gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

3-17.பிரச்சனைகள்!

Written by

பிரச்சனைகள்!                                                                                                              

வாழ்க்கை இனியது. கரும்பின் சுவையைவிட தித்திப்பானது. தடைகள் பலவரலாம். இந்த இனிய ரசனைமிகுந்த வாழ்வை பலர் சுகமற்றதாக கருதுகின்றனர். மகிழ்வை தொலைத்து விடுகின்றனர். பொறுப்புடன் ஒரு ஆன்மா இருப்பது வேறு. கவலையுடன் இருப்பது வேறு. கவலைப்படாமல் பொறுப்புடன் இருத்தல் நன்மை பயக்கும்.
துன்பங்கள் அனைவருக்கும் பொதுவானது. அளவில் மாறுபட்டிருக்கும். ஏற்றுக் கொள்ளும் விதத்தில் மாறுபட்டிருக்கும். துன்பங்களையும், துயரங்களையும் விட்டொழியப் பழகவேண்டும். பிரச்சனைகளின் அடிப்படையில் ஏற்படும் துயரங்களை பிரச்சனைகளைக் கொண்டே தீர்த்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவுபவரின் உதவியை நாடுங்கள்.
அப்போதும் முடியவில்லை எனில் பிரச்சனையை விட்டுத்தள்ளுங்கள். அதை பெரிது படுத்தி அதையே நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். நடப்பது நடக்கட்டும் என விட்டு விடுங்கள். பிரச்சனை சிறியதாகத் தோன்றும். நடந்து முடிந்தபின்னும் அதன் தாக்கத்தை பெரிது படுத்தாதீர்கள். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றார் வள்ளுவர்.
உபாதைகள், பிரச்சனைகளிலிருந்து விலகி இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். உங்களால் தீர்க்க முடியாதது, உங்கள் நண்பர்களால் உதவி செய்யமுடியாத பிரச்சனைகளை நீங்கள் மனதில் போட்டுக் குளப்பி மன உலைச்சலால் துயரம் அடைவதைத் தவிர வேறு என்ன பயன்! எனவே அதை விட்டு விட்டால், ஒதுக்கி தள்ளி விட்டால் அது சிறிய பிரச்சனையாகிவிடும். மனதிற்கு சிறிதளவாவது நிம்மதி கிடைக்கும்.
கழிந்து போனவற்றிற்காக அழுது கொண்டு, நிகழ்காலத்தின் வாய்ப்புகளை கோட்டை விடுகின்றனர் பலர். நிகழ்காலத்தில் கண்ணீர்விட்டால், எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளும் துயரமானவையாகத்தான் இருக்கும். கசப்பான கடந்தகால நினைவுகளை ஒதுக்கி நிகழ்காலத்தை ஏற்று, அதன் செயலாற்றலைப் பெற்று சந்தோஷத்துடன் வாழ முயல்க! இதுதான் நேர் சிந்தனை.
நாம் இதுகாறும் செலவழித்தது நம்மிடம் இருந்தது ! நாம் கொடுத்ததுதான் நம்மிடம் இருப்பது! நாம் விட்டுச் சென்றது நாம் இழந்தது ! சிலருக்கு வறுமையே பிரச்சனை. சிலருக்கு வளமையே பிரச்சனை.
ஓர் வாத்ய கருவியிலிருந்து ஒலிக்கும் இசைக்கும், பல வாத்யங்களை ஒன்று சேர்ந்து பெறும் இசைக்கும் வேறுபாடு உண்டு. ஒரே தாளத்தில் பல வாத்தியங்கள் இசைக்கும் பொழுது இனிமைதனை நாம் உணருகின்றோம். அதைப்போலவே மனிதகுலத்தில் நாம் ஓர் அங்கம். நம்மால் தனியே செயல்பட முடிந்தாலும் நம்மை சூழ்ந்த உற்றார் உறவினர் நண்பர்களோடு சேர்ந்து செயல்பட்டால் அந்த வாழ்க்கை மிகவும் சுவராஸ்யமான சந்தோஷமுடையதாக இருக்கும்.
நம் செயல்களுக்கு பிரச்சனைகளுக்கு தீர்வுகான நாம் நம்மைவிட வயதானவர்களை, மூத்தவர்களை, பெரியவர்களை நாடுகிறோம். அவர்கள் சொல்வதன் பொருள் விளங்கா விட்டாலும் அவர்கள் திரும்ப திரும்ப சொல்வதால் அதில் ஏற்படும் நன்மைகள் நமக்கு முன்பே தெரியாது. செயல் நடந்து முடிந்தபின்னோ அல்லது அதற்குபின் பலநாட்கள் கழித்துதான் அதன் பலன் தெரியவரும்.
இதற்கு ஒர் புராணச்சான்று. “இலங்கை மன்னன் இராவணனுக்கு, எல்லா நவக்கிரகங்களும் உலக மக்களை ஆட்டிப்படைக்கின்றன, அவர்களை ஏன் நாம் அடக்கி வைக்கக்கூடாது என்ற எண்ணத்தால், சிறந்த சிவபக்தனும் வீரனுமான அவன் எல்ல நவக்கிரகங்களையும் அடக்கி தன் சிம்மாசனத்தின் படிக்கற்களாக மாற்றினான்.
இதைக்கேள்விப்பட்ட நாரதமுனிவர் இலங்கை வேந்தனிடம் சென்று, ஏன் இவ்வாறு செய்தாய்! இது உன் வீரத்திற்கு அழகா! நவக்கிரக நாயகர்களை குப்புறப்போட்டு அவர்மீது அரியணை ஏறலாமா! அவர்களைத் திருப்பிப்போட்டு அவர்கள் மார்பில் கால்வைத்து ஏறுதல்தான் உன் வீரத்திற்கு அழகு என வஞ்சப் புகழ்ச்சியாக சொன்னார்.
இந்த யோசனை இராவணனை மிகவும் கவரவே, அவ்வாறு செய்ய ஆரம்பிக்கும்போது, முதல் படியில் சனியிருந்ததால் அவர் நெஞ்சில் கால்வைத்தும் அவரின் வக்ரபார்வையில் இராவணனன் சிக்கினான். அன்று பிடித்த சனி அவன் இறப்புவரை நீடித்தது. விளைவுகள் என்னென்ன என்பதை அனைவரும் அறிவோம். ஓர் ஞானி, முனி சொன்ன சொல் எவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. நல்லவர்களுக்கு நன்மைகளும், தீயவர்களுக்கு துயரமும் அளித்த அந்த நிகழ்வுகளை இராமயணம் தெளிவு படுத்துகின்றது.
பிரச்சனைகளை நேருக்கு நேர் பொறுமையுடன் கவனிக்கவேண்டும். அப்போதுதான் அதிலிருந்து மீளவழி தெரியும். மனதின் பிரச்சனைகளை தீர்த்து வெளியேற்ற வேண்டும். இல்லையேல் அதன் தாக்கம் பலரை சிந்திக்கும் திறனற்றவர்களாக்கிவிடும்.
துன்பம் என நினைப்பவன் அதிலே உழன்று வாழ்வை வீனாக்குகிறான். நம் பிரச்சனைகளை விட்டு வெளியே வந்து பார்க்கவேண்டும். பழக்கத்தில் இது சரியாக வரும். பிரச்சனைகளுக்கு அடிமையாகாதீர். உங்கள் ஆளுகைக்கு உட்படுத்துங்கள். எல்லா வழி முறைகளையும் தீவிரமாக நிதானமாக யோசனை செய்யுங்கள். பெரியவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். நிதானமாக செயல் படுங்கள். பிரச்சனைகளை வென்று மகிழ்வை காணுங்கள். ஆனந்தம் அடையுங்கள்.
ஓர் புதிய இடத்தில் உறங்க முடியாமல் தவிக்கின்றீர்கள். எதோ ஒரு சத்தத்தைகேட்டு விழித்து மீண்டும் தூங்கமுடியாமல் இருப்பது ஏன்! இது புதிய இடம், இந்த சப்தம் ஏன் என்பது போன்ற தேவையில்லா எதிர்மறை எண்ணங்களில் சிக்கிக் கொள்கின்றீர்கள். எந்த இடமாயிருந்தால் என்ன! என்ன சப்தமாக இருந்தால் என்ன!
நீங்கள் தூங்க வேண்டும் என நினைவு கொள்ளுங்கள். அந்த இடத்தையும், சப்தத்தையும் பற்றிய உங்கள் முதல் எண்ணங்களை விலக்கிவிடுங்கள். அந்த இடத்தையும் புதிய சப்தங்களையும் நீங்கள் ரசித்தால் மனது ஏற்றுக்கொள்ளும். பிரச்சனைகளிலிருந்து வெளியே வாருங்கள். உள்ளே செல்லாதீர்கள். நிம்மதி கிடைக்கும் அமைதியுடன் தூங்குவீர்கள். ஆனந்தம் காண்பீர்.
கலங்கிய குளத்து நீர் அடங்கி தெளிவாக சிறிது நேரம் கொள்ளும். அதுபோலவே மனதில் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது அவைகள் அமைதியாகும் தருணம் வரை பொறுமை காத்தல் வேண்டும்-குருஸ்ரீ பகோரா.

3-16.மாயை!

Written by

மாயை!                                                                                                                      

இப்பூவுலகில் எல்லாமே மாயை! எதுவும் நிலையானது இல்லை. இன்று மலையாக இருந்தது ஒரு காலத்தில் மடுவாகவும், மடுவாக உள்ளது மலையாகவும் மாறும் மாயையானது. புல், பூண்டு, மரம், செடிகள், கொடிகள், ஊர்வன, நடப்பன, பறப்பன என எல்லாம் அழியக்கூடியவையே! ஆனால் மீண்டும் தோன்றக்கூடிய மாயையை பெற்றுள்ளது. உள்ளே குமுறும் நெருப்புத்தனலை மூடிமறைக்கும் எரிமலை போன்று.
தனல்களை மறைக்கும் சாம்பல்களையும், கத்தியை மூடிய வாள் உறைகளையும், செம்பை மூடிய களிம்பையையும், நம்முள் உயிர்த்த ஆன்மாவை மூடியிருக்கும் உடலையும் நம்மால் காணமுடிகின்றது. சாம்பலை ஊதினால் சுடர்விடும் தனலும், வாள் உரையை நீக்கினால் பளப்பளக்கும் வாளையும், களிம்பைப் போக்கினால் களிப்பூட்டும் செம்பையும் காண்கின்றோம். இவைகளைப்போலவே மனித ஸ்தூல உடலை நீக்கி நம்முள் இருக்கும் ஆன்மாவை உணரத்தெரிந்து கொள்ளவேண்டும். ஆன்மாவை நாம் புரிந்துணரவேண்டும்.
சாம்பல், களிம்பு, வாள் உரை இவைபோன்று மனித ஆன்மாவை உடலான மாயை மூடிமறைத்திருக்கின்றது. என்றோ ஓர்நாள் அது உடலைவிட்டு வெளிவந்து விடும். அதை நாம் உணர்ந்து நம் அறியாமை என்னும் மாயை நீக்கி ஆன்மா சீராக சிறப்பாக செயல்பட வழிவகுக்க வேண்டும். தியானிக்க வேண்டும். அது ஓர் இன்பம். நம் ஸ்தூல உடலுக்கு சிறப்பான வழிகாட்டும்.
பாலைவனத்தில் பயணம் செய்யும்போது வெப்பத்தின் மிகுதியால் தாகம் எடுக்கின்றது. அதேசமயம் அருகில் மணற்பாங்கான பகுதியில் நதி ஓடுவதுபோல தோற்றம் தெரியும். அருகில் செல்ல செல்ல நதி தெரிந்துகொண்டேதான் இருக்கும். நதியை நெருங்க முடியாது. இது பாலைவனத்தின் மாயை. இதைக் ‘கானல்நீர்’ என்கிறோம். மாயையான கானல் நீரைத் தேடியவன் அதை அடைந்ததாக, ஒரு நிகழ்வு நடந்ததாக கூறப்படவேயில்லை. அதைப்போலத்தான் இவ்வுலகிலும் மாயை நிறைய உண்டு. கண்ணுக்கு தெரிந்தாலும், மாயைகள் நிஜமாகாது.
உலகில் எல்லாம் மாயை. இன்பமும், துன்பமும் மாயை. இன்பத்திற்கு இன்பப்படாமலும், துன்பத்திற்கு துன்பப் படாமலும், மாயைக்கு ஆட்படாமல் ஒரு ஆத்மாவின் உயிர் வாழ்ந்தால் அதன் வாழ்வு வெற்றி பெற்றதாகிவிடும்.
அந்த மாளிகையில் திருடன் ஒருவன் உள்புகுந்தான். அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த படுக்கை அறை அருகிலேயே இருந்த அறையின் கதவு திறந்தே இருந்தது. சப்தமில்லாமல் அங்கு சென்றவன், அங்கு பணப்பீரோ இருப்பதைக் கண்டான். நல்லவேளை எல்லோரும் நன்றாக தூங்குகின்றார்கள். எந்த பிரச்சனையும் இன்றி சுலபமாக திருடிக் கொண்டு போய்விடலாம் என நினைத்தான்.
அப்போது அந்த பணப் பெட்டியின் கைப்பிடியில் ‘பீரோவை திறக்க கஷ்டப்பட வேண்டாம். பூட்டப்படவில்லை, கைபிடியை திருகினால் பீரோவைத் திறந்து விடலாம்’ என்று எழுதியிருக்கக்கண்டு அதி ஆனந்தம் கொண்டான். இது மாயை! இப்படி யாராவது எழுதி வைப்பார்களா என்று நினைக்காமல், உற்சாகத்துடன் மெதுவாக கைப்பிடியைத் திருகி பீரோவின் கதவை திறக்க முற்பட்டான். கைப்பிடித் திருகியதும் அதன்மூலம் இனைக்கப்பட்டிருந்த நெம்புகோல்பிடி வேலைசெய்து ஒரு மண் மூட்டை மேலிருந்து தள்ள, அது கீழே இவன் தலைமேல் விழுந்தது.
ஆ என்று ஓலமிட்டான். அனைவரும் உறக்கத்திலிருந்து விழித்தனர். விளக்குகள் எரிந்தன. பிடிபட்ட திருடன், இப்படி மனிதர்கள் மாயை செய்தால், எப்படி இவர்களை நம்பி தொழில் செய்வது என வருந்தினான். எல்லோரும் எத்தனை காலத்திற்கு ஏமாந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றவில்லை. ஏமாந்தவர்கள் இருக்கும் வரை ஏமாற்றத்தான் செய்வார்கள்-குருஸ்ரீ பகோரா.

3-15.புகழ்!

Written by

புகழ்!                                                                                                                          

எப்படியாவது தன் பெயர் வரவேண்டும், ஒலிபெருக்கியில், தொலைகாட்சித் திரையில், பத்திரிக்கைகளில் என விரும்புவபர்கள்தான் அதிகம். எதற்கு இந்த புகழ் பரபரப்பு. அதனால் உங்களுக்கு என்ன நன்மை. ஆன்மாவிற்கு என்ன பயன். சிந்தியுங்கள். கோவிலில் தொங்கும் திரைச்சீலையில்கூட இது இன்னார் உபயம் என எழுதி வைக்கின்றார்கள். அவர்களுக்கு ஓர் கேள்வி! நீங்கள் கோவிலில் ஆன்மீகத்திற்கு உதவுவதற்கு கொடுத்ததா! அல்லது அங்கு வரும் அன்பர்கள் அனைவரும் உங்கள் பெயரை படித்து தெரிந்துகொள்ள எழுதப்பட்டதா! ஆன்மீகத்தின் புனிதத்தன்மையை கெடுக்காதீர்கள்.
உலகில் உற்பத்தி ஓர் அதிசயம். அதை உருவாக்கிய இறை நமக்கு  எவ்வளவோ செய்துள்ளார். உணவுக்கு, உடைக்கு, உறங்குவதற்கு, உறவுக்கு, உல்லாசத்திற்கு, இரசிப்பதற்கு, நேசிப்பதற்கு எவ்வளவோ தந்துள்ள இறைவன் இதையெல்லாம் தான் கொடுத்து என எங்கும் எழுதிவைக்கவில்லை.
ஆன்மாக்கள் இதுபோன்ற யாருக்கும் உதவாத செயல்களில் மனதை அலைய விட்டுக் கொண்டிருக்கின்றது. நோக்கங்கள் ஓர்முனைப்பட்டிருப்பதில்லை. பயன் மட்டும் எப்படி எதிர்பார்த்தவாறு கிடைக்கும். எவ்வளவு பெரிய கோவில்கள், எவ்வளவு கலைநயமிக்க சிற்பங்கள், தூண்கள், கட்டிடங்கள் இவ்வளவு காலமாகியும் தங்கள் பெருமைதனை சொல்லிக் கொண்டிருந்தாலும், அதை வடித்த சிற்பியையோ அதை உருவக்க முயற்சிகள் மேற்கொண்டவர்களையோ கீழே ஏன் எழுதிவைக்கவில்லை. அவர்கள் நோக்கம் ஓர்முனைப்பாடு கண்டிருந்தது. காலங்காலமாய அழியாமல் இருப்பவைகளை பற்றிய செய்திகள் செப்புத்தகட்டில் கல்வெட்டுக்களில் ஓரிடத்தில் அமைதியாய் இருக்கின்றது.
அதை நாம் தேடிச்சென்று பார்த்து, கேட்டுத் தெரிந்து மகிழ்வு கொள்கின்றோம். ஆச்சரியமடைகின்றோம். விரைவில் அழியக்கூடிய ஒளிதரும் விளக்குகள், மின்விசிறி, திரைச்சீலையில் கூட உபயம் எழுத்துக்கள் தற்போதைய மனிதனின் ஆர்பரிக்கும் புகழ் நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. தன் புகழுக்காக பெயர்களை எழுதிவிட்டு தானம் செய்தேன் என பறைசாற்றி என்ன பயன் சொல்! அதன் பலன் என்ன காண்பீர்!
நீங்கள் செய்யும் செயல்களால் புகழ் பரவவேண்டும். அது உங்களைத்தேடி வரவேண்டும். அதைவிடுத்து தீய வழிகளில் பொருள் சேர்த்து அதை சுயவிளப்பரத்திற்குப் பயன் படுத்தி அதன் மூலம் புகழ்தேட நினைப்பதால் எந்தவித பயனும் இல்லை. யாருக்கும் அதன் பலன் போய்ச்சேராது. உங்கள் அமைதிக்குகூட சிறிதும் அது உதவாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
வறியவர்களுக்கு கொடுத்தலால் புகழ் உண்டாகவேண்டும். தானங்களை புகழுக்காகவோ, புண்ணியத்திற்காகவோ செய்யக்கூடாது. புகழுக்காக அன்றி, இல்லாதவருக்கு உதவுவதே இருப்பவனின் கடமை.
ஒருவர் முகத்திற்கு முன்னாள் சொல்லப்படும் புகழ் அர்த்தமற்றவை. அதுவே அவருக்குப் பின்னால் பேசப்படுமானால் அதில் ஆழமான அர்த்தங்கள் உண்டு. மேலும் ஒருவர் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது தற்புகழ்ச்சி எனப்படும். தற்புகழ்ச்சி தற்கொலைக்குச் சமம். இதையே ஒருவர் தன்னை, சாகாமல் சாகடித்துக் கொல்வது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே மறைமுகமாககூட தற்புகழ்ச்சி பாராட்டக்கூடாது. மூடரின் மனதில் உங்களைபற்றிய பொய்யான எண்ணங்கள் உண்டாக இடம்போடாதீர்கள்.
ஒரு துறையில் முன்னேறி வெற்றியுடன். புகழுடன் நிலைத்திருக்க வேண்டும். பூத உடல் அழிந்தபின்னும் புகழ் நிலைத்திருக்கும் வண்ணம் செயலகள் இருக்க வேண்டும்-குருஸ்ரீ பகோரா.

3-14.கவலை!கடுஞ்சொல்!

Written by

கவலை!                                                                                                                      

