gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

பூவுலகில் எதையும் மென்மையாக கையாளமுடியும்!
திங்கட்கிழமை, 07 May 2018 01:37

விரதங்கள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!

$$$$$

விரதங்கள்!

தவசீலர்களும் ரிஷிகளும் முனிவர்களும் இல்லற தர்மத்தில் ஈடுபடும் மக்களது வாழ்விற்குத் தேவையானவற்றை இறைவன் அருள்பெற்று வகுத்துக் கொடுத்தவை விரதங்கள். உயிர்களின் மனம், உடல் ஆரோக்கியத்தைப் பேனும் வகையில் முன்னோர்களால் அமைக்கப் பட்டவையே விரதங்கள். அந்த விரதங்களை முறைப்படி கடைபிடிப்பவர்கள் வாழ்வில் எல்லா நலமும் பெற்று வளமுடன் வாழ்வர். உயிர்கள் கண்ணால் காணும் முழு முதற் கடவுள் சூரியன். அந்த சூரியனை- ஆதித்யனை வழிபட்டு பயன் பெருங்கள். ஆதித்ய விரதம் இருக்க இயலாதவர்கள் காலைக் கடன்களை முடித்து நீராடி சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நலன் அடைவீர். சூர்ய நமஸ்காரத்தில் யோகாசனம், பிரணாயாமம் இரண்டும் கலந்துள்ளது. மற்ற ஆசனங்கள் செய்வதற்கு ஓர் இலகுத் தண்மையை அளிக்கின்றது. ஆசனங்கள்யாவும் சூர்ய உதயத்திற்குமுன் செய்வது சிறந்தது என்பதால் அந்த நேரத்தில் சூரியனை வணங்குதல் சிறப்பு. யோகத்தில் சூரிய நமஸ்காரம் 12 யோக ஆசனங்களை உள்ளடக்கியது அவற்றை செய்தும் சூரிய நமஸ்காரம் செய்யலாம்.

ஆதித்ய ஹ்ருதய விரதம்- சங்கராந்தி ஞாயிற்றுக் கிழமை வந்தால் அன்று இந்த விரதத்தை துவங்க வேண்டும். ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படித்து சூர்ய பூஜை செய்க. அஸ்தமத்திற்குப்பின் வேத வல்லுனருக்கு உணவு அளித்து உபசரிக்க. வெள்ளரிக்காய் கலந்த அன்னம் உண்டு தரையில் படுக்க. 108 நாட்கள் தொடர்ந்து செய்க. தினமும் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படிக்கலாம். போரில் மனம் தளர்ந்த இராமனிடம் அகத்தியர் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை சொல்லச் சொல்லி அவரின் கஷ்டங்களை தீர்க்க உதவினார்.

கிரியா யோகத்தின் மூலம் சூரியனின் அருளைப் பெறலாம். மனதில் சூரியனை நினைத்து, பஜனைசெய்து, பாடல்பாடி, பாராயணம் செய்து, ஆன்மாவிற்குள் சூரியன் இருப்பதாக நினைத்து நமஸ்காரம் செய்து, அன்று என்ன செய்தாலும் அது சூரியனுக்கு செய்வதாக நினைத்துச் செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் சூரியனைக் காண்பதே கிரியா யோகம்.

ஈசனுக்குரிய விரதங்கள்! 1.சோமவார விரதம், 2.திருவாதிரை விரதம், 3.கல்யாண விரதம், 4.அஷ்டமி விரதம், 5.உமா மஹேஸ்வர விரதம், 6.சிவராத்திரி விரதம், 7. பாசுபத விரதம், 8. கேதார கௌரி விரதம். 9. மாத பௌர்ணமி விரதம் எனப்படும்

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியில் விரதமிருந்து சிவபூஜை செய்து வழிபடின் சிவ பார்வதி அருளைப் பூரணமாகப் பெற்று சகல வளத்துடன் வாழ்ந்து முடிவில் இறைவனடி சேரும் பாக்யம் கிட்டும். ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பான வழிபாட்டிற்கு இரத்தினத்தால் ஆன லிங்கம் எனச் சொல்லப்பட்டுள்ளது. அப்படி இரத்தினங்களால் ஆன லிங்கங்களை வழிபட சக்தியில்லையென்றால் பொன், வெள்ளி, செம்பினால் ஆன லிங்கங்களை வைத்து பூஜிக்கவும். பூஜித்தபின் லிங்கங்களை அருகில் உள்ள சிவாலயத்தில் வைத்து ஸ்தோத்திரங்களால் துதிக்க வேண்டும்.

விரதம் இருப்பது நம்முடைய சிறந்த பண்பாடாக இருந்துள்ளது. மன ஒழுக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நன்மை அளிக்கும் விரதங்கள் சில:

சந்தாபண விரதம்- ஒருநாள் முழுவதும் பஞ்சகவ்யம் உட்கொண்டு அடுத்தநாள் முழுவதும் உண்ணாவிரதம் இருத்தல்.

மஹா சந்தாபண விரதம்- பஞ்சகவ்யத்தில் ஏதேனும் ஒன்றை மட்டும் ஆறு நாட்கள் உட்கொண்டு ஏழாம் நாள் முழு உபவாசம் இருத்தல்.

