Print this page
சனிக்கிழமை, 11 November 2017 20:39

பஞ்சமுக தரிசனம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

பஞ்சமுக தரிசனம்!
‘திகட சக்கரச் செம்முகம் ஐந்துள்ளான்’ என்பது காஞ்சியில் பிறந்த கச்சியப்ப சிவாசாரியரின் கந்தபுரணத்தின் காப்புச் செய்யுளின் முதல் அடியாகும். திகழ், தசக்கரம் என்ற சொற்களின் இனைப்பே திகடசக்கரம் என்றானது. அதாவது ஒளி பொருந்திய பத்துக் கரங்களுடன் செந்நிற முகங்கள் ஐந்தும் உள்ளவன் என்று சிவனைக் குறிப்பிடுகின்றார். அந்த முகங்களே பஞ்சமுகம்.

பஞ்சமுகம்- ஸ்ரீ ருத்ரமஹன்யாச மந்திரத்தில் சத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம் என்ற வேத மந்திரங்களில் ஈசனின் பஞ்ச முகங்களே குறிபிடப்பட்டுள்ளதால் அவற்றை தரிச்சிப்பதும் பெரும் பலனைத் தரும். அன்றில் இந்த முகங்களுக்குரிய சிவனின் உருவங்களை தரிசித்து வழிபடுவதும் சிறப்பாகும்.

சிவ அடியவர் ஒவ்வொருவருக்கும் சிவனின் பஞ்சமூர்த்த தரிசனம் கிடைக்க வேண்டும். பஞ்சமூர்த்தம் என்பது சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், அகோரரூபம், ஈசானம் ஆகும்.

பிரம்மன் ஒவ்வொரு கற்ப யுகத்திலும் சிவனை நினைந்து தவமிருந்து ஒவ்வொரு முகமாக தரிசனம் கண்டு இன்புற்றார்.

சுவேதலோகித கற்பத்தில் பிரம்மன் தவமிருக்க, சிவன் காலை இளம் சூரியனைப் போன்ற பேரேழில் பொங்கும் பச்சிளம் பாலகனாய் காட்சி தந்து அருளினார். இந்த தோற்றப் பொலிவே சத்யோஜாதம் எனப்படும். சத்யோஜாதம் தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை இலிங்கோத்பவர், சுகாசனர்-நல்லிருக்கை நாதர், ஹரிஹரர்- கேசவார்த்தமூர்த்தி- மாலொருபாகர், அர்த்தநாரீஸ்வரர்- உமைபங்கன், உமாமகேசர்- உமேசர், சத்யோஜாதம்- பிருதிவித் தத்துவம் அதிலிருந்து தோன்றிய நந்தினி என்ற பெயருள்ள கபிலவர்ணமுள்ள கோவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- விபூதி

ரத கற்பத்தில் பிரம்மன் தவமிருக்க, சிவன் மானும் மழுவுடன் காட்சி அருள். இந்த வாமதேவ திருத் தோற்றத்தை தரிசித்து வழிபடுவோர் பிறப்பு இறப்பு இன்றி இறைவனின் பாத கமலங்களை அடையும் பேரின்ப வாழ்வுதனை அடைவர். வாமதேவ தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை கங்காளர், சக்ரதானர், கஜாந்திகர்-கஜாந்திக மூர்த்தி, சண்டேசானுக்ரஹர், ஏகபாதர்- ஏகபாத மூர்த்தி, வாமதேவம்- நீர்த் தத்துவம் அதிலிருந்து தோன்றிய பத்ரை என்ற பெயருள்ள கருப்பு நிறமுள்ள பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- பஸிதம்

பீதகற்பத்தில் ஈசனைப் பணிந்து தியானம் செய்ய, சிவன் கொன்றைப்பூ அணிந்த திருச்சடையில் இளஞ்சந்திரனை தரித்தவராகக் காட்சி- இதுவே தத்புருஷ தோற்றம் ஆகும். இந்த தோற்றத்தில் காயத்திரி தேவியை சிருஷ்டித்து நான்முகனுக்கு அளித்தார். இந்த தத்புருஷ தோற்றத்தையோ, காயத்திரி தேவியையோ சிவமந்திரம் சொல்லி வழிபட்டால் பிறவிக் கடலை கடந்து சிவபதவி கைகூடும் என்றார். தத்புருஷ தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை பிட்சாடனர்-பலிதிரி /பலிகொள் செல்வர், காமாந்தகர்-காமதகனமூர்த்தி, காலசம்ஹாரர்-காலனைக் காய்ந்த பொம்மான்-காலாரி, சலந்தராரி-சலந்திரவத மூர்த்தி, திரிபுராந்தகர்.தத்புருஷம்- வாயுத் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுசீலா என்ற பெயருள்ள வெளுப்பு நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- க்ஷாரம்

நீலகற்பத்தில் கடும் தவமிருந்து பிரம்மன், தீச்சுடரும், வாளும் ஏந்திய திருக்கரத்துடன் கருமை நிற மேனியுடன் காட்சி பெற்றார். இது அகோர தோற்றம். பஞ்சமாபாதங்கள் புரிந்தோரும் தங்கள் தவறை உணர்ந்து சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை மீண்டும் மீண்டும் ஜபித்து வந்தால் அவர்களைப் பற்றிய தோஷம் விலகும். அகோர தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை கஜசம்ஹாரர்-கஜயுக்தமூர்த்தி, வீரபத்திரர், தட்சினாமூர்த்தி-ஆலமர்செல்வர், நீலகண்டர்-நீலகண்ட மூர்த்தி, கிராதகர்-கிராத மூர்த்தி.அகோரம்- தேஜஸ் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுரபி என்ற பெயருள்ள சிவப்பு நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- பஸ்மா

விசுவரூப கற்பத்தில் தவமிருந்து கங்கையும் திங்களும் தாங்கிய திரிசடை, கோரப்பற்கள், நெற்றிக்கண்ணும் கொண்டு இருபக்கமும் இரு மாதர்களுடன் காட்சி தந்து அருள். இது ஈசான தோற்றம். சிந்தையில் இறைவனை வைத்து தவம் புரிந்து பிறவா வரம் அடையலாம். உச்சிமுக ஈசான தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை சோமாஸ்கந்தர், நடராஜர், இடபாரூடர்-ரிஷபாரூடர்-விருஷபவாகனன், கல்யாணசுந்தரர்-மணவழகர், சந்திரசேகரர்-பிறை சூடிய பொம்மன்.ஈசானம்- ஆகாசத் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுமனா என்ற பெயருள்ள பல நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- ரக்ஷா

&&&&&

Read 8690 times Last modified on வியாழக்கிழமை, 03 August 2023 10:18
Login to post comments