Print this page
வியாழக்கிழமை, 16 July 2020 12:20

ஞானோதயம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

#####

ஞானோதயம்!

2813. மனமானது மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐந்து பொறிகளுடன் பொருந்தி உலகப் பொருளைத் துய்த்தல் சாக்கிரம். இனிப் பொறிகள் நீங்கிய போது அந்தப் பொருளைக் கனவில் அறிதலில் நனவு போல் ஆனந்தம் ஏற்படும்.. இப்படி நனவு கனவு நிலைகளில் உண்டாகும் ஆனந்தத்தை வினவில் இவற்றுக்கு மேல் சுட்டறிவு நீங்கிய நிலையில் ஓர் ஆனந்தம் உண்டு. இப்படியாய் இனமாக உள்ள நந்தியான இறைவன் சீவர்களுக்கு அருளிய ஆனந்தம் விஷயானந்தம் என்றும் சிவானந்தம் என்றும் இரண்டாம்.

2814. எம் தலைவன் யானையின் தோலை உரித்து அதைப் போர்த்துக் கொண்டவன். நான்முகனின் கபாலத்தை கையில் ஏந்தியவன். விளங்கும் பிறைத்திங்களை அணிந்தவன். இத்தகையவனை அரிய செயலைச் செய்தவன் என்றும் பெருங்கருனையைக் காட்டியவன் என்றும் அவனிடம் அடிமை பூண்டதல்லாமல் அவன் கருமை நிறம் கொண்டவன் என்றோ செந்நிறம் உடையவன் என்றோ நான் ஆராய்ந்து பார்த்ததில்லை.

2815. செருக்கில் மிக்க வானவர் திருபாற்கடலில் வெளிப்பட்ட அமுதத்தை உண்ணும்படி அருளி நஞ்சை உண்ட மேலான சிவனைத் தக்கவர் உரை செய்த தவநெறியில் போய் அடைந்தான். பொன்னான ஞானத்தை அவன் அளித்திடுவான். எனவே சிவத்தின் நாத வழியைத் துணையாகக் கொண்டு நீங்கள் சாதனையைச் செய்க.

2816. ஆன்மா ஒளிமயமானது எனக் குருவால் உணர்த்தப்பெற்று அந்த வழியில் நின்று அறிவைப் பெருக்கி ஆன்ம அறிவுப் பேரொளியில் சிவ ஞானத்தைத் தூண்டிச் சிவத்தின் அகண்ட ஒளியில் சிவஒளி அடங்கக் காணும் ஆற்றல் உடையவர்க்கு ஒளியைத் தந்த சிவபெருமானின் திருவடியைப் பொருந்தி வாழ முடியும்.

2817. அறிவு மயமான ஆன்மா தத்துவங்களோடு கூடியபோது அத்தத்துவங்கள் அறியப்படு பொருளாக இருந்தது. எங்குத் தத்துவம் அறியப்படுவது இல்லையோ அங்கு அந்த தத்துவத்தை அறியும் ஆன்மாவின் நிலையும் இல்லை. தத்துவ ஞானத்தால் உடல் முதலியவை தான் அல்ல, அறிபவன் என்பதைக் காணில் ஆன்மா அப்போது சிவத்தை நாடிக் கூடிச் சிவமாகிய தன்மையைப் பெற்றுவிடும்.

2818. வான் மயமான ஒன்று எல்லாவற்றையும் தாங்கிய வண்ணம் இருக்கின்றது. என்ற உண்மை ஞானம் வந்த போது சேற்று நிலமான சுவாதிட்டான மலரினின்றும் உடலில் பரவிய சத்தியே ஒளி மயமான அமுதம் ஆகும். அது பசும் பொன்னின் ஒளி கொண்டு தலையில் பரவிப் பொருந்தி ஒளிரும் செந்நிறம் உடைய சுவாதிட்டான மலரில் பொருந்திய சிவனே இப்படி விளங்குவான்.

2819. முத்து வயிரம் கடலில் தோன்றிய பவளக் கொத்து பசும் பொன்னின் தூய ஒளி மாணிக்க ஒளி ஆகிய இவை கலந்து விளங்குபவன். தலையில் மேல் உள்ள அண்டத்தில் சோதியாகவும் உடலில் சோதியாகவும் விளங்குபவன். இத்தகைய ஒருவனை எந்த தன்மையை எண்ணி உங்களுக்கு வேறானவன் என்று கூறுவீர்.

2820. நான் வேறு சிவன் வேறு என்று நாடினேன். அவ்வாறு நாடியபோது நான் வேறு தான் வேறு இல்லை என்ற இருபொருள் இல்லை என்பதை என்னை விழுங்கித் தானே ஆய் நின்ற ஞான மூர்த்தியே அருளினான். அப்போது நான் ஒரு பொருள் என்ற எண்ணமும் நீங்கி நான் இருந்தேன்.

2821. இறைவனை அடைவதற்குரிய நல்ல வழி சிவஞானத்தை அடைந்து நாதம் கைவரப் பெற்று நாதாந்தம் என்பதே ஆகும். ஞானத்தின் நல்ல நெறியானது ஆன்மாவானது அறிவுரு என்று அறிவதே ஆகும். ஞானத்தில் நல்ல யோகம் என்பது சீவபோதத்தை விட்டுச் சிவபோதத்தில் அடங்கியிருப்பதாகும். ஞானத்தினால் நல்ல பிரணவப் பொருளை உணர்ந்து நாதாந்தம் அடைவதே ஆகும்.

2822. பிறவியினின்று விடுபட விரும்புகிறவர்க்கு உயிர் போன்று இன்றியமையாமை உடையது சிவஞானம். அவர்கட்கு உயிர் போன்றது சிவமே ஆகும். அவர்களுக்கு ஒடுங்கும் இடம் பிரணவம் ஆகும் அவர்களது அறிவுக்கு அறிவாய் விளங்குவது சிவம் ஆகும்.

2823. அருள்வழி போய் நின்று காணும் பேறு பெற்றவர்க்கு சிவன் கண்மணி போல் உடனாய் இருந்து தன்னைக் காணும்படி காட்டுவான். அத்தகையவர்க்கு அவன் திருப்பாற்கடலில் தோன்றிய அமுதத்தை போன்று வாழ்நாளை அளிப்பவன் தன்னை வழிபடுபவரை நந்தியம் பெருமான் தவறாமல் காப்பான். அன்பு மிக்கவர்க்கே அவன் தக்க துணையாய் நின்று உதவுவான்.

2824. ஓம் என்ற பிரணவத்தை விட்டு நீங்காத நாதம்போல் வானுலகத் தேவர் விரும்புவது செம்பொருளாகும், மனம் வாக்குக்கு எட்டாதுள்ள செம்பொருளான அச்சிவத்தின் திருவடிகளை வணங்கி நிற்கின்ற தேவர்கள் உம் உள்ளத்தில் விளங்குவர்.

#####

Read 1483 times Last modified on வியாழக்கிழமை, 16 July 2020 16:18
Login to post comments