gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

உன் உழைப்பில் அடைந்ததை பகிர்ந்தளித்து மகிழ்ந்திரு.!
புதன்கிழமை, 20 February 2013 09:26

அன்பின் ஆழம்!

Written by
Rate this item
(2 votes)

ஓம் நமசிவய நமக!
அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
$$$$$

அன்பின் ஆழம்!

 

அன்பு மனதில் தோன்றும் மன வெழுச்சியாகும். அது ஒரு தீவிர உணர்ச்ச்சி, மனக் கிளர்ச்சியாகும், பல நிலைகளைக் கொண்டது. மற்ற மனங்களை உருக்கும் தன்மை கொண்டது. வாழ்வுப் பாதையில் வாழ்க்கையை வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது அன்பே. உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் அது பொதுவானது, பொருமையான அன்பில் அமைதியிருக்கும். அமைதியான அன்பில் ஆழமிருக்கும். ஆழமான அன்பில் பண்புகள் குடியிருக்கும். அடித்து அடக்கி வெல்வதைவிட அன்பினால் சுலபமாக வெற்றி கொள்ளலாம். துப்பாக்கி முனைகள் சாதிக்காததை அன்பின் வழி கண்கள் சாதிக்கும். இந்த அதிசய அன்பின் ஆழத்தை ஒவ்வொரு உயிரும் உணர வேண்டும். உலகில் உள்ள பழமையான ஆனால் அதி நவீன சக்திகளைக் கொண்ட கருவி அன்பு ஒன்றேயாம். உலக உயிர்களின் இதயங்களை மனதை நாம் அன்பால் வெல்லலாம்.

நான், என்னுடையது எனும் தன்னுணர்ச்சியால், சுயநலத்தால் பெறும் வெற்றிகள் எல்லாம் வெற்றியாகாது. அப்படி சுய நலத்தால் வென்றாலும் அது உண்மையான வெற்றியாகாது. ஆனால் அன்பினால் தோல்வி ஏற்பட்டிருந்தாலும் அது தற்காலிகமானதுதான், மீண்டும் அதில் தானாக வெற்றி கிட்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து நம் உள்ளார்ந்த மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

மிகவும் துன்பங்களைக் கொண்ட நேரங்களில் யாரும் அன்பை பற்றி நினைக்க முடியாது, ஆனாலும் நாம் இவ்வுலகில் வாழ்வுப்பயணம் எனும் நிகழ்வை தொடர்ந்து நடத்த வேண்டும். அதற்கு அன்பு மிக உதவியாய் இருக்கும். ஓன்று நீங்கள் கொண்ட அன்பு. மற்றது மற்றவர்கள் உங்கள்மேல் கொண்ட அன்பாகும். எனவே துன்பங்களிலிருந்து விடுபட வன்முறைகளை கையில் எடுக்காதீர்கள். அப்படி எடுத்துக் கொண்டு அதிலிருந்து வெளிவர மறுக்கும் அன்பர்களை விட்டு விடுங்கள். அவரின் முடிவு வேறு விதமாய்த்தான் இருக்கும்.

எந்நிலையிலும் அமைதியான அன்பு அளவிற்கதிகமான சக்தியுடையது. உள்ளார்ந்த மன நிம்மதியை உறுதியைத் தரும். நாம் முழு மன நிம்மதி மற்றும் அமைதியான அன்புடன் இருக்கும்போது நம்மைச்சுற்றி ஓர் அன்பு வட்டத்தை ஏற்படுத்துகின்றோம். அது நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு பயனை அளிக்கக் கூடியது. நம் நண்பர்களோ, உறவினர்களோ துன்பத்தில் வாடும் போது அதை நாம் நினைத்து அதிலிருந்து அவர்கள் விடுபடவேண்டும் என உண்மையான அன்பினால் அன்பு கொண்டு நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களும் நினைக்கும்போது அந்த உணர்வுகள் மின் காந்த அலைகளாக மாறி காற்றில் பரவி பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சென்றடைந்து நலம் விளைவிக்கும். 

 

இதை நாம் உணர்ந்து செயல் பட்டால் நலம். இது போன்ற அன்பை ஒவ்வொருவரும் மனதில் கொள்வதற்கும் மற்றவர் துன்பம் போக்கும் வல்லமையை அடையவும் வாழ்வில் அன்பு மிக கொண்டு மனதளவில் மனித நேயம் கொண்டு நம்பிக்கையுடன் நம் ஆழ் மனத்தில் இருக்கும் அன்பை அடிக்கடி தூய்மை கொள்ளச்செய்ய வேண்டும். நாம் அமைதியாக இருந்து நம்பிக்கையுடன் தியானம் செய்தால் அந்த நிலை துன்பத்தில் துயரப்படும் ஒருவருக்கு கண்டிப்பாக உதவி புரியும். அந்த நிலைக்கு எல்லோரும் வாருங்கள். அன்பு கொண்டவராகுங்கள். 

அதற்கு நான் என்ன செய்ய வேண்டும். உலகமே துன்ப துயரத்தில் மூழ்கியிருக்கும்போது நான் என்ன செய்ய முடியும் என நினையாது, என்னாலும் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கை முதலில் கொள்ள வேண்டும். 

ஒரு சிட்டிகை அளவு மருந்து பல கிலோ எடையுள்ள ஒரு மானுடத்தினுள் மாற்றம் செய்யும் போது கோடிக்கணக்கான உயிர்களைக் கொண்ட இவ்வுலகில் ஒரு துரும்பாக நீங்களும் உங்களால் முடிந்ததை இவ்வுலகுக்கு செய்யலாம் வருங்கள் அன்புகொண்டு.

ஒரு கூட்டம் கருத்து வேறுபாடினால் இரண்டாகப் பிரிந்து விரோத மனப்பான்மை கொண்டிருந்தால் நீங்கள் முதலிம் இரு பகுதியினரிடமும் அன்புடன் போசுங்கள். அவர்களிடையே நண்பர்கள், உறவினர்கள், நேசங்கள் என பலதரப்பட்டவர்களும் பிரிந்திருக்கலாம் உண்மை காரணம் தெளிவாகப் புரியாமல், அதைப் புரியவைத்து அவர்களின் பழைய தொடர்புகளை நல்லவைகளை நீங்கள் அறிந்தவற்றை எடுத்துக் கூறி பாச பிணைப்புக்களைத் தோற்றுவிக்க முயற்சி பண்ணுங்கள். பழைய உறவுகளை மீண்டும் புதுப்பியுங்கள். அன்பு கொண்டு அன்பை மலரச் செய்யுங்கள். மலரச்செய்த அன்பு பழைய நினைவுகளால் புதுப் பொலிவு அடைந்து வேற்றுமைகளை வலுவிளக்கச்செய்யும். அது ஆரம்பமானால் நீங்கள் அன்பில் வெற்றி கண்டுள்ளீர்கள் என்பதாகும். அமைதியுடன் அன்பை பரப்புங்கள், வேற்றுமைகள் முற்றிலும் அகன்று மீண்டும் ஒற்றுமை தோன்றி அன்பு பரிமளிக்கும்.

இது போன்றே மதக் கருத்து வேறுபாடுகளையும் அன்பினால் களையலாம். எம்மதமாயினும் அவரவர் தம் மழலைச் செல்வங்களுக்கு உபதேசம் செய்யும்போது தங்களின் பழக்க வழக்கங்களைச் சொல்லிய பின் அருகில் அவர்களைச் சுற்றியுள்ள சமூகத்தினரின் பழக்க வழக்கங்களையும் போதிக்க வேண்டும். இது அவர்களிடையே ஓர் நேசத்தை தோற்றுவிக்கும். ஒரு இன, மதத்துச் சிறுவன் வேறு மதச் சிறுவர்களுடன் நட்பாக இருப்பதை நாம் கண்டிருக்கின்றோம். இந்த நட்பு வளர்ந்து இறுதிவரை கூடி நீடிப்பதுண்டு. இந்த நட்பானது இனக் கருத்து வேறுபாடுகளினால் மாற்றம் அடையாது. கலவரங்கள் ஏற்பட்டாலும் மனித நேயத்துடன் ஓர் அன்புடன் மனித உயிர்களின் மதிப்பை உணர்ந்து நட்புடன் செயல்படும் பண்பாக மலரும். நல்ல நம்பிக்கையும் நற்பண்புகளும் தோன்றும். எந்த இனத்தையும் தாழ்வாக எண்ணாது. ஜாதி, இன பேதம் கொள்ளாது. எல்லா இன கோட்பாடுகளும் அன்பின் எல்லைகளுக்கு உட்பட்டவைகள்தான்.

எல்லா இனத்திலும் அன்பு இல்லாமல் இல்லை. அன்பே உயிர்கள் வாழ ஒருவருக்கொருவர் உதவி செய்ய பயனுள்ளதாகும். ஓர் சுனாமி ஏற்படும்பொழுது அங்கே ஜாதி, இனம், மதம் ஏன் ஆண், பெண் என்றுகூடப் பார்க்கப்படுவதில்லை. அல்லலுற்று துன்பத்தில் வாடும் உயிர்களுக்கு அன்பு என்ற ஒன்றால்தான் ஆறுதல் தர முடியும். நாம் எல்லோருக்கும் பொதுவாக படைக்கப்பட்ட இவ்வுலகில் நம்மிடம் பொதுவாக இருப்பதும் அன்பேயாகும்.

 

ஓர் நாட்டில், தேசத்தில் தோன்றிய உணவு வகைகளை மற்ற நாட்டினர் சுவைத்து மகிழ்கின்றனர். உலகின் ஓர் பகுதியில் உள்ள இயற்கையைக்காண மற்றவர்கள் உல்லாசமாக பயணிக்கின்றனர், ஒவ்வொரு பகுதியில் தோன்றும் இசை உலக மக்களை கவர்ந்து இழுக்கின்றது அனைவரும் ஆனந்தத்தில் மூழ்குகின்றனர். ஒர் பகுதியின் கலாச்சரங்கள் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவர்கள் அதை மிகவும் விரும்பி இரசனை கொள்கின்றனர்.

இப்படி உலகின் ஒவ்வொரு இடத்தும் உள்ள சிறந்த உபயோகமான ஒன்று உலகின் அடுத்த பக்கத்திற்கு, எல்லைக்குச் செல்லும்போது ஏன் மனித உயிர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றான அனைவருக்கும் பொதுவான ஒன்று ஏன் செல்லாது, மருகி விரோதங்கள் மாற்று எண்ணங்கள் தோன்றி பிடிவாத குணங்களால் அன்பை மறந்து செயல்படும் விழிப்புணர்வு இல்லா நிலையில் நொண்டியடித்துக் கொண்டிருப்பதை காண்கிறோம். சில எண்ணங்கள் விளைவால் உள அன்பை விடுத்து துப்பாக்கி முனையில் அன்பை தேடும் பிடிவாத முட்டாள் தனம் தெரிகின்றது. அன்பைவிட சிறந்த துப்பாக்கி இல்லை என அவர்கள் உணரும் காலம் உங்கள் உணர்வில் தோன்றட்டும்.

 எத்தனை எத்தனை நிகழ்வுகள். இடத்துக்கு இடம், தேசத்திற்கு தேசம் தினசரி நிகழ்கின்றது.. நேசம் கொண்டவர்களே நினைப்பீர்கள் இதனை. செயல் காணுங்கள், எங்கும் மனித நேய அன்பு மலர ஆவன செய்ய நினைவு கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மனதில் முதலில் விதை விதைத்து உரமிடுங்கள். ஒரு பூ மலர்ந்து பல பூக்கள் மலர வழிவகுக்கட்டும். அன்பு மலர்ந்து பூந்தோட்டமாகட்டும் இந்த அன்பு பூமி.

நாம் ஒவ்வொருவரும் தற்பெருமை கொள்வதில் நிகரில்லாமல் இருக்கின்றோம். அதனால் என்ன பயன். இரக்க உணர்வு இருந்தாலும் அதை வெளிப்படுத்த தயங்குகின்றோம். நமக்கு ஏன் இந்த வம்பு என விலகிச் செல்கின்றோம். நான் மிகுந்த இரக்ககுணமுடையவன். அதனால் உயிர்களிடம் அன்புடன் இருப்பேன் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் என்று தற்பெருமை கொள்ளுங்கள். நீங்கள் மனித நேயம் கொண்டவராக மாறுவீர்கள். ஒரு மனிதனுக்கு இரக்க உணர்ச்சியுடன் கூடிய அன்பு இயற்கையிலே இருக்கின்றது, அதை மலர விடுங்கள். மணம் வீசட்டும், அதன் பயனை யாவரும் நுகருட்டும், அதுவே உங்களுக்குப் பெருமை. அந்த தற்பெருமை கொள்ளுங்கள்.

 

உங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள், சுற்றத்தினர் அனைவரையும் இதுபோன்றே தற்பெருமை கொள்ள வையுங்கள். அங்கு ஓர் புதிய உலகம் உருவாகட்டும். அன்புமழை பொழியட்டும். தளிர்கள் வளரட்டும், உலக உயிர்கள் பயன் பெறட்டும். எல்லா உலக உயிர்களும் உணர்ச்சிமிக்க வாழ்வுப்பாதையின் ஆனந்த வாழ்விற்கு திருப்ப முயற்சிக்க வேண்டும்

 நீங்கள் ஒருநாளில் சந்திக்கும் நண்பர்கள், உறவினர்கள், மற்றோர் ஆகிய முகங்களில் மகிழ்ச்சியின் சாயலை எத்தனை முகங்களில் பார்க்க முடிந்தது என்றால் நீங்கள் யோசனை செய்து தேட வேண்டியிருக்கும். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் முகங்கள் ஒரு சோர்வு, களைப்பு, துக்கம், வெறுப்பு, தூக்கமின்மை முதலிய செய்திகளை சொல்லுவதாக இருக்கும், சந்தோஷ முகங்களைக் காண்பது என்பது அரிதாகிக் கொண்டிருக்கின்றது,

ஓர் ஆய்வில் குழந்தையாயிருக்கும்போது பல நூறு தடவை சிரிக்கும் அது இளமையில் பத்தாகி பருவத்தில் ஒன்றுகூட இல்லாமல் இருப்பதன் காரணம் என்னவென்றால் மனதில் தேவையற்றவைகளை நிரப்பி இறுத்திக் கொண்டு தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதால் தான் அந்நிலை.

 சிலர் சிரிக்கவேண்டிய இடத்தில்கூட சிரிப்பதில்லை. மனம் இறுகிப்போன நிலையில் எப்படி சிரிப்புத் தோன்றும். சிரித்த முகமே அழகு, அகத்தின் அழகு முதத்தில், அகம் இருளின்றி வெளிச்சமுடன், சிந்தனைகளால் குழப்பங்களின்றி தெளிவுடன் இருந்தால் அது முகத்தில் பிரதிபலிக்கும் ஒவ்வொரு புன்னகையும் நரம்புகளை செயல் படுத்தி நல்ல சுறு சுறுப்பான இயக்கத்தைக் கொடுக்கும். புன்னகை ஓர் தொற்றாகும். ஒருவரின் மலர்ந்த முகத்தைப் பார்த்த ஒருவருக்கு அது காரணமில்லாமல் தொற்றி மலரவைக்கும், காரணம் கண்டால் மேலும் மலரும். அது பலருக்கும் நன்மை பயக்கும். ஒரு முகம் மலர்ந்து மற்றமுகத்தை அது பற்றினால் முதலில் மலர்ந்திருந்த முகத்தையுடையவருக்கு என்ன தீமை விளையப் போகின்றது, நன்மையைத்தவிர வேறொன்றுமில்லை என்பதாகும்.

தீயவைகளைப்பற்றி நினையாது நல்ல செயல்களை சிந்தித்து மனம் எண்ணினால் அது அமைதி பெற்று குழப்பங்கள் குறைந்து முகத்தில் தெளிவை காட்டி மலரவைக்கும், இப்படியிருக்கும் முகத்தைப் பார்த்துதான் நாம் “இன்று நீ மிகவும் சந்தோஷமாக இருக்கின்றாய் போலிருக்கின்றது” என பழகிய ஒருவரை கேட்கமுடியும். இதுவே முகமலர்ச்சிக்கு ஆதாரம், அங்கு அன்பு மலரும். ஒளிரும். முகம் மிளிரும்.

 உங்களது வாழ்க்கையில் நீங்கள் அன்புடன் ஆனந்தத்துடன் வாழ வாழ்ந்திருக்க அன்பு கொள்ளுங்கள். அன்பு காட்டுங்கள். அன்பே பிரதானம். அன்பே உலகம். உயிர்கள் ஒவ்வொன்றும் ஒரு சில பல வருடங்கள் வாழலாம் அதற்கு பின் வாழ்வு முடிவுபெற்று விடும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் இதுகாறும் நாம் அடைந்தவைகளைப் பற்றியும் அடைய முடியாதவைகளைப் பற்றியும் நினைந்து மிக மிக வருத்தம் அடைகின்றோம். அந்த எண்ணங்களே நம்மை துயரத்தில் ஆழ்த்தும். மன அழுத்தம் ஏற்பட்டு துன்புறுவதைவிட்டு அதனின்று வெளிவர வேண்டிய விழிப்புணர்வு நமக்குத் தேவை. அதற்கு மன அமைதி தேவை. அன்பு உள்ளம் தேவை. நம் உள்ளத்தில் அந்த அன்பிருந்தால் நம்மைச்சுற்றி அதைப் படரவிடமுடியும்.

நீங்கள் எதுவாக நினைகின்றீர்களோ அதுவாகவே ஆகின்றீர்கள். நீங்களே அது. நீங்களே அன்பு என நினையுங்கள். நீங்கள் அதுவாகவே ஆகுவீர்கள்.

சந்தோஷங்களை செயல்களால் அனுபவத்தால் உணர்ந்தால் உங்கள் மூளை விரிவடைந்து சிறப்பான செயல்பாடுகளையுடையது ஆகும்.துன்பங்கள் துயரங்களை உணர்ந்தால் அதனால் மூளையின் செயல்பாடுகள் தாக்கம் குறைந்து செயல்திறன் குறைந்துவிடும்.வாழ்வு முழுவதும் துயரங்கள் இருக்கும் அதை நாம் தீர்க்க, குறைத்துவிட, கொன்றுவிட முயலவேண்டும். அதை விடுத்து அதையே நினைவு கொண்டு அதனுள் மூழ்கி விடக்கூடாது.அன்பினால் வலி ஏற்பட்டாலும் அது ஒரு சுகமான ஆழமான நல் அனுபவத்தை நம்முள் ஏற்படுத்தும். சந்தோஷம் நம் வளர்சிக்கு உதவும். சந்தோஷம் அன்பான உணர்வுகளை எண்ணங்களை ஏற்படுத்தும். அன்பு எல்லோருக்கும் வளமான சந்தோஷங்களைத் தரும்.துன்பங்கள் நம்மை துயரத்தில் மூழ்கடித்துவிடும். துன்பத்தால் நம் உடலில் சேமித்த சக்திகள் விரையமாகிவிடும், புத்தி கூர்மை மழுங்கிவிடும். துன்பங்கள் நம்மையும் மற்றவரையும் காயப்படுத்தும்.

அன்பு மென்மையானது. யாரையும் காயப்படுத்தாது. அன்பு ஒரு தூதுவன். அது நமக்குள் தூதுபோகும். நமக்காகவும் தூது போகும். ஒருவர்மேல் கொண்ட அன்பால் நம் உள்ளம் சில செயல்களில் இணக்கம் கொண்டு தடுமாறினாலும் அந்த அன்பு உறுதியான அன்பாகும். அத்தகைய அன்பு போற்றத்தக்கது. நீங்கள் அன்பு கொண்டிருக்கும் போதும் அதை மற்றவரிடத்து காண்பிக்கும் போதும் மிகவும் மென்மைத் தன்மையுடையவராக மாறிவிடுவீர்கள். நீங்கள் முழுவதும் அர்ப்பணிக்ககூடிய பொருளாக மாறுவீர். இளகிய தன்மையுடையவராக ஆவீர். மாறாக துன்பத்தில் நீங்கள் ஓர் கடுமையான பாறை உள்ளம் கொண்டவராக திகழ்வீர்,

ஆன்மீக உலகில் அன்பும் அதன் அனுபவமும் ஆன்மீக தூதும் ஆகாயத்தைப் போன்று பரந்து விரிந்தது. எனவே “அன்பே கடவுள்’” கடவுளே அன்பு என்றார்கள். இது வானளாவிய ஒரு தத்துவமடங்கிய சொல்லாகும்.

பெரியவர் ஒருவரின் அருகில் அமர்ந்து அன்பை ஒருவன் அறிந்து கொள்ள முடிந்தால் அதனால் அவன் ஒரு தூய்மையான உடம்பை உடையவன் என்றோ, வளமான எண்ணங்களை உடையவன் என்றோ, நிறைய திட்டங்களை உடையவன் என்றோ, எழுச்சியுடையவன் என்றோ கூறமுடியாது. அப்படி நினைப்பது தவறு.

நீ நினைக்கும் அன்பு உன்னுள் ஏற்பட்ட அன்பு அது உண்ணால் ஏற்பட்டது. பெரியவரின் அருகாமை அதை உன்னுள் நினைவு கொண்டு வந்தது, அவ்வளவே. கண்களை மூடி அமைதியுடன் உங்களுக்குள் சென்று பாருங்கள். இதுகாறும் மறைந்திருந்த அன்பு பெட்டகம் திறந்திருக்கும். நீங்கள் அதை அறிந்து கொள்வீர்.

நீங்கள் அன்புடன் படைக்கப்பட்டுள்ளீர்கள். அதை இப்போது உணர்ந்துள்ளீர்கள். உங்கள் உள்ளே உள்ள அன்பே கடவுள் என்பதை உணர்ந்துள்ளீர் என்பதாகும். எனவே நீங்கள் அன்பானவர். எப்போதும் அதனுடன் இருந்து சிறப்படைவீர். அன்பே சிவம்.

 நம்மிடையே தோன்றும் அன்பை மூன்று வகையாகச் சொல்லலாம். முதல் வகை- அழகு, கவர்ச்சி ஆகியவற்றால் ஏற்படுவது. அழகும் கவர்ச்சியும் நிலையானது அல்ல. அது ஒரு மாயை. எப்போது வேண்டுமானாலும் எதோ ஒரு காரணத்திற்காகவும் மாற்றம் பெறும். நிலை மாறினால் அழகும் கவர்ச்சியும் குறைந்து விடுமானால் புதிய தோற்றத்தின் நிலை பழைய தோற்றத்தைக் கண்டவருக்கு இதற்காகவா இத்தனை கஷ்டங்கள் இன்னல்கள் பட்டோம் என்ற சலிப்பை வெறுப்பை ஏற்படுத்தி அன்பை மெல்ல மெல்ல குறைத்திடும்.

இரண்டாம் வகை ஒருவரின் புகழ், பழக்கவழக்கங்களினால் தோன்றுவது. இதுவும் நிலையானது அல்ல, மாற்றம் கொள்ளக்கூடியது ஆகும். புகழ் என்பது எதாவது ஒரு காரணத்தால் எப்போதோ ஒரு சமயத்தில் வந்தது என்றால் காலப்போக்கில் அதன் மதிப்பு குறைந்துவிடும். புகழ் அவ்வப்போது தொடர்ந்து வந்து கொண்டிருக்கவேண்டும், அப்போதுதான் அந்த புகழுக்கும் மதிப்பு. அல்லது யாராலும் அதுபோன்ற சாதனை செய்ய இயலாது என்றவகை புகழாக இருக்க வேண்டும் அது நிரந்தரமானது. அப்படி திறமைகளை வெளிப்படுத்துவது என்பது பலருக்கு இயலாதது ஆகும். ஆகவே புகழனினால் ஏற்படும் அன்பும் மாற்றம் கொள்ளக்கூடியது ஆகும். ஒருவருடைய பழக்க வழக்கங்கள் எதோ ஒருவகையில் ஒருவருக்கு பிடித்திருந்தால் அதனால் அன்பு மலரலாம். அதனால் அவரது மற்ற பழக்க வழக்கங்கள் மற்றவருக்கும் பிடிக்கும் என்ற கட்டாய நிலை இல்லாததால் இதனால் ஏற்பட்ட அன்பும் மாறக்கூடியதாகும்.

 மேற்கண்ட இரண்டுவகை அன்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டது இந்தவகை அன்பாகும். அது தெய்வீக அன்பாகும். தெய்வத்தின் மேல் கொள்ளும் அன்பு, அதனால் மற்றவர்களின் மேல் கொள்ளும் அன்பு எனப்படும். ஆன்மீக அன்பு சிறப்பானது. எப்போதும் புதியதாக இருக்கும். மிக நெருக்கமாக அதனருகில் சென்றால் அது மிக ஆழமாக கவர்ந்திழுக்கும். அது வசதியாகவும் உற்சாகமூட்டுவதாகவும் மற்றவருக்கு துன்பம் தராததாகவும் இருக்கும். அதனால் வெறுமை ஏற்படாது. பொதுவாக அன்பு கடலைப் போல் ஆழமானது. கடலுக்கு அடிமடி உண்டு. ஆனால் அன்பிற்கு ஆழம் ன் எல்லை கிடையாது, வானம் போன்று எல்லையற்றது.

நாம் ஏன் அப்படிப்பட்ட அன்பை ஒருவர்மேல் செலுத்த வேண்டும். இந்த உலகில் வாழ ஒவ்வொரு உயிரையும் நேசிக்க வேண்டும். அதற்கு அன்பு தேவையாயிருப்பதால் மற்றவரிடம் அன்பு கொள்கின்றோம். அன்பு செலுத்த காரணம் இரத்த சம்பந்தமான உறவாக இருக்கலாம், நம் விருப்பத்தினால் இருக்கலாம், ஆசையினால் இருக்கலாம், நட்பினால் இருக்கலாம், அல்லது இதுகாறும் சந்திக்காத அழகு, திறமை, புத்திசாலித்தனம் இவைகளில் ஒன்றாக இருக்கலாம். இந்த வகைக் காராணங்களால் ஏற்படும் அன்பு நிரந்தரமானது அல்ல. நாம் கொண்ட அன்பு அப்போது இருந்த சூழ்நிலையில் அப்போதைக்கு மட்டும்தான் என்ற நிலையாக இருக்கலாம்.

 பின் உறவு என்ற நிலையில்லாமல் நட்பாகி, சொந்தமாகி புதிய உறவாகி தினம்தினம் ஒருவர்மேல் கொள்ளும் பாசத்தினால் ஊறும் அன்பே நிரந்தரமானது.

கடவுளின்மேல் நமக்கு மிகுந்த நம்பிக்கை. கஷ்டங்கள் வந்தாலும் துன்ப துயரங்கள் ஏற்பட்டாலும் வாழ்வில் சொந்தங்களை இழந்தாலும் மீதி இருக்கும் வாழ்விற்கு அவன் உதவி செய்வான் என்ற நம்பிக்கையின் உணர்வில் தோன்றும் அன்பு மாறாததாகிவிடுகின்றது.

 

அதைப்போன்றே நண்பர்களாயிருந்தாலும் சொந்தங்களாக இருந்தாலும் உறவுகளாக இருந்தாலும் அவர்கள் நம் வாழ்வின் பயணத்திற்கு உதவுவார்கள் என்ற நம்பிகையினால் ஏற்படும் உறுதி கொண்ட பாசம் பினைந்த அந்த ஆழமான அன்பு என்றும் மாறாது. உயர்ந்து நிற்கும். அந்த அன்பே மிக அதிக பலத்தினை ஒருவனுக்கு கொடுக்கக்கூடியது.

இப்படிப்பட்ட ஒப்புயர்வில்லா மாசில்லா தூய அன்பை அனைத்து உயிர்களும் அடைந்து வாழ்வில் ஆனந்த சந்தோஷம் கண்டு வாழ வாழ்த்தும் --- குருஸ்ரீ பகோரா

$$$$$

Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

19639296
All
19639296
Your IP: 162.158.78.102
2020-11-27 14:01

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg