Print this page
திங்கட்கிழமை, 07 May 2018 02:36

ஆவணி மாத விரதங்கள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

&&&&&

ஆவணி மாத விரதங்கள்!

ஆவணி பௌர்ணமி- ஆவணியில் நீல லிங்கம் வழிபாடு சிறப்பு, பகலில் உபவாசம் இருந்து சிவபூஜை செய்யவேண்டும்.

ஆவணிமாத அஷ்டமி உமாதேவி-சர்வன்-வணங்கினால் 8மாத அஷ்டமி பூஜாபலன்.

கோகுலாஷ்டமி விரதம்!- அஷ்டமி, நவமி திதிகள் நல்லதல்ல என்று ஒதுக்கி வைப்பதால், அந்த திதிகளும் நன்மை தருபவை என்று புரியவைக்க கோகுலாஷ்டமி- கிருஷ்ணன் பிறந்தநாள், ராமநவமி-ராமர் பிறந்த நாள் போன்ற ஜெயந்தி தினங்கள் அழைக்கப் படுகின்றன. கிருஷ்ணரது அவதாரம் 5222 ஆண்டுகளுக்கு முன்னால் ஆவணி மாதத்தில் தேய்பிறை பகுளஅஷ்டமியில் ரோகிணி நட்சத்திரத்தில் ரிஷப லக்னத்தில் நடைபெற்றுள்ளது. தன்னை நம்பியவர்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கிருஷ்ணர் தன்னை கடவுள் என்றே அறிவித்து அவதாரம் செய்துள்ளார். தன்னை வணங்குபவருக்கு மகிழ்ச்சியையும் நல்ல வாழ்வையும் அளித்துள்ளார். அவரது எட்டு வடிவங்கள் பிரபலமானவை.
1.சந்தான கோபாலன். யசோதையின் மடியில் குழந்தைக் கண்ணன் அமர்ந்திருப்பது -வழிபடின் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம்.
2.வெண்ணெய்பானை அருகே அமர்ந்திருக்கும் கண்ணன். மனதில் உள்ள தேவையில்லாத எண்ணங்களை அகற்றுவதன் மூலம் நல்லறிவை ஏற்படுத்தி மன நிம்மதி சுக வாழ்வு ஏற்படும்.
3.காளிங்கன் தலைமீது நடனமாடும் கோலம்- பகைவர்கள் தொல்லை தீரும்,
4.கோவர்த்தன கிரிதாரி-கோவர்த்தன மலையை குடையாக பிடித்திருக்கும் கோலம்- நெருக்கமானவர்களிடம் கூட பகிர முடியாத பிரச்சனைகள், கடன் தொல்லைகள் பனிபோல் விலகும்.
5.ராதாகிருஷ்ணர்-ராதை அருகில் புல்லாங்குழல் ஊதியபடி நிற்கும் மோகன கோலம். திருமணத்தடை நீங்கும் இல்வாழ்வில் நிம்மதி கிட்டும்.
6.முரளிதரன்.ருக்மணி சத்யபாமாவுடன் நிற்கும் கோலம். வாழ்வில் துன்பம் வராது
7.மதன கோபாலன்.அஷ்டபுஜ கண்ணன். தீமைகளையும் தீய சக்திகளையும் தமது எட்டு கரத்தால் தூள் தூளாக்குவார்.
8.பார்த்தசாரதிபெருமாள்- குருஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு நல்லுபதேசம் செய்த கோலம். வாழ்வில் எந்த தடை வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் தைரியமும் அறிவாற்றலும் வெற்றியும் கிட்டும்.

கண்ணன் பாதம் வரைவது ஏன்! ஆயர்பாடியில் வெண்ணெய் திருடுவது யார் என்பதைக் கண்டுபிடிக்க யசோதையும் கோபியரும் ஒன்று சேர்ந்து அவரவர் வீட்டு வாசலில் அரிசிமாவை போட்டு வைத்தனர். அதில் கால் பதித்து சென்றால் கண்டு பிடிக்கலாம் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் அனைத்து வீடுகளிலும் கால்தடம் அரிசி மாவுடன் இருந்தது. அவர்கள் வீடு செல்வ செழிப்புடன் இருந்தது. கண்ணன் மதுராபுரியில் இருந்தபோது அவரது வருகைக்காக ஏங்கிய கோபியர்கள் அவரிடம் முறையிட நீங்கள் முன்பு என்னை கண்டுபிடிக்க செய்த அரிசி மாவினால் என் பாதங்களை வரைந்தால் நான் சூட்சம வடிவில் உங்கள் வீட்டிற்கு வருவேன் என்றார். இந்த முறையைப் பின்பற்றியே கண்ணன் பாதம் அரிசி மாவில் வரைகின்றோம்

அவரது பிறந்த நாளன்று கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணெய், திரட்டுப்பால், மற்றும் உப்பு பட்சணங்களை நிவேதனம் செய்து வழிபட்டால் அவர்களுக்கு குழைந்தைகளால் எந்தக் கவலையும் மேலும் புத்திர சோகமும் இருக்க கூடாது என்று சாந்தீபனி முனிவர் வரம் கேட்டு பெற்றார்.

பூஜை செய்வது எப்படி!- கண்ணன் நடுநிசியில் பிறந்தவர். அந்த நேரத்தில் வழிபடும் வழக்கம் நம்மிடையே இல்லையாதலால் மாலை முதிரும் நேரம் பூஜை செய்ய சிறப்பானது. கோகுலாஷ்டமியன்று பாலகிருஷ்ணன் வடிவத்தில் வணங்க வேண்டும். எந்த படமாக இருந்தாலும் பாலகிருஷ்ணராக சங்கல்பம் செய்து கொண்டு மலர் மாலை பூக்கள் அணிவிக்கவும். வீட்டைச் சுற்றி அரிசி மாவினால் கண்ணனின் பாதங்களை வரைய வேண்டும். பொதுவாக வாசலில் இருந்து பூஜை அறைவரை வரைந்தால் போதும். பூஜை செய்யும் இடத்தில் நீர் கொண்டு சுத்தம் செய்து கோலம் போடவும். ஓர் இலை போட்டு அதன்மேல் செய்த பட்சணங்கள், நாவல் பழங்கள் இவற்றை வைக்க வேண்டும். கிருஷ்ணாட்சகம் சொல்லலாம். தெரிந்த கீர்த்தனைகள் பாடலாம். பூக்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டவும் இயன்றவர்கள் விரதம் இருக்கவும், காலையிலிருந்து எதுவும் உண்ணாமல் மாலயில் நிவேதனப் பொருட்களை உண்ண வேண்டும். மாலை வீட்டில் பஜனை செய்யலாம். நிவேதனப் பொருட்களுக்கு கற்பூர ஆரத்தி காட்டி அனைவருக்கும் கொடுக்கவும்.

ஆவணி சதுர்த்தி விரதம்- விநாயகர் சதுர்த்தி விரதம்- பார்வதிதேவி தான் குளிக்கும் வாசனைப் பொடிகளால் ஒரு உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்த நாள் ஆவணி மாதத்து சதுர்த்தி தினத்தில். அந்த நாளே பிள்ளையார் சதுர்த்தி எனக் கொண்டாடப்படுகின்றது. பிள்ளையாரை அலங்காரம் செய்வது என்பது அவரவர் வழக்கப்படி என்பது இப்பூஜையின் சிறப்பு.

நைவேத்தியப் பொருள்கள் யானைக்கு பிடித்தமான அரிசி வெல்லம் கொண்டு தயாரித்த கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, பழங்கள் என வைத்து வழிபடலாம். வீட்டைச் சுத்தம் செய்து மாவிலைத் தோரணம் கட்டி பூஜை அறையில் மாகோலம் போட்டு புதிய பிள்ளையாரை அங்கு வைத்து அலங்கரித்து துதிகள் பாடி தீப ஆராதணை காட்டி வழிபடவும். மாலையில் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டு சந்திரனைப் பார்க்க வேண்டும். பிறகு பழ ஆகாரங்கள் எடுத்துக்கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளவும்.

&&&&&

Read 4656 times Last modified on திங்கட்கிழமை, 26 November 2018 11:16
Login to post comments