Print this page
வெள்ளிக்கிழமை, 10 August 2018 09:18

வணங்கும்முறை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அற்புதக் கீர்த்தி வேண்டினேன்! ஆனந்த வாழ்க்கை வேண்டினேன்!
நற்பொருள் குவிதல் வேண்டினேன்! நலமெலாம்பெருக வேண்டினேன்!
கற்பகமூர்த்தி தெய்வக் களஞ்சியத் திருக்கை சென்று பொற்பதம்
பணிந்து பார்த்தேன் பொய்யில்லை! கண்ட உண்மையது!

#####

வணங்கும்முறை!

கோவிலுக்கு அருகில் சென்றதும் கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும். கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. உள்ளே சென்றதும் முதலில் துவஜஸ்தம்பம் எனும் கொடிமரத்தின் முன்பு எட்டு அங்கங்களும் தரையில் படும்படி விழுந்து வணங்கி எழவும். நந்தி பகவானின் வாலைப் பக்தியுடன் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளவும். அங்கிருந்தபடியே நந்தியின் கொம்புகளிடையே மூலத்தானத்தில் உள்ள லிங்கப் பெருமானைப் பார்த்து வணங்கவும். கோவிலின் உள்ளே இடதுபுறம் இருக்கும் விநாயகரை வணங்கி கருவரைக்குச் செல்லவும். வழியில் தீபமேற்றும் இடத்தில் தீபம் ஏற்றி அங்கிருந்தபடியே அதை இறைவனுக்கு காட்டி பின் அதற்குரிய இடத்தில் வைக்கவும். ஆண்கள் மேலாடை இல்லாமல் தரிசனம் செய்வது சிறப்பாகும். கருவறையில் இடப்பக்கம் ஆண்களும் வலது புறம் பெண்களும் தரிசனம் செய்தல் வேண்டும்.

இறைவனுக்கு நெய்வேத்தியம் என்பது சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குச் சொந்தமானதை அவருக்குத் தந்து அதையே நாம் அவரின் அருளாசியுடன் பிரசாதமாக பெற்று புனித உணர்வுடன் உட்கொள்கிறோம் என்பதாகும். நீங்கள் கொண்டுவந்த பழங்கள், பூக்கள் மற்றும் அர்ச்சனைக்குரிய பொருள்களை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு அமைதியாக இறைவனின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டிருங்கள். அர்ச்சகர் மந்திரங்கள் சொல்லி மணி ஒலி எழுப்பும்போது கண்களை மூடாமல் இறைவனைப் பார்த்து மனதாற வணங்குங்கள். ஆராதனை செய்த தீபத்தை ஏற்று திருநீறு பெற்று நமசிவாயா எனச்சொல்லி நெற்றியில் மூன்று விரலால் இட்டுக் கொள்ளவும். சில கோவில்களில் ஒரே இடத்தில் இருந்து ஐயனோடு அம்மையும் தரிசனம் செய்யும் வண்ணம் இருக்கும்.

அம்மனை தரிசிக்க செல்லும் வழியில் தீபமேற்றும் இடத்தில் தீபம் ஏற்றி அங்கிருந்தபடியே அதை இறைவிக்கு காட்டி பின் அதற்குரிய இடத்தில் வைக்கவும். அங்கு அப்படியே மனமுருகி அம்மையிடம் வேண்டிக் கொள்ளுங்கள். சில கோவில்களில் அம்மன் சன்னதி தனித்து இருக்கும். அம்மன் சன்னதியின் சுற்றில் சண்டிகேஸ்வரி இருப்பார். அவரை வணங்கவும். பெரிய கோவில்களில் தலமரம் இருக்கும். அங்கு வணங்கியபின் அடுத்து ஸ்ரீசுப்ரமண்ய சுவாமியை வணங்கவும். பின் பரிவார தேவதைகளை வணங்கவும். துர்க்கை சண்டிகேசுவரரை வணங்கி நவகிரகங்களை வல இடமாக ஒன்று அல்லது ஒன்பது சுற்றுகள் சுறிவந்து வணங்கவும். பிறகு நடராசர், சனி பகவான் தனி சன்னதி, காலபைரவர், சந்திரன் சூரியன் சன்னதிகளில் வணங்கி கோவிலை உள்சுற்றாக சுற்றிவந்து கொடிமரத்தின் முன்னால் சாஷ்டாங்கமாக வீழ்ந்து இருகை கூப்பி வணங்கி எழுந்திருந்து மண்டபத்தில் இறை சிந்தனையுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்து பின் புறப்படுங்கள்.

#####

Read 18026 times Last modified on வெள்ளிக்கிழமை, 10 August 2018 09:25
Login to post comments