Print this page
வியாழக்கிழமை, 16 July 2020 12:35

சர்வ வியாபி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

#####

சர்வ வியாபி!

3026. ஞானப் பயிற்சியால் சிவானுபவம் பொருந்தும். இதுவன்றி ஆன்மா ஆராய்ச்சியால் பெறும் அறிவையும் மாயையின் சேர்க்கையால் பொருந்திய பெரிய உடம்பையும் தன் வயமாய் அடையும்படி செய்யும். அப்போது தன் விடய வாசனைகள் கெடும். பின் ஆன்மாவின் நிறைவுத் தன்மை பொருந்தும்.

3027. யான் அறிந்துள்ள சிவபெருமான் எங்கும் நீக்கம் இன்றி நிறைந்திருத்தலால் சென்று அடைய வேண்டிய இடம் இல்லை. தலையின் மீதுள்ள வான் மண்டலத்தை அறிந்து வழிபடில் அது சிறந்து விளங்கும். அப்போது உடலின் தன்மையை அறிந்து அங்கு விளங்கும் ஒளிமிக்க சுடரையும் தன் உண்மை நிலையை அறிந்தவர் எங்கும் போய் மீண்டு வரும் ஆற்றலைப் பேறுவர்.

3028. கடலில் உண்டாகும் அலை பொன்ற ஓயாத துன்பம் வரும் தன்மை கொண்டது உலக வாழ்வு. இதில் உடலில் வாழும்போது சீவர்களின் உள்ளத்தில் விளங்கும் ஒளியை நாடி அங்கு ஒளிக்குள் விளங்கும் சிவத்தைக் கடலினது அலை போல வரும் துன்பத்திலும் கண்டு கரை சேர முடியும்.

3029. தேவ தேவனான இறைவன் சந்திரன் சூரியன் அக்கினி ஆகிய மூன்று சுடர்களுக்கும் ஒளி தருவனவாய் அவற்றுக்கு உடலாய் விளங்குபவன். முன் சொன்ன சந்திரன் சூரியன் அக்கினியைக் கடந்த பேரொளியாக மாறுபாடுடைய உலகம் எல்லாம் அவன் பரிவுடன் சீவர்களைத் தொடர்ந்து செல்லும் நுண்மையன் ஆவான்.

3030. உலகம் இன்பம் தருவது என்ற உறுதியால் பெற்ற வினையில் அழுந்தித் துன்பப்பட்டு முடிவாகத் தன் அடியவரை இறைவன் காப்பான் ஆவான். சிறுதிசையில் ஒன்றான ஈசான திக்கில் உள் ஒலியாய் விளங்கும் அற்புதக் கடவுளை அடையப் பெற்றால் தலையின் மீது விளங்கும் பெரும் பேரொளியாக அவன் விளங்குவான்.

3031. பற்றப்படும் பொருளகளும் மிகவும் மேலானது சிவமே. அது எங்கும் நிறைந்த சந்திரன் சூரியன் அக்கினி என்ற மூன்று ஒளியாய் நெற்றி நடுவில் நினைப்பவர்க்குத் தன் இருப்பை உணர்த்தி நிலை கொள்ளும். பின்பு நினைப்பவர் வண்ணமாய் அவன் விளங்குவான்.

3032. சிவமான சீவன் ஒளி உருவம் உடைய தேவன். அவன் மேம்பாடு உடைய பத்துத் திசைகளிலும் உள்ளாவரை ஏவல் செய்யும் ஆற்றல் உடையவன். விரிந்த நீரால் சூழப்பெற்ற ஏழ் உலகங்களிலும் நிறைந்திருக்கும் ஆற்றலை அவன் பெறுவான். மேலும் அவன் உலகம் எங்கும் அறிந்து கூறவல்ல நாவன்மை கொண்டவன் ஆவான்.

3033. கூரிய பார்வையுடைய கருடனைப் போல் ஏழ் உலகத்தையும் கூர்ந்து பார்த்துக் காக்கின்ற உலக நாதனும் அங்கே அடியார் படும் துன்பத்தைப் போக்கும் மலமில்லாதவனும் பிறப்பு இல்லதவனும் ஆகிய எம் தலைவன் எங்கும் போவதும் வருவதும் எல்லாவற்றோடு புணர்தலிலும் வல்லவன்.

3034. சிவ ஞானியரிடம் விளங்கும் சிவன் ஒளிக்கதிர்களை உடையவன். அவனது உடல் செம்பொன் போல் மிளிரும் அவன் உலகத் தொடர்பு இல்லாதவனாயும் எல்லா உலகங்களிலும் தொடர்பு கொண்டும் விளங்குவான். அவன் எங்கும் விலகி நிற்பவன் அல்லன். பிறப்பிலாத சிவன் ஏழுலகங்களிலிருந்து நீங்கினவனாயும் கலந்தவனாயும் விளங்கினான்.

3035. சிவ ஞானியரிடம் பொருந்திய உணர்வும் உயிரும் சிவனே ஆகும். பொருளகளுடன் கூடி அறிகின்ற அறிவும் அதனால் அறியப்படும் பொருள்களும் சிவனே ஆவான். அங்ஙனம் தொடர்ந்து வரும் அவனை எண்ணத்தில் அகப்படுத்த முடியாது. அவன் கொத்தாயுள்ள மலர்களின் நறுமணம்போல் எவனிடத்தும் பரவி அருள்பவன் ஆவான்.

