Print this page
வெள்ளிக்கிழமை, 12 April 2019 10:22

சிவ தாண்டவங்கள்!

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வானவ பகர்முன்னவாம் பரமே போற்றி!

#*#*#*#*#

சிவ தாண்டவங்கள்!

சிவனின் தாண்டவத்தால்தான் இந்த உலகம் இயங்குகின்றது. அவரின் ஒவ்வொரு அசைவும் அண்டத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அருள் செய்யவே. பல தலங்களில் ஆடவல்லான் பல வகையான ஆடல்களை நிகழ்த்தியிருக்கின்றார். எம்பெருமான் இறைவன் 108 தாண்டவ பேதங்களை ஆடியுள்ளார் என பரத நாட்டியத்தை உலகுக்கு அளித்த பரத முனிவர் கூறியுள்ளார். அவையே கர்ணங்கள் என அழைக்கப்படுகின்றன.

தன் ஆடலின் மூலமாக படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வகைச் செயல்களை செய்து அதாவது நடனம் ஆடி நம்மை ஆட்டுவிக்கின்றார். சிவனின் ஆடல்களில் சிறந்ததாகப் போற்றப்படுவது எட்டு வகையான தாண்டவங்களே!

இதில் முதல் ஏழு தாண்டவங்களும் ஸப்த ஸ்வரங்களை உலகிற்கு அளித்தன. ஆடத் தொடங்குமுன் ஆரோஹணமும் ஆடி முடிக்கையில் அவரோஹணமும் ஆக ஸ ரி க ம ப த நி என்ற ஏழு சுரங்களும் உலகிற்கு கிடைத்துள்ளது.

காளிகா தாண்டவம்!

அன்னை சிவகாமி காளியாக கோபம் கொண்டு இருக்கும்போது அந்த கோபத்தை தணித்து தானும் அவளும் வேறு வேறல்ல என்பதை உலகிற்கு உணர்த்த ஆடிய தாண்டவம் காளிகா தாண்டவம் எனப்படும். இந்த தாண்டவக் கோலத்தில் இறைவன் எட்டுக் கரங்களில் உடுக்கை, மணி, அக்ணி ஆகிய வற்றை வலது கரங்களிலும், இடது கையில் அபய ஹஸ்தம் கஜ ஹஸ்தமும் காட்டிய கோலத்தில் காட்சி. திருநெல்வேலி தாமிர சபையில் இந்த வகை நாட்டியத்தைக் காணலாம்.

இந்த கோலத்தில் இறைவனைத் தரிசித்தால் கர்ம வினைகள் நீங்கி வாழ்வில் இன்பம் மலரும். கடன் தொல்லை, தாழ்வு மனப்பான்மை நீங்கும்.


சந்தியா தாண்டவம்!

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப்பட உலக நன்மையை முன்னிட்டு சிவபெருமான் அதனை அருந்தினார். விஷத்தின் வீர்யத்தால் அவர் மயங்கி பார்வதியின் மடியில் சாய்ந்த அந்த சில நிமிஷங்கள் பூமியின் இயக்கம் நின்றது. உலக உயிர்களுக்கு மூச்சுக் காற்று கூட கிடைப்பதில் சிரமம் ஏற்பட தேவர்கள் அனைவரும் சிவபெருமான் மயக்கம் தீர்ந்து எழுந்திருக்க மனமுறுகி வேண்டினர். சிறிது நேரத்தில் பெருமான் மயக்கம் தீர்ந்து கண்விழித்ததைக் கண்ட தேவர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர். அந்த ஆனந்தத்தில் பெருமானை ஆனந்த நடனம் ஆட வேண்ட அப்போது ஆடிய நடனமே சந்தியா தாண்டவம். பிரதோஷ வேளை.


உமா தாண்டவம்:

அன்னையும் அப்பனும் சேர்ந்து ஆடிய நடனம் உமா தாண்டவம் ஆகும். இந்தக் கோலத்தில் அபஸ்மர புருஷனை மிதித்தபடி ஆடுகின்றார் எம்பெருமான். இந்த நடனத்தில் கஜஹஸ்தம் என்ற முத்திரையைக் காண்பிப்பதால் இது காத்தல் தொழிலைக் குறிக்கும் தாண்டவம் எனப்படுகின்றது.

இந்தக் கோலத்தை கண்டு தரிப்பவர்களுக்கு தம்பதியர் ஒற்றுமை சிறந்து விளங்கும்.


ஊர்த்துவ தாண்டவம்:

தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கோபம் கொண்டு உமை பெருமானை விட்டு விலக அதனால் அவர் உக்கிரம் மேலும் அதிகமாகி காளியாகி நின்றார்.. அந்த உக்கிரத்தை தணித்து காளியை சிவகாமியாக மாற்ற நினைத்து காளியுடன் போட்டியை ஏற்படுத்தி நடனமாடத் துவங்கினார். நடனம் சமமான முறையில் நீண்டு கொண்டே சென்றது. அப்போது நடனத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர நினைத்த எம்பெருமான் தன் காதிலுள்ள தோட்டை கழற்றி கீழே விழச் செய்து நடனமாடியபடியே மீண்டும் அதை காலில் எடுத்து காதில் அணிந்து கொண்டார். இந்தக் கோலமே ஊர்த்துவ தாண்டவம் என்றும் பெருமானுக்கு ஊர்த்துவ தாண்டமூர்த்தி என்றும் பெயர் ஏற்பட்டது.

கௌரி தாண்டவம்:

தாருகா வனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்க பிட்சாடன மூர்த்தியாய் வந்தார் எம்பெருமான். அவருடன் விஷ்ணுவும் மோகினி அவதாரம் எடுத்து வந்தார். அப்போது இருவரும் ஆடிய நடனம் இது. எப்போதும் தன்னுடன் ஆடும் இறைவனின் மற்றொரு நடனத்தை காண கௌரிதேவி ஆசைப்பட அவருக்காக இறைவன் ஆடிய நடனம் கௌரி தாண்டவம் எனப்பட்டது. ஆனந்த தாண்டவத்தில் இல்லாத கோலமாக கையில் ஒரு பிரம்பு இருப்பதே கௌரி தாண்டவம் ஆகும்.


கஜ சம்ஹார தாண்டவம்:

தருகாவனத்து முனிவர்கள் தங்கள் அபிசார வேள்வியில் மதங்கொண்ட யானையை தோற்றுவித்து பெருமானை நோக்கி அனுப்பினர். அந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்து அணிந்துகொண்டார் எம்பெருமான். அப்போது ஆடிய தாண்டவமே கஜ சம்ஹார தாண்டவம் எனப்படும்.


ஆனந்த தாண்டவம்:

பதஞ்சலி, வியாபாக்ர முனிவர்களின் விருப்பத்திற்காக இறைவன் ஆடிய தாண்டவம் ஆனந்த தாண்டவம். ஆகும். ஐந்து தொழில்கள், ஐந்து பூதங்கள், ஐந்து பொழுதுகள் ஆகியவற்றைக் குறிக்கின்ற தாண்டவம் இது, இதை களி நடனம் என்றும் சொல்வர். சிதம்பரம் எனும் தில்லையில் நடராஜர் உருவத்தில் ஆடும் பெருமானை தில்லைக்கூத்தர், அம்பலக் கூத்தர் என்றழைப்பர்.

இதுவே மிகச் சிறந்த தாண்டவமாகக் கருதப்படும். இந்த நடனத்தை அடிப்படையாகக் கொண்டே பதஞ்சலி முனிவர் யோக சாஸ்திரத்தையும், பரத முனிவர் நடன கலையையும் தோற்றுவித்தனர்.

இந்த நடன தோற்றத்தில் இறைவனைத் தரிசிக்க வாழ்நாள் இன்பம் நிலைத்து நிற்கும்.


அஜபா தாண்டவம்:

அன்னை விடும் சுவாசக் காற்றிற்கேற்ப பெருமான் ஆடிய நடனம் இது. அஜபா தாண்டவம் எனப்படும். இறைவன் அசைந்து அசைந்து மெதுவாக பொறுமையாக ஆடிய நடனமாகும். அஜபா நடனம் பல ராகங்களின் பிறப்பிடம். இந்த நடனத்தால் இசை, ஆடல் போன்ற கலைகள் சிறந்தன.

இந்தத் திருக்கோலத்தில் இறைவனை தரிசித்தால் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். வழக்குகளில் நல்ல தீர்வு கிடைக்கும்.—குருஸ்ரீ பகோரா.

#####

Read 12248 times Last modified on வெள்ளிக்கிழமை, 21 June 2019 10:03
Login to post comments