gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 17 July 2018 20:40

ஞான பண்டிதன் சபா!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!

####

ஞான பண்டிதன் சபா!

முருகன்!

சனத்குமாரர் கண்ட கனவு!

பிரம்மாவின் மானசீக புத்திரரான சனத்குமாரர் ஒரு வித்தியாசமான கனவு கண்டார். அதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை நடப்பதாகவும் அதில் தேவர்கள் சேனாபதியாகத் தான் நின்று அசுரர்களை அழிதத்தாகவும் கண்டார். இது பற்றி தந்தையிடம் வினவ, பிரம்மா, நீ பூர்வ ஜென்மத்தில் தேவாசுரப் போரில் சேனாதிபதியாக இருந்து தேவர்களைக் கொடுமைப் படுத்தும் அரக்கர்களை அழிக்க வேண்டும் என நினைத்தாய். அந்தப் பிறவியின் எண்ணங்கள் பிரதிபலித்ததே இந்தக் கனவு. இந்த ஜென்மத்தில் நீ பிரம்ம ஞானியாய் இருப்பதால் இன்னொரு ஜென்மத்தில் அந்த எண்ணங்களும் அதனால் உண்டான இந்தக் கனவும் நிறைவேறும் என்றார். சனத்குமாரர் தொடர்ந்து தியானத்திலேயே இருந்ததால் கனவைப் பற்றி நினைக்க வில்லை. ஆனால் காரண கர்த்தாவான சிவன் நினைத்தார்.

ஈசன் கேட்ட புத்திர பாக்கியம்!

சதச்ருங்க மலையில் விஷ்ணு அம்சம் கொண்ட சனத்குமாரர் ஈசனைக் குறித்து தவம் செய்ய அவருக்கு அம்பிகையுடன் காட்சி கொடுத்தும், தியானத்தினால் சகலமும் பிரம்மமாகக் காட்சி அளிக்கும் நிலையில் ஈஸ்வர தரிசனத்தை உணராத நிலையில் சனத்குமாரர் காட்சி கொடுத்தவர்களை பூஜிக்கவில்லை. தியானம் என்றால் அப்படியொரு தியானம். சிவன் தன் கையிலிருந்த ‘டமரு’ என்ற உடுக்கையில் ஒலி எழுப்ப சனத்குமரர் கண் திறந்து பார்த்து வணங்கினார். சிவன் தன்னை பூஜிக்காததால் சபித்துவிடப்போவதாக கோபம் கொண்டவர் போல கூற, சனத்குமாரர் “உம் சாபம் என்னையோ என் ஆன்மாவையோ பாதிக்காது” என்றார். அவரது ஞானத்தை அறிந்த சிவன் இந்தப் பிறவியில் பிரம்ம புத்திரராக பிறந்த அவரை இன்னொரு ஜன்மத்தில் தன் புத்திரானாக பிறக்க கேட்டுக் கொள்ள சனத்குமாரர் சம்மதம் தெரிவித்தார். எத்தனையோ பேருக்கு புத்திர பாக்கியம் அருளும் ஈசன் தனக்கு கேட்ட புத்திர பாக்கியம் இது.

பிரம்மபுத்திரன்-சிவபுத்திரன்!

ஈசனோடு எழுந்தருளியிருக்கும் தன்னைப் பார்த்து சனத்குமாரர் ஏதும் கூறாததால் உமை வருத்தமுற்றதை உணர்ந்த சனத்குமாரர், “கேட்காதவர்களுக்கு எதையும் தரக்கூடாது” என்கிறது சாஸ்திரம். எனக்குப் புத்திரனாகப் பிறக்க வேண்டும் என்று ஈசன் மட்டும் கேட்டார், தேவி கேட்கவில்லை, அதனால் ஈசன் மட்டும் என்னை உற்பவிக்கச் செய்து கொள்ளட்டும் என்றார் சனத்குமார். என்ன வித்தியாசமான வேண்டுகோள். தாயில்லாமற் பிள்ளையா! உடனே உமை “சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனால் நான் கேட்காவிட்டாலும் நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்” என்றாள். சனத்குமரர், ”எனக்கு ஸ்திரீபுருஷ சம்பந்தத்தில் பிறப்பதில் விருப்பமில்லை. உங்கள் பதி மட்டுமே என்னை ஜனிக்கச் செய்யட்டும்” என்றார். இதைக் கேட்ட சிவன் புன்னகைக் கொண்டார். அவருக்குத் தெரியும். இது முன்கூட்டியே நிர்ணயக்கப் பட்டது என்று.

தேவர்கள் மனைவியிடம் கரு ஏற்படக்கூடாது என சபம்!.

பிரம்மாவிடம் பெற்ற வரத்தின்படி பார்வதி தன் கருமை நிறம்மாறி பொன்னிற மேனியாளாக வர சிவனும் பார்வதியும் ஆனந்தமாக இருக்க உலகம் இருண்டது. பார்வதி பரமேஸ்வரருக்கு குழந்தை பிறந்தால் அது சொர்க்க ராஜ்யத்தைக் கைப்பற்றும் என்பதால் பயமுற்ற இந்திரன் தேவர்களுடன்கூடி ஆலோசனை செய்தான். உமா சங்கரின் ஏகாந்தத்தைக் கெடுக்க அக்னியை அன்னப் பறவை வடிவில் அனுப்பி தேவர்கள் வெளியில் காத்திருக்கும் தகவலைச் சொல்லச் சொன்னான். சிவன் வெளியில் வந்தார். உலகம் இருண்டு வருகிறது. தங்கள் மோகத்தை விடாவிட்டால் எல்லாம் தலைகீழாகும் என்றனர். புரிந்த காமேஸ்வரரான சிவன் என் வீர்யத்தை யார் சுமப்பர் எனக் கேட்க அக்னி அதற்கும் முன்வந்தான். இதனால் கோபமடைந்த பார்வதி தங்களின் தனிமையைக் கெடுத்த தேவர்கள் யாருக்கும் அவரவர் மனைவியிடம் கரு ஏற்படக்கூடாது என சபித்தாள்.

உமையின் வேண்டுகோள்!

கயிலையில் ஒர்நாள் பார்வதி சிவனை நோக்கி தங்களை நிந்தனை செய்த தட்சனின் மகளாகப் பிறந்து தாட்சாயணி என்ற பெயரை நான் சுமக்க விரும்ப வில்லை. இந்த தேகத்தைக் கரைக்க விரும்புகின்றேன் என்றாள். உன்னை மகளாக அடைய இமவான் தவமிருக்கின்றான். நீ அவனுக்கு மகளாய் பிறப்பாய். தக்க தருணத்தில் நான் உன்னை மணப்பேன் என்றார். இமவான் மகளாகப் பிறந்து பார்வதி என்று அழைத்து இமவான் ஆனந்தித்தனர். பார்வதி வயது வந்தவுடன் சிவனை நோக்கித் தவமிருந்தார்.

சிவன் பஸ்மாசூரனுக்கு வரம் கொடுத்து அவன் அதைச் சோதிக்க வந்தபோது அந்தர் தியானமானார். சிவனைக் கானாத உமை அவர் பிரிவால் வருந்தி உருகி ஓர் நீர் நிலையானாள். அந்த நீர் நிலையே சரவணப் பொய்கையாகும். தேவியின் சரீரமே சரவணப் பொய்கை. பாஸ்மாசுரனை மோகினி உருக்கொண்டு திருமால் அழித்ததும் ஈசன் வெளிப்பட்டார். தியானத்தில் இமயமலைச் சாரலில் ஓர் குடிலில் தவம் செய்ய அமர்ந்திருந்தார்.

சிவனார் இமயமலைச் சாரலில் தவம் புரிவதை அறிந்த பார்வதி அக்குடிலுக்குச் சென்று அவருக்கு இடையூறு செய்யாமல் பணிவிடை செய்ய விரும்பி தன் தந்தை இமவான் அனுமதியுடன் குடிலுக்குச் சென்று அவர் பாதங்களில் மலர்களைச் சமர்பித்து அருகிலேயே அமர்ந்திருந்தாள்..

பிரஜாபதிகள் பிரம்மனின் மானஸ புத்திரர்கள். இவர்களில் ஒருவரான காசியப முனிவர்-திதி என்ற பெண்ணின் வழியாகப் பிறந்தவர்கள் அசுர குலத்தவர்கள். அசுர குரு சுக்கிராச்சாரியாரால் ஏவப்பட்ட மாயை என்ற பெண்ணுக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன், சிங்கமுகன், யானைத் தலையுடைய தாரகன், ஆட்டின் தலைகொண்ட அஜமுகி(பெண்) முன் ஜென்மத்தில் சிவபெருமானால் கொல்லப்பட்ட தட்சனே மறு ஜென்மத்தில் சூரபத்மன்

சூரபதுமன், சிங்கமுகாசூரன், தாரகாசுரன் என்ற மூவரும் தேவர்களை எதிரியாகக் கொண்டு அவர்களை அழிக்க ஈசனை நோக்கித் தவமிருந்து சாகாவரம் வேண்டினர். சிவன் பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் இறந்துதான் ஆகவேண்டும். அதனால் வேறு வரம் கேட்குமாறு கூறினார், உங்களுக்குச் சமமான ஒருவன், பெண் சம்பந்தமில்லாமல் தோன்றியவனால் மட்டுமே எங்கள் அழிவு ஏற்படவேண்டும் என்றனர். அவ்வாறே சிவ வரம் பெற்ற அசுரர்கள் அஷ்ட திக்பாலகர்கள், சூரியன், சந்திரன், தேவர்கள் அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்திரனும் இந்திராணியும் பூ வடிவெடுத்து மறைந்தனர். இந்திரன் மகன் ஜெயந்திரன் சிறைப்பட்டான். தேவர்கள் பெருமாளிடம் முறையிட்டனர்.

அப்போது ஈசன் தியானத்தில் இருப்பதை உணர்ந்த பெருமாள், ஈசனும் அன்னையும் தனித்தனியே தவமிருந்தால் வரம் பெற்ற சூரபதும சகோதர்களை சம்ஹாரம் செய்ய குமரன் தோன்றுவது எப்படி என ஆலோசித்து நாரதரின் யோசனைப்படி மன்மதனை அழைத்து சிவன்மீது மலர் பாணத்தை எய்யச் சொன்னார். முதலில் மறுத்த மன்மதன் உலக நன்மைக்காக தன்னிடமிருந்த தனது சேனைகளான வசந்தகாலம், இனிய நறுமனம், பூக்களின் மகரந்தப் பொடி, மிகிழ்ச்சிகரமான சூழல் ஆகியவை கொண்டு கயிலை வந்தான். அவன் வந்ததும் மலர்கள் பூத்து இனிமையான சூழல் உருவானது. கரும்பு வில்லை வளைத்து மலர் அம்பை சிவன்மேல் செலுத்தினான்.

யோக நிஷ்டை கலைந்த சிவன் கண்விழிக்க மன்மத பாணமகிமை மகேசனை மதிமயங்கச் செய்தது. கண் திரையில் பார்வதியின் அழகிய ரூபம் சிற்பமென தோன்றியது. பார்வதி இத்தனை அழகா என நினைத்தார் சிவன். மன்மதக்கணை காமத்தை ஊட்டியது. உடலைச் சிலிர்த்து திரும்பினார்.

தவம் கலைந்த சிவன் தன்னை திசை திருப்பிய மன்மதனை கோபத்தால் நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தார். அருகிலிருந்த பார்வதி மயக்கமானாள். கணவனின் நிலைக் கண்ட ரதி அழுது புலம்பி வேண்ட ரதியே யாம் பார்வதியை மணக்கும்போது உன் கணவன் மன்மதன் உயிர்பெற்று எழுவான். அனங்கனாக- அங்கமில்லாதவனாக இருப்பான், உன் கண்களுக்கு மட்டும் தெரிவான். மேலும் துவாபரயுகத்தில் மன்மதன் ஸ்ரீகிருஷ்ணன்-ருக்குமணிக்கு பிரத்தியும்னன் என்ற பெயரில் மகனாக தோன்றும் போது அவனுக்கு உருவம் உண்டாகும். பிரத்தியும்னனை சம்பரன் என்ற அசுரன் கவர்ந்து செல்ல பிரதியும்னன் யுத்தத்தில் சம்பாசுரனை அழிக்க சம்பாசுரனின் மகளான மாயாவதியாகிய உனக்கும், பிரத்தியும்னனுக்கும் திருமணம் நடைபெறும் என அருளினார். மன்மதன் சாம்பலானதை அறிந்த தேவர்கள் வருந்தினர். சிவன் அந்தர் தியானமானார். விபரம் அறிந்த இமவான் தன் மகள் பார்வதியை தன் இருப்பிடத்திற்கு அழைத்துப் போனான்.

மகட்கொடை!

சிவனின் தவச்சாலையிலிருந்து வந்த பார்வதி தன் தவத்தை மீண்டும் தொடங்கினாள். ஒர் நன்னாளில் முதிய அந்தணர் வேடம்கொண்டு பார்வதியின் தவச்சாலைக்கு வந்த ஈசன் பார்வதியின் மனதைச் சோதிக்க எண்ணி ‘’சிவனார்க்கு தோலாடை, எருது வாகனம், பாம்பு ஆபரணம், தலை மாலையோ எழும்பு, பன்றிக்கொம்பு இவைகள் மட்டுமல்லாமல் உண்ணும் பாத்திரம் தலைஓடு, உணவோ பிட்சையும் விஷமும், ஆடுகின்ற இடமோ சுடுகாடு, போட்டுக்கொள்வதோ வெள்ளெருக்கு, அறுகு, கொன்றை, நொச்சி, ஊமத்தம்பூ மாலை, தலையில் கங்கை, கழுத்தில் பாம்பு, கையில் மான், மழு, சூலம், உடுக்கு, அக்னி என்று இருப்பவன். பூதங்கள் சூழ இருப்பவன். இன்னும் சொல்லப்போனால் தாயுமில்லை, தந்தையுமில்லை, உற்றார் உறவுமில்லை, குலம், குணம் எதையும் சொல்ல முடியாது. அநாதியானவன். மன்னன் மகளான நீ இவனை மறந்து என்னை மணந்துகொள் என்று தன்னைப்பற்றி தாமே சுயவிமர்சனம் செய்தார். சிவசிவ என காதுகளைப் பொத்திக்கொண்ட அழுத பார்வதிக்கு காட்சிதந்து விரைவில் உன்னை மணமுடிக்க வருவோம் என்று அருளினார்.

சிவன் சப்த ரிஷிகளை நினைக்கத் தோன்றிய அவர்களிடம் இமவானின் வீட்டிற்குப்போய் பெண்கேட்க அனுப்பிவைத்தார். இப்படி மணமகள் வீட்டிற்குப் போய் பெண் கேட்பதை மகட்கொடை என்று இலக்கியங்கள் பகர்கின்றன.

சப்த ரிஷிகளை வரவேற்ற இமவான் தன் சம்மதத்தை சந்தோஷத்துடன் தர மலையரையனிடம் சொன்னார்கள். மலையரையன்-சிவன் தேவர்கள், முனிவர்கள், தபஸ்விகள் எல்லோருக்கும் திருமணத் தகவல் அனுப்ப ஏற்பாடு செய்தார். பங்குனி உத்திர நன்னாளில் மணம் முடிக்க இமயமலைக்கு எழுந்தருளினார்.

இந்த திருமணத்தைக் காண அனைத்து புவனங்களிலிருந்தும் அனைவரும் அங்கு குழுமி விட்டதால் வடபாகம் தாழ தென்பாகம் உயர்ந்தது. சிவன் நந்தியிடம் அகத்திய மாமுனியை அழைத்துவரச் சொன்னார். அகத்தியரிடம் தென்நாடு சென்று இந்த தாழ்நிலையைச் சமன்செய்ய பொதிகைமலை மீது இருக்கக் கடவது என ஆணையிட்டார்.

அகத்தியர் அடியேன் இழைத்த குற்றம் என்ன! தங்களின் திருமணக் காட்சியைக் காணாமல் நான் எவ்வாறு இவ்விடம் விட்டு செல்வது என்றார். நீ சற்றும் சிந்தியாமல் பொதியமலைக்குச் எல் யாம் அங்கு எமது திருமணக் காட்சியை உமக்கு காட்சி அருளுவோம் என்றார். சிவனை வணங்கி அகத்தியர் பொதியமலை செல்ல தென்பால் நிலம் வடதிசை இரண்டும் சமன் பட்டு நின்றது. ரதிதேவி மன்மதனை அனங்கனாக உருவத்துடன் பார்த்தாள். மற்றவர்களுக்கு அருவமாக இருந்து தன் தொழிலை தொடர்ந்து செய்தான். அனங்கனாக உயிர்பெற்ற மன்மதன் வணங்கிய தலம் குத்தாலம்- மன்மதீஸ்வரர். சிவ-பார்வதி கயிலையை அடைந்தனர்.

கயிலையில் நந்தியம்பெருமான் அனுமதியுடன் பிரம்மா மற்றும் முனிவர்கள் தேவர்களது நிலையையும் அசுரர்களது அட்டகாசத்தையும் சிவபெருமானிடம் எடுத்துக் கூறினார்கள். முன்பு கூறிய வீரமகனை உருவாக்கும் நேரம் வந்ததை உணர்ந்தார் சிவன்.

உரிய காலத்தில் பரமேஸ்வர தேஜஸாக சனத்குமாரர் ஜனிப்பது என்றானதும் பார்வதிதேவிக்கு புத்திரனாகப் பிறக்காவிட்டாலும் ஈஸ்வர தேஜஸை நீர்நிலையாக மாறிய பார்வதியின் சரீரத்தில் தாங்கி சுப்பிரமண்ய செரூபமாகத் தருவது என முடிவானது.

சிவன் அம்ச ஆறுமுக முருகன்!

சிவனின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் ஞானிகள் பார்க்கும் ஞானமுகம் அதோமுகம் ஆகியவற்றிலிருந்து யாரும் அனுக முடியாத வெம்மையுடன் நெருப்பு பொறி தோன்றி ஞானம், வீரம், செல்வம், சித்தி, கருணை, இரக்கம் ஆகிய ஆறு பொறிகளாக சனத் குமாரர் தேஜஸாக ஜனித்து வெளிப்பட அக்னி பகவான் வாயுபகவான் இருவரும் அந்த தேஜஸை தாங்கும் சக்தியை இறைவனிடம் பெற்று தேஜஸை முதலில் கங்கையிலும் பின்னர் அன்னை நீர்நிலையாக இருந்த சரவணப் பொய்கையிலும் சேர்த்தனர். சிவன் அன்னை பார்வதியின் அம்சமான கார்த்திகைப் பெண்களை அழைத்து ஆறுவரையும் வளர்க்கச் சொன்னார். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டதால் கார்த்திகேயன்.

சிவசக்தி ஐக்கிய நாள்! ஆறுமுகன் பிறந்தநாள்! தைப்பூச நன்னாள்!

அம்மையும் அப்பனும் ஆறு உருவங்களாக சரவணப் பொய்கையில் விளையாடிக் கொண்டிருந்த குழைந்தைகளைக் கண்டு மனம் மகிழ்ந்து அவர்கள் அறுவரையும் அணைக்க ஆறுமுகமும் ஓர் உடலுமாக ஆறுமுகப்பெருமானக மாறினார். இது சிவசக்தி ஐக்கிய நாளாகும். ஆறுமுகனின் பிறந்தநாள்- தைப்பூச நன்னாள். ஆறுமுகனின் அவதார நிகழ்வு இது. உமையும் நீர் நிலையிலிருந்து உருமாறி தன் திவ்விய சரீரம் கொண்டாள்-பழநி.

அஞ்ஞானத்தை நீக்கி மெய்ஞானத்தை வழங்கி!
தாருகா முனிவர்கள் அபிசார வேள்வி செய்து கஜாசூரனை பிட்சாடனர் மேல் ஏவ கஜாசூரன் பிட்சாடனரை விழுங்கி விடுகின்றான். அம்பாள் இடுப்பில் முருகன் இருக்க கண்ணுற்ற பார்வதி வருத்தம் அடைந்தாள். அப்போது யாணையின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிவந்து கஜாசூரனை வதம் செய்கின்றார் பிட்சாடனராகிய சிவபெருமான்.

அழகிய திருமேனியுடன் தாயின் இடுப்பில் இருக்கும் சிவக்குமரன் முருகன் தாயை நோக்கி ‘இதோ தந்தை’ என தன் விரல் நீட்டி காண்பிக்கின்றார். இந்தக் காட்சியே அஞ்ஞானத்தால் அல்லலுறும் பார்வதியின்(உயிர்களின்) துயர் நீங்கும் பொருட்டு கருணை வடிவான முருகப் பெருமான் ஞானாசிரியராக இருந்து ஆணவத்தை அடக்கி அஞ்ஞானத்தை நீக்கி, ஞான வடிவாகிய பரம் பொருளைக் காணச் செய்து, மெய்ஞானத்தை வழங்கி உயிர்களுக்கு பிறவிப் பயனை நல்குவதை விளக்கும் காட்சியாக ஆன்மீகப் பெரியோர்கள் குறிப்படுவது

சிவனின் ஞானவடிவான ஞானபண்டிதன் சிவபாலனுக்கு காவடி ஏன்!
அகத்தியர் தன் சீடன் இடும்பனிடம் தான் வணங்குவதற்காக இமயமலைச் சாரலிலிருக்கும் சிவகிரி, சக்திகிரி என்ற இருமலைகளையும் கொண்டுவரச் சொன்னார். அம்மலைகளை ஒரு நீண்ட கழியில் இருபுறமும் கட்டி காவடியாக தோளில் தூக்கி வரும்போது ஒர் இடத்தில் களைப்பு மேலிட காவடியை கீழே வைத்துவிட்டு சற்று ஓய்வெடுத்தான். பின் காவடியைத் தூக்க முயற்சிக்கும்போது அம்மலைமேல் இருந்த சிறுவன் அம்மலை தனக்குச் சொந்தம் எனக்கூற இருவரும் போரிட்டனர். முடிவில் சிறுவனாக வந்திருப்பது சிவக்குமரன் என்றறிந்து இடும்பன் வணங்க அருளினார் முருகப்பெருமான். இந்நிகழ்வு நடந்த தினம் ஒர் தைப்பூச நன்னாள். அன்றிலிருந்து முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. காவடிகள்- பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பக்காவடி, மயில்காவடி, அக்னிகாவடி, பறவைக்காவடி, மச்சக்காவடி, சர்ப்பக்காவடி என பலவிதமுண்டு.

ஒருவனுக்கு வரும் பிரச்சனைகள், சங்கடங்கள் எல்லாவற்றையும் தொடர்ந்து சுமந்தால் மனதில் அழுத்தம் அதிகமாகும். மூளையின் செயல் குன்றும். எனவே பிரச்சனைகள் தோன்றியவுடன் அதை ஓரமாக ஒதுக்கி வைக்கப் பழகவேண்டும். இதைத்தான் முருகனுக்கு விரதம் இருந்து காவடி எடுக்கும் பக்தர்கள், முருகா இத்தனை நாட்கள் விரதம் இருந்து காவடி சுமந்து வந்தேன் உன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடந்தது. காவடி இறக்கி வைத்தது போன்றே என்மனதில் உள்ள சுமைகளை இறக்கி வைத்து அருள்வாய் எனச் சொல்லாமல் சொல்லும் செயலாகும்.

காவடி எடுக்கின்றேன் என மனதாரப் பிரார்த்தனை செய்து அதனைச் செலுத்தும்பொது தன் மனதைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றனர். பக்தியுடன் இறைவன்மேல் பாரத்தைப் போட்டு நம்பிக்கையுடன் சுமந்து செல்கின்றனர், பக்திப் பிரவாகத்தில் தன்னை மறக்கும் நிலை ஏற்படுவதால் அவரது குடும்பம், சுற்றம் சொந்தங்கள் பற்றியும் நடப்பது நடக்கப்போவது எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தெய்வ சிந்தனையால் மனம் வாக்கு காயம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்த நிலையில் இருப்பர். அப்போது சத்து சித்து என்ற ஆனந்த நிலை கிட்டும் உண்மையான பக்தர்களுக்கு.

குருநாதர் ஏன்!
சிவனைத் தரிசிக்க தேவர்களுடன் வந்த பிரம்மன் அங்கிருந்த குமரப்பெருமானை அனைவரும் வணங்க தான் மட்டும் இவர் இளைஞன்தானே என்று செருக்கடைந்து வணங்காமல் சிவனை தரிசிக்கச் சென்றார். சிவனைத் தரிசித்து செல்லும் பிரம்மனுக்கும் மணியும் ஒளியும்போல், மலரும் மணமும் போல் தாமும் சிவமும் பிரிக்க முடியாத நிலையாமை என்பதை உலகிற்கும் உணர்த்தவும் பிரம்மனின் செருக்கை அடக்கவும் விரும்பிய முருகன் பிரம்மனை அழைத்து நீவிர் செய்யும் தொழில் யாது என்றார்.

படைக்கும் தொழில் என்பவரிடம் வேதங்கள் தெரியுமா உங்களுக்கு என்று கேட்க, ரிக் வேதம் பற்றி பிரம்மன் ஓம் என்று கூற ஆரம்பித்தார். ஓம் என்பதன் பொருள் என்ன வென்று கேட்க தடுமாறிய பிரமனை இது அறியாமல் படைப்புத் தொழிலை செய்வது சரியாகாது எனக்கூறி பிரமனைச் சிறையெடுத்தார். அவர் செய்துவந்த படைப்புத் தொழிலை தாமே மேற்கொண்டார்.

திருமால் பிரமனை விடுவிக்க எண்ணம் கொண்டு தேவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட, புன்னகைப் பூத்த சிவபெருமான் பிரம்மனின் செருக்கை அடக்கவே அவனை சிறையிலடைத்துள்ளான் என்றவர் நந்தியெம்பெருமானை அழைத்து முருகனிடம் சென்று பிரமனை விடுவிக்க சொன்னார். நந்தியின் பேச்சை கேளாதாதால் எம்பெருமான் அனைவருடனும் முருகனைக் காணப் புறப்பட்டார்.

ஓம் எனும் ஓங்கார முதல் எழுத்தின் பொருள் தெரியாமல் படைக்கும் செயலை செய்தல் சரியன்று. இருப்பினும் உங்களது திருவுள்ளப்படி அவனை விடுவிக்கின்றேன் என பிரமனை விடுவித்தார். பெருமான் பிரமனை மீண்டும் தனது படைப்புத் தொழிலைச் செய்ய அனுமதித்தார்.

பெருமான் குமரனை நோக்கி ‘பிரணவத்தின் பொருள் உனக்கு வருமாயின் சொல்லுக‘ என்றார். அப்போது அன்னைக்கு பிறர் அறியாவண்ணம் நீவிர் உபதேசித்த பிரணவத்தின் பொருளை யான் யாவரும் கேட்கும்படி சொல்வது முறையில்லை. இருப்பினும் காலம், இடம், அறிந்து முறைப்படி(குரு-சிஷ்ய பாவனையில்) கேட்கின் யான் கூறுவோம் என்றார்.

 

தன் குமரனிடம் திருவிளையாடல் புரிய நடந்த இந்த நிகழ்விற்காக, ஞானத்தின் பிறப்பிடம் ஓங்காரத்தின் சொரூபமான பெருமான் மைந்தா, நன்கு உரைத்தாய் என்று இருக்கையில் இருந்து எழுந்து, சிரந்தாழ்த்தி, வாய் பொத்தி, செவி சாய்த்து நின்றார்.. கல்லால மரத்தின் அடியில் எழுந்தருளி நால்வருக்கும் ஞான உபதேசம் செய்த ஞானகுரு, சீடனாகி குருவிடம் பாடம் கேட்கும் நிலையில் இருந்தார். குமரன்

தன் மழலை மொழியில் பிரணவ மந்திரத்தின் பொருளை மிகத் தெளிவாகக் கூறினார்-.சுவாமிமலை சுவாமிநாதன்.

இந்த நிகழ்வு ஏன் என்றால் எத்தகைய வாழ்வும் ஞானமும் பெற்றவர்கள் ஆனாலும் ஒன்றை கற்கும்போது குருநாதர் வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்த திருவருள் புரிந்தார்.

சரியான குரு!

உயிர்களுக்குத் தெரியாத ஒன்றை தெரிந்துகொள்ள ஒருவரின் துணை அவசியம். அதற்காக உயிர்கள் தேடிக்கொள்ளும் துணை அதைப்போன்றே தெரியாத ஒன்றாக அமைந்து விட்டால் அந்த உயிர்கள் தெரியாத ஒன்றை எப்படி தெரிந்து கொள்ளமுடியும். ஆரம்பத்திலிருந்து தடுமாற்றங்களும் குழப்பங்களும்தான் மிஞ்சும். எனவே சரியான வழிகாட்டியைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். உலகியல் மற்றும் உயிரியல் பாதைகளில் வழிகாட்ட குரு என்பவர் தேவை.

 குரு என்றால் ஒளி, செம்மை, முளைப்பு என்றாகும். நாரையை குருகு என்று சொல்வது அதன் ஒளிர் வெண்மை நிறத்தால்தான். இரத்தத்தை குருதி என்று சொல்வது அதன் செம்மையை வைத்துதான். வாழையின் அடியில் வளரும்/ தழைத்துவருவதை குருத்து என்று சொல்வது அதன் முளைப்பை வைத்துதான். எனவே ஒளியுடையதாய், செம்மையுடையதாய், முளைத்து பெருகக்கூடியது எதுவோ அதுவே குரு எனப்படும். ஒளியையும் செம்மையையும் முளைப்பையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் கற்றதை இவ்வுலக மக்களுக்கு என தன்னிலிருந்து மற்ற உயிர்களுக்கு கடத்துபவரே குரு ஆவார். அந்த வகையில் குருந்த மரத்தடியில் இருந்து குருவாக மாணிக்கவாசகருக்கு அறிவு தந்தவர் இறைவன். ஒளியும், செம்மையும், முளைப்பும் வேண்டும் உயிர்கள் சரியான குருவை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். குருவிடம் உயிர்கள் எதிர்பார்ப்பது அறிவையல்லவா!

மாலின் கண்ணீரில் இரு பெண்கள்!

இந்த நிகழ்வைக் கண்ணுற்ற உமையின் தமையன் திருமாலின் கண்களிலிருந்து ஆனந்த நீர் துளிர்கள் துளிர்க்க அந்த இரு சொட்டு கண்ணீர் துளிகளும் இரு பெண்களாக அமிர்தவல்லி என்றும் சுந்தரவல்லி என்றும் மாறினர். இருவரும் என்றும் இளைமையுடன் இருக்கும் அழகு குமரனை மணந்து கொள்ள விரும்பி சரவணப் பொய்கையில் சடக்கர மந்திரத்தை ஜபித்து தவமிருந்தனர். அவர்கள் முன் தோன்றிய குமரன் மூத்தவள் அமிர்த வல்லியை நோக்கி நீ தேவலோகத்தில் இந்திரனின் மகளாகவும், சுந்தரவல்லியை பூலோகத்தில் சிவமுனியின் மகளாகப் பிறந்து வேடராஜனுக்கு மகளாகவும் வளர்ந்து வாருங்கள் உரிய காலத்தில் யாம் உங்களை திருமணம் புரிவோம் என்றருளினார்.

அமிர்தவல்லி சிறுமி வடிவம் எடுத்து மேருமலையில் இந்திரன்முன் சென்று நான் உன்னுடன் பிறந்த உபேந்திரனுடைய மகள் என்னை உன்னுடைய வளர்ப்பு மகளாக வளர்ப்பாயா என்றாள். இந்திரன் மகிழ்ந்து சஷ்டிதேவி-தேவசேனா எனப்பெயரிட்டு வளர்த்து வந்தான். அங்கு ஐராவதம் அவளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியதால் தெய்வயானை எனவும் பெயர் பெற்றாள்

திருமால் சிவமுனிவராக தவம் செய்து கொண்டிருக்கும்போது மகாலட்சுமி மான் உருவில் வர திருமாலான சிவமுனி இச்சை கொண்ட பார்வையை வெளிப்படுத்த அம்மான் கருவுற்று உரிய காலத்தில் வள்ளிக்கிழங்கை அகழ்ந்து எடுக்கும் குழியில் குழந்தையை ஈன்று பின் மறைந்தது. அந்தப் பகுதிக்குச் சொந்தக்காரனாகிய நம்பி பெண் குழந்தை இல்லாததால் அக்குழந்தையைக் கண்டெடுத்து வள்ளி எனப்பெயரிட்டு வளர்த்து வந்தான்.

நவசக்தி-நவவீரர்கள்! சிவபெருமானின் முகங்களிலிருந்து யாரும் அனுக முடியாத வெப்பத்துடன் தேஜஸ் வெளிப்பட்டபோது அதை தாங்காமல் அருகிலிருந்த பார்வதிதேவியும் பதட்டம் கொண்டபோது பார்வதி காலிலிருந்த சிலம்புகளின் நவரத்தினங்கள் சிதறின. அதை அரனார் நோக்க அம்பிகையின் திருவுருவம் ஒன்பது வடிவங்களாய் ஒன்பது சக்திகளாய் தோன்றின. பரமனாரின் தீட்சப்பார்வையால் ஒன்பதுபேரும் கர்ப்ப முற்றனர், கோபம் கொண்ட சக்தி அவர்களை இக்கர்ப்பத்துடன் பலகாலம் இருக்க சாபமிட்டார்.

நவசக்திகள் இந்த சாபத்தைக் கேட்டு அஞ்சி நடுங்க அவர்கள் வியர்வைத் துளிகளிலிருந்து லட்சம் வீரர்கள் தோன்றினர். மைந்தர்களே நீங்கள் அனைவரும் அவுணர்களை அழிக்க முருகனுக்கு உதவியாய் இருங்கள் என்று சிவன் அருள் புரிந்தார். நவசக்திகளும் பலகாலம் கர்ப அவதியுடன் தவம் செய்து வந்தனர். கர்ப்பம் உள்ளேயிருந்த வண்ணம் சிவயோகம் செய்து வளர்ந்தன. கர்ப்பம் வளர வளர தாங்கமுடியாத நவசக்திகள் பார்வதி பரமேஸ்வரனைப் பர்த்து தங்கள் குறைநீக்க வேண்ட அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த புதல்வர்களைப் பெற அருள்.

நவசக்திகளான
மாணிக்கவல்லிக்கு-தீரமிக்க வீரவாகுத்தேவர்,
முத்துவல்லி-மௌத்திகவல்லிக்கு வீரகேசரி,
புஷ்பராகவல்லிக்கு வீரமகேந்திரர்,
கோமேதகவல்லிக்கு வீரமகேசுவரர்,
வைடூர்யவல்லிக்கு வீரபுரந்தார்,
வைரவல்லிக்கு வீரராக்கர்,
மரகதவல்லிக்கு வீரமார்த்தாண்டர்
பவளவல்லிக்கு வீராந்தகர்,
இந்திர நீலவல்லிக்கு வீரதீரர் என மகவாக அவதாரம் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் தனித்தனியே வாள் கொடுத்து லட்சம் வீரர்களுடன் நீங்களும் கூடி ஆறுமுகனுக்கு உதவி புரிவீர் என ஈசன் அருள்.

11 ருத்திரர்கள் ஏன்!
பதினொரு ருத்திரர்களை ஈசன் நினைக்க அவர்கள் தோமரம், கொடி, வாள், குலிசம், அம்பு, அங்குசம், மணி, தாமரை, தண்டம், வில், மழு என்று 11 படைக்கலன்களாகி முருகனின் கைகளில் அமர்ந்தார்கள். ஆறுமுகனுக்கு 12 கரங்கள். அப்படியிருக்க பெருமான் 11 ருத்திரர்களை மட்டும் உருவாக்கினார். ஏனெனில் 12வது கரத்தில் சக்தியின் வேலை அளிக்க இருப்பதால். மேலும் ஐம்பெரு பூதங்களையும், சகல பிராணிகளையும் அழிக்க வல்லதும், எவ்வளவு வரங்கள் பெற்றிருந்தாலும் அவைகளைக் மறுத்து உயிரை வாங்கக் கூடிய வேலாயுதத்தை சக்தி ஆயுதமாக முருகனிடம் கொடுத்தருளினார். விஷ்ணு, பிரம்மாவின் அலோசனைப்படி ஆகாயத்தில் செல்லும் தேர் மீது தன் இன வாயுக்களுடன் சேர்ந்து முருகப் பெருமானை ஏற்றிக் கொண்டுத் தேரை வாயுபகவான் செலுத்தினான்.

சனத்குமாரர் கண்ட கனவின்படி முருகன் தேவர்களின் படைக்கு சேனாதிபதியாகி செல்லும் வழியில் நாரதர் தோன்றி, பெருமானே, கிரௌஞ்சமலை என்பது இதுதான்.. அந்தணர், அருந்தவத்தோர் செல்லும் போது வழி காட்டுவதுபோல் மாயை செய்து கொல்லும் கொடுங்குணத்தை உடையது. மகாவிஷ்ணுவை வென்று அவருடைய சக்ராயுதத்தை பதக்கமாக மார்பில் அணிந்துள்ளான் சூரபத்மனுடைய இளயவன் யானை முகத்தோன் தாரகாசூரன் இம்மலையில் வாசம் செய்கின்றான் என்றார்.

கிரௌஞ்சமலை- தாருகன்!

முருகன் படையுடன் வருவதை தூதர்கள் மூலம் அறிந்த தாருகன் தன் படையுடன் எதிர்க்க வீரபாகுத்தேவர் முதலில் போரிட, அவரிடம் தோற்றதுபோல் ஓடிய தாருகனைத் தொடர்ந்து சென்ற வீரபாகுத்தேவரும் அவரைத் தொடர்ந்த வீரர்களும் கிரௌஞ்ச மலையின் மாயையில் சிக்கினார். இதை அறிந்த சிவக்குமரன் தானே நேரில் போரிடச் சென்றார். சிறிது போரிட்ட பின் மனதில் அச்சம் கொண்டு கிரௌஞ்ச மலையில் ஒளிந்தான் தாருகன். முருகன் தன் வேலாயுதத்தைப் பிரயோகித்து கிரௌஞ்சமலையின் மாயைகளை அழித்து வீரபாகுத் தேவர் மற்றும் உள்ள வீரர்களை மீட்டுத் தாருகனை அழித்தார். போரில் தாருகன் செலுத்திய சிவப்படை.-பசுபதி அஸ்திரத்தை கையில் வாங்கிய குமரன் அதை வீரபாகுத்தேவரிடம் அளித்தார். தேவர்கள் விருப்பப்படி கிரௌஞ்ச மலைமீது தானும் தனது தம்பியரும் தங்க ஓர் நகரை உருவாக்க தேவதச்சனிடம் சொல்லி அங்கு எழுந்தருளினார். கிரௌஞ்சமலை-கர்நாடகா-சந்தூர்- 10கி.மீ.(பெல்லாரி மாவட்டம்)

சூரபதுமனுடன் போரிட்டு அவனை இரண்டாகப் பிளப்பதற்குமுன் தன்னை மயில் வாகனமாகவும் சேவல் கொடியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டுகின்றான். அந்த வேண்டுகோளை முருகப் பெருமான் ஏற்றார். ஆனால் அவர் போருக்குப் போகும் போதே இந்திரன் மயில் வடிவாக தேரிலும் அக்னி சேவல் வடிவாக முருகனின் கொடியிலும் வீற்றிருந்தார்கள் என்கிறார் கச்சியப்ப முனிவர் கந்த புராணத்தில்.

கிரௌஞ்சமலை தேவாசுரப் போரில் தாருகன் இறந்து பட்டதை அவன் மகன் அசுரேந்திரன் வீரமகேந்திரபுரியைத் தலை நகராக கொண்டு ஆண்டு வந்த தன் பெரியப்பா சூரபதுமனிடம் கண்ணீர் மல்க கூறினான். பின்னர் நடந்த போரில் சூரபதுமன் மகன் பானுகோபன் இறக்க, சூரபதுமனின் கடைசி தம்பி சிங்கமுகனும் கொல்லப்பட சூரபதுமன் தானே நேரில் வந்து போர் புரிய குமரனின் வேல்படை. தவம் செய்து 1008 அண்டங்களையும் 108 சதுர்யுகங்களுக்கு அரசாள வரம் பெற்ற சூரபதுமனுடன் போரிட்டு தேவர்களையும் ரிஷிகளையும் மீட்டார். போரில் காயமடைந்தவர்களுக்கு சிவபெருமான் வைத்தியராக பார்வதி தேவியுடன் வந்து தேவையான மருந்துகளை மலைபோல் குவித்து அதன்மீதமர்ந்து உதவி செய்தனர்.-பரளி (ஒளரங்காபாத்) –வைத்தியநாதர்-ஜோ.தலம்-5/12

108 யுகங்கள் அரசாண்ட சூரபதுமனை இறுகூறாக்கி பிளக்க சிவனிடம் பெற்ற வரத்தால் உயிர்பெற்று தான் உருவாக்கிய வீரமகேந்திரபுரம் அழிந்து தன் ஆணவம் அழிந்துபட குமரனை வழிபட்டு நிற்க இருகூறான அவனின் ஒரு கூறை சேவல் கொடியாகவும் மற்றதை மயிலாகவும் குமரன் ஏற்றார். சூரபதுமனின் மகன் இரண்யன் தந்தை இறந்ததைக்கண்டு புத்திரர்கள் செய்யும் கடமைதனை செய்யமுடியாமல் சேவலும் மயிலுமாய் ஆனாய் என புலம்பி நின்றான். முருகப்பெருமான் தனது தம்பியருடன் தங்க ஓர் நகரை உருவாக்க தேவதச்சனிடம் சொல்லி அங்கு எழுந்தருளினார்-திருச்செந்தூர். சனத்குமாரர் கண்ட கனவின்படி முருகன் தேவர்களின் படைக்கு சேனாதிபதியாகி தேவாசுரப் போரில் அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.

சூரசம்ஹாரத்தின் தத்துவம்!

ஒவ்வொரு உயிருக்கும் மும்மலங்கள் இருக்கின்றன. அந்த ஆத்மாவை அழிக்க அவையே போதுமானவை. மாயாமலமான தாரகாசூரன் உலகமே உண்மை என நம்பி வாழ்ந்து பின்னர் அது பொய் என்றுணர்ந்து அழிகின்றான். சிங்காமுகாசூரன் கன்ம மலம். ஆணவத்தின் அடையாளமான சூரபத்மன் இறக்கும் தருவாயில் அதை உணர்கின்றான். அம்மூன்று மலங்களையும் ஞானவேல் அறுத்து பந்தத்திலிருந்து விடுவிக்கின்றது.

எல்லா அறிவும் சக்தியும் பெற்ற மூன்று அசுரர்களும் இறைவனின் வலிமையை உணராமல் தான் என்ற அகந்தையால் அழிந்தார்கள். சரணடைந்த சூரபத்மனை தன்னோடு வைத்துக்கொள்கின்றார் முருகப் பெருமான். இறைவனிடமிருந்து வந்த நாம் மலங்களை ஒழித்து மீண்டும் இறைவனிடம் சேரவேண்டும் என்பதே சூரசம்ஹாரத்தின் தத்துவம்.

சஷ்டிதேவி-தேவயானையை திருமணம்!

தேவர்களைக் காக்க சூரபதுமனுடன் நடந்த போரில் அவருக்குத் துனையாக இந்திரனின் மகளான சஷ்டி தேவியும் போரிட்டு போர் வெற்றிகரமாக முடிந்ததும் முருகனுக்கு சஷ்டிதேவி-தேவயானையை மணம் முடிக்க இந்திரன் விரும்பி ஏற்பாடுகள் ஆரம்பித்து நிச்சயிக்கப்பட்டது.

ஆசை, அகந்தை, பொறாமை, சினம் இல்லமலிருக்க முசுமுகம்!

திருக்கயிலையில் சிவனும் பார்வதியும் ஏகாந்தமாய் இருக்கையில் அம்மரத்தில் பல முசுக்கள்-குரங்குகள் அமர்ந்திருந்தன. ஓர் ஆண்முசு மரத்திலிருந்த வில்வ இலைகளைப் பறித்து கீழே போட அந்த இலைகள் மரத்தின் கீழே இருந்த சிவ பார்வதிமேல் விழுந்து கொண்டே இருக்க கோபம் கொண்ட பார்வதியிடம் வில்வ இலைகளால் முசு நம்மை அர்ச்சிக்கின்றது, எனவே கோபம் வேண்டாம் என்றார். அப்போது அம்முசுவிற்கு ஞானம் உண்டாகி தன் தவறுக்காக வருந்தி சிவ பார்வதியை வணங்கி நிற்க, சிவன் முசுவிடம் நீ உன்னை அறியாமல் என்னை வில்வத்தால் பூசித்தாய் அதன் பயனாக அடுத்த பிறப்பில் நீ உலகம் முழுவதையும் ஆட்சி செய்யும் பேறு கிட்டும் என்றார்.

இதைக் கேட்டு மகிழ்ச்சியடையாத முசு, எனக்கு அரச பதவி வேண்டாம் நான் எப்போதும் தங்களையே தொழுது கொண்டிருக்க அருள் புரிய வேண்டியது.. முசுவே நீ மண்ணுலகை ஆண்டபின் இங்கு என்னிடம் வந்துவிடுவாய் என்றார். இதில் விருப்பமில்லாத முசு, பெருமானே மண்ணுலக வாழ்வில் எனக்கு நாட்டமில்லை. இருப்பினும் தங்களின் ஆணைக்கு அடிபணிகின்றேன். உலகில் அரசாட்சி செய்யும் போது எனக்கு மானிட உரு கிடைத்தாலும் என் முகம் முசுவின் முகமாகவே இருக்க வேண்டியது. ஏனெனில் அப்போதுதான் ஆசை, அகந்தை, பொறாமை, சினம், போன்ற குணங்கள் என்னை தீண்டாமல் இருக்கும் என வேண்ட, அதன்படி அரிச்சந்திரன் வம்சத்தில் முசுவின் முகத்துடன் முசுகுந்தன் என்ற பெயருடன் கருவூரை அரசாண்டு வந்தான்.

மன்னுலக மன்னனுக்கு தேவர்கள் வீட்டு திருமண அழைப்பு!

சூரன் மாண்டான் என்பதால் மகிழ்வுற்ற முசுகுந்தன் முருகப் பெருமானின் திருமணத்தைக் காண தன் புடைசூழ வந்திருந்து இந்திரன் முதாலானோர்களைச் சந்தித்து மகிழ்ந்தான்.

திருமணம் பங்குனி உத்திர நாளில் திருப்பரங்குன்றத்தில் இனிது நடந்தது, சஷ்டிதேவி தெய்வானையாக மாறினாள்.

வள்ளி திருமணம்!

சில காலம் கழித்து முருகன் திருத்தணிகை மலைக்கு வந்தார். அங்கு அவரைச் சந்தித்த நாரதர் முன்னைப் பிறவியில் திருமாலின் மகளான சுந்தரவல்லி இங்கு வள்ளியாக இருப்பதும் அவரை தாங்கள் உரிய காலத்தில் மணம் புரிய வேண்டும் என்றார். முருகப்பெருமான் வள்ளிக்கும் நம்பிக்கும் தன் உருவைக்காட்டிட அனைவரும் மகிழ்ந்தனர். விரைவில் திருமணம் இனிது நடந்தது தேவ தச்சனை அழைத்து கோவில் அமைக்கச் சொன்னார்..-திருத்தணி. பின்னர் அங்கு தெய்வானை வர வள்ளியும் அவரும் முற்பிறவியில் திருமாலின் மகள்கள் சகோதரிகள் என்பதை உணர்தினார்.

சிவகுமரனின் பெயர்கள்!

நெற்றிக்கண்களிலிருந்து தீப்பொறிகளை கங்கை சுமந்து சென்றதால் காங்கேயன்.

சரம்-நாணல், வனம்-காடு. பவன் -தோன்றியவன். நாணல்கள் மிகுந்த நீர் காட்டில் சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன்
கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன்
தன்னை நாடும் பக்தர்களை பற்றுக்கொண்டு காப்பவன்.அறுவரையும் ஒன்றாக செய்ததால் கந்தன் அம்மை யப்பருக்கு நடுவில் அமர்ந்ததால் சோமாஸ்கந்தன்.
அழகின் உருவம் முருகன்
முருகனுக்கு ஆறு முகமாதலால் ஆறுமுகன், சண்முகன் (ஷண்-ஆறு)
குரு திருமுருகனின் அருட்பார்வை தன்மீது விழ தவம் செய்து பூஜை குருபரன். கு-அஞ்ஞான இருள், ரு-நீக்குபவன் ஆன்மாக்களின் அஞ்ஞான இருளை நீக்குபவன் குருபரன்.
சிவனுக்கும், அருணகிரியாருக்கும், அகத்தியருக்கும் பிரணவத்தை போதித்ததால் குருநாதன்.
மயிலில் சஞ்சரிப்பதால் விசாகன்.விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் விசாகன். வி- பட்சி, சாகன்- சஞ்சரிப்பவன். பறவையாகிய மயிலை வாகனமாகக் கொண்டு சஞ்சரிப்பவர் எனப் பொருள்.
குன்று இருக்கும் இடமெல்லாம் இருப்பதால் குமரன்..
ஸ்வம்- சொத்து. உலக உயிர்களை சொத்தாக உடையவன் சுவாமிநாதன்.
தேவர்களின் தலைவானக போரிட்டதால்- சுரேசன்.
.குழந்தை முகமாக தோன்றுவதால் சேயோன்.
முத்தைப்போல் இயற்கையாக ஓளிர்பவன் முத்தையன்.
வள்ளிமூலம்-இச்சா சக்தி, தெய்வானைமூலம்-கிரியா சக்தி, வேல்மூலம்- ஞானசக்தி அளிப்பவன் - வள்ளல் பெருமான்.
ஆணவத்தின் வடிவம் மயிலை அடக்கி வாகனமாக்கியதால் மயில்வாகணன்.

பிரணவ ஸ்வரூபியான சிவனே முருகனாக விளங்குகின்றார். முருகனும் சிவனும் ஒன்றேயாதலால் அ கார, உ கார, ம கார மாகிய ஓம் காரத்தின் ஸ்வரூபம் சுப்ரமண்யர். ஒவ்வொரு மந்திரத்திற்கும் உயிராகத் திகழ்வது ஓம். அந்த ஓம் காரத்தினன் ஜீவராசிகளின் இதயக் குகையில் அமர்வதாலே குகன் எனப்பெயர். அனைத்திலும் பரவியிருப்பதாலும், எந்தப் பூஜைக்கும் முதல் அங்கமான ஆத்ம பூஜை செய்தபிறகே என்பதனாலும் அப்போது இதயகுகையில் அமர்ந்திருப்பதாலும் குகபரமன் என்றாகிறது. ஞானத்தின் வடிவாக திகழ்பவன். எங்கும் நிறைந்த அழகுப் பொருளே முருகன் என்று அறிவு கூறினாலும் வடிவத்தை நினைந்து நினைந்து பழகிய நெஞ்சில் அந்த உருவம் மங்குவதில்லை.

முருகனின் திருவுருவங்கள்- 1.சக்திதார், 2.கந்தசுவாமி, 3.தேவசேனாபதி, 4.சுப்ரமண்யர், 5.கஜவாகனர், 6.சரவாபவர், 7..கார்த்திகேயர், 8.குமாரசுவாமி, 9.சண்முகர், 10.தாரகாரி, 11.சேனாபதி, 12.பிரமசாத்தர், 13.வள்ளி கல்யாணசுந்தரர், 14.பாலசுவாமி, 15.கிரஞ்ச பேதனர், 16.சிகிவாகனர்.

முருகனுக்கு உகந்த நாட்கள்- ஐப்பசிமாத சஷ்டி- அவதார நோக்கமாகிய சூர சம்ஹாரம் நிறைவேறிய நாள். கார்த்திகைமாத திருக்கார்த்திகை- ஆறுமுகனை வளர்த்த அன்னையரைச் சிறப்பிக்கும் நாள். தைமாத தைபூசம்- குருபகவான் தன் ஜென்ம நட்சத்திரமான பூசம் சந்திரனோடு சேரும் நாள்-பௌர்ணமி அன்று தவம் செய்து பூஜித்து திருமுருகனின் அருட்பார்வை தன்மீது விழ வழிபாடு செய்தார். அன்று அருள் அலைகள் அதிகம் இருக்கும் நாள். சரணடைந்த பக்தர்கள் விரதம் இருந்து வழிபட சிறந்தது. அசுரனை அழிக்க அன்னையிடம் வேல்வாங்கிய நாள். இடும்பனுக்கு அருள் புரிந்த நாள்.

முருகன் அடைந்த சாபம்! புகழ்ச்சிக்கு மயங்குவதும், தற்புகழ்ச்சியுடன் பேசுவதும் ஆபத்து!

 

ஒங்காரத்தின் பொருள் கேட்டு சொல்லாததால் பிரமனை சிறை செய்த முருகனை அதன் பொருள் சொல்லக் கேட்க பொருள் சொல்லிவிட்டு கடைசியில் சுப்ரமணி ஓம்! என்றார். சதாசிவ ஓம்! என்பதற்குப் பதில் சுப்ரமணி ஓம்! என்று முருகன் சொன்னதைக் கேட்டு தேவர்களும் முனிவர்களும் அதிர்ந்தனர். புகழ்ச்சிக்கு மயங்குவதும், தற்புகழ்ச்சியுடன் பேசுவதும் ஆபத்து. இது தவறு என தன் குமரினிடம் கூறிய சிவன் சர்ப்பமாக மாறச் சபித்தார். ஸ்ரீபிரம்மாவை சிறையிலிருந்து மீட்டார். சர்ப்பமான முருகன் பல தலங்கள் சென்று வழிபட்டு திட்டை வந்தார். பல வருடங்கள் பூஜை செய்து வழிபட்டு அருள் பெற்று தன் பழைய உருவை அடைந்தார்.. ஸ்ரீசுப்ரமணியராகவும், அருவமாக சர்ப்ப வடிவிலும் முருகன் அருள். தென்குடித்திட்டை.தி.த-132.வசிஷ்டேஸ்வரர்(சு)


தந்தைக்கு உபதேசம் செய்தது சரியா!

சின் முத்திரையுடன் தியான நிலையில் தண்டபாணி. தந்தைக்கு பிரணவ உபதேசம் செய்ததை எண்ணி முருகன் வருந்த சிவலிங்கத் திருமேனியை வழிபடச் சொல்லி மாமன் பெருமாள் அறிவுறை. வாய்மூடி மௌனியாய் தன் பேச்சுத்தன்மையைக் குறைத்து பலதலங்கள் சென்று வழிபட்டார் சுப்ரமண்யர். சிவானந்தேஸ்வரை வழிபட்டு தன் பேச்சாற்றலைப் பெற்றார். திக்குவாய்க்காரர்கள் தண்டாயுதபாணிக்கு நாற்பத்தைந்து நாள் தேன் அபிஷேகம் செய்து வழிபாடு.

சிவகாமசுந்தரியின் மகன் குமரகுருபரன். குமரகுருபரன் ஐந்து வயது வரை ஊமை. பேச்சாற்றலில்லை. கவிராயர் குழந்தையுடன் இங்கு வந்து உப்பில்லா விரதம் இருந்து தவறு செய்திருந்தால் தண்டணையைத் தங்களுக்குத் தந்திடவும் குழந்தையை பேசவைக்கவும் வேண்டுதல். சரவணப எனத் தொடங்கும் கந்தர் கலிவெண்பாவை குழந்தை வாய்திறந்து பாடியது. பிச்சாடனர் சிறப்பு. வழக்கத்திற்கு மாறாக சந்திரசேகரர் லிங்கோத்பவர் இடத்தில். முருகனுக்கு அருளி சிவானந்தேஸ்வரர் என்ற நாமத்தில்.-திருப்பேணுபெருந்துறை-நாச்சியார்கோவில் அருகில்

வேத உட்பொருளை கவனியாதலால் சிவன் உமையை சபிக்க கோபம் கொண்ட முருகன் வேதாகமங்களை கடலில் வீச பாவம் சூழ்ந்து உருத்திரசன்மராக -ஊமையாய் பிறந்து சாபம் நீங்கிய தலம்- எருக்கத்தம்புலியூர்.

சோமாஸ்கந்த தத்துவம்!

சிவபெருமான் ஓங்கி உயர்ந்து வளர்ந்த தாணு மரமாக நிற்க, அம்பிகை பார்வதி அந்த மரத்தில் பற்றிப் படர்ந்த கொடியாக- அபர்ணாவாக பிணைந்திருக்க அந்த மரத்தின் கீழ் சிறிய கன்றுச் செடியாக முருகன் தோன்ற அதுவே முதல் முதலாக அமைந்த சோமாஸ்கந்த வடிவம் என்கிறது ‘சோமாஸ்கந்த தத்துவ நூல். வைகாசி விசாக நாளில்தான் தாணு அபர்ணா விசாக அவதாரம் நிகழ்ந்துள்ளது.

ஞானவேல்!

ஒவ்வொரு உயிருக்கும் மும்மலங்கள் இருக்கின்றன. அந்த ஆத்மாவை அழிக்க அவையே போதுமானவை. எனவே அவைகளை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்தவே முருகனின் ஞானவேலால் ஆணவமலம்- சூரபத்மன், கன்மமலம்-சிங்கமுகன், மாயாமலம்-தாரகன் ஆகியோரை வதம் செய்வதன் மூலம் அம்மூன்று மலங்களையும் ஞானவேல் அறுத்து பந்தத்திலிருந்து விடுவிக்கின்றது என்பதை நமக்கு உணர்த்துகின்றது.

அம்மன் அம்ச நான்முக முருகன்! தோற்றம்!

விஸ்வாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் வேண்டி தவம் இருக்க ஈசன் தோன்றி பாலதிரிபுரசுந்தரியை நோக்கித் தவம் செய்யச் சொன்னார். குழந்தையாய் வந்த சுந்தரிக்கு திலகமிட அவர் குளத்தில் குணிந்து திலகத்தைப் பார்க்க அதிலிருந்த குங்குமம் குளத்தில் விழ ஒன்றின்பின் ஒன்றாக நான்கு முகங்கள் தோன்றி திரிபுரசுந்தரியை வணங்க நான்முக முருகா வருக எனக்கூறி அணைத்துக் கொண்டாள். விஸ்வாமித்திரா! ஈசன் அன்று என் அம்சம் இன்றி ஆறுமுக வேலனை படைத்தார். இன்று அவரது அம்சமின்றி நான்முக வேலனை உனக்காக படைத்தேன். இவனே உனக்கு வேண்டியது தருவான் என்றாள். தூரத்தில் கல் மழை பெய்த இடத்திற்கு வரச்சொல்ல அங்கு ஒர் கோவிலில் பாலதிரிபுரசுந்தரியுடன் நான்முக முருகன் சேர்ந்து காட்சி. இறையருள் பெற தவம் செய்யாமல் வேறு எதையோ தேடிக்கொண்டிருந்தேனே என வருந்தினார் விஸ்வாமித்திரர். சதுர்முகமுருகன் சிறப்பு.சின்னாளப்பட்டி

சாமுத்திரிகா லட்சணம் யார் உருவாக்கியது!

கார்த்திகேயன் ஆண், பெண் லட்சணங்களை சீரமைத்துக் கொண்டிருக்கும்போது தம்மை மதிக்காமல் செய்கின்றாறே என்பதால் அவர் செயலுக்கு இடையூறு விளைவித்தார் விநாயகர். சினமுற்ற கார்த்திகேயன் கணேசரை வீழ்த்த எண்ணி அவரின் பல் ஒன்றை பிடுங்கி விட்டார். பரமசிவன் அங்கு வந்து பிள்ளைகளின் சச்சரவிற்கு காரணம் கேட்க. கார்த்திகேயன் தான் ஆண், பெண் லட்சணங்களை சீரமைக்கும் பணியில் இருக்க அதைக் கெடுத்துவிட்டார் என்றார், அப்போது ஆண், பெண் லட்சணங்கள் என்று கூறுகின்றாயே என்னிடம் எத்தகைய புருஷ லட்சணம் எனக்கேட்டார். கபாலி எனப் பெயர் பெற்ற தங்களிடம் எப்படி புருஷ லட்சணம் காணமுடியும் என்பதைக் கேட்ட சிவன் கோபமுற்று ஆண்களின் லட்சணங்கள் பற்றிய சுவடிகளைக் கடலில் தூக்கி எறிந்துவிட்டு அந்தர் தியானமானார்.

சமுத்திரராஜனை அழைத்து நீ பெண் லட்சணங்களைப் பற்றிப் பகுத்து ஆராய்ந்து உருவாக்கு. கார்த்திகேயன் சொன்ன புருஷ லட்சணங்கள் அப்படியே இருக்கட்டும் என்றார். அப்போது சமுத்திர ராஜன் இவை என்வசமிருந்து வருவதால் இவற்றிற்கு சாமுத்திரிகா லட்சணம் என்ற பெயரில் விளங்க அணுக்கிரகம் வேண்டினார்.

கார்த்திகேயன் முன் தோன்றி, தேவலோக நியதிப்படி யார் எந்த வேலையைத் துவக்கினாலும் கணேசரின் அனுமதியோடு துவக்கினால் தான் விக்னமின்றி நிறைவேறும். நீ சகோதரின் பல்லை திருப்பிக் கொடுத்துவிடு. உன் விருப்பப்படி லட்சண ஏடுகளை சமுத்ர ராஜனிடமிருந்து பெற்றுக்கொள். ஆனால் அது சமுத்ர ராஜன் விருப்பப்படி சாமுத்ரிகா சாஸ்திரம் என்றே அழைக்கப்படும். என்றார்.

கார்த்திகேயன் தான் அண்ணனின் பல்லைக் கொடுத்து விடுகின்றேன். ஆனால் அவர் அதைக் கையிலேயே வைத்திருக்க வேண்டும் கீழே கண்ட இடத்தில் வைத்தால் அந்த பஸ்பம் அவரை எரித்துவிடும் என்றார். என்வே சாமுத்ரிகா லட்சணம் என்ற சாமுத்ரிகா சாஸ்திரம் முருகனால் எழுதப்பட்டது.


கார்த்திகைப் பெண்கள் யார்!

சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய ரிஷிகள் நால்வரின் வேண்டுகோளுக்கிணங்கி சிவன் அஷ்டமா சித்திகளை அடையும் வழிகளைப் போதித்தார். அருகிலிருந்த ரிஷிபத்தினிகளான நிதர்த்தினி, அப்ரகேந்தி, மேகந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய அறுவரும் தங்களுக்கும் அஷ்டமா சித்திகளை உபதேசிக்க வேண்டினர். மனதில் பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும் என்பதால் சிவன் தயங்க பார்வதி அவர்களுக்காக வாதாட சிவன் அவர்களுக்கும் அஷ்டமா சித்திகளை உபதேசித்தார்.

உபதேசம் பெற்றவர்கள் தாங்கள் உமைக்கு இணையாக இருப்பதால் ஏன் உமைக்கு பணி புரிய வேண்டும் என நினைத்ததால் சிவன் அவர்களை கல்லாக மாற சாபம். உண்மை நிலை உணர்ந்த பெண்கள் வருந்தி அன்னையை மனதால் பூஜிக்க உமை மன்னிக்க சிவனும் மன்னித்தார். மீண்டும் பணிப் பெண்ணான அவர்கள் ஐயனே காரணமின்றி ஏதும் செய்யமாட்டீர்கள் என்ற ஞானம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. கல்லாகமாற்றி மீண்டும் பெண்ணாக மாற்றியதின் அர்த்தம் என்ன என்றனர்.

தீயவற்றை அழிக்கவும் தேவர்களுக்கு நல்வாழ்வு கொடுக்க சிவ அம்சத்தில் பிறக்கப் போகிறவனை வளர்க்கப் போகின்றீர்கள். மற்றவர்கள் செல்வம் வீடு எனக் கேட்க நீங்கள் ஞானத்தை கேட்டுள்ளீர்கள். ஆனால் அந்த ஞானத்தை முறையாக பயன்படுத்தும் பக்குவம் உங்களிடம் (கார்த்திகைப் பெண்கள்) இல்லை. அதை முறைப் படுத்தவே இந்த நிகழ்வு என்றார்.

கார்த்திகைப் பெண்கள்! கிருத்திகை நட்சத்திரம்! கார்த்திகேயன்!

குழந்தையாய் இருந்த முருகனை எடுத்து பாலூட்டி பாசம் காண்பித்த கார்த்திகைப் பெண்கள், முருகா! உன்னை வளர்த்த எங்களை உலகம் மறந்துவிட்டதே! என வருத்தப்பட, அன்னைக்குச் சமமாக என்னை சீராட்டி பாலுட்டிய நீங்கள் அனைவரும் ஒன்றாகி கிருத்திகை நட்சத்திரமாக வானில் சுடர் விடுவீர்கள். இந்த நாளான ஆடிக்கிருத்திகை இனி எனக்கு மிகவும் உகந்த நாள். இந்தநாளில் விரதமிருந்து வணங்கும் பக்தர்கள் துயர் தீர்ப்பேன். உங்கள் பெயரால் நான் கார்த்திகேயன் என்ற பெயரிட்டு அழைக்கப்படுவேன் என அருள் புரிந்தார். மேலும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தின்போது மக்கள் தீபமேற்றி வழிபடுவர் என அருள்.

முருகனின் அறுபடை வீடு!

முருகனுடைய ஆறு படைவீடுகளும் நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைக் குறிக்கும். பிரமச்சரிய, கிருகஸ்த, சந்நியாச கோலங்களில் முருகன் வணங்கப்படுகிறார்

1.மூலாதாரம்- திருப்பரங்குன்றம். தெய்வானையுடன் மணக்கோலத்தில் உள்ள தலம்.

2.சுவாதிஷ்டானம்-திருச்செந்தூர். செந்தில்வேலவனாக பக்தர்களது துயர் நீக்கும் தலம்.

3.மணிபூரகம்-பழநி. ஞான தண்டமேந்தி யோக நிலையில் உள்ள தலம்.

4.அநாகதம்- திருவேரகம்-சுவாமிமலை. தந்தைக்கு உபதேசம் செய்த அறிவுத் தலம்.

5.விசுக்தி-திருத்தணிகை. தேவசேனாவுடன் களிப்புடன் இருக்கும் தலம்.

6.ஆக்ஞை-பழமுதிர்ச் சோலை. ஞானப் பழமாக இருக்கும் தலம்

#####

Read 14789 times Last modified on செவ்வாய்க்கிழமை, 24 December 2019 07:55
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879330
All
26879330
Your IP: 44.206.248.122
2024-03-19 09:00

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg