Print this page
வியாழக்கிழமை, 07 June 2018 19:58

சூரியன்!

Written by
Rate this item
(2 votes)

ஓம்நமசிவய!

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

$$$$$

மார்த்தாண்டன் சூரியன் ! 

சூரியன் பிறப்பு-கச்யபமுனிவர் தன் மனைவி அதிதியுடன் கானகத்தில் வாழ்ந்து வந்தபோது அங்கு வந்த அந்தணர் ஒருவர் யாசகம் கேட்க நிறைக் கர்ப்பிணியான அதிதி மெதுவாக வந்ததால் கோபமடைந்த அந்தணர் கோபம் கொண்டு கர்ப்பம் காக்க மெதுவாக வந்தாய் அந்த கர்ப்பத்தில் இருக்கும் கரு கலையட்டும் என சாபமிட, இதை அறிந்த கச்சயபமுனி சிவனை நோக்கி யாகம் வளர்த்தார். அதன் பலனாக மிகுந்த தேஜஸுடன் சிவபெருமான் அருளாசியுடன் பெரிய முட்டை- அண்டம் உண்டானது. பல நாட்கள் ஆனபின்னும் எந்த உயிரும் தோன்றவில்லை. முட்டை கெட்டுவிட்டது என அதிதி காஸ்யபரிடம் சொல்ல முட்டை-அண்டம் இறக்கவில்லை மிருதா என்றார் காஸ்யபர். அவரின் வாக்கு சத்யவாக்கு. முட்டையை உடைத்துக் கொண்டு உயிர் ஜனித்தது. மிருத்தா, அண்டம் என்ற இரு வார்த்தைகளை அடக்கி மார்த்தாண்டன் எனப் பெயர் வைத்தார். இந்த மார்த்தாண்டனே சூரியன், பரிதி, பகலவன், கதிரவன், ஒளிக்கடவுள். உயிர் ஜனித்த அந்த நாளே சப்தமி.

சூரியனை கச்யபமுனி சிவபெருமானை நோக்கித் தவமிருக்க பணித்தார். அந்தக் கடுந்தவத்தை மெச்சிய சிவபெருமான் வானத்தில் கிரகமாக உலவும் தன்மையையும், உலகுக்கு ஒளியாகவும் அன்னதாதாவாகவும் இருக்க வரம் அளித்து ஆசிபுரிந்தார். பிரம்மன் காலத்தைச் சக்கரமாகச் செய்து ஒற்றைச் சக்ர ரதத்தை உருவாக்கி சூரியனுக்குத்தர விஷ்ணு ஏழு வண்ணங்கள் கோண்ட ஏழு குதிரைகளை அளித்து வானத்தில் வலம்வரச் செய்தார். சூரியனை வணங்கினால் மூம்மூர்த்திகளை வணங்குவதாக ஐதீகம்.

ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்களின் சேர்க்கை வெண்மை கொண்ட ஏழு குதிரைகளை (காயத்திரி, ப்ருகதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஷ்டுப், அனுஷ்டுப், பங்கதி) பூட்டிய ஒரு சக்கரமுள்ள தேர். சூரியன் தேர் செல்லும்போது சக்கரத்தின் சுவடுகள் பதியாது. வாயுவின் ஏழு மண்டலங்கள் ஓன்றன்பின் ஒன்றாக சூரியனை தம் தோள்களில் சுமந்து செல்வதாக ஐதீகம். அதுவே சூரியனின் தேர்க் குதிரைகள். தன் கடமை தவறாத சூரியன் பக்தர்களுக்கு ஆரோக்யம், புகழ், நிர்வாகத்திறன், மங்களம் அளிப்பவர்.

சூரியன் மனைவி -உஷா, பிரத்யுஷா-சூரியன் விஸ்வகர்மா புதல்வி ஸுர்வர்சலாவை திருமணம் செய்தார்- வைவஸ்தாமனு (ஞான வடிவம்), யமன் (தர்ம வடிவம்) என இரண்டு புதல்வர்கள், யமி/யமுனா (நீர் வடிவம்)-புதல்வி. கணவனின் சூடு தாங்க முடியாமல் தன் நிழலிருந்து பிரதி உஷாவை உருவாக்கி கணவனுக்கு மணமுடிக்க சனி, சாவர்ணுமனு, தபதி, விஷ்டி என்று நான்கு குழந்தைகள். சூரியன் தன் வெப்பம் தனிய தவமிருந்த தலம் கொளப்பாக்கம்-சென்னை.

சூரியனை உதயத்தின்போது-தேவாதி தேவர்களும், இந்திரனும், மதியத்தில்- வாயுவும், அஸ்தமத்தில்- சந்திரனும், வருணனும், இரவில் மும்மூர்த்திகளும், நள்ளிரவில் குபேரணும் வணங்குவர்-(ஆதித்யபுராணம்). தேவர்கள் தங்களது தேஜஸை சூரியனிடமிருந்து பெருகின்றனர்.

காலவ முனிவர் முக்காலமும் உணர்ந்தவர். தனக்கு தொழுநோய் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து நவக்கிரகங்களை நோக்கி தவமிருந்து நோய் வராமல் இருக்க வரம் பெற்றார். இதனை அறிந்த பிரம்மன் சினம் கொண்டு நவகிரகங்களை பூலோகத்தில் அவதரித்து தொழுநோய் பீடிக்க சாபம் கொடுத்தார். சபவிமோசனமாக காவிரி நதிக்கரையில் அர்க்கவனத்தில் கார்திகை முதல் ஞாயிறு முதல் பன்னிரண்டு ஞாயிறு தவம் செய்து திங்கட்கிழமை வைகறைப் பொழுதில் சிவபெருமானை வழிபட்டு உதயாதி ஏழு நாளிகைக்குள் வெள்ளெருக்கு இலையில் தயிர் அன்னத்தை வைத்து உண்டு சாபம் நீங்கினர். சூரியனை முதன்மையாக வைத்து நவகோள்களும் வழிபட்ட தலம் சூரியனார் கோவில்-சிவசூரிய நாராயண சுவாமி-சாயாதேவி, உஷாதேவி. ஆடுதுறையிலிருந்து மூன்று கி.மீ.

அனந்தக் கோடான கோடி சூரியன்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. அவைகளும் ஒளியை வீசத்தான் செய்கின்றன. ஆனால் நம்முடைய விழிப்புலன் சிறியது. அதனால் அந்த விழியால் ஓர் சிறிய எல்லையைத்தான் பார்க்க முடியும். இறைவனின் சைதன்யத்தின் அளவை, மகிமையை யோகிகள் கோடானுகோடி சூரிய ஜோதியாக அளவிட்டிருக்கின்றார்கள். கதிரவன் உலகத்தின் அடிப்படை இயக்க சக்தி. ஒரு பிண்டம்-உடம்பு இயங்கவும் ஒரு அண்டம் –உலகம் இயங்கவும் வெப்ப ஆற்றலை கதிரவனிடமிருந்துதான் பெறுகின்றன.

எல்லாம் என்றால் சர்வம் என்று பொருள். எல் என்பது சூரியனைக் குறிக்கும். சர்வம் என்பதைக் குறிக்க நம்முன்னோர்கள் சூரியனையே ஆராதனை செய்தார்கள். சர்வம் என்ற கொள்கைவேறு. சர்வம் என்ற ஞானலோகம் வேறு. சர்வம் என்ற பகிர்லோகம் வேறு. சர்வம் திசைமயமான லோகம் வேறு. காலமயமான ஜகத் வேறு. என்று பல அனந்த லோகங்கள் இருந்தாலும் சர்வம் என்பது ஒன்றே அது கடவுளைத்தான் குறிக்கும்.

சூரியன் எல்லோருக்கும் பிரத்யட்ச தெய்வம், கண்கண்ட தெய்வம் அவரை சிவசூரியன், சூரிய நாராயணன் என்றழைப்பர். இந்த உலகம் நேரில் பார்க்கும் பெரிய தெய்வம் சூரியன். அவர் உதயமானால் உலகம் விழித்திருக்கும். அவர் மறைந்தால் உலகம் அஸ்தமித்து இருளில் மூழ்கும். சத்ய, த்ரேதா, த்வாபர, கலி என்ற நான்கு யுகங்களும் இவரின் கணக்கு. கிரகங்கள், நட்சத்திரங்கள், யோகம், கரணம், ராசி, ஆதித்யன், ருதுக்கள், வசு, வாயு, அக்னி, அசுவினி குமாரர்கள், இந்திரன், பிரஜாபதி, திசைகள் எல்லாம் அவரால்தான் இயக்கம் பெறுகின்றது. அந்தச் சூரியனுக்குகந்த நாள் சப்தமி. ஏழு குதிரைகள் கொண்ட ரதம் அவரின் இயக்கத்திற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதால் சூரியனின் பிறந்தநாள் சூரிய ஜெயந்தி அல்லது ரதசப்தமி என்று கொண்டாடப்படுகின்றது.

சூரியனின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-உருத்திராட்ச மரம்
ஆதித்ய ஹ்ருதய விரதம்- சங்கராந்தி ஞாயிற்றுக் கிழமை வந்தால் அன்று அந்த விரதத்தை துவங்க வேண்டும். ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படித்து சூர்ய பூஜை செய்க. அஸ்தமத்திற்குப்பின் வேத வல்லுனருக்கு உணவு அளித்து உபசரிக்க. வெள்ளரிக்காய் கலந்த அன்னம் உண்டு தரையில் படுக்க. 108 நாட்கள் தொடர்ந்து செய்க. தினமும் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படிக்கலாம். போரில் மனம் தளர்ந்த இராமனிடம் அகத்தியர் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை சொல்லச் சொல்லி அவரின் கஷ்டங்களை தீர்க்க உதவினார்.

கிரியா யோகத்தின் மூலம் சூரியனின் அருளைப் பெறலாம். மனதில் சூரியனை நினைத்து, பஜனைசெய்து, பாடல்பாடி, பாராயணம் செய்து, ஆன்மாவிற்குள் சூரியன் இருப்பதாக நினைத்து நமஸ்காரம் செய்து, அன்று என்ன செய்தாலும் அது சூரியனுக்கு செய்வதாக நினைத்துச் செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் சூரியனைக் காண்பதே கிரியா யோகம்.

சூரியனுக்கு 12 நாமங்கள் 1.லோலார்க்கர், 2.உத்திர அர்க்கர், 3.ஸாம்பாதித்யன், 4.திரௌபதி ஆதித்யன், 5.மயூகாதித்யர், 6.கஷோல்கா ஆதித்யர், 7.அருணாதித்யர், 8.விருத்தாதித்யர், 9.கேசவாதித்யர். 10.விமலாதித்யர், 11.கங்காதித்யர், 12.யமஆதித்யர்.
இவர்களை வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்கமாலி, திவாகரன் என்றும் அழைப்பதுண்டு.சூரியனின் காரண பெயர்கள்

கர்பத்தில்வாசம் செய்யாமல் அவதாரம்-அஜன்,
இருளை மறைத்து ஒளி தருவதால்-ஆதித்யன்
உலகப் பிரஜைகளின் உற்பத்தி சூரியனிடமிருந்து தொடங்குவதால்-பிரஜாபதி,
அதிதியிடமிருந்து பிறந்ததால்-ஆதவன்,
ஒளி மழையாய் பொழிவதால்-சவிதா,
பல வண்ணங்களைக் கொண்டவர்-சித்ரபாணு,
பிரகாசமான ஒளிக்கற்றைகளைப் பெற்றவர்- பாஸ்கரன்,
3 உலகங்களிலும் பயனித்து ஒளிதோற்றுவிப்பதால்-திவாகரன்,
அண்டம் இரண்டாக பிளந்தபோது கஸ்யபர் ஆறுதல்-மார்த்தாண்டன்,
விரைவாக சஞ்சரிப்பதால்-அரியமான்,
உயிர்களுக்கு அருள் பாலிப்பதால்-புவனமித்ரன்,
செல்வங்களைப் பெற்றிருப்பதால்-இந்திரன்,
கேட்ட வரத்தை அள்ளித் தருவதால்-வருணன்,
உலகங்களை படைக்கும் வல்லமை- சக்கரன்,
தேவர்களின் இதயத்தில் இடம்-விவஸ்வான்,
மேகத்தின் மூலம் இடி முழக்கம் செய்வதால்- மர்ஜன்யன்,
உலகங்களை போஷிப்பதால்- பூஷ்வா,
நாளும் உதயமாகி உலகை காப்பாற்றுவதால்-சூரியன்
கதிர்களை பரப்பி ஒளி கொடுப்பதால்- கதிரவன்

சூரியனை ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பிப்பதால் 12 ஆதித்தியர்கள். மாசிசப்தமி-வருணன், பங்குனி-சூரியன், சித்திரை-விசாகன், வைகாசி-தாதா, ஆனி-இந்திரன், ஆஷாட-ஆடி-ரவி, ஆவணி-நபு, புரட்டாசி-யமன், ஐப்பசி-பர்ஜயன், கார்த்திகை-த்விஷ்டா, மார்கழி-மித்ரன், தை-விஷ்ணு.

சூரிய ரதத்திற்கு ஒரே சக்கரம்- காலச்சக்கரம்
மூன்று நாபிகள்
நடுப்பகுதி- குடம்
மூன்று மேகலைகள்- காலை, நடுப்பகல், பிற்பகல்
வெளிவட்டம் 6 சுற்றுக் கட்டைகள்-6 ருதுக்கள்- வசந்தருது-பழுப்பு நிறம், க்ரீஷ்மருது-பொன்நிறம், வர்ஷருது-வெள்ளைநிறம், சரத்ருது-கருமை நிறம், ஹேமந்த ருது-தாமிரவர்ணம், சிசிர ருது-சிவப்புநிறம்- இந்த நிறங்கள் மழை பொழிவின் விளைவைக் காட்டும்.
அருணன் தேரோட்டி

சூரியஒளி நிறப்பிரிகை ஏற்பட்டால் ஏழு வண்ணங்கள் தோன்றும். 7வண்ணங்களின் சேர்க்கை சூரியஒளி. குதிரை-அசுவம்-வண்ணம். சூரியனுக்கு 7குதிரைகள் என வேதம் வர்ணிப்பதன் சூட்சமம்- வர்ணங்களையே! சூரியனின் நிறங்கள் ஏழு. அதனால்தான் ஏழு குதிரைகள் பூட்டியதேர் என வர்ணிக்கப்படுகின்றார்.

சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும். அயனம்- முகம். சூரியனின் முகம் வடக்கு நோக்கி தை முதல் ஆனி மாதம் வரை பயணிக்கும்போது உத்ராயணம் என்றும் தெற்கு நோக்கி ஆடி முதல் மார்கழிவரை பயணிக்கும்போது தட்சிணாயனம் எனப்படும். உத்தராயணம்-புண்ணியகாலம்- தை முதல் ஆனி வரை (சூரியனின் பாவன இயக்கம்- வடகிழக்கு). சூரியனின் கதிர்வீச்சு பகல் பொழுதில் அதிகமாக இருக்கும். இந்தக் காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். தட்சணாயணம்-புண்ணியகாலம்- ஆடி முதல் மார்கழி வரை (சூரியனின் பாவன இயக்கம்- தென்கிழக்கு). சூரியனின் கதிர்வீச்சு பகலில் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும். இந்தகாலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். மனிதர்களின் ஓராண்டுகாலம் (உத்ராயணம்+தட்சிணாயணம்) சித்திரை முதல் பங்குனி வரையிலான ஒரு வருட காலமே தேவர்களுக்கு ஒரு நாள் என்பதால் தட்சிணாயணத்தின் இறுதி மாதமான மார்கழி அவர்களின் அன்றைய அதிகாலைப்பொழுதாகவும், உத்ராயணத்தின் இறுதி மாதமான ஆனி தேவர்களின் பகல் பொழுதின் இறுதிப் பகுதியாகவும் உள்ளது. தேவர்களின் ஒருதினப்பொழுதின் சந்தியா காலங்களாக விளங்கும் ஆனிமாதமும் மார்கழியும் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதங்கள்.

தட்சிணாயனத்தின்போது இரவு நேரம் அதிகமாகவும் பகல் பொழுது குறைவாகவும், தைமாதம் முதல் நாள் உத்ராயணத்தின் துவக்கத்திலிருந்து பகல் பொழுது அதிகமாகவும் இரவு பொழுது குறைவாகவும் இருக்கும். தேவர்கள் துயிலெழும் நேரம் தை மாதம். ஆகவே இந்த உத்ராயண காலத்தின் துவக்கமாகிய தை மாதத்தின் முதல் நாள் புனிதமானது. இந்த நாளே மகர சங்கராந்தி எனப்படும் உத்ராயணத்தின் தொடக்கமாக தைமாதம் வளர்பிறை ஏழாம்நாள் கதிரவன் தன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரை வடக்கு நோக்கி திருப்புவதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ள நாளே ரதசப்தமி (ரதம்-தேர், சப்தமி-ஏழு) உத்ராயணம் தேவர்களின் பகல் பொழுதின் தொடக்கம் என்பதால் உத்ராயண புண்ணிய காலம் என்பர். அதனால்தான் பீஷ்மர் தன் விருப்பப்படி இறக்கும் வரம் பெற்றிருந்து தனது மரணத்தை அடுத்தநாள் அஷ்டமி (பீஷ்மாஷ்டமி) தொடங்கி அனைவரிடமும் விடைபெற்று 11ம் நாள்-பீஷ்ம ஏகாதசி. உத்ராயணம் வரும்வரை தள்ளி வைத்து முக்தியடைந்தார் என புராணங்கள் சொல்கின்றன.

சூரிய கதிர்கள் சிறப்பு! பீஷ்மர் அவர் விரும்பும்போது உயிர்போகும் என்ற வரம் பெற்றிருந்தும் உத்ராயண காலம் வந்தபோது உயிர்போக விரும்பியும் போகமல் துன்பம் மேலிட அதுபற்றி வியாசரிடம் கேட்டபோது மனம், வாக்கு, செயல் மூன்றாலும் நீங்கள் பாவம் செய்யாமலிருந்தும் பாஞ்சாலியின் துகில் உரியப்படும் பாவச் செயலை பார்த்தும் கண்டித்து தடுக்கவில்லை என்பதனால்தான் இந்த துன்பம் என்றார். அவரின் ஆலோசனைபடி இரண்டு எருக்க இலைகளை கண்களின் மீதும் மூன்று எருக்க இலைகளை கழுத்திலும் வைத்து அதன் மீது சூரிய ஒளி படும்படிச் செய்து சூரியனை வேண்டச் சொல்லி கங்கை நீரால் நீராட்ட அவரது பாவங்கள் தீர்ந்தன. சூரியன் கதிர்கள் அவருக்கு முக்தி வழங்கியநாள் சூரிய ஜெயந்திநாள்.

உத்தராயண தை அமாவாசை, தட்சணாயணம் ஆடி அமாவாசை மற்றும், புரட்டாசி மாளய அமாவாசை காலங்களில் முன்னோர்களின் நினைவாக செய்யப்படும் ஆன்ம பூஜையை ஏற்று முன்னோர்கள் நமது துன்பங்கள் நீங்க உதவி புரிவர்.

ஆன்ம பூஜா தலங்கள்: அக்னிதீர்த்தம்- இராமேஸ்வரம், காவேரி, குடந்தை- மகாமகத்தீர்த்தகுளம், குமரிக்கடல்- சங்கமம், கோடியக்கரை, திருப்புல்லாணி, திருவெண்காடு, திருவையாறு- பஞ்சநதிக்கரை, திலதர்ப்பணபுரி, பவானி- சங்கமம், பூம்புகார், முக்கொம்பு, ஸ்ரீரங்கம்- அம்மா மண்டபம்,

சூரியனுக்கு ஆயிரமாயிரம் கிரணங்கள் இருந்தாலும் முக்கியமான கிரணங்கள் ஏழு. அந்த ஏழிலிருந்துதான் கிரகங்கள் ஏழும் தோன்றின,
ஹரிகேசவன் கிரணம் தானே உண்டான சூரியன்-ஞாயிறு
ஸுப்ஸம்ன கிரணம் வளர்ச்சி தேய்வுடைய சந்திரன்-திங்கள்
சம்பத்வசுவு கிரணம் குஜன் (எ) அங்காரகன்-செவ்வாய்
விஸ்வகர்ம கிரணம் சௌம்யன் (எ) புதன்
அர்வாவசுவு கிரணம் பிர்கச்பதி (எ) வியாழன்
விச்வச்ரவன் கிரணம் சுக்ராச்சாரியார் (எ) வெள்ளி
சுவராட்டு கிரணம் சனி

விண் மீன்களாகிய நட்சத்திரங்களும் சூரியனின் பிரபாவத்தால் ஏற்பட்டவை. உலகம் அழியினும் இவை அழியா என்பதாலும் வெண்மை நிறம் கொண்டுள்ளதாலும் நட்சத்திரங்கள் என்று பெயர்.

சுக்ல பட்சத்தில் சந்திரனின் கிரணங்கள் விருத்தியடைவதற்கும் கிருஷ்ணபட்சத்தில் சந்திரன் கிரணங்கள் தேய்வடைவதற்கும் காரணம் சூரியனின் சக்தி ஆதாரம். சந்திரன் மூலம் சிருஷ்டி தழைத்து பெருகுவதால்தான் மூலிகைச் செடிகளும் மருந்துவ செடிகளும் வளர்கின்றது. தாணியங்கள், உணவுப் பொருட்கள், காய் கறிகள் கிடைக்கின்றன.

கிரியா யோகத்தின் மூலம் சூரியனின் அருளைப் பெறலாம். மனதில் சூரியனை நினைத்து, பஜனைசெய்து, பாடல்பாடி, பாராயணம் செய்து, ஆன்மாவிற்குள் சூரியன் இருப்பதாக நினைத்து நமஸ்காரம் செய்து, அன்று என்ன செய்தாலும் அது சூரியனுக்கு செய்வதாக நினைத்துச் செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் சூரியனைக் காண்பதே கிரியா யோகம்.

மூன்று உலகங்களையும் துர்வாசமுனிவர் சுற்றி வரும்போது துவாரகபுரிக்கு வந்தார். கிருஷ்ணரின் மகன் சாம்பன் மிகுந்த அழகுடையவன். அந்தக் கர்வத்தால் துர்வாசரின் உருவத்தைக் கேலி செய்ய கோபம் கொண்ட துர்வாசர், ‘எந்த இளமையும் அழகும் உனக்கிருப்பதால் அகங்காரப் படுகின்றாயோ அந்த உருவம் அழிந்து பயங்கர பெரு நோயினால் உன்தேகம் பொழிவிழந்து வலுவிழந்து தேய்ந்து போகக்கடவது எனச் சாபமிட்டார். சாபத்தினால் குரூபியான சாம்பன், கிருஷ்ணர், நாரதர் ஆலோசனைப்படி மித்ர வனத்தில் சப்தமி விரத பூஜையை முடித்து சூரிய தேவன் அருளால் பெருநோய் நீங்கி பழைய யௌவன வடிவம் பெற்றான்.

சூரியனை வழிபடும் முறை சௌரம் எனப்படும். உலகின் கண்ணுக்குத் தெரிந்த முதல் கடவுள் சூரியன். சைவர்கள் சிவசூரியன் என்றும் வைணவர்கள் சூரியநாராயணன் என்றும் அழைப்பர். ஒரு ஆத்மா ஆரோக்கியமாக இருந்தால்தான் தர்மம், ஜபம், பூஜை, ஹோமம் முதலிய நல்ல காரியங்களைச் செய்ய முடியும். அந்த ஆரோக்கியத்தை தருபவன் சூரியன். விஷ்ணு கீதா உபதேசத்தில் உலகில் பிராகாசிக்கும் பொருள்களில் நான் சூரியனாக இருக்கின்றேன் எனக் கூறுகின்றார். அனைத்து தாவர சங்கமப் பொருள்களுக்கும் ஆத்மா போன்று செயலாற்றுபவன் சூரியன். பிரபஞ்சத்தின் வெப்ப நிலையை தக்க வைப்பதில் கதிரவனுக்கு பெரும் பங்கு உண்டு. உலகம் தன் நிலை தவறாது இருப்பதற்கு காரணம் பிரபஞ்சத்தில் உறைந்திருக்கும் கதிரவன் ஒரு கனம்கூட தன் வெப்பநிலை கடமையிலிருந்து தவறுவதில்லை, அப்படி தவறினால் என்ன வாகும் என யோசித்து பாருங்கள்.

பூமி சூரியனைச் சுற்றிவரும் நீள்வட்டப் பாதையை 12 ஆகப் பிரித்து அவற்றை ராசிகள் என்றனர். 360 டிகிரியில் ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி. முதல் ராசி மேஷம் 0 டிகிரியில் தொடங்கும். இதன்படி சூரியன் முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழையும் மாதம் சித்திரை. இது இளவேனில் காலம். சூரியனது நகர்வை வைத்து அறிவியல் ரீதியாக கணக்கிட்டு மாதங்களைக் 12 எனக் கணக்கிட்டனர். எனவே இதிலிருந்து தமிழ் மாதங்கள் ஆரம்பிக்கும்.

சங்கராந்தி: சூரியனின் அயனம் என்ற இயக்கம் தவிர பூமியின் சுழற்சி காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒரு ராசிக்குள் சூரியன் பிரவேசிப்பார். சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு நுழையும் வேளையே சங்கராந்தி. சங்கராந்தி என்றால் மாதப் பிறப்பு ஆகும். 12 ராசிக்கும் 12 சங்கராந்திகள். அந்த ராசியின் பெயராலேயே அந்த மாதங்கள் குறிபிடப்பட்டன. மேலும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதி எந்த நட்சத்திரத்தில் வருகின்றதோ அதுவே அந்த மாதத்தின் பெயரானது. சைத்ர-சித்திரை(சித்திரை)-மேஷமாதம் (மகரமாதம் என்றும் சொல்வர்), வைசாக-வைகாசி(விசாகம்)-ரிஷபமாதம், ஜேஜ்ட-ஆனி(ஆன்ஹி)-மிதுனமாதம், ஆஷாட-ஆடி(ஆஷாடம்)-கற்கடகமாதம், சிராவண-ஆவணி(திருவோணம்/அவிட்டம்)-சிம்ம, பாத்ரபத-புரட்டாசி(ப்ரோஷ்டபதி)-பாத்ரபதமாதம், ஆச்வின-ஐப்பசி(அசுபதி)-துலாமாதம், கார்த்திக-கார்த்திகை-விருச்சகமாதம், ஆக்ரஹயான-மார்கழி(மிருகசீரிஷம்)-தனுர்மாதம், பௌஷ-தை(பூசம்)-மகரமாதம், மாக-மாசி(மாகம்)-கும்பமாதம், பல்குண-பங்குனி(பூரம்/உத்திரம்)-மீனமாதம்

1.தான்ய சங்கராந்தி-சித்திரை-சூரியன் மேஷ ராசியில் நுழையும் வேளை.
2.தாம்பூல சங்கராந்தி-வைகாசி-சூரியன் ரிஷப ராசியில் நுழையும் வேளை.
3.மனோதர சங்கராந்தி-ஆனி-சூரியன் மிதுன ராசியில் நுழையும் வேளை.
4.அசோக சங்கராந்தி-ஆடி-சூரியன் கடக ராசியில் நுழையும் வேளை.
5.ரூப சங்கராந்தி-ஆவணி-சூரியன் சிம்ம ராசியில் நுழையும் வேளை.
6.தேஜ சங்கராந்தி-புரட்டாசி-சூரியன் கன்னி ராசியில் நுழையும் வேளை.
7.ஆயுள் சங்கராந்தி-ஐப்பசி-சூரியன் துலாம் ராசியில் நுழையும் வேளை.
8.சௌபாக்ய சங்கராந்தி-கார்த்திகை-சூரியன் விருச்சிக ராசியில் நுழையும் வேளை.
9.தனுஷ் சங்கராந்தி-மார்கழி-சூரியன் தனுசு ராசியில் நுழையும் வேளை.
10.மகர சங்கராந்தி-தை-சூரியன் மகர ராசியில் நுழையும் வேளை.
11.லவண சங்கராந்தி-மாசி-சூரியன் கும்ப ராசியில் நுழையும் வேளை.
12.போக சங்கராந்தி-பங்குனி-சூரியன் மீன ராசியில் நுழையும் வேளை.

மாகே சங்கராந்தி என்று நேபாளத்திலும், சொங்கிரான் என்று தாய்லாந்திலும், மோஹா சங்கிரான் என்று கம்போடியாவிலும் மாகே பிஹு/ போகாலி பிஹூ என்று அஸ்ஸாமிலும் மாக் சாஜி என்று இமாச்சலபிரதேசத்திலும், மகா சங்கராந்தி என்று டெல்லி, மற்றும் ஹரியானவிலும், உத்ராயண் என்று குஜராத் மற்றும் உத்ரபிரதேசத்திலும், ஹல்தி கும்கும் என்று மகாராஷ்டிராவிலும் சங்கராந்தி கொண்டாப்படுகின்றது.

உலகப் பிறப்புகள் எல்லாம் 27 நட்சத்திரங்களில் ஒன்றிலும் 12 ராசிகளில் ஒன்றிலும்தான் பிறந்திருப்பர். ஒருவர் பிறந்த வேளையில் சாதகமான அல்லது பாதகமான நிலையில் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் அந்த கிரக தோஷத்தினை நீக்க பரிகாரங்கள் செய்திட வாழ்வின் தீமைகள் குறைந்து நன்மைகள் உண்டாகும்.

சூரியதோஷம் அதாவது சூரியனின் அமைப்பு கெட்டிருந்தால், தந்தை வழி உறவுகளுடன் ஒற்றுமை இன்மை, த\ந்தையின் உடல்நலம் குறைபாடு, அந்த நபரின் உடல் நலம் ஆரோக்கியம் அடிக்கடி கெடுதல், தாழ்வு மனப்பான்மை, உஷ்ணாதிக்க நோய்கள் ஆகியன ஏற்பட வாய்ப்பு உண்டு. சூரிய தோஷத்தால் ஏற்படும் குறைகளை நிவர்திக்க சூரியனின் ஆதித்த ஹ்ருதய துதியுடன் சூரியனுக்குப் பிரியமான சீடனான அனுமனையும் வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிட்டும்.. முதலில் திருமங்கலக்குடி பின்னர் சூரியனார் கோவிலில் வழிபடவேண்டும். அருகில் உள்ள அனுமன் கோவிலுக்குச் சென்று வழிபடவும்.

அக்னி நட்சத்திரம்!

கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னிதேவன். சித்திரை மாதத்தில் சூரியன் மேஷத்தில் உச்சமாக இருக்கும்போது அக்னி நட்சத்திர்மான கார்த்திகை வரும்போது நெருப்பிற்கு இனையாக வெப்பம் பொழிந்து தகிக்கும் சூரியன் சஞ்சரிக்கும் சூரியனின் காலம் அக்னி நட்சத்திர காலம் என்பர். சித்திரை மதம் பரணி 4 ம் பாதத்தில் தொடங்கி (முன் கத்திரி காலம்) ரோகிணி முதல் பாதம் வரை (பின் கத்ரி காலம்)

ரிக் வேதம் அக்னி என்பது சூரியனின் ஆற்றல் என்கின்றது. சுவேதகி என்ற மன்னன் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் யாகம் வளர்த்து அதில் நெய் உள்ளிட்ட ஏராளமான ஆகுதிகளை இட அவற்றைத் தொடர்ந்து உண்டதால் அக்னிக்கு அஜீரணம் ஏற்பட்டு வயிற்றுவலி உபாதையில் நீண்ட காலம் அவஸ்திபட்டு பிரம்மதேவரிடம் ஆலோசனைக் கேட்க மூலிகைகள் நிறைந்த காட்டை அப்படியே உண்டால் அக்னியின் ஜீரண உபாதையும் வயிற்றுவலியும் நீங்கும் என்றார்,

காண்டவ வனம் தன் துன்பத்திற்கு உதவி தன் நோயைத் தீர்க்கும் என்பதால் அக்னி அந்த வனத்தை உண்ணத் தொடங்க முற்படும்போது தனக்கு பிடித்த அந்த காண்டவ வனம் அழியாமல் இருக்க இந்திரன் மழை பொழிந்து ஒவ்வொரு முறையும் அக்னி உண்ண ஆரம்பிக்கும்போது தடுத்துவிட்டான். என்ன செய்வது என தவித்த அக்னி அப்பக்கம் அர்ஜுனனுடன் வந்த கிருஷ்ணரிடம் ஆலோசனை கேட்டான். அக்னியிடமிருந்து சிறப்பான வில்லான காண்டீபத்தையும் குறையவே குறையாத அம்பாறாத்துணியையும் பெற்று அர்ஜுனனிடம் கொடுத்து அதன்மூலம் தொடர்ந்து அம்புகளைச் செலுத்தச் சொல்லி சரக்கூடம் அமைக்க இந்திரனால் கனமழையைப் பொழிவித்தும் சரக்கூடத்தைத் தாண்டி நீர வராததால் அக்னி அந்த அடர்ந்த மூலிகைகள் நிறைந்த கண்டவ வனத்தை உண்ணத் தொடங்கினான். நிலமையைப் புரிந்த இந்திரன் கிருஷ்ணரிடம் வந்து அக்னி இந்த வனம் முழுவதையும் புசித்தால் இதில் வாழும் உயிர்களின் நிலை என்ன! இந்த வனத்தை புசித்த பின்னரும் பசி அடங்கா விட்டால் அக்னி மற்ற வனங்களையும் அழிக்கத் தொடங்கிவிடுவான் என்று கூற கிருஷ்ணர் அக்னியிடம் இருபத்தோரு நாட்கள் மட்டுமே அக்னி இந்த வனத்தைப் புசிக்க வேண்டும் என்றும் அதற்குள் அக்னியின் வயிற்றுவலி தீர்ந்துவிடும், அர்ஜுனனின் சரக்கூடமும் கலைந்து விடும். பின்னர் இந்திரன் மழை பெய்விக்கலாம் என்றார்.

அக்னி முதல் ஏழு நாட்கள் பூமிக்கு அடியில் இருந்த வேர்களையும் பூச்சிகளையும் புசித்து அடுத்த ஏழு நாட்களில் மேலே இருந்த மூலிகை மரங்கள், செடிகள் அனைத்தையும் உண்டு அடுத்த ஏழு நாட்களில் அங்கிருந்த மற்ற பொருட்களையும் பாறைகள் உட்பட விழுங்கினார். காண்டவ வனத்தை அக்னி விழுங்கிய 21 நாட்களே அக்னி நட்சத்திர காலம் ஆகும்.

அக்னி நட்சத்திர தோஷ காலம் முடிந்தவுடன் எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், திருமஞ்சனங்கள், வழிபாடுகள் நடைபெறும். இதை அக்னி கழிவு என்பர்.

கிரகத்தின் பெயர்: சூரியன்
உரிய மலர்: செந்தாமரை
உரிய மரம்: உருத்திராட்ச மரம்
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
ரத்தினம்: மாணிக்கம்
கிழமை: ஞாயிற்றுக் கிழமை
திசை: கிழக்கு
உலோகம்: தம்பாக்கு
நிறம்: சிவப்பு
சமித்து: வெள்ளெருக்கு
வழிபடும் பலன்கள்: காரிய சித்தி, லோக ஆகர்ஷணம்

சூர்ய நமஸ்காரம்

ஆதித்தாய நமஹ! சூர்யாய நமஹ!
பாஸ்கராய நமஹ! தினகராய நமஹ!
திரைலோக்யாய நமஹ! சூடாமணியே நமஹ!
திவாகராய நமஹ! லோகமித்ராய நமஹ!
ஜோதி ஸ்ருபாய நமஹ! அருணாய நமஹ!
வரத ஹஸ்தாய நமஹ! ரவியே நமஹ!
சூர்யநாராயண சுவமியே நமஹ!

(ஆரோக்கியமும் ஆனந்தமும் பெற)
”ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹத் விதிகராய தீமஹி
தன்னோ சூர்யப் பிரசோதயாத்”
(உலகிற்கு ஒளியூட்டும் பாஸ்கரனே, கோள்களையெல்லாம் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவனே, சூரிய பகவனே,எல்லா வளங்களும், பெற அருள்வாய்!)

சூரியனின் மூல மந்திரம்-ஏழு எழுத்துக்கள் - சப்தாக்ஷர மந்திரம் காலையில் கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும், இரவில் வடக்கு முகமாகவும், ஆறுதள தாமரையில் சூரிய மூர்த்தியை வைத்து மனம் ஒன்றி ஒரு வருடம் தியானிக்க வேண்டும்.
ஓம் ககோல்காய ஸ்வாஹா’

நவகிரக சூரிய பகவான் காயத்திரீ
(பார்வை பலம்பெற, ஆரோக்கியம் சிறக்க)
”ஓம் அச்வத் வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய பிரசோதயாத்”
(சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி, சூரியா போற்றி சுந்திரா போற்றி வினைகளைக் களைவாய் வீரியா போற்றி.)
”ஓம் ஏகசக்ராய வித்மஹே
மஹத் யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்ய பிரசோதயாத்”
(ஒற்றைச் சக்ரத்தில் உலகை ஊர்ந்து சுழலன்று சூழ்வினைகளைச் சுட்டுப் போக்கி சுடரெளியால் அகிலம் காக்கும் ஆதியத்தனே போற்றி.)

$$$$$

Read 23691 times Last modified on திங்கட்கிழமை, 02 September 2019 19:05
Login to post comments