குருஜி - வைரவாக்கியம்

பூனைக்கு பால் பிடித்தமான உணவு. அதை வளர்க்கும் நீங்கள் கடமையுடன் பசியடங்க பால் கொடுத்தால் சரி. இல்லையெனில் பூனை பால் இருக்குமிடம் தேடத்தான் செய்யும். அப்படி அது பசியைப் போக்கிக்கொண்டால் அது திருட்டுப்பூனை என பட்டம் பெற்றுவிடுகின்றது. பூனைக்கு பசி எடுப்பது தவறா. இது யார் தவறு.

குருஜி

திங்கட்கிழமை, 21 May 2018 12:41

தர்மத்தின் கணக்கு!

தர்மத்தின் கணக்கு!

அன்று பலத்த மழை. வழிப்போக்கர்கள் மூவர் அங்கிருந்த சத்திரத்தில் தங்கினர். இரவு வெகு நேரமாகியும் மழை விட வில்லை. அருகில் உணவிற்கு ஏதும் வழியில்லை. அப்போது ஒருவன் 3 ரொட்டிகளும் இன்னெருவன் 5 ரொட்டிகளும் கொண்டு வந்திருந்தனர். மூன்றாவது நபர் வீட்டிற்குச் சென்று விடலாம் என்று நினைத்து வந்தவன் எதிர்பார மழையில் மாட்டிக் கொண்டான். அப்போது 5 ரொட்டி வைத்திருப்பவன் என்னிடமுள்ள ரொட்டிகளை 3 துண்டாகப் போட்டால் 15 துண்டுகள் வரும் உன்னிடம் இருப்பதை 3 துண்டுகளாகப் போட்டால் 9 துண்டுகள் வரும். மொத்தம் 24 துண்டுகள். அதை சமமாகப் பிரித்து ஆளுக்கு 8 துண்டுகள் எனப் பங்கிச் சாப்பிடலாம் என்ற யோசனையை ஏற்று மூவரும் பசியாறினர். அப்படியே அசதியில் உறங்கினர். மழை விட்டிருந்தது. காலையில் எழுந்ததும் அவரவர் வீட்டிற்கு செல்லத் தயாரானார்கள். அப்போது ரொட்டி கொண்டு வராதவன் அன்பர்களே நீங்கள் எனக்கு எட்டு ரொட்டித் துண்டுகளை அளித்தீர்கள். சமயத்தில் நீங்கள் மனதாரச் செய்த உதவியை நான் மறக்க மாட்டேன். இருந்தாலும் என் நினைவாக இந்த காசுகளை வைத்துக் கொள்ளுங்கள் என எட்டு காசுகளை அவர்களிடம் தந்தான். அப்போதுதான் குழப்பம் உருவாயிற்று 3 ரொட்டிகள் கொடுத்தவர் ஆளுக்குச் சமமாக 4 காசுகள் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்ல மற்றவர் 3 ரொட்டி கொடுத்தவருக்கு 3 காசுகள் 5 ரொட்டி கொடுத்தவருக்கு 5 காசுகள் என்றார், இருவரும் ஒத்துப் போகாததால் குழப்பம் நீடித்தது,
அப்போது அந்தப் பக்கம் ஒரு ஞானி வந்தார். அவரிடம் முறையிட்டனர். நடந்ததைக் கேட்டறிந்தவர் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு 3 ரொட்டிகள் தந்தவருக்கு 1 காசும், 5 ரொட்டிகள் தந்தவருக்கு 7 காசும் கொடுக்க வேண்டும் என்றார். இதைக் கேட்ட 3 ரொட்டி கொடுத்தவன் இது அநியாயம் என்றான். ஞானி சொன்னார், உன்னிடம் இருந்தது 3 ரொட்டிகள் அதை 3 ஆக பிரித்தால் மொத்தம் 9 துண்டுகள். அதில் 8 துண்டுகள் உன்னிடம் வந்து நீ உண்டாய். ஆக நீ தானம் அளித்தது ஒரு துண்டுதான் அதற்கு ஒரு காசு போதும். அவர் தானம் அளித்தது 7 துண்டுகள் அதற்கு 7 காசுகள் என்று கூறி அனைவரையும் சமாதனப்படுத்தி .இதுவே தர்மம் என்றார்.

&&&&&

வெள்ளிக்கிழமை, 18 May 2018 11:36

கடவுளை ஏன் வணங்க வேண்டும்!

ஓம்நமசிவய!

இயங்கிய ஞானக் குன்றே அரவக் கிண்கிணி ஆர்ப்பாய்
இலகக் கொம்பொன்றேந்தினோய் வஞ்சனை பலவும் தீர்ப்பாய்
அழகிய ஆனைக்கன்றே இளமத யாணை முகத்தாய்
இரகுபதி விக்கின விநாயகா அனந்தலோடாதியில் அடிதொழ அருளே

$$$$$

கடவுளை ஏன் வணங்க வேண்டும்!

நம்புவதற்காண காரணங்கள்!
புவியில் உலக உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நிறைய தேவைப்படுகின்றது. ஆனால் அவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருக்க வேண்டும். பூமி ஒரு நிரந்தர வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றது. இதை விடுத்து அதன் வேகத்தை கூட்டினாலும் குறைத்தாலும் புவியின் நிலையில் நிறைய மாற்றங்கள் எழும். இரவும் பகலும் நீண்டு அல்லது குறைந்து போய்விடும். மரம் செடி கொடிகள் எல்லாம் உஷ்ணத்தால் எரிந்தோ அல்லது குளிரால் உறைந்தோ போய்விடக்கூடும்.

சூரியனிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் புவியிருப்பதால் சூரியன் வெப்பத்தை அளவாக பூமிக்கு கொடுக்கின்றது. இப்போது புவிக்கு கிடைக்கும் உஷ்ணத்தில் பாதியளவிற்கு குறைந்தால் உயிர்கள் குளிரில் உறைந்துவிடும். இரண்டு மடங்கானால் எரிந்து சாம்பலாகிவிடும் புமியின் சாய்நிலையில் மாற்றம் கண்டால் கடல் நீராவி வேறு திசையில் பயணித்து கண்டங்களை பணிப் பிரதேசமாக மாற்றிவிடும்.. சந்திரனின் தூரம் இப்போது இருப்பதைவிட குறைந்தால் பிரமாண்ட அலை எழுச்சி ஏற்பட்டு அடிக்கடி கண்டங்கள் நீரில் மூழ்கி எழும். பூமியின் மேற்படலம் பருமன் குறைந்தால் உயிர்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காது. கடல் ஆழமானால் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் ஆக்ஸிஜனை கடல் இழுத்துக் கொள்ளும். ஆகாயம் மெலிந்து இருந்தால் விண்கற்கள் பூமியின்மீது மோதி தீ விபத்துக்களை உண்டாக்கும்

இந்த நிகழ்வுகள் நடக்காமல் அவை அவைகள் ஓர் நியதிக்குள் இயங்க வைக்கும் பெரியோனை அடியேன் நம்புகின்றேன்

உயிர் என்பது என்ன! அது எங்கே இருக்கின்றது. அதைக் கண்டு பிடித்தவர் யார்! அதற்கு எடையோ, பரிமாணமோ இருக்கின்றதா இல்லையே. ஆனால் அது ஐம்பூதங்களையும் வெல்லும் இயக்கும் சக்தி கொண்டுள்ளது. சிலை வடிக்கும் சிற்பியைப் போல் அனைத்து உயிரினங்களுக்கும் உடலை வெவ்வேறு வகையாகத் தருகின்றது. மரத்திற்கு மரம் இலையை விதவிதமாக வடிவமைக்கின்றது. மலர்களை வித வித வண்ணங்களாக தோன்றுவித்து பூமியை அழகு படுத்துகின்றது. பறவைகளுக்கு பலவித ஸ்வரங்களுடன் கூடிய குரலை அளித்து இன்னிசையை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு இனமும் அதன் பிரத்தியோக சைகை சமிக்ஞை ஒலிகளைப் பெற்றுள்ளது. உயிர்களுக்காக உற்பத்தியாகும் பொருள்களுக்கு சுவையை சேர்த்து விடுகின்றது. உயிர்கள் இயங்க ஆக்ஸிஜனை தாவரங்களிலிருந்து வெளிப்படுத்துகின்றது. இப்படி ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தனித் தன்மையுடன் விளங்கக் காரணம் கண்ணுக்குப் புலனாகாத நுண்ணிய செல்-அணு தன்னுள்ளே கொண்டுள்ள ஜெர்ம் என்பதே ஆகும். சகல ஜீவன்களுக்கும் உயிர் கொடுக்கும் இந்த செல் அணு எப்படி தோன்றியது. இயற்கை உயிரைப் படைக்க வில்லை. மலைகளும் மரம் செடி கொடிகளும் நீரும் கடலும் உயிரை தோற்றுவிக்க ஏதுவானதாயில்லாமல் இருக்க சிறந்த உயிரை புவியில் தோற்றுவித்த அந்த படைப்பாளி யார்!

பிராணிகளுக்கும் விலங்குகளுக்கும் ஒரு வித ஞானத்தை இயற்கைத் தூண்டுதலை புகட்டினவன் யார்.
சால்மன் என்ற ஒருவகை மீன் பலவருடங்கள் கடலில் வாழ்ந்துவிட்டு ஆற்றுக்கு திரும்பி வருகின்றது. கிளை நதி பிரியும் ஓர் இடந்தில் பிறந்த அது பல வருடங்களுக்குப்பின் அந்த இடத்திற்கு வந்து சேரும் ஞானம் அதற்கு கொடுத்தவன் யார்.
ஈல் என்ற நீர் பிராணிகள் வளர்ந்து முதிர்ச்சியடைந்ததும் கடலுக்குச் சென்று முட்டையிட்டு தன் இனம் வளர குஞ்சு பொறித்து இனவிருத்தி செய்து இறந்துவிடும். நீரைத் தவிர வேறொன்றும் அறியாத குஞ்சுகள் புறப்பட்டு பயணம் செய்து தன் பெற்றோர் வசித்த நீர் நிலைகளுக்கு வந்து சேரும் ஞானத்தை அளித்தவன் யார்! அவைகளுக்கு வழிகாட்டி யார்!
ஒரு வகை குளவிகள் முட்டையிட்டு அந்த இடத்தில் ஓர் வெட்டுக்கிளியை மூர்ச்சையடையும் அளவிற்கு கொட்டி வைத்துவிடும். வெட்டுக்கிளி சாகாது. ஆனால் மயக்க நிலையிலேயே இருக்கும். குளவியின் குஞ்சுகள் செத்த உயிரின் மாமிசம் ஒத்துக்கொள்ளாது என்பதால் உயிரோடு அவைகளுக்கு உண்ண மயக்க நிலையில் உள்ள வெட்டுக்கிளி. இந்த ஏற்பாடுகளை செய்த குளவி மீண்டும் தன் குஞ்சுகளைப் பார்க்க வருவதேயில்லை. எங்கோ சென்று அது இறந்து விடுகின்றது. இந்த ஞான அறிவை குளவிக்கு கொடுத்தவன் யார்!
கூட்டமாக பறக்கும் பறவைகள் அம்பின் முனைபோன்ற அமைப்பில் பறப்பது தான் மற்றொன்றுடன் மோதிவிடக்கூடாது என்பதற்காக! குருவிகள் கூடு கட்டியிருப்பதை நேர்த்தியான அந்தபின்னலை அவைகளுக்குச் சொல்லிக் கொடுத்தவர் யார்!

பிராணிகளுக்கு இருக்கும் இயற்கைத் தூண்டுதலைவிட மேலான திறம் கொண்ட சக்தி ஒன்று மனிதனுக்கு இருக்கிறது என்றால் அது காரண காரியங்களை ஆய்வு செய்யும் பகுத்தறிவாகும். வேறு எந்த பிராணிக்கும் இல்லாத இது எதனால்! இது எப்படி! என சிந்திக்கும் ஆற்றல் அளித்த அந்த பரம ஞான சக்தி யார்!

உயிர்களுக்கு ஆதாரனமானது ஜீன். சொல்லால் அளவிடமுடியாத அளவில் சிறியவையான இந்த ஜீன்கள் உயிர்களின் தனித் தன்மையை நிர்ணயிப்பது எப்படி! இதை இயக்கும் அந்த வல்லவன் யார்! உலக உயிர்களின் அனைத்து ஜீன்களையும் ஒன்று சேர்த்தால் ஓர் கட்டைவிரல் அளவிற்குத்தான் இருக்கும் என்கிறது விஞ்ஞானம். இவ்வளவு சிறிய ஜீன்களும் அதன் துணைகளான குரோமஸோம் செல்களும் ஒவ்வோர் உயிர் மூலத்துணுக்கில் இருந்து கொண்டு அந்தந்த உயிர்களின் அதாவது அனைத்து மனித, விலங்கு, பறவை, தாவரங்களின் குணாம்சங்களுக்கு மூல திறவுகோளாய் செயல்பட வைக்கும் அந்த அற்புதன் யார்.

இயற்கையில் சிக்கனத்தை பார்க்க முடியுமா! முடியும். நிர்வாக சிக்கனம் காணமுடியும். அவற்றை உருவாக்கியவன் யார்!
வேலியாக ஒரு வகைக் கள்ளிச் செடியை நட்டார்கள். இந்த கள்ளியை அழிக்கக்கூடிய பூச்சி வகைகளே அவ்விடத்தில் இல்லாததால் கள்ளி வளர்ந்து பரவி விட்டது. மக்கள் அப்பகுதியில் வாழமுடியா நிலைக்கு கள்ளி வளர்ந்தது. ஆராய்ச்சியாளர்கள் முயன்று அந்தக் கள்ளிச் செடிக்கு ஒரு மாற்றாக ஒரு பூச்சியைக் கண்டு பிடித்தனர். நாளடைவில் அந்தக் கள்ளியினம் அழிந்தது, கள்ளி இல்லாததால் அந்த பூச்சினமும் அழிந்தது. இது போன்ற தடைகளும் அதை சமன் செய்ய மாற்றுகளும் புவி எங்கும் நிறைந்துள்ளன.
அதி வேகமாக இனவிருத்தி செய்யும் பூச்சிகள் பெரிய அளவிற்கு வளர்வதில்லை. அவற்றிற்கு மனிதனைப் போல சுவாசப்பைகள் கிடையாது. குழாய் வழியே மூச்சை விடும். அவை வளரும் அளவிற்கு குழாய்கள் வளர்வதில்லை. இந்த வரம்பு அவற்றின் பெரிய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடுகின்றது. இல்லாவிடின் யானையைப் போல் ஒரு குளவி வளர்ந்தால் என்ன ஆவது! இந்த வரைமுறையை நிர்ணயித்த வலியவன் யார்!

மனிதனுக்குத்தான் கற்பனை வளம் உண்டு. இந்த கற்பனைச் சக்தியால் மனித உயிர்கள் கண்ணுக்குப் புலனாகாத பொருள்களுக்கெல்லாம் சான்று தேடி அந்த எல்லையற்ற காட்சியை காண்கின்றன. அதே சக்தி பக்குவமடைய அடைய பிரபஞ்சப் பொருள்கள் எல்லாவற்றிலும் ஓர் திட்டத்தையும் நோக்கத்தையும் காண்கின்றான். அப்போது ஓர் ஆன்மீக உண்மை அவனுக்கு புலப்படுகின்றது.

உயிர்கள் உண்ட உணவு எப்படி ஜீரணமாகின்றது. உணவிலிருந்து சக்திகள் எப்படி உடல் இயங்க உடலுக்கு கிடைக்கின்றது. மழை காற்று வெய்யில் குளிர் இதெல்லாம் எப்படி நடக்கின்றது என்பது கண்ணுக்குத் தெரியா உண்மைகள் என்றாலும் கண்ணுக்குத் தெரிந்த உடலே அந்த உயிரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை. நடந்த .நடக்கின்ற நடக்கப்போகின்ற எல்லாவற்றையும் கண்காணித்து அவ்வப்போது அந்தந்த சூழ்நிலைக்கேற்ப இயக்கங்களைச் செய்யும் அந்த அற்புத சக்தி எது!

மாகா சூட்சுமமான தந்திரமும் சிருஷ்டித் திறன் வாய்ந்த பரம் ஞானம் பெற்ற ஒன்றிலிருந்தே எல்லாம் தோன்றியிருக்க வேண்டும் இந்த அதிசய சிருஷ்டி சித்தாந்தத்தை வேறு எந்த விதமாக நினைக்க முடியும்.! அந்த சித்தாந்தபதி யார்!

பிரபஞ்சத்தை ஓர் நியதிக்குள் இயங்க வைக்கும் பெரியோனை, சித்தாந்தபதியை, அவற்றிற்கு வரைமுறையை நிர்ணயித்த வலியவனை, சிறந்த உயிரை புவியில் தோற்றுவித்த அந்த படைப்பாளியை. உயிர்களின் குணாம்சங்களுக்கு மூல திறவுகோளாய் செயல்பட வைக்கும் அந்த அற்புதனை, நிர்வாக சிக்கனத்தை உருவாக்கியவனை, உயிர்களுக்கு ஒரு வித ஞானத்தை இயற்கைத் தூண்டுதலை புகட்டினவனை, சிந்திக்கும் ஆற்றல் அளித்த அந்த பரம ஞான சக்தியான அவனை வணங்கி வழிபடுவதில் என்ன தவறு!
காரணங்களைச் சொல்லிவிட்டோம்! நம்புங்கள்! வழிபடுங்கள் இறைவனை-குருஜி

&&&&&

வியாழக்கிழமை, 17 May 2018 09:00

கட்டுரைகள்!

ஓம்நமசிவய!

ஓம் நாற்றிசை போற்றும் தலைவா போற்றி!
ஓம் நானற்றவிடமே நிற்பாய் போற்றி!
ஓம் அல்லல் களையும் அருளே போற்றி!
ஓம் எல்லாம் வல்ல இறைவா போற்றி!

&&&&&

கட்டுரைகள்!

கட்டுரை என்றால் ஒரு தலைப்பில் அந்த தலைப்பின் சிறப்புகள், அதைப் பற்றிய விளக்கங்களை உதாரணங்களுடன் மேற்கோள்களைக் காட்டி அந்த தலைப்பை படிப்பவர்கள் அந்த உரையை புரிந்துகொள்ளுமாறு அமைத்தல் கட்டுரை ஆகும். மேற்கோள்கள் அந்த தலைப்பை ஒட்டியவையாக இருக்க வேண்டும். இயற்கையாக நடந்த நிகழ்வுகளாகவும் இருக்கலாம். அதில் எடுத்துச் சொல்லும் வாதத்தின் திறமை தெரிய வேண்டும். புரியும் படியாகவும் அமைய வேண்டும். கட்டுரை என்றால் எடுத்த தலைப்பிற்கு ஏற்ற சொற்களாக இருத்தல் சிறப்பு- இங்கு எடுத்தாளப்பட்டிருக்கும் தலைப்புகள் ஆன்மீகம் மற்றும் வாழ்வியல் சம்பந்தப்பட்டவை. குருஜி

1.ஆனந்தபூக்கள்
2.இயற்கையின்நிகழ்வு
3.ஓம் (எ) பிராணவம்
4.கடவுள் உண்டா! எங்கே!
5.கடவுளை ஏன் வணங்க வேண்டும்!
6.கருவறை அதிசயம்!
7.சதுரகிரி அதிசயம்!
8.நீயே நவரத்தினம்
9.பெரிய கோவில்-அதிசயம்!

$$$$$

புதன்கிழமை, 16 May 2018 19:36

கடவுள் உண்டா! எங்கே!

ஓம்நமசிவய!
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

$$$$$

கடவுள் உண்டா! எங்கே!

கடவுள் உண்டா! எங்கே! பார்க்க முடியவில்லையே காட்டு பார்க்கலாம்! என்று வாதம் செய்வோரை என்ன வென்று சொல்வது. இந்த வாதம் அவர்களது அறியாமையை சொல்கின்றதாகும். ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்று தொல்காப்பியம் பகர்கின்றது. உலகம் அறிவு நிறைந்த ஆன்றோரைக் குறிப்பதாகும். அந்த ஆன்றோர்கள் உண்டு உண்டு என்பதை இல்லை என சொல்பவனை என்னவென்று அழைப்பது! மனநிலை சரியில்லாதவன் என ஒதுக்கவேண்டும் என்று வள்ளுவம் கூருகின்றது.

கடவுள்-கடவுகின்றவன், கடவுதல்-செலுத்துதல். உடம்பை உயிர் செலுத்துகின்றது. உயிரை கடவுள் செலுத்துகின்றார். உடம்பிற்குள்ளே உயிர். உயிருக்குள்ளே கடவுள், உயிருக்கு உயிராய் உள் நின்று உயிர்களைச் செலுத்துபவன் கடவுள். ’நீராயுருக்கி என் ஆருயிரய் நின்றானே’ என்றார் மாணிக்கவாசகர்.

ஒரு கார் ஓட்டுபவனின்றி எப்படிக் கார்த் தானே ஓடும். உலகம் ஓர் நியதிக்குள் வட்டமிட்டு இயங்குகின்றது. காலம் தவறாது சூரியனும் சந்திரனும் தோன்றி தோன்றி மறைகின்றது. நட்சத்திரங்கள் வானில் உலவுகின்றன. மழை பொழிந்து அருவியாகி நீர்வீழ்ச்சியாகி ஆறாகி கடலில் சங்கமிக்கின்றது. மரம் செடி கொடிகள் இலையுதிர்த்து மீண்டும் மீண்டும் தளிர்த்து பூத்துக் குலுங்குகின்றன. எல்லா உயிர்களும் காற்றை சுவாசித்து இயங்குகின்றன. உலகில் உலவும் ஜீவராசிகளின் உயிர் யார் கண்ணுக்காவது தெரிகின்றதா. எந்தவித குழப்பமும் இன்றி இயற்கை தன் விதிகளுக்கேற்ப செயல்களைச் செய்து கொண்டே இருக்கின்றது. இந்த விதிகளை நியமங்களை யார் உருவாக்கிக் கொடுதார்கள்.

ஓர் இயந்திரத்தை தயரித்தவன் அது இயங்கும் விதத்தை நிர்ணயிக்கின்றான். ஆனால் அது பழுதடைய வாய்புள்ளதாக இருக்கின்றது. ஒரு சின்ன இயந்திரத்தின் நிலை இப்படி என்றால் இவ்வளவு பெரிய அண்டங்களை உடைய பிரபஞ்சத்திற்கு நியமங்கள் செய்து கொடுத்தவன் மிகப் பெரிய சமர்த்தியசாலியாகவும். தேவர்களுக்குத் தேவனாகவும். எல்லையில்லா சர்வ வல்லமை கொண்டவனாகத்தான் இருக்க முடியும். அவன் எல்லா உயிர்க்கும் தெய்வம். யார் கண்ணுக்கும் தெரிய வில்லையாயினும் உலக உயிர்கள் இயக்கத்திற்கு தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருப்பவன். ஒப்பில்லா உயர்வான அவனை கடவுள் எனச் சொல்வதில் என்ன தவறு.

பிரமாண்டமான பிரபஞ்சத்தின் இயக்கத்தை நடத்துபவன் யார்! அந்த ஒருவன் அற்புதங்கள் செய்யும் கடவுளன்றி வேறு யாராக இருக்க முடியும். இந்த சாதாரண உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியாத ஒருவன் எப்படி சுயநினைவுகளுடன் இருக்கின்றான் எனச் சொல்வது!

தியானம்-தூக்கம்!
பக்திமான் ஒருவர் அரசமரத்தடியில் தியானத்தில் இருந்தார். அப்பக்கம் வந்த ஒரு படித்த இளைஞன் பெரியவரே ஏன் உட்கார்ந்து கொண்டு தூங்குகின்றீர். அரசமரத்து காற்றுதான் நன்கு வீசுகின்றதே நன்றாக நீட்டி படுத்து உறங்கலாம் அல்லவா என்றான். தம்பி நான் உறங்கவில்லை. கடவுளை தியானித்துக் கொண்டிருக்கின்றேன் என்றார். கடவுளை நீர் பார்த்திருக்கின்றீரா, கையால் தீண்டியிருக்கின்றீரா, அவர் குரலைக் காதால் கேட்டுள்ளீரா இப்படி எதற்கும் இல்லை என்று சொல்லும் அறிவற்ற மூட நம்பிக்கையுள்ளவரே! இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு அரிய நேரத்தை வீணடிக்கின்றீரே என்றான்.

கறுப்பா! சிவப்பா!
அப்போது அவன் கையில் ஒரு பாட்டில் இருக்கக் கண்டவர் தம்பி உன் கையில் இருப்பது என்ன என்றார்! தேன் என்றான். அது இனிக்குமா! கசக்குமா1 என்றார். கோபங்கொண்ட அவன் உமக்கு தேன் தித்திக்கும் என்பது கூடதெரியாதா என்றான். தம்பி அது இருக்கட்டும் நீ தித்திக்கும் எனக் கூறியது கறுப்பா சிவப்பா என்றார். அவன் திகைத்தான். தித்திப்பு என்பதை என்ன நிறமென்று சொல்வது. குழம்பினான். தேனின் இனிமையை கண்டவனுக்குத் தெரியாது. அதை உண்டவனுக்குத்தான் தெரியும் என்றான்.

பௌதிகப் பொருளான தேனின் இனிமையை உண்டவனுக்குத்தான் தெரியும் என்று புரிந்த நீ ஞானப் பொருளை அனுபவத்தால்தான் உணரமுடியும் என்பதை நீ புரிந்து கொள்ள வில்லையே என்று அன்புடன் கூறினார். இதையே திருமூலர்,
தேனுக்குள் இன்பம் கறுப்போ! சிவப்போ!
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருத்தாற்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே! என்றார்.

இதைக் கேட்ட இளைஞன் எனக்கு பசிக்கின்றது சாப்பிட்டுவிட்டு வந்து உங்களுடன் பேசுகின்றேன் என்றான். பெரியவர் தம்பி பசி என்று சொன்னாயே அதைக் கண்ணால் கண்டிருக்கின்றாயா! காதால் கேட்டிருக்கின்றாயா! அல்லது அதைத் தொட்டுத்தான் உணர்ந்திருக்கின்றாயா! இப்படி ஏதுமில்லை என்றபோது நீ பசி பசி என்று சொல்லி எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றாய் என்று ஏன் சொல்லக் கூடாது. இப்போது புரிகின்றதா தம்பி. பசி என்பது ஓர் அனுபவப் பொருள் அதை உணரத்தான் முடியும். அதுபோன்றே இறையையும் அவரது செயலையும் அனுபவத்தால்தான் உணரமுடியும் என்றார். அடியேன் தவம் செய்து அதை அந்த அநுபவப் பொருளை உணர முயல்கின்றேன் என்றார்.

சிவம் இல்லையேல் சவம்!

இளைஞனுக்கு பெரியவர் கூறுவதில் ஏதோ இருப்பதாக நினைத்தான் ஆனால் அதன் உண்மை புரியவில்லை. ஐயா, என்னைப் பொருத்தவரையில் நீங்கள் சொல்லும் கடவுளைக் கண்ணால் கண்டால்தான் ஒப்புக் கொள்வேன் என்றான். அப்போது அடியவர் தம்பி, 64 அடி நீளமுள்ள இரு பக்க சுவரில் பக்கத்திற்கு நான்கு ஜன்னல்கள். அதன் மேல் கூரை வேய்ந்தால் அதனைக் கூடமென்றோ அல்லது உபயோகத்திற்கு ஏற்றவாறு பெயர் பெரும். அப்படி மேற்கூரை இல்லாமலிருந்தால் அது குட்டிச் சுவர் எனப்படும். 64 அடி நீளமுள்ள ஓர் இடம் சிறுமை பெற்று குட்டிச் சுவர் என பழியடைந்தது. இதனால் அந்த இடத்திற்கு சுவர்களால் பெறுமை இல்லை. மேயே வேயப்பட்ட கூரையினால்தான் பெறுமை என்பது புரிகின்றதா என்றார்,

சிவம் என்றால் பெருமை அடையும் இச்சொல் சிவத்திலுள்ள சி-ன் கொம்பு எழுத்தை அழித்துவிட்டுப் பார்த்தால் சவம் என்றாகும். ஒரு கோடே இங்கே பெருமையாகின்றது. அக்கோடில்லாமல் அச்சொல் சவமாகி சிறுமை அடைகின்றது. உயிர்களின் உடம்பில் சிவம் இருந்தால் அது உடல் ஆன்மா எல்லாம். அஃதில்லையெனில் அது உயிரற்ற ஆன்மா இல்லாத சவம்.

குருவருள்! திருவருள்!

இளைஞனே! நீ படித்தவன். அறிவாளி. நீ உன் உடலை முழுமையாகப் பார்த்திருக்கின்றாயா என்றார். பார்த்திருக்கின்றேன் என்றான். தம்பி நீ சொல்வது தவறு! உன் கண்ணால் உன்னை முழுவதும் பார்க்க முடியாது. நீ உன் முகத்தைப் பார்த்திருக்கின்றாயா! உன் முதுகைப் பார்த்திருக்கின்றாயா! உன் ஸ்தூல உடலின் உருப்புக்களைப் பார்த்திருக்கின்றாயா. இரத்த நாளங்களைப் பார்த்திருக்கின்றாயா! இல்லையே! அப்படியென்றால் நீ சொன்னது சரியில்லைதானே! என்றார். குழம்பி நின்ற இளைஞனை நோக்கிய அடியவர், தம்பி! நீ உன் உருவை முழுவதும் பார்க்க முன்னும் பின்னும் இரு நிலைக் கண்ணாடிகள் தேவை அப்போதுதான் உன் உருவத்தை முழுமையாக கண்ணாடிமூலம் நீ பார்த்துக் களிக்கலாம் என்றார் அன்புடன். இதை ஒப்புக் கொண்டான் இளைஞன்.

உடலைப் பார்க்க இரு கண்ணாடிகளின் உதவி தேவை போன்றே கடவுளைக் காண வேதாகமத்தில் விளைந்த குருவருள் மற்றும் திருவருள் என்ற இரண்டும் வேண்டும். இவைகள் கடைகளில் கிடைப்பதன்று. இறைவனின் திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதைக் குருவருள் கொண்டுதான் அடைய முயல வேண்டும். பருத்தி பஞ்சு அக்னியில் எரிவது. அதை அக்னி நட்சத்திர வெய்யிலில் வைத்தால் தீ பற்றாது. அங்கு தீ உண்டாக சூரிய ஒளியைக் குவிக்கும் சக்தியாக ஒரு கண்ணாடி தேவைப்படும். அதுபோன்றே இறையருளை குவித்து உயிர்களுக்கு வழங்க ஒரு குரு கண்டிப்பாகத் தேவை. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் இறைவன் எனப் பெயர் பெற்றது. அந்தக் கடவுளை காணும் வழியைக் காண்பதுதான் அறிவுடமை. அதை விடுத்து நான் என்ற அகந்தையில் முரட்டுப் பிடிவாதமாகப் பேசுவது நீ கற்ற கல்விக்கு உகந்தது அல்ல. அது அறிவுடைமயும் ஆகாதது.

மெய்ப்பொருள் காண்பதறிவு!

எப்பொருளை எப்படி அறிய வேண்டுமோ அப்படித்தான் அறிய வேண்டும். நறுமணத்தை நாசியினாலும் இனிய ஒலியை செவியாலும் உணர்தல் வேண்டும். அதை விடுத்து மணத்தை செவியாலும் ஒலியை நாசியாலும் அறிய முற்படுதல் முட்டாள் தனத்தின் எல்லை! சுவையை-நாவினாலும், ஒளியை-கண்ணாலும், ஊறு என்பதை உடலாலும், ஓசை என்பதை செவியாலும், நாற்றம் என்பதை நாசியாலும் உணர்தலே ஐம்புலன்களின் இயற்கை நியதி. பிரபஞ்சத்தின் அதிபதி கடவுள் என்றாலும் இந்த ஐம்புலன்களால் அவரை அறிய முற்படுவது அறிவன்று.

மனத்தாலும், நூலறிவாலும் ஆண்டவனை அறிய முடியாது. அனுபவத்தால் உண்டான மெய்யுணர்வு என்ற அறிவாலேயே அறியப்படுதல் சிறப்பு. இதைத்தான் ‘வாசித்து காணாது’ ‘அறிவாலறிந்துன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவேனே” என்றார் அருணகிரியார்.

தொலைவில் இருக்கும் பொருள் கண்ணுக்குத் தெரியாது. தொட்டபெட்டா சிகரத்தின் மேலிருந்து பார்த்தால் மேட்டுப்பாளையம் தெரியும். கோயமுத்தூர் தெரியாது. அதற்காக கோயமுத்தூர் தெரியவில்லை. கோயமுத்தூர் என்று ஒன்று இல்லை என்று சொல்லிவிட முடியுமா! ஒரு பொருளை கண்ணுக்கருகில் வைத்தாலும் தெரியாது. தொலைவில் இருந்தாலும் தெரியாது. திரைக்கு அப்பால் உள்ளதும் தெரியாது. பெரிய பொருளின் அருகில் சிறிய பொருள் தெரியாது. அதிக ஒளியில் சிறிய ஒளி வெளிச்சம் பெறாது. பாலில் கரைந்த சக்கரையும், நீரில் கலந்த உப்பும் மறைந்துவிடும். சுவைத்தால் தான் உணரமுடியும். மிக நுட்பமான பொருள்கள் புலப்படாது, உயிர்களிடமுள்ள அன்பும் அறிவும் செயல்படும் போதுமட்டுமே உணரமுடியும்.

இவைகளைப் போன்றே இறைவன் மெய்யுணர்வுக்கு மட்டுமே புலனாவார். அப்படி உணர்ந்தவர்கள் இந்த உணர்வு தன்மையால் சொல்லமுடியா நிலையில் இருப்பர். ‘உலகெலாமுணர்ந் தோதற் கரியவன்’ என்கிறார் சேக்கிழார் பெருமான். ’முகத்தில் கண்கொண்டு காணும் மூடர்காள் அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்’, ஒருவன் அறிவாளி என்றால் அவர் முன்னோர்களும் அறிவாளியாகத்தான் இருந்திருப்பர். ஒரு மூடர் பரம்பரையில் அறிவாளி ஜெனிக்க முடியாது. நன் முன்னோர்கள் பேரறிவு கொண்டவர்கள். அவர்கள் சொன்னதை நம்ப வேண்டும். ’கண்டேன் அவர் திருபாதம், கண்டறியாதன கண்டேன்’ என்றார் அப்பர் சுவாமிகள்.

இந்த விளக்கங்களைக் கேட்ட இளைஞன், ஐயனே நான் இதுகாறும் இறையறிவை பெற்றேனில்லை. என் அறியாமையால் தங்களிடம் பலவாறாகப் பேசிவிட்டேன். என்னை மன்னித்து என் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அருளுமாறு வேண்டினான்.

கடவுள் அறிவு வடிவமானவர் என்றால் அவரை கோவில்களில் கல்லாலும் உலோகங்களாலும் ஆன சிலைகளாக வைத்து வணங்குவது ஏன்! கல்லும் செம்பும் கடவுளாகுமா! பலர் வீடின்றி தவிக்க ஊரில் பாதி இடத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது இது சரியா! சிலைகளுக்கு விலை மதிக்க முடியாத அணிகலன்கள் எதற்கு! ஆடம்பரத் தேர்த் திருவிழாக்கள் எதற்கு!

பரந்த நோக்கம்!

தம்பி, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் யாதிரிகர்களுக்கு உபயோகம் ஆகுமிடத்தை வீட்டு மனைகளாகப் பிரித்துக் கொடுத்தால் ஒரு சிலரே அதன் உரிமையாளர் ஆகி விடுவர். தினமும் ஆயிரக்கணக்காணவர்களுக்கு பயன் படுதல் எப்படி, ஒரு சிலருக்குச் சொந்தம் என்பது எப்படி! இதில் எது சிறந்தது நீயே முடிவு கொள்! ஒரு சிலருக்கு என்பது பறந்த நோக்கமாகாது என்பதாலேயே அக்கலத்தில் மன்னர்கள் பலரும் பயனடைய வேண்டும் என்ற பொது நோக்கில் விரிவாக ஆலயங்களைக் கட்டியுள்ளனர்.

மன்னர்களும் செல்வந்தர்களும் தனவான்களும் தங்களிடமிருந்த ஆடை ஆபரணங்களை தங்கள் உறவுக்கு அணிவித்து அழகு பார்த்தனர். அவ்வாறு அவர்கள் பார்த்த அழகை மற்றவர்கள் பார்ப்பது முறையன்று. ஆனால் அழகை எல்லோரும் ரசித்து பயனடைய வேண்டும் என்பதால் மன்னர்கள் தங்களிடமிருந்த விலையுயர்ந்த ஆடை அணிகலன்களை இறை உருவங்களுக்கு சார்த்தி அனைத்து உயிர்களும் அதைக் கண்டு களித்து ஆனந்தப்பட விரும்பி விலைமதிக்கமுடியாத அணிகலன்களை அர்ப்பணித்தார்கள்.

படித்தவன் எழுத்து என்பதை படிக்காதவன் கோடு என்பான். எழுத்தை உச்சரித்து அதன் ஒலியை கேட்கின்றான் படித்தவன். கல்லாலும் செம்பாலும் செய்த இறை உருவங்களின் மூலம் அடியார்களும், தவசிகளும் ஞானியர்களும் பக்திமான்களும் பரம்பொருளான இறைவனைக் காண்கின்றார்கள் மற்றவர்கள் கல்லாதவன் கோடு என்பதுபோல் அவற்றைக் கற்சிலை, உலோகச் சிலை என்பர்..

ஒரு விழா என்றால் அதில் பல்வகைத் தொழிலாளர்களின் உழைப்பு இருக்கும் அதற்கு கூலியாக அவர்களுக்கு கிடைக்கும் பணம் அவர்கள் இல்லறத்திற்கு சிறிதளவேனும் பயன்படும். அந்த ஊர் மக்களும் சுற்றுப்புற ஊர் மக்களும் அந்த திருவிழாவில் கலந்துகொண்டு களித்து இன்பமடைகின்றனர். முன்னோர்கள் அன்பு கொண்டு இதுபோன்ற திருவிழாக்களை ஏற்படுத்தியுள்ளது ஒரு பயனுள்ள திட்டமே.

நம்பித்தான் ஆகவேண்டும்!

ஒருவன் மாலை நேரத்தில் ஆற்றங்கரையில் ஒய்விற்காக நடந்து சென்று இயற்கையை ரசித்தான். ஆற்றில் நீரில்லை. வரண்டிருந்த்து. அடுத்த நாளும் இயற்கையை ரசிக்கச் சென்றவன் ஆச்சரியப்பட்டான். ஆற்றில் நீர் நொப்பும் நுரையுமாக ஓடிக்கொண்டிருந்தது. மேற்கே மழை. அதனால் ஆற்றில் வெள்ளம் என அவனைக் கடந்தசென்ற ஒருவர் சொல்லிச் சென்றார், இவன் கண்டது வெள்ளம். காணாதது மழை. நம்பித்தான் ஆக வேண்டும். கண்ட வெள்ளத்தைக் கொண்டு காணாத மழையை நம்ப வேண்டும்.. உலகில் காணும் இயற்கையின் செயல்களிலிருந்து நாம் இதுகாறும் காணத இறையை அளவிடத்தான் வேண்டும்.

காலத்தில் இலைகள் உதிர்ந்து மீண்டும் தளிர்கின்றன. பூ பூத்துக் காய்கின்றன. பனி கொட்டுகின்றது. குளிர் வந்து போகின்றது. வெய்யில் வெம்மை காட்டுகின்றது. மழை பெய்கின்றது. தென்றல் வீசுகின்றது. இயற்கையின் இந்த விலையாட்டுகளுக்குச் சொந்தக்காரன் யார். யார் இந்த விளையாட்டை புவியில் நிகழ்த்துபவன். காணும் ஒன்றிலிருந்து ஓர் அளவைக் கொண்டு காண ஒன்றை நிர்ணயித்து உணர்ந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

பௌர்ணமி நாளில் ஒருவன் கோவிலுக்குப் போகின்றான். ஒருவன் ஒருவனைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றான். ஒருவன் தன் வாழ்வில் முன்னேற வழி என்ன என்று யோசனையிலிருக்கின்றான். இது போன்ற பல்லாயிரக்கணக்காண நிகழ்வுகள் செயல்கள் அந்த பௌர்ணமி நாளில் நடந்து கொண்டிருப்பதால் அந்த செயல்களின் நன்மை தீமைகளுக்கு அந்த நாள் எப்படி பொறுப்பாகும். ஒவ்வொரு நிகழ் செயலும் அந்தந்த உயிர்களின் ஆன்மாக்களையே சாரும் என்பதை உணர்வாய்! என  ஆசீர்வதித்தார்.!

வாழ்க்கையில் உயிர்கள் நம்பிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும். அந்த ஜீவ யாத்திரைக்கு ஆன்றோர்கள் எழுதிய அறிவு நூல்கள், உயிர்களுக்கு வழி காட்டுகின்றன.. எங்குமாய், எல்லாமுமாய் அறிவு வடிவாய் கருணையுடன் விளங்கும் இறைவனை சித்தித்து ஆன்ம லாபம் பெற்று அனைத்து உயிர்களும் ஆனந்தத்துடன் வாழ்வாங்கு வாழ ஆசீர்வாதிக்கும் அடியேன்.-குருஜி

$$$$$

ஞாயிற்றுக்கிழமை, 13 May 2018 19:54

சிவ லிங்கங்கள்!

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

&&&&&

சிவலிங்கங்கள்!

சிவ பக்தர்கள், அடியார்கள் அனைவரும் ‘ஓம் நமசிவய’ என நெக்குருகி பிரார்த்திக்கும்போது அந்த உயிர்கள் நினைவில் இருப்பது ஈசனின் லிங்க ரூபம்தான். பிரம்மனுக்கும் மகா விஷ்ணுவிற்கும் தங்களிடையே யார் பெரியவர் என்ற போட்டி எழுந்த போது அவர்கள் நடுவே அக்னி பிளம்பாக சிவபெருமான் தோன்றினார். அதுதான் இறைவன் எடுத்த முதல் வடிவம். லிங்க வடிவம். அது முதல் லிங்கோத்பவம்- லிங்கம் தோன்றுதல் உண்டாயிற்று. அன்று முதல் சிவபெருமான் லிங்க உருவிலேயே வழி படப்பட்டு வருகின்றார். அந்த வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் பலவகையாக பகுக்கப் பட்டிருக்கின்றன.

பொதுவாக இலிங்கங்கள் ஆறுவகை.

அண்டலிங்கம்- அண்டம்- உருண்டையாக இருப்பதால் உலகம் அண்டம் எனப்பட்டது. எழுத்து, பதம், மந்திரம், தத்துவம், புவனம், கலை ஆகிய ஆறும் உயிர்களின் இன்ப துன்ப நுகர்ச்சிக்கும் முக்திக்கும் வழியாக இருக்கும் இவைகள் அத்துவாக்கள் எனப்பட்டது. இந்த அத்துவாக்களை லிங்கத்தின் பகுதிகளாக கருதி வழிபடுவது அகண்டலிங்க வழிபாடு.

பிண்டலிங்கம்-அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது. எனவே மேலே கூறிய ஆறு அத்துவாக்களும் மனித உடலில் உள்ளபடியால் உடலின் உள்ள ஆறு ஆதாரங்களில் அவற்றை நினைந்து வழிபடும் அகவழிபாடு பிண்டலிங்க வழிபாடு ஆகும்.

சதாசிவலிங்கம்- இறைவனின் சத்யோஜாதம்-படைத்தல், வாமதேவம்-காத்தல், தத்புருஷம்-மறைத்தல், அகோரரூபம்-அழித்தல்(ஒடுக்கம்), ஈசானம்-அருளல் ஆகிய ஐந்து பஞ்சபிரம மந்திரங்கள் வடிவமாக கொண்டுள்ளது. இம்மந்திரங்கள் அருவமாய் ஓர் உடல் இரு திருவடி 5 திருமுகங்கள், 10 திருக்கரங்கள், 15 திருக்கண்கள், உடைய சதாசிவ திருமேனியில் பதிவு பெறுவதால் அந்நிலையில் வழிபாடு செய்வதால் சதாசிவலிங்கம் அருவுருவமானது.

ஆன்மலிங்கம்- அண்டம், பிண்டம், சதாசிவம் போன்று மும்மலங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு தூயதாய் நிற்கும் உயிர் சிவனாகும். இது ஆன்ம லிங்கம் என்றாகும். சிவயோகியர் வழிபடுதலுக்குரியது..

ஞானலிங்கம்- ஞானமே உருவான சக்தியும், சிவனும் ஒன்றித்து ஒருவரை மற்றவர் பிரியாது நின்று உயிர்களுக்குச் சிவஞானத்தை நல்கும் நிலையை உணர்த்துவது ஞானலிங்கம். சிவனின் பதமாகிய ’சி’ காரத்தை முன் நிற்குமாறு சொல்லி பின்னர் பார்வதியின் பதமாகிய ‘வ’ காரத்தைச் சொல்லி ‘சிவ’ எனும் மகாகாரணத்தின் உண்மையை உணர்ந்து அது உணர்த்தும் ஞான நிலையில் செபித்தால் ஞான லிங்கம் வேளிப்பட்டு பேரோளியாய் காட்சியளிக்கும். சிவ ஞானிகள் வழிபாட்டுக்குரியது.

சிவலிங்கம்- பரமசிவம் எனும் இந்த லிங்கம் சிவன், சக்தி, பரநாதம், பரவிந்து, சதாசிவன், மகேசன், உருத்திரன், மால், அயன் என்ற ஒன்பது வடிவங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. சிவலிங்கம் பேரானந்தத்தை அனுபவிக்குமாறு அருள்பாலிப்பது மட்டுமல்லாமல் ,இஃது அன்றும் இன்றும் என்றும் அருள் பாலிப்பது என்றும் இதுவே அயன் முதல் சிவன் வரையுள்ள ஒன்பது வடிவங்களுக்கும் முதலாவது என திருமூலர் கூறியுள்ளார். அதி தீவிர பக்குவம் அடைந்த சிவ ஞானிகளுக்கு காட்சியளித்து சிவானந்தத்தை தரும். சிவலிங்கம் இருவகைப்படும்.

1.சலலிங்கம்
(சலம்- புடை பெயர்வது) மண், கல், பொன், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களாலும், சந்தனம், வன்னி முதலிய மரங்களாலும் செய்யப்படுபவை. அவைகள்-
1.ஆயஸ்காந்த லிங்கம்-காந்தத்தால் உருவான லிங்கம் சித்தர்கள் வழிபடுவது. அஷ்டமா சித்திகளை அளிக்க வல்லது.
2.மௌகித்த லிங்கம்-முத்துக்களை எரித்த சம்பலிலிருந்து உருவாக்கப்பட்டது. மங்களமும் செல்வமும் அருளும் தன்மை கொண்டது.
3.ஸ்வர்ண லிங்கம்-தங்கத்தால் உருவானது. முக்தி அளித்து பிறவா நிலைக்கு உயர்த்தும்.
4.ரஜத லிங்கம்- வெள்ளியால் செய்யப்பட்டது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
5.பித்தலா லிங்கம்-பித்தளையால் செய்யப்பட்டது. பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வது போன்ற பயமில்லா மரணத்தை தரும்.
6.திராபு லிங்கம்-தகரத்தால் செய்யப்படுவது. எதிரிகள் இல்லாமல் செய்யும்.
7.ஆயச லிங்கம்- கந்தக அமிலத்தால் செய்யப்படும் எதிரிகளின் தொல்லையை அழிக்கும்.
8.சீசா லிங்கம்-வெள்ளீயத்தால் செய்யப்படுவது. எதிரிகள் நெருங்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.
9.அஷ்டதாது லிங்கம்-எட்டு வகையான தாதுக்களால் உருவானது. சித்தி அளிக்கக் கூடியது.
10.அஷ்டலோக லிங்கம்-எட்டு வகை உலோகங்களால் செய்யப்படுவது. தொழுநோய் குணமாகும்.
11.வைடூர்ய லிங்கம்- வைடூரியத்தால் உருவான லிங்கம். எதிரிகளின் எதிர்பாரா தாக்குதல்களின்று காப்பாற்றும்.
12.பாதரச லிங்கம்- பாதரசத்தால் ஆனது. அளவிட முடியாத செல்வத்தைக் கொடுக்கும்.
13.ஸ்படிக லிங்கம்- ஸ்படிகத்தால் ஆனது. எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்.

2. அசலலிங்கம்
(அசலம்- புடை பெயராதது)-.அவைகள்
1.சுயம்பு லிங்கம்-தானாகவே இறைவன் விரும்பிய இடத்தில் தோன்றிய லிங்கம்
2.தெய்வீக லிங்கம்-தேவர்களால் பூஜிக்கப்பட்டு பூமிக்கு வந்த லிங்கம்.
3.அர்ஷ/ஆரிடலிங்கம்-ரிஷிகளும், முனிவர்களும் தங்கள் வழிபாட்டிற்கென உருவாக்கிய லிங்கம்,
4.காணலிங்கம்- கணபதி, முருகன் முதலான தேவகணங்களால் நிறுவப்பட்டு பூசை செய்யப்பட்டு வருபவை.
5.அசுரலிங்கம்- அசுரர்களால் நிறுவப்பட்டவை.
6.சுரலிங்கம்- தேவர்களால் நிறுவப்பட்டு வழிபட்டது.
7.பாண லிங்கம்- பாணாசுரன் நிறுவி வழிபட்டது. இது சுயம்பு லிங்கத்திற்கு இனையானவை.-காமிக ஆகமம்.
8.மனுஷ்ய லிங்கம்-சாதாரண மனிதர்களால் உருவாக்கப் பட்ட லிங்கம். இந்தவகை லிங்கங்கள் பீடத்தின் அளவு, பாணத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேலும் பலவகையாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
8.1.வர்த்தமான லிங்கம்- பிரம்ம பாகமும் விஷ்ணு பாகமும் ஒரே அளவில் இருந்து ருத்ரபாகம் அதைப் போல் இரு மடங்கு இருப்பதாகும். வழிபடுவோருக்கு முக்தி அளிக்கவல்லது.
8.2.ஆத்ய லிங்கம்—மூன்று பாகங்களும் சம்மான அளவில் இருக்கும். இந்த வகை லிங்கங்களில் 1.புண்டரீக லிங்கம்-வழிபட்டால் பெரும் புகழ் கிட்டும், 2.விசாலா லிங்கம்- வழிபட்டால் பெரும் பொருள் கிட்டும், 3.ஸ்ரீவத்சா லிங்கம்- வழிபட்டால் எல்லா வளங்களும் கிட்டும், 4.சத்ருமர்த்தனா லிங்கம்- வழிபட்டால் எல்லாவற்றிலும் வெற்றி தரும்.
8.3.முகலிங்கம்- முகங்களின் அடிப்படையில் ஏக லிங்கம்- ஒரு முகம், சதுர்முக லிங்கம்- நான்கு முகங்கள் (தத் புருஷ, அகோர, சத்யேஜாத, வாமதேவ), பஞ்சமுக லிங்கம்- ஈசனின் ஐந்து முகங்கள் தத் புருஷ, அகோர, சத்யேஜாத, வாமதேவ, ஈசானம் கொண்டது.
8.4.பஞ்ச பூத லிங்கம்- ப்ரித்வி-பூமி லிங்கம், வாயு லிங்கம் ஜல லிங்கம், ஆகாச லிங்கம், அக்னி லிங்கம்,
8.5.ஷணிக லிங்கம்- தற்கால வழிபாட்டில் பயன்படுத்துவது நீண்ட பயணம் செல்பவர்கள் தனகளுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கங்களே ஷணிக லிங்கம். இந்தவகை லிங்கங்கள் மலர், சந்தனம், விபூதி, அன்னம் ஆகியவை கொண்டு உருவாக்கப்படும் போது அவைகள் உருவக்கப்படும் பொருட்களுக்கேற்றவாறு பெயர் பெறும். பூஜை முடிந்தபின் அவைகள் கரைக்கப்படும்.
1.கந்த லிங்கம்-சந்தனம், குங்குமம், கஸ்தூரி கலந்து உருவாக்கப்படும்.-வழிபடுவதால் சிவ சாயுஜ்ய மோட்சம்-பிறப்பில்ல நிலை சித்திக்கும்.
2.புஷ்ப லிங்கம்- பலநிறம் கொண்ட வாசனையுள்ள அழகிய மலர்களால் உருவாக்கப்படுவது. நில சம்பந்தமான பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் சேரும்.
3.கோசாக்ரு லிங்கம்- பழுப்பு நிறத்தில் உள்ள பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும்- வணங்கினால் வளம் பெருகும்.
4.வாலுக லிங்கம்-சுத்தமான மணல் கொண்டு உருவாக்கப்படுவது. வணங்கினால் கல்வியும் ஞானமும் உண்டாகும்.
5.யவா கோதுமா சாலிஜ்ஜ லிங்கம்- சோளம், கோதுமை போன்ற மாவினால் உருவாக்கப் படுபவை- இது குழந்தை பேற்றைத் தரும்.
6.சீதாகண்ட லிங்கம்-இனிப்புவகைகளால் உருவாக்கப்படுவது- நல்ல உடல் ஆரோக்கியத்தை தரவல்லது.
7.திலாப்சிஷ்த லிங்கம்- எள்ளை அரைத்து செய்வது- எல்லா ஆசைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்வது.
8.பாம்ச லிங்கம்-சாம்பல் கொண்டு செய்வது. எல்ல நற்குணத்தையும் அருளும்.
9.கூட / சீதா லிங்கம்-வெல்லத்தால் செய்யப்படுவது- இது மன நிம்மதியைத் தரும்.
10.வன்சங்குர லிங்கம்- மென்மையான மூங்கில் இலைகளால் ஆனது- வழிபடுவோருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுள்.
11.லவண லிங்கம்- உப்பு, மஞ்சள், திரிகடுகம் சேர்ந்து செய்வது- மற்றவர்களை வசீகரிக்கும் சக்தி அருளும்.
12.பிஷ்டா லிங்கம்- அரிசி மாவினால் செய்வது- நல்ல கல்வியைத் தரும்.
13.ததிதுக்த லிங்கம்-பால், தயிரிலிருந்து முழுவதும் நீரை நீக்கி செய்வது. மனமகிழ்ச்சியையும் வளங்களும் அருளும் தன்மை கொண்டது.
14.தான்ய லிங்கம்-நவதான்யங்களால் உருவாக்கப்படுவது- விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலைத் தரும்.
15.பழ லிங்கம்-பலவகையான பழங்களால் உருவாக்கப் படுவது. பழதோட்டம் வைத்திருப்போருக்கு நல்ல பலன்.
16.தாத்ரி லிங்கம்- நெல்லிக்காயைக் கொண்டு உருவாக்கப்படும்- கஷ்டப்படு பவர்களுக்கு அந்த வாழ்விலிருந்து விடுதலை.
17.நவநீத லிங்கம்-வெண்ணெய்யால் உருவானது. பணமும் புகலும் சேரும்.
18.கரிக லிங்கம்-விசேஷவகைப் புல்லால் உருவாக்கப்படும்- துர்மரணத்தை தடுக்கும்.
19.கற்பூர லிங்கம்- கற்பூரம் கொண்டு உருவக்கப் படுகின்றது- சிறந்த ஞானத்தை தந்து மாயையை அழிக்கும்.

புராணங்களில் இந்திரன் மணிமாய லிங்கத்தையும், சூரியன் தாம்ரமய லிங்கத்தையும், சந்திரன் முக்தி லிங்கத்தையும்(முத்துக்களால் ஆனது) ,குபேரன் ஹேம லிங்கம் எனும் தங்கத்தால் ஆன லிங்கத்தையும் அணிந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

அன்பான உயிர்களே நீங்களும் உங்கள் வசதி சூழ்நிலைக்கேற்ப லிங்கங்கள் செய்து அணிந்து கொள்ளுங்கள். பிரதிஷ்டை செய்து வழிபட்டு வளமுடன் வழ்க என வாழ்த்தும் குருஜி.

&&&&&

திங்கட்கிழமை, 07 May 2018 10:14

பங்குனி மாத விரதங்கள்!

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

&&&&&

பங்குனி மாத விரதங்கள்!

பங்குனி பௌர்ணமி- பங்குனியில் பளிங்குகல் லிங்கம் வழிபாடு சிறப்பு பகல் உபவாசமிருந்து சிவபூஜை செய்து இரவில் சாமை உணவு உண்ணுதல்.

பங்குனி உத்திரம் - எல்லாப் பௌர்ணமிகளுமே சிறப்பு வாய்ந்தவை. தமிழ் மாதங்கள் பன்னிரண்டிலும் ஒவ்வொரு மாதமும் முழுநிலவு நாள் குறிப்பிட்ட நட்சத்திரத்தை ஒட்டியே அமையும். பங்குனியில் வரும் பௌர்ணமி உத்திர நட்சத்திரத்தில் வருவதால் பங்குனி உத்திரம் எனப்படும். அன்று சூரியனது வெப்பம் அதிமாகவும் சந்திரனின் குளிர்ச்சியும் அதிகமாகவும் இருக்கும். சந்திரன் தன் 64 கலைகளையும் பொழிந்து காட்சியளிக்கும் நாள் பங்குனி உத்திரம். ஜோதிடரீதியாக ஆரோக்யகாரகனாகிய சூரியனும், மனோகாரகனான சந்திரனும் சம பலத்துடன் அமைவதால் உடலுக்கும் மனதிற்கும் அன்றைய தினம் வலிமை அளிக்கக்கூடிய நாள.

பங்குனி உத்திரம் விரதம்- அதிகாலை எழுந்து இஷ்ட தெய்வத்தை நினைத்து நீராடி நெற்றியில் இட்டுக்கொண்டு வீட்டில் உள்ள கடவுள்களின் படங்களுக்கு பூமாலை அல்லது மலர்கள் அணிவித்து அந்தந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை அல்லது துதியை அல்லது தெய்வத்தின் திருநாமத்தை மனதார உச்சரிக்க வேண்டும். பொதுவாக சிவ-பார்வதி, முருகன்-வள்ளி-தெய்வானை படத்தை வைத்து வழிபடவும். காலையில் பால் பழங்கள் சிறிதளவு உண்டு மதியம் எதுவும் உண்ணாமல் இருத்தல் நலம். உடல் நலம் இல்லாதவர்கள் பாலன்னம் சிரிதளவு உண்ணலாம். தயிர், மோர் சேர்த்தக் கூடாது. பின் கோவிலுக்குச் சென்று உற்சவங்கள் ஆராதனை அபிஷேகங்களில் பங்கேற்க வேண்டும். முடிந்த அளவு தானங்கள் செய்யவும். இரவு கோவில் பிரசாதத்தை உண்ணலாம். மறுநாள் மீண்டும் அதிகாலை எழுந்து நீராடி ஜபித்து இறைவனை வணங்கி வழிபட்டு வழக்கப் படியான உணவை உண்ண வேண்டும். இன்று அனுஷ்டிக்கப்படும் விரதத்தை திருமண விரதம் என்றும் சொல்வர், கோவில்களில் நடைபெறும் தெய்வத் திருவிழாவை தரிசித்து மனதார வேண்டினால் மனம் போல் மணப்பேறு கிட்டும். தம்பதியர்க்கு வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையுடன் வாழ அருள் கிட்டும். இந்த விரதத்தால் அடுத்த பிறவி தெய்வப்பிறவியாக அமையும். பங்குனி உத்திரம் விரதமிருந்துதான் மகாலட்சுமி மகாவிஷ்ணுவை மணந்தாள். இந்த விரத மகிமையால்தான் பிரம்மன் சரஸ்வதி தன் நாவை விட்டு நீங்காமல் இருக்கச் செய்தது.

அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் அந்த வாரம் அசைவ உணவு அருந்தக்கூடாது. தொடர்ந்து விரதம் கடைபிடித்து வந்தால் பலன்கள் அதிகம். நல்ல கல்வி, தகுதிற்கேற்ப வேலை, நல்ல வாழ்க்கைத் துணை, நல்ல மக்கட் செல்வம் அனைத்தும் தவறாது தருவது பங்குனி உத்திர விரதம்.

பங்குனி மாத சிறப்புகள். சிறப்புமிக்க நன்னாளான பங்குனி உத்திரத்தன்றுதான் 1.உமை சதாசிவனை வணங்கும் இமாவான் மகளாக ஹேமாவதியாக அவதரித்தார். 2.சிவ சாபத்திற்கு ஆளாகி கடுந்தவம் இருந்த காமாட்சி- மலைமகளை ஈசன் மணந்த நாள், 3. பெண்ணுக்குப் பிறக்காத பெண்களால் வளர்க்கப்படாத சிவ அம்சத்தால் தான் அழிய வேண்டும் என வரம் வாங்கிய மகிஷியை அழிக்க சாஸ்தா அவதாரம் நிகழ்ந்தது. 4. முருகன் தெய்வானையை மண்ந்தது. 5. மீனாட்சி சுந்தரேசரை மணந்தது, 6. ஆண்டாள் ரங்கமன்னாரை மணந்தது. 7. வெற்றிக்கு வழிகாட்ட முருகனுக்கு உகந்தது. 8. பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனியும் நடரஜர் நடனம் ஆடும்போது அவரது வலது பாத தரிசனத்தை பங்குனி உத்திரத்தன்று திருவாரூரில் தரிசித்துள்ளனர். 9. மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கும் இந்த மாதத்தில் நடக்கும் விழாக்கள் வசந்த விழா எனப்படும்

&&&&&

திங்கட்கிழமை, 07 May 2018 09:59

மாசி மாத விரதங்கள்!

ஓம்நமசிவய!

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!

&&&&&

மாசி மாத விரதங்கள்!

மாசி பௌர்ணமி- மாசியில் சூரியகாந்த லிங்கம் வழிபாடு சிறப்பு, பகல் உபவாசமிருந்து சிவபூஜை புரிய வேண்டும்.

த்ரிதியை / திருதியை விரதம்- சிவ பார்வதி திருமணம் நடந்த திதியாதலால் ருத்திரருக்குரிய இந்த நாளில் தம்பதியர் இணை பிரியாமல் இருக்க, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்க விரத பூஜை. எள்ளு சாதம் சாப்பிடவும். வைகாசி, புரட்டாசி, மாசி மாதங்களில் பூஜை செய்வது சிறப்பு. பெண்களுக்கு புரட்டாசி மாசியில் செய்வது உத்தமம். அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாம் நாள் வளர்பிறையே திருதி எனச் சிறப்பிக்கப்படும். இந்த மூன்றாம் நாள் பிறையைத்தான் இறைவன் தன் தலையில் சூட்டிக்கொண்டான். அதனால்தான் நாம் மூன்றாம் பிறை கண்டு மகிழ்கின்றோம்.

சங்கட சதுர்த்தி விரதம்- மாசிமாத தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையுடன் கூடி வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓராண்டு காலம் விதிப்படி அனுஷ்டிக்க வேண்டும். சூரியன் உதிக்க ஐந்து நாழிகை முன் விழித்து விதிப்படி சங்கற்பித்துக் கொண்டு புண்ணிய நதியில் நீராடி சிவ சின்னங்களை அணிந்து விநாயகரை தியானித்து அவருடைய ஓரெழுத்து அல்லது ஆறெழுத்து மந்திரத்தை அல்லது அவரின் திருநாமத்தை விடாமல் தொடர்ந்து நாள் முழுவதும் உபவாசம் இருந்து ஜபிக்க வேண்டும். இரவு உறங்காமல் விநாயகர் புராணத்தை பாராயணம் செய்தல் நன்று. மன உறுதியுடன் ஓராண்டு செய்தால் கூன் குருடு நீங்கப் பெற்று உடல் நலமுறுவர். அறிவு செறிவர். எல்லா இன்பங்களும் வந்தடையும். கடன் தொல்லை பகை நீங்கப் பெறுவர்.

செவ்வாய் பிள்ளையார் கும்பிடுதல் என்று தமிழ் நாட்டில் பெண்கள் தை செவ்வாய், ஆடி செவ்வாய் எனத் துவங்கி இத்தனை செவ்வாய் என விரதமேற்கொள்வர். இவ்விரதத்தால் ஏற்படும் சப்தம் ஆண்களுக்கு கேட்க கூடாது. அப்படிக் கேட்டால் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால் அவர்கள் உறங்கிய பின் அல்லது ஊருக்குச் சென்றிருந்தால் மற்ற பெண்களுடன் கூடி ஒவ்வொருவரிடமிருந்தும் சேரும் நெல்லை குத்தி அரிசியாக்கி ஊறவைத்து களைந்து இடித்து மாவாக்கி தேங்காய் சிறு துண்டுகளைச் சேர்த்து வேகவைப்பர். மாவில் உப்பு கிடையாது. இதுவே நிவேதனம். ஈனாக்கன்றின் சாணத்தால் பிள்ளையார் பிடித்து புங்க இலை, புளிய இலைகளை பரப்பி அதன் நடுவெ பிள்ளையாரை எழுந்தருளச் செய்து விநாயகர் புராணம் சொல்லி தீப ஆராதனை காட்டி வழிபட்டு அங்கிருக்கும், அனைவருக்கும் வினியோகிப்பர். அங்கேயே சாப்பிட்டு புங்கன் தழை புளியந்தழை பூஜித்த மலர்கள் சாணிப் பிள்ளையார் ஆகியவற்றை ஓடும் நீரில் விட்டுவிட்டு நீராடி புனித மஞ்சள், குங்குமம் அணிந்து இல்லம் செல்வர். அன்று யாருக்கும் காசு, தானியம் தரமாட்டார்கள். செவ்வாய் கிரகமும் பிள்ளையாரும் இணைந்த விரதமே சங்கட சதுர்த்தி விரதம்.

மாசிக் கயிறு பாசி படியும் என்பர். திருமணமான பெண்கள் மாசி மாதத்தில் தாலிக்கயிற்றை மாற்றிக் கொண்டால் அவர்களது கணவனின் ஆயுள் பாசிபடியும் வரை பலகாலம் நீடிக்கும் என்பது வழக்கமானது.

சிவராத்திரி விரதம்.-புனித நீராடி பக்தி சிரத்தையுடன் உபவாசமிருந்து மனதில் இறைவனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டு சிவராத்திரி கண்விழித்தல் என்பது, நான் அழிவற்ற ஆன்மா, பரமாத்மாவின் குழந்தை, எந்த ஒரு பாவமும் செய்யாமல் புண்ணிய செயல்களையே செய்வேன் என்ற உறுதியான உணர்வுகளோடு இருக்கும் உணர்விலிருத்தல் நிகழ்வாகும். தீய விகாரமான எண்ணங்களை எக்காலமும் அளிக்காமல் இருக்கவே இந்த விரதம்.

சிவராத்திரி சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனை அர்ச்சிக்கும் ராத்திரி ஆகும். சைவத்தின் பெருவிழா- சிவபெருமானுக்காக கொண்டாடப்படுவது சிவராத்திரி. சிவராத்திரி- நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, முக்கோடி சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, யோக சிவராத்திரி எனப்படும்

நித்ய சிவராத்திரி-தினமும் ஈசனைப் பணிந்து மாலை நேரத்தில் வழிபடுதல்.
பட்சசிவராத்திரி-அமாவாசையும் பௌர்ணமியும் மாறிமாறி வரும்போது பிரதோஷமும் வரும் அப்போது நடத்தப்படும் மாலைநேர அபிஷேக ஆராதனைகள் பட்ச சிவராத்திரி.
மாத சிவராத்திரி-மாதந்தோறும் சுக்கிலபட்ச தேய்பிறை சதுர்த்தசி/ கிருஷ்ணபட்ச பிரதோஷம் முடிந்த உடன் அன்றைய இரவு தேய்பிறை சதுர்தசி-மாத சிவராத்திரி.
மகாசிவராத்திரி விரதம்: மாசிமாத கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி திதியே மகா சிவராத்திரி விரத தினம். இந்நாளில் இரவு 1130 முதல் 0100 மணிவரை உள்ள காலம் லிங்கோத்பவ காலம். இந்த நேரத்தில்தான் சிவன் ஜோதிலிங்கமாக ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் தோன்றி முழுமுதற் கடவுள் என உணர்த்தினார். பன்னிருகோடி லிங்க தரிசனம் தரும் பலனை சிவராத்திரியன்று ஒரு லிங்கத்தை பூஜிப்பதால் பெறலாம். நான்கு யுகத்திலும் உலகம் தோன்றிய தினம். ஜோதிர்லிங்கத்தல வழிபாடு கோடி புண்ணியம்.
முக்கோடி சிவராத்திரி- மாசிமாத தேய்பிறை சதுர்தசி செவ்வாய் அல்லது ஞாயிறு அன்று அமைந்தால் அது முக்கோடி சிவராத்திரி என்பர்.
உத்தம சிவராத்திரி-மார்கழி மாத சதுர்தசி திருவாதிரை நாளில் அமைந்தால் அது உத்தம சதுர்தசி சிவராத்திரி ஆகும்.
யோக சிவராத்திரி- அமாவாசையும், சோமவாரமும் கூடிய தினம்- திங்கட்கிழமையில் தேய்பிறை சதுர்தசி அமைந்தால் அல்லது அன்று 60 நாழிகை இருந்தால் அது யோக சிவராத்திரி எனப்படும். திங்கள் சூரிய அஸ்தமனம் முதல் செவ்வாய் காலை சூரிய உதயம் வரை வரும் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி-3கோடி விரதபலன்.

சிவராத்திரி நாளில் சிவன் நாமங்கள்
1.பவாயநம, 2.ருத்ராயநம, 3.உக்ராயநம, 4.பசுபதயேநம, 5.பீமாயநம, 6.மகாதேவாயநம, 7.சர்வாயநம, 8.சிவயநம, 9.ஈசனாயநம, 10.சம்புவேநம, 11.சதாசிவயநம.

சிவராத்திரியன்று சிறப்பு
1வதுஜாமம்- படைக்கும் தொழில் புரியும் பிரம்மன் பூஜை செய்வதாக ஐதீகம். அம்பிகை சிவபூஜை செய்த அடையாளமாக பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனம், வில்வம், தாமரைப்பூ அலங்காரம், அர்ச்சனை, பச்சைப்பயறு, பொங்கல், பால்சாதம், நிவேதனம் மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தல். நெய் தீபம், ரிக்வேத பாராயாணம. சந்தன தூபம். பலன் – முன்வினை மற்றும் பிறவிப் பிணிகளில் இருந்து விடுபட்டு நற்பலன்கள் அடையலாம்.
2வதுஜாமம்-காக்கும் தெய்வம் விஷ்ணு செய்வதாக ஐதீகம். முருகன் வழிபட்ட காலம்-சர்க்கரை, பால், தயிர், நெய்கலந்த ரஸபஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்து சார்த்துதல், துளசி அலங்காரம். தாமரைப்பூ அர்ச்சனை, நிவேதனமாக பாயாசம், வெண்பட்டு ஆடை அணிவித்தல். நல்லெண்ணெய் தீபம். யஜூர்வேத பாராயணம். குங்கிலிய தூபம். பலன்–தனதான்ய சம்பத்துக்கள் சேர்ந்து லட்சுமி கடாட்சம் நிலவும். அன்ன பஞ்சம் ஏற்படாது.
3வதுஜாமம்- அம்பிகை இறைவனை பூஜிப்பதாக ஐதீகம். கணபதி பூஜித்த காலம்- தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகைப்பூ அலங்காரம், வில்வ/அறுகு அர்ச்சனை, எள் சாதம் நிவேதனம், சிவப்பு வஸ்திரம். இலுப்ப எண்ணெய் தீபம். சாமவேத பாராயணம். சாம்பிராணி தூபம். இது லிங்கோத்பவகாலம் எனப்படும் சிறப்பு பெற்றது. இந்த காலத்தில்தான் சிவபெருமானின் திருமுடி, திருவடி காணப் பிரம்மனும் விஷ்ணுவும் முயற்சித்தது. பலன்– எந்தவித தீய சக்தியும் அண்டாமல் இருப்பதோடு சிவசக்தி அருள் கடாட்சம் கிட்டும்.
4வதுஜாமம்- முப்பத்தி முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும் மற்றுமுள்ள அனைத்து ஜீவராசிகளும் பூஜிப்பதாக ஐதீகம். மகாவிஷ்னு சிவபூஜை காலம். கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியாவட்டை மலர், அல்லி, நீலோற்பல மலர் அலங்காரம், அர்ச்சனை, நிவேதனமாக சுத்தமான அன்னம், தீப ஆராதனை அதர்வணவேத பாராயாணம். அகில்புகை தூபம். பலன் – மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரவல்லது.
நாள் முழுவதும் உண்ணாமலிருந்து வில்வ இலைகொண்டு அர்ச்சனை செய்து சிவ தோத்திரங்களை சொல்வது என்பது தான தர்மங்கள் செய்வது, யாத்திரை செல்வது, நோன்புகள் மேற்கொள்வது, விரதங்கள் இருப்பது ஆகியவற்றால் ஏற்படும் நற்பலன்கள், புண்ணியங்களை விடவும் மேலான புண்ணியங்களும் நற்பலன்களும் கிட்டும் என்கின்றது வேதங்கள்.

சிவராத்திரி சிறப்புகள்-
1.ஒவ்வொரு கல்பத்திலும் பிரளயத்தின்போது உயிர்கள் அனைத்தையும் தன் வயப்படுத்திக் (ஒடுங்குதல்) கொள்ளும் சிவன் யோக சமாதியில் ஆழ்ந்துவிட அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு சக்தி தியானம் மற்றும் பூஜை செய்து வழிபட தன்னுள் ஒடுங்கியிருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்த வேளை-சிவராத்திரி.
2.பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டு தியாகராஜராக தோன்றிய காலம்-சிவராத்திரி.
3. பார்வதி கண்ணை மூடியதால் ஒளி இழந்த சூரியன், சந்திரன், அக்னி மூவரும் ஒளி பெற்ற இரவு-சிவராத்திரி.
4.வில்வ இலைகளை லிங்கத்தின் மேல் உதிர்த்ததால் குரங்கு-முசுகுந்த சக்ரவர்த்தியாக பிறக்க அருள் பாலித்த இரவு-சிவராத்திரி.
5. ஜோதிவடிவாக லிங்கோத்பவமூர்த்தியாக ஈசன் தோன்றியநாள்.
6. பரமனின் பாதி இடத்தை பார்வதி பிடித்தநாள்.
7. உமா மகேசனிடம் ஆகம உபதேசம் பெற்றநாள்.
8. வேடன் தனது கண்ணை லிங்கத்திற்கு அப்பி கண்ணப்பநாயனார் ஆனநாள்.
9. பகீரதனால் கங்கை பூமிக்கு வந்தநாள்.
10. மார்க்கண்டேயனுக்காக ஈசன் எமனை உதைத்தது மார்கண்டேயன் என்றும் 16 என வரம் பெற்றநாள்.
11. கிருஷ்னர் நரகாசுரனை வதம் செய்த நாள்.
12. கிரகங்கள் இயங்கத் தொடங்கிய நாள். குருதீட்சை பெற்றிட சிறந்த நாள்.
13. அர்ஜுனன் தவம் செய்து பாசுபதம் பெற்ற நாள்.

மகாசிவராத்ரியன்று வழி படவேண்டிய தலங்கள்
1.முதல்காலம்-குடந்தைகீழ்க்கோட்டம்(144)-நாகேஸ்வரர், 
2.இரண்டாம்காலம்-திருநாகேச்சுரம்(146)-நாகநாதர், 
3.மூன்றாம்காலம்-திருபாம்புரம்-பாம்புரேஸ்வரரையும், 
4.நான்காம்காலம்-நாகூர் நாகேஸ்வரரையும்-உடன் ஆதிசேஸனையும் வழிபடவும்.

சிவராத்திரியன்று சிறப்பு தரிசன தலங்கள்
1.ஓமாம்புலியூர், 2.காஞ்சிபுரம், 3.காளஹஸ்தி, 4.கோகர்ணம், 5.திருக்கடவூர், 6.திருக்கழுக்குன்றம், 7.திருவண்ணாமலை, 8.திருவைகாவூர், 9.ஸ்ரீசைலம், 10.தேவிகாபுரம்

மகாசிவராத்திரி விரதம்
விரதங்களில் உயர்ந்தது மகாசிவராத்திரி விரதம். விரதம் இருப்போர் சிவராத்திரிக்கு முதல் ஒருபொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசம் இருந்து காலை ஸ்நானம் செய்து, சிவசிந்தனையுடன் கண் விழித்திருந்து இரவு நான்கு கால வழிபாடும் முறைப்பட் செய்தல் வேண்டும். சிவபுராணம் படித்தல், கேட்டல், சொல்லுதல், துதிகளைச் சொல்லுதல், பஞ்சாட்சரம் ஓதுதல், எழுதுதல் சிறப்பு. அடுத்த நாள் காலை நீராடி சிவ தரிசனம் செய்து அடியவர்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்திடல் வேண்டும்.


&&&&&

திங்கட்கிழமை, 07 May 2018 03:16

தை மாத விரதங்கள்!

ஓம்நமசிவய!

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!

&&&&&

தை மாத விரதங்கள்!

தை பௌர்ணமி- தைமாதம் புஷ்பராக லிங்கம் வழிபாடு சிறப்பு பூரண உபவாசம் இருந்து தான தர்மங்கள் செய்து சிவ பூஜை செய்தல்.

தைப்பூச விரதம்- மார்கழிமாதம் முதல் நாள் குளித்து பூஜை செய்து மாலை அணிந்து கொள்ளல் வேண்டும். பின் தினமும் காலையும் மாலையும் குளித்து முருகனை பாடல்களால் துதிக்க வேண்டும். அருகில் உள்ள முருகன் கோவிலுக்கோ அல்லது சன்னதிக்கோ சென்று வழிபடவும். தைப்பூசத்தன்று பாத யாத்திரையாக முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

&&&&&

திங்கட்கிழமை, 07 May 2018 03:12

மார்கழி மாத விரதங்கள்!

ஓம்நமசிவய!

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

&&&&&

மார்கழி மாத விரதங்கள்!

மார்கழி பௌர்ணமி- மார்கழியில் வைடூர்ய லிங்கம் வழிபாடு சிறப்பு பகல் உபவாசம் இருந்து சிவ பூஜை புரிதல் வேண்டும்.

மார்கழி சிறப்புகள்- மார்கழி அதிகாலைப்பொழுதான தேவர்களின் சந்தியா கலாத்தில்தான் தான் திருவெம்பாவாய், திருபூம்பாவாய் என சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பள்ளி எழுச்சி நடைபெறும். பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனியும் நடரஜர் நடனம் ஆடும்போது அவரது இடது பாத தரிசனத்தை மார்கழி திருவாதிரைத் திருநாளில் சிதம்பரத்தில் தரிசித்துள்ளனர்.

வைகுண்ட ஏகாதசி விரதம்! ஆண்டுக்கு 25 ஏகாதசி வந்தாலும் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி சிறப்பானது. மாதம் முழுக்க இறை வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் இம்மாதத்தை பீடுடைய மாதம் என்றனர். அது காலப்போக்கில் பீடை மாதம் என்றானது. அது தவறு.

ஏகாதசி திதி- திதிக்குரிய விநாயகர்- ஹேரம்ப கணபதி. பால் ஆகாரம் சாப்பிடவும்-நிதிபதியான குபேரனை பிரம்மா தோற்றுவித்த நாள். பழம் மட்டும் உண்டு குபேர பூஜை. வைகுண்ட ஏகாதசி விசேடமானது- விஷ்ணுவிற்குரியது.

ஏகாதசி-மார்கழி-வளர்பிறை-வைகுண்டஏகாதசி பலன்- ஜாங்காசுரன் என்ற முரன் பெண்களுக்கும் முனிவர்களுக்கும் துன்பம் இழைத்து வந்தான். அவனது துன்பங்கள் தொடரவே மாகாவிஷ்னுவிடம் முறையிட அவருக்கும் அசுரன் முரனுக்கும் 1000 ஆண்டுகள் வரை போர் நீடித்தது. ஒருநாள் களைப்படைந்தது போல் நடித்த திருமால் அருகில் இருந்த பத்ரிகாசிரமத்தில் ஓய்வெடுப்பது போல் பாசாங்கு செய்தார். அவர் உறங்குவதாக நினைத்த முரன் வாளால் வெட்டவர விஷ்ணுவின் உடலிலிருந்த சக்தி வெளிப்பட்டு தன் பார்வையாலேயே அசுரனை எரித்தது. அது தனுர்மாத சுக்லபட்ச ஏகாதசியில் நீ என்னுள்ளிருந்து அவதரித்ததால் இந்த திதி உனக்குரியதாகும். உன்பெயர் இனி ஏகாதசி என்பதாகும். தூக்கமின்றி விழிப்புடன் பெருமாளைக் காத்ததுபோல் கண்விழித்து பெருமாள் நாமத்தை ஏகாதசியன்று உச்சரித்து விரதம் இருப்போர்க்கு வைகுண்ட முழுபலன்.

சொர்க்கவாசல்- திரேத யுகம் முடிந்து கலியுகம் பிறந்ததும் வைகுண்டத்தின் வயில் காப்போர்களான ஜெயனும் விஜயனும் வைகுண்ட வாயிலை மூடி கலியுகம் பிறந்துவிட்ட்தால் பொய் புரட்டு வஞ்சம் ஆகியன நிறைந்து உயிர்கள் ஏதும் வைகுண்டத்திற்கு வராது என்பதால் கதவை மூடிவிட்டோம் என்றனர். கலியுகத்தில் நம்மாழ்வார் போன்ற ஞானிகளும் அவரைப் பின்பற்றி பக்தர்களும் வருவார்கள் அவர்களுக்குகாக கதவை திறந்து வையுங்கள் என்றார் விஷ்ணு. வைகுண்ட ஏகாதசியன்று உங்களது அர்ச்சாவதார மேனியுடன் சொர்க்கவாசல் புகுந்து வருபவர்களுக்கு வைகுண்டத்தின் கதவுகள் திறந்தே இருக்கும். இதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் என ஜெய, விஜயர்கள் வேண்ட அவர்கள் விருப்பபடி வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பதால் ஏகாதசி விரதமிருந்து சொர்க்கவாசல் வழி சொல்வோர் வைகுண்ட பாக்கியம் பெறுவர்.

ருக்மாங்கதன் என்ற அரசன் தன் நாட்டு மக்கள் இக, பர வாழ்வு இரண்டிலும் நிம்மதிகாண வேண்டும் என்று ஆவல்கொண்டு அதற்கு வழி வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது என்று முடிவுகொண்டு தன் நாட்டு மக்கள் மாதா மாதம் ஏகாதசி விரதமும், வைகுண்ட ஏகாதசி விரதமும் கண்டிப்பாய் அனுஷ்டிக்க வேண்டும் என்று சட்டம்போட்டான். அதனால் மக்கள் அனைவரும் விரதமிருந்ததால் பூமியில் மக்கள் அனைவரும் வைகுண்டம் சென்றனர். முன் ஜன்ம கர்ம வினைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு அவரவர் தலை யெழுத்தை எழுதுகின்றேன். ஆனால் இங்கு அனைவரும் விரதமிருந்து அந்த வினைகளைக் களைந்து விடுகின்றனர். ஒருவர்கூட நரகத்திற்கு செல்லவில்லையாததால் பூமியின் சமநிலை இவ்வாறு பாதிப்பது நல்லதல்ல என்று பிரம்மன் விஷ்ணுவிடம் வேண்டினார். விஷ்ணு ருக்மாங்கதனிடம் உன் எண்ணம் நன்மையானதுதான். ஆனால் யாருக்கு சொர்க்கம் செல்ல வேண்டும் என்றிருக்கின்றதோ அவர்கள் மட்டும் விரதங்களை அனுஷ்டிக்குமாறு நீ சட்டத்தை மாற்று என்றார். மக்கள் அவரவர் விருப்பப்படி விரதமிருந்து சொர்க்கம் சென்றதால் பூமியில் சமநிலை ஏற்பட்டது.

இவ்வளவு சக்தி வாய்ந்த ஏகாதசி விரதங்கள் கடைபிடிப்போருக்கு வெற்றி, செல்வம், ஆரோக்கியம், நிம்மதி கிடைத்து பாவ வினைகள் அழிந்து வைகுண்டப் பதவி கிட்டும்.


&&&&&

திங்கட்கிழமை, 07 May 2018 03:06

கார்த்திகை மாத விரதங்கள்!

ஓம்நமசிவய!

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்


&&&&&

கார்த்திகை மாத விரதங்கள்!

கார்த்திகை பௌர்ணமி- கார்த்திகையில் பவளலிங்கம் வழிபாடு சிறப்பு, பகற் பொழுது உபவாசம் இருந்து ஈசனை வழிபட வேண்டும்.

கார்த்திகை விரதம்- கார்த்திகை மாதம், கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரத்தில் பன்னிரண்டு மதங்கள் தொடர்ந்து இருப்பது சிறந்த பலனைத் தரும். விரதம் இருந்து முருகனை வழிபடுவோருக்கு கல்வி, செல்வம், ஞானம் ஆகிய பேறுகள் கிட்டும்.

பிரதிபத (எ) பிரதமை விரதம்- பிரம்மன் பிரமாண்டத்திலிருந்து பூமி, ஆகாயம், திசைகள், உபதிசைகள், தேவர்கள், அசுரர்கள் என எல்லாவற்றையும் உறபத்திசெய்த முதல் திதி என்பதால் பிரதமை என்றானது. பிரதமையன்று பிரம்மா அக்னியை தோற்றுவித்ததால் அக்னி பூஜைக்கு உரியது. முன்னால் வரும் சதுர்த்தசியன்று இந்த விரதத்திற்கான சங்கல்பம் மேற்கொண்டு பிரதமை விரதத்தை கார்த்திகை பௌர்ணமி முதல் தொடங்கி ஓராண்டு தொடர்ந்து செய்வது விசேடமானது. பிரம்மனுக்கு விரதமிருந்து பூஜைசெய்து பிரம்ம தேவரே எனக்கு அருளாசி தர வேண்டும் என வேண்டவும். பாலைத் தவிர்க்கவும். விரதம் முடிந்தபின் பாலை அருந்தி விரதத்தினை முடிவு செய்ய வேண்டும்-

த்விதீய / துவிதையை விரதம்- அஸ்வினி குமார்களுக்கு தேவர்கள் என்ற அங்கீகாரமும் அவிர்பாகமும் கிடைத்த நாள் இது. தேவலோக மருத்துவர்கள் அசுவனி தேவர்கள் பூஜைக்குரிய நாள். கார்த்திகை மாதம் சுக்லபட்சம் த்வீதியை அன்று துவங்கி ஒருவருட காலம் தொடர்ந்து அனுஷ்டிக்கவும்- உப்பைத் தவிர்க்கவும்

சாந்தி விரதம்- கார்த்திகை மாத சுக்லபட்ச பஞ்சமி திதியில் சாந்தி விரதம் இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு பிரச்சனைகள் நீங்கி சாந்தி நிலவும். நியதி என்னவென்றால் ஓராண்டு காலத்திற்கு சூடான உணவைத் தவிர்த்தல் நன்மை பயக்கும். விரத நாள் முடிவில் பாம்பு-சேஷன் பிரதிமை செய்து தானம் வழங்க வேண்டும். மிகச் சிறந்த நாகங்களான வாசுகி, தக்ஷகன், காளியன், மணிபத்ரன், ஐராவதன், த்ருதராஷ்ட்ரன், கார்க்கோடன், அனந்தன், தனஞ்செயன் ஆகியவை சர்ப்ப வடிவிலிருந்து அபயம் தருவதுடன் செல்வங்களை வாரிவழங்கும். நாக தோஷங்கள் நீங்கும்.

சப்தமி விரதம்- கார்த்திகை சுக்ல சப்தமியில் விரதத்தை துவங்கலாம். நான்கு மாதம் அனுஷ்டிக்க வேண்டும். மாசி சப்தமி- விசேஷ பலன்களைத் தரும். வளார்பிறை சப்தமியிலோ அல்லது சங்கராந்தி கிரகணம் முடிந்த பிறகோ விரதத்தை தொடங்கி அக்னியை சூரிய ஜோதியாக பாவித்து ஹோமம் செய்யவும். 12 மாதங்களில் 12 ஆதித்தியர்களைப் பூஜை செய்தால் வருடம் முழுவதும் சூரியனைப் பூஜித்த பலன், சூரியனுக்கு பூஜை- ரதசப்தமி- மாசிமாத சுக்ல பக்ஷ பஞ்சமியன்று ஒரு பொழுது விரதமிருந்து மறுநாள் சஷ்டியன்று இரவு ஒரு வேளை மட்டும் உணவு உண்டு, அடுத்த நாள் சப்தமியன்று பாரணை செய்து சூரிய நாராயணருக்கு பூஜை செய்து எளியோர்க்கு உணவு அளித்திடல் வேண்டும். சூரியனுக்குகந்த நளான இன்று பாயாச நெய்வேத்தியம். வில்வ ஆகாரம் செய்யவும்.

கார்த்திகை மாத சிறப்புகள்- கார்த்திகைத் தீபம்: அருட்பெரும் ஜோதி என்றார் வள்ளலார். அலகில் சோதியன் என்றார் திருநாவுக்கரசர். நெருப்பை அக்னி தேவன் என்றும் திருவிளக்கை தீப லட்சுமி என்றும் வழி படுகின்றோம். அத்தகைய நெருப்பை ஜோதியை போற்றும் நாள் கார்த்திகை தீபத் திருநாள். ஜோதி ஸ்தம்பமாய் நின்ற இறைவனை அடிமுடி காண பிரம்மன், விஷ்ணு புறபட்ட நிகழ்வு நடந்த தலம் திருவண்ணாமலை. அந்த நாளே கார்த்திகைத் தீபத்திருநாள்.. இறைவன் இங்கு தீயாக சோதிப் பிளம்பாக வெளிப்பட்டமையால் திருவண்ணாமலை ஐம்பூதத்தலங்களுள் அக்னி(தீ)த் தலமாக வணங்கப் பெறுகின்றது. கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் சிவபார்வதி இருவரும் ஒளிவடிவத்தில் இருப்பதால் அன்று தீபமேற்றி வழிபடுகின்றோம். இறைவன் ஒளி ரூபமானவன் என்பதை தத்துவார்த்தமாக விளக்கும் பொருட்டே வீட்டை விளக்குகளால் அலங்கரித்து கார்த்திகைத் தீபத் திருநாளில் இறைவனை வணங்கும் பழக்கம் பல யுகங்களாக மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
பரணி தீபம்: கார்த்திகைப் பெண்கள் வளர்த்த குழந்தைகளைப் பார்க்கச் சென்ற உமை ஆறு குழந்தைகளையும் ஒன்றுசேர எடுத்து அணைக்க சண்முகனார் தோன்றிய நாள் கார்த்திகை மாதம் பரணித் திருநாள். பரணி நட்சத்திரம் கார்த்திகை மாதம் எமனுக்குரியது. ஒரு உடலிலிருந்து விடுபட்ட ஆன்மா இரு வழிகளில் தன் பயணத்தை மேற்கொள்கின்றது. புண்ணியம் செய்த ஆன்மாக்கள் ஒளியும் நறுமணமும் மிகுந்த நல்ல வழியில் பயணிக்கும். பாவம் செய்தவர்கள் இருள் நிறைந்த பாதையில் பயணம் செய்வர். பரணி தீபம் ஏற்றுவதால் அந்த இருள் சூழ்ந்த பாதையில் பயணம் செய்யும் ஆன்மாக்களுக்கு சிறிது வெளிச்சம் கிடைக்கும் அது அந்த பரணி தீபம் ஏற்றியவர்களுக்கு புண்ணியமாகும். அதனால் பரணி தீபம் ஏற்றி அதை வான் நோக்கி காண்பிப்பது வழக்கமானது. திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றி அதன் சுடரிலிருந்துதான் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
சொக்கப்பனை: தீபத்திருநாளன்று கோவில் வாயிலில் பனை மற்றும் தென்னை ஓலைகளை குவித்து அதனைக் கொளுத்துவர். இந்தச் சுடரிலிருந்து நெருப்பு பெறப்பட்டு வீட்டின் விளக்குகளில் ஏற்றப்படும். இந்த நிகழ்வே சொக்கப்பனை எனப்படும். இதன் தத்துவம் என்ன வென்றால் சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லா ஒளிவடிவானவராக நெருப்புப் பிழம்பாக காட்சியளித்த கார்த்திகைத் திருநாளன்று அந்நிகழ்வை நினைவுகூற செக்கப்பனை ஏற்றப்படுவதால், பிரம்மனின் ஆணவம் அன்று அழிந்ததுபோல்; ஒவ்வொரு ஆன்மாவின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் அந்த தீபஒளியின் நெருப்பில் சாம்பலாகும் என்பதாகும். மேலும் இறைவனின் அருள் எனும் ஒளி இருந்தால் வீட்டில் தீய வினை, தீயசக்திகள் அகன்று நல்ல வெளிச்சம் பிறக்கும் என்பதையும் விளக்குகின்றது. இந்த வசதி கிடைக்காதவர்கள் வீட்டிலுள்ள சாமி படத்தின் விளக்கிலிருந்து நெருப்பைப் பெற்று அகல் விளக்குகளைப் பற்றவைக்கலாம். சொக்கப்பணை ஏற்றுவது என்பது மக்களின் அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் பிறக்கச் செய்யும் ஒரு குறியீடாகும்.

&&&&&

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

6554202
All
6554202
Your IP: 162.158.78.152
2018-05-24 13:32

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

சந்தோஷப்பூக்கள்