Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 09:23

கங்காவிசர்ச்சனர்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

செயப்படு பொருளும் நீயே போற்றி!
சொந்தாமரைப் பூம்பாதம் போற்றி!
அற்புதக் கற்பகக் களிறே போற்றி!
முப்பழம் நுகரும் அப்பனே போற்றி!
இப்பொழுது என்னை ஆட்கொள் போற்றி!
தாயாய் எனக்கும் எழுந்தருள் போற்றி!


கங்காவிசர்ச்சனர்!

அயோத்தி மன்னன் சகரன் அசுவமேதயாகம் செய்ய அதனால் தன் பதவிக்கு ஆபத்து வரும் என அஞ்சிய இந்திரன் அசுவமேதக் குதிரையை கபில முனிவர் தவம் செய்யும் பாதாளக் குகையில் கட்டிப் போட்டான். சகரனின் மக்கள் அறுபதினாயிரம் பேர் தன் தந்தையின் கட்டளைப்படி குதிரையைத் தேடி இறுதியில் பாதாள லோகத்தில் கண்டு பிடித்து அச்செயலுக்கு காரணம் கபிலமுனி எனத் தவறாக நினைத்து அவரை துன்புறுத்த கபில முனி அனைவரையும் எரித்து சாமபலாக்கினார். தன் புதல்வர்கள் இறந்ததை அறிந்த சகரன் மிகவும் வருந்தினாலும் யாகத்தை முடிக்க தன் பேரன் அஞ்சுமானை கபில முனியிடம் அனுப்பி யாகம் நிறைவடைய உதவுமாறு பணிந்து கேட்க யாகம் நல்லபடியாக முடிந்தது.
இந்த மன்னன் மரபில் தோன்றிய பகீரதன் மூதாதையர் முனிவர் சாபத்தால் சாம்பலாகி நரகத்தில் உழல்வது அறிந்து அவர்களை நற்கதி அடைய நான்முகனை நோக்கி கோகர்ணத்தில் தவமிருந்தான். வானுலகிலிருந்து ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டுவந்தால் நரகத்தில் இருக்கும் உன் முன்னோர்கள் நற்கதி அடைவர் என பிரம்மன் கூறினார். உடன் ஆகாய கங்கையை நோக்கி பகீரதன் தவமிருக்க தோன்றிய கங்கை தன் பாரத்தையும் வேகத்தையும் பூமி தாங்காது. அதை தாங்கக் கூடியவர் சிவபெருமான். அவர் மனம் வைத்தால்தான் நீ நினைத்த செயல் கைகூடும் என்றாள்.
பகீரதன் சிவனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான். சிவன் திருவுள்ளம் கொண்டு வேகம் கொண்ட கங்கையைத் தன்சடை முடியில் தாங்கிக் அதன் ஒரு பகுதியை பூமியின் மீது விடுவித்தார். பகீரதன் வழிகாட்ட கங்கை பூமியில் பாயத் தொடங்கினாள். வழியில் ஜானவி முனிவர் ஆசிரமத்தை கங்கை மூழ்கடிக்க முனிவர் கங்கையை அள்ளிக் குடித்து கங்கையை தன்னுள் சிறைப்படுத்தினார். இதைக் கண்ட பகீரதன் கலங்கி தன் நிலைப் பற்றி முனிவரிடம் எடுத்துச் சொல்லி அதற்கு உதவ வேண்டுகோள் விடுக்க ஜானவி முனிவர் கங்கையை விடுவித்தார். பின் கங்கையை பகீரதன் பாதாள உலகத்திற்கு அழைத்துச் சென்று கபிலமுனிவரின் ஆசியுடன் மூதாதையரின் எலும்பு மற்றும் சாம்பலை கங்கை நீரில் நனைத்து புனிதப்படுத்தி சகர புத்திரகள் அனைவரும் செர்க்கம் செல்ல வழி வகுத்தான்.
இது பகீரதப் பிரயத்தினம் என வழங்கப்பட்டது. பகீரதனால் கொண்டு வரப்பட்ட கங்கை பாகீரதி எனப் பெயர் பெற்றது. ஆகாய கங்கையை செஞ்சடையில் தாங்கி அதனைப் பூமியில் விடுவித்த கோலம் கங்கா விசர்ச்சன மூர்த்தி வடிவம். சடை, கொன்றை, கூவிளமாலை, மதியம் சூடி கங்கையை ஏற்று அருள் குறிப்புடன் விளங்கும் வடிவம். காட்சி, மயிலாடுதுறை, திருக்கடவூர், திருப்பனந்தாள், திருமீயச்சூர் ஆகிய ஆலய தேவகோட்டத்தில். கேதாரம். வைத்திச்சுவரன் கோவில்.

#####

Read 3368 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 20:07
Login to post comments