் இறைமீது கோபதாபங்கள் கொள்ளல் தவறாகும்.

கோபங்களும் கோரிக்கைகளும் கொண்ட வேண்டுதல்களினாலேயே உன்னால் அவரின் அருகில் செல்ல முடியாமல் இருக்கின்றாய் என்பதை உணர்ந்து அன்பான உள்ளார்ந்த மனத்துடன் வழிபாடு செய்தால் நீயும் அந்த தெய்வீகத்தன்மையை உன்னுள்ளே பெறுவாய்-குருஸ்ரீ பகோரா.

Login to post comments