gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

தந்திர யோகம்

Written by

    ஓம் நமசிவாய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே

கழியவரும் பொருளே, கண்ணே - செழிய

கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை

அலாலயனே, சூழாதென் அன்பு!

                      *****

வாழ்க்கைத்தந்திர யோகம்

நிகழ்வு- அந்த ஊரில் உலக அனுபவ சாஸ்திரத்தில் தேர்ச்சிமிகுந்த தனவந்தன் வாழ்ந்திருந்தான். சகல கலைகளிலும் வல்லவனாகையால் அவன் எல்லோராலும் பாரட்டப் பட்டவனாக இருந்தான். ஆனால் அவன் குமாரர்கள் இருவரும் முட்டாள்களாகவும் கல்வி கற்பதில் நாட்டமில்லாதவர்களாகவும் இருந்தனர். மனவேதனையடைந்த தனவந்தன் சான்றோர்களை அணுகி, எனது இடுக்கண்களை களைந்து சீர்மிகுச்செல்வமும் நற்பெயரும் இருந்தும் என் மக்களால் எனக்கு சந்தோஷமில்லை. அவர்களுக்கு புத்தியுண்டாக தகுந்த வழி சொல்லுங்கள் என வேண்டினான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- “குழந்தை பிறக்காமலிருந்தாலும், அல்லது பிறந்து செத்தாலும் நமக்கு ஏற்படுகின்ற துன்பம் கொஞ்சம்தான். ஆனால் புத்தியில்லா குழந்தையைப் பெற்றவனுக்கு வாழ்க்கை முழுவதுமே துன்பம்தான்”

“கன்றும் ஈனாமல் பாலும் கறக்காமல் இருக்கின்ற பசுவால் யாருக்கு என்ன பலன்?”

தனவந்தனனே இவர்களுக்கு முதலில் வழ்வியல் இலக்கணத்தை கற்பிக்க பன்னிரண்டு வருடங்கள் பிடிக்கும். அதை ஓரளவு கற்றபின் அறம், பொருள் என்ற சாஸ்திரங்களை கற்க வேண்டும். அதன்பின்தான் அறிவு மலர்ச்சி அடையும் என்றும் இந்த வாழ்க்கையோ நிலை இல்லாதது, இலக்கணம் கற்பதற்கு நீண்டகாலம் தேவைப்படுகின்றது. எனவே இவர்கள் அறிவு பெறுவதற்கு சுருக்கமான மார்க்கங்களைத் தேடுவது நல்லது என்றனர்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- “இலக்கண சாஸ்திரம் முடிவில்லாதது. ஆயுள் குறைவானது. அதிலும் தடங்கல்கள் வந்துபோகும். எனவே அன்னப்பறவையானது நீரில் கலந்த பாலைமட்டும் பிரித்து அருந்துவதுபோல் சாரமுள்ள விஷயங்களை நினைவில் பதியவைக்கவேண்டும்”

பல சாஸ்திரங்களில் நிபுணரான ஒருவரிடம் இவர்களை ஒப்படையுங்கள். நிச்சயமாக வெகு சீக்கிரத்தில் புத்திசாலியாக்கி விடுவார் என ஆலோசனை கூறினர் சான்றோர்கள். அதன்படி பண்டிதர் ஒருவரை வரவழைத்தான் தனவந்தனன். என் புதல்வர்களை உலக அறிவில் இனையற்றவர்களாக இருக்க வேண்டியதைச் செய்யுங்கள். அதற்கு பலனாக தங்களுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் தருகிறேன் என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- “ஒரு உண்மையான பண்டிதன் பொருளுக்காக தான் அறிவு பெற்ற கல்வியை விற்கமாட்டான்” தான் கற்ற கலை தனக்குபின்னும் வாழவேண்டும் என நினைப்பான்.”

செல்வந்தரே, எனக்கு பணத்தாசையில்லை. எனக்கு எழுபது வயதாகிறது. ஐம்புலன்களையும் அடக்கியவன் நான். பணத்தால் எந்த பயனும் எனக்கில்லை. அதற்காக கல்வியை விற்பவனும் அல்ல. நான் கற்ற நீதி சாஸ்திரங்கள் எனக்குபின் இவர்கள் மூலம் நிலைத்து நிற்பதற்காக நான் இந்த பொறுப்பை ஏற்று விரைவில் இவர்களை புத்திசாலிகளாக மாற்றுவேன் என உறுதி பகர்ந்தார்.

பண்டிதர் தனவந்தனின் குமாரர்களை தன்னுடன் அழைத்துச் சென்று ஐந்து தந்திரங்களை முன்னிருத்தி வாழ்க்கையின் தந்திர யோகத்தை போதித்தார். நான் சொல்லும் நிகழ்வுகளில் பெயர்களையும், உயிரனங்களையும் கொண்டு அவை இப்படி சொல்லுமா என ஆராயாமல், அந்த சூழலில் அந்த சொற்கள், செயல்களின் தன்மை அவைகள் உபயோகப்படுத்தப்படும் முறை ஆகியவற்றை கூர்ந்து கவனித்து அவைகளை மனதில் இருத்தி அதனால் ஏற்படும் நிகழ்வுகளைக் நினைவில்கொண்டு சிந்திப்பீர்களாக என்றார்.

1.முதல் வாழ்க்கைத்தந்திரம்- நட்பு அறுத்தல்

அந்த ஊரில் வசித்து வந்த வணிகன் அநேக நற்குணங்களை உடையவனாக இருந்தான். முன் ஜென்மத்தில் செய்த புண்ணிய கர்மபலன்களினால் பெருஞ்செல்வம் அவனிடமிருந்தது. தான் சேகரித்த செல்வம் அதிகமாயிருந்தபோதிலும் செலவழிந்துகொண்டே போனால் அது மைபோல் கரைந்து விடும். சேர்த்தது கொஞ்சமாயிருந்தாலும் அதை மேலும் மேலும் வளர்த்தால் எறும்பு புற்று போல பெருகிக் கொண்டேயிருக்கும். ஆகவே பொருள் அதிகமாக இருந்தால் அதை மென்மேலும் பெருக்குவதே சரி. பெறாத பொருளைப் பெறவேண்டும். பெற்றதைக் காக்க வேண்டும், காத்ததை விருத்தி செய்ய வேண்டும், சரியான துறைகளில் முதலீடு செய்ய வேண்டும். பத்திரப்படுத்திவைக்கும் செல்வம் அநேக இடையூறுகளால் நாசமடைகிறது. சந்தர்ப்பம் கிடைத்தபோது முதலீடு செய்யாத பணம் கைக்கு வராத பணத்திற்குச் சமம். ஆகவே கிடைத்த பணத்தைப் பாதுகாத்து, பெருக்கி நல்ல துறையில் ஈடுபடுத்த வேண்டும் என நினைத்தான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- “சேர்த்த பணத்தை காக்க அதைப் புழக்கத்திற்கு கொண்டுவரவேண்டும், குளத்தில் நீர் அதிகமானால் அது வடிவதற்கு வடிகால் வேண்டும். பழகிய கும்கி யானைகளைக் கொண்டு காட்டு யானைகளைப் பிடிப்பதுபோல், பணத்தைப் போட்டுத்தான் பணம் ஈட்ட வேண்டும். விருப்பம் மட்டும் இருக்கின்ற ஏழைக்கு வாணிபம் செய்வது சாத்தியமில்லை. விதியால் தன்னிடம் குவிந்த தனத்தை தானும் அனுபவிக்காமல், நற் செய்கைகளிலும் செலவிடாமல் இருப்பவன், என்னாளும் சுகமடையமாட்டான். அவன் ஒரு பணம் படைத்த முட்டாளே!” 

ஓர் நல்ல நாளில் வணிகன் பெற்றோரைப் பணிந்து வணங்கி விடைபெற்று தன்னுடன் சில நண்பர்களை அழைத்துக்கொண்டு வியாபாரப் பொருள்களுடன் வேறு ஊருக்குச் சென்று கொண்டிருந்தான். வழியில் தன்னுடன் வந்த நண்பன் ஒருவனுக்கு விஷக்காய்ச்சல் பீடிக்க வணிகன் தன் பயணத்தை அவ்விடத்தில் நிறுத்தி தங்கினான். நாட்கள் சில சென்றும் உடல் நிலை முன்னேற்றம் இல்லாததால் அவனுடன் சிலரை பொருள்களுடன் பாதுகாப்பிற்குவைத்து நலமடைந்தால் கூட்டிவாருங்கள். இறந்துவிட்டால் கிரியைசெய்து விட்டு வாருங்கள் எனக்கூறி முன்னே சென்றான். அவன் சென்றபின் விஷக்காய்ச்சல் தங்களை பிடித்தால் என்ன செய்வது என்ற பயத்தால் அவனை அங்கு விட்டுவிட்டு வணிகன் சென்ற வழிசென்று அவனிடம் அவர் நண்பர் விஷக்காய்ச்சலால் இறந்துபட்டார். தகனக்கிரியை செய்துவிட்டு வந்தோம் என பொய்யுரை பகர்ந்தனர். செய்தி கேட்ட வணிகன் துக்கமடைந்தான். தெளிந்து நண்பனின் பிரேதத்திற்கு செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளை நன்றியுடன் செய்து விட்டு வியாபாரம் செய்ய அந்த ஊருக்குச் சென்றான்.

அந்த நண்பன் அதிர்ஷ்டசாலி. உடன் இருந்தவர்கள் தன்னை விட்டுச் சென்றபின் ஒரு காட்டுவாசிக்கூட்டம் அவனைக் கண்டது. அவன் நிலையறிந்து பச்சிலை வைத்தியம் செய்ய விரைவில் அவன் குணமடைந்தான். குணமடைந்த அவன் அந்தக்கூட்டத்துடன் காட்டில் அலைந்து அவர்களின் இயற்கை உணவு பழக்கங்களை மேற்கொண்டு திடகாத்திரமான உடலமைப்பை பெற்றான்.

புதிய நட்பு: அந்தக்கூட்டத்தின் தலைவன் படாபடோபங்கள் இல்லாதவன். நடிப்பற்ற உண்மையான வீரமுடையவன். தோல்வியறியாத ரோஷமும், கர்வமும், நிறைவான தன் மதிப்பும் அவனின் குணங்களாகும். தனக்குப் போட்டியாக யாரையும் தலைதூக்க விடவில்லை. யாருக்கும் தலைவணங்கி குழைந்து பேசும் பழக்கம் கிடையாது. பொறுமையின்மை, ஆக்ரோஷம், கோபம், பரபரப்பு ஆகியவற்றைக்கொண்டு தான் நினைத்ததை செய்துவந்தான். பயமின்றி திரிவது, இச்சகம் பேசுவதை இகழ்வது, காலைப் பிடித்துக் கெஞ்சுவதை வெறுப்பது, மனக்கலக்கமின்றி இருப்பது இருப்பது ஆகியவை அவன் புருஷலட்சனம். இச்சகம் பேசி காரிய சித்தி உபாயத்தை அவன் கையாண்டதில்லை. முயற்சி, வீரம், சுயகௌரவம் ஆகியவற்றை மேற்கொண்டான். பிறர்க்கு அடிமை செய்யாமலும், தன்னைப்பற்றிய கவலை இல்லாமலும் இருந்தான். பிறருக்கு உபகாரம் செய்து சந்தோஷமடைவதிலேயே தன் வீரத்தைக் காட்டினான். அற்ப புத்தியில்லாதவன். சுற்றிவளைத்துப் பேசுவது, காலத்திற்கேற்ற கோலம் போடுவது ஆகிய செயல்கள் இல்லாதவன். உயரிய நோக்கங்கள் கொண்டு உற்சாகத்தோடு இருந்தான். யாரையும் நிந்திக்கவுமில்லை. யாரும் அவனிடம் அவநம்பிக்கை கொள்ளவில்லை. மறைவிலிருந்து தாக்குபவர்களை அவன் லட்சியம் செய்யவில்லை. யாருடைய உதவியுமின்றி அவனுக்கு உணவும் இருப்பிடமும் திருப்தியாய் கிடைத்தது. நிம்மதியுடன் தலைநிமிர்ந்து அந்த கூட்டத்திற்கு ராஜா போல் இருந்தான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- “வலிமையும் கர்வமுங்கொண்டு தனியே காட்டில் திரியும் சிங்கத்திற்கு ராஜதந்திரமும் சாஸ்திரமும் தேவையில்லை. அதனை எல்லா மிருகங்களும் ராஜாவாக ஏற்றுக்கொள்கின்றன. மிருகங்கள் சிங்கத்திற்கு மகுடாபிஷேகம் செய்துவைக்கவில்லை. சிங்கத்தின் சுய பராக்கிரமத்தினால் ராஜபதவி கிடைத்தது. விரும்பிய உணவு கிடைக்காவிடில் சிங்கம் புல்லைத் தின்னாது”

அந்தக் கூட்டத்திலிருந்த ஒருபணியாள் மற்ற நண்பரிடம் தங்கள் தலைவர் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகக் கூற மற்றவர் நண்பனே! இந்த விவகாரம் எல்லாம் உனக்கு எதற்கு? அனாவசியமான விஷயத்தில் தலையிட விரும்புகிறவன் ஆப்பைப் பிடுங்கிய குரங்குபோல் தன் உயிரைத்தான் இழக்கின்றான். அது எப்படி என்று கேட்க மற்றவன் சொல்ல ஆரம்பித்தான்.

ஆப்பை பிடுங்கிய குரங்கு:ஒரு வியாபாரி தன் தோட்டத்தில் ஒர் வீடு கட்டிக்கொண்டிருந்தான். வேலையாட்கள் அனைவரும் மதியம் உணவருந்த சென்றவேலையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு கூட்டம் ஒன்று வந்தது. ஒவ்வொன்றும் தன் கைக்கு கிடைத்தை எடுத்து பார்த்து தூக்கி விளையாடியது. தச்சன் ஒரு மரத்தைப் பாதி பிளந்து அதில் ஓர் ஆப்பை வைத்திருந்தான். உணவருந்தி வந்து மீதிவேலையைத் தொடரலாம் என விட்டுச்சென்றனர். தனக்கு கேடு காலம் நெருங்கியதை அறியாத ஒரு குரங்கு அந்த ஆப்பை பிடுங்கி எறிய நினைத்தது. ஒருகையால் பிடித்து இழுத்தது. ஆப்பு வரவில்லை. குரங்கிற்கு அதை விடமனமில்லை. அருகில் சென்றமர்ந்து இருகைகளால் தன்பலம் கொண்டமட்டும் இழுத்தது. பாதி பிளக்கப்பட்ட மரத்தின் இடைவெளீயில் அதன்விரைகள் இறங்கியிருந்ததைக் கவனியாமல் ஆப்பை முழுவதுமாகப் பிடுங்கியதும் விரைகள் சிக்கிகொண்டன. அதன் முடிவும் நெருங்கியது. அதனால்தான் புத்திசாலியாக இருப்பவன் அனாவசியமான விவகாரத்தில் தலையிடலாகாது என்று சொல்கிறேன் என்றான். மேலும் தலைவர் நமக்கு போதிய உணவு, உடை, பாதுகாப்பு தரும்போது சொல்லும் வேலையைச் செய்வதுதான் நமது வேலை. இதெல்லாம் நமக்கெதற்கு என்றான்.

உணவு, பாதுகாப்பு மட்டும் விரும்பி, பெருமையை விரும்பாத உன்னால் எப்படி உயர்வான காரியங்கள் செய்ய முடியும். மித்திரர்களுக்கு உபகாரமும், சத்துருக்களுக்கு அபகாரமும் செய்து புத்திமான்கள் தலைவனைத் திருப்தி செய்கிறார்கள். வயிற்றை நிரப்பும் வேலை யாருக்குத்தான் முடியாது? என்றான் மற்றவன்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- “யாருடைய வாழ்க்கையை நம்பி அநேக உயிர்கள் வாழ்கின்றனவோ அவனுடைய வாழ்க்கையே வாழ்க்கை. அலகு உள்ள காக்கைகூடத்தான் தன் வயிற்றை நிரப்புகின்றது. குருவுக்கும், உறவினருக்கும், எழைக்கும், வேலைகாரர்களுக்கும் யார் தயை காட்டுவதில்லையோ அவன் இந்த உலகத்தில் வாழ்ந்து என்ன பயன்?” பலியாக வைக்கின்ற அன்னத்தை தின்று காக்கை வெகுநாள் ஜீவிக்கின்றது. தசையும் பசையுமின்றி சில நரம்புகள் மட்டுள்ள அழுக்கடைந்த வெள்ளெலும்பை கடிப்பதில் நாய் திருப்தியடைகிறது. ஆனால் அதன் பசி தணிவதில்லை. தன் காலடியில் அகப்பட்ட நரியை சிங்கம் பெரிது படுத்துவதில்லை. யானையை அடித்து கொல்வதிலேதான் அதன் குறி இருக்கும். அதுபோல எவ்வளவுதான் கஷ்டமான நிலைமை ஏற்பட்டாலும் அவனவன் தன் நிலைக்கேற்ற பலனை அடையப் பார்கின்றான். உணவளிப்பவனிடம் நாய் வாலையாட்டி குழைந்து குழைந்து வந்து விழுந்து புரலும். ஆண் யானை சுய கௌரவத்தை விட்டுக் கொடுப்பதில்லை. அருவி நீர் சிறிய குளத்தை சீக்கிரத்தில் நிரப்பும். சுண்டெலியின் கையில் ஒர் சொட்டு நிரம்பிவிடும்.  அதுபோல சின்ன புத்தி கொண்ட மனிதர்கள் அற்ப விஷயத்திற்கு சந்தோஷம் அடைவார்கள். வேத தர்ம சாஸ்திரங்களை கைவிட்டு நன்மை தீமைகளை ஆராய்வதில் புத்தியை செலுத்தாமல் வயிறு நிரப்புவதில் விருப்பங்கொள்ளுவதால் என்ன பயன்.

சமதரையிலும் கரடுமுரடான நிலத்திலும் ஏர் இழுத்தோ அல்லது கழுத்தைக் குனிந்து பாரமான வண்டியை இழுத்துச் செல்லும் மாடுகள் நல்லவை. புனித பிறவி பெற்றவை. புல்மேய்ந்து திருப்தி யடைகிறது. அவைகளுடன் வயிறு நிரப்புவதில் விருப்பங்கொண்ட மனிதனை எப்படி ஒப்பிடமுடியும்?

நமக்கோ இப்போது வேலை கிடையாது. நாம் ஏன் இதில் தலையிடவேண்டும் என்றான் மற்றவன்

குருஸ்ரீ பகோராயின் கூற்று- வேலையற்றிருப்பவனுக்கு கொஞ்ச காலத்தில் வேலை கிடைக்கும். தலைவனுக்கு ஊழியம் செய்தால் வேலையற்றவனுக்கும் வேலை கிடைக்கிறது. வேலையிருந்தும் அதை செய்யாதவன் வேலையற்றவனாகிறான். பிறருடைய விருப்பினாலோ வெறுப்பினாலோ ஒருவன் உயர்வு தாழ்வு அடைவதில்லை. அவன் அவன் செய்கையின் விளைவாகத்தான் மதிப்போ அவமதிப்போ அடைகிறான். மலையுச்சிக்கு கற்களை கொண்டு செல்வது மிக சிரமம். மலையிலிருந்து கற்களை கீழே தள்ளுவது சுலபமானது. அதுபோலத்தான் குணமும் தோஷங்களும் ஒருவனை வந்தடைகின்றன.

இங்கிதம் அறிந்து நடத்தல்: நண்பனே! நமது தலைவர் ஓருவித குழப்பத்தில் இருக்கின்றார் என்றான் பணியாள். அது எப்படி உனக்குத் தெரியும் என்றான் நண்பன்.

குதிரைகளும், யானையும், கழுதையும் ஒரு தூண்டுதலுக்குபின் பாரத்தை சுமக்க ஆரம்பிக்கின்றன. வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் பண்டிதன் ஊகித்து அறிந்துவிடுவான். பிறர் இங்கிதத்தை அறிய முடியா புத்தி இருந்து என்ன பயன்?  முகக்குறி, அங்க அசைவு, நடை, செய்கை, வார்த்தை ஆகியவற்றாலும் கண்களிலோ முகத்திலோ ஏற்படும் மாறுதலாலும் ஒருவன் மனதில் நடப்பதை நாம் அறிய முடியும் என்றான். ஆகையால் என் புத்தி சாதுரியத்தால் எஜமானரை வசப்படுத்துவேன் என்றான்.

ஊழியம் செய்யவே சரியாய்த் தெரியாத நீ எப்படி எஜமானரை வயப்படுத்துவாய் என்றான்.

சேவகர்களின் தர்மத்தைப்பற்றி வியாசமுனிவர் சொன்னதெல்லாம் எனக்குத் தெரியும். “பலசாலிக்கு பாரம் என ஒன்றில்லை, முயற்சியுடையவர்களுக்கு தூரம் என ஒன்றில்லை, கல்விமான்களுக்கு அந்நியபூமி என ஒன்றில்லை, அன்புடன் பேசுபவர்க்கு அந்நியன் என ஒருவருமில்லை.”

உனக்குத் தகுதியற்ற இடத்தில் நீ நுழைந்தால் எஜமானர் உன்னை அவமதிக்கலாம் என்றான்.

நான் சமயசந்தர்ப்பம் அறிந்து நடந்து கொள்வேன் என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சமய சமயமறியாமல் பிருகஸ்பதியே பேசினாலும் அவன் சன்மானம் பெறாது போவதுமட்டுமல்லாமல் வெறுப்பையும் தேடிக்கொள்வான். தலைவன் ஆழ்ந்த யோசனையில் இருக்கும்போதும், இரகசிய வேலை நிமித்தமாய் செல்லும்போதும், ஓய்வு எடுக்கும்போதும், மந்திராலோசனை செய்யும்போதும் எப்படிப்பட்ட வாய்ப்புகள் இருந்தாலும் அறிவாளி குறிக்கிடுவதில்லை.

பேசும்பொழுதும், விவாதித்துக் கொண்டிருக்கும் பொழுதும், சாப்பிடும் பொழுதும், மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கும் பொழுதும் இடையில் இங்கிதமறிந்தவன் நுழையக்கூடது. குருவின் இல்லத்தில் பயபக்தியின்றி நடக்கின்றவன் துரிதமாகவும் நிச்சயமாகவும் கெட்டுப்போவான். தலைவனிடத்தில் தினமும் பயபக்தியுடன் மரியாதையாக நடக்க வேண்டும். தலைவனிடத்தில் செல்லும்போது ஆடைதிருத்தி தலைகுனிந்து செல்ல வேண்டும். அந்த நேரத்தில் தலைவனுடைய மனோநிலையும் சித்தத்தின் போக்கையும் அறிந்து தக்கபடி நடக்கவேண்டும் என்பது எல்லாம் எனக்குத் தெரியும் என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- கல்வியுமின்றி, குலமுமின்றி, புகழுக்குத் தகுதியுமின்றி இருந்தாலும் சரி, தலைவன் அருகில் ஒருவன் இருந்தால் தலைவன் அவனை ஆதரிப்பான். தலைவன், ஸ்திரிகள், கொடிகள் மூன்றும் அருகில் எது இருக்கின்றதோ அதைப் பற்றிக் கொள்ளும். தலைவன் அருகிலிருந்து அவனது கோபத்தையும் காருண்யத்தையும் அறிந்து நடக்கிறவர்கள் அந்த தலைவனின் கடுகடுப்பை சமாளித்து முன்னேறிவிடுவர். வீரன், வித்துவான், பனிவிடை செய்யத் தெரிந்தவன் ஆகியவரே பூமியில் பொன்மலரைப் பறிக்கின்றார்கள்.

பணியாள் சேவையின் இலக்கணம்: அப்படியானால் தலைவனுக்கு சேவைசெய்வது எப்படி?

தலைவனது அன்புக்குரியவனாகி செல்வாக்குப் பெற்றுள்ளவன், அல்லது விஷேசமான நாவன்மை படைத்தவன் இவர்கள் மூலமாகத்தான் கல்விமான்கள் தலைனை அனுகுகிறார்கள். தலைவனை அனுகுவதற்கு வேறுவழியில்லை. பணமில்லையென்றாலும் யோக்கிதையுள்ள தலைவனுக்கு சேவை செய்வது நல்லது. நீண்ட காலசேவையானாலும் அதன்பின் உன் வாழ்க்கை முழுவதும் அதன் பயனை அனுபவிக்க முடியும். வேலையாள் எஜமானனை துவேஷித்தால் அதைவிட மோசமான நிலை வேறில்லை.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பகுத்தறிவு அற்ற பிறவியிடம் பண்டிதன் உழைப்பதில்லை. கரிசல் நிலத்தை உழுவதில் பலன் ஏதுமிலை. எதற்கு யாருக்கு உழைக்கிறோம் என உணராமல் துன்பப்படுகிறவன் தன்னைத்தானே நிந்தித்துக் கொள்ள வேண்டியதுதான்.

தலைவனிடம் நடந்து கொள்கிறபடியே தலைவனின் தாயார், மனைவி, குமரன், மற்ற குடும்பத்தினர் அனைவரிடமும் பண்புடன் எப்பொழுதும் நடந்து கொள்ள வேண்டும். போரட்டங்களில் தலைவனுக்கு முன்னே செல்பவனும், ஊர்வலத்தில் தலைவனுக்கு பின்னே செல்பவனும் தலைவனுக்குப் பிரியமானவாகுவான். கார்ய காரியங்களை அறிந்து புரிந்து செய்பவனும் சந்தேகம் கிளப்பாமல் சொன்னதைச் செய்பவனையும், தலைவன் பேசும்பொழுது உடன் யார் பேசுவதில்லையோ, யார் அருகில் உரக்கச் சிரிப்பதில்லையோ அவனை நேசிப்பான். மற்றவர்களுடனும் மனைவிகளுடனும் யார் ரகசியம் பேசுவதில்லையோ அவனை விரும்புவான். எப்பொழுதும் வேண்டியவன் என்ற மமதையில், கஷ்ட நேரத்தில் மரியாதைக் குறைவாக நடக்காமலிருப்பவன், தலைவனுடைய எதிரியைத் தானும் வெறுத்து பிரியத்தை பெற்றவர்களுக்கு விருப்பமான காரியத்தைச் செய்கிறவன், தலைவனுடைய எதிரியுடன் எந்த உறவும் புழக்கமும் வைக்காமலிருப்பவன், சண்டையும் சமாதானத்தையும் ஒன்றாக பாவிக்கின்றவன், வெளியூரில் இருப்பதையும் சொந்த ஊரில் இருப்பதையும் ஒன்றாகப் பாவிப்பவன், சூதாட்டத்தை எமனாகவும், மதுவை ஆலகால விஷமாகவும், பிறர் மனையை சிலைகளாகவும் பாவித்து நடப்பவன் ஆகியவர்களையே தலைவன் மிகவும் விரும்புகின்றான். என்பதை அறிவேன் என்றான்.

சரி, அங்கே போய் தலைவனிடம் முதலில் என்ன பேசுவாய்?

தலைவன் வீழ்ச்சியை விரும்பாதவன். அவன் உத்திரவை எதிர்பாராமல் பேசுவதே நல்ல தர்மம். மற்றவை அதர்மம்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- காலத்தில் பெய்தமழையால் ஒரு விதையிலிருந்து மற்ற விதைகள் முழைப்பதுபோல் வார்த்தைக்குக் கிடைக்கும் பதிலிருந்து மற்ற பேச்சுக்களும் தோன்றும். நேர்மையுள்ள அறிவாளி அபாயத்தையறிந்து அபாயத்தின் உபாயத்தை அறிந்து காரியம் சித்திக்கும் வழியை வெளிப்படையாக காட்டுவான்.

தலைவனும் பாம்பும் ஒன்று: தலைவர்களைத் திருப்தி செய்வது மிகவும் சிரமாயிற்றே!

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சுகபோகத்திலும், ஆடை அலங்காரத்திலும், கொடூரத்திலும், கோணல் மாணலாகப் பேசுவதிலும், கோபத்திலும், வசியப்படுத்துவதிலும் தலைவர்கள் பாம்பை போன்றவர்கள்

பாம்பு படத்தை உடையது, சட்டையை உரிப்பது, கொடூர நஞ்சை உடையது, நெளிந்து செல்வது, கோபமுடையது, வசியப்படுத்தக்கூடியது எனவே அது தலைவனைப் போலிருக்கிறது. தலைவன் விஷமத்தனமுள்ளவன், கடின சித்தம் உடையவன், நீசதன்மையற்றவன், எல்லோராலும் சூழப்பட்டவன், நாள்தோறும் கஷ்டங்களுக்கு ஆளாகின்றான். எனவே அவன் மலையைப் போலிருக்கின்றான். மலை அசுத்தமான பூமியையுடையது, கடினமான உருவம் பெற்றது, உயர்ந்தது, எல்லோராலும் மிதிக்கப்படுவது, கொடூர மிருகங்களை உடையது, எனவே அது தலைவனைப் போலிருக்கின்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நகமுள்ள ஜீவராசிகளிடமும், நதியிடமும், கொம்புள்ள மிருகங்களிடமும், ஆயுதம் தரித்தவனிடமும் நம்பிக்கை வைக்காதே. அதுபோல ஸ்திரீகளிடத்திலும், தலைவர்களிடத்திலும் நம்பிக்கைவைக்காதே!

அது உண்மைதான். ஒருவன் மனதிலுள்ள எண்ணத்தை புத்திசாலி ஊகித்தறிந்து நிச்சயமாகத் தன்வசப்படுத்திக் கொள்கிறான். ஒருவன் கோபமாயிருக்கும்போது அவனைக் கெஞ்சி முகஸ்துதி செய். அவனது நண்பர்களை நேசி. எதிரிகளை துவேஷி. அளித்த வெகுமதியை வாயாரப் புகழ். இப்படி அவனை வசியம் செய்வதைத் தவிர வேறு மாயாஜால வித்தைகள் கிடையாது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- செயலிலோ, நாவன்மையிலோ, கல்வியிலோ சிறந்தவனை அணுகி அவனுக்குச் சேவை செய். அவனிடம் அந்தத்திறன் மங்கி மறைந்து போனால் அவனை விட்டு விலகு. பயனுள்ள இடம் பார்த்து சொல்லைப் பிரயோகம் செய். வெள்ளைத்துணியில்தான் மற்ற சாயங்கள் நன்றாய் ஏறும். பிறரின் பலமும் வீர்யமும் அறியாத வரையில் முயற்சி செய்யாதே. எவ்வளவு முயற்சித்தாலும் இமயமலைக்கருகில் நிலவு சோபிப்பதில்லை.

அது உன் முடிவு என்றால் நீ தலைவனிடம் செல். உன் முயற்சி வெற்றியடையட்டும். உன் விருப்பங்கள் நிறைவேறட்டும். தலைவன் அருகிலிருக்கும்போது நீ கவனமாக இரு. உன்னையும் உன் அதிர்ஷ்டத்தையும் நம்பிப் பிழைப்பவனல்வா நான் என்றான் நண்பன்.

தலைவன் இவன் வருவதைப்பர்த்து வாயில்காப்போனிடம் வருபவன் நமக்கு நன்றாகத் தெரிந்தவன். தடையில்லாமல் உள்ளே வர விடு என்றார்.

பணியாட்களை எப்படி நடத்துவது: வணக்கம் கூறி மரியாதையுடன் நின்றவனைப்பார்த்து தலைவன், பதில் வணக்கம் செலுத்தி, சௌக்கியம்தானா! உன்னைப் பார்த்து ரொம்பக் காலமாயிற்று என்றார்.

தலைவரே! என்னால் தங்கள் சமூகத்திற்கு ஒரு பிரோயோசனும் இல்லை என்றாலும் சரியான சமயம்வரும்போது சொல்லித்தான் ஆகவேண்டும். தலைவர்களுக்கு உதவாதது ஒன்றும் இல்லை. நாங்கள் தங்கள் சமூகத்தில் பரம்பரையாக வேலை செய்பவர்கள். எந்தக் காலத்திலும் தலைவரைப் பின்பற்றுபவர்கள். எங்களுக்கு தலைவனை விட்டால் வேறுகதி கிடையாது என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பல்லைக் குத்துவதற்கும் காதைக் குடைவதற்கும் துரும்பே உபயோகப்படும்போது சொல்லும் செயலும் உள்ள மனிதனை எப்படியும் பயன்படுத்தலாம். பரம்பரையாக வந்த தலைவன், பணக்காரன் யாராயிருந்தாலும் வேலையாட்களின் குணவிஷேசங்களை அறியாவிட்டால் அவர்களிடம் வேலையாட்கள் தங்குவதில்லை. கீழோரால் சமமாக நடத்தப்படுபவனும், சமமானவர்களால் கௌரவிக்கப்படாதவனும், உயர்ந்த நிலையில் வைக்கப்படாதவனும் எஜமானனை விட்டு விலகுகிறார்கள். தங்க ஆபரணத்தில் பதிக்கக்கூடிய ரத்தினத்தை வெள்ளீயத்தில் பதித்தால் இரத்தினம் விகாரமாய் விடுவதில்லை, சோபிக்காமல் போவதுமில்லை. ஆனால் அதை அணிபவனுடைய குணம் வெளிப்படும். புத்திசாலி, இரக்கமுள்ளவன், நம்பத்தகாதவன், முட்டாள், என வேலையாட்களைத் தரம்பிரிக்கத் திறமை பெற்ற தலைவன் அந்தந்த வேலைக்கு லாயக்கானவர்களைப் பார்த்து நியமனம் செய்கிறான்.

என்னைப் பார்த்து வெகுநாளாயிற்று என்றீர்கள். எங்கு இடதுசாரி வலதுசாரி என்ற வித்தியாசம் இல்லையோ அங்கு மானமுள்ள மனிதன் கணநேரம் தங்கமாட்டான். எல்லா வேலையாட்களையும் பாகுபாடின்றி ஒரே மாதிரி எஜமானர் நடத்தினால் வேலையில் கெட்டிக்காரர்கள் உற்சாகத்தை இழக்கின்றனர். சிவந்த கண்ணுக்கும் சிவப்பு ரத்தினத்திற்கும் வித்தியாசம் தெரியாத இடத்தில் இரத்தின வியாபாரம் செய்வது எப்படி? வேலையாட்கள் இல்லாமல் எஜமானரில்லை. எஜமானரில்லாமல் வேலையாட்களும் இல்லை. இதில் பரஸ்பர பந்தம் வேண்டும்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- குதிரை, ஆயுதம், சாஸ்திரம், வீணை, வார்த்தை, ஆண், பெண் ஆகியன பிரயோஜனப்படுவதும் படாமற் போவதும் அவர்களை உபயோகிப்பவனின் தரத்தைப் பொறுத்தது.

என்னை நீங்கள் நரியைப் போன்றவன் என நினைக்கலாம், பட்டு பூச்சியிலிருந்தும், தங்கம் கல்லிலிருந்தும், தாமரை சேற்றிலிருந்தும், நீலோற்பலம் சாணத்திலிருந்தும், நெருப்பு கட்டையிலிருந்தும், நாகரத்தினம் பாம்பின் தலையிலிருந்தும், கோரோஜின் பசுவின் பித்த ஜலத்திலிருந்தும் உதிக்கின்றன. குணமுள்ளவர்கள் தன் சொந்தக் குணத்தினாலேயே பிரகாசிக்கின்றனர். பிறப்பினால் அல்ல.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- எலி வீட்டில் பிறந்ததாயிருக்கலாம், என்றாலும் அது தீங்கு செய்வதால் அதைக் கொல்கின்றோம். பூனை வீட்டில் பிறக்காமல் இருந்தாலும் அது நன்மை செய்வதால் அதை ஆதரித்து வீட்டில் வைக்கின்றோம். திறமையற்றவன் நம்பத்தக்கவனாகவும், திறமையுள்ளவன் கெடுதி செய்பவனாகவும் இருந்தால் என்ன பயன்.

தலைவரே திறமை, விசுவாசம் இரண்டும் உள்ள என்னை நீங்கள் அசட்டை செய்யக்கூடாது. உலகபழக்க வழக்கங்களை நன்கு அறிந்த அறிஞர்களை அவமதிக்கக்கூடாது. அவர்களுக்குச் செல்வம் புல்லுக்குச் சமம். அவர்களை சுலபமாக கட்டுப்படுத்த முடியாது. மதநீர் அதிகரித்த யானையை தாமரைக் கொடிகளால் கட்டிப்போடமுடியாது.

அப்படி எல்லாம் சொல்லாதே, நீ வெகுகாலமாக நம்மிடம் இருப்பவன். உன் மனதில் இருப்பதை தெளிவாகச் சொல்.

தலைவரே! நீங்கள் எதையோ நினைந்து வருந்துவதாக அறிகிறேன், பிரபுவே, சொல்லத்தகாததாக இருந்தால் சொல்லாதீர்கள்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சிலவற்றை மனைவியிடமும், சிலவற்றை நண்பர்களிடமும், சிலவற்றைப் புத்திரனிடமும் ஒருவன் சொல்ல வேண்டும். எல்லோரும் அவனுக்கு நம்பிக்கையானவர்களே. ஆனாலும் எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லக்கூடாது.

சிதையா நெஞ்சு கொள்: தலைவன் நினைத்தான், இவன் யோக்கியனாக தெரிகின்றான். இவனிடம் என் மனதிலுள்ளதைச் சொல்கிறேன்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நம்பிக்கையான சிநேகிதனிடமும், குணமுள்ள வேலைக்காரனிடமும், பதிபக்தியுள்ள மனைவியிடமும், வல்லமையுள்ள எஜமானரிடமும் மனதை வருத்தும் விஷயங்களைச் சொல்வதால் துக்கம் குறையும்.

அன்பனே! இந்தக் கூட்டத்திலிருந்து விலகிச் சென்றுவிடலாம் என நினைக்கின்றேன். ஏனெனில் இந்த கூட்டத்தில் புதிதாக வந்தவன் பார்ப்பதற்கு நல்ல குணவானாகவும் பலசாலியாகவும் இருக்கின்றான். இந்தக் கூட்டத்திலிருப்பவர்களின் நன் மதிப்பை அவன் பெற்றிருக்கின்றான் என்றார்.

தலைவரே, வெள்ளம் அணையையும், பிதற்றல் ரகசியத்தையும், பகைமை நட்பையும், வெறும் வார்த்தை கோழையையும் அழித்தொழிக்கின்றது. முன்னோர்கள் வழியில் பரம்பரையாக வந்த நீங்கள் உங்கள் உரிமையை விட்டுப் போவது தலைவருக்கு உசிதமல்ல. சத்ரு பயங்கரமாக இருக்கும்பொழுதும், கோபமாக இருக்கும் பொழுதும், தைரியத்தை கைவிடாத தலைவன் அவமானமடைவதில்லை.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- ஒருகாலை ஊன்றி மற்றொருகாலை எடுத்து வைப்பதுதான் புத்திசாலித்தனம். புதிய வீட்டை நன்றாகப் பார்த்து நிச்சயம் செய்யாமல் பழைய வீட்டை கைவிடலாகது. பிரம்மா பயமுறுத்தினாலும் தைரியசாலிகள் தைரியத்தைக் கைவிடுவதில்லை. கோடை வெய்யில் குட்டையைத்தான் வற்றடிக்கும், சிந்து நதியோ என்றும் ஓடிக்கொண்டிருக்கும். கெட்ட காலத்தில் துக்கப்படாமலும், நல்ல காலத்தில் சந்தோஷத்துடனும் இருப்பவனே திலகம் போன்றவன். ஒரு தாய் அப்படிப்பட்டவனைத்தான் பெற்றெடுக்கின்றாள். தன் பலவீனத்தால் தலை வணங்குபவன் புல்லுக்கு ஒப்பானவன்.

நீங்கள் கண்ணுக்குத் தெரிவதை வைத்து முடிவு எடுக்கக் கூடாது. உண்மையைக் கண்டறிய வேண்டும். கொழுப்பும் மாமிசமும் நிறைந்தது என நினைத்து உள்ளே புகுந்து பார்த்தால் வெறும் தோலும் மரக்கோல்களுமாக இருக்கக்கூடும். என்றான். அது எப்படி? என்றார் தலைவர்.

நரியும் பேரிகையும்: அந்தக் காட்டில் இருந்த நரி இரைதேடித் தேடி பசியால் வாடி தொண்டை வரண்டு சுற்றித் திரிந்தது. காட்டின் மத்தியில் அரசனின் போர்களத்தைக் கண்டது. அங்கு ஒரு நிமிஷம் நிற்பதற்குள் பலத்த சத்தம் கேட்ட நரி மனக்கலக்கத்தினால் கவலையடைந்தது. ஐயோ! ஆபத்து வந்து விட்டதே, என்ன மிருகம் இப்படி சத்தம் இடுகிறதோ என நினைத்து இங்குமங்கும் பார்த்தபோது மலையுச்சியில் பேரிகையைக் கண்டது. காற்றின் வேகத்தினால் நாணல் நுனிகள் அதில் பட்டு சத்தம் கிளம்பி பின் அடங்கி விடும். அருகில் சென்று பார்த்தபோது இதை நரி கண்டு கொண்டது. அருகில் சென்று எல்லா பக்கங்களிலும் சுற்றிவந்தது. ஆஹா இரை கிடைத்து விட்டது. இதில் நிறைய மாமிசமும் கொழுப்பும் இருக்கும் என நினைத்து ஒரு பக்கத்தில் குடைந்து உள்ளே சென்றது. நல்ல காலம் அதன் பல் உடைய வில்லை. புகுந்து பார்த்தபோது வெறும் தோலும் மரக்கோல்களுமாக இருந்தது கண்டு நிராசையடைந்தது. அதனால்தான் வெறும் உருவத்தை வைத்து முடிவு செய்யலாகாது என்றேன்.

நல்ல பணியாளின் அடையாளம்: தங்களுக்காக நான் அவனை சந்தித்து விபரம் அறிந்து வருகின்றேன், பின் யோசித்து முடிவு செய்யலாம் என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- எஜமானர் கட்டளையிடுகிறபோது நல்ல உண்மையான வேலைக்காரன் பயமெதுவும் கொள்வதில்லை. எரிகிற நெருப்பிலும் நுழைவான், கடக்க முடியாததையும் கடந்து செய்ய முடியாததையும் செய்து விடுவான். கட்டளையை கேட்டு இது கஷ்டம், இது சுலபம் என வாது செய்பவனால் எதையும் செய்து முடிக்க முடியாது.

தன் பணியாள் சென்றவுடன் தலைவன், ஐயோ! என் மனதிலிருந்ததை அவனிடம் சொல்லி விட்டேன். என்னிடம் பணியிலிருந்து கொஞ்ச நாள் விலகியிருந்த காரணத்தினாலோ, அல்லது ஊக்கப்பணம் பெருவதற்காக நினைத்தோ அவன் எனக்கு தீமை செய்தால் என்ன செய்வது என யோசித்தான். அவனை முதலில் கௌரவித்து பின் பணியிலிருந்து நீக்கி அவமானப்படுத்தியதால் நற்குடியில் பிறந்தாலும் அவன் பழிவாங்கவே நினைப்பான். எனவே அவன் நோக்கம் தெரியும் வரை வேறு இடத்தில் காத்திருப்போம் என முடிவு செய்தான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- ஒரு ஆளைச் சுலபத்தில் அப்படியே நம்பிடும் பலசாலியைப் பலமில்லாதவனும் வென்றுவிடுவான். சுலபத்தில் நம்பாத பலவீனனை பலசாலியாலும் வெல்ல முடியாது.

அந்தக் கூட்டத்தில் புதியதாக சேர்ந்தவனைத் தேடிக்கண்டான் பணியாள். அவனிடம் அளவளாவியபோது அவன் உள்ளத்தில் பயம் குடியிருப்பதைக் கண்டான். தலைவன் தன்னைக் கூட்டத்தைவிட்டு வெளியே அனுப்பிவிட்டால் என்ன செய்வது என குழம்பியிருந்தான். அவனை சமாதனப்படுத்தி தலைவரிடம் அறிமுகப்படுத்தி வைக்கின்றேன் என அழைத்து வந்தான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தொடர்ந்து சங்கடங்கள் ஏற்பட்டால்தான் ஆலோசகர்களுக்குச் சுகம். அந்தஸ்து. ஆரோக்கியமுள்ளவன் எப்போதும் வைத்தியனைத் தேடமாட்டான்.

பணியாள் அந்த புதியவனை கூட்டிவந்து ஓரிடத்தில் நிறுத்திவிட்டு தன்னிடம் வருவதைக் கண்டான்.

பெரியவர்களின் குணம்: தலைவரே, என் மீது கோபம் கொள்ளாதீர்கள். அற்பமான பொய்யானாலும் அதை தங்கள் முன் சொன்னால் சொல்கிறவனின் தெய்வங்களுக்கும் குருவுக்கும் அழிவு ஏற்படும். எஜமானரே தெய்வத்தின் அவதாரம் என முனிவர்கள் பாடுவதால் உங்களைத் தெய்வம் போல் கருதி உண்மை சொல்கின்றேன். தங்கள் விருப்பப்படி அவனைக் கண்டு அவனுடன் பேசி அவனைக் கூட்டி வந்துள்ளேன் என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- வளைந்து குனிகின்ற மிருதுவான புல்லைச் சூறைக்காற்று பிடுங்கி எறிவதில்லை. ஓங்கி வளர்ந்த மரங்களைத்தான் பிடுங்கி எறிகின்றது. பெரியவர்கள் பெரியவர்களிடத்தில்தான் தன் பராக்கிரமத்தைக் காண்பிப்பார்கள்.

புதியவனைப் பார்த்து பணியாள், இந்தக் கூட்டத்தில் இத்தனைநாள் இருந்தும் தலைவரிடம் நீ மரியாதை நிமித்தம் பேசவில்லை. மற்றவர்கள் எல்லாம் மதித்து நடக்கும்போது நீ மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கின்றாய் என்று கேட்டான்.

புதியவன் மிகுந்த கவலையுடன் தலைவரே, நீங்கள் தயையுள்ளவராகவும், சாதுரியமானவராகவும் இருக்கின்றீர்கள் என்னை மன்னித்து எனக்கு அபயம் தாருங்கள் என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பூமிக்கு எல்லையுண்டு, கடலுக்கும் மலைக்கும் எல்லையுண்டு, தலைவரின் எண்ணங்கள் எப்படிப்பட்டவை, யாரைப்பற்றியவை, எதைப்பற்றியவை என்பதற்கு எல்லையே கிடையாது. நாகரீகமும், நேர்வழியும், தூயநட்பும் உள்ள செயலிலே சோதித்தி அறியப்பட்ட ஆலோசகர்கள்தான் தகுதியுடையவர்கள். பளபளப்பான மரத்தின் தரம் பரிசோதிக்கப்பட்டு கொட்டியாயும் நேராயும் இருக்கும் மரம்தான் வீட்டைத்தாங்கும் தகுதியுடையது. நட்பு முறிந்தபோது அதை சீர்படுத்துவதில் ஆலோசகர்களின் அறிவு நுட்பம் வெளிப்படும். பெருநோய்வந்தால் வைத்தியரின் அறிவு வெளிப்படும். சாதாரண காலத்தில் யார்தான் அறிவாளியாக முடியாது!

தலைவர் தன் பணியாளின் திறமையைப் பாராட்டி அவனைத் தன்னுடன் வைத்துக் கொண்டான்.

புதியவன் மரியாதையை ஏற்ற தலைவன் நீங்கள் எப்படி இந்த வனத்திற்கு வந்தீர்கள் எனக்கேட்க, தன் நண்பனுடன் வந்தது, தனக்கு விஷக்காய்ச்சல் வந்தது, பின் தன்னை அவர்கள் விட்டுப் போனது, இந்தக் கூடடத்தினர் கண்டு பச்சிலை வைத்தியம் செய்தது நலம் பெற்றது அனைத்தையும் கூறினான். இந்தக் காட்டில் பல மிருகங்கள் இருப்பதால் தனியாக எங்கும் செல்லவேண்டாம் என அருகிலேயே இருங்கள் என்றான் தலைவன்.

பணியாள் தான் தலைவரின்நன்மதிப்பை பெற்று விட்டதை நினைத்து ஆனந்தம் அடைந்தான். பின் தன் நண்பனிடம் கர்வத்தால் சேவகர்களைச் சரியாக நடத்தாதவன் காலிடறி விழுந்து விடுவான் என்றான். அது எப்படி? என்ற நண்பனுக்கு அதைச் சொல்லலானான்.

வியாபாரியின் கதை: அந்த நகரத்திலிருந்த வியாபாரி ஒருவன் பல ஊர்களை நிர்வகிக்கும் அரசாங்காப் பொறுப்பையும் ஏற்றிருந்தான். அவனின் கெட்டிக்காரத்தனத்தால் மக்கள் திருப்தியோடிருந்தனர்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தலைவனுக்கு நன்மை செய்பவன் மக்களின் நன்மதிப்பை பெறாமல் வெறுப்பை பெறுகிறான். மக்களுக்கு நன்மை செய்பவனை தலைவன் கைவிடுகின்றான். இப்படி முரண்பாடுகள் இருக்கும்போது தலைவனுக்கும் மக்களுக்கும் சமமாக காரியங்களைச் செய்கிறவன் கிடைப்பது அரிது.

அவனின் பெண்ணின் கல்யாணத்திற்கு அந்த ஊர்மக்களையும் மற்றுமுள்ள பெரிய மனிதர்களையும், தலைவரையும் அவரின் பரிவாரங்களையும் வரவழைத்து அன்புடன் உபசரித்தான். அந்த விருந்தில் தலைவனின் வேலையாள் ஒருவன் தன் தகுதிக்கு மீறி குரு எதிரில் ஆசனத்தில் அமர அவனை வியாபாரி வெளியேற்றியதால் கோபங் கொண்டவன் வியாபாரியைப் பழிவாங்க திட்டமிட்டான். என்ன முயன்றும் முடியாத நிலையில் தூக்கமின்றி இளைத்துப் போனான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தீமை செய்யத் திராணியில்லாதவன் வெட்கமில்லாமல் கோபங்கொண்டு என்ன பயன். சூட்டின் வேகத்தில் எவ்வளவு உயரக்குதித்தாலும் பருப்பு அந்த வாணலியை உடைக்க முடியாது.

வியாபாரிக்கு தீமைசெய்ய திராணியில்லை என நினைத்தவன் மனதில் யோசனை தோன்ற, தலைவனின் படுக்கையறை காலியில் சுத்தம் செய்தபொழுது, “அட அநியாமமே, வியாபாரி செய்த அக்கிரமத்தை என்னவென்று சொல்வது, தலைவரின் மனைவியைக் கட்டித்தழுவி சுகம் காண்கின்றானே என முனுமுனுத்தான்.” அரைத்தூக்கத்திலிருந்த தலைவன் எழுந்து பணியாளிடம் அவன் சொன்னது உண்மைதானா! எனக் கேட்டப்போது தலைவரே, இரவு கண்விழித்தது சூதாடியதால் தூக்கக் கலக்கத்தில் உளரிவிட்டேன், என்ன சொன்னேன் என்று எனக்குத் தெரியவில்லை என்றான். தலைவன் குழம்பினான். இவனும் வியாபாரியும் தங்குதடையின்றி இங்கு வந்து போகக்கூடியவர்கள். வியாபாரி மனைவியை ஆலிங்கணம் செய்தததை இவன் பார்த்திருப்பானோ! என நினைத்தான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- எதை விரும்புகிறோமோ, அல்லது நமது கவனம் அதிகமாக ஈர்கப்பட்டாலோ, அதையே நினைந்து நினைந்து கனவிலும் அதை ஒத்தவாறு செயல் செய்வதாகவோ அல்லது நடப்பதாகவோ, பேசுவதாகவோ இருக்கும். நல்லதோ கெட்டதோ மனித மனத்திலுள்ள இரகசியங்கள் எல்லாம் தூக்கத்தில் பேசும்போதும் குடி போதையிலிருக்கும் போதும் வெளிப்பட்டு விடுகின்றது.

மேலும் ஸ்திரீகள் ஒருவனோடு வம்பளப்பாள், இன்னொருவனைக் கனிவுடன் பார்ப்பாள், மூன்றாமவனை மனதில் நினைத்துக் கொண்டிருப்பாள், யாரைத்தான் பெண் உறுதியாகக் விரும்புகின்றாள்? எனத் தெரியாது. அதனால்தான் அவள் மனது கடல் என கூறியுள்ளார்கள். இடவசதி, காலவசதி, இல்லாமல் போனாலும் அல்லது விரும்பிச்சேர ஆண்பிள்ளை இல்லாமற் போனாலும் பெண்கள் பதிவிரதைகளாக ஆகிவிடுவார்கள். என் மனைவி என்னைக் காதலிக்கின்றாள் என்று எந்த முட்டாள் எண்னுகிறானோ அவன் கூண்டுப்பறவைப்போல என்றென்றும் தன் மனைவிக்கு அடிமையானவனாக இருப்பான். என பலவாறு துயரப்பட்டு புலம்பினான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- எத்தனைக் கட்டைகள் போட்டாலும் நெருப்புக்குத் திருப்தியில்லை, எத்தனை நதிகள் நீரைக் கொட்டினாலும் சமுத்திரத்திற்கு திருப்தியில்லை. எத்தனை ஜீவராசிகளை கொண்டு சென்றாலும் எமனுக்குத் திருப்தியில்லை. வேசிக்கு எத்தனை ஆண்களைச் சேர்ந்தாலும் திருப்தியில்லை.

தலைமையின் கிருபை நிலையற்றது: அன்றுமுதல் வியாபாரியிடம் பாராமுகம் கொண்டான். அவன் வரவை தடுத்தும் விட்டான். தலைவன் தன்னை நிராகரிப்பதைக் புரிந்தவன் அதற்காண காரணத்தை அறிய யோசனைக் கொண்டான். செல்வம் சேர்ந்தவனிடம் செருக்கும் சேரும். உணர்ச்சி வசப்படுகிறவன் ஆபத்தின் வசமாவான். பெண்ணால் துயரப்படாதவன் உண்டா! தலைவர் யாரைத்தான் மனதார நேசிக்கின்’றான். காலனின் எல்லையைத் தாண்டியவன் யார். ஏழையை மதிக்கின்றவன் யார். துஷ்டனுடன் சகவாசம் சேமத்திற்கு பகையாகும். தலைவருக்கோ மற்றவருக்கோ மனதார தீங்கு நினையாத நம்மை ஏன் தலைவர் இவ்வாறு நடத்துகின்றார் என யோசிக்கலானான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- காக்கையிடம் சுத்தத்தையும் சூதாடியிடம் சத்தியத்தையும், பாம்பினிடம் இரக்கத்தையும், பெண்களிடம் காமவேட்கைத் தணிவையும், அலியினிடத்தில் தைரியத்தையும், குடிகாரனிடத்தில் தத்துவ ஞானத்தையும், தலைவனிடத்தில் நேசத்தையும் பார்ப்பதும் கேட்பதும் அரிது.

எனினும் தலைவரை நேரில் பார்த்து விபரம் அறிய முற்பட்டபோது வாயிற் பணியாளர்கள் தடுக்க, அப்போது வியாபாரியைப்பற்றி தவறாக தலைவரிடம் கூறியவன் அங்குவந்து, வாயிற்காப்போர்களே, ஜாக்கிரதையாக இருங்கள், அரசனின் அருள் பெற்றதனால் என்னை கழுத்தைபிடித்து வெளியே தள்ளியதைப்போல் உங்களையும் தள்ளுவான் எனக்கூறியதைகேட்ட வியாபாரி தன்நிலைக்காண உண்மையை புரிந்தான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தலைவனிடத்தில் வேலை செய்கிறவன் குலமற்றவனாகவோ, மூடனாகவோ, கொடைக்குத் தகுதியில்லாதவனாகவோ இருந்தாலும் அவனை எல்லோரும் அவன் சேர்ந்த இடம் பொருட்டு மதிப்பர். அந்த சேவகன் கீழோனாக இருந்தாலும், பேடியாக இருந்தாலும் தன்னைப் பிறர் அவமதிப்பதைச் சகிக்கமாட்டான்.

அவமானத்துடனும் கலக்கத்துடனும் வீடு சென்ற வியாபாரி, விருந்தில் தான் வெளியனுப்பிய தலைவரின் பணியாளை வரவழைத்து, அந்தச் செயலுக்காக வருத்தம் தெரிவித்தான். உணர்ச்சிவசப்பட்டு நான் உன்னை வெளியே தள்ளவில்லை. குருவின் முன்னால் அமர்ந்ததே அந்த நிகழ்விற்கு காரணம், எனக்கூறி அவன் மகிழும் வண்ணம் வெகுமதி அளித்தான். அதை சந்தோஷத்துடன் பெற்றுக்கொண்டு நிறைந்த உள்ளத்துடன் சென்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சின்னஞ்சிறு விஷயமே உயர்வும் அளிக்கிறது. தாழ்வும் அளிக்கிறது. தராசின் முள்ளும், துஷ்டனும் ஒரே மாதிரியானதே. மனதைப் புன்படுத்திய நிகழ்வு பழிவாங்கும் செயலைத் தூண்டிவிடும். வருந்தும் மன்னிப்பு பழிவாங்கிய பாவத்தை துடைக்க முயலும்.

தராசின் முள்ளும் துஷ்டனும்: அடுத்தநாள் தலைவரின் அறையைச் சுத்தம் செய்துகொண்டே, அட பாவமே, நம் தலைவருக்குத்தான் என்ன பகுத்தறிவு. மலம்ஜலம் கழிக்கும் நேரத்தில் கூட கால விரையமில்லாமல் வெள்ளரி சாப்பிடுகின்றார் என பிதற்றினான். முன்போலவே அரைத்தூக்கத்தில் இருந்த தலைவன் விழித்தெழுந்து பணியாளை நோக்கி என்ன உளறுகிறாய் எனக் கோபமாகக் கேட்டான். தலைவா நான் இரவு விழித்து சூதாடியதால் தூக்கக் கலக்கத்தில் உளறிவிட்டேன் என முன்புகூறியதுபோல் உரைத்தான்.

அரசன் யோசித்தான். பிறந்தது முதல் அப்படிப்பட்ட நேரத்தில் தான் எதும் செய்வதுமில்லை, அப்படி ஏதும் பார்த்ததுமில்லை. அப்படியாயின் இவன் எதோ உளறுபவனாயிருக்கவேண்டும். முன்பு கூறியது கூட இப்படிப்பட்ட உளரல்களாய்த்தான்யிருக்க வேண்டும். வியாபாரி மிகவும் நல்லவன் அவன் அப்படியெல்லாம் நடந்து கொள்ளமாட்டான். என நினைத்து வியாபாரியை அழைத்துவரச் செய்து அவனுக்கு பொன் பொருள்கொடுத்து மீண்டும் பதவியில் அமர்த்தினான்.

அதனால்தான் பணியாட்கள், ‘சேவகர்களை கர்வங்கொண்டு சரியாக நடத்தாமலிருப்பவன் காலிடறி விழுகிறான்’ என்றேன் என்றான்.

தலைவனுடைய விருப்பப்படியே அவனுடனிருந்தான் புதியவன். அவர்களின் நட்பு பலமானது. எங்கும் இருவரும் சுற்றித்திரிந்தனர். அடிக்கடி இருவரும் பேசிக்கொள்வர் இரகசியமாக. புதியவனை அறிமுகப்படுத்திய பணியாள் முதல் யாரும் அருகில் செல்ல முடியவில்லை. தான் கற்ற தர்மங்களை புதியவன் தலைவருக்கு கற்றுக் கொடுத்தான். தலைவன் தன் கடைமைகளை மறந்து வேட்டையாடக்கூட செல்வதில்லையாதலால் மற்றவர்களுக்கு உணவு பிரச்சனையானது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- உயர் குலத்தவனானாலும், பெருமை மிகுந்தவனாகவும் ஒரு தலைவன் இருக்கலாம், அவனிடத்தில் இருப்பதில் இலாபமில்லை என்றால் வேலையாட்களும் அவனைவிட்டு நீங்குவர். பட்டுப்போன மரத்தை விட்டு பறவைகள் நீங்குவதுபோல. மரியாதை யுள்ளவர்களாகவும், உயர்குலத்தினராகவும் எஜமான விசுவாசம் உள்ளவர்களாகவும் இருக்கும் வேலையாட்கள் சம்பளமின்றி எத்தனை நாட்கள் வேலைசெய்வர். சம்பளம் கொடுக்கும் தலைவன் எவ்வளவு கோபித்தாலும் வேலையாட்கள் ஒருபோதும் விலகுவதில்லை. தலைவர்கள் மற்ற தலைவர்களை ஏமாற்றுகின்றனர். வைத்தியர்கள் நோயாளிகளையும், வியாபாரிகள் தங்களிடம் சரக்கு வாங்குபவர்களையும், திருடர்கள் ஏமாந்த பேர்வழிகளையும், பிச்சைக்காரர்கள் குடுப்பஸ்தர்களையும், வேசிகள் காமுகர்களையும் விழுங்குகின்றனர். வேலை எல்லோரையும் விழுங்குகிறது பெரிய மீன்கள் சின்ன மீன்களை விழுங்குவதுபோல்.

பணியாளின் நண்பன் சொன்னான். தலைவருக்கு இப்போழுது நாம் முக்கியமில்லை என்றாயிற்று. வேட்டையாடச் செல்வதில்லை. தன் சொந்த விஷயங்களை மறந்து விடுகிறார். முன்புபோல் உன் பேச்சை கேட்பதில்லையாயினும் சொல்ல வேண்டியது உன் கடமை என்றான். தலைவர்கள் காதில் போட்டுக் கோண்டாலும் சரி, அவர்களின் குற்றங்களைத் தவிற்கும் பொருட்டு ஆலோசனை சொல்ல வேண்டும். இந்த புதியவனை தலைவனுடன் சேர்த்துவைத்தது நீ. ஆகவே நீதான் உண்மையை உணர்த்தவேண்டும் என்றான்.

வாஸ்தவம் குற்றம் என்னுடையதுதான், ஆட்டுச்சண்டையால் குள்ளநரியும், திருடனால் நம்மைப்போன்றவர்களும், பிறர்காரியங்களில் பிரவேசிக்கின்றவர்களும் தமக்குத்தாமே தீங்கு விளைவித்துக் கொள்கின்றனர் என்றான். அது எப்படி? என்றான் நண்பன்.

சந்நியாசியும் கள்ளசீடனும்: அந்த நாட்டின் மடாலயத்தில் இருந்த சந்நியாசி பல யாகங்கள் நடத்தியதன் பலனாக அவனுக்கு நிறைய சன்மானங்களும் பொருளும் கிடைத்தன. அவைகளை விற்று திரண்ட செல்வத்தை யாரையும் நம்பாமல் தன் அக்குளில் வைத்தபடியே இருப்பான். இரவும் பகலும் அந்தபை அவனிடமிருந்தது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பணம் சேர்ப்பதிலும் துக்கம், சேர்த்தபின் காப்பதிலும் துக்கம், இழந்தாலும் துக்கம், செலவழித்தாலும் துக்கம். பணத்தால் எந்நிலையிலும் துக்கம்தான்.

சந்நியாசியிடம் பணப்பை இருப்பதைத் தெரிந்த திருடன் அதை திருட முயற்சித்தான். மடாலயம் கற்களால் கட்டப்பட்டிருப்பதால் அதை உடைத்து செல்லமுடியாது, கதவும் மிகவும் உயரத்தில் இருந்ததால் தாண்டவும் முடியாது. அவனோடு பேசி நம்பவைத்து நேரம் வரும் பொழுது திருட திட்டமிட்டான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பற்று அறுத்தவன் அதிகார பீடத்தில் அமரமாட்டான். காமமற்றவன் அலங்காரப் பிரியன் ஆகமாட்டான். புத்தியற்றவன் முகஸ்துதி செய்யமாட்டான், சத்தியம் பேசுபவன் வஞ்சகனாகமாட்டான்.

சந்நியாசிடம் சிஷ்யனாக நம்பிக்கையை பெற நினைத்தான். சந்நியாசி அருகில் சென்று, ‘சுவாமி, இந்த உலகம் சாரமற்றது, வாலிபம் மலையருவி வேகத்திற்கொப்பானது. வாழ்க்கையோ புல்லில் பிடித்த நெருப்புக்குச் சமமானது, சுகபோகங்களோ மேகத்தின் நிழலுக்கு ஒப்பானவை. புத்திரன், மித்திரன், வேலையாள், மனைவி ஆகியோரின் பாசம் கனவுபோன்றது. இவையாவும் தெரிந்த எனக்கு சம்சார சாகரத்தைக் கடக்க நான் என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள்’ என்றான்.

இதைக்கேட்ட சந்நியாசி குழந்தாய், இவ்வளவு சிறு வயதிலே விரக்தியடைந்த நீ பாக்யசாலி என்றார்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- இளம்வயதில் யோகியாகின்றவன் உண்மையானயோகி. ஐம்புலன்களும் நலிந்தபின் பின் எவனுக்குத்தான் புலடக்கம் சாத்தியமில்லை. நல்லவர்களிடம் முதலில் மனமும் பிறகு உடலும் முதுமையடைகிறது. கெட்டவர்களிடம் உடல் முதுமையடைகிறதோ ஒழிய மனம் முதுமையடைவதேயில்லை.

சம்சார சாகரத்தைக் கடக்கும் உபாயம் கேட்கிறாய், சூத்திரன், அந்நியன், சண்டாளன், ஜடைதரித்தவன் யாராயிருந்தாலும் சிவ மந்திரங்களால் உபதேசம் பெற்றுவிட்டால் அவன் விபூதி தரித்த பிராம்மணன் ஆவான். ஆறு எழுத்து மந்திரத்தைச் சொல்லி கூடவே ஓரு பூவை லிங்கத்தின் முடியில் வைக்கிறவர்கள் புண்ணியம் அடைவார்கள். மறு பிறப்பு இல்லை.

இதைக்கேட்ட சிஷ்யனாகமாறிய திருடன், சுவாமி எனக்கு ஒரு விரதம் அருளிச்செய்து அனுக்கிரகியுங்கள் என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- துர்ப்போதனையால் தலைவனும், சகவாசத்தால் சந்நியாசியும், செல்லம் கொடுப்பதால் குழந்தையும், கல்வி கற்காமையால் பிராமணனும், கெட்ட புத்திரனால் குலமும், மரியாதைக் குறைவால் சிநேகமும், பிரிவால் பாசமும், மதுவினால் ஸ்திரியும், அசிரத்தையால் வயலும், துன்மார்க்கத்தனத்தால் தனமும், ஊதாரித்தனத்தாலும் அசிரத்தையாலும் பொக்கிஷமும் கெட்டுவிடும்.

கேடு செய்யும் காரியங்கள்: சந்நியாசி சொன்னார், நீ இரவில் மடாலயத்தில் நுழையக்கூடாது, ஏனெனில் ஒன்று சேராமலிருக்கும்படி உனக்கும் எனக்கும் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால் நீ விரதம் எடுத்து மடத்தில் வாயிற்புர புல்குடிசையில் தங்க வேண்டும் என்றதற்கு அப்படியே செய்கிறேன் மறுமையில் எனக்கு பலன் கிடைக்கும் என்றான்.

படுக்கைக்குச் செல்லும் நேரத்தில் சந்நியாசி அவனுக்கு உபதேசம் செய்து சிஷ்யனாக்கிக் கொண்டார். குருவுக்கு கால்பிடித்தான். பல உபசாரங்கள் செய்து சந்தோஷமுண்டாக்கினான். என்ன செய்தபோதும் சிஷ்யன் கண்டது குரு தன் பணப்பையை அக்குளிலிருந்து எடுக்கவேயில்லை. குருவிற்கு தன்மேல் நம்பிக்கை வரவில்லை, பகலிலே கொன்றால் என்ன? பசுவைச் சாகடிப்பதுபோல் சாகடித்தால் என்ன? என சிந்தித்தான்.

ஒருநாள் உபநயனச் சடங்கு செய்யத் தன்வீட்டிற்கு வந்தருளவேண்டும் என சந்நியாசிடம் கிராமத்தான் ஒருவன் வேண்டுகோள் விடுக்க சந்நியாசி தன் சீடனுடன் அங்கு கிளம்பினான். வழியில் ஓர் நதி வந்தது. அதைப்பார்த்ததும் பணப்பையை எடுத்து ஒரு கந்தல் துணியில் சுற்றி சிஷ்யா, நான் மல ஜலம் கழித்து வரும்வரை இவைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள் எனக் கூறி அவற்றை அவனிடம் ஒப்படைத்தான். கண்பார்வையிலிருந்து சந்நியாசி மறைந்ததும் சிஷ்யனாக இருந்த திருடன் பணப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

ஆட்டுச்சண்டையும் குள்ளநரியும்: சிஷ்யனின் பலகுணங்களைக் கண்டு நிம்மதியடைந்திருந்த சந்நியாசி திடமனதோடு உட்கார்ந்தான். அப்போது ஒரு செம்மறியாட்டுக் கூட்டத்தில் இரண்டு ஆடுகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. நெற்றியிலிருந்து இரத்தம் வழிந்தும் அவைகள் சண்டையை நிறுத்தவில்லை. இதைப் பார்த்த குள்ளநரி வழிந்துவரும் ரத்தத்தைக் குடிக்க நினைத்து அவற்றின் இடையே புகுந்து ரத்தத்தை ருசி பார்த்தது. இரண்டு ஆடுக்கும் நடுவில் சிக்கினால் நரி என்னாகும் என யோசித்தான். அப்போது அந்த ஆடுகள் மீண்டும் முட்ட நெருங்கின. நரி இடையே சிக்கி உயிர் விட்டது. இதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு தன் பணப்பையை சிஷ்யனிடமிருந்து பெற வந்து கொண்டிருந்தான்.

சிஷ்யனைக் காணவில்லை. கந்தல் கிடந்தது. திருடிவிட்டானே என சப்தமிட்டு மூர்ச்சைபோட்டு மயக்கமானான். மீண்டும் நினைவு பெற்று திருடனை சீடனாக நம்பி ஏமாந்துவிட்டோமே என புலம்பியவாறு நடந்தான்.

வேசியின் செயல்: வழியில் ஒரு நெசவாளியைப்பார்த்து, அன்பனே, அஸ்தமன வேளையில் விருந்தாளியாக உன்னிடம் வந்துள்ளேன். இந்தக் கிராமத்தில் எனக்கு யாரையும் தெரியாது. அதிதி தர்மத்தைச் செய்வாயாக என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- அந்திவேளை வந்த விருந்தாளியைக் குடும்பஸ்தர்கள் தள்ளக்கூடாது. விருந்தாளியை உபசரிப்பதால் ஒருவன் தெய்வாம்சம் பெறுகின்றான். நல்லவர்கள் இல்லத்தில் கோரையும், நீரும், இடமும், நல்ல சொல்லும் என்றும் குறைவிருக்காது. விருந்தாளியை வரவேற்பதால்- அக்னியும், ஆசனமளிப்பதால்- இந்திரனும், கைகால் கழுவி சுத்தமாக உதவுவதால்- கிருஷ்ணரும், அன்னமளிப்பதால்- பிரஜாபதியும்(தேவர்கள்) திருப்தியடைவர்.

இதைக்கேட்ட நெசவாளி தன் மனைவியைப் பார்த்து இவரை நீ இல்லத்திற்கு கூட்டிச்சென்று உபசரி, நான் வேண்டியது வாங்கி வருகிறேன் என்றான். அவன் மனைவி சந்நியாசியை கூட்டிச் சொல்லும்போது யாரையோ நினைத்து தனக்குள் சிரித்தபடி சென்றாள்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- அமாவாசை இருட்டிலும், கணவன் வெளியூருக்குச் சென்றிருக்கும்போதும், குடிபோதையிலிருக்கும் போதும் சோரம் போகின்ற பெண்களுக்கு உற்சாகம்தான். கள்ள காதலனை கொண்ட பெண்கள் கணவனோடு கட்டிலில் படுத்து இன்பமாய் தூங்குவதை புல்லுக்கு சமமானதாக நினைப்பர். அப்படி பர புருஷர்களைச் சேரும் பெண்கள் தன் குல நாசத்திற்கும், ஊராரின் பழிச்சொல்லுக்கும், சிறைவாசத்திற்கும், மரணத்திற்கும் கூட துணிவாள்.

வீட்டையடைந்ததும் நெசவாளியின் மனைவி சந்நியாசியிக்கு ஓர் கட்டிலைக்காட்டி நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், நான் என் சிநேகிதியைப் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு வெளியே சென்றாள். வெளியே அலங்காரத்துடன் சென்றவளை அவளின் கணவன் பார்த்து விட்டான். அவன் வருவதை அறிந்தவள் வீட்டுற்குத் திரும்பிவந்து அவசரமாக தன் அலங்காரத்தைக் கலைத்தாள். மனைவியின் நடத்தைப் பற்றி ஊர் ஜனங்கள் பேசிக்கொள்வதை ஏற்கெனெவே கேட்டிருந்தவன் அதன் உண்மையறிந்து வருத்தமும் கோபமும் கொண்டான். வீட்டில் நுழைந்து, அடி வேசி, எங்கே புறப்பட்டாய் என சப்தமிட்டான். உன்னை விட்டு வந்தபின் நான் எங்கும் போகவில்லை என பொய் பகன்றாள். நீ ஏன் குடிகாரனைப்போல் நடந்து கொள்கின்றாய் என்றாள்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- உடல் நடுக்கம், தரையில் சாய்தல், தகுதியற்ற பிதற்றல் இவை எல்லாம் குடிபோதைக்கும் காய்ச்சலுக்கும் உள்ள அடையாளங்கள். கையோங்குவது, உடை நழுவ விடுவது, பலம் குறைவது, கோபப்படுவது இவை குடிகாரனின் செயல்கள்.

எதிர்த்து பேசும் மனைவி துணி மாற்றுதலைக் கண்டவன், விபச்சாரி, வெகுநாளாக உன்னப்பற்றி ஊரில் பல அபவாதங்களைக் கேட்டுள்ளேன். இன்றைக்கு எனக்கு தகுந்த ருஜு கிடைத்துவிட்டது, என சொல்லிக்கொண்டு ஒரு தடி எடுத்து அவளை அடித்து தூணில் கட்டிப்போட்டான். போதையினாலும் அயர்வினாலும் அப்படியே சோர்ந்து அயர்ந்தான்.

வேசி தர்மம்: அப்போது அவள் சிநேகிதி அங்கு வந்தாள், நெசவாளி தூங்குவதைக் கண்டவள், என்னடி அந்த ஆள் உன்னை எதிர்பார்த்து அங்கு காத்திருக்கின்றான் என்றபடி அவள் கட்டை அவிழ்த்துவிட்டாள்.  இப்பாது நான் அவனைச் சேரமுடியாது என நீ சொல்லிவிடு என்றாள். சிநேகிதி சொன்னாள், அப்படிச் சொல்லாதே!  அது வேசிகளின் தர்மமல்ல. சிரமத்தையும் தூரத்தையும் பாராமல் இன்பமனுபவிக்கின்றானே அவன் ஒட்டகம் மாதிரி. எதைக் காண்கின்றானோ அதைப் பின் பற்றுகின்றான். மறு உலகம் சந்தேகமானது. உலகின் பழிச் சொல்லோ விந்தையானது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிறத்தியாரின் கணவன் கைவசமாகும்போது அவன் சுகத்தை அனுபவிக்கின்றவளே பாக்கியசாலி. நீ சென்று அவனைச் சேர்ந்து வரும்வரை நான் இந்தக் குடிகாரனைச் சமாளிக்கிறேன் என்றாள்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- காதலன் என்று இருந்தால் போதும். அவன் குரூபியாயிருந்தாலும் கஷ்டங்கள் யாவற்றையும் சகித்துக் கொண்டு சேரம் போனவள் அவனை ரகசியமாய் சந்தித்து கூடுவதிலேயே குறியாக இருப்பாள்.

நெசவாளியின் மனைவி வெளியே சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கண்விளித்தவன் கோபம் சிறிது தனிந்த நிலையில், ஏய் பொய் சொல்லி என்னை ஏமாற்றாதே, இனிமேல் வீட்டை விட்டு போகமாட்டேன் பொய் சொல்லமாட்டேன் எனச் சொல் என்று அவளை மன்னிக்கும் முகத்தான் பேசினான். பேசினால் குரல் காட்டிக் கொடுத்துவிடும் என அஞ்சிய சிநேகிதி அமைதி காத்தாள். அவள் பேசாமலிருக்கவே ஆத்திரம் அடைந்த நெசவாளி ஓர் கத்தியை எடுத்துவந்து அவள் மூக்கை அறுத்துப் பின்னப்படுத்தினான். வேசி இங்கேயே கிட என சப்தமிட்டு மீண்டும் அயர்ந்துபோனான்.

பணத்தை பறிகொடுத்து கவலையில் இருந்த சந்நியாசிக்கு உறக்கம் பிடிக்காததால் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான். நெசவாளியின் மனைவி தன் கள்ள உறவை ஆனந்தமாக சுகித்துவிட்டு திரும்பி வந்தாள். சிநேகிதியிடம் நான் இல்லாதபோது இந்தப்பாவி எழுந்திருக்க வில்லையே எனக் கேட்டாள். மூக்கைத்தவிர மற்றபடி உடம்பு சௌக்கியம்தான் என்று சொல்லியபடி அவள்தோழி புறப்பட்டாள்.

பெண் சாகஸம்: சிநேகிதியை அனுப்பிவிட்டு அந்த இடத்தில் கட்டுண்டவள் புருஷனை நிந்திக்கத் தொடங்கினாள். சீ, பரம முட்டாளே! நான் சாது, நல்லவள், பதிவிரதை, என்னைக் கெடுக்கவோ, அங்கஹீனம் செய்யவோ யாரால் முடியும், தெய்வங்களே கேளுங்கள்! சூரியனே, சந்திரனே, வாயுவே, அக்னியே, வானமே, பூமியே, ஜலமே, யமனே, பகலே, இரவே, காலை மாலை சந்திகளே மனித நடத்தையின் நியாயத்தை அறியுங்கள் என ஒப்பாரி வைத்தாள். சூழ்நிலையைத் தனக்கு சாதகமாக்கிக்கொள்ள நினைத்தாள்.

நான் பதிவிரதையானால் முன்போல் என் மூக்கு உண்டாகும்படி தேவர்கள் செய்யட்டும். நான் பர புருஷனை மனத்தால் விரும்பியிருந்தால் என்னைச் சாம்பலாக்கட்டும் என்றாள். பின் கணவனைப் பார்த்து துராத்மா, என்னைப்பார், என்கற்பின் மகிமையால் முன்புபோலவே எனக்கு மூக்கு உண்டாகிவிட்டது என்றாள்.

விளக்கு எடுத்துப்பார்த்த நெசவாளி அதிசயித்தான். தரையில் இரத்தம் சிந்தியிருப்பதையும் பார்த்தான். அவளை கட்டிலிருந்து விடுவித்து பல இனிய மொழிபேசி அவளைத் திருப்தி செய்தான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- அசுரர்களின் குரு அறிந்த சாஸ்திரமும், பிரகஸ்பதி அறிந்த சாஸ்திரமும் ஸ்திரி சாகசத்திற்கு ஈடுகொடுக்க முடியாது. பொய்யும் சாகஸமும், ஏமாற்றும், மடமையும், பேராசையும், அசுத்தமும், இரக்கமின்மையும் பெண்களின் கூடப்பிறந்த தோஷங்கள். எனவே அவர்களைக் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. எனவே பெண்ணழகுக்கு அடிமையாகாதே! உன்னைத் துன்புறுத்தக் கூடிய சக்தி அவர்களிடம் அதிகரிக்கச் செய்ய நினைக்காதே. சிறகொடித்த பறவைகளுடன் விளையாடுவதுபோல் அடிமையான ஆண்களிடம் விளையாடுவார்கள்.

மிகுந்த ஆச்சர்யத்துடன் இவற்றையெல்லாம் பார்த்தவாறே படுத்திருந்தார் சந்நியாசி. பெண்கள் வாயில் தேனும், நெஞ்சில் நஞ்சும் இருக்கும். இதைப்புரிந்தவன் வாயிதழ்களைச் சுவைத்து நெஞ்சில் அறைகிறான். சந்தேகம் நிறைந்த குணம், வணக்கமின்மை, சாகஸத்தின் பிறப்பிடம், தோஷங்களின் சமூகம், எண்ணிலா ஏமாற்றங்களின் இருப்பிடம், அவநம்பிக்கையின் கோவில், சகல மாயைகளும் நிறம்பித் தழும்பும் கலயம், உத்தமர்கள் பெற தகுதியற்ற அமுதமயமான விஷம் ஆன இந்தப் பெண் பிறவிதனை தர்மத்தை அழிப்பதற்கு யார் சிருஷ்டித்தார்களோ எனப் பலவாறு சிந்தித்திருந்தான். கனமுலையும், சுடர்விழியும், பிறை நுதலும் போற்றப்படுகின்றன. சுருள் கூந்தலும், மென் சொல்லும், பரந்த நிதம்பமும், மடநெஞ்சும், சாகஸப் பேச்சும், பெண்ணின் லட்சணங்கள். அவை தோஷங்களின் கூட்டுத்தொகை. மான் விழி மாதரை அந்த விலங்குகள் விரும்பட்டும். மனிதர்கள் நேசிக்க வேண்டாம். உள்ளே விஷத்தன்மைகொண்டு வெளியே அழகு சொட்டும் காஞ்சிரப்பழம் போன்ற பெண்ணை யார் சிருஷ்டித்தனரோ! என சிந்தித்தவாறே உறங்கினான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பெண்கள் அழுவதும் சிரிப்பதும் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளத்தான். உன் நம்பிக்கையைப் பெற்றுப் பேணுவார்கள். ஆனால் தான் மட்டும் யாரையும் நம்பமாட்டார்கள். இவர்களை குலமும் குணமும் உள்ள மனிதர்கள் விலகி விடவேண்டும். பரந்து அடர்ந்த பிடரிமயிருடன் பயங்கரமாய்த் தோற்றமளிக்கும் சிங்கமாயிருந்தாலும், மதஜலப் பெருக்கால் பலம் பொருந்திய யானையும், அறிவாற்றலில் மேதாவியாய் விளங்குபவரும், போரில் மிகச் சிறந்த வீரரும், சர்வ வல்லமை பெற்ற அதிகாரியும், ஸ்திரிகளின் முன்னே கோழையிலும் கோழையாய் விடுகின்றனர்.

மூக்கறுபட்டவள் வீடு போய்ச் சேர்ந்தாள். தன் அங்கஹீனத்தை மறைக்க என்ன செய்யலாம் என யோசனை செய்தாள். அவள் புருஷன் வேலை முடிந்து விடியற்காலை வீடு திரும்பினான். தொடர்ந்து பல விதமான நகர அலுவல்களைப் பார்க்க வேண்டியிருந்ததால் வாசலில் இருந்து தன்னுடைய சவரப் பெட்டியை எடுத்துவரச் சொன்னான். யோசனையிலிருந்த மனைவி அவனை நோக்கி கத்தியை மட்டும் வீசி எறிந்தாள். சவரப் பெட்டியைக் கேட்டால் கத்தி மட்டும் தருகிறாளே என்ற கோபத்தில் கத்தியை அவள் மீது திருப்பி வீசினான். இதைச் சாக்காகக் கொண்டு வானை நோக்கிக் கைகளைத் தூக்கிக் கதறியழுது கொண்டே வெளியே வந்தாள், நான் பதிவிரதையாச்சே, என் மூக்கை அறுத்து விட்டானே, ஐயையோ என்னைக் காப்பாற்றுங்கள் என அலறினாள்.

அகத்தின் அழகு முகத்தில்: அதிகாரிகள் வந்தனர். அவனை நைய புடைத்து நீதி மன்றத்திற்கு இழுத்துச் சென்றார்கள். ஆச்சரியத்தில் மூளை குழம்பி செயல் இழந்த நிலையில் இருந்த நாவிதனுக்கு அதிகாரிகள் கேள்விக்கு பதில் ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- குற்றம் செய்து பயந்துவிட்ட மனிதன் குழறிய பேச்சும், வெளிறிய முகமும், மிரண்ட பார்வையும், ஒடுங்கிய கர்வம் உடையவனாய் காண்பான். தள்ளாடித் தள்ளாடி நடப்பான். முகம் வெளுத்து போகும், நெற்றியில் வியர்த்துக் கொட்டும், வார்த்தை திக்கித் திக்கி வரும், உடல் நடுங்கி கொண்டிருக்கும், பார்வை கீழ் நோக்கிச் சொல்லும். இந்த வெளிப்படையான அடையாளங்களே குற்றவாளியின் அடையாளம். களங்கமற்ற இனிய முகபாவம், தெளிந்த பேச்சு, கோபமான பார்வை, வெறுப்புத் தட்டிய முகம், தன்மதிப்பு மிகுந்த தோரணை உடையவன் நிரபராதியாக இருப்பான்.

நாவிதன் குழப்பமான மனநிலை அவன் முகத்தில் பிரதி பலித்ததால் நீதி அதிகாரிகள் இவன் குற்றவாளியாக காண்கின்றான். பெண்ணைத் தாக்கும் குற்றத்திற்கு மரண தண்டனை என தீர்ப்பு கூறினர். அங்கு வந்த சந்நியாசி ஒரு நியாயவாதி வீண்பழி சுமத்தப்பட்டு இருப்பதைக்கண்டு அவனுக்கு உதவ முற்பட்டு தான் கண்டதைக் கேட்டதை “ஆட்டுச்சண்டையில் நுழைந்த குள்ளநரியும், திருடனால் வஞ்சிக்கப் பட்டவர்களும், பிறர் காரியத்தில் தலையிட்ட அந்தபெண்ணும் தம் செய்கைகளாலேயே தீங்கு வரவழைத்துக் கொள்கின்றனர்’ என்பதை விவரமாய் அதிகாரிகளிடம் கூற அவர்களும் அதைப்பற்றி விசாரித்து உண்மை அறிந்து நாவிதனை விடுதலை செய்தனர்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பிராமணனும், குழந்தையும், பெண்ணும், சந்நியாசியும், நோயாளியும் கொல்லத்தகாதவர்கள். அவர்கள் குற்றம் பெரிதாக இருந்தால் அதற்குத் தண்டனை அங்கஹீனம்.

தன் செய்கையின் விளைவாக அந்தப் பெண் மூக்கறுபட்டாள். அதற்குமேல் பொய்குற்றம் சுமத்தியதற்காக நீதியின் தண்டனையாக அவள் காதுகளையும் அறுக்க அதிகாரிகள் உத்தரவிட அது நிறைவேறியது. சந்நியாசி இந்த நிகழ்வுகளால் மனதை திடப்படுத்திக் கொண்டு தன் மடாலயத்திற்கு சென்றார்.

ஆட்டுச்சண்டையால் குள்ளநரியும், திருடனால் நம்மைப்போன்றவர்களும், பிறர்காரியங்களில் பிரவேசிக்கின்றவர்களும் தமக்குத்தாமே தீங்கு விளைவித்துக் கொள்கின்றனர்என்று பணியாள் கூறியதின் அர்த்தம் புரிந்த நண்பன். சரி இப்போது நாம் என்ன செய்யலாம் எனக்கேட்டான். தலைவரை புதியவனிடமிருந்து சேர்த்த எனக்கு பிரிக்க ஓர் யோசனை தோன்றுகிறது. தலைவர்கள் மதிமயங்கி கெட்டவழியில் செல்லும்போது விசுவாசிகள் பல முயற்சிசெய்து வேதசாஸ்திரங்களை மேற்கோள்காட்டி அவர்களைத் தடுத்து நிறுத்துகின்றனர்.

ஒன்றும் புரியாத நண்பன் கேட்டான், அதுசரி தலைவர் என்ன பாபம் செய்கிறார்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- உலகில் காமம், கள், சூதாட்டம், வேட்டை, கடுஞ்சொல், குரூரச்செயல், பேராசை என ஏழுவித தீச்செயல்கள் உள்ளன. உலகில் ஐந்து விதமான தோஷங்கள் இருந்தாலும் ஆசை என்பதிலிருந்துதான் இந்த ஏழு செயல்களும் கிளையாக பிரிகின்றது. குறைவு, ஊழல், ஆசை, அழிவு, தவறான கொள்கை என்பதே ஐந்து தோஷங்கள்.

குறைவு: தலைவன், ஆலோசகர், மக்கள், கோட்டை, போக்கிஷம், தண்டிக்கும் சக்தி, நண்பர்கள் என்ற ஏழில் ஒன்று குறைந்தாலும் அது குறைவாக கருதப்படும்.

ஊழல்: அந்நிய தேசத்தவர்களோ, உள்நாட்டு ஜனங்களோ தனி நபராகவோ, கூட்டமாகவோ குமுறி கொந்தளித்தால் அந்த தீய நிலையை ஊழல் எனலாம்.

ஆசை: ஆசையை ஏழு வகையாகப் பிரிக்கலாம். 1.காமம், கள், சூதாட்டம், வேட்டை என்பவை காமத்தின் பாற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவை. இதில் முதல் வகுப்பில் தோல்வி கண்டவர்கள் இரண்டாம் வகுப்பைச் சேர்ந்த தீய பழக்கத்தில் ஈடுபடுகின்றனர். 2.கடுஞ்சொல் முதலியவை கோபத்தின் பாற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவை. எதிரிக்குத் தீமை செய்யும் நோக்கத்தோடு சரிவரயோசிக்காமல் அனாவசியமாகக் குற்றம் கற்பித்தல்- கடுஞ்சொல் என்றும், மரண தண்டனை, சிறையிலடைத்தல், அங்கஹீனம் செய்தல் முதலிய தண்டனைகளில் அனாவசியமாக இரக்கமற்ற சித்திரவதைகளை செய்வது- குரூரச் செயல் என்றும், அளவு முறை ஏதுமின்றி பணத்தின் மீது மோகம் கொள்வது- பேராசை என்றும் கூறப்படும்.

அழிவு: இது எட்டு வகைப்படும். கடவுள் செயல், தீ, நீர், நோய், தொத்து வியாதி, கிலி, பஞ்சம், அசுரமழை ஆகியன அழிவாகும்

தவறான கொள்கை: சமாதானம், சண்டை, முறைகளை மாற்றுதல், இடம் பெயராது இருத்தல், நேச உறகள் கொள்வது, கபடம் ஆகியவற்றை தவறாக உபயோகப்படுத்துவது. சண்டைக்குப் போகவேண்டிய நிலையில் சமாதானம் பேசியும், சமாதானம் செய்ய வேண்டிய நிலையில் சண்டைக்கு போவதுமாக இருப்பது தவறான கொள்கையாகும்.

நம் தலைவர் குறைவு என்ற கேடில் இருக்கிறார். புதியவன்மீது மோகம் கொண்டு நிர்வாகத்தின் எல்லா வகை சாதனங்களிலும் கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறார். விளக்கு இல்லாமல் வெளிச்சம் இல்லை. தலைவரில்லாமல் நாம் இல்லை. எப்படியும் தலைவரையும் புதியவனையும் பிரிக்க வேண்டும்.

உனக்குத்தான் அதிகாரமில்லையே நீ எப்படி பிரித்து விடுவாய்? என்றான் நண்பன்.

நண்பனே உடல் பலத்தால் ஆகாததை மனோபலத்தால் செய்ய முடியும், பெண்காகம் பொன் மாலையை உபயோகித்து கருநாகத்தை கொன்றது போல் என்றான்.

அது எப்படி என்ற நண்பனுக்கு அது பற்றி கூறலானான்.

காகமும் கருநாகமும்:அந்தக் காட்டில் இருந்த ஆலமரத்தில் காக்கை கூடு கட்டி வாழ்ந்திருந்தது. அது இடும் முட்டைகளை அந்த மரத்தின் பொந்திலிருந்த கருநாகம் சாப்பிடுவது வழக்கமாக இருந்ததால் காக்கைக்கு தன் குஞ்சுகளை காணவே முடியவில்லை. இருப்பினும் மனோவேதனையைத் தாண்டி ஒரு பாசப்பிடிப்பினால் அந்த ஆலமரத்தை விட்டு காக்கை வேறு இடம் செல்லவில்லை

குருஸ்ரீ பகோராயின் கூற்று- எவ்வளவு அவமானப்பட்டாலும் மானும், கோழையும், காகமும் இருக்கின்ற இடத்தைவிட்டு போகமாட்டார்கள். சிங்கமும், தைரியசாலியும் யானையும் உடனே வெளியேறி வேறிடம் செல்வர்.

பெண்காகம் தன் துணையிடம், இந்த பாம்பினால் நாம் குழந்தையின்றி இருக்க வேண்டியிருக்கின்றது. துன்பம் தாளமுடியவில்லை, வேறெங்காவது போய்விடலாமா என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- ஆரோக்கியத்திற்கு ஒப்பான நண்பன் வேறு யாருமில்லை. நோய்க்கு ஒப்பான விரோதி வேறுயாருமில்லை. குழந்தை அன்புக்கு ஒப்பான அன்பு வேறொன்றுமில்லை, பசிக்கு ஒப்பான வேதனை வேறெதுமில்லை. நதிக்கரையில் நிலபுலன்கள் உடையவன், சோரம் போகும் மனைவியையுடையவன், பாம்புவாசம் செய்யும் வீட்டில் இருப்பவன் இவர்களுக்கு மனோ நிம்மதி இருக்காது.

காக்கைக்கு துக்கம் அதிகமாயிற்று. நீண்ட நாட்களாக இங்கே இருந்து வருகின்றோம். இதை விட்டுச் செல்லமுடியாது. நீரும் புல்லும் கிடைக்கிற இடத்தில்தான் மான் வாழமுடியும்.. எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் மான் பிறந்து வளர்ந்த காட்டை மறக்காது. விட்டுச் செல்வதும் கிடையாது. கொடிய சத்ருவான பாம்பைக் கொல்ல ஓர் வழி கண்டுபிடிக்கின்றேன் என்றது.

பாம்பை எப்படிக் கொல்வீர்கள் என்றது பெண்காகம்.

நீதி சாஸ்திரத்தில் தேர்ச்சி மிகுந்த நண்பர்களின் உபாயத்தால் ஏதாவது செய்ய வேண்டும் என்றுகூறி நண்பனைத்தேடிச் சென்றது காகம். வழியில் நரியைச் சந்தித்து தன் நிலைதனைக் கூறியது.

நரி சொன்னது, நண்பனே தீமை புரிபவனுக்கு கெடுதி செய்ய நீ யோசிக்கவேண்டியதில்லை. நதிக்கரையிலுள்ள மரம் வீழ்வது போல் அவன் தானாக வீழ்வான். ‘பேராசையுள்ள கொக்கு நிறைய மீன் சாப்பிட விரும்பி நல்ல மீன் கெட்ட மீன் என்று வகை தொகை தெரியாமல் சாப்பிட கடைசியில் ஒரு நண்டின் பிடியில் சிக்கி உயிர் துறந்தது’ என்றது.

அது எப்படி? என காக்கை கேட்க நரி சொல்லத்தொடங்கியது.

கொக்கும் நண்டும்: குளக்கரை ஒன்றில் கிழட்டு கொக்கு ஒன்று இருந்தது. நீண்ட நேரம் காத்திருந்து மீன்களைப் பிடித்து தின்னாமல் சுலபாய் சாப்பிட வழியை யோசித்துக் கொண்டிருந்தது. அப்போது அங்குவந்த நண்டு கேட்டது, கொக்கு மாமா, வழக்கத்திற்கு மாறாக எதையும் தின்னாமல் அமைதியாக நிற்பது எதனால் என்றது.

மீன்களைத் தின்கிறவரை நான் புஷ்டியாகவும் ஆரோக்கியமாகவும் காலம் காலமாக இருந்து வந்துள்ளேன். உங்களுக்கெல்லாம் பேராபத்து வரவிருக்கின்றது. அப்படி வந்தால் கிழப்பருவத்தில் என் ஜீவனத்திற்கு கேடுவரும். அதை நினைத்து மனம் சேர்வடைந்தேன் என்பதைக் கேட்ட நண்டு அது என்ன ஆபத்து என்றது.

குளக்கரையில் செம்படவர்கள், இது பெரிய குளம் நிறைய மீன் கிடைக்கும் நாளை அல்லது மறுநாள் வந்து வலை வீசலாம் எனப் பேசிக்கொண்டனர். நீங்கள் எல்லோரும் ஒரே நாளில் சாகப் போகிறீர்கள். நானும் உணவில்லாமல் சாகப்போகிறேன் என்றது.

வஞ்சக கொக்கின் பேச்சில் மயங்கிய குளத்து ஜலவாசிகள் உயிருக்குப் பயந்தன. எல்லாம் ஒன்று சேர்ந்து அதற்கான உபாயம் என்ன எனக் கேட்க, கொக்கு சொன்னது நானோ ஓர் பறவை. மனிதர்களோடு என்னால் சண்டை போட முடியாது. ஆனால் நீங்கள் விரும்பினால் உங்களையெல்லாம் வேறு குளத்திற்கு மாற்றி விடுகிறேன் என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நல்லவர்கள் பேச்சில் உண்மை புரியாது. தீயவர்கள் பேச்சில் உண்மைகள் மறைந்திருந்தாலும் தேன்தடவிய தித்திப்பாய் இனிக்கும். தன்னல மறுப்புடன் உதவி செய்வதில் திடசித்தமுடையவர்கள் எதற்கும் தயங்கமாட்டார். உயிர் போனாலும் போகட்டும் நண்பனுக்கு நன்மை செய்தால் சரி என கருதுவர்.

இதைக் கேட்ட ஜலவாசிகள் நான் முந்தி நீ முந்தி என போட்டி போட்டன. மீன்கள் வேண்டியபடி தன் அலகால் தூக்கிக் கொண்டு சென்று தூரத்தில் உள்ள ஒரு பாறைமீது வைத்து சாப்பிட்டது. இப்படியே தொடர்ந்து நடந்தது. குளத்தில் இருக்கும் ஜலவாசிகளுக்கு நடப்பது ஒன்றும் தெரியவில்லை. மரண பயம் கொண்ட நண்டு கொக்குவிடம் தன்னையும் இங்கிருந்து காப்பாற்றி வேறு குளத்திற்கு கூட்டிச்செல்ல கேட்டது. மீன்களையே தின்ற கொக்கு நண்டை ருசிபார்க்க முடிவு செய்து அதை தன் அலகால் தூக்கிக் கொண்டு சென்றது.

வஞ்சகம் செய்யேல்: நீண்ட தூரம் சென்றும் குளம் வராமையால் நண்டு கேட்டது மாமா குளம் எங்கே என்று? கொக்கு சொன்னது அங்கே ஒரு பாறை தெரிகிறது அல்லவா, அங்குதான் எல்லா ஜீவராசிகளும் ஓய்வு எடுக்கின்றன, நாமும் அங்குதான் செல்லப்போகிறோம் என்றது. கீழே பார்த்தால் பாறைமுழுவது மீன்களின் எழும்புகள் சிதறிக் கிடப்பதைப் பார்த்த நண்டுக்கு விபரம் புரிந்தது. எல்லோரையும் ஏமாற்றி கொக்கு தனக்கு இரையாக்கியதை உணர்ந்தது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தன் காரியத்தைச் சாதிக்க சிநேகிதர்கள் சத்ரு ரூபத்திலும், சத்ருக்கள் சிநேகிதர் ரூபத்திலும் வருவார்கள். இவர்களில் சிலரைத்தான் சிலநேரங்களில் அடையாளம் காணமுடிகிறது. நடிப்பு நண்பர்களோடும், முட்டாள் நண்பர்களோடும், சஞ்சலப் புத்தியுள்ள நண்பர்களோடும், பாபநோக்கமுள்ள நண்பர்களோடும் சகவாசம் வைத்துக்கொள்கிறதைக் காட்டிலும் பாம்புடன் விளையாடுவதும், துரோகமிழைக்கும் சத்ருவுடன் கூடிவசிப்பதும் ஒன்றே. தப்பான வழியில் போகிறவன், மமதை கொண்டவன், கடமையறியாதவன் அவர்கள் உன் குருவாக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்க சாஸ்திரத்தில் இடம் உண்டு. எதிரே வராத வரையில் பயப்படத்தக்கவைப்பற்றிப் பயப்படு! எதிரேவந்தபின் பயமின்றி அவற்றைத்தாக்கு!

எப்படியாவது தப்பிக்க நினைத்த நண்டு, கொக்கு தன்னை நடுவில் பிடித்து தூக்கிச் செல்வதால் தன் கொடுக்குகளை இயக்கி கொக்கின் கழுத்தை இறுக்கிபிடித்தது. கழுத்து இறுகத் தொடங்கியதும் கொக்கு தன் அலகை தளர்த்தியது. அதனால் நண்டு மேலும் தன் பிடியை இறுக்கவே கொக்கின் கழுத்து துண்டாகி இறந்து பட்டது. கொக்கின் கழுத்துடன் தன் பழைய குளத்திற்கு வந்த நண்டு மற்ற ஜலவாசிகளிடம் கொக்கின் சூழ்ச்சியை சொன்னது. எல்லா ஜலவாசிகளும் கவலையின்றி சுகமாக வாழ்ந்தது.

அதனால்தான் பேராசையுள்ள கொக்கு…. எனக் கூறினேன் என்றது நரி. அதுசரி நண்ப! அந்த துஷ்ட பாம்பைக் கொல்ல வழி சொல் என்றது காகம்.

தலைவர்கள் வழக்கமாய் வரும் ஏதாவதொரு இடத்திற்குப்போய் அங்கு வரும் செல்வந்தர்கள் அஜாக்கிரதையாக வைத்துவிட்ட தங்க சங்கிலியையோ மாலையோ எடுத்துக் கொண்டுவந்து பாம்பு வசிக்குமிடத்தில் போடு, பின் உனக்கு நல்லதே நடக்கும் என்றது.

நரியின் யோசனைப்படி காகமும் பெண்காகமும் பல இடங்களுக்குப் பறந்து தேடின. கடைசியில் ஒரு ஏரிக்கரையில் தலைவனுடய காதலி தன் சிநேகிதிகளுடன் ஏரிக்கரையில் ஆபரணங்களை கழட்டிவைத்துவிட்டு நீராடுவதைப் பார்த்த காகம் அதில் பளபளவென மின்னும் ஒர் பதக்கச் செயினை கொத்திக்கொண்டு பறந்தது. இதைப் பார்த்த தோழிகள் சப்தமிட காவலாளிகள் ஒரு காகம் செயினை கொத்திக்கொண்டு பறப்பதைப் பார்த்து அதைத் துரத்தி வந்தனர். காகம் அந்த தங்க செயினை ஒரு மரப்பொந்தில் போடுவதைப் பார்த்த காவலாளிகள் மரத்தில் ஏறி அதை எடுக்க முயன்றபோது பொந்தினுள் ஒரு கருநாகம் இருப்பதைப் பார்த்தவர்கள் அதை அடித்துக் கொன்றனர். பின் அந்த நகையை எடுத்துச் சென்று தங்கள் தலைவனிடம் கொடுத்தனர்.

நரியின் யோசனை பலித்தது. காக்கை குடுப்பம் நிம்மதியாக அந்த மரத்தில் வாழ்ந்தது. அதனால்தான் நண்பனே உடல் பலத்தால் ஆகாததை மனோபலத்தால் செய்ய முடியும், ……… என்று சொல்கின்றேன் என்றான். மேலும் அஜாக்கிரதையால் கண்ணிழந்த சிலர் எதிரியைப் பலவீனன் என்று அலட்சியப்படுத்துகின்றனர். முதலில் பலவீனனாய் இருந்து பின்னால் பலம் பெற்று தீராத நோய்போல் கட்டுக் கடங்காமல் போகிறான். ஆகையால் புத்திசாலிகளுக்கு கிடைப்பதற்கு அரியது என்று உலகில் ஒன்றுமில்லை. அறிவே பலம், அறிவில்லாதவனுக்கு பலம் கிடையாது என்றான்.

பலம் பொருந்திய சிங்கத்தை பலவீன முயல் எப்படி கொன்றது என்று கேட்ட நண்பனுக்கு அதைகூறலானான்.

சிங்கமும் முயலும்: அந்தக் காட்டில் வசித்துவந்த சிங்கம் தான் ராஜா என்பதாலும் தன் பலத்திற்கு ஈடில்லை என்றும் கர்வமேலீட்டால் திமிர் பிடித்து திரிந்தது. எந்த மிருகத்தைக் கண்டாலும் வெறுப்பைக் காட்டியது. மேலும் தேவையின்றி மற்ற மிருகங்களை கொன்றது. இதனால் வருத்தமுற்ற மற்ற மிருகங்கள் ஒன்று சேர்ந்து சிங்கத்திடம் சென்று மிருகங்களின் அரசே, நீங்கள் இப்படி மிருகங்களை கொல்வதால் உங்களின் பாவங்கள் அதிகமாகின்றன். அடுத்த ஆயிரம் ஜன்மங்களுக்கு அது உங்களை வாட்டும். மேலும் தேவையின்றி கொல்லுதல் பழியும், அபகீர்த்தியும் ஏற்படுமாதலால் புத்திசாலியான நீங்கள் நரகம் காட்டுகிற அவ்வழியில் செல்ல வேண்டாம் என மன்றாடின. இந்த சரீரம் அசுத்தத்தின் இருப்பிடம், இது நன்றி கெட்டது, அழியக்கூடியது, இதன் பொருட்டு மூடர்கள்தான் பாவம் செய்வர். இதை உணர்ந்து எங்கள் மிருககுலத்தை நாசம் செய்யாமல் இருக்க உதவி செய்யுங்கள் என வேண்டின.

இவைகளைக் கேட்ட சிங்கம் சிறிது சிந்தனை செய்தது. சரி என் உணவிற்கு என்ன வழி என்றது. அரசே நீங்கள் வேட்டையாடி களைத்து எங்களில் ஒருவரைத்தான் புசிப்பீர்கள். அதற்குப் பதிலாக ஒருநாளைக்கு ஒவ்வொரு மிருகமாக நாங்களே தங்களின் இருப்பிடத்திற்கு அனுப்பிவைக்கின்றோம் என்றன. யோசனை மிகவும் நன்றாயிருக்கவே சிங்கம் இந்த திட்டத்திற்கு ஒத்துக் கொண்டு தன் வேட்டையை நிறுத்தியது. மிருகங்களும் ஒரு முறையைப் பின்பற்றி ஒருநாளுக்கு ஒரு மிருகம் என்ற கணக்கில் சிங்க அரசின் உணவிற்கு அனுப்பி வைத்தன.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- அமிருதத்தை சொட்டு சொட்டாகப் பருகி அனுபவிப்பதுபோல் எந்த தலைவன் அதிகாரத்தை அனுபவிக்கின்றானோ அவனே முழு சுகத்தையும் பெறுகின்றான். பைத்தியம் பிடித்ததுபோல் எதிரிகளை ஆடுகளைக் கொல்வதுபோல் கொன்று குவிக்கின்ற தலைவன் முதல் கொலையிலேதான் திருப்தி காண்கின்றானே தவிர மற்றதில் எப்போதும் திருப்தி காண்பதில்லை. தன்னலம் பேன விரும்பும் தலைவன் தன் மக்களை விபத்து பேராபத்துகளிலிருந்து காக்க வேண்டும். தோட்டக்காரன் செடிகளுக்கு தண்ணீர்விட்டு வளர்ப்பதுபோல் கொடைகள் வழங்கி கௌரவித்து மக்களை வளமாக்க வேண்டும். சரியான நேரம் பார்த்து பால் கறந்தால் பசுவிற்கு தீங்கில்லை. முறையின்றி கண்ட நேரத்திற்கெல்லாம் கறந்தால் பசுவிற்கு ஆபத்து. அதுபோன்று மக்களைப் பாதுகாக்க வேண்டும். கொடிக்கு நீர் வார்த்தால்தான் பின்னாளில் அதனின் பூவையும் பழத்தையும் அடைய முடியும். தலைவன் மக்களின் ஆதரவால்தான் சிறப்புடையவன் ஆவான். மக்களின் வரி என்கிற எண்ணெய் கொண்டுதான் தலைவன் என்ற விளக்கு ஒளிதரும். மக்களின்றி தலைவன் தன்னியல்பாய் சேபிப்பதை யாரும் கண்டதில்லை. கேட்டதில்லை. விதையைப் பாதுகாப்பதுபோல் மக்களைப் பாதுகாத்தால் பாதுகாக்கப்பட்ட மக்கள் நல்ல பயன் தருவர். மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவன் செழித்து வளர்வர்.

வரிசையாக முதலில் கிழடுதட்டியது, மனோவிரக்தியடைந்தது, துக்கத்தால் வருந்துவது, மகனோ மனைவியோ மரணமடையலாம் என பயப்படுவது என்று ஒவ்வொன்றாய் சென்று சிங்க அரசின் உணவிற்காக தங்களை தாங்களாகவே இரையாக்கிக் கொண்டது. ஒருநாள் இந்தமுறையின்படி முயலின் முறைவர அனைவரும் வழியனுப்ப முயல் சிங்க இருப்பிடம் நோக்கிச் சென்றது.

அறிவே பலம்: வழியில் அது எப்படியாவது சிங்கத்தைக் கொன்றுவிட்டால் எல்லோரும் நிம்மதியாக இருப்பர் என எண்ணியது. அதற்குண்டான வழிவகைகளை யோசனை செய்தது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- புத்திசாலிகளால் எதுவும் செய்ய முடியும். முகஸ்துதி அதி அற்புத வேலைகளைச் செய்யக் கூடியது. முயற்சியுடையாருக்கு வெற்றி கிட்டும்.

முயற்சி செய்தால் சிங்கத்தை என்னால் கொல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டது முயல் மெதுவாக சிந்தித்தவாரே சிங்கத்தின் இருப்பிடத்தை மாலையடைந்தது. மதியம் வரவேண்டிய மிருகம் வராததால் பசியுடன் இருந்த சிங்கம் மாலை வந்த முயலைப்பார்த்து இவ்வளவு பசியுடன் இருக்கும் எனக்கு நீயா இன்றைய உணவு. அதுவும் காலம் தாழ்த்தி வந்துள்ளாய் என கோபத்துடன் சப்தமிட, முயல் மிகவும் பவ்வியமாக சொன்னது, அரசே குற்றம் என்னுடையது அல்ல, மற்ற மிருகங்களும் காரணமில்லை, எங்கள் முறை இன்று வந்ததால் நான் சிறியவனாக இருப்பதால் ஐந்து முயல்களை மற்ற மிருகங்கள் அனுப்பிவைத்தன. நடுவழியில் ஒரு குழியிலிருந்து வந்த ஒரு சிங்கம் நீங்கள் அனைவரும் என்னுடைய விருந்து எங்கே போகின்றீர்கள் என்றது. நாங்கள் தங்களைப்பற்றியும் தங்களிடம் செல்வது பற்றியும் கூறினோம். அந்த சிங்கம் அவன் ஒரு மடையன் அவனுடன் நான் சண்டை போட வேண்டும் அதில் வெற்றி பெற்றபின் யார் அரசன் என்பதை தீர்மானிக்கலாம் நீபோய் அவனைக் கூட்டிக் கொண்டுவா என்று என்னை அனுப்பியது என்ற முயலின் வார்த்தைகளைக் கேட்ட சிங்கம் மிகுந்த சீற்றம் கொண்டது. ஊடனே வா அவனைப் போய் சந்திக்கலாம், அவனை என் கைகளால் துவசம் பண்ணிவிட்டு மற்றவை பேசலாம் என்றுகூறி, முயல் வழி காட்ட காட்டில் சென்றது சிங்க அரசு.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நிலம், நண்பன், பொன் இம்மூன்றும் சண்டையின் பலனாக கிடைக்கும். இவற்றில் ஒன்றுகூட கிடைக்காது எனத்தெரிந்தால் சண்டைக்குப் போகாதே! சண்டை போடுவதில் பலனில்லை, வெற்றி நிச்சயமில்லை என்றால் புத்திசாலி சண்டைபோடாமல் சகித்துக்கொண்டு போய்விடுவான்.

அரசே, நாட்டுக்கும் தம் சுயகௌரவத்திற்கும் இழுக்கு ஏற்படும்போது சத்திரியர்கள் சண்டையிடுவர். அது கோட்டையில் ஒளிந்து கொண்டிருக்கின்றது. அங்கிருந்து வெளிவந்து எங்களை மடக்கியுள்ளது. கோட்டையுள்ளே இருப்பவனை வெல்வது மிகவும் சிரமம் என்றது முயல்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- அதிகாரத்தால் சாதிக்க முடிகிற காரியத்தை பல நூறு ஆயிரம்பேர்களை வைத்து சாதிக்க முடியாது. அதிகாரத்தில் இருக்கும் திறமையானவன் எத்தனை பேரையும் சமாளிக்கலாம். நீதி சாஸ்திரத்தில் சொல்லப்பட்டது போல் அதிகாரங்களை தன்னிடம் குவித்து வைத்திருப்பவனை ஜெயிப்பது கடினம். அதனால்தான் ஒவ்வொரு தலைவனும் தனக்கு அதிகாரம் வேண்டுமென விரும்புகின்றான்.

சிங்கம் முயலைப் பார்த்து சொல்லியது, அது எங்கிருந்தாலும் சரி, அதை நான் வென்று கொல்வேன். என் அதிகாரத்தை அது எடுத்துக் கொள்வதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பகைவனையும் நோயையும் தலை தூக்கியவுடன் பூரணமாக ஒழித்துவிட வேண்டும். இல்லையெனில் அவை வளர்ந்து பலம் பெற்று விடும்.

தன் சக்தியை உணர்ந்து தன்மதிப்பும் உற்சாகமும் கொண்டிருப்பவன்தான் பரசுராமரைப்போல் தன்னந்தனியே நின்று சத்துருக்களைக் கொல்ல முடியும்.

உண்மைதான் அரசே! அதன் பலத்தை நான் பார்த்தேன் .அதனுடைய சமர்த்தியத்தை அறியாமல் தாங்கள் சண்டைக்குப் போவது சரியல்ல, பலம் வாய்ந்த சத்ருவைக் கொல்ல பலமில்லாதவன் போனால் தந்தமுடைய யானையைப்போல் கர்வபங்கமடைவான் எனத் தூண்டியது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தன்பலத்தையும் எதிரியின் பலத்தையும் அளந்தறியாமல், வெறும் உற்சாகத்துடன் செல்பவன் நெருப்பில் விழுகிற விட்டில் பூச்சி போன்றவன்.

மிகக்கோபங்கொண்ட சிங்கம் அதைப்பற்றி உனக்கென்ன? அது எந்தக் கோட்டையில் இருந்தாலும் சரி. அவனை முதலில் நீ காட்டு என்றது. சிங்கமும் முயலும் ஒர் கிணற்றருகில் வந்தது. முயல் சொன்னது, அரசே உங்கள் பரக்கிரமத்தை என்ன வென்று சொல்வது. தூரத்தில் உங்களைப் பார்த்தவுடன் அவன் இந்த கோட்டைக்குள் ஒளிந்து கொண்டான் என கிணற்றைக் காட்டியது. பசியோடு கோபத்துடன் இருந்த சிங்கம் கிணற்றை எட்டிப்பார்க்க அதில் தெரிந்த தன் உருவத்தை போட்டி சிங்கம் என் நினைத்து உறுமியது. உறுமல் எதிரொலியாக கிணற்றுள் இருந்து வரவே சிந்திக்காமல் அந்த ஆளமான கிணற்றுள் சீறிப் பாய்ந்தது. உள்ளே சென்றபிந்தான் அந்த உண்மைகள் புரிய ஆரம்பித்தன. என்னபயன். அதனால் வெளியில் வர இயலவில்லை.

மற்ற மிருகங்கள் புத்திசாலி முயலைப் பாராட்டின. முயல் ஆனந்தமடைந்து சந்தோஷத்துடன் வாழ்ந்தது. எனவே அறிவே பலம் ………’ என்று சொல்கிறேன் என்றான் பணியாள்

நீ சொல்வது காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது என்கிற கதையாக இருக்கின்றது. முயல் ஜெயித்திருக்கலாம். என்றாலும் பலவீனன் பலசாலியை எதிர்ப்பது சரியல்ல என்றான் நண்பன்.

பலவீனனோ பலசாலியோ யாராயிருந்தாலென்ன? செயல் புரிவதில் நெஞ்சத்துணிவு வேண்டும். முயற்சி செய்பவர்களுக்கு கடவுள்கூட உதவி செய்கிறார்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- விடாமுயற்சியுடையவனுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். கோழைகள்தான் விதி, விதி எனச் சொல்வார்கள். உன் பலத்தால் விதியை வென்று உன் ஆண்மையைக் காட்டு. முயற்சி செய்து அதனால் பலன் கிடைக்காவிட்டால் தோஷம் எதுமில்லை.

விஷ்ணுவும், விஷ்ணு சக்கரமும், கருடனும், நெசவாளிக்கு துணை நின்றனர். செயல் துணிவுள்ளவர்களுக்கு தேவர்களும் துணை செய்வார்கள். நன்றாகத் திட்டமிட்ட சூழ்ச்சியின் முடிவைப் பிரம்மாவாலும் அறியமுடியாது. விஷ்ணு ரூபத்தில் ஒரு நெசவாளி தலைவரின் மகளை அணைத்தான்.

அதெப்படி சூழ்ச்சியினால் காரிய சித்தியாகுமா என நண்பன் கேட்டான்.பணியாள் சொன்னான்.

விஷ்ணு ரூபம் கொண்ட நெசவாளி:அந்த ஊரில் ஒரு தச்சனும், நெசவாளியும் நண்பர்களாக இருந்தனர். தங்கள் தொழிலில் இருவரும் நிபுணர்களாக இருந்தனர். கடுமையாக பகலில் உழைத்துவிட்டு மாலை நேரத்தில் நன்றாக தங்களை அலங்கரித்துக் கொண்டு அத்தர், கஸ்தூரி முதலிய வாசனைப் பொருட்களை உபயோகித்து எல்லா இடங்களுக்கும் சென்று சுற்றித் திரிவர். பொதுக் கூட்டங்கள், நாடகங்கள், விழாக்கள் எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். அன்று நடந்த விழாவிற்கு தங்களை அழகு படுத்திக்கொண்டவர்கள் ஜனக்கூட்டத்திடையே பார்த்து சென்றபோது ஓர் மாளிகையின் உப்பரிகையில் தலைவர் ஒருவரின் மகள் இருக்க கண்டனர். அந்த கூட்டத்திலுள்ள வாலிபங்களின் பார்வை அடிக்கடி அங்கே அவளை நோக்கியே இருந்தது.

காதல், காதல், காதல்: அவள் அவ்வளவு அழகு. இளமையால் பொங்கித்திரண்ட ஸ்தனபாரம், பரந்த நிதம்பம், குறுகிய இடை, கார்மேகம்போல் கறுத்தடர்ந்து அலைபோல் புரளும் மிருதுவான பளபளப்பான கேசம், மன்மதன் கேளிக்கைக்குகந்த ஊஞ்சல்போல் தொங்கியாடும் தங்கத்தோடுடன் கூடிய காதுகள், மென்மை ஒளியை சிந்தும் அன்றலர்ந்த தாமரையை ஒப்ப முகம், விளங்க பேரெழிலுடன் நித்திரை கவர்வதுபோல் சகல மக்களின் கண்களையும் கவர்ந்து ஒளிர்ந்தாள்.

அவளின் அழகை கண்ட நெசவாளி மன்மதபாணத்திற்கு இரையாகி, சிரமத்துடன் தனது எண்ணங்களை மறைத்துக்கொண்டு தொடர்ந்து அவளைப் பார்த்த வண்ணம் வீடு வந்தான். வெப்பம் மிகுந்த நெடிய பெருமூச்சை விட்டுக்கொண்டு படுக்கை விரிக்காத கட்டிலில் விழுந்து அவள் நினைவாகவே கிடந்தான்.

அழகுள்ள இடத்தில் குணமும் இருக்கும் என்கிறார்கள் கவிகள். அது தவறாயிருக்குமோ! ஏனெனில் இவள் பேரழகியாயிருந்தும் என் இதயத்தில் வீற்றிருந்தபடியே என்னைப் பிரிந்து துன்புறுத்துகின்றாள்.

அல்லது இப்படி இருக்குமோ! ஒன்று துன்பத்தால் நிறைந்திருக்க மற்றென்றை காதலி கவர்ந்து செல்ல, இன்னென்று உணர்ச்சிகளிலே ஊறித் தவிக்க என்னுள் எத்தனை இதயங்கள்தான் உள்ளனவோ!

நற்குணங்களால் உலகம் நன்மை அடைகின்றது என்றால் பிறகு இந்த மான் விழியாளின் நற்குணங்கள் என்னைத் துன்புறுத்துவானேன்?

அவனவன் தானிருக்கும் வீட்டைப் பத்திரமாகப் காக்கின்றான் அழகியே என் இதயத்தில் நீ குடி கொண்டுருந்தும் அதை ஏனே என்றென்றும் நீ எரித்துக் கொண்டிருகின்றாய்!

சிவந்த இதழ்களும் இளமைக் கர்வத்தில் ஓங்கிய கலசம்போன்ற ஸ்தனங்களும், குழிந்த நாபியும், இயல்பாய் சுருண்ட நெற்றிக் கேசமும், நுண்ணிய இடையும், நினைத்தவுடன் துன்பமுண்டாக்குவதில் ஒன்றும் அதிசயமில்லை. ஆனால் அவளுடைய பளபளப்பான கன்னங்கள் என்னை எரிப்பதுதான் சரியில்லை.

அவளது ஸ்தனங்களிலே விளையாடிக் களைப்படைந்து குங்குமம் போல் சிவந்து மதயானையின் மத்தகத்தைப்போல் பரந்துள்ள நிதம்பத்தில் மார்பை வைத்து அவளது கைக்கட்டிலே சிக்கிக் கிடந்து கணப்பொழுது துயில் கொண்டு கணப்பொழுது கனவு காணப்பெறுவேனோ!

நான் இறக்கவேண்டுமென்று விதியிருந்தால் அந்த மான் விழியாள்தான் அதற்குக் காரணமாக வேண்டுமா? வேறு வழியில்லையா! நெஞ்சே, காதலி வெகு தொலைவிலிருந்தாலும் அருகிலிருப்பதைப்போல் கண்டு களித்திருக்கின்றாய் நீ. நீ கண்டு களைத்துப்போனால் அந்த யோகத்தை கண்களுக்கு உபதேசம் செய். தனிமையிலே அவளுடன் உறையும் உனக்குத் துக்கமே உண்டாகும் ஏனெனில் பிறர் பொருளை விரும்புகிறவர்கள் தன் மதிப்பால் சுகம் பெறுவதில்லை.

அந்த மெல்லியலால் நிலவின் தன்னெளியைத் தனதாக்கிக் கொண்டாள். அதனால் சந்திரனின் வதனம் மங்கிவிட்டது. தாமரையின் பளபளப்பை அவள் கண்கள் உண்டன என்றாலும் அவளுக்கு திருட்டுப் பட்டம் கட்டுவர் யாருமில்லை. மதயானையின் நடையையும் கவர்ந்து விட்டாள். அது எப்படியோ நான் அறியேன். என் இதயத்தை பறித்து விட்டாள். என்ன விந்தையோ! என்ன மாயமோ!

மண்ணிலும், விண்ணிலும் திசையிலும், திக்கிலும் எங்கு நோக்கினும் அவளையே காண்கிறேன். உயிர்ப்பின் இறுதி துடிப்பின் போதும் என் நெஞ்சின் நினைவிள் அவள் நிறைந்திருப்பாள். விஷ்ணுபோல் அந்த மெல்லியலாள் எங்கும் நிறைந்திருக்கிறாள்.

மனோ நிலையெல்லாம் அநித்தியம் எனும் புத்தபகவானின் வார்த்தைகள் பொய். ஏனெனில் காதலியை பற்றிய எனது சிந்தனை நீடித்ததாய் நித்தியமாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. எனப் பலவாறு பிதற்றியவண்ணம் அலைபாயும் மனத்தோடு துயர்பட்டு இரவைக் தூக்கமின்றிக் கழித்தான்.

அடுத்த நாள் தன்னை அலங்கரித்துக் கொண்டு தன் நண்பன் நெசவாளியைப் பார்க்கவந்த தச்சன் படுக்கையில் இன்னும் கைகால்கள் போட்ட நிலையில் படுத்துக் கிடக்கும் அவன் நிலைகண்டு ஆச்சரியப்பட்டான். நண்பனே! என்னவாயிற்று என விசாரித்தான்.

மீண்டும் மீண்டும் கேட்டும் நெசவாளி ஒன்றும் சொல்லாததால் தச்சன் சலிப்படைந்தான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தன் செயலால் பிறரை மனம் சலிக்கும்படி செய்பவன் நண்பனில்லை. பயத்தோடு தன்னை உபசரிக்கும்படி செய்பவனும் நண்பனில்லை. ஒருவனைத் தாய்போல் பாவித்து நம்பிக்கை வைத்தால் அவன்தான் உண்மையான நண்பன். சாதாரணமாக அறிமுகமானவன் என நினைக்கக்கூடாது.

இருந்தாலும் நண்பனுக்கு நோய் இருக்கின்றதா என அறியும் பொருட்டு தன் கைவிரல்களால் அவன் தலையையும், மார்பையும் தொட்டுப்பார்த்து நண்பனே உன் உடல் நிலை நன்றாக உள்ளது. உன் மனநிலைக்கு காரணம் மன்மதன் என நினைக்கின்றேன் என்றான்.

எப்படி தன் நிலையைச் சொல்வது என வெட்கத்தால் குறுகியிருந்த நெசவாளி தன் நண்பன் உடல் மனநிலைபற்றி கூறியதும் மனம்தெளிந்து தலைவரின் குமாரியை பார்த்தது முதல் நடந்தவைகளை விரிவாக நண்பனிடம் கூறினான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- குணத்தை நன்கறிந்த எஜமானன், நம்பிக்கையுள்ள வேலையாள், பக்திவிசுவாசமுள்ள மனைவி, ஆதரவளிக்கும் நண்பன் ஆகியோரிடம் ஒருவன் தன் துக்கத்தை வெளியிட்டால் மனதிற்கு நிம்மதி யுண்டாகும்.

தச்சன் யோசனை செய்து விட்டு அந்த தலைவன் எந்த வகுப்பைச் சேர்ந்தவனோ. அவன் எப்படி உன் வகுப்பிற்கு பெண் தர சம்மதிப்பான். அவன் செயல்கள் எப்படியிருக்கும் என நீ பயப்படவில்லையா! என்றான்.

சாஸ்திரப்படி தலைவர்கள் குறைந்தது மூன்று மனைவியர்களுடன் வாழ்வதுண்டு. இந்தபெண் ஒரு வேளை என் வகுப்பைச் சேர்ந்தவளின் மகளாக இருக்கக்கூடும். அதனால்தான் நான் அவள்மீது காதல் வயப்பட்டுள்ளேன் என்றான். என் பரிசுத்தமான மனது அவளையே விரும்புகிறது என்றால் நிச்சயமாக அவள் என் குலத்தவளாகத்தான் இருக்க வேண்டும். பகுத்தறிவு சொல்வதில் நல்லவர்களுக்குச் சந்தேகமேற்பட்டால் மனம் சொல்வதையே நியாயம் என்று முடிவு கட்டுகின்றனர்.

அவனது இறுதியான துணிவைக் கண்ட தச்சன், சரி எழுந்திரு, குழித்து உடைமாற்றி சாப்பிடு, ஏதாவது சரியான உபாயம் செய்து நீ அவளை அடைய வழிதேடலாம் என்றான். நண்பனின் ஆறுதல் அளித்த சொற்களால் நம்பிக்கை கொண்ட நெசவாளி எழுந்து பழையபடி தன் இயல்பிற்கு திரும்பினான்.

துணிவுள்ள சூழ்ச்சி: சிலநாட்கள் சென்றன. தச்சன் தான் யோசனைசெய்து வடிவமைத்து செய்த கருட விசைவாகனத்தை எடுத்துக் கொண்டு நண்பனை பார்த்து, நண்பனே, இது உனக்காக நான் மரத்தில் தயாரித்த யந்திர வேலைப்பாடுகளுடன் கூடிய வாகனம். பல வர்ணங்களால் சித்திர வேலையுடன் அழகு படுத்தியுள்ளேன். நீ இதில் ஏறி விசையை இயக்கி விரும்புகிற இடத்திற்கு சென்று இறங்கலாம். ஊர் உறங்கும் நேரம் பார்த்து இன்றிரவே அலங்காரம் செய்து கொள். நான் என் சாஸ்திர ஞானத்தைக் கொண்டு உனக்கு விஷ்ணு ரூபம் போட்டு விடுகின்றேன். இந்தக் கருட விமானத்தின் உதவியோடு தலைவரின் மகள் இருக்கும் பகுதியைச்சேர். அவள் மேல்மாடத்தில்தான் தனிமையில் உறங்குவாள் என அறிந்து வந்துள்ளேன். அவளுடன் நீ சமர்த்தியமாக பேசி உன்னிஷ்டம்போல் நடந்துகொள் என அறிவுரை கூறி தச்சன் சென்றான்.

நெசவாளி பலவிதமாக மனக்கோட்டைகளை கட்டியபடி பகல் பொழுதை கழித்தான். மாலை குளித்தான். சாம்பிரானி புகைஏற்றினான். முகத்துக்கு வாசனையும் உடம்பிற்கு தைலங்களையும் பூசினான். தாம்பூலம் தரித்தான். விதவிதமான வர்ணமும் வாசனையும் நிறைந்த மலர் மாலையையும் வஸ்திரங்களையும் அணிந்து கொண்டான். தச்சன் சொன்னவாறு கருடவாகனத்தில் ஏறி தலைவரின் மாளிகையினல் அவர் மகள் உறங்கும் மேன்மாடத்தில் இறங்கினான்.

நிலவொளி அவள் மீது படர்ந்திருந்தது. திடீரென்று கருட வாகனாய் விஷ்ணு ரூபத்தில் வந்திறங்குபவனைப் பார்த்தவள் படுக்கையிலிருந்து பரபரப்புடன் எழுந்து வந்து அவன் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தாள். தேவரே தங்கள் வருகையால் நான் புனிதம் அடைந்தேன். தங்களின் கட்டளை என்னவோ அப்படியே செய்கிறேன் என்றாள்.

இந்தச் சொற்கள் நெசவாளி ஆனந்தம் மேலிட அன்பே, உன் பொருட்டே நாம் இவ்மண்னுலகிற்கு விஜயம் செய்தோம் என கம்பீரமாகவும் மிருதுவாகவும் மெதுவாகவும் கூறினான்.

நான் மானிடப் பெண்ணாயிற்றே, என்றாள். முன்பு நீ என் தேவியே! சாபத்தால் மண்ணுலகில் பிறந்திருக்கின்றாய். இத்தனைநாள் நீ மனிதனுடன் சேராமல் நாமே ரஷித்து வந்தோம். உன்னை காந்தர்வ மனம் புரிய மனம் கொண்டோம் என்றான்.

ஒரு பெண் பெறுவதற்கரிய பெரும்பேறு ஆயிற்றே என எண்ணிய அப்பெண் தன் சம்மதம் தந்தாள். அவளை காந்தர்வ முறைப்படி மணந்து கொண்டான். தினந்தோறும் அவர்கள் காதலின்பத்தை அனுபவித்து மகிழ்ந்தனர். இரவு நீங்க சிறிது நேரம் இருக்கும்போது நான் வைகுந்தம் சென்று வருகின்றேன் எனக்கூறி நெசவாளி தன் கருட வாகனத்தில் ஏறி யார் கண்ணிலும் படாமல் வீட்டிற்கு வந்து விடுவான்.

பெற்றோர்கள் கவலை: இப்படி நாட்கள் செல்ல அப்பெண்ணின் தோழியர்கள் அப்பெண்ணின் உடம்பில் ஆணுடன் கலந்த கலவிக் குறிகள் இருப்பதைப் பார்த்து பயந்தனர். தலைவரிடம் சென்று ஐயா, அந்தப் பகுதியில் ஆண்கள் நுழையாவண்ணம் காவல் காத்துவந்தும் உங்கள் பெண் உடம்பில் கலவிக் குறிகள் தெரிகின்றன. காரணம் ஒன்றும் எங்களுக்குத் தெரியவில்லை என்றனர்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பெண் பிறந்தாள் என்றாலே பெருங்கவலை. எப்படி வளார்ப்பது. யாருக்கு மணம் புரிந்து கொடுப்பது. மணத்திற்குப் பின் சுகமாய் வாழ்கிறாளா! பெண்ணுக்கு தந்தையாய் இருப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. பிறந்தவுடன் தாயின் மனத்தை அபகரிக்கின்றாள். வளர்ந்தவுடன் பிராண சிநேகிதர்களையும் பிரிக்கின்றாள். மணந்தபிறகு பல சிக்கல்களுக்கு ஆளாகிறாள். பெண்கள் என்றாலே கஷ்டம்தான்.

தலைவன் தோழியர்களின் சொற்களைக் கேட்டு சிந்திக்கலானான். தனது கவிதை நல்லவர்களின் கைக்குப் போய் சேருமா, தூற்றப்படாமல் போற்றப்படுமா என்று ஒரு கவிஞன் தனது கவிதையைப் பற்றிக் கவலைக்கொள்வதுபோல் பெண்களைப்பற்றி கவலைப்பட வேண்டியிருக்கின்றது என எண்ணியபடி சென்று தனது துணைவியிடம் தோழியர் கூறியதைக்கூறி அதைப்பற்றி ஏதாவது தெரியுமா எனக் கேட்டான்.

அவள் தனது மகளைக் கண்டு அவள் உடம்பில் அங்கங்களில் நகக்குறி இருப்பதைப்பார்த்து, நம் குலத்திற்கு களங்கம் ஏற்படுத்தி விட்டாயே. எப்படி இப்படி கெட்டுப்போனாய். உன்னோடு தொடர்பு கொண்டவன் யார் என கேட்டாள். தன் மகள் நடந்ததைக் கூறக் கேட்ட தாய் மிகவும் சந்தோஷமடைந்து தன் கணவனிடம், விஷ்னுவே தன் மகளை காந்தர்வ விவாகம் செய்துள்ளதாகவும் தினமும் அவர் வருவார், மனிதருடன் அவர் பேசுவதில்லையாம் என்றும் கூறி, இன்றிரவு நாம் ஜன்னல் வழி அவரைப் பார்க்கலாம் என திட்டம் போட்டனர்.

தலைவன் மிகவும் சந்தோஷமடைந்தான். அன்றைய பகல் பொழுது போவது அவனுக்கு நூறு வருடங்கள் போலத் தோன்றியது. மாலைவந்தது. இரவில் ஜன்னல் அருகில் தன்மனைவியுடன் சேர்ந்து ஒளிந்து பார்த்தபோது கருடவாகனத்தில் அமர்ந்து சங்கும் சக்ரமும் கதாயுதமும் கைகளில் ஏந்தியபடி யாரோ ஆகயத்திலிருந்து இறங்குவதைக் கண்ட தலைவன் அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டவனைப்போல் நினைத்தான். தன் மனைவியைப் பார்த்து தேவி இவ்வுலகில் நம் இருவரைப் போல் புண்ணியம் செய்தவர்கள் இல்லை. நமது பெண்ணை விஷ்னுவே நேரில் வந்து ஏற்றுள்ளார். இனி என் மாப்பிள்ளையின் வல்லமையால் நான் மிகவும் வல்லமை பெற்றவனாவேன் என்றான்.

தைரியம் கைவிடேல்: அந்த ஊர்த்தலைவனான அவன் அரசாங்கத்திற்குச் செலுத்தவேண்டிய நிதிகளை வசூலித்து சரியான முறையில் கட்டவில்லை. மேலும் தான் விஷ்னுவின் மாமனார் என்ற மமதையில் வந்த அரசாங்க அதிகாரிகளை மரியாதையின்றி நடத்த அவர்கள் தங்கள் தலைமைக்கு அதை மிகைப்படுத்திக் கூறினர். அந்த தலைமை தன் மற்றத்தலைவர்களுடன் ஆலோசனை செய்து அந்த ஊர்த்தலைவன் அவ்வாறு நடந்தால் அதற்குப் பின்னால் எதோ ஒன்று இருக்கும். எனவே தானே நேரில் சென்று விபரம் அறிய நினைத்து தான் தன் முழு பலத்துடன் அவனை சந்திப்பதாக சொல்லி அனுப்பினான்.

தன் குறுநிலத்தலைமைப் பதவிக்கு ஆபத்து என்று தெரிந்தும் விஷ்ணுவே மாப்பிள்ளை என்ற தைரியத்தில் அரசாங்கத்தின் மூத்த தலைவனை பகைத்துக்கொண்டான். அந்த ஊரைச் சுற்றி அரசாங்க அதிகாரிகளும் காவலர்களும் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். தலைவனின் ஆலோசகர் எதிர்களால் சூழப்பட்ட தங்களின் நிலைமைபற்றி தலைவனிடம் கூற, நீங்கள் கவலைப் படவேண்டாம். மூத்ததலைவனைக் கொல்ல ஓர் திட்டம் வைத்திருக்கின்றேன். அது நாளைக் காலைதான் உங்களுக்குப் புரியும் என்றான்.

இரவு தன் மகளை அழைத்து, மகளே உன் கணவனின் பலத்தை நம்பி எதிரியுடன் சண்டை ஆரம்பித்துள்ளேன். அவரிடம் நாளைக் காலை எதிரியைக் கொல்ல வேண்டும் என்று சொல் என்றான். தந்தையின் வேண்டுகோளை தன் கந்தர்வ கணவனிடம் சொன்னாள். நெசவாளி, அன்பே, முன்பு விளையாட்டாக மாயாவி ராஷசர்களைக் கொன்றேன். இந்த மனிதர்களுடன் சண்டை செய்வது எம்மாத்திரம், கவலை வேண்டாம். எதிர்களை கொல்வேன் என்று உன் தந்தையுடம் சொல் என்றான்.

அவள் தந்தையிடம் தன் கணவன் கூறியதைக் சொல்லக்கேட்ட தலைவன் வாயில் காப்போனை அழைத்து காலையில் சண்டையில் கொல்லப்படும் எதிரியின் தரப்பிலிருக்கும் தனமோ, தானியமோ, பொன்னோ, யானையோ, குதிரையோ, ஆயுதங்கள் எதுவாயினும் சரி யார் கைப்பற்றுகின்றாரோ அவருக்கே சொந்தம் என பறைசாற்றச் சொன்னான். பறைச் செய்தி மக்களை மிகவும் மகிழ்சியுறச் செய்தது.

நெசவாளியின் இன்பக் காதல் நினைவுகள் பறந்து அவனை கவலை சூழ்ந்தது. என்ன செய்வது என யோசித்தான். கருட வாகனத்தில் ஏறி எங்காவது போய்விடலாமா. அப்படிச் செய்தால் அவளை மீண்டும் கூட முடியாது. அல்லது போரில் அந்த மூத்த தலைவன் தன் மாமனாரைக் கொன்று தன் மனைவியை இழுத்துக் கொண்டு போய்விடுவான். அவள் இல்லை என்றாலும் எனக்கு மரணமே. எனவே போரிடுவதே சரி. சுருங்கச்சொன்னால் இரண்டு வழிகளிலும் எனக்கு மரணமே. எனக்கு அதிர்ஷ்டமிருந்தால் கருடவாகனத்தில் வரும் என்னைப் பார்த்து எதிரிகள் சிதறட்டும் என நினைத்தான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- கஷ்டமும் சங்கடமும், பேராபத்தும் நேர்கிற சமயங்களில் மேலோர் தைரியத்தைக் கைவிடமாட்டார். சிறந்த விவேகமும், தைரியமும் ஆபத்துகளிருந்து காப்பாற்றும்.

தேவனின் உதவி: பூலோகத்தில் இவ்வாறு செயல் நடைபெறும்போது வைகுண்டத்தில் இங்கு நடக்கும் நிகழ்வை கருடபகவான் மகாவிஷ்ணுவிடம் தெரிவித்து, சுவாமி அந்த நெசவாளி தங்கள் உருவத்தில் அந்த குறுநிலத்தலைவனின் மகளை அணுபவித்து வருகிறான். அவன் மாமனாரைத்தாக்க மூத்ததலைவன் ஒருவன் அவனின் ஊரைச்சுற்றி வலைத்துள்ளான் தன் முழுப்பலத்துடன். தன் காதல் மனைவிக்காக தங்கள் ரூபத்தில் போரிட திட்டமிட்டுள்ளான் நெசவாளி. அந்த போரில் அவன் இறந்தால் அந்த ரூபத்தின் இறப்பு தாங்கள் இறந்ததாக மக்களிடையே பரவும். அந்த பழிச்சொல் வேண்டாம். யக்ஞம் முதலிய சடங்குகள் நடக்காமல் போய்விடும். விஷ்ணு கோவில்களை நாஸ்திகர்கள் நாசம் செய்வர் இது யதார்த்த நிலை. இனி தங்கள் சித்தம் என்றான்.

மகாவிஷ்னு யோசனையில் ஆழ்ந்தார். பின் கருடனைப் பார்த்து அந்த நெசவாளி நமது ஓர் அம்சம். அவனே அந்த மூத்த தலைவனை கொல்வதாகுக. அதற்கு இதுவே உபாயம். நாம் அவனுக்கு உதவி செய்வோம் என்றார். நாம் அவனுடைய உடலில் பிரவேசிப்பேன். நீ அந்த வாகனத்தினுள் பிரவேசி. நமது சக்கரம் அவன் சக்கரத்துள் பிரவேசிக்கட்டும்.

நெசவாளியின் அதிர்ஷ்டம் விஷ்னுவின் முடிவு செயல்பட்டது. அந்த தூண்டுதலினால் நெசவாளி தன் மனைவிக்கு நான் போருக்குப் புறப்படுகின்றேன் எனக்கு மங்களச் சடங்குகள் நடக்கட்டும் என்றான். மங்களசடங்குகள் முடிந்து யுத்தத்திற்குரிய ஆயுதங்களை அனுவித்து கோரோஜன், கஸ்தூரி மற்றும் புஷ்ப வகைகளால் பூஜை செய்தனர்.

தாமரையின் காதலனாகிய சூரியன் தன் திசையில் உதிக்க போர் முரசு கொட்ட தலைவன் தன் சேனைகளுடன் நகரைவிட்டு வெளிவந்தான். போர் ஆரம்பமாயிற்று. அந்தசமயம் நெசவாளி கருடவாகனத்தில் அமர்ந்து விதிப்படி பொன்னும் முத்தும் தானம் செய்துவிட்டு மாளிகையிலிருந்து தன் கருட வாகனத்தில் உயரக்கிழம்பினான். ஆகாயத்தில் தோன்றிய அவனை மக்கள் பார்த்து வணங்கி ஆரவாரம் செய்தனர். படைகளுக்கு மேல் பறந்துவந்து சங்கை ஊத அது பரந்தாமனின் பஞ்சஜன்ய சங்காதலால் அதன் ஒலியைக்கேட்ட எதிரிகள் பயந்தனர். உடல் வஸ்திரங்கள் நனையுமளவிற்கு வியர்த்தன. சிலர் அப்போதே ஓட்டம் பிடித்தனர். பலர் மூர்ச்சையானார்கள். சிலர் பயத்தினால் ஆகயத்தில் பார்வை நிலைத்திட ஸ்தம்பித்து நின்றனர்.

யுத்தத்தை பார்க்க ஆவலுடன் தேவர்கள் ஆகாயத்தில் குழுமினர். இந்திரன் பிரமாவிடம் அங்கு என்ன, யாராவது அசுரனையோ, ராஷசனையோ கொல்லவேண்டியிருக்கின்றதா? பின் ஏன் ஸ்ரீமன் நாராயணன் கருடவாகனம் ஏறி யுத்தம் செய்யப் புறப்பட்டிருகின்றார் என்றான்.

பிரம்மா யோசித்தார். தேவர்களின் பகைவர்களைக் கொன்று ரத்தங்குடித்த சக்ராயுதத்தை மகாவிஷ்ணு மனிதன்மேல் பயன்படுத்தமாட்டார். சிங்கத்தின் பாதம் யானைகளைத்தான் கொல்லுமே தவிர கொசுக்களைக் கொல்லாது. பின் ஏன் இந்த அதிசயக் காட்சி என மலைத்தார்.

ஆகையால்தான் நான், நன்றாகத் திட்டமிட்ட சூழ்ச்சியின் முடிவைப் பிரம்மாவாலும் அறியமுடியாது. விஷ்ணு ரூபத்தில் ஒரு நெசவாளி தலைவரின் மகளை அணைத்தான். என்று சொன்னேன் என்றான் பணியாள்.

மேலும் தொடர்ந்தான். நெசவாளி எதிரி தலைவன் மீது சக்கராயுதத்தை பிரயோகிக்க அது அவனை இரு கூறாக்கி பின் அவன் கைக்கு வந்தது. இதைக் கண்ட மற்ற தலைவர்களும் தன் வாகனங்களிலிருந்து இறங்கி விஷ்ணு ரூபத்தில் இருந்த நெசவாளியை வணங்கி மன்னிப்பு கேட்டனர். அடுத்து நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதற்கு இந்த குறுநிலத்தலைவன் இடுகிற கட்டளைப்படி செயல் படுங்கள் என்றான். எதிரியின் பொருட்கள் உடைமைகள் அனைத்தும் தன் மாமனார் வசமாக்கினான். அந்த நிலையில் அவன் உடலிருந்து விஷ்ணுவும், கருடனும் சக்கரமும் விடுபட்டு தங்களின் உரிய நிலையை அடைந்தன. நெசவாளி தன் காதல் மனைவியுடன் நெடுநாள் சுகங்களை அனுபவித்து வாழ்ந்தான்.

அதனால்தான், செயல் துணிவுள்ளவர்களுக்குத் தேவர்களும் துணை செய்வார்கள்’ …….. என்று சொல்கிறேன் என்றான் பணியாள். சரி நண்பனே! நீயும் துணிந்து விட்டாய், விரும்பியபடியே நடந்து வெற்றியடைய உனக்கு மங்களம் உண்டாகட்டும் என ஆசீர்வாதித்தான் நண்பன்.

பணியாள் தன் தலைவனிடம் சென்று வணக்கம் தெரிவிக்க, உன்னைப்பார்த்து நீண்ட நாட்கள் ஆயிற்றே என்ன காரணம் என நலம் விசாரித்தார் தலைவர்.

தலைவரே தங்களிடம் ஒரு அவசரகாரியமாய் வந்துள்ளேன். அது உங்கள் மனதிற்கு பிடிக்காத விஷயமாய் இருந்தாலும் உங்கள் நன்மை கருதி சொல்ல வந்தேன். பிடித்த விஷயம், பிடிக்காத விஷயம் எல்லாம் என்னைப்போன்ற அண்டிப்பிழைப்பவர் கையில் இல்லை. அவசர அவசியமாய் செய்ய வேண்டியகாரியம் நேரம் தவரக்கூடாது என்பதற்காக தெரிவிக்க வந்தேன் என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- ஆலோசனை பொருப்பில் இருப்பவர்கள் என்றென்றும் உண்மையே பேசுவது அவர்களின் திடமான எஜமான பக்தியைக் காட்டும். எஜமானனிடம் என்றென்றும் இனிமையாகப் பேசுபவனை காண்பது சுலபம். ஆனால் கசப்பான உண்மைகளைப் பேசுகிறவனையும் கேட்கிறவனையும் காண்பது அரிது.

அவன் பேச்சில் நம்பிக்கை கொண்டு நீ என்ன சொல்கின்றாய் என்றார் தலைவன்.

தலைவரே, கெட்ட எண்ணத்துடன்தான் புதியவன் உங்கள் நம்பிக்கையை பெற்றுள்ளான். என் எதிரிலேயே உன் எஜமானிடம் இருக்கும் கீர்த்தி பலம், புத்தி பலம், பொருள் பலம் ஆகிய மூன்றின் பலா பலங்களை தெரிந்துள்ளேன். இனி அவனைக் கொன்று அதிகாரத்தை கைப்பற்றப் போகிறேன் என ரகசியமாக சொல்லியுள்ளான். அதை இன்றே நிறைவேற்ற திட்டமிட்டுள்ளான். அதனால்தான் நான் தங்களை எச்சரிக்கை செய்ய வந்தேன் என்றான்.

இவற்றைக்கேட்ட தலைவன் மனவருத்தத்துடன் திக்பிரமையடைந்து ஒன்றும் பேசாமல் இருந்தான். அந்த மனோ நிலையை ஊகித்தறிந்தான் பணியாள்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- உடைந்த வெள்ளியையும், ஆட்டங்கண்ட பல்லையும் துஷ்ட ஆலோசகனையும் நீக்கிவிடுவதே மேல் அதனால் துயரம் நீங்கி சுகம் வரும். ஒருவனை மட்டும் தனது ஆலோசகராக வைத்தால் அவன் அறிவீனத்தால் கர்வம் கொள்கின்றான். பிறகு தலைவனுக்கு அடங்கி நடப்பதையே வெறுக்கின்றான். அதன் விளைவாக தானே யதேச்சையாக அதிகாரம் செலுத்த ஆசைபடுவான். அந்த ஆசை தலைவனை கொல்லத் தூண்டும். ஒரு ஆலோசகருக்கு சுயநல நோக்கங்கள் இல்லாமலிருக்கலாம். அலட்சியமாக அலுவல்களைப் பார்த்தால் தலைவர்களுக்கு பிடிக்காது. ஏனெனில் எதிர்காலத்தை நிகழ்காலம் நிர்ணயிக்கும். உண்மை அன்போடு ஒருவர் நன்மை செய்தாலும் அவன்மேல் வெறுப்பை காட்டுவர். சாதுர்யமாக ஒருவன் தீமை செய்தாலும் அவனுடன் நேசம் பாராட்டுவர்.

இப்போதும் புதியவன் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சகல காரியங்களையும் தன்னிஷ்டம்போல் செய்து வருகிறான். எதிர்காலத்தைபற்றி கவலையில்லாமல் தலைவரின் இயல்பு இருக்கக்கூடாது. தலைவரின் மனம் ஒருபோதும் ஒரு நிலையில் இருப்பதில்லை. யோகிகள் கூட அதைப் புரிந்து கொள்வது கடினம். அரசாங்க சேவை என்பது கஷ்டமான வேலை என்றான் பணியாள்.

புதியவன் என்னுடன் நட்புடன் வேலை செய்கிறான். எதிரியாக ஏன் மாறுவானேன் என்றார் தலைவர்.

செல்வத்தை விரும்பாதவன் தலைவரிடம் வேலைபார்க்க வரமாட்டான். வேறுவழி இல்லாமல்தான் ஒருவருக்கு உழைப்பான். வேலைக்காரனோ இல்லையோ அதையெல்லாம் கொண்டு எதையும் தீர்மாணிக்க முடியாது என்றான் பணியாள்.

அன்பனே! நீ சொல்கிறபடி பார்த்தாலும் அவனை என்னால் வெறுக்க முடியவில்லை. என் அன்பிற்கு உகந்தவனாக இருந்திருக்கின்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- உடம்பில் குற்றங்குறைகள் பல இருக்கின்றன. என்றாலும் ஒவ்வொருவரும் உடம்பை பேணுகின்றோம். ஒருவன்மேல் பிரியம் வைத்து விட்டால் அவன் செய்யும் தவறுகள் பெரிதாகத் தெரியாது. மனதார நேசித்தவன் எவ்வளவு வெறுக்கத்தக்க காரியங்கள் செய்தாலும் பேசினாலும் நெஞ்சம் அவனையே சுற்றி சுற்றி வரும் இயல்புடையது.

பணியாள் சொன்னான், அதுதான் பெரிய தவறு. மற்றெல்லோரையும் விட்டு அவன் மீது முழு அன்பு செலுத்தினீர்கள் அதுவே உங்கள் பதவிக்கு எமனாக விரும்புகிறது. நற்குலத்தவன் ஆனாலும் அறிவில்லாதவன் ஆனாலும், யார்மீது தலைவரின் கிருபை அதிகமாக விழுகிறதோ அவன் மனம் அதிகாரத்தில் மோகம் கொள்கிறது. எவ்வளவு நேசித்திருந்தாலும் கெட்டவன் ஆகிவிட்டதால் அந்த நேசத்தை உதறித்தள்ளவேண்டும்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தோழனோ, சகோதரனோ, நண்பனோ, மகனோ, வணங்கத்தக்க பந்துவோ யாராயிருந்தாலும் அவர்கள் கர்வங்கொண்டு பகைவர்களாக மாறினால் காரியவாதி அவர்களை விலக்கி வைக்கின்றான். தங்கத்தில் தோடாக இருந்தாலும் காது புண்ணாகிறது என்றால் கழட்டி எடுத்துவிட வேண்டியதுதான்.

பணியாள் மேலும் சொன்னான், இவன் பலசாலி. அவனால் நமக்கு பிரயோஜனம் உண்டு என நினைதீர்களானால், அது விபரீதம், தலைவனுக்குத் தொண்டுபுரியாமல் கர்வங்கொண்டு பதவியின் அதிகார ஆசைபிடித்து நடக்கும் அவன் பலம் உங்களுக்கு என்றும் ஆபத்து. அதனால் அவன்மேல் அனுதாபம் காண்பித்தல் சரியில்லை.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நல்ல வழியைவிட்டு கெட்டவழியில் செல்பவன் நாளடைவில் கஷ்டங்கள் பட்டு மனம் நொந்து போகிறான். அதேபோல் நண்பனின் நல்லுபதேசங்களை நாடிக் கேளாதவன் விரைவிலே தன் நிலையிழந்து விரோதிகளை மகிழ்வித்து தனது மடமையின் பலனை அனுபவிக்கின்றான். முதலில் கசந்து முடிவில் இனிக்கிற வார்த்தையைச் சொல்பவனும் கேட்கிறவனும் எங்கிருக்கிறானோ அங்குதான் லட்சுமி தண்டவமாடுவாள்.

அரசு சேவகன் வஞ்சம் செய்யக்கூடாது. ஒருநாள் அது தலைவருக்கு தெரிந்துவிடும். உண்மை எப்போதும் இதமாக இருக்காது. விஷயம் கடுமையாக இருந்தாலும் காதுகொடுத்து கேளுங்கள், தேர்ந்து பழகிய சேவகர்களைவிட்டு முற்றிலும் புதியவர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது. அந்த அதிகாரம் விரைவில் நலிவுறும்.

தலைவன் சொன்னான். நல்லவன் என்று முன்பு சபையில் புகழ்ந்து சொல்லிவிட்டு இப்போது நாமே எப்படி இகழ்வது. அவன் சரணாகதியடையுமுன் நான் வாக்கு கொடுத்துள்ளேன். எப்படி நன்றி கெட்டவன் ஆகமுடியும். கொடுத்த வாக்கை மீறக்கூடாது என்ற பயம் வேண்டும்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- துவேஷம் பாராட்டுவதற்கு துஷ்டர்கள் காரணம் தேடுவதில்லை. அறவழியில் நிற்பதற்கு நல்லவனும் காரணம் தேடுவதில்லை. அது அவரவர் சுபாவ குணம். கரும்பு இனிப்பதும் எழுமிச்சை புளிப்பதும் அதனதன் இயற்கையான குணங்கள்.

எவ்வளவுதான் நேசம் பாராட்டினாலும் கெட்டவன் கெட்டவனாகத்தான் இருப்பான். வியர்க்க வியர்க்க தொடர்ந்து முயற்சித்தாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது. மேலோருக்குச் செய்யும் நன்மை சிறியதாக இருந்தாலும் மேன்மையடைகிறது- இமய முடியைத் தொடும் சந்திரகிரணங்கள் கூடுதலாக பிரகாசிப்பது போல். கீழோருக்குச் செய்யும் நன்மை நலிந்து நசிகிறது- கறுத்த மலை முகட்டின்மேல் விழும் சந்திர கிரணங்கள் மங்கி மறைவதுபோல் என்றான் பணியாள்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தீயவனுக்கு நூறு நன்மைகள் செய்தாலும் வீண், அறிவிலிக்கு எத்தனை புத்திமதி சொன்னாலும் வீண், சொல்படி நடக்காதவனுக்கு நூறு யோசனைகள் சொன்னாலும் வீண், புத்தி கெட்டவனுக்கு எத்தனை உபதேசம் செய்தாலும் வீண், தகுதியில்லாதவனுக்குத் தானம் கொடுப்பதும், அறிவற்ற சோம்பேறிக்கு உதவி செய்வதும், நன்றியறிதல் இல்லாதவனுக்கு நன்மை செய்வதும், பண்பற்றவனிடம் பண்புடன் பழகுவதும் வீண். காட்டில் அழுவது, பிணத்திற்கு புணுகு தடவுவது, தாமரையை தரையில் படரச் செய்ய முயற்சிப்பது, நாய்வாலை நிமிர்த்துவது, செவிடன் காதில் சங்கு ஊதுவது, குருடன் முகத்துக்கு அழகு செய்வது எல்லாமே மூடனுக்கு புத்தி சொல்வதற்கு ஒப்பானது.

கனத்த மடியுள்ள பசுவென்று நினைத்து எருதை கறக்க முயற்சிப்பதும். அழகியை விட்டுவிட்டு அலியை அனைந்து கொள்வதும் பளப்பளப்பான மணலில் ஆசைகொண்டு வைடூரியத்தை தேடுவதும் முட்டாள்தனமான மூடனுக்கு சேவை செய்வது போன்றதாகும்.

என் ஆலோசனையைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் ஏனென்றால், புலியும், குரங்கும், பாம்பும் சொன்ன பேச்சை ஒருவன் கேளாமற் போனதால் நன்றி கெட்ட ஒருவன் அவனை வீழ்த்த முயற்சித்தான் என்றான் பணியாள். அது எப்படி என்றான் தலைவன்.

நன்றி கெட்ட மனிதன்: அந்த ஊரில் இருந்த பிராம்மணனை தரித்திரம் பிடுங்கித் தின்றது. அவன் மனைவி அவனைப்பார்த்து, குழைந்தைகள் பசியால் துடிக்கிறது. உன் கண்ணில் படவில்லையா? எப்படி நிம்மதியாய் இருக்கின்றாய்? எங்காவது சென்று எதையாவது செய்து பசி தீர்க்க வழிபார் என தினமும் திட்டினாலும் எவ்வளவு முயற்சித்தும் ஒன்றும் பலன் கிட்டவில்லை. சலித்துப்போனவன் ஒருநாள் தூரப்பயணமாக சென்றவன் வழிதவறி ஒரு காட்டிணுள் சென்று விட்டான். பசிவாட்ட அந்தக் காட்டில் ஏதாவது சாப்பிடக்கிடைக்குமா எனத்தேடினான்.

அப்போது அங்கே ஒரு பெரிய கிணறு இருப்பதைப்பார்த்து அருகில் சென்றபோது அதனுள் விழுந்து கிடக்கும் ஒரு புலியையும், குரங்கையும், பாம்பையும், மனிதனையும் கண்டான். அவைகளும் இவனைப் பார்த்தன.

நல்லவனே, உயிர் காப்பது ஒரு பெரிய தர்மம், என்னை வெளியேற்றி உதவி செய், என் குடும்பத்துடன் கூடி வாழ்வேன் என்றது புலி. புலி என்றாலே அனைவரும் நடுங்குவர். எனக்கும் பயமாக இருக்கிறது என்றான் பிராம்மணன்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பிராமணனைக் கொன்றவனுக்கும், குடிகாரனுக்கும், விரதம் மீறியவனுக்கும், சதிகாரனுக்கும் ஆன்றோர்கள் பிராயச்சித்தம் விதிமுறை வைத்திருக்கிறார்கள். ஆனால் நன்றி மறந்தவனுக்கு பிராயச்சித்தமில்லை.

நன்றி மறவேல்: செய்நன்றி கொன்றவனுக்குப் பிராயச்சித்தம் எதுவும் கிடையாது என்பதை நான் அறிவேன். நீ பயப்படத் தேவையில்லை. என்மீது இரக்கம் காட்டு. வெளியே தூக்கிவிடு என்றது புலி. ஜீவராசிகளின் உயிரைக் காப்பதில் ஆபத்து ஏற்பட்டால் அதுவும் நன்மைக்கே! என்று புலியை மேலே தூக்கிவிட்டான். புலி நன்றியுடன் சொன்னது அதோ தெரிகிறதே அந்த மலை சிகரங்களுக்கிடையே என் குகை இருக்கின்றது அங்கு நீ வந்து என்னை கௌரவிக்க வேண்டும் என்றது. உனக்கு பிரதியுபகாரம் செய்ய விரும்புகிறேன். இந்த ஜன்மத்துடன் இந்தக் கடன் தீர்ந்து போகட்டும் எனக்கூறிச் சென்றது.

இதைப் பார்த்த குரங்கு, சாதுவே எனக்கும் உதவி செய், தூக்கிவிடு என்றதும் அந்த குரங்கையும் பிராமணன் வெளியே தூக்கி விட்டான். குரங்கு மிகுந்த நன்றியுடன் கூறியது, அன்பனே அந்தபுலியின் குகைக்கு எதிரேயுள்ள நீர் வீழ்ச்சியின் அருகில் எனது வீடு இருக்கின்றது. அங்கு நீ வந்து சென்றால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்றது.

பிராமணனைப் பார்த்த பாம்பு என்னையும் தூக்கிவிடு என்றது. பிராமணன் உன்னைக் கண்டால் உடல் நடுங்குகிறது எப்படி தொட்டு தூக்குவது என்றான். கடிப்பதா, வேண்டாமா என்பது எங்களிடம் இல்லை. யாருக்கு அப்படி விதி இருக்கின்றதோ அவர்களையே நாங்கள் கடிப்போம். இருப்பினும் உன்னை நான் கடிப்பதில்லை என மூன்று முறை சத்யம் செய்து தருகின்றேன் நீ பயப்படாதே என்றது. பயந்து கொண்டே பாம்பைத்தொட்டு தூக்கி தரையில் விட்டான். பாம்பு சொன்னது அவசியம் ஏற்பட்டால் என்னை நினை நான் அங்கு வந்துவிடுவேன் என்று சொல்லி ஊர்ந்தது.

புலி, குரங்கு, பாம்பு அகிய மூன்றும் போகுமுன் உள்ளே இருக்கும் மனிதனிடம் சர்வ ஜாக்கிரதையாக இரு, அவன் எல்லாப் பாவங்களும் செய்யத் துணிந்தவன் எனக்கூறிச் சென்றன. அப்போது உள்ளேயிருந்த மனிதன் என்னையும் காப்பாற்று நானும் உன்னைப்போல் ஒரு மனிதன் தானே. மிருகங்களைக் காப்பாற்றுகிறாய் ஒரு மனிதனுக்கு உதவி செய்யமாட்டாயா எனக் கெஞ்சவே இரக்கம் கொண்ட பிரம்மணன் அவனையும் காப்பாற்றினான். வெளியில் வந்தவன் நான் ஒரு தட்டான். தங்கத்தில் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால் என்னிடம் வா. எனக்கூறிச் சென்றான்.

பிராமணனுக்கு பொருள் ஏதும் கிட்டவில்லை. வழியில் குரங்கின் ஜாகை சென்றான். அது அவனுக்கு நல்ல பழவகைகளைக் கொடுத்து உபசரித்தது. களைப்பு தீர்ந்தவனிடம் உனக்கு பழங்கள் வேண்டும் போது இங்கு வா நான் தருகிறேன் எனக் கூறியது. ஒரு நண்பனாக இருந்து என்னைக் கவனித்தாய் எனக்கு புலியின் இருப்பிடத்தைக்காட்டு என்றான்.

குரங்கு புலியிருக்கும் இடத்திற்கு கூட்டிச்சென்றது. புலி அவனை அடையாளம் கண்டு தன்னிடமுள்ள தங்கத்தினாலான மாலை முதலியவற்றை கொடுத்து உபசரித்தது. இந்த மாலை ஆபரணங்கள் எல்லாம் வழிதவறி வந்த குதிரையின் மேலிருந்தவனுடையது. அவனை நான் கொன்று விட்டேன். இவைகள் எனக்கு பயனில்லாதவை நீ எடுத்துக்கொள் என்றது.

எது நன்னடத்தை: அந்நகைகளுடன் காட்டைவிட்டுக் கிழம்பியவனுக்கு தட்டான் ஞாபகம் வரவே அவன் மூலம் இவற்றை விற்று பணமாக்கி வீட்டிற்குச் செல்லாம் என நினைத்து தட்டனைத் தேடிச்சென்றான். தட்டான் மரியாதயுடன் வரவேற்று அங்க சுத்தி செய்து போஜனம் அருந்த உதவி செய்தான். அப்போது அவனிடம் தான் கொண்டுவந்திருந்த நகைகளைக் காட்டி அதை விற்றுத்தரவேண்டினான். அந்த நகைகளை அந்த ஊர்த்தலைவரின் மகனுக்காக செய்தவன் அந்த தட்டான். அது நினைவிற்கு வரவே நான் இதைக் காட்டி விற்க ஏற்பாடு செய்து வருகிறேன் நீங்கள் இங்கேயே இருங்கள் எனக்கூறி நேராக தலைவரின் மாளிகைக்குச் சென்றான். நகைகளைக் காட்டி அதை தன்னிடம் கொடுத்த பிராம்மணன் என் வீட்டில் இருக்கின்றான் என்றான்.

ஆத்திரத்தில் அறிவிழந்த தலைவன் என் மகனின் நகைகளை அபகரித்து மகனைக் கொன்றவனை காலையில் கழுவில் ஏற்றுங்கள் என்றான். காவலாளிகள் வந்தார்கள் கைது செய்து கட்டிப்போட்டனர். அப்போது பிராம்மணனுக்கு பாம்பு சொன்னது நினைவில் வர அதை நினைத்தான் .உடனே அது அவன் முன்தோன்றியது. அது ஓர் உபாயம் சொன்னது. நான் போய் தலைவனின் மனைவியை தீண்டி விடுகிறேன். எந்த மந்திரவாதியாலும் வைத்தியனாலும் குணப்படுத்த முடியாது. எப்படியாவது நீ பேசி வந்து அவளைத்தொடு. நீ தொட்டவுடன் விஷம் நீங்கி அவள் பிழைத்துக் கொள்வாள் என்று கூறிச்சென்று அவர் மனைவியை தீண்டியது.

என்ன செய்தும் விஷம் நீங்கவில்லை. உடன் பறையறிவிப்பு செய்ய, பிராம்மணன், நான் விஷத்தை இறக்குகிறேன் எனக்கூறி தலைவரின் மனைவி அருகில் சென்று அவளைத் தொட்டவுடன் விஷம் நீங்கிப் பிழைத்தாள். அதனால் ஆச்சரியமும் சந்தோஷமும் கொண்ட தலைவன் அவனை கௌரவித்து உண்மையைக் கேட்டறிந்தான். தட்டானைக் கைது செய்தான். பிராம்மணனுக்கு ஆயிரம் கிராமங்களை பரிசாகக் கொடுத்தான். தன் ஆலோசகராகவும் நியமித்தான். தன் குடும்பத்தை அழைத்துவந்து யாகங்கள் பல செய்து புண்ணியம் தேடிக்கொண்டு அரசு அலுவல்களை சீராக கவனித்து சுகமாக வாழ்ந்தான்.

ஆகையால் தான், ‘புலியும், குரங்கும், பாம்பும் சொன்ன பேச்சை ……’ என்றெல்லாம் சொன்னேன்.

சுற்றத்தான், சிநேகிதன், அரசன், குரு, இவர்கள் அத்து மீறி நடந்தால் அவர்களைத்தடுக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அவர்கள் போகிற போக்கிலேயே நீயும் போக நேரிடும். நெருப்பில் தலைவைத்து படுத்தாலும் சரி, பாம்புகளைத் தலையனையாக வைத்தாலும் சரி, தவறான வழியில் செல்பவன் உயிர் நண்பனாயிருந்தாலும் ஆதரிக்காதே எனப் பெரியோர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நற்செய்கை உடையவனுக்கு ஆசைகள் இருக்காது. நண்பன் என்கிறவன் இடுக்கண்களை களைந்தெரிய வேண்டும். இதுதான் நன்னடத்தை. மற்றது தீய நடத்தை. ஒருவனைப் பாவம் செய்யாது தடுப்பவனே உண்மையான நண்பன். நல்ல காரியங்கள் குற்றமற்றவை. நல்ல மனைவி கணவன் மனம் அறிந்து நடப்பாள். பெரியோர்களால் புகழப்படுபவனே புத்திமான். கர்வங்கொள்ளாதவனே புகழ் அடைவான். பேராசையற்றவன் சுகம் பெறுவான். தயக்கமின்றி உதவிக்கு வருபவனே உண்மையான நண்பன். ஆபத்துக்காலத்தில் சஞ்சலம் அடையாதிருப்பவனே மனிதன்.

நீங்கள் புதியவனுடன் தொடர்பு வைத்திருந்தால் அறம், பொருள், இன்பம் மூன்றிற்கும் தவறு செய்யும் பாதகங்கள் செய்கிறீர்கள். சொல்வது எல்லாம் சொல்லி விட்டேன். எதிர்காலத்தில் கஷ்டங்கள் வந்தால் அப்போது நினைத்துப் பயனில்லை. சில நேரங்களில் தலைவர்கள் தான் செய்யும் காரியங்களையும் அவற்றின் நன்மை தீமைகளையும் சீர் தூக்கிப் பார்ப்பதில்லை. தன்னிச்சையாக நடக்கின்றனர். பின்னால் பங்கம் அடைந்து சோகத்தில் சிக்கித்தவிக்கும்போது வேலையாட்களின்மேல் பழியை சுமத்துவார்கள் என்றான்.

அப்படியென்றால் அவனைக் கூப்பிட்டு எச்சரித்து கண்டித்து வைக்கட்டுமா? என்றார்.

அதென்ன எச்சரிக்கை! எச்சரிக்கப்பட்டவன் கெடுதி செய்வதற்கோ தாக்குவதற்கோ முந்திக் கொள்கிறான். அவனை வார்த்தைகளால் எச்சரிக்கை விடாமல் காரியத்தால் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றான். அது தன்னால் ஏதும் கெடுதி செய்யமுடியாமற் போனாலும் மற்றவர்களைத் தூண்டி கேடு செய்யலாம்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சாணைக்கல் தானாக எதையும் வெட்ட முடியாதபோதும், கத்தியை கூர்மையாக்கி தருவது போல் வலிமையற்றவன் தீமை செய்வதற்கு இன்னெருவனை ஏவிவிடுவான்.

தலைவரே முன்பின் தெரியாதவனுக்கு ஜாகைதராதே! எனெனில் ஒரு தெள்ளுப்பூச்சியின் குற்றத்தால் சீலைப்பேன் உயிர்விட்டது என்றான். அது எப்படி என்ற தலைவனுக்கு அது பற்றி சொல்லத்தொடங்கினான் பணியாள்.

சீலைப்பேனும் தெள்ளுப்பூச்சியும்: அந்த மாளிகையில் ஒப்புயர்வுள்ள தன்னிகரில்லாத பஞ்சனை ஒன்று இருந்தது. அதின் மேல் விரிப்பு மடிப்பில் ஒரு சீலைப்பேன் இருந்தது. அது தலைவன் நன்றாக அயர்ந்து தூங்கும் போது அவனுடைய ரத்தத்தைக் குடித்து குடித்து வளர்ந்து பிள்ளையும் பேரனுமாக பெருகியது. நல்ல ஆரோக்கியமான ரத்தம் தினமும் கிடைத்ததால் அவைகள் அனைத்தும் நன்றாக கொழுத்து இருந்தது.

ஒரு நாள் வீசிய காற்று தெள்ளுப்பூச்சி ஒன்றைக் கொண்டுவந்து அந்த பஞ்சனையில் சேர்த்தது. வழவழப்பான அந்த மேல்விரிப்பு தலையனைகள் எல்லாம் அந்த பூச்சிக்கு ஆனந்தத்தை தந்தன, அந்த படுக்கையிலிருந்து வந்த வாசனையை அது நுகர்ந்து அங்கும் இங்குமாக திரிந்தது. இங்கேயே தங்கலாம் என முடிவு எடுத்தது. அப்போது சந்தர்ப்ப விதி வசத்தால் சீலைப்பேன் தெள்ளுப்பூச்சியைப் பார்த்தது. இது தலைவனின் படுக்கை. நீ எங்கிருந்து வந்தாய். இங்கிருந்து சீக்கிரம் போய்விடு என அதிகாரம் செய்தது.

அப்படிச் சொல்லாதீர்கள் அம்மா! நான் உங்களின் விருந்தாளி. நானாக வரவில்லை.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நல்ல பிராம்மணன் அக்னிக்கு மரியாதை செய்வான். பிராம்மணனை மற்றவர் மரியாதை செய்வர். கணவனை மனைவி மரியாதை செய்கிறாள். விருந்தாளியை எல்லோரும் மரியாதை செய்வர்.

காற்று என்னை இங்கு கொண்டுவந்து சேர்த்துள்ளது என்றது. பிரம்மணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என பலவிதமான மனிதர்களின் ரத்தத்தை நான் ருசிபார்த்துள்ளேன். அது காரமாகவும், பசபசப்பாகவும், சத்தில்லாமலும் இருக்கும். ஆனால் இதில் படுக்கின்றவனின் ரத்தம் மனோரம்மியமாய் அமிர்தம்போல் இருக்கும். சரியான வைத்தியர்களிடம் காண்பிக்கப்பட்டு உயர்ந்த மருந்து வைத்தியங்களால் ரத்தவாதம், பித்தம், கபம் மூன்றும் இல்லாமல் இருக்கும். நிலம், நீர், ஆகாயம் முதலியவற்றில் உள்ள உன்னதமான ஜந்துக்களின் மாமிசத்திலிருந்து தயாரித்த எண்ணெய், தைலம், இளந்தளிர்கள், சர்க்கரை, மாதுளை, சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி முதலியவற்றின் சத்தேறிய உணவுகளைச்சாப்பிட்டு விருத்தியடைந்துள்ள இவனின் ரத்தம் எனக்கு ஜீவாம்ருதமாக இருக்கும். வளமும், மணமும், ருசியும், மகிழ்ச்சியும் தரும். அதை ஒருதடவையாவது ருசிக்க ஆசைப்படுகிறேன். கொஞ்சம் தயவு பண்ணுங்கள் எனக் கெஞ்சியது.

நீ கடித்தால் நெருப்பைப்போல் சுடுவதால் உனக்கு இது லாயக்கான இடமில்லை, போய்விடு இடம், நேரம், முறை, எதையும் அறியாமல், எதிரியின் பலத்தையும் தனது திறனையும் உணராமல், யோசனையின்றி நடந்து கொள்கின்ற மூடன் எந்தப் பலனும் பெறுவதில்லை. என்றது சீலைப்பேன்.

தெள்ளுப்பூச்சி, சீலைப்பேன் காலில் வீழ்ந்து மீண்டும் மன்றாடியது. ‘காலில் விழுந்து கெஞ்சுபவர்களை கோபித்து மன்னிக்காமலிருப்பவன் மும்மூர்த்திகளையும் அவமானப் படுத்துகிறான்’ என்று தலைவனுக்கு கதை சொன்னவன் சொன்னது ஞாபகம் வரவே, சீலைப்பேன் தாட்சண்யத்துடன் சரி, போ என்றது. கண்ட நேரத்தில் கண்ட இடத்தில் ரத்தம் குடிக்கப் போய்விடாதே என எச்சரிக்கை விடுத்தது.

நான் புதிதாக வந்தவன். எனக்கு சரியான நேரம், இடம், வேளை எது என்பது தெரியாது. என்றது தெள்ளுப்பூச்சி.

அரசன் குடிபோதையிலிருக்கும் நேரம், நல்ல அசதியில் கிடக்கிற நேரம், நல்ல நித்திரையில் இருக்கிற நேரம் பார்த்துப் போ. சத்தம் போடாமல் காலைக்கடி என்றது சீலைப்பேன்.

அப்படியே செய்கிறேன் என்ற தெள்ளுப்பூச்சிக்கு ரத்தம் குடிக்க ஆவலாய் இருந்ததால் சீலைபேன் சொன்னதெல்லாம் மறந்து விட்டது. தலைவன் வந்து படுத்த சிறிது நேரத்திலே ஊர்ந்து போய் முதுகில் கடித்தது. சுருக்கென்ற அதன்கடி தீ சுடுகிறமாதிரி, தேள் கொட்டிய மாதிரி, கொள்ளியால் சுட்டமாதிரி இருக்கவே தலைவன் துடிதுடித்து எழுந்தான். வேலையாட்களை விட்டு படுக்கையில் பூச்சி கடித்துவிட்டது நன்றாக தேடிப்பார்க்கச் சொன்னான். அப்போது சீலைப்பேனும் அதன் குடும்பமும் இருக்கக் கண்ட பணியாட்கள் அவற்றை நசிக்கி கொன்றனர். தெள்ளுபூச்சி பயந்து நடுங்கி கட்டிலின் இடுக்கில் புகுந்து மறைந்தது.

ஆகையால்தான் முன்பின் தெரியாதவனுக்கு ஜாகை தராதே!.....‘ எனச்சொன்னேன். மேலும் பரம்பரையாக வேலைபார்க்கும் ஆட்களை நீங்கள் புறக்கணித்தது பிசகு. ஆப்த நண்பர்களை விட்டு கண்டவர்களோடு சிநேகம் கொள்கிறவன் மூடநரிபோல் மரணமடைகிறான் என்றான். அது எப்படி?

நீலநரி: அந்த ஊரின் அருகில் இருந்த குகையில் ஓர் நரி வசித்து வந்தது. பசியால் வாடிய நரி இரவானதும் இரைதேடி ஊருக்குள் சென்றது. அதைக் கண்டவுடன் ஊரிலுள்ள நய்கள் எல்லாம் குலைக்கத்தெடங்கின. சில நாய்கள் அதைக் கடித்தும் விட்டது. உடம்பெல்லாம் காயத்துடன் பயந்துபோய் கன்னா பின்னாவென்று திசைதெரியாமல் ஓடி சாயப்பூச்சு உள்ள ஓர் தொட்டியில் விழுந்தது. துரத்திய நாய்கள் திரும்பிச் சென்றன.

நரி தப்பித்து காட்டிற்குள் சென்றது. அதன் உடம்பு இப்போது நீல நிறமாயிருந்தது. காட்டில் இருந்த மற்ற மிருகங்கள் எல்லாம் இதென்ன புது மிருகம். அபூர்வமாக இருக்கிறதே என்று பயந்து விலகி தூரத்தில் போயின. ஒருவனுடைய குலம், குணம் பலம் அறியாமல் அவனிடம் புத்திசாலிகள் சேரமாட்டார்கள் என தங்களுக்குள் பேசிக்கொண்டது.

மற்ற மிருகங்கள் தன் நிறத்தைக்கண்டுதான் பயந்து ஓடுகின்றன என அறிந்த நரி, அவைகளைப் பார்த்து ஏய், மிருகங்களே உங்களுக்கு தலைவன் இல்லையாதலால் இந்திரன் என்னை அனுப்பிவைத்தான். நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்றது. இதைக் கேட்டு சிங்கம், புலி, சிறுத்தை, குரங்கு, யானை, என எல்லா மிருகங்களும் அதை வணங்கின.

சிங்கத்தை நரி தனது ஆலோசகராகவும், புலியை தனது படுக்கையறை காவலாளியாகவும், தோட்டத்து காவலாளியாக சிறுத்தையையும், வாயில் காப்போனாக யானையையும், குரங்கிற்கு வெண்கொடை ஏந்தி நிற்கும் வேலையும் கொடுத்து மற்ற மிருகங்கள் வேட்டையாடி கொண்டுவருவதை சாஸ்திரப்படி பாகம் பிரித்துக் கொடுத்து தானும் உண்டு சுகமாக ஜீவித்து வந்தது. ஆனால் எந்த நரியையும் தன் அருகில் அனுமதிக்கவில்லை.

ஆனால் விதி வேலை செய்தது. நரிகளெல்லாம் ஒன்றுகூடி ஊளையிடும் நேரம் அது. அந்த சத்தத்தைக் கேட்ட நரிக்கு உடம்பு சிலிர்த்தது. ஆனந்தக் கண்ணீர்வர உணர்ச்சி மிகுதியால் நிலைமறந்து தானும் ஊளையிடத் தொடங்கியது. அருகிலிருந்த மிருகங்கள் எல்லாம் இது நரியின் ஊளையாயிற்றே என தெரிந்ததும் நிலையை புரிந்த நரி தப்பியோடப் பார்க்க புலி பாய்ந்து ஒரே அடியில் அடித்துக் கிழித்தது.

ஆகையால்தான் ஆப்த நண்பர்களை விட்டு.....‘ எனச் சொன்னேன் என்றான் பணியாள்.

அதுசரி. புதியவன் அரசத் துரோகி என நான் எப்படித் தெரிந்து கொள்வது என்றான் தலைவன்.

முன்பெல்லாம் அருகில் வரும்போது ஓர் பணிவுடன் வருவான். இப்போது நெஞ்சை நிமிர்த்தி ஓர் திமிருடன் வருகிறான், அதுவே போதும் அவனை காட்டிக் கொடுப்பதற்கு.

இப்படியெல்லாம் தலைவனிடம் சொல்லிவிட்டு புதியவனிடம் தளர்ந்த நடையாக நடந்து சென்றான் பணியாள். இதைக்கண்ட புதியவன் நண்பனே, சௌக்கியமா! என விசாரித்தான்.

அண்டிப் பிழைப்பவர்களூக்கு சுகம் எங்கே இருக்கப் போகிறது. அரச சேவை செய்பவன் தனது செல்வம் தலைவனின் பலத்தைப் பொருத்திருக்கிறது என உணர்கிறான். அவனுக்கு மனநிம்மதியும் கிடையாது. உயிர் மீது நம்பிக்கையும் கிடையாது. பிறந்ததிலிருந்து துன்பம் தொடர்கிறது. சேவையில் துன்பங்களுக்கு அளவே இல்லை. தரித்திரன், நோயாளி, மூடன், நாடு கடத்தப் பட்டவன், சேவகன் இந்த ஐவரும் உயிரோடு இருந்தும் இறந்தவர் மாதிரி என வியாசர் கூறியிருக்கின்றார். சரியாக சாப்பிட முடியாது, நிம்மதியாக தூங்க முடியாது, மனவிழிப்பு இருக்காது, சுயேச்சையாக பேசமுடியாது ஆகியவையே அரசு சேவகனின் வாழ்க்கை. இதை நாய் பிழைப்பு என்று கூட சொல்லமுடியாது. ஏனெனில் நாய் தன்னிச்சையாக சுதந்திரமாக சுற்றித்திரிய முடியும். தரையிலே படுத்து, பிரம்மச்சாரியாக வாழ்ந்து, உடல் மெலிந்து உணவு சுருக்கி வாழ்கிற சந்நியாசியின் வாழ்க்கை இது. இருந்தாலும் புண்னியத்திற்குப் பதிலாக பாவம்தான் சேருகிறது. அரசு சேவகன் தன்னிஷ்டப்படி நடக்க முடியாது. பிறர் மனதிற்கு ஏற்ப நடப்பது தன் உடலை விற்பது போலாகும். பின் அவனுக்கு சுகம் எப்படி கிடைக்கும். தலைமையிடம் சேவகத்திற்காக நெருங்கி பழக பழக பயமும் அதிகமடைகிறான். தலைவனும் நெருப்பும் ஒன்றுதான். நெருங்கினால் சுடும். விலகினால் இதமாக இருக்கும். அடிமையாக தொழில் செய்து மென்மையான வாயில் வைத்ததும் கரையும் ஒரு திண்பண்டத்தை பெறுவதால் ஆனந்தம் ஏற்படுமா! நான் எங்கிருக்கின்றேன்! நண்பர்கள் யார்! எத்தனைநாள் இருப்பேன்! எதைத் தரலாம்! எதைப் பெறலாம்! நான் யார்! என் திறன் என்ன! என்பனபற்றி சேவகன் அடிக்கடி நினைக்க வேண்டியிருக்கின்றது. என்றான் பணியாள்.

நண்பனே, நீ என்ன சொல்கிறாய்! புரியும்படி சொல் என்றான் புதியவன். தலைவர் ஏனோ தெரியவில்லை. உன் பேரைக் கேட்டாலே கோபமாய் இருக்கிறார். உறுமுகிறார். உன்னைக் கொன்று விடுவாரோ என அஞ்சுகிறேன் என்றான்.

நண்பனே உன் பேச்சில் எப்போதும் நம்பிக்கை கொண்டவன். நான் என்ன செய்வது என மனக்கலக்கம் அடைந்தான். இந்த அபாயத்திலிருந்து எப்படி தப்பிப்பது என நினைத்தான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நடத்தை கெட்டவனிடம் தான் பெண் சோரம் போகிறாள். அயோக்கியர்களுடன்தான் தலைவன் சேருவான். கருமியிடம்தான் பணம் குவியும். மலைமீதும் கடல்மீதும்தான் மழை அதிகமாகப் பெய்யும்.

தலைவனுக்கு விசுவாசியாக சேவை செய்தேன். அதன் பலன் பகைமை என்பதுதான் விந்தை. எந்தக் காரணமில்லாமல் துவேஷம் பாராட்டுபவனை எப்படித் திருப்தி படுத்த முடியும். அவர்களைக் கண்டு பயப்படாமல் எப்படி இருப்பது. பாம்பின் வாயிலிருந்து விஷம் சொட்டுவது போல் அவர்கள் வாயிலிருந்து குற்றச் சொற்கள் வந்து கொண்டே இருக்கும்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- வெள்ளை மனம் படைத்த அன்னப்பறவை இருட்டிலே ஏரி நீரில் நட்சத்திர பிம்பங்களைப் பார்த்து அவை வெண்தாமரை என கொத்திப் பார்த்து ஏமாறும். பகலிலே தாமரைகளைக் கண்டு அவைகள் நட்சத்திரங்கள் என் நினைத்து பயந்து கொத்தாமல் இருந்து விடும். சூது வாது உள்ளவர்களைக் கண்டு உலகமே பயப்படும். அவர்களைவிட்டு விலகி ஆபத்தை தவிர்ப்பதே சிறப்பு.

எனது கஷ்டகாலம். தலைவனுக்கு என்ன தீமை செய்தேன் எனப் புலம்பினான். தலைமை காரணமில்லாமல் தீமைகளை செய்வர். பிறரைப் பலவீனப்படுத்துவதிலே நாட்டமுள்ளவர்கள் என பணியாள் சொன்னான். நீ சொல்வது சரி என்றான் புதியவன்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சந்தன மரத்தில் பாம்பு வசிக்கும். தமரைத்தடாகத்தில் முதலை இருக்கும். நற்குணங்களைக் கெடுக்க துஷ்டர்கள் எங்கும் இருப்பர். மலையுச்சியில் தாமரை மலராது. துஷ்டனிடம் நல்ல செய்கைகள் பிறக்காது. சந்நியாசிகள் மன வேறுபாடு கொள்வதில்லை. கோதுமையிலிருந்து நெல் முளைக்காது.

இது என் குற்றம். ஒரு வஞ்சகனிடம் சிநேகம் பாராட்டியுள்ளேன். காலப்பொருத்தமற்ற காரியம் செய்யக்கூடாது, அபாண்டமான வார்த்தை பேசக்கூடாது. நயவஞ்சகனுக்கு சேவை செய்யக்கூடாது. தாமரைக் குளத்தின் அருகில் தூங்கிய அன்னத்தை அம்பு கொன்றது போல் என்றான் புதியவன். அது எப்படி என்றான் பணியாள்.

அன்னமும் ஆந்தையும்: அந்தக்காட்டில் பெரிய ஏரி இருந்தது. அதன் அருகில் ஓர் அன்னப்பறவை வாழ்ந்திருந்தது. அது ஆனந்தத்துடன் விளையாடி பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தது. ஒருநாள் அங்கு ஒரு ஆந்தை வந்தது. அதைப்பார்த்து எங்கிருந்து நீ வருகின்றாய், இது ஜனசஞ்சாரமில்லாத காடாயிற்றே எனக்கேட்டது.

நற்குணமுடையவர்களத் தேடி உலகம் முழுவதும் சுற்றினேன். உன்னைப்போல் நல்ல குணமுடையவன் யாருமில்லை. உன்னிடம் நட்பு பாராட்ட வந்தேன் என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- கங்கையில் சேருவதால் பாவம் புண்ணியமாக மாறும். சங்கு என்பது ஒரு வகையில் எலும்புதான் என்றாலும் விஷ்ணுவின் கையில் அடைந்ததும் அது பரிசுத்தமாகி விடுகிறது. நல்லவர்களோடு சேர்ந்தால் எல்லோருக்கும் நன்மையுண்டு.

நல்லது நண்பனே, இது ஒரு பரந்த காடு, சுகமான ஏரியும் இருக்கின்றது. இங்கு என்னுடன் இருந்துகொள் என்றது. இரண்டும் ஒன்றாய்க்கூடி ஆனந்தித்து காலங்கழித்து வந்தன. பல நாட்கள் கழிந்த நிலையில் ஆந்தை தன் ஜாகையான பத்மவனத்திற்கு செல்வதாகவும், அன்னப்பறவையான உனக்கு என்மீது கொஞ்சமாவது மதிப்போ அன்போ இருந்தால் என் விருந்தாளியாக வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

பலநாட்களுக்குப் பிறகு இங்கு தனியே இருப்பது கஷ்டமாக இருக்கிறது. வேறு எந்த இடமும் தெரியாது. நண்பன் ஆந்தையின் இருப்பிடத்திற்கு போய் கொஞ்சநாள் இருந்துவர எண்ணியது. ஆந்தையிருக்கும் குளக்கரயை அடைந்தது. ஆந்தையைக் காணவில்லை. உன்னிப்பாக தேடியபோது பகல் குருடாகிய ஆந்தை ஒரு மரப்பொந்தில் உட்கார்ந்திருப்பதை அன்னம் கண்டது. உடனே, நண்பனே நான் அன்னம் வந்திருக்கின்றேன் கீழேவா என்றது. ஆந்தை நான் பகலில் கீழே வருவதில்லை. சூரியன் மறைந்தபின் மாலையில் அங்கு வருகிறேன் என்றது.

மாலைவந்தது இரண்டும் சந்தித்தன. நலம் விசாரித்துக்கொண்டன. பிராயாணத்தின் களைப்பால் அன்னம் அப்படியே உறங்கிவிட்டது. அந்தக் குளக்கரையில் வியாபாரிகள் கூடாரம் அடித்து தங்கியிருந்தனர். பொழுது விடியும் நேரத்தில் சங்கு எடுத்து ஊதினான். சங்கின் சப்தம் கேட்ட ஆந்தை அலறிவிட்டு அருகிலிருந்த அன்னத்தை விட்டுவிட்டு பொந்தினுள் சென்றுவிட்டது. ஆந்தையின் அலறல் அபசகுணம் எனக்கருதி கூட்டத்தலைவன் தன் வில்லாளியை பார்த்து சப்தம்வந்த திசைநோக்கி அம்பெய்தச் சொல்ல, பறந்துவந்த அம்பு அங்கு படுத்திருந்த அன்னத்தின்மேல் பாய்ந்து இறந்தது.

அதனால்தான் காலப்பொருத்தமற்ற காரியம் செய்யக்கூடாது…’  என்றேன்.

நற்குணமே நமன்: முன்பெல்லாம் இந்த தலைவன் மிகவும் அன்புள்ளவனாக தேனொழுக பேசியுள்ளான். தூரத்தில் பார்க்கும்போது கைகுப்பி வணக்கம் தெரிவிக்கின்றான். கண்ணில் நீர் நிறைகின்றது. தன் இருக்கையில் பாதியைக் காட்டி உட்காரச் சொல்கின்றான். மார்புடன் இறுகத் தழுவுகிறான். அன்புடன் பேசுகிறான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நேரில் கண்டால் அன்பாகப்பேசி மறைவிலே இகழ்ச்சியாகப் பேசும் சிநேகிதனை விட்டு விலகியிறு. மேலே பாலாடை மிதக்க உள்ள விஷம் நிரம்பியிருக்கும் குடம் அவர்கள்.ஆரம்பத்தில் மிதமிஞ்சிய உபசாரமும், பாராட்டும், பணிவும் காட்டுவதால் அவர்களின் சகவாசம் சந்தோஷம் நிறைந்து காணப்படும்.

நெஞ்சிலே விஷமும் உதட்டிலே தேனுமாகப் பேசுகிறவர்கள் ஜாலத்தில் தேர்ச்சி பெற்றவர்கள்தான். எவ்வளவு அதிசயமான நாடகம் இது. ஒவ்வொரு துஷ்டனும் இதை நன்கு கற்றுக்கொள்கின்றனர். ஆச்சரியமாக இருக்கின்றது. ஆரம்பத்தில் அன்புகாட்டி, இடைக்காலத்தில் காய்க்காத பூ போன்ற பயனற்ற அழகுச் சொற்களைச் சொல்வதும் கடைசியில் துரோகம், அவமானம், என்பதில் முடிப்பதும் அவர்கள் கற்ற கலை. தீமையும் பொய்மையும் தர்மமாகக் கொண்ட இவர்களை எப்படி சிருஷ்டித்தனரோ! கெட்டவனைப்பார், விதிப்படி நமஸ்காரம் செய்து, எழுந்து நின்று வரவேற்று, சுற்றி சுற்றி வந்து உபசரிக்கின்றான். தனது பக்தியை விளம்பரப் படுத்துகின்றான். அன்போடு கெட்டியாக அனைத்துக் கொள்கிறான். மனதைக் கவர இனிக்க இனிக்க பேசுகிறான். நற்குணங்களை புகழ்ந்து பாராட்டுகிறான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- ஒத்தகுலமும், ஒத்த செல்வமும் பொருந்தியவர்களிடையேதான் திருமணமும், நட்பும் இருக்க வேண்டும். பொதுவாக பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையே அந்த உறவு சரியாக இயக்கமடையாது. அஸ்தமிக்கின்ற வேலையிலும் சூரியன் தன் கிரணங்களை சிந்துகின்றது. தேன் குடிக்க ஆவல் கொண்ட வண்டு அது அஸ்தமிக்கும் வேளை என்பதை உணராமல் பூவிற்குள் நுழைகிறது. அஸ்தமனத்தில் பூ இதழை மூட வண்டு சிக்கிக்கொள்கிறது. இந்த வண்டு போல மக்களும் பலனைத்தேடி பேராசையில் அபாயங்களைக் கவனிப்பது இல்லை. நீர்வண்டு தேன் நிரம்பிய அன்றலர்ந்த தாமரையை விட்டு, உத்தமமான இயற்கை மணம் நிறைந்த மல்லிகையை விட்டு யானையின் மதநீரை தேடித்திரிதல் போன்றே மாந்தர்கள் நல்ல வழியை விட்டு கெட்டவழி கவர அதில் செல்லுவர். புதிய ருசி தரும் தேனை விட்டு யானையின் கன்னங்களில் வழிந்தோடும் மதநீரை அருந்த முயற்சித்தால் யானையின் காதுகள் வீசிறியடித்து எழுப்பும் ஓசையுடன்கூடிய காற்றிலே வண்டுகள் அடிபட்டு பூமியில் விழும். போது தான் தாமரையின் மடியில் இன்பமாய் தேன் குடித்த நாட்கள் நினைவுக்கு வரும் வந்தென்ன பயன்?

அந்தக் குணங்களுக்குத் தகுந்தவாறு தோஷங்களும் ஒருவனுடன் ஒட்டிக் கொண்டிருக்கின்றது என்றான் புதியவன்

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பழக் கொத்துக்களைத் தாங்கும் காரணத்தால் கிளைகள் வளைந்து காணும். கனத்த தோகையால் மயிலின் நடை மந்தமாகும். வேகமாக ஒடுவதாலேயே குதிரை பாரம் சுமக்க வேண்டியிருக்கும். நல்லவனின் நற்குணங்களே அவனுக்கு எதிராக வேலை செய்யும். யமுனையின் கருநீலத் தண்ணீருக்கடியில் வாழும் கருநாகங்களிடையே நவரத்தினங்கள் இல்லையெனில் அந்தப் பாம்பை யார் தேடிச் செல்வர். மனிதனுக்கு உயர்வு அளிக்கும் குணமே ஆபத்தையும் அளிக்கும்.

நல்ல குணவான்களை தலைவர்கள் வெறுக்கின்றார்கள். துஷ்டனிடத்திலும் முட்டாளிடத்திலும் தான் பணமும் அதிகாரமும் போய்ச் சேருகிறது. கீர்த்தி தருவது குணமே என்பது பொய். அவனது வீரத்தை மதிப்பதில்லை. கூண்டில் பிடிபட்டு கர்வமடங்கிய மிருகங்களையும், அங்குசத்தால் மத்தகம் பிளந்துபோன யானையையும், மந்திரத்தில் கட்டுண்ட பாம்பையும், ஆதரவற்ற அறிஞர்களையும், அதிர்ஷ்டம் கெட்ட வீரர்களையும் காலதேவன் பொம்மைபோல் ஆட்டிவைக்கின்றான். யோசிக்காமல் இந்த நீசனோடு உறவுகொண்டேன். அந்த தவறுக்கு நான் சாகத்தான் வேண்டும் எனப் புலம்பினான் புதியவன்.

அதிகம் படித்தவர்களில் பலர் அயோக்கியர்களாக இருக்கின்றனர். பல தந்திரங்கள் நடத்தி பிழைப்பு நடத்துகின்றனர். நல்லதோ கெட்டதோ எதுவாயிருந்தாலும் சரி, காக்கை, நரி, சிறுத்தை முதலியவை செய்ததுபோல் செய்ய வேண்டியதுதான் என்றான் புதியவன். அது என்ன செயல் என்றான் பனியாள்.

ஏமாந்த ஒட்டகம்: அந்த ஊரில் இருந்த வியாபாரி பல ஒட்டகங்களின்மேல் விலையுயர்ந்த துணிகளை ஏற்றி பயணம் புறப்பட்டான். வழியில் ஒரு ஒட்டகம் பாரம் தாங்காமல் கீழே சரிய அதன் மீதிருந்த பாரத்தை பிரித்து மற்ற ஒட்டகங்களின் மேல் ஏற்றினான். அந்த ஒட்டகத்தால் பயனில்லை என அங்கேயே விட்டுச் சென்றான். சிறிது நேரத்தில் களைப்பு தீர்ந்ததும் அந்த ஒட்டகம் எழுந்து திரிந்து பலநாட்கள் புல்லைத்தின்றதால் பலமடைந்தது. அந்தக் காட்டில் இருந்த சிங்கத்தின் கட்டுப்பாட்டில் ஒரு சிறுத்தையும், காக்கை, நரி மூன்றும் இருந்தன. அவைகள் ஒட்டகத்தைப் பார்க்க அது அதிசயமாய் இருக்க அதைபற்றி விசாரித்தது. காக்கைச்சென்று விசாரித்து இதை ஒட்டகம் எனக் கூறுகின்றனர் என்றது.

நீ எங்கிருந்து வருகின்றாய் என்று கேட்ட சிங்கத்திடம் தன் கதையை கூறியது ஒட்டகம். அதன்மீது கருணைகொண்டு அபயம் தந்தது. ஒருநாள் சிங்கம் யானையுடன் சண்டை போட்டது. அதில் யானையின் கொம்பால் சிங்கத்திற்கு காயம் ஏற்பட்டதால் அது குகையிலே இருந்து வந்தது. இருக்கும் உணவு எல்லாம் தீர்ந்தது. உணவு இல்லா நெருக்கடி ஏற்பட்டது. சிங்கம் என்னால் வேட்டையாட தற்போது முடியாது. நீங்கள் சென்று உங்களால் முடிந்ததை வேட்டையாடி அருந்துங்கள் என்றது. எனக்கும் ஏதாவது கொண்டு வாருங்கள் என்றது. எங்கு சென்றும் உணவிற்கு ஏதும் வழிதெரியவில்லை. அப்போது நரி சொன்னது, உணவு எங்கும் கிடைக்கவில்லை, இந்த ஒட்டகத்தை கொன்றால் என்ன என்றது. காக்கை சொன்னது எஜமான் அதற்கு அபயம் தந்துள்ளார் அதை நாம் செய்யக்கூடாது என்றது. ஆனாலும் நரி நான் சென்று எஜமனனிடம் அனுமதி வாங்கி வருகிறேன் எனச்சென்றது.

இந்தச் சொற்களைக் கேட்டதும் சிங்கம் கோபத்துடன் உறுமியது, நீசப் பாவி, அபயம் கொடுத்துவிட்டு அதைக் கொல்வது சரியல்ல என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- கோதானத்தையும், பூமிதானத்தையும், அன்னதானத்தையும்கூட அறிஞர்கள் அவ்வளவு சிலாக்கியமாக கருதுவதில்லை. எல்லாவற்றிலும் அபயதானம் சிறந்தது.

எஜமானரே, அபய வாக்கு கொடுத்தபின் கொல்வது தோஷந்தான். ஆனால் விசுவாசத்தால் தன் உயிரைக் கொடுக்கத் தானாகவே முன்வந்தால் அதைக் கொல்வதில் குற்றமில்லை. எனவே அதுவே ஒத்துக்கொண்டால் கொல்லலாம். அப்படியில்லையென்றால் எங்களில் யாரையாவது கொன்று சாப்பிடுங்கள் என்றது. நரியின் தந்திரம் செயல் பட்டது. பசியை அடக்கினால் உங்கள் நிலை மோசமாகிவிடும். தலைவனுக்கு பயன்படாத உடல் இருந்தென்ன பிரயோஜனம். உங்களுக்கு ஒன்று என்றால் எங்களால் அதை தாங்க முடியாது என பசப்பியது. குலத்தின் தலைவனை சிரமப்பட்டு காக்கவேண்டும். அவன் இறந்தால் குலம் நாசம். அச்சு முறிந்தால் சக்கரக்கால்கள் எப்படி நிற்கும் என்றது.

யோசனைக்குப்பின் சரி, நீ விரும்பியபடி செய் என்றது சிங்கம்.

நரி மற்ற மிருகங்களிடம் சென்று தலைவனின் உயிர் ஊசலாடுகிறது. அவருக்குபின் நம்மை இந்தக் காட்டில் யார் காப்பாற்றுவார்கள். பசியோடு இருக்கும் அவருக்கு நம் உடலைத்தானம் செய்யலாம் என்றது. எஜமானனுக்கு உதவாத வேலைக்காரன் நரகத்தை அடைவான் என்றது. அனைத்தும் கண்ணீர் விட்டபடியே திரும்பி போய் சிங்கத்தை வணங்கி அமர்ந்தன.

யதாவது மிருகம் கிடைத்ததா என்றது சிங்கம்.?

எல்லா இடங்களில் தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆகையால் எங்களையே கொன்று பசியாறுங்கள் என்றது காக்கை.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பக்தி விசுவாசத்துடன் தலைவனுக்காக உயிர்த்தியாகம் செய்கிறவன் நரையும், மூப்புமற்ற பெரும் பதவி அடைவான்

நரி சொன்னது .காக்கையே உன் உடம்பு சிறியது. உன்னை தின்று உயிர் வாழ்வது கஷ்டம். மேலும் காக்கை போன்ற அற்பமான மாமிசத்தை தின்பதால் பலன் இருக்காது என்றது. மேலும் நீ எஜமான விசுவாசத்தைக் காட்டினாய். நல்ல பெயர் எடுத்தாய். கொஞ்சம் விலகு. நானும் என் விசுவாசத்தை தெரிவிக்க வேண்டும் என்று தலைவரே, என்னை கொன்று புசியுங்கள் என்றது. எனக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மை உண்டாகச் செய்யுங்கள். சம்பளத்திற்கு வேலைசெய்யும் வேலைக்காரர்களின் உயிர் எஜமனனிடம் பணயம் வைக்கப்படுகின்றது. அதை எஜமானன் பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்றது.

இதைக்கேட்ட சிறுத்தை, நரியே நீ கூறியது சரியே! ஆனாலும் உன் உடம்பும் சிறியது. மேலும் நீயும் நகங்களுடன் சண்டை செய்பவன். நீங்கள் இருவரும் ஒரே இனம் சாப்பிடத்தகாதவர்கள், நீ அப்பால் போ, தலைவரே என்னை கொன்று பசி தீருங்கள் நான் பொருத்தமானவன். சுவர்க்கலோகத்தில் எனக்கு அமரவாழ்வு கிடைக்க செய்யுங்கள். பூமியில் என் புகழ் ஓங்கச் செய்யுங்கள் என்றது

குருஸ்ரீ பகோராயின் கூற்று- உயிர் போகின்ற நிலைமை ஏற்பட்டாலும் சாப்பிடத்தகாததை அறிவாளி சாப்பிடுவதில்லை. அப்படிச்சாப்பிட்டால் இம்மையும் மறுமையும் கிடைக்காது. அதை தவிர்த்தல் நலம். நல்ல குடியில் பிறந்தவர்கள் தலைவனை மகிழ்விப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை. கடைசிவரை அவர்களின் கண்ணியம் மாறுவதில்லை.

எஜமானர் காரியத்தில் வேலைக்காரர்கள் தமது தகுதியைக் காட்டினால் அவர்களுக்குச் சுவர்க்கத்தில் அமர நிலையும் பூமியில் புகழும் கிடைக்கும். என நரி கூறியதைக் கேட்ட ஒட்டகம் இவர்கள் எல்லோரும் நல்லவர்கள். எஜமான விசுவாசம் மிக்கவர்கள். இவர்கள் விருப்பத்தை சொல்லியும் தலைவன் இவர்களைக் கொல்லவில்லை .நானும் இந்தசமயத்திற்குத் தக்கபடி பேசுவேண்டும் என நினைத்தது.

சிறுத்தையே நீயும் நகங்களை உபயோகிப்பவன். அதனால் உன்னை எப்படி எஜமானர் கொல்ல முடியும். என்வே நீ விலகி நில். நான் அரசரிடம் எனது விருப்பத்தைச் சொல்கிறேன் என்றது ஒட்டகம். தலைவரே இவர்கள் அனைவரும் சாப்பிடத்தகாதவர்கள். என்னைத்தின்று தாங்கள் உயிர் வாழுங்கள். எஜமானனுக்காக உயிரைக் கொடுக்கும் வேலைக்காரனுக்கு கிடைக்கிற நற்கதி யோகிகளுக்கும் யாகம் செய்பவர்களுக்கும் கிடைப்பதில்லை என்றது. ஒட்டகம் இப்படி சொன்னதும் சிங்கத்தின் கட்டளைப்படி சிறுத்தையும் நரியும் அதன் மேல் பாய்ந்து அதன் வயிற்றைக் கிழித்து கொன்றது. அனைத்தும் நீண்ட நாள் பசியால் வாடியிருந்ததால் தங்களின் பசியைப் போக்கிக் கொண்டது.

அதனால்தான், ‘அதிகம் படித்தவர்களில் பலர் ….’ எனக்கூறினேன் என்றான் புதியவன். மேலும் நீசர்கள் சூழ்ந்து நிற்கும் இந்த தலைவன் தன்னை அண்டி நிற்பவர்களுக்கு நன்மை செய்வதில்லை. கழுகுகளை மந்திரிகளாகக் கொண்டு அன்னப்பறவை அரசாட்சி செய்வதைவிட அன்னப்பறவைகளை மந்திரிகளாகக் கொண்டு கழுகுகள் ஆட்சி செய்வதுமேல். ஏனெனில் கழுகுகளின் சகவாசத்தால் தோஷங்கள் உண்டாவது வினாசமடைவதற்கு சமமானது. கெட்ட போதனைகளால் தலைவன் சுயமாக யோசித்து தீர விசாரித்து நடப்பதற்கு சக்தியற்றவனாகிறான்.

“உன் அருகில் நரி இருக்கின்றது, அந்தக் காக்கைக்கும் கூரிய அலகு இருக்கின்றது. உன் நண்பர்கள் எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே நான் மரத்தின் மேல் ஏறிக் கொண்டேன்” என தச்சன் கூறியது நினைவில்லையா? என்ற புதியவனிடம் அது என்ன? எனக்கேட்டான் பணியாள்.                                          

சிங்கமும் தச்சனும்: அந்த நகரத்தில் இருந்த தச்சன் தினமும் மனைவி தரும் சாப்பாட்டை கட்டி எடுத்துக்கொண்டு காட்டிற்குச் சென்று மரங்களை வெட்டி வருவது வழக்கம். ஒருநாள் அந்தக்காட்டின் அரசனான சிங்கத்தைக் கண்டான். சிங்கமும் தச்சனைக் கண்டது. இனி சொத்தோம். இருப்பினும் ஏதாவது முயற்சிக்கலாம் என தச்சன் யோசித்து சிங்கத்தை பார்த்து வணக்கம் கூறி வா, நண்பா, உன் சகோதரனின் மனைவி தயாரித்துக் கொடுத்த சாப்பாட்டை நீயும் சாப்பிடு என்றான்.

நண்பனே சோறு தின்று வயிறு வளர்ப்பவன் நானில்லை. இருப்பினும் உனக்காக அதை ஏற்றுக் கொள்கிறேன் என்றது. ருசி நன்றாயிருக்கவே அது நன்றாக சாப்பிட்டது.  நன்றியாக சிங்கம் அவனுக்கு அபயம் அளித்தது.  காட்டில் விருப்பம் போல் நடமாட அனுமதியளித்தது. நண்பனே நீமட்டும் தினமும் தனியே என்னிடம் வா என தச்சன் கூறினான். தினமும் சிங்கத்திற்கு தான் கொண்டுவரும் சுவையான பண்டங்களை அளிக்க சிங்கம் ஆனந்தமாக ருசித்து சாப்பிட்டு வேட்டையாடுவதை நிறுத்திவிட்டது.

இதனால் சிங்கத்தின் கூட இருக்கும் நரிக்கும் காக்கைக்கும் உணவு பஞ்சம் ஏற்பட்டது.  தலைவா நீங்கள் தினந்தோறும் எங்கோ சென்று விட்டு சந்தோஷத்துடன் வருகின்றீகள். என்ன விஷயம் எனத் துருவித் துருவிக் கேட்க சிங்கம் உண்மையை செல்லியது. அதைக் கேட்ட நரியும் காக்கையும் நாம் அங்குபோய் தச்சனைக் கொன்று அதனால் சில நாள் வாழலாம் என்று பேசிக்கொண்டது சிங்கத்தின் காதில் விழ, நான் அவனுக்கு அபயம் தந்துள்ளேன். அப்படிப்பட்ட கெட்ட காரியத்தை நினைக்க உங்களுக்கு எப்படி எண்ணம் வருகிறது. உங்களுக்கும் அவனிடம் நல்ல பண்டங்களைப் பெற்றுத்தருகிறேன் என்று தச்சன் இருக்குமிடத்திற்கு கூட்டிச் சென்றது.     

இவைகள் வருவதைப்பார்த்த தச்சன் நரியைப்பற்றி கேள்விபட்டதால் தன் மனைவியுடன் மரத்தில் ஏறி அமர்ந்துகொண்டான். நண்பனே, ஏன் எங்களைப் பார்த்து மரத்தில் ஏறிக்கொண்டாய் என்றது சிங்கம். தச்சன் சொன்னான் நண்பனே, உன்னுடன் நரி இருக்கின்றது. காக்கைக்கும் கூரிய அலகு இருக்கின்றது. உன் நண்பர்கள் எனக்கு பிடிக்கவில்லை அதனால் மரத்தின் மீது ஏறிக்கொண்டேன் என்றான். 

அதைத்தான் நானும் குறிப்பிட்டேன். நீசகர்கள் சூழ்ந்திருக்கும் இந்த தலைவன் தன்னை அண்டியவர்களுக்கு நன்மை செய்வதில்லை. எனக்கு எதிராக யாரோ தலைவனை திருப்பி விட்டுள்ளனர் என்றான் புதியவன்.  

குருஸ்ரீ பகோராயின் கூற்று- மிருதுவான ஜலநீர்கூட ஒழுகியோடி மலையை அரித்து தோஷம் உண்டாக்குகின்றது. தந்திர சாலியின் சொல்லுக்குக் காது கொடுத்தால் மிருதுவான மனமும் மறைந்து ஒளிந்து கொள்ளும்.

சுவர்க்கத்தை விரும்புகிறவர்கள் யாகமும், தவமும் தானமும் செய்து அதை அடைகிறார்கள். ஆனால் போர்க்களத்தில் உயிர்த் தியாகம் செய்து வீரமரணம் அடையும் வீரன் கனப்பொழுதில் சொர்க்கமடைகிறான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- வீரன் இறந்தால் சொர்க்கம். சத்துருவை ஜெயித்தால் சுகம். இந்த இரண்டுமே வீரனுக்கு நன்மை செய்வது ஆகும்.

பொன்னும் மணியும் அணிந்த மங்கையர், யானை, குதிரை, சிம்மாசனம், வெண்சாமரம், சந்திரன்போல் ஒளிவீசும் வெண்குடை, செல்வம் இவையெல்லாம் கோழைகளுக்கு இல்லை. தாயைப்போய் கட்டிக்கொள்ளும் பயங்கொள்ளிகளுக்கும் இல்லை. என்றான் புதியவன்.

இதக்கேட்ட பணியாள் நினைத்தான், இவன் பலசாலி. கூர்மையான அறிவுடையவனாக இருக்கின்றான். ஒருவேளை யுத்தத்தில் தலைவனைக் கொன்றுவிட்டால் நம் நிலை என்னாவது. எனவே அப்படி நடக்க விடக்கூடாது என்ற எண்ணத்துடன் அவனை யுத்தம் என்ற நிலையிலிருந்து மாற்ற நினைத்தான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- வீர்ர்களாயிருந்தால் என்ன? யாருக்கு யுத்ததில் வெற்றி என்பது நிச்சயமில்லை. அதனால்தான் முதலில் மூன்று உபயாங்களைக் கையாண்டு பின் சண்டைக்கு போவார்கள்.

நண்பனே, நீ சொல்வது சரியில்லை. எனெனில் சத்ருவின் பலத்தை அறியாது சண்டைக்குப் போகிறவன் நீர்குருவியிடம் சமுத்திரம் அவமானம் அடைந்ததுபோல் அவமானமடைவான். என்றான். அது எப்படி என்றான் புதியவன்.    

சமுத்திரமும் நீர்க்குருவியும்: அந்த ஊர் சமுத்திரத்தின் கரையிலிருந்தது.  அந்த சமுத்திரத்தில் ஜலஜீவராசிகள் எல்லாம் நிறந்திருந்தன. அதன் கரையோரத்தில் ஓர் நீர்குருவி தன் மனைவியுடன் வாழ்ந்திருந்தது. பெண்குருவி முட்டையிடும் தருணத்தில் இருந்ததால் அதற்கான இடமாகப் பார்க்க ஆண்குருவியிடம் சொல்லியது. வேறு இடம் எதற்கு நாமிருக்கும் இந்த இடமே காலம் காலமாக நம் முன்னோர்களிலிருந்து பயன் படுத்தி வந்துள்ளார்கள் என்றது ஆண்குருவி. பெண்குருவி சொன்னது இந்த இடம் சமுத்திரத்தின் அருகில் இருக்கின்றது. திடிரென்று அலைநீர் பாய்ந்து வந்தால் குஞ்சுகளை அடித்துச் சென்றுவிடும் என்றது. எனக்கு எதிராக இந்த சமுத்திரம் நடக்க அதற்கு திராணி கிடையாது என தம்பட்டம் அடித்தது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பாம்பின் தலையில் ஜொலிக்கின்ற மாணிக்கத்தை முன்பின் யோசிக்காமல் பறிக்கப்போகிறவர் யார்? ஒரே பார்வையில் எதிரியை கொல்லக்கூடியவனை யார்தான் கோபமூட்டுவார்கள். பச்சைப்பசை எதுவுமில்லா பாலைவனமாக இருந்தாலும், கோடை வெயில் உடலைக் கொளுத்திக் கொண்டிருந்தாலும், யார் மதயானையின் நிழலில் தங்குவர். பனித்துளிகளைச் சுழற்றியடிக்கும் குளிர்காற்று விடியற்காலையில் வீசிக் கொண்டிருக்கும்போது நன்மை தீமை தெரிந்தவன் யார்தான் தண்ணீர்கொண்டு ஜலதோஷத்தைப் போக்க நினைப்பர். மதயானையின் மத்தகத்தை பிளந்த அசதியில் சிங்கம் தூங்கிக் கொண்டிருக்கின்றது. அதைப்போய் யாராவது எழுப்பி யமலோகத்தை காண விரும்புவார்களா? 

பயமில்லாமல் யமலோகத்திற்குப்போய் யமனுக்கு உத்திரவு போடுகிறவன்மாதிரி உனக்கு விரோதி கிடையாது. அப்படியிருந்தால் என் உயிரைத் தரத் தயார். தீ நாக்குகள் ஆகாயத்தை எட்டி பார்கும்போது புகையில்லாமல் பயங்கரமாக எரியும் நெருப்பிலே எந்த முட்டாள் நுழைவான் என்று சொன்னது குருவி. ஆண் குருவியின் பலம் பெண்ணுக்குத்தெரியாதா எனச் சிரித்தது.  பட்சிராஜனே யானையைப் போல் முயலும் லத்தி போட்டது என்றால் அது அதிசயமான விஷயம். உங்கள் பலம் என்ன. பலவீனம் என்னவென்று உங்களுக்கே எப்படி தெரியாமல் போயிற்று என்றது பெண்குருவி.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தன்னை அறிவதே கஷ்டமான வேலை. எது சரியான வேலை, எது வீண் வேலை, என அறிவது கஷ்டம். தன் சக்தியை அளந்தறிந்தவனுக்கு நெருக்கடியான காலங்களில் துன்பம் ஏற்படாது.

என் சக்தி இவ்வளவுதான், இன்னின்ன காரியங்களை நான் சாதிக்க முடியும். என்பதை உணர்ந்து நடந்து கொள்கிறானோ அவனே புத்திசாலி அவன்தான் பலனடைவான் என்ற பெண்குருவி, தனக்கு நன்மை செய்யும் சிநேகிதர்களின் பேச்சைக் கேட்காதவன், கட்டையிலிருந்து நழுவி உயிர்விட்ட ஒரு முட்டாள் ஆமையின் கதிக்கு ஆளாகிறான்.

அது எப்படி? என்றது குருவி.

ஆமையும் வாத்துக்களும்: அந்த ஊரின் ஏரியில் ஒரு ஆமை வசித்திருந்தது. அதன் நண்பர்களாக இரண்டு வாத்துக்கள் இருந்தன. கால வித்தியாசத்தால் பலவருடங்கள் மழை பெய்யவில்லை. நீர் வறட்சி ஏற்பட்டது. வாத்துகள் யோசனை செய்து. நீர் வற்றி விட்டதால் நண்பனிடம் சொல்லிவிட்டு வேறு ஏரிக்குப் போகலாம் என்று முடிவு எடுத்தன. அதை. ஆமையிடம் சொன்னபோது, என்னை விட்டுப்போக எப்படி மனம் வந்தது உங்களுக்கு. நீர் குறைந்தால் உங்களுக்கு சாப்பாடு குறையும் எனக்கோ உயிரே போய்விடும். என்மீது கொஞ்சமாவது அன்பு இருக்குமானால் என்னையும் காப்பாற்றுங்கள் என்றது

உனக்கு இறக்கைகள் கிடையாது. நீ நீரில் வசிப்பவன், உன்னை அழைத்துப்போக எங்களால் முடியாதே என்றன. அதற்கு ஆமை ஒர் உபாயம் செய்யலாம். ஓர் குச்சியை எடுத்து வாருங்கள் என்றது. நான் நடுவில் பற்களால் கொட்டியாய் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு போங்கள் என்றது. வாத்துக்கள் உயரப்பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து சுக்கு நூறாவாய் என்றன. அப்படியானால் பறக்கும்போது நான் வாய் போசாமல் இருக்கின்றேன் என்/று கூற இரு வாத்துகளும் இருபக்கம் பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு சென்றது.

அந்த ஊரின்மேல் வாத்துகள் ஆமையுடன் பறந்து சொல்வதப்பார்த்த மக்கள் என்னது வாத்துகள் எதையோ இழுத்துக் கொண்டு போகின்றன என சலசலத்தனர். ஆமையின் கெட்ட நேரம் அந்த வார்த்தைகள் அதன் காதில் விழுந்தது. இந்த ஜனங்கள் ஏன் இப்படி உளருகின்றார்கள் என வாய்திறந்து பேச அது பிடித்திருந்த பிடி விட்டுவிட கீழே விழுந்தது. இறைச்சி விரும்பும் மக்கள் உடனே ஆமையைக் கைபற்றிக் கொன்றனர்.

அதனால்தான் தனக்கு நன்மை செய்யும் நண்பர்கள் பேச்சைக் கேளாதவன்… என்றெல்லாம் கூறினேன் என்றது பெண் குருவி. மேலும் அது சொன்னது, வருமுன் காப்போனும், சமயோசித புத்தியுடையவனும் சுகம் பெறுவார்கள். விதியை நொந்து கொள்கிறவன் நாசமடைவான்.

அது எப்படி என ஆண்குருவி கேட்டது?

மூன்று மீன்கள்: அந்த ஏரியில் வருமுன் காப்போன், சமயோசித புத்தியுடையவன், வருவது வந்தே தீரும் என்ற கொள்கைகளை உடைய மூன்று மீன்கள் இருந்திருந்தன.  ஒருநாள் கரையோரத்தில் செம்படவர்கள், இந்த ஏரியில் நிறைய மீன்கள் இருக்கின்றன. நாளை வந்து மீன் பிடிக்கலாம் என்று பேசியது வருமுன் காப்போன் காதில் விழுந்தது. இந்த விஷயம் நமது நண்மைக்கு இல்லை. அவர்கள் இங்கு வருவதற்குள் வேறு இடத்திற்கு போய்விடலாம் என யோசனை செய்தது. அதை மற்ற இருவரிடமும் சொன்னது.

சமயோசித புத்தியுடைய மீன் சொன்னது, நான் இந்த ஏரியில் ரொம்ப நாளாக இருந்து வருகிறேன். திடிரென்று இதைவிட்டுச் செல்ல என்னால் முடியாது. அவர்கள் வந்தால் அந்தசமயத்தில் ஏதாவது செய்து பார்த்துக் கொள்ளலாம் என்றது. 

வருவது வந்தே தீரும் என்ற மீன், எல்லா இடங்களிலும் இதைபோல் ஏரிகள் இருக்கும்போது இங்குமட்டும் வருவார்கள் என்று யார் நிச்சயமாக சொல்லமுடியும். வம்பு வதந்திகளைக் கேட்டு நான் பிறந்து வளர்ந்த இந்தஏரியை வீட்டு செல்வது சரியாகாது என்றது.  

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பாம்புகளும், போக்கிரிகளும், பிறரை அண்டிப்பிழைக்கும் நபர்களும் போடும் திட்டங்கள் கரியத்தில் வெற்றி காண்பதில்லை. அதனால்தான் உலகம் இன்னமும் வாழ்ந்திருக்கின்றது.

மற்ற மீன்களின் முடிவைக்கேட்ட வருமுன் காப்போன் அன்றைய தினமே வேறு ஏரிக்குச் சென்றுவிட்டது. மருநாள் செம்படவர்கள் ஆட்களுடன் வந்தனர். ஏரியின் அடியாழம் வரை வளைத்து துழாவுகிறமாதிரி வலை வீசினர். எல்லா மீன்களையும் பிடித்தனர். தண்ணிருக்குள் இருக்கும்போதே சமயோசிதபுத்தியுள்ள மீன் செத்ததுபோல் நடிக்க அதை தரையில் எடுத்து போட்டனர். உடனே அது ஒரே துள்ளலில் குளத்தின் ஆழ்பகுதிக்குச் சென்று மறைந்தது. வருவது வந்தேதீருமென்ற மீன் வலையில் மாட்டி துடித்துக் கொண்டிருந்தது.

அதனால்தான். வருமுன் காப்போனும், சமயோசித புத்தியுடையவனும் சுகம் பெறுவார்கள். விதியை நொந்து கொள்கிறவன் நாசமடைவான் என்று சொன்னேன் என்றது பெண்குருவி.  

குதிரை, யானை, இரும்பு, கட்டை, கல், துணி, ஆண், பெண், தண்ணீர் இவற்றிற்கிடையே பெரிய வித்தியாசமிருக்கின்றது. மேலும் நீ பயப்படாதே, என்பராமரிப்பில் உன்னை யாரால் அவமதிக்க முடியும் எனப் பெருமை கொண்டு குருவி சொல்லியது. 

சிலநாட்களில் பெண்குருவி அங்கேயே முட்டையிட்டது.

இரண்டு குருவிகளும் பேசிக்கொண்டிருந்ததை சமுத்திரம் கேட்டுக் கொண்டிருந்தது. அது எண்ணியது. தற்பெருமை என்பது யாருக்குத்தான் இல்லை. ஆகாயம் கீழே விழுந்துவிடாமல் இருக்க இந்த நீர்க்குருவி இரண்டு கால்களையும் மேலே தூக்கியபடி மல்லாக்கப் படுத்திருக்கிறது போலும். நான் இதன் பலத்தைச் சோதிக்கிறேன் என்றது.

மறுநாள் இரண்டு நீர்க் குருவிகளும் இரைதேடச் சென்றன. அப்போது சமுத்திரம் தன் அலைக்கரங்களை நீட்டி குருவியின் முட்டைகளை தன்னகத்தே கொண்டது. பெண்குருவி திரும்பி வந்ததும் முட்டைகளை சமுத்திரம் எடுத்து சென்றுவிட்டதை உணர்ந்தது. வேறிடம் போகலாம் என நான் கூறினேன். உங்களுக்கு புத்தியில்லை. குழந்தைகள் இறந்த துக்கத்தால் நான் நெருப்பில் குதிக்கப் போகிறேன் இது நிச்சயம் என்றது.

அன்பே என் சமர்த்தியத்தைப் பார், இந்த சமுத்திரத்தை என் அலகினால் வற்ற அடித்துவிடுகிறேன் என்றது.

நாதா சமுத்திரத்தோடு தாங்கள் எப்படி சண்டை போடுவீர்கள் என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தன் பலத்தையும் விரோதியின் பலத்தையும் அறியாமல் கர்வங்கொண்டு சண்டைக்குப் போகிறவன் நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சிமாதிரி நாசமாவான்.

அன்பே அப்படிச் சொல்லாதே, பராக்கிறமசாலிகளுக்கு தங்கள் வயதுபற்றிய கவலையில்லை.

நாதா ஆயிரத்து எண்ணூறு உபநதிகளின் நீரோடு கங்கை யமுனை நதிகள் கலக்கும் இந்த சமுத்திரம் எங்கே! ஒர் சொட்டு மட்டும் எடுக்கும் உங்கள் அலகு எங்கே! நீங்களாவது சமுத்திரத்தை வற்றவைப்பதாவது! யோசனையில்லாமல் பிதற்ற வேண்டாம்.

என் அலகு இரும்புக்குச் சமமானது. நீண்ட இரவும் பகலுமாய் நேரம் வேண்டிய அளவிற்கு இருக்கும்போது ஏன் சமுத்திரத்தை வற்றவைக்க முடியாது. உற்சாகமும் ஆண்மையும் இல்லாவிட்டால் எதிரியை வெல்வது கடினம் என்றது குருவி.

சரி, சமுத்திரத்துடன் சண்டை போட்டுத்தான் ஆகவேண்டும் என்றால் மற்ற குருவிகளையும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள் என்றது. ஒரு படை பலவீனமாயிருந்தாலும் எண்ணிக்கையில் அதிகமாயிருந்தால் அது வெற்றிபெறும். பல புற்களைக் கொண்ட கயிற்றால் யானையைக் கட்டி போடலாம், மரங்கொத்தியும், குருவியும், தவளையோடும், சிறு ஈயோடும் சேர்ந்து கூட்டமாக எதிர்த்ததால் யானை செத்தது என்றது பெண் குருவி. அது எப்படி? எனக் கேட்டது குருவி.

குருவிக்கும் யானைக்கும் சண்டை: அந்த அடர்ந்த காட்டில் ஒருமரத்தில் ஒரு குருவி அதன் மனைவியுடன் கூடு கட்டி வாழ்ந்திருந்தது. அதன் குடும்பம் பெறுகியிருந்தது. மதம் பிடித்தயானை ஒன்று வெய்யிலின் கொடுமை தாங்காமல் அந்த மரத்தின் அடியில் நிழலுக்காக வந்தது. குருவிக் குடும்பம் இருக்கும் மரக்கிளையை தன் தும்பிக்கையால் இழுத்து ஒடித்தது. கூட்டில் இருந்த முட்டைகள் எல்லாம் கீழே விழுந்து உடைந்தன. குருவிகள் இரண்டும் தப்பித்தன.

தன் கண்ணெதிரே தன் வம்சவிருத்திக்கான முட்டைகள் அழிக்கப்பட்டது கண்டு பெண்குருவி துக்கம் தாளாமல் புலம்பியது. அதன் நண்பியான மரம்கொத்தி அங்கு வந்து அதற்கு ஆறுதல் கூறியது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- காணாமற் போனதையும், செத்துப் போனதையும், காலங்கடந்து போனதையும் நினைத்து அறிவாளிகள் துயரப்படுவதில்லை. அறிவாளிகளுக்கும் மூடர்களுக்கும் இதுதான் வித்தியாசம். உலகில் எந்த ஜீவனுக்கும் துயரப்படவேண்டியதில்லை. மூடன் தான் துக்கத்துடன் துக்கம் சேர்ப்பான். அதனால் அவன் கஷ்டங்கள் இரு மடங்காகும். சுற்றத்தார் விடும் கண்ணீர் பித்ருக்களுக்கு இன்னல் விளைவிக்கும். அதனால் அழுவது கூடாது. உன் சக்திக்கு தக்கபடி ஈமச் சடங்குகள் செய்.

நீ சொல்வது சரிதான். இருந்தாலும் இந்த மதம் பிடித்த யானை என குஞ்சுகளை ஏன் நாசம் செய்தது. அதை கொல்ல ஓர் வழி சொல் என்றது. ஆபத்துக்காலத்தில் ஒருவன் உதவுகிறான். கஷ்டகாலத்தை ஒருவன் எள்ளி நகையாடுகிறான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- உன்னிடம் பணமுள்ள வரையில் எல்லோரும் நண்பர்களே. ஆனால் அவர்கள் உண்மையான நண்பர்களில்லை. ஆபத்தில் எந்த ஜாதிக்காரனாயிருந்தாலும் உதவுபவனே உண்மையான நண்பன். அன்னமளிப்பவன் தந்தை, நம்பிக்கையானவன் தோழன், திருப்தி செய்பவள் மனைவி.

மரங்கொத்தி சொன்னது, என் நண்பன் ஈ, அவனை அழைத்து வருகின்றேன் அவன் இந்த மதம் பிடித்த யானையை கொல்வான் எனச்சொல்லி குருவியை அழைத்துக்கொண்டு ஈயிடம் சென்று குருவியின் முட்டைகளை யானை அழித்தது பற்றி கூறியது.நீ உதவி செய்ய வேண்டும் என்றன.

ஈ சொன்னது, அதற்கு ஆட்சேபனை ஏதுமில்லை, தவளை என்பிரிய நண்பன். அவனையும் அழைத்துக் கொண்டு செய்ய வேண்டியதை முயற்சிப்போம் என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- அன்பும், அறவாழ்வும், சாஸ்திரஞானமும், குணமும், அறிவும் படைத்த அறிஞர்கள் போடும் திட்டம் என்றும் வீணாகாது.

விபரங்களைக் கேட்ட தவளை சொன்னது. நல்லவர்கள் கோபத்தின் முன் அந்த யானை எம்மாத்திரம்? ஈயே நீ போய் அந்தயானை காதருகில் ரீங்காரமிடு. உன் ரீங்காரத்தில் அது கண்களை மூடும். அப்போது மரங்கொத்தி அதன் கண்களைத் தன் அலகினால் கொத்தட்டும். ஒரு பள்ளத்தின் அருகில் உட்கார்ந்து நான் கத்துகிறேன். அந்தசப்தம் கேட்டு அங்கே குளம் இருக்கிறது என்று நினைத்து யானை அந்த பள்ளத்தில் விழுந்து விடும். பின் அதனால் வெளியில் வரவே முடியாது என்று தன் விரிவான திட்டத்தைக் கூறியது.

திட்டமிட்டபடி ஈ ரீங்காரமிட அந்த சுகத்தில் யானை கண்களைமூட மரங்கொத்தி அதன் கண்களைக்கொத்த யானை அலற, தாகமும் வேகமும் தணிய அங்கும் இங்கும் சுற்றிய யானை தவளையின் சத்தத்தைக்கேட்டு அங்கு குளம் இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்று பள்ளத்தில் விழுந்தது.அதனால்தான், மரங்கொத்தியும், குருவியும்…‘ என்றெல்லாம் சொன்னேன் என்றது பெண் குருவி.

நீ சொல்வது சரி, என் சிநேகிதர்களையெல்லாம் கூட்டிவந்து இந்த சமுத்திரத்தை வற்றவைக்கிறேன் பார் என்றது.

எல்லாக் குருவிகளும், பறவைகளும் வந்தன. உதவி செய்ய முனைப்பு காட்டின. ஒன்றாய் சேர்ந்து தன் இறக்கைகளால் சமுத்திரத்தை அடிக்க ஆரம்பித்தன். ஒரு குருவி சொல்லியது இப்படிச் செய்தால் நம் விருப்பம் நிறைவேறாது. மண்ணும் புழுதியும் போட்டு நிரப்பலாம் என்றது .உடனே எல்லாக் குருவிகளும் தன் அலகுகளால் மண் எடுத்துப்போட ஆரம்பித்தது. அப்போது இன்னெரு பறவை சொன்னது என்ன செய்தாலும் நாம் சமுத்திரத்துடன் சண்டை போட முடியாது. என் நண்பன் வாத்து ஒன்று நல்ல அனுபவம் வாய்ந்தது, வயதில் முதிர்ந்தது. அது சமயோசிதமான யுக்தி சொல்லும் என்றது. யாருக்கு அனுபவம் அதிகமோ அவன் கிழவன். அவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும். காட்டில் பிடிபட்ட வாத்துக் கூட்டம் கிழவாத்தின் பேச்சைக் கேட்டதினால் விடுதலை பெற்றன என சொல்லியது. அது எப்படி என எல்லா குருவிகளும், பறவைகளும் கேட்டன.

புத்திகூர்மையான கிழவாத்து: அந்த காட்டில் இருந்த ஓர் ஆலமரத்தின் கிளைகளில் வாத்துக்கூட்டம் வாழ்ந்திருந்தது. அந்த மரத்தை ஓர் உறுதியான கொடி பற்றி படந்திருந்தது. அதைப் பார்த்த கூட்டத்திலிருந்த அனுபவசாலியான வயதான வாத்து இது நம் கூட்டத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது. யாராவது இதைப்பற்றி மேலேறி நம்மை பிடித்துவிடலாம். எனவே இதை அழித்து விடுங்கள் என்று மற்ற வாத்துக்களிடம் சொல்லியது. அந்த இளம் வாத்துக்கள் எதுவும் இந்த பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. நாட்கள் சென்றது.

ஒருநாள் எல்லா வாத்துக்களும் இரை தேடச் சென்றன. அப்போது அந்த மரத்தில் வாத்துக்கூட்டம் தங்குவதை அறிந்து அங்கே வந்த வேடன் கொடியைப் பிடித்து மரத்தின் மேலேறி கன்னிவலைகளைப் பொருத்திவிட்டுச் சென்றான். சுற்றி இரை தேடி முடித்துவிட்டு எல்லா வாத்துகளும் தம் இருப்பிடத்திற்கு வந்து அமர்ந்தன. கன்னி வலையில் சிக்கின. உண்மையை உணர்ந்த அந்த வயதான வாத்து, அன்றே நான் சொன்னேன், யாரும் கேட்கவில்லை, இப்போது அனைவரும் வேடன் கையில் சிக்கிக் கொண்டேம். இந்தக் கஷ்டம் நீங்களே வரவழைத்துக் கொண்டது என்றது.

சரி, தவறு செய்து விட்டோம், இப்போது என்ன செய்யலாம், இதிலிருந்து தப்பிக்க வழியிருந்தால் சொல்லுங்கள் என்றன. வயதான வாத்து சொன்னது காலையில் அவன் வரும்போது அனைவரும் இறந்து கிடப்பது போல் இருங்கள். அவன் வாத்து இறந்து விட்டது என நினைத்து கன்னியிலிருந்து விடுவித்து ஒவ்வொன்றாக கீழே போடுவான் வலியை பொறுத்துக் கொள்ளுங்கள். எல்லோரையும் கீழே போட்டுவிட்டு அவன் மரத்திலிருந்து இறங்கி வருவான். அந்தசமயம் எல்லோரும் ஒரே சமயத்தில் உயர பறந்திடவேண்டும் என்றது.

பொழுது விடிந்தது. வேடன் வந்தான். மரத்தின்மேல் ஏறிப் பார்த்தான். எல்லா வாத்துக்களும் இறந்து இருப்பதைப் பார்த்தான். அவன் அதை அப்படியே கறிக்கு விற்பவன் ஆதலால் அதைபற்றிக் கவலைப்படவில்லை. ஒவ்வொரு கன்னியிலிருந்தும் வாத்துகளை விடுவித்து கீழே போட்டான். அவன் கீழே இறங்க முயற்சித்தபோது எல்லாவாத்துக்களும் கிழவாத்தின் புத்திமதிப்படி ஒரே சமயத்தில் மேலே பறந்தது கண்டு ஆச்சரியப்பட்டான்.

அதனால்தான், ‘யாருக்கு அனுபவம் அதிகமோ…’ என்றெல்லாம் சொன்னேன் என்றது பறவை. உடனே எல்லா பறவைகளும் கிழவாத்திடம் சென்று நடந்ததை, முட்டைகள் திருட்டுப் போனதை அப்படியே தெரிவித்தன. அது சொன்னது, எல்லா பறவைகளுக்கும் அரசு கருடன், நீங்கள் எல்லோரும் ஒரே சமயத்தில் அழுது ஆர்பாட்டம் செய்தால் கருடன் நம் துக்கத்தை போக்கிவிடுவான் என்றது.

அந்த சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை நடக்க இருந்த சமயம். கருடன் மகாவிஷ்ணுவை சந்திக்கப் போகவிருந்தார். அப்போது அங்கு சென்ற பறவைகள் எல்லாம் சமுத்திரம் முட்டைகளை திருடி விட்டதை தெரிவித்தனர். எங்கள் ராஜாவாக நீங்கள் இருக்கின்றீர்கள். நாங்கள் எங்கள் அலகால் அது கொள்ளும் அளவிற்கே இரைதேடி சாப்பிட்டு பிழைத்து வருகிறோம். அந்த சமுத்திரம் எங்கள் குஞ்சுகளை எடுத்துக் கொண்டு போய்விட்டது.

ஏழைகள் எப்போதும் மறைவாகவே தங்கள் சாப்பாட்டை சாப்பிடவேண்டும். இரை தின்னும் செம்மறியாட்டை சிங்கம் கொன்றுவிட்டது என்றதும் அது எப்படி எனக் கருடன் கேட்கவே கிழவாத்து சொல்ல ஆரம்பித்தது.

சிங்கமும் செம்மறியாடும்: அந்தக் காட்டில் செம்மறியாடு ஒன்று தன் கூட்டத்திலிருந்து பிரிந்து தனியே இருந்திருந்தது. அதன் ரோமம் அடர்த்தியாகவும் கொம்பு வலுவுள்ளதாகவும் தேகம் திடகாத்திரமானதாயும் இருந்தது. எனவே பார்ப்பதற்கு கொழுகொழுவென இருக்கும் அதை உடனே ஆடு என சொல்லமுடியாது.

அந்தக்காட்டின் அரசு சிங்கம் தன் நண்பர்களுடன் வரும்போது ஒருநாள் இதைப் பார்த்தது. இப்படியொரு மிருகத்தை இதுவரை இந்தக்காட்டில் பார்த்ததே கிடையாது. எனவே இது என்ன புது மிருகமோ எனப் பயந்தது. உடம்பே தெரியவில்லை. இது என்னைவிட பலசாலியாக இருக்கும்போல் தெரிகிறது என நினைத்து பின்வாங்கி திரும்பி போய்விட்டது. மற்றெருநாள் அந்த மிருகம் காட்டுத்தரையில் புல் மேய்வதைக் கண்டு, அதற்குரிய பலம்தான் அதற்கு இருக்கும் எனநினைத்து அதன்மேல் பாய்ந்து கொன்றது.

அதனால்தான்,’ஏழைகள் எப்போதும் மறைவாகவே தங்கள்….’ என்று சொன்னேன் என்றது வாத்து.

அப்போது மாகவிஷ்ணு அனுப்பிய தூதன் வந்து கருடனே, விஷ்ணு உன்னை சீக்கிரமாக அழைக்கின்றார் என்றான்.

கருடன் கர்வத்துடன் தூதனே, நானோ ஒரு அற்ப வேலைக்காரன். அவருக்கு என்னிடம் என்ன ஆகவேண்டியிருக்கிறது என்றான்.

கருடனே, பகவான் உன்னிடம் எப்போதாவது கோபமாக பேசியிருக்கின்றாரா? ஏன் இப்படி அவரிடம் கர்வம் கொண்டவன்போல் பேசுகிறாய்?

பகவானுக்கு இருப்பிடமாயிருக்கும் சமுத்திரம் என் வேலைக்காரனாகிய நீர் குருவியின் முட்டைகளை அபகரித்து விட்டது. அதை தண்டிக்காமற் போனால் நான் பகவானின் வேலைக்காரனில்லை. நீ இதை போய் அவரிடம் தெரிவி.

தூதன் சொன்னதைக் கேட்ட விஷ்ணு பகவான் கருடனுக்கு கடுமையான கோபம் வந்துள்ளது. நாம் நேரில் சென்று அவனை சமாதானப்படுதலாம் என நினைத்து கருடனை பார்க்க வந்தார்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நல்ல குலத்தில் பிறந்து திறமையும் விசுவாசமும் உள்ள வேலைக்காரனை அவமானப்படுத்தக் கூடாது. உன் நலனுக்கு உழைக்கும் அவனை எப்பொழுதும் சொந்தப் பிள்ளைபோல் கருது. எஜமானனுக்கு சந்தோஷம் ஏற்பட்டால் வேலையாளிடம் தனது திருப்தியைதான் காட்டுவான். ஆனால் வேலையாள் சந்தோஷப்பட்டால் தனது உயிரையே பிரதியாகத் தருவான்.

எஜமானரே தன் இல்லத்திற்கு வந்ததைப் பார்த்ததும் எழுந்து மரியாதை செய்தான். வணக்கம் கூறினான். பிரபுவே தாங்கள் இரும்பிடமாக கொண்டுள்ள சமுத்திரம் என் வேலைக்காரனின் முட்டைகளைத் திருடிவிட்டது. தாங்களிடம் இருக்கிற மரியாதையினால் நான் அமைதியாக இருக்கின்றேன். ஜனங்களிடையே இளக்காரமும் எஜமானன் மனதுக்குத் துன்பம் உண்டாகும் வேலையை உண்மை வேலைக்காரன் உயிர் போனாலும் செய்யமாட்டான் என்றான் கருடன்.

கருடா, நீ சொல்வது சரி. குரூரனும் துஷ்டனுமான வேலைக்காரனை நீக்காவிட்டால் அவன் செய்கிற காரியங்களுக்கு எஜமானன் தான் கஷ்டப்படவேண்டும். நீ வா. சமுத்திரத்திடமிருந்து முட்டைகளைப் பெற்றுத் தருவோம் என்றார். மகாவிஷ்ணு அக்னி அஸ்திரத்தை வில்லில் பூட்டி, துஷ்டனே இந்தப் பறவையின் முட்டைகளைத் திருப்பிக்கொடு .இல்லையென்றால் உன்னை நீரில்லா பூமியாக்கி விடுவேன் என எச்சரித்தார். அதைக் கேட்டதும் சமுத்திரம் பயந்து போய் எல்லா முட்டைகளையும் கொண்டுவந்து கொடுத்து விட்டது. பகவானுக்கும் கருடனுக்கும் அனைத்து பறவைகளும் நன்றி சொல்லின.

அதனால்தான்,‘சத்ருவின் பலத்தை அறியாது சண்டைக்குப் போகிறவன் நீர்குருவியிடம் சமுத்திரம் அவமானம் அடைந்ததுபோல் அவமானமடைவான். என்று சொன்னேன் என்றான் பணியாள்.

இதன் உட்கருத்தைப் புரிந்துகொண்ட புதியவன், நண்பனே அந்த தலைவனின் பராக்கிரமம் என்ன?

சாதாரணமாக தன் இருக்கையில் இருக்கும் தலைவன் இப்போது உன்னைக்கண்டவுடன் முகத்தை திருப்பிக்கொள்வதை பார்க்கலாம். இதுவே அவர் உன்மீது கோபம் கொண்டு வெறுப்பு அடைந்துள்ளார் என்பதன் அடையாளம். யோசித்து பார்த்து நடந்துகொள் நான் வருகிறேன் என்று கூறிச் சென்றான் பணியாள்.

பணியாள் தன் நண்பனிடம் சென்று, என்னால் முடிந்தவரைக்கும் தலைவர், புதியவன் இருவர் மனத்தையும் குழப்பியுள்ளேன். அது அநேகமாக குரோத உணர்வுகளைத் தரவல்லது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நன்றாய் தோன்றிய பிளவு திட சித்தமுடையவர்களையும் கலக்கிவிடும். திரும்ப திரும்ப வெள்ளத்தின் அலைகள் மோதினால் கற்பாறைகளும் தன் நிலை குலைந்துவிடும். பிளவு உண்டு பண்ணிவிட்டு மனிதன் தன் சுயநலத்தை அதில் தேடிக்கொள்ள முயற்சிப்பான். ராஜநீதியை படித்து அதில் உள்ள தத்துவங்களை அறிந்த பின்னும் ஒருவன் தன் சுயநலத்தை சாதிக்க முடியாவிட்டால் சிரமப்பட்டு சொல்லிய ராஜநீதியின் பயன் யாது?

உண்மையாக பார்த்தால் சுய நலன்கள் என ஒன்று கிடையாது, ஏனெனில் கிருமிகளும், சாம்பலும், தூசும் படிந்த இந்த அருவருப்பான தேகம் பிறரை துன்புறுத்தி நலன் பெறுவதில் என்ன நியாயம் என்றான் நண்பன்.

அப்படியல்ல. தலைவரின் ஆலோசகர் என்றால் அதன் ராஜநீதியும் அதன் சாதுரியங்களும் உனக்குத் தெரியாது. அது என்னெவென்றால் தயை தாட்சன்யமின்றி மனதை இரும்பாக்கிவிடு, பேச்சைக் கரும்பாக்கிவிடு, தீமை செய்தவர்களைத் தயக்கமில்லாமல் கொன்றுவிடு என்பதாகும். புதியவன் இறந்தால் அது நமக்குத்தான் நன்மை பயக்கும்.

பிறர்க்கு தீங்கிழைத்துத் தன் சுயநலத்தைப்பேன விரும்பும் அறிவாளி, காட்டில் நரிசெய்ததுபோல் தன் சூழ்ச்சியை வெளியிடக்கூடாது என்றான் பணியாள். அது எப்படி என்றான் நண்பன்.

சுயநல நரி: அந்தக் காட்டில் இருந்த சிங்கத்துடன் ஒரு ஒநாயும் நரியும், ஒட்டகமும் ஆலோசகராக இருந்துவந்தன. ஒருநாள் மதயானை ஒன்றுடன் சண்டைசெய்ததனால் அதன் கொம்பு பட்டு சிங்கத்தின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தது. உடம்பு இளைத்து போயிருந்தது. சிங்கம் தன் ஆலோசகர்களைப் பார்த்து ஏதாவது ஒரு மிருகத்தைப் பிடியுங்கள் பசியுடன் எவ்வளவு நேரம் இருப்பது என்றது. நரி யோசித்தது இந்த ஒட்டகத்தை சிங்கம் கொன்றால் சில நாட்களாவது நிம்மதியாக இருக்கலாம். ஆனால் எல்லோரும் ஒன்றாக இருக்கின்றோம். இருந்தாலும் என் சாதுரியத்தால் எஜமானர் இதைக் கொல்ல மனதை தூண்டி விடலாம் என்று நினைத்தது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- எதையும் அறியமுடியும், எதையும் அடைய முடியும், எதையும் கொல்ல முடியும், புத்திசாலிக்கு முடியாதொன்றுமில்லை.

பின் ஒட்டகத்தைப் பார்த்து, தலைவர் உடல் நலமில்மை. வேட்டையாடமுடியாததால் பசியால் மிகவும் கஷ்டப்படுகின்றார். அவர் இறந்தால் நம்மை பாதுகாப்பாரில்லை. எனவே உன் நண்மைக்காவும் நம் அனிவரின் நண்மைக்காகவும் உன் உடம்பை இரண்டு மடங்கு லாபத்திற்கு கொடுத்துவிடு. அதனால் உனக்கு இரண்டு மடங்கு பெரிதான உடம்பு கிடைக்கும். தலைவரின் அன்பைப் பெறுவாய் என்றது.

நண்பனே! அப்படிச் செய்ய முடியுமானால் அது என் பாக்கியம். இந்த விஷயத்தில் யமதர்மராஜன் ஓர் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றது ஒட்டகம். உடனே அவை எல்லாம் சிங்கத்திடம் சென்றது. தலைவரே சூரியன் அஸ்தமிக்கப்போகிறான் இன்றையதினம் இரை கிடைக்க வில்லை. ஆனால் இந்த ஒட்டகம் யமதர்மராஜன் இவனது உடம்பை இரண்டு பங்காகத் திரும்பிக் கொடுத்தாக ஒத்துக்கொண்டால் அவனது உடலைத்தருகிறேன் என சொல்கிறான் என்றது. நேர்த்தியான யோசனை. அப்படியே செய்யுங்கள் என்றது சிங்கம். ஒட்டகம் இதற்கு ஒப்புக்கொண்டவுடன் சிங்கம் அதை தன் கைகளால் தாக்க நரியும் ஒநாயும் அதன் வயிற்றை கிழித்தது. ஒட்டகம் இறந்து பட்டது.

அப்போது வஞ்சகன் நரி தான் ஒருவனே இதைத் தின்பதற்கு வழியுண்டா என யோசித்தது. ரத்தம் தோய்ந்த அங்கங்களுடன் இருந்த சிங்கத்தைப் பார்த்து தலைவரே ஸ்நானம் பூஜை முடித்து வாருங்கள் நான் அதுவரை இந்த இரையை பாதுகாக்கின்றேன் என்றது. சிங்கம் நதிக்கரை நோக்கி சென்றதும் ஓநாயைப் பார்த்து நீ மிகவும் பசியில் இருக்கின்றாய் நீ சாப்பிடு நான் உன் மீது பழி ஏதும் வராமல் பார்த்துக்கொள்கிறேன் என்றது. அதை நம்பிய ஓநாய் கொஞ்சம் மாமிசத்தை ருசி பார்த்தது. அப்போது நரி, ஓநாயே தூரப்போ! தலைவர் வருகிறார் என்றது. ஸ்நானம் முடிந்து வந்த சிங்கம் ஒட்டகத்தின் நெஞ்சு பிடுங்கப்பட்டிருப்பதைப் பார்த்து கோபங்கொண்டு யார் இதை எச்சிலாக்கியது என்றது. எஜமானர் சாந்தமாகும்படி ஏதாவது சொல் எனும்படி ஓநாய் நாரியைப் பார்த்தது. ஆனால் நரியோ ஒட்டகத்தின் நெஞ்சை தின்றுவிட்டு என்னை ஏன் பார்க்கிறாய் என்றது. தன் உயிருக்குப் பயந்த ஒநாய் வேகமாக ஓடி பக்கத்திலிருந்த காட்டில் பதுங்கியது. சிங்கம் ஒநாயை கொஞ்ச தூரம் துரத்தி சென்றது. அவனும் தன்னைப்போல் நகத்தை ஆயுதமாக வைத்திருப்பவன் அவனை கொல்லக்கூடாது என்ற எண்ணம் வர திரும்பி வந்தது.

அந்த சமயத்தில் வர்த்தகர் கூட்டம் காட்டைக் கடந்து போய்க்கொண்டிருந்தனர். விலங்குகளின் தெந்திரவு கூடாது என்று பாரம் சுமந்துவந்த ஒட்டகங்களின் கழுத்தில் பெரிய மணிகளை கட்டியிருந்தனர். அந்த சப்தம் காட்டில் பயங்கரமான எதிரொலியுடன் கூடிய சப்தமாக அச்சுறுத்தும் வகையில் இருந்தது. சிங்கம் அது என்ன சப்தம் என்றது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய நரி அது தலைவரே சீக்கிரமாக ஓடுங்கள், எவ்வளவு முடிந்தவரைக்கும் வேகமாக ஓடிவிடுங்கள் என்றது.

யமதர்மராஜன் தங்கள் மீது கோபங்கொண்டு வருகிறார். தாங்கள் அவருடைய ஒட்டகத்தை அகால மரணம் அடையச் செய்துவிட்டு அதற்கு அவரையே சாட்சியாகவும் வைத்துள்ளீர்கள். எனவே அந்த ஒட்டகத்தைப்போல் ஆயிரம் ஒட்டகங்களை தங்களிடமிருந்து வாங்குவதற்கு தன்னிடமிருந்த ஒட்டகங்களோடு வருகிறார். இந்த ஒட்டகத்தின் பரம்பரைபற்றி விசாரிக்க வருகிறார் என்றது.

சிங்கம் தன் உயிருக்குப் பயந்து அடுத்த காட்டிற்கு ஓடிவிட்டது, நரி அந்தஒட்டக மாமிசத்தை தானே பலநாட்கள் புசித்து காலம் தள்ளியது.

அதனால்தான்,’நரிசெய்ததுபோல் தன் சூழ்ச்சியை வெளியிடக்கூடாது..’ என்று சொல்லிவிட்டுப் போனான் பணியாள்.

அவன் சென்றதும் நான் என்ன செய்யட்டும். இங்கு பழகிவிட்டு வேறு இடத்திற்குப் போய் ஏதும் செய்யமுடியாது. தலைவன் கோபத்திலிருக்கும்போது சென்றால் கோபம் அதிகமாகிவிடும். எனவே கொஞ்சம் பொறுத்து தலைவனிடம் செல்வதே சரி என நினைத்தான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- குற்றம் செய்துவிட்டு ஓடிப்போய் வெகு தூரத்திலிருப்பதாக எண்ணி நிம்மதி அடையமுடியாது. அறிவாளியின் கூர்மை நீண்டு எங்கிருந்தாலும் குற்றவாளியைத் தண்டிக்கும்.

கலங்கிய மனத்துடன் புதியவன் தலைவன் இருக்குமிடம் நோக்கித் தயங்கியபடி சென்றான். தூரத்திலிருந்து தலைவரைப் பார்த்ததும் மீண்டும் தயக்கம் ஏற்பட்டு சிந்தனையில் ஆழ்ந்தான். தலைவரின் அதிகார குணத்தின் ஆழமே ஆழம். அது பாம்புகள் வாழும் வீடு, கொடிய மிருகங்கள் இருக்கும் காடு, மனோரம்மியமான தாமரை மலர்கள் மறைத்துக் கொண்டிருக்கும் முதலைகள் உள்ள ஏரி. துஷ்டர்கள் திரும்பச் சொல்லும் அவதூறுகளால் கறைபடிந்த இடம், சாதுவான வேலைக்காரர்கள் தலைவர்களின் மனதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

புதியவன் வருவதைப் பார்த்த தலைவன் மிகக்கோபத்துடன் அவன் மேல் பாய்ந்து தாக்கினான். புதியவனும் தன்னை தற்காத்துக் கொள்ள திரும்பி தாக்கவே தலைவனுக்கு கோபம் அதிகமாகி மிகவும் கொடுரமாக இருவரும் சண்டையிட்டனர். இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வந்தது.

இதைப் பார்த்து சகியாத நண்பன் சொன்னான், முட்டாளே! அவர்களிடம் பகையுண்டாக்கி கொடுமை செய்து விட்டாய். உன் வஞ்சக நரி புத்தியினால் இந்த பகுதி முழுவதும் கலவரமும் குழப்பமும் ஏற்படும். உனக்கு ராஜ நீதி தெரியாது. முன்பின் தெரியாமல் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சச்சரவுகளை விவேகத்துடன் சமரசமாகத் தீர்ப்பவன் தான் நல்ல ஆலோசகன். அர்தமற்ற உன் சுய லாபங்களுக்காக தண்டம் உபாயத்தை உபயோகித்து சண்டை மூட்டிய நீ துர்நடத்தையும் துர்புத்தியும் உடையவனே. உன் செயலால் எல்லோரையும் சங்கடத்தில் மட்டி விட்டாய் என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நல்ல ஆலோசகன் முதலில் ஸாமம் என்கிற சமரசம் உபாயத்தை முதலில் கையாளவேண்டும். அதனால் கிடைக்கும் வெற்றியே வெற்றி. எதிரியின் மனத்தில் பதிந்த துவேஷம் என்ற இருளை சமரசம்தான் நீக்கும். ஒளிவீசும் இரத்தினமும், சூரிய சந்திரர்களும் அந்த இருளைப் போக்க முடியாது. சாமம், தானம், பேதம் இவை மூன்றும் கோவிலின் வாயில்கள். நான்காவதாகிய தண்டம் திமிரால் ஏற்படுவது. பலமின்றி புத்தியிருந்தால் அது பெண்மை. சூரத்தனம் இருந்து புத்தியில்லை எனில் அது மிருகத்தனம்.

சமரசத்தில் காரியம் கைகூடும்போது தண்டத்தை ஏன் உபயோகிக்கவேண்டும். சர்க்கரையால் பித்தத்தைத் தணிக்க முடிகிறபோது யாராவது சுரைக்காயை உபயோகிப்பார்களா? ஒவ்வொன்றின் பலத்தை புத்திசாலி அறிவான். நீ மந்திர ஆலோசகன் எனக் கர்வங்கொண்டு நடந்து கொள்வாயானால் உனக்கு நாசம் சம்பவிக்கும்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- ஐம்புலன்களை அடக்காதவன், அன்பு வளர்க்காதவன், மனத்தை நல்வழியில் செலுத்தாதவன், தர்மம் செய்யாதவன், உலகில் விளம்பரம் மட்டும் விரும்பி உண்மையான கீர்த்தியும் மனச்சாந்தியும் தேடாதவன் இவர்கள் வெறுமனே சஸ்திரங்களை கற்பதால் என்ன பலனும் இல்லை. ராஜ நீதியின் ஐந்து பகுதிகளாவன. காரியத்தைச் சரியாக ஆரம்பிப்பது. ஆள்பலம் பணபலம் இருப்பது, சரியான காலம் சரியான இடம் நிர்ணயிப்பது ஆபத்து வரும்போது தடுப்பது. வெற்றியுடன் காரியத்தை சாதிப்பது ஆகியன.

உனக்குத் திறமையிருக்குமானால் இந்த சங்கடமான ஆபத்திலிருந்து தலைவரைக் காப்பாற்று. முறிந்துபோன நட்பை சேர்த்து வைப்பதில்தான் பெருமையுண்டு. பிறர் காரியத்தை நாசம் செய்வதுதான் நீசனுக்குத்தெரியும். அதை மேம்படுத்த ஒன்றும் தெரியாது. என்னசெய்வது? உன்னைச் சொல்லி ஒன்றும் பயனில்லை. மந்த புத்தியுள்ள உன் பேச்சைக்கேட்ட தலைவரைத்தான் குறை சொல்ல வேண்டும்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- மந்தபுத்தியுள்ளவனுக்கு சாஸ்திரம் போதித்தால் அவனுடைய கர்வம் அதிகமாகும். குறையாது. சூரிய ஒளியில் எல்லோருக்கும் கண்தெரியும் ஆந்தைக்கு கண்தெரியாததுபோல். கல்வியால் ஒருவனுக்கு கர்வமும் மடைமையும் நீங்குவதற்குப்பதில் அதிகரித்தால் அதற்கு சிகிச்சை இல்லை. அமுதமே ஒருவனுக்கு விஷமானால் அவனுக்கு எதனால் வைத்தியம் செய்வது?

உன் பேச்சைக் கேட்டதனால் தலைவரின் உடல் நிலை மோசமாகிவிட்டது. புத்திமான்கள் வழி நடக்காமல் நீசர்களின் பேச்சுபடி நடக்கும் தலைவர்கள் வீண் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வார்கள். அதிலிருந்து வெளியேறுவது கடினம். குணசாலிகளைக் கொண்ட தலைவரிடம்தான் அனைவரும் சேவகம் செய்ய விரும்புகின்றனர். உன் போன்றவன் ஆலோசகராக இருந்தால் தலைவருக்கு எப்படி நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தலைவன் நல்லவனாயிருந்தாலும் அவனைச் சுற்றி துன்மார்க்க ஆலோசகர்கள் இருந்தால் அவனை உலகம் வெறுக்கும். அமைதியாக இருக்கும் குளம் மலர்ச்சியுடன் அழகாக இருக்கும். அதனுள் முதலைகள் இருக்கும் என்றால் யார் நெருங்குவார்கள்.

உன் சுயநலத்திற்காக அரசனை தனியே பிரித்து தனிமை படுத்த நினைக்கின்றாய். தலைவன் எல்லோர் மத்தியில்தான் சோபிப்பான். தனிமையில் இல்லை. அவனை தனிமைப்படுத்த நினைப்பவன் அவனின் விரோதி.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- கடுமையான சொல்லில் நன்மை இருக்கிறதா என்று பார். அது எப்போதும் விஷமானது இல்லை. தித்திக்கும் பேச்சில் துரோக சிந்தனை இருக்கின்றதா என்றுபார். அது எப்போதும் அமிர்தமாயிருக்காது.

நண்பனே. பிறர் சந்தோஷமாகவும் செழிப்பாகவும் இருப்பதைக் கண்டாலே உனக்கு வருத்தம்தான். அது மிகவும் தவறான எண்ணம். எந்தச் செய்கை சேவை செய்பவர்களுக்கு வளம் அளிக்கின்றதோ அதுவே தலைவருக்கும் திருப்தி அளிக்கும்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- துரோகத்தால் நண்பனைப் பெறவிரும்புகிறவன், கபடத்தினால் தர்மம் சேர்க்க விரும்புகிறவன், சுலபமான வழிகளால் கல்வி பெற விரும்புகிறவன், திமிரால் பெண்ணை அடைய விரும்புகிறவன் எல்லாம் கர்வம் பிடித்த முட்டாள்கள்.

தலைவரின் அருளைப் பெற்றவன் அடக்கத்துடன் இருக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு எஜமானன் வேலைக்காரனுக்கு சலுகை கொடுக்கின்றானோ அந்த அளவிற்கு அவனிடம் பயமும் அடக்கமும் இருந்தால் அவன் மேன்மையடைவான். நீயோ அற்பச் செயல்களில் ஈடுபட்டுள்ளாய். அற்ப விஷயத்திற்குக்கூட நீசகர்கள் நிலை மாறுகின்றனர்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நிலைகுலைந்து போனாலும் பெரியோர்கள் தைரியத்தைக் கைவிடுவதில்லை. கரையில் பள்ளம் விழுந்தால் கடலின் கம்பீரம் குறைவதில்லை.

குற்றம் எல்லாம் அரசனுடையது. ராஜநீதியின் எல்லா மார்க்கங்களையும் அறியாமல் ஆலோசகர் எனக்கூறிக் கொள்ளும் உன்போன்றவர்களிடம் தலைவர் ஆலோசனை கேட்டிருக்கக்கூடாது. அழகாகவும் சமர்த்தியமாகவும் பேசுவதோடு நிறுத்திக் கொண்டு வில்லில் அம்பு தொடுக்கமாட்டாத ஊழியர்களுடன் கேளிக்கையில் மூழ்குகின்ற தலைவனைவிட்டு லட்சுமி நீங்கி எதிரியுடன் சேர்ந்து விடுவாள்.

ஒரு ஆலோசகன் நிர்வாண சந்நியாசியை எரித்து தலைவனின் அருளைப்பெற்று தன் விருப்பத்தை நிறைவேற்றினான் என்ற கதை நியாயமானது என்றான் நண்பன். அது எப்படி என்று பணியாள் கேட்டான்.

தேவலோகத்தில் சந்நியாசி: அந்த பகுதியை நிர்வாகம் செய்து வந்த தலைனுக்கு மற்றவர்கள் தலைவணங்கி மரியாதை செய்வார்கள். ஒருநாள் காடுகளைக் காவல் செய்யும் அதிகாரி வந்து காட்டிலுள்ள அதிகாரிகள் கொந்தளித்து கலகம் செய்யும் நிலையில் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் தலைவனாக இருப்பவனுக்கு நீங்கள் மரியாதையாக நடக்கச் சரியான பாடம் கற்றுத் தரவேண்டும் என்றான். இதைக் கேட்டதும் தன் மூத்த ஆலோசகரை அங்கு அனுப்பி வைத்தான்.

அந்தச் சமயத்தில் நகருக்கு ஒரு போலி நிர்வாண சந்நியாசி வந்தான். தன் சாகசங்களினால் அந்த ஊரின் மக்களை வசியப்படுத்தி விட்டான். கேள்விப்பட்ட தலைவன் அவரைப் பார்க்க விரும்பி ஆள் அனுப்பினான். வந்தவன் பொறுத்தமான கதைகளைச்சொல்லி தன் செயல்களில் தலைவனுக்கு கட்டுக்கடங்காத ஆவல் வரும்படி செய்ய தலைவன் அவரை தினமும் சந்திக்க விரும்பினான். தினமும் வருபவன் அன்று வராமல் அடுத்தநாள் வந்து தலைவனைச் சந்தித்து, நான் உங்களுக்கு நல்ல சேதிகள் சொல்லப் போகிறேன். என் மடாலயத்தினுள் என் உடம்பை விட்டு நீங்கி தேவர் உலகம் செல்ல தகுதிவாய்ந்த வேறு சரீரம் பெற்றேன். பின் சுவர்க்கலோகம் சென்று திரும்பிவந்தேன். அங்கே தேவர்கள் உங்களின் நலத்தை விசாரித்தனர். என்றான்.

தலைவன் தனது அரசு அலுவல்களை மறந்து அன்றிலிருந்து சந்நியாசியிடம் ஈடுபாடு மிகக்கொண்டிருந்தான். காடுகளில் கலகம் செய்தவர்களையெல்லாம் ஒடுக்கிவிட்டு நகரம்வந்த மூத்த ஆலோசகர் தலைவர் ஓர் சந்நியாசியின் செயல்களில் ஈடுபாடு அதிகம் கொண்டு அரசு காரியங்களை மறந்திருப்பதை அறிந்தார். தலைவரைச் சந்தித்து தான் சென்ற காரியம் வெற்றி என முழு விபரத்தையும் கூறினார்.

ஆலோசகரிடம் போசும்போது அந்த சந்நியாசியை தெரியுமா என்றான் தலைவன். ஆச்சார்யர்களுக்கெல்லாம் குருவாகவும் அவர்களை சிருஷ்டிப்பவருமான இவரை எப்படி அறியாமலிருக்க முடியும் என்ற ஆலோசகர் இவரின் சுவர்க்கலோக யாத்திரை பற்றியும் கேட்டுள்ளேன் என்றார்.

வழக்கம்போல் சந்நியாசி தன் மடாலயத்தினுள் சென்று கதவை தாளிட்டுக்கொண்டான். ஒரு முகூர்த்த நேரம் கழிந்தபின் ஆலோசகர் தலைவரைப் பார்த்து சந்நியாசி எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவார் என்றான். அவர் தன் சரீரத்தை மடாலயத்தில் விட்டு வேறு சரீரத்துடன் சுவர்க்கம் சென்று திரும்பி வருவதற்குள் ஏன் அவசரப்படுகின்றீர்கள் என்றான் தலைவன்.

தலைவரே, சந்நியாசியின் இந்த உடலை விறகுகளால் எரித்துவிட்டால் அவர் தேவலோகம் சென்று திரும்பிய அந்த தேவ தரிசனம் பார்க்கலாம். அந்த உடலோடு உங்கள் அருகில் அவர் எப்போதும் இருப்பார்.

உதாரணமாக இந்தக் கதையை கேளுங்கள் என்றார் ஆலோசகர்.

பாம்பை மணந்த பெண்: அந்த ஊரில் வாழ்ந்திருந்த பிராம்மணனுக்கு குழைந்தைகள் இல்லை. அதை நினைத்து அவன் மனைவி மிகவும் துயரப்பட்டாள். ஒருநாள் பிராம்மணன் அன்பே, கவலைப்படாதே! நான் யாகம் செய்யும்போது ஒரு அசரீரி, பிராம்மணனே மற்ற எல்லோரையும்விட அழகான குழந்தை உனக்கு பிறக்கும் என்று கேட்டது என்றான். அவன் மனைவி மனம் நிறைந்து மகிழ்ந்தாள். அசரீரி வாக்கு பலிக்கட்டும் என வேண்டிக்கொண்டாள். நாளடைவில் கர்ப்பவதியாகி ஓர் ஆண் பாம்பை பெற்றெடுத்தாள்.

எல்லோரும் அதை காட்டில் விட்டு விடுங்கள் என்றனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவள் அந்த பாம்பை குளிக்கவைத்து பால் முதலியன கொடுத்து ஒரு பெட்டியில் பாதுகாப்பாக வளர்க்க அது வளர்ந்து பெரியதானது. பக்கத்து வீட்டுப் பையனுக்கு திருமணம் நடைபெறவே தன் மகனுக்கு எப்போது எப்படி திருமணம் நடைபெறும் என கவலையடைந்து கணவனிடம் அதுபற்றி பேசலானாள். அன்பே, நான் என்ன செய்ய, பாதாள வாசுகியை வேண்டினாலும் இந்த பாம்பிற்கு யார் பெண் கொடுப்பார்கள் என்றான். மனைவியின் ஏக்கம் என்ன சமாதானம் சொல்லியும் விலகவில்லை.

அவள்மீது கொண்ட அன்பினால் தூரதேசப்பயணம் புறப்பட்டான். அங்குள்ள உறவினனை சந்தித்து அந்த நல்லவனோடு சில நாட்கள் தங்கி தன் துயரத்திற்கு வழிகண்டு பிடிக்க எண்ணினான். உறவினன் ஸ்நானம் செய்ய ஏற்பாடுகள் செய்து நல்ல உணவு தந்து உபசரித்தான். சில நாட்களித்து அங்கிருந்து புறப்பட எண்ணம் கொண்டு அந்த உறவினனிடம் தான் தன் மகனுக்குகந்த பெண்ணைத்தேடி வந்த காரணத்தைச் சொன்னான். உறவினன் சொன்னான், உண்மை அதுவென்றால் என் மகளை நீங்கள் உங்கள் மகனுக்கு பெண்ணாக அழைத்துச் செல்லுங்கள் என்று அவளுடன் வேலையாட்கள சிலரையும் அனுப்பிவைத்தான்.

அந்த பெண்ணின் அதிரூப அழகையும் நல்ல அற்புதமான குணங்களையும் பார்த்த ஊர்மக்கள் விழிகள் அன்பால் மலர்ந்தன. ஆனால் அவர்கள் நா சொல்லிற்று இப்படிப்பட்ட அழகான பெண்ணை ஒரு பாம்புக்கு மணம் முடிக்க அனுப்புவானா? என்றனர். மேலும் அந்த பேய் பிடித்த வீட்டைவிட்டு பெண்ணை அழைத்துச் செல்லுங்கள் எனக்கூறினர். இதைக் கேட்டதும் பெண்ணின் சுற்றத்தினர் வருத்தம் அதிகம் அடைந்தனர்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தலைவன் ஒருதடவைதான் சொல்வான், சாதுவும் ஒருதடவைதான் சொல்வான், பெண்ணையும் ஒரே தடவைதான் மணமுடிப்பார்கள். பூர்வ ஜென்மத்தின் கர்ம பலனாக நடைபெறுகின்ற எதையும் மாற்றும் சக்தி யாருக்கும் கிடையாது.

ஆனால் மணப்பெண்ணோ அவர்களைப் பார்த்து இந்தப் பிதற்றல் எல்லாம் வேண்டாம். புஷ்பகன் என்ற கிளியின் விதியைக் கண்டு தேவர்கள் சகித்தனர் அதைப் பற்றிச் சொல்கிறேன் அதைக் கேளுங்கள் என்றாள்.

புஷ்பகன் என்ற கிளி: தேவலோக இந்திரனிடம் புஷ்கன் என்ற கிளி இருந்தது. கிளியாய் இருந்தாலும் அது சாஸ்திரங்களில் தேர்ச்சிபெற்று புலமையுடன் இருந்தது. அழகாகவும் அதற்கேற்ற குணநலன்களும் பொருந்தியதாக இருந்தது. ஒருநாள் அது சபையில் இந்திரன் கைமேல் உட்கார அதன் ஸ்பரிசம் இந்திரனுக்கு புல்லரிப்பை ஏற்படுத்தியது. பலவிதமான சூத்திரங்களைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது அங்கு யமன்வர கிளி ஒருபுறமாக ஒதுங்கியது. தேவர்கள் கிளியே ஏன் யமனைக்கண்டதும் ஒளிகிறாய் என்றனர். கிளி சொல்லியது, இவர் எல்லோரின் உயிரையும் பறிப்பவர். இவரைக் கண்டு எப்படி ஒதுங்காமல் இருக்க முடியும் என்றது. கிளியின் பயத்தைப் போக்க விரும்பினான் தேவேந்திரன்.

தேவர்கள் அனைவரும் எங்களுக்காக இந்தக் கிளியை கொல்லாமல் இருங்கள் என்றனர். யமன் கூறினான் அதைக் காலனிடம்தான் கேட்க வேண்டும் என்றான். அனைவரும் காலனிடம் சென்று கேட்க அவர் மரணத்திடம் கேளுங்கள் என்றார். மரணத்திடம் கிளியைக் கூட்டிக் கொண்டு போனார்கள். மரணத்தைப் பார்த்ததும் கிளி இறந்தது. இதன் அர்த்தம் என்ன என்று யமனைக் கேட்க அவர் சொன்னார் மரணத்தைப் பார்த்ததும் கிளி இறந்துவிடும் என விதியிருந்தது என்றார். தேவர்கள் மிகுந்த வருத்ததுடன் திரும்பி போயினர்.

அதனால் பூர்வஜென்மத்தில் செய்தகர்மத்தின் பலனாக நடக்கிறதை மாற்றும் சக்தி நமக்குக் கிடையாது மேலும் தன் பெண் விஷயமாய் பொய்சொன்னார் என்ற கெட்ட பெயர் எனது தந்தைக்கு வரக்கூடாது எனக்கூறிவிட்டு தன் உறவினர்கள் அனுமதியுடன் அந்த பாம்பை மணந்து கொண்டாள். பல நாட்கள் கழிந்தன.

ஒருநாள் பாம்பின் உடலிருந்து அழகிய இளைஞன் வந்தான். அவனைப் பார்த்து மிரண்ட அப்பெண்ணிடம் தான் அவளின் கணவன் என்பதை நிரூபிக்க அன்றிலிருந்து இருவரும் மிக்க மகிழ்வுடன் தாம்பத்தியம் நடத்தினர். பகலில் பாம்பாகவும் இரவில் மனித உருக்கொண்டும் இருந்தான் பிராம்மணன் மகன். இரவில் எழுந்திருக்கும் பழக்கமுடைய பிராம்மணனுக்கு இந்த உண்மை தெரிந்துவிட்டது. பாம்பின் உடலை எரித்து விட்டால் தன் மகன் மீண்டும் அதனுள் போகமாட்டான், மனித உருவிலே இருப்பன் என நினைத்து அந்த உடலை எரித்துவிட்டான். தன் மகன் மனைவியுடன் உரையாடிக்கொண்டிருப்பதை ஊர்மக்களுக்கு காண்பித்தான்.

இந்த உதாரணத்தை தலைவனுக்குச் சொல்லிவிட்டு நிர்வாண சந்நியாசி உள்ளே இருக்கும் மடாலயத்தை தீக்கிரையாக்கினார் முதன்மை ஆலோசகர்.

அதனால்தான், முதன்மை ஆலோசகர்….’ என்று சொன்னேன் என்றான் நண்பன். மேலும், மூடனே இவர்கள்தான் உண்மையான ஆலோசகர்கள். அரசு தந்திரங்கள் தெரியாமல் ஆலோசகர் என்ற பெயர் மட்டும் வைத்துக்கொண்டு பிழைப்பதும் ஒரு பிழைப்பா? இது உன் பரம்பரைக் குணம் என நினைக்கின்றேன். உன் கெட்ட நடத்தைகளே அதை நிரூபிக்கின்றன. உன் தந்தைகூட இது போன்று கெட்ட நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டிருக்கவேண்டும்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தந்தையின் குணம் எப்படியோ ஏறக்குறைய அப்படியே மகனின் குணம் இருக்கும். தாழம்பூச் செடியிலிருந்து நெல்லிக்கனி உண்டாகாது. விதை ஒன்று சுரை ஒன்றாக இருக்காது. அறிவாளிகளிடம் மாட்சிமை இருக்கும். எத்தனைக் காலம் ஆனாலும் அது மங்குவதில்லை. அவர்களாகவே அதை கைவிட்டு மனோபலவீனத்தைக் காட்டினால் தான் உண்டு. எவ்வளவு முயற்சி செய்தாலும் மயிலின் நிர்வானத்தைப் பார்க்க முடியாது. ஆனால் அந்த மூடமயில் மேகங்கள் கர்ஜிக்கும்போது தன்னை நிர்வானமாகப்படுத்திக் கொள்கின்றது.

வளையாத மரத்தை வளைக்கவும் கல்லை உடைக்கவும் கத்தியால் முடியாது. எவ்வளவு உபதேசங்கள் செய்தாலும் குரங்கை கீழ்படியச் செய்ய முடியவில்லை என்றான் நண்பன். அது எப்படியெனில்

முட்டாளுக்கு உபதேசம்: அந்தக் காட்டுப் பகுதில் குரங்குக் கூட்டம் ஒன்றிருந்தது. அது குளிர்காலம். மிக்வும அசாதாரன குளிரால் குரங்குகள் நடுநடுங்கியது. அவைகள் இரவில் மின்மினிப் பூச்சியைக் கண்டன. அது நெருப்பு என நினைத்து அவைகளைப் பிடித்து கீழேவைத்து அவற்றின்மேல் சருகுகளைப்பேட்டு விட்டு அதிலிருந்து அனல் வருகிறது என்ற நினைப்பில் தன் கைகளை கால்களை நீட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தன. அது நெருப்பில்லாததால் அனல் தகிக்கவில்லை. குளிரும் குறையவில்லை. அந்த மரத்திலிருந்த பறவை ஒன்று குரங்கைப் பார்த்து நண்பனே அது நெருப்பல்ல, மின்மினிப் பூச்சி என்றது. எத்தனை முறை சொல்லியும் கேட்கவில்லை. ஒருவேளை காது கேட்கவில்லையோ என நினைத்து அதன் காதருகில் சென்று உறக்க கூறியது அந்தப்பறவை. குரங்கிற்கு கோபம்வர அது அந்த பறவையை பிடித்து அருகில் இருந்த பாறையில் அடிக்க பறவை இறந்தது.

அதனால்தான் சொல்கிறேன், ‘வளையாத மரத்தை வளைக்கவும் கல்லை உடைக்கவும்…’ என்று சொன்னேன் என்றான் பணியாள்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- யோக்கித இல்லாதவனுக்கு கல்வி கற்பிப்பதில் என்ன லாபம்? மூடிய குடத்தில் வைத்த விளக்கு வீட்டு இருட்டைப் போக்குமா?

மேலும் சொன்னான். சாஸ்திரப்படி புத்திரர்கள் நான்கு வகைப்படுவர். தாயைப்போல் குணமுள்ளவன் ஜாதன், தந்தையைப்போல் குணமுள்ளவன் அஜாதன், நல்ல குணமுள்ளவன் அபிஜாதன், கீழோனுக்கு கீழோன் அபஜாதன். நீ புத்திரவகையில் நான்காவதான வகையைச் சேர்ந்தவனாயிருக்கின்றாய். குடும்பத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு அதிக புத்தி கூர்மையோ, செல்வமோ, செல்வாக்கோ பெற்றவன்தான் தாய்க்கு உண்மையான பிள்ளை.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- கண்ணுக்கு அழகாயிருப்பவனைக் காண்பது சுலபமே! அறிவுள்ள மனிதனைக் காண்பது என்பதுதான் துர்பலம்.

எனக்கு தர்மபுத்தி, துஷ்டபுத்தி என்கிற இருவர்பற்றிய நினைவு வருகிறது. பிள்ளையின் மிதமிஞ்சிய புத்தியால் தகப்பன் புகையால் மூச்சடித்து இறந்தான். அந்தக் கதையைக் கேள் என நண்பன் சொல்ல ஆரம்பித்தான்.

தர்மபுத்தி, துஷ்டபுத்தி: அந்த நகரத்தில் இரண்டு வியாபாரியின் புத்திரர்கள் தர்மபுத்தி, துஷ்டபுத்தி. இருவரும் நெருக்கமான நண்பர்களாயிருந்தனர். இருவரும் பொருள் ஈட்டுவதற்காக தூரதேசம் சென்றனர். எதிர்பாராவண்ணம் ஒரு சந்நியாசியை இருவரும் சந்தித்தனர். அவர் பூமியில் புதைத்து வைத்த ஆயிரம் தங்க காசுகள் கொண்ட குடத்தை எடுத்து தர்மபுத்தியிடம்தர இருவரும் யோசனைசெய்து இப்பணத்துடன் நாம் நம் ஊருக்குப் போகலாம் என முடிவு எடுத்தனர்.

வரும் வழியில் தர்மபுத்தி சொன்னான், நண்பனே இதில் பாதி உன்னுடையது. அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று எல்லோருடன் மகிழ்ந்திரு என்றான். ஆனால் துஷ்டபுத்தி சொன்னான் நண்பனே இந்தப்பணம் பொதுவில் இருந்தால் நம் நட்பு மாறாமல் இருக்கும். எனவே ஆளுக்கு நூறு காசுகள் எடுத்துவிட்டு மீதியை ஊருக்கு வெளியில் ஓரிடத்தில் புதைத்து வைத்து விடுவேம் என்றான். அதன் நிறை குறை நமது நன்னடத்தையைச் சோதித்துக் காட்டிவிடும். என்றான். இயற்கையாக நல்ல புத்தியுடைய தர்மபுத்தி அவன் பேச்சில் மறைந்திருந்த கெட்ட எண்ணத்தை தெரியாமல் ஒப்புக்கொண்டான். அவ்வாறே இருவரும் ஆளுக்கு நூறு காசு எடுத்துவிட்டு மீதியை ஓரிடத்தில் புதைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றனர்.

துஷ்டபுத்தி தனது புத்தியை கெட்டவழியில் செலுத்தியதால் அவனிடம் பணம் விரைவில் செலவாகியது. எனவே இருவரும் சென்று மீண்டும் ஆளுக்கு நூறு காசுகள் எடுத்து வந்தனர். அதுவும் விரைவில் தீர்ந்தது. துஷ்டபுத்தியுள்ளவனுக்கு ஓர் யோசனை தோன்றியது. இருவரும்சென்று பணம் எடுத்தால் மிஞ்சியிருப்பது நானூறு காசுகள் மட்டுமே. திருடுவது என்றால் பிறகு திருடிப் பயனில்லை. எனவே இப்போது திருடினால் ஆறநூறு காசுகள் கிடைக்கும் என்ற ஆசையால் தனியே சென்று எல்லா காசுகளையும் எடுத்துக் கொண்டு வந்து விட்டான்.

ஒருமாதம் சென்றபின் தர்மபுத்தியிடம்போய், மிச்சப் பணத்தையும் சமமாகப் பிரித்துக் கொள்ளலாம் எனக்கூறி கூட்டிச்சென்றான். அங்கே பணம் இல்லாதது கண்டு துஷ்டப்புத்தி, எங்கே அந்தப் பணம். நீதான் அதைக் கட்டாயம் எடுத்துச் சென்றிருப்பாய். எனக்குச் சேரவேண்டியதைக் கொடுத்துவிடு என்று ஆர்ப்பாட்டம் பண்ணினான். தர்மபுத்தி சொன்னான், நீசனே வாயைமூடு நான் இப்படிபட்ட காரியம் செய்யக் கூடியவன் இல்லை என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பிறர் மனைவியைத் தாய்போலும், பிறர் சொத்தை மண்போலும், எல்லா உயிர்களையும் தன் போலவும் தர்ம புத்தியுள்ளவர்கள் பாவிப்பர்.

இருவரும் விவாதித்துக்கொண்டு நீதி மன்றம் சென்றார்கள். பணம் திருட்டுப்போனதை தெரிவித்தனர். அதைக்ககேட்ட நீதி வழங்கும் அதிகாரி ஒரு தெய்வ பரிட்சை அவர்களுக்கு வைக்க கட்டளையிட்டார்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- ஒரு வழக்கில் எழுத்து மூலமான பத்திரமே சாட்சி, அடுத்தபடியாக கண்ணால் கண்ட சாட்சியமும் காதால் கேட்ட சாட்சியமும் சிறந்தவை. இவைகள் இல்லாமற் போனால்தான் தெய்வப்பரிட்சை என்று நீதி சாஸ்திரம் சொல்கிறது.

அப்போது துஷ்டபுத்தி, என்ன கஷ்டம், நீங்கள் நியாயம் சரியாக வழங்கவில்லை எனக்கு வனதேவதையே சாட்சி என்றான்.

அப்படியானால் சரி. நாளைக் காலை நீங்கள் இருவரும் எங்களோடு அந்தக் காட்டிற்கு வரவேண்டும் என்று கூறி இருவரிடமும் ஜாமீன் பெற்று அவர்களை அனுப்பிவைத்தனர்.

துஷ்டபுத்தி வீட்டிற்குச் சென்று தன் தந்தையிடம், அந்தக் காசுகளை நான்தான் எடுத்து வைத்துள்ளேன். நாமிருவரும் இன்றிரவே அந்த காட்டிற்குச் செல்வோம் அங்கு அருகிலுள்ள மரப்பொந்தில் உங்களை உட்கார வைக்கின்றேன். காலையில் நீங்கள் அதிகாரிகளிடம் சாட்சியம் சொல்ல வேண்டும் என வேண்டினான்.

மகனே, இருவரும் நாசமாகிவிடுவோம். இது ஒரு உபாயமே இல்லை. உபாயத்தை தேடும்போது அதிலுள்ள அபாயத்தை பார்க்க வேண்டும். முட்டாள் நாரையின் குஞ்சுகளைக் கீரிப்பிள்ளை தின்ற கதையில் ஒரு நீதி இருக்கின்றது அதைக் கேள் என கூறத்தொடங்கினான்.

யோசனையில்லாத உபாயம்: அந்தக் காட்டில் இருந்த ஆலமரத்தில் நாரைகள் கூடு கட்டியிருந்தன. மரத்தின் பொந்தில் ஓர்கருநாகம் இருந்தது அது நாரையின் முட்டைகள் பொறிந்து குஞ்சு ஆகிப் பறப்பதற்குமுன் தின்றுவிடும். அதனால் நாரை மிகவும் வருத்தத்துடன் குளக்கரையில் நிற்பதைப் பார்த்த நண்டு குசலம் விசாரிக்க தன் குஞ்சுகளை கருநாகம் சாப்பிடுவதை வருத்தத்துடன் சொன்னது. நண்டு யோசித்தது. இந்த நாரை என் இனத்தின் இயற்கைப் பகைவன். எனவே அசல் உண்மைபோன்ற பொய் உபதேசம் செய்கிறேன்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பேச்சை வெண்ணெய்போலாக்கு. மனத்தை ஈவிரக்கமின்றி வைத்துக்கொள். ஒரு காரியத்திற்குச் சத்துருவைத் தூண்டிவிட்டு அதைக் கொண்டே அதன் குலத்தை அழித்துவிடலாம்.

இந்த நாரைகள் நாசமாய் போகட்டும் என எண்ணி, மாமா கீரி இருக்கும் வளையிலிருந்து பாம்பு இருக்கும் பொந்துவரை வழிநெடுக மீன் இறைச்சியை போடு. அந்த வழிவந்து கீரி பம்பைக் கொன்றுவிடும் என ஆலோசனைக் கூறியது.

நாரை அதுபோலவே செய்தது. மீனிறைச்சித் துண்டுகளைப் பின்பற்றிய கீரி தொடர்ந்து சென்று பாம்பைக் கொன்றது. அதன்பிறகும் மீன் வாசம் வீசவே மரத்தின் மேலேறியது. அந்த நாரைகளை ஒவ்வொன்றாக கொன்றது.

அதனால்தான் சொல்கிறேன்,’ உபாயத்தை தேடும்போது அதிலுள்ள அபாயத்தை பார்க்க வேண்டும் என்று சொல்லிய தந்தையின் பேச்சைக் கேட்கவில்லை. இரவில் யாரும் காணமுடியாதபடி தந்தையைக் கூட்டிச்சென்று ஒர் மரப்பொந்தில் உட்காரவைத்தான். பின் விட்டிற்கு வந்து குளித்து நல்ல ஆடைகளை அணிந்து நீதி அதிகாரிகளுடனும் தர்ம புத்தியுடனும் அந்த காட்டிற்குச் சென்றான்.

சூரியன், சந்திரன், காற்று, தீ, ஆகாயம், பூமி, நீர், இதயம், யமன், பகல், இரவு, சந்திப்பொழுதுகள், தர்மதேவதை இவையெல்லாம் மனித நடவடிக்கைகளை அறியும். ஹே பகவதி, வனதேவதையே எங்கள் இருவரில் யார் திருடன் என்று சொல் எனக் கத்தினான். மரப் பொந்திலிருந்து துஷ்டபுத்தியின் தந்தை பணத்தை தர்மபுத்திதான் திருடினான் என்றதும் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

பணத்தை திருடிய குற்றத்திற்கு தர்ம புத்திக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும்போது தர்மபுத்தி அந்த மரத்திற்கு தீயிட்டான். தீ பற்றி எறியும்போது அதிலிருந்து ஒர் உருவம் வெளிப்பட நீதி அதிகாரிகள் திகைத்தனர். அவர் துஷ்டபுத்தியின் தந்தைதான். அப்போது துஷ்டபுத்தியின் சூழ்ச்சி வெளியாயிற்று. அதிகாரிகள் உடனே அவனைப் பிடித்து அந்த மரத்திலேயே தூக்கிலிட்டனர்.

அதனால்தான்,’தர்மபுத்தி, துஷ்டபுத்தி என்கிற இருவர்பற்றிய நினைவுகளை…’ என்றான் நண்பன்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- உப்பு ஜலத்தை அடைந்தவுடன் நதிகள் முடிவடையும். பெண்களுக்குள் வேற்றுமை ஏற்பட்டால் பந்துக்களின் உறவு முறியும். போக்கிரிகளின் காதை எட்டியவுடன் ரகசியம் முடிவடைகிறது. கெட்ட புதல்வன் பிறந்தால் குலம் முடிந்துவிடும்.

மேலும் சொன்னான் மனிதனாகட்டும் மிருகமாகட்டும் ஒருவாயில் இரண்டு நாக்குகள் உள்ள பிறவியை எப்படி நம்புவது? இரண்டு நாக்குகள் கொண்ட ஆங்காரமும் நிஷ்டூரமும் கொண்ட உன் போன்ற துஷ்டனின் வாயும் பாம்பின் வாயும் தீமைகள் செய்வதற்கென்றே அமந்துள்ளன போலும். உன் நடத்தைக் கண்டு என் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்படுகின்றேன் என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- போக்கிரி உன்னைப் புகழ்ந்தாலும் சரி அதை நம்பாதே, எவ்வளவு காலம் தீனி கொடுத்து வந்து பழகினாலும் அந்தக் கையை பாம்பு கொத்தும். தீப்பொறி சந்தனக் கட்டையிலிருந்து பிறந்திருக்கலாம். என்றாலும் அது எரித்துவிடும். நல்ல குலத்தில் பிறந்தாலும் போக்கிரி போக்கிரியே.

உன்போன்ற போக்கிரிகளின் சுபாவமே இப்படித்தான். பிறர் குற்றங்களை நுணிகி ஆராய்ந்து தன் குணத்தை மட்டும் புகழ்ந்து கொள்ளும் உன்னைப்போன்ற துரோகியை நம்புகிறவர்கள் நாசமடைகிறார்கள் அது அவர்களின் விதி போலும். எனவே சோதித்துப் பார்த்துதான் சகவாசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- கல்வியுள்ளவனாகவும் நேர்மையானவனாக இருந்தால் அவன் நட்பை நாடு, கல்வியுள்ளவனாக இருந்தும் மூர்க்கனாக இருந்தால் அவனிடம் எச்சரிக்கையாக இரு, நேர்மையுள்ளவனாகவும் மூடனாகவும் இருந்தால் அவனிடம் அனுதாபமாயிரு, முட்டாளாகவும் மூர்க்கனாகவும் இருந்தால் அவனை ஆரம்பத்திலிருந்தே விலக்கிவிடு.

உன்முயற்சிகள் உன் வம்சத்திற்கு மட்டுமல்லாமல் தலைவனுக்கும் நாசம் விளைவித்துள்ளது. தலைவனை இந்த கதிக்குள்ளாக்கிய நீ மற்றவர்களைப் புல்லுக்குச் சமமானவர்களாய் பார்ப்பாய். ஆயிரம்வீசை எடையுள்ள தராசை எலிகள் தின்றுவிடுமானால் ராஜாளி யானையைத் தூக்கிச் செல்லுமே! பின் பையனைத் தூக்கிச் செல்வது கஷ்டமா’ அது பற்றி கேள் எனச் சொல்ல ஆரம்பித்தான் பணியாள்.

இரும்பைத்தின்ற எலி: அந்த ஊரில் வாழ்ந்திருந்த வியாபாரி தன் சொத்துக்கள் அழிந்து போனதால், தேசாந்திரம் செல்ல முடிவு செய்தான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- முன்பு கௌரவத்துடன் வாழ்ந்தவன் சொத்துக்கள் இழந்தபின் அந்த ஊரில் தொடர்ந்து வசித்தல் என்பது சரியான மதிப்பைத் தராது. யார் யாருடன் கேளிக்கையில் மூழ்கி தன் சொத்துகளை இழந்தானோ அவர்களே அவன் ஏழையானதும் நிந்திப்பார்கள்.

அந்த வியாபாரியின் வீட்டில் முன்னோர்கள் விட்டுச்சென்ற பெரிய இரும்பு தராசு ஆயிரம் வீசை எடை கொண்டது இருந்தது. அதை ஒரு வியாபாரியிடம் அடகு வைத்துவிட்டு தேசாந்திரம் போனான். பல நாட்கள் கழிந்தபின் அந்த ஊருக்கு வந்தான். தராசை அடகு வைத்த வியாபாரியிடம் சென்று தன் தராசை திருப்பிக் கேட்டான். அந்த வியாபாரி தராசை எலி தின்று விட்டது என்றான்.

அதைக்கேட்டவன் சரி எலிகள் தின்றது உன் குற்றமில்லை. உலகம் இப்படித்தான் எதுவும் சாஸ்வாதமில்லை. நான் ஆற்றிற்கு குளிக்கச் செல்கின்றேன். உன்மகனை என் ஸ்நான சாமான்களை எடுத்துவர அனுப்பு என்றதும் தன் மகனிடம் அவர் உன் சிற்றப்பன் மாதிரி, ஸ்நான சாமான்களை எடுத்துக்கொண்டு அவருடன் ஆற்றுக்குப்போ என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- யாரும் பரிபூர்ண பக்தியுடன் யாரிடமும் அன்பு செலுத்துவதில்லை. பயமோ ஆசையோ துளியாவது தூண்டாத காரண காரியங்களில்லை. காரியமும் காரணமும் இல்லாமல் யாராவது ஆதரவு காட்டினால் அதைக் கொஞ்சம் சந்தேகிக்கவேண்டும். முடிவில் அதை பற்றி அச்சமும் படவேண்டும்.

குளித்துவிட்டு வந்த வியாபாரி ஸ்நானசாமான்களை எடுத்து வந்தவனை ஓர் குகையில் தள்ளினான். அதன் வாயிலில் ஓர் கல்லை போட்டு அடைத்தான். வீட்டிற்கு திரும்பியவனை தன் மகன் எங்கே எனக்கேட்டான். ஆற்றங்கரையில் ஓர் ராஜாளி அவனைத் தூக்கிச் சென்றுவிட்டது என்றான்.

ஒருவன் தன் பிள்ளையைக் கேட்க, மற்றவன் தன் தராசை கேட்க தகரறு முற்றி இருவரும் நீதி அதிகாரிகளிடம் சென்றனர். இருவரும் தம் குறைகளைச் சொன்னார்கள். அதிகாரிகள் அவனின் பையனை அவனிடம் கொடுக்கச் சொன்னார்கள். நான் குளித்துக் கொண்டிருக்கும்போது ராஜாளி பையனை தூக்கிக் கொண்டு சென்றது என்றான்.

என்னது! ராஜாளி பையனை எப்படிதூக்கிச் செல்லும் என்றனர்.

ஆயிரம் வீசை எடையுள்ள தராசை எலிகள் தின்றுவிடுமானால் ராஜாளி யானையே தூக்கிச் செல்லும். பையனை தூக்கிச் செல்வது கஷ்டமில்லை என்றான். உண்மையை விசாரித்து அறிந்த அதிகாரிகள் தராசைபெற்று ஒருவனிடமும் பையனை மற்றவனிடமும் தந்தனர்.

அதனால்தான்,’ஆயிரம்வீசை எடையுள்ள தராசை எலிகள் தின்றுவிடுமானால் ராஜாளி யானையைத் தூக்கிச் செல்லுமே! பின் பையனைத் தூக்கிச் செல்வது …’ என்று சொன்னேன். மேலும் தலைவர் புதியவனிடம் காட்டும் அன்பினை சகியாமல் இந்தக் காரியம் செய்துள்ளாய். என்றென்றும் இதுதான் உன் வழக்கம்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நல்ல குலத்தில் பிறந்தவனை நீசகுலத்தில் பிறந்தவன் தூஷிப்பான், பெண்ணின் காதலைப் பெறுகிறவனை அதனை பெறமுடியாதவனும், தானம் செய்பவனை லோபியும், நேர்நடத்தை உள்ளவனை துஷ்டனும், தேஜஸ் உள்ளவனை குரூபியும், அங்ககுறைபாடு உள்ளவன் அழகனையும், சுகத்துடன் இருப்பவனை அதிர்ஷ்டமில்லாதவனும், சாஸ்திர ஞானமுள்ளவனை முட்டாளும் தூஷிப்பர். மூடன் பண்டிதனையும், ஏழை பணக்காரணையும், பாவி புண்னியவானையும், விபசாரி குலஸ்திரியையும் வெறுப்பர். ஞானிகள் இயற்கைச் சுபாத்தின்படி நடப்பர். ஜனங்கள் இயற்கை சுபாவத்துடன் நடந்தால் சட்டத்தின் தண்டனைகள் என்ன செய்யும்?

ஒருதடவை சொன்னதும் யார் கிரகிக்கின்றானோ அவனுக்கு உபதேசம் செய்வது சரியானது. இருதயமின்றி கல்போல் அசைந்து கொடுக்காமல் இருக்கும் உனக்கு உபதேசிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை. முட்டாள், உன்னோடு இருப்பதே சரியானது இல்லை. உன்சேர்க்கையால் எனக்கும் அனர்த்தம் உண்டாகலாம்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- எங்கு நீ ஒரு துஷ்டனுடன் சேர்ந்திருந்தால் விவகாரம் ஏதும் இல்லையென்றாலும் உனக்கு அனர்த்தம் ஏற்படும். விவேகமற்ற துஷ்டனுடன் சேருவதைவிட கடலிலோ, நெருப்பிலோ, அதளபாதாளத்திலோ விழுவதுமேல். நல்லவர்களாயிருந்தாலும், கெட்டவர்களாயிருந்தாலும் அவர்களுடன் பழகினால் அவர்களின் குணங்கள் உன்மீது படியும். எங்கும் இருக்கும் காற்றில் கெட்டவாசனையும் நல்லவாசனையும் கலந்து வருவதுபோல்.

எங்கள் இருவருக்கும் தாய் தந்தையர் ஒருவரே! என்னை ஓர் முனிவர் வளார்த்தார். மற்றவனை கசாப்புக்காரன் வளர்த்தான். இருவர் செயல்களிலும் வேறுபாடு இருப்பதை நீ கண்கூடாக பார்க்க முடியும். குணமும் தோஷமும் சேர்க்கையைப் பொருத்தும் இருக்கும். என்ற கதையில் உள்ள விவேகத்தைகேள் என அதுபற்றி கூறலாணான் நண்பன்.

கல்வியின் பயன்: அந்த ஊரின் அருகில் உள்ள மலையின் மரத்தில் கிளி முட்டையிட்டிருந்தது. அது பொறிந்து குஞ்சுகளாக இருந்தது. பெரிய கிளி இரைத்தேடி வெளியில் சென்ற சமயம் வேடன் ஒருவன் குஞ்சுகளை எடுத்துச் சென்று விட்டான். அதில் ஒன்று அதிர்ஷ்டவசமாக தப்பியது. மற்ற கிளிக்குஞ்சை கூண்டில் அடைத்து அதற்கு பேசக் கற்றுக் கொடுத்தான். காட்டுவழியில் வந்த ரிஷி தப்பிய கிளியை தன் ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்று வளர்த்தார்.

அந்த ஊரின் தலைவன் சவாரி செய்த குதிரை மிரண்டு ஓடத்தொடங்கி காட்டுக்குள் சென்றது.  மெல்ல வேடன் இருந்த பகுதிக்கு வர அதனைக்கண்ட வேடன் வளர்த்தகிளி, ஒருவன் குதிரைமேல் வருகிறான், அவனை கட்டுங்கள், வெட்டுங்கள், கொல்லுங்கள் எனப் பலவாறாக பயங்கரமாக சப்தம் இட்டது. தலைவன் தன் குதிரையை திருப்பி வேறுதிசையில் செல்ல அந்த வழி ரிஷியின் ஆசிரமம் சென்றது. அங்கு கூண்டிலிருந்த கிளி வருக! வருக! சிரம பரிகாரம் செய்யுங்கள், சாப்பிடுங்கள் என்றது. ரிஷி தலைவருக்கு நீர் பழங்கள் கொடுத்து உபசரித்தார். தலைவர் கேட்டார் இந்தக் காட்டின் ஒருபக்கம் உன்னைபோன்ற கிளி கட்டு, கொல்லு என்றெல்லாம் பயங்கரமாக ஏன் அலறுகிறது? கிளி சொல்லிற்று அவன் என் சகோதரன். அவன் வளர்ந்த விதம் அப்படி என்றது.

அதனால்தான்,’குணமும் தோஷமும் சேர்க்கையைப் பொருத்தும் இருக்கும்.’ என்று சொன்னேன். உன்னோடு சேர்ந்திருப்பது சரியில்லை, முட்டாள் நண்பனைவிட அறிவுள்ள எதிரியே மேலானவன். யாரைக் கொல்ல நினைத்தானோ அவர்களுக்காகவே திருடன் உயிர்த் தியாகம் செய்தான், குரங்கு தலைவனைக் கொன்றது என்பதை கேட்டதில்லயா நீ? என்று அதுபற்றி சொல்ல ஆரம்பித்தான்.

யோசனையுள்ள எதிரி: ஒரு தலைவரின் மகன், வியாபாரி ஒருவரின் மகனோடும், கல்வி கேள்விகளில் சிறந்த ஆலோசகர் ஒருவரின் மகனோடும் சிநேகமாய் இருந்தான். மூவரும் ஒன்று சேர்ந்தே எல்லா பொது இடங்களுக்கும் செல்வர். விளையாட்டுகளிலும், கேளிக்கைகளிலும் பொழுதை போக்கினர். வித்தைகள், வேட்டையாடுதல், படிப்பது இவைகள் மூவருக்கும் பிடிக்காத விஷயங்கள். தலைவர் ஒருநாள் தன் மகனைக் கூப்பிட்டு நீ அரசு நீதியை வெறுக்கின்றாய் என்று கடிந்து கொண்டார். மற்றவர்களின் தந்தையரும் தொழில் செய்யாமல் இப்படி பொழுது போக்குவதைக் கண்டித்தனர்.

மூவரும் அந்த வருத்ததில் இருந்து மீள, அவமான மடைந்த பிறகு இங்கே இருப்பது சரியில்லை, வேறு எங்காவது போகலாம் என முடிவு எடுத்தனர். தன்மானமுள்ளவனின் வீரம், வித்தைகள், புண்ணியம், திறமை, குணம் முதலியன எப்படிபட்டது என்பதை வெளிதேசத்து பயணங்கள் காட்டிக்கொடுக்கும் என்றான் தலைவரின் மகன்.

பணம் இல்லாமல் எங்கும் போகமுடியாது. அருகில் உள்ள மலைக்குச் சென்று அங்கு கிடைக்கும் ரத்தினக் கற்களைக்கொண்டு விரும்பியபடி அனுபவிக்கலாம் என்று சென்றனர். அங்கு அதிர்ஷ்டவசமாக ஒவ்வொருவருக்கும் ஓர் விலையுயர்ந்த ரத்தினம் கிடைத்தது. அதை அப்படியே கொண்டு சென்றால் வழியில் திருடர்கள் பயமுண்டு எனவே கற்களை விழுங்கி விட்டால் யாரும் அதைக் கண்டு பிடிக்க முடியாது என நினைத்து மூவரும் அந்த ரத்தினக் கற்களை விழுங்கினர். அதை தூரத்திலிருந்து ஒரு திருடன் பார்த்து விட்டான். தானும் பலநாட்கள் இந்த மலையில் தேடியும் கிடைக்காத ரத்தினக் கற்கள் இவர்களிடம் கிடைத்துள்ளது. எப்படியாவது இவர்களுடன் கூட்டு சேரவேண்டுமென நினைத்து அவர்களிடம் வந்தான்.

மலையிலிருந்து இறங்கும் மூவரிடமும் நண்பர்களே, இந்த பெரிய காட்டைவிட்டு வெளியில் செல்ல வழி தெரிய வில்லை. தனியே போவதற்கும் திருடர் பயமிருக்கின்றது. எனவே என்னை கூட்டிச் செல்லுங்கள் எனவேண்டினான். அவனையும் கூட்டிக்கொண்டு எல்லோரும் நகரை நோக்கி நடந்தனர். வழியில் ஒரு கிராமம் இருந்தது. அந்த கிராமத்தின் தலைவன் பலவிதமான் பறவைகளை வளர்த்து வந்தான். அவற்றில் ஒன்று நால்வரும் வருவதைப் பார்த்து சப்தமிடத் தொடங்கியது. பறவைகளின் பாஷை தெரிந்த அந்த தலவன் அந்த நால்வரிடம் ரத்தினங்கள் இருப்பதை பறவைமூலம் அறிந்தான். வே4லையாட்களைக் கூப்பிட்டு நால்வரையும் பிடித்துவரச் செய்து அவர்களைச் சோதனை போட்டான். ஒன்றும் கிடைக்கவில்லை.

மீண்டும் ஒரு முறை சோதனை செய்துவிட்டு அவர்களை அனுப்ப பறவை மீண்டும் கத்தியது. அந்த தலைவன் என் பறவை பொய் சொல்லாது. வெளியில் தெரியாதபடி நீங்கள் அதை விழுங்கியிருக்க வேண்டும். காலையில் உங்கள் வயிற்றைக் கிழித்து அதை வெளியில் எடுத்து காண்பிக்கின்றேன் எனக் கூறி அவர்களை கொட்டடியில் அடைத்து வைத்தான்.

கொஞ்சகாலமே அவர்களிடம் பழகினாலும் அவர்கள்மேல் பாசங்கொண்ட திருடன் காலையில் தலைவரைப் பார்த்து என் சகோதரர்கள் வயிற்றைக் கிழிப்பதைப் பார்க்க எனக்குச் சகியாது முதலில் என்வயிற்றைக் கிழியுங்கள் என்றான். அப்படியே நடக்க அவன் வயிற்றில் ஒன்றுமில்லாததுகண்டு நாம் ஏதோ தவறு செய்கிறோமோ என நினைத்து அம்மூவரையும் விடுதலை செய்தான். அவர்கள் தங்கள் ஊர் சென்றடைந்தனர்.

அதனால்தான்,’முட்டாள் நண்பனைவிட அறிவுள்ள எதிரியே மேலானவன். யாரைக் கொல்ல நினைத்தானோ அவர்களுக்காகவே திருடன் உயிர்த் தியாகம் செய்தான்…’ என்று சொன்னேன் என்றான் நண்பன்.

முட்டாள் நண்பன்: அந்த மூவரும் தங்கள் ஊரில், வியாபாரியின் மகன் மூலமாக ரத்தினக்கற்களை விற்று பணம் சேர்த்தனர். ஆலோசகரின் மகனை தனக்கு ஆலோசகராக வைத்துக்கொண்டு தலைவனின் மகன் தந்தையிடமிருந்த அந்த ஊரின் அரசு பொறுப்புக்களை கவர்ந்து கவனிக்கலானான். வியாபாரியின் மகனைதன் பொக்கிஷத்தை பாதுகாக்கவும் அதிகரிக்கவும் நியமித்துக் கொண்டான். பின் தன்னிஷ்டம்போல் கேளிக்கைகளில் மூழ்கினான்.

தலைவன் அந்தப்புரம் சென்று வரும்போது ஒரு குரங்கை கண்டு அதை எடுத்து செல்லமாக நண்பன்போல் வளர்த்து வந்தான். அதை தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டான். நாளடைவில் குரங்கு பெரியதாய் வளர்ந்தது. தலைவனின் அருகிலேயே இருந்தது. தலைவனின் வாளை எப்போதும் அதுதான் வைத்திருக்கும். அந்த மாளிகையின் அருகில் ஒர் நந்தவனம் இருந்தது. அதில் வசந்தகாலம் வந்ததால் மலர்கள் பூத்துக்குலுங்கி மனதைக் கவரும் ரமியமான இடமாக இருந்தது. தன் மனைவியுடன் சுற்றிவந்தவன் களைப்படைந்து இங்கு நான் சிறிது நேரம் மலர் மண்டபத்தில் படுத்திருக்கின்றேன் என்னை யாரும் தொந்திரவு செய்ய வேண்டாம் எனக்கூறி அயர்ந்தான்.

அப்போது ஓர் வண்டு வந்து தலைவன் தலையில் அமர கோபங்கொண்டு அதை குரங்கு துரத்தியது. மீண்டும் மீண்டும் அது பறந்துவந்து தலைவனின்மேல் அமர கட்டுக்கடங்காத கோபத்துடன் தன்னிடம் எப்போது இருக்கும் அரசனின் வாளை உருவி ஆவேசமாக வண்டைப்பார்த்து வீசி எறிய அது தலைவனின் தலையை துண்டாக்கியது. அருகில் உறங்கிய தலைவனின் மனைவி கண்விழித்து இந்த பயங்கரத்தைப் பார்த்து கதறினாள். மூட வானரமே, உன்மேல் நம்பிக்கை வைத்ததற்கு ஏன் இப்படி நடந்து கொண்டாய் என கேட்க குரங்கு நடந்ததைக் கூறியது. அதன்பிறகு அதனை எல்லோரும் தூஷித்து நிராகரித்தனர்.

அதனால்தான்,’முட்டாள் நண்பனைவிட அறிவுள்ள எதிரியே மேலானவன்.குரங்கு தலைவனைக் கொன்றது’ என்று சொன்னேன் என்றான் நண்பன். போக்கிரித்தனத்தால் மட்டும் தேர்ச்சி பெற்று நட்பை முறித்தெறிக்கின்ற உன்போன்றவர்களின் பேச்சைக் கேட்டால் எந்தக் காரியமும் நன்மையாக முடியாது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நெருக்கடி மிகுந்த காலத்தில் கூட உலகம் புகழக்கூடிய காரியத்தை சான்றோர்கள் செய்வர். தீய காரியங்களை அவர்கள் ஆதரிப்பதில்லை. நெருக்கடி காலத்தில் புத்திசாலிகள் கௌரவமளிக்கும் காரியத்தைக் கை விடுவதில்லை. கெட்டகாரியம் என்றும் கெட்ட காரியமே. புத்திசாலிகள் அதில் மனம் செலுத்துவதில்லை. எவ்வளவு தாகம் எடுத்தாலும் சாக்கடைநீரை யாரும் குடிப்பதில்லை.

உயிர்போகின்ற நிலைமை ஏற்பட்டாலும் செய்யதக்க காரியத்தையே செய்யவேண்டும். செய்யத்தகாததைச் செய்யலாகாது என்று நல்ல வழிக்கு வரக்கூடிய வார்த்தைகளை நண்பன் சொல்லியும் குற்றமுள்ள தன் நெஞ்சு குறுகுறுக்க நண்பன் கூறியதை விஷமாகக்கருதி அவ்விடத்தை விட்டு அகன்றான் பணியாள்.

சிரிது ஆசுவாசமடைந்தபின் மீண்டும் தலைவரும், புதியவனும் சண்டையிட்டனர். புதியவனைக் கொன்றதும் தலைவரின் கோபம் அடங்கியது. பழைய நட்பை நினைத்து கண்ணீர் விட்டது. என்ன கெட்டகாலம், நான் பெரும் பாவம் செய்து விட்டேன் என் மறு உடம்பாக இருந்த நண்பனைக் கொன்று என்னையே துன்புறுத்தியிருக்கின்றேன் என வருந்தியது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- வளங்கொழிக்கும் பூமியின் பகுதியையும் அறிவுள்ள வேலையாட்களையும், நல்ல நண்பர்களையும் தலைவர்கள் இழக்கும்போது இழந்த பூமியை என்றாவது பெறலாம், மற்றதை பெறுவது கடினம் என வருத்தம்டைவர். தந்தையானாலும், மகனானாலும், சகோதரனானாலும் சிநேகிதனானாலும் உயிருக்கு ஆபத்து உண்டாக்க முற்பட்டால் அவர்களை நன்மைகருதி கொல்லவேண்டும் என்பதே அரசு நீதி. இரக்கங்காட்டும் தலைவன், கண்டதைச் சாப்பிடும் பிரம்மணன், அடங்காப்பிடாரியான பெண்டாட்டி, கெட்ட எண்ணமுள்ள சிநேகிதன், கவனமற்ற நீதிபதி, வணக்கமற்ற வேலையாள் இவர்களை கைவிடவேண்டும். உண்மைச் சுகம் பெற எங்கு வேண்டுமானாலும் போ, அறிவுள்ளவன் வயதில் சிறியவனானாலும் அவனிடம் தெரிந்துகொள், தர்மம் செய்ய உயிரையும் கொடு, தன் கை பாவம் செய்தாலும் அதை வெட்டு.

தலைவன் துயரப்பட்டு நிற்பதைப் பார்த்த பணியாள், தலைவரே எதிரியைக் கொன்றபின் இப்படி உறுதி குலைந்து நிற்பது சரியில்லை. தலைவர்களின் தர்மம் வேறு. சாதாரண மனிதர்களின் தர்மம் வேறு. மனித சுபாவத்தைக் கொண்டு அரசு செய்யமுடியாது. மனிதர்களின் தோஷமே தலைவர்களுக்கு குணமாக அமையும். அரசுநீதி வேசியைப்போல் பல ரூபங்கள் கொள்வது, சஞ்சல புத்தியுடையது. உண்மை பொய் இரண்டும் பேசும். கொடுமை செய்யும், அன்பு காட்டும், இம்சிக்கும், தயை காட்டும், செல்வத்தைச் சேர்க்கும், விரயமாக்கும், பொருளை வழங்கும் பறிக்கவும் செய்யும். என்றான்.

பணியாள் தன்னிடமிருந்து தலைவரிடம் செல்வதைப் பார்த்த நண்பனும் அங்குவந்து, பணியாளைப் பார்த்து உனக்கு ஆலோசகர் தொழிலே தெரியாது. அன்பு செலுத்திப் பழகும் சிநேகிதர்களிடையே சச்சரவு எழுப்பி சாவை உண்டாக்கும் சண்டையை மூட்டிவிடுவது ஒரு ஆலோசகருக்கு அழகல்ல. சாமம், தானம், பேதம் ஆகிய வழிகளிருக்க அதைவிடுத்து தண்டம் என்ற வழியில் தலைவருக்கு யோசனைகூறி அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளாய். சண்டையில் யாருக்கு வெற்றி என யாராலும் முன்பே கூறமுடியாது. இந்திரனும் குபேரனும் வாயுவும் யுத்தத்தில் தோல்வியே கண்டுள்ளனர். யுத்தத்தில் ஒரு நன்மையும் இல்லை. அறிவில்லாதவனே யுத்தத்தை விரும்புவான். சாஸ்திரங்கள் நல்லனதான் போதிக்கின்றன்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நல்ல குணம், நல்ல நடத்தை, தன்னடக்கம் உள்ளவனும் எதிரிகளை அழிக்கத்துணிவுள்ளவனும், பேராசையில்லாதிருப்பவனுமான வேலைக்காரர்களை தன்னுடன் கொண்டிருக்கும் தலைவன் என்றும் யாரிடமும் தோற்பதில்லை. கேட்பதற்கு கடுமையாயிருந்தாலும் நல்லதையே சொல்லவெண்டும். பிரியமானது எனப் பேசிவந்தால் தலைவன் மனம் உண்மைகளை மறந்து பாழ்படும். சமதரையைப்போன்றே ஆகாயம் காணப்படும். மின்மினிபோல நெருப்பு காணப்படும். ஆனால் இறண்டும் ஒன்றல்ல. மெய் பொய்யாகவும் பொய் மெய்யாகவும் தோன்றும் ஓர் ஆலோசகரும் தலைவரும் இரண்டையும் ஆரய்ந்து அறியவேண்டும். இதுதான் அரசு நீதி.

கெட்ட எண்ணங்கொண்ட வேலையாட்கள் தம் காரியங்களைச் சாதிப்பதற்கு அழகான வார்த்தைகளால் உண்மை விஷயத்தைத் திரித்துக் கூறலாம். ஆலோசித்து அரசு காரியம் செயல்படவேண்டும். ஆப்த நண்பர்களின் பேச்சைக்கேட்டு அதை ஆராய்ந்து சுயபுத்தியுடன் யோசித்து காரியம் செய்தால் அதுவே புத்திசாலித்தனம். அவன் புகழடைவான்.

பிறர் பேச்சில் தலைவர்கள் மயங்கி விடக்கூடாது. மனிதர்களிடம் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து அவர்களின் பேச்சில் உள்ள நன்மை தீமை, செயல்களில் இறங்க சரியான நேரம் முதலியன குறித்து யோசனை செய்து நிர்வாகம் செய்யவேண்டும்.

நன்றாக இருந்த நட்பு பேராசையும் போக்கிரித்தனம் உள்ள ஒருவனால் நாசமடைந்தது.

2.இரண்டாம் வாழ்க்கைத்தந்திரம்- நட்பு அடைதல்

பண்டிதர் தனவந்தனின் குமாரர்களான தனது சீடர்களிடம் நட்பு அடைதல் பற்றிய தந்திர நிகழ்வுகளைத் கூறத்தொடங்கினார். சாதனமும் செல்வமும் இல்லாமற் போனாலும் அறிவாளிகளும் கல்விமான்களும், காக்கை, எலி, மான், ஆமை செய்தது போல்- எடுத்த காரியத்தை தொடுத்து முடிப்பர் எனக்கூறி அந்த நிகழ்வு பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

கேடுவரும் பின்னே: அந்த நகரத்தின் அருகில் இருந்தகாட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. அதில் எல்லா ஜீவராசிகளும் வசித்திருந்தன. அதன் நிழலில் மான் போன்று புற்களைத்தின்று வாழும் ஜீவன்கள் நித்திரை செய்யும். பசுமை நிறைந்த இழைகளினூடே பறவைகள் ஒன்று கூடி வாழ்ந்தன. அதன் இடுக்குகளிலும் பொந்துகளிலும் பல்வேறு புழு பூச்சியினங்கள் வாழ்ந்திருந்தன. கிளைகளில் குரங்குகள் தொங்கி ஊசலாடி மகிழ்ந்திருந்தன. மலர் கொத்துகளில் வண்டுகள் நிம்மதியாக குடியிருந்தன. அந்த மரம் பொதுவாக பல ஜீவராசிகளுக்கு புகலிடமாக இருந்துவந்தது.

அந்த மரத்தில் வசித்துவந்த காக்கை ஒன்று இரைத்தேடி ஊரை நோக்கிப் பறந்தது. வழியில் வேடன் ஒருவனைப் பார்த்தது. அவன் ஆலமரத்தை நோக்கி வருவதைப் பார்த்ததும் அவன் என்ன செய்யப்போகிறான் எனப்பார்க்க அவனைப் பின் தொடர்ந்தது. கைகால்கள் தட்டை குட்டையாய் இருக்க அந்தவேடன் பார்ப்பதற்கு பயங்கரத் தோற்றமுடையவானக இருந்தான். காக்கையின் கண்களுக்கு அவன் கையில் கயிறு பிடித்த எமன்போல் தோற்றமளித்தான். பாவத்தின் அவதாரம், அதர்மத்தின் உறைவிடம், மகாபாபிகளின் குரு, மரணத்தின் நெருங்கிய நண்பன் என பலவகை தோற்றமளிக்கும் அவன் காட்டிலோர் இடத்தில் வலையை விரித்து அதில் தானியங்களைத் தூவி விட்டு மறைந்து நின்று வலையில் சிக்கும் பறவைகளை எதிர்பார்த்து நின்றான். காக்கையின் அறிவுறுத்தலினால் அங்கிருந்த பறவைகள் ஏதும் தானியம் தின்ன வரவில்லை.

அப்போது ஒரு புறாக்கூட்டம் பறந்து வருவதைப் பார்த்த காக்கை அதன் தலைவனிடம் சென்று வேடன் வலை விரித்திரிப்பதைச் சொன்னது. அதை அலட்சியப்படுத்திய அந்தக் கூட்டத்தின் தலைவன் தானியங்களை தின்பதில் ஆர்வம் காட்டி வலையில் உட்கார்ந்து தானியங்களை தின்ன ஆரம்பித்தபோதுதான் தாங்கள் அனைவரும் வலையில் மாட்டிக் கொண்டோம் என உணர்ந்தது. இதில் யாரைச் சொல்லி என்ன பயன். விதி கெட்டு இருந்தால் இப்படிதான் நடக்கும்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பிறர் மனைவியை அபகரிப்பது குற்றம் என ஏன் இராவணனுக்குத் தெரியாமல் போயிற்று? பொன்மான் என ஒன்றிருக்க முடியாது என இராமனுக்கு ஏன் தெரியாமல் போயிற்று? சூதாட்டத்தில் பல அனர்த்தங்கள் உண்டு என யுதிஷ்டிரனுக்கு ஏன் தெரியாமல் போயிற்று? விபத்து நெருங்குகிற சமயத்தில் உணர்வு மங்கும். விதி செயல்படும். காலனின் பாசக்கயிற்றால் கட்டுண்டு விதியானது மதியைக் கவ்வுகின்றபோது, பெரியார்களின் அறிவு நினைத்திராத பல குறுகிய வழிகளில் செல்லும்.

வேடன் மிகவும் சாந்தோஷத்துடன் தடி எடுத்து வருவதைப் பார்த்த தலைமைப் புறா, நண்பர்களே நாம் மிகவும் ஆபத்தில் இருக்கின்றோம். நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து பறந்தால் வலையை அப்படியே ஆகாயத்தில் தூக்கிச் சென்று தப்பிக்க வழியிருக்கின்றது முதலில் அதை செய்ய தயாராகுங்கள்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- எப்படிப்பட்ட துன்பம் வந்தபோதிலும் யார் அறிவை இழக்காமல் இருக்கிறார்களோ அவர்கள் துன்பங்களை எளிதில் கடந்து இன்பம் அடைவர்.

ஒற்றுமையில்லையெனில் அனைவருக்கும் சாவுதான் தீர்ப்பு. ஒரே வயிறும் இரண்டு கழுத்துக்களும் உடைய பாருண்டப் பறவைகள் முறைப் பிசகிச் சாப்பிட்டு இறந்ததுபோல், ஒற்றுமையில்லாதவர் நாசமடைவர் என்றது. அது எப்படி என மற்ற புறாக்கள் கேட்டன.

பாருண்டப்பறவைகள்:விதி சதி செய்தால்: அந்த ஏரிக்கரையில் பறவைகளில் ஒர் இனமான பாருண்டப் பறவைகள் வாழ்ந்திருந்தன. அவைகளுக்கு ஒரு உடம்பும் இரு தலைகளும் இருந்தது. அதில் ஒரு பறவைக்கு ஓர் தலைக்கு அமிர்தம் கிடைத்தது. மற்ற தலை அதைப் பார்த்து அதில் பாதி எனக்கும் கொடு என்றது. அது மறுத்துவிடவே இரண்டாவது கழுத்துக்கு கோபம் வந்தது. எங்கோ அலைந்து திரிகையில் விஷத்தை சாப்பிடவே வயிறு ஒன்றானதால் அந்தப் பறவை இறந்தது. வயிறு ஒன்று என புரியாமல் தலைகள் அபிப்பிராயபேதம் கொண்டதால் இறந்தது. எனவே ஒற்றுமையே பலம் தரும் என்றேன்.

அதைப் புரிந்த புறாக்கள் தலைமைப் புறா சொல்லியவண்ணம் உடனே ஒற்றுமையாக பறக்க புறாக்கள் அனைத்தும் வலையுடன் பறப்பதை வாழ்நாளில் பார்த்த வேடன் சிறிது தூரம் துரத்திப் பார்த்து பயனில்லாமல் போகவே இப்படிப்பட்ட காட்சியை நான் பார்த்து இல்லை. புறாக்கள் ஒற்றுமையுடன் போகிறவரை வலையைக் கொண்டு போகமுடியும். வேற்றுமை ஏற்பட்டால் அவை என் வசமாகிவிடும் என்ற நினைப்பில் காட்டின் எல்லை வரைக்கும் சென்றான். புறாக்கள் தப்பியதை புரிந்து கொண்டான். புறக்கள் கிடைக்காததுடன் என் வழ்க்கைக்கு உதவி வந்த வலையும் அல்லவா போய்விட்டது என வருந்தி ஊர் திரும்பினான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- விதியின்றி ஒன்றும் நடக்காது. விதியிருந்தால் முயற்சியின்றியே எல்லாம் நடக்கும். விதியில்லையெனில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும். விதி சதி செய்தால் இருக்கிற செல்வத்தை வந்தசெல்வம் வாரிக்கொண்டு போய்விடும். மந்திரத்தாலான பொற்குவியல் மறைவதுபோல் மறைந்து போய்விடும்.

நம்பிக்கையே தலைமைக்கு ஆதாரம்: புறாக் கூட்டத்தின் தலைவனின் செயலால் தப்பிய புறாக்கள் எப்படி வலையிலிருந்து விடுபடப் போகிறது என்ற ஆவலுடன் காக்கையும் அவைகளைத் தொடர்ந்து பறந்தது. புறாக்களின் தலைவன், தன் நண்பன் எலி இருக்கும் இடத்திற்கு அனைத்து புறாக்களையும் பறக்கச் சொல்லியது. தன் நண்பனிடம் விபரம் சொல்லி வலையை நண்பனின் உதவியால் அறுத்து அனைத்து புறாக்களையும் விடுவிக்க வேண்டுகோள் விடுத்தது.

முதலில் தலைவனின் கட்டுகளை விடுவிக்கவந்த நண்பனிடம், என் கட்டை அவிழ்க்குமுன் என்னை நம்பி வந்து என்னுடன் எப்போது இருக்கும் அவைகளை முதலில் விடுவி.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தங்களின் தகுதிக்கு மேலாக மதிப்புக் கொடுத்து நடத்தும் தலைவனை வேலையாட்கள் என்றும் விட்டுப்போவதில்லை. தலைவனிடம் செல்வம் இல்லாதபோதும் மனம் வாடமல் அருகிலேயே இருப்பர். நம்பிக்கையே அதிகாரத்தின் அடிப்படை. அதை பெற்றுத்தான் தலைவர்கள் பொறுப்பு ஏற்கின்றனர். நம்பிக்கையில்லா ஆட்சி அதிகாரத்தினுடைய ஆட்சியாகும்.

என் கட்டை முதலில் அறுத்தபின் உனக்கு பல்வலி ஏற்படலாம். அல்லது அந்த வேடன் திரும்பி வரலாம். நான் மட்டும் தப்பினால் எனக்கு நரகம்தான் கிடைக்கும்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- விசுவாசமுள்ள வேலையாட்கள் கஷ்டப்படுவதைக் கண்டு திருப்தியடைபவன் இந்த உலகத்தில் துன்பத்தையும் பரலோகத்தில் நரகத்தையும் அடைவான். நல்லவற்றில் பங்கு தந்து கருனையுடன் நடக்கும் தலைவன் தன் பொறுப்பில் இறுதிவரை இருக்கும் தகுதியைப் பெறுகிறான்.

நீ சொல்லும் நீதியை நானும் அறிவேன். முதலில் அவர்களை விடுவித்தே உன்னை விடுவிக்கின்றேன் என செயலில் இறங்கியது. நண்பர்கள் நலம் விசாரித்து உள்ளத்தில் ஆனந்தம் பொங்க பேசிக்கொண்டிருந்தனர். தங்கள் கூட்டத்திற்கு இப்படி ஒரு ஆபத்து எப்படி ஏற்பட்டது என சொல்லியது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- எங்கிருந்து வரவேண்டுமென்று இருக்கின்றதோ அங்கிருந்துதான் வரும். யாரால் எப்படி ஆகவேண்டுமென்று இருக்கின்றதோ அப்படியே அவனால் நடக்கும். எப்பொழுது நடக்கவேண்டுமென்று இருக்கின்றாதோ அப்போதுதான் நடக்கும். எவ்வளவு காலத்துக்கு நடக்க வேண்டு மென்றிருக்கின்றதோ அவ்வளவு காலத்திற்கு நடந்தே தீரும். எங்கு நடக்க வேண்டு மென்று இருக்கின்றது அங்கேயே நடக்கும். நல்லது கெட்டது எல்லாம் விதிப்படி. நீலோத்பல மலரை பழிக்கும் ஒளி பொருந்திய ஆயிரங்கண்களுடன் உலகத்தை காண்பதாக மயில் நினைக்கலாம். மரண பயம் ஏற்பட்டால் அது பிறவிக் குருடன்போல் நடந்து கொள்ளும். பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து தனது இரையை கழுகு பார்த்து விடுகிறது. ஆனாலும் அது விதிவசமாகும்போது தனக்கு விரிக்கப்பட்ட வலையைக் காணமுடிவதில்லை. உயர்ந்த வானத்தில் பறந்து திரியும் பறவைகளுக்கும் விபத்துகள் ஏற்படுகிறது. ஆழமிக்க கடலின் அடியிலிருக்கின்ற மீன்களையும் பிடிக்கின்றனர். அறிவாளிகள் ஏழைகளாக இருக்கின்றனர். விதி கொடிய பலசாலிதான்.

அதைக்கேட்ட எலி சரி இனி ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள் என்றது. எல்லா புறாக்களும் தங்களது இருப்பிடதிற்கு சென்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சாதிக்க முடியாத கரியத்தையும் நண்பனைக்கொண்டு ஒருவன் சாதித்துவிட முடியும். எனவே நல்ல நண்பர்களைத் தேடிக்கொள். அவர்களை உன் சொத்தாக நினை.

புறாக்கள் அனைத்தும் வலையில் சிக்கியதையும், அவை ஒற்றுமையுடன் பறந்ததையும் நண்பனால் விடுதலை பெற்றதையும் பார்த்த கக்கை, தான் யாரையும் நம்பாத சந்தேகப்பிராணி என்றாலும் தனக்கும் ஓர் உற்ற நண்பன் வேண்டுமென நினைத்தது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தனக்கு வேண்டியதை தானே செய்துகொள்ளும் திறமை பெற்றவனாக இருந்தாலும் அவனுக்கு நண்பர்கள் இருப்பது அவசியம். குறைவுபடாத சமுத்திரம் எப்போதும் நிரம்பியிருந்தாலும் அது ஸ்வாதி நட்சத்திரத்திடமிருந்து மழையை எதிர்பார்க்கின்றதல்லவா?

பாசமும் பகைமையும்: கக்கை தனக்கு எலியை நண்பனாக்கிக்கொள்ள விரும்பியது. அதன் வளை அருகே சென்று நண்பனே என அழைத்தது. என்ன இது புதுக்குரலாயிருக்கின்றது. யார் நீங்கள் எனக் கேட்டுக்கொண்டு எலி வாயிலுக்கு வந்தது. நான் காக்கை. உங்களிடம் ஒரு முக்கியமான காரியம் பேசவேண்டும் என்றது. நீங்கள் புறாக்கூட்டத்தை விடுவித்ததைப் பார்த்தேன். நானும் எப்போதாவது சிக்கிக்கொள்ளலாம். அப்போது உங்கள் மூலம் எனக்கு விடுதலை கிடைக்கும். எனவே நீங்கள் எனக்கு நண்பனாக வேண்டும் என்றது.

எலி சொல்லியது, நீ என்னைத் தின்பவன். நான் உனக்குத்தீனி. எனவே நீ என் எதிரி. ஆகவே உன்மேல் நான் எப்படி நேசம் கொண்டு சிநேகம் பாரட்டமுடியும். பரஸ்பர அந்தஸ்தின் ஏற்றத் தாழ்வுகளைப் பார்க்காமல் நட்பு கொண்டால் அவர்களை மூடர்கள் என்பார்.

நீ என் நண்பன் ஆகாமல் போனால் நான் இங்கேயே இருந்து இறந்து போவேன். நீ என்னைப் பார்த்ததேயில்லை. பிறகு சண்டை எப்படி வரும். வீண்பேச்சு வேண்டாம் என்றது காக்கை.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- கொடிய பகைவர்களின் குணம் எவ்வளவு மாறுபட்டுப்போனாலும் அவர்களுடன் சேராதே. கொதிக்கிற நீரும் நெருப்பை அணைக்கும். பகை இரண்டு வகைப்படும், இயற்கைப்பகை, செயற்கைப்பகை. செயலால் ஏற்பட்டபகை சில செயல்களால் மறையும். இயல்பானபகை உயிர்போகிறவரை மறையாது. கீரியும் பாம்பும், மாமிசபட்சிணியும் சகபட்சிணியும், நீரும் நெருப்பும், தேவர்களும் அசுரர்களும், நாயும் பூனையும், சக்களத்திகளும், சிங்கமும் யானையும், வேடனும் மானும், காக்கையும் ஆந்தையும், அறிவாளியும் மூடனும், பதிவிரதையும் விபசாரியும், சாதுவும் துஷ்டனும் என்றென்றும் நிரந்திர பகையுடையவர்கள்.

நீ என் இனத்திற்கு இயற்கைப் பகையாவாய். தகுந்த பரிகாரம் செய்தால் செயற்பகை மறையும். உன்பகை அப்படியில்லை என்றது எலி.

பொய்நட்பு: நட்பாவதற்கு ஒரு காரணம் உண்டு. பகைமைக்கும் ஒரு காரணம் உண்டு, அறிவாளிகள் நட்பை தேடவேண்டும். பகைமையை தவிர்க்க வேண்டும் என்றது காக்கை.

உனக்கும் எனக்கும் மத்தியில் என்ன கொடுக்கல் வாங்கல் இருக்கின்றது. ஒரு நீதி கேள். நம்பிக்கை துரோகம் செய்த நண்பனை மறுமுறை நேசித்தால் கர்ப்பம் தரித்த கோவேறுக் கழுதைக்கு சாவு எப்படி நிச்சயமோ அப்படி அவனுக்கும் சாவு நிச்சயம். ஞானமில்லாத மிருகங்களுக்கு மேதாவிகளின் குணசாதனைகள் தெரியாமல் அவைகள் கொல்கின்றன.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- காரணத்தை உத்தேசித்து மிருகங்களும் பறவைகளும் நண்பர்களாகின்றன. உதவி செய்ததை உத்தேசித்து சாதாரணமான ஜனங்கள் நண்பர்களாகின்றனர். பயம் அல்லது பேராசையை உத்தேசித்து மூடர்கள் நண்பர்களாகின்றனர். நல்லவர்கள் பார்த்தமாத்திரம் நண்பர்கள் ஆவர். மண் குடம் விரைவில் உடையும். மறுபடியும் அதை உருப்பெறச் செய்வது முடியாதது. துஷ்ட நண்பன் மண் குடம். பொற்குடம் உடையாது உடைந்தாலும் சரிசெய்ய முடியும். நல்ல நண்பன் பொற்குடம். கரும்பின் நுனியிலிருந்து தொடங்கி சுவைத்தால் கனுவிற்கு கணு சுவை அதிகமாகி கொண்டுபோகும். அதுபோல நல்லவர் நட்பு வளர்ந்திருக்கும். மற்றவர் நட்பு தேய்ந்து போகும்.

நான் நல்லவன். நேர்மையானவன். சத்தியம் செய்து உறுதி படுத்துகின்றேன். என்னை நம்பு என்றது காக்கை.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- விரோதி சத்யம் செய்து கொடுத்திருந்தாலும் அவனை நம்பாதே. விருத்திரன் சத்தியம் செய்தபோதும் அவனை இந்திரன் கொன்றான். சின்னஞ்சிறு ஓட்டைவழி மெள்ள நீர் புகுந்து படகை கவிழ்த்துவிடும். மிக நுட்பமான பலவீனத்தைப் பயன்படுத்தி பகைவன் உள்ளே நுழைந்து நாசம் செய்து விடுவான்.

மெள்ள விரோதியின் வசதிகளைப் பார்த்து அவனை நம்புகிறவனும் அன்பில்லாத மனைவியை நம்புகிறவனும் சாவார்கள் என்றது எலி.

எலியின் பேச்சைக் கேட்க கேட்க காக்கைக்கு எப்படியும் அதன் நண்பனாகவேண்டும் என்ற ஆசை அதிகமானது. உண்மை நட்பு ஏழு வார்த்தைகளில் அடங்கும். நட்புக் கொள்ளும்படி உன்னை பலவந்தப்படுத்தினேன். என் கடைசி வார்த்தை இது கேள். உன் நட்பை தராவிட்டால் நான் இங்கேயே உயிர் விடுவேன் என்றது.

யார் பாக்கியசாலி: காக்கைக்கு அறிவில்லாமல் இல்லை. அதன் பேச்சிலிருந்தே அது தெரிகிறது. அவனுக்கு நட்பை தருவதில் பயமில்லை. நண்பனே, உன்னை நட்பாக ஏற்பதில் எனக்கு ஆட்சேபமில்லை. இருப்பினும் உன்னை நம்புகிற எனக்கு உன் சிநேகிதர்கள் தீங்கு செய்தால் என்ன செய்வது என்றது.

ஒரு உண்மைச் சிநேகிதனை கொல்வதின் மூலமாக இன்னொரு சிநேகிதனைத் தேடிக்கொள்கிறவனை நெல்லிருந்து பதரை விலகிவிடுவதுபோல் விலக்கிட வேண்டும் என காக்கை சொல்ல எலி வளையிலிருந்து வெளிவந்து நட்புடன் பேசிக்கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்குபின் காக்கை சொல்லியது, நண்பனே நீ வலைக்குள் சென்றுவிடு, நான் ஆகாரம் தேடிக்கொண்டு வருகிறேன் என்றது.

வழியில் புலி கொன்ற காட்டெருமையைக்கண்டு தான் உண்டுவிட்டு ஒரு நல்ல மாமிசத்துண்டை தன் நண்பன் எலிக்கு எடுத்துச் சென்று வளையின் வாயில் இருந்து நண்பனை அழைத்து மாமிசத்தை சாப்பிடச் சொல்லியது. எலியோ தன் நண்பன் காக்கைக்கு அரிசி தானியங்களைக் கொடுத்தது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தருவது, பெறுவது, மனம் விட்டுப் பேசுவது, கேட்பது, விருந்து உண்பது, விருந்து படைப்பது இவை ஆறும் நட்புக்கு அடையாளங்கள். நல்லுதவி செய்யாமல் நட்பு பிறவாது. ஈகை செய்வதை தேவர்களும் விரும்புகின்றனர். ஈகை உள்ளவரை நட்பு பாராட்டப்பெறும். ஈகை யொழித்தால் நட்பு நலியும். மடிவற்றிப்போனால் தாய்ப் பசுவை கன்றுகூட பிரிந்து விடும்.

எலியும், காக்கையும் மிகவும் நட்புடன் இருந்தன. காக்கையின் இறக்கைகளுக்கிடையே நிம்மதியாக தங்கும் அளவிற்கு எலிக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

ஒருநாள் காக்கை சொல்லியது, நண்பனே நான் இந்த இடத்தைவிட்டு வேறு இடத்திற்குப் போகப்போகிறேன். நகரத்தில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காக்கைகளுக்கு அன்னம் வைப்பதில்லை. பறவைகளைப் பிடிக்க வீட்டிற்கு வீடு வலைவைத்துள்ளனர். உன்னை விட்டு எங்கு செல்வது என நினைக்கும்போது துக்கமாக இருக்கின்றது என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- குடும்பத்தில் சாவு ஏற்படுவதையும், நண்பனுக்கு சங்கடம் ஏற்படுவதையும், மனைவி சோரம்போவதையும், நாடு நாசமவதையும் கணப் பெறாமலிருப்பவன் பாக்கியசாலி.

சரி எங்கு போவாய் என்றது எலி. தென் கோடியில் அடர்ந்த காட்டில் ஏரி இருக்கின்றது அங்கு ஓர் ஆமை என் நண்பன். அவன் எனக்கு மீன் துண்டுகளைத் தருவான். அங்கு சென்று நகைச்சுவையாகப் பேசி பொழுதைக் கழிக்க வேண்டியதுதான் என்றது காக்கை. அப்படியானல் நானும் உன்னோடு வருகிறேன் என்ற எலி எனக்கும் இங்கு துக்கம் ஏற்பட்டுள்ளது என்றது. அதைஅங்கு போனபின் விவரமாகச் சொல்கிறேன் என்றது எலி.

நான் ஆகயத்தில் பறந்து போகிறவன். நீ தரையில் ஓடுபவன். நீ எப்படி என்னோடு வரமுடியும்.

என் உயிரைக் காப்பதில் உனக்கு அக்கரையிருக்குமானால் நீ என்னை முதுகில் சுமந்து செல்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பறப்பதில் எட்டு வகையுண்டு. முழுவேகத்தில், பாதிவேகத்தில், மேல் நோக்கி, தொலைதூரம் உயரத்தில், வட்டத்தில், நேராக, கீழ்நோக்கி, மெதுவாகப் பறப்பது என்பது.

நான் எல்லாவிதங்களிலும் பறக்க கற்றுள்ளேன். எனவே உன்னை சௌகரியமாக கூட்டிச் செல்கிறேன். எலி காக்கையின் முதுகில் ஏறி அமர்ந்துகொள்ள காக்கை பறந்து தன் இலக்கை நோக்கிச் சென்றது. ஏரிக்கரையை அடைந்தது. அங்குள்ள மரப்பொந்தில் எலியை விட்டுவிட்டு வந்த காக்கை தன் நண்பனான ஆமையை அழைத்தது.

சமயசந்தர்பத்தை அறிந்து கொள்ளும் தன்மையுடைய ஆமைகள் காக்கை வருவதைப் பார்த்து யோரோ வருகின்றார்கள் என நினைத்து தண்ணீருக்கடியில் சென்றன. காக்கையின் குரல் பழகிய அதன் நண்ப ஆமைக்குகேட்க அது வெளியில் ஆவலுடன் வந்தது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நண்பனை நெஞ்சோடு சேர்த்துத் தழுவிக்கொள்வதில் உண்டாகிற குளுமைக்கு ஈடாக பச்சைக் கற்பூரம் கலந்த சந்தனமும் சில்லென்றிருக்கும் பனித்துளிகளும் குளுமை தருவதில்லை.

தன் பழைய நண்பன் காக்கையை அது அடையாளம் கண்டது. புளங்காதம் அடைந்தது. கண்களில் ஆனந்தம் தாண்டவமாடியது. உன்னை அடியாளம் காணாமல் உள்ளே போனதற்கு மன்னித்துவிடு என்று ஆலிங்கனம் செய்து கொண்டது. உள்ளும் புறமும் புளங்காதம் அடைந்து அவை இரண்டும் அன்று வரை நடந்த நிகழ்வுகளைப் பேசிக்கொண்டிருந்தது. எலியும் பொந்திலிருந்து வந்து அவைகளுடன் சேர்ந்தது.

ஆமைகேட்டது இது இயற்கையிலே உனக்கு தீனியாயிற்றே, அதை ஏன் சுமந்து வந்தாய் என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- மழைத்துளிகள், வானத்து நட்சத்திரங்கள், பூமியின் மணல் இவைகளை எண்ண முடியாது. அதைபோல் சிலரின் குணநலன்களை எண்ண முடியாது.

காக்கை சொன்னது இந்த எலி என் உயிர் நண்பன். இதன் உயரிய குணங்களை சொல்லி வர்ணிக்க முடியாது. அப்படிப்பட்ட இது மிகுந்த துக்கத்தில் இருந்தது. எலியைப் பார்த்து உன் துக்கத்தை இங்கு வந்தபின் சொல்வதாகக் கூறினாய், அதைச் சொல்லு என்றது.

எலியின் வருத்தம்: அந்த நகரத்தில் இருந்த சிவன் கோவில் அருகாமையில் உள்ள மடத்தில் வசித்து வந்த சந்நியாசி சாப்பிடும் வேளையில் பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு நகரத்தில் கிடைக்கிறதைப் பெற்றுக்கொண்டு வந்து விதிப்படி உண்டு மீதி உள்ளவற்றை வேலைக்காரர்களுக்கு என மூடி வைத்து சுவற்றின் மூலையில் தொங்கவிடுவான். நானும் என் பரிவாரங்களும் அதைத் தின்று பிழைத்து வந்தோம். நாட்கள் பல சென்றது. நாங்கள் சாப்பிடுவதைக் கண்ட சந்நியாசி சோற்று மூட்டையை இடம் மாற்றி வைத்தான். அவனின் எல்லா முயற்சியையும் நாங்கள் வீனாக்கியதால் எங்கள் மேல் அவன் மிகுந்த கோபம் கொண்டான்.

ஒருநாள் முனிவர் ஒருவர் தீர்த்த யாத்திரை போகிற வழியில் அங்கு வந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் நினைவுகளை சொல்லி கருத்துக்கள் பரிமாறிக்கொண்டனர். மடத்து சந்நியாசியின் நினைவெல்லாம் எலிகளாகிய எங்களைப்பற்றி இருந்ததால், கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு பாத்திரத்தை அடிக்கடி தட்டிக் கொண்டே இருப்பதைப் பார்த்த விருந்தினருக்கு கோபம் வந்தது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- வாருங்கள். வாருங்கள். என அன்புடன் வரவேற்று உட்காருங்கள், சௌக்கியமா, உங்களைப் பார்த்து எத்தனை நாட்கள் ஆயிற்று, என்ன விஷயம் இவ்வளவு தூரம், நீங்கள் மிகவும் இளைத்துப் போய்விட்டீர்கள். உங்களைப் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, சரி நான் பேசிக்கொண்டேயிருக்கின்றேன், என்ன சாப்பிடுகிறீகள் என அன்பும், பரிவும், ஆசையும், அதரவும் கலந்த வார்த்தைகளே வந்த விருந்தினர்களை மனம் மகிழ்விக்கும். விருந்தாளி வந்ததும் மேலும் கீழும் பார்கிறவனுடைய வீட்டிற்கு யார் விருந்துண்ண போவார்கள். போகிறவன் கொம்பில்லா மாடுதான். அன்பு கனிந்த வரவேற்பு இல்லாத வீட்டிற்கும் இனிய செற்களுடன் வரவேற்பு இல்லாதவீட்டிற்கும், நல்லதையும் கெட்டதையும் மனம்விட்டுப்பேசாத வீட்டிற்கும் போகாதே!

சந்நியாசியே மடத்திலிருப்பதால் மமதையில் நீ நமது பழைய நட்பை மறந்துவிட்டாய். உன் நினைவெல்லாம் எங்கோ இருக்கின்றது. நீ மனம் விட்டு பேசவில்லை. இரவு வேளையாயிருந்தாலும் நான் வேறு இடம் செல்கின்றேன் என்றார். நீ மடத்திலிருந்து வந்தாலும் நரகத்தில்தான் இடம் தேடிக்கொண்டிருக்கின்றாய். அப்படி விருப்பமானால் ஒரு வருடத்திற்கு புரோகிதனாக இரு, நரகத்திற்குச் விரைவில் சென்றுவிடலாம். இதைப்பற்றி வருந்தாமல் கர்வத்துடன் இருக்கின்றாய் என்றார் பதிய சந்நியாசி.

இதைக்கேட்ட மடத்து சந்நியாசி, அப்படிச் சொல்லாதீர்கள், உங்களைவிட நெருங்கிய சந்நியாசி வேறுயாருமில்லை. இங்கு ஒரு துஷ்ட எலியின் தொந்தரவுதான் என்னைத் தங்களின் பேச்சை சரியாக கவனிக்காமல் செய்து விட்டது. அந்த எலி தொந்திரவால் வேலைக்காரர்களுக்கு உணவு இல்லாமல் போகிறது. எனவே அவர்கள் வேலை செய்ய மறுக்கின்றனர். இதுவே என் செயலுக்கான காரணம் என்றார்.

சரி, அந்த எலியின் வளை எங்கிருக்கின்றது எனக்கண்டுபிடித்தாயா?

இல்லை சுவாமி. தானிய குவியலுக்குமேல்தான் இருக்கவேண்டும். அதன் வாசனையை முகர்ந்து எலி துள்ளிக்குதிக்கிறது.

பணத்தின் வாடை பட்டால் சரி, அது மனிதனின் தேசுவைத் தூண்டிவிடப் போதுமானது. தியாக புத்தியும் தர்ம சிந்தனையுமுள்ள பணத்தை அணுபவிக்கவும் செய்கிறான். காரணமில்லாமல் சசிக்குத்தாய் எள்ளுக்குப்பதிலாக தேய்க்காத எள்ளை பெற்றதற்கு காரணம் ஏதாவது இருக்கத்தான் செய்யும் என்றார்.

அது எப்படி என்றார் மடத்து சந்நியாசி.

சசிக்குத்தாயின் பேரம்: ஒரு ஊரில் ஒரு பிராம்மணனிடம் தங்குவதற்கு இடம் கேட்டேன். அவன் வீட்டில் கொடுத்த இடத்தில் அந்த மழைக்காலத்தில் எனது அறச் செயல்களைக் கவனித்து வந்தேன். ஒருநாள் விடியற்காலையில் நான் விழித்தெழும்போது பிராம்மணனும் அவன் மனைவியும் தர்க்கம் புரிந்து கொண்டிருந்தனர். பிராம்மணன் சொன்னான், நாளை தட்சினாயன சங்கராந்தி வருகின்றது. நான் பக்கத்திலிருக்கும் கிராமத்திற்குப் போய் யாசித்து வருவதற்குள் நீ சூரியனை திருப்தி செய்யும்படி ஒரு பிராம்மணனுக்கு விருந்துவை என்றான்.

மனைவி கோபத்துடன் திட்ட ஆரம்பித்தாள். நீ தரித்திரம் பிடித்தவன். உனக்கு யார் அன்னம் இடுவார்கள். உன்னை கைபிடித்த நாள் முதல் இன்றுவரை நல்ல விஷேச உணவு சாப்பிட்டதில்லை. பிறகு எப்படி கைக்கும் காலுக்கும் கழுத்துக்கும் நகை போட முடியும்.

இதைக் கேட்ட பிராம்மணன் பயந்து நடுங்கினான். ஈனசுரத்தில் அன்பே நீ அப்படியெல்லாம் பேசக்கூடாது என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- இருப்பது ஒரு கவளம் என்றாலும் அதில் பாதியை தானம் செய். ஆசை நிறைவு கொள்ளும் அளவிற்கு எப்பொழுதாவது யாருக்காவது செல்வம் கிடைத்திருக்கிறதா. செல்வமிக்கவர்கள் அள்ளி வழங்குவதில் என்ன பயனைப் பெறுகின்றார்களோ அதே பயனைத் தன்னால் இயன்றதைக் கொடுக்கிற ஏழையும் அடைவான். நீரை மேகம் தருகிறது. அதை எல்லோரும் விரும்பி வரவேற்கிறார்கள். கைகளை நீட்டுவதுபோல் சூரிய கிரணங்கள் வீசினாலும் அதன் நண்பன்கூட ஏறெடுத்துப் பார்க்க முடியாது.

மேலும் சொன்னான், ஏழையாயிருந்தாலும் தக்க சமயத்தில் தகுந்தவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். உரியகாலம், கொடுக்கத்தக்கவன், சிறந்த சிரத்தை, சக்திக்கேற்றகொடை இவற்றை அறிந்து விவேகிகள் அளிக்கும் தானம் பன்மடங்காகப் பெருகும். பேராசை கொள்ளக்கூடாது. கொஞ்சம் ஆசையும் இருக்கவேண்டும். பேராசைகொண்ட நரிக்கு உச்சிக்குடுமி உண்டாயிற்று எனச் சொல்வார்கள் என்றான். அது எப்படி என்றாள் மனைவி சசிக்குத்தாய்.

பேராசை பெருநஷ்டம்: அந்த ஊரில் ஒரு வேடன் இருந்தான். வேட்டையாடி அவன் பாவத்தைச் சேர்த்திருந்தான். ஒருநாள் வேட்டையாடப் புறப்பட்டான். வழியில் ஒரு காட்டுப் பன்றியைக் கண்டதும் வில்லில் அம்பு தொடுத்து காதுவரை நாணை இழுத்து, எனது வில்லையும் அம்பையும் பார்த்தும் பயமில்லாமல் அது என்னை நெருங்கி வருகின்றது. யமன் என்னருகில் அதை அனுப்பிவைக்கிறான் எனநினைத்து அம்பை எறிந்தான். அதனால் கோபமடைந்த பன்றி அவன் வயிற்றை கிழித்தது. வேடன் இறந்தான். அவன் அம்பின் வேதனையால் பன்றியும் இறந்தது.

அங்கு சுற்றித்திருந்த நரி பன்றியும் வேடனும் செத்துக்கிடப்பதைப் பார்த்து சந்தோஷம் அடைந்தது. விதி என்மேல் கருணை கொண்டிருக்கின்றது என நினைத்தது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- முற்பிறப்பின் வினைகளின் நன்மை, தீமை பயன்கள் மறுபிறப்பில் நமது முயற்சி எதுவுமில்லாமல் நம்மிடம் விதியாக வந்து சேரும். எந்த இடத்தில் எந்த நேரத்தில் எந்த வயதில் செய்திருந்தாலும் நல்ல அல்லது தீ வினைகள் அதற்குரியப் பலனைத் தரும்.

இந்த உணவைக் கொண்டு நீண்ட நாள் காலம் தள்ளுவேன். முதலில் வில் நுனியில் நாண் நரம்பு இருக்கின்றதே அதைச் சாப்பிடலாம் என நினைத்தது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சுயமாகச் சம்பாதித்த செல்வமேயானாலும், அறிவாளிகள் அமுதத்தை உண்பதுபோல் மெள்ள மெள்ளத்தான் அனுபவிக்க வேண்டும். ஒரே வாயில் விழுங்கக்கூடாது.

தான் நினைத்தபடியே வில் நுணியை வாயில் கவ்விக் கொண்டு அதில் தொங்கிய நாண் நரம்பை தின்னத் தொடங்கியதும் நாண் அறுபடவே இழுத்துக் கட்டப்பட்டிருந்த வில்லின் நுணி நரியின் மேல்வாய்ப் புறத்தை துளைத்துக் கொண்டு தலைக்குமேல் குடுமிபோல் வெளிவந்தது. அதிகம் ஆசைப்பட்ட நரி வேதனையுடன் உயிர் விட்டது.

அதனால்தான்,’பேராசைகொண்ட நரிக்கு உச்சிக்குடுமி உண்டாயிற்று எனச் சொல்வார்கள் என்றேன். அன்பே.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- எத்தனை வயது, என்ன தலைவிதி, எவ்வளவு சொத்து, எத்தனைக் கல்வியறிவு, எங்கே சாவு என்ற இந்த ஐந்தும் ஒருவன் கர்பத்திலிருக்கும்போதே நிர்ணயக்கப்டுகின்றன.

இந்த போதனைகளைக் கேட்ட அவன் மனைவி சசிக்குத்தாய்.சரி, வீட்டில் எள் இருக்கின்றது. அதைப் பொடி செய்து பிராம்மணனுக்கு உணவளிக்கின்றேன் என்றாள். பிராம்மணன் பக்கத்து கிராமத்திற்குச் சென்றான். சசிக்குத்தாய் எள்ளை நீரில் ஊறவைத்து, தோலை நீக்கி, வெய்யிலில் காயப்போட்டு, வீட்டு வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள். அப்போது அங்கு வந்த நாய் அந்த எள்ளின்மீது சிறுநீர் கழித்துச் சென்றது. அதைப் பார்த்த சசிக்குத்தாய்., விதி எதிரானால் எத்தனை சாதுரியமாக செயல் படுகிறது என நினைத்து இந்த எள் சாப்பிடக்கூடாததாக ஆகிவிட்டதே. இந்த எள்ளை அருகில் கொடுத்துவிட்டு தோல் நீக்காத எள்ளை வாங்கி வரச் சென்றாள்.

பல இடங்களில் சுற்றிக் கடைசியில் நான் பிச்சைக்காக நுழைந்த அதே வீட்டுப் பெண்ணிடம் பேரம்பேசி தோல் நீக்காத எள்ளைப் பெற்றுச் சென்றாள். அந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் வந்து இது என்ன என்றான். அவன் மனைவி தன் சாதுரிய வியாபாரத்தைச் சொன்னாள். அவன் அப்பெண்யார் என்றான். அவன் மகன், அப்பெண்னின் பெயர் சசிக்குத்தாய். என்றான். அவன் சொன்னான், அவள் மிகவும் கெட்டிக்காரி. வியாபாரத்தில் தேர்ச்சி பெற்றவள். காரணமில்லாமல் சசிக்குத்தாய் எள்ளுக்குப் பதிலாக எள் பேரம் பேசமாட்டாள். அதற்கு ஏதாவது காரணம் இருக்கத்தான் செய்யும். எனவே இதை தூக்கி எறிந்துவிடு என்றான். இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, தானியக் குவியலின் வாசனையால் தான் இப்படி எலி குதித்து கூட்டமாக வருகிறது போலும். எனவே தோண்டுவதற்கு ஏதாவது கடப்பாரை இருந்தால் கொண்டுவரச் சொன்னார். நாளைவிடியற்காலை நீயும் நானும் எழுந்திருந்து நிலத்தில் பதிந்திருக்கும் எலியின் காலடியைப் பின்பற்றிச் சென்று அதன் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கலாம் என்றார். அந்த புதிய சந்நியாசியின் சொற்களில் வேறு யதோ அர்த்தம் உள்ளது. அவர் என் இருப்பிடத்தைக் கட்டாயம் கண்டு பிடுத்துவிடுவார் என்பதை உணர்ந்ததும் நான் பயந்து விட்டேன்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- கையில் தூக்கிப்பார்த்து அதன் எடையை கூறும் திறமைசாலிகள் உண்டு. ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்தில் அளந்துவிடும் விவேகிகளும் உண்டு. முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைகளின் பயனாக வந்து வாய்க்கின்ற குணங்கள் பிறவியிலிருந்தே வெளிப்படத் தொடங்கும். மயில் குஞ்சிற்கு தோகை வளராமல் இருந்தாலும் அது நடப்பதை வைத்து அது மயில்குஞ்சு என அடையாளம் காணமுடியும்.

என் நண்பர்களை எப்போதும் செல்லும்வழியில் போகாமல் வேறுவழியாக அழைத்துச் சென்றேன். அந்த வழியில் வந்த பூனை எங்கள்மேல் பாய்ந்து பலரைக் கடித்து குதறியது. உயிர் தப்பிய எலிகள் நான் சரியான வழியில் கூட்டிச் செல்லவில்லை எனக்கூறி என்னைத்திட்டியபடி பழைய வளைக்குள் ஓடிப்போய் புகுந்து கொண்டன.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- வளையின் கட்டு தளர அதிலிருந்து விடுபட்ட மான் ஓடியது. காட்டுத்தீயையும் தாண்டி ஓடி ஓர் கிணற்றுக்குள் விழுந்தது. விதி கெட்டுப்போனால் அதற்கு எதிரான முயற்சி பலன் தராது.

நான் ஒருவன் மட்டும் வேறிடம் சென்றேன். ரத்தக்கரைபடிந்த அடையாளத்தைப் பின்பற்றி வந்த சந்நியாசி எனது இருப்பிடத்தைத் தோண்டி எனது தானியக் குவியலைக் கண்டு அதைக் கைப்பற்றியும், சில எலிகளை கொன்றும் சென்று விட்டார். துரஷ்டம் பிடித்த மற்ற எலிகள். நான் அங்கு மீண்டும் சென்றபோது நடந்ததைப் பார்த்து கோபமடைந்து மற்ற நண்பர்களுடன் மடாலயத்திற்குள் சென்றேன். நான் வந்திருப்பதைக் கண்டு கொண்ட சந்நியாசி ஒரு தடியை எடுத்து பிச்சைப் பாத்திரத்தை தட்டிக்கொண்டே மற்ற சந்நியாசியிடம் எலிகள் மீண்டும் வந்திருக்கின்றது எனச் சொன்னார்.

தோழா! அதன் சொத்தான தானியக்குவியல் பரிபோனதும் அதன் உற்சாகமும் துள்ளிக்குதிக்கும் சக்தியும் குறைந்துவிடும். இதுவே எல்லா ஜீவன்களுக்கும் பொதுவானது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- ஒருவன் எப்போதும் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தாலும், பிறரை அலட்சியம் செய்து பேசினாலும், அதிகாரம் செய்தாலும் அது அவனிடம் உள்ள பணத்தினால் வந்த தெம்புதான். அது பொய்யானது. பணம் நீங்கினால் அவன் பிறவி சக்திகூட இருக்காது. விஷப்பல் பிடுங்கப்பட்ட பாம்பு, மதநீர் அற்ற யானை, பணம் இல்லாத மனிதன் எல்லாம் பெயரளவிற்குத்தான் பாம்பு, யானை, மனிதன் ஆக இருப்பர்.

புதிய சந்நியாசி இவ்வாறு கூறியதும் எனக்கு ஆத்திரம் வந்தது. எப்படியும் பிச்சைப் பாத்திரத்தினுள் சென்றுவிடலாம் என எம்பிக் குதித்தும் முடியவில்லை. அந்த எதிரி சொன்ன சொல்லாக இருந்தாலும் அது உண்மைதான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- அற்ப புத்தியுள்ளவனின் சொத்து பரிபோனால் அவன் செய்யும் முயற்சிகள் கோடைக்காலத்தில் சிற்றாறு வறண்டு விடுவது போல் வறட்சியடையும். காட்டில் பயிராகும் எள்ளும் வால் கோதுமையும் நிஜ எள், கோதுமை போலன்றி உபயோகமின்றி பெயரளவிற்கு இருப்பதைப்போல் பணமில்லா மனிதனும் உபயோகமில்லாதவனாய் பெயரளவில் இருப்பான். ஏழையிடம் நற்குணங்கள் இருந்தாலும் அவை பிரகாசிப்பதில்லை. உலகவாழ்விற்கு சூரிய வெளிச்சம் அவசியமானதுபோல் நற்குணங்கள் விளங்குவதற்கு பணம் அவசியம். செல்வம் கொழித்து சுக போகத்தில் வாழ்ந்தவன் தன் செல்வத்தை இழந்து துயரம் அனுபவிப்பதுபோல் பிறவி ஏழை துயரம் அனுபவிப்பதில்லை. சூரியன் எதிரே நின்று பகலில் எவ்வளவு முயற்சித்தாலும் சூரியனின் வெளிச்சத்தை பார்க்க முடிவதில்லை. இரவிலே அதை சந்திரன் என்ற திரை மறைத்துவிடும்.

நான் பாதுகாப்பாக வைத்திருந்த தானியங்கள் எல்லாம் எதிரியின் பாதுகாப்பில் இருகின்றது. ஒன்றும் செய்ய முடியா நிலையில் என் வளைக்கு திரும்பி வந்தேன். என் இயலாமை கண்டு எல்லோரும் கேலி பேசினர். அவனைப் பின்பற்றினால் பூனைக்கு பலியாகிவிடுவோம். நம்மை பாதுகாக்க முடியாமல் விபத்துகள் கொண்டுவரும் இவனைவிட்டு நாம் விலகிடவேண்டும் என பேசிக்கொண்டன. தானியக் குவியல் என்ற சொத்து இல்லா என் நிலை இவ்வளவு மோசமாகி விட்டதே! வறுமை என்பது எத்தனைக் கேவலமானது என நினைத்தேன்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- வறியவனின் சொற்களை அவனைச் சார்ந்த உறவினர்கூட மதிப்பதில்லை. மானம் கப்பலேறிவிடும். நற்குணம் என்ற சந்திரன் ஒளியிழந்து மங்கும். பின் மறைந்தும் போகும். நண்பர்கள் விலகுவர். துயரங்கள் பன்மடங்காகப் பெருகும். மற்றவர் பிழைகளுக்கு இவன் பலியாவான். வறுமைக்கு ஆளாகி விதி சோதிக்க ஆரம்பித்தால் நண்பர்கள் பகைவர்களாவர். அன்பு வெறுப்பாக மாறும். பிள்ளையில்லா வீடு பாழ். நட்பில்லா நெஞ்சம் பாழ். முட்டாளுக்கு எட்டு திசையும் சூன்யம். ஏழைக்கு எங்கும் சூன்யம். ஒருவனின் விறுப்பு உணர்வுகள் மாறவில்லை. பெயர் மாறவில்லை. அறிவும் சொல்லும் செயலும் மாறவில்லை. முன்பிருந்த அதே மனிதன்தான். ஆனால் அவனிடம் முன்பிருந்த பணமில்லை. அதனால் அவன் மாறுபட்டு காணப்படுகிறான். என்ன விந்தை!

இதுதான் விதி என்றால் பணத்தைப் பற்றி என்ன? என் சொத்தைப் பறி கொடுத்த நான் இனி காட்டிற்குச் செல்வதேமேல்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- மானங்காத்தால் வீட்டில் இரு. மானமிழந்து வீட்டில் இராதே! தேவவிமானம் வந்தாலும் விலகிச்செல். தோல்வி விபத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வந்தபோதிலும் தன்மானமுள்ளவன் நெஞ்சு நிமிர்ந்து நடப்பான். தன்மானத்தைவிட்டு ஒருபோதும் பணத்தின் முன்னே தலைவணங்குவானில்லை.

மேலும் பிச்சை எடுப்பது சாவுக்குச் சமானம். காட்டுத்தீயால் எரிக்கப்பட்டு பூச்சிகளால் அரிக்கப்பட்டு, பட்டையுரிந்து பட்டுப் போய் மண்ணின்மேல் நிற்கும் மரத்தின் நிலை பிச்சைக்காரனின் நிலையைவிட எவ்வளவோமேல்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- இரந்துண்ணும் நிலை துரதிர்ஷ்டத்தின் கோவில். மனத்தைப் பறிக்கும் திருடன். கண்ணீரின் புகலிடம். பிறரின் ஏளனத்திற்கு இருப்பிடம். பயத்தின் களஞ்சியம். சந்தேகத்தின் விளைநிலம். ஆபத்தின் உறைவிடம். மானமுள்ளவர்களின் தேசுவை அழிக்கும் காலன். ஒருவகையான இறப்பு. தன்மானமுள்ளவனுக்கு அது நரகம். பிச்சைக்காரன் மானமழிவான். மானம்போய் கர்வத்தை விடுவான். கர்வம் போய் சிறுமையடைவான். சிறுமையினால் வேதனையும் அதனால் துயரமும் அடைவான். துயரம் அறிவை இழக்கவைக்கும். அறிவை இழந்தால் முடிவில் நாசமடைவான். வறுமை வாழ்க்கையின் எல்லா விபத்துக்களுக்கும் ஆணிவேர்.

பிச்சையிடுங்கள் என்று சொல்வதைவிட காடுமலைகளில் துஷ்ட மிருகங்களுடன் வசிப்பது மேலானது. நீ வறிவன் ஆனால் உடலை தீக்கிரையாக்கினாலும் உதவி செய்ய விரும்பாத வஞ்சகனிடம் கையேந்தி நிற்பது தகாது என நினைத்தேன்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சினந்து சீறும் பாம்பின் வாயில் கைவை! விஷத்தைக் குடி! யமனின் இல்லத்தில் படுத்துறங்கு! இமயமலையிலிருந்து உருண்டு சுக்கு நூறாகு! ஆனால் துரோகியிடம் பெற்ற பணத்தினால் சுகபோகத்தை அனுபவிக்க எண்ணாதே!

இந்நிலையில்நான் என்ன செய்வது? திருடிப் பிழைப்பது மகாபாதகமாயிற்றே! பிறர் உடைமையை தனதாகிக்கொள்வது பாவமாயிற்றே!

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பொய் பேசுவதைவிட மௌனியாக இருப்பது சிறப்பு. பிறர் மனைவியரைக் கூடுவதைவிட வீரியமற்றவனாக இருப்பதே சிறப்பு. வம்பு தும்புகளில் தலையிடாமல் விலகியிருத்தல் சிறப்பு. நோயாளி, நாடுகடத்தப்பட்டவன், பிறர் உணவைப் சாப்பிடுபவன் இவர்கள் உயிர்வாழ்வது மரணத்திற்கு இனையானது. அவர்கள் சாவதேமேல். அது சாந்தி தரும்.

பிறர் அளிக்கும் தானத்தைப் பெற்று உயிர்வாழ்வதும் மகாபாதகம். எனவே எப்படியாயினும் என் சொத்துக்களை நான் திரும்பப் பெற வேண்டும். அந்த முயற்சியில் நான் இறந்தாலும் பரவாயில்லை.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தன் உடமை பறிபோவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் கோழைகள் தர்பணம் செய்யும் நீரை மூதாதையர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. விதிப்படி அவனவனுக்கு உரியது அவனவனுக்கு கிடைக்கும். தேவர்களாலும் அதைப் பெறுவதை தடுக்க முடியாது. ஒருவனுக்குரிய பொருளை வேறுயாரும் எடுத்துக் கொள்ளமுடியாது.

என் சொத்துக்களை நான் திரும்பப் பெற நான் மீண்டும் மடாலயம் சென்றேன். என் சொத்தான தானியக் குவியல் அடங்கிய மூட்டையை கடித்தேன். தானியங்கள் கீழே சிதற சந்நியாசி தடியால் என் மண்டையில் அடிக்க என் அதிர்ஷ்டம் உயிர் பிழைத்து ஒடி வந்தேன். எனக்கு விதியில்லை. விதிப்படி அவனவனுக்கு உரியது அவனவனுக்கு கிடைக்கும். என்ற எலியைப் பார்த்து அது எப்படி என்றன காக்கையும் ஆமையும்.

விதிப்படி உரியதை அடைந்தே தீருவான்! அந்த ஊரில் இருந்த வியாபாரியின் மகன் நூறு ரூபாய் கொடுத்து ஒரு புத்தகம் வாங்கினான். அதில் “விதிப்படி உரிய பொருளை ஒருவன் அடைந்தே தீருவான்” என்று ஒரு வாக்கியம் இருந்தது. அதைப் பார்த்த தந்தை, மடையா இந்த ஒரு வாக்கியத்திற்காகவா நூறு ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கினாய். இப்படிபட்ட புத்தியுடன் இருந்தால் எப்படி பணம் சம்பாதிக்கப்போகிறாய். இன்று முதல் நீ வீட்டில் காலடி வைக்காதே என வீட்டைவிட்டு வெளியில் அனுப்பினான்.

துயரத்துடன் வீட்டைவிட்டு வெளியில்வந்த மகன் பக்கத்து தேசத்திற்குச் சென்றான்.வழியில் அவனைப் பார்த்து பேசியவர்கள் எதைக் கேட்டாலும், ”விதிப்படி உரியதை ஒருவன் அடைந்தே தீருவான்” என்ற பதிலை மட்டும் சொன்னான். எனவே ‘விதித்த பெருமாள்’ எனப் பெயர் பெற்று பிரசித்தமடைந்தான்.

அந்த ஊர்த்தலைவரின் மகள் தன் தோழியுடன் நகரை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கு அவள் ஒர் அழகான வாலிபனைக்கண்டதும் மோகம் கொண்டு தன் தோழியின்மூலம் அவனுக்குத் தூதுவிட்டாள். தோழி அந்த வாலிபனைச் சந்தித்து சேதியைச் சொன்னாள். நான் அவசியம் வரவேண்டுமென்றால் மாளிகையின் உள்ளேவர ஓர் வழிசொல் என்றான். தோழி இரவில் மாளிகையின் உப்பரிகையிலிருந்து ஓர் கயிற்றுஏணி தொங்கவிடுகிறேன். நீங்கள் அதைப் பிடித்துக் கொண்டு மேலே வாருங்கள் எனக்கூறிச் சென்று விபரத்தை தன் தோழியிடம் கூறினாள்.

இரவு வந்தது. அந்த அழகிய வாலிபன் சிந்தனையில் ஆழ்ந்தான். கெட்டபெயரும், கொடியகதியையும் உண்டாக்கும் செய்கைகளை செய்யாமலிருப்பதே நல்லது என முடிவு செய்தான். எனவே தலைவரின் மகளின் மாளிகைப் பக்கம் போகவே இல்லை.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- குருவின் மகளையும், நண்பனின் மனைவியையும், அரசுசேவர்களின் மனைவியையும் சேர்கிறவன் பிரம்மஹத்தி தோஷம் உடையவன் ஆவான்.

ஆனால் விதித்த பெருமாள் அந்த பக்கம் வந்தவன் மாளிகையின் உப்பரிகையிலிருந்து கயிற்று ஏணி தொங்குவதை ஆவலுடன் பார்த்து துணிச்சலுடன் மேலே ஏறிச்சென்றான். எதிர்பார்த்த அழகன் இவனே என அவனை உபசரித்து ஸ்நானம் செய்து நல்ல உடை கொடுத்து உணவளித்து அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டாள். அவனுடைய ஸ்பரிசத்தால் அவள் உடலெல்லாம் புளங்காதித்து சாந்தோஷமடைந்தாள். உங்களைப் பார்த்ததும் ஆசைகொண்டு என்னையும் உங்களுக்கு அர்ப்பணித்து விட்டேன் இன்னும் நீங்கள் ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள் என்றாள். அதற்கு அவன், ”விதிப்படி உரியதை ஒருவன் அடைந்தே தீருவான்” என்றான். இந்தச்சொற்களால் ஸ்தம்பித்த தலைவரின் மகள் சீக்கிரம் சீக்கிரமாக அவனை கயிற்றின் வழி கீழே இறக்கிவிட்டாள். அருகிலிருந்த ஒர் பாழடைந்த கோவிலை அடைந்து அங்கு தூங்கினான்.

ஓர் விபச்சாரியுடன் சேர நினைத்த அரசுசேவகன் ஒருவன் அங்கு வந்தபோது விதித்தபெருமாளைப் பார்த்து நீ யார் எனக்கேட்க, ”விதிப்படி உரியதை ஒருவன் அடைந்தே தீருவான்” என்றான். அரசுசேவகன், இந்த கோவிலில் யாரும் தங்குவது இல்லை. நீ போய் என் அறையில் படுத்துக்கொள் என அருகில் உள்ள தனது வீட்டைக்காண்பிக்க, உள்ளே சென்ற விதித்த பெருமாள் தவறுதலாக அரசுசேவகனின் மூத்தமகள் கட்டில் அருகே சென்றான். அரசுசேவகனின் மூத்தமகள் தான் காதல் வயப்பட்ட வாலிபனை தன் அறைக்கு வரச் சொல்லிவிட்டு அவன் வருகைக்காக காத்திருக்கும்போது விதித்தபெருமாள் வர  அவனைத் தன் காதலன் எனநினைத்து அவனுடன் படுத்து உறவு கொண்டாள். மிகுந்த சந்தோஷத்தினால் வதனம் மலர்ச்சியுற்றது. ஒன்றும் பேசாமலே இருக்கின்றீர்களே! ஏதாவது பேசக்கூடாதா? என்றாள். ”விதிப்படி உரியதை ஒருவன் அடைந்தே தீருவான்” என்றான். இந்தச் சொற்களைக் கேட்டதும், தான் கவனமின்றி காரியங்களைச் செய்தால் பலன் இவ்வாறுதான் இருக்கும் என நினைத்து துயரத்துடன் அவனை வெளியில் அனுப்பினாள்.

வெளியில் வந்த விதித்த பெருமாள் கடைத்தெருவில் நடந்துசென்று கொண்டிருக்கும்போது பக்கத்து ஊரைச்சேர்ந்த மணமகன் வாத்தியகோஷ்டியுடன் வந்து கொண்டிருந்தான். அந்த ஊர்வலத்தில் கலந்து அவர்களுடன் சென்று கொண்டிருந்தான். கல்யாண முகூர்த்தவேளை நெருங்கிவிட்டதால் மணமகள் தன் தந்தையின் வீட்டுவாயிலில் தோழிகளுடன் நின்றிருந்தாள். அந்த சமயத்தில் அங்கு வந்த யானை மதம் பிடித்து பாகனைக் கொன்றுவிட்டு கட்டுக்கடங்காமல் சுற்றித்திரிய மக்கள் பரபரப்படைந்து உயிருக்குப் பயந்து அங்குமிங்கும் ஓடினர். கல்யாண ஊர்வலம் சிதறியது. இந்த நெருக்கடியான சமயத்தில் என்ன செய்வது என அறியாமல் திக்பிரமையுடன் நின்றிருந்த வியாபாரியின் மகளின் கையை ஆதரவுடன் பிடித்து, நீ பயப்படாதே, உன்னை நான் காப்பாற்றுவேன் என சொல்லிய விதித்த பெருமாள், அவர்களை நோக்கிவந்த யானையைப் பார்த்து கடுமையாக சப்தமிட்டு அதட்டினான். யானையும் திரும்பிச் சென்றது.

யானை சென்றதும் ஒவ்வொருவராக அங்கு வந்தனர். மணப்பெண் வேறொரு ஆணின் கையைப் பிடித்திருப்பதைப் பார்த்த மணமகன் தன் மாமாவைப் பார்த்து இது சரியில்லை எனக் கூறினான். உங்களைப் போலவே நானும் ஒடி ஒளிந்துவிட்டு இப்போதுதான் வருகிறேன் எனக்கு ஒன்றும் தெரியாது என்றார் பெண்ணின் தந்தை. அப்போது நீங்கள் ஓடி ஒளிந்தபோது இவர்தான் என்னைக் காப்பாற்றினார். இந்த ஜென்மத்தில் இவர் கையைத் தவிர வேறுகையை நான் தொடமாட்டேன் என்றாள். இந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவவும், பொழுது விடிவதற்கும் சரியாக இருக்க அந்தவீட்டைச் சுற்றி ஊர் கூடியது.

ஊர் மக்கள் ஒன்று கூடி நிற்பது அறிந்த ஊர்த்தலைவன் அங்கு வந்தான். தலைவனின் மகளும், அரசசேவகனின் மகளும் அங்கு வந்தனர். விதித்தப்பெருமாளை நோக்கி என்ன நடந்தது என பயமின்றிச் சொல் என்றார் ஊர்த்தலைவர். அதற்கு, ”விதிப்படி உரியதை ஒருவன் அடைந்தே தீருவான்” என்றான். இந்தச் சொற்கள் தன் நினைவில் எழவே அன்று இரவு நிகழ்வு நினைவிற்கு வர தலைவரின் மகள் ”தேவர்களாலும் இதை தடுக்க முடியாது” என்றாள். அரசுசேவகரின் மகள், ’அதைக்கண்டு நான் வியப்பும் அடையவில்லை, வருந்தவுமில்லை’ என்றாள்.

அவர்கள் எல்லோரையும் தனித்தனியே விசாரித்து உண்மையை அறிந்த தலைவன் அவர்களுக்கு அபயம் தந்து மூவரையும் விதித்த பெருமாளுக்கு மணமுடித்து வைத்தான். ஆயிரம் கிராமங்கள் அவனுக்குத்தந்தான். தனக்கு மகனில்லாத குறையைப்போக்க அவனை தன் இல்லத்திலே வைத்துக் கொண்டான். அதனால்தான், “விதிப்படி உரிய பொருளை ஒருவன் அடைந்தே தீருவான்” என்று சொன்னேன் என்றது எலி. மேலும் என் சொத்தின் மீது கொண்ட ஆசையை விட்டொழித்தேன் என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பார்ப்பது ஞானம்- கண்களல்ல. நற்குடியை குறிப்பது குணம்- பிறப்பல்ல. மனத்திருப்திதான் உண்மைச் செல்வம்- பணமல்ல. தீய செயல்களிலிருந்து விலகுவதே உண்மை அறிவு. மகிழ்ச்சி நிறைந்த மனத்தையுடையவன்தான் சகல செல்வங்களையும் உடையவன். தோல் செருப்பு அணிந்த கால்கள் பூமிபூராவும் தோலினால் போர்த்தியிருப்பதாக நினைக்கக்கூடாது. பேராசை வாகனத்தில் பயனம் செய்பவனுக்கு எவ்வளவு தூரம் பயனம் செய்தாலும் திருப்தியில்லை. திருப்தி நிறைந்த மனம் படைத்தவன் பணத்தை கைப்பற்ற வேண்டியதில்லை.

உயிர்களை துணிவுறச் செய்யும் பேராசை தேவியே! உன்னை வணங்குகிறோம். மகாவிஷ்ணுவையே நீ வாமனனாகச் செய்து விட்டாயே! அவமானத்தின் மனைவியாகிய பேராசையே. உன்னால் ஆகாதது ஒன்றுமில்லை. கருனை உள்ளம் இருந்தும் ஒருவன் பேராசை கொண்டால் அவனையும் அவமானத்திற் உள்ளாக்குகின்றாய். சகிக்க முடியாததை சகித்துக் கொண்டேன். விரும்பாததை பேசினேன். பிறர் வீட்டு வாயிற்படியில் காத்துக்கிடந்தேன். உனக்கு இப்போது திருப்திதானே. சுத்தமில்லா நீரை குடித்தேன். மனைவியின் பிரிவை சகித்தேன். பிழைப்பிற்காக பிறரிடம் இரந்தேன். கால்கடுக்க சுற்றியலைந்தேன். உடைந்த பொருளையெல்லாம் போக்கிஷமாக நினைத்தேன். பேராசைகொண்டு நான் இன்னும் ஏதாவது செய்யவேண்டியிருக்கின்றதா?

குருஸ்ரீ பகோராயின் கூற்று- எந்தக் காரணத்தைச்சொல்லி, அத்தாட்சி காட்டிப்பேசினாலும் ஏழையின் சொல் அம்பலம் ஏறுவதில்லை. தோஷங்கள் நிறைந்த உருட்டல் மிரட்டல்களுடன் கூடிய சொற்களைப் பணம் கொண்டவன் பிதற்றினாலும் அவை ஏற்றுக்கொள்ளப்படும். கீழ்குடியில் பிறந்திருந்தாலும் பணத்தால் மதிப்பு பெறுகிறான். உயர்குடியில் பிறந்த ஏழையை இகலும். பணம் இல்லையென்றால் அண்ணன், தம்பி, மனைவி, மக்கள், நண்பர்கள் எல்லோரும் போய்விடுவர். பணம் வந்தால் வருவார்கள். உலகில் மனிதனுக்கு பணம்தான் நட்பும் சுற்றமும்.

ஓர் பிடி சோற்றுக்காக யார்தான் மோசமான நிலையிலிருந்து மேலும் படுமோசமான நிலைக்கு கொண்டுசேர்க்கும் தீச்செய்கைகளைச் செய்வார்கள்? கிழடுதட்டியவன் பணபலத்தால் வலிபன் ஆகிறான். வலிபன் பணமில்லையென்றால் கிழவன் ஆகுவான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- மான், பாம்பு, யானை, தேவர்கள், அசுரர்கள், மனிதன் ஆகியோர் நடுப்பகல் கழிவதற்கு முன்பே உணவை முடித்துக் கொள்கின்றன. உரிய வேலையும் பசியும் வந்துவிட்டால், ஒரு வீரனுக்கும், கஷ்ட தசையிலிருப்பவனுக்கும் ஒருபிடி உணவு இருந்தால் போதுமானது.

ஆமை சொன்னது நண்பனே, நீ உன் நாட்டை விட்டு வந்து விட்டாய் என்பதற்காக அதைரியப்படாதே. நீ புத்திசாலி. கவலைப்படாதே என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- அறநூல்களைப் படித்துவிட்டு முட்டாளாக செயல் படுபவர்கள் உண்டு. யார் செயல் செய்கிறானோ அவனே அறிவாளி. நல்ல மருந்தை அருந்தாமல் நினைத்தால் மட்டும் நோய் குணமாகாது. ஒரு அறிவாளிக்கு செல்லும் நாடு எல்லாம் சிறப்பு. அன்னிய நாடு என ஒன்றில்லை. முயற்சி திருவினையாக்கும். தவளை, பறவைகள் நீர் இருக்கும் இடத்தை வந்து சேர்வதுபோல் நட்பும் பணமும் முயற்சியுடையவரைச் சேரும். முயற்சியில்லாதவன், சோம்பேறி, திடசித்தமற்றவன், வெளிப்படையாகப் பேசாதவன் இவர்களை, கிழபுருஷனை குமரி முத்தமிட விரும்பாததுபோல், சீதேவி முத்தமிட விரும்பமாட்டாள். செயலில் இறங்கப் பயப்படுவனுக்கு ஆழ்ந்த கல்விஞானம் பயன்படுவதில்லை. தொலைந்த பொருளை தேட கையில் விளக்கு இருந்தாலும் கண் குருடாக இருந்தால் பயனில்லை.

தைரியம், திடநட்பு, நன்றியறிதல், அறவழிகளைப் பற்றி நிற்கும் ஒருவன், கஷ்டகாலத்திலும் துயரப்படாமல் உற்சாகத்துடன் வாழ்வை நடத்தினால் சீதேவி தானாக அவனை வந்தடைவாள். கருமியாகவும், மூடனாகவும், சபலபுத்தி உள்ளவனாகவும் இல்லாமல் திடச்சித்தமும், அறிவும், வீரமும், கவலையற்ற மனமும் உள்ள மனிதனை சீதேவி அடையாவிட்டால் அவள் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறாள் என அர்த்தம் என்றது காக்கை.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- விதிச் சக்கரம் சுழன்று செயல் படும்போது கொடையாளி, பிச்சைக்காரனாகவும், பிச்சைக்காரன் பிச்சையெடுக்காமலும் மாறுவதுண்டு. பல்லும், நகமும், மனிதனும், ரோமமும் வேண்டாத இடத்தில் இடம்பெற்றால் சிறப்பதில்லை.

நீ பிறந்த ஊரை விட்டு வந்து விட்டதற்காக வருத்தப்படாதே. வீரனும், அறிவாளியும், அழகிய பெண்ணும் செல்லும் இடமெல்லாம் சிறப்பாக இருப்பார்கள். உன்னிடம் சொத்து ஏதுமில்லை. இருந்தாலும் அறிவும் ஆர்வமும் நிறைய இருக்கின்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- திடசித்தமுள்ளவன் ஏழையாக இருந்தாலும் செயலினால் உன்னதமதிப்பை அடைவான். சிறுமதி படைத்தவர்கள் பணம் இருந்தாலும் தாழ்வு அடைவர். விலையுயர்ந்த தங்க கழுத்துப்பட்டை அணிந்த நாய் சிங்கத்திற்கு ஈடாகுமா? உற்சாகம், முயற்சி, தைரியம் உள்ளவனுக்கும் சமுத்திரம் ஓர்குட்டை. மேருமலை ஓர் எறும்பு புற்று. இமயமலை ஓர் உயரமில்லை. பாதாளம் என்பது பள்ளமில்லை. பணமிருக்கிறது என கர்வப்படாதே. பணமில்லையென கவலையும் படாதே. அதிர்ஷ்டம் அடிக்கடி எழும் பின் விழும்.

நீ ஓர் சாமானியப் பிறவி இல்லை. வாலிபமும், செல்வமும், நீர்க்குமிழிபோல் நிலையானதில்லை.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- மேகத்தின் நிழலும், துஷ்டனின் நட்பும், பெண்ணும், வாலிபமும், செல்வமும் சிறிது காலத்திற்குத்தான் இன்பமளிக்கும்.

இந்த நிலையற்ற செல்வத்தை அறிவாளிகள் அடைந்தால் தானம் செய்வதிலும், அனுபவிப்பதிலும் பலன் காணவேண்டும்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பலவித முயற்சிகள் மேற்கொண்டு, சரியாக உண்ணாமல், உறங்காமல், உயிரைவிட மேலாக மதித்து சம்பாதித்த பணத்திற்கு முதல் சிறப்பு தானமளித்தல், இரண்டாவது தானே நாசமடைந்து தன்னை வைத்திருப்பவனையும் நாசமடையவைப்பது. பணத்தை தானம் செய் அல்லது அணுபவி. பணம் ஓரிடத்தில் தங்கினால் அது, பிறருக்கு வாழ்க்கைப்படவேண்டிய இளம்பென் பிறந்த வீட்டில் இருப்பதுபோலாகும். தேனீக்கள் மிகவும் சிரமப்பட்டுச் திரட்டிச்சேர்த்த தேன் மற்றவர்களுக்குத்தான் பயன்படும்.

நீ ஆரோக்கியமாய் இருக்கின்றாய். மனச்சாந்தியும் பெற்றிருக்கின்றாய். அதுவே சிறந்த செல்வம். எல்லாம் விதிப்படி நடக்கும்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- ஆயுதத்தால் நடக்கும் சண்டையிலும், எரிகின்ற நெருப்பிலும், மலைக்குகை அல்லது சமுத்திரத்திலும், நீ எங்கிருந்தாலும் விதிப்படி நடப்பது நடந்தே தீரும். எல்லாச் செல்வங்களை அடைந்திருந்தாலும் பேராசை ஒருவனை கவ்வினால் அவன் தரித்திரன் ஆவான். திருப்தியோடு இருப்பவனே செல்வந்தன். தானத்திற்குச் சமமான செல்வம் வேறில்லை. திருப்திக்கு ஒப்பான தானமும் வேறில்லை. குணத்திற்கு சரிசமமான நகையில்லை. ஆரோக்கியத்திற்கு ஒப்பான செல்வமில்லை.

நீ சொத்தெல்லாம் இழந்து விட்டேனே. எப்படி பிழைப்பது என எண்ணாதே. பணம் உருண்டோடுவது. குணம் ஒன்றே தங்கும். நிலைத்து நிற்பது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- குணசாலி வீழ்ந்தாலும் தரையில் பட்ட பந்து எழுவதுபோல் மீண்டும் எழுந்துவிடுவான். கோழை விழ்ந்தால் மண்கட்டி தரையில் வீழ்ந்ததுபோல் கிடப்பான்.

மேலும் ஆமை சொன்னது. உலகில் சிலர் பணத்தை அனுபவிப்பதற்கும், சிலர் அதைப் பத்திரப்படுத்துவதற்கும் இருக்கின்றார்கள். மூடர்கள் பணத்தைச் சேர்த்து வைத்தபோதிலும் அனுபவிப்பதில்லை என்றது. அது எப்படி எனக் கேட்டது எலி.

நெசவாளியின் கதை- செய்கையும் செய்வோனும்: அந்த ஊரில் வாழ்ந்திருந்த நெசவாளி விதவிதமான வர்ண ஆடைகளை தலைவர்களுக்காக நெய்து வந்தான். எவ்வளவு பாடுபட்டும் உணவிற்கும் துணிக்குமேலாக அவனால் பொருள் ஈட்ட முடியவில்லை. மற்ற ரகங்களைத் தயாரிக்கும் நெசவாளிகள் நல்ல நிலைமையில் இருப்பதைபார்த்தவன் தன் மனைவியிடம் இந்த ஊரைவிட்டுச் சென்று விட முடிவு செய்திருப்பதைச் சொன்னான்.

குருஸ்ரீ பகோராயின்கூற்று- விதியின்றி ஏதும் நடக்காது. விதியிருந்தால் மனித முயற்சியில்லாமல்கூட ஒன்று நடைபெறும். விதியில்லையானால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும். எத்தனை மாடுகள் மத்தியிலிருந்தாலும் தாய்மடியினை கன்றுக்குட்டி கண்டுபிடித்துவிடும். முற்பிறப்பின் வினைப்பயனும் அதுபோல எப்படியிருப்பினும் தொடரும். நிழலும், வெய்யிலும் ஒன்றோடொன்றாக இனைவது போல் செய்கையும் செய்வோனும் இனைக்கப்படுவர்

வெளியூர் பிரயாணம் சென்றால் பணம் கிட்டும் என நினைப்பது தவறு. என்றாள் அவன் மனைவி.

நீ சொல்வது தவறு. முயற்சியில்லாமல் பயன் எதுவும் கிட்டாது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- ஒரு கையால் தட்டி ஓசை உண்டாக்க முடியாது. முயற்சியின்றி ஒரு காரியத்தின் பலனை சிந்திப்பது தவறாகும். சாப்பாடு முன்னாள் இருந்தாலும் கையின் உதவியில்லாமல் வாய்க்கு எட்டாது. முயற்சியாலேயே செயல்கள் பயனடையும்.

முடிந்த அளவிற்கு முயற்சி செய்து காரியம் பலிக்காவிட்டால் அது விதிவசம். ஆகவே நான் வேறுதேசம் சென்று பொருளீட்ட முடிவு செய்துள்ளேன் என்றான். அதன்படி பக்கத்து தேசத்திற்குச் சென்றான். பலநாட்கள் கஷ்டப்பட்டு 300 பொற்காசுகளை சேமித்தான். வீட்டிற்கு திரும்பி வரலானான். வரும் வழியில் ஒருகாட்டைக் கடக்க வேண்டியிருந்தது. சூரியன் அஸ்தமிக்கவே ஓர் ஆலமரத்தின் மேலேறி படுத்துக்கொண்டான். தூக்கத்தில் ஓர் கனவு கண்டான்.

அந்தக் கனவில் செய்கை, செய்வோனைப்பார்த்து கேட்டது. இவனுக்கு உணவுக்கும் துணிக்கும் மேலாக எதையும் சம்பாதிக்க முடியாதபடி நீ இத்தனைநாள் தடுத்துவிட்டு இப்போது எதற்காக 300 பொற்காசுகளைத் தந்துள்ளாய் என்றது. செய்வோன் சொன்னது, முயற்சித்தவர்களுக்கு நான் கட்டாயம் தகுந்த பலனளிக்க வேண்டியுள்ளது. அவனிடமிருந்து அந்த காசுகளை நீதான் பறிக்க வேண்டும் என்றது. இதைக்கேட்டதும் திடுக்கிட்டு எழுந்தவன் தன்னிடமிருந்த காசுகள் மறைந்துவிட்டதைக் கண்டான். ஐயோ! எத்தனைக் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் ஒரு நொடியில் மறைந்து விட்டதே. என் முயற்சி வீணானதே. பணமின்றி எப்படி வீட்டிற்குச் செல்வேன் என நினைத்து மீண்டும் அந்த நகரத்திற்குச் சென்று பொருள் ஈட்டத்தொடங்கினான்.

மிககடினமாக உழைத்து 500 பொற்காசுகளைச் சேமித்தான். அவற்றுடன் ஊருக்குப் புறப்பட்டான். வழியில் காடு குறுக்கிட அதே ஆலமரத்தில் ஏறிப் படுத்தான். இப்போதும் நடுசாமத்தில் அதே கனவு வந்தது. விழித்துப் பார்த்தான். பணம் வைத்திருந்த பை காலியாயிருந்தது. அவனுள் விரக்தி ஏற்பட்டது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் விதி என்னைச் சோதிக்கிறது. இனி வாழ்ந்து பிரயோஜனமில்லை. இந்த ஆலமரத்தில் தான் என் பணம் காணாமல் போனதால் இங்கேயே நான் தூக்கிட்டு மாள்கிறேன் என முடிவு செய்து அருகிலிருந்த கொடிகளை கயிராக்கி கழுத்தில் சுற்றிக் கொண்டு மரத்திலிருந்து குதிக்க ஆயத்தமானான்.

அப்போது கனவில் வந்த இருவரில் ஒருவர் அவன்முன் தோன்றி நெசவாளியே அவசரப்படாதே. உனக்கு உணவிற்கும் உடைக்குமேல் ஒன்றும் கிடையாது என விதியிருந்ததால் நான் உன் பணத்தை எடுத்துக் கொண்டேன். நீ வீட்டிற்கு போ. என்றாலும் என்னைச் சந்தித்ததின் பலனாக உனக்கு இஷ்டமானதைக் கேள் என்றார்.

நெசவாளி, அப்படியென்றால் எனக்கு நிறைய பணம் கொடுங்கள் என்றான்.

அன்பனே, உன்னால் அனுபவிக்க முடியாத பணத்தால் என்ன பயன்? உன் உணவிற்கும் துணிக்கும் மேலாக அது உனக்கு பயன்தராது, அது உன் விதி என்றார்.

பிரயோஜனமாக இருந்தாலும் இல்லையென்றாலும் அது எனக்கு வேணும் என்றான் நெசவாளி. சிறந்த தானம் வழங்குவதில் மனங்கொண்டிருப்பவன் குரூபியாயிருந்தாலும் குலமற்றவனாக இருந்தாலும் அவனை உலகம் போற்றுகிறது. நானும் பல வருடங்கள் பார்த்துவருகிறேன். அவை தொளதொளவென இருந்தாலும் இருக்கமாக இருக்கின்றன. விழப்போகிறவனைப்போல் கானப்பட்டாலும் விழவில்லை என்றான். அது எப்படி எனக் கேட்டான்.

நரியும் காளையும்-விதிவலியது: அந்த ஊரில் இருந்த காளை ஒன்றிற்கு மதம் பிடிக்கவே அது தன் கூட்டத்தைவிட்டு காட்டுப்பக்கம் சென்றுவிட்டது. ஆற்றங்கரையோரத்தில் தன் கொம்புகளால் நிலத்தை முட்டியும் கீரிக்கொண்டும் கிடைத்ததை உண்டும் வந்தது. அங்கு வந்த நரிக்குடும்பம் ஆற்றின் கரையில் சுற்றும் காளையின் விரையைக் கண்டது. பெண்நரி ஆண் நரியைப்பார்த்து, அந்தக் காளையின் மடியில் இரண்டு மாமிசபிண்டங்கள் தொங்குகின்றன. அவை கீழே விழுவதுபோல் இருக்கின்றது. நீங்கள் அதன் பின்னால் சென்று அது விழுந்ததும் எடுத்துவாருங்கள் என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நிச்சயமாகக் கிடைப்பதை விட்டு நிச்சயமற்றதை தேடிச் சென்றால் கிடைக்கக் கூடியது தவறிவிடும். நிச்சயமற்றது நிச்சயமற்றதாகிவிடும்

ஆண் நரி சொன்னது. அது எப்போதாவது விழலாம். விழாமலும் போகலாம். அதை நம்பி அதன் பின்னால் செல்வது சரியல்ல. அதற்குப்பதில் கரையிலுள்ள வங்குகளிருந்து வெளிவரும் சுண்டெலிகளை உனக்குப் பிடித்துத் தருகிறேன் என்றது.

பெண் நரி சொன்னது. நீங்கள் ஒரு கோழை. ஆண்கள் எப்போதும் முயற்சியுடையவர்களாய் இருத்தல் வேண்டும். கிடைப்பதை வைத்து திருப்தியடையக்கூடாது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சோம்பல் இல்லாமல் உற்சாகம் காணப்படுகிற இடத்தில் திறமையும் வலிமையும் இருக்கும். அங்குதான் லட்சுமி தங்குவாள். எல்லாம் விதி என முயற்சிதனை கைவிடலாகாது. முயற்சியில்லாவிட்டால் எள்ளிலிருந்து எண்ணெய் கிடைக்காது.

விழுந்தாலும் விழலாம். விழாமலும் போகலாம் என்கிறீர்கள். அது தவறு மேலும் எனக்கு எலி மாமிசம் சாப்பிட்டு அலுத்துப் போய்விட்டது. என் பேச்சைத்தட்டாதீர்கள்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பதவியிலும் பொறுப்பிலும் இருந்தால் மட்டும் போதாது. திடசித்தமுடையவனே வணங்கத்தக்கவன். சாதகப்பறவைக்கு இந்திரன் நீர் தருகிறான் என்றால் அந்தப் பறவை வறுமையில் வாடுகிறது என யாரும் நம்ப மாட்டார்கள். பெண்ணின் அங்குசப்பேச்சு ஆணின் காதை துளைத்து தூண்டாதிருக்கும்வரை ஆண் எல்லா காரியங்களுக்கும் எஜமானன் ஆவான். பெண்ணால் தூண்டப்பட்டவனுக்கு செய்ய முடியாததை செய்யத்தக்கதுபோலும், அடைய முடியாதவையெல்லாம் அடையக்கூடியது போலவும், சாப்பிட முடியாதவையெல்லாம் சாப்பிடக்கூடியவை போலும் தோன்றும்.

வேறு வழியின்றி பெண்நரியின் பேச்சுப்படி இரண்டும் அந்த காளையின் பின்னால் அது விழும் என நம்பி தொடர்ந்து சென்றது. வருடங்கள் பல ஆகியும் அது விழவில்லை. ஆண் நரி விரக்தியடைந்து, நானும் பல வருடங்களாகப் பார்த்து வருகிறேன். அவை தொளதொளவென்று காணப்பட்டாலும் இறுக்கமாகவே உள்ளது. விழப்போகிறவைப்போல் காணப்பட்டாலும் அவை விழவில்லை என்றது. ஆகவே இனிமேலும் அவை விழும் எனத் தொடர்வது சரியில்லை. நாம் நம் பழைய இருப்பிடத்திற்கு திரும்புவோம் என்றது.

இதைச் சொல்லிய நெசவாளி சம்பத்து உள்ளவனை எல்லோரும் விரும்புவர், எனவே நீ எனக்கு பணம் கொடு என்றான்.

கனவில் வந்தவன் சொன்னான், அப்படியானால் அருகில் உள்ள உரில் வியாபாரிகளின் புத்திரர் இருவர் உள்ளனர். அவர்களின் நடத்தையை நன்கு தெரிந்து கொண்டு இருவரில் ஒருவருடைய குணத்தை கேட்டு வாங்கிக்கொள் எனக்கூறி மறைந்தான்.

அந்த ஊருக்கு சாயங்கால வேளையில் வந்தவன் களைப்புடன் வியாபாரியின் முதல் புத்திரன் வீட்டை விசாரித்து சென்றடைந்தான். அவன் மனைவியும் பிள்ளைகளும் நெசவாளியைத் திட்டவே பேசாமல் வந்து திண்ணையில் அமர்ந்தான். சாப்பாட்டு வேளையில் அன்புடன் பேசாமல் அவனுக்கு உணவு கொடுத்தார்கள். சாப்பிட்டு அங்கேயே படுத்து தூங்கினான்.

அவனது தூக்கத்தில் வந்த கனவில் செய்கை, செய்வோனைப் பார்த்து நீ ஏன் வியாபாரியின் முதல் மகனுக்கு அதிகச் செலவு வைக்கிறாய். நீ செய்வது சரியில்லை என்றார். அதற்கு அது என் குற்றமல்ல. வரவும் செலவும் நான் பார்த்தாலும் முடிவு உன்னுடையது என்றார். நெசவாளி விழித்துக்கொண்டான். வியாபாரியின் மகன் காலராவில் படுத்துவிட்டதால் உணவிற்கு பிரச்சனை ஏற்பட்டது.

எனவே வியாபாரியின் இரண்டாவது புதல்வனின் வீட்டைக் கேட்டுத்தெரிந்து கொண்டு அங்கு போனான். அவன் இவனை வரவேற்று உணவும் உடையும் தந்து உபசரித்தான். சுகமான படுக்கை கிடைத்தது. அதில் உறங்கலானான். கனவில் மீண்டுமந்த இருவர் வந்தனர். ஏ செய்வோனே இரண்டாவது மகனுக்கு மிக அதிக செலவு வைத்துவிட்டாய். அவன் செய்த உபசாரங்களுக்கு லேவாதேவி கடையிலிருந்து பணத்தை எடுத்து செலவழித்து விட்டான். அதை அவன் எப்படி திருப்பிக் கொடுப்பான்?. செய்கையே, எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஆனால் முடிவு உன்னைப் பொறுத்தது என்றார்.

பொழுது விடிந்தது. அரசுசேவகன் ஒருவன் தலைவன் சந்தோஷப்பட்டு தந்த பணத்தை அந்த வியாபாரியின் இரண்டாவது மகனிடம் கொடுத்தான்.

இதைக் கண்ட நெசவாளி இரண்டாவது மகனிடம் பணம் இல்லாவிட்டாலும் முதல் மகன் கஞ்சனைவிட எவ்வளவோ மேலானவன். எனவே எல்லாம் வல்ல இறைவா கொடையளிக்கும் இளையமகன்போல் என்னைச் செய்வீர்களாக என வேண்டினான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- வேதம் தரும் பயன் வீட்டில் ஹோமம் வளர்த்தல். கல்வி தரும் பயன் நன்னடத்தை. மனைவி தரும் பயன் சுகமும் புத்திர சந்தானமும். செல்வம் தரும் பயன் தானமும், போகமும்.

அவன் வேண்டுகோளின்படியே இறைவன் அவனை கொடையளிப்பவனாக ஆக்கினார். எனவேதான்,’மூடர்கள் பணத்தைச் சேர்த்து வைத்தபோதிலும் அனுபவிப்பதில்லை..’ என்று சொன்னேன். இவற்றை அறிந்து நீ பண விஷயத்தில் கவலைப் படாமல் இருப்பாயாக என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- மேன்மக்களின் உள்ளம் சுபிட்சமான காலத்தில் தாமரை போன்று மிருதுவாகவும், ஆபத்துக்காலத்தில் கற்பாறைகள்போல் கடினமாகவும் இருக்கும். பணத்தை கஷ்டப்பட்டு தேடியடைய வேண்டியிருந்தாலும் விதியானது முயற்சி செய்யாமல் தூங்குபவனிடம் கொண்டு சேர்க்கின்றது. மனத்தை எண்ணங்களால் வருத்திப் பயனில்லை. எவ்வளவு முயற்சித்தாலும் நடப்பது விதிப்படி நடக்கும். தொலைவிலுள்ள இடத்திலிருந்தாலும், ஆழ்கடலின் நடுவில் இருந்தாலும் உலகின் எந்த முனையிலிருந்தாலும் தான் மனம் வைத்தவனிடம் விதி ஒரு நொடிப்பொழுதில் கொண்டுவந்து சேர்க்கும். சம்பந்தம் உள்ளவர்களைப் பிரித்தும் சம்பந்தமில்லாதவர்களைச் சேர்த்தும் விதி செயல்படும். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வருகிற துக்கம் வந்தே தீரும். அது சுகமளிக்காவிட்டாலும் மனதை அலட்டிக் கொள்ளாமல் அதைச் சுகம் என நினைத்து செயல்படு. சாஸ்திரம் கற்றவர்கள் விதியை மாற்ற நினைத்தாலும் அது வேறுவிதமாகச் செயல்படும். அன்னப்பறவைக்கு வெண்மை நிறத்தையும், கிளிக்கு பச்சை நிறத்தையும் மயிலுக்கு பலவண்ணங்களையும் அளித்த அதே இறைவன் நம்மையும் படைத்துள்ளான். மனிதனின் நனமைக்கும் தீமைக்கும் வேலை செய்வது விதி. நல்லதை நினை. தூய மனத்துடன் விரதம், நியமம், உபவாசம்  ஆகிய தர்மங்களைச் செய். மனித முயற்சி எவ்வளவு இருந்தாலும் விதி அவன் ஆயுளை நாளுக்கு நாளாக குறைத்துக் கொண்டுதானிருக்கும்.

இதை உன் வீடுபோல் நினைத்துக்கொள்,  கலக்கம் தரும் கவலையை விட்டுவிடு. எங்களோடு நட்புடன் இங்கேயே திருப்தியுடன் இரு.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- திருப்தி என்ற அமுதம் நிம்மதியுள்ள மனதிற்கு இன்பம் தரும். பணத்தாசை பிடித்தவனுக்கு அது கிடைக்காது. சகிப்புத்தனமைக்கு ஒப்பான தவமில்லை. திருப்திக்கு ஒப்பான இன்பம் வேறில்லை. நட்புக்கு ஈடான தானம் வேறில்லை. தயைக்கு ஈடான தர்மமும் வேறில்லை.

காக்கை சொன்னது நண்பா, நீ மிகவும் நல்லவன். உன் உபதேசத்தில் சாஸ்திரங்களின் சாரம் உள்ளது. மற்றவர்களை அனுசரிக்கும் குணம் உன்னிடம் உள்ளது. எலியை தேற்றுவற்கு நீ கூறிய உன் பேச்சுக்கள் என் உள்ளத்தில் மகிழ்வை ஏற்படுத்துகின்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சாஸ்திரங்களின் சாரத்தை இன்பமாக அனுபவித்துவரும் நல்லோர்கள், நண்பர்களால் தாமும் மகிழ்வடைந்து நண்பர்களையும் மகிழ்வித்து எல்லோருடனும் அன்பைப் பேனுவர். நட்பு என்ற அணிகலன் அணியாதவன் வாழ்வு செல்வந்தனாயிருந்தாலும் அது பேராசையால் பீடிக்கப்பட்ட மனமும் வீண் சிரமங்களும் நிறைந்த வெறும் வாழ்வுதான்.

துயரக்கடலில் மூழ்கியிருந்த என் நண்பனை உன் நல்லுபதேசங்கள் கரையேற்றியுள்ளன.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சேற்றில் சிக்கிய யானையை மற்ற யானைகள் தூக்கி விடுவதுபோல நல்லவர்களை ஆபத்திலிருந்து நல்லவர்கள்தான் காப்பாற்றுவார்கள். தன்னிடம் யாசித்தவர்களும், அடைக்கலம் புகுந்தவர்களும் மனசு பங்கமடைந்து முகம் திருப்பிச் செல்லாதபடி யார் நடந்து கொள்கிரார்களோ அவர்களே மக்களால் போற்றப்படுவர். அவனே நற்குணங்களை கொண்டவன். துயர் உற்றவர்களைக் காக்காத வீரம் எதற்கு? யாசித்தவர்களுக்கு தராத தனம் எதற்கு? நன்மை அளிக்காத செய்கை எதற்கு? புகழைக் கெடுக்கும் வாழ்வு எதற்கு?

இவ்வாறு காக்கை சொல்லிக் கொண்டிருக்கும்போது யாரோ வருவதுபோல் சப்தம் கேட்க மூவரும் மறைந்தனர். காக்கை உயரப்பறந்து வருவது மான் என அறிந்து மற்றவருக்கு தகவல் சொல்லியது. மூவரும் மீண்டும் கூடினர்.

ஆமை மானைப்பார்த்து சொல்லியது, நண்பனே, நீ தைரியமாக நீர் குடி. இந்த நீர் சுத்தமானது. மான் அவர்கள் அனைவரையும் பார்த்து நட்புகொள்ள விரும்பியது. அன்பு இல்லா என் வாழ்வு எனக்கு அலுத்துவிட்டது. குதிரைமேல் வருபவர்கள், நாய்கள், வேடர்கள், மிருகங்கள் என என்னை எல்லோரும் துரத்துகின்றனர். பயம் கொண்டு அதிகவேகத்துடன் ஓடி தப்பித்து நீர்குடிக்க வந்துள்ளேன் என்றது.

நாங்கள் மூவரும் சிறிய உடல் உள்ளவர்கள். அதனால் நீ எங்களுடைய நண்பனாக இருக்க முடியாது. உதவிக்குப் பதில் உதவி செய்யக்கூடியவர்களுடன் நட்பு கொள்ளவேண்டும் என்றது ஆமை.

நீசர்களோடு இந்திர அரண்மனையில் வாழ்வதைவிட அறிவாளிகளுடன் நரகத்தில் வாழ்வதேமேல். உடல் சிறியதோ இல்லையோ, நீங்கள் நல்லவர்கள். என்னுடன் கட்டாயம் நட்பாக இருக்கவேண்டும். பலசாலியாயிருந்தாலும், பலவீனனா இருந்தாலும், அவனைச் சிநேகிதனாகக் கொள், காட்டில் கட்டுண்ட யானைக் கூட்டத்தை எலிகள் விடுவித்துபோல் என்றது மான். அது எப்படி என ஆமை கேட்டது.

யானைகளை விடுவித்த எலிகள்: நட்பு பலன் தரும்: அந்த நகரத்தில் வாழ்ந்திருந்த மக்கள் அனைவரும் பஞ்சமேற்பட்ட சமயத்தில் காலிசெய்து போய்விட்டபடியால் வீடுகளும் கோவில்களும் பாழடைந்து காணப்பட்டன. அங்கு வசிப்பவை பூர்வீக குடியிருப்பு வாசிகளான எலிகள் மட்டுமே. அவைகள் பெருகி வளர்ந்திருந்தன. எல்லா வீடுகளிலும் எலிகள் தாண்டவமாடின. நீர் தேடிய யானைக்கூட்டமொன்று அந்த பக்கம் வர இஷ்டத்திற்கு சுற்றித்திரிந்த பல எலிகள் அவைகளின் காலடியில் சிக்கி நசுங்கியது.

இதைக் கண்டமற்ற எலிகள் எல்லாம் ஒன்றுகூடி இந்தக் கெட்ட யானைகள் மறுபடியும் இந்தப் பக்கம் வந்தால் நம்மில் பாதிப்பேர் இறந்திடுவோம். யானை தொட்டாலும், பாம்பு மூச்சு விட்டாலும் துஷ்டன் கௌரவித்தாலும் சாவு. இதிலிருந்து விடுபட தகுந்த உபாயம் கண்டுபிடிக்க வேண்டும் என பேசிக்கொண்டன. அவ்வாறே சில எலிகள் நீர் இருக்கும் ஏரிக்கரைக்குச் சென்று யானைக்கூட்டத்தின் தலைவனிடம், அருகில் இருப்பது எங்கள் பரம்பரை குடியிருப்பு. நாங்கள் நீண்ட காலமாக பேரன் பேத்திகளுடன் இங்கு வசித்து வருகின்றோம். உங்கள் கூட்டம் வரும்போது எங்களில் பலரை காலில் நசுக்கி கொன்றுவிட்டன. மறுபடியும் நீங்கள் அதேவழியில் திரும்பிச் சென்றால் எங்களில் பலர் இறக்க நேரிடும் ஆகையால் தாங்கள் எங்கள்மேல் கருனைகூர்ந்து வேறுவழியில் செல்ல வேண்டுகிறோம். நாங்கள் நன்றியுடன் தங்கள் கூட்டத்திற்கு உதவி புரிபவர்களாக எப்போது இருப்போம் என்றன.

இதைக் கேட்ட யானைகளின் தலவன், இந்த எலிகள் சொல்வதில் நியாயம் இருக்கின்றது. நாம் திரும்பிச் செல்லும்போது வேறுவழியில் செல்லலாம் என்றது. அவ்வாறு திரும்பிச் சென்றன. நாட்கள் பல கழிந்தன. தலைவன் ஒருவன் வேடர்களுக்கு காட்டிலுள்ள யானைகளைப் பிடிக்க கட்டளையிட அவர்கள் காட்டில் ஓர் பொய்யான ஏரியை உருவாக்கி அங்குவந்த யானைகளைச் சிறைப்படுத்தினர். பெரிய கட்டுகளைக் கொண்டு யானைகளை அருகில் உள்ள பெரிய மரங்களில் கட்டினர். வேடர்கள் சென்றதும் தலைமை யானை இதிலிருந்து தப்பிப்பது எப்படி என யோசித்தது. அதற்கு எலிகளின் ஞாபகம் வரவே வளையில் கட்டுப்படாத ஓர் யானையின் மூலம் எலிகளுக்கு தூது அனுப்பியது.

செய்தி அறிந்த எலிகள் எல்லாம் ஒன்று திரண்டன. யானைகளுக்கு பதில் உதவி செய்திட யானைகள் கட்டப்பட்டிருந்த இடத்திற்கு வந்து கட்டுகளை கொரித்து தள்ளின. மரத்தின் மீதேறி அங்குள்ள கட்டுகளையும் கொரித்து யானைகளை விடுவித்தன.

அதனால்தான்,’பலசாலியாயிருந்தாலும், பலவீனனாயிருந்தாலும், அவனைச் சிநேகிதனாகக் கொள்.....’ என்று சொன்னேன் என்றது மான்.

ஆமை சொன்னது, சரி நண்பனே. நாங்கள் உன்னை நண்பனாக ஏற்றுக் கொண்டோம். கவலையின்றி உன் இஷ்டம்போல் இங்கிருந்துவா என்றது. நான்கும் நண்பர்களாக இருந்தன. உணவை முடித்துக்கொண்டு பல சாஸ்திர சம்பிரதாய விஷயங்களை நிகழ்வுகளைத் தங்களுக்குள் பேசிக்கொண்டன. ஒன்றின்மேல் ஒன்று அன்புடன் இருந்தன.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நல்ல கவிதையும் அறநூல்களையும் கொண்டு அறிவாளிகள் பொழுதை போக்குவர். மூடர்கள் துயரத்திலும், தூக்கத்திலும், கலகங்களிலும் தங்கள் பொழுதைக் கழிப்பர். பெண்களின் சேர்க்கையில்லாமலே நல்லுரைகளின் ரசத்தைப் பருகி விவேகிகளின் நெஞ்சில் புளாங்காதிமும் சுகமும் உண்டாகும்.

ஒருநாள் மான் குறித்த வேளையில் வரவில்லை. அதற்கு என்ன நேர்ந்ததோ என மூன்றும் பயந்து வருந்தின. ஆமை காக்கையிடம் சொன்னது, நண்பனே நீ போய்த் தேடிப்பார்த்து ஓர் நல்ல செய்தியைச் சொல்லு என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நமது அன்பிற்குரியவர்கள் கேளிக்கை மண்டபங்களில் இருந்தாலும் அவர்களுக்கு ஏதாவது ஆபத்து நேரிடுமோ எனப் பயப்படுகிறோம். அது அன்பின் சிறப்பு.

உயரப் பறந்து காட்டில் தேடிய காக்கை சதுப்புக்காட்டில் ஓர்  வேலாங்குச்சிகளால் கட்டப்பட்ட கூட்டிற்குள் மான் சிக்கியிருப்பதைப் பார்த்தது. அங்கு சென்றதும் உனக்கு எப்படி இந்த ஆபத்து ஏற்பட்டது என்றது.

நண்பனே நான் சொல்வதைக்கேள், நாம் ஒன்றாகப் பேசிக்கொண்டிருக்கும் போது நான் ஏதாவது கோபத்தில் பேசியிருந்தாலும், தெரிந்தோ தெரியாமலோ கெட்ட வார்த்தை பேசியிருந்தாலும் நீங்கள் மூவரும் என்னை மன்னித்துவிடுங்கள் என்றது மான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- உயிர்போகும் தருணத்தில் உயிர்த்தோழனின் தரிசனம் கிடைத்தால் அது இறந்து கொண்டிருப்பவனுக்கும் உயிரோடு இருப்பவனுக்கும் ஒருங்கே இன்பமாகும். தான் புரியாது செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க மனம் ஆறுதலடையும்.

நன்பனே, நாங்கள் இருக்கும் வரை நீ பயப்படாதே. நான் இப்போதே உன்னை விடுவிக்க ஏற்பாடு செய்கிறேன் எனக்கூறி விரைவாக பறந்து தன் நண்பன் எலி, ஆமையிடம் விபரம்கூறி எலியைத் தன் அலகில் கவ்விக்கொண்டு மான் இருக்குமிடம் சேர்ந்தது.

மான் அவஸ்தை படுவதைப் பார்த்து நண்பனே நீ எவ்வாறு இதில் மாட்டிக்கொண்டாய் எனக் கேட்டுக்கொண்டே, அதன் கட்டுகளைக் கொரித்து விடுவித்தது. வேடன் வருவதற்குள் இங்கிருந்து போய்விடலாம் என மூன்றும் அங்கிருந்து கிளம்பின. வரும் வழியில் மான் எப்படி இதில் சிக்கினேன் எனச் சொல்ல ஆரம்பித்தது.

மானின் அனுபவம்:பட்ட காலிலேபடும்: நான் பிறந்து எனக்கு அப்போது ஆறு மாதம். எல்லார் முன்னிலையிலும் குழைந்தபோல் விளையாடிக் கொண்டிருந்த எனக்கு நேராகத்தான் ஓடத்தெரியும். மற்ற மான்கள் போல் துள்ளிக்குதித்து போகத்தெரியாது. ஒருநாள் எங்கள் கூட்டத்திலிருந்து தவறி தனியே சென்றதை உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தபோது தூரத்தில் என் இனம் இருப்பதைப் பார்த்தேன். விரைந்து ஓடி அருகில் சென்றேன். இன்னும் கொஞ்சம் தூரம்தான். ஆனால் இடையில் ஓர் வலை இருந்தது. குதித்து தாண்டினால் என் கூட்டத்தை சேர்ந்துவிடலாம். எனக்கோ குதித்துத் தாண்டத்தெரியாது. நேராகத் தாண்டியபோது வலையில் சிக்கிக் கொண்டேன். அதிலிருந்து விடுபட முயற்சித்தேன். முடியவில்லை. வேடன் வந்தான். வலையிலிருந்து விடுவித்து வேறுகயிற்றால் கட்டிப்போட்டான். நான் வேடனிடம் சிக்கியதை அறிந்த என் கூட்டம் ஒன்றும் செய்யமுடியாமல் சென்றுவிட்டது.

வேடன் என்னைக் கொல்லவில்லை. இது குட்டி. இது விளையாடுவதற்கு தகுந்தது என ஓர் தலைவனின் மகனுக்கு விற்று விட்டான். அந்தத் தலைவரின் மகன் என்னிடம் அன்புடன் நடந்தான். குளிக்கவைத்தான். உணவு கொடுத்தான். என்னோடு விளையாடினான். இருந்தபோதிலும் மற்ற குழைந்தைகள் என்னை மற்றி மாற்றித்தொட்டும் நீவியும் செய்ததால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.

மழைக்காலத்தில் ஓர் நாள் தலைவரின் மகன் கட்டிலுக்கடியில் நான் படுத்திருந்தேன். மழை மின்னல் இடியுடன் பெய்தது. எனக்கு என் கூட்டத்தின் ஞாபகம் வர, காற்றைக் கிழித்துகொண்டு தாவியோடும் மான் கூட்டத்தின் பின்னே நான் எப்போது போகப்போகிறேன் என வருத்ததுடன் பாடினேன். இதைக்கேட்ட அவன் இப்பாட்டைப் பாடியது யார் எனக் கேட்டு என்னைப் பார்த்தான். இந்தப்பாட்டினால் எனக்கு நாசம் விளையும் எனக் கூறி பேய் பிடித்தவன்போல் அரண்மனையிலிருந்து வெளியேறினான். தனக்கு பேய் பிடித்துள்ளதாக நினைத்தான். மந்திரவாதிகளையும் தந்திரவாதிகளையும் அழைத்தான். அவன் துயர் போக்குபவர்களுக்கு நிறைய பணம் தருவதாகச் சொன்னான்.

சிலர் என்னை தடியால் அடித்தனர். ஒரு சந்நியாசி அங்கு வந்தார். இந்த சாதுவான பிராணியை ஏன் துன்புறுத்துகின்றீர்கள் எனக்கூறி என்னைக் காப்பாற்றினார். அவர் என் மனவருத்தத்தையும் தலைவரின் மகன் நிலையையும் புரிந்தார். மழைக்காலத்தில் மான் தன் கூட்டத்தை நினைத்துப் பாடியது. அதற்கும் உங்கள் உடல் நிலைக்கும் சம்பந்தமில்லை எனத் தலைவரின் மகனை தெளிவு படுத்தினார். அவன் உடல்நிலை சரியானது. பிறகு இந்த மான்குட்டியின் தலையில் நீர் ஊற்றிக் கொண்டுபோய் காட்டில் விட்டு வாருங்கள் எனக்கூறி என்னை காட்டில் விடச்செய்தான். இப்படித்தான் நான் ஏற்கெனவே சிக்கி வேதனைப் பட்டிருக்கின்றேன்.

நட்பு- அன்பின் பலன்: மூன்றும் பேசிக்கொண்டு செல்கையில் எதிரில் ஆமை வருவதைப் பார்த்தன. ஆமையைப் பார்த்து எலி சொன்னது நீ உன் கோட்டையை விட்டு இங்கு வந்தது சரியில்லை. வேடன் வந்தால் மான் ஓடும். நான் பறந்து விடுவேன். எலி எதாவது ஓர் பொந்தில் புகுந்து கொள்ளும். உன் நிலைமை மிகவும் கஷ்டமானது என்றது. அதைக்கேட்ட ஆமை அப்படி என்னை நிந்திக்காதே. மானுக்கு என்ன ஆனதோ என்ற ஆர்வத்தால் வந்தேன் என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நண்பர்களின் சேர்க்கைதான் அருமருந்து. பிரிவையும் சொத்து நாசத்தையும் தாங்க முடியாது. நல்ல நண்பர்களைத் தங்குதடையின்றி சந்தித்து பழகும் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் நல்ல பாதைகளை அமைக்கலாம். ஆழ்ந்த அன்பு செலுத்தும் நண்பர்கள் குணமுள்ள மனைவி அனுதாபமுள்ள எஜமானன் இவர்களிடம் துயரத்தை வெளியிடுவதால் மனதிற்குச் சாந்தி ஏற்படும்.

ஆழ்ந்த அன்பு கொண்ட உங்களைப் போன்ற நண்பர்களின் பிரிவால் கண்கள் ஏக்கம் கொண்டு அலைகிறது. மனம் துயருற்று ஏங்கித் தவிக்கின்றது. உங்களைப் பிரிவதைவிட உயிர் போவதுமேல். மறுபிறப்பில் உயிர்கிட்டும். உங்களைப்போன்ற நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள் என்றது ஆமை. இந்தச் சமயம் வேடன் அங்குவரவே மான் ஓட, காக்கை பறக்க, எலி பொந்துக்குள் புகுந்தது.

மானைக் கட்டியிருந்த கட்டுக்கள் அறுபட்டிருப்பதைப் பார்த்து மான்களால் அவ்வாறு செய்ய முடியாது. இப்படி அறுபட்டு இறுப்பதால் அது ஒர்தெய்வீக மானாக இருக்கும் என நினைத்தான். அப்போது அங்கு ஆமை இருப்பதைப் பார்த்து இருக்கத் தகாத இடத்தில் இந்த ஆமை இருக்கின்றது. மானுக்குப் பதில் ஆமை கிடைத்துள்ளது என நினைத்து புல்லினால் கயிறு தயாரித்து ஆமையின் இருகால்களையும் வில் நுனியில் கட்டினான். வந்த வழி சென்றான்.

வேடன் ஆமையைத் தூக்கிச்செல்வதைப் பார்த்த எலி, இது என்ன கஷ்டம் ஒரு நண்பனை விடுவித்தால் உடனே அடுத்த நண்பன் மாட்டிக்கொண்டானே என்ன செய்வது என யோசித்தது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- கஷ்டப்பட்டு சமுத்திரத்தின் கரையை அடைந்தாலும் எளியவனுக்கு மீண்டும் ஒரு துயரம் வரும். எளியவரை துயரங்கள் தொடரும் என்பது விதி. பட்ட இடத்தில்தான் மீண்டும் படும். உணவில்லாத போதுதான் பசி அதிகமாகும். ஆபத்துக் காலத்தில்தான் பகை அதிகரிக்கும். கால் தடுக்காதவரை சமதரையில் நன்றாக நடப்பான். தடுக்க ஆரம்பித்தால் ஒவ்வொரு அடிக்கும் தள்ளாடுவான்.

என்ன விதி இது. என்னை விடாமல் தொடருகிறதே. என் பணம் நாசமாயிற்று. உறவினர்கள் நிந்தனை செய்தனர். நாடுவிட்டு நாடு வந்தேன். பிரிந்த நண்பனைச் சேரும்போது மற்ற நண்பனை பிரிய நேருகின்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- ஆபத்தில் உதவுகின்ற நண்பன், குணமும் குலமும் உள்ளபெண் இவர்களை வாழ்வில் காண்பது அபூர்வம். போலி நண்பர்கள் எப்போதும் கிடைப்பார். குணம் சிறந்த நண்பர்கள் கிடைப்பது அரிது. அதற்குப் பாக்கியம் செய்தல் வேண்டும். நண்பனிடம் பெறும் நிம்மதியை தாயிடமோ, மனைவிடமோ, மகனிடமோ, சகோதரனிடமோ காணமுடியாது. நண்பர்களின் பினைக்கும் அன்பு அனுபவிக்க அனுபவிக்க குறையாது. அதை மரணத்தைத் தவிர வேறு யாரும் பறிக்க முடியாது.

உண்மையில் எனக்கு பணம் போனதில் வருத்தமில்லை. அதிர்ஷ்டமிருந்தால் போனச் சொத்து திரும்பிக் கிடைக்கும். பண நஷ்டத்துடன் நட்பின் நஷ்டம்தான் என்னை வருத்தத்தில் ஆழ்த்துகின்றது. நான் செய்த செய்கைகளின் நற்பயனையோ, தீயபயனையோ மறுபிறப்பில் அனுபவிப்பதற்குப் பதில் இந்தப்பிறவியில் அனுபவிக்கின்றேன் என வருந்தியது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- நல்ல சேர்க்கையில் நட்பு வளரும். ஒவ்வொரு மூச்சிழையிலும் அன்பு பொழியும். அன்புக் கயிற்றால் பினைக்கப் பட்டதை சாவு ஒன்றுதான் அறுக்கும். வாழ்வில் மூப்பும் நரையும் வந்திடாவிட்டால் அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிவு ஏற்படாவிட்டால் எதுவும் சாகும் என்ற நிலை இல்லாவிட்டால் இந்த வாழ்வில் யாருக்கும் விருப்பம் இருக்காது.

அப்போது மானும் காக்கையும் அங்கு வந்தது. மூன்றும் நடந்த நிகழ்வுக்கு வருந்தின. எலி சொன்னது ஆமை நம் கண்ணிலிருந்து மறையாதிருக்கும் வரை அதைக் காக்க நமக்கு வழி இருக்கின்றது. எனவே, மான் நண்பனே, நீ வேடன் முன்னே சென்று அவன் வரும் வழியில் உள்ள நீர் நிலை அருகில் இறந்து கிடந்ததுபோல் கிட. காக்கையே நீ மானின் கொம்புகளில் இருந்துகொண்டு அதன் கண்களைக் கொத்துவதுபோல் பாசாங்கு செய். ஆசை அதிகம் கொண்ட வேடன் வில்லையும் ஆமையும் தரையில் போட்டுவிட்டு மான் இருக்கும் இடத்திற்குச் செல்வான். நான் அப்போது ஆமையின் கட்டுகளை அறுத்துவிடுவேன். ஆமை அதன் கோட்டையான தண்ணீருக்குள் சென்று விடும். நான் புதரில் புகுந்துவிடுவேன். நீ ஓட்டமெடுத்து தப்பித்துக்கொள்ள வேண்டும். வேடன் வில் எடுத்து அம்பு எய்தமுடியாதபடி நாணை அறுத்திருப்பேன். கவலைப்படாமல் தைரியமாகச் செயல் படுங்கள் என்றது.

இந்தத் திட்டப்படியே ஓர் நீர் நிலை அருகில் மான் இறந்ததுபோல் கிடக்க காக்கை அதன் கண்ணை கொத்துவதைப் பார்த்த வேடன் ஆகா இன்று ஓர் மானும் கிடைத்தது என சந்தோஷத்துடன் ஆமை கட்டியிருந்த வில்லைத் தரையில் வைத்துவிட்டு மான் இருக்கும் இடம்நோக்கிச் சென்றான். உடனே எலி விரைந்து ஆமையின் கட்டுக்களை அறுத்து நாணையும் கொரித்தது. ஆமை அருகில் இருந்த தண்ணிருக்குள் சென்றது. இதைப்பார்த்த காகம் பறக்க மான் எழுந்து துள்ளிக் குதித்தோடியது. வேடன் இறந்து கிடந்த மான் எழுந்து ஓடுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டன். விரைந்து வந்து வில்லில் அம்பை ஏற்றி மானைக் கொல்ல நினைத்தவனுக்கு நாண் அறுபட்டுக் கிடந்தைப்பார்த்து மீண்டும் அதிர்ச்சியானான். ஆமையும் தப்பியதை உணர்ந்தான். இது என்ன மாயம் என நினைத்து திக்குப் பார்த்து வீடு போய்ச் சேர்ந்தான்.

பின் நண்பர்கள் நால்வரும் தங்கள் குளக்கரைக்கு வந்தன. ஒன்றுடன் ஒன்று நேசம் பாராட்டின.

மறுபிறப்பு அடைந்ததுபோல் ஆனந்தமடைந்து அன்புடன் இன்பமாக வாழ்ந்திருந்தன.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- இப்படிப்பட்ட நட்பு மிருகங்களிடையே இருக்கும்போது அது விவேகமுள்ள மனிதர்களிடையே இருந்தால் மிகமிகச் சிறப்புடையதாகும். சாதனமும் செல்வமும் இல்லாமற் போனாலும், அறிவாளிகளும் கல்விமான்களும் எடுத்த காரியத்தை சிறப்பாகத் தொடுத்து முடிப்பர்.

மற்ற உயிர்களின்மேல் ஏற்பட்ட பாசம், நட்பாகி அன்புடன் மலர்ந்ததுள்ளது.

3.மூன்றாம் வாழ்க்கைத்தந்திரம்- போரும் சமாதானமும்.

பண்டிதர் தனவந்தனின் குமாரர்களான தனது சீடர்களிடம் போரும் சமாதானமும் பற்றிய தந்திர நிகழ்வுகளைத் கூறத்தொடங்கினார். ஏற்கனவே பகைவர்களாயிருந்து பின்னால் நேசம் பாராட்டுபவர்களை நம்பவேண்டாம். ஆந்தைகள் கூடிவாழ்ந்த குகைக்கு காக்கைகைகள் நெருப்பு வைத்தன. எனக்கூறி அந்த நிகழ்வு பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

காக்கைகளும் ஆந்தைகளும்: சமாதானமே சிறந்தது: அந்த நகரத்தின் அருகிலிருந்த ஆலமரத்தில் கிளைகள் பலவிட்டு பெரியதாக வளர்ந்திருந்தது. அதில் காக்கைகள் கூட்டமாக தங்களின் நிரந்தர தங்குமிடமாக மாற்றி வாழ்ந்திருந்தன. அதேபோல் அருகில் இருந்த மலைக்குகையில் ஆந்தைகள் பரிவாரமிட்டு தங்கள் கோட்டையாக வாழ்ந்திருந்தன. குகைக்கு அருகே சொல்லும் காக்கைகளை ஆந்தைகள் இரவில் கொன்று வந்தன.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பகைவனைத் தன்னிஷ்டம்போல் நடக்க அனுமதித்தாலும், சோம்பலினால் நோயைக் கவனிக்காமல் விட்டாலும், அது நாளடைவில் மெள்ள உன்னைக் கொல்லும்.

இதைக்கண்ட காக்கைகள் கூட்டத்தலைவன் தன் ஆலோசகர்களை அழைத்து விரிவாக யோசனை செய்தான். நமது எதிரி திமிர் படைத்தவன். சமயமறிந்து இரவிலே வந்து நம்மைத் தாக்குகின்றான். இரவில் நமக்குக் கண் தெரிவதில்லை. பகலில் அவன் வருதில்லை. அவன் இருப்பிடமும் தெரிவதில்லை. தெரிந்தால் போய்த் தாக்கலாம். இதற்கு என்ன உபாயம் என ஆலோசனை செய்தது. சமாதானம். சண்டை, தளத்தை மாற்றிச் செல்வது, இடம்பெயராது இருத்தல், உறவு கொள்வது, நயவஞ்சகமாக நடந்துகொள்வது ஆகிய ஆறில் எதை அனுஷ்டிப்பது என்றது.

முதல் ஆலோசகர் சொன்னான், தலைவரே. பலசாலிகளோடு சண்டையிடக்கூடாது. அவன் பலசாலிமட்டுமல்ல. சமயமறிந்து தாக்குபவானகவும் இருக்கிறான். அவனோடு சமாதானம் செய்வதே நமக்கு நல்லது என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- வல்லவனுக்கு தலைவணங்கு. தக்க சமயம் வரும்போது தலைதூக்கு. வெள்ளம் எப்போதும் தலைக்குமேல் போய்க்கொண்டிராது. எதிரியின் செல்வாக்கும் எப்போதும் மேலோங்கியிராது.

செல்வமும், குணமும், அறிவும், வெற்றிப்பரம்பரையும் பெற்று உள்நாட்டில் பிளவுகள் அற்றிருக்கும் பகைவனோடு சமாதானம் செய்து கொள்ளலாம். போர்களில் வெற்றி கொண்டவனுடன் சமாதானம் செய்தால் அவன் வல்லமையால் நம் பகைவர்கள் தலைவணங்குவர். நமக்குச் சமமானவனோடும் சமாதானம் செய்து கொள்ளலாம். உயிருக்கு ஆபத்து என்றால் துஷ்டர்களுடன் சமாதானமாகி உயிரைப் பாதுகாத்தால் பின்னால் எதையும் பெறலாம்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- எதிரிகளிடம் ஸாமம், தானம், பேதம் என்ற மூன்று உபாயங்களுக்குப்பின் கடைசியாக சண்டையிடு. சமாதானத்தின் பெருமையரியாமல் அதிகார போதையில் குருடாகி சமபலமுள்ளவனிடம் சண்டை செய்தால் சிதைவுறுவான்.

சண்டையினால் நிலம், நண்பன், பொன் ஆகியன கிடைக்கும். ஒன்று குறைந்தாலும் சண்டையினால் பயனில்லை. நல்ல பயன் கிடைக்காமல் கடும் போர் நடக்க இருக்குமானால் அங்கு சண்டையை கிளறாதே, வல்லவனோடு சண்டையிடக்கூடாது. காற்றை எதிர்த்து மேகம் போராடுமா? என்றான் முதல் ஆலோசகன்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- வல்லவர்கள் தாக்கும்போது நாணலைப்போல் தலையை குனிந்து கொடு. லட்சுமியின் அருள் எப்போதும் கிடைக்க வேண்டுமானால் பாம்பைப்போல் சீராதே. நாணல் வளைந்தாலும் மீண்டும் தலை தூக்கும். ஆமை ஓட்டுகுள் புகுந்து கொள்வதுபோல் தலை பதுங்குவது சிறப்பு. தக்க தருணத்தில் கருநாகம்போல் தலை தூக்கிப்பார்.

இரண்டாம் ஆலோசகன் சொன்னான், தலைவா, எதிரி கொடியவனாய், பேராசை பிடித்தவனாய் இருக்கின்றான். அவனோடு சமாதானம் செய்யக்கூடாது. சண்டையிட வேண்டும்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சத்தியமும் தர்மமும் அற்ற சத்துருக்களுடன் சமாதானமாகப் போகக்கூடாது. கொடுமை, பேராசை, சோம்பல், பொய், மடமை, அச்சம், உறுதியின்மை, தயாரிப்பில் இல்லாமை, வீரர்களை அவமதிக்கும் போக்கு முதலிய தனமையுடைய பகைவனை சுலபாக வெல்லலாம்

அவன் நம்மை அவமானப்படுத்தியுள்ளான். அவனுடன் சமாதானம் கூடாது. நான்காவது உபாயத்தால் ஜெயிக்கவேண்டிய எதிரியிடம் சமாதானம் கூடாது. வியர்க்க வைத்து ஜுரத்தை இறக்கவேண்டியிருக்க நீரில் தலைகுளிக்கச் செய்வார்களா? மிகுந்த கோபம் உள்ளவர்களிடம் சமாதானம் பேசுவது கொதிக்கும் எண்ணெய்யில் தண்ணீர் துளிகளை விடுவது போலாகும். அவன் பலசாலி என ஏற்க முடியாது. உக்கிரமுள்ள தலைவனை எதிரிகள் தலைவணங்குவர். அவன் இரக்கங் காட்டுபவனாயிருந்தால் எதிரிகள் அவனை நாசம் செய்வர் என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சிங்கம் தன்னைவிட பெரிய யானையைக் கொல்வதுபோல் உற்சாகமும் திறமையும் உடைய மெலியவன் வலுவுள்ள எதிரியை ஜெயிக்க முடியும்.

மூன்றாமவனைப்பார்த்து அவன் ஆலோசனையைகேட்க, அந்த துஷ்டகன் பலமுள்ளவன், மரியாதையில்லாதவன். அவனோடு சண்டையிடுவதும், சமாதானமாக போவதும் சரிவராது. இந்த தளத்தைவிட்டுச் செல்வதே நல்லது. தளமாற்றத்தால் ஆபத்திலிருந்து உயிரை காத்துக்கொள்ளலாம், வெற்றிக்காக திட்டமிட்டு செயல்பெற அவகாசம் பெறலாம். எதிரி சங்கடத்தில் சிக்கியிருக்கும்போதும் பலவீனனாயிருகின்றபோதும் தாக்க தகுந்த காலம். தீரர்களையும் வீரர்களையும் வைத்து தளத்தைப் பலப்படுத்திக்கொண்டு ஒற்றர்மூலம் தகவல்பெற்றுத் தாக்க வேண்டும். தற்போது தளத்தை மாற்றுவதே சிறந்தது என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- ஆடு பின்வாங்குவது பலமாக முட்டுவதற்கே. மிருகங்கள் பதுங்குவது பாய்வதற்கே. புத்திசாலிகள் எல்லாவற்றையும் பொறுத்து நெஞ்சில் இரகசியமாய் வைத்திருப்பர். பலவீனன் அகங்காரம் கொண்டு பலசாலியோடு சண்டை செய்தால் எதிரியின் விருப்பம் நிறைவேறும். பொறுமையுடன் நாட்டைவிட்டுச்சென்ற யுதிஷ்டிரன் பின்னாலில் வெற்றி பெற்றான்.

நாம் சண்டையின்றி சமாதானமின்றி பின்வாங்குவதே நம் குலத்தை பாதுகாக்கும் வழி என்றான்.

நான்காவது ஆலோசகனிடம் கேட்க, எனக்கு சண்டை, சமாதானம், தளமாற்றம் மூன்றும் சரியெனத் தோன்றவில்லை. அதிலும் தளமாற்றம் முற்றியிலும் சரியில்லை. ஏனெனில் முதலை தன் இருப்பிடத்தில் இருந்தால் யானையைகூட வெண்றுவிடும். தன் இடத்தை விட்டு நகர்ந்தால் நய்கூட அதைத் தோற்கடிக்கும். பலசாலிகள் தாக்கும்போது கோட்டைக்குள் இருந்துகொண்டு நண்பர்களை உதவிக்கு அழைத்து வெற்றிக்கு முயற்சிக்க வெண்டும். எதிரிக்கு பயந்து தன் இருப்பிடத்தை காலிசெய்தவன் மீண்டும் அங்கு வருவதே இல்லை. நமது இடத்தில் சண்டைக்குமுன் வேண்டியதை சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும். சண்டையில் பிழைத்தால் புகழ், இறந்தால் சுவர்க்கம் கிடைக்கும் என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- மரம் பெரியதாக வேரூன்றி இருந்தாலும் தனித்து நின்றால் புயல் அதை கீழே தள்ளிவிடும். மரங்கள் கூட்டமாக வேரூன்றியிருந்தால் புயல் சுலபாக பெயர்க முடிவதில்லை. இளைத்தவனாக இருந்தாலும் எல்லோருடன் ஒன்றாக சேர்ந்தால் பலசாலிகளால் துன்புறுத்த முடியாது, ஒரேயிடத்தில் கூட்டமாக வளரும் புல்புதரையை புயல் பெயர்க்கமுடியாததுபோல்.

ஐந்தாவது ஆலோசகன் சொன்னான், உறவு கொள்வதே சிறந்தது. ஒரு பலசாலியுடன் உடன்படிக்கை செய்து எதிரிக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு பலம் சேர்க்கமுடியும். சொந்த இடத்தைவிட்டு சென்றால் யாரும் வார்த்தையால்கூட உதவ மாட்டார்கள்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சாமர்த்தியமும் தீரமும் இருந்தாலும், மற்றவர் உதவியில்லாமல் ஒன்றும் செய்யமுடியாது. காற்று உதவி செய்யாவிடில் நெருப்பு தானாகவே அனைந்துவிடும். காட்டில் எரியும் நெருப்புக்கு காற்று உதவியாக இருந்தாலும் அதே காற்று விளக்கை அனைக்கும். இளைத்தவனை மதிப்பதில்லை. மூங்கில் பலமில்லாததாக இருந்தாலும் கூட்டமாக இருந்தால் அதை சாய்ப்பது கஷ்டம்.

பலமில்லாதவர்கள் ஒன்றாய்ச் சேர்ந்திருந்தால் அவர்களை வெல்ல முடியாது. அப்படியிருக்க பலசாலிகளுடன் அவர்கள் உறவும் வைத்தால் வெற்றி அவர்கள் வசம். பெரியவர்களுடன்  ஒன்று சேர்ந்தால் உயர்வு உண்டு. உறவு கொள்வதின்றி வேறுவிதத்தில் பலம் சேர்க்க முடியாது என்பதே என் கருத்து.

ஆறாவது ஆலோசகனை நோக்கி  அன்பரே நீங்கள் என் தந்தை காலத்திலிருந்து ஆலோசகராக இருப்பவர். உங்கள் முன் இவர்களிடம் ஏன் கேட்டேன் என்றால் இவர்கள் கூறும் கருத்திலிருந்து சிறந்தவற்றை யோசித்து தேர்ந்தெடுக்க உங்களால் மட்டுமே முடியும். எனவே உங்கள் ஆலோசனையை சொல்லுங்கள் என்றான் தலைவன்.

இவர்கள் எல்லோரும் நீதி சாஸ்திரங்களிலிருந்து சொல்லியுள்ளார்கள். அந்தந்த காலத்தில் ஒவ்வொன்றும் சரியானதே. ஆனால் தற்போது பலம்வாய்ந்த எதிரியை நயவஞ்சமாக நடந்து வெல்வதே சரியாக முடியும். அவனின் பலவீனம் தெரிந்து தாக்க வேண்டும் என்றார்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- விரோதிகளை முதலில் தாங்களாகவே வளர்த்துவிடுகின்றனர். சக்கரைப்பாகு முதலில் ஜலதோஷத்தை அதிகரிக்கச் செய்தாலும் முடிவில் அதைப் போக்கிவிடும். பெண்கள், பகைவர்கள், கெட்ட நண்பர்கள், குறிப்பாக விலைமாதர்கள் இவர்களிடம் நேர்மையாக நடப்பவன் நன்றாக வாழ்வதில்லை. கடவுள், பிரம்மணன், குரு ஆகியோரிடமும், தன்னிடமும் ஒருவன் நேர்மையாகவும் மற்றவர்களிடம் கபடமாகவும் நடக்க வேண்டும். மனதை அடக்கும் சந்நியாசி உலகை நேராகப் பார்க்கலாம். மற்றவர்கள் அப்படி நடப்பதில்லை.

எதிரியின் இருப்பிடமே தெரியவில்லை. பின் எப்படி பலவீனம் தெரியவரும் என்றான் தலைவன்.

ஒற்றர்கள் மூலம் எல்லாம் கண்டு பிடிக்க முடியும். சிறந்த ஒற்றன் தரும் தகவல் என்றும் சிறப்பானது. பசுக்கள் வாசனை மூலமும், பிராமணர்கள் வேதங்கள் மூலமாகவும், தலைவர்கள் ஒற்றர் மூலமாகவும் மற்றவர்கள் தன் கண்கள் மூலமாகவும் பார்ப்பர். எதிரி தரப்பில் உள்ள அனைத்து உதவியாளர்களையும் ஒற்றறிந்து அவர்களைத் தனித்தனியே பிரித்துவிட்டால் எதிரியை வெல்லலாம். நம் தரப்பில் உள்ள வைத்தியன், வானசாஸ்திரி, குரு, உளவு வேலை செய்பவர்கள் எதிரிவசமுள்ளவற்றை அறிந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் உதவி செய்தால் போதும்.

காக்கைகளும் ஆந்தைகளும் கொன்று கொள்ளும் அளவிற்கு ஏன் இந்த பகை எனத் தலைவன் கேட்க, பெரியவர் சொல்ல ஆரம்பித்தார்.

தலைவனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்: அந்த காட்டில் பறவைகள் எல்லாம் ஒன்று கூடி ஆலோசனை செய்தன. நம் தலைவன் கருடன் மகாவிஷ்ணுவிற்கு பணிவிடை செய்துவருவதால் நம் பிரச்சனைகளுக்கு அவரால் தீர்வு சரியாக காணமுடிவதில்லை. போலியாக தலைவராக இருப்பதால் நமக்குப் பயன் இல்லை. எனவே நமக்கு தலைவராக நம்முள் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்தன.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- துக்கங்கள், துயரங்கள் ஏற்படும்பொழுது அதிலிருந்து காப்பாற்றுபனே தலைவன். துயரத்தால் பீடிக்கப்பட்டு பயந்தவர்களை காப்பாற்றாதவன் தலைவன் உருக்கொண்ட யமனாக கருதப்படுவான். அறிவுக்குறைவான பண்டிதன், வேதம் கற்காத புரோகிதன், மக்களைக் காக்காத தலைவன், வெறுப்பாகப் பேசும் மனைவி இவர்களை ஒட்டை விழுந்த படகை விட்டுச்சொல்வதுபோல் துறந்துவிடவேண்டும்.

எல்லாப் பறவைகளும் சேர்ந்து ஆந்தையை தலைவனாக்க முடிவு செய்தது. அப்போது காக்கை அங்கு வந்தது. காக்கை சொன்னது. நமக்கு ஏற்கெனவே தலைவராக கருடன் இருக்கும்போது இன்னொருவரைத் தலைவராக ஆக்குவது சரியில்லை. ஆந்தை குரூர முகமுடையது. பகலில் கண் தெரியாதவனை தலைவனாக்குவதில் பிரயோஜனமில்லை என்றது. பல தலைவர்கள் இருந்தால் பிரளயகாலத்தில் தோன்றும் பலசூரியர்கள் போன்று நாசம்தான் விளையும். கருடன் போன்ற பெரிய தலைவர்களின் பெயரை கேட்டாலே துன்புறுத்த யாரும் அனுகமாட்டார்கள். சந்திரனிடமிருந்து பெரிய காரியமாக வந்திருப்பதாக பாசாங்கு செய்த முயல் சுகமாக வாழ்ந்தது. என காக்கை சொல்ல அது எப்படி எனக்கேட்டன மற்ற பறவைகள்.

யானையை ஏமாற்றிய முயல்: அந்தக் காட்டில் வாழ்ந்த யானைகளுக்கெல்லாம் தலைவனாக இருந்த யானை தன் கூட்டத்தை காத்து வந்தது. பல வருடங்களாக மழையில்லாததால் மழை நீர் சேமித்து இருந்த இடங்களெல்லாம் வற்றியதால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு தாகம் தீர்க்க முடியாமல் யானைகள் இறக்கும் நிலை ஏற்பட்டது. எனவே தலைவன் நீர் இருக்குமிடம் அறிந்துவர ஏற்பாடுகள் செய்தான். கிழக்குத் திசையில் சென்ற சேவகன் ஓர் அழகிய சுற்றிலும் பசுமை நிறைந்த மரங்களுடன் கூடிய ஏரியைக் கண்டதாகச் சொல்ல அங்கு தன் கூட்டத்துடன் தலைவன் சென்று அனைவரும் தாகசாந்தி செய்து குளித்து காட்டுக்குள் திரும்பின. யானைகள் கூட்டமாக ஏரிக்குள் இறங்கும்போது அங்கிருந்த வளைகளில் இருந்த முயல்கள் நசுங்கி இறந்தன.

யானைகள் திரும்பிச் சென்றதும் மீதமிருந்த முயல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து யானைகள் வரவால் நம் கூட்டத்தில் பலர் இறந்துவிட்டனர். இனி நீர்தேடி யானைகள் வரும்போதெல்லாம் நமக்குத்தான் ஆபத்து, என்ன செய்யலாம் என யோசனை செய்தது. அந்த முயல்கூட்டத்தின் தலைவனைப் பார்த்து, நீதி சாஸ்திரம் அறிந்த ஒரு முயல் நீங்கள் பயப்படவேண்டாம். நான் தூது செல்கிறேன். அவர்கள் இனி இங்கே வரமாட்டார்கள். என் இஷ்டதெய்வத்தின் அருள்படி நடக்கும் எனக் கூறியது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- அதிகமாகப் பேசாமல் இதமாகவும், மிதமாகவும் நன்றாய் யோசித்தும் அர்த்தத்தை அலசியாரய்ந்தும் பேசுகிறவனால் எல்லாக் காரியத்தையும் சாதிக்க முடியும். ஒரு தூதனைப்பார்த்தே அவனின் தலைவனைப் எடைபோடலாம். தூதன் தன் பேச்சு சாதுரியத்தால் முடிச்சும் போடுவான். அதை அவிழ்க்கவும் செய்வான். தூதனின் செயலால் பல தலைவர்கள் வென்றிடுவர்.

யானைக்கூட்டத்தை சந்திக்க சென்ற முயல் அங்கு யானைகள் ஏரிக்குப் புறப்படத் தயாரகுவதைப் பார்த்தது. அவைகள் இருக்கும் நிலையில் அருகே நெருங்குவதே ஆபத்துபோலத் தெரிந்தது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- யானை தொட்டாலும், பாம்பு மூச்சுவிட்டாலும், தலைவர்கள் சிரித்தாலும், துஷ்டன் கௌரவித்தாலும் அது இறப்பு ஒன்றுதான்.

ஆகவே யானைகள் தாக்கமுடியாத இடமாக பார்த்து அமர்ந்துகொண்டு, யானைக் கூட்டத் தலைவனைப் பார்த்து, நீங்கள் சௌக்கியமா என்றது.

யானைத் தலைவன், யாரது? நீ யார்? உன்னை யார் அனுப்பியது?

நான் ஒரு தூதன். சந்திரபகவான் என்னை அனுப்பினார் என்று முயல் கூறியது. தன் காரியத்தை நிறைவேற்ற வந்திருக்கும் தூதுவனுக்கு கெடுதல் செய்யக்கூடாது. என்பதை தாங்கள் அறிவீர்கள். எல்லா தலைவர்களுக்கும் தூதுவனே வாய் என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சண்டையிட்டு எதிர்களையும், பந்துவர்க்கங்களையும் கொன்று கொண்டிருந்தாலும், அவர்களின் தூதன் நிந்தனை செய்தாலும் அவனைக் கொல்லக்கூடாது என்பதே சாஸ்திரம். தன் பலத்தையும் உணராமல், பிறர் பலத்தையும் விசாரித்தறியாமல் முட்டாள்தனமாக காரியத்தில் இறங்குபவன் ஆபத்துக்களை விரும்பிச் சேர்வான்.

சந்திரபகவானின் கட்டளையின்பேரில் சொல்கிறேன். நீ உன் பலத்தையோ எதிரியின் பலத்தையோ தெரிந்து கொள்ளாமல் ஏன் பிறருக்கு பாதகம் செய்கிறாய். என் பெயரில் இருக்கும் அந்த சந்திர சரசை நீ உன்கூட்டத்துடன் சென்று கலக்கி விட்டாய். அங்கே பல முயல்களை நீ கொன்றுள்ளாய். இனியொருமுறை நீ அங்கே செல்லக்கூடாது. அப்படி சென்றால் நான் நிலவைப் பொழியாமல் இருப்பேன். சூரிய கதிர்கள் வெப்பத்தால் நாள் முழுக்க நீங்கள் கஷ்டப்படவேண்டும். அங்கு போகாமல் இருந்தால் உங்களுக்கு நன்மை உண்டாகும். என் நிலவொளியில் நீங்கள் இந்தக் காட்டில் உங்கள் இஷ்டம்போல் விளையாடி களித்திருக்கலாம் எனச் சொல்லியது.

யானைக்கூட்டத் தலைவன் மிகவும் யோசித்தது. மனக்கவலையடைந்தது. துதுவனே, நான் சந்திரபகவானுக்கு பாதகம் செய்து விட்டேன். இனி அவ்வாறு செய்யமாட்டேன். அவர் மன்னிப்பை பெற ஓர் வழிசொல் என்றது.

நீங்கள் மட்டும் என்னுடன் வாருங்கள் என தலைவனைக் கூட்டிச் சென்று அமைதியாய் இருக்கும் ஏரியில் தோன்றிய சந்திரனைக் காட்டியது. யானை நான் செய்ததை மன்னித்து விடுங்கள் என்று தன் துதிக்கையை நீரில் விட நீர் கலங்க ஒருசந்திரன் அலைகளால் பல சந்திரனாகத் தெரிந்தது.

நீரைக் கலக்கி சந்திரபகவானை கோபமடையச் செய்து விட்டீர்கள் என்றது முயல்.

யானைத்தலைவன் உடனே பூமியில் குனிந்து மன்னிப்பு கோரியது. நண்பனே இனி நானோ என் கூட்டமோ இங்கு வராது. எங்களை மன்னித்து இரவில் நிலவை பொழியச்சொல் என்று கூறி காட்டிற்குள் சென்றது..

அதனால்தான்,’ பெரிய காரியமாக வந்திருப்பதாக பாசாங்கு செய்த முயல்..’ எனச் சொன்னேன் என்றது காக்கை. மேலும் சொன்னது இந்த ஆந்தை ஓர் துர் ஆத்மா. பாப எண்ணங்கொண்டது. நீசன். நம்பியவர்களை காப்பாற்றும் சக்தியற்றது. காப்பது இல்லையென்றாலும் அவனால் ஆபத்து உண்டாகுமே என்றது. ஒரு நீசன் நீதிபதியாக அமர்ந்தால் வாதிப் பிரதிவாதிகளுக்கு என்ன சுகம். பூனையிடம் நியாயம் கேட்டதால் முயலும் தித்திரிப்பறவையும் இறந்தன. என்ற காக்கையிடம் அது எப்படி என்றன மற்ற பறவைகள்.

பூனையின் தீர்ப்பு: அந்தக் காட்டில் இருந்து வந்த மரத்தில் நான் வசித்துவந்தேன். அந்த மரத்தின் அடியில் தித்திரிப்பறவை வசித்திருந்தது. நாங்கள் இருவரும் உணவு உண்டபின் நீண்டநேரம் நீதி, புராணக் கதைகளைச் சொல்லிக்கொள்வோம். ஒருவருக்கொருவருர் அன்புடன் காலம் கழித்துவந்தோம். மற்றப் பறவைகளுடன் இறைத்தேடச் சென்ற தித்திரி திரும்பி வரவில்லை. யார் வலையில் சிக்கிக்கொண்டதோ. அதற்கு என்னவாயிற்றோ என பலவாறு ஆலோசித்தேன். பலநாட்கள் கழிந்தன. ஒருநாள் தித்திரிப் பறவை வாழ்ந்த பொந்தினுள் ஓர்முயல் நுழைந்தது. தித்திரி வரும் என்ற நம்பிக்கையில்லையாதலால் நான் அந்த முயலைத் தடுக்கவில்லை.நிறைய உணவை உண்டதால் உடல் பருத்து, தன் பழைய இடத்தின் நினைவு வரவே தித்திரி திரும்பி வந்தது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- ஒருவன் ஏழையாயிருந்தாலும் தன் சொந்த நாட்டில், ஊரில், வீட்டில் பெறுகிற இன்பம் வேறு எங்கும் நிம்மதியுடன் கிடைக்காது.

தான் வசித்துவந்த பொந்தில் முயல் இருப்பதைக்கண்ட தித்திரி, முயலே இது என் இருப்பிடம், நீ இடத்தைக் காலிசெய் என்றது.

நீ இருக்குவரைதான் இது உன் இடம், இங்கிருந்துபோய் பலநாட்கள் ஆனதால் நீ உரிமை கொண்டாட முடியாது. உன் இடமாக இருந்தாலும் நான் நுழையும்போது இது காலியாகத்தான் இருந்தது. எனவே  எனக்குத்தான் சொந்தம்.

தர்ம சாஸ்திரத்தில் சொல்லியபடி அண்டை அயலாரிடம் கேட்கலாம் என இரண்டும் முடிவெடுத்தன. என்ன நடக்கும் என்ற ஆவலில் நானும் பின் தொடர்ந்தேன்.  யாரிடம் தீர்வு காணப்போகலாம் என்றபோது அருகில் இருக்கும் ஓர் பூனையிடம் செல்லாம் என்று தித்திரிகூற இருவரும் அங்கு சொன்றனர். பூனையைப் பார்த்ததும் முயல் சொன்னது, இந்த போக்கிரியிடம் வேண்டாம் என்று.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தவக்கோலத்தில் இருந்தாலும் நீசர்களை நம்பக்கூடாது. புண்ணிய ஸ்தலங்களில் கபட சந்நியாசிகள் காணப்படுவர்.

முயலின் வார்த்தைகளைக் கேட்ட பூனை தான் நல்லவன் என நம்பவைக்க விரும்பியது. அதனால், மேலே அன்னாந்து சூரியனைப் பார்த்து இந்த சம்சாரமே சாரமில்லாதது. உயிர் ஓர் விநாடியில் போகக்கூடியது. காதல் வாழ்க்கை கனவுக்குச் சமம். குடும்பப்பற்று ஓர் இந்திர ஜாலம். அறவழியைவிட்டால் வேறுகதியில்லை என இரண்டும் நம்பும்படி பசப்பியது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- அறவழி பற்றி நிற்காதவன் துருத்திபோல் மூச்சு வாங்கிக்கொண்டிருப்பான். நாட்கள் வந்து போய்க்கொண்டிருக்கும். மானத்தையும் மறைக்காமல், ஈயையும் கொசுவையும் ஓட்டாமல் இருக்கிற நாய்வால்மாதிரி அறவழியில் நிற்காத கல்வியும் வீணே. தானியங்களில் பதர், வௌவால் பறவை, கொசு பூச்சி ஆகியவற்றிற்கு தர்மம் என்பது கிடையாது.

மேலும் திடசித்தமே எல்லாக் காரியங்களுக்கும் சிறந்தது. எவ்வளவு தளைகள் ஏற்பட்டாலும் தர்ம சிந்தனையே துரிதமாக வேலையை முடிக்கும். புண்ணியம் தேடுவதனால் பரோபகாரம்செய். பாவம் தேடுவதால் பிறரைத் துன்புறுத்து.

என்ற பூனையின் தர்ம உபதேசத்தை கேட்ட முயல், இவன் தபஸ்வியாகவும், தர்மவாதியாகவும் இருகிறான் என்றது. இருப்பினும் இவன் நம் இயற்கை விரோதி. தூரத்தில் இருந்து கேட்போம் என்றது தித்திரி. எங்களிடையே ஒர் வழக்கு உள்ளது. அதை தர்மப்படி தீர்த்துவை. யார் பொய் சொல்லுகிறார்களோ அவர்களை நீ சாப்பிட்டுவிடு என்றன.

நண்பர்களே, அப்படிச் சொல்லாதீர்கள். பலாத்காரச் செய்கை நரகத்திற்கு வழிகாட்டியாகும் என்று நடித்தது பூனை.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- அறத்தின் முதல் கோட்பாடு அகிம்சை. எல்லோரிடமும் இதமாக நடந்துகொள். இம்சை செய்யும் மிருகங்களைத் தயையின்றி கொல்பவன்கூட கோரமான நரகத்தை அடையும்போது ஒரு பாவமும் அறியத பிராணிகளைத் துன்புறுத்துபவன் பற்றி ஏதும் சொல்ல வேண்டியதில்லை. யாக காரியங்களுக்கு பசுக்களைக் கொல்கிற மூடர்கள் சுருதியின் உள் அர்த்தத்தை அறியாதவர்கள். ஆடுகளை அஜம் கொண்டு யாகம் செய்யவேண்டும் என்றால் அஜம்- 7வருட புழக்கத்திலிலுள்ள தானியம் என்று அர்த்தம்.

நான் யாரையும் சாப்பிடமாட்டேன். நான் கிழவன். உங்களில் தோற்றவன் ஜெயித்தவன் என எப்படி தீர்மானிப்பேன். அருகில் வந்து வழக்கைச் சொல்லுங்கள். நியாயம் அறிந்து தீர்ப்பைச் சொல்கிறேன் என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- கர்வத்தாலோ, பேராசையாலோ, கோபத்தாலோ, பயத்தாலோ, நியத்திற்கு மாறாக நடப்பவன் நரகத்தை அடைவான். ஒரு ஆட்டிற்கு தீங்குசெய்வது ஐந்து உறவினருக்கும்,  ஒரு மாட்டுக்கு தீங்கு செய்வது பத்துபேர்களை கொல்வதற்கும், ஒரு பெண்ணுக்கு தீங்கு செய்வது நூறு பேர்களைக் கொன்ற பாவத்திற்கும், ஒரு மனிதனுக்கு தீங்கு செய்வது ஆயிரம் பேரை கொல்வதற்கும் சமம்.

பூனையின் வார்த்தைகளை நம்பிய முயலும், தித்திரி பறவையும் அருகில் சென்றன. அருகில் இரண்டும் வந்ததும் அவைகளின்மேல் பாய்ந்து ஒன்றை தன்கால் நகங்களாலும் மற்றதை தன் வாயினாலும் கவ்வியது பூனை. இரண்டும் உயிரிழந்தன. அதனால்தான்,’ ஒரு நீசன் நீதிபதியாக அமர்ந்தால் வாதிப் பிரதிவாதிகளுக்கு என்ன சுகம். பூனையிடம் நியாயம் கேட்டதால் முயலும் தித்திரிப் பறவையும் இறந்தன…’ என்றெல்லாம் சொன்னேன். என்ற காக்கை மேலும் சொன்னது பகலில் கண்தெரியாத இந்த ஆந்தையை தலைவனாக்கினால் இரவில் கண்தெரியாத உங்களுக்கும் இந்த தித்திரிப்பறவையின் கதிதான் ஏற்படும். எனவே நன்றாக யோசனை செய்து தக்க முடிவு எடுங்கள் என்றது.

காக்கையின் வார்த்தையில் உள்ள ஞாயத்தை அனைத்து பறவைகளும் ஒத்துக் கொண்டன. மகுடாபிஷேகம் நடக்கும் என நம்பியிருந்த ஆந்தையிடம் அதன் மனைவி ஒரு காக்கைவந்து உங்கள் பதவியை நிறுத்தி வைத்துவிட்டது. என்றது. அதனால் துக்கம் அடைந்த ஆந்தை, காக்கையைப் பார்த்து ஏ, துஷ்டா ஏன் இந்த பாதகம் செய்தாய். இனி நாம் இருவரும் பகைவர்களே எனக்கூறி தன்மனைவியுடன் இருப்பிடம் நோக்கிச் சென்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- அம்பால் அடிபட்டாலும், மழுவினால் வெட்டுப்பட்டாலும், காட்டுமரங்கள் வளரும். ஆனால் வெறுப்பூட்டும் கெட்ட சொற்களால் உண்டாகும் புண் ஆறுவதேயில்லை.

காக்கை யோசித்தது, வீணாகப் பேசி பகைமையை சம்பாதித்துக் கொண்டேனோ!

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சமய சந்தர்ப்பம் அறியாத பேச்சு, தகுதியற்ற பேச்சு, கொடூரமான வெறுப்பான பேச்சி, காரணமற்ற பேச்சு, தனக்கும் நனமையளிக்காத பேச்சு ஆகியவைகள் விஷமத்தனமாக முடிகின்றன. ஒருவன் பலசாலியாகவும், புத்திசாலியாகவும் இருந்தாலும் தானாக பகைமையை உருவாக்கிக் கொள்ளக்கூடாது. வைத்தியர் அருகில் இருக்கிறார் என்பதற்காக விஷம் அருந்தக்கூடாது! நான்கு பேர் நடுவில் உண்மையான செய்தியாக இருந்தாலும் அது வருத்தமளிக்கிறதாக இருந்தால் அதைப் பேசக்கூடாது.

இப்படித்தான் நமக்கும் ஆந்தைக்கும் பரம்பரை பகை உண்டாயிற்று. இந்நிலையில் நாம் என்ன செய்வது என காக்கைத் தலைவன் யோசித்தான். ஆறு உபாயங்களைக் காட்டிலும் மேலான வழி அது என வயதில்மூத்த ஒருவன் சொன்னான். எதிரிகளை வஞ்சித்து கொல்லத்தக்க நிலைக்குக்கொண்டு வருகிறேன் என முடிவு செய்து, அதிக அறிவும், ஞானமும், பலமும் ஒருவனுக்கு இருந்தாலும் அவனை திறமையுள்ள போக்கிரிகள் வஞ்சிக்க முடியும். ஆட்டைச் சுமந்து சென்ற பிராம்மணன் வஞ்சிக்கப்பட்டதுபோல எனக்கூற அது எப்படி எனத் தலைவன் கேட்க சொல்லலானான்.

வேதியனும் திருடர்களும்: அந்த ஊரில் இருந்த பிராம்மணன் விடாமுயற்சியுடன் வேத அக்கினி ஹோத்திரங்களை செய்து வந்தான். ஒருநாள் அருகில் உள்ள ஊருக்குச் சென்று இன்னொரு பிராம்மணனிடம் நான் வரும் அமாவாசையன்று யாகம் செய்யப் போகிறேன் ஒரு பசுவை நீ தானமாக கொடு என்றதற்கு அவன் ஓர் கொழுத்த ஆட்டைக் கொடுக்க அதைதன் தோளில் தூக்கிக்கொண்டு தன் ஊருக்கு திரும்பி கிளம்பினான்.

வரும் வழியில் மூன்று போக்கிரிகள் பசியால் தொண்டைவறண்டு இருந்தவர்கள் பிராம்மணன் ஆட்டைத்தூக்கி வருவது கண்டு எப்படியாவது இவனை ஏமாற்றி இந்த ஆட்டை கைப்பற்றினல் நம் பசி தீரும் என திட்டமிட்டனர்.

ஒருவன் தன் வேஷத்தை மாற்றிக்கொண்டு அவனிடம் வந்து, ஓ பிராம்மணனே ஒழுக்கத்திற்கு விரோதமான கேலிக்கிடமளிக்கும் செய்கையை ஏன் நீ செய்கிறாய், அழுக்குப்பிடித்த நாயை சுமந்து சொல்கின்றாயே, நாய், கோழி, சண்டாளான், கழுதை, ஒட்டகம் இவைகளைத் தொட்டாலே தோஷம் என்றான்.

பிராம்மணனுக்கு கோபம்வர, நீ என்ன குருடனா, ஆட்டை நாய் என்கிறாயே என்றான். அந்தமுதல் போக்கிரி சரி, கோபிக்காதே எனகூறி அகன்றான்.

சிறிது தூரம் சென்றதும் இரண்டாவது போக்கிரி எதிர் வந்து, ஏ சாதுவே, செத்துப்போன் இந்தக் கன்றுக்குட்டி உனக்கு எவ்வளவுதான் பிரியமானதாயிருந்தாலும் அதைத்தோளில் சுமந்து செல்வது சரியில்லை என்றான். கோபமடைந்த பிராம்மணன் நீ என்ன குருடனா. ஆட்டை கன்றுக்குட்டி என்கிறாய் என்றான். கோபிக்காதீர்கள் தெரியாமல் சொல்லிவிட்டேன் உங்கள் இஷ்டம்போல் செய்யுங்கள் என்றுகூறி சென்றான்.

சிறிது தூரம் சென்றதும் மூன்றாவது போக்கிரி, ஏய் நீ செய்வது சரியில்லை, கழுதையை தூக்கிக்கொண்டு நடக்கின்றாயே கழுதையை தெரிந்தோ தெரியாமலோ தொட்டால் உடுத்தியிருக்கும் ஆடைகளை துவத்து குளிக்க வேண்டும் என்றான்.

வழியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உருவமாகத் தெரியும் இது ஒருவேளை அரக்கனாயிருக்குமோ என்ற சந்தேகம் பிராம்மணனுக்கு வர அதை தரையில் போட்டுவிட்டு ஓடினான்.

மூன்று போக்கிரிகளும் ஒன்றுகூடி ஆட்டை எடுத்துச் சென்று கொன்று பசிதீர்த்தனர். அதனால்தான்,’அதிக அறிவும், ஞானமும், பலமும் ஒருவனுக்கு இருந்தாலும் அவனை திறமையுள்ள போக்கிரிகள் வஞ்சிக்க முடியும்..’ என்று சொன்னேன்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- புதிதாக வேலைக்கு வந்த வேலைக்காரனின் அடக்க ஒடுக்கம், விருந்தாளியின் புகழ்ச்சி, பெண்களின் கண்ணீர், போக்கிரிகளின் பேச்சுத்திறமை இவைகள் யாரையும் வஞ்சிக்கும் தன்மையுடையவை. பலவீனர்கள் என நினைத்து பலபேரை வஞ்சித்துக் கொள்ளக்கூடாது.

மேலும் சொன்னது பலபேர்களை பகைத்துக் கொள்ளாதே. பாம்பு எவ்வளவோ துடி துடித்தும் எறும்புக் கூட்டத்தை ஜெயிக்க முடியவில்லை. அது எப்படி என தலைவன் கேட்க சொன்னது.

பாம்பும் எறும்புகளும்: அந்தக்காட்டில் இருந்த பெரிய எறும்பு புற்றில் ஓர் பாம்பு வசித்து வந்தது. புற்றிலிருந்து வழக்கமாக வெளியேறும் துவாரத்தைவிட்டு வேறு துவாரம் வழியே வெளியேற முயற்சிக்கும்போது துவாரம் சிறியதாக இருந்ததால் அதன் உடம்பில் காயம் ஏற்பட்டு இரத்தம் வாடை வீச, அதை நுகர்ந்த எறும்புகள் பாம்பைச் சூழ்ந்து துன்புறுத்தலாயின. பாம்பு நெளிந்து வாலை சுழற்றியதால் நிறைய எறும்புகள் அடிபட்டு இறந்தன. இருந்தாலும் எறும்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பாம்பால் நீண்ட நேரம் போராடமுடியாமல் இறந்தது. அதனால்தான்,’ பலவீனர்களாயிருந்தாலும் பலபேர்களை பகைத்துக் கொள்ளாதே எனச் சொன்னேன்.

மேலும் சொன்னது நான்கு உபாயங்களுக்குமேல் ஐந்தாவதாக எனக்கு ஓர் திட்டம் தோன்றியுள்ளது. அதாவது நீ என்னை விரோதியாகப் பாவித்து என்னை நிந்தியுங்கள். எதிரிகள் நம்புவதற்காக என்மீது ரத்தத்தைப் பூசிவிட்டு மலைப்பகுதியில் பதுங்கிக்கொள். என் சாதுரியத்தால் எதிரிகளை நம்பவைத்து அவர்கள் இருப்பிடம் அறிந்து கோட்டையிலிருந்து அவர்கள் வெளியே தப்பமுடியாதவாறு அந்த பகல் குருடர்களைக் கொன்று விடுகிறேன் என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- தப்பிக்க தனிவழி இரகசியமாய் இருந்தால்தான் அது கோட்டை. இல்லையெனில் அது ஒரு பொறியாகும். வேண்டியவர்களை உயிருக்குச் சமானமாக மதித்து காப்பாற்றி வந்தாலும் பேரிடர்காலத்தில் அவர்களை காய்ந்த விறகாக கருதவேண்டும்.

என்மேல் நீ இரக்கம் காட்டாதே. எதிரியை எதிர்கொள்ளும் நேரம் வரை பணியாளர்களை உயிர் போல் காப்பாற்றி உடலைப்போல் போஷிக்கவும். இதன்பிறகு அது தலைவனுடன் சண்டையிட்டு ஏற்கெனவே திட்டமிட்டபடி ரத்தத்தை தன்மேல் தடவி படுத்துக்கொண்டது. காக்கைத் தலைவன் அருகில் உள்ள மலைக்குச் மற்றவர்களுடன்சென்று பதுங்கினான்.

இந்த தகவலைக் கேட்ட ஆந்தைகளின் தலைவன், எதிரி வேறிடம் தேடி ஓடிப்போகும்போது அவர்கள் இருப்பிடம் எதிர்ப்பின்றி விரைவில் பிடிபடும் எனக்கூறி தன் கூட்டத்துடன் காக்கைகளைத் தாக்க வந்தப்போது அங்கு ஒருகாக்கையைத் தவிர வேறு ஏதுமில்லை. அவர்கள் புதிய இடத்தில் போய் பதுங்குவதற்குள் அவர்களைத் துரத்திக் கொல்லவேண்டும் என நினைத்தான்.

அவர்கள் அங்கிருந்து போய்விட்டால் தன் திட்டம் நிறைவேறாது என நினைத்த காக்கை ஈன சுரத்தில் கத்தியது. சப்தம்கேட்ட ஆந்தைகள் அதன் அருகே வந்தபோது நான் ஆலோசகன். என்னை அந்த தலைவன் இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டான் எனக் கூறியதைக் கேட்ட ஆந்தைகள் தங்களின் தலைவனிடம் அதைச் சொன்னது. தலைவரே, நீங்கள் நேற்று பல காக்கைகளை கொன்றதால் கோபங்கொண்ட காக்கைக்கூட்டத் தலைவன் உங்கள்மேல் படையெடுத்து உங்கள் கோட்டைக்கு வருவதாக கூறினான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- வலியவனிடம் மெலியவன் நன்மைபெற விரும்பினால் அவனை மனத்தாலும் விரோதித்துக் கொள்ளக்கூடாது. அந்த விரோதத்தால் வலியவனுக்கு நஷ்டம் இல்லை. மெலியவன் விட்டில் பூச்சியாவான்.

நான் அவர்கள் பலசாலி. நாம் பலமற்றவர்கள் அதனால் அங்கு போக வேண்டாம்  அவர்களுடன் சமாதானம் செய்து கொள்ளாம் எனக்கூறியதைக் கேட்ட தலைவன் நீ அவர்கள் கட்சியா என சந்தேகப்பட்டு என்னைத் தாக்கிவிட்டான். நான் தங்களை அவன் இருப்பிடத்திற்கு கூட்டிச் சென்று அவர்கள் எல்லோரையும் நாசப்படுத்துவேன் என்றது.

இதைக்கேட்ட ஆந்தைகளின் தலைவன் தன் ஆலோசகர்களிடம் இப்போது என்ன செய்யலாம் எனக் கேட்டான். ஒருவன் சொன்னான், இதில் யோசிக்க என்ன இருக்கிறது. இவனைக் கொன்றுவிடலாம். இளைத்தவன் பலம் பெறுமுன் அவனைக் கொன்று விடவேண்டும் அவன் பலம்பெற்றால் பிறகு கொல்ல முடியாது. மேலும் வலுவில் வந்த சீதேவியைக் காலால் உதைத்தால் சாபம் கிடைக்கும் என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- காலத்தையும் காரியத்தையும் விரும்பியவனுக்கு சந்தர்ப்பம் ஒருமுறைதான் வரும். அப்போது அதைப் பயன்படுத்தாவிட்டால் மறுபடியும் அந்த சந்தர்ப்பம் கிடைக்காது.

சிதைந்த  அன்பு மீண்டும் வருவதில்லை, என்றான். அது எப்படி எனக் கேட்க சொல்லலானான்.

பொன்தந்த பாம்பு: அந்த உரில் இருந்த பிராம்மணன் உழவுத் தொழில் செய்து வந்தான். அதில் ஏதும் அவனுக்கு ஆதயமில்லாமல் இருந்து வந்தது. கோடைக்காலத்தில் மதியம் வெயில் தாங்காமல் ஒரு மரத்தினடியில் சிறிது கண்ணயர்ந்தான். அப்போது ஏதோ சப்தம்கேட்க அருகில் இருந்த எறும்பு புற்றில் ஒர் பெரிய பாம்பு படம் எடுத்து ஆடுவதைக் கண்டான். அது அந்த காட்டின் தேவதையாக இருக்கும் என் நினைத்து அதை வணங்கினான்.

பின் கொஞ்சம் பால் இறவல் பெற்று புற்றருகே வந்து தேவதையே நீ இருப்பது இதுகாறும் தெரியாததால் நான் வணங்கவில்லை. என்னை மன்னித்துவிடு. இந்தப்பாலை அருந்து எனச்சொல்லி வைத்துவிட்டுப் போனான். அடுத்தநாள் வந்து பார்த்தபோது அந்த பாத்திரத்தில் பாலில்லை. அதற்குப்பதிலாக ஒரு தங்க நாணயம் இருந்தது. இதேபோல் தினமும் வணங்கி பாலைவைத்துவிட்டுச் சென்று மாலைவந்து தங்க நாணயம் எடுத்துச் சென்றான். ஒருநாள் வெளியூர் செல்லவேண்டியிருந்ததால் தன் மகனிடம் புற்றுக்கு பால் வைக்கச் சொல்லிவிட்டு ஊர் சென்றான்.

பால் வைத்து மாலை சென்று பார்த்தபோது அங்கே நாணயம் இருப்பதைக்கண்ட மகன் இந்த புற்றில் நிறையப் பணம் இருக்கும் போலிருக்கின்றது. எனவே இந்தப் பாம்பை அடித்துவிட்டு எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்து அருகில் இருந்த கழியை எடுத்து பாம்பின் தலையில் அடிக்க அது தப்பித்து அவனைக் கொத்த அவன் இறந்தான். ஊர் மக்கள் அவன் உடலைப் பற்றி சிதையில் வைத்தனர். இரண்டு நாள்கழித்து வந்த பையனின் தந்தை பிராம்மணன் உண்மையறிந்து, உயிரினங்களிடம் தயை காட்டு, அடைக்கலம் புகுந்தவர்களை காப்பாற்று. அப்படிச் செய்யாதவர்கள் பத்மாவனத்தில் அன்னப்பறவைகள் நாசமானதுபோல் நாசமாவீர் என சொன்னான். அது எப்படி என மற்றவர்கள் கேட்க சொல்லலானான்.

அடைக்கலம் அளிக்காத அன்னங்கள்: அந்த ஊரில் இருந்த தலைவனுக்குச் சொந்தமாக ஏரி ஒன்று இருந்தது. அதில் பொன்மயமான அன்னப்பறவைகள் வசித்து வந்ததால் அதை அவன் கவனமாக பணியாட்கள் வைத்து காத்துவந்தான். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவை ஒவ்வொன்றும் ஒரு தங்க இறகை தலைவனுக்கு அளித்தன. ஒருநாள் அந்த ஏரிக்கு தங்கமயமான ஒரு பெரிய பறவை வந்தது. ஏரியில் இருந்த அன்னங்கள் அந்தப்பறவை அங்கு தங்க இடம் கொடுக்கவில்லை. இவைகளுக்கிடையே தகராறு அதிகமாகவே புதியபறவை தலைவனிடம் சென்று நீ யாராயிருந்தாலும் கவலையில்லை யாரிடம் சொன்னாலும் கவலையில்லை. இந்த ஏரியை நாங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளோம் எனக்கூறுவதாகப் புகார் சொல்லியது. தலைவர் உடனேதன் பணியாளை அனுப்பி அனைத்து அன்னங்களையும் கொன்று வரச்செய்தான். ஒன்றிரண்டு தப்பின. அதனால்தான் அடைக்கலம் தராத, அன்னப்பறவைகள் நாசமானதுபோல் நாசமாவீர் என சொன்னேன் என்றான்.

மறுநாள் பிராம்மணன் அந்தப் புற்றுக்கு பால் கொண்டு சென்றான். தன் புத்தியாலே என்மகன் இறந்தான் என பாம்பின் நம்பிக்கையைப் பெறவதற்காக கூற பாம்பு சொன்னது, தீ மூட்டிய ஈமச்சிதையை சிதைத்து விடலாம்., சிதைந்த அன்பு மீண்டும் வளார்வது கிடையாது என்றது.

ஆந்தைகூட்டத் தலைவன் தனது அடுத்த ஆலோசகரிடம் கேட்க, அவனின் பேச்சி இரக்கமற்ற பேச்சு. தஞ்சம் புகுந்தவனைக் கொல்லுவது பாவம். சரணடைந்த எதிரியை கௌரவப்படுத்தி தன் மாமிசத்தை கொடுத்து அவன் பசியைத்தணித்த புறக்கள் பற்றி நீங்கள் கேட்டதில்லை என அதுபற்றி சொல்லலானான்.

புறாவின் உயிர்த்தியாகம்: அந்தக் காட்டில் இருந்த வேடன் சிறிதும் கருணையின்றி மிருகங்கள், பறவைகள் இவற்றையெல்லாம் வேட்டையாடிவந்தான். அவனுடைய கொடூர செயல்களால் அவனின் உறவினர்கள் நண்பர்கள் எல்லாம் விலகிப் போயினர். உயிரினங்களும் அவனிடம் வெறுப்பைக் கொண்டிருந்தன. ஒருநாள் மேகம் திரண்டு கறுத்து மழைபொழிய திக்குத்தெரியாமல் அலைந்து ஓர் மரத்தடியில் ஒதுங்கினான். குளிரால் உடல் வெடவெடக்க நின்றிருந்தான். சிறிது நேரத்தில் அண்ணாந்து பார்த்தபோது வானம் தெளிந்து நட்சத்திரங்கள் தெரிந்தன. அவன் நினைவில் ஓர் புத்தியில் தோன்றியபடி, ஆண்டவனே நீயே எனக்கு அடைக்கலம் தருவாய் என உள்ளத்திலிருந்து கூவினான். அவன் இதயக்குரலைக்கேட்ட இறைவன் புறாமூலம் அவனுக்கு அறிவு புகட்ட நினைத்தார்.

அந்த மரத்திலிருந்த ஆண்புறா தன் இணை இன்னும் வராததால் வழியில் எங்கு சிக்கித் தவிக்கின்றதோ என நினைத்து வருந்தியது. வேடனின் கூண்டில் சிக்கித் தவிக்கும் பெண்புறாவிற்கு தன்மேல் கொண்ட அன்பால் ஆண்புறாவின் புலம்பல் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- கற்புடன் புருஷனே உயிர் என கணவனுக்காக தன் வாழ்வை அர்ப்பணம் செய்யும் மனைவியைப் பெற்றவனே உலகில் பாக்கியசாலி. புருஷனைத் திருப்தி படுத்தாதவளைப் பெண் என்று கருதக்கூடாது. புருஷன் திருப்தியடைந்தால் தெய்வங்களும் திருப்தியடையும். பூங்கொத்துகள் தொங்குகின்ற கொடி காட்டுத்தீயால் பொசுங்குவதைப்போல் புருஷனைத் திருப்தி படுத்தாத பெண்களை நெருப்பிலிடவேண்டும் அவர்கள் வாழ்ந்து என்ன பயன்.

அந்தச் சந்தோஷத்துடன் பெண்புறா சொன்னது, அன்பனே நான் வேடனின் கூட்டில் இருக்கின்றேன். இவன் வேடனாயிருக்கலாம். இவன் நம் வீட்டின் முன் வந்து பசியுடன் படுத்திருக்கின்றான். அவனை உபசரி என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- சரணாகதியடைந்தவனை உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றவேண்டும். அந்தி வேளையில் வந்த விருந்தாளியை உபசரிக்காவிட்டால் விருந்தாளியின் பாவம் உபசரிக்காதவனுக்கும், உபசரிக்காதவனுடைய புண்ணியம் விருந்தாளிக்கும் போய்ச் சேரும்.

என்னைச் சிறை படுத்தியுள்ளான் என நினைக்காதே. வேதத்தின்படி தர்மப்படி நீ நடப்பாயாக. வறுமை, நோய், துயரம், சிறை எல்லாம் முற்பிறப்பின் பலன்கள். பகமையைவிட்டு அறவழியில் மனதைச் செலுத்து எனப் பெண்புறா கூறியதைக் கேட்ட ஆண்புறா மிக்க தைரியம் அடைந்து வேடனை வரவேற்று அவனுடைய தேவை என்ன எனக்கேட்க அவன் குளிரால் உடல் நடுங்குவதைக்கூற புறா  பறந்து சென்று ஓர் கங்கு (நெருப்புத்துண்டு) கொண்டுவந்து காய்ந்த சருகுகளின்மேல் போட்டு விரைவில் கணப்பு உண்டாக்கித் தந்தது. என் வீடு தேடி வந்த உனக்கு பசியாற என்னிடம் ஒன்றுமில்லையே. என வருந்தி யோசனை செய்தது. பின் தீயை வானில் வலம் வந்து அன்புடன் நானே உனக்கு உணவாகிறேன் என தீயில் குதித்து மாண்டது.

இதைக் கண்ட வேடனுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. தன் குளிருக்கு நெருப்புத்தந்து, தனக்கு உணவாக அந்தப் புறா தானே தீயில் குதித்து இறந்தது அவன் மனதை பிசைந்தது. அதன்மேல் அவனுள் அளவற்ற இரக்கம் பிறந்தது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பாவம் செய்கிறவன் ஆன்மாவை நேசிப்பதில்லை. ஒவ்வொருவனும் செய்ததை அவனே அனுபவிக்க வேண்டும்.

என் புத்தி பாவம் நிறைந்தது. பாவம் செய்தே நான் திருப்தியடைந்து வந்துள்ளேன். எனக்கு நரகம் நிச்சயம். இந்தப் புறா தன் உயிர் தியாகத்தால் கொடிய மனமுடைய என்னை மாற்றியிருக்கின்றது. இன்று முதல் குளிர், காற்று, வெய்யிலைச் சகித்துக் கொண்டு உடலை இளைக்கச் செய்து உபவாசங்களுடன் அறவழி நடப்பேன் எனக்கூறி தன்னிடமிருந்த முளைக்கம்பு, வலை, கூண்டு எல்லாவற்றையும் உடைத்தான். பெண்புறாவை விடுதலை செய்தான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- மானம், தன் மதிப்பு, பெருமை, உறவினர்கள் காட்டும் மரியாதை, வேலையாட்களிடம் செலுத்தும் அதிகாரம் எல்லாம் பெண் விதைவையானவுடன் மாறும்.

தன் இணையான ஆண்புறா உயிர் தியாகம் செய்ததைக் கண்டு இனி நான்வாழ்ந்து ஒரு பிரயோசனமும் இல்லை என பெண்புறாவும் தீயில் புகுந்தது.

மனோவேதனை மிகுந்து மரணத்தைப்பற்றி சிந்தித்துக்கொண்டே காட்டில் நுழைந்தான் வேடன் வழியில் காட்டுத்தீ தோன்ற அதில் புகுந்து தன் பாவங்களை ஒழித்தான். அதனால்தான்,’ சரணடைந்த எதிரியை கௌரவப்படுத்தி தன் மாமிசத்தை கொடுத்து அவன் பசியைத்தணித்த..’ என்று சொன்னேன். மேலும்’ என்னைக் கண்டதும் தினந்தோறும் ஒதுங்கிச் சென்றவள் இன்றைக்கு என்னை அணைத்துக் கொள்கிறாள், உதவி செய்தவனே உனக்கு என் நன்றி, உனக்கு இஷ்டமானதை இங்கிருந்து எடுத்துச் செல், என்றதற்கு திருடன் ‘திருடுவதற்கு ஏதாவது இங்கிருந்தாலும் அவை எனக்குத் திருடத்தக்கவையாக இல்லை, இப்படி அவள் உன்னை அனைத்துக் கொள்ளாமலிருந்தால் நான் திரும்பவும் இங்கு வந்திருப்பேன்” என்றான். இது என்ன? ஒன்றும் புரியவில்லையே எனக்கேட்க அதைப்பற்றிக் கூறலானான்.

கிழவனும் குமரியும்: அந்த உரில் இருந்த வியாபாரியின் மனைவி இறந்துவிட்டாள். தனது உதவிக்கு தன் பணபலத்தால் ஏழைப்பெண் ஒருத்தியை மணந்தான். அவளுக்கு வயதான தன் கணவனை பார்க்கக்கூட பிடிக்கவில்லை.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- திரை படிந்து, நடை தளர்ந்து, பற்கள் உதிர்ந்து, பார்வைமங்கி, அழகு குன்றி, தள்ளாடிச் செல்பவனை உறவினர்களும் லட்சியம் செய்வதில்லை. அவன் சொந்த மகன், மகள் கூட கவனிப்பதில்லை.

ஒருநாள் படுக்கையில் இருவரும் எதிரும் புதிருமாகப் படுத்திருந்தனர். அப்போது வீட்டிற்குள் ஓர் திருடன் நுழைந்தான். இருட்டில் அந்த உருவத்தைப் பார்த்ததும் பயந்துபோய் திரும்பி தன் கணவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். ஆச்சரியத்தாலும் அவளின் ஸ்பரிசத்தாலும் உடம்பெல்லாம் புளங்காதம் அடைந்தான். கூர்ந்து பார்த்தபோது அறையின் மூலையில் திருடன் இருப்பதைப் பார்த்து உண்மை அறிந்துகொண்டான்.

அவன் திருடனைப்பார்த்து, பரோபகாரியே தினமும் ஒதுங்கிச் சென்றவள் இன்று உன்தயவால் என்னை வந்து அனைத்தாள். உனக்கு என் நன்றி. உனக்கு இஷ்டமானதை இங்கிருந்து எடுத்துச் செல் என்றான்.

அதைக்கேட்ட திருடன், இங்கு இருப்பவை ஏதும் எனக்கு திருடத்தக்கவையாக இல்லை. உன்னை அணைத்துக் கொள்ளமலிருந்தால் நான் திரும்பவும் இங்கு வந்திருப்பேன் என்றான்.

ஆகவே திருடனாயிருந்தாலும் ஒருவனிடத்திலிருந்து நன்மை கிடைக்கக்கூடும். அப்படியிருக்க சரணாகதியடைந்தவனை எதிரிகள் துன்புறுத்தியுள்ளார்கள். இவன் நம் நன்மைக்காக செயல்படுவான். அவர்களுடைய பலவீனத்தை இவன் காட்டிக்கொடுப்பான் என்றது ஆலோசகன்.

இதைகேட்டபின் தன் இன்னொரு ஆலோசகரைப் பார்த்து இதுபற்றி உன் கருத்து என்ன எனக் கேட்க, தலைவனே இந்நிலையில் இவனைக் கொல்லக்கூடாது. ஏனெனில், தன் அணியில் சச்சரவுகள் ஏற்படுவது விரோதிக்குத்தான் நன்மைதரும். திருடன் உயிரைத் தந்தான். பிசாசு இரண்டு மாடுகளைத் தந்தது என்ற கதையில் உள்ளபடி என்றான். அது எப்படி எனத்தலைவன் கேட்க அதுபற்றி சொல்லலானான்.

வேதியனும், திருடனும், பிசாசும்: அந்த ஊரில் இருந்த ஏழை பிராம்மணன் தொழில் வசதி வாய்ப்புகள் இல்லாத நிலையில் உணவுக்கு பிச்சை எடுத்து வந்தான். நல்ல உடை நல்ல குளியல். நல்ல உணவு எதையும் அவன் கண்டதில்லை. தலைமுடி மீசை கைவிரல் நகங்கள் நீண்டு வளார்ந்திருந்தன். வெய்யில், மழை, குளிர் எல்லாம் தாக்கி அவன் உடல் வற்றிச் சுருங்கியிருந்தது. அவனைப் பார்த்து இரக்கம்கொண்ட ஒருவன் அவனுக்கு இரண்டு கன்று குட்டிகளைக் கொடுத்தான். அவனால் இயன்றவரை அவைகள் இரண்டையும் பேணி வளர்க்க அவைகள் கொழுத்து இருந்தன.

இந்த மாடுகளைப் பார்த்த திருடன் அவைகளை திருட திட்டமிட்டு ஒரு கயிறுடன் அன்றிரவு புறப்பட்டான். வழியில் மிகவும் அகோரமான தோற்றத்துடன் ஒருவனைப் பார்த்து பயந்தவன் அவனை நீ யார் எனக்கேட்டான். நான் ஒரு பிரம்மராஷசன். நான் மூன்று நாளைக்கு ஒருமுறை சாப்பிடுபவன் என்றது.

திருடன் தான் யாரென்று கூறி இரண்டு மாடுகளையும் திருடச் செல்வதைச் சொன்னான். அப்படியானால் நான் அந்தப் பிராம்மணனைச் சப்பிடுகிறேன். இருவரும் ஒரே இடத்திற்குச் செல்கிவோம் என்றது அந்த  ராஷசன்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- கொலை, களவு இவைகளுக்கு கூட்டு ஆகாது.

இருவரும் ஓரிடத்தில் பதுங்கினர். நான் முதலில் பிராம்மணனை சாப்பிட்டுவிடுகிறேன் பின் நீ மாடுகளைத் திருடு என்றது ராஷசன். இல்லை, நான் மாடுகளைத் திருடிக்கொண்டு சென்றபின் நீ அவனைச் சாப்பிடு என்றான் திருடன். நீ மாடுகளைத் திருடுகின்ற சப்தம் கேட்டு பிராம்மணன் விழித்துக் கொண்டால் நான் அவனைச் சப்பிடுவது கெட்டுவிடும். எனவே நான்தான் முதலில் எனக்கூற, நீ அவனைச் சாப்பிடும்போது ஏதாவது தடங்கள் வந்தால் பிறகு நான் மாடுகளைத் திருட முடியாமல் போய்விடும். ஆகவே  நான் முதலில் என திருடன் சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இந்த சப்தம் கேட்டு எழுந்த பிராம்மணனை நோக்கி, இந்த பிரம்ம ராஷசன் உன்னை சாப்பிடக் காத்திருக்கின்றான் எனத் திருடன் கூற, இவன் உன் மாடுகளைத் திருட காத்திருக்கின்றான் என பிரம்ம ராஷசன் கூற, உண்மை அறிந்த பிராம்மணன் எழுந்து மந்திரங்களை சபித்து பிரம்மராஷசனை ஓடவைத்தான். பின் ஒரு கழியெடுத்து வருவதைப் பார்த்த திருடனும் ஓடினான்.

அதனால்தான்,’தன் அணியில் சச்சரவுகள் ஏற்படுவது விரோதிக்குத்தான் நன்மைதரும். திருடன் உயிரைத் தந்தான். பிசாசு இரண்டு மாடுகளைத் தந்தது என்று கூறினேன். மேலும் மகாத்மாவான சிபிச்சக்ரவர்த்தி தன் மாமிசத்தை புறாவைக் காப்பாற்ற கழுகிற்குத் தந்தார் என்ற கதையை புண்ணியம் விரும்புவோர் கேட்பர் எனவே அடைக்கலம் அடைந்தவர்களைக் கொல்வது தகாது என ஆந்தைத் தலைவனிடம் கூறியது.

இதைக் கேட்டபின் ஆந்தைக் கூட்டத் தலைவன் தன் மற்றொரு ஆலோசகரின் கருத்தை கேட்டான். தலைவரே, அவனைக் கொல்லக்கூடாது. அவனைக் காப்பாற்றினால் ஒருவேளை நீங்கள் இருவரும் நண்பர்களாக இருப்பீர்கள். ஒருவருடைய மர்மத்தை இன்னொருவன் பாதுகாக்காமல், வயிற்றுப் பாம்பும், புற்றுப்பாம்பும் நாசமடைந்தது எனச்சொல்ல அது எப்படி என ஆந்தை தலைவன் கேட்டான்.

வயிற்றுப் பாம்பும், புற்றுப்பாம்பும்:அந்த ஊரின் தலைவன் தன் மகனுடன் வாழ்ந்திருந்தான். அதிசயமாக புற்றினுள் செல்லவேண்டிய பாம்பு ஒன்று அந்த தலைவனுடைய மகன் வயிற்றில் புகுந்தது. அதனால் நாளுக்கு நாள் அவன் உடல் மெலிந்தது. அவன் வாழ்க்கை வெறுத்து அங்கிருந்து வேறு ஊருக்குச் சென்று கிடைத்தைச் சாப்பிட்டு கோவில் படுத்துறங்கி வந்தான். அந்த ஊர்த்தலைவனுக்கு இரண்டு பெண்கள். ஒருத்தி தினந்தோறும், தலைவா உனக்கு வெற்றியுண்டாகட்டும் என்பாள். மற்றவள், தலைவா, விதித்ததை அனுபவியுங்கள் என்பாள். இரண்டாமவள் தினமும் இப்படியே கூறிவதைக் கேட்ட தலைவன் ஆத்திரமடைந்து தன் முதன்மை ஆலோசகரிடம் இவளை கூட்டிச் சென்று பிச்சை எடுத்து கோவிலில் வாழும் ஒருபரதேசிக்கு கொடுத்துவிடுங்கள் விதித்ததை இவளே அனுபவிக்கட்டும் என ஆணை பிரப்பித்தான்.

அதன்படி அந்த ஆலோசகர் அவளை அழைத்துக் கொண்டு கோவிலுக்குவர அங்கு இருந்த பக்கத்து ஊரின் தலைவரின் மகனுக்கு கொடுத்துவிட்டுச் சென்றார். அந்தப்பெண் இது கடவுள் விளையாட்டு என அவனை சந்தோஷத்துடன் கணவனாக ஏற்றுக் கொண்டாள். அவனைக் கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி அருகில் இருக்கும் இன்னொரு ஊருக்குச் சென்றாள். குளக்கரையின் அருகே ஒர் வீட்டில் தங்கினர். ஒருநாள் அவனை வீட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு வேண்டியதை வாங்கி வரச்சென்றாள். திரும்பி வரும்போது தன் கணவன் அருகில் உள்ள புற்றில் தலை வைத்து தூங்குவதைப் பார்த்து பதைபதைத்தாள்.

அதே சமயம் அவன் வாயிலிருந்து ஒர் பாம்பு வெளிவருவதையும் புற்றிலிருந்து ஓர் பாம்பு வெளிவருவதையும் பார்த்து அதிர்ச்சி யடைந்து நின்றாள். பாம்புகள் ஒன்றையொன்று பார்த்து பேச ஆரம்பித்ததும் அப்படியே உறைந்துபோய் அவைகள் பேசியதைக் கேட்கலானாள். புற்றுப் பாம்பு வயிற்றுப் பாம்பைப் பார்த்து, நீசனே இவ்வளவு அழகான வாலிபனை துன்புறுத்துகின்றாயே. உன்னால் அவன் நாடுதுறந்து வந்து கஷ்டப்படுகிறான், இதற்கு நீ வருத்தப் படவில்லையா என்றது. வயிற்றுப் பாம்பு சொன்னது நீ தான் நீசன். பொன் நிறைந்த இரண்டு குடங்களை மண்ணடித்து மூடிவைத்திருக்கின்றாயே என்றது.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- ஒரே இனத்தவர் பொறாமையினால் கோபங்கொண்டால் இருவரின் ரகசியங்களும் அம்பலமாகும். இருவருக்கும் அது நன்மை தராது. தீமை பயக்கும்.

அதற்கு புற்றுப் பாம்பு சொன்னது, துஷ்டனே கடுகை அரைத்துக் குடித்தால் நீ செத்து விடுவாய் என்ற வைத்தியம் தெரியாதவரைக்கும் உனக்கு நல்லது என்றது.

புற்றின்மேல் வெந்நீரை ஊற்றினால் நீ செத்துவிடுவாய் என்ற வைத்தியமும் அறியாதவரைக்கும் நீயும் பிழைத்திருப்பாய் என்றது.

ஒளிந்திருந்து இந்தப் பேச்சுக்களைக் கேட்ட தலைவரின் மகள் அவைகள் பேசிய வண்ணம் கொதிக்கும் வெந்நீரை புற்றில் ஊற்றி புற்றுப் பாம்பை சாகடித்து பொற்காசு குடங்களை கைப்பற்றினாள். பின் கடுகை அரைத்துக் குடுத்து தன் கணவனின் வயிற்றில் வாழும் வயிற்றுப் பாம்பையும் கொன்றாள். இதனால் அவன் உடம்பும் குணமானது. பொற்காசுகளுடன் தன் சொந்த ஊருக்கு தன் மனைவியுடன் சென்றான். எல்லோரும் பாராட்டி மகிழ்ந்தனர். அப்பெண் அவளுக்கு விதித்ததை கணவனோடு சுகமாக அனுபவித்து மகிழ்ந்திருந்தாள்.

அதனால்தான், ஒருவருடைய மர்மத்தை இன்னொருவன் பாதுகாக்காமல், வயிற்றுப் பாம்பும், புற்றுப்பாம்பும் நாசமடைந்தது எனச்சொன்னேன்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- கௌரவிக்க வேண்டியவர்களைக் கௌரவிக்காமல், கௌரவிக்கத் தகாதவர்களைக் கௌரவிக்கின்றார்களே அங்கே பஞ்சம், மரணம், பயம் மூன்றும் வந்து சேரும்.

இதைக்கேட்ட முன்பு பேசிய ஆலோசகன், மற்ற ஆலோசகர்களைப் பார்த்து கஷ்டம், உங்கள் ஆலோசனைகளால் தலைவன் நாசமாகிறான் என்றான். கண்ணெதிரே பாவம் செய்தாலும் அதை நிம்மதியாக பார்த்து மூடன் சந்தோஷப்படுவான். தன் மனைவியையும், அவள் கள்ள புருஷனையும் ஒரு தச்சன் தன் தலையில் தூக்கிக்கொண்டு நடந்தான் என்றான். மற்ற ஆலோசகர்கள் அது என்ன எனக் கேட்டார்கள்.

மூடத்தச்சன்: அந்த ஊரில் இருந்த தச்சனின் மனைவி வேசியாக இருந்தாள். அது அவனுக்குத்தெரியாது. ஊரில் மற்றவர்கள் பேசிக்கேட்டது. எனவே அவளைச் சோதிக்க விரும்பினான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பெண்களின் கற்பின் முன்னே நெருப்பு குளுமையடையும். நிலா நெருப்பாகிச் சுடும். கெட்டவன் நல்லவனாவான். பிரபஞ்ச விஷயங்களை சாஸ்திரம், வேதம் படிக்காமலேயே அதில் காணாததையும் கேளாததையும் ஜனங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளாலாம்.

அவளிடம் அன்பே, நான் காலையில் அடுத்த கிராமத்திற்கு செல்லவேண்டியிருக்கின்றது. அங்கே சில தினங்கள் தங்க் வேண்டியிருக்கும். எனக்கு நீ நல்ல சாப்பாடு தயார் செய் என சொன்னதைக் கேட்டது அவள் மிகுந்த ஆனந்தத்துடன் அவனுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்தாள்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- பகல் பொழுதானது இரவுபோல் இருண்டிருந்தாலும், கணவன் வெளியூருக்குச் சென்றிருக்கும் போதும் சோரம் போகிறவளுக்கு கொண்டட்டம்.

தச்சன் விடியற்காலை எழுந்து புறப்பட்டு போனான். அவள் தன்னை மிகவும் அலங்கரித்துக் கொண்டு தன்னை விரும்பும் ஸ்திரிலோலனைத் தேடிச்சென்றாள். அவனிடம் அந்தப்படுபாவி வெளியூர் சென்றிருக்கின்றான். இன்றிரவு வீட்டிற்கு வந்துவிடு எனக்கூறிச் சென்றாள்.

மாலைவரைக் காட்டில் சுற்றிவிட்டு யாருக்கும் தெரியாமல் பின்பக்க வழியாக வீட்டிற்கு வந்து கட்டில் படுக்கையின் கீழே ஒளிந்துகொண்டான். அந்த சமயம் அந்த ஸ்திரிலோலன் வர அவன் மீது கோபங்கொண்டான். உடனே அவன்மீது பாய்ந்து கொல்ல நினைத்தவன் தனது எண்ணத்தை மாற்றி தன் மனைவி என்ன செய்கிறாள் என பார்ப்போம் என பொறுமையாக இருந்தான். அவன் மனைவி வீட்டின் கதவை நன்றாகப் பூட்டிவிட்டு கட்டிலில் வந்து அமர்ந்தாள். அப்போது அவளின் கால் கட்டிலுக்கடியில் இருக்கும் அவள் கணவனின்மேல்பட பழக்கத்தால் அது அவன்தான் என உணர்ந்தவள் நிலையைச் சமாளிக்க எண்ணி தன் சாகஸத்தைக் காட்டத்துணிந்தாள்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- கெட்ட நடத்தையுள்ள பெண்மணிகள் எதிர்பாரவிதமாக மாட்டினால் தன்மேல் எந்தக் குற்றமும் இல்லை என நம்பும்படி பொய்களை அள்ளிவீசி அதை நிரூபிப்பர். அதை நம்பி ஏமாறுபவர் என்றும் அவளின் அடிமை.

ஸ்திரிலோலன் அவளுடன் சல்லாபம் செய்ய அவசரப்பட்டான். அப்போது அவள் சொன்னாள், நீ என்னைத் தொடாதே என்றாள். அப்படியென்றாள் நீ ஏன் என்னை அழைத்தாய் என்றான். அவள், நான் விடியற்காலையில் அம்மனைத் தரிசிக்க கோவில் சென்றிருந்தேன். அப்போது ஆகாயத்திலிருந்து ஓர் அசரீரை கேட்டது. பெண்ணே, உன் கணவன் இன்னும் ஆறுமாதத்தில் இறக்க நீ விதவையாவாய் என்றது. அதற்கு பரிகாரமாக நான் என்ன செய்ய வேண்டும் என்றேன். என் கணவன் நூறு வருடங்கள் வாழ நான் என் உயிரையும் தருவேன் என்றேன். அசரீரி சொன்னது. பரபுருஷனோடு ஒரே படுக்கையில் ஏறி அவனை ஆலிங்கனம் செய்தால் உன் கணவனைப் பற்றியுள்ளதோஷம் அவனைப் பற்றும். உன் கணவனும் நூறு வருடங்கள் உயிரோடு இருப்பான் என்றது. அதனால்தான் உன்னை நான் வேண்டி இங்கு வரச் சொன்னேன். இனி உன் இஷ்டம். அசரீரி வாக்கைப் பொய்யாக்கக்கூடாது என்றாள். அந்த ஸ்திரிலோலன் தனக்குள் சிரித்துக் கொண்டு இவள் ஏன் இப்படி நாடகமாடுகிறாள் என நினைத்துக் கொண்டே அவளைக் கட்டியனைத்தான்.

மூடன் தச்சன் அவள் வார்தைகேட்டு புளங்காதம் அடைந்தான். கொஞ்சம் நேரம் கழித்து வெளியில் வந்து தன் மனைவியைப் பார்த்து, கற்பரசியே நீ செய்தது நல்லதே. என் குலவிளக்கே, கெட்டவர்களின் பேச்சைக் கேட்டு உன்னை நான் சந்தேகங்கொண்டு சோதிக்க விரும்பினேன். இன்று உன்மை தெரிந்து கொண்டேன். வா என்னை ஆலிங்கனம் செய் எனக்கூறி அவளைத் தன்தோள் மீது ஏற்றிக்கொண்டான். ஏ மனிதனே நீ இங்கு வந்தது எனக்கு நன்மை செய்ய. அதனால் நீயும் வா எனக்கட்டாயமாக இருவரையும் தோள் மீதேற்றி ஆனந்தக் கூத்தாடினான்.

அதனால்தான், கண்ணெதிரே பாவம் செய்தாலும் அதை நிம்மதியாக பார்த்து மூடன் சந்தோஷப்படுவான். தன் மனைவியையும், அவள் கள்ள புருஷனையும் ஒரு தச்சன் தன் தலையில் தூக்கிக்கொண்டு நடந்தான் என்றேன். மேலும் இனிமேல் நாம் வேரறுக்கப் பட்டமாதிரி, நாசமானமாதிரியே என்றான்.

குருஸ்ரீ பகோராயின் கூற்று- இதமான வார்த்தைபேசி, விபரீத காரியம் செய்பவன் நண்பன் உருவில் வந்த எதிரி. அவர்களை கூரிய புத்தியுள்ளவர்கள் அடையாளம் காணமுடியும். இடத்துக்கும் காலத்திற்கும் பொருந்தாத அறிவில்லாத யோசனைகளைக் கேட்டு நடந்தால் சூரியன் முன்னே இருள் நீங்குவது போல் அடைந்த பொருளும் போய்விடும். ஒரு பிரச்சனைக்கு ஒன்றிரண்டு யோசனைகள் கேட்டு அதில் தேர்ந்தெடுக்க வேண்டும். நிறைய அபிப்பிராயங்கள் பிரச்சனையைக் குழப்பி திசை திருப்பிவிடும்.

அந்த ஆலோசகனின் வார்த்தைகளை ஆந்தைக் கூட்டத்தலைவன் சட்டை செய்யவில்லை. அடிபட்டதுபோல் இருக்கும் காக்கையைத் தூக்கிகொண்டு தங்களின் கோட்டைக்குச் சென்றது. போகும் வழியில் காக்கை சொன்னது இந்த அவஸ்தைக்குள்ளான நான் தீக்குளிக்க விரும்புகிறேன். எனக்கு கொஞ்சம் நெருப்பு ஏற்பாடு செய்யுங்கள் என்றது. அதன் வஞ்சகப் பேச்சை உணர்ந்த அதைக் கொல்லவேண்டும் எனச்சொன்ன ஆலோசகன் நீ ஏன் நெருப்பில் விழ ஆசைப்படுகிறாய் என்றது. நான் இறந்து ஆந்தையாக பிறவி எடுக்க விரும்புகிறேன் என்றது காக்கை. அந்த ஆலோசகர் சொன்னான் கபடத்திலும் இரண்டு அர்த்தம் கொள்ளும்படியாக பேசுவதில் நீ கெட்டிக்காரன். நீ ஆந்தையாகப் பிறந்தாலும் உன் காக்கை இனத்தைதான் பெரிதாய் மதிப்பாய் ஏனெனில், சூரியனும், மேகமும், காற்றும், மலையும் பெண் எலியை மணக்க இருந்தும் அது அவர்களில் யாரையும் கணவனாக ஏற்றுக்கொள்ள மறுத்து தன் இனத்தை மீண்டும் வந்தடைந்தது. என்றான். அது எப்படி எனக் காக்கைகேட்க அந்த ஆந்தை ஆலோசகன் சொல்ல ஆரம்பித்தான்.

எலிப்பெண் எலியானாள்: அந்த கங்கை நதிக்கரையில் உள்ள காட்டில் ஒரு முனிவர் ஆசிரமம் ஏற்படுத்தி வாழ்ந்திருந்தார். அங்கு பல ரிஷிகள் ஓமம், நியமம், தவம், படிப்பு, உபவாசம், யாகம், சடங்கு, அனுஷ்டானம், பாராயணம் முதலியவைகளில் ஈடுபட்டு காலங்கழித்து வந்தனர். கிழங்கு வேர், பழம், பாசியை உணவாக உட்கொண்டனர். அந்த ஆசிரமத்தின் மூத்த முனிவர் கங்கையில் சிரம பரிகாரம்செய்து குளித்துவிட்டு வரும்போது வானத்தில் பறந்த பருந்தின் வாயிலிருந்து நழுவிய பெண்எலி அவர் கையில் விழுந்தது. அதை அருகில் இருந்த பாறைமீது வைத்துவிட்டு தன் கடமைகளை முடித்து தன் தவவலிமையால் அந்த எலியை ஒர் அழகிய பெண்ணாக மாற்றினார். தன் மனைவிடம் அழைத்துச் சென்று அவளை கவனமாக வளர்க்க