Print this page
வியாழக்கிழமை, 07 September 2017 19:27

நடராஜர்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மயூர விநாயகா போற்றி!
முக்கண் விநாயகா போற்றி!
முக்குருணி விநாயகா போற்றி!
முச்சந்தி விநாயகா போற்றி!

#####


நடராஜர்!

 

நடராஜர்

அம்பலத்தில் ஆடும் நடராஜரின் இயக்கத்தினால் உலகம் இயங்குகின்றது. ஒவ்வொரு அசைவும் அண்டத்தில் வாழும் உயிர்களுக்கு அருள் செய்யவே! அந்த ஆட்டத்தை நிறுத்தினால் உலக இயக்கம் நின்று விடும் என்ற தத்துவத்தை விளக்க முன்னோர்கள் ‘உலகு அம்பல விதம்’ எனக் கூறியது மருவி ‘உலகம் பலவிதம் என்றானது.

உலகை இயக்கும் அந்த இறைவனை வழிபடும் முறை மூன்று வகைப்படும். புறத்தேயிருந்து வழிபடுவது அபரம் எனப்படும். தெய்வம் வேறு தான் வேறு என நினையாமல் வழிபடுவது பரம் எனப்படும். அகத்திலிருந்தும் புறத்திலிருந்தும் வழிபடுவது பராபரம் எனப்படும்.

இந்த மெய்ப்பொருள் அறிவாகிய ஞானம் அபரஞானம் என்றும் பரஞானம் என்றும் இருவகைப்படும். அபரம்- ஆரம்ப படிநிலை. பரம்- முடிவான உயர்நிலை. மெய்ப்பொருளை ஒருவன் உண்மையாக உணர்ந்து அதனைக் கண்டு அதன் தன்மையில் தான் அழுந்தி நிற்றலேயாகும். அதாவது மெய்ப்பொருளை அனுபவமாக உணர்ந்து அதன் இன்பத்தில் திளைத்திருத்தலே ‘பரஞானம்’. அனுபவ ஞானம் எளிதில் எவருக்கும் முதலிலேயே வந்துவிடாது என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும்.

அபரஞானம், பரஞானம் இரண்டும் அஞ்ஞானத்தை போக்குபவையாயினும், அபரஞானம் அஞ்ஞானத்தைப் போக்குதல் என்பது ஒரு விளக்கு இருளைப் போக்குவது போன்றதாகும். அதேசமயம் பரஞானம் அஞ்ஞானத்தைப் போக்குவது என்பது சூரியன் இருளைப் போக்குவதற்கு ஒப்பானதாகும். எனவே அபர ஞானம் அஞ்ஞானத்தை முழுவதும் நீக்காமல் இருக்க, பரஞானமே அஞ்ஞானத்தை முற்றிலும் நீக்க வல்லது.

அந்த இறைவனை ஈசர், ஈஸ்வரன், ஈசானன் என்று சொல்வதுண்டு. ஈசர்- என்றால் ஆளுகின்றவர், ஈஸ்வரன்- என்றால் எல்லாம் உடையவன், ஈசானன்- என்றால் உலகங்களை உண்டாக்கி ஆளுபவன் என அர்த்தமாகும்.

ஈ என்றால் உச்சி என்பதாகும். அதாவது எல்லாவற்றிற்கும் உயரத்தில் இருப்பவன் மேலானவன். நம்மை வாழ்க்கையின் உயரத்திற்கு அழைத்துச் செல்பவன்.

சித்தர்களின் இஷ்ட தெய்வம் சிவனே! லிங்க வழிபாடு நடந்தாலும் ரூபமாக நோக்கின் நடராஜர் தோற்றமே புலனாகும். இந்த தோற்றம் உலகின் இயக்கத்தினை உணர்த்துவதாகும். நடராஜரின் ஒவ்வொரு நெளிவு சுளிவுக்குப் பின்னால் ஒரு பெரும் பொருள் இருக்கின்றது. அவரின் நாட்டியத்தின் முத்திரை ஒவ்வொன்றும் பூவுலகில் பலவித மாற்றங்களை குறிக்கும். அதில் வளர்ச்சியும் உண்டு. வீழ்ச்சியும் உண்டு.

அமைதி, தவம், யோகம் என்று சதா காலமும் சிவனே என்றிருக்கும் ஈசன் பிரமாதமாக ஆடுவார் என்பதையும் முதன் முதலில் உணர்ந்தவர் திருமால். அந்த ஆடலை தன் அகத்திலே கண்டு ஆனந்தித்தபோது அதை உணர்ந்த ஆதிசேஷன் பதஞ்சலியாகப் பிறந்து திருநடனத்தை தில்லையில் கண்டார். அடுத்தடுத்து தேவர்களும் முனிவர்களும் மகேசனை வேண்டித் தவமிருந்து அந்த நடனத்தை தரிசித்து மகிழ்ந்தனர்.

நடராஜர் உருவம் இருக்குமிடத்தில் இயகக்கதி சுறுசுறுப்பாக இருக்கும். சுறுசுறுப்பும் விறு விறுப்பும் இல்லாத மந்தகதியில் இயங்கும் ஓர் வீட்டினுள் நடராஜர் சிலாரூபம் நுழைந்தால் அந்த இல்லத்தில் ஒர் விசைப்பாடு தோன்றி பல் வினைகளாக செயலாக்கம் தொடங்கும்.

சூரியனின் தென்திசை நோக்கிய பயணத்தை ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான காலத்தை தட்சிணாயணக் காலம் என்றும், வடதிசை நோக்கிய பயணமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலான காலத்தை உத்ராயணக் காலமென்றும், என்பர். இந்த இரு காலங்களும் சேர்ந்த சித்திரை முதல் பங்குனி வரையிலான ஒரு வருட காலமே தேவர்களுக்கு ஒரு நாள் என்பதால் தட்சிணாயணத்தின் இறுதி மாதமான மார்கழி அவர்களின் அன்றைய அதிகாலைப்பொழுதாகவும், உத்ராயணத்தின் இறுதி மாதமான ஆனி தேவர்களின் பகல் பொழுதின் இறுதிப் பகுதியாகும். தேவர்களின் ஒருதினப்பொழுதின் சந்தியாகாலமாக விளங்கும் ஆனிமாதமும் மார்கழியும் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதங்கள்.

மார்கழி அதிகாலைப்பொழுதான தேவர்களின் சந்தியா காலத்தில்தான் விஷ்ணுவிற்கும், சிவனுக்கும் பள்ளி எழுச்சி நடைபெறும். அதையே நாம் திருப்பாவை, திருவெம்பாவை என பாடித் துதிக்கின்றோம்.
தமிழ் மாதங்களில் ஆனி மாதம் நீண்ட பகல் பொழுதைக் கொண்ட மாதம். சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆனிமாதத்தை மிதுனமாதம் / ஜேஷ்டமாதம் என்பர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய எனப் பொருள். பஞ்சாங்கத்தை நிர்ணயிக்கும் இருகோள்களான சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் அதாவது சந்திரன் கன்னி ராசியிலும் சஞ்சரிக்கும் நேரமே

சிவபெருமானின் 64 திருவுருவங்களில் அற்புதமான ஆடலரசனுக்கு நடைபெறும் திருமஞ்சனமமே ஆனித்திருமஞ்சனத் திருநாளாகும். கல்விக்கு அதிபதியாகிய புதன் கிரகத்தின் ஆளுமை பெற்ற ராசிகளான மிதுனம், கன்னி இரண்டும் உள்ள ஆனிமாதத்தில் நடக்கும் ஆனித்திருமஞ்சனத்தைக் காணும் பேறுபெற்றவர்கள் இறையருளால் அறிவில் சிறந்து விளங்குவர்.

அதேபோன்று மார்கழியில் திருவாதிரை விழா நடைபெறும். பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனியும் நடரஜர் நடனம் ஆடும்போது அவரது இடது பாத தரிசனத்தை மார்கழி திருவாதிரைத் திருநாளில் சிதம்பரத்திலும், வலது பாத தரிசனத்தை பங்குனி உத்திரத்தில் திருவாரூரிலும் தரிசித்துள்ளனர்

நடராஜருக்கு சிதம்பரத்தில் வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம். 1.மாசிமாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி காலசந்தியில். 2.சித்திரை- திருவோண நடசத்திரம்- உச்சிக்காலம், 3.ஆனி- உத்திரம்- பிரதோஷகாலம்- ஆனித்திருமஞ்ஞனம், 4.ஆவணி மாதம் - சதுர்த்தசி திதி- சாயரட்சைகாலபூஜை, 5.புரட்டாசி- வளர்பிறை சதுர்தசி-அர்த்த ஜாமம், 6.மார்கழி- திருவாதிரை நட்சத்திரம் நள்ளிரவு,

நூற்றியெட்டு வகையான ஆடல்களை இறைவன் எம்பெருமான் ஆடியிருந்தாலும் மிகவும் போற்றப்படுவது எட்டு வகைத் தாண்டவ பேதங்கள், கர்ணங்கள் எனப்படும். தனது ஆடலின் மூலமாக படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களைச் செய்கின்றார் எம்பிரான்.

ஏழு ஸ்வரங்களை ஒப்ப சிவ தாண்டவ தலங்கள்

1.-படைத்தல்-காளிகாதாண்டவம்-திருநெல்வேலி (258) அன்னை உமை காளியாகி கோபம் கொண்டபோது அவரது கோபத்தைத் தணித்து அவரும் தானும் ஒன்றே என்பதை உலகிற்கு உணர்த்த ஆடிய தாண்டவம்- காளிகா தாண்டவம். வலக்கரங்கலில் உடுக்கை, மணி, அக்கினியும், இடக்கையில் அபய ஹஸ்தமும், கஜஹஸ்தமும் காட்டி எட்டு திருக்கரங்களுடன் காட்சி. இந்தவகை நடனம் திருநெல்வேலி தாமிரசபையிலும், திருவாலாங்காட்டிலும் காட்சி.
இந்த நடனக்கோல இறைவனைத் தரிசித்தால் கர்மவினைகள் நீங்கி வாழ்வில் இன்பம் மலரும், கடன் தொல்லைகள், தழ்வு மனப்பான்மை ஆகியன நீங்கும்

2.ரி-காத்தல்-கௌரிதாண்டவம்-திருப்புத்தூர் (250), தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்க பிட்சாடன மூர்த்தியாய் அந்த சிவனும், மோகினியாக வந்த பெருமாளும் ஆடிய நடனம். தன்னுடன் எப்போதும் இனைந்து ஆடும் சிவன் தனியாக ஆடிய நடனத்தைக்கான வேண்ட சிவன் கையில் பாம்புடன் ஆடியது கௌரி தாண்டவம் எனப்படும்.

3.க-காத்தல்செயல்-சந்தியாதாண்டவம்-திருஆல்வாய் (மதுரை) (245), தேவர்கள் அசுரர்கள் பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை உலக நன்மை கருதி ஈசன் அருந்தி செயலிழந்தபோது தேவர்கள் மனமுருகி வேண்ட கண்விழித்த சிவன் உயிர்கள் மகிழ்ச்சியடைய பிரதோஷ காலத்தில் ஆடிய தாண்டவம் சந்தியா தாண்டவம்.

4.ம-அழித்தல்-சங்கரதாண்டவம்-திருஆல்வாய் (மதுரை) (245),

5.ப-மறைத்தல்-திரிபுரதாண்டவம்-திருக்குற்றாலம் (257),

6.த-அருளல்-ஊர்த்துவதாண்டவம்-திருவாலங்காடு (15), தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கோபம்கொண்ட காளியை சமாதானம் செய்து மீண்டும் சிவகாமியாக மாற்ற காளியுடன் போட்டியிட்டு ஆடினார். இருவர் நடனமும் சமமான நிலையில் இருந்தது. அப்போது சிவன் தன் காதிலிருந்த காதணியை கீழெ விழச் செய்து அதை தன் காலால் எடுத்து நடனமாடியபடியே காதில் அணிந்து கொண்டார். அந்தக் கோலமே ஊர்த்துவ தாண்டவம் எனப்படும்.
7.நி-ஐந்தொழில்-ஆனந்ததாண்டவம்-திருத்தில்லை (சிதம்பரம்) (55). பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இறைவன் ஆடிய திருநடனம் ஆனந்த தாண்டவம். ஐந்து தொழில்கள், ஐம்பூதங்கள், ஒருநாளின் ஐந்து பொழுதுகள் ஆகியவற்றை இது குறிக்கின்றது. தில்லைக்கூத்தர், அம்பலக்கூத்தர் எனப்பெயர்., தாண்டவங்கலில் மிகச் சிறந்தது இதுவே.
இந்த தோற்றத்தில் இறைவனைத் தரிசிக்க வாழ்வில் இன்பம் நிலைக்கும்

சப்த விடங்க தலங்கள்(ஏழூர்) -திருவாரூர்

1. வீதி விடங்கர்-அஜபா நடனம் (சுவாச ரூபம்) திருவாரூர் (204),-
2. -அவனி விடங்கர்- பிருங்க நடனம் (வண்டு நடனம்) திருக்குவளை (240),
3. - நாகவிடங்கர்- உன்மத்த நடனம் திருநள்ளாறு (169),
4. -சுந்தர விடங்கர்-பாராவார தாங்க நடனம் (கடல்அலை நடனம்) திருநாகை (199),
5. -ஆதிவிடங்கர்- குக்குட நடனம் (கோழி நடனம்) திருக்காறாயில் (236),
6. -நீல விடங்கர்- தாமரை நடனம் திருவாய்மூர் (241),
7. புவனி விடங்கர்-ஹம்சபாத நடனம்- திருமறைக்காடு (242).

பிரபஞ்ச அண்டை வெளித் தத்துவம் எங்கும் எப்படி ஒரே நேரத்தில் பரவி இருக்கின்றதோ அவ்வாறே காலமும் பரவி இருக்கின்றது. நடராஜர் கைகளில் உள்ள மழு காலத்தையும், உடுக்கை சர்பத்தையும் குறிக்கும். சிவநாதரின் உடுக்கையிலிருந்து எழும் ஆதி நாதத்திலிருந்துதான் பிரபஞ்சங்களில் உற்பத்தி நடக்கின்றன.

#####

Read 6298 times Last modified on வியாழக்கிழமை, 19 July 2018 16:08
Login to post comments