3036. எம் தந்தையான சிவபெருமான் கல்வியைக் கற்று அடைய வேண்டிய எதையும் வேண்டாதவன். அவன் உயிர்களுக்கு அளிக்க வேண்டிய நல்ல ஞானத்தை முழுவதும் உடையவன். விலை மதிக்க இயலாத அந்தணர் கூறும் வேதத்தில் உள்ள பல பொருளகளிலும் நிறைந்து நிற்கின்றான்.

3037. சிவன் வான்மயமாய் ஏழு உலகங்களுக்கும் அப்பால் உள்ளவன். அவன் பூமி மயனாய் அதைச் சூழ்ந்துள்ள ஏழ் கடல்களுக்கும் குளிர்ச்சியைத் தருபவனாய் அக்கடலைப் போன்ற தன்மையுடைய வலக்க்ண்ணின்மேல் விளங்குபவனாய் உயிருடன் கலந்துள்ளான்.

3038. சிவபெருமான் நான்முகன் திருமால் ஆகியவருடன் தானே நிலைபெற்று நின்றான். அவனே நிலத்தின் இயல்பால் கீழும் வானத்தின் இயல்பால் மேலுமாய் நின்றவன். அவனே உய்ர்ந்த மேருமலையாகவும் ஏழு கடலாகவும் உள்ளான். அவனே சாதனையாளர்க்கு வலமான கனியைப் போல் பயன் அளிப்பவனாயும் இருக்கின்றான்.

3039. எம் இறைவன் எல்லா உலகங்களுக்கும் தலைவனாகிய் புண்ணிய மூர்த்தியாவான். அவனே எங்கும் உள்ள உயிர் வர்க்கத்தைச் செலுத்துபவன். அவனே எண்ணரிய உயிர்க் கூட்டமாகவும் உள்ளான். இத்தகைய இயல்புடைய சிவனையே தலைவன் என்று சிவஞானையர் விரும்பி நின்றனர்.

3040. சீவரின் உடம்பின் உள்ளே உள்ள கெடாத உயிரும் அண்டகாயத்தில் விளங்கும் பிராணனும் விரிந்த கதிர்களை உடைய சந்திரனும் பூமித் தானத்தில் பொருந்தியிருக்கும் அபானனுமாய் ஆகி நிற்பவன். கண்ணின் பார்வையில் விளங்கும் சிவமே ஆவான்.

3041. தியானத்துக்குரிய பிரணவ்த்தைக் குருகாட்டிய வழியே சாதனையும் அச்சாதனையின் வழியே செல்லும் வகையும் தோற்றுவித்ததருளிய பரமசிவனை அகக்கண் கொண்டு காண்கின்ற தன்மையில் அப்பொருள் சீவனது உடம்பில் பொருந்தி அதன் இயலபை மாற்றி ஒப்பில்லாத ஊதியப் பொருளும் ஆவான்.

3042. சுற்றிலும் இருக்கின்ற எட்டுத் திக்கும் அண்டமும் பாதலமும் தோன்றித் தன்னிடம் ஓங்க மஞ்சள் ஒளியிலே அறிவின் வடிவாக விளங்கும் சிவபெருமான் இத்தன்மையுடன் நுண்மையாய் எல்லாத் தத்துவங்களிலும் கலந்து விளங்குகின்றான்.

3043. பலவகைப்பட்ட தத்துவங்களாய்ப் புவியில் உள்ளவர்க்கு விளங்கும் இறைவனின் உண்மை இயலபை அறிபவர் இல்லை. தொலைவில் உள்ளவனாகவும் அண்மையில் இருப்பவனாகவும் மாறுபாடு அற்றவனாகவும் உயிர்களுக்கு இன்பம் செய்பவனாகவும் உள்ள அநாதியானவன் எம் சிவன். அவன் பல தத்துவங்களாக இருப்பதல்லாமல் யாவற்றையும் கடந்தும் உள்ளான்.

3044. சிவன் எல்லா உயிர்களின் அறிவுக்கு அறிவானவன். மிகவும் சிவனே தொன்மையானவன். அங்ஙனமாயினும் அவன் நிற்கும் நிலையைச் சீவர்களால் எவ்விதத்தாலும் அறியப்படாதவன். பொதுவாக எட்டு உலகங்களிலும் எம் தலைவனான நந்தியம் பெருமான் ஒவ்வொரு சீவனையும் அறிய வல்லவன்.

3045. நிலம் நீர் நெருப்பு வாயு விண் ஆகிய ஐந்து பூதங்களாகவும் அவற்றைத் தாங்கி நிற்கும் ஆதாரமாகவும் உடலில் பொருந்தும் ஒளியாகவும் உள்ளான். அவனது பெயரும் பராபரன். அணுவடிவான எம் தலைவன் சகல தத்துவங்களுடன் கூடியவனாய் உள்ளவன் அழிவு இல்லாதவன்.

3046. திருமூலர் அருளிய இம்மூவாயிரம் பாடல்களும் அவர் அருளிச் செய்த முந்நூறு மந்திரப் பாடல்களும் அவர் அருளிய முப்பது உபதேசப் பாடல்களும் அவர் அருளிச் செய்த இம்மூன்று வகைப் பாடல்களும் ஒரு பொருளையே விளக்குவனவாம்.

3047. சிவ குருநாதனான நந்தியின் திருவடி வாழ்க. மலக்கட்டினைப் போக்கியருளிய அவனது திருவடி வாழ்க. மலம் அறுத்தலோடு உண்மையான ஞானத்தை அருளிய திருவடி வாழ்க. மலமற்றவன் திருவடி வாழ்க.


திருச்சிற்றம்பலம்.

#####

Read 2115 times
Login to post comments