Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 10:00

யோகதட்சினாமூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

காப்பாய் மூலப்பொருளே போற்றி!
பிறர்க்கெலாம் புகலிடம் ஆளாய் போற்றி!
புகல்தனக்கு இல்லா பொருளே போற்றி!
வித்தைகள் பிறக்கும் இடமே போற்றி!
விக்கின சமர்த்த விநாயகர் போற்றி!
தம்பி தனக்காக வனத்தணைந்தாய் போற்றி!


யோகதட்சினாமூர்த்தி!

 

சிவபெருமான் பிரம புத்திரர்கள் சனகன், சனந்தனன், சனாதனன், சனத்குமாரன் ஆகிய நான்கு முனிபுங்கவர்களுக்கும் மெய்ப் பொருளைச் சொல்லாமல் சொல்லி சின்முத்திரையால் விளக்க சிவஞானபோதத்தை உணர்ந்து இன்புற்று புலனடக்கமும், மன அமைதியும் பெற்று மேலும் சிவபோதம் வேண்டுமென்று பெருமானிடம் கேட்டு ஒரே நிலையில் மனம் நிற்பதற்குரிய யோகமார்க்கத்தை போதிக்க வேண்டினர்.
ஆன்மாவாகிய அரசன் வாழ்ந்து வரும் தூல உடல் ஐம்பூதங்களாலாகிய ஒரு தேரில் மனம் என்ற குதிரையால் கட்டப்பட்டுள்ளது. குதிரையின் கடிவாளத்தை அறியாமை எனும் சாரதியிடம் கொடுத்தால் அவன் அத்தேரையும் அதில் அமர்ந்திருக்கும் ஆன்மா என்ற அரசனையும் ஐம்புலன்களாகிய ஆழ்ந்த குழிகளில் தள்ளி துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். அறிவு எனும் நல்ல சாரதியிடம் கொடுத்தால் தேர் இனிமையாக மேடு பள்ளங்களில் துயர்ப்படாமலும் அமைதியாக செல்வதால் மன அரசன் இன்புறுவான்.
மனத்தை தீய வழிகளில் செலுத்தாமல் நல்ல வழியில் செலுத்தினால் ஆன்மா பேரின்பப் பெருவாழ்வில் திளைத்து மகிழும். அதற்கு யோக வழி சிறந்தது. சிறந்த பயிற்சியினால் மட்டுமே அது சாத்தியம். உலக நடப்புகளில் ஈடுபடத் துடிக்கும் மனத்தை வலிய இழுத்து தனக்கு விருப்பமுடைய ஒரு பொருளில் நிலையாக நிறுத்துவது யோகம். பயிற்சி முதிர்ச்சியடைந்தால் அது மேன்மையடையும். யோகம் இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை தியானம், சாமதி என எட்டு வகைப்படும். இவை எல்லாவற்றையும் பயில குருவின் ஆசியும் ஆலோசனையும் அவசியம் தேவை.
இயமம்- ஐம்பொறிகளையும், மனத்தையும் கொல்லாமை, உண்மை, கள்ளாமை, காமம், இன்மை, பொறுமை, உறுதியுடைமை, தயை, நேர்மை, அளவறிந்து உண்ணல், தூய்மை ஆகிய பத்தையும் கடைபிடித்து தீய வழிகளில் செல்லவிடாமல் நல்ல வழியில் செலுத்துவதாகும்.
நியமம்- இயமத்தால் ஏற்படும் நற்செயல்கலைச் செய்து கொண்டு தவம், மகிழ்ச்சி, இறை நம்பிக்கை, தானம், சிவபூசை, சித்தாந்த சிரவணம் (குருவிடமிருந்து சமய கருத்துக்களைக் கேட்டுச் சிந்திப்பது). வெட்கம், நற்புத்தி, ஜபம், விரதம் ஆகியவற்றிற்கு கட்டுப்படுதல் நியமம் எனப்படும். .
ஆசனம்- இறைவனைத் தியானிக்க உடல் அசையாமலும் வளையாமலும் இருக்க உடலைக் கட்டுப் படுத்திக் கொண்டு வீற்றிருப்பது 108 வகையாக இருந்தாலும் மிகச் சிறந்தது சுகாசனம், வீராசனம், பத்மாசனம், வீரபத்மாசனம், சிம்மாசனம், குக்குடாசனம், மயூராசனம், சுவஸ்திகம் ஆகிய 8 ஆசனங்கள்.
பிராணாயாமம்- உடலுக்கு இயன்ற ஆசனத்தை அமைத்துக் கொண்டு முறைப்படி சுவாசத்தின் இயற்கையான போக்குவரத்துகளை தடுத்து அடக்குவது பிராணாயாமம். அது ரேசக, பூரக, கும்பகம் எனப்படும்.
பிரத்தியாகாரம்- மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளின் செயல்களான சுவை, ஒளி, ஊறு. ஓசை. நாற்றம் ஆகியவற்றில் செல்லும் அறிவை அவ்வாறு செல்லவொட்டாமல் தடுத்து திருப்பி மனத்திடம் சேர்த்து முன்பு அடக்கப்பட்ட பிராணவாயுவையும் அசையாமல் இருக்கும்படி பயிற்சி செய்தல் பிரத்தியாகாரம்..
தாரணை- மனத்தின் எண்ணங்களை விலக்கி அதனை உடம்பில் சக்தி வடிவமாக விளங்குகின்ற ஏழு சக்கரங்களில் நிலைப் பெறச்செய்து அவற்றில் இறைவடிவத்தை தோன்றச் செய்து ஆனந்த மடைதல் தாரணை.
தியானம்- புலன்களை வெளியே செல்ல விடாமல் மனத்துடன் சேர்த்து அந்த மனத்தினால் இதய தாமரையில் வீற்றிருக்கும் இறைவடிவத்தை சிந்திப்பது தியானம்.
சமாதி- புறப்பொருள்களின் மேலுள்ள ஆசைகளை ஒடுக்கி இறைவன் மேல் அன்பைச் செலுத்தி சுழுமுனை நாடிவழி சென்று கும்பகம் செய்து சிவத்துடன் இரண்டறக் கலத்தலே சமாதி. இது கைகூடினால் பிறப்புமில்லை. இறப்புமில்லை.
இந்த உலகிலுள்ள இயங்கியற் பொருள், நிலையியற் பொருள் ஆகிய எல்லாவற்றிலும் எல்லா புவனங்களிலும் வியாபித்திருக்கும் இறைவனை உணர்ந்து யோக சாதனங்களைப் புரிந்து அவற்றால் அறிவானந்தமாக விளங்குவீர்கள் என அருள்புரிந்தார். சனகாதி முனிவர்களுக்கு புரியும்படியாக யோக முறையைக் கற்பிக்கத் தானே யோகநிலை காட்டிய திருவுருவமே யோகதட்சிணாமூர்த்தி தவநிலைக் கடவுள்.
முதல்வகையாக சுவஸ்திகாசன அமைப்பில் இரு காலகளும். முன்இடக்கை மடிமீது யோக அமைப்பில். முன் வலக்கை மார்புக்கருகில் யோக முத்திரையுடன். பின் வலக்கை உருத்திராக்கமாலையுடன், பின் இடக்கையில் தாமரையுடன் அவரது பார்வை மூக்கின் நுனியில் பதிந்திருக்கும். முனிவர்கள் சுற்றி அமர்ந்திருப்பர்.
இரண்டாம்வகை- இடக்காலை வளைத்து உத்குடிகாசனத்தில், உடலையும் இடக்காலையும் யோக பட்டம் மூடியிருக்கும். வலக்கால் கீழே தொங்கியிருக்கும். இடக்காலின் வளைந்த முழங்கால்மீது முன் இடக்கரத்தை நீட்டி அமர்ந்திருப்பர்.
மூன்றாம்வகை- இரு கால்களும் வளைந்து குறுக்கே செங்குத்தாக அதனைச் சுற்றி யோகப் பட்டம். இரு கைகளையும் நீட்டி முழங்கால்கள் மீது வைதிருப்பார். பின் வலக்கரத்தில் உத்திராக்க மாலையும், பின் இடக்கரத்தில் கமண்டலமும் இருக்கும். சடைகள் சடாமண்டலமாக பிறை, நாகத்துடன் அமைந்திருக்கும்.
காட்சி: தக்கோலம் (அரக்கோணம்-வட்டம்), யோகதட்சிணாமூர்த்தி (மயிலாடுதுறை), ஹேமாவதி (ஆந்திரா), எலிமியன் கோட்டூர், மயூரநாதசுவாமி (மயிலாடுதுறை), எறும்பூர் (சேத்தியா தோப்பு)

#####

Read 4872 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 20:13
Login to post comments