Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 18:11

வீணாதட்சிணாமூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தாதை வலத்தால் அருள் கைக் கனியோய் போற்றி!
அன்பர் தமக்கான நிலைப் பொருளே போற்றி!
ஐந்துகரத்தனை முகப்பெருமாள் போற்றி!
நம்பியாண்டார்க்கு அருள் நலமே போற்றி!
கற்பகமே என் கருத்தே போற்றி!
கடைகண் அருள் நீ தருவாய் போற்றி!


வீணாதட்சிணாமூர்த்தி!

 

சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும்போது யாழிசையில் வல்லவர்களாகிய தும்புரு, நாரதர், சுகர் ஆகியோர் திருக்கயிலைச் சென்று நந்தியம்பெருமானின் அனுமதி பெற்றுச் சிவனை வணங்கினர். சிவனின் பெருமைதனைக் கூறும் சாமவேதத்தை வீணையில் இயைந்து வாசிக்கவும், பாடவும், இன்னிசை ஞானத்தின் உண்மைகளை தங்களுக்குத் தெளிவுபெற விளக்கிட வேண்டினர்.
வில்லில் இழுத்துக் கட்டப்பட்ட நானினைச் சுண்டி கூட்டிக் குணத்தொனி எழுப்ப அதிலிருந்து தோன்றிய இசை இனிமையாக இருந்தது. பின் பெரிது சிறிதுமான விற்களை நானேற்றி மீட்ட பலவகையான இன்னோசைகள் உண்டாயின. படிப்படியாக வில்லை மாற்றம் செய்து யாழாக்கி இசை பொழிந்தான். யாழ் முதிர்ந்து வீணை வடிவம் பெற்றது. இசைக்குப் பிறப்பிடமாகிய யாழ் பேரியாழ் (21நரம்புகள்), மகரயாழ் (பத்தொன்பது நரம்புகள்), சகோடயாழ் (பதினான்கு நரம்புகள்), செங்கோட்டியாழ் (ஏழு நரம்புகள்) என நான்கு வகைப் படும். யாழின் உறுப்பாகிய 1.கோட்டுக்கு கருங்காலியும் கொன்றையும், 2.பத்தர்க்கு குமிழ், தணக்கு, முருக்கு ஆகியன சிறந்த மரங்கள். நீர்நிலை அருகில் இருக்கும் மரத்தில் மந்த சுரமும், மேட்டுப்பாங்கான பாலையில் இருந்த மரத்தில் மேல் ஸ்தாயில் ஏறிய சுரத்தையும், மருதம், குறிஞ்சி ஆகிய இடங்களில் உள்ள மரங்கள் நல்ல இனிய நாதத்தை வழங்கும். யாழ் நரம்புகள் தூய்மையுடையனவாக மயிர் தொகுதிகள் இல்லாதனவாக இருத்தலே நன்று.
தட்சிணாமூர்த்தியின் கரத்தில் உள்ளது வீணையாகும். நாரதரின் வீணை மகந்தி எனப்படும். கலைமகள் வீணை கச்சபீ எனப்படும். இவ்வீணைகளில் ஏழிசையை கூட்டி எழுப்புவதே பண்ணிசையாகும். எழிசை என்பது குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. இவற்றின் இசை சங்கு, குயில், யாணை, மயில், புரவி, அன்னம், காடை முதலியன எழுப்பும் ஓசைக்கு இனையானதாக இருக்கும். இவற்றிற்குரிய தெய்வங்கள் பிரமன், ஆதிரையான், பாரத்துவாசன், முருகன், அங்காரகன், பாற்கரன், காசிபன் ஆகியோர்.
இவ்வாறு தோன்றும் இசையை பண்ணில் அமைத்து யாழிலும் வீணையிலும் இசைத்தால் கல்லும் உருகும். எனவே ஏழிசை இறைவனோடு இசைவிப்பதற்கு உரியது. இறைவன் இசைமயமானவன். கயிலைநாதர் உணர்த்தியருளிய பண்ணிசைகளின் இலக்கணத்தின்படி நாரதர், தும்புரு, சுகர் முதலான முனிவர்கள் வீணாகானத்தினால் சாமவேதம் பாடி மகிழ்ந்தனர்.
வீணையை வைத்துக் கொள்வதற்கேற்ப வீணையின் தலை பகுதியை இடது கையினால் பற்றி, இடக்கரத்தை உயர்த்தி கீழ்ப் பகுதியை வலது கையில் பற்றி வலக்கரத்தை தாழ்த்தி வைத்திருப்பார். வீணையின் ஒலி எழுப்பும் பகுதியை வலது தொடையின் மீது வைத்து பின் வலக்கரம் வீணையை மீட்ட, முகம் சந்தர்ஷ்ண முத்திரையுடைய கரத்தை நோக்கியிருக்க பல்வேறு விலங்குகள், பிராணிகள், சித்தர், வித்தியாதரர், கின்னரர், பூதங்கள் பலரும் சூழ்ந்திருக்க ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பர். இடக்கால் உக்குடிகாசன அமைப்பும் வலக்கால் தொங்கியும் அதனடியில் முயலகன் படுத்திருக்க இருப்பர். வீணாதட்சிணாமூர்த்தி!
வீணையேந்திய தென்முகக் கடவுள். காட்சி: திருமறைக்காடு, நாகலாபுரம், மேலப் பெரும்பள்ளம், ஓரத்தநாடு, காஞ்சி கயிலாசநாதர், நஞ்சன்கூடு (கர்நாடகம்) சீரங்கப் பட்டிணம் (கர்நாடகா) ஆகிய கோவில்கள்.

#####

Read 5183 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 20:14
Login to post comments