gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

5-5.உள்ளேகட!

Written by

உள்ளேகட!                                                                                                              

பிரமாண்டம் என்றால் அளவிடமுடியாத அளவிற்கு பெரியது. எந்தவித அளவுகோளும் இதற்கு இல்லை. நீங்கள் நினைப்பது போல பலமடங்கு பெரியது. பிரமாண்டம்- பிரம்மம்+ அண்டம். அண்டம்- உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கிய பிரம்மம்- ஆண்டவன்- கடவுள். எதிலிருந்து இந்த உலகம் உண்டானதோ, எதற்குள் இந்த உடலும் உயிரும் சங்கமிக்கின்றதோ அதுவே பிரம்மம்.
ஓர் விதையுனுள் ஓர்மரம் அடங்கியிருப்பதால் விதையே பெரியது, மரத்தைவிட. ஆனால் ஓர் மரத்தில் இது போன்று எத்தனை விதைகள் உருவாகின்றது. உற்பத்தியாகின்றது. எனவே விதையைவிட மரமே பெரியது. புரியாத ஆனால் உணரும் பெரிய தத்துவம் இது. இந்த வித்தையை புரிந்தவன், அறிந்தவன் கடவுள். அதனால்தான் பிரமாண்டவனாய் இருக்கின்றான்.
ஆலயம் என்பது ஆன்மாக்கள் ஆண்டவனிடம் ஒன்றி லயிக்குமிடம். கோவில் உயிர்களின் தலைவன் தங்குமிடம். ஆலயம் கோவில் வடிவானது. கோவில் கர்பகத்தினுள்ளே இறைவன் குடியிருப்பு. நம் உடலே ஆலய அமைப்பு. ஆக இந்த உடலின் கர்ப்பகத்துள்ளே இறைவன் குடியிருக்கின்றான்- ஆன்மாவாக- உயிராக. ஆன்மா உடலைச் சார்ந்து இருப்பதால் அந்த உடலின் ஆசாபாசத்திற்கு ஏற்ப நல்ல, தீய செயல்களில் ஈடுபட வைக்கின்றது.
எனவே நம் எண்ணங்கள் நல்லவையாக இருந்தால், அதனால் ஆன்மா புனிதப்பட்டு அது பாவங்கள் நீங்கி முற்றிலும் இறை குடியிருப்புக்கு ஏற்றதாகி விடும். நம் பாவச்செயல்கள் காரணமாக மனம் இருண்டுவிடுவதால் நாம் நம் உள்ளே இருக்கும் இறைவனைக் காணமுடிவதில்லை. அந்த இடத்தை இருட்டடைப்பு செய்து விடுகின்றோம்.
வாழ்வின் மூலத்தை தேடுவது, தொடுவது என்பது இன்னொரு பரிமாணத்திற்குள் நுழைவதாகும். இறைவன் ஜோதிவடிவமானவன். எனவே மாயை எனும் அந்த இருட்டை நீக்கி மனதில் ஒளிகொண்டு இறையைக் கணமுயலுங்கள். இருண்ட இடத்தில்தான் ஒளி பரவமுடியும்.
ஒளி வந்தபின் இருண்டபகுதி என எதுவும் இருக்காது. அஞ்ஞானம் உள்ள இடத்தில் ஆண்டவன் வந்து ஒளி நிரம்பினால் முழுமையான ஞானம் நிறைந்து விடும்.
நமக்குள்ளே அவன் ஒளிர வேண்டும். இருளை அகற்ற ஞானம் என்ற அகல் விளைக்கை ஏற்றுங்கள். மனம், மூச்சு, பார்வை, சொல், கேள்வி, உணவு ஆகியவன எங்கிருந்து பிறக்கின்றனவோ, எங்கு போய் சேர்கின்றதோ அதுதான் அருளின் பிறப்பிடம். முதலில் நாடுங்கள். பின்னர் தேடுங்கள். ‘தேடுங்கள் கிடைக்கும்’.
ஒரு ஆன்மாவின் உடலின் நிழல் அதனோடு எப்படி ஒன்றியிருந்து ஓளிபட்டால் மட்டும் நம் கண்களுக்கு தெரிகின்றதோ, அப்படியே நம் உள் இருக்கும் இறையும் உள்ளேஒளி பரவினால் மட்டுமே காணமுடியும்.
கண்ணனே! உன் கால்களால் என் மார்பில் மிதி. உன்கால்களில் மிதிபட்டு விஷப் பாம்பு மடிந்ததை அறிவேன். அதேபோன்று என் மனதில் உள்ள காமம், குரோதம், மோகம், மதம், போகம் ஆகிய பாம்புகள் நீ உதைத்தால் அழிந்துவிடும். என் மனம் சுத்தமாகிவிடும். அப்போது இறையை நான் காணமுடியும் என, தன்நிலை மறந்து ஒரு கோபிகை கூறியதாக புராணத்தில் உள்ளது.
எரிகட்டுகளை பற்றவைத்தால் புகைவருகின்றது. அது கண் எரிச்சலையும், மூச்சுத் திணரலையும் ஏற்படுத்தும். நமக்கு நெருப்பு வேண்டும். நமது நோக்கத்தில் உறுதியாக இருப்பதால் எரிச்சலையும் திணரலையும் பொறுத்துக்கொண்டு மூச்சுக்காற்றால் ஊதி ஊதி நெருப்பு பற்ற உதவி செய்கிறோம்.
நெருப்பு எரிய ஆரம்பித்தால் புகையில்லை, கண் எரிச்சலில்லை, மூச்சுத்திணரலில்லை. அங்கே ஒளியையும் அதன் வெப்பத்தையும் உணருகிறோம்.
இதேபோன்றுதான் ஆன்மீகப் பாதையில் ஆரம்பத்தில் ஏற்படும் இடர்பாடுகள். தடங்கல்களைத் தவிர்த்து நாம் இறைஓளி காணும் கொள்கையில் உறுதியுடன் செயலாக்கம் நடைபெற்றால் அந்த வெளிச்சத்தை காணமுடியும், அதில் ஒளியை உணர்வீர்.
அந்த ஜீவஒளி நம்மைச் சுற்றியுள்ள எல்லா ஜீவன்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்கும். எனவே தடைகள் கண்டு ஒதுங்காமல் தொடர்ந்து பயணித்து இன்ப ஓளியை காணுங்கள்.
தலைமைத் துறவி ஓர் சிலையை எடுத்து தன் சீடர்களிடம் கொடுத்து, இது சாதாரண சிலை என நினைத்துவிடாதீர்கள், மிகவும் சக்தி வாய்ந்தது. பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைத்திருங்கள் என்று அறிவுறுத்தினார். அப்போது திருடர் தொல்லை அதிகம் இருந்ததால் அவர்களால் சிலை சேதப்படமல் இருக்க, சீடர்கள் முழு முயற்சி எடுத்து அதை பாதுகாத்தனர். அதைத் தொடர்ந்து பாதுகாப்பதில் சிரமும் இருந்தது. அந்த சிலையை வைத்திருந்த இடத்தில் மழைநீர் வழிந்து, கூரையிலிருந்து ஒழிகி களிமண் கரைந்து விடவே அச்சிலை பொற்சிலையாக காட்சி தந்தது. மண்சிலை பொன்னாகவே தங்கள் குருவிடம் சென்று விபரத்தை கூறினார்கள். உண்மையில் அது பொன் சிலைதான், திருடர்களிடமிருந்து காப்பாற்றவே அதற்குமேல் களிமண் பூசிவைத்தேன் என்றார்.
வெளியே உள்ளமண் கரைய உள்ளே உள்ள பொன் தெரிந்தது, மனித உயிரின் உடல்களும் களிமண் சிலைபோலவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் உள்ளே உள்ள அவர்களின் பொன்ஆன்மாவை அடையாளம் தெரியாமல் வாழ்வில் பயணித்து கொண்டிருக்கின்றனர்
பயம், ஆசை, பேராசை, கோபம், ஆணவம், கர்வம், பொறாமை இவைகளிலிருந்து விடுபட்டால் வெளிச்சம் உள்ளே வரும், அப்போது உள்ளே இருக்கும் உண்மைகள் புரியும். அது ஆன்மீக உணர்வுகளினால்தான் தோன்றும் என்றார்.
எந்தவித அசைவும் இன்றி வெறுமனே இருக்கும் மரக்குச்சியை தண்டம், என்பதால் அதேபோன்ற நிலையில்உள்ள ஓர் ஆன்மாவின் உடலை நாம் தண்டச்சோறு என்கின்றோம். ஆனால் கரியாகி மண்ணில் மறைந்த அந்த தண்டம்கூட ஓர்நாள் வைரமாகி ஒளிர்கிறது.
ஆன்மாக்களே! இப்போது உலக்கை தண்டமாக ‘முசலகிசலயம்’ ஆக பலரால் நினைக்கப்பட்ட நீங்களும் என்றாவது ஓர்நாள் மனிதர்களுள் மாணிக்கமாக பிராகாசிக்க அறிவு அருள் பெற விழையுங்கள். வெற்றி பெற்று ஒளிர்விடுங்கள். உள்ளே இருக்கும் இருளில் ஒளியை கண்டு ஆனந்தப்படுங்கள்.
நம் ஆன்மாவின் நல்ல உணர்வுகொண்ட செயல்களை ஆங்கே நாம் காணமுடியும். இதைத்தான் ஞானிகளும், புராணங்களும் “உனக்கு உள்ளே கட, உன்னை உன் மனதின் உள்ளே கடந்து செல்” என்றார்கள். அப்போது தெரிவான் உள்ளே உள்ள “கடவுள்”. அதாவது ‘உள்ளே கட, கட உள்ளே’ என்றநிலையில் கடவுளின் தரிசனம் காணமுடியும். நீ பந்த பாசங்களையெல்லாம் கட, உனக்குள்ளே கடவுள் இருப்பார் என்பது பொருள்.
சூரிய ஒளியின் மூலம் பகலிலும், சந்திர ஒளியினால் இரவிலும், மற்றும் செயற்கை ஒளியினாலும் எந்நேரமும் பொருட்களைப் பார்த்து அறிந்து கொள்ளமுடிகின்றது, எந்த ஒளியில்லா நிலையிலும், மனதில் பொருட்களை பார்த்து பழகிய அளவில், கற்பனை செய்து கண்டு கொள்கின்றோம்.
அதுபோன்றே நம் உணர்வு, மன எண்ணங்கள் கொண்டு நமக்குள்ளே கடவுளைத் தேடினால் காணமுடியும். எதைத் தேடுகிறாயோ அது உன்னுள்ளேயே இருக்கின்றது.
கடவுள் உன் வாழ்க்கைப் பயணத்தில் உனக்குத் தெரியாமலே உன்னுடன் பயணம் செய்யும் அனுபவசாலி. வாழ்க்கையின் ரகசியங்களை நீ உணர்ந்து புரிந்து கொள்ள உதவுபவர். அவரை நாடுவதால் உனக்கு அமைதி, நிம்மதி, சந்தோஷம், இன்பம் எல்லாம் கிடைக்கும்போது அது உனக்கு நன்மை என்பதால் அவரை நீ வணங்குவதில் எந்த தவறுமில்லை. நீ வணங்குவதாலும், வணங்காததாலும் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.  
“அகம் ப்ரம்மாஸ்மி ”  என்றால் இதயத்தின் நடுவே வாசம் செய்பவன் என உபநிடதங்கள் கூறுகின்றன. இறைவன் அங்கே கட்டைவிரல்/ அங்குள அளவில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
அப்படியென்றால் நாம் கடந்து உள்ளே சென்றால் நிச்சயம் அங்குலபிரமான இறைவனைக் காணமுடியும். அளவிடமுடியாத பிரமாண்டமானவன் உலக நன்மைக்காக ஒவ்வொரு உடலிலும் இந்த அளவிற்கு வெளிப்படுகின்றான்.
ஹிருதி (இதயம்)+ அயம் (பரமன்)- ஹிருதயம். அதனால் தான் பரமன் இருக்குமிடம் “இருதயம்” என்பர். இதை புரிந்து செயல் படுதல் நன்று. அதனால் தான் சித்தர்களும், முனிவர்களும் தங்கள் உடலைக் கடந்து மனதுள் பிரவேசித்து, அதாவது கடந்து உள்ளே சென்று, அங்குல பிரமானமுள்ள இறைவனை கண்டு தரிசித்து பூஜித்தும் விடுகின்றனர்
உலகில் உள்ள ஜீவராசிகள், தாவரங்கள் அனைத்தும் ஓர் அளவுகோளுக்கு உட்பட்டே படைக்கப் பட்டிருக்கும்போது இவை அனைத்தையும் படைத்த இறைவன் எந்த அளவு கோளின் அளவுகளுக்கும் எட்டாமல், அகப்படாமல் இருப்பதன் அளவு என்ன?
உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றான். “விஸ்வவியாபி” என்று அதனைக் கூறுவர். அனைத்திலுமுள்ள ஒருவன் நம்முள்ளும் இருப்பது சரிதானே! அதை நாம் உணரவேண்டும்.
‘மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னிடம் பிரம்படி பட்ட’ நிகழ்வு அறிவோம். சிவனின்மீது பட்ட அடி எல்லோர் முதுகிலும் பட்டதென்றால் இந்த நிகழ்வின் உண்மை என்னவெனில், அடித்தவனும், அடிபட்டவனும், உயிர்குலமெல்லாமும் சிவனின் அம்சம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவே.
கண்களைமூடி கருவரையை-கழுத்து என்றும், விமானம்-சிகரம்-தலை என்றும், கலசம்-சிகை என்றும் நினைத்துப் பாருங்கள். கோவில் கர்பகிரகமே ஒர் இறை உருவமாகக் காணப்படும். அதனால்தான் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கப் படாவிடினும், கருவரைக்கு மேல் விமானச் சிகரம், கலசம் வைத்து கட்டுகின்றனர்.
ஆகமவிதிப்படி கட்டப்பட்ட ஆலயத்தில், மனித உடம்பின் பாதங்கள்- ராஜகோபுரம், முழங்கால்- ஆஸ்தான மண்டபம், துடை-நிருத்த மண்டபம், தொப்புள்- பலிபீடம், மார்பு- மகாமண்டபம், கழுத்து- அர்த்த மண்டபம், சிரம்-கர்பக்கிருகம், சிரத்தின் உச்சி-விமானம். என்ற அமைப்பில் கட்டப்படுகின்றது.
திருப்பாதம்- பூவுலகம் என்றும், சிகை-பிரம்மலோகம் மற்றுமுள்ள புவர்லோகம், ஸுவர்லோகம், ஜனோலோகம், தபோலோகம், மஹாலோகம் ஆகிய 7 உலகங்களும் இறைவனின் உடலில் அடங்கிய பகுதிகளாகும். எனவே கோவிலை வலம் வருவது என்பது வெறும் வழிபாடு மட்டுமின்றி ஏழு உலகங்களையும் வலம் வருவதற்குச் சமமானது என்றால் இந்த செயல் எவ்வளவு புனிதமானது. ஆகவே இறைவழிபாட்டிற்குப்பின் வலம் வரவேண்டும்.
அந்தராலம், அந்தர்மண்டலம்: “அந்தராலம்” என்பது இறைவனின் கழுத்துப்பகுதி. இந்தப்பகுதியில் வலம் வரக்கூடாது. “அந்தர்மண்டலம்” என்பது கழுத்திற்கு அடுத்த பகுதி. இது தான் நாம் வலம் வரவேண்டிய பகுதி. ஏனெனில் படுத்துக் கொண்டு கழுத்தில் கைவைத்தால் நம் மூச்சுக்காற்று கைமேல் படுவதில்லை. கையை சிறிது நகர்த்தி நெஞ்சின் மீது வைத்தால் மூச்சுக் காற்று படுவதை உணரலாம்.
இதைப்போலவே கழுத்துப் பகுதியான ‘அந்தராலத்தில்’ அதிர்வலைகள் இருக்காது. கழுத்தை அடுத்துள்ள ‘அந்தர்மண்டலத்தில்’ இறை அதிர்வுகள் அதிகமாக கிடைக்கும்.
நாம் எவ்வளவு பெரியமலை, ஆறு, கடல், என பெரியவைகளையெல்லாம் பார்த்து மகிழ்ந்து பெரியது என அளவிடுகிறோம். இவ்வளவு சிறிய கண்ணால் அவ்வளவு பெரிய நிலைகளை கண்டு அளவிட முடியும்போது, சிறிய மனத்தில் ஏன் மிகப்பெரிய இறைவனை இருத்தமுடியாது. காணமுடியாது. கண்டிப்பாக முடியும். ஒருமுனைப்புடன் நினைவு கொண்டால் நம் இதயத்தில் இறை குடியிருக்கும். அதை உணரமுடியும்.
தோண்டிய குழியிலிருந்து எடுத்த மண்ணை மீண்டும் குழியினுள் நிரப்பினால், 1.முழுவதும் குழி நிரம்பினால் அது உத்தமமான இடம், 2. மண் உபரியாக இருந்தால் மத்தியமான இடம், 3.மண் பற்றாமல் போனால் அதமமான இடம். என நிலத்தின் தன்மைக்கு அளவு கோல் உள்ளது. அதுபோல மனம் உத்தமமானதாக இருக்க வேண்டும்.
மனதில் கெட்ட, தீய, வேண்டாத எண்ணங்களை எடுத்து, அழித்துவிட்டு நல்ல உயர்வான மனதின் தன்மை கெடாமல், எப்போதும் நல்ல எண்ணங்களை இட்டு நிரப்புங்கள். நல்ல செயல்களைச் செய்ய விழையும் நல்ல மனமாக இருக்கட்டும். அந்த உத்தமமான இடத்தின் இருளை நீக்கி ஒளியை பரப்புங்கள்.
உள்ளே கடந்து செல்லுங்கள். ‘கட உள்ளே’ என்று சென்று கடவுளைக் கானுங்கள். அந்த உத்தமமான நல்ல உள்ளத்தை உருவாக்க எளிமையான சிந்தனைகளை மேற்கொள்ளுங்கள். உன்னுள்ளேயும் கடவுள் இருப்பதனால்தான் கடவுளுக்கு படைத்து நெய் வேத்தியம் செய்தவைகளை மனிதனை உட்கொள்ள வைத்துள்ளார்கள்.
ஒருவரால் வாடிய பயிருக்காக வாடவும், வற்றிய வயிற்றுக்காக வருந்தவும் முடியுமானால் அவரால் உள்ளே இருக்கும் இறையை உணரமுடியும். புல்லில், பூவில், நீரில், நெருப்பில், பறவையில், மற்ற உயிரினங்களில் உள்ள ஆன்மாக்களை உணரத் தொடங்கினால் நீ இறையை நோக்கி பயணம் செய்கின்றாய் என்று அர்த்தம்.
அப்படி உள்ளே கடந்து கடவுளைக் கண்டால் அந்த நல்ல உள்ளத்தின் அதிர்வுகள் உங்களைச் சுற்றியிருக்கும். உங்களால் அதை உணரமுடியும். ஏன் உங்களைச் சுற்றியுள்ள அனைவராலும் அது உணரப்படும். உங்கள் சொல், வார்த்தைகள் அவர்களை மெய்மறக்கச் செய்யக்கூடும்.
இந்த அதிர்வுகளை கரு குடிகொண்டுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலும் உணரலாம். இயற்கையோடு நாம் ஒன்றியிருந்தால் அதை எப்போதும் உணரலாம். நம் முன்னோர்கள் கிரகங்களை ஆரய்ந்து கணக்கிட்டு பல அரிய, பெரிய விஷயங்களைச் சொல்லி இருக்கின்றார்கள். விஞ்ஞான உலகத்தின் பல ஆரம்ப நிலை செயல்கள் பண்டைக் காலத்தில் முன்னோர்களால் தெரிவிக்கப்பட்டவை.
இது எப்படி சாத்தியமாயிற்று? அவர்கள் இயற்கையை மதித்தார்கள். வணங்கினார்கள். அதனோடு ஒன்றிப் போனார்கள். உண்மைதனை உணர்ந்தார்கள். நினைத்தபோது அதை உபயோகித்தார்கள். உலகுக்கு உபதேசித்தார்கள். அதன் பயன்களை இன்றும் நாம் அனுபவிக்கின்றோம். எனவே இயற்கையை மதித்து வழிபட்டு, ஒன்றி உணருங்கள், நீங்களும் உன்மைகளை உணரலாம்.
நதி தன்னிடமுள்ள நீரை அருந்துவதில்லை. ஓர் மரம் தன்னிடம் உற்பத்தியான பழங்களை உண்ணுவதில்லை. ஓர் செடி, கொடி தன்னிடம் பூத்த மலர்களை ரசிப்பதோ, நுகர்வதோ இல்லையே! பூ, கனி தரு மரம், செடிகள் எல்லாம் பிற உயிர்களுக்குப் பயன்படுகின்றன.
அவைகள் அப்படியே மற்ற ஜீவராசிகளுக்கு அளிப்பதுபோல மகாத்மாக்களும், சாதுக்களும் மற்ற ஆன்மாக்களுக்கு உதவுவதற்காக வாழும் உயர் ஆன்மாக்கள். அவர்களைவிட அவர்களின் போதனைகள், பாதைகள், வழிகாட்டுதல்கள் முக்கியமானவை.
அந்த ஊரில் அவரே பெரிய செல்வந்தர். தனவான். அவர் ஒருநாள் ஒரு ஞானியைச் சந்தித்தார். சுவாமி, என்னைக் காப்பாற்றும்படியான ஒரு உபதேசம் கூறுங்கள் எனக் கேட்டுப் பெற்றார். அவர் சொன்னது, ‘எதைச் செய்தாலும் அதன் விளைவுகளை ஒருமுறைக்கு மூன்றுமுறை தீர ஆலோசித்து, உன் மனசாட்சிக்கு சரி என்று தோன்றினால் மட்டும் அதைச் செயல்படுத்து’ என்பதாகும். செல்வந்தருக்கு அந்த வாக்கியம் மிகவும் பிடித்திருந்தது. அதை அவர் தன் படுக்கை அறையில் எழுதிவைத்தார்.
அந்த ஞானியின் தர்மசெலவினங்களுக்கு சில லட்சங்களை நிதியாக அளித்தார். செல்வந்தர் இப்படி செலவு செய்வது அவசியமில்லை, பணத்தை விரையம் செய்கிறார் என அவரின் சொத்துக்குக்கு வாரிசுகளில் ஒருவர் நினைத்தார். தன் பங்கில் பணம் குறைகிறதே என்ற வருத்தம் அவரை ஓர் தீச்செயல் செய்ய தூண்டியது. சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து காத்திருந்தார்.
அப்போது செல்வந்தர் நோய்வாய்ப்பட்டார். நோய் குணமாகாததால் அடிக்கடி வைத்தியரை மாற்றினர். ஒரு வைத்தியர் செல்வந்தருக்கு மருந்து கொடுக்கும்போது சுற்றும் முற்றும் பார்த்து இடுப்பில் மறைவாக வைத்திருந்த குப்பியை எடுத்து கலக்கினார். செல்வந்தருக்கு கொடுக்க நினைக்கும்போது அவர் அறையில் எழுதப்பட்ட வாசகத்தைப் படித்தார்.
அதைப் படித்ததும் தன்னை யாரோ கவனிக்கின்றார்கள் என்ற பயம் வந்தது. தன் செயல் பாட்டின் விளைவுகளை யோசிக்காமல் செய்து விட்டோமோ என்ற நினைவு வந்தது. மனசாட்சிப்படி ஒரு வைத்தியர் இப்படி செய்வது சரியில்லை என்ற நினைவும் சேர பதட்டத்துடன் சென்று முன் தான் கலந்து வைத்திருந்த மருந்தை எடுத்துக் கொட்டிவிட்டு, வேறு மருந்தைச் செல்வந்தரிடம் கொடுத்தார்.
இவர் செயல்களைக் கவனித்த செல்வந்தர், எதையோ கலந்து பின் அதை கொட்டி விட்டு வேறுமருந்தை கொடுக்கின்றீர்கள் என்றார். பதறிய வைத்தியர் உண்மையை உலறி விட்டார். செல்வந்தரின் உறவினர் ஒருவரின் பேச்சைக் கேட்டு தான் தவறு செய்ததாகவும், நீங்கள் எழுதிவைத்திருந்த இந்த உபதேசம்தான் என்னை திருத்தியது என்றும், தன்னை மன்னிக்கும் படியும் கூறினார்.
உறவினர் தண்டிக்கப்பட்டார். மகான்களின் உபதேசங்கள் வெறும் வார்த்தைகளல்ல. அந்த சொற்களின் அர்த்தங்களை உணரத் தொடங்கிய உயிர்களுக்கு உலக வாழ்வு ஆனந்தம்.
மனிதன் மட்டும்தான் தனக்கு என்றும் தன் இனத்திற்கு என நினைத்துச் செயல் படுகின்றான். படைப்பின் தன்மை, சில உயிர்கள்வாழ மண்ணில் பல உற்பத்தி செயல்கள் நடைபெறுகிறது. நீ சேமிக்கும் பலாபலன்கள் உனக்கு நன்மையாகின்றதோ அல்லது தீமையாகின்றதோ! கண்டிப்பாய் உன் வாரிசுகளுக்கு அதன் பலன் உண்டு.
நீ சேர்க்கும் செல்வங்கள் எவ்வாறு அவர்களுக்கு பாத்தியதையாகின்றதோ அதுபோன்றே உன் செயல்களின் நன்மை, தீமைகளிலும் பாத்தியதை உண்டு. இதைப்புரிந்து கொள்ளுங்கள். தீயவழி சென்று தீமைகள் புரிந்து செல்வங்களைச் சேர்த்து நீங்கள் அனுபவித்தும் அனுபவிக்காமலும் சென்று உங்கள் குலவாரிசுகளுக்கு ஏன் தீமைகளை விட்டுச் செல்லவேண்டும். சற்று நிதானமுடன் சிந்தியுங்கள். உங்கள் செயலில் மாற்றம் ஏற்படும்.  
ஒரு ரிஷியின் மகள் மணப்பருவம் அடைந்தாள். வேதநெறியிலும், ஒழுக்கத்திலும் சிறந்த ஒருவனை மணமுடிக்க ரிஷி விரும்பினார். ஆனால் அவள் தனக்கு வரும் மாப்பிள்ளை, ‘குருடும், குருடு இல்லாதவருமான’ ஒருவரை மணக்க விருப்பம் தெரிவித்தாள். ஒரே நேரத்தில் குருடாகவும், குருடற்றவனாகவும் எப்படி ஒருவன் இருக்க முடியும், அவனை எப்படி தேடுவது. எப்போது மகளுக்கு திருமணம் என கவலை கொண்டார் ரிஷி. காலம் கடந்தது.
ஒருநாள் வேறு ரிஷியின் மகன் ஒருவன் முறைப்படி வந்து பெண் கேட்டான். அவனிடம், மகளின் குருடும், குருடற்ற மணமகனையே மணக்க விருப்புவதாகக் கூறிய நிபந்தனைகளைக் கூறினார்.  அவன் அந்தப் பெண்ணிடம் சென்று, எந்தக் கண்ணால் மனம் நினைக்கின்றதோ, புத்தி உண்மையை அறிகிறதோ, உலகம் ஞானம் எனச் சொல்லுகின்ற அந்த ஞானக்கண் எனக்கு இல்லை. அது ஒருவகைக் குருடே!
தினமும் நான் செய்யவேண்டிய கடமைகளைச் செய்கிறேன். காரியமான இயற்கையான பிரபஞ்சத்தையும், காரணகர்த்தாவாகிய பரம்பொருளை நெஞ்சில் நிறுத்தி செயல்படுவதால் என் செயல்களில் கடவுளைக் காண்பதால் நான் குருடு அல்லாதவனாகவும் இருக்கின்றேன், என்றதைக்கேட்ட அந்த பெண் அவனை கணவராக ஏற்க சம்மதித்தாள். இறக்கும் தருவாயில் பீஷ்மர், தருமருக்கு சொல்லிய அறம். அதுபோலவே நம்மில் ஒவ்வொருவரும் குருடாகவும், குருடற்றவருமாக இருத்தல் சிறப்பு-குருஸ்ரீ பகோரா

5-4.பண்பு!

Written by

பண்பு!                                                                                                                            

பண்பு எல்லா உயிருக்கும் ஆன்மாவிற்கும் இன்றியமையாத ஒன்று. பிறர் மனம் நோகாமல் சொற்களை கையாள்வது ஓர் பண்பு! செயல்படுவது ஓர் பண்பு!
திருமணம் என்றபின் பெண்களுக்கு தாய்மை என்ற உயர்வு வேண்டியதாயிருக்கின்றது. உண்மையில் தாய்மை உயர்வு ஓர் பெண்ணுக்கு இல்லை என்றாலும் தாய்மை உணர்வு கொள்ளுதல் அவசியம். அதுதான் மற்ற உயிர்களிடம் நேசம் கொள்ளச் செய்யும். அதுவே அன்பின் சிகரம். சிறந்த பண்புகளையும் காணமுடியும்.
தாய்மையடையாமல் சில ஆண்டுகள் கழிந்தால், ஒரு பெண் எவ்வளவு பேச்சுக்கும், ஏச்சுகளுக்கும், கேலிகளுக்கும் ஆளாகி விடுகின்றார் என்பதை நாம் நடைமுறையில் காண்கின்றோம். இந்த பேச்சுக்களும். கேலிகளும் அதே பெண் இனத்திலிருந்துதான் வருகின்றது. இது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
ஒருவர் மனதை அறிந்தும், அறியாமலும் பல சொற்களால் காயப்படுத்தி விடுகின்றோம். அந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லையென்றால் என்ன! அது அவர்கள் பிரச்சனை! அவர்கள் கர்மவினைப்பலன்! என்ற நிலையில் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
வாழ்வில்  சந்தோஷம்காண மழலையும் ஓர் வழிதானே ஒழிய அது ஒன்றே அன்று. தாய் தந்தையரற்ற குழந்தைகள் மழலைக் காப்பகத்தில் நிறைந்துள்ளன. அவர்களுக்கு இவர்கள் உதவலாம். ஏன் நல்ல பண்பு இருந்கும் அனைவருமே உதவலாம்.
எந்த வழியிலாவது நிம்மதியாக சந்தோஷமாக ஜீவன் நடத்தி ஆனந்தம் அடையவேண்டும் என்பதே ஆன்மாவின் குறிக்கோள். இதைப் புரிந்து கொள்ளாமல் ஒருவரின் குறைகளையும், குற்றங்களையும் அவரைச் சுற்றியுள்ளவர்களிடம் வஞ்சகமான சொற்களால் மிகைப்படுத்திக் கூறி அதன் மூலம் ஒருவரின் மனதைப் புண்படுத்துதல் நல்ல பண்புள்ள செயலாகாது.
அவ்வாறு சுட்டிக்காட்டுவதால் அவரின் மனம் இறுகி, அதன் தாக்கத்தில் அவர் வேறு தவறு செய்ய ஏதுவாகும். அது அவர்கள் வாழ்வில் வசந்தத்தை வரவழைக்காது. துயரத்தைதான் தொடர்ந்து கொடுக்கும். இது நல்ல பண்பாளருக்கு அழகல்ல! மேலும் உங்கள் கர்மத்தில் தீயபலன்களைச் சேர்த்து கொள்கின்றீர்கள்
எல்லோரும் சந்தோஷத்துடன் வாழ, குறையுள்ளவரின் குறைகளை அவர் மனம் வருத்தப்படும்படியாக சுட்டிக் காட்டாமல் இருக்கப் பழகவேண்டும். அவர்கள் சந்தோஷமாக இருக்க ஆலோசனை அறிவுரை என்ற பெயரில் அவர்கள் குறை சம்பந்தப்பட்ட பேச்சுக்களையே பேசுதலைத் தவிர்க்க வேண்டும்.
அது சம்பந்தமான பொது விஷயங்கள் நடந்தாலும் பேச்சின் தன்மை உணர்ந்து, பேச்சின் போக்கை மாற்றிக் கொள்வதே சிறந்த பண்பு. அரக்கியின் மூக்கை அறுத்ததால் அவள் அலற அந்த சத்தம் கேட்ட ராமர், லட்சுமணா அரக்கியைக் கொன்று விட்டாயா? எனக் கேட்கிறார். “பெண்ணைக் கொல்வேனா?” எனச் சொல்லலாம் என லட்சுமணன் முற்பட்டபோது, அண்ணன் தடாகையை கொன்றது ஞபகம் வரவே, அப்படிச் சொன்னால் அது அண்ணணின் செயலை சுட்டிக்காட்டுவதுபோல் இருக்கும் என நினைத்து, “அலறினாள், விட்டுவிட்டேன்” எனக்கூறியதாக இராமயணம் கூறுகின்றது. எவ்வளவு உயர்ந்த பண்பு!
ராமன்மீது இலக்குவன் மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் கொண்டவராததால், தான் சொல்லும் சொற்கள் தன் அண்ணனைக் காயப்படுத்தக்கூடாது என ஒருகணம் சிந்தித்து சொற்களைக் கூறுகின்றான்.
இந்த எண்ணம் நமக்கும் வேண்டும். மனம் நோகும் கடுஞ்ச் சொற்களை விட்டு இதமான சொற்களைச் சொல்லப் பழகவேண்டும். அதற்கு நாம் அவர்களிடம் நேசமான அன்பு கொண்டிருக்க வேண்டும். எனவே அன்புதான் சிறந்த பண்பைத் தரும். அன்புதான் பிறர் மனதை புண்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தின் மூலம் பண்பை நாம் கொண்டிருக்க உதவுகின்றது. ஒருவரின் குறை, குற்றங்களை சொல்லுமுன் அவர்மீது அன்பு கொள்ளுங்கள். அவர் செய்த அன்புச் செயல்களை நினைவு கூர்ந்து நீங்கள் செயல் பட்டால், உங்களால் அவரின் குறைகள் குறைந்து அவரின் அன்பு மிகுதியாக தெரியும்.
அன்பு உலகம்! ஆனந்த உலகம்! பண்புகூடிய உலகம்! சந்தோஷம் நிறைந்த உலகமாகும்! அன்பு, கருணை, இரக்கம், சாந்தம், அடக்கம் இவைகள் மனிதகுலத்தின் நலனுக்கு ஏற்ற நற்பண்புகள். நம் ஆன்மாவின் எண்ணத்தில் செயலில் இவைகள் இடம் பெறவேண்டும்.
‘எங்கெல்லாம் தர்மமும் நற்பண்புகளும் நிலவுகிறதோ அங்கே வெற்றி கிடைக்கும்’ என்கின்றனர் அருள் நிறைந்தோர். எல்லா உயிர்களிடத்தும் அன்புடனிருத்தல், குறைகளையும், தவறுகளையும் கண்டு உணர்ச்சி வயப்படாமல் கருணைகொள்ளல், எந்தசூழல் அவர்களை இவ்வாறு செய்ய வைத்தது என இரக்கம் காண்பித்தல், எந்த நிலையிலும் அடக்கம் காத்து நின்றல், எப்போதும் பணிவுடன் இருத்தல் ஆகிய பண்புகள் மனிதனின் நிலையை மேம்படுத்தும்.
மற்றவரது உணர்வுகளையும், மனோ நிலையையும் எந்த அளவுக்கு உணர்ந்து செயல்படுகிறோமோ அந்த அளவுக்கு நாம் பண்பு உடையவர்களாகிறோம். அந்த புரிந்துணர்வு பண்பாட்டில் நாம் பூரணத்துவம் அடைய உதவும்.
பொறுத்தார் பூமி யாழ்வார், பொறுமை கடலினினும் பெறிது என்பன வழக்கிலிருக்கும் வார்த்தைகள். பொறுமை என்பது ஒரு சிறந்த பண்பாகும். பூமி எல்லாவற்றையும் தாங்குவதுபோல தன்னை இகழ்ந்து பேசுதலையும் பொறுத்துக் கொள்வது தலையாய பண்பாகும். பிறர் செய்த தீங்கை பொறுத்தல் சிறப்பு.
நான், எனக்கு: நாம் எல்லோரும் நான், எனக்கு என்று அதிகமாக ஆட்படுகின்றோம். நம் செயல்களில் நான், எனக்கு என்ற எண்ணம் நிரம்பி வழிகின்றது. ஒர் செயல் வெற்றிபெற நம்மால் இது முடியும் என்ற எண்ணம் வேண்டும். முடியும் என்ற மன உறுதிவேண்டும். வெற்றி பெற்றால் மகிழ்வு கொள்ளலாம். அகந்தை கொள்ளக்கூடாது.
நான், எனக்கு என்ற எண்ணமுடையவர்கள் ஆடம்பரப் பிரியர்கள். தங்களிடம் உள்ளதை வெளியில் கூறி பெருமை கொள்வார்கள். நான் என்பது அகந்தை மிகக் கொண்டது. அங்கே அன்பு இருக்காது. உண்மை நிலவாது. “நான்” “எனது” என்னும் உணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்கும் தன்மைகொண்டது.
அது உங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தும் எண்ணத்தை தோற்றுவிக்கக் கூடியது. நான் என்று உச்சரிக்கும்போது நீங்கள் அனைவரையும் விட்டு விலகிச் செல்கின்றீர்கள். அது ஆணவத்தின் ஆரம்பம். ஆணவம் கொள்பவர் யாராயிருந்தாலும் அவனியில் தனித்திருந்து தவிக்கநேரிடும் சூழலில் இருப்பர்.
நான் இல்லை என்றால் இது நடக்காது, என்ற எண்ணம், ஓர் மமதையை, ஓர் மயக்கத்தில் ஆழ்த்தும் எண்ணமாகும். இதைத் தவிர்த்தல் உங்கள் முன்னேற்றத்திற்கு நன்மை பயக்கும். பெரியவரோ, சிறியவரோ ஓரு செய்தியை, நிகழ்வை சொல்கிறார் என்றால், அவர் கூறிமுடியும் வரை அமைதியாக கேட்டுக் கொள்ளுங்கள்.
எனக்குத் தெரியும் என்ற நினைவில் இடையில் ஏதாவது கூறி அவரின் பேச்சை தடை செய்யாதீர்கள். தெரிந்த நிகழ்வாயிருந்தால் முடிவில் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். அவர் மனம் நோகாமல் இதமாகக் கூறுங்கள். உங்களுக்கு தெரியாத விஷயமாக இருந்தாலும் முடிவில் சந்தேகங்களை கூறி விளக்கம் பெறுங்கள்.
இது உங்களுக்கும் அவருக்குமிடையில் நல்ல சுமூகமான உறவை ஏற்படுத்தும், மேம்படுத்தும். உங்கள் செயல் உங்கள் பண்பின் தன்மைதனை உயர்த்தும். இந்த பண்பு பலவகையில் உங்கள் வாழ்வை வளப்படுத்தும். சந்தோஷிக்க வைக்கும்.
இந்த உலகை திருத்த முயலாதீர். முதலில் நீங்கள் திருந்துங்கள். நாம் நடக்கும் பாதை கரடுமுரடானது என்றால் நம் வசதியால் அந்த பாதையை சீர் செய்ய நினைப்பதைவிட முதலில் நம் கால்களுக்கு பாதுகாப்பு செய்வதே சிறப்பு. பாதைக்கு தோலிடுவதைவிட பாதத்திற்கு தோலிட்டுக்கொள். வாழ்வதற்கு ஏற்ற உலகமாக மாற்ற முதலில் நாம் நம்மை மாற்றிக் கொள்ள வெண்டும். அதிகமான கர்வம் உடைய நாம் என்ற நினைவு நம்மை நம் திறமையை அழித்துக் கொன்றுவிடும்.
பீமனின் வலிமையினால் ஏற்பட்ட கர்வத்தை, அனுமன் போக்கியதாக புராணங்களில் அறிகிறோம். இந்தக்கர்வம் ஓர் மத மதப்பானது. இந்த மதம் ஒருவருக்கு வேண்டாத ஒன்று என இந்துமதம் சாஸ்திரங்கள், புராணங்கள் வாயிலாக அறிவுறுத்துகின்றன.
ஒருவனுக்கு நிறைய வசதிகள் இருக்கலாம். பசி எடுத்தபோது உண்ணாமலிருக்கப் பழக வேண்டும். அது நம்மைச்சுற்றி இயங்கும் இயக்கத்தில் இயங்காமை ஆகி, யோகத்தன்மை கிட்டும். பதவி வரும்போது அதைத்தூக்கி எறியும் எண்ணங்களின் தைரியம் வேண்டும். நமது எண்ணங்களை அடக்க முடியும் என்பதே யோகமாகும்.
எனக்கு வேண்டும் என எதற்கும் அலைந்து திரிதல் கூடாது. நம்மைவிடத் தாழ்ந்தவர்கள், அவர்களை உயர்வாக கருதும்போது அது தெரிந்து சிரித்து ஒதுங்குவது உயர்ந்தவர்களுக்கு யோகமாகும். ஒர் செயலை பார்த்தவுடன் மோசம், சரியில்லை, தீங்கானது என கண்டுகொள்கிறவனே யோகி.
எந்தச் செயல்களுக்கான எண்ணங்களாயிருந்தாலும் அதன் முடிவில் நான் என்ன ஆவேன்! எனக்கு என்ன பலன்! என்று நினையாமல் முழுத் திறமையுடன் செயல்பட்டால், ஆதாயம் இன்றி வாழ்க்கையின் நோக்கம் அமைந்தால் உங்கள் செயல்களின் முடிவில் நீங்கள் பெருமைக்கு உரியவராகிவிடுவீர்!
காந்தியடிகள் தனக்கு பெருமை சேரும் என நினைத்து எதையும் செய்யவில்லை. பொது நலன்கருதி அவர் போரட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றார். பெருமை அடைந்தார். உங்களைச் சுற்றியுள்ள சூழலை கவனித்தால் உங்களால் என்ன செய்யமுடியும் என்பதை உணர்வீர்.
உங்கள்முன் உங்களால் செய்யக்கூடிய ஆயிரம் விஷயங்கள் தெரியவரும். அவைகளில் கவனம் செலுத்தி செயல்படத் தொடங்கினால் நீங்கள் பிரகாசிப்பீர்கள்! ஓர்நாள் வீட்டளவில், பிரிதொருநாள் ஊரளவில், மற்றொருநாள் உலகலவில் என்று உயர்வடைவீர்!
தெளிவுடன் யோசித்தால் ஓர் ஆன்மா கர்வம் அடைய எதுவுமே இல்லை என்பது புரியும். உலகத்தில் உன்னைக்கேட்டு எதுவும் நடக்கவில்லை. நடக்கும் நிகழ்வுகளில் நீ பங்கு கொள்கிறாய். நீ கலந்து கொள்ளாவிடினும் நடப்பது நிச்சயம் நடக்கும். இதில் நீ, நான், எனக்கு என்பதெல்லாம் ஒன்றுமில்லை. ஆம் ஒன்றுமேயில்லை.
எல்லோரையும் விட தானே உயர்ந்தவன் என எப்போதும் நினைவுகளை கொண்டிருந்த மாணவன் ஒரு நாள் தன் ஆசிரியரைப் பார்க்க சென்றான். அவன் வந்தது அறிந்தும் கவனியாததுபோல் மேஜைமேல் சில மனித மண்டை ஒடுகளை வைத்து அவைகளை தீவிரமாக ஆரய்ந்து கொண்டிருந்தார். நீண்ட நேரம் ஆனதால் எரிச்சலுற்ற மாணவன் ஐயா நான் வந்துள்ளேன். பார்த்தும் பார்க்காதுபோல் இருக்கின்றீர்களே என வருந்தினான்.
அதற்கு ஆசிரியர், அன்பனே இங்கிருக்கும் மண்டை ஓடுகள் எல்லாம் அவர்கள் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர்களுடையது. இதில் உனது தந்தையுடையது எது என்று தேடிக் கொண்டிருக்கின்றேன் என்றார்.
மாணவனுக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது. தான் இன்று எப்படியிருந்தாலும் ஒருநாள் இதைப் போன்றே யார் என அறியா நிலை ஏற்படும் எனத் தெளிந்தான். அவனின் தான் என்ற செருக்கு, ஆணவம் ஒழிந்தது.
ஆத்மாக்களே இவ்வுலகில் எதுவும் உங்களுடையதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுவே ஆனந்த பயனத்தின் முதல்படி.
‘என்னுடையது’ என்ற நினைவுகள் இருக்கும்வரை எதையும் விட்டுக் கொடுக்க நீங்கள் விரும்பவில்லை என்றாகும். அப்படி எதுவும்  என்னுடையது அல்ல, இயற்கையிலிருந்து, இறைவனிடமிருந்து பெறப்பட்டது என்ற பக்குவம் வரும்போது, உங்களிடம் இருப்பது எல்லாம் பொதுவாகிப் போனதால், விட்டுக்கொடுக்க உங்களிடம் ஏதும் இருக்காது. மனம் தெளிவாக குழப்பமின்றி அமைதியாக எதையும் எதிர் நோக்கும்.
கீதா உபதேசத்தைவிட சிறப்பு என்னவெனில், தேரில் அமர்ந்து பவனிவர எல்லோருக்கும் நன்றாயிருக்கும், ஆனால் பாரத போரின் செயல் கர்மங்களை நிகழவைக்க அருளாளன் கண்ணபிரான் எல்லாம் விட்டு எளிமையாக, அமைதியாக தேரோட்டியாக அமர்ந்து கொண்ட பணிவு என்ற பண்பு நம் அனைவருக்கும் வேண்டும். அந்த பணிவு கொண்டதனால் அவர் எப்படி பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்தார் எனப்புராணம் வாயிலாக அறியலாம்-குருஸ்ரீ பகோரா.

5-3.அழிவு!

Written by

அழிவு!                                                                                                                        

அழிவு என்பது இயற்கையின் இயற்கையான நியதி. எனவே நாம் எதையும் அழித்தல் கூடாது. அந்த உரிமையும் நமக்கு வழங்கப்படவில்லை.
தேவியின் மூலமந்திரத்தில் அழிவை குறிக்கும் கணக்குக்கு சிறிதும் இடமில்லை எனக்கூறப்படுகின்றது. அப்படி என்றால் தெய்வங்கள் எப்படி துரோகிகளை, எதிரிகளை, துன்புறுத்துபவர்களை அழிக்க முடியும். அவதாரங்கள் எல்லாம் உண்மையை உலகுக்கு புரியவைக்க! எத்தகைய செயல்களை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்த!
ஆனால் அவர்கள் அழித்ததாகச் சொல்லியிருப்பது பொது மக்களின் பகைவர்களை, விரோதிகளை, கொடியவர்களை, அன்பின் எதிரிகளை. அழித்தல் என்பது அந்த சமூக விரோதிகள், கொடியவர்கள், அன்பில்லாதவர்கள் மக்களின் மேல் வைத்திருந்த காழ்ப்பு உணர்ச்சிகளை, பகைமை எண்ண உணர்ச்சிகளை அறவே அழித்து அவர்களின் செயல்களால் நிகழவிருக்கும் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்கும் உண்மை நிலையை உணர்த்துவதேயாகும் அந்த அழித்தல் செயல்.
அதனால் தான் கொடியவர்களான அவர்களின் மிகையாண உணர்ச்சிகள் அழிக்கப்பட்டவுடன், அவர்கள் உண்மைதனை புரிந்து மன்னிக்க வேண்டிய பின் அருள் கொண்டு ஆசி வழங்கி அவர்களுக்கு மன்னிப்புகள் வழங்கப் பட்டுள்ளது.
இப்படி கொடியவர்களுக்கெல்லாம் மன்னிப்பு வழங்கப்படும் போது நல்லவர்களுக்கு மன்னிப்புகள் ஏதுமில்லை. சோதனைகள்தான். மன்னிக்கும் வகையில் ஏதும் செயல்கள் இல்லை. நான் என்ன குற்றம் செய்தேன் என பலர் வேதனைப் படுவதுண்டு. பட்டை தீட்ட தீட்டத்தான் வைரத்தின் ஒளி மிகையாகின்றது. நம் செயல்களை பட்டை தீட்டி உறுதியுடன் வழிமுறைப் படுத்தவே அந்தச் சோதனைகள்.
எதிரி என்று எவருமில்லை! அனைவரும் இவ்வுலக உயிர்களே! உலகில் வாழ தகுதி உள்ளவர்கள்! உரிமையுள்ளவர்கள்! அவர்கள் வாழ்வதற்காக எடுக்கும் முறைகளை செயல்படுத்துதலால் வேறுபடுகின்றனர். வாழ எடுக்கும் முறைகளை நெறிப்படுத்தினால் அனைவரும் பேரன்பு உள்ளவர்கள் ஆவார். மனிதநேயம் மிக்கவர்களாகி விடுவார்கள்.
அவர்கள் சொல் செயல் ஏதனாலும் மற்றொருவருக்கு தீங்கு நேராது. சொல்லுமுன், செயலுக்கு முன் சிறிது யோசித்து, ஒருமுறைக்கு இருமுறை, மும்முறை யோசித்து சொல்லப்பட்டால், செயல்பட்டால் அந்தச் சொல்லால், செயலால் யார் ஒருவருக்கும் பாதிப்புகள் இருக்காது. அப்படியே இருந்தாலும் அது குறைவாகவே இருக்கும்.
அப்போது அங்கு அன்பு மலரும்! ஆனந்தம் தோன்றும்! அனைவரும் சந்தோஷமாய் இருக்கலாம்! சந்தோஷத்தை சந்தோஷிக்க வாழ்வு சந்தோஷமயமாகும். இன்னல்களை சந்திக்க, இடர்பாடுகளை உறுதியுடன் தாண்ட நாம் கொண்ட சந்தோஷமே உதவும்.
உந்துதல் அழிவு: நாம் கொண்ட சந்தோஷம் உடலில் பயணித்து எல்லா அவயங்களுக்கும் சென்று ஓர் உந்துதல் நிகழ்வை ஏற்படுத்தும். இந்த உந்துதலின் காலம், அளவைப்பொறுத்து அதன் சக்தி நமக்கு கிடைக்கின்றது. நமது பயணத்தில் ஓர் துக்கம் ஏற்படும் போது இந்த உந்துதல் சக்தி அதைப் போக்க செயல் படுவதால் அதன் சக்தி அளவு குறைகின்றது.
எனவே மீண்டும் மீண்டும் நம்மிடையே உந்துதல் ஏற்பட்டு அதன் சக்தி இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு ஏற்படும் பாதிப்பு நிகழ்வுகளால் அழியும், குறையும் உந்துதல் சக்தி அழியாமல், உந்துதல் அழிவின் பாதிப்பு நிகழாமல் இருக்கும்.
உதிர்தல்: மரங்கள், செடிகள் பூக்களை மலர்வித்து தங்கள் அழகை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த அழகை, மணத்தை எல்லோரும் பார்ப்பதுமில்லை. கவனம் செலுத்தி ரசிப்பதும் இல்லை. இருப்பினும் இயற்கை தன் கடமைதனை செய்கின்றது.
எல்லாப் பூக்களும் சூல் கொண்டு காய்களாவதில்லை. காய்கள் ஆன எல்லாம் கனிகளாவதில்லை. நாம் நினைக்கலாம், எல்லா மலர்களும் காயாகி கனிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று. நீங்கள் நினைக்கும் இந்த நியதி நடப்பதில்லை. நிறையப் பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. பிஞ்சுகளும், காய்களும்கூட உதிர்ந்து விடுகின்றன. எஞ்சியவையே கனியாகின்றது.
இந்த நியதி யாருடையது. அது கர்மபலன்களின் செயல். சூரியன் ஒளிகண்டு குளத்தின் மலர்கள் அல்லி, தாமரை எல்லாம் மலர்வதில்லை. அன்று அப்போது தயாராக இருப்பவை மட்டுமே மலர்கின்றன. மற்றவை நாளை. அல்லது அடுத்த நாள் என்று நியதி உண்டு. இதுபோன்றே மனிதனுக்கும் நியதி உண்டு. கர்மபலன்களுக்கேற்ப நடக்கும் நிகழ்வுகளை ஏற்க பழகிக் கொள்ளவேண்டும்.
நான் திடீர் என்று இறந்துவிட்டால், உயிர் உடலிலிருந்து நீங்கிவிட்டால் என் கணவன்/மணைவி என்ன ஆவாள்! என் குழந்தைகள் என்ன ஆகும்! நான் நினைத்தது, செய்யவிருந்தது எல்லாம் என்ன ஆகும்! என நீங்கள் நினைத்தால் ஒன்றும் ஆகாது என்பதுதான் பதில். எது எப்படி நடக்க வேண்டுமோ அது அப்படியே நடக்கும். இது போன்ற புலம்பல்களால்தான் குழப்பங்கள் துன்பங்கள் நிகழ்கின்றன.
ஓர் பிறப்பிற்கு சந்தோஷப்படும் நாம், ஓர் இறப்பிற்கு பலவித எண்ணங்களை கொண்டுள்ளோம். வயது முதிர்ந்த இறப்பு என்றால், எல்லாம் அனுபவித்து விட்டார், கடமைகளைச் செய்துவிட்டார் இனிஎன்ன! நல்ல சாவு என்கின்றோம். ஒரு ஆன்மா உடல் நோய்வாய்பட்டு துன்பத்திலிருந்தால் அதைப் பார்க்கச் சகியாத பலர், அவர் இறந்தால் பறவாயில்லை என பிரார்த்தனை செய்வதுமுண்டு. செய்த பாவங்களுக்கு அனுபவிக்கிறது எனவும் சொல்வோர் உண்டு. அகால மரணம் என்றால், அந்த ஆன்மாவைப்பற்றி தெரிந்தவையெல்லாம் சொல்லி அவைகளையெல்லாம் அனுபவிக்காமல் சென்று விட்டாயே என வருத்தமுறுகின்றோம்.
இவ்வாறு எல்லாவற்றையும் சொல்லி புலம்பி வழியனுப்பும் நாமும், ஓர் நாள் மற்றவர்கள் புலம்பலுக்கிடையே வழியனுப்பப் படுவோம் என்பதை ஒவ்வொரு ஆன்மாவும் நினைவில் கொள்ளல் வேண்டும்.
நடப்பன எல்லாம் கர்மபலன் என்ற உணர்வுவேண்டும். அப்போதுதான் உதிர்வு/மறைவு நிகழ்வுகளும் ஓர் நியதிக்குட்பட்டது என்ற உண்மை புரிந்து அதன் தாக்கம் உங்களை பாதிக்காது. இல்லையெனில் இழப்பின் வேதனை மிக அதிகமாகி நிலைகுலையச் செய்துவிடும். உங்கள் கைகளில், எண்ணங்களில் ஏதுமில்லை, கர்மத்தின் முடிவுதான் என்றாலும், நல்ல எண்ணங்கள், நல்செயல்கள் கர்மத்தின் தாக்கம் அதிகம் பீடிக்காமல் இருக்க உதவும். சிந்தியுங்கள் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
தேடல்: நமக்கு தெரிந்த நிகழ்வுகள் பிறருக்கு பயனுள்ளவையாக மாற மற்றவருக்கு சொல்வதும் நமக்கு தெரியாத நிகழ்வுகளை மற்றவர்களிடமிருந்து தெரிந்து நடப்பதில்தான் வாழ்க்கையின் ஆரோக்கியம் அளவிடமுடியாத அளவிற்கு இருக்கின்றது. ஆகவே தேடலும், பரஸ்பர பகிர்வு மனப்பான்மையுமே வாழ்க்கையின் சிறப்பு.
மனிதா! நீ சுவாசி! அப்போதுதான் உனக்குத் தேவையான பிராணணைக் காக்க வாயு கிடைக்கும்! மனிதா! நீ தேடு! அப்போதுதான் உனக்கு நீர் கிடைக்கும்! மனிதா! நீ சுறுசுறுப்பாகு! வேலைசெய்! உனக்கு உணவு கிடைக்கும்! மனிதா! மற்றவர்களை மகிழ்வித்தால் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்!
இது எல்லோருக்கும் புரிந்த ஒன்று, ஆனால் தேடினால்தான், நாடினால்தான், செயல் பட்டால்தான் அன்பு கிடைக்கும். இதற்கும் நீ ஒன்று செய்ய வேண்டும். ஒன்று செய்தால்தான் அந்த மற்றொன்று கிடைக்கும். உன் முயற்சி, செயலின் தன்மை, ஆழம் இதைப் பொறுத்தே நீ தேடும் பொருளின் மதிப்பீடு அளவிடப்படும்.
எனவே உண்மையாக தேடு, உள அன்போடு தேடு, மனித நேயத்துடன், மாசற்ற உள்ளத்துடன் தேடு. தேடி விரும்பியதை அடையும் வரைத் தேடு. தேடல்...அன்பைத் தேடல் ஓர் சுகமான முயற்சி.. வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் செயல்.
மனதை அடக்கியவர்கள், மயக்கத்தைக் கொன்றவர்கள், நிஜத்தில் நிற்பவர்கள், எங்கும் நிறைந்திருப்பவர்கள்- சித்துவேலை தெரிந்த சித்தர்கள், மனிதர்களில் மேம்பட்ட மகான்கள், அரசர்களை ஆட்கொண்ட ரிஷிகள்,  முற்றும் துறந்த முனிபுங்கவர்கள், பீடங்களை தலைமையேற்கும் மடாதிபதிகள், சுவாமிகள் -இவர்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.
ஆனால் அவர்கள் சிந்தனை தவ வாழ்க்கையாகத்தான் இருக்கும்.  உயர்ந்த சிந்தனையுடன் எளிய வாழ்க்கையை மேற்கொண்டு, அதிலிருந்துதான் அவர்களின் தேடல், தெய்வ சிந்தனைகளைத் தொடங்குகின்றனர்-குருஸ்ரீ பகோரா.

5-2.ஆன்மா!

Written by

ஆன்மா!                                                                                                                           

ஆனந்தமான முகமும் ஆரோக்கியமான உடலும்தான் ஓர் ஆன்மாவிற்கு தேவை! ஓர் குழந்தை தனக்கு அறிமுகமானவர்களிடமிருந்து ஒர் பொருளைப் பெற்றுக் கொண்டவுடன் அந்த பொருளின் தன்மை அறியாமலேயே அதன் முகத்தில் ஓர் மலர்ச்சி, ஆனந்தம், ஓர் புன்முறுவல், சந்தோஷம் தோன்றுகிறது. இதைப் போன்றே என்ன! ஏது! என்று ஏதும் அறியா நிலையில் இந்தப் பூவுலகில் ஆன்மாவிற்கு ஓர் உடல் கிடைத்து உயிர் மூச்சை சுவாசிக்க ஆரம்பிக்கும் போது குழந்தையாகத்தான் தோன்றுகிறது.
இதுபோன்றே ஒர் பொருளை மூடிவைத்தால் அதைக்காண, அதைப்பற்றி அறிந்துகொள்ள நாம் மிகுந்த ஆவாலாய் இருப்பது இயற்கையான இயல்பு. இந்த உள்ளுணர்வு எல்லா உயிரினங்களுக்கும் உண்டு. இந்த உணர்வுதான் நம் உள்ளே மறைந்திருக்கும் ஆன்மாவையும் தேட ஆரம்பிக்கும்.
அந்த உணர்வு ஆன்மீகத்திற்கு அடிகோலும். நடந்த ஒரு நிகழ்வை மறந்துவிட்டு, அதைப்பற்றிய விபரங்களை நினைவுக்கு கொண்டு வரமுடியாமல் விட்டு விட்டாலும், நமது உள்ளுணர்வு செயல்படத் தொடங்கி, அந்த நிகழ்வு பற்றிய செய்திகளை நமக்கு பிறகு தெரியப்படுத்துதலை நாம் பலதடவை அறிந்திருப்போம். அன்று ஞாபகம் வரவில்லையே என நினைத்திருப்போம்.
இதுபோன்றே ஆன்மா தனது ஆன்மீக எண்ணங்களை என்றாவது ஓர்நாள் உள்ளுணர்வுகள் மூலமாக உங்களுக்கு தெரிவிக்கும். அன்று அது ஆன்மீக உணர்வாகப் புரியும். அதுமுதல் உங்கள் தேடல் தொடரும். ஆன்மாவின் பசியை தீர்க்க முயலுவீர்கள்.
ஒரு குழந்தை மட்டுமே எப்போதும் காரண காரியமின்றி சிரிக்க முடிகின்றது. என்ன செய்கின்றோம் என அறியாமல் விளையாட முடிகின்றது. துள்ளி குதிக்க முடிகின்றது. தன் வாழ்நாளில் நிகழ்காலத்தை புரியவில்லை என்றாலும் ஆனந்தமாக ரசித்து மகிழ்கின்றது. சந்தோஷப்படுகின்றது. ஆனந்தமடைகின்றது. இதுதான் வாழ்வின் அடிப்படைத் தத்துவம்.
அந்தக் குழந்தையின் நிலையில் உங்களை இறுத்திப் பாருங்கள். சந்தோஷப்படுங்கள். இவ்வுலகில் இயற்கையாக பல்வேறு விஷயங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்றவகையில் கண்டு அனுபவிக்க, சந்தோஷிக்க நிறைந்துள்ளது. அவைகளை கண்டு ஏற்று ரசித்து அனுபவித்து சந்தோஷப்படுங்கள்.
நாளை என நினைத்து, அன்று அந்த பொழுதில் கிடைக்கும் சந்தோஷத்தை விட்டு விடாதீர்கள். பின் எப்போதும் அந்த வேளை கிடைப்பது எப்படி அரிதோ, அப்படியே அந்த சந்தர்ப்பம், சந்தோஷம் கிடைப்பதும் அரிது.
நீங்கள் குழந்தையாயிருக்கும் போது கற்கத் தவறிவிட்ட வாழ்க்கையை உங்களுக்கு ஒரு குழந்தை உங்களின் மேற்பார்வையில் வளர்ப்பில் வந்தால், அதன் வாழ்க்கை முறைகளை கட்டளையிட்டு, கண்டிப்புகாட்டி, சட்ட திட்டங்கள் போட்டு இருட்டடிப்பு செய்து விடாதீர்கள்.
இயற்கை பலப்பல இனிப்பான செய்திகளை, செயல்களை தன்னுள்ளே பொதிந்து வைத்துள்ளது. அவ்வப்போது அதைப் பெறமுயற்சி செய்து, அதைப் பெற்று தன் வாழ்வில் மலர்ச்சி, ஆனந்தம், சிரிப்பு, சந்தோஷம் ஆகியவற்றுடன் மகிழ்வுடன் வாழ்நாட்களை சிறப்பாக அமைத்து வாழ வேண்டும். அதுவும் ஆன்மாவின் வாழ்நாள் முடியும் வரை என்பதே இறையின் நியதி.
இதைப் புரிந்து கொள்ளாமல் சட்ட திட்டங்களை ஏற்படுத்தி மூடத்தனமாக வெறியுடன் பின்பற்றிக் கிடைக்கும் இனிய சந்தர்ப்பங்களை வீணடித்து விட்டு மிகுதியான வாழ்நாட்களில் சந்தோஷ சாயல் சிறிதுமின்றி உலவும் உடல்களே, உடலின் உயிரே, ஆன்மாவே உனக்கு.... உன்சிந்தனைக்கு... உன்செயல் பாட்டிற்கு....
ஆன்மா-மேல்நிலை: இயற்கை தோற்றுவித்த பொருட்கள், உயிர்கள் அனைத்திற்கும் அந்தந்த சூழ்நிலைக்கேற்ப இயற்கையான குணம், விசேஷம் உண்டு. அது அவ்வப்போது வெளிப்படுகின்றது. இவ்வாறு எல்லாப் பொருட்களும், மரம், செடி, கொடிகள், உயிர்கள் எல்லாம் தம் தம் குணங்களை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது. இவைகள் ஒன்றுக்கொன்று சந்தித்தும், விலகியும் பரம்பிக்கிடக்கின்றன.
உலகில் தோன்றிய உயிர்களுக்கும், உடலின் ஆன்மாவிற்கும், கர்மத்தின்படி குணநலன்கள் இருக்கும். எப்படியிருப்பினும் பிறப்பிற்குபின் ஏற்படும் சூழல்காரணமாக, படிப்பு, நட்பு, பழக்கம் ஆகியவற்றால் அவற்றின் குணநலம் மாறவாய்ப்புண்டு. தவறு செய்யப் போகின்றோம் என்றால் நம்மை நாமே தடுப்பது போன்ற உணர்வு தோன்றுகின்றது. இதை நாம் மனத்தின் சாட்சி அதாவது    ‘மனச்சாட்சி ’ என்கிறோம்.
தவறான பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட விரும்புகின்றோம். நமக்குள்ளே இருக்கும் பல நல்லவைகளை பாதுகாக்கவேண்டும். இடை பழக்கவழக்கங்களால் அதைமாற்ற நினைத்து மனம் பேதலித்து மாறிவிட விட்டுக் கொடுத்துவிடக்கூடாது.
ஆகாயம் என்பது வெளியாகும். அதிலும் வஸ்து இருக்கின்றது. ஒரு குடத்திற்குள் வேறு பொருள் இல்லையென்றால் அதனுள் ஒன்றுமில்லை என அர்த்தமில்லை. அந்த குடத்தினுள் ஆகாயம் வெளி இருக்கின்றது. அந்த குடத்தினுள் உள்ள வெளியானது எப்படி  அண்டைவெளியான ஆகயத்தில் கலக்கின்றதோ அதே மாதிரி நம்முள் இருக்கும் ஜீவாத்மாவை பரமாத்மாவில் ஒன்றச் செய்யவேண்டும். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற நிலை மோனத்தில் புரியும்.
கண்ணுக்கு புலப்படாத ஆன்மா, மனம் ஒன்றின் மூலமாக உடலை இயக்கி பலன்களை அனுபவிக்கின்றது. ஆத்மா சக்தி மிகுந்தது. தன்னை மறந்து உடலில் ஐக்கியமாகியுள்ளது. தன் நிலை உணர்ந்து இந்த உடல் சிறைக்குள்ளிருந்து மீளும்போது ஞானம் பெற்றதாக இருக்க வேண்டும்.
அதற்காக உடலுடன் இருக்கும்போது அதன் செயல்பாடுகளால் ஞானம் அடைய முயலவேண்டும். ஆத்மா விழிப்படையவேண்டும். நமது விருப்பமும், செயல்பாடுகளும் இணக்கமுடன் இருக்கவேண்டும். சரீரம் தன் செயல்பாட்டிற்கு அளிக்கப்பட்டது என ஆன்மா நினைத்து செயல்படும் போது மனத்தை சமநிலையில் இருத்தி வைக்கமுடியும்.
மனதில் இணக்கம் கொண்டால் வெளியில் நல்லிணக்கம் ஏற்படுவது இயல்பாகிவிடும். பிரச்சனையின் காரணங்களுக்கு நிவாரணம் அளிக்கவேண்டும். மேலும் காரணங்களைச் சேர்த்து பிரச்சனையின் தன்மையை கடினமாக்கி விடக்கூடாது. தயாராகும் எல்லா பூட்டுகளும் சாவியுடன்தான் தயாரகின்றது. அதைப்போன்றே எல்லாக் காரணங்களும், பிரச்சனைகளும் நிவாரணம், தீர்வு காணக்கூடியவைகளே! மனதின் மானசீக சக்தி அந்த காரணங்களுக்கு தீர்வுகாணும்.
ஆன்மாவின் உடலுக்கு உறவுகள் இருப்பதைப்போல ஆன்மாவிற்கும் உறவுண்டு. அதுதான் ஆன்மீக உறவு. அதை ஏற்படுத்திக்கொள்ள முயலுங்கள். அது ஆன்மாவிற்கு நன்மையான உறவாகும்.
இந்த உறவை வாழ்வின் காலத்தில் சிலர் புரிந்தும், சிலர் புரியாமலும் நெருங்க முயலுகின்றனர். எப்படியிருந்தாலும் எல்லா ஆன்மாவும் இந்த உடலைவிட்டுச் செல்லுமுன் கண்டிப்பாகத்தன் ஆன்மாவின் உறவை நினைத்துக் கொள்கின்றது. இதை யாரும் மறுக்க முடியாது.
நீங்கள்யார்! உங்களின் அடையாளம் என்ன! என்றால் அனைவரும் ஏதாவது ஒன்றை சொல்வீர்கள். ஆனால் எல்லாமே ஒருநாள் குழந்தை, இளைஞன்/இளைஞி, ஆண்/பெண், கணவன்/மனைவி, தாத்தா/பாட்டி என மாறூதலுக்குட்பட்டது.
ஆனால் ஆன்மா என்றுமே ஒன்றுதான். அதுதான் நிலையானது. அது உன்னுள்ளே உள்ளது. இதைச்சொன்னால் தத்துவம் பேசுவதாக சொல்வார்கள். உண்மையில் ‘தத்துவம்’ என்பதில் உள்ள ‘தத்’ என்றால் அது என்றும் ‘த்வம்’ என்றால் ‘நீ’ என்றும் அர்த்தம். எனவே தத்துவம் என்றால் ‘நீயே அது’ எனப் பொருள்.
நீங்கள் யார்! என்ற கேள்விக்கு இன்னார் பேரன், இன்னார் மகன், தாய் தந்தையர் இவர் என்றுதான் கூற முடிகிறதே அன்றி உங்கள் உடம்பில் உள்ள ஆன்மா எங்கிருந்து வந்தது எப்படிவந்தது! ஏன் வந்தது! யாருடைய மகன்/மகள் எனக் கூற முடியுமா! முடியாது! இப்படி எதுவும் சொல்ல முடியா ஆத்மா எவ்வளவு நாள் உடலை இயக்கும், எப்போது அது செல்லும் எனவும் கூறமுடியாது
அப்படி எதுவும் ஆன்மா பற்றி அரிதியிட்டுக் கூறமுடியா நிலையில், அது உடலில் இருக்கும் காலம் இனிமையானதாக இருக்க வேண்டும் என்பதே அருளாளனின் அவா! இந்த இனிமை கர்மத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு இயங்கும் தன்மையுடையது.
கர்மத்தின் தாக்கங்களை குறைத்து, இருக்கும் இனிமைக்கு வளமை சேர்க்க முயல வேண்டும். அதுவே அந்த ஆன்மாவின் கடமை. தன் நிரந்தர உறவின்முறை நினைத்து தற்காலிக உறவின்முறையை வழிநடத்தப் பழகவேண்டும். படைப்பின் பகுதியாகிய ஆன்மாவின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் உச்சநிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம்.
எல்லா பரிமாணங்களுக்கும் மேற்பட்ட ஓரு உச்ச பரிமாணத்தை, நிலையை அடைவதுதான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் சிறப்பு. அந்த ஆன்மாதான் உடலின் இயக்கத்திற்கு காரணம் என்பதை புரிந்து கொள்ள மறந்து விடுகின்றனர்.
புராணங்களில் பலருக்கு ஒர் நிலையில் அவரவர்கள் விரும்பியது வேண்டியது நடந்துள்ளது என்ற உண்மைதனை உணருங்கள். அது எதனால் நடந்தது! எப்படி நடந்தது! அவர்களின் வழிபாட்டு முறையினாலா! அப்படியென்றால் இன்னல்களின்போது எப்படி வழிபடமுடியும்! அப்போது எப்படி நிகழ்வுகள் நடந்தது என கேள்விகள் எழலாம்!
காந்த ஊசியானது அதன் ஈர்ப்புத் தன்மையினால் வடக்கு நோக்கி திசை காட்டுவதுபோல அருளால் ஈர்க்கப்பட்டிருக்கும் ஆன்மாவின் மனம் உலக வாழ்வில் திசை தப்பி போகாது சரியான பாதையில் செல்லும். அதாவது அவர்களின் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. ஓர் நிலையில் அந்த வழிபாடுகள் வேண்டுதல்கள் ஓர்முனைப்பட்டு மையமாக குவிந்திருந்த காலம் அவர்கள் வேண்டியதை பெற்றுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களது சக்தி என்ன! உங்களுக்குத் தெரியாது. ஆன்மாவின் பலம் என்ன! புரியாது. ஆனால் உங்களிடம் உள்ள விழிப்புணர்வு மனதையும் உணர்வுகளையும் ஒரு நோக்கில் செலுத்தி மையப்படுத்தப் பழகுங்கள். நீங்களும் அதைப் போன்ற வெற்றியை, வேண்டியதை ஓர்நாள், நீங்கள் மையப்படுத்தும் நாளன்று பெறுவீர்கள்.
உங்கள் உணர்வுகள் அகலக் கால் வைப்பதுபோல் இருக்கக்கூடாது. பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு எண்ணங்கள் சிதறுண்டு போகக்கூடாது. இது செயல், யோகம், தியானம் எல்லாவற்றிற்கும் பொதுவானது.
பாவபுண்ணியத்திற்கு அப்பாற்பட்ட நிலையையடைந்த ஆன்மாவும் வெற்றி, தோல்வி, தூற்றுதல், போற்றுதல், சாதனைகள், வேதனைகள், நடந்த நடந்துகொண்டிருக்கும் வாழ்வு, நடக்கவிருக்கும் சாவு ஆகிய யாதொன்றாலும் எந்த ஆன்மா சமநிலையை கொள்கின்றதோ அந்த ஆன்மாதான் உண்மையான மேன்மைநிலையை உணரமுடியும்.
அடைந்த மேன்மைதனை கெடுக்கவோ, எடுக்கவோ முடியாது. மேலும் மேலும் வளர்த்து தன் உறவிடம் ஒப்படைக்க முடியும். உங்களைச் சுற்றியுள்ள சக்திகளால் நீங்கள் யாரென்று தீர்மானிக்க முடியாத நிலை உங்களின் மேன்மைநிலை. உலகின் உயிர்களை அந்த நிலையில், உங்களில், உங்களின் உணர்வின் ஒரு பகுதியாக பார்க்க முடிவது அந்த மேன்மைநிலை. அதுவே ஆன்மாவின் மேல்நிலை.
பலர் வழ்வில் ஏற்பட்ட துயரங்கள், சலிப்புகள், வேதனைகள், கசப்புகள் இவற்றிலிருந்து விடுபட ஆறுதல் வேண்டி ஈடுபடுகின்றனர். ஆன்மீக நிலை கேலிக்கூத்தாக மாறக்கூடாது. வாழ்வின் மிகஉயர்ந்த பரிமானம் ஆன்மீகம். ஆன்மீகத்தின் பேரால் ஆறுதல் தேடக்கூடாது. உண்மையை புரிந்து உணர்வுகளுடன் ஆன்மா மேன்மையடைய ஆன்மீகத்தை நாடவேண்டும். பல வருடங்கள் உண்மையாக உழைக்க வேண்டும். உடனடியாக எதுவும் நடந்துவிடாது. உழைப்பிற்கு பதில் காலம் சொல்லும்.  
ஒருவர் நாய்க்கு உணவிடும்போது தடியால் அதை அடிப்பது வழக்கம். அந்த நாய் வலியின் மிகுதியால் நாளை உணவருந்தக்கூடாது எனநினைத்தாலும், அடுத்தநாள் அந்த நேரம் வந்தவுடன் வாலையாட்டி அங்குவந்து அடியுடன் உணவருந்தி செல்கின்றது. அடியின்றி உணவில்லையா என நாய் சிந்திப்பதில்லை.
அதுபோல வாழ்வும், துக்கமில்லா இன்பம் என்றில்லாமல், துக்கத்திற்குப்பின் இன்பம் என மாறிமாறி வரும் தன்மையுடையது. துயரமில்லா ஆனந்தவாழ்விற்கு ஏங்கும் மனம் கடைசியில் தான் ‘ஆன்மீக வாழ்க்கை’ என்ற உண்மையை உணருகின்றது.
ஆன்மீகம் பற்றி பேசுவது, யோசிப்பது, உணர்ச்சி வசப்படுவது எல்லாம் உடனடியாக நடக்கக்கூடியது. இன்று அற்புதமானதாக தோன்றியது ஓர்நாள் மிக மிக அல்பமானதாக தோன்றும். புத்திசாலித்தனமான செயல் சிந்தனை என்பது சிறிது காலத்திலேயே முட்டாள்தனம் நிறைந்ததாகத் தோன்றும். காலத்திற்கு இந்த சக்தியுண்டு. அந்த சக்தியை அடைந்த ஆன்மாவே மேல்நிலையை உணரமுடியும்.
நீங்கள் உணர்வது சிந்திப்பது முக்கியமல்ல. உலக வாழ்க்கைக்கு உங்கள் சிந்தனை, உணர்வு உறுதுணையாக இருக்கலாம். ஆன்மீகத்தைப் பொறுத்தவரை நீங்கள் நினைக்கும் சிந்தனைகள் உணர்வுகள் உங்களை எங்கும் கொண்டு சொல்லாது. உங்கள் சிந்தனைகள் பாதைகள் வகுக்கலாம். அங்கே செல்ல நீங்கள் முயற்சிக்க வேண்டும்.
ஓர் நிலை கொண்டு சக்தியை அடைய முயல வேண்டும். அது நீங்கள் உருவாக்கியது இல்லை. எப்போதும் இவ்வுலகில் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த நம்மைச் சுற்றியுள்ள சக்தி நிலைகளை ஈர்க்க வேண்டும். அவைகளை கிரகித்து சக்திநிலை கொண்டு நம் சிந்தனைகள் செயல்படும்போது நாம் எல்லா எல்லைகளையும் கடந்து பரிமாணத்தை உணரமுடியும்.
அமைதியாக அமர்ந்து தியானம் செய்வது மட்டுமல்ல. அவர்களுக்குள் சலனமற்ற தன்மை உணர்ந்திருக்க வேண்டும். உள் நினைவுகளிலோ, வெளி நினைவுகளிலோ சிக்கி சலனத்துடன் செயல்படக்கூடாது. உங்களால் கிரகிக்கப்பட்ட, உங்களுக்குள் ஏற்பட்ட சக்தி நிலையை முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.
உண்மையைச் சொன்னால் மனித குலத்தின் மேலான குணநலன்கள் நாளுக்கு நாள் தாழ்வுகொண்டு குறைந்து வருகின்றன. அவ்வாறு குறைந்து வருவதன் எதிரொலியாக உலகின் நிலையும் அதில் பயனிக்கும் மனிதர்களின் நிலையும் அவ்வாறே இருக்கின்றது. உண்மையான சுகங்களும், மனச்சாந்தியும் இல்லை. ஒவ்வொரு ஆன்மாவும் சந்திக்கும் பிரச்சனைகளும், துன்பங்களும், துயரங்களும் கண்டு, இதற்கு காரணம் எல்லோரிடமும் குறைந்துவரும் மேலான நற்குணநலன்களே காரணம் என்பதை உணரமுடியும்.
இதைக்கண்டும், அனுபவித்தும், ஆன்மாக்கள் வெறுப்பின் எல்லையை அடைகின்றனர், அவைகளை களைவதற்கு முற்றிலும் நீக்குவதற்கு யாராவது வரமாட்டார்களா! என மனம் ஏங்குகின்றது. அது தவறாகும். உங்கள் சகஆன்மாக்களால் ஏற்பட்ட சம்பவங்கள் அதன் விளைவுகள், அதன் தாக்கங்கள் உங்களையும் சார்ந்தவர்களையும் பாதிக்கும்போது அவரவர்களே அதை தீர்த்துக்கொள்ள வேண்டும். அது தங்களால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.
எவருக்கும் இவ்வுலகில் பரிசுத்தமான சாந்தியை உருவாக்கும் திறமையும் ஞானமும் இல்லை, அருள் ஒன்றைத்தவிர. ஆன்மாவின் உறவைத்தவிர. எனவே ஆன்மாவின் உறவின் மீது நம்பிக்கை வையுங்கள். செயல் படுங்கள். அந்த ஆன்மீக உறவே உங்களை காப்பாற்றி கரையேற்றும்.
அதற்கு ஒவ்வொரு ஆன்மாவும் 1.நம்பிக்கையுடன், 2.சிந்தனை, செயல்முறை, நடைமுறைகளை சீர்படுத்தி, 3.தன்னைச்சுற்றியுள்ள அதிர்வுகளை கிரகித்து, 4. அந்த அதிர்வுகளை மேன்மைப்படுத்தி, 5. மேன்மையான அதிர்வுகளை ஓர் முகப்படுத்துதலே!  வேண்டியதை வேண்டியபோது வேண்டிய நிலையில் அடைய வாய்ப்பாக அமையும்.
உடலின் இயக்கத்திற்கு காரணமான உணர்வுபூர்ணமான உயிர்சக்தியை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். புரிந்து நடக்கவேண்டும். அதுதான் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும். உண்மையான சந்தோஷத்தையும் சாந்தியையும் அனுபவிக்கமுடியும்.
பிறந்த உடலின் ஆன்மா தன்னைச் சுற்றியுள்ளவர்களின் கூற்றைக்கேட்டு உறவுமுறை கண்டு, உறவுகளை, உரிமைகளை புரிந்து கொள்கின்றது. ஓர்நிலையில் வளர்ந்த ஆன்மா தன் தற்கால உரிமைகள் இது என்பதை புரிந்து நிரந்தர உறவு தன் ஆன்மாவிற்கு எது என சிந்தித்து அந்த உறவின் பிறப்புரிமைகள் முழுத்தூய்மையையும், சாந்தியையும் புரிந்து வழிநடந்து பூர்ண சுகம் பெறமுடியும்.
இதில் நாம் முதலாவதாக முழுமையான நம்பிக்கை கொள்ளவேண்டும். நம்பிக்கைதான் அச்சானி. நம்பிக்கை இருந்தால்தான் வெற்றிகிட்டும். நீங்கள் என்பது இந்த உடல் மட்டுமல்ல (அது செயல்படும் கருவி) ஆன்மாதான் நீங்கள் என உணரவேண்டும்.
இந்த உடம்பு ஓர் நாள் மறையும். ஆன்மாவின் உறவின் முறையில் என்னிடம் முழுமையான தூய்மையும், முழுசாந்தியும் உள்ளன என ஆன்மா என்னும் வகையில் செயல்பாடுகள் இருக்கவேண்டும். அப்போதுதான் அது புகழுடம்பாக இருக்கும். இதுகாறும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழைகள் தீங்குகள் எது என்பதை உணர்ந்து, அது சம்பந்தமான உணர்ச்சிகள் என ஆன்மாவுடன் இனியும் ஒட்டியிருக்க விடமாட்டேன் என எண்ண வேண்டும்.
மீதமிருக்கும் வாழ்நாட்களை பிரகாசிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். தேவையற்றவைகளில் நாட்களை வீணாக்க முயலமாட்டேன் என உறுதியுடன் செயல்பட்டு தியானத்தில் அமர்ந்து ஆனந்தமடைய வேண்டும். பலகாலம் வீணடித்து விட்டோம். அழியும் உடலுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டு வாழ்வின் பலபகுதிகள் வீணாகிப்போனதை புரிந்து கொள்ளுங்கள். ஆன்மா மேன்மையடைய உங்களுக்கும் ஏனையோர்க்கும் நன்மையானவற்றை செய்ய முற்படுங்கள்.
இந்த உண்மையை, உணர்வுகளை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உணர்த்துங்கள். மற்ற உடல்களையும் ஆன்மாக்களாக பாவித்து பழகுங்கள். சொல் செயலில் முழுமையான கவனம் செலுத்துங்கள். எச்சரிக்கையாக கையாளுங்கள். அப்படியில்லை என்றால் எல்லாம் கெட்ட சொற்கள், செயல்களாகிவிடும். பலன்கள் எப்படியிருப்பினும், அதில் அதிக நாட்டமின்றி தள்ளி இருப்பது சிறப்பு. அப்போதுதான் அதன் தாக்கம் ஆன்மாவை அதிகம் பாதிக்காது.
சரியான செயல்கள் சந்தோஷம் அளித்தாலும், தவறான செயல்கள் கர்மபலனை நிச்சயம் ஏற்படுத்தும். தவறான செயல்கள் எனத்தெரிந்தால் தெரியாமல் நடந்தவற்றிற்கு வருத்தமுற்று மீண்டும் அதை செய்யாமலிருப்பதுதான் ஆன்மாவிற்கு சிறப்பு. செயல்கள் செய்யும்போது நான் செய்கிறேன், என்னுடையது என்ற நினைவுகள் அற்று ஆன்மா செயல்படுகின்றது, இது என் நிலை என உணர வேண்டும். சந்தர்ப்பங்கள் சூழ்நிலை சரியில்லை எனக்கு அனுகூலமாக நடக்கவில்லை நான் என்ன செய்வது! என சொல்லித் திரிவதுகூடாது.
பல பழக்க வழக்கங்களுக்கு அடிமையான நாக்கும் உடம்பும் அவ்வப்போது அதே பழக்க வழக்கங்களை, நேரம் காலம் தவறாது கடைபிடிக்கும்போது, மனத்திற்கும் ஆன்மாவிற்கும் நேரம் ஒதுக்கி பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆழ்ந்த சிந்தனை என்பது அகம்- உள்ளே நோக்குதல் என எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சரீரத்திற்குள் இருப்பது ஆன்மா என்பதை உணரமுடியும். ஆத்மாவின் மேன்மைக்கு செவிமூலமாக ஞானம், கண்மூலமாக ஞானம், வாய்மூலமாக ஞானம் பெறலாம். தீமைகள் செய்தாலும், குரோத எண்ணத்துடன் யார் செயல்பட்டாலும் ஆழ்ந்த சிந்தனையிலிருப்பவன் அதை பொருட்படுத்தமாட்டார்.
ஆழ்ந்த சிந்தனை தீயவற்றை சிந்திப்பதுமில்லை, கேட்பதுமில்லை, சொல்வதுமில்லை. இக்குணம் சகிக்கும் தன்மை, பொறுமை, பணிவு, எளிமை, இனிமை, மனவலிமை முதலிய பண்புகளை அளிக்கின்றது. ஆத்மாவிடமிருந்து நற்குணங்களையே மற்றொரு ஆத்மா கிரகிக்க வேண்டும். கெட்ட குணங்களுக்கு ஏற்ப கர்மபலன் மூலம் தண்டனைகள் இருக்கும்போது அதை ஏன் கிரகித்து தண்டனையை அடையவேண்டும். எல்லா ஆன்மாவும் இனியத் தன்மை உடையதாக வேண்டும்.
நல்சிந்தனைகள் மனதிற்கு உணவாகும். புதிய எண்ணம் உணவாகுவது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கு தேவையான சக்தியை தருவதாக இருக்கவேண்டும். குழப்பமும் சச்சரவும் நிறைந்த வாழ்வில் அவை நீங்க மனம் தேவையான பலத்தினைப் பெற்றிருக்க வேண்டும். நம்முடைய அறிவு சொல்கிறபடி மனம் கேட்கவேண்டும்.
மனம் குதிரையாக இருக்கவேண்டும். அறிவு அதன் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டும். அதுதான் சுகமான வாழ்க்கை. ஆனால் பலரின் அறிவு குதிரையாக இருக்க மனம் அதன் முதுகில் ஏறி சவாரி செய்கின்றது. இது சரியில்லை.
ஓர் ஆன்மா மேன்நிலையடைய அஞ்சாமை, தூய்மை, ஈகை, புலனடக்கம், நேர்மை, உண்மை, கோபம் தவிர்த்தல், அமைதி, பற்றற்று இருத்தல், உயிர்களிடம் இரக்கம், இனிமையான குணம், நாணம், சலிப்பின்மை, சாஸ்திர தெரிவு, சலிப்பின்மை, வலியவனாக இருந்தும் பிறரை தண்டிக்காமல் இருப்பது, கர்வமின்மை, வஞ்சகமின்மை ஆகிய இயல்புகளுடன் ஞானம் கொண்டவனாகவும், பகட்டு, தற்பெருமை, கோபம், கடுகடுப்பு, திமிர், அகங்காரம், அஞ்ஞானம் ஆகிய அசுர குணங்கள் இல்லாதவனாக இருக்க வேண்டும்.
தெய்வீக குணங்கள் நாம் செல்லும் பாதைகளை சீர்படுத்தி வெற்றி இலக்கை அடைய உதவும். அசுர குணாதிசயங்கள் நம்மை துன்பத்தில் சிறைபடுத்தக் கூடியவை-குருஸ்ரீ பகோரா.

5-1.ஓய்வு!

Written by

ஓய்வு!                                                                                                                              

நீங்கள் ஓர் சீரிய நோக்குடன் செயலாற்றினீர்கள். மேன்மை அடைந்தீர்கள். வேறொருவர் வேறொரு நோக்குடன் செயலாற்றி மேன்மைபெற்றுள்ளார். அதில் திறமையும் செயலும்தான் முன்னேற உதவியுள்ளது. இதில் அந்தஸ்து என்பது என்ன! எங்கிருந்து வந்தது! சமூகத்தில் ஓர் குறிப்பிட்ட உயர்விற்குப்பின் அதற்கு அந்தஸ்து எனக்காரணம் கொண்டு வீண்மனப் போராட்டத்தில் குழம்பிவிடாதீர்.
உங்கள் நண்பர்கள், உற்றார்- உறவினர்கள் தனித்தனி நோக்கங்களுக்காக உழைத்து தீவிர செயல்பாட்டினால் இன்றைய நிலைக்கு வந்திருக்கலாம். வேறு பாதைகளில் வென்றிருக்கலாம். அந்த வேறுபாடுகளை அப்படியே பாருங்கள். அன்பு கொண்டு பழகுங்கள்.
அவ்வாறில்லாமல் அவர்களின் அந்தஸ்து எனவேறுபடுத்துவது உங்களிடையே உள்ள அகங்காரத் தன்மைதனைக் காண்பிப்பதாகும். இந்த அகங்காரம் போட்டி, பொறாமை, பொய், ஏமாற்றுதல் என மனதில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
உங்களிடம் உள்ள அகங்காரத்தைப் பற்றி கேள்வி கேட்காதவர்களே உங்களிடம் உறவு கொண்டிருக்க முடியும். உங்கள் குறைபாடுகளை ஆதரிப்பவரே உங்கள் நண்பராகமுடியும், என்றால் உங்களின் செயல்களை குறைகூறி சுட்டிக்காட்டுபவர் உங்களின் எதிரியல்ல. அவ்வாறு குறைகள் சொல்வதினால் உங்கள் கோபத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளாகலாம். உண்மைதனை புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் குறைபாடுகளை கவனித்துச் சொல்லி உங்கள் வாழ்வுப் பயணத்தில் நீங்கள் அவைகளை வெற்றிகரமாகக் கடந்து செல்ல உதவுவதே அவர்களின் நோக்கம். அவர் உங்களுக்கு குருவாவர். மற்றவர்கள் போல் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக நட்பு பாராட்டி பேசமாட்டார். உங்களை மேன்மை நிலைக்கு கொண்டு செல்ல அவர் ஆலோசனைகள் உதவும்.
எவ்வளவு உயர் பதவியிலிருந்தாலும், அதுதான் அந்தஸ்து என நீங்கள் நினைத்திருந்தாலும், மேலும் மேலும் உயரச் சென்றாலும் ஓர் நிலையில் ஓர்நாள் ஒய்வு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவீர்கள். உங்கள் பதவி, அந்தஸ்து மறைந்து சாதாரணமான மனிதனாக மாற்றம் வரும். இதுகாரும் கொண்டிருந்த அதிகாரம், பதவி, வசதிகள் எல்லாம் பறிபோகும்.
ஒய்வுக்குப்பின் எதுவும் நிரந்தரம் அன்று. 20, 30, 40 வருடங்கள் என்று செயல்பட்டிருந்தாலும் ஓய்வு நிச்சயம் என்ற நிலையில் மனிதா உன் வாழ்வின் பயணத்தின் முடிவு பற்றியும் தெரிந்து கொள். முயற்சி செய். அப்போது உனக்கு எது சந்தோஷம் அளிக்கும், நன்மை பயக்கும் எனயோசி. தெளிவு கொள். தேர்வு செய். நல்லது நினை. செயல்படு. இப்பூஉலக வாழ்வில் உன் இயக்கம் இருக்கும் வரை சந்தோஷமாக இருக்க, வாழ செயல்படு.
ஒய்வு என்பது வேலை ஒன்றுமே இல்லாதவருக்கானதல்ல. ஓவ்வொரு செயலையும் உண்மையாக செய்பவருக்குத்தான் அதன் அர்த்தம் புரியும். ஓய்வு எடுக்க விரும்பும் ஆன்மாக்களே, நீங்கள் முழுமையாக செயல்களில் ஈடுபட்டிருந்தால்தான் அதன் பலன் தெரியும். விதைப்படிதான் செடி, கொடி, மரங்கள் எல்லாம் தோன்றுகின்றன்.
எந்த ஒன்றும் தான்தான் பெரியது என போட்டிகொண்டு நிரூபிக்க முயலுவதாகத் தெரியவில்லை. மற்ற உயிரினங்களுக்குள் மட்டும்தான் இந்த போட்டாபோட்டி செயல்கள். எந்த மரமும், செடிகளும், கொடிகளும் ஒன்றை ஒத்ததாக இருக்கமுடியாது. இந்த உண்மை ஆத்மாவின் உடம்பிற்கும் பொருந்தும்.
மனிதனை மனிதன் அடக்கி ஒடுக்கி தன் கட்டளைகளை, ஆசைகளை அவர்மூலம் நிறைவேற்றிக்கொள்ள ஆசைப்படுதல் இயல்பான ஒன்றாகத் தெரிகின்றது. இந்த மனப்போக்கு குடும்பத்திற்குள்ளேயும், சமூகத்திற்குள்ளேயும் காணப்படுகின்றது. இதுபோன்ற எண்ணங்களிலிருந்து விடுபட நம்செயல்களில் மாற்றம் வேண்டும்.
வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் இயற்கையான ஒன்று. போட்டிகள் வேண்டியதில்லை. முன்னேற முயற்சி வேண்டும். மனிதனை மனிதன் அடிமையாகக் கருதக்கூடாது. எல்லாவற்றிலும் உயர்ந்தவரில்லை! எல்லா நிலையிலும் தாழ்ந்தவரும் இல்லை! அனைவரும் இந்த தெளிவு கொண்டிருக்கவேண்டும். தெளிவில்லாதவர்களுக்கு அன்புடன் புரியவைத்தல் சிறப்பு.
ஒருவன் ஓய்வின்றி உழைத்தலில் அவன் முன்னேறலாம். வாழ்வு மேம்பாடு அடையும். அதே சமயம் அவன் உழைப்பில், நிழலில் மற்றவர்கள் உழைக்காமல் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு வளர்ச்சி ஏதுமிருக்காது.
சோம்பேறியாய் இருந்து கொண்டு அவரின் வளர்ச்சியில் மகிழ்ந்து, அந்த வளர்ச்சியை தனக்கு சாதகமாக்க திட்ட மிடுபவர்களாகி விடுகின்றனர். அந்நிலையில் உழைப்பவரின் நலம், ஓய்வு, தேவைகள் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். எப்படியும் அவர்களுக்கு வேண்டியது அவர் நிழலில் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவேண்டும் என்பதே.
பொதுவாக வேலை செய்பவரிடம்தான் நாம் ஒரு வேலையை ஒப்படைப்போம். இது ஓர் சரியில்லா மனப்பான்மை. இது போன்று வேலை செய்யும் ஒரே நபரிடம் அனைவரும் வேலை எதிர்பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் செயல்களை செய்யும் வண்ணம் நம் செயல் இருக்க வேண்டும்.
ஒருவரின் நிழலில் ஒருவர் இருக்கலாம். ஆனால் அவரைச் சுரண்டும் விதத்தில் இருக்கக்கூடாது. உபயோகமுள்ள வேலைகளை எல்லோரின் நலன் கருதி செய்பவரின் நலம் எல்லாவகைகளிலும் காப்பற்றப்படவேண்டும்.
நீங்கள் ஒய்வாக இருக்கின்றீர்கள். இளைப்பாற நினைகின்றீர்கள் என்றால் நீங்கள் அன்புடன் இருப்பதாக அர்த்தம். அன்புதான் உங்களை அமைதிபடுத்தி ஒய்வு கொள்ளச்செய்யும்.
நீங்கள் நிம்மதியாக உட்கார்ந்திருக்கின்றீர்கள் என்றால், அனைத்து செயல்களிலிருந்தும் விலகி இருக்கின்றீர்கள் என்பதாகும். ஒய்வு என்றால் அன்புடன் அமைதியாய் அற்புதமாக இருங்கள் என அர்த்தம் கொள்ளுங்கள்-குருஸ்ரீ பகோரா

4-6.இளமைப் பூக்கள்!

Written by

இளமைப் பூக்கள்!                                                                                              

வாழ்க்கையின் முழு சாரத்தையும் அப்படியே அனுபவிக்க நினைப்பது இளமை. எனவே எல்லோரும் இளமையுடன் இருக்கவேண்டும் என்பதே அனைவரின் அவா. அந்த ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதற்குறிய செயல்பாடுகள் வேண்டும். இளமையுடன் செயல்பாடுகள் இனைந்திருக்க வேண்டும். எண்ணங்கள் இளமையாக இருக்க வேண்டும்.
நம்மைச்சுற்றி இளைஞர்கள் இருக்கவேண்டும். இளமையான எண்ணங்களை உடையவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சுறுசுறுப்பிற்கு நீங்களும் இயங்கவேண்டும். மனம் சோர்வு அடையக்கூடாது. எப்போதும் எந்த நிகழ்வுபற்றியாவது விவாதங்கள், செயல்திட்டங்கள், என நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்குத்தக்க நம் உடம்பும், உறுப்புகளும் ஒத்துழைக்க வேண்டும். எல்லோருடனும் அன்பு, நட்புடன் பழகவேண்டும். நீங்கள் பூவாகவோ, நாராகவோ, அல்லது நீங்கள் பழகும் நபர் பூவாகவோ, நாராகவோ இருக்கலம். எப்படியிருப்பினும் பூவும் நாரும் சேர்ந்தால்தான் பூச்சரம், மாலை. ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மணம்-அது இயற்கை.
உங்களைவிட திறமைசாலிகளை சந்திக்கும்போது நமக்கு புத்திசாலித்தனம் இல்லை என வருத்தப்படாதீர்கள். அவர்களுடன் நட்புக்கரம் நீட்டி பழகுங்கள். ஓர்நாள் நீங்கள் பூவோடு சேர்ந்த நார்போல் மணம் பெறுவீர். ஏன் மணக்கும் மலராகக்கூட மாறிவிட வாய்ப்புண்டு. புதிய சிந்தனைகள் ஏற்பட்டு உங்கள் இளமை தூண்டப்பட்டு செயலாக்கம் நடைபெற்று வெற்றி காண்பீர்கள்.
ஒருவரை அறிமுகம் செய்து வைக்கும் போது வணக்கம் என நீங்கள் கைகூப்பி வணங்கும் போது அவர் சிரித்த முகங்கொண்டு கைகுலுக்க கைநீட்டினார் என்றால் உங்களைவிட அவர் நட்பை, மனித நேயத்தை விரும்புகின்றவர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவரை தீண்டி கைகுலுக்கிப் பரிசிப்பதால் அதை நீங்கள் உணர முடியும்.
அன்பின் உறவை பலப்படுத்தும் அந்த மனித நேயத்தை உணர்வீர்! கைகூப்பி வணக்கம் சொல்வது வேறு! கைகுலுக்கி ஆனந்தப்படுவது, ஆனந்தபடுத்துவது வேறு! “ஒவ்வொரு புரட்சி என்கிற மலரும், முதலில் சிந்தனை என்ற அரும்பாக இருந்ததுதான்” என ஓர் கவிஞன் சொல்லியுள்ளார்.
நம்மைப்பற்றி நம் செயல்களைப்பற்றி முதலில் ஒவ்வொருவரும் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் எதை அடைய விரும்புகின்றீர்கள் என முடிவாக தெரிந்துகொண்டு செயல் படுங்கள். உங்கள் பலவீனங்கள் என்ன! அதை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும் என சிந்தியுங்கள். ஓர் செயல் செய்ய ஆரம்பிக்கும்போது ஏன்! எதற்காக இதைச் செய்கின்றோம் என்ற தெளிவான நினைவின்றி ஆரம்பிக்கக்கூடாது.
அவ்வாறு எந்த முடிவை நோக்கி எனப்புரியாமல் செயல்பட ஆரம்பித்தால் காலப்போக்கில் ஓர் வித சலிப்பு உங்களுக்குள் ஏற்பட்டுவிடும். என்னடா வாழ்க்கை இது என்று மனம் பேதலிக்கும் எண்ணங்கள் தோன்றும்.
இது போன்ற சலிப்பு வாழ்வில் ஏற்பட நாம் அனுமதிக்கக்கூடாது. இல்லையெனில் அது நம் உடலில் ஓர் இராசாயண மாற்றத்தை ஏற்படுத்தி இளமை செயல்பாடுகளை குன்றவைத்து, முதுமை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் சக்தி கொண்டது.
இளமை இனிமையானது. அதை பலர் தவறவிட்டு விடுகின்றனர். அது இளநீர் போன்றது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குமேல் இளநீர் தேங்காய் நீராகிவிடும். இளநீரின் சுவைவேறு. பயன்வேறு. தேங்காயின் நீர்வேறு சுவை. இளநீர் தேங்காய் நீராகும். தேங்காய் நீர் எப்போதும் இளநீராக முடியாது. இதைப்போன்றதே இளமையும். காலங்கடந்தபின் இளமையின் சுவையை அனுபவிக்காமல்விட்டு பின்னால் வருத்தமடைகின்றனர்.
எந்த நோக்கிலும் அந்த இளமை அவர்களுக்கு மீண்டும் கிடைக்காது. இழந்தது இழந்ததுதான். காலம் கடவுளின் ராகம். அவை வீணடிக்கப்பட்டால் திரும்பவும் கிடைக்காது. சமூகத்தின் மேல் பழி சொல்லி, அதனால் என்னால் முடிவு எடுக்க முடியவில்லை என கொள்ளக்கூடாது. உனக்கு, உன் ஆன்மாவிற்கு சரியென்று தோன்றினால் செயல்படு. இளமையின் ஆனந்தத்தை ருசிக்க முடியும் போதெல்லாம் ருசித்துவிடு.
ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று கழியும்.  வயதுக்கு ஏறுகிற சக்தியுண்டு. இறங்குகிற சக்தி கிடையாது. கழிந்தபின் வருத்தப்பட்டு ஒன்றும் பயனில்லை. எத்தனை வயது வாழ்ந்தான் என்பதில் பயனில்லை. என்ன செய்தான் என்பதுதான் கேள்வியாக வரும்.
அரசாங்கத்தில் வேலை செய்ய வயது வரம்பு வைத்துள்ளனர். அதை தாண்டிய ஒருவருக்கு அங்கு வேலை கிடைக்காது. அதைப் போன்றே இளமையில் அடைய வேண்டியதை அடைய வேண்டும்.
இளமையின் பருவங்களை அனுபவியாமல் விட்டு, மீதி பயணத்தில் யந்திரகணமாக அவசர அவசரமாக இழந்ததை அடைய வேண்டும் என்ற நினைப்பில், வாழ்வின் ருசியை அறியாமல், எதையும் புரியாமல் கண்டும், கேட்டும், உடுத்தும், உண்டும் நாட்களை கழித்து விட்டீர்களானால் எப்படி ஆனந்த வாழ்வு வாழமுடியும்.
நீங்கள் அழகாக இருந்தால் அதனால் இளமையாக இருக்கின்றீர்கள் என அர்த்தமில்லை. கண்களில் ஓர் பிரகாசம் இருக்க வேண்டும். பார்வையில் ஓர் துடிப்பு இருக்க வேண்டும். புண்ணகை முறுவல்ஒளி தவழவேண்டும். அகத்தின் அழகு முகத்தில் என்பது போன்றே இளமையின் மினுமினுப்பு முகத்தில் இருக்க வேண்டும்.
இளங்கன்று பயம் அறியாது என்பதற்கேற்ப முகத்தின் தோற்றம் கவலை, துக்கம், துயரம் போன்றவைகள் பற்றிய எண்ணங்களை பிரதிபலிப்பனவாக இருக்கக்கூடாது. ஒரு பந்தை வீசி எறிந்தால் அது எப்படி துள்ளிக் குதிக்கின்றதோ அதுபோன்ற துள்ளிக் குதிக்கும் எண்ண உணர்வுகள் வேண்டும் மனதிற்கு, அதுவே இளமையின் அடையாளம். ஆடி மகிழும் காலம். இப்போது என்ன வேண்டும் என்று இளமையைக் கேட்டால் எல்லாம் வேண்டும் என்று பதில் வரவேண்டும். அதுவே இளமை.
வேதங்கள் சொல்லும் அறிவுரைகளை மனதில் வாங்கி புத்தி கெடாமல் காப்பாற்றிகொள்ளும் திறமையுடையது இளமை. பின்னாளில் அந்த திறமை உபயோகமாகும்.
இசைக்கருவியின் கம்பிகள் அதிக இறுக்கத்துடன் இருந்தால் கம்பிகள் அறுந்து விடும். தளர்வாக இருந்தாலும் இசை பிறவா. விறைப்புமின்றி தளர்வுமின்றி நடுநிலையில் இருந்தால் மட்டுமே இசை பிறக்கும். அது இளமையின் தன்மைகொண்டது.
எப்போதும் மலர்ந்தமுகம், இனியசொல், தெளிந்த சிந்தனை இவற்றோடு துடிப்புடன் இருப்பதே இளமையின் அடையாளங்களாகும். அதற்கு ஆத்மார்ந்த சந்தோஷத்தில் திகழ வேண்டும் அந்த இளமை-அன்பு உயிர்களே இளமை தவழும் எண்ணகளைக்கொண்டு இனிமையான வாழ்வை வாழங்கள் -குருஸ்ரீ பகோரா

4-5.அமைதிப் பூக்கள்!

Written by

அமைதிப் பூக்கள்!                                                                                                      

வெளியே தேடி அலைந்து பெறக்கூடிய பொருள் இல்லை. மனதின் செயல் பாட்டை பொறுத்தே அமைதி கிட்டும். எண்ணங்களில் ஆசை பிறக்கின்றது. பல விஷயங்களை நினைக்கின்றது மனம். அதனால் நமக்கு சில நிகழ்வுகள், கஷ்டங்கள் ஏற்படுகின்றன. நம் மனம் நாம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கின்றோமோ அப்படியே ஒரு போதும் இருப்பதில்லை. அவ்வாரு இருக்க விட்டுவிடக்கூடாது. எண்ணங்கள் நம் விருப்பப்படி, நம் ஆன்மாவிற்கு நல்ல பலன் தரும் வகையில் இருக்கவேண்டும். மனம் நம் வசப்படவேண்டும். அப்போதுதான் அமைதி கிட்டும்.
நாம் மனத்தின் வசப்பட்டு விடக்கூடாது. உலக விவகாரங்களில் மாட்டிக் கொண்டு மனம், சிந்திக்க, சிந்திக்க ஆசைப்பட்டு, கோபப்பட்டு, நிகழ்வுகளைத் தேடி வெற்றி காணாமல் அடித்த பந்து திரும்பி வருவதுபோல நம்மிடம் திரும்பும். அது அமைதி தராது.
முதன்முதலாக நம்மை நாமே கட்டுப்படுத்தத் தெரிய வேண்டும். மனதை கட்டுப் படுத்த பழகிக் கொள்ள வேண்டும். ஓர் செயலின் தன்மைகளை உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால் ஏற்படும் சாதக பலன்களை ஆலோசிக்கும் திறன் கொள்ள வேண்டும். உண்மையின் அடிப்படியில் ஆலோசனை  செய்ய வேண்டும். நமக்கு சாதகமாக மட்டும் நினைத்து சிந்திக்க கூடாது. எல்லாச் சூழலிலும் எல்லா வழி வகைகளையும் சிந்திக்கப் பழகவேண்டும். அப்போதுதான் ஓர் செயலின் செயல்பாடு எல்லா நிலைகளிலும் தெளிவாக விரிவாக நம்மால் புரிந்து கொள்ளமுடியும்.
அதற்கு நாம் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும். நம்மால் முடியும், இது முடியும் என உறுதி கொள்ள வேண்டும். உறுதியுடன், மனக்கட்டுப்பாடு கொண்டு, திறமை சேர்த்து, எல்லா வழி வகைகளையும் சிந்தித்தால் நம் மனக்கண் முன்னே தெளிவான செயல்பாடுகளின் வழிகள் தெரியும். அது நாம் நம் செயலை புலன்கள், உறுப்புகள் மூலம் திறம்பட செய்து நம் உடலுக்கும் உயிரின்வழி ஆன்மாவிற்கும் நல்ல கர்ம பலன்களைத் தர வாய்ப்பாகும்.
ஒருவன் அமைதி வேண்டும் எனில் என்ன செய்யவேண்டும். அவனிடமிருந்த அமைதி எங்கே போயிற்று? என்னவானது! வீனான மனக்குழப்பங்களை மேலும்மேலும் உருவாக்கி தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி, அமைதியைவிட்டு தனியே தூரத்தில் சென்றுவிடுவதுதான், அமைதியின்றி ஒருவன் இருக்கக் காரணம். அனுபவிக்க ஆயிரம் சந்தோஷங்கள் இருந்தபோதும், அதை அனுபவிக்காமல்விட்டு, இல்லாத கிடைக்கத் தவறிய ஒன்றிற்காக ஏங்கும் மனநிலையை கொள்ளக்கூடாது. அது உன்னிடம் இருக்கும் அமைதியை போக்கும்.
காற்றில்லா ஒன்றை பலூன் என நாம் சொல்வதில்லை. ஆனால் உலகில் பரவியுள்ள காற்றை அதனுள் நாம்தான் செலுத்துகிறோம். அதன்பின் அதை பலூன் என்கின்றோம். நம்மைச்சுற்றியுள்ள பிரச்சனைகளையும், நாம்தான் காற்றை பலுனில் செலுத்துவது போல் நம்முள் செலுத்திவிட்டு, நம்மை குழப்பிக் கொள்கின்றோம். அந்தப் பிரச்சனைகளை வெளியே விட்டுவிட்டு சம்பந்தம் இல்லாதவர்களாய் இருந்து பாருங்கள், அந்த பிரச்சனையால் உங்களுக்கு எந்த தாக்கமும் ஏற்படாது. அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு நீங்கள் தீர்வு எளிமையாகக் கண்டு கொள்வீர்.
நிற்கும் ரயிலில் இருப்பவர்களுக்கு அடுத்த தண்டவாளத்தில் இருக்கும் ரயில் நகரும் போது அவர்கள் அமர்ந்திருக்கும் ரயில் நகருவதுபோல் தோன்றும். அதேபோன்றுதான் பிரச்சனைகளுடன் உள்ளத்தை நிறைத்தவர்களுக்கு உலகில் எல்லாம் பிரச்சனையாகத் தோன்றும்.
எந்த பிரச்சனையாயிருந்தாலும் முதலில் அதன் தன்மைதனைக் காணவேண்டும். எதுவும் புரியவில்லை எனில் அதைச்சிறிது ஒதுக்கி விட்டு, முற்றிலும் வேறுசெயலில் கவனம் செலுத்தி விட்டு பிறகு இந்த பிரச்சனையை நிதானமாக நோக்குங்கள். அதன் செயல் வழி உங்களுக்குப் புரியும். எந்த பிரச்சனையாயிருந்தாலும் உங்களால் தீர்க்க முடியும். பிரச்சனைகள் தீர்ந்து விட்டால் அங்கே நிலவுவது அமைதி, பின் ஆனந்தம், முடிவில் சந்தோஷம்.                                                                  
நாம் அமைதியை நாடுவதில்லை. நம்மில் பலருக்கு அமைதியில்லை. அது ஓர் இயற்கை நிலை. அமைதியை விட்டு நாம் எங்கு செல்கின்றோம். நம் செயல்கள், புலன்வழியில் நம்மை தள்ளிக் கொண்டு செல்லச் செல்ல அமைதியின்மைதான் ஏற்படும். “மனம் போன போக்கிலே போகலாமா?” அவ்வழியில் நம்மை விறுப்பு, வெறுப்பு, கோபம், தாபம், துக்கம், ஏமாற்றம், துயரம் சூழ்ந்து கொள்ளும். நான் என்ற எண்ணம் தலைதூக்கி நம்மை குழியில் தள்ளிவிடும். அமைதியான மனமே கோயிலாகும். அந்த கர்ப்பகிரகத்தில் அருள் நிறைந்திருக்கும்.
கோவில்கட்டும் பாக்கியம் முற்பிறப்பு புண்ணியத்தைப் பொறுத்தது. ஆலயம் எழுப்பும் ஒருவனுக்கு முற்பிறவியின் பாவங்கள் நீங்குகின்றது. கோவில் கட்ட நினைத்தாலே பாப விமோசனம் உண்டு, புண்ணியங்கள் அவர் கணக்கில் சேரும் என்கிறது அக்னிபுராணம்.
புராணகாலத்தில் காடவர்கோன் என்ற மன்னன் சிவ ஆலயம் அமைக்க ஆசைப்பட்டு ஏற்பாடுகள் செய்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய நாள் குறிக்கப்பட்டது.  அதே ஊரில் வசதியில்லா பூசலர் என்ற ஏழை, தனக்கு வசதியில்லையே கோவில் கட்ட என நினைத்து, நிதியிருந்தால் எப்படி கட்டலாம் என மனதிலேயே கோவிலை படிப்படியாகக் கட்டிமுடித்து அந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யவும் நினைத்தான்.
அரசன் கனவில் வந்த ஈசன், பூசலர் கட்டிய கோவிலுக்கு தான் செல்வதாகவும், அரசன் கட்டிய கோவிலுக்கு வெறொருநாள் கும்பாபிஷேகம் வைத்துக் கொள்ளவும் கூறினார். திடுக்கிட்ட அரசன் காலை ஊர் முழுவதும் தேடியும் கோவில் கானாமல், கடைசியில் பூசலரைக்கண்டு அவர் கட்டிய கோவில் எங்குள்ளது என வியப்புடன் வினவ, பூசலர் தான் கோவில் கட்டியதும் அதற்கு குடமுழுக்கு செய்ய நினைத்ததும் தன் மனதில் என்றுரைத்தார். அரசன் பூசலரின் அருள் நிறைந்த ஆரவாரமில்லா அன்பைக் கண்டுகொண்டான்.
ஜெகத்தில் தெரியும் கோவில்தான் சிறந்தது, எல்லோரும் அதைக் கட்ட முடியாது. ஆனால் அகத்திலே கோவில் கட்டி கும்பாவிஷேகம் நடத்தி பூஜை செய்த கோவிலுக்குத்தான் முதல் மரியாதை அருள் கிடைத்துள்ளது. மனம் அமைதியாக இருந்து அருள் நிறைந்ததால்தான் நிகழ்வுகள் வாழ்வு சிறப்படையும்.
எவ்வளவு சப்தங்களிருந்தாலும் அதனிடையே உங்களால் எதையும் நினைக்க முடியும், சிந்தனை செய்யமுடியும் என்ற நிலை இருந்தால்தான் நீங்கள் அமைதியாய் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். அமைதி தேடி மலை உயரத்திற்கோ, ஆற்றங்கரைக்கோ, ஆளில்லா இடத்திற்கோ செல்லவேண்டும் என்பதில்லை.
நீங்கள் இருக்குமிடத்தில் அமைதி வேண்டும். அந்த அமைதியை நம் மனோதிடம்தான் உருவாக்க வேண்டும். உங்கள் உள்ளத்தின்மேல் நம்பிக்கை வைத்து செயல்பட்டு உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டால் உங்கள் மனம், உள்ளம் அமைதிபெறும்.
அங்கே அடுத்து சந்தோஷ நிகழ்வுகள் நடைபெற ஆனந்தம் உருவாகும். முழு அமைதி என்பது எதனாலும் கெட்டுவிடக்கூடியது அல்ல! எதனாலாவது கெட்டுவிடக்கூடிய நிலையில் இருந்தால் அது அமைதியே இல்லை!
தற்பெருமை, தன் மதிப்பு, பட்டங்கள், பெயர், புகழ், பதவி, அதிகாரம், கௌரவம், பணம் எல்லாம் வெறுத்து ஒதுக்குங்கள். ஒரு வளர்ச்சிக்குப்பின் இவை அர்த்தமற்றவை ஆகிவிடும். எல்லாம் இருந்தும் என்ன பயன் நிம்மதியில்லையே! அமைதியில்லையே! என வருத்தத்தில் உழன்று கொண்டிருப்பீர்கள்.
இவைகள் மனதிற்கு போதை யூட்டுபவை. ஓர்கால கட்டத்தில் துன்பத்தையும், தடுமாற்றத்தையும்தான் ஏற்படுத்தும். இவைகளை விட்டொழித்து மன அமைதிக்கு என்ன வழி என ஆராய்ந்து சந்தோஷ நிம்மதியடைய வழிகானுங்கள். சந்தோஷமடையுங்கள் சந்தோஷமான மன அமைதியுடன்.
மனம் அமைதியாக இருக்கும்போது அது உள்வாங்கும் நிகழ்வுகள் அபரிமிதமானவை. அதன் செயல்பாடுகள் அளவிட முடியாதவை. சிவபிரான் தட்சிணாமூர்த்தியாக சனகர், சனந்தர், சனத்குமாரர், சனத்சுஜாதர் ஆகிய நான்கு சனாகதி முனிவர்களின் சந்தேகங்களை நான் எப்படி சொல்கிறேன் என்று பாராமல், எப்படி என்ன சொல்கிறேன் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என ‘சின்முத்திரை காட்டி அமர அவர் கீழே அந்த நால்வரும் மௌனமாக அமர்ந்தனர்.
சிவன் மனதால் நினைத்தார் அம்முனிவர்களுக்கு அது வேண்டுமென்று. அந்த முனிவர்களும் அதை எதிர்பார்த்து இருந்தனர். அது அந்த அலைகள், காந்தசக்தி அலைகள், அலை அலையாக முனிவர்களின் மனதே சென்றடைந்தது. இதுவே தத்துவமாகும். இதை புரிந்து கொண்டு செயல்படவே தட்சிணாமூர்த்தி- ஞானகுரு சிலைகள் கோவில் வளாகத்தில்.
நம் மனதில் ஓர் உறுதியை, எண்ணத்தை உருவாக்கிக் கொண்டால், படிப்படியாக செயல் சக்திகளால் அதை வலுப்பெறச் செய்து, முடிவில் அது உண்மையாக நிகழச் செய்ய முடியும். அந்த சக்திதனை பெரும்பாலான மனிதர்கள் இழந்து தவிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் மனம் அமைதியிழந்து தத்தளிக்கின்றது. மனம் அமைதியாக இருக்க நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.
நம் காலில் முள் குத்தினால் அதன் பாதிப்பு, வலி நம்மை உணரவைக்கின்றது. முள்ளை எடுத்துவிட்டு அப்படியே நடக்கின்றோம். தேவையானால் வீட்டிற்குச் சென்று மருந்திடுகின்றோம். நம் முன்னால் நடக்கும் நிகழ்வுகள், பிரச்சனைகளை வெளியில் விட்டுவிட வேண்டும் குத்திய முட்களை தூக்கி எறிவது போல்.
அதைவிடுத்து நிகழ்வுகளின் தாக்கங்களை சுமந்து கொண்டிருந்தோமானால் மனம் அமைதியடையாது. மனம் அமைதிபடும்வரை அடுத்த நிகழ்வுகளில் நம் இயலாமை, கோபம் எல்லாம் வெளிப்படும். அது நம் வளமான வாழ்வின் அடுத்த செயல்களுக்கு எதிரி. எனவே பாதிப்புகளை நிகழ்வுகளை அங்கேயே களைந்து விட்டு விடுங்கள். மிகமிகத்தேவை என்றால் மட்டும் அதற்கு தீர்வு கானும்வரை நினைவில் கொண்டிருங்கள்.
துன்பங்களும் துயரங்களும் யாருக்குத்தானில்லை! பகவான் கிருஷ்ணர்கூட பிறந்ததிலிருந்து துன்பங்களை அனுபவித்துதான் இருந்திருக்கின்றார்.
அவர் கருவில் உதித்ததும், மாமன் கம்சனால் தாயார் சிறையில், பிறந்ததும் கமசனுக்கு பயந்து இடமாற்றம், மன்னராக போர் என ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்வை போராடி வென்றுள்ளார்.
பிரச்சனைகளிலிருந்து வெற்றிபெற அமைதிகாக்க வேண்டும். அப்போதுதான் சிந்தனை வளமாகும். வெற்றி பெற வாய்ப்புகள் உருவாகும்-அமைதியாய் இருக்கப் பழகி வெற்றியடையுங்கள் ஆசிகளுடன்-குருஸ்ரீ பகோரா.

4-4.இயற்கை! நியதிப் பூக்கள்!

Written by

இயற்கை! நியதிப் பூக்கள்!                                                                                        

இயற்கை எல்லையில்லா ஓர் உலகம். என்ன இல்லை அதில். எல்லாம் இருக்கின்றது. மனித வாழ்வின் இயக்கத்தில் பெரும் பங்கு கொண்டது. வான்மழை பொழிகின்றது. மன்னும், மரம், செடி, கொடிகள் எல்லாம் அதை ஏற்றுக்கொள்கிறது. அதில் எல்லாவற்றிற்கும் ஓர் ஆனந்தம் இருக்கின்றது. மழையில் நனைந்து பாருங்கள் அந்த ஆனந்தம் புரியும். இயற்கையின் மழையில் எத்தனை ஆனந்தம் பொதிந்துள்ளது. அதை வாங்கி மரங்களும், செடிகளும் எவ்வாறு அந்த ஆனந்தத்தை வெளிப்படுத்தி பூத்து குலுங்குகின்றன. இயற்கையின் வளத்திற்கு பயன்படுகின்றது என உணரும் போது அந்த மழையில் எவ்வளவு ஆனந்தமும் சந்தோஷமும் பொதிந்துள்ளது என்ற உண்மை நமக்கு தெளிவாகிறது.
மழையிலிருந்து பெற்ற ஆனந்தத்தை அவைகள் பூத்து குலுங்கி நமக்கு காட்டும் போது அதை உணர்ந்து, பார்த்த நாமும் ஆனந்தம் அடைகின்றோம். நாம் ஆனந்தம் அடைந்தால் நம் செயல்களில் மாற்றம் தோன்றி, நம்மை சுற்றியுள்ளவர்களும் ஆனந்தம் அடையமுடியும். இப்படியே ஒன்றிடத்திலிருந்து ஒன்றுக்கு மாறி மாறி ஆனந்த அலைகள் பரவவேண்டும் என்பது இயற்கையின் நியதி!
அதை உணர்ந்து செயல்பட்டு நம்மைச் சார்ந்தவர்களையும் உலகையும் சந்தோஷப்படுத்த நாம் செயல்படவேண்டும். வெய்யிலில் வாடிய ஒருவனுக்கு நிழலில் இருக்கும்போது ஆனந்தம் ஏற்படுகின்றது. தாகத்தில் இருப்பவனுக்கு நீர் ஆனந்தம் ஏற்படுத்துகின்றது. சோகத்தில் இருப்பவனுக்கும் இயற்கையின் சூழல் ஆனந்தத்தை ஏற்படுத்தும்.
வண்ணவண்ண மலர்கள், பறவைகள், ஊர்வன, விலங்குகள் இவைகளை எல்லாம் விதவிதமாக பார்க்கும் போது மன இறுக்கம் தளர்ந்து மகிழ்வு ஏற்படுகின்றது. தண்ணீர் ஓடும்நீர் தெரிந்ததுதான். அதையே உயரமான மலைமேலிருந்து கீழ் இறங்கும்போதும், அந்த சாரல் நம்மீது படும்போதும், அந்த தென்றலின் சுகம் மேனியில் படரும்போதும் இயற்கையின் மடியில் நம் உள்ளம் உணர்ச்சிவயப்பட்டு சந்தோஷம் காண்கின்றது.
எனவே இயற்கை நம்மை சந்தோஷிக்க, நாம் ஆனந்தமடைய தோன்றிய ஒன்று. நம் பயணத்தில் நாம் சந்தோஷம் என்ற இலக்கையடைய பயணிக்கும்போது இந்த நியதி நமக்கு மிகமிக உதவும். இயற்கையில் பழையன எதுமில்லை. எல்லாமே புதியனவே! உலகின் ஏற்படும் அதிர்வு அலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது இயற்கை தன்னை புதிப்பித்துக் கொள்கின்றது.
இயற்கையின் அழகை ரசித்த கவிஞர்களும், புலவர்களும், தாங்கள் ரசித்த அந்த அழகை வாழ்வியலில் பலநிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பாடல்களும், கவிதைகளும், புனைந்துள்ளதை நாம் இன்றும் படித்தும் கேட்டும் ஆனந்தப்படுகின்றோம். அதற்கு ஓர் ரசிகத்தன்மை இருந்தால் போதும் நீங்கள் புனையவேண்டும் என்பதில்லை.
பஞ்ச பூதங்களால் ஆன உடம்பு. பஞ்சபூதங்களால் ஆகிய இந்த உலகத்தை அனுபவித்து அதையே வாழ்க்கை என நினைக்கின்றது. நம் உடம்பு எதன் ஆதாரத்தில் அனுபவிக்கின்றது என்பதை நாம் உணரவேண்டும். நீர் உலக சூழலில் பனியுமாகலாம், இன்னொரு சூழலில் ஆவியாகி மேகமாகின்றது. ஆனால் மீண்டும் ஓர் சூழலில் மழையாகி பூமிக்கு நீராக வருகின்றது. அதைப் போலத்தான் வாழ்க்கையில் உடலும் உடலின் ஆன்மாவும் எதை அனுபவித்து சந்தோஷப்பட்டாலும் மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு வரவேண்டும் இதுதான் நியதி!
நீர்வாழ்  உயிரினங்களுக்கு நீர்தான் ஆதாரம். நீரைவிட்டு வெளியில் வந்தால் மற்ற ஜீவராசிகளுக்கு உணவாகிவிடும். மண்ணில் பிறந்த உயிரினங்களுக்கு மண்ணில் தான் உணவு கிடைகின்றது. அதைவிடுத்து நீருக்கு சென்றால் அது அங்குள்ள ஜீவன்களுக்கு உணவாகிவிடும். எந்த உயிரினங்கள் எந்த பஞ்சபூதத்திலிருந்து தோன்றினவோ அதன்வழிதான் அதற்கு சரியான உணவு. இது நியதி!
மனிதனின் சேமிப்பு, பகிர்ந்து கொள்ளும் உணர்வை படிப்படியாக அழித்து விடுகின்றது. நாம் எதையும் நாமாகப் பெறவில்லை. எல்லாம் நம்மூலமாகத் தரப்படுகின்றது இது நியதி. இயற்கை தன்னிடம் இருப்பதை எல்லாம் நமக்கு தருகின்றது. அதன் மூலம் நாம் பயனடைந்து நம் சந்ததியும் வாழ வழிவகுக்க வேண்டும் என்பதுதான் நியதி. இந்த நியதியில்தான் உலகம் இயங்கி ஜீவராசிகள் அனைத்தும் வளர்ந்தும் வாழ்ந்தும் வந்துள்ளன.
ஒரு குழந்தை நடக்க முயற்சிக்கும்போது தடுமாறி பின் ஓர் நிலையில் தடுமாறாமல் நிற்க, நடக்க பழகிவிடுகிறது. புவியின் ஈர்ப்பு விசையை அதன் உணர்வுகள் புரிந்து கொண்டு விட்டன. இதைப்போன்றே இயற்கையில் பல இரகசிய விதிகள் உள்ளன. அவற்றைப் புரிந்து அனுசரித்து வாழ்கை முறைகளை நெறிப்படுத்தியுள்ளனர் முன்னோர்கள். அதில் ஒன்று தர்மம். அதை நாம் காத்தல், அழித்தல் செயல்களுக்கு ஏற்ப நம் வாழ்வில் காத்தலும், அழித்தலும் இருக்கும். நட்பு/உறவு-பகை, இன்பம்/சந்தோஷம்- துன்பம்/துயரம், இருள்- ஒளி, விருப்பு- வெறுப்பு, ஜனனம்/பிறப்பு-மரணம்/இறப்பு, இரவு-பகல், இல்லறம்- துறவறம், ஆண்-பெண், கருப்பு- வெண்மை என ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டாலும் அந்த இரண்டும்தான் உலக இயக்கத்தின் சிறப்பாகிறது. இது இயற்கையின் நியதி அதைப் புரிந்து ஏற்று வாழ்வை இனிமையாக்கிக்கொள்ள் ஆசிகள்.-குருஸ்ரீ பகோரா.

4-3.அன்புப் பூக்கள்!

Written by

அன்புப் பூக்கள்!                                                                                                              

“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அன்பே சிவமாவது யாரும் அறிகிலார், அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே” என்கிறார் திருமூலர். அன்பை கனிவு, கருணை, நட்பு, மரியாதை மூலம் உணரலாம். அன்பு நமக்கு தொடர்பு உடையவர்களிடம் நாம் காட்டும் மன நெகிழ்சியாகும். நம்மோடு யாதொரு தொடர்பும் இல்லாத அயலாரிடமும் ஜீவ ஜந்துக்களிடமும் அன்பைக் காட்டும் போது அது அருளாக மாறுகிறது. இதையே ’அருள் என்னும் அன்பின் குழலி” என்றார் பொய்யா மொழியார்.
அன்பை பெருக்குவதே வாழ்க்கை. அன்புகொள்வீர்! அனைவரிடமும் அன்பு கொள்வீர்! எல்ல உயிர்களிடத்திலும் அன்பு கொள்வீர்! தோன்றிய, பிறந்த எல்லா உயிர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமையுள்ளது, ஆகவே  வாழ்விற்கு தேவையானவற்றைத் தேடும் உரிமையும், அடையும் உரிமையும் உள்ளது. இதைத் தடுப்பதும், மறுப்பதும் பாவமாகும். தடுத்து பாவச் செயல்களை செய்ய எந்த ஒர் ஆன்மாவும் விழையக்கூடாது.
அதற்கு எல்லோரும் எல்லாவற்றின் மீதும் அன்பு கொள்ள வேண்டும். மற்ற மனிதர்களையும் நம்மைப்போலவே நேசிப்போம். மனிதர்கள் மட்டுமின்றி உலக ஜீவராசிகள் எல்லாமும் நம்மைப்போன்ற ஆன்மாக்களே என நினையுங்கள். அன்பு பிற உயிர்கள் மீது ஓர் பாசப்பிணைப்பை ஏற்படுத்தும். அந்த உயிர்கள் மேல் வெறுப்பு தோன்றாது. அந்த வெறுப்பின்மை என்ற தன்மை, மற்ற உயிர்களின் செயல் பாடுகளில் நமது இடையூறு இல்லாமல் இருக்க உதவும்.
கன்று கொல்லப்பட்டது என நீதிகேட்ட பசுவின் நியாயத்திற்காக தன்மகன் வீதிவிடங்கனை தேரேற்றி கொன்ற மனுநீதிச்சோழனின் உணர்ச்சிகள் போற்றத்தக்கவை. எல்லா உயிர்களுக்கும் அன்பும் பாசமும் உணர்ச்சிகளும் உண்டு. எல்லாம் ஆன்மாக்களே என்ற அவரது நியாய உணர்வு இன்றும் பேசப்பட்டு வருகின்றது.
நிறம் கண்டு அன்பு வருவதில்லை. அழகு கண்டும் அன்பு வரக்கூடாது. சிகப்பாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும் எந்நிறத்தையுடையதாக இருந்தாலும், அழகாயிருந்தாலும், அழகின்றி இருந்தாலும் அது ஓர் உயிர். ஓர் ஆன்மா வாழும் உடம்பு. அதற்கு உரிய காலத்திற்கு வாழும் உரிமை உள்ளது அதில் தலையிட மற்ற ஆன்மாக்களுக்கு உரிமையில்லை. அதை அதன் போக்கில் செயல் படவிடுங்கள். அதன்மீது அன்பைக் காட்டுங்கள்.
பிற உயிர்கள் மீதுள்ள வெறுப்புகளை அறவே நீக்கி அன்பு கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் காட்டும் அன்பு உங்களின் இந்த ஆன்மாவிற்கு அல்லது வாரிசுகளின் ஆன்மாவிற்கு பயனளிக்கும் தன்மை கொண்டது. ஒருவரைப் பற்றி எண்ணங்களால் எடைபோட்டுக் கொண்டிருந்தீர்களானால் அவரை நீங்கள் நேசிக்கமுடியாது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி நேசியுங்கள். அன்புகொள்ளுங்கள். அவ்வாறு எந்த எதிர்பார்ப்புமில்லாத அன்பு செலுத்தும் நேரமே மிகவும் அமைதியான நேரங்களாகும்.
ஓர் பஞ்சதந்திரக் கதையில் தண்ணீரில் தத்தளிக்கும் எறும்பிற்கு இலைகளைப் பறித்து போட்ட பறவைதனை வேடன் தன் அம்பால் குறிவைக்கும்போது, கரைக்கு வந்த அந்த எறும்பு வேடன் காலைக் கடித்ததால் குறிதப்ப பறவை பறந்ததாக் கூறப்பட்டுள்ளது. எறும்பு எதேச்சையாகக் கடித்தது என்றாலும், எறும்பு பெற்ற இலை என்ற அன்பிற்கு உதவி என்ற இந்தக்கதை, அந்த பறவையின் எந்த பிறவி அன்பின் கர்மபலனோ! அது வேடனின் கணையிலிருந்து தப்ப உதவியது.
இந்தக் கதையினால் நமது உள்ளத்திற்குள் ஓர் எண்ணம் உறுவாகி பதிவாக வேண்டும். நாம் துயரப்படும்போது நம்மை, நம்மிடம் அன்பு காட்ட ஆளில்லை, நாம் தனி மனிதன், ஆதரவற்ற ஓர் அநாதை என்று வருத்த முறும் நிலையில், என்றோ, எங்கோ, எப்படியோ, யாருக்கோ, எந்தவடிவிலோ காட்டிய அன்பின் அடையாளம், உதவிக்கு வருமானால், மனம் எவ்வளவு ஆறுதல் அடையும் என்பது அனுபவம்தான் கூறும்.
அன்பு காட்ட ஆளில்லா நிலையில் ஆறுதல் வார்த்தை கேட்க முடியா நிலையில் மனம் வேதனை கண்டுள்ளபோது, இது போன்ற அன்பு எவ்வளவு ஆறுதலை தந்து மனநிம்மதி அடைந்து தன்னைத்தானே தேற்றிக்கொள்ள மிக்கஉதவி புரியும். எனவே எப்போதும் அன்பு செலுத்துங்கள் எல்லோரிடத்திலும்.
அன்பு, உடலின் உயிர் ஆன்மாவோடு ஒன்றாகக் கலந்தது. அதை பலர் மறந்துவிட்டு உலகின் இன்பமில்லா வாழ்க்கை வாழ்கின்றனர். நம்மிடையே உள்ள அன்பை வெளிப்படுத்த பழகிக் கொள்ளவேண்டும். நம்மிடையே இதுகாறும் இருந்த ஒருவரை பிரியும் வேளைவரும் போதுதான் அவர்மீது நாம்கொண்ட அன்பின் ஆழம் நமக்குத் தெரியவரும்.
இராமாயண காவியத்தில், கானகத்தில் ராமரின் நண்பனான குகன், ராமணைவிட்டுப் பிரியமனமில்லாமல், ராமா! நீ எங்களுடனே தங்கிவிடு, அல்லது என்னையும் உன்னுடன் அழைத்துபோ, என மன்றாட ராமர், “பிரிவுதான் அன்பை அதிகமாக்கும். நாம் மீண்டும் சந்திக்கும் நேரம் வரும், அப்போது இதை நீ உணர்வாய்” என்றார்.
கோபியர்களுடன் குரவைக்கூத்து ஆடும் கண்ணன் விளையாட்டாக திடீரென்று மறைந்து விடுவாராம். அப்போது அந்த கோபியர்களுக்கு கண்ணன்மேல் இதுகாறும் இருந்த அன்பு பலமடங்கு அதிகமாகி விட்டதாக ஸ்ரீமத்பகவதம் கூறுகிறது.
அன்பு எல்லா உயிர்களிடமும் விருப்பத்துடன், நட்புடன் வாழும் தன்மைதனை தரும். இந்த தன்மை அளவில்லாதச் சிறப்புகளைத் தரும். இந்த அன்புதான் நம் உள்ளே தோன்றும் வீரத்திற்கு வித்திடும். வாழ்வில் நீங்கள் யாரிடமும் அன்பு செலுத்தலாம். ஆனால் உங்கள்மேல் அன்பு கொண்டவரின் அன்பை நிராகரிக்காதீர்கள். அதுதான் உண்மையான அன்பு. அந்த அன்பே உங்களுக்கு ஆபத்து காலங்களில் தேவைப்படும்போது மிக மிக உதவும்.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து, இன்புற்றார் எய்துஞ் சிறப்பு’- அன்புடன் இயைந்த வாழ்க்கையினால் மட்டுமே, உலக வாழ்வில் இன்பம் என்ற சிறப்பை அடையமுடியும்.
வாழ்வில் அன்பு என்பது நம்மிடம் இல்லை எனில் நமக்கு மற்றவரிடமிருந்து வரும் அன்பு கிட்டாது. சூன்யமயமான வாழ்க்கையாக மாறிவிடும். வாழ்க்கையில் அன்பு குடி கொண்டிருந்தால் புண்ணியச் செயல்கள் நடக்கும். தன்னலமில்லா செயல்பாடுகளே அன்பின் அடிப்படை. முழுமையான அன்பினைச் செலுத்துவீர்களானால் உங்கள் உள்ளே ஓர் ஒளிதோன்றும். அருள் நிறைந்தவராக நீங்களிருப்பீர்.
ஆன்மா அன்புடன் செயல்பட்டால் ஐம்புலன்களும் அதன்வழி சிறப்பாக செயல்பட்டு மிகுந்த ஆனந்தத்தை ஆரோக்கியத்தை அளிக்கும். சந்தோஷம், என்றும் சந்தோஷம் என வாழ்வில் வளமாகும். அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்களின் உடம்பின் புற உறுப்புக்கள் எல்லாம் பயனற்றதாகி விடும் என்கிறது வள்ளுவம்.
அன்புகொண்ட ஆன்மாக்களே, உடலின் உயிர் இருக்கும் வரைதான் உலகில் ஆதரவற்றவர்கள், ஆதரவில்லாதவர்கள் என்ற நிலைப்பாடு, எனவே மற்ற ஆன்மாக்களின்மேல் உங்களால் முடிந்த அளவு அன்பு செலுத்துங்கள். உங்கள் அன்பு நான் தனிமையானவன் இல்லை என்ற நினைவை அதற்குத் தரட்டும். இறுதிவரை அந்த அன்பு ஆறுதலையும், நம்பிக்கையும் தரும்.
ஆதரவற்ற ஓர் ஆன்மாவின் வேண்டுகோள் என்னவாயிருந்தது என்றால், “என்மீது அன்பு கொண்டு நேசித்த ஆன்மாக்களே, என்னைப்போல் எல்லா உயிர்களிடத்தும், உயிரின் ஆன்மாக்களிடமும் அன்பு செலுத்துங்கள், எல்லா உயிர்களும் சமம், அவை அன்பிற்காக ஏங்குபவை, அன்பு காட்ட தகுதியுள்ள உயிர்களே” என்பதாகும்.
 உங்கள் அன்பு அவர்களுக்கு சிறிதேனும் நம்பிக்கை உற்சாகத்தை ஏற்படுத்துமானால் அதுவே உங்கள் அன்பின் வெற்றிக்கு வெளிப்பாடு.
அவர்களின் வாழ்விற்கு வளம் சேர்க்கும் நலமுடன் வாழு. அந்த நலத்திற்காக வாழு. இவ்வாறு எல்லோரும் எல்லாரிடமும் அன்பு கொண்டால், அன்பைச் செலுத்தினால் உலகில் பல சிக்கல்கள் தீரும். பாவம், குற்றம் செய்ய தூண்டுதல் இருக்காது. அது போன்ற எண்ணங்களும் தோன்றாது. தீயவழிகளில் செல்லும் ஒருவனை அடிப்பதாலோ, திட்டுவதாலோ, மிரட்டுவதாலோ மாறுவான் என்று நினைப்பதை விட்டுவிடுங்கள். அவனிடம் அன்பு காட்டுங்கள். அவன் செயல்களில் மாறுதல் ஏற்படும்.
இதுதான் ஒவ்வொரு ஆன்மாவின் வாழ்விலும் செம்மைப்படுத்தும் ஆதாரம். அந்த அன்பு செலுத்தும் பண்பு ஓர் அளவிடமுடியாத பொக்கிஷம். நீங்கள் பார்த்து, பழகிய உங்களைப் பற்றி தெரிந்த, அனைவரின் அன்புக்கு நீங்கள் உடையவராவீர் என்றால், அதை நினைத்துப் பாருங்கள். மனதில் எவ்வளவு ஆனந்தம், மகிழ்வு ஏற்பட்டு உங்கள் செயலில் அதன் வெளிப்பாடு தெரிந்து, நீங்கள் வாழ்வில் பிரகாசித்து, வெற்றிப்பாதையில் நடக்க உதவும். அன்பை உணர்ந்தால், துக்கம் இருக்காது. எதையும் வெறுக்கமாட்டீர்கள். நல்ல எண்ணங்கள் பதிந்த மனதில் அன்பு தானாகவே, வற்றாத உற்று போல தோன்றிக் கொண்டேயிருக்கும்.
உங்களைப்பற்றி, உங்களின் செயல்கள்பற்றி எத்தனை நல்ல உள்ளங்கள் அன்புடன் நினைத்துப் பார்க்கின்றன என்ற நினைவு மிகுதியான மனவலிமையை உங்கள் உடலுக்கு, ஆன்மாவிற்கு ஏற்படுத்தும். நீங்கள் வளமுடன் இருக்க உங்கள் உணர்வில் இயற்கையாக கலந்திருக்கும்.
எனவே அன்பை மற்ற உயிர்களிடத்தும் காண்பிக்க உங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இது! இவர்! என்ன இதனிடம்! இவைகளிடம் என்ன அன்பு வேண்டி இருக்கின்றது என்று உங்கள் உள்ளத்தில் கிளர்ந்தெழும் அன்பின் உணர்வுகளைத் தடை செய்யும் எண்ணங்களுக்கு முதலில் தடைபோடுங்கள்.
எப்போது நாம் நம்மிடம் இருக்கும் அன்பை மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பவில்லையோ, அதை நாம் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது? என்பதை புரிந்து அனைவரிடமும் அன்பு கொள்ளுங்கள். அப்போதுதான் அங்கிருந்து அன்பு உங்களுக்கு கிடைக்கும்.
உலகில் 3வகை மனிதர்களுண்டு. முதலாமவர் நிகழ்வை நடத்துபவர், நடக்க காரணமாயிருப்பவர், இரண்டாமவர் அந்த நிகழ்வு நடப்பதை, நடத்துவதை வேடிக்கை பார்ப்பவர், மூன்றாவது நபர் அந்த நிகழ்வை என்ன நடந்தது, எப்படி நடந்தது என ரசித்துக்கொண்டிருப்பவர். எப்படிப்பட்டவராயிருந்தாலும் நீங்கள் அனைவருடனும் அன்புடன் இருங்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வெருவரையும் புன்முறுவலோடு சந்தியுங்கள்.
உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். உங்களின் அந்த இனிய புன்முறுவல் அவர்களுக்கு ஆறுதலும், மனநிம்மதியையும் தரலாம். அதுவே அவர்களுக்கு வரப்பிரசாதமாகி நன்மைகள் பயக்கலாம். உங்கள் புன்னகையால் நீங்கள் இழப்பது ஏதுமில்லை. மற்றவர்களுக்கு நன்மைபயக்குமெனில் அதை நீங்கள் ஏன் ஏற்று புன்னகை தவழும் முகத்துடன் காட்சியளிக்கக்கூடாது.
மனதில், உலகில் எல்லாம் உயிர்களும். அன்பு காட்டப்பட வேண்டியவைகளே என்ற எண்ணங்களை பதிய வைத்துக் கொள்ளுங்கள். இயற்கையாகவே உங்களிடம் உள்ள பரிவு, பச்சாதாபம், பாசம் போன்ற உணர்வுகள் தோன்றும் போது அன்பு என்ற மந்திர செயலாக்கம் உங்களிடமிருந்து வெளிப்பட்டுவிடும். இயற்கையின் இந்த அதிசயத்தை நீங்களும் உணர்வீர்.
நீங்கள் அன்பு செலுத்தும் உயிர்களும் உணரும். இவ்வாறு அன்பு எல்லா உயிர்களுக்கும், எல்லோரிடமிருந்தும், எல்லா நிலையிலும் கிடைக்கும் போது போட்டி, பொறாமை, வஞ்சகம், ஏமாற்று, பழிக்குப்பழி போன்ற உணர்வுகளின் ஆதிக்கம் எல்லா ஆன்மா உயிர்களிடமிருந்தும் குறைய ஆரம்பித்துவிடும். ஓர் நிலையில் அவைகள் இல்லா நிலை எங்கும் உருவாகி ஆனந்தமான பரிபூரண அன்பு பரிமளித்து அன்புடன்கூடிய உயிர்கள்வாழும் உலகத்தில் நாம் இருப்போம்.
அது உடலுக்கும் ஆன்மாவிற்கும் எல்லாவிதத்திலும் எல்லையில்லா சந்தோஷம் தரும் சூழ்நிலையாக பரிமளிக்கும். இந்த சூழலில் மண்ணில் பூத்த, மலர்ந்த, பிறந்த எல்லா ஜீவன்களும் அதுஅது தோன்றியதின் பயனாக சந்தோஷத்தை முழுவதுமாக அடையும்.
இந்த சூழலை எதிர்பார்த்து அனைத்து உயிரும், ஆன்மாவும் விழையும் போது, நம்மிடையே வேறு வேறு எண்ணங்களைத் தோற்றுவிக்கும் உணர்வுகளைக் கொண்ட சகோதர, சகோதரிகளைக் கண்டு அவர்களின் சொற்களில், செயல்களில் மதிமயங்காமல், உண்மையான அன்பின் எல்லை என்னவென்று உங்கள் மனமும் ஆன்மாவும் புரிந்து கொண்டதைப் போல், அவர்களின் மனமும் ஆன்மாவும் புரிந்து கொள்ளும் வகையில் அன்புடன் அவர்களை வழிநடாத்தி செல்லுதல் உங்களின் தலையாய கடமையாகும்.
இதை செய்வீர்களானால் நீங்கள் அன்பு உலகத்திற்குள் செல்ல ஓர் ஒத்துழைப்பாளி. மற்றவர்களுக்கு உதவும் ஓர் தூதன் என்ற நினைவும் உங்களுக்கு மேலும் அன்பின் எல்லையை அடைய உதவிடும்.
உலகில் தோன்றிய உயிர்கள் எல்லாம், சுகம், இன்பம், நிம்மதி, சந்தோஷம், ஆனந்தம் ஆகியன எங்கே! என வாழ்வின் பாதையில் தேடிக்கொண்டு செல்கையில், அந்தந்த ஜீவன்களின் கர்மவினைகளுக்கு ஏற்ப அவைகளின் சிந்தனைகள் சென்று, செயல்களின் வெற்றிக்காக எதோ ஓர்வழி சென்று, எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்ற ஆவலில், தன்னம்பிக்கை, நாணயம், அன்பு, பிற உயிர்களின் செயல்பாடுகள் எல்லாம் பாதிக்கப்பட்டாலும், மாற்றமடைந்தாலும், எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், வெற்றி தன்வெற்றி என்ற வெறியில் மீண்டும், மீண்டும் தவறான பாதையில் சென்று கர்மபலன்களை சேர்த்து, பிற உயிர்களின் பாதிப்புக்களைச் சுமந்து, ஜீவனின் மீதிக் காலத்தில் துயரத்திற்கும், துன்பத்திற்கும் அடிகோலி, அதே துயரத்தையும் துன்பத்தையும் தன் வாரிசுகளுக்கு சுமத்திவைத்து விட்டு செல்வதில் என்ன பயன்?
பிற உயிர்களுக்கு பாதிப்பின்றி, சுகம், நிம்மதி, இன்பம், ஆனந்தம், சந்தோஷம் ஆகிய அனைத்தையும் அடைய, அன்பின் வழி முயற்சித்தால், துன்பமின்றி எல்லோரும் இன்புற்றிருக்க ‘அன்பு செலுத்துதலே’ அன்றி வேறொன்றுமில்லை எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள். ஆனந்தம் அடைவீர், ஜீவன்- ஆத்மா- பேரானந்தம் நிலையடையும்.
ஒவ்வொரு ஆன்மாவும் தன் மனமோ, உடலோ சோர்வினால் ஆட்கொள்ளப்பட்டு நலிவடையும் காலத்து, நோய்களினால் ஏற்படும் தாக்கத்தால் தன்னை அரவனைக்க ஓர் அன்புள்ளத்தை எதிர்பார்க்கின்றது. நோயில் இருந்து அந்த ஆத்மாவை மருந்துகள் விடுவித்து காப்பாற்றலாம், ஆனால் மாறாத அக்கறையுடன் கூடிய அன்பினை பெறும் நோயாளியே விரைவாகவும் முற்றிலும் குணமாவார்.
எனவே உடலின் ஆன்மாக்களே! அன்புடன் இருங்கள். உள்ளும், புறமும் அன்புடன் இருங்கள். அதுதான் உண்மையான மனிதநேய ஆன்மா! உள்ளே அன்பு மயமாக இருக்கவேண்டும் என நினைத்து, வெளியே அதிதீதமான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, உள்ளே இருக்கின்ற அன்புக்கு அர்த்தம் இல்லாமல் செய்துவிட வேண்டாம். எப்பொழுதெல்லாம் சுயநலம் நம்மைவிட்டு அகன்று விடுகின்றதோ அப்போதெல்லாம் நம்முள் அன்பு வற்றாத ஊற்றாகி, பொது நலம் பிறக்கும்.
ஆண்-பெண் இருவரிடையே பரஸ்பரமாக இருக்கும் அன்பு பெருகி, கரைபுரண்டு, அவர்கள் சார்ந்த சமுதாயம் முழுமையின் நன்மைக்குமாக ஒடி, இறுதியில் தெய்வீக நோக்குடன் ஒன்றிப்போவதே வாழ்வின் அற்புத அம்சம்.
கிருஷ்ணர் பாண்டவதூதராக துரியோதனை சந்திக்க வந்தபோது அவரை துரோணர், திருதராஷ்டிரன், துரியோதணன் முதலானோர் தங்களின் மாளிகையில் வைத்து உபசரிக்க விரும்பினர். ஆனால் தர்மவானும், அன்பு மிகக்கொண்டவனுமாகிய திருதரஷ்டிரனின் தம்பி விதுரனின் குடில் இல்லத்திற்குத்தான் கிருஷ்ணர் சென்று தங்கி தான் தூது வந்த செயலை செய்ததாக வரலாறு பகர்கின்றது. அன்பு கொண்ட இடத்தில் தான் மனித நேயம் இருக்கும். அது எல்லோராலும் பாராட்டி போற்றப்படும். மதிக்கப்படும்.
மனிதநேயம்: நீங்கள் மனிதநேயம் கொண்டவராகத் திகழ எந்த நபரையும் எந்த காரணத்திற்காகவும் எந்த சூழலிலும் புண்படுத்தாதீர்கள், தவிர்க்காதீர்கள். இப்போது அவர்கள் அழகை இழந்திருக்கலாம், களை இழந்திருக்கலாம், பணம், வசதி இழந்திருக்கலாம். என்ன காரணத்தினாலோ, கர்ம வினைப்பயனாலோ அவர்கள் இந்த நிலைக்குத் தள்ளபட்டிருக்கலாம். எவ்வளவு வசதியாய் வாழ்ந்தவர்கள், எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இந்த நிலைக்கு வந்திருக்கலாம். உங்களுக்கும் அதைப்போன்றோ அதைவிட மோசமான நிலை வரலாம். அவர்களுடன் புன்முறுவலுடன் பழகி மனிதநேயத்துடன் இருங்கள்.
நாம் வெளியில் நடந்து செல்லும்போது முன்பின் தெரிந்திராத மனிதர் ஒருவர், எதிரே வரும்போது நம்மை மோதிவிட்டு மன்னிப்பு கேட்கின்றார். நாம் ஏதோ கவனத்தில் இருந்ததால் பொதுநோக்குடன் அதைப் பெரிது படுத்தாமல் செல்கின்றோம்.
ஆனால் நம் வீட்டில் இதே போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டாலோ, நமது செயல்களில் குடும்பத்தினரின் இடையூறு ஏற்பட்டாலோ நாம் மிகுந்த கோபம் அடைகின்றோம். தொந்தரவு செய்யாதீர் என உரக்க கூச்சலிடுகின்றோம். ஏன் இந்த நிலைப்பாடு. நம் குடும்பத்தினர் மனம் எவ்வளவு வருத்தப்படும் என நினையுங்கள்.
எப்போதும் உணர்ச்சி வயப்படாமல் ஓரே மாதிரி நடக்கப் பழகிக் கொள்ளுங்கள். அன்பு ஒன்றே பிரதானம். துன்பங்கள், துயரங்கள் தாண்டி அன்பு செலுத்தப் பழகுங்கள். வாழ்வு மகிழ்வுடன் வாழ்வதற்கே! தவறுதலாக கோபித்தாலும் பிறகு அதை உணர்ந்து அவர்களிடம் உங்கள் தவறான கோபத்திற்கு பரிகாரமாக அன்புகொண்டு பேசுங்கள். பழகுங்கள். உங்கள் வருத்தத்தை தெரிவியுங்கள். அவர்கள் சந்தோஷம் அடைவர். நீங்களும் அதனால் ஆனந்தப்படுவீர்கள்.
“அறிவு இருக்கும் இடத்தில் அடக்கம் இருப்பது போல, மனிதநேய அன்பு உள்ள இடத்தில் கருணை கண்டிப்பாக இருக்கும்.”
பூவின் மென்மை அனைவரும் அறிந்ததே! அதன் வசீகரமான மணம், கவர்ச்சியான நிறங்கள் எல்லோரையும் அதன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டது. இதைப்போலத்தான் நமது இதயமும் மென்மையானது. அதிலே தோன்றும் உணர்வுகள் கணக்கிலடங்கா!
அந்த உணர்வுகளைப் பக்குவப்படுத்தி நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களாக மாற்றினால், செயல்பட்டால் அதன் மணம், செயலாக்கம் பூவின் நிறத்தை, மணத்தை எல்லோரும் விரும்புவதுபோல அன்பு இதயத்துக்கு சொந்தமான உங்களையும் எல்லோரும் விரும்புவர். உங்கள்மேல் அன்பு கொள்வர். மனிதநேயம் பெருகும். வாழ்வில் இனியநிலை பெற்று சந்தோஷமடைவீர்.
போதனை வகுப்புகள் முடிந்ததும் குரு தன் மாணவர்களிடம், யார் என் போதனையை சரியாக நடைமுறைப் படுத்துகின்றாரோ அவரே என் சீடர் என்றார். சில நாட்களுக்குப் பின் மாணவர்களை ஓர் இடத்திற்கு வரச் சொன்னார். வழியில் முட்புதர்கள் கிடந்தன, முதல் மாணவன் யாரோ முட்டாள் வழியில் முள்ளை போட்டுவிட்டு போய்விட்டான், எனக்கு நேரமாகிவிட்டது என கடிந்து விலகிச் சென்று விட்டான்.
எத்தனை முள் இருந்தால் என்ன அப்படியே தாண்டிச் சென்று விடுவேன், என அப்படியே செய்தான் இரண்டாம் மாணாக்கன். மூன்றாமவன் பின் வருபவர்களுக்கு தொந்திரவு என் நினைத்து, முட்களை அப்புறப்படுத்தி சென்றான். மற்றவர்கள் ஞானி முன்னிருக்க, தன் தாமத்திற்கு காரணம் சொல்லி வருத்தம் தெரிவித்தான் கடைசியாக வந்தவன். உன் தாமதம் மனிதாபிமானத்தால் ஏற்பட்டது என்று கூறி அவனே தன் சீடன் என்றார். மனிதாபிமானம் போற்றப்படும் செயலாகும்.
கடிதங்கள் எழுதப்படும் அந்நாளில் இங்கு அனைவரும் நலம்! அங்கு அனைவரும் நலமா! என்று எழுதத்துவங்கியபோது, அங்கு மற்றவர்களின் நலனில் அக்கறை தென்பட்டது. அன்புடன் நலம் விசாரித்தனர். அந்தப்பகுதியில் பழகியோர், அருகிலுள்ளோர், உற்றார், உறவினர் நலன் என்று பெயர் குறிப்பிடப்படாமல் விசாரிக்கப்பட்டது. அன்பின் வயப்பட்ட சிறந்த மனிதாபிமானச் செயல்.
ஒவ்வொரு மனிதரையும் நாம் அவரவர் வட்டத்திற்குள் வைத்துதான் பார்த்து பழகியிருக்கின்றோம். நம் எல்லைக்குள் மற்றவர்களையும், அவர்களின் எல்லைக்குள் நாமும் செல்வது நமக்கு பிடிப்பதில்லை. நாம் நம் எல்லைக்குள், அவர்கள் அவரவர் எல்லைக்குள் என்று மனம் தனக்குள் ஓர் வட்டம் இட்டுக் கொள்கின்றது. இது தவறான எண்ணங்களின் நிலைப்பாடு. பொதுவான எண்ண ஓட்டங்களில் நமது சிந்தனை செல்லாததே இந்த குறுகிய எண்ண வட்டங்களுக்கு காரணம்.
எல்லோரையும் உலகில் வாழ உரிமையுள்ள ஜீவன்களாகக் கருதி, பொதுநலச் சிந்தனைகளின் அடிப்படை வடிவில் செயல் கொண்டால் இது போன்ற குறுகிய வட்ட உணர்வுகள் தோன்றாது.
பொது இடங்களில் ஏனைய ஆத்மாக்களின் மீது அன்பு மலரும். அது உங்களின் தரத்தை மேம்படுத்திக் காட்டும். இந்த நிலை கண்டால் உங்கள் வீட்டில் பொதுவாக குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் இலகுவாக தீர்த்துவைக்கப்படும். வெளியில் இனப்போர், சச்சரவுகள், வீண்விதண்டாவாத பிரச்சனைகள் தீர்ந்து நல்லுறவு மேம்படும். அருள் பொழிபவர்களுக்கு பிரியமானவர்களின் பட்டியல் எது என்றால் சக மனிதர்களை நேசிப்பவர்களின் பட்டியலேயாகும். மனிதநேயத்துடன் நீ ஆன்மாக்களை உன் அன்பின் வயப்படுத்தினால் உனக்கு எதிரிகளே இல்லை என்பது உனக்கு புரியும். எல்லோரும் உன் அன்பின் வட்டத்து நண்பர்களே!
தீயபழக்க வழக்கங்களும், தீயசிந்தனைகளும், பிறருக்கு தீங்குவிளைவிக்கும் செயல்களுமாக தொடர்ந்து செய்து துன்பங்களைச் சேர்த்துக்கொண்டு துயரங்களில் மூழ்கியிருக்கும் ஆன்மாவே நீ எப்போதும் இப்படி துன்பத்தின் வாயில் உழன்று கொண்டிருப்பதுதான் நரகம். பல ஆன்மாக்கள் சில சமயங்களில் இந்த நரக வேதனையிலிருந்து காப்பாற்று என குரலிடுவதை கேட்கின்றோம்.
அவர்களுக்கு ஒன்று சொல்வது என்றால், யார் என்ன சொன்னாலும் கேட்காமல், கிடைக்கும் வாய்ப்புகளை வீணடித்துவிட்டு, நீங்களே உங்களைச்சுற்றி குழி பறித்துக்கொண்டு பின் அதில் விழுந்து தள்ளாடி இந்த சமுதாயத்தின்மேல் கூக்குரலிட்டு என்ன பயன் என்பதாகத்தான் இருக்கும்.
எல்லோரும் மனித ஆத்மாக்களை நரகத்திற்கு செல்வீர்கள் என பயமுறுத்துகின்றனர். அல்லது சொர்க்கம், என்று ஆசையை தூண்டுகின்றனர். இந்த பயமும் வேண்டாம். அந்த ஆசையும் வேண்டாம். நரகம் என்பது எங்கே! அங்கே எரியும் கொப்பரை எண்ணெய் அண்டாவில் நீ செய்த குற்றங்களுக்காக போட்டு எரிப்பர் எனக்கூறுவதை கேள்விப் பட்டுள்ளேன்.
என்ன காட்டு மிராண்டித்தனமான மனித நேயமில்லா கற்பனை! தீயில் ஒருவர் கருகினால் அவர் எவ்வளவு துயரம் கொள்கின்றார் என்பதை நாம் தெரிந்துள்ளோம். இப்படியெல்லாம் சொல்லி ஒருவரை பயமுறுத்தி என்ன பயன்! என்ன செய்தால் பாவம்! எது பாவமில்லை! என்ற தடுமாற்றத்தை ஆன்மாக்களிடையே உண்டுபன்னுகின்றது. உங்களுக்கு உதவியவர்களையும், நம்பி வந்தவர்களையும் ஏமாற்றாமல் உங்களால் முடிந்த நன்மைகளை கருணையுடன் செய்ய முயலுங்கள். நீங்கள் அன்பு கொண்டு இருந்தால் அதன்பின் கர்மப்படி நடப்பது நடக்கட்டும்.
செய்த செயல்பற்றி அச்சம் கொண்டு குற்றம் செய்துவிட்டோமோ என தவிக்கும் ஆன்மாக்கள் அதிகமாகிவிட்டனர். இதைத் தவிர்க்க வேண்டும் என்ற உணர்விலேயே கவனத்தை செலுத்தி அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பவர்கள் அதிகம். செய்ய நினைப்பவைகளைச் செய்துவிட்டு வறுத்தமுறுபவர்கள் நிறையபேர். செய்யுமுன் ஆலோசனை கொள்! செய்தது தவறு என உணர்ந்தால் விட்டுவிடு! வேறு நல்லசெயலில் கவனம் செலுத்தி செயல்படு. மனிதநேயத்துடன் உங்கள் செயல் இருந்தால் சொர்க்கம், நரகம் பற்றிய கவலை எல்லாம் வேண்டியது இல்லை.
இந்தப் பிறவியில் உங்களுக்கோ உங்கள் உடம்பிற்கோ கிடைக்காத அந்த சொர்க்கம் ஒரு ஆன்மா இறந்தபின் என்ன வேண்டியிருக்கின்றது! நீங்கள் மனிதநேயத்துடன் அன்பு கொண்டு அனைத்து உயிர்களிடத்தும் நேசமுடன் உறவாடி அவர்களை சந்தோஷம் காணவைத்து நீங்கள் போதும் என்ற உணர்வுகளுடன் தனக்குத்தானே நிறைவுகண்டு ஆனந்தம் அடைதலே ஓர் உடலின் ஆன்மாவிற்கு சொர்க்கமாகும். இது உடலின் ஆன்மா பிறந்தபின் தேடும் சொர்க்கம். இன்னொரு சொர்க்கமும் உண்டு.
உண்மையில் சொர்க்கம் என்பது ஓர் உயிர் அதன் கர்மபலன்களுக்கேற்ப பிறந்து துன்ப, துயரங்களில் உழலாமல், அதாவது பிறப்பு என்பது இல்லா ஆன்மாவாக மாறுதலேயாகும் அதாவது வீடு பேறு -என்பதாகும். இந்த சிறப்பு விழிப்பு நிலையைக்காண மனித ஆத்மாக்கள் ஒவ்வொன்றும் முயற்சித்து வெற்றி காண்கின் சொர்க்கம் என்பது கனவல்ல! நனவே! இப்பூவுலகில் பிறந்த ஆன்மாக்களுக்கு சொர்க்க பூமியாகும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். நீங்கள் மனிதநேயம் பூத்த முழுமலராகா இருந்தீர்களானால் நல்லது எது, கெட்டது எது என்று அவைகள் தாண்டி தீர்க்கமாக சிந்தித்து செயல்பட முடியும்.
மனித நேயத்துடன் உங்கள் ஆன்மா செயல்படின் தெய்வத்தின் அருள் உங்களிடம் சேரும். வாழ்வில் இது ஓர் அற்புதமல்லவா! அதை விட்டு ‘என்புதோல் போர்த்த உடம்பு’ போன்று நடந்து வாழ்வின் இனிய சந்தர்ப்பங்களை இழந்து விடாதீர்கள்! மனிதநேயம் கொண்டிருக்கும் ஆன்மாவே மகான் ஆகின்றது. பிறகு தெய்வங்களோடு உறவும் கொள்கின்றது.
சமுதாய பேதமின்றி ஒவ்வொரு உயிரும் மற்ற உயிர்களிடம் நேசமுடன் இருந்தால் கலவரங்களில்லை. குழந்தை தாய்-தந்தை, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி அவர்களைச் சார்ந்தவர்கள் என எல்லோரிடமும் அன்பு காட்டுகிறது. இறைவனின் குழந்தையாகிய நீ அவ்வாறே அனைவரிடமும் அன்பு காட்டினால் பேதமில்லையடா! இனத்தில் ஆண், பெண் தவிர வேறுபேதமில்லை என்பதை அனைவரும் உணரவைப்பீர் ஆன்மாக்களே!
கங்கைநீர் புனிதம்தான்! காவிரி நீர் புனிதம்தான்! ஜீவநதிகளின் நீர் புனிதம்தான்! மனித நேயத்தால் பிறர் துயர் கண்டு கண்ணில் தோன்றும் கண்ணீர் எல்லாவற்றையும்விடப் புனிதமானது. அதன் வழி செயலாக்கம் மிகமிகப் புனிதமானது.
இன்றுபோய் நாளைவா என்ற பாணியில் பலமுறை அலைய விட்டு பின் உண்ணாவிரதமிருந்து மன உறுதியுடன் சோதனைகளைக் கடந்து வேறு எவருக்கும் மூலமந்திரத்தின் உட்பொருளை சொல்லக் கூடாது என்ற சத்திய உத்திரவாதத்தின் பேரில், திரு எட்டெழுத்தின் உட்பொருளை திருக்கோட்டியூர் நம்பியிடமிருந்து உபதேசமாக பெற்ற ஸ்ரீராமனுஜர், கோபுரத்தின் மீதேறி திரண்ட ஊர் மக்களுக்கு மந்திரத்தையும் அதன் பெருளையும் கூறினார்.
“சத்தியத்தை மீறிய சண்டாளா! சத்தியம் தவறிய நீ நரகம் போவாய்” என கோபத்தின் உச்சநிலையிருந்து கூறிய குருவைப் பார்த்து, “நான் ஒருவன் நரகம் சென்றாலும், இந்த மந்திரத்தின் பொருளை அறிந்த அயிரக்கணக்கானோர் வைகுந்தம் செல்வர், அந்த மகிழ்வு எனக்குப் போதும்” எனக் கூறிய ஸ்ரீராமனுஜரின் மனிதநேய பண்பு எவ்வளவு சிறந்தது.
பிறவியின் உடல்: பெற்றோரின் தூய அன்பில் கிடைத்த உடலிது. இதை மாசுமருவற்ற நிலையில் பேணிக்காத்து கொடுத்த பெற்றோர்கள் அதற்கு எவ்வளவு உழைத்திருப்பார்கள். எத்தனை பிரார்த்தனைகள் செய்திருப்பார்கள். என்ன என்ன வேண்டுதல்கள் செய்திருப்பர் குழந்தை நலமுடன், வளமுடன் வளரவேண்டும் என்று. அப்படி சீராட்டி, பாராட்டி பேணப்பட்ட இந்த உடம்பை நாம் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.
அதற்கு தெளிவான தூயசிந்தனை, பிறருக்கு ஊறுவிளைவிக்காத செயல்பாடுகள் கொண்ட எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். அன்பே பிரதானம் என அன்பின் மகத்துவத்தை புரிந்து கொண்டு எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டுமென்ற எண்ணங்களோடு வாழவேண்டும். பெற்றோர்களின் அன்பில் கிடைத்த இந்த பிறவியின் பயனம் எப்போது முடியும் எனத்தெரியாது. இடைப்பட்ட காலத்தில் உடல், உயிர், ஆன்மாவிற்கு சந்தோஷம் வேண்டி பயனிக்க வேண்டும். அந்த சந்தோஷம் எப்படி அடையவேண்டும் என வரைமுறை கொள்ளல் வேண்டும்.
ஒவ்வொரு உயிரும் உலகில் அவதரிக்கும்போது அதற்கென தனித்தன்மைகளுடன்தான் தோன்றுகின்றன. அந்த திறமைகளை புரிந்து அதை மலரவைத்து அதனதன் தனித் தன்மைதனை காக்க வேண்டும். மற்ற உயிர்களுடன் ஒப்பிட்டு அந்ததிறமை உங்களிடம் உள்ளதா என ஆராயாமல் உங்களிடையே மறைந்திருக்கும் அற்புதமான திறமையை காணமுயலுங்கள்.
எந்தவிதமான போட்டிகளின்றி, எந்த ஆத்மாவுடனும் ஒப்பிடப்படாமலும், செய்யும் செயல்களை அதனதன் தன்மைகளுடன் செய்து ஆனந்திக்க அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஓர் ஊக்கசக்தி உண்டு. ஏனெனில் அதிலிருந்து நமக்கு ஒன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் செயல்பாடுகள் இருக்கின்றன. எல்லா விருப்பங்களுக்கும் இலக்கு அன்பாகத்தான் இருக்க வேண்டும். எனவே நீங்கள் அன்பு சக்தி கொண்டவராக இருந்தால் வேரொன்றும் வேண்டியது இல்லை.
வேண்டும்போது: அன்பேசிவம். அன்பினால் எல்லாம் சாதிக்க முடியும் என உறுதிப்பாடு வேண்டும். உறுதிப்பாட்டுடன் செயல்பட நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த நினைவு உங்கள் செயலை செம்மைப்படுத்தும். நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே எண்ணத்தை நினைவாகக் கொண்டால் அந்த எண்ணங்கள் ஒரு சக்தியாக உருவாகி, சக்தி அலைகளாக உங்களிடம் மற்றவர்களை கொண்டு வந்து சேர்க்கும்.
நீங்கள் அந்த அன்பின் வட்டத்திற்குள் இருப்பீர். உங்களைச் சுற்றி அந்த வட்டம் மிளிரும். வாழ்க்கை சுமையாக இருக்காது. சுகமாக இருக்கும். அன்பின் அலையில் நீங்கள் இனிது பயனம் செய்வீர்கள். நீங்கள் வாழ்வில் முன்னேறி உங்களைச் சார்ந்தவர்களையும் முன்னேற்றி அழைத்துச் செல்வீர்கள்.
நீங்கள் சந்தோஷமாக இருந்த நாட்களை நினைவு கொள்ளுங்கள். அந்த சூழ்நிலையை மீண்டும் மீண்டும் நினைத்து சந்தோஷமடையுங்கள். இப்படி உங்கள் மனம் பழகிவிட்டால் நீங்கள் நினைத்தபோது சந்தோஷம் உங்களை வந்தடையும். தனது அனுபவத்தில் தெரிந்ததை புரிந்ததை உண்மை என மனம் நம்பத் தொடங்கிவிட்டால் அதன்பிறகு மாறுபாடான வாதங்களை எண்ணங்களை அவ்வளவு விரைவில் ஏற்றுக்கொள்ளாது. எனவே அன்புடன் பேசி, அன்பாக செயல்பட்டு வாழ்வை சந்தோஷமாக்கிக் கொள்ளுங்கள்- அன்பே சிவம் என்பதை உணர்வீர் ஆசிகளுடன்-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27031283
All
27031283
Your IP: 44.201.97.0
2024-04-17 21:23

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg