gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

3-3.உலகுக்கு அழகு!

Written by

உலகுக்கு அழகு!  


இந்த உலகுக்கு எது அழகு! உலகில் எல்லாம் மலர்ந்து அதனதன் தன்மைகளை எந்த விருப்பும் வெறுப்பும் அற்று தன் கடமையாக செய்யும் செயலின் விதவிதமான வடிவங்களே! எதை நோக்கிலும் அழகு! எங்கும் எதிலும் அழகு! அழகோ அழகு! இந்த அழகை எல்லாம் ரசிக்க ரசிகத்தன்மை மட்டும் போதாது. அமைதியான மன நிலை வேண்டும். ஆர்வம் வேண்டும்! இயற்கையின் தன்மைகளை புரிந்து கொள்ளல் வேண்டும்! அப்போதுதான் அந்த சிலிர்ப்பான ரசனை நம்முள் தோன்றும். அதை நாம் உணர்வு பூர்வமாக உணர வேண்டும்! அந்த நிமிடங்களில் தான், இயற்கை நமக்கும் ஏனைய உயிர்களுக்கும் அதனிடத்தே கொண்டுள்ள பாடங்களை, நம்மால் கற்க முடியும்.

ஆன்மாக்களே! உங்களுக்கு ரசிக்கத் தெரியும். நீங்கள் அதற்காக பிறந்தவர்கள். எனவே இவ்வுலகின் ஒவ்வொன்றையும் ரசித்து மகிழுங்கள். சந்தோஷம் அடையுங்கள். ஒரு மலர் பூத்திருக்கின்றது. அதன் வண்ண அழகை, நறுமணத்தை ஒருவன் ரசிக்கின்றான். நுகர்ந்து அனுபவிக்கின்றான். பின் அதைப் பறித்து தன் வயமாக்கப் பார்க்கின்றான்.
ஒர் மலர் மலர்ந்து, இந்த உலகின் அழகை, அது எடுத்த பிறவியின் இடம் இவற்றை ஆவலாக கண்டு மகிழ்வு கொள்கின்றது. அதைச் சுற்றியுள்ள இடத்தை தன் வண்ணத்தால் மலரவைத்து ஆனந்தமயமான சூழலை உருவாக்குகின்றது. இது நமக்கு அதன் பாடம். நாமும் பிறவியில் மலர்ந்து நம்மை சுற்றியுள்ள அனைத்துக்கும் பெருமை சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஆனால் மலர்ந்த மலரை பறித்து அதன் தன்மைதனை இழந்து வாடி வதங்க வைக்கும் நம் செயல் நன்றன்று. மலர் தன் பிறவிப் பயன், கடமையாக தன் அழகாலும் நறுமணத்தாலும் தன் பிறப்பிடத்தையும் அல்லது தான் சேருமிடத்தையும் அழகும் நறுமணமும் கமழவைத்து, தானும் உலகின் அழகில் பங்கெடுத்து, வசந்தத்தில் வாழ்ந்து பலமணி நேரங்கள் தன் செயலை செய்கின்றது.
மலர்கள் கோர்த்து மாலைகள் ஆக்கி நற்காரியங்களுக்கு பயன் படுத்துதல் சிறப்பு. அவைகளின் பிறப்பின் பயனை நாம் உயர்த்துகின்றோம். அருள் புரியும் இறைக்கு சமர்ப்பிக்கின்றோம். இந்த செயல்கள் சிறப்பு என்ற நிலை கொள்கின்றது. ஆனால் அந்த மலரின் பிறவிக்கடமையை தடுத்து அது அழகும், மணமும் தரும் காலத்தைக் குறைத்து, நம் மலர் பறிக்கும் ஆசையால் இயற்கையின் சூழலுக்கு ஊறு விளைவிக்கின்றோம்.
நம் மனதிற்கு அழகு காட்டி ஆனந்தம் அளித்து மனம் பரப்பி வசந்த உணர்வுகளை மீட்டு நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்தும் அந்த இயற்கையின் அழிவுக்கு நாம் காரணமாக இருக்காமல், பார்த்தும், ரசித்தும், நுகர்ந்தும் அனுபவிக்கும் நினைவுகள் மட்டும் கொண்டிருக்க வேண்டும். எனவேதான் ‘மலர்களைப் பறிக்காதீர்கள்’ என்ற பலகை அறிவிப்பை பொது இடங்களில் காண்கின்றோம்.
நம் எல்லோருக்கும் ரசிக்கும் திறமையும், நுகரும் திறமையும் உண்டு. ஒருவரின் மலர் பறிக்கும் ஆசை, அந்த அழகை ரசிக்கும் பலரின் சந்தோஷங்களை வீனடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். பொதுவாக இயற்கையின் வனப்பை அழிக்காமல் அதன் அழகை ரசித்து உணர்ந்து சந்தோஷம் அடையும் நினைவுகளை எப்போதும் கொண்டால் அது மனித குலத்தின் சந்தோஷத்திற்கு வாய்ப்பாகும்-குருஸ்ரீ பகோரா.

3-2.இனிமையான பாடம்!

Written by

இனிமையான பாடம்!  


மழையில் நனையும்போது சந்தோஷமடையும் நாம், மழை எவ்வளவு சந்தோஷங்களை உள்ளடக்கி பூமியை நனைக்கின்றது என்பதை பெற்றோரின் அரவனைப்பில் புரிந்து கொள்ளல் வேண்டும். மழை அடக்கி வைத்திருக்கும் ஆனந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு நீர்த்திவலைகள். அதில் ஒரு பகுதியை கண்டு நாம் அடையும் ஆனந்தமே அளவிட முடியாதது.

சந்தோஷங்களை உள்ளடக்கிய மழைத் துளிகளை பூமி எவ்வளவு ஆனந்தத்துடன் ஏற்றுக் கொள்கின்றது. அதன் வெளிப்பாடே மரம், செடி, கொடிகள், இன்னும் பல ஜீவராசிகள். ஆனால் அந்த சந்தோஷத்தை மரம், செடி, கொடிகள் பூத்து பூவாய் மலர்ந்திருந்து வெளிப்படுத்துகின்றபோது மனித ஆன்மாவும், மனமும் பூத்து குலுங்குகின்றது. அதன் அழகில், வண்ண நிறங்களில் சந்தோஷம் கண்டு மயங்கும் நாம் அந்த மரம், செடி, கொடிகள் எல்லாம் எவ்வளவு சந்தோஷத்துடன் பூக்களை மலரவைக்கின்றது என்பதைப் பற்றி சிந்திப்பது இல்லை. புரிந்து கொள்வதும் இல்லை. எந்தவித பரபரப்பின்றி நம்மைச்சுற்றி நடக்கும் இயற்கையான அற்புத நிகழ்வுகளை கவனியுங்கள். புரிந்து ஆனந்தப்படுங்கள்.
இயற்கையில் பல பாடங்கள் நம் வாழ்விற்கு சொல்லப் பட்டுள்ளது. இயற்கையின் தீவிர உறுப்பினர்களாகிய தாவரங்களும், உயிரினங்களும் தானும் சந்தோஷமாயிருந்து மற்றவைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு தம் கடமையாற்றுகின்றன. இதைப்போன்றே நம் முன்னோர்கள் வழிவழியாக சந்தோஷங்களில் தோய்ந்திருந்திருப்பதால்தான் மனித குலம் வழி வழியாக தோன்றுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவர்மீது ஒருவருக்கு பரஸ்பர ஆர்வமில்லை என்றால் அடுத்த தலைமுறை இருக்கவே இருக்காது. இது போதை தரும் இயற்கையின் தீராத விளையாட்டு.
ஆனால் எல்லோரும் எப்போதும் சந்தோஷமாயிருக்க வேண்டும் என்ற ஒர் உன்னத கருத்து மறக்க விடப்படுகின்றது. உண்மையான அன்பு இன்றி கணவனாக- மனைவியாக வெறும் உறவு முறைகளுக்காக மட்டும் வாழ்வது மிகவும் சித்தரவதையான துன்பம் இருவருக்கும். இணைந்து வாழ்வதில் சுகம் உண்டு. மதிப்பு, அன்பு, ஆசை காரணமாக சேர்ந்திருப்பது சரி. சமூக நிர்பந்தத்திற்காக சேர்ந்து வாழுவது கொடுமை. உறவுகள் புரிந்து கொள்வதற்கு மட்டுமில்லை. ஒன்றோடு ஒன்றாக இனைந்து அன்பு கொள்வதற்குத்தான்.
ஓர்நாளில் சில மணிகள் மட்டுமே, அவசியமாண நேரங்களில் மட்டும் நீங்கள் ஆணாகவும்/ பெண்ணாகவும் நினைத்தால் போதும். எப்போதும் அந்த எண்ணங்களோடு இருக்க வேண்டியதில்லை. மற்ற நேரங்களில் ஆணும் பெண்ணும் சமம், எல்லாம் உயிர்களே என்ற உணர்வுடன் செயல்படுங்கள். அன்பு நிறைந்த வாழ்க்கையை அடையாளம் காண்பீர்.
முன்னோர்கள் வழித்தோன்றலாக நாமும் தோன்றி அன்பு கொண்டு சந்தோஷத்தை நாடவேண்டும். நம் முன்னோர்கள், பெற்றோர்கள் அடைந்த ஆனந்தம் நாமும் அடையவேண்டும். மலர்கள் போல், மழையைப்போல் தானும் சந்தோஷம் அடைந்து தன்னுடன் சேர்பவர்களையும் சந்தோஷப் படுத்துதல்தான் நியதி. குழந்தையாக இருந்தபோது ஒவ்வொருவரும் தன்னை சுற்றியிருந்தவர்களைச் சந்தோஷப் படுத்தியது போல் எப்போதும் முயற்சிக்க வேண்டும்.
பசிப்பிணிமருந்து: தமிழ் மீது பற்றுகொண்ட ஆனந்தரங்கம் பிள்ளையைப் பார்க்க மதுரகவிராயர் சென்றபோது அவர் வயல் வெளியில் சிந்திக்கிடக்கும் நெல்மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். கவிராயரை சிறிது இருக்கச்செல்லி தன் செயலை தொடர்ந்து செய்தார்.
பொறுமையிழந்த கவி, தன் பரபரப்பை உணர்த்தவே, ஏன் பறக்கின்றீர்கள்? என்ற பிள்ளையின் வார்த்தைகள் கவியின் மனதை தைக்க அவர், 'கொக்கு பறக்கும்! புறா பறக்கும்! குயில் பறக்கும்! நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்! நான் ஏன் பறப்பேன் நராதிபனே! திக்கு விசயம் செலுத்தி, உயர் செங்கோல் நடத்தும் செய்துங்கன் பக்கல் இருக்க, ஒரு நாளும் பறவேன்! பறவேன்! பறவேன்! எனப் பாடினார்.
பாடலின் சுவையை ரசித்த பிள்ளை அவரை தன் வீட்டிற்கு அழைத்து சென்று அவர் முன் தலைவாழை இலை போட, பசியுடனிருந்த கவி சாப்பிட தயாரானார். ஆனால் வெள்ளித் தட்டில் பொற்காசுகளை கொண்டுவந்து இலையில் போட்டார் பிள்ளை. தங்கம் உயர்வுதான். ஆனால் அப்போது பசியை போக்குமா!
விழித்த புலவரிடம், வயல் வெளியில் உதிர்ந்த நெல்மணிகளை நான் பொறுக்கிய போது அற்பமாக பார்த்தீர்கள்! அது நெல் அல்ல! பசிப்பிணி மருந்து என்றார். கவிராயர், வள்ளலே! பசியின் கொடுமை தாங்காமல் அவசரப்படுத்திவிட்டேன் என்றார். ஆனந்தரங்கம் பிள்ளை கவிராயருடன் உணவருந்தி அந்த பொற்காசுகளை அவருக்கு தந்து சந்தோஷத்துடன் வழி அனுப்பினார்.
சோதனைகள், தடைகள் வரலாம். அவைகளைத் தாண்டி வெற்றி கண்டு சந்தோஷிக்க முயல வேண்டும். சந்தோஷத்திற்காக எதையும் செய்யலாம்! எப்படியும் நடந்து கொள்ளலாம் என்று நினைவு கூடாது. சரியான முறையான செயல்களால் ஏற்படும் சந்தோஷத்தை அடைய முயல வேண்டும்.
நமக்கு என்ன செய்கிறோம் என புரியாத மழலைப் பருவத்தில் நம் செயல்கள் அனைவருக்கும் மகிழ்வைக் கொடுக்கும். உறவும் சுற்றமும் ஆனந்தமடையும். அதே பருவம் கடந்து சிந்திக்கும் திறனும் செயல்படும் திறனும் அடைந்தபின் நாம் செய்யும் தவறுகளை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
எனவே நம்மைச் சுற்றியுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக, சந்தோஷப்படும் வடிவில் செயல் அமையவேண்டும். அந்த வழி செயல்பாடுகளை நாம் தெரிந்து, செயல்பட்டு, நாமும் சந்தோஷித்து, நம்மைச் சார்ந்தவர்களும், சுற்றியுள்ளவர்களும் சந்தோஷிக்கும் வகையில் முனைப்புடன் செயலாற்றவேண்டும்.
மலர்கள் எங்கு மலர்ந்தாலும் இருக்கும், வளர்ந்த, பிறந்த சூழலினின்று வேறுபட்டு தன் பிறவிக்குண்டான மனத்தையும் அழகையும் அனைவருக்கும் தறுதல் போன்று, நாமும் எந்த சூழ்நிலையாக இருந்தாலும், நம்மை தோன்றுவித்த பெற்றோர்கள், முன்னோர்கள் வழி பெருமைகளை வெளிப்படுத்தி நாமும் சந்தோஷம் கண்டு, அனைவரிடமும் காணவேண்டும்.
வாழ்வில் என்னென்ன சோதனைகள், குழப்பங்கள் வந்தடைந்தாலும் மலர் போன்று தெளிந்து மணம் பரப்ப கற்றுக் கொள்ள வேண்டும். மனம் மணந்தால் முகம் மலரும். அந்த மலர்ந்த முகம், நமக்கு முன்னேற்றப் பாதையில் மிகவும் உதவியளித்து வாழ்வில் வெற்றிதந்து சந்தோஷமாக பயணம் செய்ய உதவும்-குருஸ்ரீ பகோரா.

3-1.வேதம்!

Written by

வேதம்!


வேதம் என்பது கடைபிடிக்கமுடியாத ஒன்றும், செயல் படுத்த முடியாதது ஒன்று மில்லை. உயரத்தில் உள்ளது, எட்டிப்பிடிக்க முடியாதது, இருக்கும் இடம் தெரியவில்லை, கண்டுபிடிக்க முடியாதது என எதையும் நினைக்கக்கூடாது. எதையும் சாதிக்க முடியும், எட்டிப்பிடிக்க முடியும், கண்டு கொள்ள முடியும் என்ற உறுதி வேண்டும்.

ஒன்றை வேறொன்று என புரிந்துகொண்டபோது, அதை ஆரய்ந்துபின் உண்மையில் அது என்னவென்று தெரிந்துகொள்ள, நமது அறியாமையை அகற்றும் வெளிச்சமாகத் திகழ்வது வேதம். சாதாரண கயிறுகூட இருட்டில் பாம்பாகத் தெரிவது, விளக்கை ஏற்றியபின் உண்மைதனை அறிகிறோம். இந்த உண்மைகளை விளக்கி அச்சம், பயம் நீக்கும் பணியை வெளிச்சம்போல் வேதம் செய்கின்றது.
எந்த இதிகாசத்திலும், புராணத்திலும் நல்ல சிந்திக்கும் திறன் கொண்டவன், தன் திறமைகளை வளர்த்துக் கொண்டவன், பாசமும் நேசமும் கொண்டவன், மன உறுதியுடன் செயல் படுபவன் கொண்ட லட்சியங்கள் தோற்றதாக இல்லவே இல்லை.
அதற்கான மன உறுதி, முயற்சியை செயலாக்கும் திறன், கொஞ்சம் கர்மபலன் இருந்தால் வெற்றிக்காண வழி கிடைக்கும். அந்த பாதையில் செயலாக்கம் நடந்தால் சிறப்பாகும். நமது ஆன்மா சிறப்பானது, தூய்மையானது. ஞானத்துடன் சிந்தித்தால் எல்லாம் சிறப்பாகும். பிரபஞ்சத்தின் முந்தைய ஆற்றல்களெல்லாம் நம் முன்னோர்கள் உறுதியுடன் செயல் பட்டது.
நம்மைச்சுற்றி இருள் ஏதுமில்லை, நீங்கள் பிரகாசித்தால். நம்மில் யாரும் எதிலும் பலவீனமானவர்கள் இல்லை. எல்லா வகையிலும் திடகாத்திரமானவர்களே! தவறு என நீங்கள் நினைப்பதை, மற்றவர்கள் அவ்வறு சொல்லக்கூடும் எனத் தோன்றினாலும் செய்யாதீர்கள். திறன் உங்களிடம் இல்லை என்ற நினைவை கொள்ளாதீர். அந்த தீய கருத்தை உங்களுள் பரவாமல் முற்றிலும் அழித்து விடுங்கள்.
நல்லது செய்ய உண்மையில் விரும்பினால் தான் நமக்கு நிறைய சிந்தனைகள், செயல் வழிமுறைகள், காலம் எல்லாம் கிடைக்கும். பல லட்சியங்களை மனதில் கொள்ளலாம். நாம் செய்யும் தவறுகளை கண்டு ஒன்றும் சொல்லாமல், நமக்கேன் என என்னும் உறவினர்கள், நண்பர்களை நாம் பெற்றததுதான் நமது கர்ம பலன். முதலில் ஒன்றைச்சொல்லி அடுத்து அதை சூழ்நிலைக்கேற்ப சந்தர்ப்பவாதமாக மாற்றிச் சொல்லும் ஆன்மாக்கள் நம்மைச்சுற்றி அதிகம்.
நமது லட்சியத்திற்கு இவைகள் இலக்கணமானது இல்லை. எனவே நடைமுறை வாழ்க்கையில் நமது லட்சியத்தை இனைக்க வேண்டும். அந்த ஒன்றை எப்போதும் சிந்தித்தால் சிறப்பாகும். நமக்கு இருப்பது ஒரே உலகம், ஒரே வாழ்க்கை, ஒரே லட்சியம் வெற்றி கொள்வதுதான், சந்தோஷப்படுவதுதான், எல்லாமே சந்தோஷம் என்ற ஒன்றுக்குத்தான் நாம் செயல் படுகின்றோம். செயல் படவேண்டும்.
வேறுபாடுகள் தோன்றினாலும் உயர்ந்த நோக்கில் வேறுபாடுகள் களையப்பட்டு மறைந்தே தீரும் என்பது திண்ணம். உயர்ந்த லட்சிய நோக்கில் எல்லாமே வேறுபாடுகளற்றுத் தெரியும். வானிலிருந்து பார்த்தால் மலையும் மடுவும், மரமும் புல்லும், மாடியும் குடிலும் உயர வேறுபாடுகளின்றி தெரியும்.
அந்த வேறுபாடற்ற உயரத்திற்கு உங்கள் லட்சியங்கள் உயரவேண்டும். உயர்ந்த லட்சியங்கள்கொண்டு நோக்கின் எல்லாவற்றையும் வேறுபாடின்றி பார்க்கமுடியும். இதுவே வேதத்தின் கூற்று. முதலில் தாவரங்களும் பின் மனித இனமும் தோற்றிவிக்கப்பட்டது என்கின்றது வேதம். தாவரங்களின் தோற்றம் ஜீவராசிகளுக்கு உணவாவதே! அதாவது உணவை படைத்தபின் உண்பவனை தோற்றுவித்தவனின் அருள் அது. ஒவ்வொரு குழந்தையின் பிறப்புக்குமுன் அதற்கு தாய்ப்பால் தயாராகிவிடும் என்பது வேதங்கள் கூறும் உண்மை.
மனதிற்கு மனம் எண்ண வேறுபாடுகளிருந்தாலும், உடலின் ஆன்மா, ஆன்மாவின் உடல் ஓர் அற்புதம். அதன் உழைப்பு சிறப்பு. அதன் செயல் பாடுகள் சிறப்பு. உழைப்பின் அருமை புரிந்தால்தான் வெற்றியின் சந்தோஷம், மழையின் அருமை வெய்யிலும், வெய்யிலின் அருமை மழையிலும் தெரிவதுபோல் தெரியும். புரியும். சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். நம் பெற்றோர்கள் ஒற்றுமையில், உழைப்பில் உறுவான இந்த உடலின் அருமை நமக்கு புரிய வேண்டும். அதன் உள்ளே உள்ள ஆன்மாவை புரிந்து கொள்ளல் வேண்டும். அப்போதுதான் அதன்வழி சென்று அதன் செயல்களை நன்முறைப் படுத்த முடியும்.
புராண, இதிகாச, இலக்கியங்களை, நீதி நூல்களை, இலக்கணங்களை படிப்பதால் வாழ்வில் உன்னத நிலைக்கு வரமுடியாது. இதைத்தான் வாசக ஞானத்தால் சுகம் வருமோ? என்றார் தாயுமானவர். எல்லாவற்றையும் படித்தலின் மூலம் நம்மை நாமே படிக்கவேண்டும். உன்னை அறிந்துகொள் என்பதே ‘உபநிடதங்களின் அடிப்படை உபதேசம்’.
தனிமை: என்ன என்ன சொல்லி ஊட்டமளித்து ஊக்கத்துடன் பெற்றோர்கள் வளர்த்த உடல், அந்த உடலின் ஆன்மா இது. அவர்களிடம் ஒன்றி வளர வேண்டும். வளர்ந்த பின்னும் ஒன்றிப் போகவேண்டும். அப்போதுதான் தனிமை என்ற எண்ணம் எந்நாளும் தோன்றாது, ஓர் நம்பிக்கையான தன்னம்பிக்கை கிடைக்கும். ஆதரவான அரவனைப்பு எல்லா நிலையிலும் எல்லா சுற்றத்திலிருந்தும் கிடைக்கும். ஒவ்வொரு ஆன்மாவும் தன் பயணத்தில் தன்மீது படிந்துள்ள எல்லா அடையாளங்களிலும்- தந்தை, தாய், கணவன், மனைவி, நடுத்தரவயது ஆண்/பெண், இளைஞன், இளைஞி ஆக எந்த அடையாளத்திலும் அந்த அரவனைப்பைப் பெறமுடியும்.
தெடரும் சந்தோஷம்: மனமும் உடலும் ஆக்க சக்தியைத்தான் வெளிப்படுத்தும். உங்கள் சிந்தனை அதன் வழி சென்றால் அந்த சக்தி வெற்றி சக்தியாக மாறவாய்ப்புகள் கிடைக்கும். அதற்கு மனமும் உடலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். மனது சந்தோஷப்பட்டால் உடலும் சந்தோஷிக்கும்.
அதற்கு நாம் நம் வாழ்வில் இதற்கு முன் நமக்கு சந்தோஷம் கிடைந்த சின்ன சின்ன நிகழ்வுகளை நினைவில் கொண்டு வந்தால், அதன் மூலம் ஓர் ஊமை சந்தோஷம் மனதிற்குள் தோன்றி அது உடல்வழி பரவி, உடலும் சந்தோஷத்தில் ஆழ்ந்துவிடும். அதே போன்று சந்தோஷங்களை ஏற்படுத்தும் விஷயங்களை திட்டமிடுங்கள், செயல் படுங்கள். பிறகு எங்கும் எப்போதும் சந்தோஷம், சந்தோஷம் என்ற ஆனந்தம் என்றும் நம்முடன் தொடரும். நாம் நாடுவது சந்தோஷம்தான்.
ஆனாலும் நாம் எதிர்பார துன்பங்கள் இடைஇடையே வரும். அப்போதுதான் சந்தோஷத்தின் அருமை தெரியவரும். தொடர் சந்தோஷங்களும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல் துயரமாகிவிடும். எதிர்பார்த்து கிடைக்காமல் துயரங்களுக்கிடையே நாம் தேடியடைந்த சந்தோஷங்களே நிறைவான சந்தோஷத்தை தொடர்ந்து தரும்-குருஸ்ரீ பகோரா.

2-9.ஆசை! பேராசைப் பூக்கள்!

Written by

ஆசை! பேராசைப் பூக்கள்!    
                                                                     

செல்வம் இருந்தாலும், இழந்தாலும், சுகத்தில் திளைத்தாலும், துன்பத்தில் உழன்றாலும், மனித ஆத்மா மண்ணுலகில் வாழத்தான் விரும்புகின்றது. இதற்கு ஆசைதான் காரணம். நெருப்பை புகை மறைக்கும், துசிப்படலம் படிந்து கண்ணாடி மறையும், வளரும் சிசு கருப்பையில் மறைந்திருக்கும். ஆசைப் படலம் அறிவை மறைக்கும்.
விதைகள், கொட்டைகளில் எண்ணெய் இருப்பதால்தான் அவைகளை அரைத்து பிழிகின்றோம். மனதில் அளவற்ற ஆசைகள் இருந்தால் அவைகளால் பிசையப்பட்டு, எண்ணெய் வருதுபோன்ற துன்பங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி, பயம், வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளே எண்ணற்ற ஆசைகளை, எண்ணத்தின் கருத்துகளாக மனதில் தோன்றுவிப்பதாக பதஞ்சலி முனிவர் சொல்கிறார்.
ஒரு கணவனும் மனைவியும் ஆசைகளைத் துறந்து துறவறம் மேற்கொண்டு யாத்திரை புறப்பட்டனர். முன்னால் சென்று கொண்டிருந்த கணவன் ஒரு வைரக்கல் கிடப்பதைப் பார்த்து மனைவி காணநேர்ந்தால் அவளுக்கு ஆசை வந்திடும் என்றென்னி அதை புதைக்க குழி தோண்டினான். அதை புதைக்கும் போது அங்கு வந்த மனைவி என்ன புதைக்கிறீர்கள் எனக் கேட்டு மன்னைத் தோண்டி வைரத்தைக் கண்டாள்.
தான் பார்த்தால் ஆசைகள் திருப்பி வந்து விடும் என்று கணவன் நினைத்தது புரிந்தது. உடனே சமாளித்துக் கொண்டு அன்பரே, வைரத்துக்கும் சாதாரண கல்லுக்கும் வித்தியாசம் தெரிவதாய் இருந்தால் ஏன் உலகத்தை துறந்து வந்தீர்கள் என்றார். தன்னைவிட தன் மனைவி ஆசைகளை துறந்துவிட்டாள் என்பது கண்டார்.
உங்களால் இயலாத ஆயிரக்கனக்கான விஷயங்களை எல்லாம் செய்ய முடிந்தால் பேரானந்தம். அந்த ஆசை எல்லோருக்கும் உண்டு. ஆனால் ஆசைகளை நிறைவேற்ற வழியின்றி போகும்போது துன்பம் என்ற வித்தியாசமான ஆனால் கட்டாயமான செயல் நடைபெறுகின்றது. அதற்கு நீங்கள்தான் காரணம். உங்களின் பேராசையான அளவை மிஞ்சும் ஆசைகளே காரணம் எனப்புரிந்து கொள்ளல் நலம் பயக்கும்.
புலனடக்கம் இல்லா ஆசை, பேராசையாகி எப்படியும் வெற்றியடைய வேண்டும் என்ற ஓர் நிலையில் பிறர் பொருளை நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ அடைய முயற்சிப்பதாகும். இந்த கவர்தல் ஒருவகை திருட்டாகும். தார்மீக எண்ணம் உடையவர்களுக்கு அது தவறு என்பது தெரியும். அவ்வாறு தவறு என நினைத்து, பிறர் பொருளை களவாடாமல் இருத்தலை ‘அஸ்தேயா’ எனக் கூறுகின்றது மனுதர்ம சாஸ்திரம். நற்செயல்களின்று சட்டவிரோதமான வகையில் பொருள்களை அடைவதும் ஓர்வகைத் திருட்டே!
உங்கள் தேவைக்கு அதிகமாக நீங்கள் சேர்த்து வைத்தால், அந்தச் செயல் தார்மீகமாக பிறருக்கு  இவ்வுலகில் கிடைக்கக் கூடிய முன்னேற்றங்களுக்கு நீங்கள் தடையாக இருக்கின்றீர்கள் எனப்பொருள்படும். உலகின் மற்ற ஆன்மாக்களின் அளவிடமுடியாத சந்தர்ப்பங்களை நீங்கள் ஒவ்வொன்றாக அபகரித்துக் கொள்கின்றீர்கள் என்று அர்த்தம். எனவே புலன்கள் பேராசை கொள்ளாமல் இருக்க பழக்க வேண்டும், உங்களின் பேராசை ஆசைகளைத் தீர்க்காது. ஆனால் ஆசைகளை வளர்த்துக் கொண்டுதான் இருக்கும்.
ஆசைப்பட்டதை அடைய முயற்சிக்கின்றான். திட்டம் தீட்டுகிறான். செயல் வடிவாக்கி செயல்படுகின்றான். செயல்படும்போது தோன்றும் இடையூறுகளை கடக்க முயற்சிக்கும்போது தான் அடைய நினைத்து ஆசைப்பட்டது சரியா! என்று நினைக்கத் தோன்றும். அப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. மீண்டும் ஒருமுறை சிந்தித்து ஆசைப்பட்டது உண்மை. நியாமானதுதான். சரியானதுதான் என முடிவுகொண்டு மீண்டும் சலனமின்றி உறுதியுடன் செயல்படுங்கள். சரியானது இல்லை என உங்கள் மனம் நினைத்தால் அந்த செயலை விட்டு விடுங்கள்.
இடர்பாடு களையும்போது நீங்கள் சரியான வழியில் நேர்மையான முறையில் செயல்படுகின்றீர்களா? என உறுதி செய்துகொள்ளுங்கள். மற்றவர்களுக்கு கேடு விளைவிக்காமல், துயரங்கள் ஏற்படாத முறையில் செயல்படுங்கள். நீங்கள் செய்யும் செயலுக்குள் ஓர் நியாயம் இருப்பதை உறுதிசெய்து செயல்படுங்கள். யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் நேர்மையுடன் வெற்றி பெறும்போது கிடைக்கும் மகிழ்வு தரமானது, நிரந்தரமானது.
ஆசையின் செயல்முடிவில் வெற்றியின் மகிழ்ச்சி சந்தோஷமாகும்போது அந்த அளவுடன் விட்டு விடுங்கள். மேலும் மேலும் ஆசைவளர்த்து, செயல்கள் செய்து, வெற்றியடைய நினைக்கும்போது, நல்வழிகளைத்தாண்டி நேர்மையற்ற முறையில், எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்ற வெறியாக மாறக்கூடாது. அடைந்த வெற்றியின் மகிழ்வு நினைவுவெறி உங்களை மாற்றிவிடக்கூடாது. மனிதத்தன்மை இழந்துவிடுவீர்கள்.
மீண்டும் மீண்டும் ஆசைகொண்டு, நீங்கள் நினைத்த அளவுக்கதிகமான ஆசைகள் நிறைவேறுவது என்பது, “கடல் நீரைப்பருகி உங்கள் தாகத்தைப் போக்கிக்கொள்வது நினைப்பது போலாகும்.” கடல் நீர் பருகப்பருக தாகம் அதிகமாகுமே தவிர தாகம் குறையாது. அடங்கவும் அடங்காது. உங்கள் துன்பமும் துயரமும் அதிகமாகும்.
எல்லா உயிர்களுக்கும் ஆசை உண்டு. ஆசை இனிமையானது. அது தேங்காயின் உள்ளே உள்ள இளநீர் போன்று சுவையானது. உலகின் ஆசைகளின் அடையாளம் இளநீர். அந்த நீர் தேங்காயின் மேல் உள்ள ஓடு உடையாது என நம்பிக் கொண்டிருக்கின்றது. ஆனால் காலப்போக்கில் அந்த ஓடு உடைபடும். காலம் அதிகமானால் நீர் வற்றி தேங்காய் கொப்பரையாக மாறி முதிர்ந்த நிலையை அடைந்துவிடும். அன்புள்ள ஆன்மாக்களே! இளநீர் போன்ற ஆசைகளால் நம் உடல் கொப்பரைத் தேங்காயைப்போல் உறுதியாகும் நிலையானதாகும் என எண்ணி மேலும் மேலும் ஆசைகளை வளர்த்துக் கொள்கின்றோம்!
இந்த உடல் மாயையானது, என்றும் சாசுவதமானது அல்ல. கொப்பரை போலாகாது. உண்மையை உணர்ந்துகொள். அனுபவமும் ஞானமும் கைகோர்த்து எண்ணங்கள் முதிற்சியுற்று உலக ஆசைகள் குறைந்து அந்த ஆசைகளை விட்டுவிலகி வாழப் பழகிக் கொள்ளவேண்டும். இளநீர் வற்றிய முற்றிய தேங்காயை இறைவனுக்கு படைப்பதுபோல எண்ணங்களால் முதிர்வுற்று பக்குவமான உள்ளத்தை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்
நேர்மையான வழியில், செயலினால் கிடைக்கும் ஆனந்தத்தை அடைந்து அதிகம் ஆசைப்படாமல் மகிழ்வுடன் வாழப் பழகுங்கள். “ஸ்ரீ கிருஷ்ணனின் நண்பன் மாலகன். கிருஷ்ணனிடம் அனைத்து வித்தைகளையும் கற்றவன். கண்ணனிடம் அனைத்தும் கற்றதனால் அகந்தையும், மமதையும் அடைந்து மதியிழந்து இருந்ததன் காரணமாக அவனுள் ஓர் பேராசை புகுந்து கண்ணனிடமிருந்த சக்ராயுதத்தை பிரயோகிக்க ஆசைப்பட்டான்.
கண்ணன் எவ்வளவு தடுத்தும் கேளாமல் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி அந்தக் கலையைக் கற்றான். கற்றுத்தேர்ந்தவன் அதை விண்ணில் பிரயோகித்தான். அப்போது அவன் மனதில் தானும் கண்ணனைப்போல் சமபலம் உள்ளவன் என நினைத்தான். அந்த அபரிதமான எண்ணத்தினால் கைவிரலை கன்னத்தில் வைத்து மகிழ்ந்திருந்தான். அவன் பிரயோகித்த சக்ராயுதம் திரும்ப அவன் விரல்களுக்கு வரும்போது கழுத்து அறுபட்டு இறந்தான்,” என்று புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மாலகனின் அளவில்லாமல்போன ஆசையின், பேராசையின் அளவு. அதுவே அவனின் முடிவு. எனவே ஆசை கொள்ளுங்கள். ஆசையின் பலனை அளவான வெற்றியாக காணுங்கள். பேராசை கொள்ளாதீர்கள்! பேராசை இல்லா மனம் ராஜயோகத்துடன் எல்லா செல்வங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்வில் பயணிக்கும்.
தனக்கு என சொத்து, நிலம் வாங்க ஆசைப்பட்டான் ஒருவன். நாளுக்குநாள் ஆசை மிகுதியாயிற்று. போராசை கொண்டான். அவனால் ஆசைதான் கொள்ள முடிந்தது அன்றி எவ்வளவு முயற்சித்தும் கொஞ்சம் கூட நிலம் தனக்கு என சொந்தமாக்கி கொள்ள முடியவில்லை. அவ்வூரின் பெரிய தனவந்தரை சந்தித்து தன் விருப்பையும், இயலாமையும் கூறினான். அவர் இவ்வளவு நாளில் உனக்கென்று நிலம் பெறவில்லையா! சரி! இங்கிருந்து ஓடு. எவ்வளவு தூரம் ஓடுகிறாயோ அதுவரை உள்ள நிலத்தை நான் உனக்கு அளிக்கின்றேன் என்றார்.
மனிதனின் ஆசைத் துரத்த கால்கள் ஓடியது, ஓடினான், ஓடிக்கொண்டேயிருந்தான். உடல்நிலை காரணமாக அவனால் ஓடமுடியவில்லை. திருப்பிப் பார்த்தான். இவ்வளவுதான? என நினைத்து இன்னும் கொஞ்சம், கொஞ்சம் என ஓடினான். ஓர் நிலையில் அவனால் ஓடமுடியவில்லை. மயக்கமடைந்தான். திடீர் வேகம் என ஓடியதால் களைப்பு எல்லாம் ஒன்றுசேர்ந்து மூச்சு முட்டி மாரடைப்பால் இறந்தான். அந்த தனவந்தர் அவனுக்கு அவன் ஓடிய நிலத்தில் ஆறு அடி நிலம் ஒதுக்கினார். அது அவன் உடலுக்கு போதுமானதாயிருந்தது. ஆசை அளவுடன் இருந்திருந்தால் வளமுடன் இறுதிவரை சந்தோஷத்துடன் வாழலாம். இனி அவன் அதை புரிந்து என்ன பயன்?
கிருஷ்ணன் என்றதும் அவரின் லீலைகள் அனைவருக்கும் ஞாபகம் வரும். கிருஷ்ணலீலை, கோபிர்களிடம் கண்ணன் லீலை என்று சொன்னாலும் “மாயாதீதன்” என கிருஷ்ணனை சொல்கின்றோம். அவர் அவதாரம். அது ரசிக்கப்படுகின்றது. ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அந்த பரந்தாமன்கூட ஆசை மோகத்தில் தன்னையிழந்து பித்து கொண்டிருந்ததாக புராணங்கள் பகர்கின்றது. நாம் மனிதர்கள். நாமும் அதுபோல் மோகம், கவர்ச்சி என்ற மாயைக்கு உட்பட்டு பேராசையினால் ‘மாயாதீதன்’ ஆகி சோகத்தில் உழலாமல் சந்தோஷத்தின் வாயிலில் நுழைவோம்.
உலகத்தில் உள்ளவனவற்றிற்கு ஆசைப்படு! அதன்மீது அளவற்ற பற்று வைக்காதே! அது ஆபத்து! நீ ஆசைபட்டது உன்னை வந்தடையவில்லை என வருந்துகின்றதா! இல்லையே! ஆனால் நீ மட்டும் அதற்காக மனதை கஷ்டப்படுத்தி, உடலை வருத்தி எத்தனை துன்பம் அடைகின்றாய்! அந்த நிலை உன் முகத்தில் வேதனையுடன் தெரிய ஆரம்பிக்கும்.
முகம் பார்க்கும் கண்ணாடியில் உன்னைப் பார்! அப்போது தெரியும் உன் நிலை! ஒரு கண்ணாடியைப்போல் இரு! நீ பார்க்கும் போது மட்டும் உன் உருவைக் காட்டும் அது உன்னுருவை எப்போதும் நினைப்பதில்லை! நீ மீண்டும் காட்டும் வரை! அது துன்பமில்லா நிலை! பற்றுதலில்லா நிலை! ஆசைபடு! பற்று கொண்டு பேராசை கொள்ளாதே!
அரசராயிருந்தபோது எதிரியை வென்று திரும்பிய விசுவாமித்திரர், குல குரு வசிஷ்டரை வணங்க ஆசிரம் சென்றார். அங்கு அவரது படைகளுக்கும் சேர்ந்து விருந்து படைக்கப்பட்டது. அந்தக்காட்டில் அப்படிஒரு விருந்தை எதிர்பார்க்காதவர் அதன் காரணத்தை கேட்டார். வசிஷ்டர் காமதேனுவின் சிறப்பு அது என்றார். அதை தனக்கு அளித்தால் அன்றாடம் அதைப் பயன்படுத்தலாம் எனக்கருதி குருவிடம் வேண்டுகோள் விடுத்தார். குரு காமதேனு விரும்பினால் அழைத்துப்போ என்றார்.
காமதேனு மறுக்கவே, குருவிற்கு மனமில்லை எனக்கருதி அவரிடம் போர் தொடுத்தார். போரில் தோற்ற விசுவாமித்திரர் அவரை தவபலத்தினால் வெல்ல வேண்டும் என முடிவெடுத்தார். விசுவாமித்திரர் வாழ்க்கை திசைமாறக் காரணமாயிருந்தது அவரின் பேராசையே! அரசு துறந்து தவம் இருந்து முனிவரானார். ஆசைகளை எல்லையுனுள் வைத்துக் கொள்ள வேண்டும். விளைவுகளை ஆராயாமல் செய்யும் செயலின் முடிவுகள் வாழ்வின் போக்கை மாற்றும். இன்னொன்று ஆசையை வளர்த்தால் பிறவிகள் வளரும். ஆசையை ஒழித்தால் முக்தி நெருங்கும்.
ஆசை பூர்த்தியாவதர்க்காக நம் செயல்கள் நம்மை ஆட்டிவைக்கின்றது. ஆனந்தம் வேண்டும் என்பதற்காக நம் செயல்கள் இருந்தாலும், அது ஒரு துக்கமில்லா சந்தோஷமாக இருத்தல் வேண்டும். அந்த சந்தோஷங்களும் தற்காலிகமாக மறைந்துவிடக்கூடியதாக இருக்கக் கூடாது.
மகாபாரத நிகழ்வில் யாயாதி மன்னன், சுக்ராச்சார்யாரின் மகள் தேவயாணையை மணந்தான். இல்வாழ்வில் தேவயாணையின் தோழியுடன் கலந்தான். இதை அறிந்த சுக்ராச்சாரியார் இளமையில் கிழட்டுத்தன்மை என சாபமிட்டார். கிழட்டுத்தன்மையை இளைஞர் ஒருவருக்கு அளித்து இளமை பெறலாம் என்ற விமோசனத்தின் பேரில் தன் மகன் பூருவிடமிருந்து இளமை பெற்றான்.
இன்பத்தின் வகைதேடி, எல்லைதேடி வகை வகையாக அனுபவித்தும் அவனின் ஆசை அடங்கவில்லை. விரும்பியதைத் தேடித் தேடி அனுபவித்தும்  ஆசை அடங்காமல் மேலும் மேலும் ஆசை அதிகமாக ஆவதை உணர்ந்தான் மன்னன் யாயாதி. அனுபவித்து ஆசையை தீர்ப்பது என்பது முடிவில்லாதது, அது நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்கும் செயல் என புரிந்து, தன் மகன் புருவை அழைத்து அவனிடம் பெற்ற இளமையை மீண்டும் அவனுக்கு அளித்ததாக சொல்லப்பட்டுள்ளது.
துன்பத்திற்கு தீர்வு ஆசையை அனுபவிப்பது இல்லை, அதை அடியோடு ஒழித்து மறந்துவிடுவதுதான் சிறப்பு. எல்லா துக்கங்களுக்கும் ஆசையே காரணம். ஆனால் ஆசை இல்லாமல் போனால் மனித வாழ்வு அர்த்தமற்றதாகிவிடும். ஆசைகள் இயல்புதன்மையுடன் அடங்கவேண்டும். அடக்கலாகாது. அடக்குதலின் விளைவு பேராசையே!. வாழ்வில் உனக்கு தேவையானவற்றின் மீது ஆசை வை. பேராசை கொள்ளாதே!.
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. அதனால்தான் குரங்கின் செயல்கள் நம் மனத்தின் எண்ணங்களோடு ஒப்பிடப்படுகின்றன. ஒரு குரங்கு தான் அமர்ந்திருக்கும் மரத்தின் கீழே ஓர் பழம் இருக்க கண்டது. அருகில் வந்து பார்த்த போது ஓர் கண்ணாடி குடுவையில் அது தேடிய பழம் இருக்கவே அதை எடுக்க முயற்சி செய்து கையை உள்ளே விட்டு பழத்தை எடுத்தது.
ஆனால் பழத்துடன் கை வெளியே எடுக்க முடியவில்லை. கையில் கிடைத்த ஓருபழத்தையே அனுபவிக்கா இயலா, இந்நிலையில் அருகில் அது போன்றே இன்னொரு பழம் குடுவையில் இருக்க அதன் மேலும் ஆசைகொண்டு அதனுள் கையைவிட்டு பழத்தை பிடித்துவிட்டது. ஆனால் இரண்டு கைகளையும் பழத்துடன் வெளியே எடுக்க முடியவில்லை. பழத்தை விட்டு கையை எடுத்தால் கை வந்துவிடும். பழத்தை விட மனமில்லை. அது புரியவும் இல்லை. இதைத்தான் குரங்குப்பிடி என்பர்.
குரங்கை பிடிக்க வேடன் செய்த தந்திரத்தில் மாட்டிய குரங்கு, கைகளில் குடுவை இருந்ததால் ஓடவும், தாவவும் முடியாததால் வேடனிடம் பிடிபட்டது. சிறைபிடித்த வேடன் குரங்கின் தலையில் ஓர் தட்டு தட்டியவுடன் சிலிர்த்து கையை விட்டது. கையில் இருந்த பழம் நழுவியதால் கைகளை வெளியே எடுக்க முடிந்தது. ஆனால் சிறைபட்டுவிட்டதே! வேண்டாத ஆசைகளில் சிக்கல்களிருப்பது தெரிந்தே விலங்குபோல மாட்டிக் கொள்கிறது மனித ஆத்மாக்கள்.
இறை நம்பிக்கை இல்லாதவர்கள், தற்பெருமை, ஆணவம், கர்வம் கொண்டவர்கள், வாழ்வில் எந்த நோக்கமின்றி வாழ்பவர் ஆகியோரின் மனம், ஆசையின் தாக்கங்களுக்கு விரைவில் ஆட்பட்டு, அதை விடமுடியாததால், அதனால் சிறை பிடிக்கப்பட்டு, துன்பத்தினை அடைவர்.
ஒரு சேரிப் பகுதில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாடும்போது இருவர் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்துவிட்டனர். அவர்களை எட்டிப்பார்த்த மற்றக் குழந்தைகளும் சாக்கடையில் வீழ்ந்தன, எல்லா குழந்தைகள் மேலும் சாக்கடையின் சகதிகள். சப்தம் கேட்டு வந்த பெண் ஒவ்வொரு குழந்தையாகக் அருகில் இருந்த குழாயின் நீரினால் கழிவி விட்டாள்.
அதற்குள் மற்ற குழந்தைகளின் தாய்மார்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அனைவரின் குழந்தைகளும் நீரில் கழுவியிருப்பதைப் பார்த்து, அந்த பெண்ணுக்கு நன்றி சொன்னார்கள். அதற்கு அந்தப் பெண் எல்ல குழந்தைகளும் சகதியினால் அடையாளம் தெரியாமல் இருந்தனர். எது என் குழந்தை எனத் தெரிந்து கொள்ளவே நான் நீரில் கழுவி விட்டேன் என்றாள்.
தன் குழந்தை எது எனக் கண்டுபிடிக்க எல்லா குழந்தையின் முக அழுக்கையும் நீக்கினாள் தாய். அதுபோன்றே நாம் யார் எனத்தெரிந்து கொள்ள, நம் உண்மையான முகத்தின் அடையாளம் காண அதை மூடியுள்ள ஆணவம், கர்வம், பொறாமை, பேராசை போன்ற திரைகளை நீக்கவேண்டும்.
ஏழை ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் நண்பன் ஒருவர் தெய்வ வரம் பெற்று விட்டதாகவும், எல்லோர் கஷ்டங்களையும் தீர்த்து வைப்பதாக் கேள்விப்பட்டு அவரிடம் சென்றான். இவன் நிலை அறிந்த நண்பர் அருகில் கிடந்த செங்கல் கட்டியை எடுத்து அதை நோக்கி தன் சுட்டு விரலை நீட்ட அது தங்கமாக மாறியது.
அந்த தங்க கட்டியை வைத்து உன் துயரங்களையும் கஷ்டங்களையும் போக்கிக் கொள் என்றார். இப்போது திருப்தியா என்றவருக்கு, ஏழையின் முகத்தில் சந்தோஷத்திற்குப் பதில் முகச்சுழிப்பைக் கண்டார். அவன் திருப்தியடையவில்லை என உணர்ந்தார்
வேறு என்ன வேண்டும் என அன்புடன் கேட்டார். ஏழை, உங்களின் சுட்டு விரல் வேண்டும் என்று தன் பேராசையை வெளிப்படுத்தினான். கிடைத்த தங்கத்தைக் கொண்டு தன் வாழ்வை சீர்படுத்தத் தெரியாதவனுக்கு, அந்த தங்கமும் நல்ல பயனைத்தராது என்று மௌனமாக சென்றுவிட்டார் நண்பர். தினமும் பொன்முட்டையிடும் வாத்தின் வயிற்றில் நிறைய பொன்முட்டைகள் ஒரே நாளில் கிடைக்கும் என்ற பேராசையில் வாத்தின் வயிற்றை அறுத்தவன் நிலையிது.
ஆன்மாக்கள் அதனதன் தாயின் அருகில் இருக்கும்போது மனதில் தீய எண்ணங்களான ஆசை, கோபம் உண்டாவதில்லை. கரு சுமந்த தாய்மைக்கு இவ்வளவு சக்தி என்றால் அகில உலகை அரவணைக்கும் அம்பிகையின் சக்தி அளவிடமுடியாதது.
வாழ்வில் ஏற்படும் ஆசைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். மக்கள் பிரதி நிதிகள் என்று, சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் இருக்கும் அனைவரும் தகுதியுடையவர்களாக இருந்தாலும், இல்லாவிடிலும் அவர்கள் சேர்ந்து முடிவு எடுக்கும் சட்டங்களை நாம் மதிக்கின்றோம். இந்த சட்டங்கள் நீதிமன்றங்களின் முடிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும் நாம் நீதிமன்றங்களை புறக்கணிப்பதில்லை. நீதி கேட்டு மன்றம் செல்கின்றோம்.
கட்டுப்பாடுகள் நம் சமுதாயத்திற்கு பயனளிக்க ஏற்படுத்தப் பட்டவை. அவைகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்-குருஸ்ரீ பகோரா.

2-8.தியானப் பூக்கள்!

Written by

தியானப் பூக்கள்!  


உடலில் உயிர் இருக்கும்வரை ஆன்மா செயல்படுகின்றது. ஆன்மாவிற்கு உதவியாக உயிர், உடல், உடலின் ஐம்புலன்கள் செயல்பட்டு ஆன்மாவின் பயணம் இனிதே நடக்கின்றது. புலன்களைக் கட்டுப்படுத்த நாம் பழகிக் கொள்ள வேண்டும், அந்த கட்டுப் படுத்துதல் மனதில் சிறந்த எண்ணங்களை தோற்றுவித்து நாம் நன்கு செயல்பட உதவும்.

புலன்களின் ஒன்றின் சிறப்பு மற்றொன்றுக்கு இல்லை. பார்க்கும் திறன் கண்ணுக்குத் தவிர, பேசும் திறன் நாவிற்குத் தவிர, கேட்கும்திறன் காதிற்குத் தவிர, நுகரும் திறன் நாசிக்குத் தவிர வேறு புலன்களுக்கு கிடையாது. புலன்கள் என்ற வகையில் ஒன்றாகினும், ஒரே உயிர், உடலுக்கு உட்பட்டவையாக இருந்தாலும் அதனதன் செயல்பாடுகள் வேறு வேறு.
ஆனால் எல்லா புலன்களும், இல்லாத மனதின் எண்ணங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டால் நலம். பார்க்கக்கூடாது என மனம் நினைத்ததைப் பார்த்தாலும், கேட்கக்கூடாது என நினைத்ததைக் கேட்டாலும், பேசக்கூடாது என நினைத்ததைப் பேசினாலும், நுகரக்கூடாதது என மனம் நினைத்ததை நுகர்ந்தாலும், உணரக்கூடாத உணர்வுகளை உணர்தலும்கூட உடலும், உயிரும், ஆன்மாவும் மாறுபட்ட வழியில் சென்று கர்மத்தின் பலாபலன்களைச் சந்திக்கும். எனவே புலன்களின் செயல்பாடுகள் சிறப்பாக, நாம் நம்மை செம்மை படுத்திக் கொள்ள வேண்டும்.
நம் மனம் வேண்டாம் என்று சொன்னால் எந்தவித சலனமின்றி அந்த செயலை அந்தந்த புலன்கள் செய்யாமல் இருக்க நாம் நம் புலன்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அதற்குரிய பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதையும் மீறி எதிர்பாராமல் புலன்கள் சிறிதளவு இயங்கினாலும் அதை மனமும், புத்தியும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. இன்று ஓர் நாள் மட்டும் என புலன்களின் போக்கிற்கு மனம் ஒத்துப் போகாமல் செயல்பட வேண்டும். அதற்காக தக்கமுறையில் மனதிற்குச் சிறப்பான பயிற்சி அளிக்க வேண்டும். எந்த சலனத்தையும் எதிர் கொள்ளும் திறனை வளர்த்து கொள்ளல் வேண்டும். சலனங்களின் பாதிப்பு சிந்தையை கலங்காமல் இருக்கவும், செயல்படவும் பயிற்சிகள் கொள்ள வேண்டும்.
பயிற்சிகளில் தியானம் ஓர் சிறந்த முறையாகும். சிறந்த தியானத்தின் மூலமாக நாம் ‘பரிக்ரஹ சக்தி என்ற ‘ குண்டலினி ’ சக்தியை பெறமுடியும். ஆனந்தமாயமான சுதந்திரத்தை ஆன்மா அடையும். தியானம் மனதின் ரகசியங்களை உங்களுக்கு புரியவைத்து மனதை கட்டுப்படுத்தும் ஆற்றலை புத்திக்கு அளிக்கும்.
புலன்கள் கட்டுப்பட, நமது மனம் கட்டுப்பாடுடையதாக இருக்கவேண்டும். நமது கவனம் அங்கும் இங்குமாக சிதறி, நம் மனோசக்திதனை வீனடித்துவிடாமல் இருக்க, ஓர் ஒழுங்கு நிலைக்கு மனதைக் கொண்டுவர வேண்டும். மனதை கட்டுபடுத்தும் ஆற்றலை ‘ஆத்மவினிக்ரஹம்’ என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகின்றது. அதற்கு மனதை ஓருமுகப்படுத்துதல் முக்கியம். அப்போதுதான் மனதின் சக்திகள் புரியவரும். மன அழுத்தம் ஏற்படும் செயல்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கமுடியும். நல்ல நினைவுகளுடன் செயல்களை திறம்பட காலவிரையமின்றி செய்து வெற்றி காண்பீர்! அதற்கு பிடித்த இறைவனின் நாமங்களை செல்லிச்சொல்லியோ, அல்லது தியானப்பயிற்சி மூலமாகவோ மனதை ஓர்முனைப்படுத்த முயற்சிக்கலாம்.
தியானம் என்பது கடவுளைத் தேடுவதற்காக அல்ல. உங்களை உங்களுக்குள் தேடும் ஓர் எளிய பயிற்சியாகும். வெளியே தேடி வேதனையடைதலை விடுத்து, உனக்குள் தேடி நிம்மதி அடைவீர். தியானம் பரிசுத்தமானது. மனதில் அழுக்குடன் தியானம் மேற்கொள்ள முடியாது. நன்னடத்தையை அஸ்திவாரமாக கொண்ட தியானமே, அன்பையும், அமைதியையும் தரும்.
நாம் ஒவ்வொருவரின் மூச்சும் ‘சுபசரமாக’ இருத்தல் வேண்டும். அவசரமாக இருக்கக்கூடாது. சரம்- என்றால் மூச்சு, இயக்கம் எனப்படும். ஒழுங்கு முறையற்றுத் தாறுமாறாக விரைந்தோடி திரியும் நமது மூச்சின் இயக்கத்தை ‘அவசரம்’ எனலாம். நம் பெரியவர்கள் அதனால்தான், என்னடா அவசரம், நின்று நிதானமாகச் செயல்படு எனக்கூறியுள்ளனர். அதேபோல ஒழுங்குமுறை தவறாமல் நிதானமாகப் பரப்பரப்பின்றி நிகழும் மூச்சினை ‘சுபசரம்’ எனலாம்.
மூச்சின் ஒழுங்கற்ற இயக்கத்தினால் புத்தியின் ஆற்றல் குறைகின்றது. புத்தியின் ஆற்றல் குறைந்தால் நமது செயலாற்றும் திறனும் குறைந்து விடும். மனதின் பரப்பரப்பு மூச்சின் இயக்கத்தை பெருமளவு பாதிக்கின்றது. மனம் கலங்குகின்றது. மனம் பரப்பரப்பின்றி இருக்கும்போது நிதானமான மூச்சின் ஒழுங்கான இயக்கம் நமது உடலுக்கு முறையான ஆக்ஸிசனை கொண்டு சென்று நமது மூளையின் ஆற்றலை அதிகரிக்கின்றது. நமது செயல்திறன் அதிகரிக்கின்றது. தியானம் மூலம் மூச்சை சீராக்கலாம்.
“சுவாச சஞ்சலமாதலால் என் மதிநிலை கெடாமல் அருள் தாராய்” என அருணகிரியார் கூறுகின்றார். ‘அவசரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்ற பழமொழியும் இதையே உணர்த்துகின்றது.
சர்வ சக்தியுடைய பரம்பொருளை தியானத்தால் உங்களுள்ளே புகச்செய்து, உங்களது செயல்களையெல்லாம் தேவர்கள் செயல் போன்று வெற்றியடைய இயங்க முற்படுங்கள்-குருஸ்ரீ பகோரா.

2-7.புலனின் பூக்கள்!

Written by

புலனின் பூக்கள்!


பணம் இல்லாதவன் அதை அடைய நினைக்கின்றான். அதற்காக தன் செயலை திட்டம் தீட்டுகின்றான், செயல்படுகின்றான். அப்பணத்தை அடைய வரும் துன்பங்களை ஏற்றுக் கொள்கின்றான். பணத்தை அடைந்தபின் அதை அதிகமாக்கும் ஆசையினால், தீய வழிகளைக் கையாண்டு பணத்தை இழந்து அளவிடமுடியாத துன்பத்திற்கு ஆளாகின்றான்.

இதைப் போன்றே, உடல் உணர்வு கொண்ட இளைஞன் தனக்கு பெண்ணின் சுகபோகம் கிடைக்கவில்லை என வருத்தமடைகின்றான். அதனால் அவன் மிகவும் வருத்தத்தில் வேதனைப்படுவதாக நினைக்கின்றான். ஆனால் ஒரு பெண்ணை மணந்தவன் சுகபோகத்தில் திளைத்திருந்தாலும், காலம் செல்லச் செல்ல அந்த சுகபோகத்திற்கு காரணமான மனைவி, மக்கள், குடும்பம் அவனுக்கு துன்பத்தை தருவதாக நினைத்து வருத்தப்படுகின்றான்.
எந்த வகையில் பார்த்தாலும் பணமும், சுகபோகமும் இல்லாத நிலையில் அதை தேட வேண்டிய ஆவல் இருந்தாலும், அவற்றை அடைந்தபின் அவைகளின் தாக்கங்கள் நாளடைவில் ஒர்வகையான சோர்வை உண்டாக்கி மனித ஆத்மா மிகுந்த வருத்தமடைந்து மாற்றுவழிதேடி, அதிலிருந்து விடுபட நினைக்கின்றது.
அப்போது அந்த ஆன்மா ஆலயங்கள், கோவில்கள், மசூதிகள், சர்ச்களுக்கு சென்று அமைதிகாண விழைகின்றது. நாளடைவில் ஈடுபாடு மிக்ககொண்டு விரும்பி நாடுவது ஆன்மீக வழியாகவே இருக்கின்றது. அதற்கு புலன்களின் அடக்கம் தேவை! நம் மனம் பொய்மையை நினைக்கலாம். அதனால் வாய் பொய்பேசலாம். ஆனால் கண்ணால் பார்ப்பதில் எந்தவித மாற்றமும் இருக்காது. உண்மையை நடக்கும் நிகழ்வை மட்டும் பார்க்கும் புலன் கண்ணாகும்.
புலன்கள் கொள்ளும் கட்டுப்பாடே ‘தமா’ என மனுதர்ம சாஸ்திரம் கூறுகின்றது. அதாவது அறியும் திறனால் புலன்களைக் கட்டுப்படுத்தி நல்ல செயல்களை செய்வதாகும். கட்டுப்படுத்துவது என்றால் புலன்களின் அடக்கமான ஆரோக்கிய நல்வழிகளில் செயல்களைக் கொண்டிருக்க வேண்டும். புலன்கள் கட்டுப்பாடின்றிருந்தால் மனம் அலைபாய்ந்து அலைக்கழிக்கும். அவையே ஒருவருக்கு எதிரியாகும். அலைபாயும் மனதை கட்டுப்படுத்திவிட்டால் ஒவ்வொருவரும் நிதானமாக எல்லா காரியங்களையும் செவ்வனே செய்து முடிக்க முடியும். பல ரகசியங்களை கொண்டு ஓர்வெற்றி பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சி புலன்களினால் அடையும் மகிழ்வைவிட சந்தோஷத்தைவிட சிறப்பானதாக இருக்கும்.
நமது புலன்கள் எவ்வளவு அனுபவித்தாலும் முழுமையான திருப்தியடைவதில்லை. போதும் என்ற மனம் பொன் செய்யும் மருந்து என்பர்! நமது பகுத்தறிவை உபயோகித்து நம்மை நாமே ஒழுங்குபடுத்தி நம் மனதை கட்டுப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கும்போது நம்மிடம் சிறப்பான தனித்தன்மை உருவாகும்.
ஆசைபடுபவன் ஒருவகையில் புலனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவனாவான். ஆனால் பித்தன், ஞானி, பக்தன் இயக்கப்படுகின்றான் யாரென்று தெரியாமலே! எதனாலோ ஈர்க்கப்படுகின்றான். இரும்புத்துண்டு கனமானதாக இருந்தாலும், மெலிதாக இருந்தாலும், காந்தம் அதை ஈர்க்கும் சக்தி கொண்டது. அப்படித்தான் அருள் எல்லோரையும் ஈர்க்கும் தன்மைகொண்டது.
நாம் சாப்பிடும் மருந்து நம் உடம்பின் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று சேர்கின்றது. நம் உணவின் சக்திகள் உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்கின்றது. ஆனால் மனம் நம் உடலில் இருந்தாலும் அதன் தேவை ஆற்றல் தேவைப்படும் போதுதான் அந்த இடத்தில் உதவும். மனம் என பொதுவாகச் சொன்னாலும் உணவுவகைகள் வித்தியாசப்படுதல் போல் வேறு வேறு மனங்களின் ஆற்றல் தன்மைகளும் மாறுபடும்.
சூரிய ஒளியை குவிஒளிக் கண்ணாடி மூலம் குவியச்செய்தால் அங்கு வெப்பச்சக்தி தீப்பற்றும் அளவிற்கு தோன்றும். அதேபோல் நமது எண்ணங்களையும் புலன்களையும் கட்டுப்படுத்தி ஒன்று சேர்த்தால் மனதில் சக்திகள் குவியும். அது அளவில்லா சக்தியாகும். நீங்கள் எல்லா நிகழ்வுகளையும் நிகழ்த்துவீர்கள். உங்களால் சாதனையாளாராக முடியும்.
புலன்கள் விரும்புகின்றன என்பதற்காக நியாமற்ற முறையில் செயல்படுவது சரியன்று. ஐம்புலன்களுக்கும் கட்டுப்பாடு வேண்டும். மனம் எனும் குதிரை, புலன்கள் நோக்கில் சொல்லாமல், புலன்களை அடக்கி ஆளத் தெரிந்திருக்க வேண்டும்.
தன் ஐம்புலன்களையும் அடக்கும் ஒருவனால் எதையும் சாதிக்க முடியும் என மக்களுக்கு உணர்த்தவே கிருஷ்ணர் கூர்ம அவதாரம் எடுத்ததாக புராணம் பகர்கின்றது. கூர்மம்- ஆமை தன் தலை, தன் கைகள், கால்கள் என ஐந்தையும் ஓட்டுக்குள் அடக்கி அமைதி காக்கும் தன்மையுடையது. அதன் இயக்கம் நியாமானது. உறுதியானது.
உயர்வு வரும்போது ஒடுங்குவதும் அதாவது மமதை கொள்ளாமல் இருப்பதும், தாழ்வு வரும்போது மனம் தளராமல் இருப்பதும் புலனடக்கதால்தான் முடியும். அதுவே மன நிம்மதிக்கான வழி. அது நம்மைச் சார்ந்துள்ளோருக்கும் சாராதிருப்போருக்கும் நன்மை தரும்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனைவேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதைக் கூத்தாடி கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டீ என்பதை நம்மில் பலர் கேட்டிருப்பீர். மேலோட்டமாக இதன் அர்த்தம் புரிந்தாலும் உள் அர்த்தம் என்னவென்றால், நமது ஆன்மா ஜீவன் பிரம்மதேவன் என்ற குயவனிடம் 10மாதங்கள் வேண்டி உடம்பு என்ற கலசத்தை ஆன்மாவிற்காக பெற்று அதை முறைகேடாகப் புலனடக்கமின்றி பயன்படுத்தி அழித்துக் கொள்வதைப் பற்றிக் கூறுகின்றது.
உடம்பின் அருமையை தெரிந்து கொள்ள வேண்டும். அது இறைவன் உறையும் கோவில். அவர்தம் உடலுக்கு நன்மை செய்யாதவர்கள் எவ்வாறு அடுத்தவர் நலன் தேட விழைவார்கள் என்பது சிரமானது. ஆசையில் கட்டுண்டவனுக்கு ஆனந்தம் இல்லை என்பதை அனுபவத்தில்தான் உணரமுடியும். புலனடக்கம் இல்லாதவன் அலைக்கழிகப்படுவான். இன்பம் மின்னல் போல் தோன்றி மறையும். கடைசியில் இன்னல்கள் என்ற துன்பத்தை மட்டுமே தருமாதலால் ஆன்மாவின் உடலுக்கு புலனடக்கம் தேவை. புலனடக்கம் கொள்ள பற்றற்றவராக இருத்தல் அவசியம்.
ஜார்ஜ் ஆர்வெல் என்பவர், ஒரு குளவி தேனை சுவைத்து பருகிக் கொண்டிருக்கும் போது அதன் ஒரு புற இறக்கைகளை வெட்டினாராம். அப்போதும் அது தன் இழப்பை அறியாமல் தேன் அருந்துவதிலேயே கவனமாக, விழிப்புணர்வு இன்றி இருந்துள்ளது. தேன் குடித்ததும் அதனால் பறக்க முடியாத போதுதான் அது தன் இறக்கைகளுக்கு பங்கம் வந்திருப்பதை உணர்ந்துள்ளது. குளவி போன்றே புலனடக்கமின்றி  போகங்களில் மூழ்கி, பல ஆண்டுகள் ஆனாலும் தங்கள் இழப்பை காலதாமதமாகத்தான் புரிந்து கொள்கின்றனர்-குருஸ்ரீ பகோரா.

2-6.கோபப் பூக்கள்!

Written by

கோபப் பூக்கள்!  


ஆற்றின் இரு கரையிலும் ஆசிரமங்கள். ஓர் இளைஞன் அக்கரையில் உள்ளவரிடம் ஆசி வாங்க விரும்பினான். அவனைப் பார்த்த இக்கரையில் இருந்தவர் அக்கரைக்கு செல்லும் காரணத்தைக் கேட்டார். அந்த இளைஞன் அவரை என் குருவாக மதிக்கின்றேன் அதனால் அவரிடம் ஆசிபெறச் செல்கின்றேன் என்றான்.

உடனே இந்தக்குரு அந்தக் கரையில் இருப்பவன் ஒரு குருவே அல்ல. அவனுக்கு ஒன்றும் தெரியாது. என்னைப்போல் நீரில் நடக்க முடியாது. வானத்தில் பறக்க முடியாது. அங்கே போய் அவனிடம் நீ என்ன கற்றுக் கொள்ளப்போகிறாய் என சினத்துடன் கூறினார். நீ முட்டாளாக இருந்தால் அங்கே போ என்றார்.
அந்த இளைஞன் நீங்கள் சொல்வது எல்லாம் சரி. அவரால் சாதனைகள் ஏதும் செய்ய முடியாது. ஆனால் அவர் கோபப் படமாட்டார். அது உங்களால் செய்ய முடியாதது. எனவேதான் நான் அவரை குருவாக ஏற்றுள்ளேன் என்றான். குரு சிந்தனையிள் ஆழ்ந்தார். நீரில் நடப்பதைவிட, வானில் பறப்பதைவிட கோபப்படாமல் இருப்பதுதான் அதிசயம் எனக்கூறி அக்கரைக்குச் சென்றான்.
கோபம் என்பது என்ன! சினம் என்றால் என்ன! அது உன் இயலாமையின் அச்சத்தின் வெளிப்பாடு! அது ஏன் நீ கொள்ளல் வேண்டும்! அது நம்மை, நம் உடலை, உடலின் ஆன்மாவை எந்த அளவிற்கு வருத்துகின்றது எனத் தெரியுமா! கோபத்தை அடக்குவதும் தவறு, வெளிக்காட்டுவதும் தவறு. வேறு என்ன செய்ய வேண்டும். கோபப்படாமல் இருப்பதுதான் ஒரேவழி. அதற்கு பற்றற்று இருத்தல் சிறப்பு.
கோபம் ஏற்பட்டால் அதிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்ள முயல வேண்டும். கோபத்தை அடக்கி மன உறுதியை வளர்க்க வேண்டும். அந்த நிகழ்விலிருந்து விலகி இருத்தல் வேண்டும். இல்லையெனில் அந்த நிகழ்வு உங்களைத் தாக்கத் தொடங்கி உங்களை ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தால், நீங்கள் உங்கள் நிலை, சூழல் மறந்து அந்த நிகழ்வின் ஈடுபாட்டினால் செயல் வழிபட்டு, அதற்கு ஆட்படுகின்றீர்கள். தவறு செய்து திருத்துவதைவிட தவறு செய்யாமல் இருப்பது சிறப்பு.
இது உங்களின் மனதில் ஓர் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உடல் உறுப்புகளில் ஒர் தேவையற்ற கவலை, கிளர்ச்சியை உண்டு பண்ணி உடலின் தன்மை நிலையை நீங்கள் எப்போதும் இயல்பாக இருக்கும் நிம்மதி நிலையிலிருந்து மாற்றி வைக்கின்றது.
அப்போது உங்கள் எண்ணம் செயல் எல்லாம் மாறுபட்டிருக்கும். நீங்கள் அன்பு கொண்ட செயல் நினைவுகள் மீது கூட ஓர் வெறுப்பு, சலிப்பு தோன்றும். அதன் பாதிப்புகள் தாக்கம் நீங்கள் கொண்ட அன்பின் தன்மையை குறைக்க காரணமாகும். இந்த தூண்டுதல் உங்களது உடம்பில் உள்ள சக்தியின் ஒரு பகுதியை விரயமாக்குகின்றது.
பல நல்செயல்களால் சேர்த்துவைத்த அமைதி, நிம்மதி போன்ற தன்மைகள், கோபத்தினால் விரையமடைந்தபின், அவைகள் நம்மை வந்தடைய நாம் மீண்டும் கடினமாக செயல்பட வேண்டியுள்ளது. ஆகவே ஒவ்வொருவருக்கும் இந்த கோப உணர்ச்சி தேவையற்ற ஒன்று.
எதனால் இந்த நிகழ்வு என அமைதியுடன் நோக்குங்கள். பிரச்சனையின் மூலகாரணத்தைப் பற்றி ஆராய்ந்து, என்ன பயன் என்ற சலிப்பில்லாமல், அந்த செயல் காரணத்தை கூர்ந்து நோக்குங்கள். உண்மைக் காரணத்தை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளுங்கள். அந்தச்செயல் காரணத்தின் நிலைகளைப் புரிந்து கொண்டு, அதன் சூழ்நிலைகள் எவ்வாறு தோன்றின என நீங்கள் உணர்ந்து கொண்டால், அப்போது உங்கள் மனம் கோபத்தின் தன்மைக்கு போகாமல் நீங்களே தடுக்கலாம். அதனால் உங்கள் உணர்வு மிகுதியினால் உடம்பில் ஏற்படும் தாக்கமும் அதன் பாதிப்புகளும் குறையும்.
அந்த நிகழ்வின் உண்மை அடிப்படை காரணங்கள் தெளிவுடன் புரிந்து கொண்டால், நிகழ்வுக்கு காரணமானவர்களை நாம் இனம் கண்டு அதற்கு தக்க செயல்களைச் செய்து அவர்களுக்கு உதவியாகவும், நமக்கு பாதகமில்லாமலும் செயல்பட வழிவகுக்கும். இந்த நிலை ஏற்பட உங்கள் மனம் அமைதியுடன் சந்தோஷமாக இருக்கவேண்டும்.
அமைதியாயிருக்கும் மன உணர்வுகளைத் தூண்டி உங்களை கோபமடையச் செய்யும் நிகழ்வுகள் தோன்றினால் முதலில் நீங்கள் உங்களுக்குள் ஓர் தீர்மானத்தை நினைவில் கொள்ள வேண்டும். நான் கோபம் கொள்வதில்லை! எந்தக் காரணத்தினாலும் கோபம் கொள்வதில்லை! கோபத்தினால் எந்தவித பயனும் இல்லை! தீவிர சிந்தனைகள் செய்து நல்வழி காணமுடியாது! கோபத்தின் பதற்றத்தினால் பயனில்லை! என்று உங்கள் மனதிற்குள் கூறிக் கொள்ளுங்கள். மனஅமைதியைக் கைவிடவேண்டாம்! இந்த தூண்டுதலுக்கு காரணமானவர்கள் மீது வெறுப்பு காட்டவேண்டாம்.
மனதிற்குள் வெறுப்பை வைத்துக்கொண்டு இருக்காதீர்கள். வெறுப்பு குரோத உணர்ச்சியின் ஆரம்பம். அது பழிவாங்க நினைக்கும். உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் தங்கள் வாழ்வை சுவைத்து மகிழ உரிமை உண்டு. தான் படைத்ததை அழிக்க படைத்தவனுக்கூட உரிமையில்லை என்கிறது தர்ம சாஸ்திரம். அப்படியெனில் ஒருவரை பழிவாங்கி அழிக்கும் நோக்கில் செயல் இருக்கக் கூடாது. அது மறைவதுமில்லை. தொடரும் கொடுமை அது. முடிவில்லாத துயரம் தரும். உங்களை துச்சமாக நடத்துபவரிடம், நல்லெண்ணம் கொண்டு அவரோடு பேசி புரியவையுங்கள். அது ஓர் உன்னத செயலாகும். அவருக்கு புரியவைக்க முடியவில்லையானால் அவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். பொறுமையுடன் செயல்படுங்கள்.
தர்மரின் மாளிகையின் தரையில் நீர் இருப்பது பொன்ற நிலை தோன்ற துரியோதனன் தன் ஆடைகள் நனையாமலிருக்க தூக்கிபிடித்து சென்றான். இதைக் கண்ணுற்ற திரௌபதி சிரிக்கக் கண்ட துரியோதனன், தான் அவமானம் அடைந்ததாகக் கருதி, அவளை பழிவாங்கத் துடித்தான். அதன்முடிவு துச்சாதனன் துகிலுரிப்பு, மகாபாரதப் போர், துரியோதனின் அழிவு. எப்போதும் ஓர்வேகத்தில் வெறியில் தோன்றும் பழிவாங்குதல் எண்ணங்கள் நன்மை பயத்ததாக சரித்திரத்தில் கூறப்படவே இல்லை.
நோயின் தீவிரத்தை தாங்காத நோயாளியோ, அதை பார்க்க சகிக்காத அவரின் உறவினர்கள் துயரத்தாலோ, எது கூறினும், எந்த நிலையிலும் ஓர் மருத்துவர் தன் கடமையிலிருந்து நிலைபிறழாமல் பொறுமை காக்கவேண்டும். அவர்கள் கூற்று என்னவாயிருந்தால் என்ன! அதைக்கவனித்து மருத்துவர் தன்கவனத்தை இழக்கக்கூடாது. காயமடைந்தவர், நேயுற்றவர் குணமடைந்ததும், என்ன தீமைகள் அல்லது நன்மைகள் இந்த சமூகத்திற்குச் செய்யப் போகிறார்கள் என்ற விளைவு குறித்து கவலைபடாமல் தெடர்ந்து பணியாற்றுவதே அவரின் கடமையாகும். இந்த நிலையை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதே மனுதர்ம சாஸ்திரம் கூறும் ‘க்ஷமா’ என்பதாகும். அதாவது க்ஷமா என்றால் ஒரு செயல் நிகழ்வுக்கு கோபம் கொள்ளாமல் மன்னித்தல் அல்லது பொருத்துக் கொள்ளுதல் என்பதாகும்.
நீங்கள் பெரியவராக எல்லோருக்கும் நன்மை செய்ய விரும்பினால் இரண்டு வகை வலிமைகளை நீங்கள் அடைந்திருக்க வேண்டும் ஒன்று உடல்வலிமை! அது உங்களுள் உறையும் ஆத்மபலத்தின் வலிமை! நற்பண்பே அந்த உடல் வலிமைதனை தரும்! மற்றொன்று தார்மீக வலிமை! அதாவது மனதின், ஆன்மாவின் வலிமை! தார்மீக வலிமைகூடக்கூட கோபம், வெறுப்பு மற்றும் பழிவாங்கும் தன்மை இவைகளை நீங்கள் கட்டுப்படுத்த பழகிவிடுகின்றீர்கள்.
நம்முன்னால் நம் குடும்பத்தினரோ, உற்றார் உறவினரோ, நண்பர்களோ நம் அலுவலக அன்பர்களோ ஓர் செயலைசெய்தால் அதைக் கண்டு உணர்ச்சி வயப்பட்டு ஒன்று சிரிக்கின்றோம் அல்லது கோபப்பட்டு நம்மை இழக்கின்றோம். சில சமயங்களில் அழுகை ஏற்படுவதும் உண்டு. சிரிப்பதாலும், அழுவதாலும் தப்பு ஒன்றும் இல்லை. மேலும் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
கோபப்படும்போது உணர்ச்சி மேலீட்டால் நம் செயல் திறன் குன்றி விடுகின்றது. நாம் என்ன செய்கின்றோம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை அறியமுடியாத அளவிற்கு நம்மை இழந்து விடுகின்றோம். சினத்தின் உச்சத்தில் நாம் படப்படபுடன் செயலாற்ற முனைகிறோம். கோபம் தனிந்தபின் அதன் சாதக பாதக பலன்கள் நமக்கு தெரியவரும்போது ஏன் கோபம் கொண்டோமென்று வருத்தமடைகிறோம். இந்த சினத்தை, படபடப்பை ‘அக்ரோதம்’ என்று மனுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதை நம்மிடமிருந்து நீக்குவதற்கு முயலவேண்டும்.
பல ஆண்டுகள் தவம் செய்த யோகி ஆன்மீக கேள்விகளுக்கு பதிலலித்துக் கொண்டிருந்த போது ஒருவர் ஆன்மிகத்தை கேலிசெய்யும் விதமாகப் பேசவே மிகுந்த கோபமடைந்தார். சினம் தனிந்த போது தன் செயலுக்கு வருந்தினார். எத்தனை தவம் விரதம் இருந்தும் என்னபயன். என்னிடம் மாற்றம் இல்லையே என வருந்தினார். தனது தவம் பூரணத்துவம் அடையவில்லை, மனம் பக்குவம் பெறவில்லை, சினத்தை அடக்க அதற்கு தெரியவில்லை என்று அந்த ஆசிரமத்தைவிட்டு வெளியேறி, மீண்டும் மனதை ஒர் நிலைப்படுத்த தவம் மேற்கொள்ள சென்றார்.
நாமும் கோபம் அடையக்கூடது. பிறரையும் கோபம் அடையும்படி தூண்டக்கூடாது. நீங்கள் அடையும் கோபத்தின்மீது உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டால் நீங்கள் அதை கட்டுப்படுத்த நினைக்கின்றீர்கள் என்று பொருள். சற்று நிதானமாக நாம் கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது, நம் ஆரோக்கியம்தான் குறைகின்றது, மற்றவர் முன்னிலையில் இவன் கோபக்காரன், அவசரக்காரன் என்ற நிலைப்பாட்டை ஏன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்? என நினையுங்கள். கோபத்தை விடுத்து அந்த செயலின் தன்மையை அடிப்படையை கவனித்து கோபமின்றி சம்பந்தப்பட்டவர்களிடம் கூறினால் அவர்கள் அந்த தவறை புரிந்து உணர்வார்கள். அதனால் அந்த தவறு மீண்டும் நேராவண்ணம் அவர்கள் செயல்பட வாய்ப்புண்டு. இது அனைவருக்கும் நன்மைபயக்கும்.
உங்கள் நேயமான செயல் அவரையும் மற்றவர்களையும் ஆச்சரியம் கொள்ள வைக்கும். உங்கள் மேல் ஓர் அன்பு கலந்த சிநேகமயமான உணர்வுகள் மேம்பட்டு, எதிர்காலத்தில் பலவகைகளில் உதவியாகக் கிடைக்கும். இது உங்கள் வாழ்வின் சந்தோஷ நினைவாக அமையும். இது போன்ற பல செயல்களை நீங்கள் சந்தோஷ நிகழ்வாக மாற்றமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். தொடர்ச்சியான மகிழ்வைக்கொண்ட சந்தோஷம் வாழ்க்கையை சீராக்கி நல்வழிப்படுத்தும்.
கண்ணால் கண்டாலோ, காதால் கேட்டாலோ நீங்கள் அந்த நிகழ்வால் உணர்ச்சி வசப்படாமலிருக்க ‘மூக்கின்மேல் கோபம்’ என வழக்கிலிருக்கும் உங்கள் நாசியின் நுனியைப் பாருங்கள். அது உண்மைதான என நினையுங்கள்!
அண்டத்திலிருந்து வரும் அந்த சுத்த காற்றை நாசியினால் உள்ளே இழுத்து, வெளியேவிட்டு செல்லும் செயலை கவனித்து, ஒரே சீராக சிலமுறை செய்யுங்கள். உங்கள் செயல் சீரான சுவாசத்திற்கு வந்தால் உங்கள் மனம், உணர்வு எல்லாம் சீராகிவிடும். அந்த நிகழ்வின் தாக்கம் உங்களை ஒன்றும் செய்யாது.
நீங்கள் அந்த நிகழ்வின் செயலுக்குள் அமைதியாக உறுதியாக ஊர்ந்து உண்மையை உணர்ந்து செயல்பட முடியும். எனவே கோபம் கொள்ளும் நிகழ்வுகளின் போது உங்கள் மூச்சை சீராக வைத்துக்கொள்ளப் பழகுங்கள். அது நன்மை பயக்கும்.
சீரான மூச்சு, சீரான சிந்தனைகள், சீரான செயல்கள் எல்லாம் சந்தோஷத்தை நோக்கிய நம் பயணத்தின் தூரத்தைக் குறைக்கும் உபகரணங்கள்.
நாம் ஏன் கோபம் கொள்கின்றோம்? ஓர் செயலை செய்யும்போது தவறு ஏற்பட்டால், செயலில் வெற்றி எதிபார்த்து தோல்வி கண்டால், நம் தவறை நாமே உணர்ந்தால், மற்றவர் நம் தவறைச் சொன்னால், நம் விரோதிகள் என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் நம் தவரை சுட்டிக் காட்டினால், நம்மைவிட சிறியவர்கள் நம்மிடம் குறை கண்டால் வருகின்றது. நமக்கு பிடிக்காத நிகழ்வுகள் நடைபெற்றாலும் நமக்குள் ஓர்வித எரிச்சல் உணர்வு தோன்றி அது கோபமாக மாறிவிடும். சரியான தூக்கமின்மையும் ஒர் காரணமாகும்.
சரியான நிம்மதியில்லா தூக்கமின்மையும் கோபம் ஏற்படக் காரணமாகின்றது. ஆகவே ஓவ்வொரு ஆன்மா உடலுக்கும் நிம்மதி வேண்டும். அதற்கு போதிய ஒய்வு தூக்கம் வேண்டும். அப்போதுதான் உடலும் மனமும் தன் இருக்கத்திலிருந்து தளர்ந்து பக்குவமான நிலைக்கு வந்தடையும். போதிய ஓய்வும், தூக்கம் பெற்ற உடம்பும், மனமும்தான் நன்றாக செயலாற்ற முடியும்.
முன்பு சொன்னதுபோல் இந்த கோபம் ஓர் இயலாமை! ஆற்றாமை! செயல்கள் நம்மால் முடிந்தால் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. முடியவில்லை என்றால் அதை ஏற்றுக்கொள்ளும் தன்மை வேண்டும். நம் உடலை, மனதை, உணர்வுகளைப் பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ளப் பழகவேண்டும். இயலாமை, ஆற்றாமை பயத்தினால்கூட வரலாம். ஆக பயமும் கோபம்வர ஒரு காரணமாகும். ஆனால் பயத்தினால் நம் உடலுக்குள் ஓர் கலக்கம் ஏற்படும் அது அவயவயங்களின் செயல் தன்மையை பாதிக்கும். ஜீரணத்தின் தன்மைதனை குறைக்கும். நாளடைவில் உடலில் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பாகும். அடிக்கடி உணர்வின் வயப்பட்டு கோபம் வரலாம். எனவே எதற்கும் பயம் கொள்வதைத் தவிர்க்கவும்.
தவறு, தோல்வி, ஆற்றாமை ஆகியவைகளின் தன்மை புரிந்து உள்வாங்கிக் கொண்டால் அதன் தாக்கம் நம் உணர்வைப் பாதிக்காது. உணர்ச்சிகள் பொங்கி வராது. அமைதி காக்கும். தன்மை புரிந்து உள்வாங்கினால் அது ஓர் பாடமாக, ஓர் முன் உதாரணமாக, நாம் அடுத்து செய்யும் செயலுக்கு, தொய்வில்லாத வழிவகுக்க உதவி புரியும்.
அப்போது நமக்கு தோல்வி இல்லை. ஆற்றாமை என்பதும் இல்லை, வெற்றி மட்டும் உண்டு. வெற்றி வழி நிம்மதி, புன்னகை, சந்தோஷம் தோன்றி வாழ்வில் என்றும் சந்தோஷம் ஏற்படும்.
ஒருவர் கோபம் கொண்டவுடன் அவரின் உணர்வுகள் உணர்ச்சி மிகுதியால் விரைவாக செயல்படுவதால் செயலில் ஏற்படும் குறைகள் தெரிவதில்லை. ஆனால் தவறு பின்னால் கண்டு பிடிக்கப்பட்டபோது வருத்தம் ஏற்படுகின்றது. இந்த வருத்தம் மனதிற்கும், உடலுக்கும் சோர்வைத்தான் தரும். மனம் நிம்மதியின்றி செயல்படும். அதனால் நல்ல செயல்கள் திட்டமிட்டு செயல்பட முடியாத நிலை ஏற்படும்.
தவறுகள் நிறைந்த குழப்பமான செயல் பாடுகளில் எப்படி ஓர் வெற்றியையும் அதன் மூலம் சந்தோஷத்தையும் எதிர்பார்க்க முடியும். எனவே கோபம் வேண்டாம். குழப்பத்தில் சிந்திக்க வேண்டாம். குழப்பமிருந்தாலும், கோபம் வந்தாலும் உங்கள் உடலுக்கு உங்கள் மனம்தான் எஜமான்.
கோபத்தில் இருப்பவனுக்கு தாம் கோபத்தில் இது செய்ததால்தான் இந்த தவறு என ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எந்த பைத்தியம்தான் தான் பைத்தியம் என ஒத்துக் கொண்டிருக்கின்றது. தங்களின் திறமையான பேச்சால் தான் செய்தது சரி என்று சொன்னாலும், அவரின் கோபத்தின் விளைவை புரியவையுங்கள். தன்னால் நடந்தது எனப் புரிந்துகொண்டலே அந்த செயல் நிகழ்வு, கோபத்தின் தன்மை, அதன் தாக்கம் புரிந்துவிடும்.
எந்த காரியங்கள் நடைபெற்றாலும், அதன் பாதிப்புகள் நம்மை வந்தடைந்தபோது அதன் காரண காரியங்களை நாம் யோசித்து கண்டு கொள்ள முடியவில்லை என்றால், அதனால் கோபம் கொள்வதைத் தவிர்த்து நிகழ்வுக்கு காரணம் விதி என முடிவு கட்டுங்கள். பழி விதியின் மீதிருப்பதால், உங்கள் தாக்கங்கள் கோபமாக மாற வாய்ப்பு குறைந்துவிடும். ஒருவரின் செயலால் வஞ்சம் தீர்த்துக் கொள்ள முயன்றார்கள் என எண்ணி அவர்மீது கோபம் கொள்ளாமல், விதியின் விளையாட்டு என்ற முடிவால் கோபத்தின் அஸ்திவாரம் தகர்க்கப்பட்டு விடும். ஒன்றிற்காக ஒன்றின்மீது கோபம் கொண்டால் நிம்மதி இழப்பீர்.
உங்கள் மனதிற்கு உங்கள் எண்ணங்கள்தான் வழிகாட்டி. சற்று நேரம் உங்கள் செயல் பாட்டை நிறுத்தி பொறுமையுடன் இருங்கள். அமைதி காத்திடுங்கள். செயலின் நிகழ்வை அறிந்தபின் அதன் தன்மையைப் பொறுத்து, சிறிது காலம், சில மணித்துளிகள், சில நிமிடங்கள் செல்லட்டும் என அமைதியாயிருங்கள்.
பாதிப்பான குழப்பத்திலிருந்த மனம் தெளிவடையட்டும். அதற்கு கண்களை மூடியபடி எண்களை 1,2,3,4......என எண்ணுங்கள். அல்லது உங்களுக்கு பிடித்தமான இறையின் பெயர்களைத் திரும்பத் திரும்ப மனதிற்குள் கூறிக்கொண்டிருங்கள் அல்லது உங்களுக்கு பிடித்த மகிழ்வுதரக்கூடிய இனிய பழைய நினைவுகளை மனத்திறையில் கொண்டுவந்து மகிழ்வுறப் பாருங்கள்.
மனம் அமைதியடையும். பிறகு சிந்தியுங்கள். நடந்த நிகழ்வின் தாக்கமின்றி அதில் கவனம் செலுத்தி காரணத்தை ஆராயும் மனநிலைப் பக்குவம் உங்களை வந்தடைந்திருக்கும். பின் விவேகத்துடன் சிந்தித்து செயல்பட்டால் சந்தோஷம் காணலாம்.
ஓர் கூர்மையான கத்தியினை குழந்தையிடம் காண்பித்தால் அது அதன் தன்மை புரியாது அதை பிடிக்க முயலும். ஆனால் நாம் அந்த குழந்தையின் நிலை கடந்து அந்த கத்தியின் கூர்மை பற்றிய தன்மை அறிவோம். அதை எப்படிக் கையாழ்வது என உணர்ந்துள்ளோம்.
இதே போன்றுதான் வாழ்வின் எல்ல நிலைகளிலும் ஏற்படும் பிரச்சனைகளின் தன்மைகளை புரிந்து செயல்பட்டால் இனிமை, என்றும் இனிமை, பின்னும் இனிமை. தோல்வியில்லை! இங்கு ஆற்றாமை, இயலாமையில்லை! கோப உணர்வுகள் இல்லை! களிப்பான இன்ப உணர்வுகள் சந்தோஷத்தை தரும் உணர்வுகள் மட்டுமே!
நமது நண்பரோ, உறவினரோ, மாற்றுக் கருத்துக் கொண்டவரோ எவராயிருந்தாலும் அவர் செய்த செயல் சரியில்லாமலிருந்தால், அதனால் நல்ல முடிகள் ஏற்படாமலிருந்தால், அவர் நமக்கு பிடிக்காத வகையில் செயல் பட்டிருந்தால் அவர்மீதும், அவர் செயல் மீதும் நமக்குள் ஓர் விருப்பற்ற உணர்ச்சி ஏற்படுகின்றது.
அதே நபர் மீண்டும் வேறு ஓர் செயலை செய்யும்போது இதேபோன்று முடிவுகள் ஏற்பட்டால் நாம் கோபம் கொள்கின்றோம். இவன் இப்படித்தான்! எனக்கு அப்பவே தெரியும் என கூறமுற்படுகின்றோம். கோபம் அடைகின்றோம். அவரின் செயல் மிக மிகச் சிறியதாகக் கூட இருக்கும். அதனால் அதிகமான பாதிப்பு ஏற்படாது. இருப்பினும் நாம் கோபம் கொள்கின்றோம். ஏனெனில் அவர்மீது நாம் ஓர் நிலைப்பாட்டை முன்பே மனதில் பதிந்து வைத்துள்ளோம். அதன் விளைவு அவர் செயலின் முடிவு தோல்வி தந்தால் அது எவ்வளவு சின்ன விஷயமாக இருந்தாலும் நாம் அவர் மீது கோபம் கொள்கின்றோம்.
இது போன்ற கோபங்களைத் தவிர்க்க, அவர் முதலில் செய்த செயலின் முடிவால் அவரைப்பற்றி நம் மனதில் கொண்ட நமது முதல் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். தெரியாமலும் செய்திருக்கலாம். தெரிந்து செய்தாலும் அடுத்தமுறை சரி செய்து கொள்வார். இல்லை என்றாலும் அவருக்கு அதை புரியவைத்து உதவிகள் செய்யலாம் என எண்ண வேண்டும். இந்த எண்ண அலைகளை நம் நினைவில் வைத்துக் கொண்டால், அவர் மீண்டும் அந்த தவறு செய்தால் கூட நாம் நமது மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் நாம் கோபம் கொள்ளமாட்டோம். அவர் செயல் சிறக்கசெய்ய வழி வகுக்கலாம். அல்லது அமைதியாகவும் இருக்கலாம். நாம் கோபம் கொள்ளாமலிருப்பதால் நம் சக்திதனை விரையம் செய்யாமல் நாம் ஆரோக்கியமாக சந்தோஷத்துடன் இருக்க உதவும்.
கோபம் கொண்டு உணர்ச்சி மயத்தில் கடின வார்த்தைகளைப் கொட்டியபின் உணர்ந்து, இனிமேல் உணர்வு வயப்பட்டு கோபம் கொள்ளக்கூடாது என கட்டுப்படுத்திக் கொள்ளும் போது நம் உள்ளே ஓர் நம்பிக்கை சந்தோஷம் எழும். எல்லா விஷ ஜந்துக்களும் தங்கள் கோபத்தை வெளிக்காட்டும் விதமாகவே அதன் விஷத்தை வெளியிடுகின்றது. மனித ஆன்மாக்களுக்குள் கோபத்தினால் தோன்றும் விஷ எண்ணங்கள் எதிரியை அழிக்கப் பயன்படுகின்றதோ இல்லையோ உங்கள் நலவாழ்விற்கு அது எதிரியாகும். அது உங்கள் வாழ்விற்கு தேவையில்லா ஒன்று.
ஒருவன் கோபத்தால் நம்மைத் தீய வார்த்தைகளால் திட்டினால், அதை உங்கள் மனம் ஏற்று கொண்டால், உங்கள் முகத்தில் அதன் பிரதிபலிப்பு தெரியும். அழுத்தமான உளைச்சல் ஏற்படும். உங்கள் நடையுடை பாவனைகள், நீங்கள் மீண்டும் அமைதியடைந்து இயல் சூழலுக்கு வரும் வரை மாறி இருக்கும். அதைப் பொருட்படுத்தாமல் புன்னகையுடன் இருந்தீர்களானால் அந்த தீச்சொற்களை நீங்கள் ஏற்கத் தயாரகவில்லை என்பதால் அது எங்கிருந்து வந்ததோ அவருக்கே போய்ச்சேரும். எனவே இன்முக புன்சிரிப்பு உங்களுக்கு நன்மைதனை பயக்கும்.
ஒருவன் கோபவசத்தால் செய்யும் செயல்களால் பொருள் நாசம், பிறரின் ஆதரவு கிடைக்காமை, மனக்கொதிப்பு, அவமானம், பகை, உடல் சோர்வு ஆகியன அடைகின்றான். புலன்களின் தன்மையும் கெட்டு உறவினர்களையும் இழக்கின்றான். கோபத்தால் தன் வளர்ச்சிக்கு உதவியவர்களையே விலகும்படி தூண்டுகின்றான்.
அதேசமயம் கோபம் கொள்ளவேண்டிய சமயத்தில், கோபம் கொள்ளாமல் எல்லா சமயங்களிலும் பொறுமையைக் கடைபிடிப்பவனிடம் அனைவரும் அவமதிப்பு காட்டுவர். அற்ப எண்ண சிந்தனைகளையுடையவர்கள் பொறுமையாளனை ஏமாற்றி அவனின் பொருள்களை அபகரிக்க விருப்புடன் செயல்படுவர். அவனின் கீழ் செயல்படும் ஆன்மாக்கள் அவர்கள் இஷ்டப்படி நடக்க முயல்வர். எனவே கோபம் கொள்ளாமல் அந்த நேரத்தில் கண்டிப்பு கலந்த பொறுமையுடன் செயலாற்றுதல் சிறப்பு.
ஒரு மனநல டாக்டரிடம் வந்தவன் தனக்கு மனோ வியாதி இருப்பதாக எல்லோரும் கூறுகின்றனர் என்றான். பார்த்தால் தெரியவில்லை. எதை வைத்து நீ அப்படி கூறுகிறய் என்றார். நோயாளி, பார்த்தால் தெரியாது டாக்டர், பழகினால்தான் தெரியும் என்றான். சரி, கவலைப்படாதே, நான் உன்னை குணப்படுத்தி விடுகிறேன் என்று நம்பிக்கையூட்டும் வண்ணம் பேசினார். உனக்கு என்ன பிரச்சனை என்றார்.
எனக்கு திடீர் என்று கோபம் வருகின்றது. அப்படி வந்தகோபம் சும்மா போவதில்லை என்றான். டாக்டர், எல்லோருக்கும் தான் கோபம் வருகின்றது. சிறிது நேரத்தில் போய்விடும் என்றார். அவன் ஆமாம் சார், அந்தகோபம் ஒரு காதோடு போகின்றது. என்றான். டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் சொல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தார். யார் எனக்கு கோபத்தை உண்டு பண்ணுகின்றார்களோ அவர்களது காதை நான் கடித்து விடுகிறேன் என்றான். டாக்டர் அது தவறு என்று உனக்குத் தெரியவில்லையா என்றார். அவன் கடித்தபின்புதான் அது எனக்குப் புரிகின்றது என்றான்.
அதுசரி இதற்கு முன் யாரைக் கடித்தாய், ஏன் கடித்தாய் என்றார். ஒருமனநல டாக்டர் என்னைக் குணப்படுத்த பணம் கேட்டார். எனக்கு கோபம் வந்தது அவர் காதைக் கடித்து துப்பிவிட்டுதான் இங்கே வந்திருக்கின்றேன் என்றான். இதைக் கேட்டபின் அந்த டாக்டர் தன்காதைக் காப்பாற்றிக்கொள்ள மருத்துவ மணையிலிருந்து ஓடினார்.
கோபங்கள் ஒருவரது மனநிலையை, செயல்களை முற்றிலும் மாற்றும் தன்மை கொண்டது. தன்னைவிட வலியவர்களிடத்திலோ, மெலியவர்களிடத்திலோ சினம் ஏற்பட்டாலும், அதைவிடத் அந்த ஆன்மாவிற்குத் தீமைகள் வேறில்லை.
கோபம் உண்டாக்கக்கூடிய நிகழ்வுகளை தளையறுந்த ஓர் படகாக நினைவு கொள்ளுங்கள். உன்னிலையறிவீர். உன்னதம் பெறுவீர்-குருஸ்ரீ பகோரா.

2-5.முயற்சிப் பூக்கள்!

Written by

முயற்சிப் பூக்கள்! 


மூன்று சீடர்கள் குருவிடம் உபதேசம் பெற்று காட்டு வழியாக ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். வழியில் புலி ஒன்று இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. நாம் குருவிடம் கற்றதெல்லாம் யாருக்கும் உபயோகப்படாமல் போய்விடும். அந்தபுலி நம்மை கொன்று தின்னப் போகிறது என்று திகைத்து நின்றான் ஒருவன். நாம் தரையில் படுத்துக் கண்ணை மூடியபடி கடவுளை நினைப்போம். அவர் காப்பாற்றுவார் என இரண்டாவது சீடன் படுத்துக் கொண்டான். மூன்றாவது சீடன் புலி நம்மிடம் வருவதற்குள் ஏதாவது முயற்சி செய்து நம்மை காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்போம், முடியாத பட்சத்தில் கடவுளிடம் வேண்டுவோம் என அருகில் இருந்த மரத்தில் எற எல்லோரையும் கூப்பிட அவர்கள் வராததால் தான் மட்டும் மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். தன்னம்பிகை யில்லாதவனையும், மூடநம்பிக்கை வைத்தவனையும் புலி அடித்துக் கொன்றது. தன் முயற்சியில் நம்பிக்கை வைத்த பக்தன் தப்பித்தான்.

முயற்சிக்காமல் முடியவே முடியாது. எள்ளின் உள்ளே எண்ணெய்யும், பசுவின் மடியில் பாலும் உண்டு எனச் சொல்வதால் எண்ணெய்யும், பாலும் கிடைத்துவிடாது. அதற்கான முயற்சி வேண்டும். வெறும் முயற்சி மட்டும் போதாது. மனம் உடல் இரண்டும் இனைந்து முயற்சிக்க வேண்டும். மனதில் எண்ணி உடல் ஒத்துழைக்காவிடில் அது உபயோகமில்லை. எனவே நம் உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். மனதின் எண்ண ஓட்டங்களுக்கு ஈடுகொடுத்து உடல் துவண்டு போகாமல் வேகத்துடன் செயல் படவேண்டும். அப்போதுதான் நீங்கள் வெற்றியை விரைவாக ருசித்துப் பார்க்கமுடியும். உங்கள் குறிக்கோள்களை அடைய முடியும். சந்தோஷம் காணமுடியும்.
பல மருந்துகளை நீரில் கலந்து வைத்தியர் குடிக்கச் சொல்வதால் மருந்தில் ஒன்றுமில்லை! தண்ணீரின் சக்திதான் என்று அர்த்தமில்லை. பார்த்தலில், கேட்டலில் ஒன்றுமில்லை. நம்பிக்கையுடன் முயற்சி செய்து செயல் படவேண்டும். ஒற்றுமையும் உழைக்கும் மனப்பான்மையும் வளரவேண்டும்.
வாழ்வில் கிடைப்பதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் பழக்கம் வேண்டும். உங்களுக்கு கிடைத்ததை நீங்கள் அதிருப்தியடைந்து ஒதுக்கிவிட்டு வேறுஒன்றை நாடினால், இதன் சுவை, இனிமை தெரியாமல் போய்விடும். ஒருவேளை அடுத்தமுறை இதுகூட உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். எனவே கிடைத்ததை நுகர்ந்து அனுபவியுங்கள். பின் வேண்டுவனவற்றிற்காக முயற்சியுங்கள். வாழ்க்கை வளம் பெறும்.
இந்த உலகை எட்டிப்பார்க்கும் எல்லா உயிர்களும், தங்கள் கருவிலிருந்து, கூட்டிலிருந்து முயற்சி செய்து உந்திதான் வெளிவருகின்றது. வெளிவரும்பாதை சிறியது என்றாலும் அங்கிருந்து வெளிஉலகைக்காண முயற்சி செய்து உந்தி வெளியே வருவதால்தான் அதனிடம் தன்னம்பிக்கை ஏற்படுகின்றது. முயற்சித்தால் தன்னால் எதுவும் முடியும் என நம்புகின்றது. அவ்வாறு முயற்சிக்காத உயிர்கள் அப்படியே இறந்து விடுகின்றது.
முழு வளர்ச்சி, முதிர்வு அடைந்த பூரண வளர்ச்சிக்குப்பின் எந்த உயிருடன் கூடிய உடலும் தான் வளர்ந்த கருவுக்குள் முடங்கி கிடப்பதில்லை. முட்டை ஓட்டை முட்டி குஞ்சுகளும், கூட்டை கிழித்து பட்டாம் பூச்சிகளும், ஏன் நாமும், கரு முழு உருவானதும் உந்தி முயற்சி செய்துதான் வெளிப்படுகிறோமோ அன்றி உள்ளேயே அடங்கி கிடப்பதில்லை. இந்த உந்துதல் முயற்சிதான் நமக்கு வாழ்நாள் பயணத்தில் அதிகம் தேவைப்படுகின்றது. பலர் அதை மறந்துவிடுகின்றனர். எனவே எதற்கும் முயற்சி தேவை. கஷ்டங்களை மறந்த முயற்சி தேவை.
எவ்வளவு சீக்கிரம் மலைசிகரம் ஏறுகிறாய் என்பது முக்கியமல்ல! அங்கே எவ்வளவு காலம் இருக்கின்றாய் என்பதுதான் அவசியமானது. எவ்வளவு பெரியமலை என்று மலைத்துவிடாதே! முயன்று ஏறினால் அம்மலைச்சிகரம் உன் காலடியில். கைகளில் தொடலாம். எவ்வளவு முயற்சி செய்து, எவ்வளவு உயரம் ஏறினாலும், சிகரத்தின் உச்சியில் நிலையாக இருக்கமுடியாது. ஏணியில் ஏறியவன் எப்படியும் மீண்டும் படியிறங்கித்தான் ஆகவேண்டும் என்பதுபோல, மலையிலிருந்து கீழிறங்கி விடவேண்டியிருக்கும். எந்த உயர்வும் நிலையானதில்லை. அதற்காக சிகரத்தை அடையும் எண்ணத்தை விட்டுவிடாதே!
சிரமங்கள்தான் நமக்கு பலத்தை, கஷ்டங்கள்தான் நம் வலிமையை நமக்கு உணர்த்தும். துயரங்கள் நம்மை பண்பட வைக்கின்றது. எதிர்பாராமல் வரும் இன்னல்களை எதிர்கொள்ள, தவிர்க்க, எதிர்பார்த்துவரும் துன்பங்களை ஏற்றுக்கொண்டால் வெற்றிப்பாதை புலப்படும். சந்தோஷம் அடையமுடியும்.
சில விஷயங்கள் நமக்கு அதிசயமாயிருக்கும். நமதுவாழ்வின் நோக்கம் என்ன! நாம் ஏன் இங்கு வந்தோம்! பிறந்தோம்! நமது வாழ்வின் லட்சியம், குறிக்கோள் என்ன! சிலரை மட்டும் ஏன் பெரிய மனிதர்களாக நினைக்கின்றார்கள். அவர்கள் அவ்வாறு முன்னேறுவதற்கு யார் வாழ்வின் நோக்கம் பற்றி புரியவைத்தார்கள்! என்பதை ஆரய்ந்தால் நாம் புவியில் இருப்பதன் காரணம் நோக்கம் புரியும். நாம் எவ்வாறு செயல்பட்டு, முயற்சி செய்து வெற்றி கொள்ளவேண்டும் என்பதும் புரியும்.
ஒர் ஞானியிடம், தான் எத்தனை முயற்சிகள் செய்தாலும் வெற்றி கிடைப்பதில்லை என சொல்லி வருந்தினான் ஒருவன். அவன் வீட்டிற்கு ஒரு நாள் சென்று அவனை சிறிது நேரம் வெளியே இருக்கச் சொல்லி வீட்டினுள் சில பெருட்களை இடம் மற்றி வைத்தார் அந்த ஞானி. பின் அவனை வீட்டினுள் வரச் சொல்லி வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
நன்கு இருட்டவே அவனிடம் விளக்கு ஏற்றி வைக்கச் சொன்னார். வீட்டினுள் வழக்கமாக தான் வைத்த இடத்தில் பெருள்கள் இல்லாததால் தடவி தடவி கண்டு பிடித்து விளக்கை ஏற்றினான். அப்போது அந்த பெரியவர் நீ எப்போதும் வைக்குமிடத்தில் பெருள்கள் இல்லையெனினும் வீட்டில் கண்டிப்பாக இருக்கிறது என்ற உறுதியில் முயற்சி செய்து விளக்கை ஏற்றினாய். எதை நோக்கிப் போகிறோம் என்பதை உறுதியாக தீர்மானித்துக் கொண்டால், நீ எடுக்கும் சிறிய முயற்சி கூட, இருள் போன்ற தடைகளைமீறி பலன் கொடுக்கும். இதை புரிந்து செயல்படு. வெற்றி நிச்சயம் என்றார்.
எண்ணங்களில் உள்ள அறிவின் செயல்கள், செயலாக்க அறிவை, நடைமுறை சாத்தியத்திற்கு ஏற்ற உறுதியை அடையவேண்டும். அந்த திருதி எனப்படும் உறுதி இல்லை எனில் நீங்கள் கேட்டவைகளோ, நினைத்தவைகளே மனதில் பதியாமல் போய்விடும்.
மன உறுதிப்பாடு என்பதே விடாமுயற்சியாகும்! அதைதிருதி’ என மனுதர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு செயலை செய்து முடிக்க வேண்டுமென நினைத்து விட்டால் என்ன பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளித்து வெற்றியடையும்வரை முயன்று வெற்றிகாணும் செயலே திருதியாகும்.
ஓர் இளவரசி தன் அறிவுக் கூர்மையினால் அறிஞர்களையும் புலவர்களையும் வென்றுவிட, அவர்கள் இளவரசிக்கு பாடம் புகட்டும் வகையில் ‘நுனிக் கிளையிலிருந்து அடிமரத்தை வெட்டிய’ ஓர் சர்வமுட்டாளை, தங்களது திறமையால் மணம் முடித்தனர். உண்மை தெரிந்ததும் இளவரசி அவரை வெளியேற்றினாள்.
மனம் வெதும்பிய அவர் கிணற்றில் தற்கொலை செய்து கொள்ள சென்றபோது, தண்ணீர் இறைக்கும் போது மேலும் கீழும் சென்றதால் கயிற்றின் தாரைகள் சுவற்றில் பதிந்திருக்கக் கண்டு, நாமும் ஏன் தெடர்ந்து முயற்சி செய்து அறிஞனாகக் கூடாது என நினைத்தார். தொடர்ந்து முயற்சிகள் செய்தார். கல்விமான் ஆனார். காளிதேவியின் அருளும் கிடைத்தது. வாழ்வில் உலகம் புகழும் வெற்றி கண்டார் ‘கவிகாளிதாஸ்’ என்றழைக்கப்பட்டார்.
நாம் காலத்தை விரயம் செய்யக்கூடாது. மற்றவர்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள் என ஒவ்வொன்றிற்கும் பார்த்து பார்த்து நம் செயல்பாடுகள் இருக்கக் கூடாது, நாமே முயற்சி செய்து பார்க்க வேண்டும். எந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்ததில்லை. வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றிகொண்டதே அவர்களை வாழ்வில் பெரிய மனிதனாக்கியதாகும். நாம் நம்மை வேறெருவர் தூக்கி முன்னேற உதவுவார் என நினைத்து நம் செயலோடு அடுத்தவர் செயல்திறனை ஒற்றுமைப் படுத்தக்கூடாது.
நாம் கேள்விப்படுவதையெல்லாம் ஒருகாதின் வழிவாங்கி மற்றொரு காதின்வழி விட்டு விடும் பழக்கத்தை மேற்கொள்ளும் மந்த புத்திக்காரராக இருக்கக்கூடாது. நாம் கேட்டவைகளைப் பற்றி தொடர்ந்து அளவில்லாமல் பேசும் மத்திம புத்திக்காரராகவும் இருக்கக்கூடாது. நாம் கண்டவை கேட்டவைகளை மனதில் இருத்தி தூய்மையுடன் ஜீரணித்து உங்களுக்கு பயன்கள் தருமாறு ஆக்கும் ஞானமுடன்கூடிய உத்தமபுத்திக்காரராக இருத்தல் வேண்டும்.
கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் வில் வித்தையை பயிற்றுவித்து வரும்போது, ஆசிரியர் துரோணர் பாண்டவர்களுக்கு நன்கு பயிற்றுவிக்கிறார் என துரியோதனன் சொன்னதைக்கேட்ட பீஷ்மர் நேரில் விசாரிக்க வந்தபோது, துரோணர் அர்சுனனை ஒரு வேலையாக அனுப்பிவிட்டு, நிலத்தில் ஓர் மந்திரத்தை எழுதி துரியோதனனை அழைத்து அந்த மந்திரத்தை படித்து அம்பு எய்தச் சொல்ல அந்த மரத்திலிருந்த இலைகளை எல்லாம் அது துளைத்தது. பின்னர் அனைவரையும் நீராட அழைத்துச் சென்றார்.
அனைவரும் நீரடி திரும்பவரும்போது அர்ஜுனனும் வந்து சேர்ந்தான். அந்த மரத்தடிக்கு வந்து பார்த்தபோது அந்த மரத்திலிருந்த இலைகளில் எல்லாம் இரண்டு துளைகள் தென்பட்டது. இது எப்படி என பீஷ்மர் கேட்டபோது, அர்ஜுனன் நான்தான் அம்பெய்தினேன் என்றான். துரோனர் அந்த மந்திரத்தை எழுதியபோது நீ இங்கு இல்லையே என்றார். குரு சொன்ன வேலையை செய்து திரும்பும்போது இந்த மரத்தில் இலைகளில் எல்லாம் துவாரம் இருக்க கண்டேன். அப்போது கீழே ஓர் மந்திரம் இருக்க கண்டு இரண்டுக்கும் ஓர் ஒற்றுமை இருக்க வேண்டும் எனக்கருதி மந்திரம் ஜபித்து அம்பெய்தினேன் என்றான்.
பீஷ்மர் அர்ஜுனனை மிகவும் பாராட்டியதை கண்ட துரியோதனன் கேலிசெய்ய, துரோனர் துரியோதனா மீண்டும் அம்பெய்தி இலைகளை துளையிடு என்றார். துரியோதனன் மந்திரம் எழுதிய இடத்திற்கு வந்தபோது அங்கு அது காணப்படவில்லை. யார் காலிலும் மிதிபடக்கூடாது என அர்ஜுனன் அதை அழித்துவிட்டன்.
அதைக் காணது துரியோதனன் மந்த புத்திகாரனாக மருங்கி நின்றான். துரோனர் அர்ஜுனனை அம்பெய்த அழைத்தபோது உத்தம புத்திகாரனான அவன் அந்த மந்திரத்தை நினைவு கொண்டு மூன்றாவது துளையை இலைகளில் பதிவு செய்தான்.
துரோணர் பயிர்ச்சியில் ஆர்வமும், முயற்சியில் நம்பிக்கையும் இருந்தால் வெற்றி பெறலாம் என்றார். பீஷ்மர் உண்மை உணர்ந்து அமைதிகாத்து திரும்பினார்.
வாழ்க்கையில் ஆனந்தமாக வாழத்தெரிந்து கொள்ளவேண்டும். வாழ எப்போதும் முயற்சி செய்யவேண்டும். அனுபவத்தால் எதுஎது ஆனந்தம் அளிக்கக்கூடியது, எது துயரம் அளிக்கக்கூடியது என கண்டு கொள்ளலாம். “முயற்சி திருவினையாக்கும்” முயற்சிக்காவிடில் ஏதும் நிகழாது.
முயற்சியின்றி வாழ்வது மனிதனின் மிகப்பெரிய குற்றமாகும். தானே நடக்கும், விதிப்படி நடக்கும் என்று சும்மா இருப்பது வீண். உனக்கு கிடைத்திருக்கும் வாழ்நாளை சுவைக்காமல், அனுபவிக்காமல் சோம்பேறியாய் இருந்து வாழ்நாளை வீணடிப்பதில் என்ன பயன்?
தீயின் சூடு, தண்ணிரின் குளிர்ச்சி, சூரியனின் வெம்மை கதிர்கள், சந்திரனின் நிலவொளி இவைகளை அறிந்து கொள்ள முடியாதவர்கள் வாழ்க்கையில் ஏனோதானோ என்று வாழ்பவர்கள். சூரியன் உதிக்கின்றது, வெய்யில் அடிக்கின்றது, மழை பெய்கின்றது, தீ சுடுகின்றது, இரவில் சந்திரன் தெரிகின்றது என ஒவ்வொன்றையும் சாதாரணமாக நினைப்பவர்கள், நீரின் குளிர்ச்சி, நிலவின் இதமான ஒளி இவைகளின் தன்மைகளை புரிந்து கொள்ளமுடியாதவர்கள், வாழ்க்கையில் ஏற்றதாழ்வுகளை அறியாதவர்களாகி விடுகின்றனர்.
ஒருவரை சில முயற்சிக்குப்பின் சந்திக்க செல்கின்றோம். அங்கே சந்திக்க முடியாவிடில் என்ன உபயோகம். நம் முயற்சிகள் எல்லாம் வீண். அதைப்போல உங்கள் உடம்பில் உள்ள உயிரின் ஆன்மாவை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதைத் தெரியாவிடில் “எழும்பு போர்த்திய கூடாகும்”.
உடலில் இருக்கும் ஆன்மாவை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் உங்களை உணர்ந்து கொள்ளல் அவசியமானது. தேடினேன் தெரியவில்லை எனக்கூறாதீர்கள், முயற்சி செய்து தேடுங்கள், “தேடினால் தெரியும்”.
பறவைகளைப் பார்த்த மனிதன் விமானம் படைத்து பறத்தலை கற்றுக்கொண்டான். பறவைகளின் மழை, வெயில் தாண்டிய இடைவிடாத பயணம், தடைகளினூடே செல்லும் லாவகம், சுறுசுறுப்பு, முயற்சி ஆகியனவற்றையையும் கற்றுக் கொள்ளவேண்டும்.
பறைவைகளில் கழுகு தன் வாழ்நாளில் எல்லா திறமைகளும் எப்போதும் தம்மிடம் இருக்க வேண்டும் என்பதற்காக தன் வயதின் பாதியில், வலிமை குன்றிய அலகை பாறையில் மோதி உடைத்துவிட்டு, மீண்டும் உறுதியாக புதிய அலகு வளரும் வரை காத்திருப்பதாக சொல்லப்படுகின்றது.
அதன்பிறகு அந்த புதிய வலிமை மிகுந்த அலகினால் தன் கால் நகங்கள் மற்றும் இறக்கையின் சிறகுகளை பிய்த்து விட்டு, புதியன வளர பொருத்திருந்து மீண்டும் புதிய பிறவிபோல் பலவருடங்கள் வலிமையுடன் வாழ்கிறது.
தானே தனது பிறவியை வலிமைப்படுத்தும் கழுகின் இந்த கடுமையான முயற்சி போற்றத்தக்கவையே. அந்த பிறவியில் அது எவ்வளவு கஷ்டங்களை தானே சந்தித்து வெற்றி அடைகிறது. எதிர்காலம் வலிமையுடையதாக இருக்க நாமும் அது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
முன்னேற வேண்டும் என்ற நினைவுடன் உழைப்பவனுக்கு, மிகவும் கடினமாக முயற்சிப்பவனுக்குத்தான் ஒய்வின் அவசியம் புரியும், முயற்சியின் உண்மையான அர்த்தம் புரியும். மீண்டும் உழைக்கும் ரகசியம் தெரியும். நம் வெற்றிக்கு முயற்சி, மேலும் முயற்சி, தவறுகள் தவிர்த்த முயற்சி என முயற்சிகளாகவே அமையவேண்டும். மேலும் பல முயற்சிகளுக்கு மற்றவர்களின் ஆதரவு வேண்டியதாயிருக்கின்றது. தெய்வ பலம் மிகுந்த ஆதரவானது சிறப்பு.
பாண்டவர்கள் வேட்டைக்கு சென்றபோது திரௌபதியை, ஜயத்ரதன் கடத்திசெல்ல, அறிந்த பாண்டவர்கள் அவனை வழிமறித்து படைகளை அழித்து அவளை மீட்டனர். ஜயத்ரதனை தலைமுடி அகற்றி அவமானப்படுத்தினான் பீமன். தவம் செய்து அர்ஜுனனைத்தவிர மற்றவர்களை கொல்ல வரம் பெற்ற ஜயத்ரதன், போரில் அபிமன்யு இறக்க காரணமானான். போரிலிருந்து வீடுதிரும்பிய அர்சுனன் செய்தி கேட்டு ஜயத்ரதனை அழிக்க சபதம் மேற்கொண்டான்.
இதை அறிந்த துரோணர் வியூகம் அமைக்கையில் அர்சுணன் பார்வைக்கு படாத நிலையில், ஜயத்ரதனை ஒளித்து வைக்க, கண்ணன் இருள் சூழ்ந்த நிலையை மாயமாக உருவாக்க, அந்தி சாய்ந்ததாக நினைத்து வெளிவந்த ஜயந்திரனை, கண்ணன் அடையாளம் காட்டி ஜயந்திரனின் தலையைக் கொய்து அர்சுணன் சபதத்தை நிறைவேற்றக் கூறினார். மேலும் அந்த தலை அவன் தந்தையின் மடியில் விழச்செய் என்றார். கன்னனின் வழி காட்டுதலின்படி அந்த தலை விருத்தக்ஷத்திரர் மடியில் திடிரென்று விழ, அவர் பதறி எழுந்ததால் அது மடியிலிருந்து மண்ணில் விழுந்தது. விருத்தக்ஷத்திரருக்கு மகன் பிறந்தபோது மகன் தலை அறுந்து பூமியில் விழும் அழிவுக்கு காரணமாணவனின் தலை சுக்கு நூறாகும் என்று சபித்தார். அதன்படி அறுந்து அவர்மடியில் விழுந்த தலையை அவர் கீழே போட்டதால் அவரின் தலையும் சுக்கு நூறாகியது.
அர்ச்சுணனின் சபதம், நிறைவேறவும், அதேசமயம் ஜயத்ரதனின் தந்தை சாபத்திலிருந்து அர்சுணனை காப்பற்றவும் கண்ணன் ஒருவரால் மட்டுமே முடிந்தது. அதுவே தெய்வ பலம். வெறும் சபதங்களினால் ஏற்படும் முயற்சிகளுடன் தெய்வபலமும் அர்சுனனுக்கு இருந்ததால் தான் அவனால் பலவெற்றிகளை அடையமுடிந்தது-குருஸ்ரீ பகோரா. 


2-4.உண்மைப் பூக்கள்!

Written by

உண்மைப் பூக்கள்!


உண்மை சக்தி வாய்ந்தது. ‘சத்தியம் ஜெயிக்கும். வாய்மையே வெல்லும்’. யாரும் உண்மையை மறைக்க முடியாது. காலத்தால் அழியாதது. சூழ்நிலையில் அப்போது மறைந்தாலும், காலப்போக்கில் பிறிதொருநாள் வெளிப்படும் அதிசயமானது உண்மை! உண்மை எப்போதும் இனிமையானது அல்ல! கசப்பானதும் கூட!

அந்த உண்மையை ‘சத்யா’ -‘நியாயம்’ என்கின்றது மனுதர்ம சாஸ்திரம். நேர்மையும் நாணயத்தையும் கொண்ட பண்பே சத்தியமாகும். உண்மை அழிவற்றது. எல்லாவற்றிலும் உயர்ந்தது, எப்போதும் மாறாதது என்கிறது உபநிடதம். சத்யமே பரம்பொருள் என்கிறது வேதம். சத்யத்தைத்தேடி தெரிந்துகொண்டு அங்கேயே நிலைத்துவிடு என்கின்றன புராணங்கள்.
சத்யத்தை கடைபிடிப்பவன் எப்படியும் வாழ்வின் நிறைவை அடைவான். சத்தியமில்லா அசத்திய வாழ்வு ஆன்மாவிற்கு அல்லலைத்தான் தரும். இன்றைய சூழல் பொய்யின் பிரதிபலிப்பாக உள்ளது. பொய்யின் கலப்பு எங்கும் தெரிகின்றது. எல்லா இன்னல்களுக்கும் பொய்யே மூலகாரணம். சத்யத்தின் மூலம் அரிச்சந்திரனும்,  இராமனும், நல்லறத்தினால் தர்மரும் உயர்வடைந்துள்ளதாக புராணங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.
உண்மையை பேசுங்கள். அவைகள் மற்றவர்களை காயப்படுத்தவேண்டாம். சில உண்மைகள் உங்களுக்கோ, உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கோ பல இடங்களில் இனிமையானதாக இருக்காது என்ற நிலையில் அதைத் தவிர்ப்பதே சாலச் சிறந்தது. உண்மையைச் சொல்லாமலிருப்பதா? மறைத்து விடுவதா? என்பது போன்ற  குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். உண்மைபேசிய பிதா காந்தியின் உயர்வு அனைவருக்கும் தெரிந்தது. உண்மையை நேசிப்பவன் சமூகத்திற்கு அற்புதமானவன்.
நீங்கள் கூறும் உண்மையினால் பல சிக்கல்கள் தீரும் என்றால் அதை எல்லா இடத்திலும் எப்போதும் கூறலாம். அதுவே பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்றால் அதன் தாக்கம் உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் அந்த உண்மையை வெளிப்படுத்தாது மறைத்தலே அப்போது செய்யவேண்டிய செயல். பொய்யை நிமிர்ந்து நிற்கச்செய்ய 1000 காரணங்கள் வேண்டும். ஆனால் உண்மைக்கு ஒன்று போதும்.
மறைத்த உண்மையும், தெரிந்த உண்மையும் எப்போதும் சுடும். அதைச் சொல்லியே தீருவேன் எனச் சொல்லி அனைவரையும் காயப்படுத்தக் கூடாது. உண்மை அரியது, சிறப்பானது, இனிமையானது என்பதற்காக எல்லா நேரத்திலும் எல்லாரிடத்திலும் சொல்லிக் கொண்டிருக்கவும் கூடாது. கசப்பானது, சுடும் என்பதற்காக சொல்லாமலும் விட்டு விடக்கூடாது. தேவையானவற்றை தேவையான போதுதான் பயன் படுத்தவேண்டும்.
இயற்கை ஒர் பிரம்மாண்டமான உண்மை. நீ அதன் செயல்களில் நாட்டம் கொண்டு ஏற்றுக் கொள்கின்றாயோ இல்லையோ, அது உனக்கென்று இல்லாமல் பொதுவாக தன் கடமையைச் செய்யும். இது நிஜம்! நம்மால் எதையும் மாற்ற இயலாது. அதன் விருப்பப்படி நம்மைச் சுற்றி நிகழ்வுகளை செயல்படுத்தி நம்மை சூழ்நிலையின் கைதியாக இயங்க வைப்பது எதுவோ அதுவே சத்தியமானது! விதி! கர்மா! இயற்கை! எல்லாம். அந்த நியதிகளுக்கேற்ப நம்மை, நம் எண்ணங்களை, செயல்களை பழகிக் கொள்ள வேண்டும்.
உண்மையை ஒப்புக் கொள்ளும் பக்குவம் வேண்டும். நீ செய்த செயல் உனக்குச் சரியானதாக படலாம். மற்றவர்கள் அதை தவறு என்றபோது, உங்கள் பிடிவாதம் தளர்த்தி நிதானமாக, உங்கள் நிலையிலிருந்து விடுபட்டு, மற்றொருவன் அதை செய்திருந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்றமுறையில் சிந்தித்தால் உங்கள்செயல் எவ்வாறு மற்றவர்களுக்கு தவறாக தோன்றுகிறது என்பது புரியும்.
அப்போதும் தவறு தெரியவில்லை, உங்கள் பக்கம் நியாயம் இருகின்றது என்றால் சரி. நீங்கள் செய்தது தவறு எனச்சிறிது சந்தேகம் வந்தாலும். அது புரிந்தவுடன் அக்கணமே அல்லது அடுத்துவரும் நிகழ்வுகளில், உங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு செயல்பட்டால் மனமே நீ வெற்றியடைந்துவிட்டாய்.
இனிவாழ்வில் இதுபோன்ற ஒருதவறு நீங்கள் மீண்டும் செய்யமாட்டீர்கள். எவ்வளவு பெரிய அனுபவம் கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள் உங்கள் வாழ்வில். உண்மைகளை, தவறுகளை ஒப்புக்கொள்ளும் இந்த மனப்பக்குவம் உடல் நலத்திற்கு ஏற்றது. வாழ்வில் பொறுமையாக நல்லமுடிவுகளை நிதானமாக எடுத்து வெற்றிகாணும் நிலை உருவாகும்.
காவல்பணி செய்து கொண்டிருந்தவனுக்கு தோட்டத்தில் சப்தம் கேட்கவே, அவசரமாக அங்கு வந்தவன் ஒரு மாடு மேய்ந்து கொண்டிருக்க கண்டான். அதை பிடித்து கட்டிப்போட முயன்றான். மாட்டைபிடிக்க முடிவில்லை. கையில் வால்தான் சிக்கியது. அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அந்த மாடு இவனை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்து பின் பறக்க ஆரம்பித்தது. விட்டால் கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தில் கெட்டியாக பிடித்துக் கொண்டான். அது அவனை கயிலாயம் கொண்டு சென்றது. சிவனைக் கண்டவன் அவரிடம் மாட்டைப்பற்றி முறையிட்டான். தோட்டத்தில் விளைந்த பயிரெல்லாம் நாசம் என்றவனிடம், சிவன் அதற்கு ஈடாக பொற்காசுமுடிச்சு ஒன்றை தந்தார். நந்தியின் உதவியுடன் பூமிக்கு வந்தான். அவனுக்கு ஒருசந்தேகம் தோன்றியது. உண்மையில் அந்த மூட்டை முழுவதும் தங்கம்தானா என்று.
ஒரு காசை எடுத்துக்கொண்டு நண்பனிடன் சென்றான். அதை சோதித்த அவன் அது சொக்கத் தங்கமாக இருக்கக் கண்டான். இருந்தாலும் நண்பனுக்கு எப்படி அது கிடைத்தது என அறியும் ஆவலில், இது பித்தளை உனக்கு இதை யார் கொடுத்தது என்று கேட்டான். நடந்ததைக் கேட்டவன் அன்று இரவு நண்பனின் தோட்டத்தில் பதுங்கியிருந்தான். நந்தி வந்தது. பித்தளை கொடுத்து ஏமாற்றி விட்டீர்களே இது சரியா எனச் சிவனிடம் கேட்க நினைத்து நந்தியின் வாலைப் பிடித்தான். அது விர்ரென்று உயர கிளம்பியது. மறைந்திருந்த நண்பன் இவன் காலை இறுக்கிப் பிடிக்க இருவரையும் மேலே கொண்டு சென்றது நந்தி.
அப்போது காலைப்பிடிந்திருந்த நண்பன் உனக்கு எப்படி இவ்வளவு காசுகள் கொடுத்தார் என்றான். ஆர்வமிகுதியில் இவ்வளவு என்று இருகைகளையும் விரித்துக் காட்டினான். கைகளை விரித்ததால் வாலைப்பிடித்தபிடி நழுவ இருவரும் பூமியில் விழுந்தார்கள். அடிபட்டார்கள்.
உண்மையைச் சந்தேகப்பட்டவன் வாலைப்பிடிக்க, பேராசை கொண்டவன் காலைப் பிடிக்க இருவருக்கும் உடலில் காயம், துன்பம், துயரம். எனவே உண்மையை எப்போதும் சந்தேகப்படாதீர்கள்.
ஞானி ஒருவர் மரத்திலிருந்து இலைகளை பறித்து கையில் இலைகள் அதிகமா! மரத்தில் அதிகமா! என்றார். மரத்தில் அதிகம் என்றவர்களைப் பார்த்து, மரத்தின் இலைகளின் அளவு உண்மைகள் பூமியில் இருந்தாலும், என் கையில் உள்ள அளவிற்கு நீங்கள் உண்மைகளை அறிந்து கொண்டாலே துன்பங்களிலிருந்து விடுபடமுடியும். உண்மையைப் பொறுத்த வரையில் நீங்கள் விழித்துக் கொள்ளும் நேரமே வாழ்வின் விடியல். எனவே இயல்பாக, எளிமையாக இருங்கள் என்றார்.
எளிமை சிக்கனம் என்றதும் காந்திஜி பற்றி ஒர் நிகழ்வு. தன் ஆசிரமத்தில் காந்திஜி நடந்து சென்றுகொண்டிருந்தபோது பஞ்சு சுருள் ஒன்று இருக்கக் கண்டார். அன்று அவர் மௌனவிரதம். தன் கூட வருபவர்களிடம் அதைச் சுட்டிக் காண்பித்தார். சுற்றுப்புறத் தூய்மை குறித்து குறிப்பிடுகிறார் என நினைத்து உடன் வந்தோர் அந்த பஞ்சை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டனர்.
மௌன விரதம் முடிவுற்றபின் காந்திஜி அந்த பஞ்சு பற்றி கேட்டார். குப்பையில் போட்டவர் பதறிவிட்டார். இதுவே காசாக இருந்தால் இப்படி செய்திருப்பாயா எனக்கேட்டார். பருத்தி பயிரிடுவதிலும் பஞ்சாக்குவதிலும் எவ்வளவு உழைப்பு செலவாகி இருக்கின்றது தெரியுமா! அந்த உண்மையை புரிந்து முதலில் பஞ்சை தேடி எடுத்துவா என்றார். பஞ்சை திரும்ப பெற்றதும், பஞ்சு அழுக்கானால் நூல்நூற்று அழுக்கை அகற்றலாம் எனக்கூறியவரின் எளிமை மற்றும் சிக்கனத்தை ஆசிரமத்தில் உள்ளோர் தெளிவாக புரிந்தனர்.  உண்மை உழைப்பின் அருமையை உழைத்தவர்தான் உணர்வர். உண்மையில் அவருக்குத்தான் எளிமையும் சிக்கனமும் கைவரும்.
தன் நெஞ்சம் அறிய, ஒரு நிகழ்வு குறித்துப் பொய் சொல்லாமல் உண்மை பேசவேண்டும். அப்படிப் பேசுபவன் அனைத்து ஆன்மாக்களினாலும் பேசப்படுவான். பொய் இல்லா வாழ்வில் எல்லாப் புகழும் வந்து சேரும்-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27031175
All
27031175
Your IP: 44.201.97.0
2024-04-17 20:56

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg