Print this page
செவ்வாய்க்கிழமை, 09 April 2019 20:05

சிவ சதாஷ்டகம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#*#*#*#*#

சிவ சதாஷ்டகம்!

பொற்றாமரைக் குளக்கரையில் உள்ள கோயிலில் வீற்றிருப்பவர், கருடனை வாகனமாகக் கொண்ட மகாவிஷ்ணுவுக்குப் பிரியமானவர். கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் இலையைக் கூட உண்ணாமல் தவம் புரிந்த உமாதேவியுடன் விளங்குபவர், சர்ப்ப ராஜனை ஆபரணமாகத் தரித்தவரும், என்றைக்கும் மங்களமானவரும் ஆகிய சிவபெருமானுக்கு எப்போதும் நமஸ்காரம்.

அலைகள் மோதும் கங்கையின் பிரவாகத்தையும் சந்திர கலையையும் சிரசில் அணிந்தவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று கண்களை உடையவரும் சிறந்த பாம்பைக் குண்டலமாக அணிந்தவரும் புண்ணியமிக்கவர்களைக் காப்பவரும் என்றைக்கும் மங்கலமானவருமாகிய சிவனுக்கு நமஸ்காரம்.

தாமரை போன்ற நான்கு முகங்கள் கொண்ட பிரம்மாவால் நான்கு வேதங்களாலும் விளக்கப்படும் பெருமை மிக்கவரும் நான்கு கைகளை யுடைய திருமாலின் தங்கையான மீனாட்சி அன்னையை இடப்பாகத்தில் கொண்டு விளங்குவதால் அழகுடன் விளங்குபவரும், நான்கு விதமான புருஷார்த்தங்களை அளிக்கவல்ல தாண்டவக் கோலத்தில் விளங்குபவரும் என்றைக்கும் மங்கலமானவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

சரத்கால சந்திரனைப் போன்ற வெண்மையான புன்சிரிப்பால் அழகுடையவையும் பவளம்போல் சிவந்த உதடுகளால் பிரகாசிப்பவையுமான ஐந்து முகங்களின் ஒளியைப் பூண்டவரும், பைரவ கோலத்தில் கையில் ஏந்திய கபாலத்தில் விஷ்ணுவின் உதிரத்தை பிக்ஷையாக ஏற்றவரும் என்றும் மங்கள மூர்த்தியான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

சதாசிவனுக்கு ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு பூஜை செய்யும்போது ஒரு தாமரை மலர் மறைந்து போனதால் தமது கண்ணையே எடுத்து அர்ச்சனை செய்த ஸ்ரீமத் நாராயணணுக்கு ஆயிரம் சூரிய பிரகாசம் வாய்ந்த சுதர்சன சக்கரத்தை ஆயுதமாகக் கொடுத்தருளியவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

திரிபுர சம்ஹார காலத்தில் பூமியை ரதமாகவும், விஷ்ணுவை அம்பாகவும், மேருவை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், பிரம்மனை சாரதியாகவும் வேதங்களை குதிரையாகவும் கொண்ட சதாசிவனும் சம்புவுமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

சிவ நிந்தனை செய்து நடத்தப்பட்ட தட்சனின் யாகத்தில் துஷ்டர்களை அழிக்கும் பொருட்டு வீரபத்ர கடவுளைத் தோற்றுவித்து அவரது கர்ஜனையை கேட்டு பயந்து ஓடிய, அவிர்பாகம் பெற வந்த தேவர்களுக்கு நற்கதி அளித்த ஸர்வலோக சாட்சியான சதாசிவனும் மங்களமூர்த்தியுமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

மிருகண்டு முனிவரின் புதல்வரான மார்க்கண்டேயனை யமதர்ம ராஜனிடமிருந்து காத்து ஆயுள் அளித்தவரும், கன்னத்தின் ஒளியால் சந்திரனை வென்றவரும், நிரந்தர சுகமளிக்கும் மோட்சத்தை விரும்பும் சான்றோர்களால் தியானிக்கப் படுபவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

பிரம்மா, விஷ்ணு, இந்திராதி தேவர்களால் நமது பாத தாமரைகளில் இடைவிடாது அர்ச்சனை செய்யப்படுபவரும், தங்க மலையை வில்லாகக் கொண்டவரும், வெள்ளியம்பலத்தில் கூத்தாடுபவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

மதுரையம்பதிக்கு அரசரும், மகேசுவரனும், ஆலகாலம் என்ற விஷத்தால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தை உடையவரும், மீனாட்சியின் பதியாக விளங்குபவரும் சுந்தரத் தாண்டவம் ஆடுபவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

இந்த சதாஷ்டகம் பதஞ்சலி முனிவரால் அருளப்பட்டது.- குருஸ்ரீ பகோரா

#####

Read 12097 times Last modified on வெள்ளிக்கிழமை, 21 June 2019 09:59
Login to post comments