Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 09:49

ஜ்வரபக்ன மூர்த்தி-சுரகண்டீசர்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பொருந்தவே வந்தேன் உளம்புகு போற்றி!
குருவடிவாகி ஆட்கொள் போற்றி!
திருவடி வைத்தே அருள்வாய் போற்றி!
வாடா வகைதான் வழங்குக போற்றி!
கோடயுதத்தால் வினைதீர் போற்றி!
உவட்டா உபதேசம் புகட்டுக போற்றி!


ஜ்வரபக்ன மூர்த்தி-சுரகண்டீசர்!

 

வாணாசுரன் மாபலிச் சக்கரவர்த்தியின் மகன் சிறந்த சிவபக்தன். சிவனை நோக்கித் தவமிருந்து அக்னிமதிலும், உலகம் முழுமையும் ஆட்சிபுரியும் ஆற்றலும், அழியாமையும், தங்களின் அடித் தாமரையில் அன்பும் வேண்டும் என்று வேண்டி பெற்றான். வரம் பெற்று மிகுந்த வலிமையுடையோனாய் இருந்தவன் மீண்டும் சிவனை நோக்கித்தவமிருந்து விநாயகர், முருகன், அன்னை அம்பிகை மூவருடன் சிவபெருமான் தன்னுடைய மாளிகையில் எழுந்தருளி வீற்றிருக்க வரம் பெற்றான். எல்லோரும் தன் இல்லத்தில் இருந்ததால் வலிமை பெற்று அனைவரையும் போரில் வென்று இனி போரிட யாருமில்லை என்ற நிலையில் சிவபெருமானைப் பார்த்து என்னுடன் தாங்கள் போர் புரிய வேண்டும் என வேண்டுகோள் விடுக்க சிவன் கண்ணன் துவாரகையிலிருந்து வந்து உன் தோள் தினவைத் தீர்ப்பான் என்றார். கண்ணன் என்னிடம் பலமுறை தோற்றவன் எனக்கூற இப்போது அவர் முன்னைவிட பலசாலியாக இருக்கின்றார் என்றார் சிவன்.
வாணாசூரனின் மகள் உசை கண்ணபிரானனின் மகன் அநிருத்தன் தன்னோடு கலந்ததாக கனவு கண்டு கருவுற்றாள். தன் மகளின் நிறைவான நிலையை அழிந்தது கண்ட வாணாசுரன் அநிருத்தனைச் சிறையிலிட கண்ணபிரான் அநிருத்தனை மீட்க படையுடன் வந்தார். முதல் வாயிலில் விநாயகரும் இரண்டாம் வாயிலில் முருகனும், மூன்றாம் வாயிலில் உமாதேவியரும் காட்சியளிக்க அனைவரையும் பணிந்து வணங்கிய கண்ணபிரான் அடுத்த வாயிலில் சிவனைக் கண்டு பணிந்து வணங்க சிவனின் குடும்பமே இங்கு இருக்கும்போது எப்படி போரிட்டு வெல்வது என்ற திகைப்பில் இருந்த கண்ணபிரானிடம் சிவன் எங்களை வெல்லாமல் வாணாசூரனை வெல்ல முடியாது என்றார். இருப்பினும் அவனிடம் நீ வருவதை முன்பே சொல்லியனுப்பிவிட்டேன். நீ விளையாட்டாய் என்னுடன் போர் புரிக என்றார் சிவபெருமான்.
சிவனுக்கும் திருமாலுக்கும் போர் தொடங்கியது. ஓர் நிலையில் திருமால் ஐயனே என் சக்தி எல்லாம் திரட்டி போர் செய்து விட்டேன் இனி என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றார். கண்ணன் வெற்றி பெற வேண்டும் என நினைத்த சிவபெருமான் வாணாசூரன் என்னை வணங்கிய இரு கரங்களைத் தவிர மற்றவைகளை வெட்டிச் சாய்திடுக என அறிவுரை கூறி போரிலிருந்து விலகினார். அவ்வாறே கண்ணன் வாணாசூரனிடம் போர் புரிந்து அவனது இரு கரங்களைத் தவிர மற்ற கரங்களை வெட்டி வீழ்த்தினார். வாணாசூரனின் ஆணவம் அடங்கியது. என்ன வாணாசுர உன் போர் வெறியின் தினவு நீங்கியதா எனச் சிவன் கேட்டார். தன் தவறைப் பொறுத்தருளுமாறு வேண்டினான் வாணாசூரன். அவனுடைய கைகள் மீண்டும் பெற அருள் புரிந்து அநிருத்தனை விடுவித்து அவனுக்கும் வாணாசுரனின் மகள் உசைக்கும் திருமணம் நட்த்தினார் பெருமான்.
சிவபெருமானுக்கும் கண்ணபிரானுக்கும் இடையில் போர் நட்ந்தபோது கண்ணன் சிவனுக்கெதிராக குளிர் சுரத்தை ஏவினார். அதை அழிக்க சிவன் வெம்மைச் சுரத்தை ஏவினார். வெம்மைச்சுர மூர்த்திக்கு 3 தலைகள், 3 கைகள், 9 விழிகள், 3 கால்கள் இருக்கும். இடது காலைத்தூக்கி நடன கோலத்தில் இருப்பார். மற்ற இரு கால்கள் நிலத்தில் இருக்கும். இடப்பக்கம் இரண்டு கைகள் ஒன்று வீசிய கை. மற்றொரு கையில் படைக்கலம். வலக்கை காக்கும் கை. 3 தலைகளுக்கு மேல் தீச்சுடர். கால்களுக்கு கீழே ஸ்ரீ சக்கரம்.
குளிர் சுரத்தை நீக்க வெம்மை சுரத்தை ஏவிய சுரம் நீக்கும் பரமன் வடிவம்-ஜ்வரபக்ன மூர்த்தி-சுரகண்டீசர்!. காட்சி: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி; சாட்டியாங்குடி (திருவாரூர் அருகில்), பவானி சங்கமேஸ்வரர். திருவில்லி புத்தூர் வைத்திய நாத சுவாமி.

#####

Read 4048 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 20:08
Login to post comments