Print this page
சனிக்கிழமை, 11 November 2017 20:47

சிவராத்திரி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!

சிவராத்திரி!

புனித நீராடி பக்தி சிரத்தையுடன் உபவாசமிருந்து மனதில் இறைவனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டு சிவராத்திரி கண்விழித்தல் என்பது, நான் அழிவற்ற ஆன்மா, பரமாத்மாவின் குழந்தை, எந்த ஒரு பாவமும் செய்யாமல் புண்ணிய செயல்களையே செய்வேன் என்ற உறுதியான உணர்வுகளோடு இருக்கும் உணர்விலிருத்தல் நிகழ்வாகும். மனதிற்கு தீய வீணான விகாரமான எண்ணங்களை அளிக்காமல் இருக்கவே விரதம் இருப்பதாகும். எக்கணமும் இறைவன் நினைவில் அவர் துணையிலேயே இருப்பதே உபவாசம் ஆகும்.
சிவராத்திரி சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனை அர்ச்சிக்கும் ராத்திரி ஆகும். சைவத்தின் பெருவிழா- சிவபெருமானுக்காக கொண்டாடப்படுவது சிவராத்திரி.
சிவராத்திரி- நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி. மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, முக்கோடி சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, யோக சிவராத்திரி எனப்படும்
நித்ய சிவராத்திரி-தினமும் ஈசனைப் பணிந்து மாலை நேரத்தில் வழிபடுதல்.
பட்சசிவராத்திரி-அமாவாசையும் பௌர்ணமியும் மாறிமாறி வரும்போது பிரதோஷமும் வரும் அப்போது நடத்தப்படும் மாலைநேர அபிஷேக ஆராதனைகள் பட்சசிவராத்திரி.
மாத சிவராத்திரி-மாதந்தோறும் சுக்கிலபட்ச தேய்பிறை சதுர்த்தசி/ கிருஷ்ணபட்ச பிரதோஷம் முடிந்த உடன் அன்றைய இரவு தேய்பிறை சதுர்தசி-மாத சிவராத்திரி. மாத சிவராத்திரிகளில் வழிபட்ட தெய்வம்.
1.சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி-உமாதேவி,
2.வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி-சூரியன்,
3.ஆனி மாத வளர்பிறை சதுர்த்தசி-தன்னைத்தானே,
4.ஆடி மாத தேய்பிறை பஞ்சமி-முருகன்,
5.ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி-சந்திரன்,
6.புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி-ஆதிசேக்ஷன்,
7.ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி-இந்திரன்,
8.கார்த்திகை மாத வளர்பிறை சப்தமி+தேய்பிறை அஷ்டமி-சரஸ்வதி,
9.மார்கழி வளர்பிறை+தேய்பிறை சதுர்தசிகள்-லட்சுமி,
10.தைமாத வளர்பிறை த்ரிதியை-நந்திதேவர்,
11.மாசிமாத தேய்பிறை சதுர்த்தசி-தேவர்கள்,
12.பங்குனி மாத வளர்பிறை த்ரிதியை-குபேரன்
மகாசிவராத்திரி: மாசிமாத கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி திதியே மகா சிவராத்திரி விரத தினம். இந்நாளில் இரவு 1130 முதல் 0100 மணிவரை உள்ள காலம் லிங்கோத்பவ காலம். இந்த நேரத்தில்தான் சிவன் ஜோதிலிங்கமாக ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் தோன்றி முழுமுதற் கடவுள் என உணர்த்தினார். பன்னிருகோடி லிங்க தரிசனம் தரும் பலனை சிவராத்திரியன்று ஒரு லிங்கத்தை பூஜிப்பதால் பெறலாம். நான்கு யுகத்திலும் உலகம் தோன்றிய தினம். ஜோதிர்லிங்கத்தல வழிபாடு கோடி புண்ணியம்.
முக்கோடி சிவராத்திரி- மாசிமாத தேய்பிறை சதுர்தசி செவ்வாய் அல்லது ஞாயிறு அன்று அமைந்தால் அது முக்கோடி சிவராத்திரி என்பர்.
உத்தம சிவராத்திரி-மார்கழி மாத சதுர்தசி திருவாதிரை நாளில் அமைந்தால் அது உத்தம சதுர்தசி சிவராத்திரி ஆகும்.
யோக சிவராத்திரி- அமாவாசையும், சோமவாரமும் கூடிய தினம்- திங்கட்கிழமையில் தேய்பிறை சதுர்தசி அமைந்தால் அல்லது அன்று 60 நாழிகை இருந்தால் அது யோக சிவராத்திரி எனப்படும். திங்கள் சூரிய அஸ்தமனம் முதல் செவ்வாய் காலை சூரிய உதயம் வரை வரும் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி-3கோடி விரதபலன்.
சிவராத்திரி நாளில் சிவன் நாமங்கள்
1.பவாயநம, 2.ருத்ராயநம, 3.உக்ராயநம, 4.பசுபதயேநம, 5.பீமாயநம, 6.மகாதேவாயநம, 7.சர்வாயநம, 8.சிவாயநம, 9.ஈசனாயநம, 10.சம்புவேநம, 11.சதாசிவாயநம.
சிவராத்திரியன்று சிறப்பு
1வதுஜாமம்- படைக்கும் தொழில் புரியும் பிரம்மன் செய்வதாக ஐதீகம். அம்பிகை சிவபூஜை செய்த அடையாளமாக பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனம், வில்வம், தாமரைப்பூ அலங்காரம், அர்ச்சனை, பச்சைப்பயறு பொங்கல்/பால்சாதம் நிவேதனம், மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தல். நெய் தீபம், ரிக்வேத பாராயாணம். சந்தன தூபம். பலன் – முன்வினை மற்ரும் பிறவிப் பிணிகளில் இருந்து விடுபட்டு நற்பலன்கள் அடையலாம்.
2வதுஜாமம்-காக்கும் தெய்வம் விஷ்ணு செய்வதாக ஐதீகம். முருகன் வழிபட்ட காலம்-சர்க்கரை, பால், தயிர், நெய்கலந்த ரஸபஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்து சார்த்துதல், துளசி அலங்காரம். தாமரைப்பூ அர்ச்சனை, நிவேதனமாக பாயாசம், வெண்பட்டு ஆடை அணிவித்தல். நல்லெண்ணெய் தீபம். யஜூர்வேத பாராயணம். குங்கிலிய தூபம். பலன்–தனதான்ய சம்பத்துக்கள் சேர்ந்து லட்சுமி கடாட்சம் நிலவும். அன்ன பஞ்சம் ஏற்படாது.
3வதுஜாமம்- அம்பிகை இறைவனை பூஜிப்பதாக ஐதீகம். கணபதி பூஜித்த காலம்- தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகைப்பூ அலங்காரம், வில்வ/அறுகு அர்ச்சனை, எள் சாதம் நிவேதனம், சிவப்பு வஸ்திரம். இலுப்ப எண்ணெய் தீபம். சாமவேத பாராயணம். சாம்பிராணி தூபம். இது லிங்கோத்பவகாலம் எனப்படும் சிறப்பு பெற்றது. இந்த காலத்தில்தான் சிவபெருமானின் திருமுடி, திருவடி காணப் பிரம்மனும் விஷ்ணுவும் முயற்சித்தது. பலன்– எந்தவித தீய சக்தியும் அண்டாமல் இருப்பதோடு சிவசக்தி அருள் கடாட்சம் கிட்டும்.
4வதுஜாமம்- முப்பத்தி முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும் மற்றுமுள்ள அனைத்து ஜீவராசிகளும் பூஜிப்பதாக ஐதீகம். மகாவிஷ்னு சிவபூஜை காலம். கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியாவட்டை மலர், அல்லி, நீலோற்பல மலர் அலங்காரம், அர்ச்சனை, நிவேதனமாக சுத்தமான அன்னம், தீப ஆராதனை அதர்வணவேத பாராயாணம். அகில்புகை தூபம். பலன் - மிகச் சிறந்த பலன்களையும் அருளையும் தரவல்லது.
நாள் முழுவதும் உண்ணாமலிருந்து வில்வ இலைகொண்டு அர்ச்சனை செய்து சிவ தோத்திரங்களை சொல்வது என்பது தான தர்மங்கள் செய்வது, யாத்திரை செல்வது, நோன்புகள் மேற்கொள்வது, விரதங்கள் இருப்பது ஆகியவற்றால் ஏற்படும் நற்பலன்கள், புண்ணியங்களை விடவும் மேலான புண்ணியங்களும் நற்பலன்களும் கிட்டும் என்கின்றது வேதங்கள்.
1. ஒவ்வொரு கல்பத்திலும் பிரளயத்தின்போது உயிர்கள் அனைத்தையும் தன் வயப்படுத்திக் (ஒடுங்குதல்) கொள்ளும் சிவன் யோக சமாதியில் ஆழ்ந்துவிட அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு சக்தி தியானம் மற்றும் பூஜை செய்து வழிபட தன்னுள் ஒடுங்கியிருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்த வேளை-சிவராத்திரி.
2. பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டு தியாகராஜராக தோன்றிய காலம்-சிவராத்திரி.
3. பார்வதி கண்ணை மூடியதால் ஒளி இழந்த சூரியன், சந்திரன், அக்னி மூவரும் ஒளி பெற்ற இரவு-சிவராத்திரி.
4. வில்வ இலைகளை லிங்கத்தின் மேல் உதிர்த்ததால் குரங்கு-முசுகுந்த சக்ரவர்த்தியாக பிறக்க அருள் பாலித்த இரவு-சிவராத்திரி.
5. ஜோதிவடிவாக லிங்கோத்பவமூர்த்தியாக ஈசன் தோன்றியநாள்.
6. பரமனின் பாதி இடத்தை பார்வதி பிடித்தநாள்.
7. உமா மகேசனிடம் ஆகம உபதேசம் பெற்றநாள்.
8. வேடன் தனது கண்ணை லிங்கத்திற்கு அப்பி கண்ணப்பநாயனார் ஆனநாள்.
9. பகீரதனால் கங்கை பூமிக்கு வந்தநாள்.
10. மார்க்கண்டேயனுக்காக ஈசன் எமனை உதைத்தது மார்கண்டேயன் என்றும் 16 என வரம் பெற்றநாள்.
11. கிருஷ்னர் நரகாசுரனை வதம் செய்த நாள்.
12. கிரகங்கள் இயங்கத் தொடங்கிய நாள். குருதீட்சை பெற்றிட சிறந்த நாள்.
13. அர்ஜுனன் தவம் செய்து பாசுபதம் பெற்ற நாள்.
சிவராத்திரியன்று சிறப்பு தரிசன தலங்கள்
1.ஓமாம்புலியூர், 2.காஞ்சிபுரம், 3.காளஹஸ்தி, 4.கோகர்ணம், 5.திருக்கடவூர், 6.திருக்கழுக்குன்றம், 7.திருவண்ணாமலை, 8.திருவைகாவூர், 9.ஸ்ரீசைலம், 10.தேவிகாபுரம்
மகாசிவராத்திரி விரதம்
விரதங்களில் உயர்ந்தது மகாசிவராத்திரி விரதம். விரதம் இருப்போர் சிவராத்திரிக்கு முதல் ஒருபொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசம் இருந்து காலை ஸ்நானம் செய்து, சிவசிந்தனையுடன் கண் விழித்திருந்து இரவு நான்கு கால வழிபாடும் செய்தல் வேண்டும். சிவபுராணம் படித்தல், கேட்டல், சொல்லுதல், துதிகளைச் சொல்லுதல், பஞ்சாட்சரம் ஓதுதல், எழுதுதல் சிறப்பு. அடுத்த நாள் காலை நீராடி தரிசனம் செய்து அடியவர்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்திடல் வேண்டும்.

&&&&&

Read 8040 times Last modified on வியாழக்கிழமை, 01 February 2018 20:57
Login to post comments