கஷ்டம், துன்பம், கவலை அதிகம் என வருந்துபவர்கள் மேலும் துன்பங்கள் சேர்ந்து துயரங்கள் அதிகமாகும்போது கடைசியாக சேர்ந்த துன்பம் விலகினால்கூட அது ஒரு பெரிய ஆறுதலாகிவிடும். எப்போதும் உள்ள கவலைகளுக்குத் தன்னை தயார் படுத்திக் கொள்கின்றான்.
மனித ஆன்மாவிற்கு தீராத ஒன்று கவலை. நினைவு தெரிந்த நாள்முதல் ஒவ்வொருநாளும் ஏதாவது ஒன்றை நினைத்து கவலைப்படுவதே அதன் நிலை. இதனால் தொடர்ந்து கவலைமேல் கவலைகள் அடைந்து அதிதீவிரமாகும்போது அவனின் தசைகள், நரம்புகள், மூளை, ஐம்புலன்கள் ஆகியவைகள் அந்த நினைவுகளால் பாதிக்கப்படுகின்றன.
உடலில் இரத்த உற்பத்தி குறைந்து சோகை ஏற்படும். அதன் ஜீரணசக்தி குறைகின்றது. ஜீவசக்தி கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து கொண்டுவருகின்றது. கவலை மிகுதியினால் அதனுள் ஓர் பயம் ஏற்படுகின்றது. அது கோபத்தைத் தூண்ட அதனால் அவனின் செயல்கள் எல்லாவகையிலும் பாதிக்கின்றன.
உறுப்புக்கள் பாதிக்கின்றன. பலவிதமான நோய்களால் அவன் பீடிக்கப்படுகின்றான். எனவே கவலையை விடமுயற்சி செய்யுங்கள். எது நடந்தாலும் கவலைப்படாதீர்கள். பல துக்க அனுபவங்களை கண்டு கேட்டு அனுபவித்து அவன் புத்தி தெளிகின்றான். அந்த அனுபவம் அறிவுக் கண்ணைத் திறக்கின்றது. தொடர்ந்த இடர்களை வேறுவழியின்றி பொறுத்துக் கொண்டதால் மன உறுதி உண்டாகிறது. அகத்தினுடைய பாவம் ஒழியும். இடரைக் கண்டு கலங்காதே! ஒவ்வொரு இடரும் மன உறுதியைக் கொடுக்கும் சாதனமாகும். உறுதியுடன் எதிர்த்து நின்று சாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
நடப்பது நடக்கட்டும் என விட்டுவிடுங்கள். உங்கள் ஆலோசனைபடி எது நடைபெறுகின்றது? நடக்கின்ற விஷயங்களில் உங்களுக்கு சாதகமானவைகளைத் தேடுங்கள். ‘தேடுங்கள் கிடைக்கும் என்றார் ஏசுபிரான்’. கிடைக்காத ஒன்றுக்காக, நடக்காத ஒன்றுக்காக மனம் ஏங்கி, தவித்து, கவலைகொண்டு வாழ்வில் கிடைத்துள்ள பொன்னான நேரங்களை வீணடிக்காதீர்கள். கிடைத்த நிகழ்வில் சந்தோஷப்படுங்கள். கவலையை மறந்து அந்த சிறிய சந்தோஷம் உங்கள் உணர்வுகளுக்கு, உறுப்புகளுக்கு, உள்ளத்திற்கு தரும் சிறிய ஆறுதலை அனுபவியுங்கள்.
வாழ்நாளில் ஒவ்வொரு விநாடியும் ரசியுங்கள். பார்ப்பதை, பேசுவதை, செயலை, உண்பதை எல்லாவற்றையும் அங்குலம், அங்குலமாக ரசியுங்கள். வாழ்நாள் கடைசிவிநாடி வரைக்கும் முழுமையாக ரசித்துக்கொண்டிருங்கள். சந்தோஷமான தருணங்களை கவலையில் துரத்திவிட்டு வருந்தாதீர்கள். எந்தசூழலிலும் கவலையை நினைக்காமல் அந்த சூழலின் வயப்படுங்கள்.
விரும்பாதது வந்தாலும் துயரம், விரும்பியது விலகினாலும் துயரம், விரும்பியதை அடைந்தபின் அதை இழந்தாலும் துயரம். நிலையில்லா மறையும் உலகவாழ்வில், நம்மிடம் உள்ளவைகளினால் கிடைக்கும் இன்பத்தைவிட, அவைகளை இழந்துவிடுவோமோ என்ற நினைவுகளினால் ஏற்படும் அச்சத்தின் துயரமே, ஆன்மாவை கவலை கொள்ளவைக்கின்றது.
இன்சொற்கள்: உன் உள்ளத்தில் கவலைகள் ஏற்பட்டால் அதை நீக்க முயற்சி செய். அந்த கவலைகள் உன் முகத்தில் தெரியும். அதாவது “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” கவலையை நீக்கி ஆனந்தத்துடன் கூடிய சந்தோஷமான முகத்துடன் வெளியில் வா! உன் துக்கம், கவலை உன்னுடன் போகட்டும். மற்றவர்களுக்கு அதை தொற்றவிடாதே! மற்றவர்கள் ஏன் இப்படி இருக்கின்றாய், என உன்னை நலம் விசாரிக்கும்படி செய்யாதே! அதனால் அவர்கள் மனம் வாடக்கூடும். அகத்தின் இருளை வெளி உலகுக்கு சுமந்து செல்லாதே!
பிரச்சனைகள், கவலைகள், துன்பங்கள் யாருக்குத்தான் இல்லை! அதிலிருந்து தப்பி ஓட நினைக்காதே! வெற்றியா! தோல்வியா! என நினைத்து கணக்குப் போட்டுக் கொண்டிருக்காதே! நீ வெற்றி பெறவேண்டும் என நினைப்பது மனம். அந்த எண்ணங்கள் பிறந்த மனம் உறுதியோடு செயல்பட உதவு. விடாமுயற்சியுடன் செயல்படு!
ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் சக்தி உண்டு. நம் வாய் வழி வார்த்தைகளைப் பொறுத்தே நமக்கு மதிப்பீடு இடப்படுகின்றது. மனம் வழி எண்ணி செயல்கள் ஆரம்பித்தால் அதுவே நம் விதிக்கு ஆரம்பம். மும்மரமான சூழலில் வெற்றியின் இரகசியத்தை காண, கண்டுபிடித்து சந்தோஷிக்க முயலுக. நீங்கள் எப்போதும் மற்றவர்களால் பாராட்டப் படுகின்றீர்களா! இல்லையே!
பொறுப்பான அக்கறையுடன் சமூக நலனைக்கருத்தில் கொண்டு சில ஆன்மாக்கள் செய்யும் எத்தனையோ சேவைகள் கண்டுகொள்ளப்படாமல், யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் ஒதுக்கப்படுதல் கண்டு மனம் தளராதே! ஓர் ஆன்மாவால் கவனிக்கப்பட்டு போற்றப்படவேண்டும் என்ற நினைவில் நீ எதுவும் செய்யாதே!
கவலை கொள்ளாமல் துணிந்து பிறர் நலன் கருதி உங்கள் செயலை செய்து கொண்டிருங்கள். பாராட்டுகள் எல்லாம் தானாக உங்களை வந்து சேரும். அது ஆரோக்கியத்தின் முதற்படி. எனவே கவலை மறந்து சந்தோஷத்தை எங்கும் எதிலும் தேடுங்கள். கண்டுபிடியுங்கள், கிடைக்கும்... சந்தோஷப்படுங்கள்.
வசதி, மதம், கல்வி கொண்டிருக்கின்றீர்கள் எனக் கர்வப்படாதீர்கள். உங்களைப்பற்றிய கர்வமில்லா உயர்வான எண்ணம் போதும். வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. சொற்களின் விளைவுகளைப் புரிந்து அவைகளை உபயோகித்தல் சிறப்பு. கடுஞ்சொல் கூறாதீர்கள்.
அச்சொற்கள் ஒருவரின் மனதை எவ்வளவு புண்படுத்த முடியும், வேதனைப்படுத்த முடியும், கோபம் கொள்ளவைக்க முடியும் என்றால், ஏன் ஓர் இனிமையானசொல் சாந்தபடுத்தி அமைதியை ஏற்படுத்தாது. அதனால் ஏன் அவர் சந்தோஷமாயிருக்க முடியாது. முடியும். எனவே அன்பான ஆதரவான இன்சொற்களை உபயோகியுங்கள். அது வாழ்வில் வளமூட்டும். வாழ்வின் உயர்வும் தாழ்வும், ஆன்மாக்களின் உறவும், பிரிவும் வார்த்தைகளால்தான் ஏற்றம் இறக்கம் காண்கிறது.
பேசு மனிதா! பேசு, அளவுடன் பேசு! இனிமையாகபேசு! பயனுள்ளதாக பேசு! என ஆன்றோர்கள் கூறியுள்ளதைப்போல அளவுடன், பயனுள்ளவற்றை அன்புடன் பேச வேண்டும். இதை சரியாக யாரும் கடைபிடிப்பதில்லை. கடுமையான சொற்களையும், வன்சொற்களையும் தமது பேச்சில் அதிகம் பயன்படுத்துகின்றனர். சுடு சொற்கள் அடுத்தவர், கேட்பவர் மனத்தில் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தி அவர்களின் செயல்பாட்டின் திறனை இழக்கச்செய்யும் என நினைத்துப் பாருங்கள். உங்களை வேறொருவர் கடுஞ்சொற்களால் மனதை புண்படுத்திவிட்டார் என வைத்துக் கொள்ளுங்கள். அது எவ்வளவு நேரம் உங்களை ஆக்கிரமித்து, உங்களின் செயல்களில் பாதிப்பை ஏற்படுத்தி, உங்களை முடக்கி வைக்கின்றது என்பது புரியும்.
பஞ்சவடியில் ராம, இலக்குமண, சீதை இருந்தபோது, மாரீசன் மாயமானாக பொன்னிறத்தில் வந்ததை பார்த்து மயங்கிய சீதை, அது வேண்டும் என ராமனிடம் கேட்க, ராமன் சீதையை பார்த்துக்கொள்ள சொல்லி காட்டிற்குள் சென்றுவிட, சீதா, இலக்குமணா’ என வஞ்சகமாக மாரீசன்  இராமன் குரலில் அலற, சீதை இலக்குமணனை உடனே சென்று பார்க்கச் சொன்னபோது, அவர் சீதையை தனியே காட்டில் விட்டுச்செல்ல தயங்க, விதியின் செயல்பாட்டால், அதை தவறாக எடுத்துக் கொண்டு தகாத கடுமையான வார்த்தைகள் கூறியதே, இலக்குமணன் மனம் வேதனையடைந்து சீதையை தனியே விட்டுச் செல்லவும், சீதையை இராவணன் தூக்கிச்செல்லவும் வழிவகுத்தது.
கடுஞ்சொற்கள் எவ்வளவு வறட்சியை அந்த இதயத்தில் தோற்றுவிக்கும் என்பத புரிந்து கொள்ளுங்கள். “தீயினாற் சுட்ட புண் உள்ளாரும், ஆறாதே நாவினால் சுட்டவடு” என வள்ளுவர் கூறியது மிகையாகாது. பல வருடங்கள் சென்றபின்னும் சொல்லடிபட்ட இதயம் ஆறாத காயங்களை, இரணங்களை கொண்டிருக்கின்றது.
தான் இறக்கும் தருவாயில் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும்போது, தன் பேரன் யுதிஷ்டிரர், பீஷ்மர் வாழ்வில் அடைந்த வெற்றியைப்பற்றி கேட்டபோது ‘உன் நாவிலிருந்து எழும் சொற்களின் மீது கட்டுப்பாடு வைத்துக் கொண்டால் போதும், அது உன் வெற்றிக்கு வழிவகுக்கும்’ என்று பீஷ்மர் கூறியதாக புராணத்திலிருந்து நாம் அறிகிறோம்.
உங்களைவிடப் பெரியவர் ஒருவரை மரியாதையுடன் நீங்கள் எனச்சொல்வதற்குப் பதிலாக நீ என்று அழைத்தால் அவரை கொல்லாமல் கொன்றதற்குச் சமம் என்கின்றது சாஸ்திரங்கள். மகாபாரதபோரில் கர்ணனால் மயக்கநிலையடைந்த தர்மர், கர்ணனை கொல்லாமல் வந்ததைப்பார்த்த கோபத்தில், அர்ஜுனனையும் அவன் காண்டீபத்தையும் இகழ்வாகப்பேச, காண்டீபத்தை இகழ்ந்தவரை கொல்வேன் எனசபதம் செய்திருந்த அர்ஜுனன், தர்மரை கொல்ல வாளை உருவினான்.
அண்ணனை கொல்வது அதர்மம் எனத்தடுத்த கிருஷ்ணன் அர்ஜுனனின் சபதம் நிறைவேற, ‘அர்ஜுனா. மிகவும் உயர்வாகப் போற்றும் ஒருவரை இகழ்ந்து பேசினாலும் ஒருமையில் திட்டினாலும் அவரை கொலை செய்ததற்கு சமம்’ எனக்கூறினார். அர்ஜுனன் அப்போதைக்கு அதுபோன்று நடந்து தமையனை திட்டித்தீர்த்தான்.
அண்ணனை இகழ்ந்தவனை கொல்ல சபதம் செய்திருந்த அர்ஜுனன் தன்வாளால் தன் தலையை வெட்ட முயலும்போது கண்ணன் தடுத்து, தற்கொலைசெய்வது பாவம் எனக்கூறி, தற்பெருமைபேசுவது தற்கொலைக்குச் சமம், எனவே நீ உன்னையே புகழ்ந்துபேசி உனது சபதத்தை நிறைவேற்றிக்கொள் என அறிவுரைகூறினார்.
எனவே வாழ்வில் உயர்வான ஒருவரை ஒருமையில் பேசுவதும், இகழ்ந்து பேசுவதும், அவரை கொல்லாமல் கொல்வதற்கு சமம். மேலும் தன்னைபற்றி தாமே சொல்லும் தற்பெருமை தற்கொலைக்கு சமமானதாகும். ஒருவரிடத்தில் நாம் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தால் அவரிடம் நம்மால் சுடு சொற்களால் பேசமுடியாது. ஆகவே ஒவ்வொருவருக்கும் தேவை, எல்லா உயிர்களிடத்தும் மதிப்பு, மரியாதை கொண்டு நேசிக்க பழகவேண்டும். அப்போது அந்த உயிர்களை நோக்கி நாம் கடுஞ்சொற்களை வீசமாட்டோம்.
இராமாயணத்தில் அரக்கி அயோமுகியின் மூக்கை லட்சுமணன் அறுக்க, அவள் அலற, அந்த அலறலைக்கேட்ட ராமர், அவளைக் கொன்றுவிட்டாயா? என கேட்கிறார். ‘பெண்ணைக் கொல்வேனா?’ எனக் கூற நினைத்த லட்சுமணன், ராமன் தாடகையை கொன்ற நினைப்புவர, அப்படிச்சொன்னால் அண்ணன் வருத்தமடையக்கூடும் என நினைத்து, ‘இல்லை, அண்ணா! அவள் அலறினாள், விட்டுவிட்டேன்’ எனக்கூறியதாக சொல்லப்பட்டுள்ளது. அண்ணனிடம் லட்சுமணன் கொண்டிருந்த அன்பின் காரணமாக, ராமர் செய்ததைக்கூட சொன்னால் அவர்மனம் வருந்தும் என நினைத்த தம்பியின் பக்குவமான மனம், பண்பு நமக்கு வேண்டும்.
நாவினால் பேசமுடியும் என்பதால் எதை வேண்டுமாலும் எப்படி வேண்டுமானாலும் பேசக்கூடாது. நாவினால் பேச முடியுமோ தவிர அதன் பாதிப்புகளை களைய முடியவே முடியாது. பொய் பேசுவதை தவிர்த்து, உண்மை பேசவேண்டும், இனிமையாக பிறர் மனம் புண்படுத்தாதவாறு பேசவேண்டும். உண்மை சுடும் என்பதற்காக கேட்பவர்கள் நெஞ்சம் பாதிக்கும் வண்ணம் கடுஞ்சொற்களை உபயோகிக்ககூடாது. யாருடன் பேசினாலும் அவரை மீண்டும் நீங்கள் பார்க்கப் போகிறீர்களா என்பதற்கு உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எந்த உத்திரவாதமும் கிடையாது. எனவே எந்த எதிர்பார்ப்பில்லாமல் நட்புரிமையுடன் பேசுங்கள். அவரின் மனதை காயப்படுத்தாமல் உரையாடுங்கள்.
ஓர் ஏழை கூலித் தொழிலாளி. நல்லவன். பரோபகாரி. ஓருநாள் கரும்புத் தோட்டத்திற்கு வேளைக்குச் சென்றான். வேலை முடிந்ததும் அவனுக்கு கரும்பு கட்டு ஒன்றையே கூலியாக அளித்தனர். அதைப் பெற்று வரும்போது பள்ளிச் சிறுவர்களைக் கண்டான். அவர்களுக்கு ஒவ்வொரு துண்டாக கொடுத்து ஆனந்தப்பட்டான். கடைசியாக ஒரே துண்டுதான் மீதியானது. அதை எடுத்துக் கொண்டு வீடுதிரும்பினான்.
அன்றைய சம்பாத்தியத்தில் மீதி அந்த ஒரு துண்டுக் கரும்பே என்றதும், அவன் மனைவி அளவிற்கு அதிகமான கோபமடைந்தாள். கையில் கிடைத்த அந்த துண்டு கரும்பால் அந்த தொழிலாளியை அடித்தாள். கரும்பு இரண்டானது. அடி வாங்கி வேதனையைக் காண்பிக்காமல் அன்பே.. ஒரு துண்டுக் கரும்பை இருவர் எப்படிச் சாப்பிடுவது எனக் குழம்பியிருந்தேன். நல்லவேளை நீ அதை இரண்டாக்கினாய். வா! ஆளுக்கு ஒன்றாக கரும்பைத் ருசிக்கலாம் என்ற அவனின் இனிய அன்பு மொழிக்கேட்டு மனம் வருந்தினாள். மனம் திருந்தினாள். அன்பு கொண்டாள். அன்பு மனைவியினால் கரும்பின் சுவை அதிகரித்தது.
உண்மையை இனிமையாக அளவோடு பேசவேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் இதயங்கள் நம்மிடமிருந்து குளிர்ந்த, பிரியமான, இதமான, இனிய சொற்களுக்காக ஏங்கிக் கிடக்கின்றது. அந்த சொற்கள் அந்த இதயங்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தி ஓர் மலர் பூத்ததுபோன்ற இனிய சுகத்தை தரும். சந்தோஷம் பிறக்கும். பிறர் சந்தோஷமாயிருத்தல், நம்மை சுற்றியுள்ளோரை சந்தோஷப் படுத்துதல் நம்கடமை. அது சந்தோஷக் கூட்டமாகட்டும்.
அதுசரி! கடுஞ்சொற்கள் உங்களை நோக்கி வீசப்பட்டால் என்ன செய்வது. ஒருவர் ஒரு பொருளை உங்களுக்கு அன்புடன் கொடுத்தார் என்றால், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிடில் அது அவரையே சேரும். அதைப்போன்றே உங்கள்மேல் வீசப்பட்ட கடுஞ்சொற்கள், நீங்கள் குற்றமற்றவர் என்றால், அதை முற்றிலும் மறுத்து நிராகரித்தால், அதே சொற்கள் பயனின்றி போகும். உபயோகித்தவருக்கே அது சேரும்.
எனவே கடுஞ்சொற்களற்ற இன்சொற்களையே உபயோகிக்க பழகுங்கள். அன்பு இல்லாமல், ஏதோ ஒரு காரணத்திற்காக, பொருள் காரணமாக ஒருவர் பேசுகின்ற இனியசொல் அதைக் கேட்பவனுக்கு துன்பத்தைத் தரக்கூடியதாகும்.
ஒருவரை வார்த்தைகளால் சுட்டால், அது அந்த மனதில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி பகைமை வளர்த்துக் கொண்டே இருக்கும். பின்னாளில் அது பழிவாங்க தயாராக இருக்கும். பாஞ்சாலியின் சுயம்வரத்தில் கர்ணன் கலந்துகொள்ள, ஓரு தேரோட்டியின் மகனை ஒருநாளும் மணக்கமாட்டேன், என கூறிய சொற்கள் கர்ணன் மனதில் பதிந்துவிட்டன. தர்மவாணாகிய கர்ணன், பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரிந்தபோது, அமைதியாக இருந்ததற்கு இதுவே  காரணம்.
துரோணரும், துருபதனும் நண்பர்கள். நட்பில் நான் அரசனனால் அரசில் பாதி தருகிறேன் என்றான். பின்னாளில் மிகுந்தகஷ்டங்கள் ஏற்பட்டபோது நண்பன் கூறிய வார்த்தைகளை நம்பி துரோணர், துருபதனிடம் செல்ல அவரை கடுஞ்சொற்களால் மிகுந்த அவமானத்திற்குள்ளாக்கினான். துரோணர், அர்ஜுனனின் ஆசிரியரானபோது குரு தட்சனையாக துருபதனை கைதுசெய்து, துரோணர் முன் நிறுத்தினான். அப்போது துரோணர் துருபதனிடம், நீ இப்போது எல்லாவற்றையும் இழந்து விட்டாய். உன் நாடு என்னிடம். அதில் பாதியை உனக்கு தானமாகத் தருகிறேன். நாம் இருவரும் சமம் என துரோணரைக் கூறவைத்தது, அன்று துருபதன் விதைத்த கடுஞ்சொற்களின் விளைவே.
அதைப்போன்றே சிசுபாலன் தகாத கடுஞ்சொற்கள் கூறவே, அவைகளைப் பொறுமையுடன் கேட்ட கிருஷ்ணன், அந்த வார்த்தைகள் 1000க்கு அதிகமாகவே இனியும் பொறுமை காட்டலாகாது என அவனை சக்ராயுதத்தால் கொன்றதாக சொல்லப்பட்டுள்ளது. வாழ்வுப் பயணத்தில் கடுஞ்சொற்களைவிட இன்சொற்கள் மிகவும் பயனளிப்பவை என்பதை புரிந்து கடுஞ்சொற்களை தவிர்த்து, இன்சொற்களை உபயோகிக்கப் பழகுங்கள். அவைகள் உங்கள் நிலையை உயர்த்தும்.
ஒரு கோவில் யாணை இயல்பாகவே சாதுவான குணமுடையது. யாணைப் பாகனின் சொல்லுக்கு கீழ்படிந்து இருந்தது. கயவர்கள் பலர் யாணக்கூடத்தின் அருகே இரவில் சந்தித்து தங்களின் செயல்கள் பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். இரக்கம் அற்றவர்களாகவும், தயவு தாட்சண்யம் அற்றவர்களாகவும் நடந்து கொள்ளவேண்டும் என்பதைப்பற்றி அடிக்கடி கேட்ட யாணையின் செயல்களில் மாறுபாடு தெரிந்தது. ஒருநாள் திடிரென்று அது யாணைப்பாகனைத் தாக்கியது. பலத்த காயம் அடந்தான்.
அதிகாரி மேலதிகாரியின் ஆலோசனையைக் கேட்டார். விசாரனை நடந்தது. முடிவில் நல்ல இயல்பான சாது குணமுடைய யாணை தொடர்ந்து தீவினைச் சொற்களை கேட்டதால் ஏற்பட்ட மாற்றம் என அறிந்து, இரவில் காவல் பலப்படுத்தப்பட்டது. யாணை தொடர்ந்து தீச்சொற்களை கேட்காததாலும், கோவிலில் நடந்த ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் பஜனை போன்றவைகளையே கேட்டதாலும் அதன் போக்கில் மாறுதல் தெரிய ஆரம்பித்தது. எனெவே எந்த ஆன்மாவாயிருந்தாலும் தொடர்ந்து துர்போதனைகளையும் கடுஞ்சொற்களையும் கேட்டுக்கொண்டிருந்தால் அந்த ஆத்மாவின் செயல்பாடுகளில் வக்ரம் தென்படும். இன்சொற்களே நல்ல பலன் தரும்.
ஒவ்வொரு மொழியிலும் இனிய சொற்கள் நிறைந்து கிடக்கும்போது, கடுமையானச் சொற்களைக் கூறுவது என்பது, கனிகள் நிறைந்திருக்கும்போது காய்களைத் தேடுபவன் செயலாகும். எல்லோருக்கும் துன்பம் தரும் கடுஞ்சொற்களைத் தவிர்த்துக் கூறும் இனிய சொற்கள், இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தைத் தரவல்லது-குருஸ்ரீ பகோரா.

3-13.பணம்!

Written by

பணம்!                                                                                                                        

எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும். சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் கொள்கின்றனர். தன்தேவைக்கு, தன்னை நாடியுள்ளவர்கள் தேவைக்கு என சம்பாதிக்க முயலுகின்றான். பிறகு சுகபோகங்களுக்கு என சம்பாதிக்க விழைகின்றான். செல்வம் சேர்த்தபின்பும் அதன் மேல் கொண்ட அன்பால், ஈர்ப்பால், ஆசையால் மீண்டும் மீண்டும் பணம் சேர்க்க தன் நாட்களை வீணடிக்கின்றான்.
அதனால் தன் ஆரோக்கியத்தை தொலைத்து விடுகின்றார்கள். அவ்வாறு ஒரு கால கட்டத்தில் இழந்த ஆரோக்கியத்தை மீட்க பணம் செலவு செய்கின்றனர். பகல், இரவு, நேரம், காலம் பார்க்காமல் சம்பாதித்ததால்தான் தங்கள் ஆரோக்கியம் கெட்டுவிட்டது என நினைக்காமல், இவ்வளவு பணம் நம்மிடம் இருப்பதால்தான் செலவு செய்யமுடிகின்றது என நம்புகின்றான். உணவு, உடை, இருப்பிடம் இதற்குமேல் வீண் ஆடம்பரத்திற்காக பணம் தேடியதால்தான் ஆரோக்கியம் கெட்டதென்று யாரும் நினைப்பதில்லை.
ஆரோக்கியம் மட்டுமல்ல பலநேரங்கள், பல ஆண்டுகள், நீங்கள் அடையவேண்டிய சிறு சிறு சந்தோஷங்களை நீங்கள் இழந்ததோடல்லாமல், உங்களால் மற்றவர்கள் அடையக்கூடிய சந்தோஷங்கள், மற்றவர்கள் உங்களுக்கு தரக்கூடிய சந்தோஷங்களையும் இழந்துவிடுகின்றீர்கள். இந்த பொன்னான சந்தோஷ வாய்ப்புகளை பொதுவாக இழந்துவிட்டு பணம் சேர்த்து என்ன பயன்.
பணம், உருண்டோடும் பணம். இதை தேடுபவர் வாழ்வும் உருண்டுதான் ஒடிவிடும். ஓர் நிலையில் இருந்து இந்த உலகின் இன்ப துன்பங்களை புரிந்து சரியாக அனுபவிக்காமல் பணம் தேடுதல் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டவர் மற்ற எதையும் கவனத்தில் கொள்ளமாட்டார். பணம், பொருள் சேர்க்க எந்த முறையும் கடைபிடிப்பார்.
தவறு எனத் தெரிந்தாலும், மற்றவர்களுக்கு துன்பம் தரும் என்றாலும் அவரின் கவனம் அந்த பணத்தை எப்படியும் அடைவது என்பதேயாகும். அளவற்ற ஆசைகொண்டு பணம்தேடும், எவ்வகையிலும் சம்பாதிக்க முயலும் எல்லோரும் ஓர்வகையில் பிச்சைக்காரர்களே! அவன் பிச்சையெடுக்க யாசிக்கின்றான். இவன் பொருள் சேர்க்க யாசிக்கின்றான். அது ஓர் இகழ்ச்சி என்றால் இதுவும் ஓர் இகழ்ச்சிதான்!
பொருள்சேரச் சேர ஒருவன் தன் நிலை மறக்கின்றான். தன் குடும்பம், நல்லது, கெட்டது அனைத்தும் மறந்து செயல்படுபவன், உலகில் தான் பிறந்த பயன், வாழ்வின் பாதையில் கிடைக்கும் சந்தோஷங்களை முழுமையாக, ஏன் ஓரளவுகூட அனுபவிக்க வாய்ப்பில்லை. ஆசைகளின் இருப்பிடமான பணத்தின் மேல் பணம் சேர்க்கும் எண்ணங்களுடையவனும் பிச்சைக்காரர்களே!
‘உருண்டோடும் பணம்’,.. ‘பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே’ என கவிஞர்கள் கூறியதுபோல உங்களிடம் உள்ள பணம் எவ்வளவு காலத்திற்கு உங்களிடம் அல்லது உங்கள் வாரிசுகளிடம் நிலைத்து இருக்கும். சிந்தியுங்கள்! இன்று இது உங்களுடையது, நாளை இது இன்னொருவருடையது, அடுத்தநாள் வேறொருவருடையது, என உருண்டோடும் பணம் எத்தனை நாள் யார் யார்வசம் இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.
ஓர் ஞானி அந்த ஊருக்கு வந்தபோது பணிவிடைகள் செய்து அவரின் நன் மதிப்பைப் பெற்றான். சில நாட்கள் கழித்து அவன் வறுமையை நினைத்து அந்தஞானி இனி தினமும் உனக்கு ஒரு பொன்காசு வீதம் 100 நாட்களுக்கு கிடைக்கும் என்றார். மகிழ்வுற்றவன் காசு கிடைக்கக் கிடைக்க அதைப் பத்திரப்படுத்தி 100 காசுகள் சேர்ந்ததும் ஒரு கோணிப்பையில் கட்டி வீட்டு தோட்டத்தில் புதைத்தான். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை அதை எடுத்துப் பார்த்து 100 காசுகளையும் எண்ணி மகிழ்ந்து திரும்பவும் புதைத்துவிடுவான்.
மாதங்கள் சென்றன. ஒருநாள் அப்படி அவன் தோண்டியபோது அந்த 100 காசுகள் கொண்ட பையைக் காணவில்லை. நிம்மதியிழந்தான். புலம்பினான். சிலநாட்களில் ஞானி அந்த ஊருக்கு திரும்பவும் வந்தார். அவரிடம் சென்று புலம்பினான். நடந்தவைகளைக் கேட்டவர் அவனுக்கு ஒரு பை வரவழைத்துக் கொடுத்தார். அது இவனின் காணாமற்போன் பையாகவே இருக்க ஆர்வமுடன் கையை உள்ளேவிட்டு துளாவினான். கையில் கூழாங்கற்கள்தான் கிடைத்தது. காசைக் காணோம். எரிச்சலடைந்தவன் ஞானியை கோபத்துடன் பார்த்து சப்தமிட்டான்.
அப்போது ஞானி சொன்னார், பணம் கிடைத்தால் செலவழித்து அதனால் ஆனந்தம் அடையவேண்டும், பொருள்களை ஈட்ட வேண்டும், நீயோ புதைத்து வைத்திருக்கின்றாய், அதனால் யாருக்கு என்ன லாபம். புதைத்து வைத்து எண்ணிப் பார்ப்பதற்கு இந்த கற்களே போதும் என்றார். தன் தவறை உணர்ந்தவன் வருந்தி ஞானியிடம் மன்னிப்புக் கோரினான். ஞானி இனியாவது பணத்தினால் பயன்களைப் பெற முயற்சி செய் எனக்கூறி மீண்டும் 100 காசுகளை அருளினார்.
இந்த நிலையில்லா பணத்திற்காக வாழ்வில் நீங்கள் அனுபவிக்க வேண்டிய ஆயிரக்கணக்காண சின்ன சின்ன நிகழ்வுகளை, உங்களுக்கு என்றும் ஆனந்தம் தரும் நிகழ்வுகளை, சந்தோஷங்களை இழந்திருப்பீர்கள். இழந்திருக்கின்றீர்கள். நீங்கள் சம்பாதித்த பணம் அந்தந்த காலத்தில் நீங்கள் இழந்த சந்தோஷங்களை மீண்டும் வாங்கித் தர முடியுமா? முடியாது! கடந்தது கடந்ததுதான்! வாழ்வில் நீங்கள் இழந்தது இழந்ததுதான்!
பணம் சம்பாதிக்க எல்லோரும் ஏதாவது எளிதான வழி இருக்குமா என தேடுகின்றனர். மனமும், எண்ணங்களும் பணம் சேர வழிகாட்டுமேதவிர பணம் தானாக உங்களை வந்தடையாது. உங்கள் அவசியமான தேவைக்கு, உங்கள் உழைப்பின் மூலம் கிடைக்க செய்யும். உழைப்பின் மூலம் வரும் பணமே நிலைக்கும்.
பணம் சம்பாதிக்க வேண்டியதுதான். சோம்பேறியாய் இருந்து பிறர் உழைப்பில், சேர்த்த பணத்தில் சுகவாசியாக இருத்தல் கூடாது. சிறப்பான வாழ்விற்கு சிக்கனமே மேலானது. அது தேவைகளை சுருக்கிவிடும். இது அனைவருக்கும் பொதுவானது. உங்கள் வாரிசுகளுக்கு வழிகாட்ட இது போதும் என்ற நினைவு கொள்ளுங்கள். அது வரை சேர்த்தது போதும் என்று நினைவுகளுக்கு வரைமுறை கொள்ளுங்கள். எவ்வளவு சேர்த்தாலும், இன்னும் கொஞ்சம் என்ற நினைவுடன், போதும் என்ற நினைவு வராவிடின் அதில் அர்த்தமில்லை!
வெறும் பிரமையிலும் மயக்கத்திலும் எல்லோரும் உழல்கின்றோம். கற்பகோடி காலம் வாழப்போவதாக நினைக்கின்றோம். பலதலமுறைக்கு சொத்து சேர்க்கின்றோம். அடுத்தவர் சொத்தை அபகரித்தவர்கள், முறையான வழியிலன்றி தீய வழியில் சம்பாதித்தவர்கள் எத்தனை நாட்கள் சந்தோஷமுடன் இருக்கின்றனர் என்பதை நினையுங்கள். இந்த பூமியில் நிரந்தரமாகத் தங்க வந்தவர்கள் போல் அளவுக்கு மீறி எப்படியெல்லாம் சேர்த்தவர்கள் போன இடம் மண்ணுக்குள்ளே! வாழ்வின் பயணத்தில் இருக்கும் மனிதா! உடலின் ஆன்மாவே! இதை நீ உணர்ந்துகொள்!
நம் முன்னோர்கள் மூன்றாவது தலைமுறையில் மாற்றம் ஏற்படும் எனக்கூறியுள்ளனர். சரியாக யோசனையுடன் சிந்தித்தால் அவர்கள் கூற்று எந்த அளவிற்கு உண்மையானது என நாம் கடந்து வந்த பயணத்தில், பல நிகழ்வுகள் நமக்கு அவற்றை தெள்ளத்தெளிவென புரியவைக்கும். பாவங்கள் புரிந்து, அளவற்ற செல்வம் சேர்த்து, நோயின் கொடுமைக்காகவும், இழந்த சந்தோஷங்களுக்காக கோயில்களுக்காகவும், நல்ல காரியங்கள் என நீங்கள் நினைப்பதற்கும்  செலவிடுதலால் என்ன பயன்? நம்மிடம் உள்ள பணத்தை நமக்கு என செலவு செய்யும் போது மகிழ்வு ஏற்படலாம். அதை மற்றவர்களுக்கு செய்யும்போது மன நிறைவுடன் கூடிய நிம்மதி கிடைக்கும்.
உங்களின் விருப்பமில்லா பிறப்பில், முடிவு தெரியா வாழ்வில், பயணத்தில் கிடைத்த மணியான நேரங்களை வீணடித்து, தேடி வந்த சந்தோஷங்களை இழந்து, வாழ்வின் பயனை அனுபவிக்காமல் முடிவு என்று? எப்போது? என தடுமாறும் உடலே! உடலின் உயிரே! உண்மைகளை உணருங்கள். சந்தோஷமாய் வாழ வழிவகுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம் உங்கள் வாழ்க்கைக்கு, உங்கள் செயல்களில் கண்டு ஆனந்தியுங்கள்.
ஒருவரிடத்தில் சேர்ந்த செல்வம் பந்தில் இருக்கும் காற்றைப் போன்றதே. அது இருக்குமிடத்தில் துன்ப உதைகள் கிடைக்கும். புல்லாங்குழலில் நுழைந்து செல்லும் காற்றைப்போல எல்லோருக்கும் இனிமையை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும்.
நாம் பல அறிஞர்களிடம், அறிவாளிகளுடன் பேசிப் பழகும்போது அவர்களது திறமையான அறிவின் செயல்கள், தாக்கங்களால் நம் அறிவும் பெருக வாய்ப்புகள் ஏராளாம். ஆனால் பணம் கொண்ட ஒருவனிடம் நீங்கள் எவ்வளவு சேர்ந்திருந்தாலும் நீங்கள் பணத்தை அடைய முடியாது.
அறிவால் பணத்தை நீங்கள் சம்பாதிக்கலாம். பணம் சேர்ப்பதிலும் துன்பம். சேர்த்ததைக் காப்பதிலும் துன்பம். அது மறையும் போதும் துன்பம். பணம் என்பது எப்போது ஏதோ ஒரு வழியில் துன்பத்தைத் தருவதுதான் என உணருங்கள். வாழ்க்கை பணம் சம்பந்தப்பட்டது அல்ல. மனம் சம்பந்தப்பட்டது.
பணத்தால் பல தொழிகளில் முதலீடு செய்யலாம். ஆனால் பணத்தையே முதலீடாக வைத்து தொழில்செய்து பணத்திற்குப் பணம் சம்பாதிப்பவர்கள் நிறைய பெருகி வருகின்றனர். அவர்களின் செயல்களில் இரக்கம், மனிதநேயம் கொஞ்சமும் இருக்காது. அவர்கள் ஒருவருக்குக் கொடுத்த பணத்தை திரும்பப்பெற நினைவு கொள்வதில்லை. வட்டி சரியாக வந்தால் போதும். அசலைப் பற்றிக் கவலையில்லை. அந்த அசலும் குறையக்கூடாது. ஏனெனில் அசல் குறைந்தால் வட்டி குறைந்துவிடுமே.
“பொய்மை, இரட்டுற மொழிதல், நயவஞ்சகம், நடிப்பு இவற்றால் பொருளீட்டி பிழைக்கும் பிழைப்பு, நாய்கள் பிழைப்பு என்று கூறியுள்ளார் பாரதியார், எனவே இந்த பிழைகளில்லா பிழைப்பு நடத்த நினைவு கொள்ளுங்கள். பிழைப்பதுவேறு. வாழ்வதுவேறு. இவ்வுலகில் எல்லோரும் வாழ்ந்து காட்டவேண்டும். நான், எனக்கு, என்னுடையது என்று இறுதிவரை எண்ணங்களை கொண்டு வாழ்தல் மனித வாழ்க்கையன்று, அது உலகில் பிழைப்பு நடத்துதலாகும். வாழ்தலாகாது.
‘பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை, வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்’ என வள்ளுவம் கூறுவதைப்போல், பொருள், பணம் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்துச் செலவு செய்யும்போது எல்லோருக்கும் பகிர்ந்து அளிப்பதை மேற்கொண்டவனின் வாழ்வு ஒழுக்கமுடையதாக இருக்கும்.
பணத்தால் வந்ததை எல்லாம் கொடுத்துவிடு என்றால் பணத்தின் மூலம் அடைந்தவைகள் என்று நினைவு கொள்ளக்கூடாது! பணம் வரும்போது அதனுடன்  அகந்தை, ஆணவம், கோபம், தற்பெருமை என நமக்குள் வந்த தீய குணங்களை விட்டுவிடு என்று அர்த்தம். அப்போது அருள் பெருவாய்! அமைதி காண்பாய்! ஆனந்தம் அடைவாய்!-குருஸ்ரீ பகோரா.

3-12.ஆபத்து!

Written by

ஆபத்து!                                                                                                                      

வாழ்க்கைப் பாதையில் ஆபத்து ஒரு கட்டாய நிகழ்வு. நாம் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும். அதை எதிர்பார்த்து சமாளித்து நாம் நம் வாழ்க்கை பயணத்தை தொடங்க வேண்டும். ஓர் சிறிய சந்தேகம் எழுந்தால்கூட ஓர்செயலை செய்யுமுன் அது பற்றி தீர்க்கமாக யோசனை செய்து நல்முடிவு கண்டு செயலாற்ற வேண்டும். சந்தேகங்கள் நமக்கும் தோன்றலாம். பிறர் சொல்லியும் வரலாம். பிறர் என்பது நண்பர்களாகவும் இருக்கலாம், எதிரியாகவும் இருக்கலாம். யார் சொன்னார்கள் என்பது முக்கியமல்ல! அதில் உள்ள கருத்துக்களின் உண்மை, அதனால் நம் செயலாக்கத்திற்கு ஏற்படும் தடைகள், வெற்றிப்பாதையை மாற்றும் கருத்துக்களா ! உதவும் கருத்துக்களா! என சிந்திக்கவும்.
நாம் கடலில் பயணிக்கின்றோம் என்றால் கடலில் நீர்மட்டும்தான் நிறைந்துள்ளது என அர்த்தமில்லை. அந்த நீரே பனிக்கட்டியாய் மாறி நம் பயணத்திற்கு தடை ஏற்படுத்தக்கூடும். அந்த பனிகட்டிகள் மலையளவுகூட இருக்க வாய்ப்புண்டு. கண்ணுக்குத் தெரியாது. எனவே பனிக்கட்டி என்றதும் நீரில் மிதக்கக்கூடியதுதானே என்று அவசர முடிவுக்கு வந்துவிடக்கூடாது.
பனிக்கட்டிகள் இவ்வளவு பெரிய கப்பலை என்ன செய்து விடமுடியும் என நினைத்து அறிவு பூர்வமாக சிந்தனை செய்யாமல் செயல்பட்டு பயணித்தால், பயணம் ஆபத்தில் முடிந்துவிடும். நமக்கெல்லாம் தெரியும் ‘டைட்டானிக்’ என்ற அக்காலத்து நவீன பெருங்கப்பலின் நடத்துனர்கள் பனிக்கட்டி எனநினைத்து பணிப்பாறை/ மலைமீது மோதிய கப்பலின் நிலை என்ன ஆனது என்று. தவறான யூகத்தால் பல்லாயிரக் கணக்கானோர் இறப்புதான் பட்டியலிடப்பட்டது.
நிஜவாழ்விலும் சிலபிரச்சனைகள் மேலோட்டமாக பார்க்கும் போது சிறியதாக ஆபத்து இல்லாததாகத் தெரிய வாய்ப்புண்டு. அந்தச் சிறிய பிரச்சனைகளை அலட்சியப் படுத்தாமல் அவற்றின் தன்மை, ஆழம்(உட்கருத்து) அறிந்து யோசித்து செயல்பட்டால் நம் வாழ்க்கை பயணத்தில் அதுவும் ஓர் வெற்றியாக மாறும். மகிழ்வு ஏற்படுத்தும். ஆனந்தித்து வெற்றியை சந்தோஷமாக அனுபவிக்கலாம். சிந்தித்து செயல்படவில்லை என்றால் அந்த பிரச்சனை நம் வாழ்வை தடம் புரட்டிச்சென்று நம்மை துயரத்துள் ஆழ்த்தும்.
பிரச்சனைகளை கண்டு பயம் கொள்ளாமல், பொறுமையுடன் அதன் தன்மையை கண்டு யோசித்து, நம் நலம் நாடுபவர்களின் ஆலோசனையும் பெற்று செயல்படுதல் நன்று. பயணத்தில் வேகம் மட்டும் முக்கியமல்ல! வேகத்திற்கு இனையாக விவேகமும் இனைந்து செயல் பட்டால் வெற்றி நிச்சயம். கண்மூடித்தனமாக விரைந்து செயல்படும்போது, நாம் எதிர்பாரா புதிய பிரச்சனைகள் எதிர்படும்போது, நாம்செயல்படும் வேகத்தின் காரணமாக எதிர்பட்ட பிரச்சனையை சரியாக அளவிடமுடியாமல் போய்விடும். நம் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாததாகிவிடும்.
ஓர் நிதானத்துடன் செயல்படும்போது தோன்றும் பிரச்சனைகளை அவ்வப்போது தீர்த்துக்கொள்ள சிந்திக்க சிறிய கால அவகாசம் தோன்றும், அப்போது பிரச்சனைகளுக்கு ஏற்ப நம் செயல்களில் சிறிய திருத்தங்கள் செய்து முழுமையான வெற்றிக்கு வழிதேடலாம். எப்படிப்பட்ட பிரச்சனையாயிருந்தாலும் யோசித்து நன்று திட்டமிட்டு பயமின்றி நிதானமாக செயல்பட்டு அவ்வப்போது இடையில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டு உறுதியுடன் செயல்பட்டால் கிடைக்கும் வெற்றி, செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கும்-குருஸ்ரீ பகோரா.

3-11.யாசித்தல்!

Written by

யாசித்தல்!                                                                                                          

முழுமையான ஞானிகள், துறவிகள் தமக்கு இன்னும் பொருள் வேண்டும் என இரைஞ்சுபவர்களிடம் எதையும் பெறமாட்டார்கள். இறைவனிடம் வியாபாரம் பேசும் அவர்கள் அன்பின்றி பிச்சை கேட்டுப் பெறுபவர்களே! ஞானிகள் அவர்களிடம் யாசிக்க மாட்டார்கள்.
நம்மிடம் இல்லாத ஒன்றை ஒருவரின் இரக்க குணத்தைப் பயன்படுத்தி பெறுவது யாசித்தல் ஆகும். அப்படி யாசிப்பது பெரிய இகழ்ச்சியாகும். குசேலர், கிருஷ்ணனின் ஆத்மார்த்த பால்ய சினேகிதன். குசேலர் மிகுந்த வறுமைக்குள்ளான போது யாரிடமும் யாசிக்காமல் வயல்களில் உதிர்ந்த நெல்லை சேகரித்து தன் குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்தார்.
நிலமை மோசமாக மனைவியின் வற்புறுத்தலுக்கு இணங்கி பால்ய சிநேகிதன் மன்னன் கண்ணனை சென்று கானும்போதுக்கூட தன் வறுமைபற்றி ஏதும் பேசவில்லை. ஒன்றும் யாசிக்கவும் இல்லை. ஒரு குறிப்பும் காட்டவில்லை. ஆனால் ஸ்ரீ கிருஷ்னன் குசேலரின் உணவு மூட்டையை கட்டியிருந்த துணியைப் பார்த்து அவரின் நிலைபுரிந்து உதவி செய்ததாக கூறப்பட்டுள்ளது.
ஒருவனிடத்தில் ஒருபொருளை யாசிப்பவன் யாராயிருந்தாலும் கூனிக்குன்றிவிடுவான். இதை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டு பரந்தாமன், தர்மத்தின் தலைவன் மகாபலியிடம் 3’ நிலம் கேட்டபோது குள்ள வாமண அவதாரம் எடுத்துள்ளார். யாசிப்பவர் தாழ்ந்துதான் செல்ல வேண்டியிருக்கும். இது உலக நியதி. பொருள் கொடுப்பவன் கை மேலேயும், அதைப் பெருபவன் கைகள் கீழே தாழ இருப்பதும் கண்கூடான மாற்ற முடியாத நியதிகள்.
பூஜை செய்து வந்திருந்த பக்தர்களை வணங்கி பிரசாதத்துடன் பணத்தை தன் கைகளில் கீழே இருக்கும்படியாக வைத்து கொடுத்துக் கொண்டிருந்தார் ஒருவர். இதைக் கண்ட பக்தர் ஒருவர் ஐயா தங்கள் இப்படிச் செய்வதன் அர்த்தம் என்னவோ? எனக் கேட்டார். அவர் "தருகிற கை மேலே இருக்க வேண்டும், பெறுகிறவன் கை கீழே இருக்க வேண்டும்,” என்றார்.
குழப்பமடைந்த அவர், "ஐயா. நீங்கள் தானே தருபவர். மற்றவர் பெற்றுக் கொள்பவர்தானே. நீங்கள் பொருட்களை உங்கள் கையில் வைத்து கீழே இருக்குமாறு செய்து மற்றவர் மேலே இருந்து எடுத்துக் கொள்ளுமாறு செய்கிறீகள். எப்படி? என மீண்டும் கேட்டார்.
 அந்த அன்பர் "நீங்கள் நான் சொன்னதை சரியாக புரிந்து கொள்ளவில்லை, நான் தரும் பொருள் அழியக்கூடியது. நான் தரும் பெருளை பெற்றுக் கொண்டு அவர்களின் கை எனக்கு ஆசியையும் அருளையும் தருகின்றது. ஆசியும் அருளும் தரும் கை மேலிருப்பது தானே முறை" என்றார். எவ்வளவு சிறப்பான விசயமிது-குருஸ்ரீ பகோரா.

3-10.பகை உணர்வு!

Written by

பகை உணர்வு!                                                                                                        