பிரிசமத்திய அல்லது கிரிச்சர விரதம்- முதல் மூன்று நாட்கள் 26 தேக்கரண்டி அளவு பகலில் மட்டும் உணவு உட்கொண்டு, அடுத்த மூன்று நாட்கள் 22 தேக்கரண்டி அளவு இரவில் மட்டும் உணவு உட்கொண்டு, அடுத்த மூன்று நாட்கள் 24 தேக்கரண்டி அளவு உணவு உட்கொண்டு பத்தாம் நாள் உபவாசம் இருத்தல்.

அதிகிரிச்சர விரதம்- முதல் மூன்று நாட்கள் ஒரு கையளவு மட்டும் பகலில் உட்கொண்டு, அடுத்த மூன்று நாட்கள் ஒரு கையளவு மட்டும் மாலையில் உட்கொண்டு, அடுத்த மூன்று நாட்கள் ஒரு கையளவு மட்டும் பகலில் எப்பொழுதாவது உட்கொண்டு, இறுதியாக மூன்று நாட்கள் உபவாசம் என பன்னிரண்டு நாட்கள் இருத்தல்.

பராக விரதம்- பன்னிரண்டு நாட்கள் தொடர்ந்து உபவாசம் இருத்தல்.

தப்தகிரிசர விரதம்- முதல் மூன்று நாட்கள் நீர் மட்டும் அருந்தி, அடுத்த மூன்று நாட்கள் பால் மட்டும் அருந்தி, அடுத்த மூன்று நாட்கள் நெய் மட்டும் அருந்தி, இறுதியாக மூன்று நாட்கள் உபவாசம் என பன்னிரண்டு நாட்கள் இருத்தல்.

பதகிரிச்சர விரதம்- முதல் நாள் ஒரு வேளை உணவு, இரண்டாம்நாள் உபவாசம், மூன்றாம் நாள் அளவில்லா உணவு, நான்காம் நாள் உபவாசம் இருத்தல்.

சாந்தா ராமண விரதம்- பௌர்ணமி முதல் நாள் 15 கையளவு உணவு, அடுத்தநாள் 14 கையளவு உணவு என ஆரம்பித்து அமாவாசைவரை உட்கொண்டு அமாவாசையன்று உபவாசம் இருக்கவேண்டும். அடுத்து பிரதமை முதல் நாள் ஒரு கையளவு என ஆரம்பித்து தினமும் ஒரு கையளவு அதிகமாகிக் கொண்டு பௌர்ணமி அன்று 15 கையளவு உண்டு விரதத்தை முடித்தல்.

சாதுர்மாஸ்ய விரதம்: சன்னியாசிகள் மேற்கொள்வது.. ஆடிமாத பௌர்ணமியிலியிருந்து கார்த்திகை மாசம் பௌர்ணமி வரைக்கும் ஒரே இடத்தில் தங்கி வேத புராணங்களில் வித்வத்வம் உள்ளவர்களுடன் கலந்துரையாடி, சாஸ்திர சம்பிரதாயத்தையும், பக்தி மார்க்கத்தையும் மத்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதுடன், உணவையும் சில கட்டுப்பாடுகளையும் கடைபிடிப்பர்.

விரத பூஜைகள்!

பிரதோஷ வழிபாடு!

உதயகால பிரதோஷ வேளையில் சிருஷ்டியும், சந்தியா கால பிரதோஷத்தில் சம்ஹாரமும் நடக்கும் என்கின்றன வேதங்கள். அதாவது ஒவ்வொரு உயிரும் காலையில் விழித்து எழுவதை ஒரு சிருஷ்டிக்குச் சமம் என்றும், உறங்கச் செல்வதை பிரளயத்திற்குப்பின் வரும் ஒடுக்கத்திற்கு நிகராகவும் கருதப்படும்.

அதிகாலை 0430 மணி முதல் 0600வரையில் உள்ள காலத்தை பிரம்ம முகூர்த்தம் என்றும் அதுவே உதயகால பிரதோஷம் அல்லது உக்ஷத் காலம் எனப்படும். மாலை 0430 மணி முதல் 0600வரையில் உள்ள காலம் சந்தியா கால பிரதோஷம் ஆகும் இதையே நாம் பிரதோஷகாலம் எனப் பொதுவாகச் சொல்கின்றோம்.

பிரதோஷம் என்பதில் பிர என்பது அளவற்ற என்றும் தோஷம் என்றால் தீமைகள் என்றும் அர்த்தம். அதாவது அளவுகடந்த தீமைகள் தோன்றும் காலம். அப்படியென்றால் தோஷங்கள் தாக்கி தீமைகள் வரக்கூடும் என்பதால் அந்த வேளையில் ஏற்படும் தீமைகளை அழிந்து அவற்றிலிருந்து நம்மைக் காக்கும் இறைவனை அந்த நேரத்திலே வழிபடுதலே சிறப்பு என்பதாலேயே பிரதோஷ வழிபாடு முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது.

தீமைகள் தோன்றும் அந்த பிரதோஷகாலத்தில் மற்ற தெய்வங்களை விட்டு ஏன் நந்திதேவரையும் சிவபெருமானையும் மட்டும் வழிபடவேண்டும்.

காஸ்யப முனியின் மனைவி அதிதி- இவரின் குழந்தைகள் இந்திரன் உள்பட தேவர்கள் மற்றும் பன்னிரண்டு ஆதித்தியர்கள். இன்னொரு மனைவி திதி- இவரின் குழந்தைகள் இரணியாட்சகன், இரணியகசிபு மற்றும் நிறைய அசுரர்கள். தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் அடிதடித் தகராறுகள் நடந்து கொண்டேயிருந்தன. சகோதர்களான அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் தோன்றிய பிரச்சனைகளே அடிக்கடி அசுரர்- தேவர் யுத்தம் நடைபெறக் காரணமானது. அசுரர்களின் ஆதிக்கத்தால் முதலில் பாதிக்கப்படுபவன் இந்திரன். ஹிரண்யாட்சசன், ஹிரண்யகசிபு, முதல் இராவணன், இந்திரஜித் போன்ற அசுரர்களால் ஆக்கிரமகிக்கப்பட்டு சிறைப்பட்டு அல்லல்களுக்கு ஆளாகி பிரம்மா, விஷ்ணு, சிவனின் அனுக்கிரகத்தால் மீண்டும் போராடி தேவருலகத்தை அடைந்துள்ளான்.

தொடரும் பிரச்சனைகளுக்கு சுகுமமான முடிவிற்கு வர பிரம்மா கூறிய ஆலோசனையே பாற்கடல் கடையக் காரணம். எல்லோரும் உணவு ஏதும் உண்னாமல் உபவாசமிருந்து ஏகாதசி அன்று மந்தார மலையை மத்தாகக் கொண்டு வாசுகி நாகத்தை கயிறாக்கி பாற்கடலைக் கடைய திட்டம் தீட்டப்பட்டது திருமாலும் தேவந்திரனுக்காக இதற்கு ஒப்புக்கொண்டார். மந்தாரமலை சம நிலையில் இல்லாமல் கீழும் மேலும் சென்றுவர அதை ஒர் நிலையில் நிறுத்த திருமால் கூர்ம உருவெடுத்து கடலின் அடியில் சென்று மந்தாரமலையைத் தாங்கி ஓர் நிலையில் இருக்கச் செய்தார். பாற்கடல் கடைய ஆரம்பித்து நீண்ட நேரம் ஆகியும் ஒன்றும் வரவில்லை.

பிரம்மா ஜாம்பவானை அழைத்து இவ்வளவு நேரம் கடைந்தும் பலன் ஒன்றுமில்லை. நீங்கள் சில ஒளஷதிகளை கடலில் கலக்குங்கள் என்றார். தயிரைக் கடைந்தால் அதனுள்ளிருந்து வெண்ணெய் வருவதும் அதைக் காய்ச்ச நெய் வருவதும் எல்லோருக்கும் தெரியும் அதைப் போலவே தொடர்ந்து பாற்கடலை கடைய அதிலிருந்து சிறிது நேரத்தில் வெள்ளையான ரசம் வர பிரம்மா அதை ஓர் கலசத்தில் பிடித்துவைத்தார். ஐராவதம் யாணை, மிகுந்த நாற்றத்துடன்-மதுரசம், குளுமையான-சந்திரன், மூத்ததேவி-ஜேஸ்டாதேவி, லட்சுமி, பின்னர் ரம்பை, மேனகா, கிருதாசி, ஸ்கேசி, மஞ்சுகேஷி, சித்திரலேகை ஆகிய நடன மாதர்கள், பின்னர் நிதிகள், தினமும் இரத்தினங்களை சிந்தும் இரண்டு திவ்ய புருஷர்கள் சங்க பத்ம நிதிகள் (குபேரனுக்கு நவநிதி அளிப்பவர்கள்) இருவரையும் லஷ்மியுடன் இருக்கச் செய்தார் பிரம்மா,

பின்னர் உச்சைசிரவஸ் என்ற வெள்ளைக்குதிரை, பின் கல்பதரு, காமதேனு, சூரியமணி, ஸ்யமந்தக மணி, கௌஸ்துப மணி, தேவதந்த சங்கு, புஷ்பக விமானம், நந்திகோஷ ரதம் தோன்றியது. வெளிப்பட்ட பொருள்கள் ஒவ்வொன்றும் தனக்கு என உரிமை கொண்டாடி ஒரே கூச்சல் குழப்பம். சிவன் வந்தார். இவற்றை பத்திரப்படுத்திவிட்டு எதற்காக ஆரம்பித்தீர்களோ அதற்காக மேலும் கடையுங்கள் இறுதியில் முடிவு செய்யலாம் எனச் சொல்லிச் சென்றார்..

கடையலைத் தொடர, மேலும் மேலும் கடைய வெப்பம் பரவியது. ஆலமாகிய நஞ்சு உற்பத்தியாகி கடலில் கருநிறம் சூழ்ந்து அனைவரும் அதன் பாதிப்பை உணரும் முன்பாக, கயிறாக உபயோகிகப்பட்ட பாம்பு வாசுகி உடல் உபாதை தாங்காமல் காலம் எனும் விஷம் கக்க மொத்தமாக ஆலகால விஷமாகி உயிர்களை அழிக்கத் தொடங்க உணர்ந்த தேவர்கள் கயிலைநாதரிடம் முறையிடச் செல்ல, காவலில் இருந்த நந்தி உயிர்கள் படும் அவஸ்தையைக் கண்டு ஈசனிடம் தெரிவிக்க அந்த ஆலகாலத்தைத் திரட்டி எடுத்த சுந்தரர் சிவனிடம் கொடுக்க அவர் உலக நலன் கருதி விழுங்க உமை அவர் கண்டத்தைப் பிடிக்க ஆலகால விஷத்தினால் சிவன் ஒரு நிமிடம் நிலைதடுமாறி பின் நீலகண்டனாக பரிமளித்தார்.

ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஓர் பெண்ணிருப்பாள்!
கணவனுடைய செயல்களுக்கு மனைவி உடந்தையாக இருந்து செயலாற்றினால்தான் அது வெற்றிகரமாக இருக்கும். என்ன புரியவில்லையா! சிவன் விஷத்தை விழுங்குகின்றார் என்று பதறி பார்வதி கணவரைக் காப்பாற்ற அதை தடுக்கின்றார் என்றுதான் நினைப்பீர்கள். உண்மை அதுவல்ல!

அம்பிகை பரமேஸ்வரன் ஆலகாலத்தை விழுங்கினதை தடுக்க அவர் கண்டத்தைப் பிடிக்கவில்லை. அதாவது தன் கணவரின் நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி தடுத்துள்ளார்! புரியவில்லையா!

ஈசன் ஆதியும் அந்தமும் இல்லாதவர். அதாவது அவருக்கு பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. பிறப்பும் இறப்பும் இல்லா அநாதியானவர். எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்த அந்த எண் குணத்தானை எல்லாம் வல்லவனை எல்லாமுமாய் இருப்பவனை அந்த ஆலகால நஞ்சு என்ன செய்யும் பக்தர்களே சற்று யோசியுங்கள்! பின் அவர் எந்த நோக்கத்திற்காக நஞ்சை விழுங்கினார். கீழே கடலில் கலந்தால் கடல்வாழ் உயிரினங்களும், காற்றில் கலந்தால் மற்ற உயிர்களுக்கும் உலகத்திற்கும் எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என விழுங்கினார்.

சரி அப்படியென்றால் பார்வதி ஏன் அதைத் தடுத்தார். அங்கும் ஓர் உண்மை ஒளிந்திருக்கின்றது. அதாவது சகல உலக உயிர்களும் ஈசனுடைய அம்சம். சர்வமும் அவருக்குள்ளே அடக்கம். அதனால் அவர் ஆடினால் உலகம் ஆடும். அவர் இயக்கம் சகலத்தின் இயக்கம். நீங்கள் அறிந்திருப்பீர்கள் உமை ஈசனின் கண்களை மூட உலகம் ஸ்பித்ததை. இப்படி எல்லாமும் ஆன இறைவனின் உடலுக்குள் நஞ்சு சென்றால் தோற்றமோ அழிவோ இல்லாத ஈசனுக்கு ஒன்றும் ஆகாது. அவருக்குள்ளே இருக்கின்ற மற்றெல்லாவற்றிற்கும் அழிவு ஏற்படக்கூடாது மேலும் எல்லாம் காப்பவன் ஈசன் அவனது செயல்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மனைவியான பார்வதி தன் கடமையாக ஈசனின் கண்டத்தைப் பிடித்து கணவன் நோக்கத்திற்கு உதவி செய்தாள். இதைக்கொண்டே ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஓர் பெண்ணிருப்பாள் என்பது வழக்கமானது.

கடைசியில் எதிர்பார்த்த அமுதம் திரண்டது

அமுதம் பெற்றதும் ஈசனைக் காண அனைவரும் சென்றனர். ஆலகாலம் தன் ஆரோக்கியத்தை பாதிக்கவில்லை, பாதிக்காது என்பதை உணர்த்த ஈசன் ஆனந்த தாண்டவம் நிகழ்த்தினார். மக்கள் உயிர் இன்னலை அடைந்தபோது நெஞ்சு பதறி தன்னிடம் வந்து தகவல் சொல்லிய நந்தியை பெருமைப் படுத்த எண்ணம் கொண்டு தன் ஆடலை நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையில் ஆட அந்த அற்புதமான ஆட்டத்தால் உலகம் ஆனந்தமடைந்தது. எல்லா உயிர்களும் அவரிடம் ஒன்றி இருந்ததால் பிரதோஷங்கள் எதுவும் எந்த உயிரையும் தீண்டாமல் விலகின. எல்லா உயிர்களையும் சிவபெருமான் தம்மிடம் ஒன்றியிருக்கச் செய்த காலமே பிரதோஷகாலம்.

அன்றைய தினம் சனிக்கிழமை திரயோதசி என்பதால் தினமும் பிரதோஷவேளை வந்தாலும், திரயோதசி தினத்தன்று வரும் பிரதோஷவேளையே சிறப்பானதாகும். மேலும் பிரதோஷம் ஐந்து வகைப்படும்.

தின பிரதோஷம்-தினமும் மாலை 0430-0600 வரை

பட்சப் பிரதோஷம்-பௌர்ணமிக்கு முன்பாக சுக்லபட்ச பிரதோஷம்

மாதப் பிரதோஷம்- கிருஷ்ணபட்ச திரதோதசி தின மாலை வேளை.

மகா பிரதோஷம்-மாதம் தோறும் வரும் கிருஷ்ணபட்ச திரயோதசி தினம்

சனிக்கிழமையாயிருந்தால். பிரளயப் பிரதோஷம்-உலக உயிர்கள் அனைத்தும் தன்னுள் ஒடுங்கியிருக்க ஈசன் ஊழித்தாண்டவம் ஆடும் காலம்.  

பௌர்ணமிக்குபின் வரும் கிருஷ்ணபட்ச திரயோதசி திதி, அமாவாசைக்குபின் வரும் சுக்லபட்ச திரயோதசி திதி ஆகிய இரண்டுமே மாதம் இருமுறை வரும் பிரதோஷ வழிபாட்டிற்குரிய நாட்கள்.

தினப்பிரதோஷத்தை தவிர மற்ற பிரதோஷங்கள் வரும் கிழமைகளுக்கேற்ப பலன்களும் உண்டு.
ஞாயிற்றுக்கிழமை-ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தந்தைவழி உறவுகள் மேம்படும்,. சுபமங்களம் கிட்டும்.
திங்கட்கிழமை-மன அமைதி, நிம்மதி தரும். அறிவு வளரும். மனநோய்கள் தீரும். தாயாரின் ஆசி கிட்டும். சந்திர தோஷங்கள் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை- ருணம் ஆகிய கடனும், ரணம் ஆகிய நோய்களும் நீங்கும். பூமிசார்ந்த வழக்குகள் சாதகம் ஆகும். வீடு நிலம் வாங்க வசதிகள் .சகோதர ஒற்றுமை ஓங்கும். பூர்வீகச் சொத்து சேரும். அன்னப் பஞ்சம் தீரும்.
புதன்கிழமை-மாணவர்களின் அறிவுத் திறன் ஆதிகரிக்கும். புதன் தோஷங்கள் விலகும். சந்தானப் பிராப்தி ஏற்படும்.
வியாழக்கிழமை- சகல தோஷங்களும் விலகும். கலைஞானம் வளரும்.மதிநுட்பம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் நடக்கும்.
வெள்ளிக்கிழமை-தம்பதியினரிடையே ஒன்றுமை ஓங்கும். உறவுகளின் உறவு மேம்படும். திருமணத் தடைகள் நீங்கும்.
சனிக்கிழமை-எந்த தோஷமும் நீங்கும். இதுமகா பிரதோஷம் எனப்படும்

#*#*#*#*#

சத்யநாராயன விரத பூஜை!

மனிதர்கள் அன்பு, கருணை, பரிவு என்ற நல்ல குணங்களோடும் நல்ல எண்ணங்களோடும் இறைவன்மீது மாறாத நம்பிக்கையுடன் கிருதயுகம், துவாபர யுகம், திரேதாயுகம் ஆகிய மூன்று யுகங்களிலும் வாழ்ந்து வந்ததால் சிக்கலில்லா சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வந்திருந்தனர். கலி பிறப்பதற்குச் சில ஆண்டுகளுக்குள் அவர்களின் போக்கில் மாறுதல்கள் ஏற்பட ஆரம்பித்தன.

துவாபர யுகம் முடியும் தருவாயில் ஒரு ஊரில் இரண்டு விவசாயிகள் நட்புடன் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவன் தன்னிடமிருந்த நிலத்தை மற்றவனுக்கு விற்று விட்டான். நிலத்தை வாங்கிய விவசாயி நிலத்தை உழுது பயிர் செய்ய் நினைத்து உழ ஆரம்பித்தான். அப்போது நிலத்திலிருந்து ஒரு கலசம் கிடைக்க அதை எடுத்துக் கொண்டு தன் நணபனிடம் ஓடினான். நிலத்தை உழும்போது இந்தக் கலசம் கிடைத்தது .நீ வைத்துக் கொள் என்றான். நிலத்தை விற்றவன் நிலத்தை எப்போது உனக்கு விற்று விட்டேனோ அப்போதே அதுவும் அதில் உள்ள பொருள்களும் உனக்கே சொந்தம் என்றான். நிலத்தை வாங்கியவன் நிலத்தை உழுது பயிர் செய்து அதில் வரும் பலன்தான் எனக்கு. அதற்கு முன்பே நிலத்தில் இருந்த கலசம் உனக்குத்தான் சேர வேண்டும் என இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு முடிவுக்கு வராத நிலையில் இருவரும் படுதுறங்கச் செல்வோம் இறைவன் கனவில் யாருக்குச் சொந்தம் எனக் கூறுகின்றாறோ அதன்படியே செய்வோம் என முடிவு கொண்டு படுத்துறங்கச் சென்றனர்.

அந்த இரவுடன் துவாபரயுகம் முடிந்து நள்ளிரவில் கலி பிறந்தது. காலையில் இருவரும் சந்தித்தபோது எந்தெந்தக் காரணங்களால் நேற்று தனக்குச் சொந்தமில்லை என்று சொன்னார்களோ அதே காரணங்களைக் கூறி அந்தக் கலசம் தனக்கே சொந்தம் என வாதாடி முடிவு வராமல் கோபம் தலைக்கேறி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி வெட்டிச் சாய்த்தனர். அந்தச் செல்வம் மீண்டும் புதையுண்டது.

கலி காலம் பொல்லாதது. கலி புருஷனின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால் மக்களின் குணநலங்கள் மாறும். நல்லவர்கள் எதையும் சிந்தித்து செயல் ஆற்றவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். இல்லையேல் துன்பம் துயரம்தான்! கலியின் தோஷம் கலி பிறந்தவுடனேயே இப்படி இருந்தால் எப்படி மக்கள் ஜீவிப்பது என்ற நாரதர் கேள்விக்கு தோஷங்களிலிருந்து விடுபட மக்கள் சத்ய நாராயண பூஜை செய்ய வேண்டும் என்று நாராயணார் அருளினார். அந்த பூஜை விபரங்களை தகுதியான பூலோக வாசிக்கு போதிக்க எண்ணம் கொண்டார் நாரதர்.

சத்யநாராயன விரத பூஜை செய்ய என்ன தகுதி வேண்டும். அந்த தகுதியை பரிசோதிக்க நாரதர் கையில் கொஞ்சம் உணவுடன் பூவுலகில் ஓரிடத்தில் காத்திருந்தார். அவ்வழி மிகுந்த பசியுடன் வந்த கிருஷ்ணேத்து என்பவனிடம் தன்னிடமிருக்கும் உணவைத் தந்தார். அதை பெற்றதும் அவன் அதில் பாதியை எடுத்துக் கொண்டு அருகில் பசியுடன் இருந்த நாய்க்கு வைத்தான். பின்னர் மீதியிருந்த பாதி உணவில் பறவைகளுக்கு கொஞ்சம், நிலம் வாழ் பூச்சிகளுக்கு கொஞ்சம் என வைத்துவிட்டு உண்டான். நீ ஏன் இப்படி வறுமையில் இருக்கின்ராய் என்பதற்கு என் உறவினர்கள் என்னை ஏமாற்றி சொத்தை அபகரித்தனர். என் விதி இப்படி என்பதால் நான் அவர்கள்மேல் கோபம் கொள்ளவில்லை. விதிப்படி நடக்கட்டும் என விட்டு விட்டென் என்றான். இப்படி கலி புருஷனுக்கு ஆட்படாமல் இரக்கமும் கருணையும் உள்ளவனாகத் திகழும் அந்த ஏழையே தனக்குத் தெரிந்த சத்யநாராயண பூஜையைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தகுதியானவன் எனதீர்மானித்து அவனுக்கு அந்த பூஜை பற்றிய விவரங்களைக் நாரதர் கூறினார்.

நாரதர் கூறிய சத்யநாரயண பூஜை விபரங்களை மிகுந்த சிரத்தையுடன் கேட்ட கிருஷ்ணேத்து அவர் கூறிய வண்ணம் நியதி முறை தவறாமல் விரதமிருந்து பூஜை செய்தான். பூஜையைத் தொடர்ந்து செய்யச் செய்ய அவன் நிலைப் படிப்படியாக உயர்ந்து செல்வந்தனாக ஆனான். உதவி என்று தேடிவருமுன் கொடுத்து உதவினான். பிறர் தேவை அறிந்து உதவி செய்தான். தன் குடும்பத்தார் மற்றும் அனைவருக்கும் பூஜை முறைகளைச் சொல்லிப் பயன்பெறச் செய்தான். இறுதியில் வைகுண்டப்பதவி அடைந்தான்.

சுதனந்தர் என்பவர் இப்பூஜையை தொடர்ந்து கடைபிடித்து மறுபிறவியில் சுதாமா எனும் குசேலனாக பிறந்து கண்ணனின் தோழனார்.
பல்லன் என்ற விறகுவெட்டி பூஜையை தொடர்ந்து மறுபிறவியில் குகன் எனப்பிறந்து இராமனின் நண்பரானார்.
உல்காமுகன் என்ற அரசன் இப்பூஜை செய்து மறு பிறவியில் தசரத சக்ரவர்த்தியாகப் பிறந்து இராமரை மகனாகப் பெற்றார்.

பூஜை முறைகள் இப்பூஜையை எல்லா பௌர்ணமியிலும், தமிழ்மாத பிறப்பன்றும், புரட்டாசி சனிக்கிழமைகளிலும் செய்தால் பலன் கிடைக்கும். பூஜையை அவரவர் இல்லத்தில் செய்யலாம். ஆனால் உறவினர்களையும் அருகில் உளோரையும் அழைத்துச் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையுடன் ஆண் / பெண் யார் வேண்டுமானாலும் இப்பூஜையைச் செய்யலாம். தம்பதியராய்ச் செய்தால் விஷேடமானது.

பூஜை செய்யும் இடத்தை மஞ்சள் நீரால் கழுவி சுத்தம் செய்து குப்பை கூளங்கள் துணிகள் இல்லாமல் சுத்தமாக வைக்கவும். கிழக்கு அல்லது வடகிழக்கு பாகத்தில் பூஜை செய்யலாம். விநாயகர், சத்யநாராயணர் படம் இருக்க வேண்டும். விநாயகருக்கும் நவகிரகங்களுக்கும் வஸ்திரங்கள் வாங்க வேண்டும். கிரகங்களுக்குரிய நிற புஷ்பங்களை வாஙக வேண்டும். விநாயகர் சத்ய நாராயணர் படங்களைச் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்காரம் செய்யவும்.
மூன்று வரிசையாக வரிசைக்கு மூன்று வீதம் ஒன்பது கட்டங்களை வரைந்து நவக்கிரக் கோலமிட்டு அந்தந்த கிரகங்களின் பெயரை கட்டத்திற்குள் எழுதவும். கலசம் வைக்கும் இடத்தில் மூன்று கோடுகளைப் போடவும். மூன்றையும் இணைத்தவாறு ஒரு கோடு போட்டு அதன்மீது இலை போட்டு அரிசியை பரப்பி கலசம் வைக்க விரும்புவோர் மூன்று கலசங்கள் (செம்பு / வெள்ளி / தாமிர) வைக்க வேண்டும். கலசங்களை நூல் சுற்றி துய்மையான நீரால் நிரப்ப வேண்டும். அதில் ஏலக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ ஆகியவற்றை நீரில் சேர்க்கவும். மாவிலையைச் சொருகி மஞ்சள் தடவிய தேங்காயை கலசத்தின் வாயில் வைக்கவும். அரிசி பரப்பப்பட்ட வாலை இலையில் கலசங்களை வரிசையாக வைக்கவும்.

அர்ச்சனைக்கு துளசி தளங்களைப் பயன் படுத்துவது சிறப்பு. துளசிக்குப் பதில் பல வண்ண மலர்களை அட்சதையுடன் சேர்த்து செய்யலாம்.

சூரியன்-சிகப்புநிறம், கோதுமை, செந்தாமரை மலர்,
சந்திரன்—வெள்ளைநிறம், நெல், அரிசி, வெண்தாமரை மலர்
செவ்வாய்-காவிநிறம், துவரை, செவ்வரளி மலர்
புதன் -பச்சைநிறம், பச்சைப்பயிறு, சாமந்தி மலர்
வியாழன் மஞ்சள்நிறம், கொண்டைக்கடலை, பிச்சிப்பூ/ஜாதிமல்லி பூ
சுக்கிரன் வெண்மை நிறம், மொச்சை, மல்லிகை மலர்
சனி- நீல நிறம், எள்ளு, கருங்குவளை மலர்
ராகு- கருப்பு நிறம், உளுந்து, மல்லிகை மலர்,
கேது- பலவர்ணம் (சித்திர), கொள்ளு, கதம்பம்

விநாயகருக்கு 11 மேதகங்கள் அல்லது பால் பாயாசம்
சூரியனுக்கு கோதுமையை நெய்யில் வறுத்து வெல்லம் சேர்த்து 11 உருண்டை.
சந்திரனுக்கு சர்க்கரை பொங்கல்
சனிக்கு எள்ளுருண்டை 11
ராகுவிற்கு உளுந்து வடை 11
மற்ற நவகிரகங்களுக்கு அந்தந்த தாண்யத்தில் சுண்டல்
நிவேதனத்திற்கு கதம்பசாதம் / புளியோதரை / கல்கண்டுசாதம் / வெல்லப்பாயாசம் / தயிர்சாதம் ஆகிய வற்றில் ஒன்றை அன்றே தயார் செய்து சூடாக வைக்கவும்.

பூஜையை நிலவு வானத்தில் வருமுன் குளித்து சுத்தமான உடையணிந்து கொள்ள வேண்டும். பூஜை செய்பவர்கள் அன்று காலையிலிருந்து எதுவும் உண்ணாமல் நீர்மட்டும் அருந்தி விரதம் இருக்க வேண்டும். புஜையை விளக்கேற்றி வைத்து தூபங்களை மணக்கச் செய்து மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து அவருக்குரிய வஸ்திரத்தை அருகில் வைத்து உதிரிப்பூக்களைப் போட்டு கணபதி துதிபாடி ஆரம்பிக்கவும். அடுத்ததாக நவக்கிரக பூஜைதனை செய்ய வேண்டும். அந்தந்த ஆடைகளை அந்தந்த கிரகங்கள் வரைந்துள்ள கட்டங்களில் வைத்து சூரியனில் ஆரம்பித்து துதிபாடி நிவேதனம் செய்து ஒவ்வொரு கிரகத்திற்கும் துதிபாடி நிவேதனம் செய்யவும். சூரிய காயத்திரியை 11 முறை செல்லவும். நவக்கிரகப் பூஜை முடிந்ததும் நிவேதனப் பொருட்கள் பிரசாதமாக ஆகிய நிலையில் சத்ய நாராயணப் பூஜை முடிந்த பின்னரே வழங்கப்படவேண்டும்.

சத்ய நாராயணப் பூஜையில் மகாவிஷ்ணு அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து பின்னர் அங்க பூஜை செய்ய வேண்டும் அதன் பிறகு தூபம் காட்டி நிவேதனம் செய்யவும். சங்கல்பம் செய்த சீட்டுக்கள் வைத்துள்ள தட்டுக்களுக்கு மலர் தூவவும். திருவடி முதல் திருமுடி வரை சத்யநாரயணரை ஒவ்வொரு அங்கமாக பார்த்துச் சொல்லி வணங்குவதே அங்க பூஜையாகும். பின்னர் விஷ்ணுவுக்குரிய துதிகள போற்றிகள் பாடலாம். நிவேதனப் பொருட்கள்மேல் நீர் தெளித்து துளசி தூவி மணியடித்து வணங்கவும். பின்னர் தூபம் காட்டவும். அங்கிருப்பவ்ர்கள் எல்லாம் மலர் தூவி வழிபடலாம். மங்கல ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்யவும். அனைவருக்கும் பிரசாதம் வழங்கி விரதமிருப்போர் பிரசாதங்களை உண்ணலாம்.

பூஜை செய்தவர்கள் மாறுநாள் குளித்து தூய்மையான ஆடைகள் அணிந்து புனர் பூஜை செய்து அர்ச்சனை செய்த மலர்களையும் படங்களுக்கு அணிவித்த மலர்களையும் காலில் படாமல் ஓர் இடத்தில் போடவும் அல்லது நீர் நிலையில் சேர்க்கவும்.

பலன்கள்; எதிரிகள் அழிந்து சகல நண்மைகளும் உண்டாகும். செல்வம் பெருகி வீட்டில் நிம்மதியும் ஆனந்தமும் நிலைக்கும். மகாலட்சுமி வாசம் செய்வாள்.

@%@%@%@%@%>

 

ஷீரடி சாயி பாபா விரதம்!

சாயிபாபா விரதம் இருப்போர் பட்டினி இருந்து உடலை வருத்திக் கொள்ளக்கூடாது. முழுமையான நம்பிக்கையுடன் விரதம் கடைபிடிக்க வேண்டும். வேண்டுதல்கள் நியாயமானதாக இருக்க வேண்டும். உங்களால் முடிந்த அளவிற்கு பிற உயிர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் ஆகியவையே விரதம் இருப்போர் மேற்கொள்ள வேண்டியவை. இந்த விரதத்தை வியாழக்கிழமை அன்று கடைபிடித்து ஒன்பது வியாழக்கிழமைகள் கடைபிடிக்கவும்.

ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் எளிதில் கடைப்பிடிக்க வேண்டியே எளிதான விரத முறைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. காலை அல்லது மாலை எது உங்கள் வசதிக்கு ஏற்றதாக இருக்கின்றதோ அப்போது விரதம் மேற்கொள்ளுங்கள். வீடும், மனமும் சுத்தமானதாக இருக்க வேண்டும். அலங்காரங்கள் உங்கள் வசதிக்கு பிரியத்திற்கு செய்யலாம். எதுவும் கட்டாயமில்லை. சாயிபாபா படம் அல்லது விக்ரகத்தை வைத்து வழிபடலாம். சந்தனம் குங்குமம் வைத்து உள்ளார்ந்த மனதுடன் வழிபடவும். எப்போது செய்தாலும் ஒரு திரவ ஆகாரத்தையாவது எடுத்துக் கொண்டு வழிபடவும்.

தூய்மையாக சுத்தம் செய்த இடத்தில் நீர் தெளித்து பலகைமீது மஞ்சள் துணிபோட்டு அதன்மீது பாபா படம் / விக்ரகம் வைத்து சந்தனம் குங்குமம் வைத்து மலரினால் அலங்காரம் செய்யலாம். தூபம் காட்டி, தீபம் ஏற்றி ஆராதனை செய்யுங்கள். பாபாவின் திரு நாமத்தைச் சொல்லி பஜனை செய்யுங்கள். எளிமையான கல்கண்டு, உலர்ந்த திராட்சை, பால்பாயாசம் இப்படி ஒன்றை நிவேதனமாக செய்து மங்கல ஆரத்திக்குப்பின் அதை பிரசாதமாக வழிபடுவோருக்கு கொடுக்கவும். ஏழை எளியோர்க்கு வாயில்ல ஜீவன்களுக்கு உங்களால் முடிந்த உணவுகளை வழங்குங்கள். பூஜை முடிந்தபின் அருகிலுள்ள சாய்பாபாவின் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். உங்கள் நியாமான கோரிக்கைகள் இந்த ஒன்பது வாரத்திற்குள் நடந்தேறியிருப்பதை அறிவீர்கள்.


@
%@%@%@%@%>

 இந்த பொதுவான விரதங்கள் தவிர பௌர்ணமி, அமாவாசை, திதிகள், மற்றும் விசேட தினங்களுக்குரிய விரதங்கள் என்று நிறைய உண்டு.  அவைகளை அந்தந்த மாதங்களுக்கு எனப் பிரித்து தரப்பட்டுள்ளது. அனைவரும் உரிய விரதங்களை முறைப்படி கடைப் பிடித்து வாழ்வில் வளம்பெற ஆசிகள்-குருஸ்ரீ பகோரா.

விரதங்கள்!

சித்திரை மாத விரதங்கள்
வைகாசி மாத விரதங்கள்
ஆனி மாத விரதங்கள்
ஆடி மாத விரதங்கள்
ஆவணி மாத விரதங்கள்
புரட்டாசி மாத விரதங்கள்
ஐப்பசி மாத விரதங்கள்
கார்த்திகை மாத விரதங்கள்
மார்கழி மாத விரதங்கள்
தை மாத விரதங்கள்
மாசி மாத விரதங்கள்
பங்குனி மாத விரதங்கள்

&&&&&

Read 1406 times Last modified on வெள்ளிக்கிழமை, 21 June 2019 10:25
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

19666613
All
19666613
Your IP: 162.158.78.80
2020-12-01 04:29

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg