Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 02:52

சிவலிங்கம்!

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

விக்னேஸ்வரா போற்றி!
வினை தீர்க்கும் விநாயகா போற்றி!
விஷ்னு விநாயகா போற்றி!
வீம விநாயகா போற்றி!


சிவலிங்கம்!

 

இலிங்கத் திருவடிவம்- குணமும் குறியும் கடந்த பேரொளியாகிய இறைவனை வழிபாடும் பொருட்டு ஒரு குறியின்கண் (அடையாளமாக) வைத்து வணங்குவது இலிங்கவடிவம் ஆகும். ஒன்றும் புலப்படாத அருவுருவிற்கும், புலப்படும் ஓர் அண்ட வடிவமான பிழம்புருவானது பற்றி உருவமும் கை, கால் முதலிய உருப்புகள் எவையும் புலப்படாமை பற்றி அருவமும் ஒன்றாக காணப்படுவதால் சிவலிங்கம் ‘அருவுருவத் திருமேணி எனப்படும்.

ஆக்கமும் அறிவுமாகிய சம்சாரமானது லயத்தை அடையும்போது பூதாசலங்கள் யாவும் சிருஷ்டி காலத்தில் எவ்வாறு தோன்றியதோ அவ்வாறே லயத்தை அடைகின்றன. சிவலிங்கம் அவற்றை படைக்கும் தன்மை வாய்ந்ததால் லிங்கம் எனப்பட்டது. நிட்களமாயும் சாந்தமாயும், மனதிற்கும் வாக்குக்கும் அப்பாற்பட்டதுமான அது சம்சாரசாகரத்தில் உழலும் சகல பூதாசலங்களுக்கும் முக்தியைக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. எல்லாவற்றிலும் வியாபித்து அவற்றுள் மறைந்து தன் செயல்களைச் செய்து கொண்டிருக்கின்றது. சிவலிங்கத்திலிருந்து சாந்தி தத்துவமும் அதிலிருந்து சக்தி தத்துவமும் அதிலிருந்து நாதமும் தோன்றியது. லிங்கம், சாந்தி, சக்தி மூன்றும் நிட்களம் எனப்படும் உருவமற்றவையாகும்.

சிவலிங்கம் சகலம்-எல்லாம் எனப்பட்டால் நாதம் பிந்து இரண்டும் மிச்சரம் எனப்படும். நாதம் லிங்க- சிவ வடிவமென்றால் பிந்துவே பீடம்- சக்தி வடிவம். லிங்கமும் பீடமும் ஒன்று சேர்ந்து இருப்பதால் எப்படி நெருப்பும் அதனுடே வெப்பமும் இருப்பதுபோலச் சிவமும் அதனுள்ளே சக்தியும் இருக்கின்றது.

"லிம்’ என்பது லயத்தையும் (ஒடுங்குவது) ‘கம்’ என்பது வெளிவருதலையும் குறிக்கும். எனவே லிங்கம் என்றால் சித்தரித்தல் எனப் பொருள்படும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களாலும் பிரபஞ்சத்தை சிவன் சித்தரிக்கின்றபடியால் சிவலிங்கம் எனப்பெயர். உலகத்தே தோன்றிய அனைத்துப் பொருள்களும் சிவ வடிவக்கூறுகளே என்பது அருளாளர்களின் கருத்து. அண்டத்திலே உள்ளது பிண்டத்திலே என்பதுபோல பஞ்ச பூதங்களைத் தன்னுருவாக கொண்ட சகுணப் பர சிவத்தை உலக நன்மைக்காக இலிங்க வடிவமாக்கினர்.

இலிங்கத்தின் அடிப்பாகம் நாற்கோணவடிவமாய் நிலத்திற்குத் தலைவனான படைப்புக் கடவுள் பிரம பாகத்தை உணர்த்துவதாகும். மத்திய பாகம் எட்டுப் பட்டைகளையுடைய எண்கோண வடிவமாய், வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவீகரணி, பலப்பிரதமனி, சர்வப்பூததமனி, என்ற திருமாலின் எட்டு சக்திகளுடன் மனோன்மணி சக்தியும் சேர்ந்து உணர்த்தும் விதமாக அடிப்பாகத்தினோடு பொருத்தப்படும். நீருக்கு அதிபதியான காத்தல் ஸ்திதித் தலைவன் விஷ்ணுபாகம்- ஆவுடை எனப்படும். மேலுள்ள பாகம் நெருப்பிற்கு தலைவனின் சிவபாகமாகும். நிலம்-பூமிக்குள் மறைந்து ஒடுங்கியும்,, நீர்- அபிசேட நீரைத் தாங்கி விரிந்து நின்றும், நெருப்பு-மேலோங்கி சோதிபோல் ஒளியுடனிருக்கும். இந்த மூன்றும் சேர்ந்த அருவமும் உருவமும் அற்ற ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி வடிவம் சிவலிங்கம். எனவே ஒரு லிங்க வடிவம் என்பது பிரம்மன், விஷ்ணு, சிவன் -மகா உருத்திரன் ஆகிய மூவரின் ஒட்டு மொத்தமான ஓர் உருவமாகும்.லிங்காபரணத்தில் சிவனுடன் உமாதேவியும் –உமையொரு பங்கனாக சேர்ந்தே உள்ளார்.

பொதுவாக இலிங்கங்கள் ஆறுவகை.
அண்டலிங்கம்- அண்டம்- உருண்டையாக இருப்பதால் உலகம் அண்டம் எனப்பட்டது. எழுத்து, பதம், மந்திரம், தத்துவம், புவனம், கலை ஆகிய ஆறும் உயிர்களின் இன்ப துன்ப நுகர்ச்சிக்கும் முக்திக்கும் வழியாக இருக்கும் இவைகள் அத்துவாக்கள் எனப்பட்டது. இந்த அத்துவாக்களை லிங்கத்தின் பகுதிகளாக கருதி வழிபடுவது அகண்டலிங்க வழிபாடு.
பிண்டலிங்கம்-அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது. எனவே மேலே கூறிய ஆறு அத்துவாக்களும் மனித உடலில் உள்ளபடியால் உடலின் உள்ள ஆறு ஆதாரங்களில் அவற்றை நினைந்து வழிபடும் அகவழிபாடு பிண்டலிங்க வழிபாடு ஆகும்.
சதாசிவலிங்கம்- இறைவனின் சத்யோஜாதம்-படைத்தல், வாமதேவம்-காத்தல், தத்புருஷம்-மறைத்தல், அகோரரூபம்-அழித்தல்(ஒடுக்கம்), ஈசானம்-அருளல் ஆகிய ஐந்து பஞ்சபிரம மந்திரங்கள் வடிவமாக கொண்டுள்ளது. இம்மந்திரங்கள் அருவமாய் ஓர் உடல் இரு திருவடி 5 திருமுகங்கள், 10 திருக்கரங்கள், 15 திருக்கண்கள், உடைய சதாசிவ திருமேனியில் பதிவு பெறுவதால் அந்நிலையில் வழிபாடு செய்வதால் சதாசிவலிங்கம் அருவுருவமானது.
ஆன்மலிங்கம்- அண்டம், பிண்டம், சதாசிவம் போன்று மும்மலங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு தூயதாய் நிற்கும் உயிர் சிவனாகும். இது ஆன்ம லிங்கம் என்றாகும். சிவயோகியர் வழிபடுதலுக்குரியது..
ஞானலிங்கம்- ஞானமே உருவான சக்தியும், சிவனும் ஒன்றித்து ஒருவரை மற்றவர் பிரியாது நின்று உயிர்களுக்குச் சிவஞானத்தை நல்கும் நிலையை உணர்த்துவது ஞானலிங்கம். சிவனின் பதமாகிய ’சி’ காரத்தை முன் நிற்குமாறு சொல்லி பின்னர் பார்வதியின் பதமாகிய ‘வ’ காரத்தைச் சொல்லி ‘சிவ’ எனும் மகாகாரணத்தின் உண்மையை உணர்ந்து அது உணர்த்தும் ஞான நிலையில் செபித்தால் ஞான லிங்கம் வேளிப்பட்டு பேரோளியாய் காட்சியளிக்கும். சிவ ஞானிகள் வழிபாட்டுக்குரியது.
சிவலிங்கம்- பரமசிவம் எனும் இந்த லிங்கம் சிவன், சக்தி, பரநாதம், பரவிந்து, சதாசிவன், மகேசன், உருத்திரன், மால், அயன் என்ற ஒன்பது வடிவங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. சிவலிங்கம் பேரானந்தத்தை அனுபவிக்குமாறு அருள்பாலிப்பது மட்டுமல்லாமல் ,இஃது அன்றும் இன்றும் என்றும் அருள் பாலிப்பது என்றும் இதுவே அயன் முதல் சிவன் வரையுள்ள ஒன்பது வடிவங்களுக்கும் முதலாவது என திருமூலர் கூறியுள்ளார். அதி தீவிர பக்குவம் அடைந்த சிவ ஞானிகளுக்கு காட்சியளித்து சிவானந்தத்தை தரும். சிவலிங்கம் இருவகைப்படும்.
1. சலலிங்கம் (சலம்- புடை பெயர்வது) மண், கல், பொன், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களாலும், சந்தனம், வன்னி முதலிய மரங்களாலும் செய்யப்படுபவை.
2. அசலலிங்கம் (அசலம்- புடை பெயராதது) ஒன்பது வகைப்படும். 1.சுயம்பு லிங்கம்.-தான்தோன்றி லிங்கம். எவராலும் தோற்றுவிக்கப் பெறாமல் இயற்கையாகத் தாமே தோன்றிய லிங்கங்கள். 2.தைவீகலிங்கம்- திருமால், நான்முகன் ஆகியோர்களால் நிறுவப்பட்டு வழிப்படப்படும் லிங்கங்கள். 3.காணலிங்கம்- கணபதி, முருகன் முதலான தேவகணங்களால் நிறுவப்பட்டு பூசை செய்யப்பட்டு வருபவை. 4.மானுடலிங்கம்- மானிடர்களால் நிறுவப்பட்டு வழிப்படப்படும் லிங்கங்கள். இவை அட்டோத்திரலிங்கம் (108சிவலிங்கங்களை உடையது), சகஸ்ரலிங்கம்(1008 வரைகோடுகளில் காண்பது), தாராலிங்கம் (பூசா பாகத்தில் 64 பட்டைகளுடன் தீட்டிய நிலை, முகலிங்கம் (உருவ வழிபாட்டின் மூர்த்தங்களின் வழி இறைவனை அறிந்து பயன் பெறமுன்னோடி) என 4வகைப்படும். 5.ஆரிடலிங்கம்- முனிவர்களால் நிறுவப்பெற்று வழிபடப் படுபவை. 6.அசுரலிங்கம்- அசுரர்களால் நிறுவப்பட்டவை. 7.சுரலிங்கம்- தேவர்களால் நிறுவப்பட்டு வழிபட்டது. 8.பாண லிங்கம்- பாணாசுரன் நிறுவி வழிபட்டது. இது சுயம்பு லிங்கத்திற்கு இனையானவை.-காமிக ஆகமம். 9.சணிகலிங்கம்- மண், அரிசி, அன்னம், ஆற்றுமணல், கோமயம், வெண்ணெய், உருத்திராக்கம், சந்தனம், நாணல், மலர்மாலை, சர்க்கரை, அரிசிமாவு, திருநீறு, பழம், தண்ணீர், தயிர் ஆகிய 16 பொருள்களால் செய்து நிறுவப்பட்டுபூசை செய்ததும் கைவிடப்படுபவை.

லிங்க பூஜை பலன்கள்!
மண்லிங்கம் -பூஜை விருப்பங்கள் நிறைவேறும்.மலர்களால் அர்ச்சனை-சித்தி
ரத்தினலிங்கம் -பூஜை லட்சுமிகடாட்சம்.
பவழலிங்கம் -பூஜை நிலையான செல்வங்கள்.
உலோகலிங்கம்-பூஜை தர்மம் செய்தபலன்கள்.
சிவலிங்க பிரதிஷ்டை செய்தவர்கள் முக்தி
சிவலிங்க பிரதிஷ்டையைப் பார்த்து தானும் அவ்வாறு சிவலிங்க பிரதிஷ்டை செய்ய நினைத்தால் அவர்களின் பாவங்கள் அக்கணமே மறையும்.
சிவனுக்கு கோயில் எழுப்புவர்கள் தங்களது நூறு தலைமுறையில் உள்ள பிதுர்களுக்கு சிவபதி அடையும் பாக்கியம்.
கருங்கல்லால் கோயில் எழுப்புவர்கள் அத்தனை ஆயிரம் ஆண்டுகள் சிவலோகத்தில் இருக்கும்பேறு என ஆகமங்கள் பகர்கின்றன

சகஸ்ரலிங்கம்!-
உத்திரகோசமங்கை திருத்தலத்தில் தவம் புரிந்த ஆயிரம் முனிவர்களுக்கு காட்சியளித்து தன்னிடமிருந்த சிவ ஆகமங்களை தந்து தான் திரும்பி வரும் வரை பாதுகாக்கும்படி சொல்லி மறைந்தார். குழந்தை வடிவில் தன்னை தரிசிக்க விரும்பி தவமிருந்த மண்டோதரிக்கு அருள்புரிய இலங்கை சென்று காட்சி அருளியபோது வந்திருப்பது யார் என்பதை அறிந்த மண்டோதரி ஆனந்தப்பட்டு சிவ குழந்தையை எடுத்துக் கொஞ்ச அங்கு வந்த சிவநேசனான இராவணன் உண்மையறிந்து - குழந்தையை எடுக்க முற்படும்போது இறைவன் மேனியை இலங்கேஸ்வரன் தீண்டிய உடன் மறைந்து இங்குத் தீர்த்தக் குளத்தில் தீப்பிழம்பாக தோன்ற ஒரு முனிவர் நீங்கலாக 1000 முனிவர்கள் பரவசமடைந்து குளத்தில் குதிக்க, அந்த முனிவர் இறைவனின் ஆகமங்களைக் காப்பது தன் கடமை என அப்படியே அமர்திருந்தார். அவர்க்கு ரிஷிபாரூடராக காட்சி. அவரை பாண்டிய நாட்டில் மீண்டும் பிறந்து சைவமும் தமிழும் தழைத்தோங்க தொண்டு செய்ய அருள் - அவரே மாணிக்கவாசகர். குளத்தில் குதித்த முனிவர்கள் லிங்கங்களாய் மாற அவர்களின் நடுவே தானும் லிங்கமாய் வீற்று சகஸ்ரலிங்கமாய் காட்சி அருள்.


ஜோதிர்லிங்கங்கள்!
குணமும் குறியும் கடந்த பேரொளியாகிய இறைவனைக் குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்டு திகழ்ந்திருப்பது சிவலிங்கமாகும். சிவம் என்ற சொல்லுக்கு நன்மை, முக்தி, மங்களம், செம்மை, உயர்வு, களிப்பு, அருவுருவ நிலை எனப் பலப்பொருள் கூறலாம். செம்மையும், நன்மையும், மங்கலமும் உடையான் என்பதற்காகச் சிவனைச் சிவம் என அழைத்தனர். எண் குணத்தானாகிய சிவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன் ஆவான். நான்முகனும் திருமாலும் அடிமுடி காணாதவாறு அனைத்து அண்ட உலகங்களையும் அளந்து நின்ற அரும் பெரும் ஜோதிதான் லிங்கம்! சோதி வடிவினனாகச் பரஞ்சோதியாய் சிவன் தோன்றிக் காட்சி கொடுத்த தலங்களே ஜோதிர்லிங்கத் தலங்கள். அவை திரியம்பகம், குசுமேசுவரம், நாகேசுவரம், வைத்தியநாதம், பீம்சங்கரம், மகாகாளம், ஓங்காரேசுவரம், கேதாரம், விசுவேசம், சோமநாதம், ஸ்ரீசைலம், இராமேஸ்வரம் ஆகும்.

#####

Read 7975 times Last modified on வெள்ளிக்கிழமை, 09 March 2018 17:15
Login to post comments