Print this page
வியாழக்கிழமை, 07 September 2017 11:01

சண்டேசானுக்ரஹர்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

சங்குபாணி விநாயகா போற்றி!
சதுர் முக கணபதியே போற்றி!
சந்தான விநாயகா போற்றி!
சித்தி விநாயகா போற்றி!


சண்டேசானுக்ரஹர்!

திருப்பனந்தாள் அருகில் மண்ணியற்றங்கரையில் உள்ள சேய்ஞாலூர் எச்சதத்தன் மகன் விசாரசருமர். முந்தைய பிறவியின் அறிவு தொடர்ச்சியாக விசாரசருமருக்கு வேத சிவாகமங்களின் உணர்வு சிந்தையில் தோன்றி வளர பசுக்களை மேய்க்கும் இடையன் அவைகளை அடிக்கக் கண்டு அவனை விலக்கி தாமே பசுக்களை மேய்த்து உரிமையாளரிடம் சேர்பித்து வந்தார். மண்னியற்றங்கரையில் சிவலிங்கம் நிறுவி பசுக்கள் தாமே பொழிந்து தரும் பாலைக் கொண்டு இலிங்கத்தை அர்ச்சனை செய்து வந்தார். மலர்கள் சூட்டி மகிழ்ந்தார். பாலை மணலில் கொட்டி வீனாக்குகின்றான் என தந்தையிடம் புகார் சென்றது. ஊர்ச்சபையில் தன் மகன் செயலுக்காக மன்னிப்பு வேண்டி இனி இவ்வாறு நிகழா வண்ணம் பார்த்துக் கொள்வதாக உறுதி செய்தார்.
மறுநாள் தன் மகன் என்ன செய்கிறான் எனப் பார்க்க யாருக்கும் தெரியாமல் குராமரத்தில் ஏறி ஒளிந்திருந்தார் எச்சதத்தன். வழக்கம்போல் விசாரசருமர் குடத்தினைக் கொண்டு பசு மடியில் வைக்க அவைகள் தாமே கறந்த பாலைக் கொண்டுவந்து லிங்கத்திற்கு திருமுழுக்காட்டுச் செய்து மலர்களால் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். இதைக் கண்ட எச்சதத்தன் கோபமுற்று அருகே சென்று வசைபாடி விசாரசருமர் முதுகில் அடித்தார். சிவ வழிபாட்டில் ஒன்றியிருந்ததால் நடந்த எதுவும் விசாரசருமருக்குத் தெரியவில்லை. மேலும் அதிக கோபமுற்ற எச்சதத்தன் பால் வைத்திருந்த குடத்தை எத்தினான். பால் சிந்தியதைக் கண்டு சிவ பூசைக்கு நிந்தனை செய்பவர்களை தண்டிக்க அருகில் கிடந்த கோலை எடுத்து வீசினான். சிவ அருளால் கோல் மழுவாக மாறி எச்சதத்தன் கால்களை வெட்டியது. அப்போதும் வழிபாட்டிலேயே கவனமாக இருந்ததால் நடந்ததை கவனிக்கவில்லை.
சிவன் விடைமீது உமையுடன் தோன்றி நம் பொருட்டால் ஈன்ற தந்தையை மழுவினால் எறிந்தாய், இனி நாம் அடுத்த தந்தையாம் என்று அருளி உச்சி மோந்து மகிழ்ந்தார். அவரை தன் தொண்டர்கள் தலைவனாக்கி எமக்கு நிவேதனம் செய்யும் பொருள்கள் யாவும் நினக்கே உரியது. நினக்குச் சண்டீசன் என்ற பதவி தந்தோம் என அருளினார். சிவனடியார்கள் அனைவருக்கும் தலைமையானவர். தொண்டர் நாயகம் எனப்படுவார். தன் மாலையை அவருக்கு சூட்டி மகிழ்ந்தார். எச்சதத்தன் சிவபதம் அடைந்தான். சிவன் கோவில்களில் வரவு செலவுகள் சண்டேசுவரர் பெயரில் எழுதுவது பண்டைய வழக்கம். இது அறங்களைச் செய்யும் போது நான் செய்தேன் என்னும் தன் சிறப்பு இன்றி இறைவனது திருவருளே அறத்தைச் செய்வித்தது என எண்ணிச் செய்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் தத்துவம்.
சிவன் சடாமகுடத்தால் அலங்கரிகப்பட்டு உமையுடன் அமர்ந்து, முகம் சற்றே இடது புறம் திரும்பி, வலக்கரம் அருட் குறிப்புடன், இடக்கரம் சண்டேசர் தலைமீது ஆசீர்வதிக்கும் நிலையில் வலக்காலைத் தொங்கவிட்டுக் கொண்டு இடக்காலை படுக்கவைத்து பூணூல் அணிந்தவராய் இருப்பார், சண்டேசர் தன்னிரு கரங்களையும் குவித்து வணங்கியவராய் இருக்கையில் அமர்ந்திருப்பர். கிருதயுகத்தில் உருத்திர சண்டேசுவரர், திரேதாயுகத்தில் பிரசண்டர், துவாபராயுகத்தில் வீரசண்டர், கலியுகத்தில் தலனிசண்டர் என அழைக்கப்படுவார்.
சிவாலய தெய்வங்களில் தென்முகக் கடவுள், ஆடல் வல்லான், சண்டேசுவரர் ஆகியோர் தெற்கு நோக்கி காட்சியளிப்பார்கள். சண்டேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பார். சிவவழிபாட்டின்போது சிவனுக்கு அணிவித்து பெறும் பூமாலை, பரிவட்டம் முதலிய பொருட்களை சண்டேசர் சந்நிதியில் சேர்த்து சிவதரிசனப் பலனைத் தரவேண்டும் என பிராத்தனை செய்து அங்கு விபூதி பெற்று அணிய வேண்டும் என்பதே முறை. இடையறாத தியானத்தில் இருக்கும் சண்டேசருக்கு நமது வருகையை தெரிவிக்கவே அவரது சந்நிதியில் நின்று மெள்ளத் தட்டுதல் வேண்டும். அவரது சன்னதியை முழுமையாக வலம் வராமல் வலப்புறமாக சென்று தரிசித்து வந்த வழியே அரைவட்டமாக திரும்ப வேண்டும். சிவ புண்னிய பலனை பக்தர்களுக்கு அளிக்கும் அதிகாரம் கொண்டவர் சண்டேசுவரர். முதலில் விநாயகரையும் இறுதியில் சண்டேசுவரரையும் வழிபடுதல் வேண்டும் அப்போதுதான் சிவ வழிபாடு முழுமை பெறும். பஞ்சமூர்த்திகள் புறப்பாடு என்பது- விநாயகர், முருகன், சிவன், அம்பிகை, சண்டேசுவரர் என்பதாகும். சண்டேசர் மானிடராய் பிறந்து இந்நிலைக்கு உயர்ந்தவர்.
ஈன்ற தந்தையை நம் பொருட்டால் மழுவினால் எறிந்தாய், இனி உனக்கு அடுத்த தந்தை நாம் என அருளிய வடிவம்- சண்டேசானுக்ரஹர். காட்சி: கங்கை கொண்ட சோழபுரம்.

#####

Read 6406 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 19:02
Login to post comments