பகைவர்கள் என்றால் நமக்கு வேண்டாதவர்கள் என்றுமட்டுமல்ல, அவர்களால் நமக்கோ, நம்மால் அவர்களுக்கோ தீய செயல்கள் தொடர்ந்து தோன்றிக் கொண்டிருப்பது என கொள்ள வேண்டும். அப்படி எப்போதும் பகைமை பாராட்டுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கும், மனவளர்ச்சிக்கும் உகந்தது அல்ல.
பகைவனை அழிப்பது என்றால், பகைமையை அழிப்பது என்று கருதவேண்டும். பகைவனைக் கொல்வதல்ல! அப்படிச் செய்தால் பகைமை அழியாது. தொடர்ந்து வரும்.
எப்போதும் தீய சிந்தனைகள், அதன் எண்ணங்கள், அதை செயலாக்கும் திட்டங்கள், செயலாக்கம் என நம் வாழ்வில் பெரும் பகுதியை செலவிடுகின்றோம்.
நம் எண்ணங்கள் இவ்வாறு பகைமை பாராட்டுவதால், நமக்கு ஏற்படும் நம் இழப்புகள் பற்றி சிந்திப்பது இல்லை. யார் தவறு செய்தாலும் தண்டணை நிச்சயம் என கர்ம பலன் சொல்வதால், பகைமை பாராட்டுவதில் முனைப்புகாட்டி, உங்கள் சந்தோஷத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல், கர்மபலன்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கோ, அல்லது மேலும் கர்மபலன்கள் ஏற்படாமலிருக்க செயல்படமுடியாமல் போகின்றது.
வாழ்வில் இது ஓர் நஷ்டம். சந்தோஷம் என்ற பாதையைவிட்டு உணர்ச்சிகளை கோபத்தின் பக்கம் திருப்பி துன்பங்கள், துயரங்கள், கர்மபலன் என முற்றிலும் திசைமாறிவிடும்.
“நம்மை வெறுப்பவர்கள் நமக்கு பகைவர்கள் இல்லை, நம்மால் வெறுக்கப்படுபவர்களே நம் பகைவர்கள்.” இதன் உண்மைதனைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களை வெறுப்பவர்கள், அவர்தம் மனதில் தீயஎண்ணங்கள், திட்டங்கள், செயல்பாடுகள் என ஏற்படுத்தி அவர்களின் தீயகர்மபலன்களை அதிகரித்துக் கொள்கின்றனர்.
அவர்கள் பகைவர்களல்ல! அதே சமயத்தில் நீங்கள் அவ்வாறு பகைமை நினைவு கூர்ந்தால் நீங்களும் அதே நிலைக்குத் தள்ளப்பட்டு கர்மபலன்களின் பாதிப்புக்குள்ளாகி துன்பத்தை சந்திக்க நேரிடுமாதாலால், உங்களால் வெறுக்கப்பட்டவர்கள்தான் உங்கள் எண்ணங்களைத் தூண்டி உங்களைப் பகைவர்களாக்க முற்படுகின்றார்கள்.
பெருமாள் பக்தர்களில் வடகலைப் பிரிவினர் ஆங்கில 'யு' வடிவத்தில் திருநாமம் இட்டிருப்பார்கள். தென்கலைப் பிரிவினர் அதன்கீழே ஒரு கோடு இழுத்து திருநாமம் இட்டிருப்பார்கள். வடகலைப் பெரியவர் ஒருவர் இரண்டு பிரிவுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உடம்பின் வலது பக்கம் வடகலை நாமத்தையும், இடது பக்கம் தென் கலை நமத்தையும் இட்டுக் கொண்டார்.
எதிரில் வந்த தென்கலைப் பிரிவினர் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் 'உன் வடகலை நாமத்தை மட்டும் வலது பக்கம் ஜம்மென்று போட்டுக் கொண்டாய், எங்களுக்கு இடப்பக்கம்தானே கொடுத்திருக்கின்றாய்' என்றனர்.
அதிர்ச்சியடைந்த பெரியவர் 'நண்பர்களே! நான் உங்கள் தென்கலை நாமத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வலது கையால் இட்டுக்கொண்டேன்! எங்கள் வடகலை நாமத்தை இடது கையால் இட்டுக் கொண்டேன்! என்றார். புரிந்து கொள்ளுங்கள். வடகலை, தென்கலை இரண்டும் இறைவனை நினைத்து போட்டுக் கொள்வதுதான். எதற்கும் எப்படியும் குறை கண்டு துவேஷத்தை வளர்க்கும் மனப்பான்மை கொள்ளாதீர்
ஓருவர்மீது நீங்கள் பகை உணர்வு கொண்டால், அவரைச் சந்திக்க இயலாத போது,  பகையின் ஆதரவாளர்களைக் கண்டால் அந்த உணர்வு வெளிப்பட்டு அவர்மீதுகூட தாக்குதல் தொடங்குவீர்கள். பகை உணர்வு அத்தன்மையுடையது. எனவே யார்மீதும் வெறுப்பு கொண்டு, யாரையும் வெறுத்து ஒதுக்காதீர்கள்.
விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்! உங்களிடமுள்ள பொறுமை, கருணை, சகிப்புத்தன்மை கொண்டு உங்கள் மனதில் தோன்ற முயலும் பகைமை உணர்வை ஒழித்து விடுங்கள். அப்போது உங்களுக்கு என்றும் யாரும் பகைவராக முடியாது.
சத்தியம், அகிம்சை, பொறுமை, தயை(கருணை), சமநோக்கு, அமைதி, சந்தோஷம், எளிமை, சகிப்புத்தன்மை, தியாகம் முதலியன கொண்டுள்ள ஓர் மனதிற்கு யாராலும் தீங்கு செய்யமுடியாது, அந்த மனம்- இதயம் தூய்மையானது. ஆசை, பொறாமை, பேராசை போன்ற முட்கள் அங்கிருக்காது. அங்கே அருள் கொண்டு மனிதநேயம் நிறைந்திருக்கும்.
உங்களை இன்னொருவருடன் ஒப்பிடுவது சரியன்று. உங்களைவிட அதிர்ஷ்டம் குறைவானவர்களை நினைத்து நீங்கள் பெருமை, திருப்தியடையலாம். அதேசமயம் உங்களைவிட அறிவு, அழகு, வசதி, வலிமை என அதிகம் உள்ளவனை ஒப்பிட்டால் அது மகிழ்ச்சி தராமல் துயரத்தின் விளிம்பிற்கு கொண்டுசெல்லும். போட்டி மனப்பான்மையை வளர்க்கும். போட்டி ஆசையின் முடிவில் பொறாமையாக மறிவிடும். நீ நீயாக செயல்படு.
அந்த நாடு அப்போதுதான் விடுதலைப் பெற்றிருந்தது. அதன் அதிபராக பொறுப்பேற்றவர் நாட்டில் கல்விச்சாலைகளை ஏற்படுத்தி, கல்வியுடன் விளையாட்டுகளையும் பயிற்றுவிக்க திட்டம் போட்டார். அதன்படி ஒரு பயிற்சியாளர் அந்த கிரமத்து இளைஞர்களை இரு குழுக்களாகப் பிரித்து அந்த விளையாட்டின் சட்டதிட்டங்களை போதித்தார்.
எந்த அணி என்னென்ன தவறுகள் செய்தது, எத்தனைப்புள்ளிகள் என்று கணக்கிட ஆரம்பித்தார். முடிவில் இந்த அணிக்கு இவ்வளவு புள்ளிகள் அடுத்த அணிக்கு இவ்வளவு புள்ளிகள். குறைவாக புள்ளிகள் எடுத்த அணி தோற்ற அணி என்று கூறி நாளை அனைவரும் நன்றாக விளையாடி போட்டி போட்டு புள்ளிகள் எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது அந்த இளைஞர்கள் எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை. நாங்கள் ஒவ்வொருவரும் அங்கும் இங்குமாக நட்புடன் விளையாடி ஆனந்த மகிழ்வு கொண்டோம். வெற்றியும் தோல்வியும் எங்களுக்கு வேண்டாம். விளையாடிய அந்த சந்தோஷம் மட்டும் போதும் என்றனர்.
இதேபோன்று வாழ்வை ஆனந்தம் தரும் விளையாட்டாக கருதினால் அது இன்பம். போட்டியாக கருதினால் அது சூதாட்டம். இன்பமும், துன்பமும் வரலாம். அதனால்தான் குழந்தைகள் விளையாட்டை விரும்புகின்றன. தெரிந்த மனிதன் அதை ஒரு போட்டியாக புரிந்து கொள்கின்றான். அவதிபடுகின்றான்.
விளையாட்டு ஓர் ஆரோக்கியத்திற்காக தோன்றியது. அது ஆனந்தம் அளிக்கக்கூடியது. அதுவே போட்டியானால் பொறாமை, பகையுணர்வு மேலோங்கி துன்பத்தினை அளிக்கக்கூடியது. வழ்வை விளையாட்டாக கருதினால் இன்பத்தையும், விளையாட்டுப் போட்டியாக கருதினால் இரண்டும் தரக்கூடியதாகிவிடும். ஆனந்தம் தரும் விளையாட்டை நட்புடன் விரும்புங்கள். பொறாமைகளைத் தவிர்க்க போட்டிகளை தவிர்த்து விடுங்கள்.
நட்பு: எல்லா உயிர்களிடத்தும் தோழமை கொள்வதே நட்பின் இலக்கணம். எந்த ஓர் சூழலிலும் உண்மை நட்பு உதவிக்கு வரும். கிருஷ்ணர் அவதாரமாக கருதப்பட்டாலும் அவர் அர்சுனன் மேல் அளவில்லா நட்பு கொண்டதும், அதனால் பஞ்ச பாண்டவர்களுக்கு தீங்கு நேரிட்டபோது எல்லாம், கிருஷ்ணர் அர்ச்சுனனுடனிருந்து அவர்களுக்கு உதவியது மகாபாரதத்தின் வாயிலாக அறிவோம். கிருஷ்ணா அவதாரம் நட்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. குசேலரின் பால்ய நண்பர் கண்ணன் என்று அறிவோம். ஆழ்நட்பின் காரணமாக தன்னிலை பற்றி கண்ணனிடம் கூறாதபோதும், தன் நண்பனின் நிலையறிந்து கண்ணன் உதவி செய்ததாக கூறப்பட்டுள்ளது.
பிசிராந்தையாரின் நட்பு இன்னும் ஒருபடி மேல். கண்ணால் கண்டு பழகாத நட்பு. கேள்வி ஞானமூலம் கொண்ட தீவிர நட்பு. இறக்கும் வரை சந்திக்காமல் அகநட்புடன் வாழ்ந்த நட்பு.
சிலரின் நட்பு பலரை நல்ல மேலான உயர் நிலைக்கு கொண்டு செல்லும் ஆற்றல் உடையது. தாமரையிலையில் விழும் நீர்த்துளி முத்துபோல் காட்சி கொடுக்கும். சிப்பிக்குள் விழும் நீர்த்துளி முத்தாக மறும். சூடான பரப்பில் விழும் நீர்த்துளியானது கண்ணுக்குத் தெரியாமல் மறையும் தன்மை கொண்டது. நல்ல நட்பு அறிவு குறைந்தவனை அறிவாளியாக்கிவிடும். செயல் பாட்டில் சுணக்கங்களை அகற்றும். சொற்களில் உண்மைகளைச் சேர்த்து, சுயமரியாதையுடன் வாழ வைக்க உதவி புரியும்.
எப்போதும் பொழுது போக்கி, சிரித்து மகிழ மட்டுமன்றி, தீமைகள் ஏற்பட்டால் பாதுகாத்து, துன்பங்கள் அடைந்தால் கூட இருந்து துன்பப்படுவதும் நட்புதான். முகங்கள் மட்டும் மலரும்படியாகச் செய்வது உண்மையான நட்பல்ல, இரு மனமும் மகிழ்வு கொள்ள வேண்டும் என்ற நினைப்பதே உண்மையான நட்பாகும். நம் அந்தரங்களை உண்மையான நட்பிடம்தான் பகிர்ந்து கொள்ளமுடியும். இல்லையெனில் அந்தரங்கம் அந்தரத்தில் தொங்கவிடப்படும்.
தனக்குத் தேவையானபோது நட்பு பாராட்டி, கிடைக்கும் பலன்களை ஆராய்ந்து பார்ப்போரின் நட்பு கூடாது. சொல்வது ஒன்று, செய்வது என்று என்பவரின் நட்பு என்றும் துன்பம் தரும். சுயநலமில்லா நட்பை கண்டறிந்து அதை தக்கவைத்துக் கொள்ளவேண்டும். நிறைய நண்பர்கள் என்பதைவிட, நட்புக்கு இலக்கணமாக ஓரிருவர் இருந்தாலே போதும். நல்ல நண்பர்கள் அபூர்வமாக கிடைப்பார்கள். அந்த நட்பை காப்பாற்றத் தெரியவேண்டும்.
தன்னிடம் பயின்ற மாணவர்களிடம் சிறந்தவனை தேர்ந்தெடுத்த குரு, அவன் மற்றவர்களைவிட எப்படி சிறந்தவன் என தெரிந்து கொள்ள அவனிடம் சில கேள்விகளை எல்லோர் முன்னிலையில் கேட்டார். ‘நீ மலைப்பகுதியில் சென்று ஆன்மீகத்தை பரப்ப போகிறாய். அவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள். உன்னிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டால் நீ என்ன செய்வாய்’ என்றார்.
அதற்கு அந்த மாணவன் அவர்கள் என்னை அடித்தாலும், என்மீது கல் எறிந்தாலும், எப்படி நடந்து கொண்டாலும், நிதாதனத்துடன் நட்பு பாராட்டி, அன்பு கொண்டு நடப்பேன் என்றான். குரு, ‘உன்மீது கல்லால் அடித்தால்’ என்றார். ‘என்னை ஆயுதங்களால் தாக்க வில்லை’ என எண்ணிக்கொண்டு நட்பு பாராட்டுவேன் என்றான். குரு. ‘ஆயுதங்களால் தாக்கினால்’ என்றதற்கு, அவர்கள் ‘என்னை கொல்லவில்லையே’ என நினைத்து அப்போதும் நட்பு பாராட்டுவேன் என்றான்.
குரு, அந்த மாணவனை உற்றுப்பார்த்து, சரி, ‘அவர்கள் உன்னைக் கொல்ல வந்தால்’ என்றார், ‘குருவே, அவர்களை அப்போதும், எப்போதும் அன்புடன் நட்பு பாராட்டி மகிழ்வேன், ஏனெனில் அவர்கள், எனக்கு உடல் பந்தங்களிருந்து விடுதலை அளிக்கப் போகின்றார்கள் என்பதற்காக, என்றான். தீங்கு செய்பவர்களிடமும் காட்டும் அன்பின் நட்பு சிறந்த மேன்மையைத் தரும்.
தொடர்புகளும் பழக்கங்களுமின்றி ஒன்றுபட்ட ஒருமித்த உணர்சிகளே நட்புகள் மலர காரணமாயிருக்கும். அந்த நட்பு வேறுபாடின்றி முடிந்தபோதெல்லாம் உதவிக் கரம் நீட்டும்.
இனிமையான முகம் காட்டி சிரித்துப் பேசி மனதில் வஞ்சக எண்ணம் கொண்டுள்ளவரின் நட்பை புறக்கணிக்க வேண்டும்-குருஸ்ரீ பகோரா.

3-9.தேவை நிம்மதி!

Written by

தேவை நிம்மதி!                                                                                                          

கனகம்-செல்வம், காமினி-பெண் ஆகியவை மன அமைதியை அழிப்பன. வாழ்வில் என்ன என்ன அடையவேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றி மனதை அலைக்கழிக்கும்.
ஒருவரை உனது வாழ்வின் தேவைகளை எழுதிக்கொடு என்றதும், மனதில் தோன்றிய ஆசைகளையெல்லாம் வரிசைப்படுத்தி மனைவி, பணம், புகழ், மதிப்பு... இப்படி எழுதியவனுக்கு ஓர் சந்தேகம் வந்தது! எல்லாமும் எழுதி விட்டோமா என்று? அனைவரிடமும் காண்பித்தான். அனைவரும் ஒப்புக் கொள்ளும்படியாக எழுதியிருந்தான்.
சந்தோஷத்துடன் அந்த தேவைகளை இறைவனிடம் கொடுக்க நினைத்தவன் ஒரு பெரியவரை சந்தித்தான். அவரிடமும் காண்பித்தான். அவர் எழுதியதை எல்லாம் படித்துவிட்டு, எல்லாம் சரி! இதில் எழுதியிருப்பதையெல்லாம் அடைந்தபின் நீ என்ன செய்யப் போகின்றாய்? என்ற கூற்றிற்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
அப்போது அவர் எல்லாவற்றையும்விட மன அமைதியை நாடு! அதைத் தேடு! அது கிடைத்தால் நீ எல்லாவற்றிலும் வெற்றியடைவாய்! அப்படியின்றி எல்லாம் கிடைத்து விட்டால் உனக்கு மன நிம்மதியிருக்காது என்றார். பாற்கடலை கடைந்தபோது கிடைத்த லட்சுமியின் அதி அழகால் ஸ்ரீமன்நாராயனுக்கு நிம்மதியும் உறக்கமும் பறிபோயின. பொன்னாசை அளவுக்கு மீறினால் நிம்மதிபோகும் என்பதை எடுத்துரைகின்றது ஸ்ரீநாராயணனின் அனந்த சயன காட்சி.
எனவே நிம்மதி, மனநிம்மதிதான் ஒருவருக்கு கிடைக்க முயற்சிக்க வேண்டும். மற்றவை கர்ம வினைப்படி அவரை வந்து சேரும். ஆன்மாவின் தன்மை உணர்ந்து அதற்கு உடல் ஒத்துழைப்பு அளித்தால் நிம்மதி நெஞ்சினுள்ளே இருப்பதை உணரலாம். தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவன், அதிகமான செல்வம் அடைந்தவன், ஆபத்தை நெருங்கியவன் ஆகியோருக்கு நிம்மதி கெட்டுவிடும். உறக்கம் வராது.
மனதில் நிம்மதியும் தூக்கமும் இன்றி தவித்த ஒருவன் அருகில் இருந்த ஆசிரமத்தில் பெரியவரை சந்தித்தான். அவர் தேவையில்லா சுமைகளை சுமப்பதும், தெரியக்கூடாத ரகசியங்களை தெரிந்து கொள்வதாலும் நிம்மதி போய் விடுகின்றது. நீ முதலில் ஆசிரமத்தில் சாப்பிடு என்றார். சாப்பிட்டபின் ஒரு படுக்கையை காண்பித்து படுக்கச் சொன்னார்.
அவனிடம் ஒரு கதை சொன்னார் பெரியவர். "ரயில் புறப்படும் போது அவசரமாக தலையில் சுமையுடன் ஒருவன் ஓடிவந்து ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொண்டான். ரயில் புறப்பட்டது. ஆனால் அவன் தன் தலையிலிருந்த சுமையை மட்டும் கீழே இறக்கி வைக்கவில்லை. அருகிலிருந்தவர் அதை கீழே இறக்கி வைக்கச் சொன்னார். அவன் வேண்டாம். ரயில் என்னை மட்டும் சுமந்தால் போதும். என் சுமையை நான் சுமந்து கொள்வேன் என்றான்.
இந்தக் கதையைக் கேட்டவன் சிரித்துவிட்டு, 'பைத்தியக்காரன், இரயிலை விட்டு இறங்கும் போது மூட்டையை தூக்கிக்கிட்டு இறங்கினால் போதாதா என்றான்'. உன்னைப்போல் அவனுக்கும் அது தெரியவில்லை என்றார் பெரியவர். என்ன சொல்கிறீகள் என்றவனிடம், 'வாழ்க்கை என்பது ரயில் பயணம் போன்றது. பயணம் முழுவதும் சுமந்து கொண்டு செல்பவர்கள் நிம்மதியாக வாழமுடியாது, தேவை படுபனவற்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்'. என்று அவர் கூறியபோது அவனுக்கு புரிய ஆரம்பித்தது, தூக்கம் வந்தது. சுகமாக தூங்கினான்.
காலையில் எழுந்திருக்கும் போது பெரியவர் அருகில் இருக்கக் கண்டான். எழுந்து அந்த தலையணையை தூக்கு என்றார். அவ்வாறே செய்தவன் ஆ! வென்று அலறினான். தலையணை அடியில் ஓர் நாகம் சுருண்டிருந்தது. ஐயா, என்றவனிடம் நீ! உன் தலைக்கு அருகில் பாம்பு இருக்கிறது என்ற இரகசியம் உன் மனதிற்கு தெரியாது! அதனால் நிம்மதியாய் தூங்கினாய். இப்போது நிம்மதி எங்கிருக்கிறது என புரிந்து கொண்டிருப்பாய்." என்றார். இரகசியங்கள் இல்லா மனமே நிம்மதி கொள்ளும்.
வாழ்க்கையில் முன்னேற்றம், வெற்றி, அதனால் பணம் வசதி, வாய்ப்புகள் பெருக அதிகாரம் அவசியமாகும். எது இருந்தும் அங்கே நிம்மதி வேண்டும். உடல் ஆரோக்கியம் வேண்டும். மனிதநேயம்கொண்டு பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.
கோடீஸ்வரர் ராக்பெல்லர் அமெரிக்க மக்களால் மிகவும் வெறுக்கப்பட்டதற்கு காரணம், தான் வாழ்வில் முன்னேற, தன் செயல் அனைத்திலும் வெற்றி பெற, சாம, தான, பேத, தண்டம் என அனைத்து கொடிய வழிகளையும் பின்பற்றியதே. சுமார் ஐந்துலட்சம் டாலர் ஆண்டு வருமானம் பெற்ற அவருக்கு 53வயதில் உடல்நிலை மோசமானது.
மருத்துவர் ஆலோசனைப்படி கஞ்சியும் பாலும் சாப்பிட்டார். எவ்வளவு இருந்து என்ன பயன். ஆனால் அவர் சுவாமி விவேகானந்தரை சந்தித்தபின் மாற்றம் கொண்டார். கறை படிந்த பணம் என பலரும் வாங்க மறுத்தும், கலங்காமல் தொடர்ந்து மக்களுக்கு மனித நேயத்துடன் தொண்டு செய்தார். மனநிம்மதி கொண்டார். உடல் ஆரோக்கியம் அடைந்து 92வயது வரை வாழ்ந்துள்ளார்.
மோசமான ஓர் பணக்காரராயிருந்தவருக்கு, மனிதநேயம் கொண்டு கருணைஉள்ள பரோபகாரி என்ற நிலைக்குவந்த அந்த மனித ஆன்மாவிற்கு கிடைத்தது மனநிம்மதி மற்றும் உடல் ஆரோக்கியம். எனவே உங்களிடம் இருப்பதை இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அது அறிவாக இருந்தாலும் சரி, பணம், பொருளாக இருந்தாலும் சரி. அந்த மனிதநேயம் நீங்கள் கொண்டால், ஆன்மா நிம்மதி கொள்ளும்.
ஒரு ஞனியிடம் வந்த செல்வந்தர் தனக்கு நிம்மதியில்லை என்றார். உங்களிடம் இருக்கும் செல்வத்தை வைத்து எல்லாவற்றையும் வாங்கி அனுபவிக்கலாமே என்றார் ஞானி. செல்வந்தர் எனக்குத் தேவை மகிழ்ச்சி அதை எப்படி வாங்கமுடியும் என்றார்.
ஞானி அவரை ஓர் விளையாட்டு அரங்கிற்கு அழைத்து வந்தார். பலர் உற்சாகத்துடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஞானி ரசித்தார். செல்வந்தர் பந்து என்னைப்போல உதை படுகின்றது எனக் கவலை கொண்டார்.
ஞானி, செல்வந்தரை ஓர் கச்சேரிக்கு அழைத்துச் சென்றார் அங்கு புல்லாங்குழலின் நாதம் இசையாக அனைவரையும் ஆனந்தத்தில் மூழ்கடித்தது. சிறிது நேரம் அமைதியாகச் சென்றது. நிகழ்ச்சி முடிந்தது இருவரும் காரில் வந்து கொண்டிருந்தனர்.
ஞானி செல்வந்தரைப் பார்த்து பந்துக்கும், புல்லாங்குழலுக்கும் என்ன வித்தியாசம் என்றார். செல்வந்தர் அது பந்து, இது புல்லாங்குழல் என்றார்.
பந்துக்கும், புல்லங்குழலுக்கும் தேவை காற்றுதான். பந்தின் உள்ளேயே அடைபட்டு கிடப்பதால் அது உதை படுகின்றது. புல்லாங்குழலில் அது அவ்வப்போது வெளியே வந்து விடுவதால் அது இனிமையைத் தருகிறது. மனதிற்கு நிம்மதி அளிக்கின்றது என்றார் ஞானி.
செல்வந்தருக்கு ஏதோ புரிந்தமாதிரி இருந்தது. செல்வந்தர் நினைத்தார். பந்தின் காற்றுபோல் செல்வம் நம்மிடம் இருந்தால் அதில் இன்பங்களைவிட துன்பங்கள்தான் அதிகம். புல்லாங்குழல் காற்றுபோல் செல்வம் அவ்வப்போது வெளியேறினால் அது நிம்மதியும் இன்பமும் தரும் என்பதை உணர்ந்தார்-குருஸ்ரீ பகோரா.

3-8.குற்ற உணர்வு!

Written by

குற்ற உணர்வு!                                                                                                              

செய்த பிழைகளுக்கு, குற்றங்களுக்காக குற்ற உணர்வுகளுடன் வாழ்ந்து துன்பத்தில் இருப்பதைவிட மன்னிப்பு கேட்பது ஒன்றும் தவறல்ல. குற்றத்தில் இருந்து ஒருவர் விடுதலை பெற்றாலும் குற்ற உணர்விலிருந்து விடுதலை பெறவேண்டும். இல்லையெணில் அது பிணியாக அவனைக் கொல்லும். அதனால்தன் கிருத்துவ அன்பர்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டுப் பெறுகின்றனர். பொதுவாக கடவுள் செய்த பிழைகளை மன்னிக்கும் உள்ளம் கொண்டவர். எத்தனையோ சரித்திர சான்றுகள் உள.
கடவுள் மன்னிப்பார் என நினைத்து தீய காரியங்களில் ஈடுபடுதலுக்கு மன்னிப்புகள் வழங்கப்பட மாட்டாது. குற்றம் செய்தவன் தன் தவறுகளை உணர்ந்து திருந்த வேண்டும், அந்த உணர்வுகளால் அவன் சித்திரவதை படுவான் என்பதற்காகவே கடவுள் மன்னிப்பார் என்ற நிலை உறுவானது. மன்னிப்பார் என்று குற்றங்கள் செய்வதும், மன்னிக்கமாட்டார் என புலம்புவதும் தவறான நம்பிக்கைகள்.
ஒருவன் செய்த தவறை மன்னிக்கிறவன் தேவனாவான், அவனும் மன்னிக்கப்படுவான். எனவே பிறர் குற்றங்களை மன்னிக்கப்பழகு! நீ தேவனாகு! அவன் குற்றங்களுக்கு கர்மபலன் உண்டு! நீ அவனைபற்றிக் கவலைபடாதே! உன்வாழ்வை நினை! உன் ஆன்மா மேனிலையடையட்டும்!
ஒவ்வொரு ஆன்மாவும் பிறந்தபின் குழந்தை, இளமைப்பருவம், ஆண், பெண், கணவன், மனைவி, அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, முதிர்ந்த பருவம் என அடையாளங்களைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் உடலின் உள்ளே உள்ள ஆன்மாவிற்கு எந்த அடையாளமும் இல்லை. அது எந்த நிலையிலும் ஆன்மாதான். மாயையான உடலுக்கு எத்தனைவித அடையாளங்கள். ஆன்மாவிற்கு ஏதுமில்லை. அந்த ஆன்மா உடல்வழி எப்போதும் சந்தோஷத்தை நாடி அடைய வேண்டும் என்பதே நியதி.
இளமையில் ஏதுமறியாமல் நம் விருப்பத்திற்கு செயல்பட்டு சந்தோஷ மடைகின்றோம். ஆண், பெண் என்ற நிலையில் ஒருவர் ஒருவருக்கு துணையாகி கணவன் மணைவி என சந்தோஷம் கான்கின்றோம். பின் குழைந்தைகள் மூலம் அப்பா, அம்மா என்றாகி தாத்தா, பாட்டி என்றும் ஆகிக் களிப்படைகின்றோம். வாழ்க்கையின் சுழற்சியிது. அந்தந்த காலங்களில் அதுஅது முறைபடி சரியாக நடந்தேறினால் வழ்வில் துன்பம் ஏதும் இல்லை!
ஆனால் உரியகாலத்தில் நடக்காமலும், துணைகிடைக்காவிடினும் மனம் துயரம் காண்கின்றது. அப்படியிருக்கலாம், இப்படிவாழலாம் என்ற கனவுகள் சிதைகின்றன. எப்படியாவது மணம் நடந்தால் போதும் என்ற பலரின் சூழ்நிலையில் மணம் நடந்தால் அப்போதைக்கு அது இனிப்பாக தெரிகின்றது. ஆசையும், மோகமும் தெளிந்த நிலைவரும்போது அங்கே குறைகள் நிறைவாக இருப்பதாக கண்டு மனம் மயங்குகின்றது.
வீன்குழப்பங்கள், பழைய நினைவுகளின் தாக்கத்தால் அதிகமான எதிர்பார்ப்புகள் கொஞ்சம்கூட நிறைவேறவில்லை என்ற ஏமாற்றத்தினால் மனம் சோர்வடைகின்றது. புத்தி பேதலிக்கின்றது. என்ன செய்கின்றோம்! என்ன சொல்கின்றோம்! என அறியாமல் தப்புத் தப்பாக சிந்தித்து செயல்படும் மனப்பாங்கு வந்தடைகின்றது.
குழைந்தைகளின் வளர்ச்சிகூட மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. பொறுப்புகளை வரவைப்பதில்லை. அவர்கள் பிரச்சனையில் அவர்களின் முழுகவனம் சென்று விடுகின்றது. அதிலிருந்து மீளவேண்டும் என்ற நினைவில்லாமல் செயல்படுகின்றனர். வாழ்வு பயணத்தை முடித்துக்கொள்ள நினைப்பவர் சிலர். போராடிப் பார்க்கலாம் எனச்சிலர். மனம் போனபோக்கிலே செல்லலாம் எனச்சிலர்.
ஆனால் யாரும் எதனால் வந்தது இந்தநிலை என்பதைக் கண்டு அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முயலுவதில்லை. அடுத்த நிலைக்கு வேகமாகத் தாண்ட நினைப்பதால்தான் தற்கொலைகளும், வேறுமணங்களும் அதிகமாகின்றன. ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்து மணம்புரிந்த ஆன்மாக்கள்கூட இதற்கு விலக்கு இல்லை.  
மயங்கும் மனத்தைக் கட்டுப்படுத்துங்கள். குற்றமாக எதையும் கருதாதீர்கள். சின்ன விஷயங்களைப் பெரிது படுத்தாமல், அன்றைய சூழலில் என்னவென்று அறியாதநிலையில் கற்பனைசெய்து பார்த்தவைகளுக்காக இப்போது கிடைத்திருக்கும் இந்த வாழ்வின் பயணத்தை திசைதிருப்பி வெற்றி பெறமுடியுமா என சிந்தியுங்கள். எல்லா ஆன்மாவும் சந்தோஷத்துடன் செயல்பட வேண்டும் என்பதே இயற்கையின் நியதி. நீங்கள் சிந்திக்கும் வழி, செல்ல இருக்கும் வழி, உங்களுக்கு இனியாவது நீங்கள் எதிர்பார்த்த சந்தோஷங்களக் கொடுக்கும் என நீங்கள் முழுமையாக நம்பினால் நடைபோடுங்கள் புதிய பாதையில்.
ஒருமுறைக்கு பலமுறை, குறைந்த பட்சம் மூன்று முறையாவது யோசனைசெய்து செயல்படுங்கள். புதிய பாதையின் நல்லவை கெட்டவைகளை சிந்தியுங்கள். இந்த மாற்றம் தேவைதான என உங்களை உங்கள் மனதை ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள். இறைவனை நாடுங்கள். அமைதியுடன் இருந்து மீண்டும் யோசித்து இறுதி முடிவிற்கு வாருங்கள். அமைதியுடன் குற்ற உணர்வின்றி செயல் பட்டு ஆனந்தம் அடைவீர்!
துன்பங்கள் துன்பம் செய்தவரையேச் சாரும், ஆதலால் துன்பம் இல்லாமல் வாழ, பிறருக்குத் துன்பம் செய்வதை நினைக்கமாட்டார். வாழ்வில் துன்பம் என்று நீங்கள் உணர்ந்ததை மற்றவர்களுக்குச் சொல்லி எச்சரிக்கை செய்தால் உங்கள் ஆத்மாவிற்கு குற்ற உணர்வும் ஏற்படாது-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27031200
All
27031200
Your IP: 44.201.97.0
2024-04-17 21:03

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg