gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

கடற்கரையில் வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுற்று அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழக்காதீர்!
சனிக்கிழமை, 11 November 2017 20:21

பஞ்சாக்கரம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

பஞ்சாக்கரம்! 
உருவானத் தலம்! இப்பூ உலகில் தவம் பெருக சிறந்த தலம் என்று விஷ்ணுவால் வழி காட்டப்பட்டத் தலம் திருவட்டபுரி- வசிஷ்டபுரி என்ற ஓர் இடமே தவம் செய்ய சிறந்தது என பிரம்மாவும் அவர் மகன் வசிஷ்டரும் அறிந்தனர். அவர்கள் அங்கு வந்த போது ஆயிரக்கனக்கான முனிவர்கள் தவ நிலையில் இருந்தனர். பிரம்மன் முன்னால் சொல்லப்பட்ட ஒரு மன்வந்திர காலம் தவமிருந்தான். 
பின் முனிவர்களுடன் சேர்ந்து 10 அசுவமேத யாகம் செய்தான். மகிழ்வுற்ற வைத்தியநாதர் அவர்முன் தோன்றி பிரம்மனே என்னை நோக்கித் தவம் இருந்ததன் காரணம் என்ன என்றார்! பிரம்மன் தன் மனைவி சரஸ்வதி மற்றும் மகன் வசிஷ்டருடன் ஈசனை சரீர சுத்தியுடன் தங்களின் அங்கங்கள் நிலத்தில் படுமாறு வீழ்ந்து வணங்கி ஐயனே! எல்லா உயிர்களும் முக்தியடைய உரிய வழி செய்ய நினைக்கின்றான் என்மகன் வசிஷ்டன். அவனுக்கு தேவரீர் ஞானப் பிரசாதமாகிய பஞ்சாட்சார குருமந்திரத்தை உபதேசிக்க வேண்டும் என பணிந்து வேண்டினார். “ஓம் நமசிவய” என்ற குருபிரசாத நமச்சிவய மந்திரத்தை அருள்மிகு வைத்தியநாத சுவாமி வசிஷ்டருக்கு குருவாக இருந்து உபதேசித்தார். இந்த உபதேசம் நடைபெற்ற தலம் வசிஷ்டபுரி- திருவட்டபுரி- தற்போது திருவட்டக்குடி ஆகும். பஞ்சாக்கரம் உருவானத் தலம். 
சனி, செவ்வாய் தவமிருந்து வழிபட்டு சாபம் தீர்ந்த தலம்!
சூரியன் மற்றும் சந்திரனுக்குச் சொந்தமானது ராசிகளுக்குரிய 12 வீடுகள். செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐவரும் தங்களுக்குச் சொந்தமாக வீடு வேண்டும் என விண்ணப்பித்து சந்திர, சூரியரிடம் பெற்றனர். இதை அறிந்த ராகுவும் கேதுவும் தங்களுக்கும் அதுபோல் சொந்தமாக வீடு வேண்டும் எனக் கேட்க அவர்கள் நண்பர்கள் அல்ல என மறுத்துவிட்டனர் சூரியனும், சந்திரனும். எப்படியும் வீடு பெற்று விடவேண்டும் என முயற்சித்த ராகுவிற்கும் கேதுவிற்கும் சனியும் செவ்வாயும் தங்களுக்களிப்பட்ட வீடுகளில் இடம் அளித்தனர். இதனால் கோபம் கொண்ட சூரியனும் சந்திரனும் சனியையும் செவ்வாயையும் சபித்தனர். சனியை தொழுநோயும், செவ்வாயை எழும்புருக்கி நோயும் பீடித்தது. அவர்கள் இருவரும் வைத்தியநாத சுவாமியிடம் தஞ்சமடைந்து தவமிருந்து பஞ்சாக்கரம் ஓதி வழிபட்டு சாபம் தீர்த்து மீண்டும் தங்கள் நிலையை அடைந்தனர். அந்த தலம் திட்டக்குடி என அழைக்கப்படும் வசிஷ்டபுரியாகும்.
ஓர் நிகழ்வில் இராவணன் சிறுவனாக இருந்த விநாயகருக்குச் சொன்ன “நமச்சிவய” என்பது பஞ்சாட்சார மந்திரம். எல்லோரும் நினைக்கலாம். சொல்லலாம். அந்த ஆத்மலிங்கத்தின் கணத்தை குறைப்பதற்கு தாங்குவதற்கு விநாயகப்பெருமானே ‘ஓம்நமசிவய’ எனச் சொல்லியே லிங்கத்தைப் பெற்றார் என்றால் அந்த ஐந்தெழுத்து மந்திரத்தின் சக்தியைப் புரிந்து கொள்வீர். ஆனால் முறைப்படி அதை ஒருவர் குருஸ்தானத்திலிருந்து உபதேசித்து சொல்லும்போது பலன் அதிகம். 
எங்கும் நிறைந்ததாயும், சகல தந்திரங்களும், சகல எந்திரங்களும், சகல மகாமந்திரங்களும், சகல அலங்காரங்களும், சகல யோகங்களும், சகல ஆசைகளும், சகலத்தையும் தாங்கி ரட்சிக்கும் ஆதிசேஷ ரூபமும், நஞ்சைக் கண்டத்திலே வைத்திருக்கின்ற ஈஸ்வரத் தத்துவமும், ஒன்றாவதும் பலவாவதும், ஒன்றுமில்லாததுவும், சுப்ரஹாசமாகிய ஞானமும், நீலகண்டபிரகாசமும், அதன் துளியும், அதன் வாசமுமாய், எல்லாமுமாய், எல்லையுமாய், எல்லையில்லாதுமாய் விளங்குவதுமானது ‘”நமசிவய” என்கிற பஞ்சாக்கரம்.
நமசிவய பஞ்சாட்சர மந்திரத்தால் நம்மை நாமே சிவமயமக்கிக் கொள்ளல் வேண்டும். இதயத்தில் சிவனின் சொரூபத்தை நிலை நிறுத்தி தியானிக்க வேண்டும். பஞ்சாட்சரம் சொல்லும்போது ஏக மனத்துடன் சொல்லி வில்வமும் தும்பை மலரும் சாத்தி வழிபடல் சிறப்பு.
தீர்த்தக் கரையினில் அமர்ந்தும், சமுத்திரத்தின் கரையில் அமர்ந்தும், மலைச் சாரல்களிலும், வீட்டில் பூஜை அறைகளிலும், ஏகாந்தமாக இருக்கும் எந்த இடத்திலும் ஜபிக்கலாம். விரல் ரேகைகளை எண்ணிக்கொண்டோ அல்லது ருத்திரங்களை கொண்டே ஜபிக்கலாம். பவளம், முத்து, ஸ்படிகம், ஸ்வர்ண மணிமாலைகளைக் கொண்டு ஜபிக்கலாம், பட்டுத்துணிமீதோ, பலகை மீதோ அமர்ந்து செய்யலாம். மனதை அலையவிடாமல் ஒரு நிலைப் படுத்தி மகிழ்வுடன் செய்ய வேண்டும்.
5 கோடிமுறை சிவாலயம் நிர்மாணம் செய்த பலன்.
9 கோடிமுறை மனது தூய்மையடையும். 
18 கோடிமுறை நீரில் நடக்கலாம்.
27 கோடிமுறை அக்னி தத்துவம் வெல்லலாம்.
36 கோடிமுறை வாயு தத்துவம் வெல்லலாம்.
45 கோடிமுறை ஆகாய தத்துவம் வெல்லலாம்.
54 கோடிமுறை ஐந்து குணங்களை வெல்லலாம்
63 கோடிமுறை காரியத்தில் ஜெயம்.
72 கோடிமுறை கோபத்தை வெற்றி கொள்ளலாம்
81 கோடிமுறை மோகத்தை வெல்லலாம்.
90 கோடிமுறை லோபத்தை வெல்லலாம்.
99 கோடிமுறை மதத்தை வெல்லலாம்.
108கோடிமுறை மோட்சம் செல்லலாம் எனச் சாஸ்திரங்கள் பகர்கின்றன.
பஞ்சாக்கரம் ஐந்து வகை! 
பஞ்சாட்சரத்தில் நமசிவய என்பது ஸ்தூல பஞ்சாக்கரம், 
சிவயநம என்பது சூக்ம பஞ்சாக்கரம், 
சிவய சிவ என்பது அதிசூக்ம பஞ்சாக்கரம், 
சிவசிவ என்பது காரண பஞ்சாக்கரம், 
சி என்பது மகாகாரண பஞ்சாக்கரம். இதைச் சொல்ல நாள் கிழமை நேரம் பார்க்க வேண்டியதில்லை. எப்போது வேண்டுமானாலும் யார்வேண்டுமானாலும் குரு அருள் பெற்று ஜபித்து பயன் பெறலாம். 
சி- பேசா எழுத்து 
வ- பேசும் எழுத்து
சூட்சமம்-காணமுடியாதது. -சிவயநம என மனதுக்குள் சொல்லி தியானித்தால் மனதில் உறைவார். 
ஸ்தூல-கண்ணால் காணக்கூடியது. -நமசிவய என சொல்லி உச்சரித்தால் ஈசன் கண்களுக்கு புலப்படுவார்.
நமசிவய என்கிற பஞ்சாக்கரத்துடன் முன்பு ஓங்காரத்தை சேர்த்து சொல்லும்போது அதன் சக்தி அதிகரிக்கப் படுகின்றது. அப்படி பஞ்சாக்கரத்துடன் ஓம் சேர்த்து ஓம்நமசிவய எனச் சொல்வது சிவஷடாக்ஷரி மந்திரம் எனப்படும்.
எல்லோரும் சொல்லுங்கள்.
ஓம் நமசிவய! ஓம் நமசிவய! ஓம் நமசிவய! ஓம் நமசிவய! ஓம் நமசிவய! 
ஓம் நமசிவய என்றுதான் சொல்ல வேண்டும். ஓம் நமசிவாய எனச் சொல்லக் கூடாது. எல்லோரும் சொல்லுகின்றார்களே என நீங்களும் சொல்லலாம். அதில் பயன் ஏதுமில்லை. சரி. அப்படியென்றால் அந்த பஞ்சாக்கரத்தை எப்படி பயனுள்ளதாக மாற்றுவது என்றால் அதை ஒரு மந்திரமாக பாவித்து குருவின் அருளாசியுடன் செவியில் வாங்கி மனதில் பதியவைத்து பின் ஆத்மார்த்தமாக உச்சரிக்க வேண்டும். உள்ளத்தின் உள்ளிருந்து அடிவயிற்றிலிருந்து உச்சரிக்கவேண்டும் அப்போதுதான் அதன் அதிர்வுகளை நீங்கள் உணரமுடியும். அந்த அதிர்வுகளே உடலுக்கு உள்ளத்திற்கு ஆன்மாவிற்குப் பயன் தரக்கூடியவை
தீக்ஷை-தீட்சை என்பது ஒரு பிறப்பாகும். இந்த ஜகத்தின் ஆதார புருஷனாகிய சிவனின் அடையாளம் லிங்கம். அந்த லிங்கத்துடன் சம்பந்தம் ஏற்படுத்தி அந்த ஆன்மாவின் சஞ்சலத்தை தீர்ப்பதே தீக்ஷை. இந்த ஜன்மத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு எல்லா சுகங்களையும் அடைவதற்கு புனர்ஜன்ம்ம் எடுக்காமல் முக்தி பெற்று மோட்சத்தை அடைய இந்த சிவ தீக்ஷை உதவும். ஒரு உடலும் அதனுள் இருக்கும் ஆத்மாவும் ஒரு புதிய சங்கல்பத்துடன் இதுவரை இருந்த நிலையிலிருந்து புதிய நிலையைத் தேர்ந்தெடுத்து அதில் வாசம் செய்யப் போவதற்கு உடலுக்கும் அதனுள் இருக்கும் ஆத்மாவுற்கும் ஓர் அனுமதி. அது புனிதத்தின் அடையாளம். ஆன்மாவின் மேனிலைக்கு ஆரம்ப நிலை.
கர்ப்பத்திலிருந்து வெளியே வரும்பொழுது முதல் பிறப்பு- மாதா பிதா
யக்ஞோப வீதத்தின்போது இரண்டாம் பிறவியில் காயத்திரி மாதாவாகவும்
தீட்சையின்போது மூன்றாம் பிறவியில் ஆச்சாரியர் பிதாவாகவும் சொல்லப்படும்.
யக்ஞோப வீதம் இல்லாநிலையில் தீட்சை இரண்டாம் பிறப்பாக கருதப்படும்.
தீட்சை பெற சிவமாலை அணிந்து கொள்ள ஆலய பெருமை அதை அணிவிப்பவரின் மனசுத்தம் அவரின் தெய்வப்க்தி ஆகியவற்றை கவனிக்க வேண்டும். சிவ தீட்சை திரிகரண சுத்தியுடன் அனுசரிக்க வேண்டும். சூரிய உதய, மத்தியான, சூரிய அஸ்தமன வேளைகளில் சிவ பூஜை அனுஷ்டிக்க வேண்டும். முடிந்த வரையில் மௌனமாகவும் சிவசிந்தனையுடன் இருக்க வேண்டும். முடிந்தவரை பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்கவும்.
தீட்சையில் நயன தீட்சை, ஸ்பரிச தீட்சை, திருவடி தீட்சை என்றுண்டு. அளவற்ற தவம் செய்தாலன்றி ஸ்பரிச தீட்சையைப் பெற முடியாது. மற்ற தீட்சையிலே ஞானம் கிட்டும். திருவடி தீட்சையில் ஞானத்துடன் பிறவிச் சூழலிலிருந்து விடுதலையும் கிடைக்கும்.

திருமால் கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனாக மானுட அவதாரம் செய்து ஜாம்பவதியை மணந்து புத்திர பாக்கியம் இல்லாததால் உபமன்யு முனிவரை அனுகி தனக்கு சிவ தீட்சை அளித்து பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்கும்படி கேட்டார். வியாக்ரபாதர் என்ற மாபெரும் தபஸ்வியின் புதல்வர்தான் உபமன்யு. அருட்செல்வம் பெற்றிருந்த வியாக்ரபாதர் பொருட்செல்வம் இல்லாததால் வீட்டின் வறுமயை உணராத சிறுவன் உபமன்யு பாலுக்காக அழுதான். போன ஜென்மத்தில் சிவனையும் அவன் நாமத்தையும் மறந்ததால்தான் இந்த நிலை எனத் தாய் சொல்லக் கேட்ட சிறுவன் காட்டிற்குச் சென்று தவமிருக்க ஈசன் தேவேந்திரனாக காட்சி. வரத்தைக் கேள். சிவனைப் போலவே வேண்டியதை தரவல்லவன் என்பதைக் கேட்ட பாலகன் வெகுண்டு சிவ நிந்தனை செய்தாய் அதற்கு தண்டனையாக தங்களை சாம்பலாக்குகின்றேன் என திருநீற்றை எடுத்து சிவ நாமத்தை ஜபிக்க தேவேந்திரன் போல் வந்த சிவன் மாயமானார். அந்த யோகாக்கினியிலேயே தன் உயிரை மாய்த்துக் கொள்ளச் சென்ற பாலகனைச் சங்கரன் சங்கரியுடன் காட்சி அருள். அப்படிப்பட்ட உத்தமமுனியான உபமன்யு வந்திருப்பது கண்ணன் என்று தெரிந்து மானசீகமாக நமஸ்கரித்தார். பின்னர் அவருக்கு குருவாக இருந்து தீட்சையளித்து பஞ்சாட்சார மந்திரத்தை உபதேசித்தார்.
உண்மையில் அந்த மந்திரத்தை ஜபிக்க நினைப்பவர்கள் இறைவனை மனதில் நிறுத்தி உள்ளத் தூய்மையுடன் உரிய தட்சணையை கோவிலின் உண்டியலில் செலுத்திவிட்டு வந்தீர்களானால் அதையே அடியேன் குருவின் தட்சினையாக ஏற்று உங்களுக்கு அந்த குரு மந்திரத்தை உபதேசிக்கின்றேன். இப்போது கைவசம் பொருள் இல்லை யென்றாலும் மனதால் இறையை நினைத்து குருவாக அடியேனை ஏற்று மனதில் வாங்கிக் கொள்ளுங்கள் பின் உங்களால் முடிந்த அன்று உண்டியலில் காணிக்கை செலுத்தி பின் மனதில் நினைத்து ஜபியுங்கள். பஞ்சாக்கார மந்திர பலனை அடைவீர்.
வேதத்தின் இதயம் ஸ்ரீ ருத்திரம்! வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் உண்மையாக நடந்த நிகழ்வுகளின் பின்னனியே. அவை மனித ஆன்மாக்களுக்கு வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துபவை. யாரையும் உயர்த்தவோ தாழ்த்தவோ பாகுபாடுகளைப் பார்க்கவோ சொல்லப்பட்டவை அன்று. ஒன்றாக இருந்த யஜுர் வேதம் துவாபர யுகத்தில் தான் ரிக், யஜுர், சாம, அதர்வன என நான்காகப் பிரிக்கப்பட்டது. வேதம் என்றால் அறிவு. ரிக் யஜுர் சாமம் அதர்வன என்ற நான்கில் அதர்வன மற்ற மூன்றின் தொகுப்பு. அதனால் வேதம் ‘த்ரயா’ என்பர். மூன்றினுள் நடுவனவாய் இருப்பது யஜுர் வேதமாகும். அந்த யஜுர் வேதத்தின் மையத்தில் இருக்கும் தைத்ரீய ஸம்ஹிதையின் ஏழு காண்டங்களுள் நான்காவது காண்டத்தின் நடு நாயகமாக அதன் மையத்துள் உள்ள காண்டத்துள் 11 அனுவாகங்களை உடையது திரு உருத்திரம் என்பது. அது 101 வரிகளை உடையது. இருதய ஸ்தானமாகிய 51 வரியில் ‘நமசிவய’ “சிவதரய” என்று திரு ஐந்தெழுத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பாகும். அதன் மத்தியில் சிவ என்ற இரண்டு அக்ஷரம் அடங்கியிருப்பதால் சிவ பஞ்சாட்சரம் வேதத்தின் இதயம் எனப்படும்
சகல கலைகளுக்கும் அன்னை சாவித்திரி. அவர் இதய கமலத்தில் தோன்றும் மகா புருஷர்கள் மூவர்.. அவர் மனதில் தோன்றும் மகாபுருஷர்- ரிக்வேதம். அவர் (ரிக்வேதம்) மனத்தில் தோன்றுவது யஜூர் வேதம். அவர் (யஜூர் வேதம்) மனதில் காண்பவர் சாம வேதம். சாமவேதமே சிவனின் பெருமையைக் கூறுவது.
மகாவிஷ்ணு ரிக் வேதத்தை ஓதி எல்லாப் பாவங்களையும் நீக்குவார். 
பிரம்மா யஜுர் வேதத்தை ஓதி எல்லாக் கர்மாக்களையும் செய்கிறார். 
பரம சிவனார் சாம வேதத்தை ஓதி எல்லாப் பாவங்களையும் அழிப்பார்.
எல்லாவற்றிற்குமுள்ளே வேதத்தினுள்ளே வேதமாய் ஜோதியாய் இருப்பது சிவனே!
திருமுறைகளில் தேவாரத்துள் நடுவான அப்பர் தேவாரத்தில் உள்ள குறுந்தொகையில் நடுப்பதிகமான 51வது பதிகம் பாலத்துறை பதிகமாகும். இப்பதிகத்தின் நடுப்பாடலாக உள்ள ‘விண்ணினார் பணிந்து’ என்று தொடங்கும் பாடலின் நடுவில் சூட்சும பஞ்சாரம் ஆன ‘சிவய’ என்று இயற்றியுள்ளார். 
மூலாதாரம், ஸ்வதிட்டாணாம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சகஸ்ரராம் என்ற ஏழும் மனித உடம்பின் ஆதாரங்கள். மூலாதாரத்தில் கணபதியும், ஸ்வதிட்டாணாத்தில் பிரம்மாவும் சரஸ்வதியும், மணிப்பூரகத்தில் மகாவிஷ்ணுவும், ஸ்ரீமகாலட்சுமியும், அநாகதத்தில் ருத்திரனும், பார்வதியும், விசுக்தியில் மகேஸ்வரரும் மகேஸ்வரியும், ஆக்ஞையில் சாம்பசிவரும் மனோன்மணியும், சகஸ்ரராமில் பராசக்தியும் பரமேஸ்வரனும் இருந்து அருள்புரிந்து உடலை இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள். 
மூலாதாரத்தில் ஓம் மும், ஸ்வதிட்டாணாத்தில் ந என்ற அட்சரமும், மணிப்பூரகத்தில் ம என்ற அட்சரமும், அநாகதத்தில் சி என்ற அட்சரமும், விசுக்தியில் வ என்ற அட்சரமும், ஆக்ஞையில் ய என்ற அட்சரமும் கொண்டு அந்தந்த இடத்திற்குரிய கடவுள்கள் அருள்புரிந்து உடலை இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
சி-சிவம்;
-திருவருள், 
-ஆன்மா, 
-திரோதமலம்,
-ஆணவமலம்.
திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து, திருவருளால் சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள்.
சுருக்கமாகச் சொன்னால், "சிவயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' பிறவிப்பிணியில் இருந்து விடுபட "சிவயநம' என்போம்.
சிவயநம –சிவநாமம் எப்படிச் சிறந்தது - நாரதர் அறிந்தது!
ஒருமுறை எப்போதும் ஒம் நமோ நாராயணாய எனும் நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.
பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள வண்டு பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார்.
நாரதரும் அப்படியே கேட்டார். இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, "தந்தையே! சிவயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.
பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையினமான ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, ஆந்தையும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.
பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள விலங்கினமான அந்த கன்றுக் குட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
தந்தையே! “கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார். நீ போ! என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.
நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை.
\இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை.
"இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் மனிதப்பிறப்பான குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.
நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.
அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையாகப் பிறந்தேன். பிறகு கன்றாகப் பிறந்தேன். இப்போது மனிதனாகப் பிறந்துள்ளேன் பிறவியில் உயரிய மானிடப் பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும் என்றது. இதை அனைத்து ஆன்மாக்களும் உணரல் வேண்டும். முக்தி தரும் ஒப்பற்ற மந்திரம் ‘நமசிவய’
பிராயச்சித்தம்!- கோகர்ண சித்தர் தனது தாயார் காளை மாட்டை அடித்து துன்புறுத்தியதையும், தன் மனைவி ஒர் நாயைக் கொன்றதையும் கண்டு உள்ளம் உடைந்து அனைத்தையும் வெறுத்து ஊர் ஊராக சுற்றி இறுதில் தேப்பெருமா நல்லூர் வந்து தவம். தாயும் மனைவியும் இறந்து விட்டார்கள் என்ற செய்தி கிடைத்ததும் அவர்கள் செய்த பாவத்திற்கு நரகத்தின் துன்புறுவார்கள் என்பதால் அவர்களுக்காக பிரயசித்தம் செய்ய விரும்பினார். அந்த நினைவில் ஒரு சுலோகம் எழுத நினைத்தவர், 'தெரிந்தோ தெரியாமலோ செய்த பாபங்கள் பெரும்பாவமாக இருப்பினும்... என்று எழுதி விட்டு அடுத்த வரியை எப்படி எழுதுவது எனப் புரியாமல் அப்படியே வீட்டின் கூரையில் சொருகிவிட்டு நீராடி வந்து பார்க்கும்போது அதில்.. ஏகாந்தத்திலிருந்து சிவநாமத்தை உச்சரிப்பதே பிராயச்சித்தமாம். என்று முடிக்கப் பெற்றிருந்தது. ருத்ராட்சேஸ்வரரின் திருவருளே அது என ஆனந்தமுற்று தனித்திருந்து சிவநாமம் உச்சரித்து அந்த பலனை தன் தாய்க்கும் மனைவிக்கும் நீர்வார்த்து தர்ப்பணம் செய்து அவர்கள் பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்தார்.நாகேஸ்வரத்திலிருந்து-1கி.மீ – தேப்பெருமா நல்லூர்
ஐந்தெழுத்து பஞ்சாக்கரம் ஓதுவது மட்டும் புண்ணியமல்ல! அறியாமல் செய்த நல்ல செயல்களினாலும் புண்ணியமே!
கம்சபுரத்தில் வாழ்திருந்த வேடர்களின் தலைவன் காளகண்டன். அஞ்ஞானமுடையவன். ஒருநாள் வேட்டையாடிவிட்டு காட்டிலிருந்து கம்சபுரம் நோக்கி வரும் வேளையில் உச்சிக்காலம் ஆனதால் வெய்யிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க அருகிலிருந்த கோவிலுக்குள் புகுந்து இளைப்பாறினான். அந்த மண்டபம் பராசரமுனிவருக்கு இறைவன் தாண்டவ தரிசனம் தந்து அருளிய முக்தி மண்டபம். அந்த மண்டபத்தின் அருமை தெரியாதவன் சாவகாசமாக தாம்பூலம் தரித்தான். கையில் இருந்த சுண்ணாம்பை சுவரில் தடவினான். அங்கு இருந்த சிறிய விரிசலின் சந்தில் அந்த சுண்ணாம்பு பதிந்தது. இந்த கோவில் சுண்ணாம்பு மணலும் கலந்த கலவையால் கட்டப்பட்டது. வெயில் தாழ்ந்ததும் புறப்பட்டுச் சென்றான். சில காலம் கழித்து அவன் இறந்தான். அப்போது கைலாசத்திலிருந்து விமானம் வந்து அவனை அழைத்துப் போனது. அதைக் கண்ட தேவர்கள் ஆச்சரியப்பட, காளகண்டன் துஷ்டன், துர்நடத்தை உடையவன். பாவ புண்ணியங்களைப் பற்றி ஒன்றும் அறியாதவன். அறியாமலேயே பாவச் செயல்களைச் செய்துள்ளான். அறியாமல் அவன் செய்த பாவங்கள் அவன் செய்த ஒரு புண்ணியச் செயலினால் கழிந்தது. அது கோவில் சுவரில் சுண்ணாம்பு தடவியதே. அந்த காரியம் அணுவளவு இருந்தாலும் அது கோவில் திருப்பணி செய்த சிவ புண்ணியம். அதன் விளைவாக அவனுக்கு கைலாச வாசம்-.கம்சபுரம்-கபிலேஸ்வரர்-சௌந்தரநாயகி விஜயபுரம்-திருவாரூர்
பஞ்சாக்கரம்- பஞ்ச எழுத்து- நமசிவய அதுபோல அந்த பஞ்ச எழுத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவைகள்.
பஞ்ச பூதங்கள்- நீர், நிலம், அக்னி, வாயு, ஆகாயம்
பஞ்ச தன்மாத்திரை- சப்தம், ஸ்பரிஸம், ரூபம், ரசம், கந்தம்
பஞ்ச கர்மேந்திரியம்- வாக்கு, கை, கால், குதம், உபஸ்தம்
பஞ்ச ஞானேந்திரியம்- கண், காது, மூக்கு, வாய், மெய்
அந்தக்கண பஞ்சகம்- புத்தி, அகங்காரம், சித்தம், மனம், உள்ளம்
பஞ்ச கலைகள்- நிவர்த்தி, பிரதிஷ்சை, வித்யை, சாந்தி, சாந்தியாதீதம்
பஞ்ச சாதாக்யம்- கன்மம், கர்த்துரு, மூர்த்தி, அமூர்த்தி, சிவம்
பஞ்ச சக்தி- பராசக்தி, ஆதிசக்தி. இச்சா சக்தி, ஞானசக்தி, க்ரியா சக்தி
பஞ்ச பிரும்மம்- ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம்
பஞ்ச கர்த்தாக்கள்- பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன்
பஞ்ச கிருத்தியங்கள்- சிருஷ்டி, ஸ்திதி, ஸம்காரம், திரோதானம், அனுக்கிரகம்,
பஞ்ச வர்ணங்கள்- அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம்
நமசிவய என்பதில் ந-சத்யஜோதிவடிவம். ம-விஷ்னுரூபமானது. சி-தேயு- ருத்ர சொரூபம், வ- வாயு- மகேஸ்வர வடிவம், ய- ஆகாய வடிவானது- சிவ ரூபம். இதில் ந-க்குள் ம-வும், நம-க்குள் வ-வும், நமவ- குள் ய-வும், நமவய-க்குள் சி அடங்கும். இந்த 5 அட்சரங்களும் பஞ்சபூத பிரதிநிதிகள். நமசிவய, மசிவயந, சிவயநம, வயநமசி, யநமசிவ என்றும் வழங்கப்பெறும்.
சிவனும் ஹரியும் அந்தகனுடன் போர்புரிந்தபோது சிவனே உங்களால்தான் அந்தகனைக் கொல்ல முடியும் என்று ஹரி சொல்லக்கேட்ட சிவன் தன் சூலத்தால் அந்தகனைக் குத்தி தாண்டவம் புரிய, சிவசூலத்தால் குத்தப்பட்டதும் மனத் தூய்மையடைந்து அந்தகன் சிவஸ்துதி சொல்ல அவனை சூலத்திலிருந்து கீழே இறக்கி தன் சிவகணங்களுடன் ஒருவராக வைத்தார். எந்த நிலையிலும் இறைவனை வழிபாடு செய்தால் நற்பலன் கிடைக்கும்!
ஆண்டவனுடைய நாமமாகிய வாக்கை நாக்கில் கொண்டால் அது எங்கும் செல்லக்கூடிய வாக்காகும். அதுவே செல்வாக்கு. அன்பினால் அனைவரிடமும் ஆசி வார்த்தை கூற வேண்டும் ஆசை வார்த்தை கூறக்கூடாது. அப்போது நல்ல மனமும் மாமலரான் நோக்காகிய மனநிறைவு ஏற்படும்.
மனதில் தியானிப்பதை மானஸம் என்றும், தான் மட்டும் கேட்கும்படியாக மூலமந்திரத்தை ஜபிப்பது வாசிகம் என்றும், விக்ரஹ, யந்திர வடிவமாக பூஜிப்பது காயிகம் எனப்படும். இது என்னவென்றால் நாம் மானசீகமாக தகவல் சொல்வது. இறைவன் உன் உள்ளே இருப்பதனால் மானசீகமாக மனதில் தியானிப்பதே போதுமானது. தனக்கு மட்டும் கேட்கும்படியாக மந்திரங்களை ஜபித்து நல்ல பலன் பெறுவீர்களாக! 
தாரகமந்திரம்!
சுத்தியுடன் பஞ்சாக்கரத்தை ஓதினால் ஜபித்தல் ஓர் ஆனந்தம் உங்களுக்குள் ஏற்படுவதை உணர்வீர். ஐந்தெழுத்து பஞ்சாக்கரம் தாரகம் எனப்படும். தாரகம் என்றால் ஒரு உச்சவிசை, ஆதாரமானது எனப் பொருள்படும். மந்திரங்களுக்கெல்லாம் ஆதாரனமானது.

&&&&&

Read 11367 times Last modified on புதன்கிழமை, 28 February 2018 04:52
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

15533560
All
15533560
Your IP: 162.158.78.156
2020-02-19 10:27

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg