Print this page
வியாழக்கிழமை, 16 July 2020 12:13

திருக்கூத்து தரிசனம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

#####

திருக்கூத்து தரிசனம்!

(சிவானந்தக் கூத்து!, சுந்தரக் கூத்து!, பொற்பதிக் கூத்து!,பொற்றில்லைக் கூத்து!, அற்புதக் கூத்து!)

2722. சிவம் அகண்டமாய் எங்கும் வியாபித்துள்ளது போல் அதன் சத்தியும் அகண்டமாய் உல்லது. அஃது எங்கும் பரவியுள்ள அறிவாகாயத்தில் நிறைந்து எங்கும் அசைவை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றது. சிவம் எங்கும் அகண்டமாயும் எங்கும் வியாபித்துள்ளமையால் சிவன் யாவற்றிலும் சேர்த்து படைப்பு முதலிய ஐந்தொழில்களைத் தன் சத்தியாகச் செய்கின்றான்.

2723. சிவானந்தத்தை உண்டாக்கும் கூத்தனும் சொல்பதமான பிரணவத் தொனியில் விளங்கும் அழகிய கூத்தனும் தலையின்மேல் வானில் பொன்னொளியில் விளங்கும் கூத்தனும் சொல்ல முடியாத பரவசநிலையை அளிக்கும் கூத்தனும் ஆன அறிவு வடிவான பேரொளிப் பிழம்பான சிவனை யாரால் அறிய இயலும்.

#####

சிவானந்தக் கூத்து!

2724. தனக்கு அழிவில்லாத ஒர் சத்தான ஆனந்த சத்தியின் இடமாய் இன்பமான தேனை வெளிப்படுத்தும் ஆனந்தத்தை விளைக்கும் பெரிய கூத்தைக் கண்டவர்களே சிவபோதம் கடந்து விளங்கும் கூத்தினை இயற்றும் நம்பியான சிவபெருமானுக்கு அவ்விடத்து ஆனந்தமே திருக்கூத்து ஆட இடமாகியது.

2725. வான ஒளி அணுக்களின் நடனம் ஓர் ஆனந்தமாகும். வானில் உள்ள ஒளி ஆனந்தமாகும். வனம் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் ஏற்படும் ஒளியும் ஆனந்தமாகும். வானப் பொருளாக விளங்கி ஆனந்தத்தை உண்டாக்கும் தோத்திரங்களின் ஞனமும் ஆனந்தம் ஆகும். அங்ஙனமாக ஆனந்தத்திலிருந்து நடிக்கும் சிவபெருமானுக்கே அசைவனவும் அசையாதனவும் உள்ள யாவும் ஆனந்தமாகும்.

2726. அறிவுப் பெரொளியாய் விளங்கும் சிவமும் தத்துவங்களை விட்ட நிலையில் உள்ள ஆன்மாவின் பரமும் ஆருயிருக்கு அன்பு காட்டும் சிவகாமியான இன்பம் பொருந்திய சத்தியான பரமும் என்ற இம்மூன்றும் கருத்தில் உறைகின்ற அந்த ஆனந்த எல்லையே சிவானந்த நடனத்தின் பயன் ஆகும்.

2727. வடிவம் இல்லாத பெருமான் வடிவினை எடுத்துக் கொண்டு உயிர்களின் பொருட்டுச் செய்யும் நடனம் ஐந்து. அத்தகைய நடனத்தைச் செய்து ஐந்தொழிலை நிகழ்த்துவதற்காக அத்தொழிலைத் தன் சத்தியினால் படைப்பு முதலியவற்றைச் செய்து தேன் போன்ற சொல்லையுடைய உமைபாகன் கூத்தைச் செய்தருளுகின்றான்.

2728. ஐம்பூதங்களான அண்டம் வெவ்வேறு வகையானப் பூதங்கள் கலத்தலால் ஆகும் அண்டம் நல்வினை தீவினைக்கேற்ப அனுபவங்கலை அடையும் அண்டம் யோக பலத்துக்கு ஏற்ப யோகிகள் நிலைபெறும் அண்டம் புனர் உற்பவ காலத்துச் சீவர்கள் பிறப்பெடுக்கும் பழைய அண்டம் சிவப்பேறு பெற்றுள்ள மீளாது உறையும் முத்தர்கள் இருக்கும் அண்டம் ஆசையுள்ள உயிர் உடல் விட்ட பின்பு இருக்கும் அண்டம் பூத உடலுடன் சீவர்கள் வாழும் அண்டம் ஆகிய ஒன்பது அண்டங்களும் ஐந்தொழிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் சிவத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஏகாந்தமாகும். இவை தனியாக் இருக்க கூடிய பிரமாண்டத்தில் உள்ளவையாகும்.

2729. வேதங்களின் அறிவு ஆட ஆகமங்களின் அறிவு ஆட கீதங்களின் அறிவு ஆட ஆதர சக்கரங்களினால் வரும் ஏழுவகை அறிவும் ஆட ஐந்து பூத காரிய அணுக்களின் அறிவு ஆட ஞானத்தை அளிக்கும் ஆனந்தக் கூத்தை சிவன் நாத சத்தியைக் கொண்டு ஆடினான்.

2730. ஐந்து பூதங்களிலும் ஐம்பொறிகளிலும் ஐம்புலன்களிலும் ஐந்து வேதங்களிலும் மிக்க எண்களையுடைய ஆகமங்களிலும் ஓதுவதற்குரிய பல காலம் ஊழிகளுடன் பலவகை அண்டங்களீல் உள்ள ஐவகை அறிவுகளிலும் கலந்து சித்தமூர்த்தியான சிவன் அவற்றின் இடையே ஆடிக் கொண்டிருக்கின்றான்;.

2731. ஒளி உடலில் உலவுவோர் வானுலக வாழ்நர், மனிதர், சித்தர், கந்தருவர், நான்முகன், திருமால், உருத்திரன், பன்னிரண்டு ஆதித்தர், பதினொரு உருத்திரர் எட்டு வசுக்கள் மருத்துவர் இருவர், தவத்தவர் ஏழு முனிவர்கள் ஆகியவர் சமயம் இயங்கும் உயிர் இனம் இயங்கா உயிர் இனம் என்னும் யாவும் என் இறைவன் ஆடும் இடங்கள் ஆகும்.

#####

சுந்தரக் கூத்து!

2732. மூலாதாரம் முதல் சகசிரதளம் வரை உள்ள ஏழு அண்டங்களுக்கு அப்பால் சதாசிவத்தின் உச்சியின்மீது விளங்கும் சத்தியின் இடமாய் நீலகண்ட பெருமான் அருளே வடிவாய்க் கொண்டு அவ்விடத்தில் தன்னில் பிரிந்த சத்தியான உமையம்மை காணத் திருக்கூத்தை விரும்பி ஆடுகின்றான்.

2733. கொடிகொட்டி, பாண்டரங்கம், கோடு, சிங்காரம், என்பன வற்றையும் எட்டுவகையான நடனத்துடன் ஐந்துவகை நடனத்தையும் ஆறுவகையான நடனத்தையும் இடைகலை பிங்கலை சுழுமுனை வழியாகக் கண்டு அறியவும் இனித் தேவதாருவனம் தில்லைவனம் ஆலவனம் ஆகியவற்றிலும் கூத்தப் பெருமான் சிறந்து விளங்குகின்றான்.

2734 .உயிர்களிடம் பொருந்திய மேலான் அண்ட கோசத்து உச்சியில் பராசத்தியின் திருவடிக்ள் உள்ளன. அங்கும் படர்ந்து வீசும் ஒளியில் இறைவன் நிறைந்துள்ளான். அந்த அண்ட கோச ஒளியினுடே படரும் நல்ல நாதமும் இருக்கின்றது/. அந்த நாதத்தின் ஊடே சிவனான பரன் நடிக்கின்றான்.

2735. அங்குசத்தைப் போல் எழும் நாத சம்மியத்தால் சீவ அறிவில் பொருந்திய தொம் தீம் எனத் தட்டும் ஒத்தினில் சங்கரன் சுழுமுனையான மூல நாடியில் நிலை பெற்று ஆடல் செய்யும் காலத்தில் மனம் வெளிப் போதலை விட்டு அடங்கி விடும்.

2736. சிவன் உயிர்களின் அறியாமையைப் போக்க எண்ணி விரும்பி ஆடி அறிவு பெற்ற பின்பு உயிர்களிடம் ஒன்பது வகையாய்ப் பொருந்தி ஆடி மூன்று நாடிகளும் பொருந்தும் இடமான சுழுமுனையிள் ஆடி எல்லையில்லாச் சிவஞானத்தில் ஆடல் பொருந்தி என் உயிர் அறிவைக் கெடுத்து அருள் செய்தான்.

2737. சக்திகளான பிராமி, வைணவி, ரௌத்திரி காளி மனோன்மணி சிவனின் பேதமான ஐந்திலும் நான்முகன் திருமால் உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் என்ற ஐந்திலும் எட்டு மூர்த்திகள் இலயம் அடையும். நிலை எட்டிலும், அந்நிலையில் அறிவு குன்றாமல் நிற்கின்ற எட்டிலும் அனிமா, இலகிமா, முதலிய நிலை எட்டிலும் எட்டு மூர்த்தத்தில் மூன்றுக்கு ஒன்று மேலான அறிவு பொருந்திய நிலை எட்டிலும் நிரீட்சணம், புரோக்கணம், தாடணம், அப்யுக்கணம் தாளத்திரியம், திக்கு பந்தனம் , அவ குண்டனம், தேனு முத்திரை என்ற சத்திகள் எட்டிலும் இறைவனான சிவன் நடனம் செய்கின்றான்.

2738. மேகங்களான ஆவர்த்தம், புட்கலம், சங்காரம், ஆசவனம், நீர்க்காரி, சொற்காரி, சிலாவருடம் என்னும் ஏழும்., உப்புக் கடல், கரும்புச் சாற்றுக்கடல், மதுக் கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், தூநீர்க்கடல், என்னும் ஏழுடன் நாவலத்தீவு, இறவித் தீவு, குசைத் தீவு, திரெஞ்சத் தீவு, இலவந் தீவு, தெங்கத்தீவு, புட்கரத்தீவு என்னும் தீவுகள் ஏழும்,, தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பன்வற்றின் உடல் ஏழும், நாள்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவம், நாதம் விந்து என்ற ஏழும், ஏழு நாக்குகளை உடைய தீயும், ஏழுவகை அடக்கமும், எல்லாமுமாய் சிவபெருமானின் திருவடியின் கீழ் அடங்கும்.

#####

பொற்பதிக் கூத்து!

2739. சதாசிவனின் திருமேனியில் அகோரம், வாமதேவம், தத்புருடம், சத்தியோசாதம் ஈசானம் என்னும் வியக்கத்தக்க ஐந்து முகங்களிலும் ஒப்பில்லாத பேரின்பத்தைத் தரவல்ல உருவம். அருவுருவம் அருவம் ஆகிய நலம் தரும் பேதத்துள்ளும் மேலான சிவன் பொருந்தி ஒப்பில்லாத் நடனம் செய்கின்றான்.

2740. சிவானந்தத்தைத் தனக்குள் கண்டவ்ரே சிவத்துக்கு அடிமையாவார். சிவபெருமானிடத்தில் அடங்கி நிற்பவரே அடியவர் ஆவார். திருவடி இன்பத்தில் திளைத்திருப்பவரே சிவனடியாராகும் சகசிரதளத்துக்கு மேல் பொன் ஒளி தடம் கண்டவரே அடியவர் ஆவர்.

2741. ஐம்பொறிகளின் வயப்பட்டு மனம் அடங்காதிருந்தேன். நான் இத்தகைய என்னைச் சிவன் அடங்கும்படியாகத் தன் திருவடியைப் பதிப்பித்தான். சீவ சத்தியைப் பெருக்கும் ஒளியை அளித்தான். அதனால் என்னைப் பேரின்பத்தில் திளைக்கச் செய்தான். அந்த ஒளியில் நிலைபெற்று நன்மையைத் தரும் ஞான நடனத்தைச் செய்யும் கூத்தன் ஓவிய்ன் போன்று என்னை அசைவற்று இருக்கச் செய்தான். என் உள்ளத்தில் நிலைபெற்று விளங்கினான்.

2742. வானத்தில் நடனம் செய்பவனை உத்தமரிடத்தில் நடனம் செய்பவனை செம்மையான பொன் ஒளி விளங்க்கும் வானத்தில் பிரப்ஞ்சம் போர் நடத்தும் சீவனுக்குத் துணை வீரனாகி நடிப்பவனை தத் என்னும் சொல்லுக்குப் பொருளாய் ஆன்மாவில் நடிப்பவனை இன்பம் பெற வேண்டி என் அன்பில் பொதிந்து வைத்தேன்.

2743. மூலாதாரம் சுவாதிட்டானம் ஆகிய சக்கரங்களில் செவ்வொளியில் நடிப்பவனும், செறிந்த அஞ்ஞான இருளில் அநாகத்ச் சக்கரத்தில் ஒளிக்கதிருடன் கூடி நடிப்பவனும் துவாதசாந்த வெளியில் பேரொளியாய் விளங்கிச் சிவானந்தத்தை விளைக்கும் கூத்தனும் அங்கு மாற்றுக் குறையாத பொன் ஒளியில் விளங்குபவனும் ஆகிய நடராசப் பெருமானை யார் முழுவதும் உணர்ந்து சொல்ல முடியும்,.

2744. நன்மை பொருந்திய மேல் முகமான சகசிரதளத்தில் விளங்கும் நடனத்தில் அத்திருவடிக் கமலத்துக்கு அன்பு பூண்டவர்க்கு காதலால் மிகுதியான மகிழ்வு ஏற்படும். பின்பு அச்சம் ஏற்படும். பத்தியால் விழுதலும் எழுதலும் ஏற்படும். உடல் தளரும். தம் ஐந்து பொறிகள் அறிவு கெட்டுத் தம் நினைவானது அற்றுப் போகும். அதனால் த்ம் நிறமும் குறைந்து போகும்.

2745. திருவம்பலத்தில் சிவக் கூத்தை காணவே வெளியே போய் ஒன்றைத் தேட வெண்டும் என்ற எண்ணம் கெடும். நாடுகின்ற சிந்தை ஒன்றைச் சீர் தூக்கிப் பார்க்கும் செயலை விட்டு நிற்கும். உடல் நினைவு இல்லாது உடலால் வரும் தளர்வு அகலும். மூச்சு பிரமப்புழையை நோக்கிப் பாய்வதில் உண்டாகும் உணர்வில் அறிவு செம்மையாக இருக்கும். அதனால் ஐம்புல அறிவும் பொருந்தா. ஆசை அகலும். உள்ளத்தில் ஆனந்தம் பெருகும். உயிரில் சிவ நடனத்தை காண விருப்பம் மேலும் முதிர்ந்து விளங்கும்.

2746. சிவன் காளியோடு ஆடி பொன்மலையில் கூத்து ஆடி பேய்களுடன் கூத்து ஆடி பூமியில் நடனம் ஆடி நீண்டு கிடக்கும் நீரிலும் தீயிலும் காற்றிலும் பரந்த வானிலும் நடனம் ஆடி சீவர்கள் நீண்ட வாழ்நாள் பெற வானத்தில் இருந்து நடனம் செய்பவன்.

2747. சகசிரதளமான மேருவில் சுழுமுனை நாடியும் மேல் விளங்கும் இடைகலை, பிங்கலை நாடியும் என்ற மூன்றும் மிக்குள்ள வானத்தில் புவியின் தொடர்பு இல்லாது விளங்கும் தீவான இலங்கைபோல் உடம்பின் தொடர்பு இல்லாது திகழும் இடைகலை பிங்கலை என்னும் இரண்டு நாடிகளும் இதயமான தில்லைவனத்தை வளைத்துக் குளிர்ச்சி பொருந்திய சகசிரதளமான மலை உச்சியில் ஏறிச் சுழுமுனையுடன் விளங்கும். ஆதலால் இதயமும் சகசிரதளமும் என்னும் இரண்டும் சிவபெருமான் விளங்கும் இடமாகும்.

2748. புவியும் மேரு மலையும் அதன் புறத்தே உள்ள தென்பாகமும் சொல்லப்படும் இடைநாடியும் பிங்கலை நாடியும் ஒளியுடைய சுழுமுனை நாடியும் ஆகும்.. இச் சுழுமுனை நாடியே அர்த்தசந்திரனை அணிந்த சிவபெருமான் நடிக்கும் திருவம்பலம் ஆகும். பூத அண்டத்தில் எல்லையும் இதுவே ஆகும்.

#####

பொற்றில்லைக் கூத்து!

2749. மூலாதாரம் முதல் சகசிரதளம் முடியவுள்ள அண்டங்களும் அழகிய பொன்னம்பலமாக பழைய ஐவகை வானங்களும் அப்பெருமான் நடிக்கும் இடமாக, அக்கினி கலையில் விளங்கும் சத்தியே திருவம்பலமாய்க் கொண்டு மேலான சோதி வடிவான பெருமான் கூத்தை விரும்பி நடிக்கின்றான்.

2750. குருவால் உணர்த்தப் பெற்று இன்பமாய் விளங்கும் சந்திர மண்டல ஒளியாய், மிக்க நன்மையைத் தரும் மேலான ஆனந்தத்தைப் பெருக்கி சந்திர கலையில் விளங்கும் சிவம் வலப்பால் சூரியக் கலையை அடைந்து உடலில் இன்பம் அளிப்பவனாய்ச் சத்தியுடன் இருந்து நித்திய இன்பத்தை விளக்கும் கூத்தை ஆடியருள்கின்றான்.

2751. சிவன் ஆட சுழுமுனையில் விளங்கும் திங்கள் மண்டல ஒளி அசைய புகழ்ந்து பேசப்படும் ஒளிக்கற்றைகள் விளங்கி அசைய சீவர்கள் தம் செயலற்று ஆட அர்த்தசந்திரனில் உள்ள நீல ஒளி அசைய உடல் தத்துவத்துக்கு மேல் விளங்கும் வான் அணுக்கள் ஆட தன் நாத சத்தியால் நாதாந்த நிலையை அடைவிக்கும் கூத்தை ஆடினான்.

2752. அடியவர் வணங்கி உய்யுமாறு அவரவர் சிதகாய மண்டலத்தில் ஆடிய மேலான நடனம் அழகிய சிவபரன் அகில அண்டங்களிலும் ஆடும் நடனமாகும். இதுதான் செம்பொருள் நிலையான. இந்த நிலையைப் பொருந்தினால் உம்பர நிலையில் மோனம் கைவரப் பெற்று ஞானத்தின் முடிவாம் பேறு உண்மையாகும்.

2753. சூரியன் சந்திரன் அல்லது இடைபிங்கலையான ப்ரனது இரண்டு திருவடிகள் புறத்தே உள்ள இருபத்தோரு உலகங்களையும் இவற்றிலும் மிக்க உடம்பில் உள்ள ஏழு ஆதாரங்களையும் இவற்றுக்குச் சாதகமாயுள்ள நூற்றெட்டுச் சமயங்களையும் இவற்றின் சுருக்கமான நாதம் நாதாந்தம் நடனம் நடனானந்தம் என்று நான்கு பகுதிகளையும் சிவசத்தியுடன் ஆடி இயக்கும்.

2754. உடலுல் உள்ள இடைகலை பிங்கலை என்னும் இரண்டும் தலையில் இடப்பக்கம் பனிப்படலம் போன்று விளங்கும் இமயமும் வலப்பக்கம் தீவு போல் விளங்கும் இதய வானமான தில்லை வனமாகும். இத்துணையும் பரவி மேல் போகிறவன் பரன் என்னும் சிவமே ஆகும்.

2755.. பாரத நாட்டின் தென் கோடியான் கன்னியாகுமரி காவிரி இவற்றுக்கு வேறான ஒன்பது தீர்த்தங்கள் ஏழு மலைகள் ஆகிய இடங்களில் அடைவதற்கரிய வேதங்களூம் ஆகமங்களும் தோன்றுவதல் நிலையான புவியின் தென்பகுதி தூய்மை உடையதாகும்.

2756. தேவையே இல்லாத தேவதேவனாகிய சிவன் நாதத்தொனியில் ஆடி சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கு பாதங்களிலும் ஆடி வேதத்தில் ஆடி அக்கினி கலையின் மீது ஆடி சீவரின் அறிவினில் நின்று ஆடி இருநூற்று இருபத்து நான்கு உலகங்களிலும் பொருந்தி ஆடினான்.

2757. சிவன் தேவர்களின் அறிவில் ஆடி அறிவாகாயத்தில் ஆடி நான்முகன் திருமால் உருத்திரன் ஆகியவரிடம் நின்று ஆடி முனிவருடன் ஆடி செய்யுள் பொருளில் ஆடி மேலான பராசத்தியிடம் அடி ஆன்மக்களிடம் அறிவினில் விளங்கி நடிப்பவனாய் உள்ளான்.

2758. ஐந்து முகங்களுடன் அதோ முகத்தையும் சேர்த்து ஆறு முகங்களுடன் கூடிய சிவனார் தாம் எனவும் சமயம் கூறும் குருவும் தானே எனவும் தலையின் தென் பக்கத்தில் உள்ள வானத்தில் ஆன்ம வடிவத்தைப் பயிற்சியாளர் அறிந்தனர். இந்த உண்மையை அறிபவரிடம் சிவபெருமான் வேறின்றி உடனாய் உணரப்படுபவனாக இருக்கின்றான்.

2759. வானை நாடக மேடையாக கொண்டு அதன் மேல் எம் இறைவன் ஆடுவான். சூரியன் சந்திரன் ஆகிய இரு திருவடிகளின் ஒளி அணுக்களின் கூட்டமே வான் ஆகும். இந்த வானில் அகர, உகர, மகர, விந்து, நாதம் ஆகிய ஐவகையும் பொருந்தி விளங்கும் சந்திர கலையில் தாம் நிலையாய் பொருந்தி சிவன் ஒளியாக அருள் செய்வான்.

2760. இடை நாடியான தூக்கிய திருவடியும் அந்த இடை நாடியில் தோன்றும் ஒலியும் அங்குக் கேட்கும் பல ஓசையும் பலவகை அசைவும் பொருந்திய ஓசையுடன் ஒளிமயமான சிவன் நடிப்பதை என் உள்ளத்தில் பார்த்து ஐயம் அகற்றி நின்றேன்.

2761. இதயத்தினின்று மேல் எழுந்து விளங்கிய உயிர் உடம்பெல்லாம் ஒளியுருவாய் நிறைந்து விளங்கும்படியாய் செவ்வொளியுடன் கூடிய மூலாதாரமான இடத்தில் காமாக்கனியாக விளங்கிய கூத்தன் ஒளி வடிவாய் உடலிலும் உடலைக் கடந்தும் விளங்கினான்.

#####

அற்புதக் கூத்து!

2762. ஞானகுருவின் திருமேனியே அல்லாது தியானிக்கும் வடிவம் ஒளிமயமான சிவம் ஆகும். அந்த அருவப் பெருளே திரிபுரை பராசத்தியாகவும் உருவமாயும் அருவமாயும் உமையம்மையாகவும் விளங்குபவள் ஆவாள்.

2763. ஞானத்தை அடைவிக்கும் நெறியாவது தலையின்முன் உள்ள வான் மண்டலத்தில் ஒளியின் உள்ளே தியானிக்கும் வடிவமே. அப்போது அவ்வடிவமே மறைந்து அருவமாவதும் அங்குப் பொருந்தி ஞான நெறியில் செல்பவர்க்கு அருள் பதிவதும் அந்த நெறியே ஆகும்.

2764. தலையின் மீது பன்னிரண்டு அங்குல உய்ரத்தில் துவாத சாந்த வெளியில் கீழ்ச் செல்லும் உயிர் மேலே போகும்படி இறைவனைத் தியானம் செய்யுங்கள். நாதம் ஒடுங்கிய நாதாந்த நிலையில் விளங்கும் நம் பெருமான் விரும்பி நடிக்கும் திருவம்பலம் இதுவே.

2765. வான்மானது காற்றுக்கும் மேகத்துக்கும் மின்னலுக்கும் வான வில்லுக்கும் இடி ஓசைக்கும் இடம் தந்து தானும் தெளிந்த வானமாய் விளங்குவதுபோல் இறைவனும் ஆனந்தத்தை விளைக்கும் ஆறுவகை ஒளியாகவும் அவற்றுடன் கலந்தும் வேறாயும் ஒளிவடிவாக உயிர்களுக்குப் புலப்படாமல் மறைந்து விளங்குகின்றான்.

2766. ஐந்து பூத ஒளி அணுக்களீலும் எட்டுத் திக்குகளிலும் கீழும் மேலும் அறிவைக் கடந்தும் சிவானந்தம் இலங்குகின்றது. அது மாயையும் சுத்த மாயையும் கடந்து நின்றவர் காணும்படி எம் தலைவன் நிலைபெற்று நடனம் செய்யும் முறையாகும்.

2767. சகசிர தள வட்டத்தில் கூத்தன் கலந்து விளங்குவான். அப்பொருமான் குற்றம் அற்ற ஆனந்தத்தைச் சீவர்களுக்கு அங்கு விளைவித்துக் கொண்டிருப்பான். அவன் அவரின் குற்றம் அற்ற ஞானத்தில் நிலையாய் விளங்குவான். பல ஒளிகளாக விளாங்கும் சத்தியும் வெண்மை நிற ஒளியாக விளங்கும் சிவனும் சகசிரதளம் நிமிர்ந்து எழுவதில் விளங்கும்.

2768. உயிர்களை இடமாகக் கொண்டு நல்வழிப்படுத்தும் சத்தியும் அவளைப் பிரியாத என் தந்தை சிவமும் என் உயிர் ஒளியில் கலந்து விளங்குவதை நான் அறிந்தேன். மல மறைப்பை உடைய பல உயிர் இனங்கள் அனைத்துக்கும் மல மறைப்பு நீங்கச் சிவசத்தி ஆடுகின்றமையை அறிந்தேன்.

2769. உயிர்கள் அடையத் தோன்றும் சகல வடிவமும் சத்தியின் வடிவமே ஆகும். உயிரின் அறிவில் சத்தாகவும் சித்தாகவும் ஆனந்தமாகவும் நிலை பெற்ற ஆனந்தமே உமையம்மையின் திருமேனியாகும். சத்தியின் வடிவம் உயிர்களிடத்தில் விளங்கி சீவனும் சிவனும் கலப்பதில் ஏற்படும் ஆனந்தமே ஒரு நடனமாகும்.

2770. நெற்றியின் முன் புருவத்து நடுவில் பொருந்திச் சாதனம் செய்தால் எண்ணிய மந்திரம் ஒளியாய் விளங்கும். எனவே சீவன் பற்றுவதற்குரிய பற்றுக் கோடாகப் பரமன் விளங்கும் இடமான அறிவாகாயம் என்று யான் சேர்ந்து கொண்டேன்.

2771. அண்டங்கள் யாவும் நுண்மையய் அமைந்து நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐந்தும் வீணாத்தண்டில் உள்ள குண்டலினியான சத்தியும் பார்வதியான சம்புவின் சத்தியுமான இரண்டும் இருக்கையாகும். இந்த ஏழையும் முறையாய் நடனத்துக்குரிய இடமாகக் கொண்டு சுடர் போன்ற சிவன் தன் நடனத்தை விரும்பி ஆடியருளினான்.

2772. சிதாகாயப் பெருவெளியில் ஒளியாய் விளங்கும் சகசிரதள மலர் நன்மை அளிப்பது. இதுவே நான்கு இதழ்களுடன் நூறு இதழ்களாய் விரிந்து அஃது இறுநூற்றுப் பத்து உலகங்களிலும் போய் விளங்குவதாயிர்று. இவ்விதம் நிமிர்ந்து உய்ர்ந்து நின்ற மண்டலமே சிவபெருமான் நடனத்துக்கு தக்க இடமாகும்.

2773. வான் கூறான ஆதாரங்கள் ஏழு தேவர், மனிதர், விலங்கு, நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, தாவரம் எனப் பிறப்பு ஏழு, தூய வான அலைகள் மோதும் ஆதாரங்களின் வகையும் ஏழு எட்டுத் திக்குகளும் பொருந்தி விளங்கும் அடையாளங்களும் நானமுகன் திருமால் உருத்திரன் மகேசன் சதாசிவன் விந்து நாதம் என்பவை ஏழு அண்டங்களுத் தலைவனான சிவன் இவை யாவற்றையும் நடனம் ஆடும் இடமய்க் கொண்டுள்ளான்.

2774. சிவபெருமான் உடல் வான் மயமாய் விளங்குவது அந்த வானத்தில் உள்ள கருமையான இருளே முயலகன் ஆகும். மேலாடை போல் காணாப்படும் எட்டுத் திக்குகளிலும் அவனுடைய கைகள் உயிர்கள் மீது விருப்பத்தைக் காட்டும். மூன்று கண்களும் சூரியன் சந்திரன் அக்கினியாகும். இங்ஙனமாக விளங்க கூத்தப் பெருமான் அறிவுப் பெருவெளியில் கூத்தாடுபவனாக விளங்குகின்றான்.

2775. அனைத்துலகில் காணப்படும் இயங்குதிணைப் நிலைத்திணைப் பொருள்கள் யாவும் சிவன் கூத்தாடும் அம்பலம் ஆகும். அதுவே ஆதியான பெருமானின் திருவடியாகும். அது ஐந்து பூதங்களையும் நுண்மையாகக் கொண்டுள்ள பொன் ஒளியுணர்வு நிலையாகும். அதுவே திருவைந்தெழுத்து ஆகும்.

2776. தக்க நிலையான முழலும் குழலும் ஓம் என்று ஒலிக்க அதில் பொருந்திய ஞானியர் அந்நாத ஒலியை ஆதிப்பெருமான் என்று உணர பெருமானை விரும்பி நிற்கும் கூட்டமாகவுள்ள நால்ல தேவகணங்களும் பல பூதப்படைகளூம் போற்றிப் பாட அமைந்திருப்பது திரிபுரச் சங்காரக் கூத்தான பாண்டரங்க கூத்தாகும்.

2777. அண்டத்தின் உள்ளே உள்ள தேவர்களும் அதன் வெளியே உள்ள தேவர்களும் தெளிந்த அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட உல்கத்தில் வாழும் தேவர்களும் தலையின் மீது விளங்கும் பொன்னிற ஒளியில் நடிக்கும் தூக்கிய திருவடியைப் பர்த்து வணங்கி நற்கதியை அடைவர்.

2778. புளியைக் கண்டவர்க்கு நாவில் நீர் ஊறும். அதுபோல் சிவானந்தத்தைக் தரும் திருக்கூத்தை தலையின் மீது கண்டவர்க்கு எல்லாம் இன்பக் கண்ணீர் முத்து முத்தாக விழும். சோர்வுடைய நெஞ்சமானது அன்பால் உருகும் உள்ளத்தில் உணரும் ஒளியாய்ச் சிவம் இன்பத்தைப் பெருக்கி நிற்கும்.

2779. திருநடனத்தைக் கண்டவர் கால்களில் பலம் அற்றுத் திண்டாடி வீழ்வதே சிவானந்தத்தால் ஆவதாகும். அங்ஙனம் சிவானந்தத்தைப் பருகியவர்க்கு அக ஒளியில் பார்வை பதியும். பதிந்து தன்னை மறந்த நிலை கிட்டும். யாவராலும் கொண்டாடப்படும் அறிவாகாயத்தில் நடைபெறும் நடனத்தை அறிந்தவரின் அரிய இயல்பு பிரணவத் தொனியைக் கேட்டு நாதாந்தம் சென்றவர்க்கும் பொருந்தும்.

2780. தீச்சுடர் உடுக்கை உருத்திராட்ச மாலை கயிறு தோட்டி முத்தலை வேல் மண்டையோடு என்பனவற்றுடன் பரஞானம் அபரஞானம் என்பனவற்றைத் தரும் நீல ஒளியாகவுள்ள சத்தியும் உடனாக உமயை ஒரு பாகத்தில் கொண்ட கூத்தன் மாண்புடைய நடனத்தை ஆடுவான்.

2781. கூத்துக்குரிய பதினோர் உறுப்புகளும் முறையாய் பொருந்துமாறு காலில் சிலம்பும் கையில் உடுக்கையும் கொண்டு நடிப்பதில் உண்டாகும் ஒலி சீவனை மேலானவற்றுக் கெல்லாம் மேலான பொருளிடையே செலுத்திய கூத்தப் பிரான் வெளியிலும் உள்ளேயும் விளங்குகின்றான்.

2782. உருவம் நான்கு, அருவுருவம் ஒன்று, அருவம் நான்கு ஆகிய ஒன்பது பேதங்களும் ஆட எட்டுத் திசைகளும் அவற்றின் உள்திசை எட்டுமாக பதினாறு கோணங்களில் உள்ள திசைகளும் ஆட பத்தி வழிகளான காணாபத்தியம் கௌமாரம் சாத்தம் சௌரம் களாமுகம் சைவம் ஆகிய ஆறும் உடன் ஆட இன்பத்தை அளிக்கும் ஏழு ஆதாரங்களும் எழுவகைத் தோற்றமும் ஐம்பத்தாறு தேசமும் ஆட எழுத்து வடிவாக உள்ள ஐம்பது சத்திகளிடமாகச் சிவானந்தக் கூத்தை ஆடினாள்.

2783. குரல் துத்தம் கைக்கிளை விளரி தரம் உழை இளி ஆகிய இசைவகை ஏழில் ஏழாயும் அவ்வேழும் குறுகி வரும் ஏழ் எழுத்துக்களையும் அவை மேலும் ஒன்றாய் குறுகி விளங்கும்போது ஒரே ஒலியாய் அமைந்து பிரணவமாய் விளங்குகின்றான்.. இப்படியாக ஏழினும் நல்வழியில் விளங்கும் பேரொளி இறைவன் ஏழ் இசையுடன் கூடிய நாடகத்திலும் இசைத்தருள் செய்தான்.

2784. மூன்று மண்டலங்களில் ஐந்தெழுத்து வடிவாய் முந்நூற்று அறுபது கலைகளாய் மூன்று மண்டலங்களில் உள்ள ஆறு ஆதாரங்களாய் நுட்பம் பருமம் ஆகிய பன்னிரண்டு ஆதாரங்களுக்கும் மூலமாய் அகர உகர மகரம் என்ற மூன்றும் ஒன்றாய் இந்த மூன்றால் ஆன பிரணவத்தில் விருப்பம் தரும் கூத்தை ஆடியருளினான்.

2785. அழியும் இயல்புடைய தேவர்களின் திருமுடிமேல் விளங்குகின்ற வெண்ணீற்று ஒளியில் விளங்கும் ஈசனின் மலர் போன்ற திருவடிகள் அழகு பொருந்திய அன்புடையவரின் மனத்தில் விளங்குவனவாம். அப்படி விளங்கிக் கற்பக மரத்தைப் போன்று வேண்டியவர்க்கு வேண்டியவற்றைத் தருகின்ற இறைவன் புவியைக் கடந்து வானத்தில் விளங்குபவனாக உள்ளான்.

2786. எல்லாம் அறிந்த சிவன் ஆடினால் சிவத்துக்குக் கீழாக உள்ள இருநூற்று இருபத்தேழு புவனங்களும் ஆடும். எம் தியான ஆற்றலுக்கு ஏற்ப அவன் எங்கள் உள்ளத்தில் ஆடுவான். அவன் விருப்பத்துடன் உள்ளத்தில் ஆடினால் அவனுக்குக் கீழான பல பூதங்கள் ஆடித் தத்தம் எல்லையினின்று விலகும். பேரொளி வடிவான சிவக் கூத்தைக் கண்டு அன்பன் இன்பம் அடைந்த முறை இதுவாகும்.

2787. கூத்தன் நடனம் செய்தவன் என்று அறிவற்றவர் உரைப்பர். அவன் அங்ஙனம் நடனம் செய்ததைப் பார்த்தவர் எவரும் இலர். ஆதியான சிவன் அவரவர் உள்ளத்தில் நடிப்பதை அறிந்த பின்பு அருட்சத்தியே அவ்வாறு துணை செய்து காணுமாறு செய்கிறது என்பதை அறிவர்.

2788. சிவ்ன் ஒன்பது பேதமாகவுள்ள தத்பதம் தொம்பதம் என்ற இரண்டுள் இன்பத்தை உண்டாக்குகின்ற இடமான அசிபதத்தில் ஆடுவதற்காகவே சீவர்களுக்குத் துன்பத்தைத் தரும் காளியான சத்தியில் விளங்கி ஆட சீவரிடம் அன்புடைய சிவன் நடனம் ஆடுகின்றான்.

2789. சிவ நடனத்தால் சகலதத்துவங்களும் ஆட பிரமன் முதலானவர்க்கு மேலாக உள்ள சதாசிவ மூர்த்தியும் ஆட எல்லா வாசனைகளும் பொருந்திய சித்த மண்டலம் ஆட சிவசத்தியும் ஆட இவை பொருந்தும்படி வைத்த அசைவன அசையாதன ஆகிய யாவும் ஆட மறைவடிவான மூலாதாரத்தில் உள்ள ஒளி ஆட சிவன் ஆனந்தக் கூத்தாடினான்.

2790. பதஞ்சலி வியாக்ரபாதர் என்னும் இருவரும் காணும்படி அழகிய வானத்தில் அருவம் உருவம் அருவுருவம் ஆகத் திருவருள் சத்தியுள் அறிவு மயமான ஆனந்தன் அருள் உருவமாய் நின்று ஆடியருளினான்.

2791. கூத்தப் பெருமான் கூத்து நிகழ்த்துவதால் பிரிவில்லாது நிற்கும் சத்தியும் ஆட அசைவற்ற வானம் ஆட உருவம் அருவுருவம் அருவம் என்ற ஒன்பது தத்துவங்களும் அவற்றைக் கடந்து நிற்கும் நாதாந்தமும் ஆட வேதாந்த சித்தாந்தத்துள் சிவம் ஆடுவதைக் காணலாம்.

2792. நாதத்தின் முடிவான நாதாந்தம் அறம் பொருள் இன்பம் வீடு என்பனவற்றின் முடிவு வேதாந்த முடிவும் உண்மையான சிவானந்தத்தை தரும் சித்தாந்த முடிவு ஆகிய எல்லாம் குற்றம் அற்ற நனமை அளிக்கும் நாதானு சந்தானத்தில் விளங்கும் நாதமே சிவநடனம் ஆகும்.

2793. நான்முகன் திருமால் உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் என்னும் ஐவரும் சீவர்களைப் பிறவியில் செலுத்திய செயல்முடிய தவம் பொருந்திய சீவனானது பாசம் நீங்க தவத்தின் விளைவான சிவானந்தத்தில் ஞானம் என்ற கூத்தைத் தவத்தால் அடையப் பெறும். சிவன் எங்கும் நீக்கம் இல்லாமல் நிறைந்து ஆடுவான்.

2794. சிவன் என்னை ஆட்கொண்டபோது என்னுடனே கூடி நின்றான். சிறு தெய்வ ஆளுகையினின்று என்னை மீட்டான். விகிர்தா என்று அழைத்தபோது வெளிப்பட்டு நின்றனன். சூரியன் சந்திரன் அக்கினி என்னும் மூன்று ஒளிகளும் ஆடுமாறு நிற்கின்ற சிவன் என்னை ஆட்கொண்டான்.

2795. நாத தத்துவம் கடந்த நாதந்த நிலையில் விளங்கும் ஆதிமறை நம்பியான சிவன் சுவாதிட்டான மலரை ஒளிரும்படி செய்தபோது சீவர்கள் அங்கே பொருந்தி உலக இன்பத்தை அனுபவித்தனர். ஆனால் அவன் பிரிக்கப்பட வேண்டிய தத்துவங்களில் பொருந்திப் பிரிப்பவனாகவும் சீவர்களுடன் வேறுபடாதபடி கலந்து விளங்கினான்.

2796. அறிவற்றவர் ஆனந்தம் என்று சொல்வர், ஆனந்தம் பொருந்தும் பெருமையுள்ள கூத்தை யாரும் அறியவில்லை. ஆனந்தமான சிவ நடனத்தை எல்லாரும் அறிந்த பின்புதான் எனது ஆன்மாவுக்குத் தத்துவக் கூட்டு முடியும் இடமே உண்மை ஆனந்தமாகும்.

2797. திருந்திய சி கரத்தின் நீட்சியான சீ என்ற உடுக்கையை உதறிய கையும் அரிய தவத்தவரை வ என்று அணைந்த மலர் போன்ற இடக்கையும் பொருந்துமாறு அமைந்த ய கரமாகிய பொன் போல் விளங்கும் கையும் திருந்துகின்ற ந கரமான அக்கினியை உடைய இடக்கையும் ம கரமான மலத்தை அடக்கி ஊன்றிய திருவடியும் கூத்தனுக்கு ஆகும்.

2798. உடுக்கையுடன் பொருந்திய வலக்கையும் வீசுதலை உடைய இடக்கையும் அருள் பொருந்திய அபயக் கையும் அக்கினி பொருந்திய இடக்கையும் பிறப்பை அழுத்தும் ஊன்றிய காலும் வடிவம் அற்ற சிவயநம என நினைத்துத் துதிப்பாயாக.

2799. எல்லாத் தத்துவங்களையும் ஒடுக்கி நிற்கும் சிவன் உடுக்கையால் தோற்றத்தை படைக்கின்றான். அபய கர்த்தால் காத்தலைச் செய்கின்றான் தீயை ஏந்திய இடக்கையால் அழித்தலைச் செய்கின்றான். ஊன்றிய திருவடியால் மறைப்பைச் செய்கின்றான். அவனது தூக்கிய திருவடியால் அருளைச் செய்கின்றான்

2800. தீப்பிழம்பய் சீவ ஒளிக்குள் ஒளியாயும் உள்ள சிவத்தைக் கண்டு அந்தச் சிற்சத்தி நான்முகன் திருமால் உருத்திரன் என்னும் மூவரின் செயலும் முடிந்து சிவத்திடம் ஒடுங்கியதைப் பார்த்தால் தலையின்மீது வேத வடிவான நாதம் ஒலித்தது.

2801. நந்தி பெருமான் என் தந்தை ஆவான். அவன் ஞானத் தலைவன். ஓம் என்னும் பிரணவத்துள் பொருந்தியவன். அதைக் கடந்த உடல் பற்றற்ற வானத்தில் விளங்கும் அழகிய கூத்தன் இத்தகைய முறையில் அப்பொருமானைப் போற்றுவதே அல்லாது வேறு எப்படி விளக்குவது. விளக்குதல் இயலாது.

2802. சிங்கத்தைப் போன்ற குரு நந்தியினது அறிவாகாயத்தில் விளங்கும் ஆராய்த் தக்க திருமேனியை இன்ன தன்மை கொண்டது என்று எவரும் அறியவில்லை. அப்பொருமானின் திருமேனி மூலாதாரத்தில் அக்கினி போன்று சிவந்தது. தலையில் மேல் வெள்ளை நிறம் வாய்ந்தது. இத்தகைய தன்மையை ஆராய்ந்து ஒளிவடிவாகக் காணின் அது சீவர்களுக்குப் புகும் இடமாகும்.

2803. சிவத்தினது சத்தியே தற்பரையாய் நின்று செயல்படும். ஆகவே பரனுக்கும் உயிருக்கும் தொடர்பை ஏற்படுத்துவது அதுவே. உயிரிடத்தில் இச்சை ஞானம் கிரியையாய் விளங்கிப் பக்குவப்படுத்தும் அங்ஙனம் பக்குவப்படுத்தி அருள் மயமாக்கினால் உயிர் அரனிடம் அன்பினால் ஒன்றி அறிவு வடிவாகும்.

#####

Read 2072 times
Login to post comments