gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

ஒரு மலர் மலர்ந்து தன்னைச் சுற்றியுள்ள இடத்தை தன் வண்ணத்தால் மலரவைத்து ஆனந்தமயமான சூழலை உருவாக்குகின்றது. இது இயற்கையின் பாடம்! நாமும் பிறவியில் மலர்ந்து நம்மை சுற்றியுள்ள அனைதிற்கும் பெருமை சேர்க்கப் பழகிக் கொள்ளவேண்டும்!
திங்கட்கிழமை, 23 July 2018 20:42

ஐயப்பன்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.

####

ஐயப்பன்!

தத்தாத்ரேயர்

அனுசூயையின் கற்பை சோதிக்க தம் தம் கணவர்களான மும்மூர்த்திகளை அனுப்ப அனுசூயையின் கற்பின் சக்தியால் அவர்கள் குழந்தையாய் மாற முப்பெரும் தேவியரின் வேண்டுதல்களுக்கு இணங்கி மீண்டும் மும்மூர்த்திகளாய் மாற்ற, தங்கள் மூவரின் அம்சமாக அனுசூயைக்கு தத்தாத்ரேயரை அளித்துச் சென்றனர்.

லீலாவதி!

இதனால் முப்பெரும் தேவியரும் தங்களின் அம்சங்களை ஒன்றாக்கி காலவ முனிவரின் மகளாகத் தோன்றினர். லீலாவதி என்று பெயரிட்டு வளர்த்து அவளை தத்தாத்ரேயருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்.

அவதார நோக்கம் முடியும் காலத்தில் பழையபடி மும்மூர்த்திகளுடன் இணைய விரும்பிய தத்தாத்ரேயர் சன்யாசம் மேற்கொள்ள தீர்மானித்தார். ஆனால் லீலாவதி பிடிவாதமாக சன்யாசம் வேண்டாம் சம்சாரத்தில் இருக்கவே விரும்பி பலவிதமான சாகஸங்களால் தடங்கள் செய்தாள். பொறுமை கடந்த தத்தாத்ரேயர் எருமைபோல் இடைஞ்சல் பண்னும் நீ எருமையாக போகக்கடவுது எனச் சபமிட பதிலுக்கு மனைவியின் அருமை தெரியாத நீங்களும் எருமையாக வேண்டும் எனப் லீலாவதி பதில் சாபமிட்டாள்.

மகிஷி!

ரம்பன் அண்ணன், கரம்பன் தம்பி. எருமை உருவம் கொண்ட அசுரர்கள். ரம்பனின் மகன் மகிஷாசுரன். கரம்பனின் மகள் கரம்பி என்ற மகிஷி. இவள்தான் தத்தாத்ரேயரால் போன பிறப்பில் எருமையாகப் போக சாபம் பெற்ற லீலாவதி. அண்ணன் மகிஷாசூரனை அம்பிகை வதம் செய்ததால் கோபம் அடைந்த மகிஷி பிரம்மனை நோக்கி தவமிருந்து இருமூர்த்தி வடிவாக பிறக்கும் ஒருவன் குழந்தையாய் பன்னிரண்டு ஆண்டுகள் பூவுலகில் வாழ வேண்டும், அவனால்தான் தனக்கு முடிவு ஏற்பட வேண்டும் என்றும் வரம் பெற்றாள்.

சுந்திர மகிஷம்!

வரம் பெற்றதும் அட்டகாசங்கள் புரிந்து தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப் படுத்தினாள் மகிஷி. மும்மூர்த்திகளும் உரிய காலம் வரை பொருத்திருக்கச் சொன்னார்கள். மூவரும் தங்கள் அம்சங்களை உள்ளடக்கிய எருமை ஒன்றை உருவக்கி, அழகிய அதற்கு சுந்திர மகிஷம் எனப் பெயரிட்டனர். இந்த எருமையே மனைவி லீலாவதி சாபப்படி எருமையாக பிறப்பெடுத்த தத்தாத்ரேயர். சுந்திர மகிஷத்தைக் கண்டதும் முற்பிறப்பின் பந்தம் காரணமாகத் தான் செய்து வந்த கொடுமைகள மறந்து அன்பு கொண்டாள்.

ஹரிஹர சுதன்-மணிகண்டன்!

காலம் ஓடியது. மும்மூர்த்திகளும் சுந்திர மகிஷனை மறையச் செய்தனர். சுந்திர மகிஷம் காணாமல் போகவே பழையபடி தன் அட்டூழியங்களைத் தொடர்ந்தாள் மகிஷி. விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். மோகினியை பார்த்தார் சிவன். கண்கள் கலக்க பிறந்த குழந்தையின் கழுத்தில் மணி ஒன்றைக் கட்டி அங்கேயே விட்டு மறைந்தனர். அடர்ந்த காட்டிற்கு வேட்டைக்குவந்த பந்தள மன்னன் குழந்தையைக் கண்டு எடுத்துச் சென்றான். பிள்ளையில்லாத தன் குறைதீர்க்க கடவுளின் பரிசு என மகிழ்ந்து குழந்தைக்கு கண்டத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என பெயரிட்டு வளர்த்தான்.

மணிகண்டனுக்கு பன்னிரண்டு வயது நிரம்பியது. மணிகண்டனை தன் குழந்தையாய் வளர்த்த அரசிக்கு தாயாகும் பாக்கியத்தை தேவர்கள் அளிக்க குழந்தை பிறந்தது. சொந்தக் குழந்தைமேல் பாசம் அதிகம் கொண்டதால் மந்திரியின் ஆலோசனைப்படி மணிகண்டன் இளவரசன் ஆகமல் இருக்க நோயால் பீடிக்கப்பட்டவள் போல நடித்து மணிகண்டனை நோய்க்கு மருந்தாகப் புலிப்பால் கொண்டுவர காட்டிற்கு அனுப்பினாள்.

ஐயப்பன்!

வழியில் மணிகண்டனைப் பார்த்த தேவர்கள் அவனை அழைக்க அவன் திரும்பவில்லை. காட்டில் தென்பட்ட மதயானையை அடக்கியபோது ஐயா அப்பா சரணம் என்று தேவர்கள் கூச்சலிட்டதும் திரும்பிய மணிகண்டனிடம், மகிஷியின் அட்டகாசத்தைக் கூறி அவளை அழிக்க வேண்டினர். எருமையாய் காட்டில் அலைந்து கொண்டிருந்த மகிஷியை மணிகண்டன் வதம் செய்ய எருமை வடிவம் நீங்கி அழகிய நங்கையாக மாறினாள் மகிஷி. தேவர்கள் ஐயப்பா சரணம் என மகிழ்ந்தனர். தன் சாபம் நீங்கச் செய்த ஐயப்பனிடம் தன்னை மணக்க வேண்டுகோள் வைத்தாள்.

அதற்கு ஐயப்பன் தான் இப்பிறவியில் பிரமச்சாரிய விரதம் பூண்டு தவம் இருக்கப் போகின்றேன். எனவே உன்னை மணக்க இயலாது என்றார். அவளது இயற்கையான அடம் தலைதூக்கவே நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப் படுத்தினாள். மும்மூர்த்தி அம்சமான தத்தாத்ரேயரின் பத்தினியாக முப்பிறப்பில் பிறந்தவளுக்கு தான் தற்போது இரு மூர்த்திகளின் அம்சமாக இருப்பதால் அவளை மணக்க இயலாது என்பதைப் புரியவைக்க முயற்சித்தார். அவள் அதை புரிந்து கொள்ளவில்லை.

கன்னிசாமி, மாளிகைபுரத்து அம்மன்!

யோசித்த ஐயப்பன், மகிஷியே சபரிமலைமீது யோகத் தவம் செய்யப் பொகும் எனக்கு அருகிலேயே நீயும் அமர்ந்து கொள். உனக்கு மாளிகைபுரத்து அம்மன் எனப் பெயரடைவாய். பக்தர்கள் உன்னையும் என்னையும் வணங்குவர். ஆண்டுதோறும் வரும் புதுப்புது பக்தர்களை .நீ பார்த்துக் கொண்டிரு. எந்த வருடத்தில் புதுபக்தர்கள்–கன்னி சாமி வரவில்லையோ அந்த வருடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்கின்றேன் என்று சொல்ல சபரிமலயில் மகிஷியும் மாளிகைபுரத்து அம்மனாக அமர்ந்தாள்.

புலிப்பால்!

தன் வளர்ப்பு தாய்க்கு புலிப்பால் கொடுப்பதற்காக புலியாக மாறிய தேவர்களுடன் சிம்மமாகமாறிய இந்திரன்மீதேறி அரண்மனை சென்றார்.

யோகத்தவம், பூதநாத கீதை!

புலிகளுடன் வந்த வளர்ப்பு மகனைக் கண்ட அரசனும் அரசியும் அவன் சாதாரண பிறப்பல்ல என்பதை உணர்ந்தனர். அரசி தன் செயலுக்கு மிகவும் வருந்தினாள். அரியனை அவசியமில்லை எனச் சொல்லி தான் யோகத்தவம் இருப்பதாகக் கூறி கானகம் சென்றான். தன் வளர்ப்பு மகன் இப்படிச் செல்வது கண்ட மன்னன் அவனைத் தனக்கு குருவாக இருக்க கேட்க தந்தைக்கு குருவாக இருப்பது தவறு என அகத்தியரை அழைத்து தனது போதனைகளை அவரிடம் கூறி அதனை பந்தள அரசனுக்கு பாடமாகக் கூறவைத்தார். அந்த போதனைகள் பூதநாத கீதை எனப்படும். மனிதன் அறவழியில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். கலியில் பக்தி மார்க்கமே சிறந்தது என்ற இரண்டு கருத்துக்களை இது வலியுருத்துகின்றது.

திரு ஆபரணம். அரசன்போல் காட்சி!

சபரிமலையில் யோகப்பட்டம் தரித்து ஐயப்பன் அமர்ந்தர். மகனைத் தேடிவந்து தரிசித்த பந்தள மன்னன் கண்ணாய் மணியாய் வளர்த்த மகன் இப்படி ஆண்டியாய் காட்சி தருகின்றானே எனவருந்த ஆண்டிற்கு ஒருநாள் தைமாதம் முதல் நாள் ஆபரணங்கள் அணிந்து அரச கோலத்தில் தன் தந்தைக்கு காட்சி அளிப்பதாக வாக்குக் கொடுத்தார்.

மகரஜோதி!

தை மாதம் முதல் நாள் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பதால் மகர சங்கரந்தி என்றும் அந்த மாதம் முழுக்க மகர ராசியிலேயே இருப்பதால் தை மாதத்தை மகர மாதம் என்பர். மகர மாதத்தில் தெரியும் ஜோதியை மகர ஜோதி என்றாலும் அதில் ஒரு தத்துவம் உள்ளது.

தர்மசாஸ்தா!

சன்னியாசி ஆன பின் அரசனுக்குரிய ஆபரணங்கள் அணிவது முறைப்படித் தவறு. இருப்பினும் தந்தைக்கு அளித்த வாக்கை நிறைவேற்றவே இது நடந்தாலும் மனதிற்கு சரி எனப் படாததால் ஐயப்பன் தனது அவதார அம்சத்தினை ஜோதி வடிவாக்கி அருகில் உள்ள காந்த மலையில் இருத்திவிட்டு அதன் பிறகு பந்தள மகராஜனின் ஆபரணங்களை அணிந்து கொள்கின்றார். தான் ஏற்றுக் கொண்ட சன்யாச தர்மத்திற்கு எந்த வகையிலும் குறைவராதபடி தர்மத்தைக் காத்ததால் தர்ம சாஸ்தா எனப் பெயரடைந்தார்.

சிதம்பரத்தின் எட்டுத்திசைகளிலும் மகா சாஸ்தா, பால சாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, ஜகன்மோகன் சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, ருத்ர சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, என சாஸ்தாவின் அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

காந்த மலையில் தேவர்கள் ஜோதியை ஆராதித்தார்கள். இந்த ஐதீகத்தின் படியே மகர ஜோதியை பக்தர்கள் தரிசிக்கின்றனர்.

தரிசிக்க-விரதம்!

கார்த்திகை மாதத்தில்தான் சிவன் ஜோதிவடிவாகத் தோன்றினார். மாதங்களில் நான் மார்கழி என விஷ்ணு சொல்லியுள்ளார். எனவே ஐயப்ப பக்தர்கள் சிவனுக்குரிய கார்த்திகை மாதம் மாலை தரித்து விஷ்ணுவுக்குரிய மார்கழி மாதம் வரை விரதம் இருந்து சிவ விஷ்ணு அம்சமான ஐயப்பனைத் தரிசிக்க வேண்டும். தை மாதத்தில் தோன்றும் மகர ஜோதியை தரிசிக்க வேண்டும். என்பதே சிறப்பான பலகளைத் தரும் விரதமாகும்.

இருமூர்த்தி அம்சம்!

ஐயப்பன் இரு மூர்த்தி வடிவம் என்பதை மீலாவதி-மகிஷி-மாளிகைபுரத்து அம்மனுக்கு உணர்த்தவே சிவரூபமான தேங்காயில் விஷ்ணு அம்சமான நெய் ஊற்றி எடுத்து வருகின்றனர். பசு நெய் மகாலட்சுமி அம்சம். மகாலஷ்மி மகாவிஷ்ணு மார்பில் எப்போது குடியிருப்பவள் அதனால் நெய் விஷ்ணுவின் ஸ்வரூபமாகும். மேலும் இருமுடி என்பது இரு மூர்த்தி வடிவம் என்பதையே குறிக்கும். கெடும் பாலிலிருந்து கிடைக்கப்பெறும் கெடாத நெய் போல அழியும் உடம்பில் அழியாத ஆன்மா இருப்பதைக் குறிக்கும் நெய்த் தேங்காயை ஆன்மா பிரிந்ததும் உடலை நெருப்பில் இடுவதுபோன்றே தேங்காயிலிருந்து நெய்யை எடுத்ததும் தேங்காயை நெருப்பில் போட்டு விடுவர்.

மஞ்சள் மாதா!

வருடாவருடம் தொடர்ந்து வரும் புதுப் பக்தர்கள்-கன்னி சாமிகளால் தான் தன் திருமணம் தடைபெறுகின்றது என்பதால் மாளிகைபுரத்து அம்மன் கோபம் கொள்ளாமல் சாந்தம் அடைய வேண்டும் என்பதால்தான் மஞ்சள் தூவி தேங்காய் உருட்டுகின்றனர்.

புதிதாக வரும் கன்னி ஐயப்ப சாமிகள் சரங்குத்தி மரத்தில் சரம் குத்த வேண்டும். மாளிகைபுரத்து அம்மனாக மஞ்சள்மாதாவாக அங்கே காத்திருக்கும் அந்தக் கன்னிகை ஒவ்வொரு வருடமும் அந்த சரங்குத்தி மரத்திற்கு வந்து சரங்குத்தியிருப்பதைப் பார்த்து கன்னிசாமி வந்துள்ளார்கள் என ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வாள்

ஐயப்பன் வகனங்கள்!

வில் அம்பு ஏந்தி புலி வேட்டைக்குப் புறபட்டது குதிரையில் என்பதால் குதிரையே அவர் முதல் வாகனம். காட்டில் மதயானையை அடக்கி அதன் மீது அமர்ந்து .சென்றதால் இரண்டாவது வாகனம் யானை. தேவர்கள் யாவரும் புலியாக மாறியதும் இந்திரன் சிம்மமாகமாற அதன்மீதேறி அரண்மனை வந்ததால் மூன்றாவது வாகனம் சிங்கம். பின்னாளில் புலி ஐயப்பன் வாகனமானது. ஹரிவராசனம் என்ற ஐயப்பனின் பக்திப் பாடலில் வரும் ‘களப் கேசரி, வாஜி வாகனம்’ என்பது களபம்-யானை, கேசரி-சிங்கம், வாஜி-குதிரை என்பதை உணர்த்துவதாகும்.

ஹரிவராசனம்!

இந்தப்பாடல் கும்பக்குடி குளத்தூரார் என்பவரால் 1950–ல் இயற்றப்பட்டது. இரவில் நைவேத்யமாக பானகம் படைக்கப்பட்டபின் ஐயப்பன் துயில்வதற்காக இரவு பதினொன்னரை மணியளவில் பாடப்படும். ஒவ்வொரு விளக்காக அனைத்து விட்டு பின்னால் நடந்து வந்து கடைசி வரிகள் பாடப்படும் போழுது கடைசி விளக்கை அர்ச்சகர்கள் அனைப்பர்.

காவல் தெய்வம்!

பொதுவாக ஐயப்பனை காவல் தெய்வம் என்றே புராணங்கள் சொல்கின்றன. சூரபதுமனிடமிருந்து இந்திராணியைக் காப்பாற்ற ஐயப்பனையே காவலுக்கு நிறுத்தியதாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

சபரிமலை சித்தர்கள் வாழுமிடம்!

சித்த யோகினியாக வாழ்ந்த சபரி அம்மன் ஜீவசமாதி அடைந்த இடம் சபரிமலை. சித்தர்கள் வாழும் பகுதி என்பதால் யோகப்பட்டம் தரித்து ஐயப்பன் யோகம் செய்ய இந்த இடத்தை தெரிவு செய்தார். பதினெட்டுப் படிகளில் பதினென் சித்தர்கள் இருப்பதாக ஐதீகம்.

பதினெட்டாம் படிகள்!

மனிதனிடம் உள்ள பஞ்சேந்திரியங்களான செவி, பார்வை, நுகர்வு, தொடு உணர்ச்சி, சுவை ஆகிய ஐந்தை முதல் ஐந்து படிகள் குறிக்கின்றன. காமம், குரோதம், பேராசை, மோகம், அகந்தை, போட்டி, பொறாமை, தற்பெருமை ஆகிய எட்டை அடுத்த ஆறு முதல் பதின்மூன்று வரைலான படிகளும், சத்வகுணம், ராஜோ குணம், தாமஸ குணம் என்ற மூன்றையும் அடுத்த பதினான்கு முதல் பதினாறு வரையிலான படிகளும் வித்யா, அவித்யா என்ற அறிவையும், அறியாமையும் அடுத்துள்ள பதினேழு, பதினெட்டாம் படிகளும் குறிக்கின்றன. ஒவ்வொரு படியைக் கடக்கும் போது ஒரு தீய பழக்கம் நம்மை விட்டு நீங்குவதாக ஐதிகம். உலகியல் மயக்கங்கள் எல்லாவற்றையும் கடந்து இறைவனிடம் பரிபூரணமக சரணடைந்தால் மெய்ஞானம் பெறமுடியும் என்பதை இந்த 18 படிகள் உணர்த்தும்.

மேல்சாந்தி!

நிர்வாகப் பொறுப்பு முதல் பூஜைகளைத் தொடங்கி வைக்கும் பொறுப்பும் கோவிலை திறந்து வைக்கவும் மூடவும் அதிகாரமும் உள்ள முதல் அர்ச்சகர்-மேல்சாந்தி. வேதங்கள், தாந்திரீகம், சாஸ்திரங்களை முறையாக கற்று மற்ற கோவில்களில் மேல் சாந்தியாக அனுபவம் பெற்றவர்களிலிருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் இவரது பதவிக் காலம் ஓரண்டு. ஆண்டு முழுவதும் சபரிமலையிலேயே தங்கியிருக்க வேண்டும். வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே சபரிமலையின் மேல்சாந்தியாக முடியும்.

ஐயப்ப விரதம்- சபரிமலை!
ஐயப்பனுக்கு ஒரு பக்தன் மாலை அணிந்து இருமுடிகட்டி 41 நாட்கள் முறைப்படி விரதம் மேற்கொண்டு 48 மைல்கள் நடந்து செல்ல வேண்டும் என்பதே முன்னோர் வழி முறைப்படுத்திய நெறியாகும். விரத காலத்தில் மனதிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மையைக் கடைபிடித்து சைவ உணவு உண்டு காமம், கோபம், பொறாமை ஆகியவறை கட்டுப்படுத்தி தன்னை பக்குவப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

சபரிமலை யாத்திரைக்கு மூன்று காலங்கள் முக்கியமானதாக் கருதப்படும். கார்த்திகை முதல் தேதியில் தாய், தந்தை, குரு, பெரியோர்களிடம் ஆசி பெற்று குருநாதர் முன் தெய்வ சன்னதியில் பூஜை செய்து துளசி மாலையை அணிந்து கொள்ளல் வேண்டும்.

தினமும் சரணாகதி நிலையைக் குறிக்கும் முழுமையாக இறைவனிடம் நம்மை சமர்ப்பணம் செய்யும் சரணங்களை கூறிவழி படவேண்டும்

இரண்டு பகுதிகள் கொண்ட துணிப்பையில் முன்பகுதியில் சுவாமிக்குரிய பூஜைப் பொருட்கள் மற்றும் நெய்த்தேங்கயும் பின் பகுதியில் யாத்திரிகனுக்குரிய உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் தத்துவம் சுவாமிக்குரிய பொருட்கள் புண்ணியம், யாத்ரிகனுக்குரியது பாவச்சுமை. பயணத்தில் யாத்ரிகன் மலையை நெருங்க நெருங்க அவனுக்குரிய பொருட்கள் குறையும். அதாவது இறைவனை நெருங்க நெருங்க பாவச் சுமை குறைந்து கொண்டு வந்து முடிவில் புண்ணியம் மட்டும் மிஞ்சும்.

இறைவன் முன் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லை என்பதை உணர்த்தும் விதமாகவே ஐயப்ப பக்தர்கள் ஒருவரை ஒருவர் சமி என அழைத்துக் கொள்வது வழக்கமானது.

கார்த்திகை முதல் தேதி தொடங்கி மார்கழி, தை மாதங்களில் நடைதிறக்கப்படும் சமயத்தில் சபரிமலை சென்று மகர விளக்கு- காந்த மலை ஜோதி தரிசித்து வருதல் சிறப்பு ஆகும். நல் ஒழுக்கத்தைக் கடைபிடித்து தன்னை நாடிவந்து வணங்குவோரின் மெய்யில் நலம் நீங்காதிருக்க என்றும் ஐயப்பன் அருள்வார்-.

#####

Read 5854 times Last modified on சனிக்கிழமை, 24 November 2018 19:49
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

19640459
All
19640459
Your IP: 162.158.78.133
2020-11-27 14:39

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg