gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

விபூதி பாதம்

Written by

3.விபூதி பாதம்

3-1 தேச பந்தஸ் சித்தஸ்ய தாரணா.                                                                 

சித்தத்தை ஏதாவது ஒரு பொருளின்மேல் பதிய வைப்பது தாரணை. நூலின் நுனி விரிந்திருந்தால் ஊசியின் காதில் நுழையாது. அந்த நூலின் நுனியை திரித்து ஒரு முனையாக்கினால் ஊசியில் நுழையும். இது போன்றே மனம் விரியாமல் குவிந்து இருப்பது தாரணையாகும். உடலின் உள்ளேயோ வெளியேயோ உள்ள ஒரு பொருளின் மீது மனம் நிலைபெற்று அந்த நிலையிலே பொருந்தியிருப்பதாகும்

3-2 தத்ர ப்ரத்யயை கதானதா த்யானம்.                                                                        

பொருளில் ஆழ்ந்து இடைவெளியில்லாமல் தியானம் செய்வது தாரணை. ஒரு பொருளை நம் நினைவில் இருத்தினால் மனம் முழுவதும் அந்தப்பொருளே நிறைந்து மனதில் ஆட்சி செய்யும்போது பிற பொருளை மனம் நினைக்காமல் இருப்பது தாரணை. அது தொடர்ந்து நீடித்தால் அது தியானமாகும். வெளிப் பொருள்கள், உடலின் பொருள்கள், மந்திரங்கள், குரு, கடவுள் ஆகிய ஏதாவது ஒன்றில் மனத்தை குவித்திருப்பதே தாரணையின் மூலம் தியானமாகும்.உணர்வுகள் மற்ற உறுப்பிலிருந்து வராமல் குறிப்பிட்ட பொருளிலிருந்து வரும் உணர்வுகளை பெறுவதில் மனம் வெற்றி காண்பது தாரணை.

3-3 ததே வார்த்த மாத்ர நிர்பாஸம் ஸ்வரூப சூன்ய மிவ ஸமாதி.                             

தியானம் செய்யும் பொருளை நீக்கி அதன் விளக்கத்தை மனதில் விளங்கச் செய்வது சமாதியாகும். பொருளை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் அதன் வடிவம் அசையும், பின் மெல்ல மறையும். தியானத்தின்போது பொருளின் உருவம் கலைந்து அதனின் அர்த்தம் மட்டும் மனதில் தங்குவது சமாதி. தியானிக்கின்ற பொருளின் வடிவம் புற மனதை விட்டு அகன்றால் அது ஆற்றல் பெற்றதாகும். ஒரு புத்தகத்தை தியானிக்கும்போது அதனுள் உள்ள கருத்தை உருவமின்றிக் காணும் நிலையை அடையும் தியானம் சமாதி.

3-4 த்ரய மேகத்ர ஸம்யம்.

தாரணை, தியானம், சமாதி ஆகிய மூன்று பயிற்சிகளும் ஒரே பொருளில் செய்வது ஸம்யமம். பொருள் தெரிகிறது, பொருளின் முழு வடிவம் தெரிகிறது, பொருள் மறைகிறது, பொருளின் பெயர் அல்லது அதனின் விளக்க அறிவு மிச்சமாகிறது. சமாதி முழுமையடைய நான்கு நிலைகளுமே வாயில்கள். எல்லாப் பொருளகளின்மீதும் ஸம்யமம் செய்யலாம். மனத்தை ஒரு குறித்த பொருளின் மீது செலுத்தி மனதை அங்கு நிறுத்தி நெடுநேரம் அங்கு வைத்து பொருளின் உருவத்தைத் தள்ளி கருத்தைமட்டும் சிந்திப்பதி ஸ்ம்யமம்.

3-5 தஜ்ஜயாத் ப்ரக்ஞாலோக.

ஸம்யமத்தில் வெற்றி பெற்றால் ஞானம் அடையலாம். அறிவொளி உண்டாகும். ஸம்யமம் செய்யும்போது அப்பொருள் பற்றிய ஞானம் மனதில் இடம் பிடிக்கின்றது. மனிதன் அறிய வேண்டிய பொருள்கள் தூலம், அதிதூலம், மகாதூலம், சூட்சமம், அதிசூட்சமம், மாகாசூட்சமம் ஆகியவை. முதலில் மிகச்சிறிய பொருளையும் பின் மிகப் பெரிய பொருளையும் பயிற்சியினால் உள்ளவாறு அறிந்து கொள்ளும் ஆற்றல் அடைந்தபின் சூக்கும- நுண் பொருள்களில் ஸம்யமம் செய்ய வேண்டும்.
மரத்தை தியானம் செய்வது, பின் பூ, இலை, காய்களைத் தியானம் செய்வது, பின் பூவின் நிறம், கனியின் சுவையைத் தியானம் செய்வது, பின் அம்மரத்தின் விதையைத் தியானம் செய்வது, பின் அந்த விதை முளைப்பதை தியானம் செய்வது என்ற முறையில் ஒரே பொருளைப் பயிற்சிக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.

3-6 தஸ்ய பூ மிஷு விநியோக.

முதலில் தாரணை, பின் தியானம், பின் சமாதி பின் இவை மூன்றும் கலந்த ஸம்யமம் என்று மெல்ல மெல்ல கீழிருந்து படிப்படியாக அனுபவம் கொண்டு உயர்ந்தால் சிறப்பு. அதிக வேகம் கொண்டு விரைந்து செல்லக்கூடாது என்பதே இதன் கருத்து.

3-7 தரய மந்த ரங்கம் பூர்வேப்ய.

அட்டாங்க யோகமாக கூறப்பட்ட எட்டில் முதல் ஐந்தும் உடலுடன் தொடர்புடைய வெளிப்படையானவை, இறுதியில் கூறிய மூன்றும் அந்தரங்கமான அகத்தினுடையது.இதில் வெற்றி பெற்றால் ஒருவனுக்கு எல்லா ஆற்றலும் அறிவும் பெறுவான். ஆனால் முக்தி அடையமுடியாது. கடைசி மூன்றும் மனதை சலனமற்றிருக்கச் செய்யும் நிர்விகல்பம் பெற உதவாது. வினை எனும் விதைகள் எஞ்சி யிருக்கும். அதனால் மறுபிறப்பு உண்டு. விதைகளை வறுத்து எடுக்க வேண்டும். பின் அவைகள் முளைக்கா. இந்த மூன்று சக்திகள் விதையை வறுக்காது.

3-8 ததபி பஹிரங்கம் நிர்பீஜஸ்ய.

நிர்பீஜ சமாதியுடன் ஒப்பிட்டால் இவை மூன்றும் வெளிப்படையானவை. வித்தில்லா சமாதியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது புறத்தே உள்ளவை. பீஜம்- விதையில்லா சமாதியே பிறப்பு இறப்பை ஒழிக்கும். உண்மையான சமாதி இதுவல்ல. ஒருபடி கீழ் இருப்பதாகும். கடைசியில் கூறிய மூன்றும் பழகினால் மீண்டும் பிறப்பிற்கு வழி உண்டாக்குவதால் இவையும் வெளிப்படையானவை. அந்தரங்கம் என்ற இப்பயிற்சிகள் வெளிப்படையானவை.

3-9 வ்யுத்தான நிரோத ஸம்ஸ்கார யோரபிபவ ப்ராதுர்பாவௌ நிரோத க்ஷண சித்தான்வயோ நிரோத பரிணாம.

காரணமில்லாமல் சித்தத்தில் தோன்றி வரும் எண்ணங்களை அடகுவதற்காக ஓர் எண்ணத்தை நினைக்க வேண்டியுள்ளது. இது நிரோத பரிணாமம். சித்த விருத்திகள் அடங்கிய பிறகும் ஓர் எண்ணம் உண்டாகலாம். அதை அடக்க வேண்டும் என்ற எண்ணத்தால்தான் புதிய எண்ணத்தை அடக்க முடியும். இந்த சமாதி நிலையில் வேறுபட்ட சித்த விருத்திகள் முழுவதுமாக அடக்கப்படவில்லை. முழுவதும் அடங்கினால் சித்தத்தில் விருத்தியே இருக்காது. மனத்தை புலன் வழி செலுத்தினால் உண்டாகும் மனவிருத்தியை யோகி அடக்க முயன்றால் அதுவே ஒரு விருத்தியாகிவிடும். ஒரு வகைஅலையை அடக்க மற்றெருவகை அலை உண்டாகிறது. எல்லா அலைகளையும் அடக்கக்கூடிய சமாதி இது இல்லை. உண்மைச் சமாதிக்கு கீழ் என்றாலும் அதன் அருகில் உள்ளது. கலக்கமடைந்த மனத்தைவிட கீழான சமாதி உயர்ந்தது.

3-10 தஸ்ய ப்ரசாந்த வாஹிதா ஸம்ஸ்காராத்.                                                         பயிற்சி வெற்றியடைந்தால் நிரோதப் பரிணாமம் நிலை பெறும். தந்தை வந்தால் திட்டுவார் என்பதால் அவர் சொன்ன செயலை செய்கிறான். அடிக்கடி இது நடைபெறுவது பயிற்சியின் காரணம். நிரோதப் பயிற்சி நாள்தோறும் செய்து வந்தால் எண்ணங்கள் தோன்றாமல் எண்ணங்களை அடக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மிச்சமாகும். இந்த நிலை மனம் குவிந்த நிலையாகும். அது நிலைபேறான சமாதியை அடைகிறது.

3-11 ஸர்வார்த்ததை காக்ரதயோ க்ஷயோதயௌ சித்தஸ்ய ஸமாதி பரிணாம.

சமாதி பரிணாமம் என்பது சித்தத்தில் உள்ளே வரும் பல பொருள்களை வரவிடுவதும், அவற்றில் ஒரு பொருளின் மீது மட்டும் நிலையான கவனத்தோடு இருப்பதும் ஆகிய இந்த இரு செய்கைகளை ஆக்கவும் அழிக்கவும் மனத்தினால் மட்டுமே முடியும். வருவதும் போவதுமான செயல்கள் நன்கு பக்குவப்படாத மனத்தில் இருக்கும். பயிற்சியடைந்த மனதில் தேவையானவை மட்டும் இருக்கும். இதிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து அதில் முழுக்கவனத்தையும் செலுத்துவது சமாதியாகும். சமாதி நிலையடைந்தவர் மனதில் அவர் அனுமதி இன்றி எந்த எண்ணமும் நுழைய முடியாது. மனம் வெவ்வேறு பொருளைப் பற்றி அதன் பின்னால் செல்வது கீழான நிலை. மனம் ஒன்றை மட்டும்பற்றி மற்றதை விட்டுவிடும் உயர்ந்தநிலையின் பயனே சமாதி.

3-12 சாந்தோதிதௌ துல்யப்ரத்யயௌ சித்தஸ்யை காக்ரதா பரிணாம.

ஏகாக்ரதா பரிணாமம் என்பது மனம் சாந்தத்தையும் நல்லவற்றையும் பெற்றிருக்கிறாதாயின் அது கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் சமமாகவே கருதும். ஒரு செயல் செய்தபின் இவ்வளவு நேரமாகி விட்டது என நினைத்து கால அளவை பார்க்கிறோம். இதனால் மனம் வேறுபாடு உணர்ந்து சமாதி நிலை உண்டாகும். யோகத்தில் இருக்கும்போது கடந்தகாலம் முழுவதும் நல்ல அனுபவமாக இருப்பதால் காலம் கழிந்தது என்ற எண்ணம் உண்டாகாமல் சமாதி நிலை உண்டாக பக்குவ நிலை ஏற்படும்.ஒரு புத்தகத்தில் ஆர்வம் செலுத்தி ஆழ்ந்து படிக்கும்போது நேரத்தைக் கவனியாமல், படித்து முடித்ததும் இவ்வளவு நேரம் கடந்து விட்டேதே என வியப்பு அடைவோம். மனத்தை குவித்து படிக்கும்போது கடந்த, நிகழ் காலம் ஒன்று படுகிறது. தியானகாலத்தில் எல்லாம் நிகழ்காலம். என்வே இறந்தகாலமும், நிகழ்காலமும் ஒன்று பட்டு இருந்தால் அப்போது மனமும் குவிந்துள்ளது என்பதாகும்.

3-13 ஏதேன பூதேந்த்ரியேஷு தர்ம லக்ஷணாவஸ்தா பரிணாமா வ்யாக்யாதா.

மனத்தில் வேறுபாடுகள் தோன்றியது போலவே பருவடிவிலும், நுண்வடிவிலும் உள்ள பூதங்களிலும் இந்திரியங்களிலும் வேறுபடுகள் தோன்றும். இடத்தாலும், வடிவத்தாலும், காலத்தாலும் எல்லாப் பொருள்களிலும் மாறுதல் உண்டு. வேறுபாடுகளையும் அதற்கான காரணங்களையும் அரிந்து கொண்டால் ஸம்யமம் எளிதில் செய்யலாம். தங்கக்கட்டியை கையில் அணியும் காப்பாகவும், பிறகு காதணியாகவும் மாற்றலாம்- இது உருவ வேறுபாடு. பொன் ஒருகாலத்தில் காப்பாகவும் மற்றொரு காலத்தில் காதணியாகவும் இருக்கிறது- இது காலத்தின் மாறுதல்- இறந்த, நிகழ், எதிர் காலத்தில் சித்தம் மாறி அமைவது காலமாறுபாடு. காப்பு அல்லது காதணி பளபளப்பாகவே பளபளப்பற்றோ, கனமாகவோ, மெல்லியதாகவோ இருப்பது -இது நிலையில் மாறுபாடு-ஒரே காலத்தில் -நிகழ்காலத்தில் தன்மை வேறுபடுவது- நிலைமை பற்றிய வேறுபாடு. இவற்றிற்கேற்ப தூல, சூட்மப் பொருளகளிலும் இந்திரியங்களிலும் ஏற்படும் மாறுதல்களை அடக்குவதில் வெற்றி பெறவேண்டும்.

3-14 சாந்தோதி தாவ்யப்தேச்ய தர்மானுபாதோ தர்மீ.

இதற்கு முன்பும் இப்போதும் இனிமேலும் ஒரு பொருளின்மேல் எந்த தர்ம இயல்பு வெளியாகி கொண்டிருந்தால் அது தர்மீ எனப்படும். ஒன்றின் இயல்பு தர்மம் ஆகும்.. தர்மத்தை ஏற்ற பொருள் தர்மீ ஆகும். சித்தத்திற்கு பழகிய காரணத்தால் இயல்புகள் உண்டு. காலத்தாலும் இடத்தாலும் அவை மாறிக்கொண்டே இருக்கும். எனவே சித்தமும் ஒரு தர்மீ ஆகும். கடந்த, நிகழ், எதிர் ஆகிய காலங்களில் நிகழும் மாறுதல்களால் பாதிக்கப் படுபவையெல்லாம் குணத்துடன் இருப்பவை. காலத்தாலும் சம்ஸ்காரங்களாலும் தாக்கப்பட்டு மாறுபாட்டை அடைந்து எப்பொழுதும் வெளிப்படத் தோன்றும் பொருளே காரணப் பொருளாகும்.

3-15 க்ரமான்யத்வம் பரிணாமான்யத்வே ஹேது.

சித்தத்தின் பலவிதமான பரிணாமங்களுக்குக் காரணம் ஒன்றைத் தொடர்ந்து ஒன்று மாறுதலாகி வருவது. ஒரு பிறவியிலிருந்து வேறு வேறு பிறவிகள் தோன்றுவது பரிணாமம் எனப்படும். ஒவ்வொரு பிறவியிலும் ஏற்படும் சித்தத்தின் மாற்றத்திற்கேற்ப அதன் புற உடல் அமையும்.

3-16 ப ரிணாமத்ரய ஸம்யமாததீ தானாகத ஜ்ஞானம்.

பரிணாமங்களின் மூன்று வகையை ஸம்யமம் செய்வதால் இறந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய ஞானம் வரும். ஒருமுகமாக ஒரு பொருள்மேல் மனத்தை செலுத்தினால் தாரணை. நீண்டநேரம் அப்படி இருந்தால் அது தியானம். அந்தப் பொருளின் வடிவத்தை நீக்கி அது பற்றி விபரம் மட்டும் மனத்தில் இருக்குமாறு செய்தல் சமாதி. தாரணை, தியானம், சமாதி மூன்றையும் சேர்ந்து செய்வது ஸம்யமம். பொருளை முன்பு பார்த்த தியான முறையில் அனுபவித்தால் அந்த வடிவமும் அந்த உணர்வும் மனதில் நிலைக்கும். பின் இதை ஒருமுறை நினைத்த உடன் நொடிப்பொழுதில் அந்த வடிவமும் உணர்வும் மனத்தில் தோன்றும். இது ஸம்யமம். இதுபோன்று ஆழமாக மனதில் பதிந்து பின் நினைத்தவுடன் மலர்ந்து – ஸம்யமம் செய்த பின் அந்த ஸம்யமத்தை தொடர்ந்து தியானம் செய்தால் இறந்தகாலமும், எதிர்காலமும் தெரியவரும்.

3-17 சப்தார்த்த ப்ரத்யயானாமிதரே தராத்யாஸாத் ஸங்கரஸ்தத் ப்ரவிபாக ஸம்யாமாத் ஸர்வபூத ரூதஜ்ஞானம்.

பெயர் சொல்லையும் அதனின் பொருளையும், அதனால் ஏற்படும் ஒலி அலைகளின் அறிவு ஆகியனவற்றைத் தனியாக ஸம்யமம் செய்தால் விலங்குகளின் ஒலியைப் புரிந்து கொள்கின்ற ஞானம் வரும்.சொல் என்பது வெளியே நிகழும் காரணம்-புறச்சலனம். ஒலி அசைவு காதின் நரம்புகள் மூலம் முளையின் ஒலி மையத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது பொருள்-உணர்ச்சி ஓட்டம். மனத்தின் எதிரியக்கம் அறிவு-அந்தச் சொல்லை அறிதல். இதனுடன் காட்சி வந்து சேரும். இந்த மூன்றும் கலந்து  கிடப்பதால் புறத்தில் உள்ள பொருளை அறிகிறோம். நாம் அறியும் சொல் மூன்றின் கலப்பு. ஒலி இயக்கம், நரம்பியல் உணர்வு, மனதில் எதிர்ச்செயல் மூன்றும் சாதாரணமாகப் பிரிக்கமுடியாதன. யோகி தனது பயிற்சியின் வல்லமையால் பிரித்து அந்த ஒலிமீது ஸம்சயம் செய்தால் அந்த ஒலி மனிதன்/பிராணி எவரிடமிருந்து வந்தாலும் அதன் கருத்தை அறிவான்.

3-18 ஸம்ஸ்கார ஸாக்ஷாத் கரணாத் பூர்வஜாதி ஜ்ஞானம்.

மனத்தில் ஏற்படும் சம்ஸ்காரங்களை- பதிவுகளைத் தெளிவாகவும் சரியாகவும் புரிந்தால் முற்பிறவிகள் பற்றிய ஞானம் உண்டாகும். நாம் கேட்க, பார்க்க, முகர, சுவைக்க, உணரத் தொடங்கியதில் இருந்து அறிந்த பிரபஞ்ச செய்திகள் அனைத்தும் அணு வடிவமாக மனத்தில் தொகுக்கப் பட்டுள்ளன. அந்த சூட்சமானவைகள் அழிந்து போவதில்லை. நுண்ணிய வடிவில் சித்தத்தில் புதைந்து கிடக்கும் இந்த அலையை சித்தத்தின் மேற்பரப்பிற்கு கொணர்ந்தால் அது ஞாபகம் எனப்படும். அந்த எண்ணப் பதிவுகளைக் கூர்ந்து ஸம்யமம் செய்தால் சென்ற பிறவிகளின் பகுதிகள் நினைவில் தோன்றி ஞானம் உண்டாகும்.

3-19 ப்ரத்யயஸ்ய பரசித்த ஜ்ஞானம்.

ஒரு உடலில் உள்ள அடையாளங்களை ஸம்யமம் செய்தால் அந்த மனத்தைப் பற்றிய ஞானம் தோன்றும். ஒவ்வொரு உடலிலும் சில குறிப்பிட்ட அடையாளங்கள் இருக்கும். ஒவ்வொரு உடல் அடையாளத்தை வைத்தே அந்த உடல்களின் தன்மை பிரிக்கப்படும். எனவே அந்த அடையாளங்களின் மீது ஸம்யமம் செய்தால் அந்த மனத்தின் தன்மையைப் புரிய வைக்கும்.

3-20 ந சத த் ஸாலம்பனம் தஸ்யாவிஷயீ பூதத்வாத்.

மேலே சொன்ன ஸம்யமத்தால் அந்த உடம்பின் மனத்தில் உள்ள பொருள்களை பற்றிய ஸம்யமம் செய்யாததால் அது பற்றிய ஞானம் தோன்றாது. உடல் அடையாளம் பற்றி ஸம்யமம் செய்வது புறத்தில் செய்வதாகும். அவன் மனம் முழுவதும் பற்றிய ஞானத்திற்கு அவை பற்றிய ஸம்யமம் செய்தால் ஞானம் வரும். எனவே புறத்தில் உள்ளதை ஸம்யமம் செய்வது, அகத்தில் உள்ள மனத்தை ஸம்யமம் செய்வது என இரண்டு வகை உண்டு.

3-21 காயரூப ஸம்யமாத்தத் க்ராஹய சக்தி ஸ்தம்பே சக்ஷுஷ் ப்ரகாசா ஸம்யோகே அந்தர் தானம்.

தன் உடலை ஸம்யமம் செய்து, உடலின் வடிவத்தை மற்றவர் பார்க்கும் செயலை செய்ய முடியாதபடி ஸம்யமத்தால் தடைப்படுத்தி, தன்னைப் பார்க்கும் பிறர் கண்ணில் உள்ள பார்க்கும் செயலை ஸம்யமத்தால் நடக்காதபடி பிரித்து வைத்து, மற்றவர் தன் உடலை அறியாதபடி மறைத்து வைக்கலாம். அந்தர் தானம் – எதிரில் இருந்தாலும் தம் உடலை பிறர் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்து வைப்பதாகும். உருவத்தை முதலில் உடலிருந்து பிரிக்க வேண்டும். திடீரென்று மறையக்கூடும். உண்மையில் மறைவதில்லை. மற்றவர்களால் காணப்படமாட்டான். உடலும் உருவமும் ஒன்றுபடுவதால் காணும் ஆற்றலும், அவை பிரிக்கப்படுவதால் காணும் ஆற்றல் தடைப்படும்.

3-22 ஏதேன சப்தாத் யந்தர் தானமுக்தம்.

நாம் பேசும் பேச்சும் பிறர் காதில் கேட்காதபடி மறைத்து வைக்கலாம். பிறர் பேசுவது தனக்கு விளங்குமாறும் ஸம்யமம் செய்து அதுவே பிறர்க்கு விளங்காதபடி ஸம்யமம் செய்யலாம்.

3-23 ஸோபக்ரமம் நிருபக்ரமம் ச கர்ம தத்ஸம்ய மாதபராந்த ஜ்ஞானமரிஷ்டோப் யோவா.

விரைவில் பலன் தருபவை, பிந்திப் பலன் தருபவை என்ற இரண்டு வகை கருமங்களின் மீதும் ஸம்யமம் செய்தாலும், மரண அறிகுறிகளாகிய அரிஷ்டங்களின்மீது ஸம்யமம் செய்தாலும் சரியான மரண காலத்தை அறியலாம். பிராரப்த கர்மம் – முன் ஜென்ம வினைகளைத் தற்போது அனுபவிப்பது, சஞ்சித கர்மம் – முன்செய்த வினைகளின் மீதம் இனிவரும் பிறவியில் அனுபவிப்பது, ஆகாமிய கர்மம் – இப்பிறவியில் செய்யும் செயல்களுக்கான பலனை அனுபவிப்பது ஆகிய மூன்றுவித கர்மங்களை ஸம்யமம் செய்யும்போது அவனுடைய மரண காலத்தின் எல்லை தெரியும். இறக்கும்போது எதை நினைக்கின்றோமோ அதுவாக அடுத்த பிறவியில் ஆவோம் என்பதால் நல்ல நினைவுகளை கொள்க.

3-24 மைத்ர்யா திஷூ பலானி.

நட்பு, கருணை(இரக்கம்) முதலிய குணங்களின் மீது ஸம்யமம் செய்தால் அந்தக் குணங்கள் சிறப்பாக விளங்கும். உலகில் உள்ள எல்லோருக்கும் தனக்கும் பயன்படும் என்ற எல்லாக் குணங்களையும் ஸம்யமம் செய்யலாம்.

3-25 பலேஷு ஹஸ்தி பலாதீனி.

விலங்குகளின் வலிமையை ஸம்யமம் செய்வதால் அவ்வாற்றல் உண்டாகும்.பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு பொருளின் குணமும் இயல்பும் தனக்கு வரும்மாறு ஸம்யமம் செய்யலாம்.

3-26 ப்ரவ்ருத்யாலோக ந்யாஸாத் ஸூக்ஷ்ம வ்யவஹித விப்ரக்ருஷ்ட ஜ்ஞானம்.

அநாஹதம்- இருதயம் எனும் தாமரையின் நடுவில் உள்ள மேலான பெரும் ஜோதியின்மீது ஸம்யமம் செய்தால் சூக்குமமாய் இருப்பவைகள் மறைந்துள்ளவைகள் தொலைவில் உள்ளவை ஆகியவை பற்றிய ஞானம் ஏற்படும். இந்த ஜோதி தகரா லயம், தகரா ல ரஹஸ்யம், தகரா காசம் என்பர். தகரம்- அணுவிலும் மிகச் சிறியது. அந்த இடம் எதனால் மறைக்கப்பட்டிருந்தாலும் அங்கு நிகழ்வனவற்றையும் நுண்னிய பொருளையும் காணமுடியும்.

3-27 பு வன ஜ்ஞானம் சூர்யே ஸம்யமாத்.

சூரியனின் கதிர்கள் சென்று பரவாத இடமும் பொருளும் இல்லையாதலால் சூரியனை நினைத்து ஸம்யமம் செய்தால் உலகப் பொருள்கள் பற்றிய ஞானம் கிட்டும். பௌதிக சூரியன் – கண்களால் காணுவது, ஆத்மிக சூரியன் – சூரியனில் உள்ளதும் ஆதமாவில் உள்ளதும் ஒன்றே என உணர்வது, தைவிக சூரியன் – கண்ணால் காணும் சூரியனுக்கு சக்தியைத் தருவது தெய்வ சக்தி என உணர்வது என மூன்று அடுக்குகளாக சூரியனை ஸம்யமம் செய்தால் உலக ஞானம் அடையலாம்.

3-28 சந்த்ரே தாராவ்யூஹ ஜ்ஞானம்.

சூரியன் இருக்கும்போது தோன்றாத நட்சத்திரங்கள் சந்திரன் இருக்கும்போது தோன்றுவதால் சந்திரனை ஸம்யமம் செய்தால் நட்சத்திர கூட்டங்கள் பற்றிய ஞானம் வரும்.

3-29 த்ருவே தத்கதி ஜ்ஞானம்.

வடதுருவத்தில் உள்ள துருவ நட்சத்திரம் இயங்காமல் எப்போதும் வடக்கிலேயே காணப்படுவதால், மற்ற நட்சத்திரங்கள் கிழக்கு மேற்கு என மாறிமாறித் தோன்றுவதால் இயங்காத ஒன்றை ஸம்யமம் செய்தால் இயங்கும் மற்றதைப்பற்றி உணரமுடியும்.

3-30 நாபி சக்ரே காயவ்யூ ஜ்ஹஞானம்.

தொப்புள் என்கிற நாபியில் உள்ள பத்து இதழ் தாமரையாகிய மணிப்பூரகச் சக்கரத்தில்- நெருப்புத் தானம்- உடல் உண்டாக அடிப்படையான ஓளியை ஸம்யமம் செய்தால் உடல் அமைப்பு பற்றிய ஞானம் வரும்.

3-31 கண்டகூபே க்ஷூத்பிபாஸா நிவ்ருத்தி.

தொண்டைக்குழியில் ஸம்யமம் செய்தால் பசியும் தாகமும் நீங்கும்.

3-32 கூர்ம நாட்யாம்ஸ் தைர்யம்.

கூர்ம நாடியின் இடம், பெயர் ஆகியவற்றை ஸம்யமம் செய்தால் வெயில், குளிர், காற்று, நெருப்பு ஆகியவற்றின் தாக்குதலால் தளர்ச்சி அடையாமல் உடல் உறுதி பெறும்.

3-33 மூர்த்த ஜ்யோதிஷி ஸித்த தர்சனம்.

உடலில் உள்ள ஒளி தலை வழி வெளியே பரவியுள்ளதால் தலை உச்சியின் மேல் உள்ள ஜோதியின்மீது ஸம்யமம் செய்தால் சூக்குமமாக இயங்கக்கூடிய மரணம் இல்லாப் பெருவாழ்வுடையவர்களான சித்தர்கள் தரிசனம் கிடைக்கும். சித்தர்கள் மனிதனின் ஆவி நிலைக்குச் சிறிது மேலே உயர்ந்திருப்பவர்கள்.

3-34 ப்ராதி பாத்வா ஸர்வம்.

இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாஹாரம், தாரணை, தியானம் ஆகியவற்றால் உடம்பிலும் தலையின் உச்சியிலும் தோன்றும் ஒளிவட்டம்- பிரபை- பிராதிபை- பிராதிபம் என்ற ஞானத்தில் எல்லாம் அறியலாம். சம்சயம் ஏதுமின்றி பிரதிபையின் தூய வாழ்வினால் தானாக எழும் ஆற்றல் வலிமையால் இவைகளைப் பெறமுடியும். யோகி பிரதிபை நிலைக்கு முன்னேறினால் வரும் பேரொளி விளக்கத்தால் பொருள்களைப் பற்றிய அறிவு சம்யமமின்றியே வரும்.

3-35 ஹ்ருதயே சித்த ஸம்வித்.

உடல் முழுவதும் பரவியுள்ள மனம் ஒவ்வோர் நிலையில் ஒவ்வோர் இடத்தில் நிலை பெற்றிருக்கும். நினைவு கால நிலையில் இருதயத் தானத்தில் மனம் நிலைகொண்டபோது அதை ஸம்யமம் செய்தால் மனதைப்பற்றி அறியலாம்.

3-36 ஸத்வ புருஷயோரத்யந்தா ஸங்கீர்ணயோ. ப்ரத்யயாவிசேஷாத் போக. பரார்த்த த்வாதன்ய ஸ்வார்த்த ஸம்யமாத் ப்ருஷ ஜ்ஞானம்.

நமக்காக உள்ள புருஷ ஞானம்- ஆத்மாவையும், பிறருக்காக உள்ள ஸத்வ குணத்தையும் வேறுவேறாக பிரிக்காவிடில் இன்பம்- போகம் உண்டாகாது. ஆத்மாவின் குணங்களில் தலைமையானது ஸத்வ குணமாகிய புத்தியாகும். பிரகிருதியின் சத்துவம் ஒளியையும் மகிழ்ச்சியையும் பெற்றது. ஆன்மாவின் பொருட்டு அகங்காரத்திலிருந்து விலகிய சத்துவம் புருஷனுடைய அறிவினால் ஒளிவிடும்போது அது தன்னிலையில் இருக்கும். அந்நிலையில் எல்லா தொடர்புகளிலிருந்தும் விலகி இருக்கும். பிறரோடு பழகுவதற்குப் பயன்படும் ஸத்வ குணத்தை பிரித்து புருஷன்மீது ஸம்யமம் செய்தால் ஆத்ம ஞானம் ஏற்படும்.

3-37 தத ப்ராதிபச்வராவண வேதனாதர் சாஸ்வாத வார்தா ஜாயந்தே.

ஆத்மாவாகிய புருஷனை ஸம்யமம் செய்தால் பருவடிவில் உள்ள பஞ்ச பூதங்களுக்கு காரணமாயிருக்கும் ஆத்மாவோடு நெருங்கியிருக்கும் நுட்பமாக அருவ நிலையில் இருக்கும் தன்மாத்திரைகளான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய பற்றிய அறிவு உண்டாகும்.

3-38 தே ஸமாதாவு பஸர்கா வ்யூத்தானே ஸித்தய.

மாயையால் செய்யப்பட்ட பிரபஞ்ச உலக இயல்பில் பயன் தரும் சித்திகள் என்றழைக்கப்படும் மேலே கூறப்பட்ட ஸம்யமங்கள் எல்லாம் சமாதி நிலைக்குத் தடையாக இருக்கும். சித்திகளில் மனம் லயித்தால் ஆத்மா மேலும் உயர்ந்துபோக தடை ஏற்படுவதால் ஆன்ம ஞானமும் முக்தி என்ற முன்னேற்றம் அடைய முடியாது. புருஷனும் மனமும் சேர்வதால் உலக அனுபவ அறிவு வரும். பிரகிருதியும் ஆன்மாவும் வெவ்வேறு பொருள்கள் என சம்சயம் செய்தால் புருஷனைப்பற்றிய அறிவு வரும். விவேகம் அடைவான். அதிலிருந்தி ஞானஒளியாக பிரதிபையை பெறுவான். இந்த சித்திகள் ஆன்மஞானமும் முக்தியும் பெற தடையாகும். இதைப் புறக்கணிதால் உயர் நிலை அடைவான்.

3-39 பந்தகாரண சைதிலயத் ப்ரசார ஸம்வேதனாச்ச சித்தஸ்ய பர சரீராவேச.

சித்தத்தைக் கட்டுப்படுத்தும் காரணமாக இருப்பதை அவிழ்க்கப்படும்போது, செயல்பாட்டிற்கு காரணமாகிய நாடிகள் பற்றிய அறிவு உண்டாவதால் அந்த உடம்பில் உட்புகலாம். உடல் முதல் பிரபஞ்சம் வரை உள்ள எல்லாமே ஆத்மவிற்கு வேறாக உள்ளவை என உணர்வதால் மற்றொரு மனத்தை வசப்படுத்தி ஸம்யமம் மூலம் அடக்கி சித்தி பெற்று அந்த உடலில் உள்புகலாம். பரகாய சித்தி= பர-வேறு+காயம்-உடல். பிரபஞ்சம் முழுவதும் மனமும் ஆத்மாவும் பரந்து விரிந்த பொருள்கள். எங்கும் பரந்துள்ள மனத்தின் ஒரு பகுதி. தற்பொழுது இந்த உடலில் நரம்புகள் மூலம் செயல் புரியலாம். அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டால் மற்ற உடலில் உள்ள நரம்புகள் வழி செயல் புரிய முடியும்.

3-40 உதான ஜயாஜ் ஜலபங்க கண்டகா திஷ்வஸங்க உத்க்ராந்திஸ்ச.

நுரையீரலையும் உடலின் மேல்பகுதியையும் இயங்கவைக்கும் நாடியாகிய உதானனை வசப்படுத்தி வென்றால் உடல் மென்மைத் தன்மையாகி நீரிலோ, புதை சேற்றிலோ மூழ்காமலும், முள்ளின்மீது நடக்கவும், விரும்பும்போது மரணமடையும் சித்திகள் கிட்டும்.

3-41 ஸமான ஜயாத் ப்ரஜ்ஜவலனம்.

ப்ராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்ற பஞ்ச பிராணன்களையும் மனத்தால் உணர்ந்து தூய்மை செய்வதாகத் தியானம் செய்து பின் சமானன் வாயுவையும் அது செல்லும் நாடியையும் தியானித்து ஸம்யமம் செய்தால் அவரை ஒரு ஜோதி எப்போதும் சூழ்ந்தபடி இருக்கும். உடலின் உள்ளிருக்கும் ஒளி வெளியில் கொணர முடியும்.

3-42 ச்ரோத்ராகாசயோ ஸம்பந்த ஸம்யமாத் திவ்யம் ச்ரோத்ரம்.

செவிப் புலனையும் ஆகாசத்தையும் இனைத்து ஸம்யமம் செய்வதால் தெய்வீகமான ஒலிகளைக் கேட்கும் சக்தி கிடைக்கும். காதினால் கேட்கக் கூடிய ஒலியையும், கேட்கமுடியாத பெரியதான, நுண்ணிய ஒலிகளையும்கூட உணரலாம். ஆகாசம் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளதால் எந்த இடத்தின் ஒலியையும் கேட்கலாம்.

3-43 காயகாசயோ ஸம்பந்த ஸம்யமால்லகுதூல ஸமாபத்தேஸ் சாகாச கமனம்.

உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும் ஆகாசம் உள்ளதாலும் ஆகாசமாகிய ஓசையால் எல்லாப் பொருள்களும் உடல், காற்று, தீ, நீர், நிலம் தோன்றியதாலும், ஆகாசத்தால் ஆன இந்த உடலையும் ஆகாசத்தையும் ஸம்யமம் செய்யும்போது பஞ்சைப்போன்ற லகுவாணத் தன்மை உடலில் உண்டாகி வானில் சஞ்சரிக்கும் சித்தி கிடைக்கும்.
பஞ்ச பூதங்கள் ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் பிரியும்போது ஒவ்வொன்றிலும் பஞ்ச பூதங்கள் இருப்பதை பஞ்சீகரணம் என்பர். ஒவ்வொரு பூதமும் பாதியாக முதலில் பிரிந்து மறுபாதி நான்கு அரைக்கால் பகுதிகளாக மாறும்.
ஆகாயம் -1/2 ஆகாசம் +1/8 காற்று +1/8 நெருப்பு +1/8 நீர் +1/8 நிலம்

காற்று -1/2 காற்று +1/8 நெருப்பு +1/8 நீர் +1/8 நிலம் +1/8 ஆகாசம்

நெருப்பு -1/2 நெருப்பு +1/8 நீர் +1/8 நிலம் +1/8 ஆகாசம்+1/8 காற்று

நீர் -1/2 நீர் +1/8 நிலம் +1/8 ஆகாசம் +1/8 காற்று +1/8 நெருப்பு

நிலம் -1/2 நிலம் +1/8 ஆகாசம் +1/8 காற்று +1/8 நெருப்பு+1/8 நீர்

இவ்வாறு ஒவ்வொரு பூதத்தின் சுயப்பகுதி அரையும் மற்ற நான்கு பூதங்களின் மொத்தம் அரையுமாகி முழுப்பூதமாவது பஞ்சீகரணம் ஆகும்.

3-44 பஹிரகல்பிதா வ்ருத்திர் மஹாவிதேஹாதத ப்ரகாசாவரண க்ஷய.

தன் உடம்பில் இல்லாமல் வேறு ஒருவர் உடம்பில் மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றையும் வியக்குமாறு பரப்பும்போது அந்த நிலை கற்பனையாக இல்லாமல் உண்மையாக இருந்தால் அந்த விருத்திக்குப் பெயர் மகாவிதேகம். தன் உடம்பை விட்டு விட்டதால் விதேகம் எனவும், பிற உடலில் பரவியதால் மகாவிதேகம் எனவும் கூறலாம். அந்த மகாவிதேகம் மீது ஸம்யமம் செய்தால் ஆத்மப் பிரகாசத்தை மறைக்கும் மறைப்பு நீங்கும். இருளும் அறியாமையும் மறைந்துவிடும். மூலப் பிரகிருதியிலிருந்துதான் உலகியல் தத்துவங்கள் மலர்ந்துள்ளது. அதில் உள்ளவையே மனம், புத்தி, அகங்காரம் மூன்றும். அவை பிரபஞ்சம் எங்கும் விரியக்கூடியவை. புத்தியற்ற உடம்பில் புத்தியையும், மனம் உறுதியற்ற ஓர் உடலில் மனத்தையும், எதற்கும் முன்வராத உடலில் அகங்காரத்தையும் பரவச்செய்யலாம். அது நலம் பயக்கும்.

3-45 ஸ்தூல ஸ்வரூப ஸூக்ஷ்மான் வயார்த்தவத்வ ஸம்யமாதபூதஜய.

ஐம்பூதங்களையும் வெற்றி கொள்ள பருவடிவான- தூலம், உண்மை வடிவான – சொரூபம், நுண்ணிய வடிவமான –சூக்குமம், அன்வயமான- விசேஷவயம், ஒரு பகுதி வடிவமான- அர்த்தவத்வம் ஆகிய ஐந்து நிலைகளை ஸம்யமம் செய்ய வேண்டும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் ஆகிய ஐந்து பூதங்களில் ஒரு பகுதியை மனத்தில் கொண்டு அதன் முழு பரப்பையும், அதன் உண்மை கலப்பு வடிவத்தையும், அதன் சூக்கும வடிவமான தன் மாத்திரையையும், அதன் சிறப்பையும், அதன் ஒரு பகுதியையும் எனத் தனித்தனியே ஸம்யமம் செய்தால் பஞ்ச பூதங்களை வெற்றி கொள்ளலாம். களிமண் கட்டி மீது சம்சயம் செய்து அது எந்த நுண்பொருளால் ஆனது ஆனது எனக்கண்டு அதன் மீது  வல்லமை அடைகின்றனர். அதுபோன்றே எல்லா பூதங்களையும் வென்று அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தலாம்.

3-46 ததோ  அணிமா திப்ராதுர்பாவ காய ஸம்பத்த த்தர்மானபிகாதஸ்ச.

பஞ்ச பூதங்களை வெற்றி கொள்வதால் அணிமாதி அட்டமாசித்திகளும், உடல் வளமும், உடலின் குணங்களும் அவை அழியாமல் இருப்பதும் நடக்கும்.

அட்டமா சித்திகள் எனப்படுவது-

அணிமா -தன் உடலை அணு அளவு செய்து கொள்வது
மகிமா -தன் உடலை மிகப் பெரிய உடலாக்குதல்
கரிமா -கட்டுப்படாததும், கட்டுப்படுத்துவதை மீறிக் கொள்வதுமாதல்
லகிமா -பஞ்சுபோல் இலேசான உடல் ஆகுதல்
பிராப்தி -நினைத்ததை அடைதல்
பிராகாம்யம் -நிறைவுள்ளவனாகுதல்
ஈசத்துவம் -கடவுள் செய்யும் ஆட்சிச் செய்கைகளைச் செய்தல்
வசித்துவம் -அனைவரையும் அனைத்தையும் தன் வசம் ஆக்கிக்கொள்ளுதல்.

3-47 ரூப லாவண்ய பல வஜ்ரஸம்ஹனனத்வானி காயாஸம்பத்.

வாழ்விற்கு பல வழியில் பயன்படும் உடல் வெற்றி எனப்படும் காயசித்தி என்பது உருவம், நிறம், வலிமை, வஜ்ரம் ஆகியன கொண்ட உடல் வளமாகும்.காலமெனும் தடியை ஒடித்து எறிந்துவிட்டு பிரபஞ்சத்தில் தனது உடலோடு வாழ்வான்.

3-48 க்ரஹண ஸ்வரூபா ஸ்மிதான் வயரர்த்தவத்வ ஸம்யமாதி ந்த ரயஜய.

இந்திரியங்கள் ஒன்றிப் பொருந்தி இருத்தல், அதனால் வரும் அனுபவம், அந்த அனுபவத்தால் அகங்காரம், அதனால் முக்குணங்கள் எனப்படும் சத்துவ, ராஜஸ, தாமஸ குணங்கள் எழுந்து, அவைகளால் ஜீவாத்மாவிற்கு ஏற்படும் அனுபவம் ஆகியவற்றின் மீது ஸம்யமம் செய்தால் இந்திரியங்களை வெல்லலாம். புறப்பொருள்களைக் காணும்போது புலன்கள் மனத்தில் தமக்குரிய இடத்திலிருந்து புறப்பட்டு அதை நாடும். அந்தனால் அந்த அறிவு உண்டாகும். அகங்கார உணர்வும் அச்செயலில் உள்ளது, இவற்றின் மீது சம்சயம் செய்தால் புலன்களை வெல்வான்.  ஒரு புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மீது மனதை ஒருமுகப்படுத்துங்கள். பின் புத்தக வடிவின் இருக்கும் அறிவின் மீதும், பிறகு புத்தகத்தை காண்கிற அகங்கார உணர்வின் மீதும் படிப்படியாக சம்சயம் செய்தால் அனைத்தையும் வெல்ல முடியும்.
3-49 ததோ மனோஜ வித்வம் விகரணபாவ ப்ரதான ஜயஸ்ச.

இந்திரியங்களை வெற்றி கொள்வதால் உடலுக்கு மனோவேகம் உண்டாகி உடலோடு தொடர்பு படாத இந்திரியங்களுக்குத் தனிச் சக்தியும் மூலப்பிரகிருதி ஆகிய முதல் தத்துவப் பிரிவின் வெற்றியும் கிடைக்கும். இந்திரியங்கள் பஞ்ச பூதங்களின் பகுதியேயாகும்.உடலுக்கு மனத்தின் வேகத்துதோடு இயங்கக்கூடிய ஆற்றலும் உடலின்று தனித்து நின்று புலன்கள் செயல்புரியக் கூடிய ஆற்றலும் இயற்கையை வெல்கின்ற ஆற்றலும் உண்டாகும்.

3-50 ஸத்வ புருஷான்யதாக்யாதி மாத்ரஸம்ய ஸர்வ பாவாதிஷ்டாத்ருத்வம் ஸர்வஞா த்ருத்வஞ்ச.

ஜீவாத்மா என்ற புருஷனுக்கும், மூலப்பிரகிருதி என்ற புத்திக்கும்(சத்துவம்) இடையேயுள்ள வேறுபாட்டை உணர்ந்து அதன்மீது ஸம்யமம் செய்வது பேராற்றலையும் பேரறிவையும் தரும். உடலுக்கும் வாழ்விற்கும் உரிய தத்துவங்கள் மூலப் பிரகிருதியில்தான் உண்டாகும். இயற்கையை வென்ற பிறகு புருஷனுக்கும் பிரகிருதிக்கும் உள்ல வேற்றுமை அறியப்படும். புருஷன் அழிவற்றவன். தூய்மையானவன். பூரணன். என காண்பதால் யோகி எல்லா அறிவையும் பெறுவான்.

3-51 தத் வைராக்யாதபி தோஷ பீஜக்ஷயே கைவல்யம்.

மேலே சொன்ன சித்திகளை அடைந்த பிறகு அவைகளை வைத்து வாழவேண்டும் என்ற நினைவே இல்லாமல் இருக்கும் வைராக்யம் கொண்டால் கேடுகள் அழிந்து, புருஷனுக்கு, எந்த ஆதாரமும் தன் ஆத்மாவிற்குத் தேவையில்லை என்ற முக்தி நிலையாகிய கைவல்யம் கிடைக்கும். சித்திகளை விட்டு விட்டால் தீமைக்கு காராணமாக இருக்கும் வித்துக்கள் அழிபடுவதால் கைவல்யம் கிட்டும். எல்லா ஆற்றல்களையும் எல்லா அறிவையும் பெற்றவன் எனும் எண்ணத்தை விட்டுவிடும்போது புலன்களால் பெறும் இன்பத்தையும் தேவர்களால் காட்டப்படும் இன்பங்களையும் ஒதுக்குபவனே குறிக்கோளை அடைகிறான். சித்திகளால் ஒருவன் தான் மிகுந்த சக்தியுடையவன் என நினைத்தானானால் அகங்காரம் அதிகமாகி மாயையின் விளைவால் முக்திக்குரிய தகுதியை இழக்கின்றான். ஜீவன் முக்தன் ஆவதாம்—தனக்கு உடலும் மிகை என்று கருதி ஆத்மாவுடன் எப்போதும் தொடர்பு கொண்ட நிலையாகும்.

3-52 ஸ்தான்யுபநிமந்த்ரணே ஸங்கஸ்மயா கரணம் பூனரநிஷ்ட ப்ரஸங்காத்.

முக்தியடையும் தகுதிகொண்டவர்களைத் தடை செய்வதன் மூலம் அவர்களின் உறுதியைச் சோதனை செய்வது தேவர்களின் வழக்கமாவதால் தேவதைகளை மயக்குவதற்கு ஆளாகி ஆசையும் கர்வமும் மிகுந்தால் அவனுக்கு மிகுந்த துன்பமாகும். தேவர்களுடைய ஆசை வார்த்தைகளால் மகிழ்வும் கர்வமும் அடைந்து அவர்களுக்கு வசப்பட்டால் மீண்டும் சம்சார பந்தமான தீமைவரும் என்ற அச்சம் இருக்க வேண்டும். யாரேனும் முக்தி பெறுவதை தேவர்கள் விரும்புவதில்லை. 

3-53 க்ஷண தத்கரமயோ ஸம்யாமாத்விவேகஜம் ஞானம்.

ஒருக் கணப் பொழுதையும் அதன் முன்னும் பின்னும் உள்ள காலத்தையும் ஸம்யமம் செய்தால் நன்மை தீமைகளை ஆய்ந்து நன்மையை நாடும் விவேகம் முதலில் உண்டாகிபின் அதுஞானமாக மலரும்.  சுவர்க்க இன்பத்தையும் தேவர்களையும் சித்திகளையும் ந்ல்லது எது கெட்டது எது என்ற விவேகத்தால் தள்ளிவிடமுடியும். அதைப் பெறுவதற்கு காலத்தை சம்சயம் செய்யவேண்டும்.                                             3-54 ஜாதி லக்ஷணதே சைரந்யதானவச் சேதாத் துல்யயோஸ்ததப்ரதி பத்தி.

ஜாதிவகைகள், லட்சணம், இடம் ஆகியவைகளைக் கொண்டு இதற்கு முன் பாகுபடுத்தி உணர முடியாதவைகளையும் மேலே சொன்ன ஸம்யமத்தால் உணரலாம். துயரத்திற்கு காரணம் நிலையான் பொருளையும் நிலையற்ற பொருளையும் விவேகத்தால் வேறுபடுத்தி அறிய முடியாத அறியாமையே. தீமையை நன்மையாகவும் கனவை ஊண்மையாகவும் கருதுகிறோம். ஆன்மா ஒன்றே உண்மையானது. உடல் பொய்யானது. விவேகம் உதித்தால் அந்த வலிமையால் உடல், சுவர்க்க லோகம், தேவர் இவற்றை ஒதுக்க முடிகிறது. உடலும் மனமும் சேர்க்கைப் பொருள் என்றாலும் அதை ஒன்றுபடுத்துகிறோம். விவேகம் பெறும்போது உலகுடனும் மனத்துடனும் சம்பந்தப்பட்ட பொருள்கள் அனைத்தும் கூட்டுப்பொருள்களே என அறிய முடியும்.

3-55 தாரகம் ஸர்வவிஷயம் ஸர்வதா விஷயமக்ரமம் சேதி விவேகஜம் ஞானம்.

எல்லாப் பொருள்களையும் அவைகளின் கூறுபாடுகளையும் ஒரே நேரத்தில் அறிந்து கொள்ளும் அறிவிலிருந்து உண்டாகும் ஞானமே பிறவி இல்லாமல் செய்வதாகும். அது கரையேற்றும் ஞானமாகும். பிறப்பும், இறப்பும் மாறி மாறி வரும் ஒரு தொடர் நிகழ்வாதலால் அதற்கு தீர்வு முக்தியே ஆகும். மூலப்பிரகிருதியிலிருந்து உடல் தத்துவங்களையும் பிரபஞ்சமாக விரியும் தத்துவங்களையும் ஸம்யமம் செய்தால் ஞானம் ஏற்படும்.

3-56 ஸத்வ புருஷ்யோ சுத்தி ஸாம்யே கைவல்யமிதி.

புருஷனும் புத்தியும் ஒரே நேரத்தில் சுத்தியாகும்படி செய்யப்படும் ஸம்யமமே கைவல்யத்தை தரும். பிரபஞ்சமுழுவதையும் அறிந்தபின் பிரபஞ்சதிலுள்ள எல்லாப்பொருளோடும் ஜீவாத்மா தொடர்பு கொள்வதில்லை. எவற்றோடும் கூட்டாக இருக்காது. அந்த உணர்வே கைவல்ய நிலையை உருவாக்கும்.  தேவர்கள் முதல் அணுவரை எப்பொருளையும் ஆன்மா சார்ந்தது அன்று. என்பதை அனுபவத்தால் அறியும்போது அது நிறைநிலையாகிய தனித்திருத்தல் என்ற கைவல்ய நிலையாகும். புருஷன் எவ்வளவு புனிதமானவனோ தூய்மையும் அழுக்கும் கலந்த சத்துவத்தை(புத்தி) அதைப் போன்று சுத்தமாகுகும்போது கைவல்யம் கிட்டும். குணம் அற்ற பரிசுத்தமான சாரத்தை சத்துவம்(புத்தி) பிரதிபலிக்கும். அதுவே புருஷன்.                                                                                     ******                                                                                                                                                                                                                                                                                                                             

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879604
All
26879604
Your IP: 34.230.84.106
2024-03-19 10:34

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg